சிறுவர் சிறுகதை: பதக்கம்
“உஷா! உயரம் தாண்டுதல் போட்டியில உயரமா இருக்கறவங்களெ ஜெய்க்க முடியல… நீ 90 செண்டி மீட்டர் இருந்துகிட்டு…ஹா ஹா ஹா!”
கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த பதக்கத்தைக் கையில் பிடித்து மீண்டும் பார்த்தாள். அதுவரை இல்லாத மகிழ்ச்சி உஷாவின் முகத்தில் முளைத்திருந்தது. தன்னைப் பார்ப்பவர்களிடமெல்லாம் பதக்கத்தை எடுத்துக் காட்டினாள். எல்லோரும் ஆச்சர்யத்துடன் அவளுக்குக் கையைக் கொடுத்தனர்.
“சாதிச்சுட்டெ உஷா! எல்லாம் உன் திறமைத்தான்…” தலைமை ஆசிரியர் திரு.கமலநாதன் எப்பொழுது பாராட்டுவார் என உஷா காத்திருந்து சட்டென புத்துயிர் பெற்றாள்.
போட்டி விளையாட்டு முடியும் தருணத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. மண்டபத்தில் இருந்த பாதி பேர் புறப்படுவதற்குத் தயாராகிக் கொண்டிருந்தனர். புத்தகைப்பையின் வாயிலிருந்து மூடப்படாத இழைவாரியின் வாயிலாக உஷாவின் உடமைகள் திணறிக் கொண்டிருந்தன.
வசதியாக ஓர் இடத்தைத் தேடி புத்தகைப்பையைச் சரிப்படுத்த முயன்றாள். அப்பொழுதுதான் தன் கழுத்தில் தொங்கிக் கொண்டிருப்பது தங்கப் பதக்கம் என்பதைக் கவனித்தாள். சட்டென பதற்றம் வளர்ந்து கண்களுக்குள் கூடி நின்றது.
“ஐயோ! நம்ம ரெண்டாவது இடம்தானே ஜெயித்தோம்? எப்படித் தங்கப் பதக்கம் இருக்கு?” சத்தமாகப் புலம்பியவாறு ஆசிரியை குமாரி செல்வியிடம் ஓடினாள்.
“என்னம்மா? எப்படி பதக்கம் மாறுனுச்சி? இப்பெ எங்கெ போய் தேடறது? எந்தப் பள்ளி மாணவி முதலிடம்? தெரியுமா?”
ஆசிரியைக் கேட்டக் கேள்விக்கு உஷாவிடம் பதிலில்லை. கலவரம் மிகுந்த தோற்றத்துடன் உஷா நின்றிருந்தாள்.
“சரி பரவால. நீ வச்சுக்கோ. இன்னொரு நாள் கேட்பாங்க. அப்பெ கொடுத்துக்கலாம். இப்ப மணியாச்சும்மா கிளம்பணும்,”
“ஏய் உஷா… பரவாலையே வெள்ளிப் பதக்கம் ஜெயிச்ச…. ஆனா, கையில தங்கம். உனக்குத்தான் அதிர்ஷ்டம்!” எனக் கூறிவிட்டு அங்கிருந்த நண்பர்கள் ஒன்று திரண்டு சிரித்தார்கள்.
உஷாவிற்கு இருப்புக் கொள்ளவில்லை. கையில் வைத்திருந்த பதக்கம் அவளுக்கு ஒவ்வாமையாக இருந்தது. உடனடியாக அதனை உரியவளிடம் சேர்ப்பிக்க வேண்டும் எனத் துடித்தாள். சுற்றிலும் கூட்டம் கூட்டமாக மாணவர்கள் களைந்து கரைந்தவண்ணமாய் இருந்தனர். கூட்டத்தில் யாரென தேடுவது?
மேடையில் நின்றிருந்து முதலில் வெற்றியாளர்களை அறிவித்துக் கொண்டிருந்த ஓர் அக்காள் தென்பட்டார். உடனே, உஷா அவரிடம் ஓடிப்போய் நடந்ததைக் கூறினாள்.
“ஆமாவா? நீங்க எந்தப் பள்ளிமா?”
“கலையரசி தமிழ்ப்பள்ளி…”
“சரி பிறகு ஏதும் பிரச்சனைனா தொடர்பு கொள்றோம், இப்பெ எல்லாரும் போய்க்கிட்டு இருக்காங்க. நீங்க தேடற பொண்ணு கெளம்பிக்கூட போய்ருக்கலாம். நீங்க வச்சுக்குங்க, பிறகு சொல்றோம், எல்லாம் ஒரே பதக்கம்தான், இதுல என்ன இருக்கு…”
உஷா கண்களுக்குள்ளே அமிழ்ந்து கொண்டிருந்த சோகத்தை மேலும் அழுத்திப் பொறுத்துக் கொண்டாள். அங்கிருந்து கணத்த மனத்துடன் நகர்ந்தாள். வாசலில் ஒரு மாணவி உஷாவைப் போலவே தயக்கத்துடன் நின்றிருப்பது தெரிந்தது. உஷா நன்கு உற்றுக் கவனித்தாள். அம்மாணவியின் கையிலிருந்தது வெள்ளிப் பதக்கம்தான். அப்பொழுதுதான் உஷா வெற்றி பெற்ற முழு மகிழ்ச்சியை அனுபவிக்கத் துவங்கினாள்.
- ஆக்கம் : கே.பாலமுருகன்