சிறுகதை: சுருட்டு

1

பெரியம்மா தலைமுடியை வாரிக் கட்டிக் கொண்டு பெரியப்பாவைக் கெட்ட வார்த்தையிலேயே திட்டிக் கொண்டு மேலே வந்தார். அன்றுத்தான் பெரியம்மா அப்படிப் பேசுவார் எனத் தெரிந்தது. அதிர்ச்சியாகவும் இருந்தது. பெரியப்பா அண்ணனைத் தூக்கி வரந்தாவில் வீசும்போது அம்மாவும் அங்கு வந்துவிட்டார். அண்ணன் அலறிக் கொண்டு எழ முயன்று மீண்டும் விழுந்தான்.

“என் சுருட்டெ தொட்டனா…நீ செத்தடா,” எனக் கத்திவிட்டு பெரியம்மா அலறுவதைக்கூட பொருட்படுத்தாமல் பெரியப்பா தன் கையில் வைத்திருந்த சுருட்டை எடுத்து நிதானமாகப் பற்ற வைத்தார்.

2

வீரமாணிக்கம் பெரியப்பா எங்கள் வீட்டுக்கு வந்து மூன்று வருடங்கள் ஆகின்றன. எப்பொழுதும் சுருட்டும் கையுமாகத்தான்  இருப்பார். அப்பாவின் மரணத்திற்குப் பிறகு கம்போங் ராஜாவில் வாடகை வீட்டில் இருந்த பெரியப்பாவையும் பெரியம்மாவையும் அம்மாத்தான் அழைத்து வந்தார். பெரியப்பா பன்றி வேட்டைக்கும் உடும்பு வேட்டைக்கும் பேர் போனவர். நாய்களைப் பிடித்து அதனை வெறியேற்றும் வித்தையும் தெரிந்தவர். அவருடைய கம்பத்து வீட்டில் பின்புறம் ஒரு நாய் கொட்டாயைக் கட்டிவிட்டு பல சமயங்களில் அங்கேத்தான் இருப்பார். உடும்பின் பித்தப்பையைக் கொண்டு நாயின் மூக்கில் அதை வைத்து அதன் நுகர்வுத்தன்மையை உசுப்பேத்துவார். அப்படித்தான் நாயின் வெறியை ஏற்ற முடியும்.

பெரியப்பா வழக்கமாக சாயங்காலம்வரை கம்போங் ராஜா காட்டில் இருந்துவிட்டு வீட்டுக்கு வந்துவிடுவார். காட்டில் மூலை முடுக்கெல்லாம் பெரியப்பாவிற்குப் பழக்கம். எங்குப் பன்றி இருக்கும்; எங்கு உடும்பு அலையும் என அவருக்குத் தெரியும். காட்டிலேயே கம்புகளைச் செருகி, தீ வைத்து பன்றியைக் கவிழ்த்துப் போட்டு ஒரு பதம் பார்த்துவிட்டுத்தான் அவரும் பெரியப்பாவின் நண்பர்களும் மீண்டும் கம்பத்துக்கு வருவார்கள். இப்படிப் போனபோக்கில் இருந்த பெரியப்பாவினால் கடன் தொல்லைத்தான் அதிகமானது. வேலைக்கு ஏதும் போகாமல் கடன் தொல்லையில் இருந்த அவர்களுக்கு அம்மா வீட்டோடு வந்து இருக்கும்படி சொன்னதும் வசதியாகவே இருந்தது. என்ன ஏது எனக் கேட்காமல் அப்போதைக்குப் பெரியம்மாவுடன் கிளம்பி இங்கு வந்துவிட்டார். கொஞ்ச நாள் அவருக்கு இங்கு இருப்புக்கொள்ளவில்லை.

நாயைக் கொண்டு வந்து வளர்க்கப் பார்த்தார். ஆனால், அங்கு நாய் வளர்க்க அனுமதி இல்லை. தெருவில் அலையும் நாய்களின் தொல்லைகளே பெரும்பாடாக இருந்ததால் நாய் வளர்ப்பதற்கு அங்குக் கடுமையான மறுப்பிருந்தது. ஆகவே, அங்குத் திரியும் நாய்களை நோட்டமிட்டுக் கொண்டும் அதனுடன் விளையாடிக் கொண்டும் இருப்பார். பெரியப்பாவிற்குச் சாதாரணமாகவே எச்சில் நிறைய ஊறும். எப்பொழுதும் துப்பிக் கொண்டே இருப்பார். வாயிலுள்ள சுருட்டும் நனைந்து நஞ்சிவிடும். பாதி நேரம் நெருப்பில்லாமல் வெறுமனே வாயில் வைத்திருப்பார். மேல் மாடிக்கும் கீழ் மாடிக்கும் சதா உலாவிக் கொண்டிருப்பார். அவருடைய சுருட்டு வாடை எல்லோருக்கும் பரிச்சயம்.

மாடிப்படிகளில் எப்பொழுதும் சிறுநீர் வாடை வீசும். இங்கிருப்பவர்கள் நன்கு அறிந்து வைத்திருந்த வாடை அது. இரவு முழுவதும் நாய்கள் படிகளில்தான் படுத்துக் கிடக்கும். அதைத் தாண்டி போவதும் சிறுநீர் வாடை மூக்கில் ஏறி ஒரு கட்டத்தில் சட்டென சகஜமாவதும் அங்கு எல்லோருக்கும் பழக்கம். எவ்வளவு கழுவினாலும் அது தொலையாது. எச்சிலும் வெற்றிலையும் துப்பி துப்பி கரைப்படிந்து போன வெளிச்சுவர்கள். புதிதாக அவ்விடம் வருபவர்களுக்கு குமட்டலை உண்டாக்கிவிடும். அங்கிருக்கும் கிழவிகளின் கூட்டு சதி அது. மேலும், இரண்டாவது மாடியின் மூலையில் பீர் போத்தல்கள் கிடக்கும். அது ‘டத்தோ’ சாமிக்கு வைத்துவிட்டுப் பின்னர் யாரோ எடுத்துக் குடித்துப் போட்ட போத்தலா அல்லது கொசு மருந்து பற்ற வைக்கப்பட்டு பின்னர் இங்கேயே விடப்பட்ட போத்தலா எனத் தெரியாது. பெரியப்பா அதை எடுத்து வெளியில் வீசுவதை ஒரு பொழுதுபோக்காக வைத்திருந்தார். அவர் வேறு எந்த வேலைக்கும் போகவும் இல்லை. வேறு எந்த வேலையும் அவருக்குத் தெரியாது எனப் பெரியம்மா சொல்லிவிட்டார். அம்மாவும் பெரியப்பா வேலைக்குப் போவதை விரும்பவில்லை.

பெரியப்பா அப்பாவின் குடும்பத்தில் மூத்தவர். இரண்டே பேர் கொண்ட குடும்பம் அது. அப்பாவும் பெரியப்பாவும் இரண்டாடுகள்தான் வித்தியாசம். இருவரும் ஒரே மாதிரி முரட்டுடல் கொண்டவர்கள். 70 வயது என எப்பொழுது சொன்னாலும் யாரும் நம்பமாட்டார்கள். அந்தந்த வயதிற்கு எல்லோரும் ஓர் உடலைக் கற்பனை செய்து வைத்திருக்கிறார்கள். தளர்வு முதுமையின் நீக்க முடியாத அடையாளம். ஆனால், வீரமாணிக்கம் பெரியப்பா பெயருக்கு ஏற்றதைப் போல உடலில் சோர்வு இல்லாமல் விறைப்புடன் மட்டுமே இருப்பார். ஓர் உடும்பு பளபளப்பு மிளிர திடத்துடன் நகர்வதைப் போல காலையும் மாலையும் இரவும் பார்க்கும் அனைத்துப் பார்வைகளிலும் பெரியப்பா திடமாகத் தெரிந்தார்.

பெரியப்பாவிற்குக் கோபம் வந்துவிட்டால் வீட்டில் ஏதாவது பொருள் உடையும், அடுத்து வீடே உப்பி வெடித்துவிடும் அளவிற்கு அவருடைய சத்தம் அடுக்குமாடிக்கே கேட்கும். பெரியப்பாவின் அலறலும் குரலும் சாதாரணமானதல்ல. ரொம்பவும் கறாரான குரல். பெரும்பாலும் அங்கு வசிப்பவர்கள் சீனர்கள் என்பதால் பலமுறை சொல்லிப் பார்த்தும் பெரியப்பா அடங்கவில்லை என்பதால் அவர்களும் விட்டுவிட்டார்கள். சுருட்டு வாசம் வீசும் பெரியப்பாவை அங்கு யாரும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்கள். பெரியபாவின் முகத்தில் ஒரு கொடூரமான தணியாத கோபம் அப்படியே இருக்கும்.

“செத்தடி மவளே!” எனப் பல சமயங்களில் பெரியம்மாவைத் துரத்திக் கொண்டு வீட்டுக்கு வெளியேயும் பெரியப்பா வீட்டுச் சண்டையைக் கொண்டு வந்ததுண்டு. பெரியம்மா மேல்மாடிக்கு ஓடுவார். அங்குச் சில இந்தியர்களின் வீடு இருப்பதால் யாராவது ஒருவரின் வீட்டுக்குள் நுழைந்து ஒளிந்து கொள்வார். பெரியப்பா அருள் உடல் முழுவதும் பிரவாகமெடுக்க மேலேயும் கீழேயும் ஒரு பன்றியை வேட்டையாடுவதைப் போல ஓடிக் கொண்டிருப்பார்.

அப்பா இருந்தபோது வருடத்திற்கு இரண்டுமுறைகூட பெரியப்பா இங்கு வருவது ஆச்சர்யம்தான். இன்று அப்பா இல்லாத வீட்டில் அவருடைய சத்தம் ஓங்கியிருந்தது. பெரியப்பாவிற்குப் பிள்ளைகளே இல்லை. எங்களுக்கும் ஆசைக்காக ஒரு பொருள்கூட அவர் வாங்கிக் கொடுத்ததும் இல்லை. வீட்டில் இருக்கும் எங்களை அவர் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. அவர் பிள்ளைகளிடம் அன்புடன் பேசியும் நான் பார்த்ததே இல்லை. ஒரு வரட்டு பூச்சியைப் போல பெரியப்பா. அம்மா எங்களுக்காக வாங்கி வைக்கும் உணவு பொருள்களைக்கூட பெரியப்பா எடுத்து சாப்பிட்டுவிடுவார்.

“ஏன்யா அந்தப் பையன சும்மா சும்மா அடிச்சிக்கிட்டு இருக்கெ?” எனப் பெரியம்மா கேட்கும்போதெல்லாம் மிகவும் அசட்டையாக இருப்பார். மேற்கொண்டு பெரியம்மா ஏதும் கேட்டால் கத்திக் கொண்டே வாளியையோ செருப்பையோ பெரியம்மாவின் மீது விட்டடிப்பார்.  பெரியப்பாவின் இரைச்சல் எப்பொழுதும் குறைந்ததேவில்லை. எல்லோரையும் திட்டிக் கொண்டே இருப்பார். அவருக்கு வாழ்க்கை திருப்தியளிக்கவே இல்லை. வீட்டில் எல்லாம் பக்கங்களிலும் கோபம் வந்துவிட்டால் வீட்டை உற்று கவனித்துவிட்டு உடும்பைப் போல நடந்து கொண்டிருப்பார். பின்னர், வீட்டுக்கு வெளியில் போய் கத்திக் கொண்டிருப்பார். எப்பொழுதும் அவர் கோபமாக இருக்கும்போது பெரியம்மா உணவைப் போட்டுவிட்டு பெரியப்பாவைச் சாப்பிட அழைக்கும் போராட்டம் கொடுமையானது.

“நான் ஏண்டி சாப்டணும்? இப்படியே பட்டினிலெ சாவறேன். அல்சர் வந்து தொலையட்டும்”

பெரியம்மா கேட்டு கேட்டு சலித்த வசனம். பெரியம்மா சாப்பிடச் சொல்லி கேட்கும்போதெல்லாம் பெரியப்பா தட்டை ஓங்கி சுவரில் அடித்துவிடுவார். சாம்பாரும் சோறும் ஒருவகையான வீச்சத்துடன் குலைந்து ஒழுகும். உடனே அம்மா வழக்கம்போல உள்ளே ஓடி துடைப்பத்தைக் கொண்டு வந்து துடைக்க ஆரம்பித்துவிடுவார். அம்மாவிற்கு வீடு சுத்தமாக இருக்க வேண்டும். அங்கு நடப்பதைப் பற்றி கவலையில்லாமல் அம்மா சாம்பார் விழுந்து கொட்டிய இடத்தைத் துடைக்கத் துவங்கிடுவார்.

“சாப்பாடு போட்டு கொல்றீயா? என்னா சோத்துக்கா பொறந்தேன்? வேட்டையாடின உடம்புடி…”

பெரியம்மா ஒரு வாயில்லா பூச்சி. பெரும்பான்மையான சமயங்களில் அவர் வாயே திறப்பது இல்லை. வெறுமனே முனகுவார். அதையும் பெரியப்பாவினால் பொறுத்துக் கொள்ள முடியாது.

“உன்னெ அடிச்சி வெளில தொரத்துனாதான் தெரியும்”

பெரியம்மாவின் மீது பாய்வார். பெரியம்மா உதறியடித்துக் கொண்டு எங்காவது ஓடுவார். அவருக்கு வேறு எதுவும் தெரியாது. சண்டையெல்லாம் முடிந்து பெரியம்மா அழுகையுடனோ அல்லது உடலில் ஏதும் காயங்களுடனோ வீட்டில் வந்து அடங்குவார். சிறிது நேர அமைதிக்குப் பிறகு அம்மா பெரியம்மாவின் முதுகில் தடவிக் கொடுத்துவிடுவார்.

3

பாண்டியன் மாமா அம்மாவின் ஒரே தம்பி. மாதத்தில் இரண்டுமுறை வீட்டுக்கு வருவார். அவர்தான் வீட்டுச் செலவுக்கு அம்மாவிடம் பணம் கொடுப்பார். அவருடைய தயவிலேயே வீடு ஓடிக் கொண்டிருந்தது. அப்பாவின் பணமும் மாதம் வந்து கொண்டிருக்கும். பெரியப்பா அங்கு இருப்பதால் மாமா வீட்டில் தங்கமாட்டார். பெரியப்பாவின் மீது அவருக்குக் கொஞ்சம் கோபம் உண்டு. சாப்பிட்டுவிட்டு வீட்டைவிட்டுப் போகும்வரை நிலைக்காத கோபம் அது. சட்டென பெரியப்பா வந்துவிட்டால் அது இன்னும் குறுகி வளைந்து இளைத்துவிடும்.

பெரியப்பாவும் மாமாவும் பேசிக் கொள்ளமாட்டார்கள். ஆனாலும், மாமா வரும்போதெல்லாம் பெரியப்பா மீசையைக் கொஞ்சம் நீவிக் கொண்டே வரவேற்பறையில் விறைத்தவாறு அமர்ந்திருப்பார். மாமா எதுவும் நடக்காததைப் போல போய்விடுவார்.

பெரியப்பாவும் அம்மாவும்கூட பேசிக்கொள்ளமாட்டார்கள். பெரியப்பா இருக்கும் இடத்திற்கு அம்மா வரமாட்டார். பெரியப்பாவை எதிர்க்கொள்ளும்போதெல்லாம் முகத்தைத் தொங்கவிட்டுக் கொள்வார். அடுக்குமாடி வீடு சிறியது. பத்தடி எடுத்து வைத்தால் வீடு முடிவடைந்துவிடும். சுற்றி சுற்றி வந்தாலும் சீக்கிரமே சலிப்படைய செய்யும் வீடு. மூன்று மகா சிறிய அறைகள். ஒன்றில் பாதிக்கும் மேற்பட்ட துணிமணிகள் குவித்து மூட்டை மூட்டையாகக் கட்டி வைக்கப்பட்டிருக்கும். பெரியப்பாவும் பெரியம்மாவும் அந்த அறையில்தான் உறங்குவார்கள். அம்மா மட்டும் முதல் அறையில். நானும் என் அண்ணனும் சாமி அறையில் படுத்துக் கொள்வோம். ஒரு வரவேற்பறை அங்கிருந்து தலையை மட்டும் எக்கினால் சமையலறை. அவ்வளவு சிறிய வீடு.

அம்மாவிற்குப் பக்தி அதிகம். சாமி காரியங்களுக்காக மட்டும்தான் வீட்டில் வாயைத் திறப்பார். மற்றப்படி வீட்டில் எல்லோரும் சாப்பிட்டிருக்க வேண்டும். காலையில் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து சாமி காரியங்களைத் தொடங்கிவிடுவார். அடுக்குமாடி வீடு என்றாலும் அம்மாவின் பக்திக்கு அளவே இல்லை. பக்கத்து வீட்டுக்கும் சேர்த்துதான் மணி அடிப்பார். ஒரு கட்டம் அது அதீதமான எல்லைக்குச் செல்லும்.

பிறகு, வீடு முழுக்க மஞ்சள் தண்ணீர் தெளித்துவிட்டு சமையலறையிலுள்ள சன்னலுக்கு வெளியில் தொங்கும் ரோஜா செடிக்கு அபிஷேகம் செய்யத் துவங்குவார். அம்மாவின் அபிஷேகம் அங்குப் பிரசித்திப் பெற்றதாகும். அவர் செடிக்கு நீர் ஊற்றுவதைத்தான் எல்லோரும் ‘அபிஷேகம்’ என்பார்கள். காலை மணி 6.30க்கு அது தொடங்கும். வீட்டின் சலையறையில் உள்ள சன்னலுக்கு வெளியே இருக்கும் கம்பியில் நெகிழி பாசியில் ரோஜாவை அம்மா வைத்திருக்கிறார். மாதத்தில் ஒருமுறை அது செழிக்கும். பூக்களைப் பார்க்கலாம். அம்மா அச்செடிக்கு கைகளைக் சன்னல் கம்பிகளுக்கு நடுவே இருக்கும் பெரிய ஓட்டையில் விட்டு நீரை ஊற்றவோ அல்லது நீண்டு வளர்ந்துவிடும் தண்டை வெட்டவோ முடியும். அம்மா நீரை ஊற்றும்போது அது விலகி சுவரில் வடிந்து கீழ்மாடி சுவர்வரை ஒழுகும்.

அம்மாவின் சமையலறைக்கு எப்பொழுது போனாலும் ஒருவகை சாம்பார் வாடையும் சமையல் பட்டை வாடையும் வீசிக் கொண்டே இருக்கும். அம்மா அன்று சமைக்கவில்லை என்றாலும் அந்த வாசம் அப்படியேத்தான் இருக்கும். குறுகலான அறை. சன்னலைத் திறக்கும்போது மட்டும் சட்டென ரோஜா செடியின் ஒரு சுகந்தமான வாசம் உள்ளே பரவும். அத்தனை நெடிக்கு மத்தியிலும் அதனை நுகர முடியும்.

அம்மா எழுந்து பசியாறை சமைத்துவிட்டு அதனைச் சாமிக்குப் படைக்கும்போது பெரியப்பா எழுந்திருப்பார். எழுந்து குளிக்காமலேயே சுருட்டைப் புகைக்கத் துவங்கிவிடுவார். அந்தச் சுருட்டு வாசம் அம்மாவுக்குப் பிடிக்காது. காலையில் பெரியப்பாவுக்கு அதுதான் தெம்பு. வெளிவாசலைத் திறந்துவிட்டு சுருட்டைப் புகைப்பார். வாயில் ஊறும் எச்சிலையும் துப்பிக் கொள்வார். வீட்டு வாசலில் பெரியப்பாவின் எச்சில் வீச்சம் அம்மாவுக்கு எரிச்சலை உண்டாக்கும். எல்லாம் வேலையும் முடிந்த பிறகு வாசலைச் சவர்க்காரத் தூளைப் போட்டுக் கழுவுவார். எவ்வளவு கழுவியும் எச்சில் வாடை அகன்றதே இல்லை. சவர்க்காரத் தூள் வாசனையுடன் அது கலந்து வீசும்.

அம்மாவுக்கு எந்த வேலையும் இல்லாவிட்டால் உடனே வாளியைக் கொண்டு வந்து வீட்டைத் துடைக்கத் துவங்கிவிடுவார். பெரியப்பாவிற்கு அது பிடிக்காது. பெரியம்மாவிடம் திட்டிக் கொண்டிருப்பார்.

“இப்படியே துடைச்சிக்கிட்டு இருந்தா சுத்தமா எல்லாம் போய்டும். எதுமே தங்காது,” எனக் கத்துவார்.

அம்மா துடைப்பதை நிறுத்தவே மாட்டார். பெரியப்பா அப்படிக் கத்தும்போது இடத்தை மாற்றி துடைப்பாரே தவிர அவருக்கு வீடு எப்பொழுதும் சுத்தமாக இருக்க வேண்டும். பெரியப்பா இல்லாதபோது அவருடைய அறையையும் துடைத்துவிடுவார். வீட்டின் ஒட்டுமொத்த அழுக்கே அங்குத்தான் இருக்கிறது என்பதைப் போல அம்மா அழுத்தித் துடைப்பார்.

பெரியம்மா அங்குள்ள சீனர்களின் வீட்டுக்கு வீட்டு வேலைக்குச் செல்வதை வைத்துதான் பெரியப்பாவின் சில தேவைகள் நிறைவேறின. சுருட்டுப் புகைப்பதைத் தவிர அவருக்குக் கொஞ்சம் குடி பழக்கமும் உண்டு. குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததும் படுத்து உறங்கிவிடுவார். குடிக்காத நாட்களிலேயே அவருடைய சத்தம் வீட்டில் ஓங்கி இருக்கும்.

இருந்தாலும் அவருடைய விறைப்பு, பிடிவாதம், தோற்றம் ஒரு காலக்கட்டத்திற்குப் பிறகு அவரிடமிருந்து எங்களை ஒதுக்கிவிட்டன. பெரியம்மா ஒரு மௌனி. அதிகம் பேசமாட்டார். ஒரு கலர் துண்டைத் தோளில் எப்பொழுதும் போட்டிருப்பார். அம்மாத்தான் அவருக்கு உலகம். பெரியப்பாவின் மீது எரிச்சலும் கோபமும் தலைக்கேறும் போதெல்லாம் அம்மாவின் கால்களைக் கட்டியணைத்துக் கொண்டு அழுவார். அவருக்கு அதற்கு மேல் தெரியாது. பெரியப்பா முன்பு மண்டையிலேயே அடித்து அடித்து பெரியம்மா பாதி சக்தியையும் நினைவுகளையும் இழந்துவிட்டார் என்றே சொல்ல வேண்டும்.

4

அன்றைய நாளில் அண்ணன் அவர் வைத்திருந்த சுருட்டுக் கட்டை எடுத்து மாடியிலிருந்து வீசிவிட்டான். அதனைப் பார்த்துவிட்டு பெரியப்பா தாண்டவம் ஆடினார். அண்ணனின் இரு கால்களையும் பிடித்து ஐந்தாவது மாடிக்கு வெளியே தொங்கவிட்டார். அன்று எனக்கும் அண்ணனுக்கும் மறக்க முடியாத நாள். அம்மாவும் பெரியம்மாவும் வெளியே போய்விட்டார்கள். பெரியப்பா வீட்டில் ஆள் இருக்கும்போதே திமிறாகத்தான் இருப்பார். அன்று யாரும் இல்லை என்பதால் அண்ணனைப் பிடித்து இரண்டு கால்களையும் கயிற்றில் கட்டி ஐந்தாவது மாடியிலிருந்து கீழே இறக்கி பயம் காட்டும்போது எனக்கு பாதி உயிர் போய்விட்டது.

அம்மா வந்ததும் பெரியப்பா அண்ணனைத் தூக்கி வரந்தாவில் போட்டார். அப்பொழுது அம்மாவுக்குக் கோபம் திமிறிக் கொண்டு வந்தது. கண்களில் பொங்கி வந்த அழுகையை அடக்கிக் கொண்டு அம்மா முதன்முறையாகப் பெரியப்பாவைப் பார்த்து முறைத்தார். சுருட்டுப் புகைக்கத் துவங்கிய பெரியப்பாவிற்கு அநேகமாகக் கதிகலங்கியிருக்கலாம். அண்ணனைத் தூக்கி அணைத்துக் கொண்டு மீண்டும் வீட்டுக்குள் போய்விட்டார். அண்ணன் ரொம்பவே பயந்து போய்விட்டான்.

“ஏன்யா! உனக்குப் பிள்ளக்குட்டி இருந்திருந்தாதானே அருமை தெரியும்? மலட்டு நாய்த்தானே நீ,” எனப் பெரியம்மா கத்தினார்.

பெரியப்பா ஒரு கனம் அதிர்ந்துவிட்டார். பெரியம்மா கதறி அழுது கொண்டே அம்மாவின் பின்னே சென்றார். அவர் அன்று இரவுவரை வீட்டுப் பக்கம் வரவே இல்லை. பெரியம்மா துண்டைத் தோளில் போட்டுக் கொண்டு அழுகையும் முகமுமாக அம்மா ஏதும் சொல்லும்வரை அப்படியே அமர்ந்திருந்தார்.

“ஏய் பிள்ள! இந்தா இதுல பத்து வெள்ளி இருக்கு. போய் நான் சொல்ற ஜாமான வாங்கிட்டு அப்படியெ அந்த மனுசனுக்குச் சுருட்டு வாங்கியா… இருந்தா கூட அழைச்சிட்டு வா. மணி என்ன ஆவுது”

பெரியம்மா உடனே எழுந்து புறப்பட்டார்.

கே.பாலமுருகன்

seranggon times, singapore, july issue.

அனுபவ பத்தி: நல்லவனாக இருப்பது எப்படி?

5ஆம் ஆண்டு படிக்கும்போதெல்லாம் வருடத் தொடக்கத்திலேயே எப்படி நல்லவனாக இருப்பது எனத் தெரிந்து கொள்ளும் முயற்சியில் இறங்கினேன். காலையில் எழுந்ததும் இன்று பள்ளியிலேயே நான் தான் மிகச்சிறந்த நல்லவனாக இருக்க வேண்டும் என சாமியை வேண்டிக்கொள்வேன். இன்று முதல் நான் நல்லவன் என்பதால் இரண்டுமுறை பல் துலக்கினேன். நல்லவர்களுக்குப் பல் பளிச்சென்று இருந்தால்தான் கவர்ச்சியாக இருக்கும்.

 

நான்குமுறைக்கும் மேல் கண்ணாடியைப் பார்த்து சிரித்து வைத்தேன். மூன்றுமுறை முட்டிகாலிட்டு சுவரைப் பார்த்து கடவுளை நினைத்து வணங்கினால் எல்லாம் பாவமும் மன்னிக்கப்படும் என ஏதோ ஒரு கோவில் பூசாரி சொன்னதாக பார்த்திபன் சொன்னதை அப்படியே நம்பியிருந்தேன். வீட்டுக்கு வெளியே வந்ததும் அன்று வீசியது புதிய காற்றேதான். உற்சாகமாக அன்று முழுவதும் நல்லவனாக இருக்கப் போகும் நாளை நினைத்து மகிழ்ச்சியுடன் பேருந்துக்காகக் காத்திருந்தேன். பேருந்தில் ஏறியதும் ஒரு நல்லவன் செய்யக்கூடியது என்னவாக இருக்கும்? ‘முள்ளு தலை மணியம்’ என இதுநாள்வரை கேலி செய்து தீர்த்த பேருந்து ஓட்டுனரைப் பார்த்து மரியாதையாக வணக்கம் சொல்லியாக வேண்டும். முடிந்தவரையில் அவரின் தலை முடியைப் பார்க்கவே கூடாது. அடுத்ததாக சக மாணவர்கள் நின்றிருக்க நேர்ந்தால் அவர்களுக்கு இருக்கையைக் கொடுத்துவிட்டு நான் நிற்க வேண்டும்.

 

எல்லோருக்கும் அன்று அமர்வதற்கு இடம் இருந்ததால் நான் நல்லவனாக இருப்பதற்கான சந்தர்ப்பங்கள் உருவாகவே இல்லை. பேருந்தைவிட்டு இறங்கும்போது வரிசை முட்டிக்கொண்டு திணறியது. உடனே அன்று புதிதாய் எனக்குள் பூத்திருக்கும் நல்லவன் அவன் வேலையைச் செய்யத் துவங்கினான். வரிசையை நேர்ப்படுத்திவிட்டு பிறகு வரிசைக்குப் பின்னால் நின்று கொண்டு அவசரமில்லாமல் இறங்கிய என்னை மணியம் அண்ணன் ஆச்சர்யமாகப் பார்த்தார் அவருடைய விநோதமான பார்வை என்னைக் கூச்சப்படுத்தியது. நல்லவனாக இருக்கும்போது கொஞ்சம் வெட்கமும் வரும் என நினைத்துக்கொண்டேன்.

 

நல்லவனாக இருப்பவனின் உடை எப்படி இருக்க வேண்டும் எனத் தெரியுமா? Complete uniform with tie. வெள்ளைக்காரத் துறை போல கழுத்துப் பட்டையைச் சுத்தமாக அணிந்துகொண்டிருக்க வேண்டும். கழுத்துவரை பொத்தான் கண்டிப்பாக அணியப்பட்டிருக்க வேண்டும். என் பள்ளியில் அப்பொழுது பல நல்லவர்கள் அப்படித்தான் இருந்தார்கள். 4 ஆம் ஆண்டு படித்த சமயத்தில் 20க்கும் மேற்பட்ட எம்.ஜி.ஆர் தத்துவப் பாடல்களைப் புத்தகத்தில் எழுதி மனப்பாடம் செய்து ஒப்புவித்த அனுபவம் இருப்பதான் அன்று நான் ஒரு நல்லவனாக இருக்க அது பெரிதும் உதவியது.

 

வகுப்பிலும் சிற்றுண்டி சாலையிலும் சிலருக்குக் கேட்கும்படியே பாடினேன். அப்படிப் பாடும்போது என் புருவம் சுருங்கி கண்கள் மூடும். அது நல்லவர்களுக்கான முகப்பாவனை என நினைத்துக்கொள்ளலாம். தத்துவப்பாடல்களைப் பாடும் பெரிய மோட்டர் பசுபதி அண்ணன் அப்படித்தான் செய்வார். அவரின் வெளுத்த முகத்தில் அவர் கண்கள் மூடி முகப்பாவனையை மாற்றுவதைப் பார்த்திருக்கிறேன்.

 

குறிப்பாக அன்று முழுவதும் கெட்ட வார்த்தைகள் பேசிவிடக்கூடாது என்பதில் குறிக்கோளாக இருந்தேன். நல்லவர்கள் பேசும்போது குரல் கம்மியாக ஒலிக்க வேண்டும். பண்பான வார்த்தைகளையே பயன்படுத்த வேண்டும். ஒருமுறை ஆசிரியரிடம் கேட்டப்போது அவர் அப்படித்தான் சொன்னார். வேண்டுகோள் வாக்கியத்தைத் தவிர நல்லவர்கள் வேறு எதையும் பயன்படுத்தி பேசக்கூடாதாம். என்ன கொடுமை என்றால் அன்று பிடிக்காதவனிடமெல்லாம் அடிப்பணிந்து போக வேண்டியதாகப் போயிற்று. அன்றைய தினத்திற்கு முதல்நாள் பெண் பிள்ளைகள் முன்பே என் மூக்கைப் பிடித்து இழுத்த தர்மேந்திரனைப் பார்த்து “சாப்பிட்டியா தர்மேந்திரன்?” எனக் கேட்க நேர்ந்தது. கொஞ்சம் கொஞ்சமாகச் சுற்றியுள்ள மாணவர்கள் என்னைக் கடுமையாகக் கேலி செய்யத் துவங்கினார்கள். கேலி செய்யபடும்போது நாம் சாந்தமாக இருந்தால் நல்லவனாகி விடலாம் எனப் பொறுமையாகவே இருந்தேன்.

 

ஆங்கில வகுப்பு முடிவடைந்ததும், அடுத்த பாடத்திற்கு ஆசிரியர் வரவில்லை. பின் வரிசையில் அமர்ந்திருந்த நான் ஆசிரியர் இல்லாத போது புத்தகம் படிக்கும் நல்லவனாக மாறியிருந்தேன். வகுப்பறை என்பதும் ஒரு சமூகம்தானே. ஆகையால் நல்லதுக்கு எதிரான கலகக்காரர்கள் அங்கும் இருக்கவே செய்தார்கள். மூன்று வகுப்பு நண்பர்கள் எனக்கு முன் வந்து நின்று புத்தகத்தைப் பிடுங்கியும், சட்டைக் காலரை இழுத்தும் எனது நல்லவனாக இருக்கும் திட்டத்தைக் களைத்தார்கள். கோபம் வந்ததும் ஒரே ஒரு கெட்ட வார்த்தைதான். உடலிலிருந்து ஏதோ கழன்று வீழ்ந்தது போல இருந்தது. காலையிலிருந்து நான் போர்த்தியிருந்த ஒரு வேடம் அவிழ்க்கப்பட்டது.

 

அதன் பிறகு பலமுறை பல வருடங்கள் இப்படி நல்லவனாக ஆகப் பார்த்து நான் செய்யும் நடவடிக்கைகள் மாறிக்கொண்டே வந்ததே தவிர ஒரு முழுநாளில் எப்படி நல்லவனாகவே வாழ வேண்டும் எனத் தெரியவில்லை.  இப்படித்தான் நல்லவன் ஆகும் முயற்சியிலேயே கிடப்பேன். இப்பொழுதும் கேள்வி எழுகிறது, எது நல்லது? யார் நல்லவர்? நல்லவர்களின் முகப்பாவனை எப்படி இருக்கும்? நல்லவர்கள் என்ன செய்வார்கள்? நல்லவர்கள் சாந்தமாகப் பேசுவார்களா? என்னைச் சுற்றி இருக்கும் மனிதர்களின் இயல்பில் நல்லது கெட்டது என அனைத்தையும் மீறி வேறொன்றும் இருக்கவே செய்கிறது. அதைத்தான் அடுத்ததாகத் தேடிக் தேடிக் களைக்கிறேன்.

 

கே.பாலமுருகன்,  May 2010

சிறுகதை: பேபி குட்டி

கடைசியாகத்தான் பெரிய மாமா வந்தார். அதுவரை வீடு ஒரு கனத்த துயரத்தைக் கெட்டியாகப் பிடித்து வைத்திருந்து இப்பொழுது தளரவிட்டதைப் போல உடைந்தது. அப்பா கதறி அழும்போது உடன் யாராலும் அழாமல் இருக்க முடியவில்லை. இதுவரை எதற்குமே சட்டென அழாத ஒருவர். அப்படி அழுது கதறும்போது உடல் சிறுத்துக் குழந்தையாகி எல்லோரின் மடியிலும் விழுகிறார்.

மாணிக்கம் பக்கத்து வீட்டு ஆள். அப்பாவின் நெருங்கிய உலகமே அவர்தான். அவருக்குச் சொல்லும்படியாக நண்பர்கள் இல்லை. ஒரு வீடு தள்ளிக்கூட யார் இருக்கிறார்கள் என அப்பாவிற்குத் தெரியாது. மாணிக்கம் அப்பாவைப் பிடித்து ஓர் இடத்தில் உட்கார வைக்கும்போது அவர் வேட்டி கழன்றுவதைப் போல இருந்தது.

“யப்பா…தலைய வடக்காலே வைக்கனும்…தூக்குங்க,” என நெற்றி நிறைய திருநீர் பூசி முகத்தை மறைத்திருந்தவர் கூறினார். அவர்தான் பெரியசாமி. இரண்டு வயது குழந்தையின் மரணம் யாரையும் சமாதானப்படுத்தக்கூடியதில்லை. வருவோர் போவோர் அனைவரும் புலம்பியபடியே இருந்தனர். ஆகக் கடைசி வார்த்தையாக ஒரு புலம்பலையே விட்டுப் போய்க்கொண்டிருந்தனர். வீட்டில் அவன் கடைசி பையன். பின்கட்டிலிருந்து முன்வாசலுக்கு ஓடிவரும் சிறிய இடைவெளியில் சட்டென முடிந்துவிட்ட வாழ்க்கை. இத்துனை அவரசமான முடிவு.

“டேய் சாக வேண்டிய வயசாடா இது…என்ன விட்டுவிட்டுப் போய்ட்டியேடா,” என அப்பா மீண்டும் தரையை அடித்துக் கொண்டு அழுதார்.

பேபி குட்டி தலை விரித்த கோலமாய் அப்பொழுதுதான் வெளியில் வந்தாள். பேபி குட்டிக்கு 92 வயது. அப்பாவின் அம்மா. பொக்கை வாய். கண்கள் இரண்டும் ஒடிந்து உள்ளே சொருகிக் கிடந்தன. பேசுவதைச் சட்டென புரிந்துகொள்ள முடியாது. ஒரு சொல்லை உச்சரிக்கவே நிதானமாக அடுக்குவார். அவருடன் உரையாடப் பொறுமை தேவைப்படும். ஆனால் ஓயாமல் வேலை செய்து கொண்டே இருப்பார்.

மெலிந்துபோன தோள். அதன் மேலே எப்பொழுதும் தொங்கும் ஒரு கலர் துண்டு. வெளுத்தக் கைலி. தாடைவரை நீண்டு தொங்கும் காதுகள். ஆனால் . தூரத்தில் வருபவர்களையும் பேசுபவர்களையும் அவளால் உன்னிப்பாகக் கேட்கப் பார்க்க முடியும். அவள் யாரையும் பொருட்படுத்தியதே இல்லை. சாமி அறைக்குப் பக்கத்தில்தான் படுத்திருப்பாள், ஆனால், இதுவரை சாமியை வணங்கியதே கிடையாது. திடிரென சாமிப் படங்களையே கவனித்துக் கொண்டிருப்பாள். பிறகு மீண்டும் தன் இடத்திற்கு வந்துவிடுவாள்.

“அடியே பேபி குட்டி உன் பேரன பாத்தயா?” என அவர் வயதை ஒத்த மூக்குத்தி கிழவி தூரத்திலிருந்து அரற்றிக் கொண்டே வீட்டுக்குள் வந்தாள்.

பேபி குட்டி வீட்டுக்கு வெளியில் வந்து ஓரமாய் நின்றிருந்த விளக்கமாறை எடுத்து வாசலைப் பெருக்கத் துவங்கினாள். அது அவரின் அன்றாட வேலை. எந்தச் சலனமும் இல்லாமல் ஏற்கனவே சுத்தமாக இருந்த வாசலைப் பெருக்கினாள். அவளால் அவளுடைய வேலைகளைச் செய்யாமல் இருக்க முடியாது.

“இந்தக் கெழவிக்கு எத்தன வயசாகுது…போய் சேர வேண்டியதெல்லாம் நல்ல திடக்காத்தரமா இருக்கு…கடவுளுக்கு என்ன கேடு? இந்தச் சின்ன பையனைக் கொண்டு போய்ட்டாரு,” வந்தவர்களில் யாரோ சொன்னதை எல்லோரும் கேட்டனர்.

அவர்களில் சிலர்  இப்பொழுது பேபி குட்டியை வைத்தக் கண் வாங்காமல்  கவனித்தனர். ஒரு சிறு கவனம் திரும்புதல் அது. மரணத்திலிருந்து வாழ்வுக்குத் திரும்பும் கணம். அதுவரை சோகமாக இருந்தவர்கள் அதுவரை புலம்பியவர்கள் இப்பொழுது நிமிர்ந்து உட்கார்ந்தனர். பேபி குட்டி இரு கால்களையும் அகட்டி உட்கார்ந்தவாறு தரையைப் பெருக்கினாள். அது அவளுக்கு எந்த அசௌகரிகத்தையும் கொடுக்கவில்லை.

“இந்த வயசுலையும் இதுனாலே நல்லா ஆரோக்கியமா இருக்க முடியுது?”

“ஆமாம்….92 வயசுகிட்ட”

பேபி குட்டி பெருக்குவதை நிறுத்திவிட்டு அங்கே இருந்த நாற்காலிகளை அடுக்கத் துவங்கினாள். ஒவ்வொரு நாற்காலியையும் அவளால் இயல்பாகத் தூக்கி நகர்த்த முடிந்தது. உடலில் இருந்த முதுமை செயலில் குறைவாக இருந்தது.

“ஏய்ய் பாட்டி.. அங்க போய் உக்காரு.. யேன் தேவை இல்லாத வேல செஞ்சிகிட்டு இருக்க?” பெரியசாமிக்கு உதவியாக வந்தவர் கத்தினார்.

பேபி குட்டி அதனைக் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. எவ்வளவு சோற்களைக் கோர்த்துத் திரட்டி பேபி குட்டி காதில் திணித்தாலும் அது அவளுடைய மண்டைக்குப் போய் சேராது. அவள் அவளது உலகத்தில் இயங்கிக் கொண்டே இருப்பாள். ஏற்கனவே அடுக்கப்பட்டிருந்த நாற்காலிகளைத் தூக்கிக் கொண்டு போய் வேறு இடத்தில் அடுக்கத் துவங்கினாள்.

பேபி குட்டியின் உண்மையான பெயர் குட்டியம்மாள். ஆனால் அப்பொழுதெல்லாம் பெண் குழந்தை பிறந்தால் பேபி என்றும் ஆண் குழந்தை பிறந்தால் போய் என்றும் அடைப்பெயரிட்டு அழைப்பார்கள். அப்படியே தொடர்ந்து அழைத்து குட்டியம்மாள் பேபி குட்டியானாள்.

சுந்தரி அத்தை வந்து சேர்ந்த பிறகு வீடு மீண்டும் அலறத் துவங்கியது. தம்பியை 2 மாதம் தூக்கி வளர்த்தவள் அவள்தான். தேம்பி தேம்பி அழுததில் சட்டென மூர்ச்சையற்று விழுந்தாள். சிறிது நேரம் எல்லோரும் பதறிப் போயினர். தண்ணீரை முகத்தில் அடித்து அவளை ஓர் ஓரமாக உட்கார வைத்தார்கள். முகம் தொங்கிப் போய்க் கிடந்தது.

“யப்பா சொந்தக்காரனுங்க எல்லாம் எண்ணை வைக்கலாம்,” எனப் பெரியசாமி சொன்னதும் படுத்திருந்த அத்தை திடீரென எழுந்து தம்பியின் பெட்டியருகே ஓடினாள்.  அவள் அப்படி ஓடும்போது ஓர் ஆணாக மாறியிருந்தாள். கால்கள் இரண்டையும் பரப்பியபடி ஓடினாள். அவள் அப்படிச் செய்பவள் அல்ல. வீட்டில் மகன்கள் இருந்தாலே சத்தமாகப் பேசவோ தனது இயல்பான பதற்றத்தையோ காட்ட விரும்பாதவள்.

“மகேனு மகேனு ஐயாவு வந்துருடா…அம்மாவெ விட்டுப் போவாதடா,” எனப் பெட்டியின் வலப்பக்கத்தில் சரிந்தாள். அதுவரை நாற்காலியை அடுக்கிக் கொண்டிருந்த பேபி குட்டிக்குச் அத்தையின் அலறல் கேட்டது. அத்தை பேபி குட்டிக்குக் கடைசி மகள். பாசமாக வளர்ந்தவள். ஆனால் ஒரு காலத்திற்குப் பிறகு பேபி குட்டியை அவள் அவ்வளவாகக் கண்டுகொள்ளவில்லை. ஒரு சடங்கிற்காக மட்டுமே பேபி குட்டிக்கு மாதம் கொஞ்சம் பணம் தருவாள்.

பேபி குட்டி தட்டுத் தடுமாறி அத்தையிடம் போனாள். அவள் பெட்டியைக் கூட கவனிக்கவில்லை. அவளால் அமர்ந்திருப்பவர்களையும் தரையையும் மட்டுமே அதிகப்படியாகக் கவனிக்க முடியும். கூன் வளைந்து நடப்பவளுக்கு அது மட்டுமே சாத்தியம். அத்தையின் அருகே அமர்ந்துகொண்டு அவளுடைய தலையை வருடினாள். விழியோரம் இலேசாகக் கண்ணீர் முட்டிக்கொண்டு கிடந்தது.

“சின்ன பையன்..இன்னும் உலகத்தையே பாக்காத்தவன்,” எனப் பேபி குட்டியிடமிருந்து தன்னை விடுவித்த அத்தை மீண்டும் கதறி அழுதாள். பேபி குட்டி அத்தையின் கையை விட மறுத்தாள். கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள். அதில் ஒரு முரட்டுத்தனம் தெரிந்தது.

“கையெ விடு,” அழுகையினூடாக அத்தைத் திமிறி முனகினாள்.

பேபி குட்டி சுருங்கிய இரு கைகளையும் முட்டிக்களுக்கிடையே குவித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். எல்லோரும் பேபி குட்டியையும் அத்தையும் கவனித்தனர். சன்னமான புலம்பல்கள் ஓங்கி ஒலித்துப் பிறகு மீண்டும் ஓய்ந்தன.

“குமாரு கெழவியெ கூட்டிட்டுப் போ” குமார் தம்பிக்கு மூத்தவன். பேபி குட்டியைப் பிடித்து மேலே தூக்கினான். அவள் வர மறுத்தவள் போல முரடு பிடித்தாள்.

“பாட்டி ஏஞ்சி வா,” எனப் பதிலுக்கு அவனும் பலமாக இழுத்தான்.

பேபி குட்டி மெலிந்தவள். 30 கிலோ கிராம்கூட இருக்க மாட்டாள். ஏதோ முனகியவாறு அவனுடைய இழுப்புக்குப் போனாள். குழந்தைகளின் மரணம் எந்தத் தத்துவத்தாலும் நிகர் செய்ய இயலாதது. ஒரு குழந்தையின் மரணத்திற்கு முன் அனைத்து மனங்களும் குழந்தையாகிவிடுகின்றன. தம்பி இப்பொழுதுதான் பெட்டிக்குள் ஒளிந்துகொள்ள சென்றதைப் போல படுத்திருந்தான். அது விளையாட்டு. இன்னும் சிறிது நேரத்தில் அது முடிந்துவிடும் என அனைவரின் மனமும் படப்படத்துக் கொண்டிருந்தன.

“டேய் வீட்டு நிம்மதியயெ கொண்டு போய்ட்டான்டா,” மீண்டும் அத்தை புலம்பினாள். அவள் குரல் சோர்வுற்றிருந்தது. தம்பி ஒரே ஒரு சிரிப்பில் அனைத்து இறுக்கங்களையும் உடைப்பவன். நம் வேலைகளையும் விட்டுவிட்டு உடனே கவனிக்கக்கூடிய அலட்டலே இல்லாத மெல்லிய சிரிப்பு. குழி விழும் கன்னங்கள். சிறுத்த கைகள்.

பேபி குட்டிக்கும் அவனுக்கு நடக்கும் சண்டை வீட்டிலேயே பிரபலமானவை. வீடு முழுக்க அவனைத் துரத்திக் கொண்டு பேபி குட்டி ஓயாமல் ஓடுவாள். அவளிடமிருந்து ஒளிந்து கொள்வதே தம்பியின் மகத்தான விளையாட்டாக இருக்கும். பேபி குட்டி கொஞ்ச நேரம் உறங்கிவிட்டாலும் அவள் பொக்கை வாயில் எதையாவது சொருகி விடுவான். அவள் திணறிக் கொண்டு எழுந்து பார்ப்பாள்.

“நீ என்னிக்காவது என்னைக் கொன்னுருவடா,” என அதையும் முழுமையாக உச்சரிக்க முடியாமல் பேபி குட்டியின் வாய்க்குள்ளே கரைந்துவிடும்.

குமார் பேபி குட்டியை வீட்டின் ஓர் ஓரத்தில் உட்கார வைத்துவிட்டு மீண்டும் வாசலுக்கு வந்தான். பெட்டியை வாசலில் கிடத்தியிருந்தார்கள். பிண ஊர்தி வந்ததும் வீடு மீண்டும் பரப்பரபானது. அவ்வளவாகப் பழக்கமில்லாத தூரத்து நண்பர்களும் சொந்த வீட்டின் சோகத்தைப் போல உணர்ந்தனர்.

பேபி குட்டி அவ்விடத்தை விட்டு மீண்டும் வாசலுக்கு வந்தாள். ஆங்காங்கே சிதறிக் கிடந்த சப்பாத்துகளை எடுத்து அடுக்கத் துவங்கினாள். குனிந்து குனிந்து அவள் பெருக்கி சப்பாத்துகளை அடுக்குவதைச் சிலர் பார்த்துக் கொண்டிருந்தனர்.

“அந்தக் கெழவியெ இழுத்துட்டுப் போய் கட்டி வச்சாத்தான் என்ன? சனியன் மாதிரி நடந்துக்குது,” துரை வாத்தியார் அப்படிச் சொல்வார் என யாரும் எதிர்ப்பார்த்திருக்க மாட்டார்கள்.

துரை வாத்தியார் அப்பாவின் ஆசிரியர். இந்த வீட்டில் அதிகம் உரிமையுள்ள மனிதர். எல்லாம் விழாக்காலங்களிலும் இந்த வீட்டில்தான் இருப்பார். ஒரு முக்கியமான விருந்தாளி என்றே சொல்லலாம். ஒரு வருடத்தில் கைவிட்டு எண்ணக்கூடிய அனைத்து பண்டிகைகளின்போதும் தவறாமல் வந்து தன் உறவைப் புதுப்பித்துவிட்டுப் போய்விடுவார். அவருக்கும் 50 வயது இருக்கும். எல்லோரும் அவருக்குக் கொஞ்சம் அடங்கிப் போவர்.

“டேய் குமாரு இதை இழுத்துப் போய் வீட்டுக்குள்ள உடு.. சாக வேண்டிய வயசுலே..உசுரே வாங்குது,” என அவர் சொன்னதும் உடனே குமார் எழுந்து நின்றான். எல்லோரும் பேபி குட்டியை அசூசையாகப் பார்த்தனர். குமார் மீண்டும் பேபி குட்டியின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போனான்.

அவளுக்கு வீட்டில் ஒரு மூலை உண்டு. சாமி அறைக்குப் பக்கத்தில் இருக்கும் சிறிய இடைவேளி. அங்குத்தான்  எல்லாம் வேலைகளும் முடிந்த பிறகு அவள் நாள் முழுக்க இருப்பாள். வெறுமனே கவனித்துக் கொண்டிருப்பாள். எதுவுமே இல்லாத ஒன்றை அவள் கவனித்துக் கொண்டே இருப்பாள். அவளால் வெகுநேரம் ஓர் இடத்தில் அமரவும் முடியாது.

“பாட்டி இங்கையே இரு.. போற வரைக்கும் வந்திடாத,”என அதட்டிவிட்டு குமார் வாசலுக்குப் போனான்.

எல்லாம் சடங்கும் முடிந்த பிறகு பெட்டியைத் தூக்கினர். கனத்த மனங்களால் அதைப் பார்க்க இயலவில்லை. எல்லோரும் வாய்விட்டு அழுதனர். அப்பா சாலையிலெயே படுத்துப் புரண்டார்.

வீட்டில் இருந்தவர்கள் எல்லோரும் வெளியில் போனதுடன் பேபி குட்டி எழுந்தாள். மெதுவாக நடந்து சென்று நாற்காலிக்குப் பின்னால் ஒளிந்தாள். பிறகு எழுந்துபோய் அறைக்கதவிற்குப் பின்னால் ஒளிந்தாள். அவள் வழக்கம்போல தம்பியைத் துரத்துவதைப் போல அவனுடைய பெயரை உச்சரித்துக் கொண்டே வீட்டுக்குள் ஓடத் துவங்கினாள்.

–    கே.பாலமுருகன், March 2014

 
சமீபத்தில் வாசித்த மிகச்சிறந்த கதைகளில் ஒன்று இது. ஒரு குழந்தையின் மரணம். அந்த இழப்பின் பின்னணியில் நிகழ்ந்துகொண்டிருக்கும் இன்னொரு குழந்தைமையை எவரும் கவனிப்பதேயில்லை. மேலும் முதுமை என்பது மரணத்தின் இன்னொரு வடிவம். ஆகவே அதை சபிக்கிறார்கள், பழிக்கிறார்கள். – jeyamohan

சிறுகதை: மஞ்சள் நிறத் தேவதையின் மரணக்குறிப்புகள்

 

download

1

சரவணன் கண்களைத் திறந்ததும் முனியாண்டியின் படுக்கைக் காலியாகியிருந்ததைப் பார்த்தான்.  நான்கு நாட்களுக்கு முந்தைய ஓர் இரவில் 9.00 மணிவரை முனியாண்டி தனது தேவதைகளுடன் இங்குதானே இருந்தார் என்ற வியப்புடன் சரவணன் சோம்பலேறிய கண்களுடன் அறையின் சின்ன இருட்டில் இலேசாகத் திறந்திருக்கும் ஜன்னல் பக்கமாகப் பார்த்தான். முனியாண்டியின் அந்த நீல நிறச் சட்டை தொங்கிக் கொண்டிருக்கும் கறுத்த ஆணி இன்னமும் காலியாகச் சுவரில் ஒட்டிக் கொண்டிருந்தது.

“அப்பா. .  காராக் ஹைவேலெ(Karak Highway) வந்துகிட்டு இருக்கும் போதுதான் அந்தப் பச்ச கலரு தேவதயெ பாத்தென்யா. .  அது கைய கூப்பிக்கிட்டுப் பாவமா நின்டுக்கிட்டு இருந்துச்சு… அதுக்குக் குடும்பமே இல்லயாம்… அனாதயாதான் வாழுதாம், அதான் இப்படி ஊர் ஊரா சுத்துதாம், நேத்து அதெ கூட்டியாந்து சிரம்பான்ல உட்டுட்டு வந்துட்டேன். .  மறுபடியும் எப்ப வேணும்னாலும் கூப்டும்யா”

சரவணம் சிறிது நேரம் அந்த ஜன்னலின் விளிம்பில் கைகளை வைத்துக் கொண்டு அப்பா அன்று சொன்னதையே மனத்தில் அசைப்போட்டவாறே வெளிமுற்றத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கு வீட்டைச் சுற்றிலும் பச்சை வர்ணத்தில் தேவதைகள் ஒளிந்து கொண்டு விளையாடுவது போலவே இருந்தது. எதிர்புறத்தில் நின்று கொண்டிருந்த ஒர் உயரமான செடியின் மீது  ஏறி கொண்டு “பாப்பாயே சாலமோன். .  பூங் பூங். . பீ. . பீ” என்று கத்திக் கொண்டே பச்சை தேவதையுடன் முனியாண்டி ஏதோ ஒரு தூரத்துத் தேசத்துக்குப் பறந்து போய்விட்டதாகச் சரவணன் நினைத்துக் கொண்டிருந்த கனத்தில் இயலாமைகளின் கரங்கள் அவனை இறுக்கியது.

“ஐயா. .  நாளைக்கு அப்பா ஒன்ன குருவிக் கடைக்குக் கூட்டிட்டுப் போறேன், ஒரு சிட்டுக் குருவி வாங்கிக்கலாம். அப்பறம் தேட்டருக்குப் போய் பைடர்மேன் படம் பாக்கலாம், என்னா ஓகே வா?”

அதே ஜன்னல் இலேசாகத் திறந்திருக்க, வானத்தைச் சிறிய ஓட்டையின் வழியாக இருவரும் பார்த்தப்படி படுத்திருந்தபோது முனியாண்டியால் உதிர்த்துவிடப்பட்ட வார்த்தைகள். வழக்கமான பூச்சாண்டி வார்த்தைகள். சோம்பலுடன் வெறுமனே ஜன்னல் கம்பிகளின் இடுக்குகளில் முகத்தைப் புதைத்துக் கொண்டிருந்தான் சரவணன். தொடர்ந்து மூன்று நாட்களின் சோம்பல் அவன் முகத்தில்.கண்களின் பார்வை மங்கிப் போயிருந்தது.

இன்று மதிய வெயில் பொழுதில்  கொஞ்சமாக வீட்டினுள் நுழையும் வெயிலுடன் தாராளமாக உறைய வேண்டும், பக்கத்து வீட்டு சீனக் கிழவனின் குருவி சத்தங்களைக் கேட்டு வெறுப்படைய வேண்டும், பிறகு ஆகக் கடைசியாக தொலைக்காட்சியில் போடும் கார்ட்டூன்களுடன் சமாதானம் தேடிக் கொள்ள வேண்டும். இவையணைத்தையும் பக்குவமடையாத சரவணன் செய்யவேண்டுமென்பதில்தான் ஆச்சர்யம்.

“டேய் சரவணா! ஏஞ்சிட்டியா? படுக்கய மடிச்சிட்டு வெளிய வா, அப்படியே போட்டுட்டு வந்துறாதெ”

சரவணன் எழுந்து திடமாக நின்று கொள்ள முயற்சி செய்தான். சோம்பலின் பிடி அவனை மேலும் தளர்த்தியது. வலது கையால் எட்டாத முதுகின் ஓர் ஓரத்தைச் சிரமப்பட்டுச் சொரிந்து கொண்டே படுக்கையிலிருந்து போர்வையை இழுத்தான். படுக்கையின் மேல் விரிப்பை ஒழுங்குப்படுத்தும் பொழுது, அறையின் வெண் கூரையைப் பார்த்துக் கொண்டான்.

“அப்பா தூங்கிக்கிட்டே இருப்பென்டா, திடிர்னு இந்த மேல இருக்கெ கூரைலாம் தொறந்துக்கும்…  வெளில இருக்கே நிலா, அதோட வெளிச்சம் அப்படியே கீழ எறங்கி வர, அதுலேந்து ஒரு வெள்ளக்கலரு தேவத வரும்யா… அதுதான் அப்பா மாரான்க்கு(Maran) ஒரு தடவ ஆள் எறக்கிட்டு வரும் போது பாத்த தேவத. அது மனுசாளுங்கள ஆபத்துல காப்பாத்துற தேவதயா… அது அப்பாகூட கூட்டாளி ஆச்சு. அதுக்கப்பறம் அது என்னய வந்து அப்பப்பெ கூட்டிட்டுப் போயிரும்யா, அத ஏத்திகிட்டு ஆளுங்கள காப்பத்த போயிருவன்யா. .  முடியாதுனு சொன்னா அவ்ளதான்”

கூரைகள் களையாமல் அப்படியேதான் இருந்தன. மறுபடியும் பார்வையைக் கீழே இறக்கிப் படுக்கையைச் சுத்தப்படுத்துவதில் தீவிரப்படுத்திக் கொண்டான். முயற்சி செய்து பார்த்தான். கண்களின் விளிம்பில் கண்ணீரின் உரசல்.

“இன்னும் என்னாடா பண்ற? ஏஞ்சிட்டியா இல்லயா? வீட்டுப் பாடலாம் இருந்தா குளிச்சிட்டு வந்து செய்யு”

அறையிலிருந்து வெளியேறி உடலில் சாத்தியிருந்த வானீர் ஒழுகிய போர்வையுடன் வரவேற்பறைக்குச் சென்று கொண்டிருந்தான். எப்பொழுதும் முனியாண்டியின் நீலக் கோடுகலுள்ள துணிப்பையுடன் ஒடுங்கி கிடக்கும் மேஜை அன்றும் காலியாக இருந்தது.  முனியாண்டி எப்பொழுதோ கழற்றிப் போட்டிருந்த வெள்ளைப் பணியன் மட்டும் நாற்காலியில் தொங்கிக் கொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் சரவணனுக்குத் திடிர் அழுகை, எல்லாவற்றையும் மீறிய வெளிப்பாடு. அத்துனைக் கணமானதாக இல்லாவிட்டாலும் அந்த அழுகை அவனை உடைத்துக் கொண்டு திமிறியது.

அந்தப் பணியனையும் எடுத்துக் கொண்டு குளியறையின் நுழைவாயிலுள்ள வக்குளில் போர்வையோடு சேர்த்துப் போட்டுவிட்டு அம்மாவைப் பார்த்தான்.

“ஏன்மா அப்பா எங்கமா போனாரு? இவ்ள நாளாச்சு?”

“அன்னிக்கு விடியக் காலைலே போய்ட்டாரு. . வேலயா”

“அப்பா எந்தத் தேவத கூடமா போய்ட்டாரு? நீ பாத்தியா?”

“அட இவன் ஒருத்தன், போய் குளிடா மொத”

அம்மாவுடைய முனகல் விரிந்து ஓய்வதற்குள், சரவணன் குளியலறையின் கதவை மூடிக் கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் வக்குளின் பக்கத்தில் அவனுடைய கலர் துண்டு வந்து விழும் சத்தம் கேட்கிறது. தொட்டியில் தண்ணீர் நிரம்பியிருந்தது. தொட்டியை எட்டிப் பார்த்தான். அவனுடைய பிம்பம், அதையும் கடந்து சிறியதாய் அல்லது ஒரு மையப் புள்ளியாய் முனியாண்டியின் தேவதைகளின் பிம்பமும் தெரிந்து கொண்டிருந்தன.

“அப்பா குளிச்சிகிட்டே இருப்பேன், திடிர்னு காணாமெ போயிருவேன்யா. .  நீ டியுசனுக்குப் போய்ட்டு வருவ, அப்பா இருக்க மாட்டேன், அது எப்படி? அதான்யா நம்ப வீட்டு பாத்ரூம்ல இருக்கெ தொட்டி? அதுலதான் அப்பா ஒரு மஞ்சக் கலரு தேவதயெ ஒளிச்சி வச்சிருக்கேன். அது ஒரு சீக்குப் பிடிச்ச தேவதயா. அப்பப்ப சீக்கு வந்துரும். அப்பறம் பயங்கரமா அழுந்துகிட்டு இருக்கும். அத நான்தான் கூட்டிக்கிட்டு கெந்திங் மலைக்குப்(Genthing Highlands) போயிட்டு வரனும். அங்கதான் அதுக்கு மருந்து இருக்குயா. அப்படியே அப்பாவெ வந்து கூட்டிட்டுப் போயிரும், ரெண்டு பேரும் இந்தத் தொட்டியில பூந்து அப்படியே போயிருவோம்”

சரவணன் மீண்டும் தொட்டியைப் பார்த்தான். அவன் மட்டும்தான் எக்கிக் கொண்டிருந்தது மிக நெருக்கத்தில் தெரிந்தது. தண்ணீரில் வீழ்ந்து கொண்டிருந்த நிழல் பிம்பம் ஒரு சிறிய இருளைப் பூசிக் கொண்டு நெளிந்து கொண்டிருந்தது.

குளித்து முடிக்கும்வரை தொட்டித் தண்ணீரில் எந்தச் சிறு சலனமும் ஏற்பட்டுவிடக் கூடாது. மறுகனமே ஒரு துள்ளலுடன் தொட்டியைப் பார்த்து ஏமாந்து போவான். மீண்டும் மீண்டும் அவன் மட்டும்தான் தொட்டித் தண்ணீரின் எதிர் பிம்பத்தில்.

“மா நான் டியுசனுக்குப் போலமா. .  அப்பா எப்பமா வருவாரு?”

“டியுசனுக்குப் போலயா? ஆமாண்டா, ஒனக்குக் காசு கட்டறது, என்னாத்துக்குத் தண்டத்துக்கா?”

“இல்லமா, அப்பா எந்தத் தேவத கூடமா போய்ட்டாரு?”

அவள் பதிலேதும் கூறாமல் சலித்துக் கொண்டே சமையலறைக்கு நகர்ந்துவிட்டாள். சரவணன் ஈர உடலுடன் அறைக்குள் நுழைந்ததும் கூரையை எட்டிப் பார்த்தான். ஜன்னல் விளிம்புகளைப் பார்த்தான். கட்டிலுக்கடியில் பார்த்தான். பிறகு 3ஆம் ஆண்டு பாடப் புத்தகங்களைத் தயார்ப்படுத்தி டியுஷன் புத்தகப் பையில் திணித்தான்.

அறையில் எந்தப் பக்கங்களிலும் சிறு சலனமாவது கேட்டு விடாதா என்ற ஏக்கம் சரவணனுக்கு மனம் முழுவதும் நிரம்பியிருந்தது. தேவதைகள் எந்த நேரத்திலும் சிறு சலனத்தையாவது உருவாக்கி விடக்கூடிய சாத்தியங்களை நம்பியிருந்தான். கதவைத் திறந்து கொண்டு சாலையில் நடந்து கொண்டிருக்கும் போது யாரோ தூரத்திலிருந்து அழைப்பது போலவே இருந்தது.

“ஐயா சரவணா! அப்பா தேவதைங்க கூட பறந்துகிட்டு இருக்கேன்யா, வந்துருவேன்”

 

2

இரவு மணி 8 இருக்கும். எந்தச் சலனமும் இல்லாத ஒரு சோர்வான பொழுது. முனியாண்டி உள்ளே நுழைந்து கொண்டிருந்தார்.

“சரவணன் தூங்கிட்டானா?”

“அவன் மொதயே தூங்கிட்டான். .  போன வியாழக்கெழமெ ஏதோ சொல்லிட்டுப் போய்ட்டிங்க போல, எங்கயோ கூட்டிட்டுப் போறேனு, ஒரே நச்சரிப்பு”

“சாப்ட்டானா?”

“சாப்ட்டான், அவன் கிட்ட கண்டதுயும் சொல்லி வைக்காதிங்க, தொல்ல தாங்கல”

நீலக் கோடுகலுள்ள துணிப்பையை எடுத்து மேஜையில் போட்டுவிட்டு, வெள்ளை பணியனைக் கழற்றி நாற்காலியில் தொங்கவிட்டார்.

“எத்தன நாள் ட்ரிப்ங்க? மாரானா?”

“இல்ல. கோலேஜ் பிள்ளிங்க, 3 நாளு யூ.கே.ஏம்ல அப்பறம் மலாக்கால ஒரு நாளு. நேத்து ராத்திரி புடுராயா போய்ட்டேன். அங்கேந்து 25 பேர ஏத்திகிட்டு சிரம்பான்ல டிரிப் அடிச்சிட்டுதான் வர்றேன். மறுபடியும் 12 மணிக்கு புடுராயா போகணும்”

“ஏங்க மறுபடியும்?”

“பஸ் பத்தலயாம். எக்ஸ்ட்ரா பஸ் தேவபடுதாம், சுங்கைப்பட்டாணிக்குத்தான்.12 மணிக்கு”

“எப்ப வருவீங்க? அப்படியே நம்ப மணிமாறன் வீட்டுக்குப் போய்ட்டு வாங்க”

“2 நாள் ஆவும் போல, அலோஸ்டாருக்குப் போயிட்டுதான் வருவேன்”

மிகவும் சாதாரணமாகப் பயணக் குறிப்புகளை வழக்கம் போல அவசரமாக ஒப்பித்துவிட்டு குளியலறைக்குள் நுழைந்ததும், சுவரில் ஏதோ கிறுக்கியிருந்ததைப் பார்த்தார். எழுத்துக் கூட்டித்தான் படித்தார்.

“அப்பாவோட சீக்கு தேவத” என்று பெரியதும் சிறியதுமான எழுத்தில் வர்ணப் பென்சிலில் எழுதியிருந்தது. இலேசான புன்முறுவலுடன் தொட்டித் தண்ணிரை சின்ன வாளியில் சேகரித்து உடலை நனைக்கும் போது, உடலின் பின்புறப் பாகத்தில் அனைத்திலும் பயங்கரமான எரிச்சல். பழகிப் போன அதே எரிச்சல்தான். சமாளித்துக் கொண்டு குளித்து முடித்ததும், அரை தூக்கத்தில் கவிதா மேஜையில் உணவைத் தயார்ப்படுத்திவிட்டு நாற்காலியில் சாய்ந்திருந்தது தெரிந்தது.

அறைக்குள் நுழைவதற்குக் கொஞ்சம் தயங்கினார் முனியாண்டி. சரவணன் நல்ல உறக்கத்தில் இருப்பதை உறுதி செய்து கொண்ட பின்னரே கால்களின் நகர்வை மெதுவாக்கிக் கொண்டே உள்ளே நுழைந்தார். அந்த ஜன்னல் கம்பிகளின் விளிம்புகளிலும் ஏதோ கிறுக்கியிருந்தது. சரியாகக் கவனிக்கவில்லை. உடைகளை எடுப்பதற்கு அலமாரியைத் திறந்தார். அலமாரியின் மறுமுனையில் இருந்த கண்ணாடியில் உடலைப் பார்த்துக் கொண்டார். அரை நிர்வானமாக, சோர்ந்து போயிருந்த தேகம். முதுகில் யாரோ ஏறி அமர்ந்து கொண்டிருப்பது போலவே இருந்தது. எவ்வளவு முயன்றும் உதற முடியாத ஒரு கணமான உணர்வு.

“அம்மா. .  ஆஆஆ” கால்களை நன்றாக உதறிக் கொண்டு நிமிர்ந்தார். இடுப்பை வளைத்து உடலைப் பலமாக நெளித்துக் கொண்டே சமையலறைக்குள் நுழைந்தார். கவிதா இன்னமும் அரை தூக்கத்தில்தான் கிடந்தாள்.

“கவிதா! கவிதா! பார்லி தண்ணி இருக்கா?”

“இருக்குங்க. யேன் ஒடம்பு சூடா?”

“எரிச்சல் தாங்கல போ. 7-8 மணி நேரம் ஏக்கோன்லே போனா, அதான். சுங்கை பீசி ஹைவேலெ எறங்கி, மூத்திரம் பேஞ்சப்ப, மஞ்சள் மஞ்சள்னு போது. எரிச்சலு தாங்கல போ”

பார்லி தண்ணீரைக் குடித்துவிட்டு, அவசரமாகவே சாப்பிட்டார். நீலக் கோடுகலுள்ள துணிப்பையில் புதிய மாற்று உடைகளை எடுத்துத் திணித்துக் கொண்டிருந்தாள் கவிதா. பிறகு முனியாண்டி உடலை நாற்காலியில் சிறிது நேரம் அமர்த்தி தூக்கத்தில் தொலைந்து போக தயார்ப்படுத்திக் கொண்டார். காற்றாடி அந்தரத்தில் சுழன்று கொண்டிருப்பது போல ஒரு பிரமையில் அமிழ்ந்து கொண்டிருந்தார். கால்களில் கருநாகங்கள் வீழ்ந்து ஊர்ந்து செல்வது போலவே இருந்தது.

வெகு சமீபத்தில் தெரு விளக்குகளும் காடுகளும் இருளும் அதையும் கடந்து யாரோ சிலர்

(45 பேருக்கு மேல்) முதுகில் அமர்ந்திருப்பது போலவே பிரக்ஞை. ஏதோ ஒரு பயங்கர மிருகம் ஓடிக் கொண்டிருக்கிறது. அதன் தலைகள் முனியாண்டியை உரசுகிறது. உடல் இரு பக்கங்களிலும் இடைவிடாது அசைந்து கொள்வதை விரும்புகிறது. கால்களை உதறிக் கொண்டே ஒரு திடிர் விழிப்பு.

“யேங்க என்னாச்சு?”

“ச்சே. .  ஏதோ கனவு போல”

மீண்டும் உறக்கம். கவிதா துணிப்பையைத் தயார்ப்படுத்திவிட்டு முனியாண்டியின் எதிரில் வந்து அமர்ந்தாள். உறக்கத்தில் ஆழ்ந்து போய் கிடந்த முனியாண்டியைப் பார்த்தாள். அவருடைய கைகள் மெல்லிய அதிர்ச்சியை எப்பொழுதும் சுமந்திருந்தன. சிறு அசைவுகள். உதறிக் கொள்கிறது. கால்கள் எதையோ மிதிக்கும் பாவனையில் மேலேயும் கீழேயும் தொடர்ந்து அசைந்து கொண்டிருக்கின்றன.

மறுபடியும் அவர் விழித்துக் கொண்ட போது, மணி 11 ஆகியிருந்தது. எழுந்து முகத்தைக் கழுவிக் கொண்ட பின் அறைக்குள் நுழைந்தார். சரவணன் உறங்கிக் கொண்டுதான் இருந்தான். ஆணியில் தொங்கிக் கொண்டிருந்த “பஸ் எக்ஸ்பிரேஸ் சேர்வீஸ்” என்ற எழுத்துகளைப் பதித்திருந்த நீல நிறச் சட்டையை எடுத்து மாட்டிக் கொண்டார்.

வேளியேறுவதற்கு முன், சரவணனை எட்டிப் பார்த்தார். ஆழ்ந்த உறக்கத்தில் தொலைந்து போயிருந்தான் சரவணன். முகத்திற்கு அருகில் போய் அவனுக்கு முத்தம் கொடுத்துவிட்டு, தலையைக் கோதிவிட்டார். சரவணனின் முகம் சோம்பலில் சுருங்கிப் போயிருந்தது. எழுந்து நிமிரும் போது முதுகில் அந்தக் கணமான உணர்வு. இன்னமும் விட்டு விலகாமல் கணத்துக் கொண்டிருந்தது.

“சரி கவிதா, போய்ட்டு வரேன். போனோனெ போன் போடறேன். கதவ சாத்திக்க. அப்பா வருவாரா?”

“நாளைக்கு வரேனு சொன்னாருங்க”

“ஒகே. அப்பனா பாத்துக்க. சரி…”

கதவை அடைத்துவிட்டு கவிதா உள்ளே நுழைந்து கொண்டிருந்தாள். இருளடைத்துக் கொண்டிருந்த வெளி. நீண்ட மௌனம் முனியாண்டி காணாமல் போய் கொண்டிருந்தார்.

 

3

சரவணன் மீண்டும் காலையில் எழுந்ததும், முனியாண்டியின் நீல நிறச் சட்டை தொங்கிக் கிடக்கும் ஆணி காலியாக இருந்ததைப் பார்த்தான். எழுந்து திடமாக நின்று கொள்ள முயற்சி செய்தான். ஜன்னலின் விளிம்பில் கைகளை வைத்துக் கொண்டே அகலத் திறந்து விரிந்து கிடக்கும் பச்சை வெளியைப் பார்த்தான்.

கவிதாவின் வழக்கமான அழைப்புகள் நிகழாதவரையில் சிறிது நேரம் சோம்பலின் பிடியில் தாராளமாகக் கிடக்கலாம் என்று விரும்பியிருந்தான்.

“டேய் ஏஞ்சிட்டியா? போர்வையெ மடிச்சி வச்சிட்டு வெளிய வா…இன்னிக்கும் அப்பா வந்துருவாறா வந்துருவாறானு கேட்டுத் தொல்ல பண்ணாதெ… தாத்தா கூட கடைக்குப் போயிட்டு வரலாம்”

சரவணனுக்குக் கோபம் பீறிட்டுக் கொண்டு வந்தது. அறையிலிருந்து வெளியேறி அவசரமாகக் குளியலறைக்குள் புகுந்து கதவைச் சாத்திக் கொண்டான். தண்ணீர் தொட்டியில் தலையை நுழைத்து வேகமாக கத்தினான்.

“ஏய் மஞ்சக் கலரு தேவத, அப்பாவெ இன்னிக்கு ஒழுங்கா அனுப்பி விட்டுடு….எங்க அப்பா வேணும்…விளங்குதா உனக்கு?”

இறுகி தளர்ந்து மேலெழும்பி தேவைதைகளாக மனிதனாக மனிதப் பிண்டமாக உருமாறி உருகுலைந்த சரவணன் அந்தத் தண்ணீர் தொட்டிக்குள் ஆத்திரத்துடன் குதித்தான்.

முடிவு

ஆக்கம்: கே. பாலமுருகன்

மலேசியத் தினத்தை முன்னிட்டு ஒரு நேர்காணல்- ‘ஒருவனுக்கு ஆபத்து என்றால் அவன் எந்த இனம் எனப் பார்த்துவிட்டு உதவும் பழக்கம் மலேசியர்களுக்கு இல்லை’ – கே.பாலமுருகன்

நேர்காணல்: செ.காஞ்சனா, 16.09.2016

 

3pwnrjll

காஞ்சனா: வணக்கம் ஐயா. இன்று மலேசிய தினம். எப்படி உணர்கிறீர்கள்?

கே.பாலமுருகன்: மிகவும் மகிழ்ச்சியான நாள். சுதந்திரத் தினம் முடிந்து சில நாட்களிலேயே அடுத்து மீண்டும் உற்சாகமான நாளாக இது அமைந்திருக்கிறது. இன்றைய காற்றில் என் முன்னோர்களின் குரலும் வியர்வையும் கலந்து வீசுகிறது.

காஞ்சனா: யார் உங்கள் முன்னோர்கள் எனச் சொல்கிறீர்கள்? உங்கள் தாத்தா பாட்டியா?

கே.பாலமுருகன்: என் தாத்தா பாட்டி என்றில்லை. இங்கு மலேசியா வந்து இப்படியொரு தலைமுறை இங்கேயே உருவாகக் காரணமாக இருந்தவர்களைச் சொல்கிறேன். எல்லாமே என் தாத்தா பாட்டிகள்தான். இதில் வேறுபாடில்லை.

காஞ்சனா: நீங்கள் ஓர் ஆசிரியர், எழுத்தாளர். உங்கள் பார்வையில் ஒற்றுமையை எப்படிப் பார்க்கிறீர்கள் எனத் தெரிந்து கொள்வதோடு எனது ஆய்விற்கும் இது உதவும். இந்த மலேசிய நாளில் மாணவர்கள் எப்படி உணர வேண்டும் என நினைக்கிறீர்கள்?

கே.பாலமுருகன்: வேறு என்ன சொல்லிவிட முடியும்? எல்லாரையும் போல நானும் ‘தேசப்பற்றை வளர்த்துக் கொள்ளுங்கள்’ எனச் சொல்லிவிடலாம்தான். ஆனால், அப்படியே விட்டுவிட முடியாது. உங்கள் ஆக்கச்சிந்தனையையும் ஆய்வுச் சிந்தனையையும் வளர்த்துக் கொள்ள வழிவகைகளைத் தேடுங்கள். உங்கள் திறனால் இந்த நாட்டுக்கு என்ன செய்ய முடியும் எனச் சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் ஒரு மலேசியர் என உணருங்கள். நம் தலைமுறையின் எதிர்காலம் இங்குத்தான் என நம்புங்கள்.

காஞ்சனா: அருமை. நம் நாட்டில் ஒற்றுமை இருக்கிறதுதானே?

கே.பாலமுருகன்: ஒற்றுமை இல்லாவிட்டால் இன்று நாம் சுதந்திரத் தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்க மாட்டோம். சுதந்திரம் பெற்ற நாட்டின் தேசிய அடையாளமாக நான் பார்ப்பது இன ஒற்றுமைகளைத்தான். எந்த நாட்டில் இன ஒற்றுமை இல்லையோ அந்த நாடு சுதந்திரம் பெறாது. புரட்சி என்பது ஒன்றுப்படுவதில்தான் பிறக்கிறது. ஆனால், பெற்ற சுதந்திரத்தை அடுத்து வரும் தலைமுறை ஒற்றுமையாய் இருந்து பாதுகாக்க வேண்டும் என்றே விரும்புகிறேன்.

காஞ்சனா: ஒற்றுமை உணர்வை எப்படி விதைக்கலாம் என நினைக்கிறீர்கள்?

கே.பாலமுருகன்: இப்பொழுதுள்ள மனிதர்களிடம் அதை விதைக்க நினைப்பதைவிட அடுத்த தலைமுறையான மாணவர்களிடம் இதை விதைப்பதைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். முதலில், வேறு இனத்தைச் சேர்ந்த பெரியவர்களைப் பார்த்தால் அவர்களை ‘ ஓய் சீனா, ஓய் இந்தியா, ஓய் மெலாயு’ என இனப் பாகுபாட்டைத் தூண்டும் வகையில் அழைக்காமல் இருக்க நாம் கற்பிக்க வேண்டும். எந்த இனத்தவராக இருந்தாலும் ‘ஹெலோ அங்கிள்’ என மரியாதையுடன் பண்புடன் அவர்கள் அழைக்க நாம் ஆய்த்தம் செய்ய வேண்டும். இதுதான் ஒற்றுமை உணர்வு. இங்கிருந்துதான் தொடங்குகிறது. அதை விடுத்து என்ன தத்துவம் பேசினாலும் ஆகாது. முதலில் நம் வீட்டுச் சிறுவர்கள் இந்த நாட்டில் வாழும் சக இனத்தவர்களை எப்படி மதிக்கிறார்கள் என்பதிலிருந்து இந்த நாட்டின் எதிர்க்கால சமூகத்தைக் கணிக்க வேண்டும். வரப் போகிற காலம் உலகமயமாக்கலின் தூண்டுதல்கள் அதிகம் இருக்கப் போகிறது.

காஞ்சனா: அவர்வர்களின் பண்பாடு இதுபோன்ற பண்புகளை வலியுறுத்தியும் ஏன் இத்தகைய சூழல் என நினைக்கிறீர்கள்?

கே.பாலமுருகன்: நான் ஓர் ஆசிரியன், மேலும் எழுத்தாளன். சமூக ஆய்வாளன் இல்லை. இருப்பினும் எனக்குள் ஒரு விமர்சகன் இருக்கிறான். அதன் போக்கில் சொன்னால், அனைத்துமே கல்வியின் வழி, கலாச்சாரத்தின் வழி சொல்லப்பட்டுள்ளன. ஆனால், நடைமுறைப்படுத்த ஒவ்வொரு குடும்பங்களும் தனித்த பங்கை வகித்தால் ஒற்றுமைமிக்க ஓர் எதிர்க்கால சமூகத்தை இப்பொழுதைப் போலவே நிலைநிறுத்த முடியும்.

காஞ்சனா: ஒரு சிறந்த குடிமகனை உருவாக்கக் குடும்பத்தின் பங்கு அதுதானா?

கே.பாலமுருகன்: நீங்கள் கேட்கும் கேள்வி ஒரு வழக்கமான பட்டிமன்ற கேள்வியைப் போல இருந்தாலும், குடும்பமும் ஒரு நெருக்கமான பங்கை வகிக்கிறது என்றுத்தான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு தனிமனிதனும் குடும்பம் என்கிற நிறுவனத்திலிருந்தே கல்வி என்கிற நிறுவனத்திற்குள் நுழைகிறான். மீண்டும் அவன் குடும்பத்திற்குள் வருகிறான். குடும்பம் என்பது அவனுக்கு ஒரு பாதுக்காப்பான பண்பாட்டு நிறுவனம். அங்கிருந்து அவன் எப்படிச் சமூகத்தோடு ஒத்து வாழ வேண்டும் என்பதைக் கற்க வேண்டும். இல்லையேல் அவன் சமூக விரோதியாகிவிடுவான்.

காஞ்சனா: இந்த இனிய நாளில் இது எங்களுக்கு ஒரு மகத்தான செய்தியாக உணர்கிறேன். மிக்க நன்றி ஐயா.

கே.பாலமுருகன்: இது மகத்தான செய்தியெல்லாம் இல்லை. ஒரு பொதுசமூகத்தின் விதிகளுக்கு உட்பட்ட கருத்துகள் தான். நான் ஆசிரியன் என்பதை மீண்டும் மீண்டும் நினைவுப்படுத்திக் கொண்டே உங்களுக்குப் பதில்களை அளிக்கிறேன்.

காஞ்சனா: அப்படியென்றால் ஓர் எழுத்தாளனாக நாட்டின் ஒற்றுமையைப் பற்றி உங்கள் கருத்தென்ன?

கே.பாலமுருகன்: அருமையான கேள்வி. சுற்றி வளைத்துவிட்டீர்கள். இனி தப்பிக்க முடியாது போல. எழுத்தாளனுக்கு ஒரு கருத்து ஆசிரியருக்கு ஒரு கருத்து என என்னால் இரண்டு மன்ங்களில் இயங்க முடியாது. ஒரு கருத்தைக் கீழே தள்ளிவிட்டு இன்னொரு கருத்தின் வழி தற்காலிகமாக வாழ முடியுமே தவிர மற்ற வித்தைகளெல்லாம் எனக்கு வராது. இருப்பினும், என் எதிர்ப்பார்ப்பாக ஒன்றைக் கூறலாம். ஒற்றுமை என்பது மனிதநேயத்துடன் தொடர்பில் இருக்க வேண்டும். ஒருவனுக்கு ஆபத்து என்றால் அவன் எந்த இனம் எனப் பார்த்துவிட்டு உதவும் பழக்கம் மலேசியர்களுக்கு இல்லை என்பதே நான் என் வாழ்நாள் அனுபவத்தில் உணர்ந்த உண்மை. இதுவே என் தேசியத்தின் மீது நான் வைத்திருக்கும் நம்பிக்கை. இது பரவலாக்கப்பட வேண்டும்; அதிகரிக்கப்பட வேண்டும் என்பதே ஒரு குடிமகனாக எனக்குள் இருக்கும் நம்பிக்கை விதை. ஒரே உள்ளம் ஒரே உணர்வு. வலி என்றால் எல்லாருக்குமே வலிதான். வலியிலும் இரத்தத்திலும் வேறுபாடுகள் இல்லை.

காஞ்சனா: உங்கள் வாழ்நாளில் கண்ட உண்மை என எப்படிச் சொல்கிறீர்கள்?

கே.பாலமுருகன்: சாலையில் மோட்டார் பழுதாகி நின்ற கணங்களில் உடனே மகிழுந்தை நிறுத்தி எனக்கு உதவிய இரண்டு மலாய் நண்பர்களை இன்றும் நினைவுக்கூர்கிறேன். மருத்துவமனைக்குச் செல்ல என் அப்பாவை அவர் காயங்களுடன் தூக்கி தன் காருக்குள் வைத்த என் பக்கத்து வீட்டுச் சீனரை இன்றும் மனத்தில் சுமந்து கொண்டிருக்கிறேன். கார் விபத்தாகி நடுவீதியில் நின்று கொண்டிருக்கும்போது ஓடோடி வந்து உதவிய நண்பர் ‘ஹென்ரியையும்’ டேக்சி அங்கிளையும் என்னவென்று சொல்வது? இப்படிப் பல சம்பவங்கள்; பல நிகழ்ச்சிகள். அனைத்திலும் சீனர், மலாய்க்காரர், தமிழர்கள் என நிறைந்திருக்கும் இந்த வாழ்க்கையில் நான் ஒற்றுமையை ஓர் இலட்சியமாகப் பார்க்கின்றேன். இக்கட்டான நிலையில் மனிதர்களை மதிப்பிட ஓர் இலகுவான மனம் வந்துவிடுகிறது.

காஞ்சனா: நெகிழ்ச்சியான நினைவுக்கூறல் ஐயா. மகிழ்ச்சி. என்னுடைய பயிற்றுப்பணிக்காக எடுக்கப்பட்ட இந்த நேர்காணலுக்கு உதவிய உங்களுக்கு நன்றி.

கே.பாலமுருகன்: பயிற்றுப்பணிகள் இலாப நோக்குடையது. ஆனால், அங்கு நீங்கள் பெறும் சிந்தனையை/அறிவை/அனுபவத்தை அப்படியே விட்டுவிடாதீர்கள். நன்றி. மலேசியத் தின வாழ்த்துகள்.

 

 

Train to Busan – கொரிய சினிமா / அறம் என்பது சமூகத்தின் கட்டமைக்கப்பட்ட பொதுவிதிகளுக்கு உடந்தையாவதாகும்

 

sohee-gong-yoo-jung-yoo-mi-choi-woo-sik_1466636416_af_org

“Selfish people are weak and are haunted by the fear of loss of control”

Selfishness is putting your goals, priorities and needs first before everyone else even those who are really in need.

By M.Farouk RadwanMSc.

மேற்சொல்லப்பட்டிருப்பதைப் போல சுயநலம் என்பது ஒரு வகையான மனநோய் தொடர்புடையது எனத் தெரிந்து கொள்ளலாம். இதைத்தான் இன்றைய உளவியல் பகுப்பாய்களும் நிறுவுகின்றன. ஆனால், சுயநலம் என்பது ஒரு தனிமனிதன் தொடர்பான சமூகத்தளத்தில் அவனைச் சம்மற்றக் குணமுடையவனாகக் கற்பிக்க முயலும் ஒரு பொதுப்பிரச்சனையாகவே காலத்திற்கும் பேசப்பட்டு வருகின்றது. ஒரு பொது சமூகத்திற்கு அநாவசியமற்ற அனைத்தையும் ஆராயாமல் அதை ஒரு தனிமனிதனிடமே கொண்டு போய் சுமத்துகிறது. ஆனால், அச்சமூகம் கோரும் அனைத்து பொது நடத்தைகளுடன் ஒரு தனிமனிதன் எல்லாம் வேளைகளிலும் 100% பொருந்திப் போக முடியாதவனாக மாறுகின்றான். அவன் அப்படிச் சமூகத்தின் பொதுவிதிகளுக்கு எதிராகச் செயல்படும்போது அவன் மனத்தை ஆராய்ந்து பார்க்காமல் அவனை விரோதியாக மட்டுமே சமூகம் உருவகிக்க முயல்கிறது. (திட்டமிட்டு செய்யப்படும் எதுவுமே இந்த விவாத்திற்குள் வராது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.)

இக்கொரிய படம் வழக்கமான ‘சோம்பி’ கதையாக இருப்பினும் ‘சுயநலம்’ என்கிற ஒரு விசயத்தை விவாதிக்கத் தூண்டுகிறது. குறிப்பாக, இக்கதையில் இரண்டு விதமான சுயநலவாதிகளைப் படம் அழுத்தமாகக் காட்டுகிறது. கதை நெடுக இவர்கள் பயணிக்கிறார்கள். ஒன்று கதையில் வரும் சிறுமியின் அப்பா மற்றொருவர் அந்த இரயிலில் பயணிக்கும் இன்னொரு வயதான மனிதர். இருவருக்கும் உள்ளே மனக்கூறுகள் களைக்கப்படுகின்றன. பயத்தால் ஆளப்படுகிறார்கள். பதற்ற நிலைக்குள் தள்ளப்படுகிறார்கள். நீரில் மூழ்கி உயிருக்குத் தத்தளித்துக் கொண்டிருக்கும் ஒருவரின் மனநிலையை உங்களால் கணிக்க முடியுமா? அது இருப்பை இழந்து தன் உயிரை மட்டுமே காப்பாற்றிக் கொள்ளப் போரிட்டுக் கொண்டிருக்கும். அத்தகைய ஒருவரைக் காப்பாற்ற நீங்கள் நெருங்கினால் என்ன ஆகும் எனச் சிந்தித்துப் பார்க்க இயல்கிறதா? உங்களை நீருக்குள் அமிழ்த்தி அவர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முயல்வார்கள். இதற்குப் பெயர் சுயநலம் என அத்தனை எளிதாகச் சொல்ல முடியுமா? ஆகவே, சுயநலம் என அறியப்படுகின்றவற்றில் இரண்டு வகைகள் உண்டு என எடுத்துக் கொள்ளலாம்.

உச்சமான பதற்ற நிலையில் உருவாகும் சுயநலம்/ மன உணர்வுகள் கொந்தளிப்புக்குள்ளாகும்போது ஏற்படும் நிலை.

உயிர் மீதான பயம் வந்துவிட்ட பிறகு இத்தகைய குணம் ஒரு மனிதனை அவன் மனத்தை மீறித் தொற்றிக் கொள்கிறது. அடிப்படையான மனக்கூறுகளை அவன் இழந்துவிடுகிறான். அடுத்து, சிந்திக்கும் வலு மெல்ல பலவீனம் அடைகிறது. அடுத்து, அவனை மூர்க்கமாக மாற்றும். அத்தகைய மூர்க்கத்திற்கு ஆளாகிவிட்ட ஒருவனிடம் பொதுநலமோ அன்போ இருக்கப் போவதில்லை. அவன் உணர்வது அவன் உயிர் மட்டுமே.

இரண்டாவது வகையான சுயநலம் பொது சமூகத்திற்கு எதிரானது. தன் மீது அவநம்பிக்கையை உருவாக்கி அவர்களின் செயல்களை ஆட்கொள்ளும் விதத்தைச் சேர்ந்தது. ஒரு பதற்றநிலை உருவாகியதும் முதலில் அதுபோன்ற மனிதர்கள் தன் உடமைகள், தன் இலட்சியங்கள், தன் குடும்பம் குறித்து அதீத கவலைக்குள்ளாகுவார்கள். அடுத்து, தன்னால் தன்னைக் காப்பாற்ற முடியுமா என்கிற சந்தேகத்திற்கு ஆளாகுவார்கள். அடுத்து, தன்னலத்தை முன்னிறுத்தி இயங்கத் துவங்கிவிடுவார்கள். இது அத்தனைக்கு பிறகும் அவர்கள் மனம் நிதானத்தை இழந்திருக்காது. ‘சூ ஒன்’ சிறுமியின் தந்தை இத்தகைய ரகத்தைச் சேர்ந்தவர். அதிக பதற்றத்திற்கு ஆளாகாவிட்டாலும் அருகில் இருக்கும் ஒரு வயதான பாட்டியைக் கூட காப்பாற்ற முனையமாட்டார்; கற்பனி பெண்ணின் உயிரைக் காப்பாற்ற தோணாது. ஆனால், படம் முடியும் தருவாயில் கொஞ்சம் கொஞ்சமாக அக்கதாப்பாத்திரம் தன் சுயநலத்தைக் கொன்றுவிட்டுத் தன் மகளின் இருப்பால் பொதுநலமான ஒரு கதாப்பாத்திரமாக மாறும். இறுதியில் அதுவே தன்னை அழித்தும் கொள்ளும்.

இதே படத்தில் வரக்கூடிய மிகவும் கொடூரமான சுயநலவாதியாகக் காட்டப்படும் இன்னொரு கதாபாத்திரம் படம் நெடுக பலரை சோம்பிக்குப் பலியாக்குவதைப் போன்று சித்தரிக்கப்பட்டிருக்கும். ‘சோம்பியைவிட’ மிகக் கொடூரமானவராக அந்தக் கதாப்பாத்திரத்தைதான் இயக்குனர் சித்தரித்திருப்பார். தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக எல்லோரையும் பலியிடத் தயாராகும் கொடிய மனிதராகக் கதையில் வருவார்.

‘சோம்பியை’ விட சுயநலம் மிகக் கொடிய நோய் என்பதைப் போல அக்கதைப்பாத்திரம் அமைந்திருக்கும். இது ‘எக்ஸ்ட்ரீம்’ நிலை என்றே சொல்லலாம். ஆனால், படத்தின் இறுதி காட்சியில் இத்தனை கொடூரமான மனநிலை கொண்டவராகக் காட்டப்படும் அவரைச் ‘சோம்பி’ கடித்துவிடுகிறது. கதாநாயகன் முன் மண்டியிட்டுத் ‘தன்னுடைய அம்மா வீட்டில் காத்திருப்பார், நான் வீட்டுக்குப் போக வேண்டும், என்னைக் காப்பாற்றுங்கள்’ என ஒரு குழந்தையைப் போல அழுவார். அத்தனை நேரம் மிகக் கொடியவனாகக் காட்டப்பட்ட அவர் ஒரு கணம் மனத்தைக் களைத்துப் போடுகிறார். சட்டென மனம் நெகிழ்கிறது.

 

train_to_busan_h_2016

நீங்கள் ஒரு சில சிறுவர்களைப் பார்த்திருப்பீர்கள். அவர்களின் விளையாட்டுப் பொருளை எடுத்துவிட்டால் கையில் கிடைக்கும் பொருளை நம் மீது விட்டெறிவார்கள். அவர்கள் வன்முறையாளர்கள் என அத்தனை எளிதாகச் சொல்லிவிட முடியுமா? தனக்கு ஐஸ்கிரீம் வேண்டும் என கீழே படுத்துப் புரண்டு அடம் பிடித்துக் கத்தும் குழந்தை சமூகத்திற்கு எதிரான மனம் கொண்டது எனச் சொல்லிவிட முடியுமா? சுயநலம் என்கிற ஒரு வகையான மனக்கூறு ஒருவனை அவனோடு தொடர்புடைய பதற்ற நிலையில் சிறுவனாக்கி விடுகிறது. தான் கரைக்கு ஏறியதும் இன்னொருவரை ஆற்றில் தள்ளிவிடும் சிறுவர்களை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். ஆனால், அது சிறுபிராயத்தில் இயல்பான நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. அதுவே, வளர்ச்சியடைந்து பக்குவமடைந்த மனிதன் அதையே செய்யும்போது அவனை மனநோயாளியாகப் பார்க்க உளவியல் உலகம் கற்பித்து வருகிறது.

இப்படம் சுயநலம் எனும் ஒரு விசயத்தைக் கதையின் ஓட்டத்தில் திணித்துவிடாமல் தனியாக எடுத்து விவாதிக்கும் அளவிற்குக் கவனப்படுத்தியிருக்கிறது என்றே நினைக்கிறேன். மேலும், கதையில் வரும் கற்பனிப் பெண்ணின் கணவர் பொதுநலம் வாய்ந்தவனாகச் சித்தரிக்கப்பட்டுள்ளான். சுயநலவாதிகளைப் பிரித்தறிவதற்காக அக்கதைப்பாத்திரம் படைக்கப்பட்டுள்ளது. மேலும், இத்தகைய மனிதர்களும் நம் மத்தியில் இருக்கவே செய்கிறார்கள். எவ்விதப் பதற்றநிலையிலும் தனக்கான மனக்கூறுகளை இழக்காமல் தன்னம்பிக்கையோடு தன்னலத்தையும் பிறர் நலத்தையும் பொருட்படுத்தும் மனிதர்கள் எங்குமே வியாபித்துள்ளார்கள். பெரும்பாலான உலகப் பேரிடர்களில்கூட இதுபோன்றவர்களைப் பார்க்க முடியும். சில வருடங்களுக்கு முன் சில்லியில் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2000 அடிக்கும் கீழ் 33 தொழிலாளிகள் சிக்கிக் கொள்கிறார்கள். அவர்களை எல்லோரும் உயிர்ப்பிழைக்கக் காரணம் அந்நிலையிலும் மிகச் சாமர்த்தியமாகச் சூழ்நிலையைக் கையாண்ட ஒருவர்தான். 2004ஆம் ஆண்டில் சுனாமி வந்தபோது ஏதோ ஒரு பகுதியில் குழந்தை ஒன்றை நாய் காப்பாற்றி மீண்டும் கரைக்குக் கொண்டு வந்த சம்பவத்தை எல்லோரும் அறிவோம். இதை என்ன பொதுநலம் எனச் சொல்லிவிட முடியுமா? அல்லது அதற்குப் பெயர் என்ன? அத்தகைய அவசர நிலையில் நாயின் எந்த உளவியல் அப்படியொரு காரியத்தைச் செய்யத் தூண்டியிருக்கும்? மனித மனம் விந்தையானது; ஆழமானது என்றால், இதை என்னவென்று சொல்வது?

இது சுயநலத்தைப் பற்றி ஆய்வு கிடையாது. ஆனால், சுயநலம் என்கிற ஒன்றைச் சமூகக் குற்றமாகப் பாவிக்காமல், அதனை மனத்தின் ஒரு செயல்பாடாக, மனத்தோடு தொடர்புடைய ஒரு சிக்கலாகப் பாவிக்கும் மனநிலைக்கு நாம் வரவேண்டும் என்பதற்காக ஓர் உரையாடல் மட்டுமே. சுயநலம் பிடித்த அனைத்து மனங்களிலும் வெறும் குரூரம் மட்டுமே இருந்துவிடாது. அதற்குள் அடம்பிடிக்கும் ஒரு சிறுவனும் குழந்தையும்கூட இருக்கலாம். தனக்குப் பிடித்தமான பொருளை அம்மா யாருக்காவது எடுத்துக் கொடுக்கும்போது அவர் மீது கோபங்கொண்டு பாயும் குழந்தையும்; தன் குட்டியை அதனிடமிருந்து எடுக்கும்போது சட்டென சீரும் பூனையும் அடிப்படையில் யார்?

  • கே.பாலமுருகன்

சிறுகதை: சற்று முன்பு சமூகம் கடத்தப்பட்டது

02stone-blog480

அன்று அப்படி நடக்கும் என யாருமே எதிர்ப்பார்க்கவில்லை. இரவோடு இரவாக அந்தக் கடத்தல் சம்பவம் நடந்துள்ளது. இரவில் தூங்கிக் கொண்டிருக்கும்போது அச்சமூகத்தை அப்படியே யாரோ தூக்கிக் கொண்டு வந்து நடு வீதியில் வைத்துவிட்டார்கள். புதிய நாகரிகம், புதிய இடம், புதிய மக்கள். சமூகத்தில் இருந்த அத்தனை பேரும் காலையில் எழுந்ததும் திடுக்கிட்டுப் போனார்கள். ஒருவருக்கும் என்ன செய்வதென்றும் தெரியவில்லை. யார் தம்மை இப்படித் தூக்கி வந்து போட்டிருப்பார்கள் என்றும் அவர்களுக்கு விளங்கவில்லை.

சமூகம் வெளியே வந்து பார்த்தது. மொழியும் புரியவில்லை. அங்கிருந்தவர்கள் அவரவர் வேலையைக் கவனித்துக் கொண்டிருந்தனர். இப்படியொரு காலையை அச்சமூகம் அனுபவித்ததே இல்லை. ஏறக்குறைய அங்கிருந்த யாவரும் சமூகத்திற்கு அறிமுகமே இல்லை. அந்த இடம் விநோதமாகத் தென்பட்டது. எல்லோரும் தனித்தனியாகத்தான் நடமாடிக் கொண்டிருந்தார்கள். யாரும் யாருடனும் பேசிக் கொள்ளாதது சமூகத்திற்கு ஆச்சர்யமாக இருந்தது.

சமூகம் மெல்ல நகர்ந்து நகர்ந்து அவர்கள் வேலை செய்யும் இடங்களைக் கண்ணோட்டமிட்டது. எல்லோரும் புன்னகையுடன் அவரவர் வேலையைச் செய்து கொண்டிருந்தனர். சமூகம் கண்கள் விரிய அக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தது. கடைகளில் பொருள்கள் விற்று கொண்டிருந்தவர்களை நோக்கி சமூகம் அடியெடுத்து வைத்தது.

அமைதியாக எல்லோரும் பொருள்கள் வாங்கிக் கொண்டிருந்தனர். ஒரு சிலர் தனித்தனியாகக் கடைகளுக்கு வெளியில் உள்ள நாற்காலிகளில் உட்கார்ந்து வாசித்துக் கொண்டிருந்தனர். சமூகத்திற்கு வயிறு பிரட்டிக் கொண்டு வந்தது. சமூகம் அதிக சோர்வாக இருந்ததால் அப்பெரிய கட்டிடத்தின் ஓரம் போய் மீண்டும் உறங்கத் துவங்கியது. அப்படித் தூங்கும்போது சமூகமே ஒட்டுமொத்தமாக ஒரு கனவு கண்டது. அக்கனவு ஒரு காலை பொழுதில் ஆரம்பிக்கிறது.

சாலை நெரிசல் பொறுக்காமல் சமூகம் மனத்தில் வெடித்துப் பொங்குகிறது. அந்நேரம் அழைப்பு வருகையில் இரண்டு பொய்கள், மூன்று பேரிடம் கத்தல் கதறல் எல்லாம் முடிந்து நெரிசலில் சாலையைக் கடக்கும் பள்ளிக்கூட சிறுமியைப் பார்த்து சாபமிடுதல். பொன்மொழிகள் பிதுங்கி பிய்ச்சியடிக்கும் அந்த இனிமையான காலையைத் தூக்கி முதுகில் சுமந்து கொண்டு அலுவலகம் சேர்ந்தால் பிய்த்தலும் பிடுங்கலுமாகக் கூட்டம். காதிற்குள் யாரோ சங்கூதி சங்கூதி செல்வதைப் போன்ற இனிமையான இரைச்சல்களுடன் வேலையை முடுக்கினால் பக்கத்து வேலையாள் “ ஏய் நான் செல்பி போட்டுருக்கேன் பேஸ்புக்குல, மறந்திறாம லைக் போடு தெரியுமா?” என்கிற குரல்.

வேலைப்பளு மண்டைக்குள் சந்தோசமாக மணியாட்ட இந்தப் பக்கம் திரும்பினால், “ஏய் உன் பக்கத்துல இருக்காலே அவக்கிட்ட பார்த்து இருந்துக்கோ. நெறைய பேர வச்சிருக்கா. அவ பேஸ்புக்குல போய் பாரு தெரியும்…” இன்னொரு குரல். மண்டைக்குள் ஆட்டிக் கொண்டிருந்த மணியை யாரோ எடுத்து இப்பொழுது அதிலேயே இனிமையான தாளம் போடுவது போல இருந்தது. மேலேயிருக்கும் ஒரு கோப்பை எடுக்கலாம் என நிமிர்ந்தால், “ஏய்! உன்கூட உக்காந்துருக்குங்களே ரெண்டுமே பயங்கர ஜால்ரா. முதலாளிக்கிட்ட உன்னைப் பத்தியே போட்டுக் கொடுக்குதுங்க, பாத்து இருந்துக்கோ,” என்கிறது எதிர்ப்புறக் குரல். ஆனந்த வெள்ளம் உள்ளுக்குள் பெருக்கெடுத்து பொங்கி வழிந்தது.

சட்டென்று அலுவலகத்தில் ஒரே பரப்பரப்பு. யாரோ கழுத்தறுப்பட்டுக் கிடக்கும் புகைப்படத்தை எல்லோரும் மாற்றி மாற்றி பார்த்து ஆரவாரம் செய்து கொண்டிருந்தனர். காலை மணி 8.45 தான் இருக்கும். இன்னும் சூரியன்கூட சூடாகவில்லை. வெளியேறலாம் என நினைக்கும்போது, “என்னடா இது? கழுத்து அறுந்துருக்குனு சொல்றீங்க. ஆனால், இரத்தமே இல்ல. இரத்தத்தைப் பாத்தாதான் நம்புவேன்,” என ஒலிக்கிறது ஒரு தடித்த குரல். காலை பொழுது இனிதே மங்களகரமாகியது

மண்டைக்குள் உருளும் காயு பாலாக் பெருங் கட்டைகள் போல மகிழ்ச்சி அடுக்கியடுக்கி விளையாடிக் கொண்டிருந்தபோதே வெளியேறலாம் என்றால், “ஏய்! இங்கப் பாரு. இவங்கள உனக்குத் தெரியுமா? ரெண்டு பேரும் கிஸ் அடிக்கிற அழகைப் பாரு. எவனோ தூரத்துலேந்து படம் எடுத்துட்டான்,” என்கிறது ஓர் ஆன்மீகக் குரல். அப்பொழுதுதான் பரவச வெள்ளம் மனத்தை ஆற்றுப்படுத்தி அன்றைய காலையைக் குதுகலமாக்கியது. பறந்துபோய் எல்லோர் அறைக்குள்ளும் ஒளிந்து காதுகளைக் கழட்டி அங்கேயே நட்டு வைக்கலாம் என்கிற பரவசம் மனத்தை அழுத்தியது.

கடத்தப்பட்ட சமூகம் சட்டென்று விழித்தது. எதிரில் இருந்த யாவரின் கையிலும் கைப்பேசி இல்லை. அவரவர் யாருடனும் பேசிக்கொள்ளாமல் அவரவர் வேலையைக் கவனித்துக் கொண்டிருந்தனர். எல்லோரும் ஒரு மிக மோசமான புன்னகையை மட்டும் சுமந்து கொண்டிருந்தனர். கோபமடைந்த சமூகம் விழித்தெழுந்தது. சட்டென எதிரில் வந்த ஒருவனை அடித்து அவன் ஆடைகளைக் களைந்தது. கையில் வைத்திருந்த கைப்பேசியில் அந்தச் சண்டையைச் சமூகம் பதிவு செய்து அனைவருக்கும் அனுப்பியது.

சமூகம் காத்திருந்த பரப்பரப்பு கிடைத்ததும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தது. மேலும், பரப்பரப்பு போதாமல் சமூகம் அடுத்தடுத்தவர்களை நோக்கி பாய்ந்தது.

‘சமூகம்டா! வாழுங்கடா! The social zombie is return”

 

  • கே.பாலமுருகன்

சொற்களின் பொறியியளாளர்களே கவிஞர்கள் – கவிதை குறித்த உரையாடல் பாகம் 2

கவிதை ஒரு போர் என கடந்த நூற்றாண்டில் ஒரு மனப்பழக்கம் யாருக்கோ தோன்றியிருக்கலாம். அது ஒரு தொற்று நோயாக எல்லோருக்கும் பரவி உலகம் முழுவதும் இந்த நூற்றாண்டுவரை கவிதையை கூக்குரலின் / கூச்சலின் ஆயுதமாகப் பாவித்துக் கொண்டிருக்கிறார்களோ என நினைக்கத் தோன்றுகிறது.

சே குவாரின் கோபம் புரட்சியானது; பாரதியாரின் கோபம் கவிதையானது என எங்கேயோ வாசித்ததாக நினைவு. ஆக, கவிதை உருக்கொண்டு வெளிவர ஓர் உணர்வு தேவையானதாக இருந்திருக்கிறது. அது கோபமாக இருக்கலாம்; கவலையாக இருக்கலாம்; ஆனால், நிச்சயமாக கவிதை தனக்கான  சொற்களைத் தேடி உருப்பெற்று கொள்ள உணர்வு நூதனமான பங்காற்றுகிறது என்றே சொல்லலாம். ஆகவேதான் கவிதைப்போர் எனப் பலர் சொல்லிக் கேட்டிருப்போம். சொற்களைக் கொண்டு செய்யும் போர் கவிதை எனும் ஒரு வாதம் காலம் காலமாக புரையோடிக் கிடக்கின்றது. ஆனால்,  இன்றைய நவீன சூழல் கவிதையை உணரும் தளம் வேறிடத்திற்கு மாறியுள்ளது.

‘கவிதைக்குள் ஒரு சொல் புதியதாகத் திறந்துவிடப்படுகிறது’ – ஜெயமோகன்.

எல்லாம் சொல்லுக்கும் அது புழங்கிற மொழி சார்ந்த கலாச்சார கட்டுமானங்களும் படிமங்களும் இருக்கவே செய்யும். ஒவ்வொரு சொல்லும் நாம் அறியப்படுகிற விதம் அதன் நுட்பமான மதம், அரசியல், பண்பாடு சார்ந்ததாகவே இருக்கும். அதன் பின்புலத்தைக் கொண்டே ஒரு சொல்லுடன் நாம் உறவு கொள்கிறோம்; புரிதலை உருவாக்கி வைத்திருக்கிறோம்.

‘சொக்கட்டான்/பகடை’ என்றதும் எனக்கு ஞாபகத்திற்கு வருவது மகாபாரதம்தான். மகாபாரதத்தின் உச்சக்கட்டம் பஞ்ச பாண்டவர்கள் சூதாட்டத்தில் தோற்பதுதான். அதுதான் மகாபாரதப் போரின் துவக்கம். எப்பொழுது சொக்கட்டான்/பகடை என்ற சொற்களைக் கேட்டாலோ வாசித்தாலோ உடனடியாக மகாபாரதம் என்கிற கதை மனத்திற்குள் சட்டென வந்து உட்கார்ந்து கொள்கிறது. அச்சொல் அறியப்படும் சூழலோடு இதுபோன்ற பண்பாடு சார்ந்த, நிலம் சார்ந்த கதைகள்/சம்பவங்களோடு ஏதாகிலும் ஒருவகையில் ஓர் அர்த்தப்பாடுகளைக் கொண்டிருக்கும். ஆனால், கவிதை எனும்போது அச்சொல் கொண்டிருக்கும் அக்குறிப்பிட்ட மொழியின் பண்பாடுகளையும், மத சாயல்களையும் இன்னும் பலவற்றையும் உடைத்துக் கொண்டு புது அர்த்தம் கொள்வதாகவே நவீன இலக்கியம் கவிதையின் மீதான விமர்சனமாக முன் வைக்கிறது.

எடுத்துக்காட்டு:

முதன் முதலான

உன் சிறகசைப்பில்

உனது ஆண் பொருத்திய

விலை அட்டையை

உடைக்கிறாய்.

  • மேற்கண்ட கவிதை வரியில் சிறகசைப்பு எனும் சொல்லின் மீது சமூகம் கொண்டிருக்கும் பொருள் ஒரு பறவையின் சிறகசைப்பைக் குறிக்கும். உலகைப் பற்றி அறியும்போது பறவை, அதனுடைய சிறகுகள் எனும் அர்த்தங்கள் ஒரு கருத்தாக நமக்குள் பதிகின்றன. ஆனால், இவ்விடத்தில் ஒரு கவிஞன் அச்சொல்லுக்குப் புதிய வாழ்க்கையைக் கொடுக்கிறான்; புதியதொரு பிறப்பை அளிக்கிறான். ஏற்கனவே இருக்கும் / பல காலங்களாகப் புழங்கி வரும் ஒரு சொல்லை எடுத்து மறு கண்டுப்பிடிப்பு செய்கிறான். இவ்வித்தைக் கவிஞர்களுக்கே உரியது. ஆகவேதான், கவிஞன் என்பவர் சொல்லால் போர் செய்பவன் அல்ல; அவன் சொல் பொறியியிளாளன்- word engineering.

பல காலங்களாக எந்தப் பயன்பாடும் இல்லாமல் தேங்கிக் கிடக்கும், பழசாகிவிடும் சொற்களைத் தேடி எடுத்து அதனை உலுக்கி நிகழ்காலத்திற்கேற்ப புத்துயிர் கொடுப்பவன்தான் கவிஞன் என நவீன உலகம் கவிதைக்கு இன்னொரு தளம் உருவாக்குகிறது. மதம், சாதி, சட்டம், பண்பாடு, அரசியல் என பல்வேறான நிலைகளில் அடக்கியாளப்படும் ஒரு சொல்லின் மீதான பாரம்பரியான சாயத்தைக் களைத்தெறிவதுதான் நவீன கவிதையின் செயல்பாடு.

எடுத்துக்காட்டு:

வாருங்கள்
கொலை செய்வோம்:

இதற்காக நீங்கள்

கொலையாளி என அழைக்கப்பட்டாலும்

பரவாயில்லை.

கொலை செய்து மகிழ்வோம்.

நம் பயங்களை கோழைத்தனங்களை

இன்றே கொலை செய்வோம்.

 

  • இக்கவிதை ஆரம்பத்தில் கொலை என்கிற மிகவும் வன்மமான, கொடூரமான ஒரு சொல்லைத் தனக்கான சொல்லாக எடுக்கிறது. ஆனால். அச்சொல்லை ஒரு சமூகம் புரிந்து வைத்திருக்கும் அர்த்தப்பாடுகளிலிருந்து அச்சொல்லுக்கு இக்கவிதை புதியதொரு இடத்தை/ புரிதலை அளிக்கிறது.

 

‘கொலை செய்யாதீர்’ என ஒரு குரல் ஓங்கி சத்தமாக ஒலிக்கும்போது அச்சொல் வேறு எந்தப் படிமத்தையும் குறியீட்டையும் கொண்டிராதபோது அது ஒரு கவிதையாக அல்லாமல்; ஒரு சத்தமாக, ஒரு பிரச்சார வெடிப்பாக மட்டுமே எதிர்க்கொள்ள நேர்கிறது.

கொலை என்கிற ஒரு குற்றத்தின் மீது ஒரு கவிஞன் புனையும் கவிதை ஒரு கூக்குரலாக மட்டும் ஒலிக்காமல் அடுத்த ஒரு நூற்றாண்டுக்குக் கொலை பற்றி பேச விளையும் யாவரையும் உலுக்கி எடுக்கப் போகும் குற்றவுணர்ச்சியின் அடிநாவாக இருக்கப் போகும் ஒரு சொல்லைக் கவிஞன் கண்டறிய வேண்டியக் கடப்பாடடுன் கவிதை உலகில் நிற்கிறான்.

எடுத்துக்காட்டு:

ஒரு கொலைக்குப் பின்

தாராளமாக

நீங்கள் புன்னகைக்கலாம்;

மார்த்தட்டிக் கொள்ளலாம்.

ஆனால், வீடு திரும்பும்போது

தயவு செய்து

பிணங்களை மிதிக்காதீர்கள்.

கடைசி சடங்குகளுக்கு

அவை தேவைப்படுகின்றன.

  • இதுதான் சிறந்த உதாரணம் என்றோ அல்லது முன்சொன்ன கூற்றுகளுக்கு உகந்த கவிதை என்றோ சொல்ல முன்வரவில்லை. இக்கவிதை கொலையைப் பற்றி பேசவில்லை; கொலையின் குரூரமான ஒரு பக்கத்தை/ விளைவை கோபத் தொனியைக் கொன்றுவிட்டு மிக இயல்பாகப் பேசுகிறது. ஆனால், அதற்குள் சொல்ல இயலாத அழுத்தமான ஓர் உணர்வு கரைந்து கிடக்கிறது. இதற்கு மேல் என்ன என்கிற தோரணையில் கையை விரித்து வானத்தைப் பார்த்து மரணத்தை மண்டியிட வைக்கிறது.

 

தொடரும்-

கே.பாலமுருகன்

குறிப்பு: நன்றி, ஜெயமோகன் வலைத்தலம்.

 

கைவிடப்பட்ட ஒரு பேனாவின் கதை

art-ink-pen-23590017

அரைமயக்கத்தில் இருக்கும் சிறு பட்டணத்தில் கைவிடப்பட்ட ஒரு பேனாவின் கதை இது. சரியாக மாலை 4.00 மணியைப் போல ஒரு சீன சாப்பாட்டுக் கடையில் அப்பேனா கைவிடப்பட்டது. ‘பார்க்கர்’ பேனா. மூடியில் ஒரு சிறிய கோடு. உடலில் பாதி மை மிச்சமாக இருந்திருக்கக்கூடும். யார் அதனுடைய முதலாளி என்றெல்லாம் தெரியவில்லை.

சப்பாட்டுக் கடையின் மிச்ச உணவை எடுக்க வரும் ஒரு கிழவர் அங்கே வந்தார். வெகுநேரம் அந்தப் பேனா இருந்த மேசையையே கவனித்துக் கொண்டிருந்தார். அவர் அப்படியொரு விலையுயர்ந்த பேனாவைத் தொட்டுப் பார்த்ததே இல்லை. அக்கடையில் அவருக்கு எடுக்க அனுமதிக்கப்பட்டது மிச்ச மீதிகள் மட்டுமே. சாப்பாட்டு தட்டின் அருகே இருந்த அந்தப் பேனாவின் மீதான கவனம் கிழவருக்குக் குறையவே இல்லை.

எப்படியும் எடுத்து விடலாம் என்று நினைத்து சரியாக மாலை 5.30க்கு அப்பேனாவின் மீது கிழவர் கையை வைத்தார். அவர் பின்னந்தலையில் ஒரு தடிப்பான கை விழுந்தது. அடுத்த கணம் அந்தக் கிழவர் நாற்காலியில் மோதி கீழே விழுந்தார். கடை முதலாளி கத்தினான். ஆள் இருந்ததால் தன் கோபத்தை அடக்கிக் கொண்டு உள்ளே போய்விட்டான். அந்தப் பேனா அங்கேத்தான் இருந்தது. தன் தோளில் தொங்கிக் கொண்டிருந்த ஒரு நெகிழிப் பையில் மிச்சமாகக் கிடைத்த நாசி ஆயாம் சோற்றை உள்ளே கொட்டிவிட்டு ஒருமுறை அப்பேனாவை ஏக்கத்துடன் பார்த்தார் கிழவர்.

இரவு மணி 8.00 வரை அப்பேனா மேசையிலேயேதான் இருந்தது. அதன் பிறகு அம்மேசைக்கு யாரும் வந்ததாகவும் தெரியவில்லை. சீனன் கடையை 10.00 மணிக்கு அடைத்துவிடுவான். அதுவரை அமைதியாக இருந்த கடை சட்டென இரவு வேலை முடிந்து வந்தவர்களால் பரப்பரப்பானது. அந்தப் பேனா இருந்த மேசையில் இரண்டு வெவ்வேறு தம்பதிகள் வந்து அமர்ந்தனர்.

ஆளுக்கொரு ‘சூப்’, கோழிப் பிரட்டல் எனத் தொடர்ந்து உணவுகள் வந்து கொண்டே இருந்தன. வலது பக்கத்தில் இருந்த சீனத்திக்கு அப்பேனா பிடித்திருந்தது. அதன் உடல், கருப்பு நிறம், மஞ்சள் பல்ப் ஒளி பட்டு அது உடலில் ஏற்படும் பளப்பளப்பு என அப்பேனாவைத் திருட்டுத்தனமாகக் கவனித்துக் கொண்டிருந்தாள். அது அங்கிருக்கும் இன்னொரு தம்பதியினரின் பேனா என அவள் நம்பினாள். வெறுமனே பார்த்திருந்துவிட்டு அவர்களும் எழுந்து போய்விட்டார்கள்.

கடையை அடைக்கும் நேரம் நெருங்கியது. கடையில் வேலை செய்யும் இந்தோனேசியா பெண் மேசைகளைத் துடைக்கத் துவங்கினாள். ஆகக் கடைசியாக அப்பேனாவின் மீது உட்கார வந்த ஈயைத் தான் வைத்திருந்த மேசை துணியாள் சட்டென கோபம் பொங்கியவளாக அடித்து விரட்டிவிட்டு மீதம் இருந்த மேசையை மௌனமாகத் துடைக்கத் துவங்கினாள். கைவிடப்பட்ட அப்பேனா அப்படியே இருந்தது.

– கே.பாலமுருகன்