சொற்களின் பொறியியளாளர்களே கவிஞர்கள் – கவிதை குறித்த உரையாடல் பாகம் 2

கவிதை ஒரு போர் என கடந்த நூற்றாண்டில் ஒரு மனப்பழக்கம் யாருக்கோ தோன்றியிருக்கலாம். அது ஒரு தொற்று நோயாக எல்லோருக்கும் பரவி உலகம் முழுவதும் இந்த நூற்றாண்டுவரை கவிதையை கூக்குரலின் / கூச்சலின் ஆயுதமாகப் பாவித்துக் கொண்டிருக்கிறார்களோ என நினைக்கத் தோன்றுகிறது.

சே குவாரின் கோபம் புரட்சியானது; பாரதியாரின் கோபம் கவிதையானது என எங்கேயோ வாசித்ததாக நினைவு. ஆக, கவிதை உருக்கொண்டு வெளிவர ஓர் உணர்வு தேவையானதாக இருந்திருக்கிறது. அது கோபமாக இருக்கலாம்; கவலையாக இருக்கலாம்; ஆனால், நிச்சயமாக கவிதை தனக்கான  சொற்களைத் தேடி உருப்பெற்று கொள்ள உணர்வு நூதனமான பங்காற்றுகிறது என்றே சொல்லலாம். ஆகவேதான் கவிதைப்போர் எனப் பலர் சொல்லிக் கேட்டிருப்போம். சொற்களைக் கொண்டு செய்யும் போர் கவிதை எனும் ஒரு வாதம் காலம் காலமாக புரையோடிக் கிடக்கின்றது. ஆனால்,  இன்றைய நவீன சூழல் கவிதையை உணரும் தளம் வேறிடத்திற்கு மாறியுள்ளது.

‘கவிதைக்குள் ஒரு சொல் புதியதாகத் திறந்துவிடப்படுகிறது’ – ஜெயமோகன்.

எல்லாம் சொல்லுக்கும் அது புழங்கிற மொழி சார்ந்த கலாச்சார கட்டுமானங்களும் படிமங்களும் இருக்கவே செய்யும். ஒவ்வொரு சொல்லும் நாம் அறியப்படுகிற விதம் அதன் நுட்பமான மதம், அரசியல், பண்பாடு சார்ந்ததாகவே இருக்கும். அதன் பின்புலத்தைக் கொண்டே ஒரு சொல்லுடன் நாம் உறவு கொள்கிறோம்; புரிதலை உருவாக்கி வைத்திருக்கிறோம்.

‘சொக்கட்டான்/பகடை’ என்றதும் எனக்கு ஞாபகத்திற்கு வருவது மகாபாரதம்தான். மகாபாரதத்தின் உச்சக்கட்டம் பஞ்ச பாண்டவர்கள் சூதாட்டத்தில் தோற்பதுதான். அதுதான் மகாபாரதப் போரின் துவக்கம். எப்பொழுது சொக்கட்டான்/பகடை என்ற சொற்களைக் கேட்டாலோ வாசித்தாலோ உடனடியாக மகாபாரதம் என்கிற கதை மனத்திற்குள் சட்டென வந்து உட்கார்ந்து கொள்கிறது. அச்சொல் அறியப்படும் சூழலோடு இதுபோன்ற பண்பாடு சார்ந்த, நிலம் சார்ந்த கதைகள்/சம்பவங்களோடு ஏதாகிலும் ஒருவகையில் ஓர் அர்த்தப்பாடுகளைக் கொண்டிருக்கும். ஆனால், கவிதை எனும்போது அச்சொல் கொண்டிருக்கும் அக்குறிப்பிட்ட மொழியின் பண்பாடுகளையும், மத சாயல்களையும் இன்னும் பலவற்றையும் உடைத்துக் கொண்டு புது அர்த்தம் கொள்வதாகவே நவீன இலக்கியம் கவிதையின் மீதான விமர்சனமாக முன் வைக்கிறது.

எடுத்துக்காட்டு:

முதன் முதலான

உன் சிறகசைப்பில்

உனது ஆண் பொருத்திய

விலை அட்டையை

உடைக்கிறாய்.

  • மேற்கண்ட கவிதை வரியில் சிறகசைப்பு எனும் சொல்லின் மீது சமூகம் கொண்டிருக்கும் பொருள் ஒரு பறவையின் சிறகசைப்பைக் குறிக்கும். உலகைப் பற்றி அறியும்போது பறவை, அதனுடைய சிறகுகள் எனும் அர்த்தங்கள் ஒரு கருத்தாக நமக்குள் பதிகின்றன. ஆனால், இவ்விடத்தில் ஒரு கவிஞன் அச்சொல்லுக்குப் புதிய வாழ்க்கையைக் கொடுக்கிறான்; புதியதொரு பிறப்பை அளிக்கிறான். ஏற்கனவே இருக்கும் / பல காலங்களாகப் புழங்கி வரும் ஒரு சொல்லை எடுத்து மறு கண்டுப்பிடிப்பு செய்கிறான். இவ்வித்தைக் கவிஞர்களுக்கே உரியது. ஆகவேதான், கவிஞன் என்பவர் சொல்லால் போர் செய்பவன் அல்ல; அவன் சொல் பொறியியிளாளன்- word engineering.

பல காலங்களாக எந்தப் பயன்பாடும் இல்லாமல் தேங்கிக் கிடக்கும், பழசாகிவிடும் சொற்களைத் தேடி எடுத்து அதனை உலுக்கி நிகழ்காலத்திற்கேற்ப புத்துயிர் கொடுப்பவன்தான் கவிஞன் என நவீன உலகம் கவிதைக்கு இன்னொரு தளம் உருவாக்குகிறது. மதம், சாதி, சட்டம், பண்பாடு, அரசியல் என பல்வேறான நிலைகளில் அடக்கியாளப்படும் ஒரு சொல்லின் மீதான பாரம்பரியான சாயத்தைக் களைத்தெறிவதுதான் நவீன கவிதையின் செயல்பாடு.

எடுத்துக்காட்டு:

வாருங்கள்
கொலை செய்வோம்:

இதற்காக நீங்கள்

கொலையாளி என அழைக்கப்பட்டாலும்

பரவாயில்லை.

கொலை செய்து மகிழ்வோம்.

நம் பயங்களை கோழைத்தனங்களை

இன்றே கொலை செய்வோம்.

 

  • இக்கவிதை ஆரம்பத்தில் கொலை என்கிற மிகவும் வன்மமான, கொடூரமான ஒரு சொல்லைத் தனக்கான சொல்லாக எடுக்கிறது. ஆனால். அச்சொல்லை ஒரு சமூகம் புரிந்து வைத்திருக்கும் அர்த்தப்பாடுகளிலிருந்து அச்சொல்லுக்கு இக்கவிதை புதியதொரு இடத்தை/ புரிதலை அளிக்கிறது.

 

‘கொலை செய்யாதீர்’ என ஒரு குரல் ஓங்கி சத்தமாக ஒலிக்கும்போது அச்சொல் வேறு எந்தப் படிமத்தையும் குறியீட்டையும் கொண்டிராதபோது அது ஒரு கவிதையாக அல்லாமல்; ஒரு சத்தமாக, ஒரு பிரச்சார வெடிப்பாக மட்டுமே எதிர்க்கொள்ள நேர்கிறது.

கொலை என்கிற ஒரு குற்றத்தின் மீது ஒரு கவிஞன் புனையும் கவிதை ஒரு கூக்குரலாக மட்டும் ஒலிக்காமல் அடுத்த ஒரு நூற்றாண்டுக்குக் கொலை பற்றி பேச விளையும் யாவரையும் உலுக்கி எடுக்கப் போகும் குற்றவுணர்ச்சியின் அடிநாவாக இருக்கப் போகும் ஒரு சொல்லைக் கவிஞன் கண்டறிய வேண்டியக் கடப்பாடடுன் கவிதை உலகில் நிற்கிறான்.

எடுத்துக்காட்டு:

ஒரு கொலைக்குப் பின்

தாராளமாக

நீங்கள் புன்னகைக்கலாம்;

மார்த்தட்டிக் கொள்ளலாம்.

ஆனால், வீடு திரும்பும்போது

தயவு செய்து

பிணங்களை மிதிக்காதீர்கள்.

கடைசி சடங்குகளுக்கு

அவை தேவைப்படுகின்றன.

  • இதுதான் சிறந்த உதாரணம் என்றோ அல்லது முன்சொன்ன கூற்றுகளுக்கு உகந்த கவிதை என்றோ சொல்ல முன்வரவில்லை. இக்கவிதை கொலையைப் பற்றி பேசவில்லை; கொலையின் குரூரமான ஒரு பக்கத்தை/ விளைவை கோபத் தொனியைக் கொன்றுவிட்டு மிக இயல்பாகப் பேசுகிறது. ஆனால், அதற்குள் சொல்ல இயலாத அழுத்தமான ஓர் உணர்வு கரைந்து கிடக்கிறது. இதற்கு மேல் என்ன என்கிற தோரணையில் கையை விரித்து வானத்தைப் பார்த்து மரணத்தை மண்டியிட வைக்கிறது.

 

தொடரும்-

கே.பாலமுருகன்

குறிப்பு: நன்றி, ஜெயமோகன் வலைத்தலம்.