சிறுகதை: தங்கவேலுவின் 10ஆம் எண் மலக்கூடம்

கொஞ்சம்கூட பிசிறில்லாத  சதுர வடிவத்திலான பள்ளிங்கு கற்கள் வெறித்துக் கிடந்தன. கால்களை வைத்து நடக்கவே அசூசையாக இருக்கும்.  நவீன கழிவறை மிக நேர்த்தியான ஒழுங்குடன் கண்ணாடி போன்ற தரை விரிந்து படர மனம் தடுமாறும். மெதுவாக நெகிழிக் கதவைத் தள்ள வேண்டும். ஒரே மையத்தில் போய் குவிந்து கொள்கின்ற கதவு. மீண்டும் இழுத்தால் பழைய நிலைக்கே வந்து கழிவறையை மூடிக் கொள்ளும்.

இதை இழுத்து உள்ளே நுழையவே சிரமமாக இருந்துவிடுகிறது. சடசடவென ஒரு சத்தம் வேறு. உள்ளே நுழைந்து கதவை உள்தாழ்ப்பாள் போடுவதற்குள் வயிற்றிலிருந்து கழிவு கீழே ஒழுகிவிடுவதைப் போல வித்தைக் காட்டும். கொக்கி போல ஒன்று, அதை வலது பக்கமாக நகர்த்தி கொக்கியின் வாயை மற்றுமொரு இரும்பில் சொருக வேண்டும். பல சமயங்களில் கொக்கி அந்த இரும்பில் சிக்கிக் கொள்ளாமல் பாதியிலேயே நின்றுவிடும் அதைக் கவனிக்கத் தவறும் கணங்களில் கதவை மூடாமலேயே வேட்டியைக் கழற்றி கழிவு தொட்டியில் ஏறி அமர்ந்து கொள்வேன். அப்படியொரு அலட்சியமாக இருந்துவிட்ட பொழுதில்தான் வீட்டிலுள்ளவர்களுக்குப் பல மாதங்களாக நான் அனுபவித்த மலப் போராட்டத்தைப் பற்றித் தெரிய வந்தது.

“ஐயோ… அம்மா! தாத்தாவே பாரு… கசம் கசம்!”

“ஏன்டா கத்தறே! என்னாச்சி?…. அட ஆண்டவா!”பேரன் கதவைத் தள்ளியதும், அரைகுறையாக இரும்பைப் பற்றியிருந்த கொக்கி டமாரென்று விலகியது. தரையிலிருந்து இரண்டடி உயரத்திற்கு எழுந்து வாய் பிளந்து நின்றிருந்த கழிவுத் தொட்டியில் இரு விளிம்புகளிலும் கால்களை அகல விரித்து மேலும் உயரமாக அமர்ந்து கொண்டு இருந்த என் கோலத்தைப் பார்த்து எல்லோரும் அதிர்ந்து போனார்கள்.

“என்ன மாமா இது? கழிசசில போவ…”அவ்வளவு விரைவாக உயரமான கழிவுத் தொட்டியிலிருந்து இறங்கிவிட முடியாது. பக்கத்திலிருக்கும் நீர்த் தொட்டியின் விளிம்பைப் பிடித்துக் கொண்டுதான் ஒவ்வொரு காலாகத் தரையில் இறக்கி நிமிர வேண்டும். மருமகளும் பேரனும் பார்த்துக் கொண்டிருக்க அவிழ்ந்த வேட்டியுடன்  தடுமாறிக் கொண்டிருந்தேன். மலம் போல ஒழுகி நின்றது அன்றைய பொழுது.

“ஒன்னுமில்ல. .  நீங்க போங்க! டேய்! போடா…” வாயிலிருந்து வார்த்தைகள் நீர்ப் போல சலசலவென ஒடிந்து விழுந்தன. வேட்டியை மேலே தூக்கிக் கட்டிக் கொண்டு கதவைப் படாரென்று அடைத்து மூடினேன். தரையில் நீர் கொத்து அங்குமிங்குமாகத் தேங்கியிருந்தன. கால் தொடையில் ஏதோ பிசுபிசுவென ஒட்டிக் கொண்டிருந்தது. குனிந்து கீழே பார்த்தேன். மலநீர் கால் முட்டிவரை வந்து வழிந்து கொண்டிருந்தது. அசௌகரிகத்தின் மொத்த சுயரூபத்தையும் இந்தக் கழிவறையில் தினமும் சந்தித்துக் கொள்கிறேன். ஒவ்வொரு நாளும் சாப்பிட்டப் பிறகு தினக் கடமையாக இந்தக் கழிவறைக்குள் நுழைய வேண்டும் என்று ஏற்படும் அட்டவணை சுழற்சி அச்சுறுத்தலாக இருக்கின்றது.

மருமகள் வெளியில்தான் நின்று கொண்டிருந்தாள். என் மூத்த மகனுடன் என்னைப் பற்றி பேசிக் கொண்டிருப்பதும் நன்றாகவே கேட்டது.

“கதவெ சாத்தாமே என்ன இது? யாராவது வந்தா என்னா ஆவும்? மானமே போய்டும் போல இவரே வச்சிக்கிட்டு. எப்படி உக்காந்திருந்தாருனு பாத்திங்கனா மயக்கமே போட்டு விழுந்துருவீங்க”

“இப்பெ ஏன் இத பெருசா பேசிக்கிட்டு இருக்கெ? எப்படி உக்காந்தாரு?”

“தொட்டி மேல அதை வச்சுத்தானே உக்காரனும். இவரு அதுக்கும் மேல ஏறி கால வச்சி உக்காந்து போறாரு… பல தடவெ நான் டொய்லேட் கழுவும் போது பாத்திருக்கேன், அந்தத் தொட்டி இடுக்குலலாம் பீ இருக்கும்…  அப்பயே சந்தேகமா இருந்துச்சி”

“சரி விடு! சொல்லிக்கலாம்”

மனம் படபடவென துடித்துக் கொண்டிருந்தது. கழிவறைக்குள்ளே அபாரமாக எரிந்து கொண்டிருக்கும் வெளிச்சத்தைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தேன். குளியலறையில் எங்கோ ஏதோ ஓர் இடத்திலிருந்து நீர் ஒழுகும் சத்தம் கேட்டுக் கொண்டேதான் இருந்தது. வெளியே சென்றால் இவர்களின் முகத்தைப் பார்க்க வேண்டும். அந்த உறுதி அற்றுப் போயிருந்தது. உடல் முழுக்க அறுவறுப்பான ஒரு பிம்பம் நெடித்து வளர்ந்து பேயோசையாக எனக்குள் சரிந்து கொள்வது போல ஒரு பிரமை.

“ப்பா! ப்ப்பா! வெளிய வாங்க”

வேட்டியைச் சரி செய்துவிட்டு, செயற்கையாக ஏதோ முனங்கிக் கொண்டே கதவை மெல்ல அதன் இரும்பு தாழ்ப்பாளிலிருந்து விலக்கினேன். எதிரில் மகன் என்னை மேலேயும் கீழேயும் பார்த்துக் கொண்டிருந்தான். வேட்டியின் நனைந்திருந்த பகுதியை உற்றுப் பார்த்துவிட்டு நெருங்கினான்.

“ஏன்ப்பா… எப்படி உக்காந்து நீங்க டொய்லேட் போறீங்க? இது மேல கால் வச்சா உக்காருவாங்க? என்னா இது? நல்லா தாராளமா இப்படி இது மேல உக்காந்துகிட்டு போலாமே? இப்படித்தான் போய்கிட்டு இருக்கீங்களா?”

“அட போடா! எப்படி வசதி வருதோ அப்படித்தான் போவ முடியும்…”

அங்கிருந்து மெல்ல அகன்றேன். மகனின் ஆத்திரமான குரல் பின் தொடர்ந்தது. அதைச் சட்டை செய்து கொள்ளாதது போல பயத்தை உள்ளுக்குள்ளே அடக்கிக் கொண்டு வரவேற்பறைக்குள் நுழைந்து சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டேன்.

“ப்பா…  நீங்க உங்க இஸ்த்ததுக்குச் செய்யாதீங்க. புரியுதா? அது அந்த மாதிரி உக்காந்து போற தொட்டித்தான். அதுலே போய் கால் வச்சி ஏறி உக்கார முடியாது. வீணா போயிறும். நீங்க உயரமா உக்காந்துக்கிட்டு போறதுனாலே பீ கீழலாம் வந்து விழுந்துருது. ஏன் இப்படிப் பண்றீங்க?”

நான் செய்த அலட்சியத்தால் அவனுடைய சொற்கள் சுற்றி அலைந்திருந்துவிட்டு விரக்தியில் உதிர்ந்து கரைந்தன. அதன் கரைதலில் அக்கறை இல்லாதவன் போல் முனங்கல் தீராத பாவனையுடன் கண்களை இறுக மூடிக் கொண்டு உறங்க முயன்றேன். இதுதான் சரியான முயற்சியாக இருக்கக்கூடும்.

இங்கு வந்ததிலிருந்து எல்லாமே செயற்கைத்தான். மலம் கழிப்பது முதல் எல்லாக் கடமைகளும் ஒழுங்குத் தவறாமல் பிறர் விருப்பப்படிதான் நடக்க வேண்டும். யாரோ எப்பொழுதும் என் முதுகில் சாட்டையால் அடித்து வழிநடத்துவது போல உணரப்படுகிறது. எனக்குள் இவ்வளவு காலம் இயங்கிக் கொண்டிருந்த உந்து சக்தி வலுவிழந்து ஏதோ ஒரு பொழுதில் இந்தக் கழிவறை போராட்டத்தில் காணாமல் போயிருக்கக்கூடும்.

“வெளிச்சம் கண்ணுலாம் கூசுது! ஏறி இந்தப் பீ தொட்டியில உக்காரணும், காலுலாம் நோவுது! தொட்டியோட  ஓரத்துல கால வச்சி உக்காந்து முக்கணும். ஒரு பக்கம் கால் நழுவிட்டா தொட்டியோட வாயில டமார்னு விழுந்து பிட்டம் ரெண்டா உடைஞ்சிருமோனு பயம், வெளிச்சம் தலைக்கு மேல விரிஞ்சி கிடக்க அப்பத்தான் தொடை சுளிர்னு வலிக்கும். கீழே எறங்கி காலெ நல்ல உதறிட்டு மீண்டும் மேல ஏறி உக்காந்து உயிரோட போராடணும்!”

தோட்டத்தில் இருந்தபோது எல்லாமும் சரியாகத்தான் இருந்தன. வாழ்க்கை அடுக்குகள் அவ்வப்போது தன்னை மாற்றியமைத்துக் கொள்கின்றன. அப்பா தங்கவேலு இரப்பர் காட்டில் வேலை செய்தவர். ஏணி கோட்டில் வேலை செய்யும்போது ஏணியிலிருந்து சரிந்து விழுந்து இறந்து போனார். அப்பாவின் அந்தத் துர்மரணத்தைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் கூடவே அந்த அதிர்ச்சியும் கிளர்ந்துவிடும். வலியில் துடிதுடித்து மரணம் தொடும் தொலைவில் இருந்தபோது அவருக்கே தெரியாமல் அவர் மலம் கழித்திருக்கிறார். பிணத்தை அள்ளும்போது அப்பாவின் காற்சட்டையில் மலம் ஒழுகியிருந்ததைப் பார்த்தேன்.  அதைப் பார்த்தவுடன்தான் உள்ளுக்குள்  உறைந்திருந்த அதிர்ச்சியும் சோகமும் கிளர்ந்து வெளியேறின.

“எப்ப மனுசன் உடம்புலேந்து அவனுக்கே தெரியாம மலம் வெளிவருதோ அப்பவே அவன் பாதி பொணமா ஆயிட்டானு அர்த்தம்”

என் அப்பா தங்கவேலு அடிக்கடி யாரிடமாவது இப்படித்தான் சொல்லிக் கொண்டிருப்பார். தோட்டத்தில் அப்பாவிற்கென்று ஒரு மலக்கூடம் இருந்தது. எங்கள் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே அந்த மலக்கூடத்தைப் பயன்படுத்த முடியும்.

பிரிட்டிஸ்காரர்கள் காலத்தில் கட்டியெழுப்பப்பட்ட மலக்கூடங்கள்தான் என் வீட்டு லயத்திலிருந்து 500 மீட்டர் தொலைவில் வரிசைப்பிடித்து நின்று கொண்டிருந்தன. நாள் முழுக்க யாரையாவது அந்த மலக்கூடங்களில் பார்த்துவிடலாம். தகரக் கதவைத் திறந்தபடியும் மூடியபடியும், கையில் தகர வாளியுடன் அந்தச் சிறிய மேட்டில் ஏறியபடியும் இறங்கியபடியும் யாரையாவது அடிக்கடி அங்கே பார்க்கலாம். காலையில் எல்லோரும் பிரட்டுக்குப் போகும் முன்னே முதலில் மலக்கூடத்திற்குப் போய்விட்டு வருவார்கள். காலையில் ஆறு மணிக்கு மரப்பத்திகளுக்குச் செல்பவர்கள் ஐந்து மணிக்கே எழுந்து மலக்கூடத்திற்குப் போய்விட்டு வருவது வழக்கம். ஆறு மணியாகிவிட்டால் மலக்கூடங்களில் கூட்டம் நிரம்பி வழியும். ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டும், சிரித்துக் கொண்டும் சோம்பல் உற்சாகம் என்று கொஞ்ச நேரத்தில் மலக்கூடத்தின் முன் சலசலப்பு தொடங்கிவிடும். மலக்கூடத்திலிருந்துதான் காலை பொழுது விடியும். அங்கிருந்துதான் அன்றைய நாள் தொடங்கும் என்றுகூட சொல்லலாம்.

அப்பா தங்கவேலு காலையில் 4.45 போல எழுந்து அரிக்கன் விளக்கை எரியவிடுவார். அதைத் தூக்கிக் கொண்டு மெல்ல எழுந்து முன் கதவைத் திறக்கும்போது தோட்டமே அகால இருளில் உறங்கிக் கொண்டிருக்கும். இரவு பூச்சிகளின் சத்தமும் ஓய்ந்திருக்காது. பால் வாளியை எடுத்து சிறிது நேரத்திற்கு உருட்டிக் கொண்டிருப்பார். அதில் வைக்க வேண்டிய பொருட்களையெல்லாம் எடுத்து நேர்த்தியாக அடுக்கி வைத்துவிட்டு முன் வாசலில் போடப்பட்டிருக்கும் வாங்கில் அரிக்கன் விளக்கை வைத்துவிட்டு அமர்ந்து கொள்வார்.

“அவளுக்கென்ன உறங்கிவிட்டாள்…  அகப்பட்டவன் நான் அல்லவா”

“பகவானே மௌனமேனோ…  இது யாவும் உன் லீலைதானோ?”

ஏதாவது பழைய பாடலைப் பாடிக் கொண்டு சுருட்டு புகைத்துக் கொண்டிருப்பார். இருளின் மௌனமான நகர்தலில் அப்பாவின் சுருட்டுப் புகை ஆவியைப் போல படர்ந்து மறையும். உள்ளே உள்ள பாயில் படுத்துக் கொண்டே அப்பாவின் காலை நேரத்து அசைவுகளைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் என்னுடைய காலையின் மிகப் பெரிய கடமையாக இருந்தது. பிறகு அரிக்கன் விளக்கின் நிழலில் அப்பா எழுந்து நிற்பது தெரியும். விளக்கைத் தூக்கிக் கொண்டு அவருடயை உருவம் மெல்ல காணாமல் போகிறது என்றால் அப்பா மலக்கூடத்திற்குப் போய்க் கொண்டிருக்கிறார் என்று அர்த்தம்.

அந்த வரிசையில் மொத்தம் பத்து மலக்கூடங்கள் இருந்தன. அதில் அப்பாவிற்கென்று ஒரு மலக்கூடம் இருந்தது. பத்தாம் எண் மலக்கூடம் அப்பாவிற்குச் சொந்தமாகி திரண்டு வருடம் ஆகியிருக்கலாம். அப்பா தோட்டத்தில் முக்கியமான ஆள் என்பதாலும் வெள்ளைக்காரர்கள் மத்தியில் அவருக்குக் கொஞ்சம் செல்வாக்கும் இருந்தபடியால் ஒரு மலக்கூடம் அவருக்கு இலவசமாகக் கொடுக்கப்பட்டிருந்தது. அப்பாவும்

நானும் அம்மாவும் அக்காளும்தான் அந்த மலக்கூடத்தைப் பயன்படுத்துவோம். பட்டணத்திலிருந்து பெரியப்பா, மாமா இப்படி யாராவது வந்தால் அப்பா அவர்கள் வருவதற்கு ஒரு நாள் முன்பே மலக்கூடத்தைக் கழுவி சுத்தம் செய்துவிடுவார்.

ஆரம்பத்தில் யாராவது திருட்டுத்தனமாக அப்பாவின் மலக்கூடத்தைப் பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள். அப்பா பத்திக்குச் சென்றவுடன் மேட்டு லயத்தில் இருக்கும் ஆட்கள் 10ஆம் எண் மலக்கூடத்தில் நுழைந்து பயன்படுத்திவிட்டுப் போய்விடுவதுண்டு. அப்பா திரும்பி வரும்போது மலக்கூடத்தின் கதவு வாய் பிளந்து திறந்து கிடக்கும். யாராவது வந்து பயன்படுத்தியிருந்தால், அப்பா அதைக் கண்டுபிடித்துவிடுவார். சுத்தமாகக் கழுவிவிடாமல் அவசரத்தில் அப்படியே போட்டுவிட்டுப் போயிருப்பார்கள். குழிக்கு மேலாக மலம் நிறைந்து கிடக்கும். எல்லோருக்கும் கேட்கும்படியாகவே கத்திக் கொண்டே அப்பா அதைச் சுத்தப்படுத்தத் தொடங்கிவிடுவார்.

“எந்த நாசமா போற ஜென்மம்னு தெரில, பேண்டுட்டு கழுவாமே போயிருக்கு! என்னா ஜென்மங்களோ? நாத்தம் கொடலெ புடுங்குது…  கம்பிய சுத்தி வச்சி சாத்திட்டுப் போனாலும் பேத்துக்கிட்டு வந்து பீயெ போட்டுட்டுப் போறானுங்க”

அப்பா மலக்கூடத்தின் கதவிற்குப் பக்கத்திலுள்ள சட்டத்தில் அடிக்கப்பட்ட ஆணியில் கம்பியைச் சுற்றி இறுகக் கட்டியிருப்பார். தகரக் கதவில் ஓட்டையிட்டு அதில் கம்பியைச் சொருகி கட்டுவதற்கு இலகுவாகச் செய்தும், அப்பாவால் அந்த மலக்கூடத்தைத் தனி சொத்தாகப் பாதுகாத்து வைத்திருக்க முடியவில்லை. இப்படித்தான் தினமும் காவலாளியைப் போல காலையில் விடிவதற்கு முன்பே எழுந்து வீட்டிலிருந்தவாறே அதிகாலை இருளில் மலக்கூடங்களுக்கு அமைதியில் ஊர்ந்து வரும் ஆட்களின் நடமாட்டங்களைக் கவனித்துக் கொண்டேயிருப்பார். யாராவது 10ஆம் எண் மலக்கூடம் பக்கமாகச் சென்றாலோ அல்லது அதன் கதவை அசைத்துப் பார்க்க முயன்றாலோ அப்பா இங்கிருந்து கொண்டே கத்துவார்.

“டே! நுழைய பாக்கறானுங்கடா… தொலைஞான் கைய வச்சானா…”

பிறகு 10 நிமிடத்திற்கு மலக்கூடத்தின் அருகிலேயே நின்று கொண்டு வருபவர் போவோரை எச்சரிக்கையுணர்வுடன் பார்த்துக் கொண்டே காவலிருப்பார். அப்பாவிற்கு இது ஒரு தனிசுபாவமாகவே மாறியிருந்தது. அந்த நேரத்தில் அங்கு வந்து சேர்பவர்கள் யாராகினும் அப்பாவிற்கு அவர்களின் நடத்தையில் சந்தேகமும் அதிருப்தியும் தொற்றிக் கொள்ளும். ஏற இறங்க அவர்களைப் பார்த்துவிட்டு கையில் வைத்திருக்கும் அரிக்கன் விளக்கை உயர்த்திப் பிடித்து முகத்தை அடையாளம் காண்பார்.

“யாரு, துரைசாமி பையனா? காலைலே வயித்த கலக்கிருச்சி போல? பாத்து. அங்குட்டு உள்ள கொட்டாயெ பாய்ச்சிக்க”

“வாடா அம்மா கண்ணு பேரனா? எப்பவும் இந்த நேரத்துக்குத் தூங்கிட்டுக் கெடப்ப? இப்ப என்னா புது பழக்கம்? ஆங்ங்ங்…  அங்குட்டு போ…  சுத்தமா வச்சிக்கங்கடா…”

அங்குள்ள பத்து மலக்கூடங்களுக்கும் தான் மட்டும்தான் காவலாளியாக இருக்க முடியும் என்கிற பாவனையும் எண்ணமும் அப்பாவிற்குள் வந்துவிட்டிருந்தன. அரிக்கன் விளக்குடன் குட்டி வெளிச்சத்தைப் பரப்பி அந்த அதிகாலை இருளிலும் கங்காணித்தனம் காட்டிக் கொண்டு அவ்வப்போது 10 ஆம் எண் மலக்கூடத்தின் கதவைத் திறந்து உள்ளேயும் பார்த்துக் கொள்வார். அம்மாவிற்கு எப்பொழுதும் அப்பாவின் இந்தப் பழக்கம் குறித்து அதிருப்தி. சில சமயங்களில் அம்மாவும் அப்பாவுடன் பெரட்டுக்குச் செல்வதற்காகக் கிளம்பி வீட்டின் முன்னாலேயே காத்துக் கொண்டிருப்பார். அப்பா மலக்கூடத்தைச் சரிபார்த்துவிட்டு வருவதற்குள் அம்மாவிற்கு கோபம் உச்சந்தலையில் ஏறியிருக்கும்.

“யேங்க! உங்களெ என்னா அல்லூர் கூட்டியாவா போட்டுருக்காங்க? அங்குட்டே ஒரு கொட்டாயெ கட்டி படுத்துக்குங்க! எப்ப பாத்தாலும் அந்தச் சாமான் கொட்டாய்லே கிடக்குறீங்க. என்ன ஜென்மமோ?”

“நம்மளோட அசிங்கம்லாம் அங்கத்தான் இருக்கு! அசிங்கத்தெ தாங்கறெ கடவுள் தெரியுமா? வீடு மாதிரி பாத்துக்கணும். என்னா பேசறே? கொஞ்சம் உட்டுட்டா நாசமா ஆக்கிருவானுங்க”

“என்னமோ பண்ணுங்க! உலகத்துலே இல்லாத கொட்டாய்தான்”

அப்பா எந்தச் சலனமுமின்றி மல்லாந்து பார்த்து நேரத்தை உறுதிப்படுத்திக் கொண்டிருப்பார். அவரின் உலகம் அப்பொழுதுதான் விழிக்கத் துவங்கும். தனது உயிரை 10ஆம் எண் மலக்கூடத்தில் ஒளித்து வைத்துவிட்டு மரத்திற்குக் கிளம்பத் தயாராவார். அதற்குப் பிறகு அம்மா அப்பாவைத் திட்டும் போதெல்லாம் அல்லுர் கூட்டி அல்லூர் கூட்டி என்று சாடித்தான் பேசுவார். அல்லூர் கூட்டி என்றால் எங்கள் தோட்டத்தில் மலக்கூடங்களைச் சுத்தம் செய்வதற்கே உள்ள பணியாள். அந்த அல்லூர் கூட்டி இரு தினங்களுக்கு ஒரு முறை மலக்கூடங்களைச் சுத்தம் செய்ய வந்துவிடுவார். அதுவும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகமான நேரம் இங்குதான் இருப்பார். அப்பா கண்களில் அவர் சிக்கிவிட்டால் அல்லூர் கூட்டிக்குப் பாதி உயிர் போய்விடும்.

“அத நல்லா அள்ளு! இங்க கொஞ்சம் அழுத்திக் கூட்டு! குழி நெறைஞ்சிருச்சி பாரு! எவன் பேண்டு வச்சதோ! அங்கப் பாரு… தகரத்துலே ஒட்டிருக்குப் பாரு! நல்லா கூட்டு…”

அல்லூர் கூட்டி அலுத்து ஓய்ந்துவிடுவான். அப்பாவின் அதட்டலில் மலக்கூடங்கள் அனைத்தும் கால்கள் இருந்திருந்தால் எழுந்து ஓடியே போயிருக்கும். அப்பாவும் அல்லூர் கூட்டியுடன் சேர்ந்து கொண்டு மலக்கூடங்களில் புகுந்து சுத்தப்படுத்தத் தொடங்கிடுவார். வீட்டிலிருந்து வாளிகளையும் எடுத்துக் கொண்டு போய்விடுவதால் அம்மா ஒருபக்கம் கத்திக் கொண்டிருப்பார். வாளியில் நீரை அள்ளி ஒவ்வொரு கூடமாக ஊற்றிக் கொண்டே வர அல்லூர்கூட்டி குனிந்து நிமிர்ந்து குழிகளின் ஓரம் தேய்த்துச் சுத்தப்படுத்திக் கொண்டே வருவார். தோட்டத்திலுள்ளவர்கள் அப்பாவை இரண்டாவது அல்லூர் கூட்டி என்றே பெயர் வைத்துக் கூப்பிடுவார்கள். என்னையும் அத்துடன் இணைத்து ‘அல்லூர்கூட்டி பையன்’ என்று கத்துவார்கள். எனக்குப் பெருத்த அவமானம் ஏற்படத் துவங்கியிருந்தது. வங்காளி ரொட்டிக்காரர் முதல் சீன ஆப்பே வரை எல்லோருக்குள்ளும் அந்த நையாண்டி இருந்தது.

அப்பா பெரட்டுக்குப் போகாத ஒரு தினத்தில்தான் முதன் முதலாக நான் 10ஆம் எண் மலக்கூடத்தின் காவலாளியாக மாற்றப்பட்டிருந்தேன். காய்ச்சலால் பாயிலேயே சுருண்டு படுத்துக் கொண்டிருந்தார். சரியாகக் காலை மணி 6 இருக்கும், என்னைத் தட்டியெழுப்பினார்.

“டே! அங்குட்டு நின்னு கொட்டாயே பாத்துக்கடா. எவனாது கம்பிய நெம்பி கதவ தெறக்கறானுங்களானு. ஆள் இல்லனா நைசா உள்ள புகுந்துருவானுங்க. இங்குட்டே நின்னு பாத்துக்க”

வெளியில் வந்து நின்றேன். தோட்டத்திலிருந்த மரங்களிலிருந்து அப்பொழுதுதான் சிறு அசைவு ஏற்படத் துவங்கியிருந்தது. மெல்ல சோம்பலை அகற்றி வாங்கில் அமர்ந்து கொண்டே மலக்கூடங்களைப் பார்த்தேன். ஒரு சில கதவுகள் திறந்தபடியும் மற்றும் சில மூடியபடியும் அகால இருளில் கிடந்தன. ஏதோ ஓர் உருவம். அப்பாவைப் போலவே மௌனமாக சைகை காட்டி பேசுவது போலவே தெரிந்தது.

தூரத்திலிருந்து பார்க்க மலக்கூடத்திலிருந்து யாரோ வெளியேறுவதும் உள்ளே நுழைவதுமாக ஒரு பிரமை தட்டியது. கண்களை விரித்து பார்க்கையில் அங்கு யாரும் இல்லை. மணிகுஞ்சி அண்ணனுடைய பேரன்தான் ஏதோ ஒரு பாடலை முனகிக் கொண்டே 8ஆம் எண் மலக்கூடத்தில் நுழைந்து கதவைச் சாத்திக் கொண்டார். அவருடைய பாடல் வரிகள் கதவுக்கு அடியிலிருந்து மெல்லிய ஓசையாக மாறி வெளிவந்து கொண்டிருந்தன. அந்த அண்ணன் பழைய பாடலைப் பாடுவதில் கெட்டிக்காரர். ரம்மியமான இசையை அவர் வாயிலேயே எழுப்பிக் கொண்டு காலைக் கடனை நிறைவேற்றிக் கொண்டிருந்தார். வானம் விடிந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சம் படர ஆரம்பித்தது. அப்பா உள்ளேயிருந்து கொண்டு மீண்டும் முனகினார்.

“டேய்… அப்படியே அங்குட்டு போய் பக்கத்துலே நில்லுடா…  சுத்தம் முக்கியம்டா. எவனாவது உள்ள புகுந்துருவானுங்க. போ”

அப்பாவின் குணத்தை நினைத்தால் விசித்திரமாகவும் அதே சமயம் பைத்தியக்காரத்தனமாகவும் தோன்றியது. காலை பனி முதுகில் பளார் என்று அறைய, மெல்ல நடந்து மலக்கூடம் பக்கமாகச் சென்றேன். பனி இன்னமும் உலாவிக் கொண்டுதான் இருந்தது. மலக்கூடங்களின் கதவுகளில் பனி ஊர்ந்து ஒழுகிக் கொண்டிருந்தது.

ஒவ்வொரு மலக்கூடத்திற்கு நடுவிலும்  பலகை தடுப்பு இருந்தது. எழுந்து நின்று பார்த்தால் பக்கத்து கொட்டாயின் தடுப்பும், ஆள் அமர்ந்திருந்தால் அவரின் தலையும் நன்றாகத் தெரியும். ஏதாவது பேசிக் கொண்டும் பலகை தடுப்பைத் தட்டி ஓசையை எழுப்பிக் கொண்டும், வெளியிலிருந்தபோது பேசாமல் விடப்பட்ட விஷயங்களும் என்று உரையாடல்கள் எப்பொழுதும் தொடர்ந்து கொண்டே இருக்கும். தோட்டம் விடிந்ததும் மலக்கூடங்கள் பேசத் தொடங்கிவிடும்.

தோட்டத்திற்குள் நிலவும் பிரச்சனைகள், ஒழுக்கம் தவறவிட்ட மனிதர்களின் இரகசியங்கள், தோட்டத்துப் பள்ளிக்குப் புதியதாக வந்திருக்கும் ஆசிரியர்களைப் பற்றி, பால் கொட்டாயில் நடக்கும் வாய்ச் சண்டைகள் என்று மலக்கூடங்களில் அமர்ந்திருப்பவர்களின் வாயிலிருந்து இவையாவும் சொற்களாக மாறி கதவுக்கடியிலும் பலகை தடுப்பு சுவர்களிலும் ஒட்டிக் கொண்டிருக்கும். ஆள் அரவமற்ற பொழுதுகளில் அந்தப் பக்கமாகப் போகும்போது யாரோ பேசிக் கொண்டிருப்பது போலவே தோன்றும். நன்றாக நிதானித்துக் கேட்டால் மட்டுமே உள்ளே யாரும் இல்லை என்பது புரியும்.

ஒவ்வொரு மலக்கூடமும் பாடுவதைப் பற்றியும் பேசிக் கொண்டே இருக்கலாம். பிழையான இராகத்திலிருந்து தொடங்கும் பாடல்கள் முதல் கேலியான பாடல், பாதியிலே நிறுத்தப்பட்ட பாடல், காதல் பாடல், சிவாஜி படத்தின் பாடல்கள் என்று மாறுபட்ட தொனியில் முக்கிக் கொண்டு குரலைத் தளர்த்தியபடி யாராவது பாடிக் கொண்டே இருப்பார்கள். வானொலியில் ஒழுங்கில்லாமல் இடறி விழும் நிலையங்களின் குரல்களைப்போல காலையிலேயே மலக்கூடத்தில் பல நிலையங்கள் உற்சாகமாக இயங்கத் தொடங்கியிருக்கும். அப்பாவும் ஏதாவது பாடலைப் பாடிக் கொண்டேதான் உள்ளே இருப்பார். பத்து நிமிடத்திற்கு மேலாகப் பாடல் உச்சம்வரை போய்க் கொண்டிருக்கும். எங்காவது பாடலின் வரி பாதியிலேயே நிற்கும்போது அப்பா தன் கடமையை முடித்துவிட்டார் என்று அர்த்தமாகும்.

“டெ! ஒழுங்கா ஜாகா பாத்துக்க கொட்டாயெ! புரியுதா?”

அன்று முதல் என்னையும் அறியாமல் பத்தாம் எண் மலக்கூடத்தின் மீது சொந்தம் கொண்டாட ஆரம்பித்துவிட்டேன். வீட்டிற்கு வெளியில் வந்ததும் பார்வையையும் கவனத்தையும் பத்தாம் எண் கதவின் மீது குவித்து ஆள் நடமாட்டத்தைக் கண்காணிப்பேன். இது வழக்கமாக மாறத் துவங்கிய காலம், நானும் அப்பாவைப் போல மாறியிருந்தேன்.

மதியம் 12 மணிக்கு மேற்பட்டு மலக்கூடங்களைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருக்கும். மலக்கூடத்திற்கு மேலேயுள்ள திறப்பு வெயிலைச் சுளிரென உள்ளே இறக்கிக் கொண்டிருக்கும். வெயில் உள்ளே புகுந்து அனலாக எறிந்து கொண்டிருப்பதால் அந்தச் சமயங்களில் அதிசயமாக யாராவது வந்துவிட்டுப் போவார்கள். அவ்வளவுதான்.

காற்று மெல்லிய வேகத்தில் கிளம்பி வேகத்தை அதிகரிக்கும்போது 4ஆம் எண் கொட்டாயின் கதவு சொந்தமாகத் திறந்து கொண்டு பக்கத்திலிருக்கும் சுவருடன் டமாரென்று மோதிக் கொள்ளும். இது எப்பொழுதும் நடக்கும். மதியத்தில் அந்தப் பக்கமாக வீசும் காற்று நான்காம் எண் கதவை எதற்காகவோ பயன்படுத்திக் கொள்கிறது. தூரத்திலிருந்தாலும் இந்தக் கதவின் ஓசை மதியத்தை ஞாபகப்படுத்திவிடும்.

“எவனோ அங்க இருக்கான்! ஒளிஞ்சிகிட்டு என்னவோ வேலைப் பண்றானுங்க”

“எவன்னு தெரியலே! யேன் அடிக்கடி சரியா 12மணிக்கு மேல அந்தக் கதவு சொந்தமா சாத்திகிறதும் திறந்துகறதும்?”

“அது காத்தா இருக்கும், இருந்தும் அது யேன் சரியா அந்த நேரத்துக்கு மட்டும் தினமும் இப்படி நடக்குது? என்னமோ இருக்கு”

தோட்டத்தில் அந்தச் சம்பவத்தைப் பற்றிய அனுமானங்கள் பரவத் துவங்கியிருந்தன. எல்லோரும் அதைப் பற்றியே பேசிக் கொள்ளத் துவங்கினர். அதன் பிறகுதான் மதியத்தில் கொஞ்சம் கொஞ்சமாக மலக்கூடங்கள் மனிதர்களை இழக்க நேரிட்டது. வீட்டின் முன்பக்க கால்வாயின் ஓரம் மிகவும் கதகதப்பாக இருக்கும். அங்கிருந்து பார்த்தால் மலக்கூடம் மிக அருகாமையில் தெரியும். மதியத்தில் அங்கு அமர்ந்து கொண்டு மலக்கூடத்தின் கதவுகளையே பார்த்துக் கொண்டிருப்பேன்.

அதே ஆண்டில்தான் சிவராமன் அண்ணன் 6ஆம் எண் மலக்கூடத்தில் இறந்து கிடக்கக் காணப்பட்டார். அந்தச் சம்பவம்தான் எல்லோரையும் தோட்டத்திலிருந்த மலக்கூடங்களின் மீது பீதியைக் கிளப்பிவிட்டது. எப்படி அவர் இறந்து போனார் என்ற எவ்வித தடயமும் இல்லாமல் நிகழ்ந்த அந்த மரணத்தின் இரகசியம் அந்த 6ஆம் எண் மலக்கூடத்திற்கு மட்டுமே தெரியும். பலகை தடுப்பில் தலை சாய்த்து கால்கள் இரண்டும் சம்மனமிட்டப்படி சிலையாகக் கிடந்தார். நகரத்திற்கு எடுத்துக் கொண்டு போய் அவர் மாறடைப்பில்தான் இறந்தார் என்ற தகவல் மிகவும் தாமதமாகவே தோட்டத்தில் பரவியது. அதுவரை எல்லோரும் அச்சம்பவத்தை நினைவுக்கூர்ந்து மலக்கூடங்களின் மீதிருக்கும் பயத்தை ஊதிப் பெருக்கிக் கொண்டிருந்தார்கள். தகவல் தெரிந்த பிறகும்கூட ‘இது அதோட வேலையாத்தான் இருக்கும்’ என்றே அரற்றிக் கொள்ளத் துவங்கினர்.

“6ஆம் நம்பர் கொட்டாய்லே, யாரோ முக்கிக்கிட்டு இருக்கற சத்தம் கேக்குது. ரொம்ப நேரமா அந்த சத்தம் இருக்கு. ஆனா உள்ள ஆளு இல்லடா.”

“சரியா போச்சி! சிவராமன்தான் உள்ள இருக்காண்டா… இங்கத்தானே செத்துப் போனான்… உள்ள அவன்தான்”

“5 ஆம் நம்பர் கொட்டாய்லெ உக்காந்துகிட்டு இருக்கும்போது பக்கத்துலே சிவராமனோட குரலே கேட்டன்டா…  ஏதோ பாட்டுப் பாடறே குரலு! அவன் குரல்தான்… வந்ததும் உள்ளயெ போச்சி போ!”

அந்தச் சம்பவத்திற்குப் பிறகும் ஆள் அரவம் முற்றிலுமாக மதிய நேரத்தில் அறுந்து போய்க் கொண்டிருந்தது. காலையில் உற்சாகத்துடன் மலக்கூடத்திற்கு ஓடும் ஆட்கள் மதியத்தில் அந்தப் பக்கம்கூட எட்டிப் பார்க்கமாட்டார்கள்.

“மாமா! மாமா! ஏஞ்சிருங்க… இதுல தூக்கம் லொரு கேடு?”

கண் இமை கனமாக இருந்தது. யாரோ அருகில் நின்று என்னையே உற்றுக் கவனிப்பது போல இருந்தது. அவர்களின் சுவாசம் என் காதுகளில் கேட்கிறது. அவர்கள் பாடுகிறார்கள். எங்கோ தொலைவில் யாரோ கதவைத் திறக்கும் ஓசையும் கேட்கிறது. அனேகமாக அது தகரக் கதவாகத்தான் இருக்க முடியும்.

“டெ! நல்லா பாத்துக்கடா! எவனாவது உள்ள நுழைய போறான்”

“அப்பா! அப்பா!”

கண்களை மெல்ல திறந்தேன். மகன் கணேசன் நாற்காலியில் அமர்ந்திருந்தான். குளிரூட்டி மென்மையான சத்தத்துடன் வரவேற்பறையில் இறங்கிக் கொண்டிருந்தது.

“உங்களுக்கு யேன் எங்கள மாதிரி உக்காந்து போக முடியலெ தொட்டியில? இந்த மாதிரி பண்ணிங்கனா, அது உடைஞ்சிறும்! எல்லாரும் அது மேலத்தான் உக்காந்து போவாங்க. புரியுதாப்பா?  யேன் அசிங்கம் பண்றீங்க? உங்களுக்கு நான் பிளாஸ்ட்டிக் தொட்டி தனியா கடையில விக்குது, அதெ வாங்கித் தர்றேன்… அதுல போயி பழகுங்க!”

வெளியே இருளத் துவங்கியிருந்தது. மகனும் மருமகளும் எங்கோ கிளம்பி வெளியே போய்விட்டிருந்தனர். வயிறு சத்தம் போட்டது. அவசரமாக அவிழ்த்து விட வேண்டும். கழிப்பறையைப் பார்த்தாலே அந்த உயரமான கழிவுத் தொட்டி எழுந்து நின்று முகத்திற்கு நேராகக் கையைக் குவித்து குத்துக் காட்டுவது போலவே தென்படுகிறது. கதவைத் திறந்து வெளியே வந்தேன். வீட்டிற்கு வெளியே இருள் முனங்கிக் கொண்டிருந்த சத்தத்தில் யாரோ பேசுவதும் மென்மையாகக் கேட்டது.

“நம்மளோட அசிங்கத்தே காக்கற கடவுள் மாதிரிடா அது! சுத்தமா வச்சிக்கணும்… சுத்தமா இருந்தாதான் வசதியா போக முடியும்!”

“மனசனுக்கு எப்ப அவனுக்கே தெரியாம மலம் வெளிவருதோ அப்பயே அவன் பாதி செத்துட்ட்டடான்டா”

அப்பா மீண்டும் மீண்டும் இதையேதான் உச்சரித்துக் கொண்டிருப்பார். அழ வேண்டும் என்று தோன்றியது. உள்ளுக்குள் இருந்த இறுக்கம் அதிகமாகி அப்படியே கீழே அமர்ந்து கொண்டேன். தொடைக்கு இடுக்கில் ஏதோ பிசுபிசுத்துக் கொண்டிருந்தது.

கே.பாலமுருகன்

மின்னஞ்சல்: bkbala82@gmail.com

-சில மாற்றங்களுடன் மீள்பிரசுரம்

(இருளில் தொலைந்தவர்களின் துர்கனவுகள், சிறுகதை தொகுப்பு)