சிறுகதை முடிவு – ஒரு பார்வை- முடிவென்பது முடிந்து தொடங்கும் வித்தை.
(சிங்கப்பூர் சிறுகதை பயிலரங்கில் ‘ஸ்கைப்’ உரையாடலின் வழி படைக்கப்பட்ட கட்டுரை- இடம்: சிங்கை நூலகம்)
‘ஒரு சிறுகதை முடிந்த பிறகுத்தான் தொடங்குகிறது‘ என்பார்கள். ஒரு சிறுகதையின் மொத்த அழுத்தமும் அதன் முடிவில்தான் இருக்கிறது. கதைக்குள் நுழையும் வாசகன் எதிர்க்கொள்ளும் மாபெரும் திறப்பு அக்கதையின் முடிவில் வைப்பதன் மூலமே அக்கதையைக் காலம் முழுவதும் அவன் மனத்தில் சுமந்து திரிய வாய்ப்புண்டு.
சிறுகதையின் முடிவென்றால் சிறுகதையை முடிப்பதல்ல. இன்றைய பலரும் சிறுகதையின் முடிவு என்பதை ஆகக் கடைசியான முற்றுப் புள்ளி என நினைக்கிறார்கள். எழுத்திலிருந்து அகத்தில் நுழையும் பயணமே சிறுகதையின் முடிவாகும். தாளிலிருந்து நம் மனத்தில் ஆழங்களை நோக்கிப் பாய்வதுதான் சிறுகதையின் முடிவாகும். சிறுகதையின் முடிவு எப்படி அமைந்திருக்க வேண்டும் என சற்று விரிவாகப் பேசலாம்.
முடிவென்பது திருப்புமுனை
18ஆம் நூற்றாண்டிலேயே சிறுகதையின் முடிவு எதிர்ப்பாராத வண்ணம் திருப்புமுனையுடன் அமைந்திருக்க வேண்டும் என ரஷ்ய இலக்கியத்தில் வலியுறுத்தியதாகக் குறிப்புகள் உள்ளன. ஒரு சிறுகதையின் முடிவை முன்பே வாசகன் ஊகித்துவிட்டான் என்றால் அதுவொரு மோசமான வாசக அனுபவமாக முடிந்துவிடும். சிறுகதையின் வழியாக வாசகன் செய்யும் உள்ளொளி பயணத்தில் சிறுகதையின் முடிவில் அவன் எதிர்ப்பாராத ஒரு புள்ளியில் கதை சென்று நிற்குமாயின் அக்கதை அவனுடைய மனத்தை வென்றுவிடும். இன்றளவும் பல சிறுகதைகள் பேசப்படுவதற்கு முக்கியமான காரணம் திருப்புமுனையான முடிவுகள்தான்.
அகப்பயணம்
ஒரு நல்ல சிறுகதை தாளோடு நின்றுவிடாமல் வாசிக்கும் அகங்களை நோக்கிப் பயணிக்கச் செய்யும் என்பார்கள். அத்தகையதொரு அனுபவத்தை அல்லது திறப்பைத் தரவல்லதுதான் சிறுகதையின் முடிவாகும். சிறுகதைக்கான முடிவை எழுத நினைக்கும் ஒவ்வொரு எழுத்தாளனும் இதனைக் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. இன்று பல சிறுகதைகள் மக்கள் மத்தியில் இடம்பெறாமல் போனதற்குக் காரணம் அக்கதையின் முடிவுகள் செயற்கையாகவும் கதையின் ஓட்டத்திற்கு ஒவ்வாமலும் போனதால்தான் என நினைக்கிறேன். பலர் சிறுகதையை எங்கு முடிப்பதென தெரியாமல் தடுமாறியதன் விளைவுகள்தான் முடிவுகள் வெறும் முற்றுப்புள்ளிகளாக, அதற்கு மேல் வார்த்தைகளை வார்க்க முடியாமல் நின்றுவிடுகிறது. அப்படிப்பட்ட நிறுத்தலை நாம் முடிவென்று கொள்ள முடியாது. வாழாத ஒரு வாழ்வை ஒரு சிறுகதைக்குள் வாழத் துவங்கும் வாசகனின் மனத்தில் அனுபவத்தை விரித்தெடுக்க ஒரு தருணத்தை உண்டு செய்வதுதான் சிறுகதை முடிவின் தலையாய வேலையாகும்.
முடிவென்பது வாசல்
எல்லோரும் முடிவு என்பதை ஒரு தீர்வு என நினைக்க முற்படுகிறார்கள். சிறுகதைக்கான தீர்வை மட்டும் தந்துவிட்டு விலகிக் கொள்வதல்ல முடிவு. முடிவென்பது இன்னொரு வாசல் என நாம் முதலில் நம்ப வேண்டும். கதவை இழுத்து மூடிவிட்டுச் செல்வதல்ல சிறுகதையின் முடிவு. ஒரு சிறுகதையின் உச்சக்கணத்திற்கு வந்து சேரும் வாசகன் அதற்குமேல் இன்னொரு வாசலுக்குள் நுழைய துவங்கும் சிரிய இடைவெளியே முடிவு. அதை நுட்பமான கைத்தேர்ந்த எழுத்தாளர்களின் முடிவுகளில் நம்மால் உணர முடிவும்.
அசோகமித்ரனின் ‘பயணம்’ சிறுகதையின் முடிவு இன்னமும் வாசிக்கையில் மனத்தை அதிரச் செய்கின்றது. கதை முழுவதும் பேசப்படும் ஆன்மீகம், ஞானம் என அனைத்தையும் விட்டு இன்னொரு தளத்திற்கு நகரும் ஒரு வித்தியாசமான முடிவாகும். வாழ்வெனும் மிக நெருக்கமான ஒன்றை மனத்திற்கு அருகாமையில் கொண்டு வந்து மனத்தை அசைத்துப் பார்க்கும் முடிவாக அமைந்திருக்கும். ஒரு குருவும் அவருடைய சீடரும் காட்டுவழிப் பயணத்தின்போது நிகழும் கதை. அசோகமித்ரனின் இச்சிறுகதை வாழ்வின் கடைசி தருணம்வரை நியதிகளை எதிர்த்துப் போராடும் மனித குணங்களின் இயல்பை ஆன்மீகத்தையும் தத்துவங்களையும் தாண்டி இதுதான் வாழ்க்கை எனும் இன்னொரு தளத்தில் வாசகனைக் கதை கொண்டு வந்து நிறுத்துகிறது.
இக்கதையில் இப்படியொரு திறப்பை அவன் எதிர்ப்பார்த்திருக்க வாய்ப்பில்லை. இதுதான் நான் சொன்ன வாசல். சட்டென திறந்து அவனை வேறொரு தளத்திற்கு இட்டுச் செல்லும் வித்தையைச் செய்ய வல்லதுதான் சிறுகதையின் முடிவாகும். ஆன்மீகத் தளத்திலிருந்து வாழ்வெனும் மெய்யை நோக்கிப் பயணமாகும் சிறுகதையின் முடிவது.
ஒரு முடிவு பல புரிதல்கள்
மேலும், சிறுகதையின் முடிவென்பது படிக்கும் அனைவருக்கும் ஒரேவகையான புரிதலை மட்டுமே கொடுக்கிறது என்றால் அது மிகவும் சாதாரணமான முடிவாக மட்டுமே இருக்கத் தகுதியுடையதாகும். முடிவென்பது வாசித்தலில் கிளைவிட வேண்டும். வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் பன்மையான புரிதல்களை வழங்கவ்வல்லதாக அமைக்க வேண்டும். வாசலைத் திறப்பது மட்டுமே முடிவின் வேலை. எப்படி, எங்கே பயணிக்க வேண்டும் என்பது வாசகனின் தேர்வாக இருக்க வேண்டும். கதவை அடைக்காமல் திறந்துவிடும் வேலையை மட்டும் முடிவு செய்யுமானால் எங்கே பயணிக்க வேண்டும் எனும் தேர்வு வாசகனுடையதாக மாறும். ஆனால், இன்றைய பலர் சிறுகதையின் முடிவில் தீர்ப்பை மட்டுமே வழங்குகிறார்கள். அதற்கு மேல் வாசகனை நகர விடாமல் முடிவில் அவனைக் கட்டிவிடுகிறார்கள். சிறுகதையில் இப்படிப்பட்ட முடிவுகள் மிகவும் கொடுமையான அனுபவமாகும். வாசகன் எதை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என வழிகாட்டுவதுதான் சிறுகதையின் முடிவு எனப் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு தீக்குச்சியின் உரசலின்போது தெறிக்கும் சிறிய ஒளியில் தென்படும் வாசல்தான் முடிவு. அதற்குமேல் பயணத்தை முடிவு செய்வது வாசகனாகும். நான் முன்பே சொன்ன அசோகமித்ரனின் ‘பயணம்’ சிறுகதையின் முடிவைப் பலரும் பலவகையில் விவாதித்துள்ளார்கள் என்பதுதான் அக்கதையின் முடிவு வழங்கும் பன்முகப்பட்ட அனுபவமாகும். சிறுகதையின் முடிவென்பது வாசகனுக்கு மிகுந்த இடைவெளியையும் அதற்குமேல் தாண்டிச் செல்வதற்குரிய சுதந்திரத்தையும் வழங்கும் ஆற்றலை சிறுகதையின் முடிவு மேற்கொள்ள வேண்டும்.
நின்றுவிடுவதல்ல முடிவு; முடிந்துவிடுவதல்ல முடிவு; முற்றுப்புள்ளி அல்ல முடிவு. முடிவு என்பது தொடக்கம். முடிந்து தொடங்கும் வித்தை.
கே.பாலமுருகன்