Kaanekkaane – குற்றமும் மன்னிப்பும்

மலையாள இயக்குனர் மனு அசோகன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்து விமர்சகர்களின் பாராட்டைப் பெற்று வரும் மலையாளப் படம். சுராஜ் முதன்மை பாத்திரத்தில் மொத்த கதையையும் முதிர்ச்சியும் நிதானமுமான தனது நடிப்பால் கடைசி புள்ளி வரை இழுத்துச் செல்கிறார்.

தன் மகளின் மரணத்திற்குப் பின்னால் இருக்கும் மனித அலட்சியங்களையும் கருணையற்ற தருணங்களையும் பொறுத்துக் கொள்ள இயலாமல் இரண்டாண்டுகளாக அதிலிருக்கும் உண்மைகளை வெளிக்கொணரப் போராடிக் கொண்டிருக்கும் அவர் சட்டென பல திருப்பங்களும் ஆச்சரியங்களும் அதனுள் மன்னிக்க முடியாத பாவங்களும் நிறைந்திருப்பதை அறிகிறார். அவரோடு பார்வையாளனும் மெல்ல திகைப்புள்ளாகி கலவரமடைகிறான்.

இரண்டாம் பாதியில் குற்றத்திற்கும் மன்னிப்பிற்கும் இடையில் கதை நிகழ்கிறது. அதனை மனித மனங்களின் நுட்பமான வெளிப்பாட்டால் இயக்குனர் கடத்திச் செல்கிறார். ஒரு திரில்லர் படமென ஒதுக்கிவிட்டுச் செல்ல முடியாதபடிக்குத் திரைக்கதை நெடுக விரிந்து வரும் முடிவிலா அன்பிற்கும் வன்முறைக்கும் இடையே தகிக்கும் அனலைத் தொட்டுணர முடியும்.

படத்தின் கடைசி சில நிமிடங்கள் நுட்பமானவை. விளக்கங்கள், உரையாடல்கள் ஏதும் இல்லாமல் ஒரு தத்துவ எல்லைக்கு விரிந்து செல்லும். அதுவரை பாவத்திற்கு எதிராக இருந்த சுராஜ் பாவத்தின் நிழலில் ஒருமுறை ஒதுங்கிவிட்டு மீண்டும் அதிலிருந்து மீளும்போது அடையும் புரிதல்தான் இக்கதைக்கு வலு சேர்க்கிறது. சத்தமில்லாமல் மன்னிப்பு சாத்தியமாகிறது. நாம் புகாரளிக்கும் அனைத்துக் குற்றங்களின் நிழல்களிலும் நாமேகூட சில நிமிடங்கள் தங்கிவிட்டுப் போன அனுபவம் உருவாகியிருக்கும். அக்கணங்களில் நாம் யார்? இப்படம் முன்வைக்கும் கேள்வியும் அதுதான்.

-கே.பாலமுருகன்

(IMDb Rating for Movie: 8.5/10)

About The Author