தைப்பூசத்தை முன்னிட்டு ‘தைக்கோ தர்மலிங்கத்துடன்’ ஒரு நேர்காணல்

 

thaipusam festival

வருகின்ற புதன்கிழமை நாடு முழுவதும் தைப்பூசம் நடைபெறவிருப்பதை முன்னிட்டு ‘வருத்தப்படாத காங்கையர் சங்கத்தின்’ தலைவர் தைக்கோ தர்மலிங்கத்தை ஒரு சிறப்பு நேர்காணல் செய்யப்பட்டிருந்தது. இவ்வருடம் தைப்பூசத்திற்காக மாபெரும் முன்னேற்றத் திட்டங்களுடன் அனைத்தையும் முறையாக வரையறுத்து அதன் சாரங்களைப் பகிர்ந்து கொண்டார்.

நிருபர்: வணக்கம் தைக்கோ. உங்களுக்கு எப்படி தைக்கோ என்று பெயர் வந்தது?

தைக்கோ: என் பெயர் தர்மலிங்கம்தான். கொஞ்சம் சேட்டை காட்டன நம்ம பையனுங்கள எல்லாத்தையும் ஓட ஓட விரட்டி அடிச்சேன். அப்பொழுதுலேந்து என்னை தைக்கோ என்றுத்தான் அழைப்பார்கள்.

நிருபர்: ஆகா அருமை. இந்த வரலாற்று பதிவை விரைவில் பாடநூலில் இணைக்க நான் பரிந்துரை செய்கிறேன். அடுத்து, உங்கள் வருத்தப்படாத காங்கையர் சங்கத்தின் நோக்கம் என்ன?

தைக்கோ: ஆம்பளைங்கன்னா சும்மாவா? வீரத்தைக் காட்டறதுக்கே எங்க சங்கத்தை ஆரம்பிச்சோம்.

நிருபர்: கேட்கும்பொழுதே சிலிர்க்கிறது ஐயா. எப்படியெல்லாம் வீரத்தைக் காட்டுவீர்கள்?

தைக்கோ: குறிப்பாக நாங்க… பார்த்தீங்கனா தைப்பூசம்தான் எங்களோட களம். அங்கத்தான் எங்கள் வீரத்தை நல்லா காட்டுவோம்.

நிருபர்: ஓ அப்படியா! என்ன செய்வீர்கள்? பால் குடம்… காவடி ஏதும்?

தைக்கோ: ஐயோ! அப்படில்லாம் இல்லைங்க… நாங்க தனி வழி.

நிருபர்: நீங்க தனி வழியா? தைப்பூசத்துக்கு எல்லாம் ஒரே வழித்தானே பயன்படுத்துவாங்க?

தைக்கோ: தம்பி என்ன சின்ன பிள்ள மாதிரி பேசிக்கிட்டு இருக்கீங்க? நாங்களாம் தைப்பூசத்துல கத்தியோடத்தான் சுத்துவோம். நாங்க தனி கட்சி…

நிருபர்: ஓ! அந்த தேங்கா வெட்டித் தர்றது… ஆளுங்களுக்கு உதவி செய்றது நீங்கத்தானா? நல்ல காரியம் ஆயிற்றே?…

தைக்கோ: தம்பி நான் சொல்றது அந்த வேலை இல்ல… எவனாவது எங்களைப் பார்த்து முறைச்சானா அவன் செத்தான்… கத்திக்கு வேலை கொடுத்துடுவோம்…

நிருபர்: வீரப் பரம்பரை நீங்கள் அல்லவா?

தைக்கோ: அப்புறம் சும்மாவா விட முடியும்? நாங்க அப்படியே கெத்தா நடப்போம்… எல்லோரும் தோள்ல கை வச்சுக்கிட்டு ரயில் மாதிரி நடப்போம்…

நிருபர்: யாராவது குறுக்க வந்தால்… பெண்கள்… பிள்ளைகள்?

தைக்கோ: நாங்க எதுக்கு வழிவிடணும்? நாங்க தைக்கோலா… பிள்ளைங்களோ பெண்களோ அதுலாம் எங்களுக்குப் பெரச்சனை இல்ல… அடிச்சி நவுத்திக்கிட்டுப் போய்கிட்டே இருப்போம்… எங்க வழியில யாரும் நிக்க முடியுமா?

நிருபர்: அருமை அருமை… உங்கள் வழி மகாத்மா வழியைப் போல… வேற என்ன செய்வீங்க?

தைக்கோ: ஒரு விசில் மாதிரி இருக்கும்… அதை ஊதிக்கிட்டே வருவோம். நாங்க வந்தால் அந்த இடமே அதிரும்.

நிருபர்: ஓ! அந்தக் காதைக் கிழிக்கும் சத்தம் ஏற்படுமே அதுவா? அதைக் கேட்டால் வயதானவர்கள் குழந்தைகள் எல்லாரும் அலறுவார்களே?

தைக்கோ: அதேதான்… அதான் எங்களுக்கு வேணும். அப்படியே அலறிக்கிட்டு ஓடணும்…

நிருபர்: உங்கள் பொதுநல சிந்தனை அப்படியே …. முத்தமிடத் தோன்றுகிறது. வேறு என்னென்ன நற்காரியங்கள் உங்கள் பட்டியலில் உள்ளன?

தைக்கோ: அப்புறம் என்னா? போத்தலை ஓப்பன் செஞ்சிட்டு நல்லா தண்ணீ அடிப்போம். அடிச்சிட்டு அப்படியே காவடி முன்னுக்குத் தெறிக்க விடுவோம். சும்மாவா?

நிருபர்: ஓ! யார் அந்த முருகருக்குத் தங்களின் காணிக்கையைச் செலுத்த பக்தியோடு போகும் அவர்களின் காவடியின் முன்பா?

தைக்கோ: யாரு காவடிலாம் முக்கியம் இல்ல தம்பி…. அப்படியே போத்தைய தலைல வச்சிக்கிட்டு சுத்துவோம்… ரோடே தேஞ்சிரும்…

நிருபர்: அற்புதம்! அற்புதம். பக்தி வெள்ளம் பெருகும் அல்லவா?

தைக்கோ: எல்லாரும் பயந்து ஓரமா ஒதுங்கிடுவாங்கன்னா பாத்துக்குங்களேன்… அப்புறம் எங்களுக்குன்னு  நல்லா சினிமா பாட்டா போட்டு இன்னும் வெறிய ஏத்துவாங்க…

நிருபர்: அருமையான திட்டம் ஐயா. வேறு ஏதும் மக்களுக்குச் சொல்ல விரும்புகிறீர்களா?

தைக்கோ: கோவிலுக்குப் போங்க… சாமி கும்பிடுங்க… மூனாவது நாளு சாமி ரதம் வரும் நல்லா ஜொலிக்கும். அதே மாதிரி நீங்களும் நல்லா ஜொலிக்கற மாதிரி சும்மா தகதகன்னு வாங்க. வீட்டுல நகை இருந்துச்சின்னா தாராளமா போட்டுட்டு வாங்க. எங்களுக்கும் காசு பாக்கணும்லே… அறுக்கும்போது கத்தாதீங்க… அதுதான் எங்க வேலையே…

நிருபர்: எதற்கு அடுத்து வீட்டு நகை?

தைக்கோ: எங்களோட சங்க நிதி அதான் தம்பி!!! அறுத்துட்டு ஓடிருவோம்… பாத்துக்குங்க…

நிருபர்: மிக்க நலம் ஐயா. உங்களை எப்படி அடையாளம் காண்பது?

தைக்கோ: ஜீன்ஸ் முட்டிக்கிட்ட கிழிஞ்சிருக்கும். அப்புறம் தலைல கலர் ‘டை’ அடிச்சிருப்போம்… மண்டைல அணில் பிள்ள உட்கார்ந்திருக்கோம்… ராத்திரிலகூட கருப்புக் கண்ணாடி போட்டிருப்போம்… அப்படியே கத்திக்கிட்டே  வருவோம்… இடிச்சி தள்ளுவோம்… அதுதான் நாங்க…

நிருபர்: உங்கள் சேவை ஒவ்வொரு தைப்பூசத்திலும் தொடர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டு விடைபெறுகிறேன். அருமையான பயன்மிக்க ஒரு நேர்காணலுக்கு மிக்க நன்றி ஐயா. உங்களின் பொன்னான பொழுதிற்கு நன்றி.

(இப்படியாக தைக்கோ தர்மலிங்கம் தன் சங்க உறுப்பினர்களுடன் தைப்பூச வேட்டைக்குத் தயாரானார்)

குறிப்பு:

  1. இவர்களைப் போன்றவர்கள் உங்கள் வீட்டிலிருந்துகூட உருவாகி வரக்கூடும். அவர்களை நீங்கள் அறிந்து கொள்ள சரியான இடம் தைப்பூசம்தான். தைப்பூசம் ஆண்மையைக் காட்டும் வீரத்தைக் காட்டும் இடமல்ல; கொஞ்சம் மனத்தில் ஈரம் இருந்தால் போதும், பக்தியோடு வரும் பல பொதுமக்களின் மனமகிழ்ச்சிக்கு உறுதுணையாக அமையலாம்.
  2. நகை கடையோடு வராதீர்கள்; அது தங்கம் அல்ல எனத் திருடர்களுக்குத் தெரியாது.
  3. பெண் பிள்ளைகளைத் தனியாகக் கூட்டத்தில் சுற்ற விடாதீர்கள்.
  4. உங்கள் மகன்களை/ உங்கள் வீட்டு இளைஞர்கள் தைப்பூசத்திற்கு உடுத்திச் செல்லும் ஆடையின் மீது கவனம் செலுத்துங்கள். பண்பாட்டிற்குப் புறம்பாக இருந்தால் கண்டியுங்கள்.
  5. அவர்கள் வலிமையானவர்கள் நாம் வலிமையற்றவர்கள் என்று நினைக்காதீர். இந்தச் சமூகத்தைக் கட்டமைக்கும் பணி அனைவரிடமும் உள்ளது.
  6. குறிப்பாக, தயவு செய்து குப்பைகளை வீசாதீர்கள். தைப்பூசத்திற்குப் பிறகு நகரமே குப்பை மேடாகி கிடப்பது நமக்குத்தான் அவப்பெயரைக் கொண்டு வரும்.
  7. மற்றவர்கள் தங்களின் நேர்த்திக்கடனைச் செலுத்த ஒத்துழைப்பை வழங்குங்கள்.

மேற்கண்ட நேர்காணல் ஒரு கற்பனையே. யாரையும் குறிப்பிடுபவன அல்ல.

கே.பாலமுருகன்

சிறுகதை: நடுநிசியில் தொடரும் ஓர் உரையாடல்

 

குறிப்பு: 18 வயதிற்கு மேல் உள்ள வாசகர்களும், இருதயம் பலமானவர்கள் மட்டுமே இச்சிறுகதையை வாசிக்கவும்.

இதுதான் எங்கள் வாடகை வீடு என்பதைத் தவிர வேறு வழியில்லாததால் அங்கேயே தங்கிவிட்டோம். அப்போதைக்கு 80 வெள்ளிக்கு மிகக் குறைவான வாடகை எங்குமே கிடைக்காது. இரண்டே அறைகள் கொண்ட வீடு.  இவ்வீட்டிற்கு நாங்கள் வரும்போது பல வருடங்கள் யாரும் தங்கியதாகவே தென்படவில்லை. அசூசையான ஒரு சுருட்டு வாடையின் மீது மொத்த சாயத்தையும் பூசி வைத்ததைப் போலவே அசௌகரிகமாக இருந்தது. சிரமப்பட்டு முகர்ந்து கொண்டே இருப்பேன். எப்படியும் அந்தச் சுருட்டு வாடையின் பிறப்பிடம் எதுவென தேடிப் பார்க்க மனம் இயல்பாகவே தூண்டி நிற்கும்.

“யாரோ சுருட்டுக் குடிக்கற தாத்தா இங்க ரொம்ப காலம் இருந்துருப்பாரு…”

“சுருட்டுக்கார தாத்தா மொத்த சுருட்டு கம்பெனிய இங்கத்தான் வச்சிருந்தாரு…” என்று நானும் சிவாவும் கேலி செய்வோம்.

என் தலைக்கு மேலே குற்றுயிருமாய் குலையுயிருமாய் காற்றில் அசைந்து கொண்டிருந்த மஞ்சள் விளக்கைக் கவனித்துக் கொண்டே மெத்தையில் படுத்திருந்தேன். இரவின் மௌனம் மிகக் கொடூரமானது. நம்மை நோக்கி நம்மை இழுத்துச் செல்லும். ஏதேதோ சிந்தனைகள் உள்ளே உலாவிக் கொண்டிருந்ததன. இந்த வீடு அப்படித்தான். இங்கு வந்ததிலிருந்து மனக்குழப்பங்கள் ஏராளம். படுத்தால், சிக்கலான கனவுகள். அதுவே பிறகு பழகிக் கொண்டது.

அன்றோடு தேர்வு முடிந்து நான்கு நாட்கள் ஆகியிருந்தன. இருவரும் அவரவர் வீட்டிற்குக் கிளம்ப ஓரிரு நாட்கள் இருந்தன. மஞ்சள் விளக்குத்தான் இரவின் அடர்த்தியை  உள்வாங்கிக் கொள்ளும் ஒரே பொருள் எனத் தோன்றியது. அதன் அசைவும் மங்கலான வெளிச்சமும்.

“எத்தனை நாளா மாமா வீட்டுக்கு வர்றது இல்ல?”

கீழே மௌனம் மட்டுமே நிலவியது. பொருள்களின் மீதான அசைவுகள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. சிவா கீழேயுள்ள சிறிய அறையில் தங்கியிருக்கிறான்.

“ஏன்டா…  உங்க மாமா வர்றது இல்லதானே?”

கீழேயுள்ள மேசையின் மேற்பரப்பு கண்ணாடியிலானது. ஆகையால் அதிலிருந்து எதை நகர்த்தினாலும் அதன் ஓசை பெருக்கக்கூடியது. சிறிது நேரத்திற்குப் பிறகு மேசையிலிருந்து ஒரு பேனாவை நகர்த்திப் பார்ப்பது போன்ற ஒலி எழும்பியது. சிவா எப்பொழுதும் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தால் அப்படிச் செய்வான்.

“உன்னத்தாண்டா, கேக்கறேன்…  மாமா ஏன் வர்றது இல்ல?”

“அது உனக்கு எதுக்கு? உன் வேலைய பாரு…”

அவனது குரலில் திடீர் தடுமாற்றம் அல்லது கோபம் தெரிந்தது.  இவ்வீட்டில் படிக்கட்டின் ஓரத்தில் ஓர் அறை இருக்கிறது. எதற்காக இந்த வீட்டின் அமைப்பு மட்டும் வித்தியாசமாக இருக்கிறது என நாங்கள் தீவிரமாகச் சிந்தித்தது கிடையாது. இருப்பதை வெறுமனே ஏற்றுக் கொள்வதில் இருக்கும் சோம்பேறித்தனம் மிகவும் விருப்பமானதாக அமைந்துவிட்டது. அந்த அறைக்காக மட்டுமே தனியாகப் பலகை படிக்கட்டுகள் கட்டப்பட்டிருக்கும். இடை இடையே பெரிய சந்து. தவறுதலாக கால் இடறினாலும் முழு உடலும் அந்தச் சந்தில் விழுந்து கீழே சரிந்துவிடக்கூடும்.

எப்பொழுதும் மேலே இருக்கும் என்னுடைய அறையில் இருந்துகொண்டுத்தான் கீழே  இருக்கும்  சிவாவும் நானும் பேசிக் கொள்வோம். சிவாவின் அறை கீழ்மாடியில் வலதுப் புறத்தின் மூலையில் அமைந்துள்ளது. பெரும்பாலான வேளைகளில் வரவேற்பறையில் அமர்ந்துகொண்டு வானொலி கேட்டுக் கொண்டிருப்பது அவனது பழக்கம்.

“ஏன் இவ்ள கோபம்? சும்மா கேட்டாகூட ஏசற?”

படிக்கட்டு முடிவடையும் இடத்தில் எரிந்துகொண்டிருந்த இன்னொரு மஞ்சள் விளக்கும் காற்றில் இலேசாக ஆடியது. ஒளி படிக்கட்டின் சரிவிலிருந்து விலகி தரைக்கு ஓடி மீண்டும் திரும்பும். சிவா கையை மேசையிலிருந்து எடுக்கவில்லை. மேலும் ஒரு பொருளை நகர்த்திப் பார்த்திருக்கக்கூடும். கீச்ச்ச்ச் என கண்ணாடி தரையிலிருந்து எழுந்த ஒலி பற்களைக் கூசியது. மணி 12க்கு மேல் ஆகியிருந்தது. வெளியில் இருளுடன் யார் யாரோ உரையாடிக் கொண்டிருப்பதைப் போல தோன்றியது.

பக்கத்து வீட்டிலிருக்கும் சீனக் கிழவன் வெளிவரந்தாவில் நாற்காலியைப் போட்டு இருளில் அமர்ந்திருப்பான். அவனாகவே பேசிக் கொண்டிருந்துவிட்டு அப்படியே உறங்கிவிடுவான். அவனது பொழுதுகள் எப்பொழுதும் வரட்சிமிக்கவை. அவனைத் தவிர அவனது உலகில் வேறு யாரும் இருப்பதில்லை. எதிரில் இருப்பவர்களைத் தொலைத்துவிடுவதன் அலட்சியத்திலிருந்து அவனது நாட்களைத் துவங்கி, சுயமாக அவனுக்குள் நிகழும் உரையாடல் பற்றி அக்கறை இல்லாதவரை அர்த்தமற்ற இருப்பு வாடிக்கையாகத் தொடரும். சில சமயங்களில் அதுவும் இருளில் என் அறையின் சன்னலைத் திறந்து அவன் இருப்பதைப் பார்க்க நேரும்போது ஏதோ ஒருவகை அச்சமும் நடுக்கமும் பற்றிக் கொள்கின்றன.

திடீரென ஒரு சுருட்டு வாசமும் வீசியது. “சிவா… இந்தச் சுருட்டு நாத்தம் மட்டும் போகவே போகாது போல… யாராது வந்தாங்கனா நீதான் சுருட்டு குடிக்கிறேனு நினைச்சுக்குவாங்க…”

நான் மட்டும் தான் சிரித்தேன். சிவாவிடம் எந்தச் சலனமும் இல்லை.

” சிவா… இந்தக் கிழவனுக்கு என்ன வந்துச்சி? உனக்கு தெரியுமா?”

“அவனைப் பத்தி ஏன் இப்பெ? ஊருல உள்ளவனுங்க பத்தி கவலைப்பட்டுத்தான் நான் இப்டி இருக்கன்…”

சிவா வேறுவகையான தொனியைக் கொண்டிருந்தான். எப்பொழுதும் சிரிப்பூட்டும் வசனங்களும் சொற்களும் மட்டும்தான் அவனிடம் கைவசம் இருக்கும். இப்பொழுது ஆச்சர்யமாக விரக்தியும் பதற்றமும் கலந்த தொனியில் பேசுகிறான். கீழே இறங்கி அவனைப் பார்த்துவிட்டு வரலாம் எனத் தோன்றியது. ஆனாலும் இப்படி அறையில் மங்கிய வெளிச்சத்தில் சுவர்களில் நெளியும் வெறுமைக்கு நடுவே புத்தகம் படித்துக் கொண்டிருப்பதன் மூலம் எனக்குக் கிடைக்கும் ஆயாசத்தை இழக்க மனமில்லாததால் அப்படியே கிடந்தேன். கைகளிலும் கால்களிலும் சோர்வு படிந்திருந்தது.

“வீட்டுப் பக்கத்துலெ இருக்கும் ஒரு மனுசாளு பத்தி பேசாம… என்னடா வாழ்க்க? சும்மா…  ஏன் இப்ப கோபமா பேசறே?”

இந்த வீட்டின் அமைப்பு குறித்து எனக்குத் திடீர் சந்தேகமும் பிரமிப்பும் எழுந்தன. மேல்மாடி பெரியதாக உருவாக்க வேண்டும் என்று தொடங்கிய வேலைப்பாடுகள் வெற்றிப்பெறாததால் பாதியில் தேங்கிவிட்டதன் மிச்சம்தான் இந்த அறை எனத் தோன்றியது. கீழ்த்தரைக்கும் மேல்மாடிக்கும் 8 அடி தூரம்தான் இருக்கும். மேலிருந்து எங்கிருந்து பேசினாலும் சொற்கள் மிக நேர்த்தியாகத் தரை இறங்கி கீழுள்ள எல்லா இடங்களுக்கும் சென்றடைந்துவிடும். சிலசமயங்களில் எனக்குள்ளாக நான் முனகிக் கொள்ளும் சிலவார்த்தைகள்கூட கீழுள்ள சிவாவிற்குக் கேட்டுவிடுவதுண்டு. இந்த வீட்டில் சொற்கள் என்ன ஆச்சர்யமாய் தன் மீதான இரகசியங்களைப் பகிங்கரமாகத் தெரிவிக்கன்றன.

“என்னடா சத்தமே காணம்? எங்காவது போய்ட்டு வரலாமா? கடுப்பா இருக்கு”

“இல்ல வேணாம்… ஆமா, என்கூட உண்மையா பழகுறியா இல்ல… அவுஸ்மேட்னு வெறும் உறவா?”

அவனுக்கு எப்பொழுதும் பிறர் மீது நம்பிக்கை இருந்தது கிடையாது. தனது கேள்விகளின் மூலம் அவனை நெருங்க நினைக்கும் நம் முயற்சிகளை  உடைத்து ஊனமாக்கிவிடுவான். வெறும் முனகலோடு அவனிடமிருந்து திரும்ப நேரிடும். அவனது வேலையிடத்தில்கூட நெருங்கிய நண்பர்கள் கிடையாது. எப்பொழுதும் அவர்களைப் பற்றி இரவு முழுக்க குறைப்பட்டுக் கொண்டே இருப்பான். சிலவேளைகளில் அவனது நாவு நீண்டு ஒரு பெரும் இரவாக மாறி எல்லோரையும் விழுங்கத் துவங்கிவிடுவதைப் போல பேசிக் கொண்டே இருப்பான். அப்படி இன்னமும் அவனது பொழுதுகளிலிருந்து தொலையாமல் எதையோ கெட்டியாகப் பிடித்துத் தப்பித்துக் கொண்டது நான் மட்டுமே.

“உனக்கு எப்பவும் சந்தேகம்தானா? உன் மேல முதல்ல உனக்கு ஏதாவது பிடிமானம் இருக்கா? சும்மா உளறாத. உன் மேல எனக்கு நட்பும் பாசமும் இருக்கு. பொய் இல்ல. போதுமா?”

மீண்டும் மௌனத்திற்குத் திரும்பியிருந்தான். சிவா ஈப்போவில் ஏதோ ஒரு சீனக் குக்கிராமத்திலிருந்து வந்தவன். அவனது பின்புலத்தைப் பற்றி அவன் அவ்வளவாகக் கூறியது கிடையாது. கேட்கும்போதெல்லாம் அதனைக் கடப்பதற்கு ஏதாவது காரணம் வைத்திருந்தான். அவனிடம் மிகப் பாதுகாப்பாய் மிகவும் நெருக்கமாக இருப்பது அவனது யானை உண்டியல் மட்டுமே. அதனுள் அவன் காசு போட்டும் நான் பார்த்தது இல்லை. இந்த வீட்டிற்கு வரும்போது அதனைக் கொண்டு வந்தான். ஆனால், கடைசி வரை அது காற்றை விழுங்கியபடித்தான் இருக்கிறது.

“சிவா… உங்க மாமா என்ன குடிக்காரரா? கோவிச்சிக்காத. அன்னிக்கு சொன்ன அவருனாலெ வீட்டுல ஏதோ பிரச்சனைன்னு?”

“அப்படில்லாம் ஒன்னுமில்ல. இப்ப எல்லாம் சரியாச்சி”

“ம்ம்ம்ம்… அப்படின்னா ஓகே,”

எனக்கும் சிவாவிற்கும் இருக்கும் மிக சௌகரியமான இடைவேளியே இப்படி இருவரும் முகத்திற்கு முகம் சந்தித்துக் கொள்ளாமல் உரையாடிக் கொள்வதுதான். ஒருவேளை உறக்கம் தட்டி அவன் அறைக்குள் சென்றுவிட்டாலும் அல்லது நான் பேசிக் கொண்டே உறங்கிவிட்டாலும், மறுநாள் எப்பொழுது எந்த இடத்தில் எங்களது உரையாடல் துண்டிக்கப்பட்டிருக்கும் என அதிசயமாய் தோன்றும். யார் உதிர்த்த சொல் கடைசியாக அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்துவிட்டு சன்னல் வழியாகப் பறந்து போயிருக்கக்கூடும் என விந்தையாக இருக்கும்.

“நீ எப்பெ தூங்கன?” எனக் கேட்டால் இருவரிடமும் பதில் இருக்காது. தூரத்து உரையாடலில் எங்களுக்கு விருப்பம் இருந்ததற்குக் காரணமும் இதுவாகத்தான் இருக்கும். சடங்கு முறையிலான எந்த ஒத்திகையும் இல்லாமல் விருப்பத்திற்கு எப்பொழுதும் துண்டித்துக் கொள்ளவும் திடீரென எங்கிருந்தோ இணைத்துக் கொள்ளவும் இந்த உரையாடல் வசதியாக அமைந்துவிட்டிருந்தது.

“சிவா! தூங்கிட்டியா?”

“இல்ல… ஏன்?”

“ஒன்னுமில்ல. .”

உறக்கம் தட்டுவது போல இருந்தது. சோம்பலான உடலை மேலும் தளர்த்தி கையிலிருந்த புத்தகத்தை தலைமாட்டிலுள்ள மேசையில் வைத்தேன். 30 நிமிடத்திற்கு முன் இலேசாக நான் உறங்கியது திடீரென ஞாபகத்திற்கு வந்தது. சுருட்டு வாசம் மெத்தை, தலையணை, அறை எல்லா இடங்களிலும் பரவுவதைப் போல உணர்கிறேன். எப்பொழுதோ   முன்வாசல் கதவைச் சாத்திவிட்டு யாரோ ஏதோ பேசியவாறு வெளியேறியதும் நினைவில் இருந்தது. சட்டென விழிப்பு.

“சிவா… தூங்கிட்டியா?  யாராச்சம் வந்தாங்களா?” மீண்டும்  மௌனம்.

கைத்தொலைப்பேசி சத்தமில்லாமல் வெறும் ஒளியை மட்டும் காட்டி அலறியது.

“ஹலோ!”

“ஹலோ சிவா பேசறன்… சாயங்காலம் ரொம்ப தலை வலியா இருந்துச்சிடா. அதான் டவுனுக்கு வந்தன்… தலை வலி மாத்திரை எங்கும் கிடைக்கல… எங்காவது 24 மணி நேர கடை இருக்கானு தேடிப் பிடிச்சி வாங்கிட்டுத்தான் வருவேன்… நீ தூங்கறதுனா தூங்கு. என்கிட்ட சாவி இருக்கு,”

கைத்தொலைப்பேசியை வைத்ததும் கீழேயிருந்து மீண்டும் அதே சிவாவின் குரல்.

“யாருடா போன்ல?”

 

– கே.பாலமுருகன்

பின் குறிப்பு: ஒன்றும் இல்லை.  இருதயம் பலவீனமாகியிருந்தால் என்னை நாடலாம், உங்கள் மருத்துவப் பரிசோதனைக்கு 25% கழிவு சீட்டு வழங்கப்படும். :)

(2010ஆம் ஆண்டு எழுதப்பட்ட சிறுகதை) – மீள்பிரசுரம்

 

 

கவிதை: நகரங்களின் நாக்குகள்

எல்லா இரைச்சல்களையும் மெதுமெதுவாகச் சேமித்து
சூடாறாமல் தகித்துக் கொண்டிருக்கும்
ஓர் இரவின் மௌனத்திற்குள்
அடைத்துவிட்டுப்
போய்க் கொண்டிருக்கிறான்
தள்ளு வண்டிக்காரன்.

அத்தனை நேரம்
அங்கிருந்த பரப்பரப்பு
எல்லையில்லா ஓர் ஓய்வுக்குள்
சுவடில்லாமல் மறைய
ஓர் எளிய சத்தம் மட்டும்
தலைத் தூக்கிப்
பார்த்துக் கொண்டிருந்தது.

அமிழ்ந்துவிட்ட விளக்குகளிலிருந்து
கண்சிமிட்டும் சிறிய அசைவில்
ஒரு வெளிச்சப்பூச்சி
பறந்து செல்கிறது.

யாரையோ கடிந்துகொண்டு
யாருமற்ற வெளியில்
உறங்குவதற்கு முன்
தன் கிழிந்த சட்டையை
யாரை நோக்கியோ
உதறுகிறான்
யாரென்று தெரியாத
ஒரு கிழவன்.

கடைசியாக
பேச்சற்ற ஒரு நடுநிசி
இலாவகமாக இறக்கிவிட்டுச் செல்கிறது
தன் கூரிய நிழலை.

-கே.பாலமுருகன்

முடி திருத்தம் நிலையம் ‘லோரோங் 68’ – பாகம் 1 (ஜல்லிக்கட்டு)

அரசியல், சமூகம், சினிமா, வெட்டிப் பேச்சு என அனைத்திற்கும் பேர்போன மிகச் சிறந்த இடம் ‘முடி திருத்தம் நிலையம்’ ஆகும். ஆண்களின் வம்புப் பேச்சுக் கூடாரம். வயதானவர்கள், வேலை இல்லாதவர்கள், பொழுதைக் கழிப்பவர்கள், வெட்டிப் பேச்சுக்கென்று எழுதி வைக்கப்பட்டவர்கள், சமூகத்தின் ஆழ்மனத்தில் கரைந்தவர்கள், மேலெழுந்து தூக்கிவீசப்பட்டவர்கள், மேலே எழாமலேயே தோல்வியுற்றவர்கள், வீட்டை விட்டு ஒதுக்கப்பட்டவர்கள், வீட்டிற்குள்ளேயே மதிப்பை இழந்தவர்கள் என ஒவ்வொருநாளும் முடி திருத்தம் நிலையங்கள் பார்க்காத மனிதர்களே கிடையாது. பலரின் மனக் காயங்களுக்கு பணம் கொடுக்காமலேயே மருந்திட்ட முடி திருத்தம் நிலையங்கள் நம் அப்பாக்கள், தாத்தாக்களின் வாழ்வின் ஓர் ஓரத்தில் இன்னமும் ஜீவித்துக் கொண்டிருக்கலாம்.

1990களின் இறுதியில் இந்தியர்கள் வைத்திருந்த முடி திருத்தம் நிலையங்கள் ஒட்டுமொத்த வெட்டிப் பேச்சின் மையங்களாகவும், பலரின் மனக் கொதிப்புகளுக்கான கூடாரங்களாகவும் இருந்ததை யாராலும் மறந்திருக்க முடியாது. உன்னிப்பாத அதனைக் கேட்டிருக்காமல் நாம் கடந்து போயிருக்கக்கூடும். என் அப்பாவின் நண்பர் எம்.ஜி.ஆர் குமார் முன்பு என்னை அடிக்கடி பத்து டுவாவில் இருக்கும் ஒரு பழைய முடி திருத்தம் நிலையத்திற்கு அழைத்துப் போவார். அவரும் முன்பு ஒரு கடை வைத்திருந்து பின்னர் வேலையாளிடம் ஏமாந்து அக்கடை நஷ்டத்தில் போய் முடிந்தது. அதனை அடைத்துவிட்டு எம்.ஜி.ஆர் குமார் மீண்டும் சுங்கைப்பட்டாணிக்கே வந்துவிட்டார். (என்னுடைய சில சிறுகதைகளில் இந்த எம்.ஜி.ஆர் குமாரைப் பற்றி எழுதியுள்ளேன்; புனைந்துள்ளேன்)

என்னைக் கடையின் ஒரு நீண்ட இருக்கையில் அமர வைத்துவிட்டு அவர் அந்த சுழலும் நாற்காலியில் அமர்ந்து கொண்டு அக்கடைக்கு முதலாளியைப் போல முடி திருத்துபவரிடம் பேசிக் கொண்டே இருப்பார். தன் மனக்கிடங்கில் ஒதுக்கி வைத்திருந்த அத்தனை ஆற்றாமைகளையும் கொட்டிக் கொண்டே இருப்பார். அங்கு வெட்டித் திருத்தப்படுவது வெறும் முடி மட்டும் அல்ல மனத்தினுள் அடர்ந்து வளர்ந்திருக்கும் கசப்புகளையும்தான் என நினைக்க முடிகிறது. அதற்கு அக்கடையாளர்கள் எந்தக் கட்டணத்தையும் வசூலிப்பதும் இல்லை. அதனாலேயே நம் வீட்டுப் பெரியவர்கள், ஆண்கள் முடி திருத்தம் நிலையம் சென்று வெட்டிப் பேச்சு பேசிவிட்டு வருவதாக நம்மில் பலர் புலம்பியிருக்கக்கூடும். அது ஒரு வடிக்காலாக மட்டுமே இருந்திருக்கிறது.

அத்தகைய முடி திருத்தம் நிலையம் ஒன்றனை எனது புனைவுலகத்தின் லோரோங் 68-இல் ஆரம்பித்துள்ளேன். இங்கு நம் மனக் கொதிப்புகளை ஆற்றித் தரும் சேவையை மட்டுமே எனது புனைவுலக கதாபாத்திரமான எம்.ஜி.ஆர் குமார் செய்யவிருக்கிறார். யார் வேண்டுமென்றாலும் கதைக்க மட்டுமே இம்முடி திருத்தம் நிலையத்திற்கு வரலாம். அதன் முகவரி: https://balamurugan.org லோரோங்  68.

இன்றுத்தான் எம்.ஜி.ஆர் குமார் தன் முடி திருத்தம் நிலையத்தைத் திறக்கிறார். முதல் நாளே கூட்டம் நிறைந்து தன் அகத்தைத் திருத்த முட்டி மோதுகிறது. அவர் டோக்கன் எல்லாம் கொடுக்க மாட்டார். எல்லோரும் ஒன்றாக அமர்ந்து கதைக்கலாம்; திட்டலாம்; கருத்துரைக்கலாம்; விமர்சிக்கலாம்; புறம் பேசலாம்; அறிவுரைக் கூறலாம்; லாம் லாம் லாம்.

எம்.ஜி.ஆர் குமார் ஒரு தீவிர எம்.ஜி ஆர். இரசிகர். 1980களில் எல்லோர் வீடுகளின் சுவர்களிலும் எம்.ஜி.ஆர் போஸ்டரை நீங்கள் பார்த்திருக்கக்கூடும். என் அப்பாவும் வீட்டின் நடு வரவேற்பறையிலேயே எம்.ஜி.ஆரின் புகைப்படத்தை மாட்டியிருந்தார். தீவிர எம்.ஜி.ஆர் ரசிகரான எம்.ஜி.ஆர் குமாரும் தன் முடி திருத்தம் நிலையத்தில் எல்லா இடங்களிலும் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ முதற்கொண்டு ‘அன்பே வா’ வரை  எம்.ஜி.ஆரின் படங்களை ஒட்டி வைத்திருந்தார். இப்பொழுது உங்கள் நினைவுகள் மீண்டும் ஒரு 20 வருடத்திற்கு முன்னே சென்று நீங்கள் முடி திருத்திய நிலையங்களில் இருந்த எம்.ஜி.ஆர் புகைப்படங்களை நினைவுப்படுத்தக்கூடும்.

‘தாய் மேல் ஆணை…தமிழ் மேன் ஆணை…’

‘நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்’

இப்படி எம்.ஜி.ஆர் பாடலைப் பாடிக்கொண்டு உங்கள் முடியைத் திருத்திய யாரேனும் உங்கள் நினைவடுக்கில் இருந்தால் அவர்தான் இந்த ‘எம்.ஜி.ஆர்’ குமார். அவரை அப்படியே உங்களுக்குள் தேக்கி வைத்துக் கொள்ளுங்கள். அவர் பேசாத அரசியல் கிடையாது, பேசாத சமூகக் கருத்துகள் கிடையாது. அவர் நம் அறிவுக்கும் புரிதலுக்கும் சவால்விடக் கூடியவர்.

அவருடைய இந்த ‘லோரோங் 68’ கடையில் ஒரு பழைய வானொலியும் வைத்திருக்கிறார். ஓங்கி அடித்தால்தான் பாடும். நிலையத்தைத் திருப்ப ஒரு வட்டமான திருகியும் இருக்கும். அது ஓர் இடத்தில் நிற்காது. இலேசாகக் காற்று அடித்தாலும் சட்டென நிலையம் இரையும். ஆகவே, அதனை தமிழ் வானொலி நிலையத்திலேயே நிறுத்த எம்.ஜி.ஆர் குமார் ஒரு நெகிழி கயிற்றைக் கொண்டு அந்தத் திருகியை வானொலியின் ஒரு மூலையோடு சேர்த்துக் கட்டியிருப்பார். கட்டம் போட்ட ஒரு சட்டையும் தூக்கி மேலே போடப்பட்டிருக்கும் ஒரு வெளுத்த சிலுவாரும் என எம்.ஜி.ஆர் குமார் இதோ தன் வேலையைத் தொடங்குகிறார்.

 

ஜல்லிக்கட்டு

“ஏங்க, நேத்துத் தமிழ்நாட்டுல நடந்த ஜல்லிக்கட்டுல ஒருத்தர் இறந்துட்டாராம். கேள்விப் பட்டீங்களா? என்னங்க இது? உயிரை விட்டுத்தான் ஜல்லிக்கட்டு விளையாடணுமா? இது மனசோட உயிருக்கு ஆபத்து இல்லையா?”

அதைக் கேட்டதும் எம்.ஜி.ஆர் குமார் தன் இரண்டு விரல்களைக் குவித்து மூக்குக்குக் கீழ் வைத்துத் தேய்த்து ‘ஹா…..”  என்று சொல்லிவிட்டு மூக்கில் விரலை அடித்து வெளியேற்றினார். அப்படியென்றால் அவர் கருத்து சொல்ல தயார் என்று அர்த்தம். தனக்குள் ஒரு எம்.ஜி.ஆர் வாழ்வதாகவே அவர் நினைத்து நம்பிக் கொண்டிருக்கிறார். இப்படிப்பட்ட பலரை நாம் பார்த்திருக்கக்கூடும்.

“என்னப்பா! கார் ரேஸ் நடத்துறாங்க. அதுலயும்தான் நிறைய பேர் காடி கவுந்து கால் கைய உடைச்சிக்கறான். செத்தும் போறானுங்க. அதை நிப்பாட்டிட்டாங்களா? இல்ல உலகத்துல அதிகாரப்பூர்வமா மோட்டர் ரேஸ் நடக்கறது இல்லயா? அதுலாம் வீர விளையாட்டோ? அப்ப ஜல்லிக்கட்டு வீர விளையாட்டுனு சொன்னா உடனே வெட்டி நியாயம் பேச வந்துர்றீங்க?”

எம்.ஜி.ஆர் குமார் சட்டென கொதித்து எழுந்தார்.

“நம்ம வீட்டுல அண்ணன் தம்பிக்கூட ஓடிப் பிடிச்சி விளையாடறது இல்லயா? அப்படி விளையாடும்போது கைல காலுல காயம் வர்றது இல்லயா? அந்த மாதிரித்தான். மாடுன்னா தமிழனோட வாழ்க்கையில ஒன்றிவிட்ட ஒன்று. அதை நீக்கிட்டு வாழ்க்கைய வாழ முடியாத அளவுக்கு விவசாய்ங்களோட கலந்துருக்கு. ஜல்லிக்கட்டுன்னா எங்க அண்ணன் தம்பிக்கூட விளையாடும் ஒரு வீர விளையாட்டு மாதிரி…”

“இருந்தாலும்… அதை அடக்க முடியுமா?”

எம்.ஜி.ஆர் குமார் மீண்டும் தன் மூக்கைத் தடவுகிறார்.

“ஜல்லிக்கட்டுன்னா என்னா போறவன் வர்றவன், வேடிக்கைப் பார்க்க வந்தவன் எல்லாம் விளையாடலாம்னு நினைக்கிறீங்களோ? அப்படி நினைச்சா அது தப்பு. ஜல்லிக்கட்டு விளையாடறதுக்கு ஒருத்தனுக்கு உடலில் தெம்பும் சக்தியும், நல்ல உயரமும், திடமும் வேண்டும். அதைப் பரிசோதிச்சிட்டுத்தான் ஒருத்தன ஜல்லிக்கட்டு விளையாடவே அனுமதிப்பாங்க… டாக்டர் பரிசோதனை செஞ்சிட்டுத்தான் ஒருத்தன் ஆரோக்கியமா இருக்கான், விளையாடத் தகுதி இருக்கும் அப்படின்னு பார்த்து சொல்லிட்டுத்தான் வாடிவாசல் பக்கமே போக முடியும் தம்பி, புரியுதா? அதோட தேர்வானங்களுக்குப் பயிற்சியும் இருக்கு…”

“அப்படின்னா மலேசியாவிலும் ஜல்லிக்கட்டுக்குப் பயிற்சிக் கொடுத்து இங்கயும் ஆரம்பிக்கலாமே?”

“அதை நான் மட்டும் சொல்ல முடியாது. இப்ப இதைக் கேட்டுக்கிட்டு இருக்காங்களே அவுங்களாம் யோசிச்சி இதைப் பத்தி சாதகம் பாதகம் எல்லாத்தயும் பேச முன் வந்தால்தான் சாத்தியம் ஆகும்…ஆனால் ஜல்லிக்கட்டைத் தமிழனோட வரலாற்றுலிருந்தும் வாழ்க்கையிலிருந்தும் நீக்கவே முடியாது. அதை வேணானு சொல்றவன் ஒவ்வொருத்தனும் தன் தமிழ் அடையாளங்கள இழக்கத் தயாரா இருக்கும் ஆபத்தானவங்கன்னு மட்டும் நினைச்சிக்குங்க…”

என்று சொல்லிவிட்டு எம்.ஜி.ஆர் குமார் தன் முதல் நாள் வியாபாரத்தை முடித்துவிட்டு நிலையத்தை அடைத்தார்.

 

– கே.பாலமுருகன்

 

அவநிதாவின் சொல் – கவிதைகளின் புன்முறுவல்

அவநிதாவின்

சின்னஞ்சிறு கால் தடத்தினைப் போல

அவளுடைய வார்த்தைகளும்

பார்க்கும் முன் கரைந்தொழுகி விடுகிறது

மனத்திற்குள்…

 

2007ஆம் ஆண்டிலிருந்தே திண்ணை.காம் இணைய இதழின் மூலம் அறிமுகமானவர் சிங்கப்பூரில் வசிக்கும் எப்பொழுதுமான நெருங்கிய தோழர் பாண்டித்துரை. நான் அப்பொழுதிலிருந்தே அறிந்த பாண்டி, ஒரு நல்ல கவிஞர், கவிதையின் மீது அதீதமான ஈடுபாடும், செயல்நோக்கமும் கொண்டவர். நண்பர்களுடன் இணைந்து ‘பிரம்மா’ என்ற கவிதை நூலையும் வெளியிட்டிருந்தார். கவிதைகள் என்றால் பாண்டியின் ஆழ்மனம் விழித்துக் கொள்ளும். தெளிவான மனநிலையுடன் திட்டமிட்டு எழுத முடியாத ஒன்று கவிதை. அது மிகவும் யதார்த்தமான தெறிப்பு; ஆக்ரோஷமான மௌனம்; இரைச்சல்மிக்க அமைதி. இப்படியாகச் சொல்லிக் கொண்டே போகலாம்.

நான் இலக்கியத்தில் ஆர்வத்துடன் இருந்த அதே காலக்கட்டத்தில் சிங்கப்பூரில் அதுபோல ஆர்வத்துடன் இருந்தவர் நீதிப்பாண்டி. அவருடைய நட்பு வட்டமும் பெரியதாக இருந்தது. ஒன்றாகவே அலைந்தோம். தேக்கா, சிராங்கூன், ஷா நவாஸ் சாப்பாட்டுக் கடை, அங் மோ கியோ நூலகம் என சந்திக்காத இடங்களே இல்லை. கொஞ்சமும் சலிப்பில்லாமல் இருவரும் அலைந்து கொண்டே இருப்போம்; உரையாடல் தீராமல் எல்லா கனங்களிலும் யாரையாது உள்ளே இணைத்தும் கொள்வோம். பூங்குன்ற பாண்டியன், பாலாஜி, பாலு மணிமாறன், எம்.கே குமார், கண்ணபிரான் ஐயா என சதா யாரையாவது சென்று சந்தித்துக் கொண்டும் இருப்போம். அப்பொழுதுதான் சிங்கை இலக்கிய நண்பர்களுக்கும் எனக்குமான நட்பும் விரிந்திருந்தது. அதை இணைத்தது நிச்சயம் பாண்டித்துரைத்தான்.

அவர் சிறுகதைக்காக ‘தங்கமுனை’ விருது பெற்ற செய்தி, கவிதையைக் கடந்து சிறுகதை துறையிலும் தனது அகங்களை விரித்துள்ளார் என்று மகிழ்ச்சியை அளித்தது. இம்முறை சிங்கை சென்றபோது அவருடைய குழந்தையை என்னிடம் கொடுத்தனுப்பினார். நான் அவநிதாவை அழைத்துக் கொண்டு கெடா வரை வந்துவிட்டேன். வெள்ளைக் கவுனுடன் வேறு எங்கோ பார்த்துக் கொண்டிருக்கும் அவநிதாவைக் கொஞ்சம் கொஞ்சமாக வாசித்தேன். அவளுடைய ஓரப்பார்வை மெல்ல திரும்பி என் அகத்தைக் கவனிக்கும் கூர்மையான சுட்டிப் பார்வையாக மாறியது.

தன் மகள் அவநிதாவுக்காகவே நீதிபாண்டியால் எழுதப்பட்ட கவிதை நூல் இது. இந்த நூலை அவர் எங்கேயும் வெளியிடவில்லை எனக் குறிப்பிட்டிருந்தார். 2016ஆம் ஆண்டில் தான் அன்றாட வாழ்நாளில் சந்திக்கும் இலக்கியம் சார்ந்த நண்பர்கள், இலக்கியம் சாராத எளிய மனிதர்கள் என தினம் ஒருவரைப் பார்த்து ‘அவநிதாவின் சொல்’ புத்தகத்தைக் கொடுத்துள்ளார். அவர்கள் பற்றியும் முகநூலில் தொடராக அறிமுகமும் படுத்தியுள்ளார். இதுவரை இப்படி நூல் வெளியீடு செய்து நான் கேள்விப்பட்டதும் இல்லை. அவநிதா குழந்தைமையுடன் இந்த உலகை எதிர்க்கொள்வதைப் போல பாண்டியும் தன் எதிரில் இருக்கும் மனிதர்களோடு இந்த நூலின் சப்தங்களை அதே குழந்தமையுடன் பகிர்ந்திருக்கிறார்.

இத்தொகுப்பில் உள்ள 70க்கும் மேற்பட்ட கவிதைகள் மிகப்பெரிய கவிதை துறையையே புரட்டிப்போடப்போகும் கவிதைகள் என்றெல்லாம் இல்லை. பின் நவீனத்துவ, முன் நவீனத்துவக் கவிதைகளும் அல்ல. கவிதைகளின் புன்முறுவலே அவநிதா பாண்டியின் மனத்தில் உருவாக்கும் சலனம். அது வழியாக அல்லது அப்படியே அவளுடைய சொற்களைக் கவிதையாக்கியுள்ளார். இதுவும் மனத்தில் ஒரு துள்ளலை உண்டாக்கும்.

‘பின்னே ஓடவைத்து

முந்திச் செல்கிறாள்

அவநிதா’ – பாண்டித்துரை

கவிதை மொழியின் நடனம் என்றும் சொல்லியிருக்கிறார்கள். கவிதை மொழியின் குழந்தை என்றுகூட சொல்லலாம் போல என்றாகிவிட்டது. அத்தனை குழந்தைத்தனங்களையும் இணைத்துதான் நீதிபாண்டியின் ‘அவநிதாவின் சொல்’. புற உலகத்தை அறியாத ஒரு பருவம் உண்டு. யார் எத்தனைமுறை சொன்னாலும், எத்தனை கடினமான வார்த்தைகளை உள்ளடக்கி விளக்கினாலும் இவ்வுலகத்தின் சூட்சமமும் உலக நடைமுறையையும் அறியவே அறிந்திட முடியாது ஒரு வயதுண்டு. இன்றும் எல்லோரும் நினைத்து ஏங்கும் குழந்தை பருவம் அது. உலகத்தை அறியாமலே இருந்திருக்கலாம் என்ற குற்றவுணர்ச்சியோடும் ஏக்கத்துடனும் அலையும் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு குழந்தை இருக்கிறது. தன் சிறார் பருவத்தின் அத்தனை நினைவுகளையும் ‘ப்ரேம்’ போட்டுத் தன் மனத்திற்குள் மாட்டிக் கொள்ளாத மனிதர்களே இல்லை என்று சொல்லிவிடலாம்.

‘பசித்த அவநிதா

அழுகையைத் தின்றுவிடுகிறாள்’ – பாண்டித்துரை

நோய் வந்துவிட்டால் எல்லோரும் குழந்தையாகிவிடுவோம். எத்தனை பெரிய பதவியில் இருந்தாலும் ஒரு காய்ச்சல் போதும், நம்மைச் சுருட்டிக் குழந்தையாக்கி மெத்தையின் மடியில் போட்டுவிடும். மருந்து சாப்பிட நாம் பிடிக்கும் சிறு அடத்திலும், அம்மாவோ மனைவியோ அக்காவோ வைக்கும் உணவைக் கண்டு போர்வையை இழுத்துப் போர்த்திக் கொள்ளும் போதும், நமக்குள் இருக்கும் குழந்தை நம் அகங்காரங்களை, பதவிகளை, பட்டங்களை, அந்தஸ்த்துகளை எல்லாம் விழுங்கிவிட்டு ஒரு சிறு மௌனக் கண்ணீராக வெளியே கொட்டும்.

 

Pandithurai

அப்படிப்பட்ட நம்மையும் நமக்குள் இருக்கும் ஒரு குழந்தையையும் சுட்டிக் காட்டும் சொற்கள்தான் அவநிதாவினுடையது. அதையேத்தான் பாண்டியின் கவிதைகளும் செய்கின்றன. நம் வெளிமனம் திட்டவட்டமான பிம்பங்களுடன் கட்டப்பட்டவை. அவை இவ்வுலகை நினைவுக்கூர்ந்து கொண்டே இருக்கும். ஆனால், அதனையும் தாண்டி உள்ளே அகத்துக்கடியில் ஒளிந்து கொண்டிருக்கும், எப்பொழுதோ தன் பொம்மையைத் தொலைத்துவிட்டுத் தேடும் அவநிதாவைப் போல, ஒரு தீண்டலை நோக்கியதே இக்கவிதைகள்.

‘ அவநிதாவை

ஆகாயம் தொட

தூக்கி எறிகிறேன்

என்னையும் தூக்கிச் செல்கிறாள்‘ – பாண்டித்துரை

நாம் புத்தகங்களைத் திறந்திருப்போம்; அதனூடாக வாழ்க்கையின் பல கதவுகளையும் திறந்திருப்போம். ஆனால், இது அவநிதா என்கிற ஒரு குழந்தையைத் திறக்கும் முயற்சி. களைந்துகிடக்கும் சொற்களுக்கிடையே வாழ்க்கையைப் பற்றிய எந்தவித பெரிய தத்துவங்களும் அற்று, மூளையையும் மனத்தையும் கனமாக்காமல், நாம் எப்பொழுதோ தொலைத்துவிட்ட நம்மை தன் சிறு நுனி விரலால் காட்டிச் செல்கிறது. தொடாத ஒரு தொடுதல்; தொட்டுவிட்டுச் செல்கிறது.

அவநிதாவாகவே இருந்திருக்கலாம் என்று மட்டும் தோன்றியது. இடையில் வரும் அப்புக்குட்டி கவிதைகள் அவநிதாவிடம் இருந்து சட்டென தூரமாக்கிவிடுகிறது. இருப்பினும், அது உருவாக்கும் உலகமும் மீண்டும் நம்மைக் குழந்தைகளிடமே இட்டுச் செல்கின்றன.

‘சன்னல் தொடும்

சிட்டுக் குருவிகளை

விரட்டிப்பிடிக்க எத்தனிக்கும் அவநிதா

பறந்து பார்க்கிறாள்’ – பாண்டித்துரை

ஒருமுறை எனது முதுகையும் பார்க்கிறேன்; அதில் எப்பொழுதோ இருந்த சிறகொன்று இப்பொழுது கழன்று எங்கேயோ எந்த வயதிலோ  யார் விரட்டியோ, அதட்டியோ விழுந்துவிட்டதை நினைத்து ஏக்கம் கொள்கிறேன்.அவநிதாவின் ஒரு சொல்; இதுவரை நாம் சொல்லாமல் விட்ட ஆயிரம் சொற்களின் மௌனத்தைக் களைக்கும் மிகக் கச்சிதமான ஆயுதம்.

வாழ்த்துகள் பாண்டி. அவநிதாவை இலக்கிய உலகத்திற்குத் தந்தமைக்கு. எனது, உனது, அவர்களது அவநிதாவின் சொற்களுக்கு  என் அன்பு முத்தங்கள்.

– கே.பாலமுருகன்

ஓர் ஊருல ஓர் ஆமை இருந்துச்சாம்… அப்புறம் இன்னொரு ஊர்ல இன்னொரு ஆமை இருந்துச்சாம்

இன்று சிறுவர்களிடம் கதைக் கேட்கச் சென்றிருந்தேன். வருடத் துவக்கத்தில் முதலாம் ஆண்டு மாணவர்கள் சிலர் எப்பொழுதும் அழுகையுடனும் பயத்துடனும் பள்ளிக்கூடத்தோடு ஒன்ற முடியாமலும் இருப்பார்கள். அவர்களின் பயத்தை உடைக்க நான் வழக்கமாகக் கையாளும் உத்தி, கதைச் சொல்லச் சொல்லிக் கேட்பது. அது அவர்களுக்கு மட்டும் ஒரு வடிக்கால் அல்ல. வருடத் தொடக்கத்தில் பணிச்சுமை கொஞ்சம் அழுத்தமாக இருக்கும் எனக்கும் ஒரு வடிக்கால்தான். அத்தனை நகைச்சுவையும் யதார்த்தமும் நிரம்பிய ஒரு கனநேர பொழுது அது.

முதலில் ஒரு மாணவி கதைச் சொல்ல வெளியே வந்தாள். பார்க்கக் கொஞ்சம் சுட்டியாகவும் இருந்தாள். அவளுடைய கதை நீளமாகவும் சுவாரிஷயமாகவும் இருந்தது.

“என்ன கதைமா?”

“ஆமையும் முயலும் சார்…”

“சரிமா ஏற்கனவே பலமுறை கேட்டக் கதைத்தான். சரி சொல்லு”

“இல்ல இது ஓட்டப்பந்தய கதை இல்ல சார், வேற…”

“ஓ அப்படியா? பரவாலையே… சொல்லு…”

“ஒரு ஊருல ஒரு ஆமை இருந்துச்சாம்… அதுக்கு ரொம்ப பசியாம்… அது சாப்பாடு தேடி அலைஞ்சிச்சாம். எங்கயுமே சாப்பாடு இல்லயாம். அப்புறம் ஒரு ஊர்ல ஒரு முயல் இருந்துச்சாம், அதுக்கும் பசியாம். அதுவும் சாப்பாடு தேடி அலைஞ்சிச்சாம். அப்புறமேல ஒரு ஊர்ல இன்னொரு ஆமை இருந்துச்சாம்…”

“அதுக்கும் பசியா?”

“ஆமாம் சார். அதுவும் சாப்பாடு தேடி அலைஞ்சிச்சாம்… அப்புறம்… இன்னொரு முயல் இருந்துச்சாம்”

அப்படியாக 5 நிமிடத்தில் மட்டும் மொத்தம் 6 ஆமைகளும் 6 முயல்களும் பசியோடு வந்து கொண்டே இருந்தன.

“சாப்ட்டுச்சா இல்லயா?”

“இல்ல சார்… பசிக்கும். அவ்ளத்தான்”

அவ்வளவுத்தான் என்று போய் அமர்ந்துவிட்டாள். எனக்குச் சட்டென பசி எடுத்துக் கொண்டது.

அடுத்து இன்னொரு மாணவி ஆர்வத்துடன் வந்தாள்.

“என்ன கதைமா?”

“ஆமையும் முயலும் சார்” என்றாள்.

எனக்குச் சற்று தயக்கமாக இருந்ததும், “அதே பசிக்கற கதையா?” என்றேன்.

“இல்ல சார் இது வேற கதை,” என்றாள் கண்கள் விரிய.

“ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம். அவரு இருந்த ஊர்ல ஒரு ஆமையும் இருந்துச்சாம்… அந்த ராஜா ஒரு நாளு கீரை கறி வெச்சாராம்… அவரு சமைச்சிட்டுக் காட்டுக்கு வேட்டையாட போனாராம்… அந்த நேரம் பார்த்து ஆமைக்குப் பசி எடுத்துருச்சாம்…”

ஏற்கனவே பசியில் இருந்த எனக்குப் பசி இன்னும் கூடி வயிற்றில் அமிலத்தைக் கரைத்தது.

“உடனே அந்த ஆமை, ராஜாவோட வீட்டுல நுழைஞ்சி அந்தக் கீரை கறிய சாப்பிட்டுருச்சாம்… அப்புறம் ராஜா வந்தாராம்… அவருக்குச் சாப்ட சாப்பாடே இல்லையாம்… அப்படியே பசிலே தூங்கிட்டாராம், அவ்ளத்தான் கதை,” என்று சொல்லிவிட்டு என்னைப் பார்த்தாள். கண்களில் பசி வெறியுடன் உட்கார்ந்திருந்தேன்.

அடுத்து இரண்டு பையன்கள் போட்டிப் போட்டுக் கொண்டு முன்னே ஓடி வந்தனர். ஏன் என்று கேட்டேன். இரண்டு பேரும் ஒரே கதையின் தலைப்பைச் சொன்னார்கள். இருவரில் யார் முதலில் அக்கதையைச் சொல்ல வேண்டும் எனப் போட்டிப் போட்டுக் கொண்டார்கள். நான் ஒருவனை மட்டும் தேர்வு செய்து கதைச் சொல்லப் பணித்தேன்.

 

“சார், ஒரு ஊருல ஒரு ஆமை இருந்துச்சாம்…”

“ஷபாஆஆஆஆ… இந்த ஆமைக்கு ஒரு விடிவு காலமே இல்லையாப்பா?”

“இருங்க சார், சொல்றத கேளுங்க,” என என்னை அதட்டினான். அவன் கவனம் முழுவதும் கதையைத் தன் நண்பனுக்கு முன்பே சொல்லிவிட வேண்டும் என்பதில் மட்டுமே இருந்தது.

“அந்த ஆமை இருந்துச்சுல… அது வந்து… சார் அங்கப் பாருங்க அவன் பழிச்சிக் காட்டறான்,” என்றதும் அவனுக்கு எதிரில் இருந்த இன்னொரு பையனைப் பார்த்து முறைத்தேன்.

“அப்புறம் சார், அந்த ஆமை இருந்துச்சுல… அது வந்து… சார் வினிஷா பாருங்க, மேசைய முன்னுக்குத் தள்ளுது,” என்று சொல்லிக் கதையை நிறுத்தினான்.

“அந்த ஆமை அந்த ஊருல… சார்! கவினேஷ் பாருங்க… குத்து காட்டறான்,”

இப்படியாக அவன் கடைசி வரை அந்த ஆமை கதையைச் சொல்லவே இல்லை. ஏன் என்று கேட்டால் அவனுக்கு அவ்வளவுத்தான் தெரியும் என்று சொல்லிவிட்டு எல்லாரின் மீதும் புகார் சொன்ன திருப்தியுடன் போய் அமர்ந்துவிட்டான்.

அவனுடன் போட்டிப் போட்டுக் கொண்டிருந்த இன்னொரு பையனைக் கதைச் சொல்ல அழைத்தேன்.

“என்னப்பா ஆமை கதையா?”

“இல்ல சார் இது முயல் கதை,” என்று அவன் கூறியதும் கொஞ்சம் மகிழ்ச்சியாக இருந்தது.

“ஒரு ஊர்ல ஒரு முயல் இருந்துச்சாம். அந்த முயலுக்கு ஒரே பசியாம்… அது சாப்பாடு தேடி அலைஞ்சிச்சாம்… அது ஒரு ராஜாவோட வீட்டுல நுழைஞ்சி சாப்பாடு இருக்கானு பாத்துச்சாம். அவரு ஆமை கறி சமைச்சி வச்சிருந்தாராம்…”

“தம்பி!!! திரும்பியும் ஆமையா?”

“இல்ல சார் இதுல அந்த ஆமை  செத்துருச்சி…”

“எப்படி அந்த ஆமை…?”

“அதுதான் மொத ஜெசிக்கா சொன்னுச்சு… அந்தக் கதையல ராஜாவோட கீரை கறிய சாப்டுச்சே அந்த ஆமை, அதை ராஜா கறி வச்சிட்டாரு சார்,”

எனக்குத் தூக்கி வாரிப்போட்டது. அவன் கைவசம் வைத்திருந்த கதையை நண்பன் சொல்லிவிட்டதால் அவனிடம் சொல்லக் கதை இல்லை என்றாலும் ஏற்கனவே சொன்ன ஒரு கதையை அப்படியே தொடர்ந்து கொண்டான் என்பது ஆச்சர்யமாக இருந்தது.

சில காலங்களுக்குப் பிறகு இப்பொழுதுதான்  சிறுவர்களின் உலகில் ஆமை இத்தனை வலிமை பெற்று வியாபித்திருப்பதைப் பார்க்கிறேன்.

“சரி, அந்த ஓட்டப்பந்தயம் திரும்பியும் வைச்சிருந்தால் ஆமை மீண்டும் ஜெயிச்சிருக்குமா?” என்று ஒரு கேள்விக் கேட்டேன்.

எல்லோரும் கையை உயர்த்தினார்கள். எல்லோரிடமும் பதில் இருந்தது.

பதில் 1: ஆமை எப்பவும் ஜெயிக்கும் சார்.

பதில் 2: இந்த முறை முயல் தூங்காது சார்.

பதில் 3: ஆமையும் முயலும் சேர்ந்து தூங்கிருக்கும் (சிரித்துக் கொண்டே).

பதில் 4: ம்ம்ம் தெரில சார், ஏன் போட்டி வைக்கணும்?

பதில் 5: நான் தான் சார் ஜெயிப்பேன்… நான் இவ்ள வேகமா ஓடுவேன் ( வகுப்பில் ஓடிக் காட்டுகிறான்)

எனது பதில்: முயலும் வெல்லும் ஆமையும் வெல்லும், முயலாமை என்றுமே வெல்லாது.

“அது என்ன சார் முயலாமை? புது மிருகமா?”

– கே.பாலமுருகன்

 

கணேஷ் பாபுவின் வாசிப்பு – ஒரு கடிதம்

Ganesh Babu

 

வணக்கம் பாலா,

தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். என்னுடைய வாசிப்பு குறித்து கேட்டிருந்தீர்கள். என் அம்மா நிறைய வாசிப்பார்கள். சுஜாதாவின் தீவிர வாசகி. அதனால் எனக்கு கணேஷ் என்றும் என் தம்பிக்கு வசந்த் என்றும் பெயரிட்டார்கள். என்னுடைய பள்ளியிறுதி வகுப்பில் அம்மாதான் முதன்முதலில் கல்கியின் பொன்னியின் செல்வனை வாசிக்கத் தூண்டினார்கள். அதன்பின் சரித்திரப் புதினங்கள் அனைத்தையும் வாசித்தேன்(கல்கி, சாண்டில்யன், விக்கிரமன், கோவி மணிசேகரன் இவர்கள் எழுதிய அனைத்து நாவல்களையும் வாசித்தேன்.

பின்னர் அது சலிப்பூட்டத் தொடங்கியதும் பாலகுமாரனை முழுக்க வாசித்தேன். அவர் எழுதிய அனைத்து நாவல்களையும் வாசித்தேன். அதுவும் ஒருகட்டத்தில் சலிப்பு ஏற்படுத்தத் தொடங்கியது. என் கல்லூரி நாட்களில் விகடனில் எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய “துணையெழுத்து” கட்டுரைத் தொடர் வெளியானது. அதன்பின் கனவில் கூட எஸ். ராமகிருஷ்ணனின் பெயரையே சொல்லிக் கொண்டிருந்தேன். புது பேனா வாங்கினால் கூட எஸ். ராமகிருஷ்ணன் என்ற பெயரையே எழுதிப் பார்ப்பேன். அவருக்கு கடிதங்கள் எழுதினேன். அவரும் போஸ்ட் கார்டில் பதில் போடுவார். மெல்ல மெல்ல அவரது அனைத்து சிறுகதைகளையும் நாவல்களையும் வாசித்தேன். அவர் காட்டிய உலகம் வித்தியாசமாக இருந்தது. அதுவரை வெகு ஜனக் கதைகளை வாசித்து வந்தவனுக்கு தீவிர இலக்கியம் அப்போதுதான் அறிமுகமானது. வாசிப்பு சார்ந்து அவர் எழுதிய பல்வேறு கட்டுரைகள் வழியே உலக இலக்கியத்தின் முக்கிய படைப்பாளிகளை வாசித்தேன்.

ஆங்கில வாசிப்பும் உடன் தொற்றிக் கொண்டது. ஒரு விடுமுறை நாளில் ஜெயமோகனின் திசைகளின் நடுவே என்ற சிறுகதைத் தொகுப்பை வாங்கினேன். அத்தொகுப்பில் முதல் கதை “நதி”. அந்த மொழியில் கிட்டத்தட்ட கிறங்கினேன் என்றே சொல்லலாம். அத்தொகுப்பின் இறுதி கதை “லங்காதகனம்”. அந்த கதை சிறுகதை குறித்து எனக்குள் எத்தனையோ விஷயங்களைச் சொன்னது. அதன்பின்னர் ஜெயமோகனின் அனைத்து கதைகளையும் நாவல்களையும் வாசித்தேன். இன்றுவரை அவருடன் தொடர்பில் இருக்கிறேன்.

அதன்பின் கோணங்கியின் மதினிமார் கதை, உப்புக்கத்தியில் மறையும் சிறுத்தை ஆகிய தொகுப்புகளை வாசித்தேன். இப்படி எஸ்.ரா மற்றும் ஜெயமோகனின் தொடர் கட்டுரைகளை விடாமல் வாசிப்பதன் வழியே தான் நான் எனக்கான வாசிப்பைக் கண்டுகொண்டேன்.ஆங்கில எழுத்தாளர்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்கள், ஹெமிங்வே, ஜாக் லண்டன், சார்லஸ் டிக்கன்ஸ், எமிலி பிராண்ட், எமிலி டிக்கன்ஸன். மற்றைய மொழிகளில் பிடித்த எழுத்தாளர்கள் செல்மா லாகர்லாவ், பால்ஸாக். ருஷ்ய கதைகளின் மேலுள்ள மோகமும் அளவில்லாதது. எனக்கு மிகவும் பிடித்த ருஷ்ய ஆசிரியர்கள் தஸ்தாவெய்ஸ்கி, டால்ஸ்டாய், செகாவ்.

தமிழில் முன்னோடிகள் அனைவரையும் வாசித்திருக்கிறேன். புதுமைப்பித்தன், பிச்சமூர்த்தி, கு.ப.ரா, மௌனி, எம்.வி.வி, சுந்தர ராமசாமி, அசோகமித்திரன் தொடங்கி இன்றுவரை எழுதும் எழுத்தாளர்களை வாசித்து வருகிறேன். கவிதையில் கம்பரும் ஆண்டாளும் பிடித்தமானவர்கள். ஆண்டாளின் திருப்பாவை தரும் பிரமிப்பில் இருந்து இன்னும் விலகவில்லை. நவீன கவிதையில் பிடித்தமானவர்கள் சுகுமாரன், தேவதச்சன், தேவதேவன்.

அதிகம் வாசிக்க வாசிக்க இன்னும் வாசிக்க வேண்டியது அதிகம் என்றுதான் தோன்றுகிறது. தமிழில் இந்த நாள்வரை நான் என்றும் மறக்கமுடியாதவர்கள் சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், எஸ்.ரா, ஜெயமோகன் ஆவர். எஸ்.ரா வும் ஜெயமோகனும் எனது இரு கண்கள் போல என நண்பர்களிடம் சொல்வேன். எதை எழுதத்தொடங்கும் முன்னரும் இவர்கள் இருவரையும் மானசீகமாக வணங்கி விட்டுத்தான் எழுதத் துவங்குகிறேன். நேரில் சந்திக்கையில் நிறைய பேசலாம். உங்கள் வாசிப்பு அனுபவத்தையும் நேரம் கிடைக்கையில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி. இன்னும் நிறைய எழுத வேண்டும் என்பதுதான் இப்போதைக்கு என்னுடைய குறிக்கோள். இவ்வளவு பேர் எழுதிக்கொண்டிருக்கிறார்கள், நாமும் எழுதவேண்டுமா என்று ஒரு சில சமயம் தோன்றும். ஆனாலும் ஒவ்வொருவரின் உலகமும் அனுபவமும் தனித்தனி. எழுதித்தான் ஆகவேண்டும். இதே கேள்வியை வாசகர் ஒருவர் ஜெயமோகனிடம் கேட்டபோது அவர் சொன்னது: “தஸ்தாயெவ்ஸ்கி எழுதியபின்னர்தானே நானும் எழுதுகிறேன்”. சுந்தர ராமசாமி ஒரு உரையில் சொன்னார், “வேறு யாருக்காக இல்லாவிட்டாலும் எனக்காக நான் தொடர்ந்து எழுதிக் கொண்டேயிருக்க வேண்டியவன்தான்”

இவ்வார்த்தைகளை அடிக்கடி நினைவு கூர்வேன். அதுதான் எழுத ஊக்கமளிக்கிறது.

-கணேஷ் பாபு

 

அன்புள்ள கணேஷ்பாபு,

நீங்கள் ஆச்சர்யப்படுத்துகிறீர்கள். உங்கள் வாசிப்பின் விரிவும் ஆழமும் பன்மொழிகளில் ஆழ்ந்துள்ளன. அதுவே உங்கள் எழுத்தில் உருவாகியிருக்கும் தாக்கத்திற்கும் காரணம் என்றே சொல்லலாம். விரைவில் கனவுலகவாசிகளைப் போல மற்ற சிறுகதைகளையும் வாசிக்க ஆவலாக உள்ளேன். முடிந்தால் இவ்வருடத்தில் உங்களின் ஒரு சிறுகதை தொகுப்பும் வெளியாகும் என்றால் நான் தான் முதலில் மகிழ்ச்சிக் கொள்வேன்.

சுந்தர ராமசாமி தனது ஒரு நேர்காணலில், என் எழுத்துகள் என்பது எல்லாவற்றுக்குமான சாவி கிடையாது; ஆனால், சிலவற்றின் பூட்டுகளை அது திறக்கும் என்றே நம்புகிறேன் என்கிறார். நாம் எழுதுவது ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கான விடியல் அல்ல; ஏதோ ஏங்கோ சிலரின் மனத்தைத் திறக்குமானால் அதுவே எழுத்திற்கும் புரிதலுக்கும் வாழ்விற்குமான இடைவெளியில் கலை செய்யும் நுட்பமான தொடுதல் ஆகும். அதே ஊக்கத்துடன் எழுதுங்கள். குறிப்பாக விமர்சனம் இப்போதைய இலக்கிய நகர்ச்சிக்கும் புதுப்பித்தலுக்கும் இலக்கிய பார்வைகளைத் தடம் மாற்றி விடுவதற்கான முக்கியமான தளமாகும். அந்த விமர்சனப் போக்கைச் சிறிதும் சமரசம் இன்றி முன்னெடுக்க உங்களைப் போன்ற விசாலமான வாசிப்புள்ள ஒருவரால் நிச்சயம் முடியும். விமர்சனத்தை இன்னும் கறாராக்குங்கள்; ஊக்கப்படுத்துங்கள்.

எனது வாசிப்பும் உங்களைப் போல எஸ்.ராவின் ‘துணையெழுத்து’, ‘கதா விலாசம்’ ஆகிய நூல் வாசிப்பிலிருந்து நவீன இலக்கியத்தின் நீட்சிக்குள் நுழைகிறது. கல்லூரி காலத்தில் மனுஷ்ய புத்திரன், தேவத்தேவன், எஸ்.ரா, பாரதி, புதுமைப்பித்தன் ஆகியோரே நான் முதலில் வாசித்துத் தாக்கம் பெற்ற எழுத்தாளர்கள். பின்னர் அதன் வழியாக, வண்ணநிலவன், வண்ணதாசன், பிரபஞ்சனை அடைந்தேன். புதுமைப்பித்தனின் தாக்கத்தை வண்ணநிலவன் அவர்களிடம் பார்க்க முடிந்தது. வண்ணநிலவன், வண்ணதாசன் அவர்களின் தாக்கத்தை எஸ்.ராவிடம் பார்க்க முடிந்தது. இப்படி, வாசிப்பின் தேடல் நிமித்தம் ‘ஷோம்பி’ போல தாக்கப்பட்டு, தாக்கப்பட்டுத்தான் இலக்கியம் தனக்கான இடத்தை நிரப்பிக் கொள்கிறது என்று நினைக்கிறேன். ஒருவரிடத்தில் இன்னொருவரின் மொழி, சொல்முறை தாக்கம் ஆரம்பத்தில் தென்பட்டாலும் அடுத்த சில படைப்புகளிலேயே அவர்களின் தனித்துவம், தனித்த மொழி அடையாளம், போன்றவை தன்னகத்தே உருவாக்கிக் கொள்ள முடியும். ஆனால், அதற்கு அவனிடம் தொடர் படைப்புகள் இருக்க வேண்டும். ஜெயமோகன் சொல்வதைப் போல தொடர்ந்து எழுதுவதன் மூலமே தனக்கான இலக்கிய நடையை ஒருவன் அடையாளம் கண்டு கொள்ள முடியும்.

 

albert camus

ஜெயமோகனுடைய ‘தம்பி’ சிறுகதைத்தான் நான் முதலில் வாசித்த அவருடைய கதையாகும். கல்லூரியில் அக்கதையை ஒட்டி நண்பர்கள் வெகுநேரம் பேசிக் கொண்ட்டிருந்தோம். ஒரு கதை விவாதத்தை முதலில் தொடக்கி விட்டது அச்சிறுகதைத்தான். விவாதத்தின் ஊடாக நாங்கள் கண்டடைந்த பலவகையில் நோக்கக்கூடிய சாத்தியப் பார்வை எங்களுக்குள் ஒரு அகத்தூண்டலை உண்டாக்கியது. அப்பொழுதும் இப்பொழுதும் விவாதமே ஒரு படைப்பைப் பல கோணங்களில் இருந்து திறந்து காட்டும் என நம்புகிறேன். அதன் பின்னர், நான் தனியாக ஒரு சிறுகதையை வாசித்தாலும், என்னுள் பல குரல்கள் எழுந்து அக்கதையை விவாதிக்கும். நானே எனக்குள்ளே விவாதித்துக் கொள்வேன்.

அங்கிருந்து எனது வாசிப்பு மேலும் விரிவடைந்து உலக இலக்கியத்தில் தஸ்தாவெய்ஸ்கி, டால்ஸ்டாய், செகாவ்  என நீண்டாலும் ஆல்பர்ட் காம்யூவின் அந்நியன் நாவல் படிக்கும்வரை வேறு யார் மீதும் அப்படியொரு தாக்கம் உருவானதில்லை என்பதை அப்பொழுதே உணர்ந்தேன். அந்நாவலை வாசித்த பின்னர் உருவான உணர்வைப் பிடித்துக் கொண்டு இரண்டு மூன்று நாட்கள் நிம்மதியின்றி இருந்தேன். மனம் கனத்துக் கொண்டிருந்தது. ஏதோ தட்டுப்படாமல் அலைந்து கொண்டிருந்தேன். அதுநாள் வரை இலக்கியம் உருவாக்கியிருந்த மனநிலையை அந்நியன் களைத்துப் போட்டது என்றே சொல்ல வேண்டும். மறுவாசிப்பில் மனத்தை ஏதோ ஒருநிலைப்படுத்த முடிந்தது. அதே போல அசோகமித்ரனை வாசிக்கும்போதும் அம்மனநிலைக்குள்ளே தள்ளப்பட்டிருந்தேன். ஆல்பார்ட் காம்யூவும் அசோகமித்ரனும் எனக்குள் என்னை அலைக்கழித்த இரு முக்கியமான படைப்பாளர்கள் என்றே சொல்வேன்.

இப்படியாக நீங்கள் சொல்வதைப் போல எவ்வளவு வாசித்தாலும் வாசிக்க வேண்டியவை நீண்டு கொண்டே போகின்றன. அதுவொரு அடங்காத தேடல். அணையாத தீயைப் போல. எப்பொழுதும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

-கே.பாலமுருகன்

(கடிதங்களின் மூலம் இலக்கியம், சினிமா, விமர்சனம், சிறுகதைகள், தொடர்பாக உரையாடலாம்)

மின்னஞ்சல் முகவரி: bkbala82@gmail.com

 

சிறுகதை: தங்கவேலுவின் 10ஆம் எண் மலக்கூடம்

கொஞ்சம்கூட பிசிறில்லாத  சதுர வடிவத்திலான பள்ளிங்கு கற்கள் வெறித்துக் கிடந்தன. கால்களை வைத்து நடக்கவே அசூசையாக இருக்கும்.  நவீன கழிவறை மிக நேர்த்தியான ஒழுங்குடன் கண்ணாடி போன்ற தரை விரிந்து படர மனம் தடுமாறும். மெதுவாக நெகிழிக் கதவைத் தள்ள வேண்டும். ஒரே மையத்தில் போய் குவிந்து கொள்கின்ற கதவு. மீண்டும் இழுத்தால் பழைய நிலைக்கே வந்து கழிவறையை மூடிக் கொள்ளும்.

இதை இழுத்து உள்ளே நுழையவே சிரமமாக இருந்துவிடுகிறது. சடசடவென ஒரு சத்தம் வேறு. உள்ளே நுழைந்து கதவை உள்தாழ்ப்பாள் போடுவதற்குள் வயிற்றிலிருந்து கழிவு கீழே ஒழுகிவிடுவதைப் போல வித்தைக் காட்டும். கொக்கி போல ஒன்று, அதை வலது பக்கமாக நகர்த்தி கொக்கியின் வாயை மற்றுமொரு இரும்பில் சொருக வேண்டும். பல சமயங்களில் கொக்கி அந்த இரும்பில் சிக்கிக் கொள்ளாமல் பாதியிலேயே நின்றுவிடும் அதைக் கவனிக்கத் தவறும் கணங்களில் கதவை மூடாமலேயே வேட்டியைக் கழற்றி கழிவு தொட்டியில் ஏறி அமர்ந்து கொள்வேன். அப்படியொரு அலட்சியமாக இருந்துவிட்ட பொழுதில்தான் வீட்டிலுள்ளவர்களுக்குப் பல மாதங்களாக நான் அனுபவித்த மலப் போராட்டத்தைப் பற்றித் தெரிய வந்தது.

“ஐயோ… அம்மா! தாத்தாவே பாரு… கசம் கசம்!”

“ஏன்டா கத்தறே! என்னாச்சி?…. அட ஆண்டவா!”பேரன் கதவைத் தள்ளியதும், அரைகுறையாக இரும்பைப் பற்றியிருந்த கொக்கி டமாரென்று விலகியது. தரையிலிருந்து இரண்டடி உயரத்திற்கு எழுந்து வாய் பிளந்து நின்றிருந்த கழிவுத் தொட்டியில் இரு விளிம்புகளிலும் கால்களை அகல விரித்து மேலும் உயரமாக அமர்ந்து கொண்டு இருந்த என் கோலத்தைப் பார்த்து எல்லோரும் அதிர்ந்து போனார்கள்.

“என்ன மாமா இது? கழிசசில போவ…”அவ்வளவு விரைவாக உயரமான கழிவுத் தொட்டியிலிருந்து இறங்கிவிட முடியாது. பக்கத்திலிருக்கும் நீர்த் தொட்டியின் விளிம்பைப் பிடித்துக் கொண்டுதான் ஒவ்வொரு காலாகத் தரையில் இறக்கி நிமிர வேண்டும். மருமகளும் பேரனும் பார்த்துக் கொண்டிருக்க அவிழ்ந்த வேட்டியுடன்  தடுமாறிக் கொண்டிருந்தேன். மலம் போல ஒழுகி நின்றது அன்றைய பொழுது.

“ஒன்னுமில்ல. .  நீங்க போங்க! டேய்! போடா…” வாயிலிருந்து வார்த்தைகள் நீர்ப் போல சலசலவென ஒடிந்து விழுந்தன. வேட்டியை மேலே தூக்கிக் கட்டிக் கொண்டு கதவைப் படாரென்று அடைத்து மூடினேன். தரையில் நீர் கொத்து அங்குமிங்குமாகத் தேங்கியிருந்தன. கால் தொடையில் ஏதோ பிசுபிசுவென ஒட்டிக் கொண்டிருந்தது. குனிந்து கீழே பார்த்தேன். மலநீர் கால் முட்டிவரை வந்து வழிந்து கொண்டிருந்தது. அசௌகரிகத்தின் மொத்த சுயரூபத்தையும் இந்தக் கழிவறையில் தினமும் சந்தித்துக் கொள்கிறேன். ஒவ்வொரு நாளும் சாப்பிட்டப் பிறகு தினக் கடமையாக இந்தக் கழிவறைக்குள் நுழைய வேண்டும் என்று ஏற்படும் அட்டவணை சுழற்சி அச்சுறுத்தலாக இருக்கின்றது.

மருமகள் வெளியில்தான் நின்று கொண்டிருந்தாள். என் மூத்த மகனுடன் என்னைப் பற்றி பேசிக் கொண்டிருப்பதும் நன்றாகவே கேட்டது.

“கதவெ சாத்தாமே என்ன இது? யாராவது வந்தா என்னா ஆவும்? மானமே போய்டும் போல இவரே வச்சிக்கிட்டு. எப்படி உக்காந்திருந்தாருனு பாத்திங்கனா மயக்கமே போட்டு விழுந்துருவீங்க”

“இப்பெ ஏன் இத பெருசா பேசிக்கிட்டு இருக்கெ? எப்படி உக்காந்தாரு?”

“தொட்டி மேல அதை வச்சுத்தானே உக்காரனும். இவரு அதுக்கும் மேல ஏறி கால வச்சி உக்காந்து போறாரு… பல தடவெ நான் டொய்லேட் கழுவும் போது பாத்திருக்கேன், அந்தத் தொட்டி இடுக்குலலாம் பீ இருக்கும்…  அப்பயே சந்தேகமா இருந்துச்சி”

“சரி விடு! சொல்லிக்கலாம்”

மனம் படபடவென துடித்துக் கொண்டிருந்தது. கழிவறைக்குள்ளே அபாரமாக எரிந்து கொண்டிருக்கும் வெளிச்சத்தைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தேன். குளியலறையில் எங்கோ ஏதோ ஓர் இடத்திலிருந்து நீர் ஒழுகும் சத்தம் கேட்டுக் கொண்டேதான் இருந்தது. வெளியே சென்றால் இவர்களின் முகத்தைப் பார்க்க வேண்டும். அந்த உறுதி அற்றுப் போயிருந்தது. உடல் முழுக்க அறுவறுப்பான ஒரு பிம்பம் நெடித்து வளர்ந்து பேயோசையாக எனக்குள் சரிந்து கொள்வது போல ஒரு பிரமை.

“ப்பா! ப்ப்பா! வெளிய வாங்க”

வேட்டியைச் சரி செய்துவிட்டு, செயற்கையாக ஏதோ முனங்கிக் கொண்டே கதவை மெல்ல அதன் இரும்பு தாழ்ப்பாளிலிருந்து விலக்கினேன். எதிரில் மகன் என்னை மேலேயும் கீழேயும் பார்த்துக் கொண்டிருந்தான். வேட்டியின் நனைந்திருந்த பகுதியை உற்றுப் பார்த்துவிட்டு நெருங்கினான்.

“ஏன்ப்பா… எப்படி உக்காந்து நீங்க டொய்லேட் போறீங்க? இது மேல கால் வச்சா உக்காருவாங்க? என்னா இது? நல்லா தாராளமா இப்படி இது மேல உக்காந்துகிட்டு போலாமே? இப்படித்தான் போய்கிட்டு இருக்கீங்களா?”

“அட போடா! எப்படி வசதி வருதோ அப்படித்தான் போவ முடியும்…”

அங்கிருந்து மெல்ல அகன்றேன். மகனின் ஆத்திரமான குரல் பின் தொடர்ந்தது. அதைச் சட்டை செய்து கொள்ளாதது போல பயத்தை உள்ளுக்குள்ளே அடக்கிக் கொண்டு வரவேற்பறைக்குள் நுழைந்து சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டேன்.

“ப்பா…  நீங்க உங்க இஸ்த்ததுக்குச் செய்யாதீங்க. புரியுதா? அது அந்த மாதிரி உக்காந்து போற தொட்டித்தான். அதுலே போய் கால் வச்சி ஏறி உக்கார முடியாது. வீணா போயிறும். நீங்க உயரமா உக்காந்துக்கிட்டு போறதுனாலே பீ கீழலாம் வந்து விழுந்துருது. ஏன் இப்படிப் பண்றீங்க?”

நான் செய்த அலட்சியத்தால் அவனுடைய சொற்கள் சுற்றி அலைந்திருந்துவிட்டு விரக்தியில் உதிர்ந்து கரைந்தன. அதன் கரைதலில் அக்கறை இல்லாதவன் போல் முனங்கல் தீராத பாவனையுடன் கண்களை இறுக மூடிக் கொண்டு உறங்க முயன்றேன். இதுதான் சரியான முயற்சியாக இருக்கக்கூடும்.

இங்கு வந்ததிலிருந்து எல்லாமே செயற்கைத்தான். மலம் கழிப்பது முதல் எல்லாக் கடமைகளும் ஒழுங்குத் தவறாமல் பிறர் விருப்பப்படிதான் நடக்க வேண்டும். யாரோ எப்பொழுதும் என் முதுகில் சாட்டையால் அடித்து வழிநடத்துவது போல உணரப்படுகிறது. எனக்குள் இவ்வளவு காலம் இயங்கிக் கொண்டிருந்த உந்து சக்தி வலுவிழந்து ஏதோ ஒரு பொழுதில் இந்தக் கழிவறை போராட்டத்தில் காணாமல் போயிருக்கக்கூடும்.

“வெளிச்சம் கண்ணுலாம் கூசுது! ஏறி இந்தப் பீ தொட்டியில உக்காரணும், காலுலாம் நோவுது! தொட்டியோட  ஓரத்துல கால வச்சி உக்காந்து முக்கணும். ஒரு பக்கம் கால் நழுவிட்டா தொட்டியோட வாயில டமார்னு விழுந்து பிட்டம் ரெண்டா உடைஞ்சிருமோனு பயம், வெளிச்சம் தலைக்கு மேல விரிஞ்சி கிடக்க அப்பத்தான் தொடை சுளிர்னு வலிக்கும். கீழே எறங்கி காலெ நல்ல உதறிட்டு மீண்டும் மேல ஏறி உக்காந்து உயிரோட போராடணும்!”

தோட்டத்தில் இருந்தபோது எல்லாமும் சரியாகத்தான் இருந்தன. வாழ்க்கை அடுக்குகள் அவ்வப்போது தன்னை மாற்றியமைத்துக் கொள்கின்றன. அப்பா தங்கவேலு இரப்பர் காட்டில் வேலை செய்தவர். ஏணி கோட்டில் வேலை செய்யும்போது ஏணியிலிருந்து சரிந்து விழுந்து இறந்து போனார். அப்பாவின் அந்தத் துர்மரணத்தைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் கூடவே அந்த அதிர்ச்சியும் கிளர்ந்துவிடும். வலியில் துடிதுடித்து மரணம் தொடும் தொலைவில் இருந்தபோது அவருக்கே தெரியாமல் அவர் மலம் கழித்திருக்கிறார். பிணத்தை அள்ளும்போது அப்பாவின் காற்சட்டையில் மலம் ஒழுகியிருந்ததைப் பார்த்தேன்.  அதைப் பார்த்தவுடன்தான் உள்ளுக்குள்  உறைந்திருந்த அதிர்ச்சியும் சோகமும் கிளர்ந்து வெளியேறின.

“எப்ப மனுசன் உடம்புலேந்து அவனுக்கே தெரியாம மலம் வெளிவருதோ அப்பவே அவன் பாதி பொணமா ஆயிட்டானு அர்த்தம்”

என் அப்பா தங்கவேலு அடிக்கடி யாரிடமாவது இப்படித்தான் சொல்லிக் கொண்டிருப்பார். தோட்டத்தில் அப்பாவிற்கென்று ஒரு மலக்கூடம் இருந்தது. எங்கள் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே அந்த மலக்கூடத்தைப் பயன்படுத்த முடியும்.

பிரிட்டிஸ்காரர்கள் காலத்தில் கட்டியெழுப்பப்பட்ட மலக்கூடங்கள்தான் என் வீட்டு லயத்திலிருந்து 500 மீட்டர் தொலைவில் வரிசைப்பிடித்து நின்று கொண்டிருந்தன. நாள் முழுக்க யாரையாவது அந்த மலக்கூடங்களில் பார்த்துவிடலாம். தகரக் கதவைத் திறந்தபடியும் மூடியபடியும், கையில் தகர வாளியுடன் அந்தச் சிறிய மேட்டில் ஏறியபடியும் இறங்கியபடியும் யாரையாவது அடிக்கடி அங்கே பார்க்கலாம். காலையில் எல்லோரும் பிரட்டுக்குப் போகும் முன்னே முதலில் மலக்கூடத்திற்குப் போய்விட்டு வருவார்கள். காலையில் ஆறு மணிக்கு மரப்பத்திகளுக்குச் செல்பவர்கள் ஐந்து மணிக்கே எழுந்து மலக்கூடத்திற்குப் போய்விட்டு வருவது வழக்கம். ஆறு மணியாகிவிட்டால் மலக்கூடங்களில் கூட்டம் நிரம்பி வழியும். ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டும், சிரித்துக் கொண்டும் சோம்பல் உற்சாகம் என்று கொஞ்ச நேரத்தில் மலக்கூடத்தின் முன் சலசலப்பு தொடங்கிவிடும். மலக்கூடத்திலிருந்துதான் காலை பொழுது விடியும். அங்கிருந்துதான் அன்றைய நாள் தொடங்கும் என்றுகூட சொல்லலாம்.

அப்பா தங்கவேலு காலையில் 4.45 போல எழுந்து அரிக்கன் விளக்கை எரியவிடுவார். அதைத் தூக்கிக் கொண்டு மெல்ல எழுந்து முன் கதவைத் திறக்கும்போது தோட்டமே அகால இருளில் உறங்கிக் கொண்டிருக்கும். இரவு பூச்சிகளின் சத்தமும் ஓய்ந்திருக்காது. பால் வாளியை எடுத்து சிறிது நேரத்திற்கு உருட்டிக் கொண்டிருப்பார். அதில் வைக்க வேண்டிய பொருட்களையெல்லாம் எடுத்து நேர்த்தியாக அடுக்கி வைத்துவிட்டு முன் வாசலில் போடப்பட்டிருக்கும் வாங்கில் அரிக்கன் விளக்கை வைத்துவிட்டு அமர்ந்து கொள்வார்.

“அவளுக்கென்ன உறங்கிவிட்டாள்…  அகப்பட்டவன் நான் அல்லவா”

“பகவானே மௌனமேனோ…  இது யாவும் உன் லீலைதானோ?”

ஏதாவது பழைய பாடலைப் பாடிக் கொண்டு சுருட்டு புகைத்துக் கொண்டிருப்பார். இருளின் மௌனமான நகர்தலில் அப்பாவின் சுருட்டுப் புகை ஆவியைப் போல படர்ந்து மறையும். உள்ளே உள்ள பாயில் படுத்துக் கொண்டே அப்பாவின் காலை நேரத்து அசைவுகளைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் என்னுடைய காலையின் மிகப் பெரிய கடமையாக இருந்தது. பிறகு அரிக்கன் விளக்கின் நிழலில் அப்பா எழுந்து நிற்பது தெரியும். விளக்கைத் தூக்கிக் கொண்டு அவருடயை உருவம் மெல்ல காணாமல் போகிறது என்றால் அப்பா மலக்கூடத்திற்குப் போய்க் கொண்டிருக்கிறார் என்று அர்த்தம்.

அந்த வரிசையில் மொத்தம் பத்து மலக்கூடங்கள் இருந்தன. அதில் அப்பாவிற்கென்று ஒரு மலக்கூடம் இருந்தது. பத்தாம் எண் மலக்கூடம் அப்பாவிற்குச் சொந்தமாகி திரண்டு வருடம் ஆகியிருக்கலாம். அப்பா தோட்டத்தில் முக்கியமான ஆள் என்பதாலும் வெள்ளைக்காரர்கள் மத்தியில் அவருக்குக் கொஞ்சம் செல்வாக்கும் இருந்தபடியால் ஒரு மலக்கூடம் அவருக்கு இலவசமாகக் கொடுக்கப்பட்டிருந்தது. அப்பாவும்

நானும் அம்மாவும் அக்காளும்தான் அந்த மலக்கூடத்தைப் பயன்படுத்துவோம். பட்டணத்திலிருந்து பெரியப்பா, மாமா இப்படி யாராவது வந்தால் அப்பா அவர்கள் வருவதற்கு ஒரு நாள் முன்பே மலக்கூடத்தைக் கழுவி சுத்தம் செய்துவிடுவார்.

ஆரம்பத்தில் யாராவது திருட்டுத்தனமாக அப்பாவின் மலக்கூடத்தைப் பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள். அப்பா பத்திக்குச் சென்றவுடன் மேட்டு லயத்தில் இருக்கும் ஆட்கள் 10ஆம் எண் மலக்கூடத்தில் நுழைந்து பயன்படுத்திவிட்டுப் போய்விடுவதுண்டு. அப்பா திரும்பி வரும்போது மலக்கூடத்தின் கதவு வாய் பிளந்து திறந்து கிடக்கும். யாராவது வந்து பயன்படுத்தியிருந்தால், அப்பா அதைக் கண்டுபிடித்துவிடுவார். சுத்தமாகக் கழுவிவிடாமல் அவசரத்தில் அப்படியே போட்டுவிட்டுப் போயிருப்பார்கள். குழிக்கு மேலாக மலம் நிறைந்து கிடக்கும். எல்லோருக்கும் கேட்கும்படியாகவே கத்திக் கொண்டே அப்பா அதைச் சுத்தப்படுத்தத் தொடங்கிவிடுவார்.

“எந்த நாசமா போற ஜென்மம்னு தெரில, பேண்டுட்டு கழுவாமே போயிருக்கு! என்னா ஜென்மங்களோ? நாத்தம் கொடலெ புடுங்குது…  கம்பிய சுத்தி வச்சி சாத்திட்டுப் போனாலும் பேத்துக்கிட்டு வந்து பீயெ போட்டுட்டுப் போறானுங்க”

அப்பா மலக்கூடத்தின் கதவிற்குப் பக்கத்திலுள்ள சட்டத்தில் அடிக்கப்பட்ட ஆணியில் கம்பியைச் சுற்றி இறுகக் கட்டியிருப்பார். தகரக் கதவில் ஓட்டையிட்டு அதில் கம்பியைச் சொருகி கட்டுவதற்கு இலகுவாகச் செய்தும், அப்பாவால் அந்த மலக்கூடத்தைத் தனி சொத்தாகப் பாதுகாத்து வைத்திருக்க முடியவில்லை. இப்படித்தான் தினமும் காவலாளியைப் போல காலையில் விடிவதற்கு முன்பே எழுந்து வீட்டிலிருந்தவாறே அதிகாலை இருளில் மலக்கூடங்களுக்கு அமைதியில் ஊர்ந்து வரும் ஆட்களின் நடமாட்டங்களைக் கவனித்துக் கொண்டேயிருப்பார். யாராவது 10ஆம் எண் மலக்கூடம் பக்கமாகச் சென்றாலோ அல்லது அதன் கதவை அசைத்துப் பார்க்க முயன்றாலோ அப்பா இங்கிருந்து கொண்டே கத்துவார்.

“டே! நுழைய பாக்கறானுங்கடா… தொலைஞான் கைய வச்சானா…”

பிறகு 10 நிமிடத்திற்கு மலக்கூடத்தின் அருகிலேயே நின்று கொண்டு வருபவர் போவோரை எச்சரிக்கையுணர்வுடன் பார்த்துக் கொண்டே காவலிருப்பார். அப்பாவிற்கு இது ஒரு தனிசுபாவமாகவே மாறியிருந்தது. அந்த நேரத்தில் அங்கு வந்து சேர்பவர்கள் யாராகினும் அப்பாவிற்கு அவர்களின் நடத்தையில் சந்தேகமும் அதிருப்தியும் தொற்றிக் கொள்ளும். ஏற இறங்க அவர்களைப் பார்த்துவிட்டு கையில் வைத்திருக்கும் அரிக்கன் விளக்கை உயர்த்திப் பிடித்து முகத்தை அடையாளம் காண்பார்.

“யாரு, துரைசாமி பையனா? காலைலே வயித்த கலக்கிருச்சி போல? பாத்து. அங்குட்டு உள்ள கொட்டாயெ பாய்ச்சிக்க”

“வாடா அம்மா கண்ணு பேரனா? எப்பவும் இந்த நேரத்துக்குத் தூங்கிட்டுக் கெடப்ப? இப்ப என்னா புது பழக்கம்? ஆங்ங்ங்…  அங்குட்டு போ…  சுத்தமா வச்சிக்கங்கடா…”

அங்குள்ள பத்து மலக்கூடங்களுக்கும் தான் மட்டும்தான் காவலாளியாக இருக்க முடியும் என்கிற பாவனையும் எண்ணமும் அப்பாவிற்குள் வந்துவிட்டிருந்தன. அரிக்கன் விளக்குடன் குட்டி வெளிச்சத்தைப் பரப்பி அந்த அதிகாலை இருளிலும் கங்காணித்தனம் காட்டிக் கொண்டு அவ்வப்போது 10 ஆம் எண் மலக்கூடத்தின் கதவைத் திறந்து உள்ளேயும் பார்த்துக் கொள்வார். அம்மாவிற்கு எப்பொழுதும் அப்பாவின் இந்தப் பழக்கம் குறித்து அதிருப்தி. சில சமயங்களில் அம்மாவும் அப்பாவுடன் பெரட்டுக்குச் செல்வதற்காகக் கிளம்பி வீட்டின் முன்னாலேயே காத்துக் கொண்டிருப்பார். அப்பா மலக்கூடத்தைச் சரிபார்த்துவிட்டு வருவதற்குள் அம்மாவிற்கு கோபம் உச்சந்தலையில் ஏறியிருக்கும்.

“யேங்க! உங்களெ என்னா அல்லூர் கூட்டியாவா போட்டுருக்காங்க? அங்குட்டே ஒரு கொட்டாயெ கட்டி படுத்துக்குங்க! எப்ப பாத்தாலும் அந்தச் சாமான் கொட்டாய்லே கிடக்குறீங்க. என்ன ஜென்மமோ?”

“நம்மளோட அசிங்கம்லாம் அங்கத்தான் இருக்கு! அசிங்கத்தெ தாங்கறெ கடவுள் தெரியுமா? வீடு மாதிரி பாத்துக்கணும். என்னா பேசறே? கொஞ்சம் உட்டுட்டா நாசமா ஆக்கிருவானுங்க”

“என்னமோ பண்ணுங்க! உலகத்துலே இல்லாத கொட்டாய்தான்”

அப்பா எந்தச் சலனமுமின்றி மல்லாந்து பார்த்து நேரத்தை உறுதிப்படுத்திக் கொண்டிருப்பார். அவரின் உலகம் அப்பொழுதுதான் விழிக்கத் துவங்கும். தனது உயிரை 10ஆம் எண் மலக்கூடத்தில் ஒளித்து வைத்துவிட்டு மரத்திற்குக் கிளம்பத் தயாராவார். அதற்குப் பிறகு அம்மா அப்பாவைத் திட்டும் போதெல்லாம் அல்லுர் கூட்டி அல்லூர் கூட்டி என்று சாடித்தான் பேசுவார். அல்லூர் கூட்டி என்றால் எங்கள் தோட்டத்தில் மலக்கூடங்களைச் சுத்தம் செய்வதற்கே உள்ள பணியாள். அந்த அல்லூர் கூட்டி இரு தினங்களுக்கு ஒரு முறை மலக்கூடங்களைச் சுத்தம் செய்ய வந்துவிடுவார். அதுவும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகமான நேரம் இங்குதான் இருப்பார். அப்பா கண்களில் அவர் சிக்கிவிட்டால் அல்லூர் கூட்டிக்குப் பாதி உயிர் போய்விடும்.

“அத நல்லா அள்ளு! இங்க கொஞ்சம் அழுத்திக் கூட்டு! குழி நெறைஞ்சிருச்சி பாரு! எவன் பேண்டு வச்சதோ! அங்கப் பாரு… தகரத்துலே ஒட்டிருக்குப் பாரு! நல்லா கூட்டு…”

அல்லூர் கூட்டி அலுத்து ஓய்ந்துவிடுவான். அப்பாவின் அதட்டலில் மலக்கூடங்கள் அனைத்தும் கால்கள் இருந்திருந்தால் எழுந்து ஓடியே போயிருக்கும். அப்பாவும் அல்லூர் கூட்டியுடன் சேர்ந்து கொண்டு மலக்கூடங்களில் புகுந்து சுத்தப்படுத்தத் தொடங்கிடுவார். வீட்டிலிருந்து வாளிகளையும் எடுத்துக் கொண்டு போய்விடுவதால் அம்மா ஒருபக்கம் கத்திக் கொண்டிருப்பார். வாளியில் நீரை அள்ளி ஒவ்வொரு கூடமாக ஊற்றிக் கொண்டே வர அல்லூர்கூட்டி குனிந்து நிமிர்ந்து குழிகளின் ஓரம் தேய்த்துச் சுத்தப்படுத்திக் கொண்டே வருவார். தோட்டத்திலுள்ளவர்கள் அப்பாவை இரண்டாவது அல்லூர் கூட்டி என்றே பெயர் வைத்துக் கூப்பிடுவார்கள். என்னையும் அத்துடன் இணைத்து ‘அல்லூர்கூட்டி பையன்’ என்று கத்துவார்கள். எனக்குப் பெருத்த அவமானம் ஏற்படத் துவங்கியிருந்தது. வங்காளி ரொட்டிக்காரர் முதல் சீன ஆப்பே வரை எல்லோருக்குள்ளும் அந்த நையாண்டி இருந்தது.

அப்பா பெரட்டுக்குப் போகாத ஒரு தினத்தில்தான் முதன் முதலாக நான் 10ஆம் எண் மலக்கூடத்தின் காவலாளியாக மாற்றப்பட்டிருந்தேன். காய்ச்சலால் பாயிலேயே சுருண்டு படுத்துக் கொண்டிருந்தார். சரியாகக் காலை மணி 6 இருக்கும், என்னைத் தட்டியெழுப்பினார்.

“டே! அங்குட்டு நின்னு கொட்டாயே பாத்துக்கடா. எவனாது கம்பிய நெம்பி கதவ தெறக்கறானுங்களானு. ஆள் இல்லனா நைசா உள்ள புகுந்துருவானுங்க. இங்குட்டே நின்னு பாத்துக்க”

வெளியில் வந்து நின்றேன். தோட்டத்திலிருந்த மரங்களிலிருந்து அப்பொழுதுதான் சிறு அசைவு ஏற்படத் துவங்கியிருந்தது. மெல்ல சோம்பலை அகற்றி வாங்கில் அமர்ந்து கொண்டே மலக்கூடங்களைப் பார்த்தேன். ஒரு சில கதவுகள் திறந்தபடியும் மற்றும் சில மூடியபடியும் அகால இருளில் கிடந்தன. ஏதோ ஓர் உருவம். அப்பாவைப் போலவே மௌனமாக சைகை காட்டி பேசுவது போலவே தெரிந்தது.

தூரத்திலிருந்து பார்க்க மலக்கூடத்திலிருந்து யாரோ வெளியேறுவதும் உள்ளே நுழைவதுமாக ஒரு பிரமை தட்டியது. கண்களை விரித்து பார்க்கையில் அங்கு யாரும் இல்லை. மணிகுஞ்சி அண்ணனுடைய பேரன்தான் ஏதோ ஒரு பாடலை முனகிக் கொண்டே 8ஆம் எண் மலக்கூடத்தில் நுழைந்து கதவைச் சாத்திக் கொண்டார். அவருடைய பாடல் வரிகள் கதவுக்கு அடியிலிருந்து மெல்லிய ஓசையாக மாறி வெளிவந்து கொண்டிருந்தன. அந்த அண்ணன் பழைய பாடலைப் பாடுவதில் கெட்டிக்காரர். ரம்மியமான இசையை அவர் வாயிலேயே எழுப்பிக் கொண்டு காலைக் கடனை நிறைவேற்றிக் கொண்டிருந்தார். வானம் விடிந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சம் படர ஆரம்பித்தது. அப்பா உள்ளேயிருந்து கொண்டு மீண்டும் முனகினார்.

“டேய்… அப்படியே அங்குட்டு போய் பக்கத்துலே நில்லுடா…  சுத்தம் முக்கியம்டா. எவனாவது உள்ள புகுந்துருவானுங்க. போ”

அப்பாவின் குணத்தை நினைத்தால் விசித்திரமாகவும் அதே சமயம் பைத்தியக்காரத்தனமாகவும் தோன்றியது. காலை பனி முதுகில் பளார் என்று அறைய, மெல்ல நடந்து மலக்கூடம் பக்கமாகச் சென்றேன். பனி இன்னமும் உலாவிக் கொண்டுதான் இருந்தது. மலக்கூடங்களின் கதவுகளில் பனி ஊர்ந்து ஒழுகிக் கொண்டிருந்தது.

ஒவ்வொரு மலக்கூடத்திற்கு நடுவிலும்  பலகை தடுப்பு இருந்தது. எழுந்து நின்று பார்த்தால் பக்கத்து கொட்டாயின் தடுப்பும், ஆள் அமர்ந்திருந்தால் அவரின் தலையும் நன்றாகத் தெரியும். ஏதாவது பேசிக் கொண்டும் பலகை தடுப்பைத் தட்டி ஓசையை எழுப்பிக் கொண்டும், வெளியிலிருந்தபோது பேசாமல் விடப்பட்ட விஷயங்களும் என்று உரையாடல்கள் எப்பொழுதும் தொடர்ந்து கொண்டே இருக்கும். தோட்டம் விடிந்ததும் மலக்கூடங்கள் பேசத் தொடங்கிவிடும்.

தோட்டத்திற்குள் நிலவும் பிரச்சனைகள், ஒழுக்கம் தவறவிட்ட மனிதர்களின் இரகசியங்கள், தோட்டத்துப் பள்ளிக்குப் புதியதாக வந்திருக்கும் ஆசிரியர்களைப் பற்றி, பால் கொட்டாயில் நடக்கும் வாய்ச் சண்டைகள் என்று மலக்கூடங்களில் அமர்ந்திருப்பவர்களின் வாயிலிருந்து இவையாவும் சொற்களாக மாறி கதவுக்கடியிலும் பலகை தடுப்பு சுவர்களிலும் ஒட்டிக் கொண்டிருக்கும். ஆள் அரவமற்ற பொழுதுகளில் அந்தப் பக்கமாகப் போகும்போது யாரோ பேசிக் கொண்டிருப்பது போலவே தோன்றும். நன்றாக நிதானித்துக் கேட்டால் மட்டுமே உள்ளே யாரும் இல்லை என்பது புரியும்.

ஒவ்வொரு மலக்கூடமும் பாடுவதைப் பற்றியும் பேசிக் கொண்டே இருக்கலாம். பிழையான இராகத்திலிருந்து தொடங்கும் பாடல்கள் முதல் கேலியான பாடல், பாதியிலே நிறுத்தப்பட்ட பாடல், காதல் பாடல், சிவாஜி படத்தின் பாடல்கள் என்று மாறுபட்ட தொனியில் முக்கிக் கொண்டு குரலைத் தளர்த்தியபடி யாராவது பாடிக் கொண்டே இருப்பார்கள். வானொலியில் ஒழுங்கில்லாமல் இடறி விழும் நிலையங்களின் குரல்களைப்போல காலையிலேயே மலக்கூடத்தில் பல நிலையங்கள் உற்சாகமாக இயங்கத் தொடங்கியிருக்கும். அப்பாவும் ஏதாவது பாடலைப் பாடிக் கொண்டேதான் உள்ளே இருப்பார். பத்து நிமிடத்திற்கு மேலாகப் பாடல் உச்சம்வரை போய்க் கொண்டிருக்கும். எங்காவது பாடலின் வரி பாதியிலேயே நிற்கும்போது அப்பா தன் கடமையை முடித்துவிட்டார் என்று அர்த்தமாகும்.

“டெ! ஒழுங்கா ஜாகா பாத்துக்க கொட்டாயெ! புரியுதா?”

அன்று முதல் என்னையும் அறியாமல் பத்தாம் எண் மலக்கூடத்தின் மீது சொந்தம் கொண்டாட ஆரம்பித்துவிட்டேன். வீட்டிற்கு வெளியில் வந்ததும் பார்வையையும் கவனத்தையும் பத்தாம் எண் கதவின் மீது குவித்து ஆள் நடமாட்டத்தைக் கண்காணிப்பேன். இது வழக்கமாக மாறத் துவங்கிய காலம், நானும் அப்பாவைப் போல மாறியிருந்தேன்.

மதியம் 12 மணிக்கு மேற்பட்டு மலக்கூடங்களைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருக்கும். மலக்கூடத்திற்கு மேலேயுள்ள திறப்பு வெயிலைச் சுளிரென உள்ளே இறக்கிக் கொண்டிருக்கும். வெயில் உள்ளே புகுந்து அனலாக எறிந்து கொண்டிருப்பதால் அந்தச் சமயங்களில் அதிசயமாக யாராவது வந்துவிட்டுப் போவார்கள். அவ்வளவுதான்.

காற்று மெல்லிய வேகத்தில் கிளம்பி வேகத்தை அதிகரிக்கும்போது 4ஆம் எண் கொட்டாயின் கதவு சொந்தமாகத் திறந்து கொண்டு பக்கத்திலிருக்கும் சுவருடன் டமாரென்று மோதிக் கொள்ளும். இது எப்பொழுதும் நடக்கும். மதியத்தில் அந்தப் பக்கமாக வீசும் காற்று நான்காம் எண் கதவை எதற்காகவோ பயன்படுத்திக் கொள்கிறது. தூரத்திலிருந்தாலும் இந்தக் கதவின் ஓசை மதியத்தை ஞாபகப்படுத்திவிடும்.

“எவனோ அங்க இருக்கான்! ஒளிஞ்சிகிட்டு என்னவோ வேலைப் பண்றானுங்க”

“எவன்னு தெரியலே! யேன் அடிக்கடி சரியா 12மணிக்கு மேல அந்தக் கதவு சொந்தமா சாத்திகிறதும் திறந்துகறதும்?”

“அது காத்தா இருக்கும், இருந்தும் அது யேன் சரியா அந்த நேரத்துக்கு மட்டும் தினமும் இப்படி நடக்குது? என்னமோ இருக்கு”

தோட்டத்தில் அந்தச் சம்பவத்தைப் பற்றிய அனுமானங்கள் பரவத் துவங்கியிருந்தன. எல்லோரும் அதைப் பற்றியே பேசிக் கொள்ளத் துவங்கினர். அதன் பிறகுதான் மதியத்தில் கொஞ்சம் கொஞ்சமாக மலக்கூடங்கள் மனிதர்களை இழக்க நேரிட்டது. வீட்டின் முன்பக்க கால்வாயின் ஓரம் மிகவும் கதகதப்பாக இருக்கும். அங்கிருந்து பார்த்தால் மலக்கூடம் மிக அருகாமையில் தெரியும். மதியத்தில் அங்கு அமர்ந்து கொண்டு மலக்கூடத்தின் கதவுகளையே பார்த்துக் கொண்டிருப்பேன்.

அதே ஆண்டில்தான் சிவராமன் அண்ணன் 6ஆம் எண் மலக்கூடத்தில் இறந்து கிடக்கக் காணப்பட்டார். அந்தச் சம்பவம்தான் எல்லோரையும் தோட்டத்திலிருந்த மலக்கூடங்களின் மீது பீதியைக் கிளப்பிவிட்டது. எப்படி அவர் இறந்து போனார் என்ற எவ்வித தடயமும் இல்லாமல் நிகழ்ந்த அந்த மரணத்தின் இரகசியம் அந்த 6ஆம் எண் மலக்கூடத்திற்கு மட்டுமே தெரியும். பலகை தடுப்பில் தலை சாய்த்து கால்கள் இரண்டும் சம்மனமிட்டப்படி சிலையாகக் கிடந்தார். நகரத்திற்கு எடுத்துக் கொண்டு போய் அவர் மாறடைப்பில்தான் இறந்தார் என்ற தகவல் மிகவும் தாமதமாகவே தோட்டத்தில் பரவியது. அதுவரை எல்லோரும் அச்சம்பவத்தை நினைவுக்கூர்ந்து மலக்கூடங்களின் மீதிருக்கும் பயத்தை ஊதிப் பெருக்கிக் கொண்டிருந்தார்கள். தகவல் தெரிந்த பிறகும்கூட ‘இது அதோட வேலையாத்தான் இருக்கும்’ என்றே அரற்றிக் கொள்ளத் துவங்கினர்.

“6ஆம் நம்பர் கொட்டாய்லே, யாரோ முக்கிக்கிட்டு இருக்கற சத்தம் கேக்குது. ரொம்ப நேரமா அந்த சத்தம் இருக்கு. ஆனா உள்ள ஆளு இல்லடா.”

“சரியா போச்சி! சிவராமன்தான் உள்ள இருக்காண்டா… இங்கத்தானே செத்துப் போனான்… உள்ள அவன்தான்”

“5 ஆம் நம்பர் கொட்டாய்லெ உக்காந்துகிட்டு இருக்கும்போது பக்கத்துலே சிவராமனோட குரலே கேட்டன்டா…  ஏதோ பாட்டுப் பாடறே குரலு! அவன் குரல்தான்… வந்ததும் உள்ளயெ போச்சி போ!”

அந்தச் சம்பவத்திற்குப் பிறகும் ஆள் அரவம் முற்றிலுமாக மதிய நேரத்தில் அறுந்து போய்க் கொண்டிருந்தது. காலையில் உற்சாகத்துடன் மலக்கூடத்திற்கு ஓடும் ஆட்கள் மதியத்தில் அந்தப் பக்கம்கூட எட்டிப் பார்க்கமாட்டார்கள்.

“மாமா! மாமா! ஏஞ்சிருங்க… இதுல தூக்கம் லொரு கேடு?”

கண் இமை கனமாக இருந்தது. யாரோ அருகில் நின்று என்னையே உற்றுக் கவனிப்பது போல இருந்தது. அவர்களின் சுவாசம் என் காதுகளில் கேட்கிறது. அவர்கள் பாடுகிறார்கள். எங்கோ தொலைவில் யாரோ கதவைத் திறக்கும் ஓசையும் கேட்கிறது. அனேகமாக அது தகரக் கதவாகத்தான் இருக்க முடியும்.

“டெ! நல்லா பாத்துக்கடா! எவனாவது உள்ள நுழைய போறான்”

“அப்பா! அப்பா!”

கண்களை மெல்ல திறந்தேன். மகன் கணேசன் நாற்காலியில் அமர்ந்திருந்தான். குளிரூட்டி மென்மையான சத்தத்துடன் வரவேற்பறையில் இறங்கிக் கொண்டிருந்தது.

“உங்களுக்கு யேன் எங்கள மாதிரி உக்காந்து போக முடியலெ தொட்டியில? இந்த மாதிரி பண்ணிங்கனா, அது உடைஞ்சிறும்! எல்லாரும் அது மேலத்தான் உக்காந்து போவாங்க. புரியுதாப்பா?  யேன் அசிங்கம் பண்றீங்க? உங்களுக்கு நான் பிளாஸ்ட்டிக் தொட்டி தனியா கடையில விக்குது, அதெ வாங்கித் தர்றேன்… அதுல போயி பழகுங்க!”

வெளியே இருளத் துவங்கியிருந்தது. மகனும் மருமகளும் எங்கோ கிளம்பி வெளியே போய்விட்டிருந்தனர். வயிறு சத்தம் போட்டது. அவசரமாக அவிழ்த்து விட வேண்டும். கழிப்பறையைப் பார்த்தாலே அந்த உயரமான கழிவுத் தொட்டி எழுந்து நின்று முகத்திற்கு நேராகக் கையைக் குவித்து குத்துக் காட்டுவது போலவே தென்படுகிறது. கதவைத் திறந்து வெளியே வந்தேன். வீட்டிற்கு வெளியே இருள் முனங்கிக் கொண்டிருந்த சத்தத்தில் யாரோ பேசுவதும் மென்மையாகக் கேட்டது.

“நம்மளோட அசிங்கத்தே காக்கற கடவுள் மாதிரிடா அது! சுத்தமா வச்சிக்கணும்… சுத்தமா இருந்தாதான் வசதியா போக முடியும்!”

“மனசனுக்கு எப்ப அவனுக்கே தெரியாம மலம் வெளிவருதோ அப்பயே அவன் பாதி செத்துட்ட்டடான்டா”

அப்பா மீண்டும் மீண்டும் இதையேதான் உச்சரித்துக் கொண்டிருப்பார். அழ வேண்டும் என்று தோன்றியது. உள்ளுக்குள் இருந்த இறுக்கம் அதிகமாகி அப்படியே கீழே அமர்ந்து கொண்டேன். தொடைக்கு இடுக்கில் ஏதோ பிசுபிசுத்துக் கொண்டிருந்தது.

கே.பாலமுருகன்

மின்னஞ்சல்: bkbala82@gmail.com

-சில மாற்றங்களுடன் மீள்பிரசுரம்

(இருளில் தொலைந்தவர்களின் துர்கனவுகள், சிறுகதை தொகுப்பு)

 

அக்கரைப் பச்சை – 4 : கணேஷ் பாபுவின் கனவுலகவாசிகள்

சிங்கப்பூரில் வசிக்கும் கணேஷ் பாபு பற்றி தோழி சுஜாவிடமிருந்து தெரிந்து கொண்டேன். சிறுகதை எழுத்தாளராகவும் நல்ல விமர்சகராகவும் அறியப்படும் அவர் தங்கமீன் வாசகர் வட்டத்தில் ‘கவிதை இரசனை’ என்கிற நவீன கவிதைகள் பற்றிய ஓர் விமர்சன அங்கத்தையும் பல வருடங்களாக நடத்தி வருகிறார். இலக்கியம் தொடர்பான விமர்சனங்களிலும் விவாதங்களிலும்  தீவிரமாக  ஈடுப்பட்டு வரும் அவருடைய ‘கனவுலகவாசிகள்’ சிறுகதை அக்கரைப் பச்சை தொகுப்பில் இணைக்கப்பட்டுள்ளது.

ஒரு படைப்பாளன் தான் வாழும் காலத்தின் சாட்சியமாக இருத்தல் அவசியம். இன்றும் பலர் உடலை இந்நூற்றாண்டில் இருத்திக் கொண்டு எழுத்தைக் கடந்த நூற்றாண்டிலேயே உலாவவிட்டுவிடுவார்கள். அவர்களுடைய எழுத்து கடந்தகாலத்தை மட்டுமே நினைவுப்படுத்திக் கொண்டே இருக்கும். இதுவே, இலக்கியம் என்பது பிரிவேக்கத்தின் புலம்பல் என்பதொரு புரிதல் உருவாகிவிடும். எழுத பேனாவைத் தொடும் எவரும் தன் கடந்தகாலத்தை நோக்கி மட்டுமே கற்பனை செய்யத் துவங்கிவிட்டால் நம் கண் முன் நிகழ்ந்து கொண்டிருக்கும் சமூகத்தையும் வாழ்வையும் யார் சொல்வது? கடந்தகால உணர்வுகளையும் சம்பவங்களையும் தன் எழுத்தில் சேர்த்துக் கொள்வது அவசியமான ஒன்றே. ஆனால், அங்கேயே உழன்று வெம்பி தேம்பி இருந்துவிடக்கூடாது. எழுத்து இன்றைய பொழுதின் நீட்சியாக இருத்தல் இப்போதைக்கு மிக முக்கியம் என நினைக்கிறேன்.

நவீன வாழ்வும் அதன்பால் பெருகி வளர்ந்திருக்கும் சிதைவுகளையும், மனித உணர்வுகளின் சிடுக்குகளையும், நவீன வாழ்வின் உறவு சிக்கல்களையும், அறம் குறித்த எதிர்வினைகளையும் என நவீன வாழ்வை இலக்கியத்தின் ஊடாக மிகத் தீவிரமாக விசாரிக்கும் கூர்மையான எழுத்து நவீன எழுத்தாளர்களுக்குத் தேவை எனக் கருதுகிறேன். அகிரா குரோசாவா தன்னுடைய கலையும் பயணமும் என்கிற கட்டுரையில் கலைஞன் அவன் வாழும் காலத்தின் ஓலங்களையும் கூக்குரல்களையும் வலிகளையும் சிரிப்பையும் சுமந்தவனாக வெளிப்பட வேண்டும் எனக் குறிப்பிடுவதை மேற்சொன்ன விசயங்களுடன் பொருத்திப் பார்த்துக் கொள்ள முடிகிறது.

 

சிங்கை நவீன வாழ்வின் உருவகம்

நவீன வாழ்வின் மிகக் கூர்மையான அவதாணிப்புகளைத் தன் இக்கதையின் வழியாக கணேஷ்பாபு குறியீட்டுக் கதைக்களத்தில் வெளிப்படுத்தியுள்ளார். ஆகையால், தான் வாழும் இப்பரப்பரப்பான வாழ்வின் மீது அவருக்கு ஓர் ஆற்றாமை , விமர்சனம் உள்ளது. அதனையே இச்சிறுகதை படைப்பின் குரலாக வெளியேற்றுகிறது. கதைச்சொல்லியும் அவனுடைய இரண்டு நண்பர்களும் ஒரு புல்வெளியில் அமர்ந்துகொண்டு தாங்கள் கண்ட கனவுகளைப் பற்றி விவரிப்பதுதான் இச்சிறுகதை. ஜூரோங் ஈஸ்ட் ரயிலடி பற்றி கணேஷ் விவரிக்கும் இடம் மிக முக்கியமானவை. அங்குத்தான் கதைக்கான ஒரு சிறிய திறப்பையும் என்னால் அடையாளம் காணவும் முடிந்தது. இதுபோன்ற குறியீட்டு மொழியில் வழங்கப்படும் கதைகளைப் புரிந்து கொண்டு பயணிக்க நமக்குத் திறப்புகள் அவசியம். ஒரு மொழியில் புழங்குகின்ற சொல்லானது அம்மொழி வழங்குகின்ற பாரம்பரியான அர்த்தத்திலிருந்து விடுப்பட்டு புதியதொரு பரிணாமத்தை எட்டுவதே குறியீட்டு மொழிச்சூழலில் நவீன இலக்கியம் ஏற்படுத்தும் தாக்கமாகும். அது கணேஷ் பாபுவிற்குச் சிறப்பாகவே கைக்கூடியுள்ளது. குறியீட்டு மொழி மட்டுமல்ல அவருடைய கதைக்களமே ஒரு குறியீடுதான். தொடர்ந்து சிறுகதையை உருவகித்துக் கொள்ள ஜூரோங் ஈஸ்ட் ரயிலடி பற்றி சொல்லும் இடம் எனக்கு வசதியாக இருந்தது.

‘கதவு திறந்ததும், திசைகளை முறைத்துச் சீறும் ஜல்லிக்கட்டுக் காளைகளைப் போல மக்கள் திசைக்கொன்றாய் தெறித்து ஓடுவார்கள்’ என்கிற இடத்தில் ஜூரோங் ஈஸ்ட் ரயிலைடியக் கதையாசிரியர் ஜல்லிக்கட்டு, வாடிவாசலுடன் இணைத்துக் கொள்கிறார். ஒரு பண்பாட்டு தளத்திலிருந்து தனக்கான அவதாணிப்புகளுக்கேற்ற வார்த்தைகளை அவர் சேகரித்துக் கொள்கிறார். முதல் முறை நான் சிங்கப்பூர் வந்தபோது எனக்கு உண்டான ஆச்சர்யமும் இதுதான். ஒரு பார்டரிலிருந்து இன்னொரு பார்டருக்குப் போவதற்குள் எத்தனை மனிதர்கள், எத்தனை விரைவான ஓட்டம். பார்க்கவே கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. ஏன் எல்லோரும் இவ்வளவு அவசரமாக ஓடிக் கொண்டிருக்கிறார்கள் என்கிற கேள்விக்கு அப்போதைக்கு எனக்கு விளக்கம் தெரியவில்லை. எதையோ பறிக்கொடுத்தவர்களைப் போல ஆண்கள், பெண்கள், வயதானவர்கள் இளைஞர்கள் என எல்லோரும் ஓடிக் கொண்டிருந்தனர். இதனை என் கட்டுரையிலும் நான் குறிப்பிட்டுள்ளேன். இச்சிறுகதை அத்தகையதொரு வாழ்க்கையை நோக்கி நம்மை இழுத்துச் செல்கிறது.

சிங்கையில் வேலை செய்யும் மலேசியர்கள் வேலைக்குக் குறித்த நேரத்தில் போய்விட வேண்டும் என அவர்கள் எதிர்க்கொள்ளும் ‘பார்டர்’ அகநெருக்கடிகளை நினைத்தாலே பதற்றம் ஏற்படுகிறது. வாழ்விற்கும் வாழ்தலுக்கும் மத்தியில் சிதைந்து கரைந்துவிடும் கூட்டம். அதே போல சிங்கையிலும் எம்.ஆர்.டி இரயில் நிலையங்களிலும் இதே பரப்பரப்பைப் பார்க்கலாம். கணேஷ் பாபுவின் கதைக்களம் முழுக்கவும் இப்பரப்பரப்பான சூழலைச் சார்ந்தது அல்ல. விவரிப்புகளாகவே கதை ஓடிவிடும் என முதலில் தயங்கினேன். ஆனால், கதை முழுவதும் பரப்பரப்பான நவீன வாழ்வில் தொய்ந்து கசந்து சிதறுண்டு போன தன் அகத்தை விரித்துக் காட்டுகிறார்.

 

மூன்று பேரின் கனவுகள்

இச்சிறுகதையில் வரும் மூன்று கதாபாத்திரங்கள் தங்கள் கனவுகளை விவரிக்கிறார்கள். ஒவ்வொரு கனவும் நவீன வாழ்வின் மனச்சிதைவுகளையும் நெருக்கடிகளாலும் ஏற்படும் அகம் சார்ந்த சிக்கல்களையே நினைவுப்படுத்துகின்றன. முதலாவதாகக் கதைச் சொல்பவன் ‘முடிவிலியை நோக்கி வேகமாகப் பாயும் செம்மண் நிற நதியில் நான் அடித்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தேன்’ என தான் ஒரு நதியில் சிக்கி மூழ்குவதைப் பற்றி சொல்வான். இச்சித்திரங்கள் நவீன வாழ்வின் நெருக்கடிக்குள் சிக்கி மூழ்கிக் கொண்டிருக்கும் மானுட வாழ்வையே ஞாபகப்படுத்துகின்றன. ஒவ்வொரு கணமும் நவீன வாழ்க்கை நம்மைத் துரத்திக் கொண்டே இருக்கின்றன. ஏன் ஓடுகிறோம் எனத் தெரியாமல் ஓடிக் கொண்டே இருக்கிறோம். அடுத்தவன் ஓடுவதைப் பார்த்துப் பதற்றமுற்று நாமும் ஓடுகிறோம் எனும் நிலையைக் கொடுப்பதுதான் இன்றைய பெருநகர் வாழ்க்கை. வாழ்வு சுருங்கி இயந்திரத்தைப் போல ஆகிவிட்டோம். அதனால் உண்டாகும் ஒரு மனச்சித்தரிப்பே அக்கனவாகத் தோன்றுகிறது. சிக்மன் ப்ராய்ட் தன்னுடைய கனவுகள் பற்றி நூலில், உறங்கிக் கொண்டிருக்கும் ஒருவனின் காலில் நீங்கள் நீரை ஊற்றினால் உடனடியாக அவனுடைய கனவில் சட்டென்று மாற்றம் உருவாகுமாம். தரையில் ஓடிக் கொண்டிருப்பதைப் போல கனவு கண்டு கொண்டிருக்கும் ஒருவனின் காலில் நீங்கள் நீரை ஊற்றினால் உடனே ஓர் ஆற்றில் நிற்பதைப் போல கனவு மாறிவிடுமாம். கனவுகளை ஆராய்ந்து அவர் குறிப்பிட்ட உண்மை இது. அதே போல வாழும் வாழ்க்கைக்கு நிகரான ஒரு கனவு தோன்றுவதிலும் ஆச்சர்யமில்லை. சதா வேலை உலகத்தில் சிக்கி ஓடிக் கொண்டிருக்கும் ஒரு நகர்வாழ் மனிதனுக்குத் தன் உழைப்பையும் இரத்தைத்தையும் உறிஞ்சும் இவ்வாழ்க்கையின் மீது ஒரு கனவு தோன்றுகிறது. அது செந்நிறத்தில் தன்னை மூழ்க்கடித்துக் கொண்டிருக்கிறது.

அடுத்து ஒருவன் சொல்லும் கனவும் விசித்திரமானவை. முதலில் கண்டவனின் கனவின் தொடர்ச்சியாகச் சிறுகதையில் குறிப்பு உள்ளது. ஆகவே, கனவைப் பற்றி விவரிக்கும் மூவரும் ஒருவரே எனும் ஒரு புரிதலுக்குள் வர முடியும். கதைச் சொல்லிக்கு வலதுபுறமும் இடதுபுறமும் இருப்பவர்களும் கதைச்சொல்லியின் வெவ்வேறு அகநிலைகளைக் குறிக்கும் குறியீட்டுக் கதாபாத்திரங்களே. ஆக, கதையில் இருப்பது ஒரு கதாபாத்திரம் மட்டுமே என உருவகித்துக் கொள்ள முடிகிறது. இரண்டாவது கனவில் அவன் சொல்வதாவது ‘ கரைதொட்டு கடல்மீளும் அலைகள் போல’ எந்த உறவுமின்றி நான் வெயில் தகிக்கும் செம்மண் நிலத்தில் நடந்து கொண்டிருந்தேன் என. பெருநகர் வாழ்வின் பரப்பரப்பு ஒவ்வொரு மனிதனையும் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறது என்கிற நிஜமே இக்கனவு. மேலும் அக்கனவில் நவீன மனிதனின் சிதைந்துபோன ஒரு மனம் எவ்வாறெல்லாம் குழம்பியும் நடுநிலை இழந்தும் மீண்டும் நம்பிக்கையைக் கட்டியெழுப்பியும் மாயையில் சிக்கியும் மீண்டும் உருப்பெற்று மீண்டும் தொலைந்து போகும் என்று கதைநெடுக விவரித்துள்ள்ளார். ஒரு நிலையற்ற தள்ளாட்டம் நிரம்பிய மனவெளியில் நாம் பயணித்துக் கொண்டே இருப்போம்.

நவீன வாழ்க்கை கொடுக்கும் உறவு சிக்கல்கள் ஓரளவிற்குக் கதையில் விவாதிக்கவும் பட்டிருக்கிறது. பெருநகர் வாழ்க்கையில் உறவுகள் என்பது அலாரத்தைப் போலத்தான். அன்பு செய்வதும் அக்கறை கொள்வதும் ஏதோ இயந்திரத்தன்மையுடனே இருக்கும். நாம் அளிக்கும் உறுதிகள் காற்றில் கலந்து நம்மையறியாமலேயே கரைந்து கொண்டிருக்கவும் செய்யும். நம்முடன் வருவதாகச் சொன்னவர்கள் எல்லாம் வாழ்க்கை எனும் அவசர வெள்ளத்தில் அடித்துக் கொண்டு போய்விடுவார்கள். வெள்ளம் வடிந்த மிச்சப் பொருளாய் நாம் மட்டும் தேங்கி நின்றிருப்போம். அத்தகையதொரு தனிமையைப் பற்றி இக்கனவும் அதன் நிதர்சனங்களையும் அதன்பால் ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய மீட்பையும் விவாதிக்கிறது.

 

மீண்டும் கதைச்சொல்லியின் வலதுபுறமிருந்தவன் தனக்கு ஏற்பட்ட ஒரு விசித்திரமான அனுபவத்தைப் பகிரத் துவங்குகிறான். அவனுடைய காதல் தோல்வியில் முடியும்போது அவனுக்குள் ஒரு சிக்கல் ஏற்படுகிறது. ஏமாற்றத்தைத் தாளமுடியாமல் அவனை அவனே சுருக்கிக் கொள்ளும்போது அவன் பார்க்கும் பொருள்கள் யாவும் காட்சிகள் யாவும் தூய வெண்ணிறமாக மாறுகிறது. ஆகவே, வேறுப்படுத்திப் பார்க்க முடியாமல் தடுமாறுகிறான். உறவுகளில் உள்ள போலித்தனங்களைத் தரிசிக்கும்போது அதிர்ச்சிக்குள்ளாகுகின்றான். தூக்கமின்மையில் தவிக்கிறான். இவ்வுலகம் எல்லாவற்றிலும் இரண்டு முகங்களைக் கொண்டுள்ளதை அறிகிறான். நவீன உறவுமுறைகளில் உள்ள சிக்கல், போலித்தனம் யாவும் அவனை அலைக்கழிக்கின்றன. அதைப் புரியாமல் தடுமாறிய அவன் மெல்ல அதனை உண்மை முகத்தைக் கண்ட கணம் மீண்டும் யதார்த்தத்திற்குத் திரும்புகிறான். பெருநகர் வாழ்க்கைக்குள் எல்லோர் மனங்களும் அடையும் சிக்கல் இதுதான். அவநம்பிக்கையால் தொற்றப்பட்டு அல்லல்படுகிறோம். ஏமாற்றத்தில் திளைத்துத் தடுமாறுகிறோம். ஆனால், வெகுசீக்கிரமே பெருநகர் வாழ்க்கை நம்மை அதுபோன்ற பொய்மைகளைப் பழகிக் கொள்ள தயார்ப்படுத்தி விடுகிறது. மிகுந்த முரணான இயக்கம் இது. உறவுகளில் ஏற்படும் அவநம்பிக்கைகளைக் காலப்போக்கில் ஏற்றுக்கொள்ளும் இயந்திரத்தனமான சமாதானம் கதையில் வாசிக்கும்போது சட்டென அச்சம் ஏற்படுகிறது. போலியான வாழ்க்கைக்குள் போலியான சமாதானம் பெற்றுக் கொள்கிறோம்.

கணேஷ் பாபு நவீன வாழ்க்கையை அவருக்கே உரித்தான குறியீட்டு மொழியின் வாயிலாகக் கதைக்குள் ஆழமாக விவாதித்துச் செல்கிறார். ஆனால், விவாதத்தின் நெடி கொஞ்சமும் பெருகினாலும் கதைக்குள் கட்டுரைத்தனம் ஏற்பட்டுவிடும் என்கிற கவனமும் அவரிடம் இருந்திருக்கிறது. மிகவும் முதிர்ச்சியான எழுத்து நடை. நவீன மனிதனின் தனிமை, அவநம்பிக்கைகள், பதற்றம், சிக்குண்ட நிலை என அனைத்தையும் இச்சிறுகதையில் விரித்துக் காட்டியுள்ளார். ஆனால், தேர்ந்த வாசகனால் மட்டுமே அதன் ஆழத்தையும் விரிவையும் சென்றடையும்படியான சொல்முறையை உபயோகித்துள்ளார். படிமங்களும் குறியீடுகளும் ஏராளமாகக் கதையிலிருந்து மிதந்து வருகின்றன. இதுவும் ஒரு சொல்முறையே.

writer Vannathasan

நிறைய இடங்களில் சூழல் வர்ணனைகள் மிகுதியாக வந்துவிட்டதானாலேயே கவனம் சிதறுகிறது. வண்ணதாசனின் கதைகளில் வரும் சூழல் வர்ணனைகளின் மீதான யதார்த்தமும் கச்சிதமும் நிறைந்த மொழி கணேஷ் பாபுவிற்கு வாய்க்குமென்றால் அவருடைய சிறுகதைகளின் விவரிப்புகள் மேலும் உயிர்ப்படையும் என்றே கருதுகிறேன். வண்ணதாசனின் ‘பெருக்கு’ , ‘வாழையடிகள்’, ‘கிருஷ்ணன் வைத்த வீடு’ என்கிற சிறுகதைகளில் வரும் சூழல் விவரிப்புகள் மிக இயல்பானவையும் கதைக்குக் கொஞ்சமும் கூடுதலில்லாமலும் கதையின் ஓட்டத்தில் நெகிழ்ந்திருக்கும். அவர் அடுத்து யதார்த்தக் கதைகளின் வழியாக நவீன வாழ்வின் எச்சங்களைச் சொல்வாராயின் சிங்கையின் அவசர உலகத்தினும் மாட்டித் தவிக்கும் அகங்களை நோக்கி நேரடியாக எல்லோரையும் இழுத்துக் கொண்டு போய் உண்மையின் நெருக்கத்தில் வைக்க முடியும் என்பதே என் விமர்சனப் பார்வையாகும்.

Writer I.Santhosh Kumar

கணேஷ் பாபுவின் இச்சிறுகதை, மலையாள எழுத்தாளர் ஈ.சந்தோஷ் குமாரின் ‘மூன்று குருடர்கள் யானையைப் பார்த்த’ சிறுகதையை மீட்டுணர வைத்தது. அதில் வரும் மூன்று பார்வையற்றவர்களையும் பேட்டியெடுப்பதற்காக ஒரு நிருபர் செல்வார். ‘குருடர்கள் யானையைப் பார்த்த கதைகள்’ பெரும்பாலும் உவமைக்காகப் பலர் சொல்லிக் கேட்டிருக்கிறோம். அதைப் பற்றி பார்வையற்றவர்களிடமே கேட்டால் விந்தையாக இருக்கும் என அவர்கள் தங்கியிருக்கும் அறைக்குச் செல்கிறார். ஒவ்வொருவரும் யானை தங்கள் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கங்களையும் அக உணர்வுகளையும் மட்டுமே சொல்கிறார்கள். அவ்விவரிப்பு யானை என்பது உருவம் என்பதை மறந்து யானை என்பது ஓர் உணர்வின் கணத்த அசைவு என்பதைப் போன்ற ஒரு மனநிலைக்கு வந்துவிடுவோம். ஆக, உருவம், காட்சி என்பது மாயை; அவை உருவாக்கும் அக உணர்வுகளே மிக ஆழமான புரிதல். இக்கதையில் வரும் காட்சிகள் அனைத்தையும் ஒரு யானை இருளுக்குள் அசைவதைப் போல மனத்தில் அசைந்தாடுகின்றன.  நவீன வாழ்வின் பிய்த்தெடுக்கப்பட்ட அகங்களின் அசைவே இச்சிறுகதை.

– கே.பாலமுருகன்

சீ.முத்துசாமி – மலேசிய நவீன இலக்கியத்தின் நேர்மையான குரல்

2017ஆம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருதைப் பெற்ற மலேசிய நவீன இலக்கியத்தின் படைப்பிலக்கியக் குரலான சீ.முத்துசாமி அவர்களுக்கு என் வாழ்த்துகள். தமிழ் இலக்கியம் என்றால் அது தமிழகம்தான் என்கிற மாயையைக் களைத்தெறிந்து தமிழர்கள் வாழும் நிலத்தில் பரவியிருக்கும் தமிழிலக்கிய படைப்புகளை, இலக்கிய செயல்பாடுகளைக் கூர்ந்து கவனித்து அதன்பால் தன் ஆழ்ந்த வாசிப்பை முன்னெடுத்து விஷ்ணுபுரம் எனும் அங்கீகாரத்தைத் தந்தமைக்கு எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கும் என் நன்றி. விஷ்ணுபுரம் விருது விழாவிற்கு சுவாமி பிரம்மாநந்தாவுடன் வருவதற்கான அனைத்துத் திட்டங்களும் இருந்தன. விமான டிக்கேட்டுகளும் பதிவாகியிருந்தது. தற்சமயம் தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பயின்று கொண்டிருப்பதால் சில தவிர்க்க முடியாத காரணத்தால் விழாவிற்கு வர முடியாமல் போனதால் ஏற்பட்ட வருத்தம் விழா குறித்த நண்பர்களின் பதிவுகளை வாசித்தபோது. மேலும் அதிகரித்துப் போனது.

 

விஷ்ணுபுரம் விருதளிப்பு விழாவில் வல்லினம் ஆசிரியர் நவீன் ஆற்றிய உரையை, சிங்கப்பூர் பாண்டித்துரை எனக்கு அனுப்பி வைத்திருந்தார். அவ்வுரையில் ‘சீ.முத்துசாமி என்கிற ஆளுமையிடமிருந்து வந்தவர்தான் பாலமுருகன்’ என அவர் குறிப்பிட்டபோது, எழுத துவங்கிய காலங்களில் இரண்டாண்டுகள் சீ.முத்துசாமியுடனே அலைந்து திரிந்த பொழுதுகள் மனத்தின் ஆழத்தில் நெளிந்தன. அவரிடமிருந்து அக்காலக்கட்டத்தில் பெற்றவை அனைத்தையும் ஒருமுறை தொகுத்துப் பார்க்கும் சந்தர்ப்பமாக அது அமைந்திருந்தது. ஒருவேளை விழாவிற்கு வந்திருந்தால், எனக்குப் பேச வாய்ப்புக் கிடைத்திருந்தால், பேச வேண்டியவைகளையே இக்கட்டுரையில் இணைத்துள்ளேன்.

 

சீ.முத்துசாமிக்கும் எனக்குமான நட்புறவு 2005ஆம் ஆண்டிலிருந்து தொடங்குகிறது. அப்பொழுது நான் மலேசிய நாளேடுகளில் தீவிரமாக எழுதிக் கொண்டிருந்தேன். அப்படிப் பிரசுரமான என் சில சிறுகதைகளை வாசித்துவிட்டுப் பலரிடம் என்னைப் பற்றி விசாரித்தவாறே என்னைத் தேடியும் கொண்டிருந்தார். புதியதாக எழுதுபவர்களின் மீதான அக்கறை மிகுந்தவராக எழுத்தாளர் சீ.முத்துசாமி இருந்திருக்கிறார். பெரும்பாலும், நாமேத்தான் மூத்த எழுத்தாளர்களைத் தேடி அவர்களிடமிருந்து எதையாவது கற்றுக் கொள்ள வேண்டும் என நான் நம்பிக் கொண்டிருந்த ஒரு காலக்கட்டம். ஏனோ சில தயக்கங்களால் யாரையும் சென்று சந்திக்காமல் வீட்டிலேயே இருந்து கொண்டு வாசிப்பு எழுத்து என எனக்குள்ளே நான் இயங்கிக் கொண்டிருந்தேன். ஆனால், கோலாலம்பூரில் நடந்த ஒரு நாவல் பட்டறையில் நான் கலந்து கொண்டபோது எப்படியோ நான் அங்கு இருப்பதை அறிந்து சீ.முத்துசாமி அவரே வந்து கைக்குலுக்கி எனக்குள் இருந்த மேற்சொன்ன மூத்த படைப்பாளிகளின் மீதான புரிதலை உடைத்தார்.

 

“உன்னைத்தான் நான் சில நாட்களாகத் தேடிக் கொண்டிருக்கிறேன்” என்பதுதான் அவர் என்னிடம் உதிர்த்த முதல் வார்த்தை. அன்றிலிருந்து என் எழுத்தின் மீதும் என் மீதும் தனித்த அக்கறையைக் காட்டத் துவங்கினார். அடிக்கடி சந்திக்கவும் செய்தோம். தமிழிலக்கியத்தின் மீது எனக்கிருந்த ஆர்வத்தைப் பாராட்டியப்படியே இருப்பார். நவீன எழுத்திற்கான வீச்சு என் எழுத்தில் இருப்பதாகவும் அதனைச் செம்மைப்படுத்த வேண்டும் என்று கவனமும் செலுத்தினார். கோணங்கி, ஜெயகாந்தன், வண்ணதாசன் எனப் பலரின் நூல்களை அறிமுகப்படுத்தினார். அப்பொழுது எனக்கு வயது 24 தான். ஒரு சக நண்பனைப் போல என்னை நடத்தினார். நிறைய பேர் வழிகாட்டுவதாகச் சொல்லிவிட்டுக் குருபீடத்தில் ஏறி அமர்ந்து கொள்கிறார்கள், பிறகு அவர்களுக்கு நாம் விசுவாசிகளாக இருக்க வேண்டும். இந்த நிலை இலக்கியத்தில் நீடித்தால் அதைவிட ஒரு கொடூரமான விசயம் இருக்காது என்று சொல்லிக் கொண்டே இருந்தார். அதனாலேயே யாருக்கும் ஒரு படைப்பாளன் விசுவாசியாக இருக்க வேண்டியதில்லை என நான் தீர்க்கமாக சீ.முத்துசாமியுடன் உடன்பட்டேன். என் சிறுகதைகள் மீது உனக்கு மாற்றுக் கருத்து இருந்தாலும் தாராளமாக அதனை நீ விமர்சிக்கலாம் என்கிற சுதந்திரத்தையும் எனக்குக் கொடுத்தார். அதே போல என் கதைகளில் இருந்த போதாமை குறித்து அவர் மிக இயல்பாகக் கடிந்தும் கொண்டார். சீ.முத்துசாமி என்கிற ஒரு நேர்மையான, முகத்துதிக்காக, தேவைக்காகப் பாராட்டும் குணமற்ற மனிதரை நான் மேலும் ஆழமாகப் புரிந்து கொண்டேன். என் சிறுகதை ஒன்றை வல்லினத்திற்கு அனுப்பி வைத்து அறிமுகப்படுத்தியவரும் அவரே.

 

மண் புழுக்கள் நாவல் படிக்கக் கிடைத்தபோது அதுவரை சில படைப்புகள் வாசித்து நான் புரிந்து வைத்திருந்த புரிதல்களும் உடைந்து போயின என்றுத்தான் சொல்ல வேண்டும். எல்லாக் கதைகளும் ஒரு சில மையக் கதாபாத்திரங்களின் வழியாகவே வெளிப்படும் என்கிற எனது அப்போதைக்கான புரிதலை அவருடைய மண் புழுக்கள் மாற்றியமைத்தது. அந்நாவல் முழுவதும் சொல்லும்படியான எந்தக் கதாபாத்திரங்களின் மீது கதையை அவர் குவிக்கவில்லை. மாறாகத் தோட்டப்புற வாழ்வின் அடித்தட்டில் அசைந்து கொண்டிருக்கும் மனித உணர்வுகளின் துல்லியமான ஆழத்தையும், அதன் மேற்பரப்பில் உழன்று கொண்டிருக்கும் அப்போதைக்குப் பலரும் பேச மறந்த வாழ்க்கையையும் அவர் நாவலில் மையப்படுத்தியிருந்தார். மண் புழுக்கள் நாவலின் மீது பலரும் மொழிச் சிக்கல் இருப்பதாகவும், பேச்சு வழக்கு மொழி வாசிக்கத் தடை ஏற்படுத்துவதாகவும் புகார்கள் சொல்லி அந்நாவலை மறுத்துக் கொண்டிருந்தனர். அச்சமயத்தில்தான் மண் புழுக்கள் நாவலைப் பற்றி நான் பத்திரிகையில் விமர்சனமும் எழுதியிருந்தேன். அதே சமயத்தில் மறைந்த எழுத்தாளர் ப.ஆ.சிவத்தின் கட்டுரையும் வெளிவந்திருந்தன. இப்படியாக அவர் படைப்புகள் எனக்குள் ஏற்படுத்திய மாற்றுப் பார்வைகள் நவீன இலக்கியத்தின் ஆழத்தை அடைய ஒரு வாசக மனத்தை உண்டாக்கியது என்றே சொல்ல வேண்டும்.

 

அச்சமயத்தில்(2007) அவர் கெடா மாநிலத் தமிழ் எழுத்தாளர் இயக்கத்தின் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டிருந்தார். ஆகவே, என்னையும் இயக்கத்தில் சேர அழைத்துச் சென்றார். அப்படி அறிமுகமானதுதான் கெடா மாநில எழுத்தாளர் இயக்க நண்பர்கள். அப்பொழுதெல்லாம் மாதமொருமுறை வாசகர்கள் எழுத்தாளர்கள் கூடி சிறுகதையொட்டி விவாதிப்பதுண்டு. ஆனால், பெரும்பாலான சமயங்களில் நம்மிடையே தீவிரமான தேடலுள்ள வாசகர்கள் இல்லாததாலே எல்லா விமர்சனக் கூட்டங்களும் ஒழுக்கம், மொழிச்சீர்மை போன்றவற்றில் சிக்கிக் கொண்டு மொன்னையாகிவிடுவதுண்டு. நானும் சீ.முத்துசாமியும் ஒன்றிணைத்த சில விமர்சன சந்திப்புகள் மேற்சொன்ன சிக்கல்களினாலேயே முடங்கிப் போயின. மேலும், ஒரு படைப்பாளன் அதுவும் தன்னைச் சுதந்திரமானவனாக உணரும் ஓர் எழுத்தாளன் இதுபோன்ற இயக்கங்களில் செயல்பட முடியாது என சீ.முத்துசாமி அக்காலக்கட்டத்தில் உணர்ந்தார். அவர் அப்படியொரு சிந்தனைக்கு வரும் காலங்களில் நான் அவருடன் இருந்தேன். ஒரே ஆண்டில் அவர் தன் தலைவர் பதவியை விட்டு விலகினார்.

 

அவர் விலகினாலும் என்னையும் உடன் வெளியேற அனுமதிக்கவில்லை. நான் இன்னும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என நம்பினார். அதே எழுத்தாளர் இயக்கத்தில் நான் செயலாளராகப் பதிவியேற்று கல்வி இலாகாவுடன் இணைந்து ஆசிரியர்களுக்காகக் கவிதை பட்டறை, சிறுகதை பட்டறை, வாசிப்புத் தினம் என சில நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தேன். அப்பொழுது மிகுந்த உற்சாகமான செயல்பாட்டாளராக மாறியிருந்தேன். ஆனாலும், நவீன இலக்கியத்தின் மீதான பலரின் வாசிப்பும் தேடலும் விரிவடையாதனாலேயே அதையும் தொடர்ந்து முன்னெடுக்க முடியவில்லை. புரியவில்லை என்கிற ஒரு சாதாரண காரணத்தை முன்வைத்துப் பலர் என்னைத் தாண்டிப் போய்க்கொண்டே இருந்தனர். மேலும், இயக்கத்தில் ஏற்பட்ட சில சிக்கல்களினால் நானும் அப்பதவியை விட்டு விலகினேன். அதன் பிறகு கடந்தாண்டு வரை நான் இயக்கத்தின் எந்தப் பதவியையும் நிர்வகிக்கவில்லை( (இடையில் ஓர் ஆண்டு, தலைவராக இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு அதுவும் பிரச்சனையிலேயே முடிந்து, இப்பொழுது முற்றிலும் விலகிவிட்டேன்). ஓர் எழுத்தாளன் இயக்கத்தின் சட்டத் திட்டங்களுக்கேற்ப செயல்பட முடியாது என சீ.முத்துசாமி சொன்னதை, நம்பியதை என் அனுபவத்தால் நான் மீண்டும் உறுதிப்படுத்தினேன்.

 

2009ஆம் ஆண்டில் நவீன படைப்பாளர்கள் மத்தியில் இலக்கியம் தொடர்பான சர்ச்சைகளும் உருவாகியிருந்தன. அச்சர்ச்சையில் எனக்கும் சீ.முத்துசாமிக்கும் மாற்றுக் கருத்து உண்டாகி பிரியவும் நேர்ந்தது. அதுவரை அவருக்கும் எனக்குமிருந்த நெருக்கம் முற்றிலும் துண்டித்துப் போனது. அவரே முன்பு சொன்னதைப் போல எந்தவித நிபந்தணைகளும் இன்றி இருவரும் விலகிக் கொண்டோம். உறவில் நிபந்தணைகள் விதித்துக் கொள்ளும் பண்பை என்னிடமிருந்து நீக்கியவரும் அவரே.

 

சில வருடங்கள் பேசாமல் இருந்து, பின்னர் கோலாலம்பூரில் நடந்த அவருடைய நூல் வெளியீட்டிற்குச் சென்றிருந்தேன்(2010). அங்கு என்னைப் பார்த்ததும் மற்ற அனைத்தையும் மறந்து அன்புடன் பேசினார் உறவைப் புதுப்பித்துக் கொள்ளும் ஆற்றல் இருவருக்குமே இல்லாததால் மீண்டும் ஒரு மௌனம் பல காலம் நீடித்தது. அதன் பிறகு இலக்கிய நிகழ்ச்சிகளில் பார்த்தால் பேசிக் கொள்ளும் அளவிற்கே இருவரின் உறவும் இருந்தது. அவர் படைப்புகள் மீது எனக்கிருந்த வாசிப்பும் தேடலும் எப்பொழுதுமே இச்சர்ச்சைகளால் குறைந்ததே இல்லை. ஆகவேதான், எப்பொழுதும் அவருடைய படைப்புகள் பற்றி எழுதிக் கொண்டே இருந்தேன். என் வலைப்பக்கத்திலும் அதனைப் பிரசுரித்திருந்தேன். படைப்பாளன் வேறு; படைப்பு வேறு என்று சொன்னவரும் சீ.முத்துசாமியே.

 

அவருடைய குரல்களைப் பல சந்தர்ப்பங்களில் எனக்குள் சேமித்து வைத்துள்ளேன். இரண்டாண்டுகள் அவருடனே சுற்றி அலைந்ததால் படைப்பிலக்கியத்தின் குரல் எத்தனை தீர்க்கமாக, அதிகாரங்களுக்கு வளைந்து கொடுக்காமல் தன் சுயத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்பதை அவரிடமிருந்து கற்றுக் கொண்டேன். இன்று எந்த இயக்கத்தோடும் அமைப்போடும் தொடர்பில்லை என்றாலும் இலக்கியத்தில் தனித்து இயங்குவதற்கான  துணிச்சலைச் சீ.முத்துசாமியிடமிருந்து கற்றுக் கொண்ட ஒருவன் எனச் சொல்லிக் கொள்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. கடந்தாண்டு தோழிப் பதிப்பகத்தின் மூலம் வெளிவந்த என்னுடைய ‘இறந்தகாலத்தின் ஓசைகள்’ எனும் சிறுகதை தொகுப்பிற்குச் சீ.முத்துசாமியே முன்னுரை எழுதிக் கொடுத்திருந்தார். நூல் வெளியீட்டு விழாவிலும் அவரே விமர்சனமும் செய்தார். அவையாவும் என் எழுத்திற்குக் கிடைத்த அங்கீகாரமே ஆகும்.

 

எழுத்தாளர், சகோதரர் ஜெயமோகன் அவர்கள் தொகுத்த ‘சீ.முத்துசாமி- மலேசிய நவீன இலக்கியத்தின் முன்னோடி’ கட்டுரை தொகுப்பில் என் கட்டுரை இடம் பெற்றிருப்பதைக் கண்டதும் ஏற்பட்ட மகிழ்ச்சியால் இக்கட்டுரையை எழுதி அனுப்பியுள்ளேன். வேறு யாரையும்விட அவருடன் ஆத்மார்த்தமாகச் சுற்றி அலைந்தவன் நான். பல சமயங்களில் அவரால் கடுமையாகத் தாக்கவும் பட்டுள்ளேன். அவர் வாழ்நாளின் ஒரு பகுதியில் நான் இருக்கிறேன் என்கிற நினைவு ஒன்றே போதும். மலேசிய நவீன இலக்கியத்தின் நேர்மையான ஒரு குரலாக எப்பொழுதும் எனக்குள் ஒலித்துக் கொண்டே இருக்கும் சீ.முத்துசாமிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

 

– கே.பாலமுருகன்

Thanks jeyamohan.in (pictures)