சீ.முத்துசாமி – மலேசிய நவீன இலக்கியத்தின் நேர்மையான குரல்
2017ஆம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருதைப் பெற்ற மலேசிய நவீன இலக்கியத்தின் படைப்பிலக்கியக் குரலான சீ.முத்துசாமி அவர்களுக்கு என் வாழ்த்துகள். தமிழ் இலக்கியம் என்றால் அது தமிழகம்தான் என்கிற மாயையைக் களைத்தெறிந்து தமிழர்கள் வாழும் நிலத்தில் பரவியிருக்கும் தமிழிலக்கிய படைப்புகளை, இலக்கிய செயல்பாடுகளைக் கூர்ந்து கவனித்து அதன்பால் தன் ஆழ்ந்த வாசிப்பை முன்னெடுத்து விஷ்ணுபுரம் எனும் அங்கீகாரத்தைத் தந்தமைக்கு எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கும் என் நன்றி. விஷ்ணுபுரம் விருது விழாவிற்கு சுவாமி பிரம்மாநந்தாவுடன் வருவதற்கான அனைத்துத் திட்டங்களும் இருந்தன. விமான டிக்கேட்டுகளும் பதிவாகியிருந்தது. தற்சமயம் தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பயின்று கொண்டிருப்பதால் சில தவிர்க்க முடியாத காரணத்தால் விழாவிற்கு வர முடியாமல் போனதால் ஏற்பட்ட வருத்தம் விழா குறித்த நண்பர்களின் பதிவுகளை வாசித்தபோது. மேலும் அதிகரித்துப் போனது.
விஷ்ணுபுரம் விருதளிப்பு விழாவில் வல்லினம் ஆசிரியர் நவீன் ஆற்றிய உரையை, சிங்கப்பூர் பாண்டித்துரை எனக்கு அனுப்பி வைத்திருந்தார். அவ்வுரையில் ‘சீ.முத்துசாமி என்கிற ஆளுமையிடமிருந்து வந்தவர்தான் பாலமுருகன்’ என அவர் குறிப்பிட்டபோது, எழுத துவங்கிய காலங்களில் இரண்டாண்டுகள் சீ.முத்துசாமியுடனே அலைந்து திரிந்த பொழுதுகள் மனத்தின் ஆழத்தில் நெளிந்தன. அவரிடமிருந்து அக்காலக்கட்டத்தில் பெற்றவை அனைத்தையும் ஒருமுறை தொகுத்துப் பார்க்கும் சந்தர்ப்பமாக அது அமைந்திருந்தது. ஒருவேளை விழாவிற்கு வந்திருந்தால், எனக்குப் பேச வாய்ப்புக் கிடைத்திருந்தால், பேச வேண்டியவைகளையே இக்கட்டுரையில் இணைத்துள்ளேன்.
சீ.முத்துசாமிக்கும் எனக்குமான நட்புறவு 2005ஆம் ஆண்டிலிருந்து தொடங்குகிறது. அப்பொழுது நான் மலேசிய நாளேடுகளில் தீவிரமாக எழுதிக் கொண்டிருந்தேன். அப்படிப் பிரசுரமான என் சில சிறுகதைகளை வாசித்துவிட்டுப் பலரிடம் என்னைப் பற்றி விசாரித்தவாறே என்னைத் தேடியும் கொண்டிருந்தார். புதியதாக எழுதுபவர்களின் மீதான அக்கறை மிகுந்தவராக எழுத்தாளர் சீ.முத்துசாமி இருந்திருக்கிறார். பெரும்பாலும், நாமேத்தான் மூத்த எழுத்தாளர்களைத் தேடி அவர்களிடமிருந்து எதையாவது கற்றுக் கொள்ள வேண்டும் என நான் நம்பிக் கொண்டிருந்த ஒரு காலக்கட்டம். ஏனோ சில தயக்கங்களால் யாரையும் சென்று சந்திக்காமல் வீட்டிலேயே இருந்து கொண்டு வாசிப்பு எழுத்து என எனக்குள்ளே நான் இயங்கிக் கொண்டிருந்தேன். ஆனால், கோலாலம்பூரில் நடந்த ஒரு நாவல் பட்டறையில் நான் கலந்து கொண்டபோது எப்படியோ நான் அங்கு இருப்பதை அறிந்து சீ.முத்துசாமி அவரே வந்து கைக்குலுக்கி எனக்குள் இருந்த மேற்சொன்ன மூத்த படைப்பாளிகளின் மீதான புரிதலை உடைத்தார்.
“உன்னைத்தான் நான் சில நாட்களாகத் தேடிக் கொண்டிருக்கிறேன்” என்பதுதான் அவர் என்னிடம் உதிர்த்த முதல் வார்த்தை. அன்றிலிருந்து என் எழுத்தின் மீதும் என் மீதும் தனித்த அக்கறையைக் காட்டத் துவங்கினார். அடிக்கடி சந்திக்கவும் செய்தோம். தமிழிலக்கியத்தின் மீது எனக்கிருந்த ஆர்வத்தைப் பாராட்டியப்படியே இருப்பார். நவீன எழுத்திற்கான வீச்சு என் எழுத்தில் இருப்பதாகவும் அதனைச் செம்மைப்படுத்த வேண்டும் என்று கவனமும் செலுத்தினார். கோணங்கி, ஜெயகாந்தன், வண்ணதாசன் எனப் பலரின் நூல்களை அறிமுகப்படுத்தினார். அப்பொழுது எனக்கு வயது 24 தான். ஒரு சக நண்பனைப் போல என்னை நடத்தினார். நிறைய பேர் வழிகாட்டுவதாகச் சொல்லிவிட்டுக் குருபீடத்தில் ஏறி அமர்ந்து கொள்கிறார்கள், பிறகு அவர்களுக்கு நாம் விசுவாசிகளாக இருக்க வேண்டும். இந்த நிலை இலக்கியத்தில் நீடித்தால் அதைவிட ஒரு கொடூரமான விசயம் இருக்காது என்று சொல்லிக் கொண்டே இருந்தார். அதனாலேயே யாருக்கும் ஒரு படைப்பாளன் விசுவாசியாக இருக்க வேண்டியதில்லை என நான் தீர்க்கமாக சீ.முத்துசாமியுடன் உடன்பட்டேன். என் சிறுகதைகள் மீது உனக்கு மாற்றுக் கருத்து இருந்தாலும் தாராளமாக அதனை நீ விமர்சிக்கலாம் என்கிற சுதந்திரத்தையும் எனக்குக் கொடுத்தார். அதே போல என் கதைகளில் இருந்த போதாமை குறித்து அவர் மிக இயல்பாகக் கடிந்தும் கொண்டார். சீ.முத்துசாமி என்கிற ஒரு நேர்மையான, முகத்துதிக்காக, தேவைக்காகப் பாராட்டும் குணமற்ற மனிதரை நான் மேலும் ஆழமாகப் புரிந்து கொண்டேன். என் சிறுகதை ஒன்றை வல்லினத்திற்கு அனுப்பி வைத்து அறிமுகப்படுத்தியவரும் அவரே.
மண் புழுக்கள் நாவல் படிக்கக் கிடைத்தபோது அதுவரை சில படைப்புகள் வாசித்து நான் புரிந்து வைத்திருந்த புரிதல்களும் உடைந்து போயின என்றுத்தான் சொல்ல வேண்டும். எல்லாக் கதைகளும் ஒரு சில மையக் கதாபாத்திரங்களின் வழியாகவே வெளிப்படும் என்கிற எனது அப்போதைக்கான புரிதலை அவருடைய மண் புழுக்கள் மாற்றியமைத்தது. அந்நாவல் முழுவதும் சொல்லும்படியான எந்தக் கதாபாத்திரங்களின் மீது கதையை அவர் குவிக்கவில்லை. மாறாகத் தோட்டப்புற வாழ்வின் அடித்தட்டில் அசைந்து கொண்டிருக்கும் மனித உணர்வுகளின் துல்லியமான ஆழத்தையும், அதன் மேற்பரப்பில் உழன்று கொண்டிருக்கும் அப்போதைக்குப் பலரும் பேச மறந்த வாழ்க்கையையும் அவர் நாவலில் மையப்படுத்தியிருந்தார். மண் புழுக்கள் நாவலின் மீது பலரும் மொழிச் சிக்கல் இருப்பதாகவும், பேச்சு வழக்கு மொழி வாசிக்கத் தடை ஏற்படுத்துவதாகவும் புகார்கள் சொல்லி அந்நாவலை மறுத்துக் கொண்டிருந்தனர். அச்சமயத்தில்தான் மண் புழுக்கள் நாவலைப் பற்றி நான் பத்திரிகையில் விமர்சனமும் எழுதியிருந்தேன். அதே சமயத்தில் மறைந்த எழுத்தாளர் ப.ஆ.சிவத்தின் கட்டுரையும் வெளிவந்திருந்தன. இப்படியாக அவர் படைப்புகள் எனக்குள் ஏற்படுத்திய மாற்றுப் பார்வைகள் நவீன இலக்கியத்தின் ஆழத்தை அடைய ஒரு வாசக மனத்தை உண்டாக்கியது என்றே சொல்ல வேண்டும்.
அச்சமயத்தில்(2007) அவர் கெடா மாநிலத் தமிழ் எழுத்தாளர் இயக்கத்தின் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டிருந்தார். ஆகவே, என்னையும் இயக்கத்தில் சேர அழைத்துச் சென்றார். அப்படி அறிமுகமானதுதான் கெடா மாநில எழுத்தாளர் இயக்க நண்பர்கள். அப்பொழுதெல்லாம் மாதமொருமுறை வாசகர்கள் எழுத்தாளர்கள் கூடி சிறுகதையொட்டி விவாதிப்பதுண்டு. ஆனால், பெரும்பாலான சமயங்களில் நம்மிடையே தீவிரமான தேடலுள்ள வாசகர்கள் இல்லாததாலே எல்லா விமர்சனக் கூட்டங்களும் ஒழுக்கம், மொழிச்சீர்மை போன்றவற்றில் சிக்கிக் கொண்டு மொன்னையாகிவிடுவதுண்டு. நானும் சீ.முத்துசாமியும் ஒன்றிணைத்த சில விமர்சன சந்திப்புகள் மேற்சொன்ன சிக்கல்களினாலேயே முடங்கிப் போயின. மேலும், ஒரு படைப்பாளன் அதுவும் தன்னைச் சுதந்திரமானவனாக உணரும் ஓர் எழுத்தாளன் இதுபோன்ற இயக்கங்களில் செயல்பட முடியாது என சீ.முத்துசாமி அக்காலக்கட்டத்தில் உணர்ந்தார். அவர் அப்படியொரு சிந்தனைக்கு வரும் காலங்களில் நான் அவருடன் இருந்தேன். ஒரே ஆண்டில் அவர் தன் தலைவர் பதவியை விட்டு விலகினார்.
அவர் விலகினாலும் என்னையும் உடன் வெளியேற அனுமதிக்கவில்லை. நான் இன்னும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என நம்பினார். அதே எழுத்தாளர் இயக்கத்தில் நான் செயலாளராகப் பதிவியேற்று கல்வி இலாகாவுடன் இணைந்து ஆசிரியர்களுக்காகக் கவிதை பட்டறை, சிறுகதை பட்டறை, வாசிப்புத் தினம் என சில நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தேன். அப்பொழுது மிகுந்த உற்சாகமான செயல்பாட்டாளராக மாறியிருந்தேன். ஆனாலும், நவீன இலக்கியத்தின் மீதான பலரின் வாசிப்பும் தேடலும் விரிவடையாதனாலேயே அதையும் தொடர்ந்து முன்னெடுக்க முடியவில்லை. புரியவில்லை என்கிற ஒரு சாதாரண காரணத்தை முன்வைத்துப் பலர் என்னைத் தாண்டிப் போய்க்கொண்டே இருந்தனர். மேலும், இயக்கத்தில் ஏற்பட்ட சில சிக்கல்களினால் நானும் அப்பதவியை விட்டு விலகினேன். அதன் பிறகு கடந்தாண்டு வரை நான் இயக்கத்தின் எந்தப் பதவியையும் நிர்வகிக்கவில்லை( (இடையில் ஓர் ஆண்டு, தலைவராக இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு அதுவும் பிரச்சனையிலேயே முடிந்து, இப்பொழுது முற்றிலும் விலகிவிட்டேன்). ஓர் எழுத்தாளன் இயக்கத்தின் சட்டத் திட்டங்களுக்கேற்ப செயல்பட முடியாது என சீ.முத்துசாமி சொன்னதை, நம்பியதை என் அனுபவத்தால் நான் மீண்டும் உறுதிப்படுத்தினேன்.
2009ஆம் ஆண்டில் நவீன படைப்பாளர்கள் மத்தியில் இலக்கியம் தொடர்பான சர்ச்சைகளும் உருவாகியிருந்தன. அச்சர்ச்சையில் எனக்கும் சீ.முத்துசாமிக்கும் மாற்றுக் கருத்து உண்டாகி பிரியவும் நேர்ந்தது. அதுவரை அவருக்கும் எனக்குமிருந்த நெருக்கம் முற்றிலும் துண்டித்துப் போனது. அவரே முன்பு சொன்னதைப் போல எந்தவித நிபந்தணைகளும் இன்றி இருவரும் விலகிக் கொண்டோம். உறவில் நிபந்தணைகள் விதித்துக் கொள்ளும் பண்பை என்னிடமிருந்து நீக்கியவரும் அவரே.
சில வருடங்கள் பேசாமல் இருந்து, பின்னர் கோலாலம்பூரில் நடந்த அவருடைய நூல் வெளியீட்டிற்குச் சென்றிருந்தேன்(2010). அங்கு என்னைப் பார்த்ததும் மற்ற அனைத்தையும் மறந்து அன்புடன் பேசினார் உறவைப் புதுப்பித்துக் கொள்ளும் ஆற்றல் இருவருக்குமே இல்லாததால் மீண்டும் ஒரு மௌனம் பல காலம் நீடித்தது. அதன் பிறகு இலக்கிய நிகழ்ச்சிகளில் பார்த்தால் பேசிக் கொள்ளும் அளவிற்கே இருவரின் உறவும் இருந்தது. அவர் படைப்புகள் மீது எனக்கிருந்த வாசிப்பும் தேடலும் எப்பொழுதுமே இச்சர்ச்சைகளால் குறைந்ததே இல்லை. ஆகவேதான், எப்பொழுதும் அவருடைய படைப்புகள் பற்றி எழுதிக் கொண்டே இருந்தேன். என் வலைப்பக்கத்திலும் அதனைப் பிரசுரித்திருந்தேன். படைப்பாளன் வேறு; படைப்பு வேறு என்று சொன்னவரும் சீ.முத்துசாமியே.
அவருடைய குரல்களைப் பல சந்தர்ப்பங்களில் எனக்குள் சேமித்து வைத்துள்ளேன். இரண்டாண்டுகள் அவருடனே சுற்றி அலைந்ததால் படைப்பிலக்கியத்தின் குரல் எத்தனை தீர்க்கமாக, அதிகாரங்களுக்கு வளைந்து கொடுக்காமல் தன் சுயத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்பதை அவரிடமிருந்து கற்றுக் கொண்டேன். இன்று எந்த இயக்கத்தோடும் அமைப்போடும் தொடர்பில்லை என்றாலும் இலக்கியத்தில் தனித்து இயங்குவதற்கான துணிச்சலைச் சீ.முத்துசாமியிடமிருந்து கற்றுக் கொண்ட ஒருவன் எனச் சொல்லிக் கொள்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. கடந்தாண்டு தோழிப் பதிப்பகத்தின் மூலம் வெளிவந்த என்னுடைய ‘இறந்தகாலத்தின் ஓசைகள்’ எனும் சிறுகதை தொகுப்பிற்குச் சீ.முத்துசாமியே முன்னுரை எழுதிக் கொடுத்திருந்தார். நூல் வெளியீட்டு விழாவிலும் அவரே விமர்சனமும் செய்தார். அவையாவும் என் எழுத்திற்குக் கிடைத்த அங்கீகாரமே ஆகும்.
எழுத்தாளர், சகோதரர் ஜெயமோகன் அவர்கள் தொகுத்த ‘சீ.முத்துசாமி- மலேசிய நவீன இலக்கியத்தின் முன்னோடி’ கட்டுரை தொகுப்பில் என் கட்டுரை இடம் பெற்றிருப்பதைக் கண்டதும் ஏற்பட்ட மகிழ்ச்சியால் இக்கட்டுரையை எழுதி அனுப்பியுள்ளேன். வேறு யாரையும்விட அவருடன் ஆத்மார்த்தமாகச் சுற்றி அலைந்தவன் நான். பல சமயங்களில் அவரால் கடுமையாகத் தாக்கவும் பட்டுள்ளேன். அவர் வாழ்நாளின் ஒரு பகுதியில் நான் இருக்கிறேன் என்கிற நினைவு ஒன்றே போதும். மலேசிய நவீன இலக்கியத்தின் நேர்மையான ஒரு குரலாக எப்பொழுதும் எனக்குள் ஒலித்துக் கொண்டே இருக்கும் சீ.முத்துசாமிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.
– கே.பாலமுருகன்
Thanks jeyamohan.in (pictures)