சிறார் குற்றச் செயல்களும் அதன் மீதான பக்குவமற்ற விசாரணையின் விளைவுகளும்

‘குற்றவாளிகள்  உருவாவதில்லை; நாம் உருவாக்கி வைத்திருக்கும் தண்டனைகளைப் பெறுவதற்குத் தொடர்ச்சியாக நமக்கு ஆட்கள் தேவை. அதனாலேயே, தீர விசாரிக்காமல்  அவர்களுக்கு உடனடியாக ‘குற்றவாளி’ என்கிற பட்டத்தைச் சுமத்தி கூண்டில் ஏற்றி வசைப்பாடுகிறோம்.

பின்னர் அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டு மீண்டும் வாழ்க்கைக்குள் திரும்பிவிடுவோம். ஒருபோதும் அக்குற்றம் நிகழ்ந்ததற்கான காரணத்தைப் பற்றியும் குற்றங்களின் ஆழத்தில் கிடக்கும் வேர்கள் பற்றியும் அறிவார்ந்த கலந்துரையாடலுக்கு நாம் முன்வருவதே இல்லை. மீண்டும் ஒரு குற்றம் நிகழும்போது எல்லோரும் கிளம்பி  வந்துவிடுவோம். நமக்குத் தேவை அவ்வப்போது எங்காவது ஏதாவது நடந்து யாராவது மாட்டிக் கொள்ள வேண்டும். நம் பொழுதிற்கு அவர்கள் சிறுது நேரத் தீனி. அவ்வளவுத்தான் நமக்கும் சமூகத்தில் நடக்கும் குற்றங்களுக்குமிடையே  இருக்கும் தார்மீகமான உறவு.

சமூகத்தில் இருக்கும் ஆய்வாளர்கள், சட்ட நிபுணர்கள், உளவியாளர்கள், கல்வியாளர்கள் என ஒரு விரிவான ஆளுமை கலந்துரையாடல் மட்டுமே ஒரு சமூகத்தில் நிகழும் குற்றங்களை அதன் அடிநுனிவரை சென்று விவாதித்து அதன் சாத்தியப்பாடுகளையும் உண்மை நிலவரங்களையும் திறந்து காட்ட முடியும் என நினைக்கிறேன். அதுவரை எல்லோரும் மாறி மாறி கூச்சல் போட்டாலும் அதற்குரிய நிவாரணம் நிரந்தரமானது கிடையாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒருமுறை 1996ஆம் ஆண்டில் நூலகப் புத்தகம் ஒன்றை எடுத்ததற்காக என் வகுப்பு நண்பன் ஒருவன் அன்றைய சிறப்பு சபைக்கூடலில் வெளியே அழைக்கப்பட்டு 15  நிமிடங்கள் நிற்க வைக்கப்பட்டு அப்பொழுது இருந்த நிர்வாகத் தலைவரால்  கடுமையாக அறிவுரைக்கப்பட்டான். அவமானத்தால் கூனி குறுகி அவன் நின்றிருந்ததையும் எங்கள் யாரையும் அவனால் பார்க்க முடியாமல் தடுமாறியதையும் அந்த 15 நிமிடங்களும் நான் கவனித்துக் கொண்டே இருந்தேன். வகுப்பிலேயே கொஞ்சம் சுட்டியானவனும் கெட்டிக்காரனுமான அந்நண்பன் ஏன் இப்படிச் செய்திருக்கிறான் என்கிற குழப்பம் மட்டுமே எனக்குள் பூதாகரமாய் எழுந்தபடி இருந்தது.  அப்பொழுதுதான் இடைநிலைப்பள்ளிக்கு வந்து முதல் ஆண்டு.

அன்றைய நாளுக்குப் பின் அவன் பள்ளிக்கே வரவில்லை. வகுப்பாசிரியரிடமும் கேட்டுப் பார்த்தோம். அவருக்கும் தெரியவில்லை என்றே சொன்னார். பின்னர், அவன் வேறு மாநிலத்திற்குச் சென்றுவிட்டதாக இன்னொரு நண்பரின் மூலம் தெரிந்து கொண்டோம். அவமானம் என்பதைப் பற்றி அப்போதுவரை என்னால் உள்ளூர உணர முடியாவிட்டாலும் ஒரு வகுப்பு நண்பனின் இழப்பும் பிரிவும் அதனைக் கனமாக உணர்த்திச் சென்றது. அவனுடைய காலியாக இருக்கும் நாற்காலியைப் பார்க்கும்போதெல்லாம் அவன் எடுத்தது ஒரு கதைப் புத்தகம்தானே  என்கிற உண்மை மனத்தில் ஏதோ ஒரு குற்றவுணர்ச்சியை உசுப்பிக் கொண்டிருந்தன.

அவன் ஏன் கதைப் புத்தகத்தை எடுத்தான் என்று யாருமே கேட்கவில்லை. அவனுக்குத் தண்டனை அளிக்க வேண்டும் என்பதிலேயே எல்லோரின் கவனமும் இருந்தது. ஒருவேளை அவனை மீண்டும் சந்திக்க வாய்ப்புக் கிடைத்திருந்தால் அவன் நூலகத்திலிருந்து எடுத்த அந்தக் கதைப் புத்தகத்தின் தலைப்பை மட்டுமே கேட்க ஆவலாக இருந்தேன். நூலகம் சென்று பொறுப்பாளரிடமும் விசாரித்தும் பார்த்தேன். அவர்களுக்கும் அவன் நூலகத்திலிருந்து எடுத்தக் கதைப் புத்தகம் பற்றி வேறேதும் தெரியவில்லை. நூலகத்தில் குவிந்து கிடந்த ஏதோ ஒரு கதைப் புத்தகம் என் நண்பனின் ஆசையைத் தூண்டியிருக்கிறது. அல்லது தன் ஆயிரம் வார்த்தைக் கரங்களால் அவன் மனத்தைச் சீண்டியிருக்கிறது. எது அந்தப் புத்தகம் என்று கண்கள் அலைந்தன.

ஒருவகையில் அச்சம்பத்திற்குப் பிறகே நான் அடிக்கடி நூலகம் செல்ல ஆரம்பித்தேன். கதைப் புத்தகங்களின் தலைப்புகளைப் படிக்க மட்டும் செய்தேன். பிறகு மீண்டும் ஓய்வு மணி முடிந்ததும் வகுப்பிற்கு வந்துவிடுவேன். சிலர் ஏன் நான் அடிக்கடி நூலகம் போகிறேன் என்று கிண்டலாகக் கேட்டார்கள். என் வகுப்பு நண்பனைப் போல நானும் புத்தகம் எடுக்கத் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறேன் என்றும் கேலிச் செய்தார்கள். ஏனோ ஒருநாள் அந்தக் கதைப்புத்தகமே தன்னைக் காட்டிக்  கொடுக்கும் என்று நம்பியிருந்தேன்.

அவனுடைய அம்மா ஓர் இந்தியர் அப்பா ஒரு சீனர். ஆகவே,பள்ளியில் சீன மொழியும் தமிழ் மொழியும் பேசத் தெரிந்த ஒரே ஒருத்தன் அவன் தான். அவனுக்கு நண்பர்களும் அதிகம். எல்லாம் வகுப்பிற்குள்ளும் நுழைந்து யாரிடமாவது கதையடித்துவிட்டு வரும் நெருக்கம் கொண்டவன். மனத்திற்கு ஏதும் ஒவ்வவில்லை என்றால் சட்டென கேட்டும் விடுவான். அப்படிப்பட்ட அவன் தான் அன்று சபைக்கூடலில் தலைக் குனிந்து நின்றிருந்தான். ஒருவேளை அவனைத் தனியறையில் வைத்து அன்பாக விசாரித்திருந்தால் அவன் அவனுக்குள் தகித்துக் கொண்டிருக்கும் உண்மையைச் சொல்லியிருப்பான். தண்டனை கடுமையாக வேண்டும் என நாம் இன்னமும் பள்ளிகளிலும் எளிய மக்களிடமும்தான் சொல்லிக் கொண்டே இருக்கிறோம். தண்டனைகள் சீர்த்திருத்தப்பட்டு மறு ஆலோசனைக்குட்படுத்தப்பட வேண்டும் என்பதே இன்றைய தேவை என நினைக்கத் தோன்றுகிறது.

ஏழு வயது சிறுவன் தன் நண்பனின் பென்சிலை எடுத்துவிட்டால் அதற்கும் ‘திருட்டு’ என்றுத்தான் பெயர் வைக்கிறோம். ஏழு ஆட்கள் கொண்ட பெரிய திருட்டுக் கும்பல் ஒன்றாக இணைந்து வங்கியிலுள்ள பணத்தை எடுத்துவிட்டால் அதையும் ‘திருட்டு’ என்றுத்தான்  அழைக்கிறோம். ஆனால்,   உளவியல் ரீதியிலும்  சமூக ரீதியிலும்  ஏன் நாம் மறுபரிசீலனை செய்து நம் குற்றங்களை அணுகும் விதங்களை சீரமைக்கக்கூடாது? ஏழு வயது சிறுவனையும் ஒரு பெரிய திருட்டுக் கும்பலையும் நான் அணுகும் விதம் ஒரே மாதிரி இருப்பதில் இருக்கக்கூடிய பின்விளைவுகளை நாம் அறியாமலேயே இரண்டிற்கும் ஒரேவிதமான உணர்வெழுச்சியையும் கோபத்தையும் காட்டுகிறோம்.

வகுப்பறையில் நிகழும் அல்லது பள்ளியில் நடக்கும் அனைத்தையும் ஆலோசனைப் பிரிவுக்குக் கீழ் கொண்டு வந்து அக்கறையெடுத்து அதனை அணுகும் பக்குவமிக்க ‘கவுன்சலிங் ஆலோசகர்கள்’ ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும் தீவிரப்படுத்தப்பட  வேண்டும். அவர்களுக்குச் சிறப்புப் பயிற்சி வழங்கப்பட்டு தவறுகள் செய்யும் மாணவர்களை ‘உளவியல் ரீதியில்’ அணுகி அவர்களை மீட்டெடுக்கும் பணி துரிதப்படுத்த வேண்டும். வகுப்பில் நடக்கும் ‘நடத்தை சிக்கல்கள்’ தொடர்பான விழிப்புணர்ச்சியும் அதனை ‘கவுன்சிலிங்’ ஆலோசனைப்பிரிவிடம் கொண்டு போகும் நுட்பமும்  அறிந்தவர்களாக அக்குறிப்பிட்ட ஆலோசகர்கள் திகழப்   பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.

எல்லா சம்பங்களையும் மற்ற மாணவர்கள் முன்னிலையில் விசாரிப்பதை நாம் முதலில் தவிர்க்க வேண்டும். இதுவே  வீடாக இருந்தாலும் உங்கள் பிள்ளைகளை மற்றவர் முன்னிலையில் விசாரித்து அவர்களை அவமானத்திற்குள்ளாக்கும் செயலை நாம் முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். தான் தவறு செய்துவிட்டேன் என்று உணர வைக்கும் பொருட்டு நாம் மேற்கொள்ளும் ‘திறந்த விசாரணை’ என்பது அவர்களுக்கு அவமானத்தையே தேடித் தருகிறது. குற்றத்தை அவர்களிடமிருந்து களையவதற்குப் பதிலாக நாம் அவர்களை மேலும் குரூரமான குற்றவாளியாக்கிக் கொண்டிருக்கிறோம். அல்லது தன் உயிரையே மாய்த்துக் கொள்ளும் அளவிற்கான அகத்தூண்டலை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.

அதே போல வீட்டிலும் பெற்றோர்கள் ஒரு நல்ல ஆசிரியராக இருக்கத் தெரிந்திருக்க வேண்டும். உங்கள் பிள்ளை ஒரு தவறு செய்துவிட்டால் அவனை முதலில் பிறர் முன்னிலையில் தண்டிப்பதை நிறுத்தங்கள். அது காதைப் பிடித்துத் திருகும் எளிய கண்டிப்பாக இருந்தாலும் அதனைப் பொதுவில் செய்யாதீர்கள். எத்தனை வயதாக இருந்தாலும் சுயமரியாதை எல்லோருக்கும் உண்டு அதனைக் கற்பிக்கவும் நமக்குக் கடமை உண்டு என்பதை அறிய வேண்டும்.

வீட்டிலும் பள்ளியிலும் நாம் சிறுவர்கள்/ இளையோர்கள் மீது பாவிக்கக்கூடாத வார்த்தைகளை உங்கள் மனத்திலிருந்து நீக்கினால் மட்டுமே சிறார் குற்றச் செயல்களை மாற்றுவழியில் குறைக்க முடியும் எனக் கருதுகிறேன்.

– முட்டாள்

-திருடா

-உருப்படவே மாட்டாய்

-நீயெல்லாம் படிக்கவில்லை என்று யார் அழுதது?

-இவன் செய்திருப்பான்…

-நீயெல்லாம் பெரியாளாகி என்ன செய்ய போகிறாய்?

-உன் குடும்பமே  இப்படித்தானோ?

-ஏன் உனக்கெல்லாம் அறிவே இல்லையா? 

-ரொம்ப பேசாதே வாயை உடைச்சிருவேன்

– வாயை மூடு

– பொய் சொல்லாதே…

இப்படியாகப் பல வார்த்தைகளைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

அவை வெறும் வார்த்தைகள் மட்டும் அல்ல. அவர்களின் உள்ளத்தைச் சீர்க்குழைக்கும் ஆயுதங்கள். நம் கையிலும் மனத்திலும் ஆயுதங்கள் ஏந்திக் கொண்டிருந்தால் நாம் தீவிரவாதிகள்தானே? ஒரேயொருமுறை ஆயுதங்களுக்குப் பதிலாக அன்பைக் கையிலெடுத்துப் பார்ப்போம். தோற்றாலும் பரவாயில்லை; முயலாமல் இருப்பதுதான் உண்மையான தோல்வி.

-கே.பாலமுருகன் 

தைப்பூசத்தை முன்னிட்டு ‘தைக்கோ தர்மலிங்கத்துடன்’ ஒரு நேர்காணல்

 

thaipusam festival

வருகின்ற புதன்கிழமை நாடு முழுவதும் தைப்பூசம் நடைபெறவிருப்பதை முன்னிட்டு ‘வருத்தப்படாத காங்கையர் சங்கத்தின்’ தலைவர் தைக்கோ தர்மலிங்கத்தை ஒரு சிறப்பு நேர்காணல் செய்யப்பட்டிருந்தது. இவ்வருடம் தைப்பூசத்திற்காக மாபெரும் முன்னேற்றத் திட்டங்களுடன் அனைத்தையும் முறையாக வரையறுத்து அதன் சாரங்களைப் பகிர்ந்து கொண்டார்.

நிருபர்: வணக்கம் தைக்கோ. உங்களுக்கு எப்படி தைக்கோ என்று பெயர் வந்தது?

தைக்கோ: என் பெயர் தர்மலிங்கம்தான். கொஞ்சம் சேட்டை காட்டன நம்ம பையனுங்கள எல்லாத்தையும் ஓட ஓட விரட்டி அடிச்சேன். அப்பொழுதுலேந்து என்னை தைக்கோ என்றுத்தான் அழைப்பார்கள்.

நிருபர்: ஆகா அருமை. இந்த வரலாற்று பதிவை விரைவில் பாடநூலில் இணைக்க நான் பரிந்துரை செய்கிறேன். அடுத்து, உங்கள் வருத்தப்படாத காங்கையர் சங்கத்தின் நோக்கம் என்ன?

தைக்கோ: ஆம்பளைங்கன்னா சும்மாவா? வீரத்தைக் காட்டறதுக்கே எங்க சங்கத்தை ஆரம்பிச்சோம்.

நிருபர்: கேட்கும்பொழுதே சிலிர்க்கிறது ஐயா. எப்படியெல்லாம் வீரத்தைக் காட்டுவீர்கள்?

தைக்கோ: குறிப்பாக நாங்க… பார்த்தீங்கனா தைப்பூசம்தான் எங்களோட களம். அங்கத்தான் எங்கள் வீரத்தை நல்லா காட்டுவோம்.

நிருபர்: ஓ அப்படியா! என்ன செய்வீர்கள்? பால் குடம்… காவடி ஏதும்?

தைக்கோ: ஐயோ! அப்படில்லாம் இல்லைங்க… நாங்க தனி வழி.

நிருபர்: நீங்க தனி வழியா? தைப்பூசத்துக்கு எல்லாம் ஒரே வழித்தானே பயன்படுத்துவாங்க?

தைக்கோ: தம்பி என்ன சின்ன பிள்ள மாதிரி பேசிக்கிட்டு இருக்கீங்க? நாங்களாம் தைப்பூசத்துல கத்தியோடத்தான் சுத்துவோம். நாங்க தனி கட்சி…

நிருபர்: ஓ! அந்த தேங்கா வெட்டித் தர்றது… ஆளுங்களுக்கு உதவி செய்றது நீங்கத்தானா? நல்ல காரியம் ஆயிற்றே?…

தைக்கோ: தம்பி நான் சொல்றது அந்த வேலை இல்ல… எவனாவது எங்களைப் பார்த்து முறைச்சானா அவன் செத்தான்… கத்திக்கு வேலை கொடுத்துடுவோம்…

நிருபர்: வீரப் பரம்பரை நீங்கள் அல்லவா?

தைக்கோ: அப்புறம் சும்மாவா விட முடியும்? நாங்க அப்படியே கெத்தா நடப்போம்… எல்லோரும் தோள்ல கை வச்சுக்கிட்டு ரயில் மாதிரி நடப்போம்…

நிருபர்: யாராவது குறுக்க வந்தால்… பெண்கள்… பிள்ளைகள்?

தைக்கோ: நாங்க எதுக்கு வழிவிடணும்? நாங்க தைக்கோலா… பிள்ளைங்களோ பெண்களோ அதுலாம் எங்களுக்குப் பெரச்சனை இல்ல… அடிச்சி நவுத்திக்கிட்டுப் போய்கிட்டே இருப்போம்… எங்க வழியில யாரும் நிக்க முடியுமா?

நிருபர்: அருமை அருமை… உங்கள் வழி மகாத்மா வழியைப் போல… வேற என்ன செய்வீங்க?

தைக்கோ: ஒரு விசில் மாதிரி இருக்கும்… அதை ஊதிக்கிட்டே வருவோம். நாங்க வந்தால் அந்த இடமே அதிரும்.

நிருபர்: ஓ! அந்தக் காதைக் கிழிக்கும் சத்தம் ஏற்படுமே அதுவா? அதைக் கேட்டால் வயதானவர்கள் குழந்தைகள் எல்லாரும் அலறுவார்களே?

தைக்கோ: அதேதான்… அதான் எங்களுக்கு வேணும். அப்படியே அலறிக்கிட்டு ஓடணும்…

நிருபர்: உங்கள் பொதுநல சிந்தனை அப்படியே …. முத்தமிடத் தோன்றுகிறது. வேறு என்னென்ன நற்காரியங்கள் உங்கள் பட்டியலில் உள்ளன?

தைக்கோ: அப்புறம் என்னா? போத்தலை ஓப்பன் செஞ்சிட்டு நல்லா தண்ணீ அடிப்போம். அடிச்சிட்டு அப்படியே காவடி முன்னுக்குத் தெறிக்க விடுவோம். சும்மாவா?

நிருபர்: ஓ! யார் அந்த முருகருக்குத் தங்களின் காணிக்கையைச் செலுத்த பக்தியோடு போகும் அவர்களின் காவடியின் முன்பா?

தைக்கோ: யாரு காவடிலாம் முக்கியம் இல்ல தம்பி…. அப்படியே போத்தைய தலைல வச்சிக்கிட்டு சுத்துவோம்… ரோடே தேஞ்சிரும்…

நிருபர்: அற்புதம்! அற்புதம். பக்தி வெள்ளம் பெருகும் அல்லவா?

தைக்கோ: எல்லாரும் பயந்து ஓரமா ஒதுங்கிடுவாங்கன்னா பாத்துக்குங்களேன்… அப்புறம் எங்களுக்குன்னு  நல்லா சினிமா பாட்டா போட்டு இன்னும் வெறிய ஏத்துவாங்க…

நிருபர்: அருமையான திட்டம் ஐயா. வேறு ஏதும் மக்களுக்குச் சொல்ல விரும்புகிறீர்களா?

தைக்கோ: கோவிலுக்குப் போங்க… சாமி கும்பிடுங்க… மூனாவது நாளு சாமி ரதம் வரும் நல்லா ஜொலிக்கும். அதே மாதிரி நீங்களும் நல்லா ஜொலிக்கற மாதிரி சும்மா தகதகன்னு வாங்க. வீட்டுல நகை இருந்துச்சின்னா தாராளமா போட்டுட்டு வாங்க. எங்களுக்கும் காசு பாக்கணும்லே… அறுக்கும்போது கத்தாதீங்க… அதுதான் எங்க வேலையே…

நிருபர்: எதற்கு அடுத்து வீட்டு நகை?

தைக்கோ: எங்களோட சங்க நிதி அதான் தம்பி!!! அறுத்துட்டு ஓடிருவோம்… பாத்துக்குங்க…

நிருபர்: மிக்க நலம் ஐயா. உங்களை எப்படி அடையாளம் காண்பது?

தைக்கோ: ஜீன்ஸ் முட்டிக்கிட்ட கிழிஞ்சிருக்கும். அப்புறம் தலைல கலர் ‘டை’ அடிச்சிருப்போம்… மண்டைல அணில் பிள்ள உட்கார்ந்திருக்கோம்… ராத்திரிலகூட கருப்புக் கண்ணாடி போட்டிருப்போம்… அப்படியே கத்திக்கிட்டே  வருவோம்… இடிச்சி தள்ளுவோம்… அதுதான் நாங்க…

நிருபர்: உங்கள் சேவை ஒவ்வொரு தைப்பூசத்திலும் தொடர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டு விடைபெறுகிறேன். அருமையான பயன்மிக்க ஒரு நேர்காணலுக்கு மிக்க நன்றி ஐயா. உங்களின் பொன்னான பொழுதிற்கு நன்றி.

(இப்படியாக தைக்கோ தர்மலிங்கம் தன் சங்க உறுப்பினர்களுடன் தைப்பூச வேட்டைக்குத் தயாரானார்)

குறிப்பு:

  1. இவர்களைப் போன்றவர்கள் உங்கள் வீட்டிலிருந்துகூட உருவாகி வரக்கூடும். அவர்களை நீங்கள் அறிந்து கொள்ள சரியான இடம் தைப்பூசம்தான். தைப்பூசம் ஆண்மையைக் காட்டும் வீரத்தைக் காட்டும் இடமல்ல; கொஞ்சம் மனத்தில் ஈரம் இருந்தால் போதும், பக்தியோடு வரும் பல பொதுமக்களின் மனமகிழ்ச்சிக்கு உறுதுணையாக அமையலாம்.
  2. நகை கடையோடு வராதீர்கள்; அது தங்கம் அல்ல எனத் திருடர்களுக்குத் தெரியாது.
  3. பெண் பிள்ளைகளைத் தனியாகக் கூட்டத்தில் சுற்ற விடாதீர்கள்.
  4. உங்கள் மகன்களை/ உங்கள் வீட்டு இளைஞர்கள் தைப்பூசத்திற்கு உடுத்திச் செல்லும் ஆடையின் மீது கவனம் செலுத்துங்கள். பண்பாட்டிற்குப் புறம்பாக இருந்தால் கண்டியுங்கள்.
  5. அவர்கள் வலிமையானவர்கள் நாம் வலிமையற்றவர்கள் என்று நினைக்காதீர். இந்தச் சமூகத்தைக் கட்டமைக்கும் பணி அனைவரிடமும் உள்ளது.
  6. குறிப்பாக, தயவு செய்து குப்பைகளை வீசாதீர்கள். தைப்பூசத்திற்குப் பிறகு நகரமே குப்பை மேடாகி கிடப்பது நமக்குத்தான் அவப்பெயரைக் கொண்டு வரும்.
  7. மற்றவர்கள் தங்களின் நேர்த்திக்கடனைச் செலுத்த ஒத்துழைப்பை வழங்குங்கள்.

மேற்கண்ட நேர்காணல் ஒரு கற்பனையே. யாரையும் குறிப்பிடுபவன அல்ல.

கே.பாலமுருகன்

முடி திருத்தம் நிலையம் ‘லோரோங் 68’ – பாகம் 1 (ஜல்லிக்கட்டு)

அரசியல், சமூகம், சினிமா, வெட்டிப் பேச்சு என அனைத்திற்கும் பேர்போன மிகச் சிறந்த இடம் ‘முடி திருத்தம் நிலையம்’ ஆகும். ஆண்களின் வம்புப் பேச்சுக் கூடாரம். வயதானவர்கள், வேலை இல்லாதவர்கள், பொழுதைக் கழிப்பவர்கள், வெட்டிப் பேச்சுக்கென்று எழுதி வைக்கப்பட்டவர்கள், சமூகத்தின் ஆழ்மனத்தில் கரைந்தவர்கள், மேலெழுந்து தூக்கிவீசப்பட்டவர்கள், மேலே எழாமலேயே தோல்வியுற்றவர்கள், வீட்டை விட்டு ஒதுக்கப்பட்டவர்கள், வீட்டிற்குள்ளேயே மதிப்பை இழந்தவர்கள் என ஒவ்வொருநாளும் முடி திருத்தம் நிலையங்கள் பார்க்காத மனிதர்களே கிடையாது. பலரின் மனக் காயங்களுக்கு பணம் கொடுக்காமலேயே மருந்திட்ட முடி திருத்தம் நிலையங்கள் நம் அப்பாக்கள், தாத்தாக்களின் வாழ்வின் ஓர் ஓரத்தில் இன்னமும் ஜீவித்துக் கொண்டிருக்கலாம்.

1990களின் இறுதியில் இந்தியர்கள் வைத்திருந்த முடி திருத்தம் நிலையங்கள் ஒட்டுமொத்த வெட்டிப் பேச்சின் மையங்களாகவும், பலரின் மனக் கொதிப்புகளுக்கான கூடாரங்களாகவும் இருந்ததை யாராலும் மறந்திருக்க முடியாது. உன்னிப்பாத அதனைக் கேட்டிருக்காமல் நாம் கடந்து போயிருக்கக்கூடும். என் அப்பாவின் நண்பர் எம்.ஜி.ஆர் குமார் முன்பு என்னை அடிக்கடி பத்து டுவாவில் இருக்கும் ஒரு பழைய முடி திருத்தம் நிலையத்திற்கு அழைத்துப் போவார். அவரும் முன்பு ஒரு கடை வைத்திருந்து பின்னர் வேலையாளிடம் ஏமாந்து அக்கடை நஷ்டத்தில் போய் முடிந்தது. அதனை அடைத்துவிட்டு எம்.ஜி.ஆர் குமார் மீண்டும் சுங்கைப்பட்டாணிக்கே வந்துவிட்டார். (என்னுடைய சில சிறுகதைகளில் இந்த எம்.ஜி.ஆர் குமாரைப் பற்றி எழுதியுள்ளேன்; புனைந்துள்ளேன்)

என்னைக் கடையின் ஒரு நீண்ட இருக்கையில் அமர வைத்துவிட்டு அவர் அந்த சுழலும் நாற்காலியில் அமர்ந்து கொண்டு அக்கடைக்கு முதலாளியைப் போல முடி திருத்துபவரிடம் பேசிக் கொண்டே இருப்பார். தன் மனக்கிடங்கில் ஒதுக்கி வைத்திருந்த அத்தனை ஆற்றாமைகளையும் கொட்டிக் கொண்டே இருப்பார். அங்கு வெட்டித் திருத்தப்படுவது வெறும் முடி மட்டும் அல்ல மனத்தினுள் அடர்ந்து வளர்ந்திருக்கும் கசப்புகளையும்தான் என நினைக்க முடிகிறது. அதற்கு அக்கடையாளர்கள் எந்தக் கட்டணத்தையும் வசூலிப்பதும் இல்லை. அதனாலேயே நம் வீட்டுப் பெரியவர்கள், ஆண்கள் முடி திருத்தம் நிலையம் சென்று வெட்டிப் பேச்சு பேசிவிட்டு வருவதாக நம்மில் பலர் புலம்பியிருக்கக்கூடும். அது ஒரு வடிக்காலாக மட்டுமே இருந்திருக்கிறது.

அத்தகைய முடி திருத்தம் நிலையம் ஒன்றனை எனது புனைவுலகத்தின் லோரோங் 68-இல் ஆரம்பித்துள்ளேன். இங்கு நம் மனக் கொதிப்புகளை ஆற்றித் தரும் சேவையை மட்டுமே எனது புனைவுலக கதாபாத்திரமான எம்.ஜி.ஆர் குமார் செய்யவிருக்கிறார். யார் வேண்டுமென்றாலும் கதைக்க மட்டுமே இம்முடி திருத்தம் நிலையத்திற்கு வரலாம். அதன் முகவரி: https://balamurugan.org லோரோங்  68.

இன்றுத்தான் எம்.ஜி.ஆர் குமார் தன் முடி திருத்தம் நிலையத்தைத் திறக்கிறார். முதல் நாளே கூட்டம் நிறைந்து தன் அகத்தைத் திருத்த முட்டி மோதுகிறது. அவர் டோக்கன் எல்லாம் கொடுக்க மாட்டார். எல்லோரும் ஒன்றாக அமர்ந்து கதைக்கலாம்; திட்டலாம்; கருத்துரைக்கலாம்; விமர்சிக்கலாம்; புறம் பேசலாம்; அறிவுரைக் கூறலாம்; லாம் லாம் லாம்.

எம்.ஜி.ஆர் குமார் ஒரு தீவிர எம்.ஜி ஆர். இரசிகர். 1980களில் எல்லோர் வீடுகளின் சுவர்களிலும் எம்.ஜி.ஆர் போஸ்டரை நீங்கள் பார்த்திருக்கக்கூடும். என் அப்பாவும் வீட்டின் நடு வரவேற்பறையிலேயே எம்.ஜி.ஆரின் புகைப்படத்தை மாட்டியிருந்தார். தீவிர எம்.ஜி.ஆர் ரசிகரான எம்.ஜி.ஆர் குமாரும் தன் முடி திருத்தம் நிலையத்தில் எல்லா இடங்களிலும் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ முதற்கொண்டு ‘அன்பே வா’ வரை  எம்.ஜி.ஆரின் படங்களை ஒட்டி வைத்திருந்தார். இப்பொழுது உங்கள் நினைவுகள் மீண்டும் ஒரு 20 வருடத்திற்கு முன்னே சென்று நீங்கள் முடி திருத்திய நிலையங்களில் இருந்த எம்.ஜி.ஆர் புகைப்படங்களை நினைவுப்படுத்தக்கூடும்.

‘தாய் மேல் ஆணை…தமிழ் மேன் ஆணை…’

‘நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்’

இப்படி எம்.ஜி.ஆர் பாடலைப் பாடிக்கொண்டு உங்கள் முடியைத் திருத்திய யாரேனும் உங்கள் நினைவடுக்கில் இருந்தால் அவர்தான் இந்த ‘எம்.ஜி.ஆர்’ குமார். அவரை அப்படியே உங்களுக்குள் தேக்கி வைத்துக் கொள்ளுங்கள். அவர் பேசாத அரசியல் கிடையாது, பேசாத சமூகக் கருத்துகள் கிடையாது. அவர் நம் அறிவுக்கும் புரிதலுக்கும் சவால்விடக் கூடியவர்.

அவருடைய இந்த ‘லோரோங் 68’ கடையில் ஒரு பழைய வானொலியும் வைத்திருக்கிறார். ஓங்கி அடித்தால்தான் பாடும். நிலையத்தைத் திருப்ப ஒரு வட்டமான திருகியும் இருக்கும். அது ஓர் இடத்தில் நிற்காது. இலேசாகக் காற்று அடித்தாலும் சட்டென நிலையம் இரையும். ஆகவே, அதனை தமிழ் வானொலி நிலையத்திலேயே நிறுத்த எம்.ஜி.ஆர் குமார் ஒரு நெகிழி கயிற்றைக் கொண்டு அந்தத் திருகியை வானொலியின் ஒரு மூலையோடு சேர்த்துக் கட்டியிருப்பார். கட்டம் போட்ட ஒரு சட்டையும் தூக்கி மேலே போடப்பட்டிருக்கும் ஒரு வெளுத்த சிலுவாரும் என எம்.ஜி.ஆர் குமார் இதோ தன் வேலையைத் தொடங்குகிறார்.

 

ஜல்லிக்கட்டு

“ஏங்க, நேத்துத் தமிழ்நாட்டுல நடந்த ஜல்லிக்கட்டுல ஒருத்தர் இறந்துட்டாராம். கேள்விப் பட்டீங்களா? என்னங்க இது? உயிரை விட்டுத்தான் ஜல்லிக்கட்டு விளையாடணுமா? இது மனசோட உயிருக்கு ஆபத்து இல்லையா?”

அதைக் கேட்டதும் எம்.ஜி.ஆர் குமார் தன் இரண்டு விரல்களைக் குவித்து மூக்குக்குக் கீழ் வைத்துத் தேய்த்து ‘ஹா…..”  என்று சொல்லிவிட்டு மூக்கில் விரலை அடித்து வெளியேற்றினார். அப்படியென்றால் அவர் கருத்து சொல்ல தயார் என்று அர்த்தம். தனக்குள் ஒரு எம்.ஜி.ஆர் வாழ்வதாகவே அவர் நினைத்து நம்பிக் கொண்டிருக்கிறார். இப்படிப்பட்ட பலரை நாம் பார்த்திருக்கக்கூடும்.

“என்னப்பா! கார் ரேஸ் நடத்துறாங்க. அதுலயும்தான் நிறைய பேர் காடி கவுந்து கால் கைய உடைச்சிக்கறான். செத்தும் போறானுங்க. அதை நிப்பாட்டிட்டாங்களா? இல்ல உலகத்துல அதிகாரப்பூர்வமா மோட்டர் ரேஸ் நடக்கறது இல்லயா? அதுலாம் வீர விளையாட்டோ? அப்ப ஜல்லிக்கட்டு வீர விளையாட்டுனு சொன்னா உடனே வெட்டி நியாயம் பேச வந்துர்றீங்க?”

எம்.ஜி.ஆர் குமார் சட்டென கொதித்து எழுந்தார்.

“நம்ம வீட்டுல அண்ணன் தம்பிக்கூட ஓடிப் பிடிச்சி விளையாடறது இல்லயா? அப்படி விளையாடும்போது கைல காலுல காயம் வர்றது இல்லயா? அந்த மாதிரித்தான். மாடுன்னா தமிழனோட வாழ்க்கையில ஒன்றிவிட்ட ஒன்று. அதை நீக்கிட்டு வாழ்க்கைய வாழ முடியாத அளவுக்கு விவசாய்ங்களோட கலந்துருக்கு. ஜல்லிக்கட்டுன்னா எங்க அண்ணன் தம்பிக்கூட விளையாடும் ஒரு வீர விளையாட்டு மாதிரி…”

“இருந்தாலும்… அதை அடக்க முடியுமா?”

எம்.ஜி.ஆர் குமார் மீண்டும் தன் மூக்கைத் தடவுகிறார்.

“ஜல்லிக்கட்டுன்னா என்னா போறவன் வர்றவன், வேடிக்கைப் பார்க்க வந்தவன் எல்லாம் விளையாடலாம்னு நினைக்கிறீங்களோ? அப்படி நினைச்சா அது தப்பு. ஜல்லிக்கட்டு விளையாடறதுக்கு ஒருத்தனுக்கு உடலில் தெம்பும் சக்தியும், நல்ல உயரமும், திடமும் வேண்டும். அதைப் பரிசோதிச்சிட்டுத்தான் ஒருத்தன ஜல்லிக்கட்டு விளையாடவே அனுமதிப்பாங்க… டாக்டர் பரிசோதனை செஞ்சிட்டுத்தான் ஒருத்தன் ஆரோக்கியமா இருக்கான், விளையாடத் தகுதி இருக்கும் அப்படின்னு பார்த்து சொல்லிட்டுத்தான் வாடிவாசல் பக்கமே போக முடியும் தம்பி, புரியுதா? அதோட தேர்வானங்களுக்குப் பயிற்சியும் இருக்கு…”

“அப்படின்னா மலேசியாவிலும் ஜல்லிக்கட்டுக்குப் பயிற்சிக் கொடுத்து இங்கயும் ஆரம்பிக்கலாமே?”

“அதை நான் மட்டும் சொல்ல முடியாது. இப்ப இதைக் கேட்டுக்கிட்டு இருக்காங்களே அவுங்களாம் யோசிச்சி இதைப் பத்தி சாதகம் பாதகம் எல்லாத்தயும் பேச முன் வந்தால்தான் சாத்தியம் ஆகும்…ஆனால் ஜல்லிக்கட்டைத் தமிழனோட வரலாற்றுலிருந்தும் வாழ்க்கையிலிருந்தும் நீக்கவே முடியாது. அதை வேணானு சொல்றவன் ஒவ்வொருத்தனும் தன் தமிழ் அடையாளங்கள இழக்கத் தயாரா இருக்கும் ஆபத்தானவங்கன்னு மட்டும் நினைச்சிக்குங்க…”

என்று சொல்லிவிட்டு எம்.ஜி.ஆர் குமார் தன் முதல் நாள் வியாபாரத்தை முடித்துவிட்டு நிலையத்தை அடைத்தார்.

 

– கே.பாலமுருகன்

 

அவநிதாவின் சொல் – கவிதைகளின் புன்முறுவல்

அவநிதாவின்

சின்னஞ்சிறு கால் தடத்தினைப் போல

அவளுடைய வார்த்தைகளும்

பார்க்கும் முன் கரைந்தொழுகி விடுகிறது

மனத்திற்குள்…

 

2007ஆம் ஆண்டிலிருந்தே திண்ணை.காம் இணைய இதழின் மூலம் அறிமுகமானவர் சிங்கப்பூரில் வசிக்கும் எப்பொழுதுமான நெருங்கிய தோழர் பாண்டித்துரை. நான் அப்பொழுதிலிருந்தே அறிந்த பாண்டி, ஒரு நல்ல கவிஞர், கவிதையின் மீது அதீதமான ஈடுபாடும், செயல்நோக்கமும் கொண்டவர். நண்பர்களுடன் இணைந்து ‘பிரம்மா’ என்ற கவிதை நூலையும் வெளியிட்டிருந்தார். கவிதைகள் என்றால் பாண்டியின் ஆழ்மனம் விழித்துக் கொள்ளும். தெளிவான மனநிலையுடன் திட்டமிட்டு எழுத முடியாத ஒன்று கவிதை. அது மிகவும் யதார்த்தமான தெறிப்பு; ஆக்ரோஷமான மௌனம்; இரைச்சல்மிக்க அமைதி. இப்படியாகச் சொல்லிக் கொண்டே போகலாம்.

நான் இலக்கியத்தில் ஆர்வத்துடன் இருந்த அதே காலக்கட்டத்தில் சிங்கப்பூரில் அதுபோல ஆர்வத்துடன் இருந்தவர் நீதிப்பாண்டி. அவருடைய நட்பு வட்டமும் பெரியதாக இருந்தது. ஒன்றாகவே அலைந்தோம். தேக்கா, சிராங்கூன், ஷா நவாஸ் சாப்பாட்டுக் கடை, அங் மோ கியோ நூலகம் என சந்திக்காத இடங்களே இல்லை. கொஞ்சமும் சலிப்பில்லாமல் இருவரும் அலைந்து கொண்டே இருப்போம்; உரையாடல் தீராமல் எல்லா கனங்களிலும் யாரையாது உள்ளே இணைத்தும் கொள்வோம். பூங்குன்ற பாண்டியன், பாலாஜி, பாலு மணிமாறன், எம்.கே குமார், கண்ணபிரான் ஐயா என சதா யாரையாவது சென்று சந்தித்துக் கொண்டும் இருப்போம். அப்பொழுதுதான் சிங்கை இலக்கிய நண்பர்களுக்கும் எனக்குமான நட்பும் விரிந்திருந்தது. அதை இணைத்தது நிச்சயம் பாண்டித்துரைத்தான்.

அவர் சிறுகதைக்காக ‘தங்கமுனை’ விருது பெற்ற செய்தி, கவிதையைக் கடந்து சிறுகதை துறையிலும் தனது அகங்களை விரித்துள்ளார் என்று மகிழ்ச்சியை அளித்தது. இம்முறை சிங்கை சென்றபோது அவருடைய குழந்தையை என்னிடம் கொடுத்தனுப்பினார். நான் அவநிதாவை அழைத்துக் கொண்டு கெடா வரை வந்துவிட்டேன். வெள்ளைக் கவுனுடன் வேறு எங்கோ பார்த்துக் கொண்டிருக்கும் அவநிதாவைக் கொஞ்சம் கொஞ்சமாக வாசித்தேன். அவளுடைய ஓரப்பார்வை மெல்ல திரும்பி என் அகத்தைக் கவனிக்கும் கூர்மையான சுட்டிப் பார்வையாக மாறியது.

தன் மகள் அவநிதாவுக்காகவே நீதிபாண்டியால் எழுதப்பட்ட கவிதை நூல் இது. இந்த நூலை அவர் எங்கேயும் வெளியிடவில்லை எனக் குறிப்பிட்டிருந்தார். 2016ஆம் ஆண்டில் தான் அன்றாட வாழ்நாளில் சந்திக்கும் இலக்கியம் சார்ந்த நண்பர்கள், இலக்கியம் சாராத எளிய மனிதர்கள் என தினம் ஒருவரைப் பார்த்து ‘அவநிதாவின் சொல்’ புத்தகத்தைக் கொடுத்துள்ளார். அவர்கள் பற்றியும் முகநூலில் தொடராக அறிமுகமும் படுத்தியுள்ளார். இதுவரை இப்படி நூல் வெளியீடு செய்து நான் கேள்விப்பட்டதும் இல்லை. அவநிதா குழந்தைமையுடன் இந்த உலகை எதிர்க்கொள்வதைப் போல பாண்டியும் தன் எதிரில் இருக்கும் மனிதர்களோடு இந்த நூலின் சப்தங்களை அதே குழந்தமையுடன் பகிர்ந்திருக்கிறார்.

இத்தொகுப்பில் உள்ள 70க்கும் மேற்பட்ட கவிதைகள் மிகப்பெரிய கவிதை துறையையே புரட்டிப்போடப்போகும் கவிதைகள் என்றெல்லாம் இல்லை. பின் நவீனத்துவ, முன் நவீனத்துவக் கவிதைகளும் அல்ல. கவிதைகளின் புன்முறுவலே அவநிதா பாண்டியின் மனத்தில் உருவாக்கும் சலனம். அது வழியாக அல்லது அப்படியே அவளுடைய சொற்களைக் கவிதையாக்கியுள்ளார். இதுவும் மனத்தில் ஒரு துள்ளலை உண்டாக்கும்.

‘பின்னே ஓடவைத்து

முந்திச் செல்கிறாள்

அவநிதா’ – பாண்டித்துரை

கவிதை மொழியின் நடனம் என்றும் சொல்லியிருக்கிறார்கள். கவிதை மொழியின் குழந்தை என்றுகூட சொல்லலாம் போல என்றாகிவிட்டது. அத்தனை குழந்தைத்தனங்களையும் இணைத்துதான் நீதிபாண்டியின் ‘அவநிதாவின் சொல்’. புற உலகத்தை அறியாத ஒரு பருவம் உண்டு. யார் எத்தனைமுறை சொன்னாலும், எத்தனை கடினமான வார்த்தைகளை உள்ளடக்கி விளக்கினாலும் இவ்வுலகத்தின் சூட்சமமும் உலக நடைமுறையையும் அறியவே அறிந்திட முடியாது ஒரு வயதுண்டு. இன்றும் எல்லோரும் நினைத்து ஏங்கும் குழந்தை பருவம் அது. உலகத்தை அறியாமலே இருந்திருக்கலாம் என்ற குற்றவுணர்ச்சியோடும் ஏக்கத்துடனும் அலையும் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு குழந்தை இருக்கிறது. தன் சிறார் பருவத்தின் அத்தனை நினைவுகளையும் ‘ப்ரேம்’ போட்டுத் தன் மனத்திற்குள் மாட்டிக் கொள்ளாத மனிதர்களே இல்லை என்று சொல்லிவிடலாம்.

‘பசித்த அவநிதா

அழுகையைத் தின்றுவிடுகிறாள்’ – பாண்டித்துரை

நோய் வந்துவிட்டால் எல்லோரும் குழந்தையாகிவிடுவோம். எத்தனை பெரிய பதவியில் இருந்தாலும் ஒரு காய்ச்சல் போதும், நம்மைச் சுருட்டிக் குழந்தையாக்கி மெத்தையின் மடியில் போட்டுவிடும். மருந்து சாப்பிட நாம் பிடிக்கும் சிறு அடத்திலும், அம்மாவோ மனைவியோ அக்காவோ வைக்கும் உணவைக் கண்டு போர்வையை இழுத்துப் போர்த்திக் கொள்ளும் போதும், நமக்குள் இருக்கும் குழந்தை நம் அகங்காரங்களை, பதவிகளை, பட்டங்களை, அந்தஸ்த்துகளை எல்லாம் விழுங்கிவிட்டு ஒரு சிறு மௌனக் கண்ணீராக வெளியே கொட்டும்.

 

Pandithurai

அப்படிப்பட்ட நம்மையும் நமக்குள் இருக்கும் ஒரு குழந்தையையும் சுட்டிக் காட்டும் சொற்கள்தான் அவநிதாவினுடையது. அதையேத்தான் பாண்டியின் கவிதைகளும் செய்கின்றன. நம் வெளிமனம் திட்டவட்டமான பிம்பங்களுடன் கட்டப்பட்டவை. அவை இவ்வுலகை நினைவுக்கூர்ந்து கொண்டே இருக்கும். ஆனால், அதனையும் தாண்டி உள்ளே அகத்துக்கடியில் ஒளிந்து கொண்டிருக்கும், எப்பொழுதோ தன் பொம்மையைத் தொலைத்துவிட்டுத் தேடும் அவநிதாவைப் போல, ஒரு தீண்டலை நோக்கியதே இக்கவிதைகள்.

‘ அவநிதாவை

ஆகாயம் தொட

தூக்கி எறிகிறேன்

என்னையும் தூக்கிச் செல்கிறாள்‘ – பாண்டித்துரை

நாம் புத்தகங்களைத் திறந்திருப்போம்; அதனூடாக வாழ்க்கையின் பல கதவுகளையும் திறந்திருப்போம். ஆனால், இது அவநிதா என்கிற ஒரு குழந்தையைத் திறக்கும் முயற்சி. களைந்துகிடக்கும் சொற்களுக்கிடையே வாழ்க்கையைப் பற்றிய எந்தவித பெரிய தத்துவங்களும் அற்று, மூளையையும் மனத்தையும் கனமாக்காமல், நாம் எப்பொழுதோ தொலைத்துவிட்ட நம்மை தன் சிறு நுனி விரலால் காட்டிச் செல்கிறது. தொடாத ஒரு தொடுதல்; தொட்டுவிட்டுச் செல்கிறது.

அவநிதாவாகவே இருந்திருக்கலாம் என்று மட்டும் தோன்றியது. இடையில் வரும் அப்புக்குட்டி கவிதைகள் அவநிதாவிடம் இருந்து சட்டென தூரமாக்கிவிடுகிறது. இருப்பினும், அது உருவாக்கும் உலகமும் மீண்டும் நம்மைக் குழந்தைகளிடமே இட்டுச் செல்கின்றன.

‘சன்னல் தொடும்

சிட்டுக் குருவிகளை

விரட்டிப்பிடிக்க எத்தனிக்கும் அவநிதா

பறந்து பார்க்கிறாள்’ – பாண்டித்துரை

ஒருமுறை எனது முதுகையும் பார்க்கிறேன்; அதில் எப்பொழுதோ இருந்த சிறகொன்று இப்பொழுது கழன்று எங்கேயோ எந்த வயதிலோ  யார் விரட்டியோ, அதட்டியோ விழுந்துவிட்டதை நினைத்து ஏக்கம் கொள்கிறேன்.அவநிதாவின் ஒரு சொல்; இதுவரை நாம் சொல்லாமல் விட்ட ஆயிரம் சொற்களின் மௌனத்தைக் களைக்கும் மிகக் கச்சிதமான ஆயுதம்.

வாழ்த்துகள் பாண்டி. அவநிதாவை இலக்கிய உலகத்திற்குத் தந்தமைக்கு. எனது, உனது, அவர்களது அவநிதாவின் சொற்களுக்கு  என் அன்பு முத்தங்கள்.

– கே.பாலமுருகன்

ஓர் ஊருல ஓர் ஆமை இருந்துச்சாம்… அப்புறம் இன்னொரு ஊர்ல இன்னொரு ஆமை இருந்துச்சாம்

இன்று சிறுவர்களிடம் கதைக் கேட்கச் சென்றிருந்தேன். வருடத் துவக்கத்தில் முதலாம் ஆண்டு மாணவர்கள் சிலர் எப்பொழுதும் அழுகையுடனும் பயத்துடனும் பள்ளிக்கூடத்தோடு ஒன்ற முடியாமலும் இருப்பார்கள். அவர்களின் பயத்தை உடைக்க நான் வழக்கமாகக் கையாளும் உத்தி, கதைச் சொல்லச் சொல்லிக் கேட்பது. அது அவர்களுக்கு மட்டும் ஒரு வடிக்கால் அல்ல. வருடத் தொடக்கத்தில் பணிச்சுமை கொஞ்சம் அழுத்தமாக இருக்கும் எனக்கும் ஒரு வடிக்கால்தான். அத்தனை நகைச்சுவையும் யதார்த்தமும் நிரம்பிய ஒரு கனநேர பொழுது அது.

முதலில் ஒரு மாணவி கதைச் சொல்ல வெளியே வந்தாள். பார்க்கக் கொஞ்சம் சுட்டியாகவும் இருந்தாள். அவளுடைய கதை நீளமாகவும் சுவாரிஷயமாகவும் இருந்தது.

“என்ன கதைமா?”

“ஆமையும் முயலும் சார்…”

“சரிமா ஏற்கனவே பலமுறை கேட்டக் கதைத்தான். சரி சொல்லு”

“இல்ல இது ஓட்டப்பந்தய கதை இல்ல சார், வேற…”

“ஓ அப்படியா? பரவாலையே… சொல்லு…”

“ஒரு ஊருல ஒரு ஆமை இருந்துச்சாம்… அதுக்கு ரொம்ப பசியாம்… அது சாப்பாடு தேடி அலைஞ்சிச்சாம். எங்கயுமே சாப்பாடு இல்லயாம். அப்புறம் ஒரு ஊர்ல ஒரு முயல் இருந்துச்சாம், அதுக்கும் பசியாம். அதுவும் சாப்பாடு தேடி அலைஞ்சிச்சாம். அப்புறமேல ஒரு ஊர்ல இன்னொரு ஆமை இருந்துச்சாம்…”

“அதுக்கும் பசியா?”

“ஆமாம் சார். அதுவும் சாப்பாடு தேடி அலைஞ்சிச்சாம்… அப்புறம்… இன்னொரு முயல் இருந்துச்சாம்”

அப்படியாக 5 நிமிடத்தில் மட்டும் மொத்தம் 6 ஆமைகளும் 6 முயல்களும் பசியோடு வந்து கொண்டே இருந்தன.

“சாப்ட்டுச்சா இல்லயா?”

“இல்ல சார்… பசிக்கும். அவ்ளத்தான்”

அவ்வளவுத்தான் என்று போய் அமர்ந்துவிட்டாள். எனக்குச் சட்டென பசி எடுத்துக் கொண்டது.

அடுத்து இன்னொரு மாணவி ஆர்வத்துடன் வந்தாள்.

“என்ன கதைமா?”

“ஆமையும் முயலும் சார்” என்றாள்.

எனக்குச் சற்று தயக்கமாக இருந்ததும், “அதே பசிக்கற கதையா?” என்றேன்.

“இல்ல சார் இது வேற கதை,” என்றாள் கண்கள் விரிய.

“ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம். அவரு இருந்த ஊர்ல ஒரு ஆமையும் இருந்துச்சாம்… அந்த ராஜா ஒரு நாளு கீரை கறி வெச்சாராம்… அவரு சமைச்சிட்டுக் காட்டுக்கு வேட்டையாட போனாராம்… அந்த நேரம் பார்த்து ஆமைக்குப் பசி எடுத்துருச்சாம்…”

ஏற்கனவே பசியில் இருந்த எனக்குப் பசி இன்னும் கூடி வயிற்றில் அமிலத்தைக் கரைத்தது.

“உடனே அந்த ஆமை, ராஜாவோட வீட்டுல நுழைஞ்சி அந்தக் கீரை கறிய சாப்பிட்டுருச்சாம்… அப்புறம் ராஜா வந்தாராம்… அவருக்குச் சாப்ட சாப்பாடே இல்லையாம்… அப்படியே பசிலே தூங்கிட்டாராம், அவ்ளத்தான் கதை,” என்று சொல்லிவிட்டு என்னைப் பார்த்தாள். கண்களில் பசி வெறியுடன் உட்கார்ந்திருந்தேன்.

அடுத்து இரண்டு பையன்கள் போட்டிப் போட்டுக் கொண்டு முன்னே ஓடி வந்தனர். ஏன் என்று கேட்டேன். இரண்டு பேரும் ஒரே கதையின் தலைப்பைச் சொன்னார்கள். இருவரில் யார் முதலில் அக்கதையைச் சொல்ல வேண்டும் எனப் போட்டிப் போட்டுக் கொண்டார்கள். நான் ஒருவனை மட்டும் தேர்வு செய்து கதைச் சொல்லப் பணித்தேன்.

 

“சார், ஒரு ஊருல ஒரு ஆமை இருந்துச்சாம்…”

“ஷபாஆஆஆஆ… இந்த ஆமைக்கு ஒரு விடிவு காலமே இல்லையாப்பா?”

“இருங்க சார், சொல்றத கேளுங்க,” என என்னை அதட்டினான். அவன் கவனம் முழுவதும் கதையைத் தன் நண்பனுக்கு முன்பே சொல்லிவிட வேண்டும் என்பதில் மட்டுமே இருந்தது.

“அந்த ஆமை இருந்துச்சுல… அது வந்து… சார் அங்கப் பாருங்க அவன் பழிச்சிக் காட்டறான்,” என்றதும் அவனுக்கு எதிரில் இருந்த இன்னொரு பையனைப் பார்த்து முறைத்தேன்.

“அப்புறம் சார், அந்த ஆமை இருந்துச்சுல… அது வந்து… சார் வினிஷா பாருங்க, மேசைய முன்னுக்குத் தள்ளுது,” என்று சொல்லிக் கதையை நிறுத்தினான்.

“அந்த ஆமை அந்த ஊருல… சார்! கவினேஷ் பாருங்க… குத்து காட்டறான்,”

இப்படியாக அவன் கடைசி வரை அந்த ஆமை கதையைச் சொல்லவே இல்லை. ஏன் என்று கேட்டால் அவனுக்கு அவ்வளவுத்தான் தெரியும் என்று சொல்லிவிட்டு எல்லாரின் மீதும் புகார் சொன்ன திருப்தியுடன் போய் அமர்ந்துவிட்டான்.

அவனுடன் போட்டிப் போட்டுக் கொண்டிருந்த இன்னொரு பையனைக் கதைச் சொல்ல அழைத்தேன்.

“என்னப்பா ஆமை கதையா?”

“இல்ல சார் இது முயல் கதை,” என்று அவன் கூறியதும் கொஞ்சம் மகிழ்ச்சியாக இருந்தது.

“ஒரு ஊர்ல ஒரு முயல் இருந்துச்சாம். அந்த முயலுக்கு ஒரே பசியாம்… அது சாப்பாடு தேடி அலைஞ்சிச்சாம்… அது ஒரு ராஜாவோட வீட்டுல நுழைஞ்சி சாப்பாடு இருக்கானு பாத்துச்சாம். அவரு ஆமை கறி சமைச்சி வச்சிருந்தாராம்…”

“தம்பி!!! திரும்பியும் ஆமையா?”

“இல்ல சார் இதுல அந்த ஆமை  செத்துருச்சி…”

“எப்படி அந்த ஆமை…?”

“அதுதான் மொத ஜெசிக்கா சொன்னுச்சு… அந்தக் கதையல ராஜாவோட கீரை கறிய சாப்டுச்சே அந்த ஆமை, அதை ராஜா கறி வச்சிட்டாரு சார்,”

எனக்குத் தூக்கி வாரிப்போட்டது. அவன் கைவசம் வைத்திருந்த கதையை நண்பன் சொல்லிவிட்டதால் அவனிடம் சொல்லக் கதை இல்லை என்றாலும் ஏற்கனவே சொன்ன ஒரு கதையை அப்படியே தொடர்ந்து கொண்டான் என்பது ஆச்சர்யமாக இருந்தது.

சில காலங்களுக்குப் பிறகு இப்பொழுதுதான்  சிறுவர்களின் உலகில் ஆமை இத்தனை வலிமை பெற்று வியாபித்திருப்பதைப் பார்க்கிறேன்.

“சரி, அந்த ஓட்டப்பந்தயம் திரும்பியும் வைச்சிருந்தால் ஆமை மீண்டும் ஜெயிச்சிருக்குமா?” என்று ஒரு கேள்விக் கேட்டேன்.

எல்லோரும் கையை உயர்த்தினார்கள். எல்லோரிடமும் பதில் இருந்தது.

பதில் 1: ஆமை எப்பவும் ஜெயிக்கும் சார்.

பதில் 2: இந்த முறை முயல் தூங்காது சார்.

பதில் 3: ஆமையும் முயலும் சேர்ந்து தூங்கிருக்கும் (சிரித்துக் கொண்டே).

பதில் 4: ம்ம்ம் தெரில சார், ஏன் போட்டி வைக்கணும்?

பதில் 5: நான் தான் சார் ஜெயிப்பேன்… நான் இவ்ள வேகமா ஓடுவேன் ( வகுப்பில் ஓடிக் காட்டுகிறான்)

எனது பதில்: முயலும் வெல்லும் ஆமையும் வெல்லும், முயலாமை என்றுமே வெல்லாது.

“அது என்ன சார் முயலாமை? புது மிருகமா?”

– கே.பாலமுருகன்

 

களம் இணைய இதழ் அறிமுகம்

இலக்கியத்திற்கான வெளியாக உருவாகியிருக்கும் ‘களம்’ இலக்கிய இணைய இதழ்:

http://www.kazhams.com

பல திசைகளிலிருந்து புறப்படும் இலக்கிய நகர்ச்சிகள் ஒரு நாட்டில் இலக்கியத்திற்கான வெளியை அதிகமாக்கும் என்கிற புரிதலுடன்தான் இவ்விணைய இதழை ஆரம்பிக்கத் தோன்றியது. எப்பொழுதுமே ஒரு குழுவாகச் செயல்படும்போது சில சமயங்களில் யாரோ ஒருவர் அக்குழுவை வழிநடத்த வேண்டிய தேவை உருவாகிறது. அதனாலேயே களம் இலக்கியக் குழுவாக மாற வேண்டியதன் அவசியத்தைப் பல மாதங்கள் சிந்தித்துக் கொண்டே இருந்தேன். இணைய இதழ் என்றும் வரும்போது அதற்கான குழு சார்ந்த கூட்டமைவுகள் மிகவும் குறைந்துவிடுகிறது. படைப்புகளைச் சேகரிக்க ஒருவர், திருத்தங்கள் செய்து அதனைப் பிரசுரிக்க ஒருவர் என இரண்டு பேரைக் கொண்டிருந்தாலே ஓர் இணைய இதழை நடத்திவிட முடியும் என்பதால் நானும் தினகரனும் இத்திட்டத்தைத் தொடங்க ஒப்புக் கொண்டோம்.

நண்பர் பாண்டியன் அவர்கள் ஆரம்பக்கட்ட களம் அச்சு இதழில் செயல்ப்பட்டதால் அவரிடம் இணைய இதழ் தொடர்பாகப் பேசினேன். இலக்கியம் சார்ந்த வேறு சில நடவடிக்கைகளில் ஈடுப்பட்டிருப்பதால் அவர் களம் இதழ் குழுவிலிருந்து விலகிக் கொள்வதாகத் தன் கருத்தை வெளிப்படுத்தினார். ஆகவே, ஏற்கனவே களம் சார்ந்து உருவான ஆசிரியர் குழுவில் நானும் தினகரனும் களம் இதழை இணையத்திற்குக் கொண்டு வந்தோம். முதல் இணைய இதழுக்குப் படைப்புகள் அனுப்பிய அனைத்துப் படைப்பாளர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இணைய இதழ் தொடங்கும் முன் களம் பற்றி எழுதிய அறிமுகப் பத்தி:

 

களம் சில நண்பர்களின் கூட்டு முயற்சியால், இலக்கியத்தை நோக்கி சமூகத்தை நகர்த்த வேண்டும்  என்பதற்காகத் தொடங்கப்பட்ட ஓர் இணைய இதழ். கடந்த 23.09.2017ஆம் நாளில் ஈப்போ நகரில் தோழி பதிப்பகத்தின் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. அவ்விழாவில் நான் சந்தித்த இலக்கியத்தின் மீது தீவிரமான ஈடுபாடு கொண்ட சில நண்பர்கள்தான் இவ்விணைய இதழ் தொடங்குவதற்கான ஊக்கியை எனக்குள் உருவாக்கிவிட்டார்கள் என்று சொல்லலாம்.

களம் இதழ் கடந்த 2014ஆம் ஆண்டில் அச்சு இதழாக வெளிவந்தது. நடுநிலை என்கிற புரிதலுடன் நான், தினகரன், அ.பாண்டியன் ஆகியோர் இணைந்து வடக்கின் இதழாகக் களம் இதழை உருமாற்ற எண்ணி முதல் இதழ் கொண்டு வந்தோம். வெற்றிக்கரமாக 1000 இதழ்களை நாடு முழுவதும் கொண்டு செல்ல இயன்றது. ஆனால், அடுத்த இதழைக் கொண்டு வருவதில் பல சிரமங்களை எதிர்க்கொள்ள நேர்ந்தது. இருப்பினும் களம் என்கிற இதழ் திட்டம் குறித்து அவ்வப்போது நானும் தினகரனும் தொடர்ந்து உரையாடியிருக்கிறோம். அவற்றுள் இணைய இதழாக மாற்ற வேண்டும் என்கிற திட்டமும் இருக்கவே செய்தது. ஈப்போ சந்திப்பில் அது உறுதியானது என்றே சொல்லலாம். இலக்கியம் என்பது அவரவர் மனத்திலிருந்து வலுப்பெற்று சமூகத்தை நோக்கி விரிவதாகும். கலந்துரையாடல்கள், இலக்கிய சந்திப்புகள், நூல் விமர்சனங்கள், இதழ் முயற்சிகள் போன்றவை இலக்கியத்தின் செயல்பாட்டு தளமாகும். அவ்வகையில் களம் இதழைப் புதிய எழுத்தாளர்களையும் வாசகர்களையும் , இப்பொழுது இயங்கிக் கொண்டிருக்கும் தீவிர எழுத்தாளர்களையும் வாசகர்களையும் இணைக்கும் ஒரு களமாக நாங்கள் பாவிக்கிறோம். இது அடுத்த கட்டத்தை நோக்கி இணையத்திலேயே உழன்று கொண்டிருக்கும் ஓர் இளைஞர் கூட்டத்தை அசைத்துப் பார்க்கும் என நம்புகிறோம்.

இதழ் ஆசிரியர்

கே.பாலமுருகன்

01.10.2017

கேலி வதையின் உச்சநிலை – ஆபத்தும் களையப்படுதலும்

கடந்த 2015ஆம் ஆண்டில் மட்டும் பள்ளிக்கூடங்களில் சுமார் 3000 கேலி வதை பிரச்சனைகள் ஏற்பட்டதாகத் தகவல் கூறப்படுகிறது. (http://smasanews.com/index.php/semasa/item/372-3-000-kes-buli-di-sekolah-direkod-pada-2015)

 

கடந்த ஜூன் 6ஆம் திகதி இரவு கேலி வதையின் கொடூரமான முகம் இன்னொரு உயிரைப் பறித்துவிட்டது. 18 வயது ஆகிய நவீன் என்கிற இளைஞர் ஐந்து பேர் கொண்ட இன்னொரு இளைஞர் கூட்டத்தால் கடுமையாகத் தாக்கப்பட்டு, குதத்தின் வழியாக போத்தல் சொருகப்பட்டு துன்பப்படுத்தப்பட்டுள்ளார். மூளை சாவு அந்த இளைஞருக்கு மட்டுமல்ல என்றே நினைக்கத் தோன்றுகிறது. இதுபோன்ற வன்கொடுமையாளர்கள் உருவாகக் காரணமாக இருக்கும் அனைத்து சூழலையும் முன்வைத்து சிந்திக்கும்போது மூளை சாவு அந்த ஒரு பையனுக்கு மட்டும் நிகழவில்லை என்றே சொல்லலாம். சமூகத்தில் மிச்சமாய் இருப்பதாக நாம் கனவு கண்டு கொண்டிருக்கும் மனிதநேயத்திற்கும் மூளை சாவு ஏற்பட்டுவிட்டது.

நவீன் என்கிற அவ்விளைஞரை விடாமல் தலைக்கவசத்தால் தாக்கியவர்கள் அவருடைய எதிரிகள் அல்லர்; அவருடன் ஒன்றாகப் பள்ளியில் படித்தவர்கள் என்பதுதான் கேட்கச் சங்கடமாக இருக்கிறது. படிக்கும் காலத்திலேயே பள்ளியில் நவீனைக் கேலி வதை செய்யும் பழக்கம் அக்குழுவிற்கு இருந்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது. அத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் இன்னமும் அவர்கள் மாறாமல் அதே கேலி வதை செய்யும் உணர்வுடன்தான் இருந்திருக்கிறார்கள் என்றால் இவ்விடயத்தில் யாரைக் குற்றம் சொல்வது? அத்தனை கொடூரமான மனம் படைத்த இயந்திரங்களைத்தான் உருவாக்கிக் கொண்டிருக்கிறோமோ என வருந்த வைக்கிறது.

கேலி வதை எப்படி உருவாகிறது?

தன்னைவிட பலவீனமானவர்களிடம் காட்டப்படும் அயோகியத்தனம்தான் கேலி வதை. தன் பலத்தைத் தன்னைவிட பலம் கொண்டவர்களிடம் காட்டும் வக்கற்றவர்களின் செயல்தான் கேலி வதை. அல்லது கூட்டமாகச் சேர்ந்துவிட்ட சிலர் ஒரு தனியனிடம் காட்ட முயல்வதையும் அப்படி வகைப்படுத்தலாம். இயல்பாகவே ஒருவனைப் பிடிக்காமல் போக பல உளவியல் காரணங்கள் சொல்லப்பட்டாலும், பிடிக்காமல் போனதை முன்வைத்து அவனைப் பகையாகப் பார்க்கும் 70% சதவீதம் ஆட்கள் அவர்களை நோக்கி கேலி வதையை நிகழ்த்துகின்றனர். இதற்கு முன்பு பலகலைக்கழகங்களில் கேலி வதையினால் தற்கொலை முயற்சி செய்ய முயன்றவர்களையும் தற்கொலை செய்து கொண்டவர்களை நாம் அறிவோம். இருந்தபோதும் கல்விக்கூடங்களில் ஏன் கேலி வதை செயல்களை நிறுத்த இயலவில்லை என்கிற கேள்வியே உருவாகிறது.

கேலி வதைக்கான துவக்கம்: அப்பாவின் பெயரைக் கிண்டலடித்தல்

வகுப்பில் அப்பாவின் பெயரைக் கிண்டலடிப்பதிலிருந்து கேலி வதை மெல்ல தலை தூக்கும். எப்பொழுதுமே அப்பாவின் பெயரை யாராவது கிண்டல் செய்தால் நமக்கு மிகவும் உணர்ச்சிவயமிக்க எதிர்ப்புணர்வு ஏற்படும். அதனைச் சீண்டிப் பார்க்கவே அப்பாவின் பெயரை வைத்துக் கிண்டல் செய்யும் ஒரு பழக்கம் ஆரம்பப்பள்ளி, இடைநிலைப்பள்ளிகள் காணப்படுகின்றன. இதுவே நாளடைவில் கேலி வதையின் உச்சத்தை நோக்கி நகர்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் பிள்ளைகள் பள்ளியில் பிற மாணவர்களின் பெயர்களைக் கேலி செய்வது, பிறரின் அப்பாவின் பெயரைக் கிண்டல் செய்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகத் தெரிந்தால் தயவு செய்து அதனை ஒரு சாதாரண பிரச்சனையாகப் பார்க்க வேண்டாம். அப்பொழுது அதுவொரு நகைச்சுவையான விசயமாகத் தெரிந்தாலும் நாளடைவில் உங்கள் பிள்ளைகளால் பிறர் உயிருக்கும் ஆபத்து வரலாம் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். அப்பாவின் பெயரைக் கிண்டலடிப்பதன் வாயிலாக ஓர் ஆபத்தான பகைமை உணர்ச்சி அவர்களுக்கிடையே எழுகிறது. அதுவே வன்முறைக்கு இட்டுச் செல்கிறது.

உடல் சுபாவங்கள்/ பழக்கங்களை முன்வைத்த கேலி வதை

பெண் தன்மை அதிகம் கொண்டிருக்கும் ஆண்களையும், ஆண் தன்மை அதிகம் கொண்டிருக்கும் பெண்களையும் கிண்டல் செய்யத் துவங்குவதும் கேலி வதைக்கான ஆரம்பம்தான். வகுப்பில் அத்தகைய மாணவர்கள் இருப்பின் அவர்களைக் கீழ்மையாக நடத்துவது நம் பிள்ளைகள்தான் என்றால் நம்ப முடியுமா? எங்கிருந்து அவர்கள் இதனைக் கற்றுக் கொண்டார்கள்? ‘பொட்டை’, ‘ஒம்போது’ என அவர்களைக் கேலியாக அழைப்பதன் முதலே இதுபோன்றவர்கள் கேலி வதை செய்வதற்குத் தயாராகிவிட்டனர் என்றே பொருள்படும். மற்ற உயிர்களின் சுபாவங்களை விமர்சிக்கவோ கேலி செய்யவோ நமக்கு உரிமை இல்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

குழுமனப்பான்மையின் விளைவு

வகுப்பில் மாணவர்கள் தங்களின் சிலரை நண்பர்களாகவும் மற்ற சிலரை எதிரிகளாகவும் வகுத்துக் கொள்வதும் கேலி வதைக்கு வழிவகுக்கும். இதுவே குழுமனப்பான்மையை உருவாக்கி அவனுக்கு ஒவ்வாத குழுவைத் தீவிரமாக எதிர்க்கவும் செய்யும். ஒருவேளை எதிரணி குழுவிலிருந்து ஒருவன் மட்டும் மாட்டிக் கொண்டால் அவனைக் கேலி வதை செய்யத் துவங்குவார்கள். அது மிகவும் ஆபத்தான வன்முறையாக வெடிக்கும். அல்லது அக்குழு இக்குழுவைச் சேர்ந்த மாணவர்களைத் தனியாகச் சந்திக்கும்போது தன் பழியைத் தீர்த்துக் கொள்ள முற்படுவார்கள். இதை ஆரம்பத்திலேயே தவிர்க்காவிட்டால், பழித் தீர்க்கும் உணர்வு மாணவர்கள் மனத்தில் ஒரு பழக்கமாகப் பதிந்துவிடும்.

எப்படிக் களைவது?

கேலி வதை தொடர்பான பிரச்சனையை நாம் ஒரு குற்ற செயலாக மட்டும் பார்க்கக்கூடாது. உளச்சிக்கல் தொடர்பாகவும் விரிவான உளவியல் ஆய்வாகவும் நாம் சிந்திக்கத் துவங்கினால்தான் அதனுடைய வேர்களைக் கிள்ளி எறிய முடியும். பலவீனமானவர்களைக் கீழ்மையாக நடத்தும், பலவீனமானவர்களிடம் வீரத்தைக் காட்ட முயலும், தனக்குக் கீழாக ஒருவன் மீது  வன்முறையைக் கட்டவிழ்த்துவிடுவதுதான் ஆண்மை என நினைத்துக் கொண்டிருக்கும், ஒரு ஆபத்தான பாரம்பரியமிக்க உணர்வை நம் மாணவர்களின் மத்தியிலிருந்து அகற்ற வேண்டும். அத்தூய்மைப்படுத்தும் நடவடிக்கையையே வீட்டிலிருந்து தொடங்குவதல் வேண்டும்.

பிற உயிர்களின் வேற்றுமைகளை அகவுணர்களை மதித்தல்

சக மனிதர்களை விரோதியாகப் பாவிக்கக்கூடாது என்கிற போதனையைச் சலிக்காமல் சொல்லிப் பழக்கப்படுத்த வேண்டும். கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், பிடிக்காவிட்டாலும்கூட இன்னொருவனைக் காயப்படுத்தும், மனதளவில் துன்பப்படுத்தும் அதிகாரம் நம்மிடம் இல்லை என வலியுறுத்த வேண்டும். மேலும், மனிதர்களின் வேற்றுமை குணம் உள்ளவர்கள் இருப்பார்கள்; அனைவரிடமும் சமரசமாகப் போக முடியாவிட்டாலும், அவர்கள் மீது வன்முறையைக் காட்டுவது; நிகழ்த்துவது கோழைத்தனம் எனத் தொடர்ந்து விடாமல் வீட்டிலுள்ள பிள்ளைகளிடம் சொல்லுங்கள். அவர்கள் மனத்தில் அன்பை விதையுங்கள்; பகைமையை அல்ல.

அரவாணிகள்/திருநங்கைகள் சக மனிதர்கள்தான் என ஆழப்பதித்தல்

நாம் வாழும் சமூகத்தில் திருநங்கைகள், பாலியல் தொழிலாளிகள், சிறார் தொழிலாளிகள், ஏழை எளியவர்கள், மாற்றுத் திறனாளிகள்,  பெண் தன்மை அதிகம் கொண்ட ஆண்கள், இப்படிப் பற்பல மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பெற்றோர்கள் வீட்டில் பிள்ளைகளிடம் மனம் திறந்து பேச வேண்டும். அவர்கள் யாவரும் பிறப்பாலும் சூழ்நிலையாலும் அப்படியாக்கப்பட்டவர்கள்; அவர்கள் மீது வெறுப்பை உண்டாக்கிக் கொள்ளக்கூடாது என அவர்களின் அகக்கண்களைத் திறந்துவிடுங்கள். இதுபோன்ற ஆட்களைச் சமூகத்தில் கவனிக்கும்போது சில பிள்ளைகள் அவர்களை அசூசையாகப் பார்க்கப் பழகிக் கொள்வதால்தான் தான் கல்விக் கற்கும் இடங்களில் அதுபோன்ற சுபாவங்களை ஒத்திருக்கும் சக நண்பர்களை இழிவாக நடத்த முயல்கிறார்கள் என சொல்லலாம்.

இவ்விரண்டையும் முதல் கட்டமாக ஒவ்வொரு பெற்றோர்களும் அமல்படுத்தினால் மட்டுமே, தன் ஒரே மகனை இழந்துவிட்டு அழும் நவீன் என்கிற இளைஞரின் தாயாரைப் போன்ற இன்னொரு தாயின் கண்ணீர் இம்மண்ணில் விழாது. தொடர்ந்து சிந்திபோம்; விவாதிப்போம்.

-கே.பாலமுருகன்

 

 

பேய் விடுதியில் ஒரு நாள்

நேற்று முன்தினம் யூ.பி.எஸ்.ஆர் மாணவர்களுக்குத் தமிழ்மொழிப் பயிற்சிப் பட்டறை நடத்துவதற்காகக் காலையிலேயே ஜாசின் நகரை வந்து சேர்ந்தேன். பரப்பரப்பில்லாத கடைத்தெருக்கள். 200 மீட்டருக்கு ஒருமுறை நாற்சந்தி வட்டம். மீண்டும் மீண்டும் தோன்றி நான்காக உடைந்து மீண்டும் ஒரு சிறிய தெருவையே காட்டி நின்றது. ஒட்டுமொத்தமாக 20 நிமிடத்திலேயே சுற்றிவிட முடிந்த சிறிய நகரம்தான். காலை உணவுக்குப் பிறகு பள்ளிக்குச் செல்லலாம் என முடிவெடுத்த பிறகு ஜாசின் சிறுநகரைச் சுற்றி உணவுக் கடை தேடி அலைந்தேன். திறக்கப்படாத கடைகள் ஒரு சலனமும் இல்லாமல் வெறுமனே தெரிந்தன. பசியுடன் சென்று பள்ளியிலேயே சாப்பிட்டுக் கொண்டேன். வயிறு ஒரு பக்கம் ‘புர்ர்ர்ர்ர்’ என காற்றை உள்ளிழுத்து எதையோ சமன் செய்து கொண்டிருந்தது. உரைப்பான உணவுகளை விட்டு இரண்டு மாதங்கள் ஆவதால் எனக்கு உணவு தேடுவதென்பது இப்பொழுதெல்லாம் சவாலாகிவிட்டது.

பட்டறையில் நான்கு மணிநேரம் உரையாற்றிய களைப்புடன் எனக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விடுதிக்குப் போய் சேர்ந்தேன். அப்பகுதியில் இந்த ஒரு விடுதிதான் என்று யாரோ சொன்னதாக ஞாபகம். அறை எண் 306 கிடைத்தது. வரவேற்புப் பகுதியில் ஒரே ஒரு மலாய் பெண்மணி அமர்ந்திருந்தார். அவரும் அதிகம் பேசவில்லை. விடுதி கொஞ்சம் பழமையாகத் தெரிந்தது. பெரும்பாலும் எனக்கு அதெல்லாம் ஒரு பிரச்சனை கிடையாது. கேரளாவில் ஒருமுறை கதவைத் திறந்ததும் கட்டிலில் விழும் அளவிற்கே மிகச் சிறிய அறையிலெல்லாம் தங்கிய அனுபவமுண்டு. ஆகவே, அப்பழமையான தோற்றம் என்னை எந்த அசௌகரிகத்திற்கும் ஆளாக்கவில்லை.

அறையைத் திறக்கும்போது உணவுக் கெட்டுப்போன ஒரு வாடை. அறைக்குள் அலசினேன். அப்படி ஏதும் தென்படவில்லை என்றாலும் இரவுவரை அந்த வாடை நீங்கவே இல்லை. சரி, அதையும் சமாளித்துக் கொள்வோம் எனறவாறு விட்டுவிட்டேன். தொலைக்காட்சி பெட்டி வழக்கத்திற்கு மாறாகக் கட்டிலிலிருந்து சற்று தொலைவாகவும் அரைப்பாதி சுவரை நோக்கியவாறும் இருந்தது. தொலைகாட்சி பார்த்துத் தொலைக்க வேண்டாம் என்பதற்காக அதை அங்கு வைத்ததைப் போல தெரிந்தது. கொஞ்சம் அசைத்து கட்டில் பக்கம் முழுவதுமாகத் திருப்பிவிட்டு, தொலைகாட்சியைத் திறந்தால் எல்லாம் ‘ஜேனல்களும்’ பொறி மிகுந்து இருந்தது. கீழே போய் புகார் செய்து யாராவது ஒருவர் வரும்வரை காத்திருந்து அதைச் சரி செய்து தொலைகாட்சியில் படம் பார்க்கும் அளவிற்கு உடலில் தெம்பு இல்லை.

சிறிது நேரம் கட்டிலில் சாய்ந்தேன். இரவு உணவுக்காக வெளியே போக வேண்டும் என்கிற சலிப்புடன் உறக்கம் தட்டியது. ஓர் எலி சட்டென அறைக்குள் புகுந்து பெரிதாகிக் கொண்டிருந்தது. அதன் உருவம் அறைக்கு நிகராக வளர்ந்து நின்றதும் எனக்கு மூச்சடைப்பு உண்டாகியது.  உடனே, சிரமப்பட்டு விழித்துப் பார்த்தேன். அபப்டியொன்றும் அங்கு இல்லை. வெறும் கனவுதான். ஆனால், மூச்சிரைத்துக் கொண்டிருந்தது. தூங்க வேண்டாமென முடிவு செய்துவிட்டு குளிக்கத் துவங்கினேன். ஆங்காங்கே கறை படிந்திருக்கும் குளியலறை. அநேகமாக இந்த அறையில் ஆட்கள் தங்கி பல மாதங்கள் ஆகியிருக்கலாம் என ஒரு நினைப்பு எழுந்தது. மீண்டும் அதே போல உணவுக் கெட்டுப்போன வாடை.

 

விடுதியைவிட்டு வெளியேறும்போது முதலில் வரவேற்புப் பகுதியில் இருந்த பெண் அப்பொழுது காணவில்லை. யாரும் இருக்கிறார்களா எனப் பார்க்கவும் எனக்குப் பொறுமை  இல்லை. வெளியேறும்போது குருவிகளின் இரைச்சல் பேரோசையாகக் கேட்டுக் கொண்டிருந்தது. எதிரில் தெரிந்த கட்டிடங்களிலும் மரங்களிலும் ஏதோ ஒரு வகை குருவிகள் பேரோசை கேட்டுக் கொண்டே இருந்தது. எனக்கு மிகவும் நெருக்கமான ஓர் இசை அது. சுங்கைப்பட்டாணி நகரமும் 1980களின் இறுதியில் இப்படித்தான் இருந்தது. சிட்டுக்குருவிகளின் நகரம் என என்னுடைய ஒரு கட்டுரையில் இக்குருவிகளைப் பற்றி எழுதியிருக்கிறேன். இரவு நேரத்தில் சுங்கைப்பட்டாணி ஒரு குருவிக்கூடாக மாறிவிடும். மின்சாரக் கம்பங்கள், கட்டிடங்கள் என எங்குமே குருவிகள் சூழ்ந்து கிடக்கும். அது எங்களுக்கு அசூசையாக இருந்ததே இல்லை. எப்பொழுதோ ஒரு நாளில் அல்லது ஒரு வாரத்தில் அக்குருவிகள் மீண்டும் சுங்கைப்பட்டாணி நகரத்திற்கு வரவே இல்லை. அத்தனை லட்சம் குருவிகளும் எங்குப் போயிருக்கும் என யாருக்குமே தெரியாது. எங்கள் நகரமே சூன்யமாகி நின்றது. அத்தனை காலங்களுக்குப் பிறகு இப்பொழுது மீண்டும் அதே போன்ற ஓர் உணர்வு கிடைத்தது. சிறிது நேரம் எங்கேயும் நகராமல் அந்த இசைக்குள் என்னைத் தொலைத்துக் கொண்டிருந்தேன். இருத்தல் உணர்வை இழக்க வைக்கும் ஓர் இசை. குருவிகள் விநோதமானவை. எப்பொழுது ஒரு குருவியைப் பார்த்தாலும் மனம் இலேசாகும்.

எங்குத் தேடியுன் இந்திய உணவகம் தென்படவில்லை. ஒரு குறுகிய பாலத்தைத் தாண்டி அடுத்த சாலையில் ஒரேயொரு இந்திய உணவகம் அதுவும் மூடியிருந்தது. வேறு வழியில்லாமல் விடுதிக்கும் எதிர்ப்புறம் இருக்கும் ஒரு சீனக்கடைக்கு வந்தேன். பழைய தோற்றமுடைய ஒரு கடை. பலகைகளில் கருமை படிந்திருந்தது. ஊதுபத்தி வாசமும் வெள்ளை பனியன் அணிந்திருந்த அக்கடை முதலாளியும் எனக்குக் கம்போங் ராஜாவை ஞாபகப்படுத்தின. காலம் மாறிவிட்டதாக எப்படிச் சொல்கிறோம்? வெறும் எண்களை வைத்து மட்டும்தானா எனச் சந்தேகம் சூழ்ந்து கொண்டது. சாப்பிட்டுவிட்டு வெளியேறும்போது சாலையில் வாகனங்களே இல்லை. ஆச்சர்யமாக இருந்தது. குக்கிராமங்கள்கூட இவ்வளவும் சீக்கிரம் அமைதியாகிவிடாது எனத் தோன்றியது. ஏன் இங்கு இத்தனை அவசரம்? ஒரு 24 மணி உணவுக்கடைகள் கூட தென்படவில்லை.

சாலையைக் கடந்து மீண்டும் விடுதியை நோக்கி நடந்தேன். அப்பொழுது விடுதியின் முழுத் தோற்றத்தையும் பார்க்க முடிந்தது. ஒரேயொரு அறையின் விளக்கு மட்டும் திறந்திருந்தது. நான் தங்கியிருக்கும் மாடியில் எந்த விளக்கும் எரியவில்லை. அநேகமாக இந்த விடுதியில் இன்றிரவு நானும் வேறு யாரோ ஒருவரும்தான் தங்கியிருக்கிறோம் எனத் தெரிந்தது. மேலேறி என் அறையிருக்கும் மாடிக்குள் நுழைந்ததும் அங்கு ஏற்கனவே இருந்த நிசப்தம் அதை உறுதிப்படுத்தியது. ஒவ்வொரு அறையின் கதவையும் கடக்கும்போது காதுகளைக் கூர்மையாக்கினேன். அப்படியேதும் ஆள் இருப்பதாகத் தெரியவில்லை. இதுபோன்ற விடுதிகளில் நான் தங்கியதே இல்லை. இதற்கு முன்பெல்லாம் சுற்றி யாராவது இருப்பார்கள். ஏனோ கொஞ்சம் படப்படப்பாக இருந்தது.

உள்ளே நுழைந்த பின் அறையைப் பரிசோதனை செய்ய மனம் தூண்டியது. தொலைகாட்சிக்குப் பின்னால் இருந்த திரைச்சீலையை விலக்கினேன். மேலே மூன்றடுக்குக் கண்ணாடி சன்னல் மட்டுமே. அதையும் திறக்க முடியாது. அதன் ஓரத்தில் எப்பொழுதோ புகைத்துப் போட்டிருந்த ஒரு சிகரெட் துண்டு. தொட்டுப் பார்த்தேன். சூடாக இல்லை. அப்பொழுதுதான் கொஞ்சம் நிம்மதி. அறையில் இருந்த எல்லா பொருள்களின் மீது அந்த உணவுக் கெட்டுப்போன வாடை படிந்திருப்பதைக் கண்டறிய முடிந்தது. அதெப்படி ஓர் அறையில் அந்த வாடை முழுவதுமாக ஆக்கிரமித்துள்ளது. மனம் என்னவோ கற்பனை செய்து பார்த்தும் பதில் பிடிப்படவில்லை. ஒருவேளை அறையை ஒழுங்காகச் சுத்தம் செய்யாமல் விட்டிருக்கலாம் எனத் தோன்றியது.

தொலைகாட்சியிலும் பார்க்க எதுவும் இல்லை. புத்தகம் ஒன்றை எடுத்து வாசிக்கத் துவங்கினேன். இரண்டு பக்கத்திற்கு மேல் போனதும் அசதி உடலின் அனைத்துக் கதவுகளையும் தட்டத் தொடங்கியது. தூங்கலாம் என விளக்கை அடைத்ததும் தொலைகாட்சிக்குப் பின்னால் இருக்கும் சன்னலிலிருந்து மட்டும் ஒரு சிறிய வெளிச்சம். முழு இருட்டில் அதனை நன்றாகக் கவனிக்க முடிந்தது. என்னவாக இருக்கும் எனக் கற்பனை மட்டுமே செய்து கொண்டு படுத்திருந்தேன். சென்று பார்க்கத் தோன்றவில்லை. அபப்டியே விட்டுவிட்டேன். முதன்முறையாக  தனிமை உணர்வை ஏற்படுத்திய விடுதி அதுவாகத்தான் இருக்கும். அத்தனை பெரிய விடுதி; மூன்று மாடிகள் கொண்டவை; எப்படியும் 200 அறைகள் இருக்கும் போல. அப்படிப்பட்ட இடத்தில் நான் மட்டும் இருப்பதைப் போன்ற உணர்வு அசௌகரிகமாக இருந்தது. வெளியேறினாலும் போகத் திக்கில்லை. இடமும் புதிது. வெளியிலும் ஒன்றுமே இல்லை.

கண்களை மூடி உறங்கத் துவங்கினேன். எப்பொழுது நினைவு தப்பி ஆழ்ந்த உறக்கம் செல்வேன் என நினைத்துக் கொண்டிருக்கையில் யாரோ கதவைத் திறக்க முயற்சிப்பதைப் போல ஒரு நினைப்பும் சத்தமும் கேட்டது. சட்டென விழித்தேன். அப்படியொரு சத்தமும் இல்லை. விளக்கைத் தட்டாமல் மீண்டும் உறக்கத்திற்குள் ஆழச் சென்றேன். அசதி உடலைப் பின்னிக் கொண்டிருந்தது. இப்பொழுது கதவைத் திறந்து யாரோ உள்ளே வந்தார்கள். என் கட்டிலுக்கு அருகில் இருக்கும் நாற்காலியில் அமர்ந்துவிட்டு என்னையே பார்த்துக் கொண்டிருந்தது அந்த உருவம். சட்டென அந்த உருவம் என் மீது பாய்ந்ததும் மீண்டும் மூச்சுத் திணறல். அதனிடமிருந்து தப்பிக்க முயல்கிறேன். கொஞ்ச நேரத்திலே அது கனவு என்றும் தெரிந்துவிட்டது. ஆனால், விழிக்க முடியவில்லை. கனவிலிருந்து தப்பித்து வெளியேற வேண்டும். உண்மையில் அறையில் யாரும் இல்லை என்பதைக் கனவிலிருந்து வெளியேறியப் பிறகுத்தான் உறுதிப்படுத்த முடியும் என நன்றாக உணர்கிறேன். மூச்சு அடைக்கிறதே தவிர ஆனால் விழிக்க இயலவில்லை.

வியர்த்த உடலுடன் கட்டிலிலிருந்து எழுந்தேன். உடனே, விளக்கைத் தட்டினேன். எத்தனை அசதியுடன் படுத்த நாட்களில்கூட தூக்கம் இந்த அளவிற்குத் தொந்தரவுக்குள்ளானதில்லை. அதுவும் இப்படி ஏதோ ஒன்று நம்மை அமிழ்த்தும் என யார் யாரோ சொல்லிக் கேட்டிருக்கிறேனே தவிர அனுபவித்ததில்லை. அந்த அறை எனக்குச் சரியாகப் படவில்லை, அந்த விடுதியே எனக்கு ஒவ்வாததைப் போன்று தெரிந்தது. என்ன செய்வது? தங்கித்தான் ஆக வேண்டும். மீண்டும் படுத்தேன். மீண்டும் அதே போன்ற கனவுகள். மீண்டும் விழித்தெழுதல். அப்படியே ஒரு முழு இரவு நிம்மதியில்லாமல் கழிந்தது. மறுநாள் அங்கிருந்து காலையிலேயே கிளம்ப வேண்டும். ஏற்றிச் செல்ல ஆள் வந்ததும் கீழே இறங்கி சாவியைக் கொடுத்தேன். அதே மலாய் பெண்மணித்தான் இருந்தார். என்னிடம் அதிகம் பேசவில்லை.

வாகனத்தில் ஏறிச் செல்லும்போது அவ்விடுதியைக் கவனித்தேன். எல்லாம் சன்னல் துணிகளும் மூடியிருந்தன. கடைசியாக ஒரு கனவு மட்டும் ஞாபகம் இருந்தது. ஒரு பூச்சி சுவரில் ஊர்ந்து கொண்டிருந்தது. பிறகு அங்கிருந்த ஓர் அலமாரிக்குள் நுழைந்தது. மீண்டும் இன்னொரு பூச்சி சுவரிலிருந்து வெளியே வந்தது. அது குளியறைக்குள் நுழைந்தது. இப்படியே பூச்சிகள் அறை முழுவதும் சூழ்ந்து கடைசியாக என் பெருவிரலில் ஏறியது. கால்களை உதறிக் கொண்டு எழும்போது காலை மணி 6.25. அந்தக் கெட்டுப்போன உணவின் வாடை வீச்சம் அதிகரித்து வீசிக் கொண்டிருந்தது.

  • கே.பாலமுருகன்,  07 ஜூன் 2017

 

குறிப்பு: இப்பதிவில் இடப்பட்டிருக்கும் படங்கள் உண்மையானதல்ல; இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை.

புதிய திட்டங்களும் பழைய நினைவுகளும் – 2016-லிருந்து 2017-க்கு

எப்பொழுதும் கடந்துபோன வருடத்தின் நினைவுகளையும் எதிர்க்கொள்ளப் போகும் வருடத்தின் திட்டங்களையும் எழுதுவது வழக்கமாகும். இன்றோடு (03.01.2017) நான் ஆசிரியர் பணிக்குள் நுழைந்து பத்தாண்டுகள் நிறைவடைகின்றன. 2016ஆம் ஆண்டு எனக்கொரு கத்திமேல் பயணம் மட்டுமே. விருதும் பதவியும் குவிந்தாலும் அதையும் மீறி புகழுக்குள் ஆழ்ந்துபோகாமல் தீமைகளால் மீட்டெடுக்கப்பட்டு நிதானமாக்கப்பட்டேன். எல்லோரும் வயதிற்குரிய வளர்ச்சி கிடையாது; எதுவுமே மெதுவாக நடக்க வேண்டும் ஆனால் உன் வாழ்க்கையில் நீ அடைந்திருப்பது வெகுசீக்கிரமான அடைவுகள் எனச் சொன்னார்கள்; அறிவுரைத்தார்கள். திரும்பிப் பார்க்கிறேன், அப்படியேதும் பெரிய சாதனைகள் எல்லாம் கிடையாது. என்னைப் பொறுத்தமட்டில் இவையாவும் எளிய முயற்சிகள் எளிய அடைவுகள் மட்டுமே.

கடந்த வருடத்தைக் காட்டிலும் வாழ்க்கையின் வேறு எந்த வருடமும் எனக்கு வாழ்க்கைக் குறித்த பக்குவத்தையும் தாங்கும் வலிமையையும் அளித்திருக்காது என்றே சொல்லலாம். என்னை வெறுப்பவர்களுக்கு மத்தியில் நான் வாழ்ந்து காட்ட வேண்டிய நிலைக்குள் தள்ளப்பட்டேன். அவ்விஷப் பரீட்சையை எதிர்க்கொண்டும் வருகிறேன். பொய்யான சிரிப்பும் பொய்யான பாராட்டும் பொய்யான ஆறுதலும் நிரம்பிய முகங்களைத் தாண்டி தாண்டி ஒரு பெரும்சிரிப்பினுள் ஆழ்ந்து கிடக்கிறேன். 2016 என்கிற எனது மிகச் சிறந்த ஆசானின் மூலமாக வாழ்க்கை அத்தனை எளிமையானதன்று என்பதை உள்ளூர உணர்ந்திருக்கின்றேன்.

வேறு என்ன சொல்வது? குடத்தில் அலம்பும் நீரைப் போன்ற மனத்துடன் விளக்கவியலாத/ சத்தமிடாத ஒரு பெரும் பாரத்தினைச் சுமந்து கொண்டு 2017ஆம் ஆண்டின் வாசலில் நிற்கிறேன். இவ்வருடம் பெரிதாகத் திட்டங்கள் இல்லையென்றாலும் ஒருசிலவற்றை தொகுத்துக் கொள்வதில் வசதியுறுகிறேன்.

நூல்கள்

இவ்வருடம் சிறுவர்களுக்கான நாவலின் மூன்றாவது பாகத்தை வெளியிட்டாக வேண்டும். இல்லையென்றால் எனது வாசக சிறுவர்கள் என்னைத் தொலைத்துவிடுவார்கள். அடுத்து, தோழி பதிப்பகத்தின் வெளியீடாக என்னுடைய ஒரு சிறுகதை தொகுப்பு விரைவில் வெளிவரவிருக்கின்றன. இதுவரை நான் எழுதிய அனைத்து சினிமா விமர்சனங்களையும் ஒரு நூலாகத் தொகுக்கு திட்டமுண்டு. இந்தாண்டின் நூல் திட்டம் இவ்வளவுத்தான். மேலும், இவ்வாண்டு மாணவர்களுக்காக 160 பக்கத்தில் கட்டுரை தொகுப்பு நூல் ஒன்றை டிசம்பரிலேயே சுடர் பதிப்பகத்தின் மூலம் வெளியிடப்பட்டது. கடுமையான உழைப்பில் 88 மாதிரிக் கட்டுரைகளும், 10 சிறுவர் சிறுகதைகளும், சிறுகதை எழுதும் வழிமுறைகளும் கொண்ட இவ்வாண்டிற்கான ஆரம்பக்கல்வி மாணவர்களுக்கான சிறந்த வழிகாட்டியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. மேலும், மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கும் தமிழ்மொழிப் பயிற்சி நூல் ஒன்றினையும் எழுதி வெளியிட்டுள்ளேன்.

பயணம்

இவ்வாண்டு ஊட்டி, கொடைக்கானல் போன்ற இந்திய மலைப்பிரதேசங்களுக்குச் செல்லத் திட்டமுண்டு. மேலும், வருட இறுதியில் ஐரோப்பா நாடுகளுக்குச் செல்லும் திட்டமும் உண்டு. ஆனால், இவையாவும் கைக்கூடி வரப் பலவகைகளில் வாழ்க்கை ஒத்துழைக்க வேண்டும் அல்லவா? வழக்கம்போல யூ.பி.எஸ்.ஆர் வழிகாட்டிப் பட்டறைகள் செய்யவும் திட்டமுண்டு. ஆனால், கடந்த காலங்களைப் போல் அல்லாமல் குறைத்துக் கொள்ளவும் எண்ணியுள்ளேன். இவ்வருடம் நிச்சயம் சிங்கை சென்று ஒருசில நண்பர்களைச் சந்திக்க வேண்டும் என்கிற எண்ணமும் உண்டு.

 

நட்பு வட்டம்

தற்சமயம் நவீன சிந்தனை இலக்கியக் கள நண்பர்களுடன் மட்டுமே இலக்கிய ரீதியிலான நட்பு வட்டம் உண்டு. சுவாமி பிரம்மாநந்தா சரஸ்வதி அவர்களின் வாசிப்பின் வழியாக உருவாகியிருக்கும் நண்பர்கள் மாதம் ஒருமுறை சந்தித்து இலக்கியம் சார்ந்து உரையாடி வருகிறோம். கெடா மாநில எழுத்தாளர் நண்பர்களுடன் அவ்வப்போது சந்தித்து வருகிறேன். அதனைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள வேண்டும். சுடர் பதிப்பகம், தோழி பதிப்பகம் அவர்களுடன் நூல்கள் திட்டங்களின் வழி உருவான நட்பும் தொடர்கிறது.

பல நட்புகள் மௌனத்துடன் விலகிக் கொண்டன. சில புதிய நட்புகள் வலுவான முறையில் இணைந்து கொண்டன. கடைசிவரை உடன் இருந்த நல்ல நண்பர்களை அன்போடு நினைத்துப் பார்க்கிறேன். எந்த விருப்பும் வெறுப்பும் இல்லாமல் பழகும் அவர்களின் நட்பு மட்டுமே நிலைத்திருக்கின்றன.

பிரிவுகள்

கடந்தாண்டு தங்கை புனிதாவின் பிரிவு மறக்க முடியாதது. மிகவும் நெருக்கமாக இருந்தவர். வாழ்க்கை எனக்குத் தத்துக் கொடுத்த உறவு. எதிர்ப்பாராத தருணத்தில் சட்டென பிரிந்தார். அத்துயரம் இன்றுவரை மனத்தை விட்டு நீங்கவில்லை. அதே போல நண்பரின் தந்தை, எழுத்தாளர் ரெ.கார்த்திகேசு, நண்பர் யோகேஸ்வரனின் தாயார் என இவர்களின் பிரிவுகள் மனத்தைத் துயரத்தில் ஆழ்த்தியது.

படைப்புகள்

தொடர்ந்து சிறுகதைகளில் கவனம் செலுத்த முடிவெடுத்துள்ளேன். உலக சிறுகதைகள் வாசித்து அதனைப் பற்றி எழுதவும் எண்ணமுண்டு. வாய்ப்பிருந்தால் வருட இறுதியில் இன்னொரு சிறுகதை தொகுப்பும் அல்லது ஒரு நாவலும் கொண்டு வரும் திட்டமுண்டு.

இப்படி அனைத்துமே திட்டங்களாக விரிகின்றன. வாழ்க்கை அதற்கேற்றாற்போல நெளிந்து வளைந்து வழிவிட்டால் மட்டுமே அது சாத்தியமாகும். வாழ்க்கை வேறு என்ன திருப்பங்களைக் கொண்டிருக்கிறது என்பதனைக் காலம்தான் காட்டும். அதை எதிர்ப்பார்த்துக் கொண்டு தொடர்ந்து பயணிக்கிறேன்.

ஆசிரியர் பணிகள்

ஒரு நல்லாசிரியராக மாணவர்களுக்கான என் பணியை இவ்வருடமும் துரிதப்படுத்த வேண்டும். வழக்கம்போல சில இலவச வகுப்புகள் செய்ய எண்ணமுண்டு. கல்வியில் பின்தங்கியிருக்கும் மாணவர்களுக்கான சிறப்பு வகுப்புகள் போன்றவற்றையும் கவனம் செலுத்தவுள்ளேன். உட்புற பள்ளிகளுக்கான இலவச யூ.பி.எஸ்.ஆர் பயிற்சிப் பட்டறைகள் திட்டமும் என் பட்டியலில் உண்டு.

ஒரு சிறிய வெற்றிக்காகக்கூட நான் எதிர்நீச்சல்தான் போட வேண்டும் என்பது முடிவாகிவிட்டது. வாழ்க்கை ஒரு குரங்கு வித்தையைப் போல. எவ்வளவு வலியாக இருந்தாலும் சிரிக்க வேண்டும்; சிரிப்புக் காட்ட வேண்டும். ஜோக்கர் வேடம் அணிந்து கொண்டிருப்பவன் மட்டுமே சகித்துக்கொள்ளப்படுவான்; ஏற்றுக் கொள்ளப்படுவான். ஒரு ஜோக்கருக்குள் இருக்கும் வேதனைமிக்க குரல்; உலகை நோக்கி கூவப்படும் ஒரு நம்பிக்கைமிக்க குரல் இருப்பதைப் பற்றி யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை.

‘ஆடி அடங்கும் பூமியிலே

நம்ம வாடி வதங்க தேவையில்ல

ஒருவாட்டி வரும் வாழ்க்கை

துணிவோமே அதை ஏற்க’

 

வழக்கம்போல இவ்வருடமும் துணிந்து நிற்கிறேன் இவ்வாழ்க்கையை ஏற்க; வாழ.

 

  • கே.பாலமுருகன்

எனது முதலும் கடைசியுமான எதிரியின் கதை

குறிப்பு: மனத்தைரியமும் வன்முறை காட்சிகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும் இருப்பவர்கள் மட்டும் வாசிக்கவும். தீபாவளி பொதுநல அறிவிப்பு.

“எதிரியை அவன் இடத்திலேயே சந்தித்து அவன் கேட்காமலே அவனை மன்னிப்பது எத்தனை ஆபத்தான செயல்?”

 

leave-a-reply-cancel-reply-pwunee-clipart

 

என் எதிரிகளை நான் தான் முடிவு செய்ய வேண்டும். எதிரிகளாக இருக்க அவர்களுக்கான தகுதிகளை நான் மட்டுமே தீர்மாணிக்கிறேன். ஆகவே, இவர்கள், இன்னார் என் எதிரிகள் என நீங்களே முடிவு செய்து கொள்ளாதீர்கள். அது அத்துமீறல்.

இன்று காலையில் எழுந்ததும் என் எதிரியைச் சந்திக்கக் கிளம்பிக் கொண்டிருக்கிறேன். நேற்றே இன்று அவனைச் சந்தித்து மன்னிக்க வேண்டும் எனத் தோன்றியது. நம் மூதாதையர்கள், புராணங்கள், தத்துவங்கள் எல்லாம் இந்த மன்னிப்பு என்ற ஒரு வார்த்தையைச் சொல்லிக் கொடுத்துவிட்டதாலே கொடூம்பாவிகளைக் கூட மன்னிக்க மட்டுமே மனம் ஒவ்வுகிறது.

என் எதிரிகள் வழக்கமாகவே சாமர்த்தியவாதிகள். அத்தனை சீக்கிரம் அவர்களை மன்னிக்கவும் மறக்கவும் இயலாது. நான் எடுக்கப் போகும் இந்த முயற்சி எனக்கே கூட ஆபத்தாக அமையலாம். என்ன செய்வது? சுற்றம் சூழ வாழத் தெரிந்தவர்களின் மிச்சம் நான். மன்னிப்பைக் கையெலெடுக்கும்போது மனம் நடுங்கியது. இத்தனை சுரணைகளும் எங்குப் போய் சுருண்டு கொண்டது? எங்கே வரட்டுக் கௌரமிக்க கோபம்? காலையிலிருந்தே காணவில்லை. இன்று என் எதிரிகளில் ஒருவனான அவனை நான் மன்னிக்கவில்லை என்றால் இனி எப்பொழுதும் அதற்கான சந்தர்ப்பம் அமையாது.

மகிழுந்தை முடுக்குகிறேன். எனது முதலும் கடைசியுமான ஒரே எதிரியை நோக்கி விரைகிறேன். அவன் நெருங்குவதற்கு அத்தனை எளிதானவன் அல்ல. எப்பொழுதும் ஏதோ ஒரு கோபத்துடன் மட்டுமே இருப்பான். கையில் ஆயுதம் இருக்கும். யாராவது தன்னைத் தாக்கினால் தற்காத்துக் கொள்ள எப்பொழுதும் ஆயுதத்துடன் தான் இருப்பான். ஒருவேளை என் மன்னிப்பை அவன் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் அந்த ஆயுதம் என்னை நோக்கி வரக்கூடும். எதற்கும் தயாராக இருந்தது மனம்.

மகிழுந்தை அவன் வீட்டின் அருகே நிறுத்துகிறேன். கால்களில் இலேசான நடுக்கம். மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு இறங்குகிறேன். எதிரியை அவன் இடத்திலேயே சந்தித்து அவன் கேட்காமலே அவனை மன்னிப்பது எத்தனை ஆபத்தான செயல்? கால்கள் அடியெடுத்து வைக்கத் தயங்கவில்லை. முன் வாசல் கதவைத் தள்ளுகிறேன். அவன் என் வருகையை அறிந்துவிட்டான். எதிரியின் சாமர்த்தியம் அது.

அவனும் வீட்டு வாசல் கதவைத் திறக்கிறான். மேலும் முன்னேறும்போது மனம் அளவில்லாமல் நடுங்கியது. அவன் முகத்தை நேருக்கு நேர் சந்திக்கிறேன். அவன் உதட்டில் புன்னகை இல்லை. அவனும் கீழிறங்கி வருகிறான். கையில் ஆயுதம் இருந்தது. முதலில் நானே சிரிக்கிறேன். பதிலுக்கு அவனும் எதிர்பாராதவிதமாக ஓரப்புன்னகை செய்கிறான். நான் மன்னிக்கப் போகிறேன் என அவனால் யூகிக்க முடிகிறது.

கையில் இருந்த விளையாட்டுத் துப்பாக்கியைத் தூக்கி எறிந்துவிட்டு ஓடி வந்து என் மீது தாவினான் என் எதிரியான அக்கா பையன் சிவனேசு.

“மாமா! உனக்கு என் மேல கோபம் இல்லயே? இனிமேல நீ கூப்டா வரமாட்டேனு சொல்ல மாட்டேன், சரியா?”

  • கே.பாலமுருகன்

அனுபவ பத்தி: நல்லவனாக இருப்பது எப்படி?

5ஆம் ஆண்டு படிக்கும்போதெல்லாம் வருடத் தொடக்கத்திலேயே எப்படி நல்லவனாக இருப்பது எனத் தெரிந்து கொள்ளும் முயற்சியில் இறங்கினேன். காலையில் எழுந்ததும் இன்று பள்ளியிலேயே நான் தான் மிகச்சிறந்த நல்லவனாக இருக்க வேண்டும் என சாமியை வேண்டிக்கொள்வேன். இன்று முதல் நான் நல்லவன் என்பதால் இரண்டுமுறை பல் துலக்கினேன். நல்லவர்களுக்குப் பல் பளிச்சென்று இருந்தால்தான் கவர்ச்சியாக இருக்கும்.

 

நான்குமுறைக்கும் மேல் கண்ணாடியைப் பார்த்து சிரித்து வைத்தேன். மூன்றுமுறை முட்டிகாலிட்டு சுவரைப் பார்த்து கடவுளை நினைத்து வணங்கினால் எல்லாம் பாவமும் மன்னிக்கப்படும் என ஏதோ ஒரு கோவில் பூசாரி சொன்னதாக பார்த்திபன் சொன்னதை அப்படியே நம்பியிருந்தேன். வீட்டுக்கு வெளியே வந்ததும் அன்று வீசியது புதிய காற்றேதான். உற்சாகமாக அன்று முழுவதும் நல்லவனாக இருக்கப் போகும் நாளை நினைத்து மகிழ்ச்சியுடன் பேருந்துக்காகக் காத்திருந்தேன். பேருந்தில் ஏறியதும் ஒரு நல்லவன் செய்யக்கூடியது என்னவாக இருக்கும்? ‘முள்ளு தலை மணியம்’ என இதுநாள்வரை கேலி செய்து தீர்த்த பேருந்து ஓட்டுனரைப் பார்த்து மரியாதையாக வணக்கம் சொல்லியாக வேண்டும். முடிந்தவரையில் அவரின் தலை முடியைப் பார்க்கவே கூடாது. அடுத்ததாக சக மாணவர்கள் நின்றிருக்க நேர்ந்தால் அவர்களுக்கு இருக்கையைக் கொடுத்துவிட்டு நான் நிற்க வேண்டும்.

 

எல்லோருக்கும் அன்று அமர்வதற்கு இடம் இருந்ததால் நான் நல்லவனாக இருப்பதற்கான சந்தர்ப்பங்கள் உருவாகவே இல்லை. பேருந்தைவிட்டு இறங்கும்போது வரிசை முட்டிக்கொண்டு திணறியது. உடனே அன்று புதிதாய் எனக்குள் பூத்திருக்கும் நல்லவன் அவன் வேலையைச் செய்யத் துவங்கினான். வரிசையை நேர்ப்படுத்திவிட்டு பிறகு வரிசைக்குப் பின்னால் நின்று கொண்டு அவசரமில்லாமல் இறங்கிய என்னை மணியம் அண்ணன் ஆச்சர்யமாகப் பார்த்தார் அவருடைய விநோதமான பார்வை என்னைக் கூச்சப்படுத்தியது. நல்லவனாக இருக்கும்போது கொஞ்சம் வெட்கமும் வரும் என நினைத்துக்கொண்டேன்.

 

நல்லவனாக இருப்பவனின் உடை எப்படி இருக்க வேண்டும் எனத் தெரியுமா? Complete uniform with tie. வெள்ளைக்காரத் துறை போல கழுத்துப் பட்டையைச் சுத்தமாக அணிந்துகொண்டிருக்க வேண்டும். கழுத்துவரை பொத்தான் கண்டிப்பாக அணியப்பட்டிருக்க வேண்டும். என் பள்ளியில் அப்பொழுது பல நல்லவர்கள் அப்படித்தான் இருந்தார்கள். 4 ஆம் ஆண்டு படித்த சமயத்தில் 20க்கும் மேற்பட்ட எம்.ஜி.ஆர் தத்துவப் பாடல்களைப் புத்தகத்தில் எழுதி மனப்பாடம் செய்து ஒப்புவித்த அனுபவம் இருப்பதான் அன்று நான் ஒரு நல்லவனாக இருக்க அது பெரிதும் உதவியது.

 

வகுப்பிலும் சிற்றுண்டி சாலையிலும் சிலருக்குக் கேட்கும்படியே பாடினேன். அப்படிப் பாடும்போது என் புருவம் சுருங்கி கண்கள் மூடும். அது நல்லவர்களுக்கான முகப்பாவனை என நினைத்துக்கொள்ளலாம். தத்துவப்பாடல்களைப் பாடும் பெரிய மோட்டர் பசுபதி அண்ணன் அப்படித்தான் செய்வார். அவரின் வெளுத்த முகத்தில் அவர் கண்கள் மூடி முகப்பாவனையை மாற்றுவதைப் பார்த்திருக்கிறேன்.

 

குறிப்பாக அன்று முழுவதும் கெட்ட வார்த்தைகள் பேசிவிடக்கூடாது என்பதில் குறிக்கோளாக இருந்தேன். நல்லவர்கள் பேசும்போது குரல் கம்மியாக ஒலிக்க வேண்டும். பண்பான வார்த்தைகளையே பயன்படுத்த வேண்டும். ஒருமுறை ஆசிரியரிடம் கேட்டப்போது அவர் அப்படித்தான் சொன்னார். வேண்டுகோள் வாக்கியத்தைத் தவிர நல்லவர்கள் வேறு எதையும் பயன்படுத்தி பேசக்கூடாதாம். என்ன கொடுமை என்றால் அன்று பிடிக்காதவனிடமெல்லாம் அடிப்பணிந்து போக வேண்டியதாகப் போயிற்று. அன்றைய தினத்திற்கு முதல்நாள் பெண் பிள்ளைகள் முன்பே என் மூக்கைப் பிடித்து இழுத்த தர்மேந்திரனைப் பார்த்து “சாப்பிட்டியா தர்மேந்திரன்?” எனக் கேட்க நேர்ந்தது. கொஞ்சம் கொஞ்சமாகச் சுற்றியுள்ள மாணவர்கள் என்னைக் கடுமையாகக் கேலி செய்யத் துவங்கினார்கள். கேலி செய்யபடும்போது நாம் சாந்தமாக இருந்தால் நல்லவனாகி விடலாம் எனப் பொறுமையாகவே இருந்தேன்.

 

ஆங்கில வகுப்பு முடிவடைந்ததும், அடுத்த பாடத்திற்கு ஆசிரியர் வரவில்லை. பின் வரிசையில் அமர்ந்திருந்த நான் ஆசிரியர் இல்லாத போது புத்தகம் படிக்கும் நல்லவனாக மாறியிருந்தேன். வகுப்பறை என்பதும் ஒரு சமூகம்தானே. ஆகையால் நல்லதுக்கு எதிரான கலகக்காரர்கள் அங்கும் இருக்கவே செய்தார்கள். மூன்று வகுப்பு நண்பர்கள் எனக்கு முன் வந்து நின்று புத்தகத்தைப் பிடுங்கியும், சட்டைக் காலரை இழுத்தும் எனது நல்லவனாக இருக்கும் திட்டத்தைக் களைத்தார்கள். கோபம் வந்ததும் ஒரே ஒரு கெட்ட வார்த்தைதான். உடலிலிருந்து ஏதோ கழன்று வீழ்ந்தது போல இருந்தது. காலையிலிருந்து நான் போர்த்தியிருந்த ஒரு வேடம் அவிழ்க்கப்பட்டது.

 

அதன் பிறகு பலமுறை பல வருடங்கள் இப்படி நல்லவனாக ஆகப் பார்த்து நான் செய்யும் நடவடிக்கைகள் மாறிக்கொண்டே வந்ததே தவிர ஒரு முழுநாளில் எப்படி நல்லவனாகவே வாழ வேண்டும் எனத் தெரியவில்லை.  இப்படித்தான் நல்லவன் ஆகும் முயற்சியிலேயே கிடப்பேன். இப்பொழுதும் கேள்வி எழுகிறது, எது நல்லது? யார் நல்லவர்? நல்லவர்களின் முகப்பாவனை எப்படி இருக்கும்? நல்லவர்கள் என்ன செய்வார்கள்? நல்லவர்கள் சாந்தமாகப் பேசுவார்களா? என்னைச் சுற்றி இருக்கும் மனிதர்களின் இயல்பில் நல்லது கெட்டது என அனைத்தையும் மீறி வேறொன்றும் இருக்கவே செய்கிறது. அதைத்தான் அடுத்ததாகத் தேடிக் தேடிக் களைக்கிறேன்.

 

கே.பாலமுருகன்,  May 2010

அசோகமித்ரனின் கண்ணாடி சிறுகதையை முன்வைத்து- சொல்வெளி கலந்துரையாடல்

156989925.IlwG1FBX

தமிழ் இலக்கிய சூழலில் அசோகமித்ரனின் மிகச் சிறந்த சிறுகதைகள் எனச் சொல்லப்படக்கூடிய புலி கலைஞன், பயணம் போன்ற சிறுகதைகளை வாசிக்க வாய்ப்புக் கிடைத்தபோது அசோகமித்ரனின் கதைஉலகம் தவிர்க்கப்பட்ட, நிராகரிக்கப்பட்ட, விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்ட மனித மனங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடியவை என கடந்தகாலங்களில் அறிய முடிந்தது. ஆனால், சொல்வெளி கலந்துரையாடலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இக்கதை முற்றிலும் அகோகமித்ரனின் வேறொரு கதை உலகத்திற்குள் இட்டுச் சென்றுள்ளது என்றுத்தான் சொல்ல வேண்டும். இங்கு அசோகமித்ரன் என்ற கதைச்சொல்லி வேறொரு அதிர்வலைகளை உருவாக்குகிறார். வேறொரு மனிதர்களைக் காட்டிச் செல்கிறார்.

கதைகளின் இறுதிநிலை எது? கதைகளுக்கு இறுதிநிலைகள் இருக்க வாய்ப்பில்லை. ஒரு நல்ல கதை, கதைக்குள் ஒரு கதைக்கான இடைவெளியை விட்டுச் செல்லும். வாசகன் அதற்குள் தீராத பயணத்தில் இருப்பான். வாசகனுக்கும் கதை எழுதியவனுக்குமான பிரக்ஞை களைந்து வாசகனுக்கும் கதைக்குமான ஓர் உறவு கொண்டாடல் ஏற்படும். அப்படியொரு மனநிலை முதல் வாசிப்பில் கண்ணாடி எனக்கு ஏற்படுத்தவில்லை. நான் வாசிக்கும் ஒவ்வொரு கதைக்குள்ளும் நான் என்னைத் தேடிப் பார்க்கும்போது கொடுக்கும் விளைவு இது. நான் மனித உணர்வுகளில் ஒரு கதை பயணிக்க வேண்டும் என ஆழ்ந்து நம்புபவன். கதையின் அடுக்குகளில் மனித உணர்வுகள் வாசகனை அதன் உச்சத்திற்கு நகர்த்திச் செல்ல வேண்டும் எனும் வாசகப் பிடிப்புள்ளவன். ஆகவே, புலி கலைஞன் போலவும், பயணம் சிறுகதை போலவும் அசோகமித்ரன் இக்கதையிலும் சத்தமான ஓர் உணர்வெழுச்சியை வைத்திருப்பார் என நினைத்து வாசிக்கும்போது அதற்கு எதிர்மறையான திசையில் கதை பயணிக்கிறது என்றுத்தான் சொல்ல வேண்டும்.

கண்ணாடி சிறுகதை அசோகமித்ரன் எப்பொழுதும் ஒரு நெருக்கடிக்குள்ளே வாழ்ந்து கழிக்கும் ஆண்களின் மன உலகை விரித்துக் காட்டுவதைப் போன்றுத்தான் இரண்டாவது வாசிப்பில் அறிய முடிகிறது. எந்த வேலையையும் நிரந்தரமாகச் செய்ய முடியாமல், வாழ்க்கையைத் திண்டாட்டத்திலேயே கழித்து முடித்த ஒரு பத்திரிகையாளர் தன் வாழ்நாளின் வயதால் விளிம்பில் நிற்கும் சூழலிலும் அலைக்கழிக்கப்படும், பொருந்தி நிற்க முடியாமல் தடுமாறும் நிலையைக் காட்டி கதை தொடங்குகிறது. அவருடைய ஆணவம் சட்டென உயிர்பெறுவதும் அதை இன்னொரு ஆண் முறியடிப்பதையும்கூட அசோகமித்ரன் கதைக்குள் காட்சிகளின் வழியாகக் காட்டுகிறார்.

ஆண்களின் உலகம் எதனுடனும் பொருந்தி நிற்க முடியாமல், திருப்தி கொள்ள முடியாமல், வாழ்நாள் முழுவதும் தனக்கான ஆணவத்தை அதிகாரத்தைத் தேடி திசையில்லாமல் அலைந்து கொண்டிருக்கும். அதுவும் வயதான ஆண்களுக்கும் பெண்களுக்குமான வாழ்வில் துணையில்லாமலும் வாழ முடிந்தவர்கள் பெண்களாக இருப்பார்கள். வீட்டில் ஒரு தனித்த பாட்டி பலநாள் உயிருடன் வாழ்வதைப் பார்த்திருப்போம். ஆனால், துணையில்லாமல் பிள்ளைகளுடன் நிம்மதியாக வாழும் ஒரு தனித்த தாத்தாவைப் பார்ப்பது அரிதாக இருக்கும்.

ஆணாதிக்க சமூகத்தில் தனக்கு அதிகாரம் உண்டு என அழுத்தமாக நம்புபவர்கள் ஆண்கள். கொடுக்கப்படவில்லை என்றாலும் ஒரு குறிப்பிட்ட வயது வந்ததும் தன் அம்மாவை அதட்டி ஆட்கொள்வதிலிருந்து ஓர் ஆண் தனக்கான அதிகாரத்தைப் பெற்றுக் கொள்கிறான். யாரும் அவனுக்குக் கொடுக்க வேண்டியதும் இல்லை. ஆகவே, அதனைப் பிடித்து வாழ்நாள் முழுவதும் தொங்கிக் கொண்டிருக்கும் கொஞ்சம் பிசிறடித்தாலும் தடுமாறி உருக்குழைந்து போகும் மிகவும் பலவீனமான மன அஸ்திவாரத்தைக் கொண்டவர்களே ஆண்கள் என நினைக்கத் தோன்றுகிறது. அப்படியொரு திருப்தியில்லாத, வெறுமையும் அழுப்பும் நிறைந்த ஓர் ஆணின் அகவுலகத்திற்குள் இக்கதை பயணிக்கிறது. வரண்டுவிட்ட ஒரு தொழில்நுட்பம் போல, கரகரவென பாடும் ஒரு வானொலியைப் போல, தட்டினால் ஓங்கி அடித்தால் சட்டென சத்தமிட்டுவிட்டு மீண்டும் காணாமல்போகும் பழைய தொலைக்காட்சியின் ஓளியைப் போல, வரட்சிமிக்க கடைசி நம்பிக்கையை ஒற்றைக் கையில் சுமந்து திரியும் ஒரு சராசரி ஆணை இக்கதையில் அசோகமித்ரன் காட்டுகிறார்.

கொஞ்ச பேர் மட்டும் வாசிக்கும் ஒரு முக்கியமான பத்திரிகைக்கு விளம்பரம் கேட்டு ஒரு நிறுவனத்திற்குச் செல்கிறார். அவரிடம் ஒரு தீர்க்கமான புலம்பல் மட்டுமே இருக்கிறது. இருப்பினும் ஆண் தன் அதிகாரத்தை நழுவவிடமாட்டான். எதாகிலும் ஒருவகையில் தன்னை நிரூபித்துக் கொள்ள வேண்டும் எனத் துடிப்பவன். அவருக்கு அத்தனை வெறுப்பிருந்தபோதும் தன்னை விட கீழான ஒருவனை அதாவது வாடகை கார் ஓட்டுனரிடம் தன் அதிகாரத்தைக் காட்டுகிறான்.

அதேபோல இன்னொரு ஆண் இன்னொரு சூழலில் இவனிடம் அதிகாரத்தைப் பாவிக்கிறான். தன்னுடைய அதிகாரத்தின்பால் அத்தனை ஆணவம் கொண்ட அவனுடைய இருப்பு அவ்விடத்தில் தடுமாறுகிறது. அதற்காகத் தன்னையே அலைக்கழித்துக் கொள்கிறார். இத்தனை அதிகாரமிக்க, அதிகாரத்தின் நூலிழையைப் பிடித்துத் தொங்கும் ஓர் ஆணைக் காட்டுவதைப் போல, தன்னால் எந்த முடிவும் எடுக்க முடியாமல் பிறரின் நிழலில் வாழும் ஆணையும் கதையாசிரியர் காட்டுகிறார். அந்த விளம்பர நிறுவனத்தின் அதிகாரி, தனக்கு எந்த அதிகாரமும் இல்லை; அதிகாரத்தின் நிழலில் வாழும் ஒரு சராசரி எனக் காட்டி நிற்கிறார். மூடிய கதவுக்கு மேலாக ‘ஆண்கள்’ என எழுதியிருந்தது என கதை முடிகிறது. ‘ஆண்கள்’ எனத் தனித்து எழுதப்படுவது கழிவறையில்தான். ஆகவே, அசோகமித்ரன் அவ்விடத்தில் ஓர் ஆழமான விமர்சனத்தைச் சத்தமில்லாமல் வைத்துவிட்டு கதையை முடிக்கிறார். முடிந்த அவ்விடத்திலிருந்து கதை சட்டென வேறொரு திறப்பை உருவாக்குகிறது.

கதையின் அக்கடைசி வரி கதையின் அழுத்தத்தைக் கூட்டுகிறது. அது ஒட்டுமொத்த கதையைத் தாங்கி நிற்கும் வரி. கதையில் வரும் அவருக்குப் பொருந்தாத கோர்ட்டு, அவரின் நுனிவிரலையும் கடித்து கொண்டு நிற்கும் பூட்ஸ் என தலையிலிருந்து கால்வரை ஆண்களுக்கு எப்பொழுதும் எதுவுமே பொருந்தி வழிவிடுவதில்லை என்பதைக் காட்டுகிறது. எல்லாம் பருவங்களிலும் ஏதோ ஒருவகையான சிக்கலுடன் திருப்திக் கொள்ளாமல் வாழும் ஒரு ஜீவன் ஆண்களே எனச் சொல்லத் தோன்றுகிறது.

ஜூன் சொல்வெளி கலந்துரையாடலில் படைக்கப்பட்ட கட்டுரை

கே.பாலமுருகன்

தைப்பூசம் – அதிர்ச்சி தகவல்கள்

குறிப்பு: ஒரு வருடத்தில் தைப்பூசத்தில் மட்டும் மொத்தம் 5 மில்லியன் லீட்டர் பால் சாக்கடையில் கலக்குவதாகத் தகவல் சொல்கிறது.

 

  1. வெடிகுண்டும் குண்டு வெடியும்

தொடர்ந்து இரண்டு நாட்களாகத் தைப்பூசத் திருத்தலங்களில் வெடிகுண்டு போடப்போவதாக பல தரப்புகளிலிருந்து தகவல்கள் வந்திருப்பதாக வாட்சாப் மூலம் செய்தி பரவிக் கொண்டிருக்கிறது. அது இருக்கட்டும், ஆனால், தைப்பூசத்திற்குத் தங்களின் நேர்த்திக் கடன்களைச் செலுத்த செல்பவர்களும் அவர்களுடன் செல்பவர்களும் அல்லது தைப்பூசத்திற்குச் செல்லும் பொதுமக்களும் முதலில் தயவு செய்து குப்பைகளைக் கீழே போடாதீர்கள். அவர்கள் வெடிகுண்டு போடுவது இருக்கட்டும், ஆனால், அதைவிட மோசம் தைப்பூசத்தில் பொதுசாலைகளையும் பொதுமக்கள் புலங்கும் இடங்களையும் குப்பைக் கூளங்களாக மாற்றிவிடுவது.

taipusam

நாம் கோவிலுக்கு அப்பால் உபயோகிக்கும் மற்ற பொது இடங்களும் சாலையும் இனவேறுபாடற்ற பொதுமக்களுக்குரியது. அவையாவும் மூன்று நாட்களில் குப்பைகள் போட்டு அலங்கோலமாக்கப்படுகின்றன. தைப்பூசத்தின் காவடி படங்களையும் பக்த பெருமக்களின் படங்களையும் நாளிதழில் பார்த்து இரசிக்கும் நாம் என்றாவது தைப்பூசம் முடிந்த நான்காவது நாளில் கோவில் வளாகத்தையும் தைப்பூச ஊர்வலங்கள் நடந்த வளாகத்தையும் பார்த்ததுண்டா? இனி வெடிகுண்டு அவ்விடத்தில் போடத் தேவையிருக்காது. அதன் தோற்றமே ஏற்கனவே வெடிகுண்டு போட்டு சிதைந்து சின்னாம்பின்னமாய் ஆனதைப் போலத்தான் காட்சியளிக்கும். மற்ற இனத்தவர்கள் இதனைப் பார்வையிடும்போது நம் மீதான அபிமானங்கள் பாதிக்கப்படும் என்பதும் உண்மையே. ஆகையால், தயவு செய்து நீங்களோ உங்கள் வீட்டைச் சேர்ந்தவர்களோ குப்பைகளைக் கீழே வீசும் போது ஒன்றை மட்டும் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள், சாலை என்பது உங்கள் சொத்து அல்ல; பொதுமக்களின் உபயோகத்திற்குரியது. அதனைச் சேதப்படுத்துவது என்பது நம் நடுவீட்டைச் சேதப்படுத்துவதற்குச் சமம்.

 

  1. போதைப்பொருள் விநியோகம்

 

அடுத்து, தைப்பூசத்தில் போதைப்பொருள் கைமாற்றம், விநியோகம் நடக்கவிருப்பதாகத் தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. போதைப்பொருள் விநியோகம் இருக்கட்டும், உங்கள் வீட்டுப் பெண்களைப் போதைப்பொருள்/மதுபானம் எடுத்துவிட்டு வந்து தைப்பூசத்தில் பக்தி வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கும் ஆண்களிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். அவர்கள் ஆபத்தானவர்கள் என்பதை நீங்கள் அறியாமலே அவர்களின் பாலியல் சேட்டைகளுக்கும் கிண்டல் கேலிகளுக்கும் உங்கள் வீட்டு பெண்களையும் சிறுமிகளையும் பலியாக்கிவிடாதீர்கள். வீட்டு ஆண்களுக்கு இதெல்லாம் தெரிவதில்லை. நீங்கள் வீர மீசையை முறுக்கிக் கொண்டு முன் நடக்க உங்கள் வீட்டுப் பெண்கள் பாதுகாப்பில்லாமல் இதுபோன்ற மதுபான அடிமைகளின் உரசலுக்குப் பலியாகிக் கூட்டத்தில் மாட்டி நசுக்கப்பட்டு வந்து கொண்டிருப்பார்கள். உங்களிடம் கேட்டால் ‘கூட்டம்னா அப்படித்தான் இருக்கும்’ என்று வீரவசனம் பேசுவதில் குறைச்சல் இல்லாமல் நிற்பீர்கள்

தைப்பூசத்திற்கு வரும் எல்லாம் ஆண்களும் அப்படியில்லை என்றாலும் யாருக்கும் இதுபோன்ற சந்தர்ப்பங்களை உருவாக்காமல் நீங்கள் கவனமாகக் கூட்டத்தைக் கையாள வேண்டும். கூட்டம் அதிகப்படி நெரிசலுக்குள்ளாகும்போது கொஞ்சம் நேரம் ஒதுங்கி காத்திருந்துவிட்டுப் போகலாம். பல ஆண்டுகள் அதே திருத்தலங்களுக்குப் போய்வரும் அனுபவத்துடன் உங்களால் எதையும் முன் அனுமானம் செய்ய முடியும். கிண்டல் கேலி செய்து பெண்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவதற்கென்று ஒரு கூட்டம் எப்பொழுதும் இலவச சேவையில் ஈடுபட்டிருப்பார்கள். அவர்களின் நன்னடத்தையும் நம்மையறிமால் இரசிக்கும்படி இருக்கும். அருகே சென்று பார்த்தால் ‘டாஸ் மார்க்’ வாசம் வீசும். அதை உணர்ந்து அவர்களிடமிருந்து விலகி நீங்கள் மேலும் பாதுகாப்பாக இருக்க முடியும்.

  1. தீவிரவாதிகளின் நடமாட்டம்

தீவிரவாதிகளின் நடமாட்டம் தைப்பூசத்தில் இருக்கப் போவதாகத் தகவல் பரவி வருகிறது. இனிமேல்தான் தீவிரவாதிகள் வர வேண்டுமா என்ன? பழித்தீர்த்தல் என்கிற அடிப்படையில் தைப்பூசங்களில் நடக்காத வெட்டுக் குத்தா? கொலையா? இதுவரைக்கும் கணக்கெடுத்தாலும் பல தைப்பூசங்களில் பல சண்டை சச்சரவுகள் கொலைகள் நடந்துள்ளன. தைப்பூசத்தில் தன் வீரத்தைக் காட்டச் சொல்லி முருக பெருமான் கந்தப் புராணத்தில் சொல்லியிருக்க வாய்ப்பில்லாத போது ஏன் தமிழ்ச்சமூகம் இதுபோன்ற விசயங்களுக்கு எதிர்வினை ஆற்றுவதில்லை? இதை ஒரு பெருமையாகக் கருதி இரசிக்கிறார்களோ?

“பார்டா என் வீட்டு ஆம்பளையா… என்னமா குடிச்சிட்டு ஆடுறாரு? என்ன ஒரு பக்தி?”

இப்படிப் பெருமைப்பட வாயைப் பிளந்து கொண்டு நிற்பீர்களோ?

“என் பாய் ப்ராண்டு பாரு காவடியெ அப்படியே தரையிலெ தேய்க்கும் அழகே அழகு”

அப்படியென்று இளம் பெண்கள் கூட்டம் இரசிக்க வேண்டும் என நம்ம அண்ணன் காவடியைக் கொண்டு தமிழ் சினிமா பாடலுக்குப் போடுவாரு பாருங்க ஒரு குத்து நடனம். யப்பாப்பா…என்ன பக்தி? திருவாசகத்திலும் திருமந்திரத்திலும் பக்திக்கான விளக்கம் அப்படித்தான் இருக்கிறதோ? சரி விடுங்கப்பா. காவடி தூக்கித் தன் காணிக்கையைச் செலுத்துவதில் தவறில்லை. ஆனால், அதில் ஒரு பக்தி மட்டுமே இருக்க வேண்டுமே தவிர ஆடம்பரமும் ஆர்பாட்டமும் அல்ல.

அதே போல குண்டர் கும்பல் சண்டைகள் நடக்கும் இடமாகத் தைப்பூசம் பல வருடங்களுக்கு முன்பிலிருந்து மாறி வருவதையும் அறிகிறோம். காவலில் இருக்கும் காவல்துறையினரின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு தன் பழியைத் தீர்த்துக் கொள்பவர்களும் இருக்கிறார்கள். அவர்களிடமிருந்து பாதுகாப்பாக இருங்கள். இதுதான் தீவிரவாதம் எனக் கருதுகிறேன். தீவிரவாதிகளை விடுங்கள்; நீங்கள் கொஞ்சம் தீவிரமாக உங்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்துங்கள். சந்தேகப்படும்படி எதையாவது பார்த்தால் உடனே காவல்துறைக்குத் தொடர்புக் கொள்ளுங்கள்.

தைப்பூசத்தின் மீது விழும் கட்டுக்கதைகளையும் அதிர்ச்சியான தகவல்களையும் விட்டுத்தள்ளுங்கள். முதலில் நாமே சீர்குழைத்து வைத்திருக்கும் தைப்பூசத்தை மாற்றியமைத்துக் கூட்ட நெரிசலுக்குப் பலியாகி மனமும் உடலும் பாதிக்கும் சம்பவங்களுக்கு இடமளிக்காமல் அமைதியுடன் தைப்பூசத்தைக் கொண்டாடுங்கள்.

யாரோ வேற்று இனத்தவர் ஒருவர் பத்துமலையில் இருக்கும் உயரமான முருகன் சிலையைப் பார்த்து இது தேவைதானா எனக் கேட்டதற்கு நமக்கெல்லாம் கோபம் வந்ததைப் போல, தைப்பூசத்தில் இனத்தையே அவமானப்படுத்தும் சம்பவங்கள் நடந்தால் அதற்கும் கோபப்படுங்கள். உங்களின் கோபம் பிறரை மாற்றக்கூடும்.

பின்குறிப்பு: இதுவரை தைப்பூசங்களில் நடந்த கொலைகளின் எண்ணிக்கை: வருடம் 1999 – 2015/ 21 கொலைகள், ஒரு கை வெட்டு)

கே.பாலமுருகன்

எப்பொழுது நீங்கள் கடைசியாகச் சிரித்தீர்கள்?

 

சிரிப்பது கடினமாக மாறிவிட்ட, சிரிப்பது வெட்கப்படும் ஒன்றாக மாறிவிட்ட ஒரூ சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எனக்கு தெரிந்து என் அப்பா அவரது கடைசி சில ஆண்டுகள் சிரிக்கவே மறந்திருந்தார். ஒருமுறை கூட அவர் எதற்காகவும் சிரித்துப் பார்த்ததில்லை. எப்பொழுது வாழ்க்கை அவரிடமிருந்து சிரிப்பைப் பிடுங்கியிருக்கும் என்பதை அறியவே முடியவில்லை. எந்தச் சூழல், எந்தத் தருணம், எந்தச் சம்பவம் அவர் சிரிப்பை வெறுக்கக் காரணமாக இருந்திருக்கும் எனத் தெரியாமலே போய்விட்டது.

4803151863_7e79782221

‘சிரிப்போம் வாருங்கள், சிந்திப்போம் வாருங்கள்’ என்ற ஒரு நிகழ்ச்சிக்காகச் சமீபத்தில் வேறு ஒரு காரணத்திற்காகப் போயிருந்தேன். நுழைவு கட்டணம் 30 ரிங்கிட். நிகழ்ச்சியில் பிரபலமான ஒரு பேச்சாளர் வந்திருந்தார். ஆங்காங்கே கொஞ்சம் வடிவேலுவின் நடையையும், கணவன் மனைவி குறித்தான கொஞ்சம் நகைச்சுவையையும் சேர்த்து மக்களைச் சிரிக்க வைத்துக் கொண்டிருந்தார். அதுவரை சிரித்துக் கொண்டிருந்த பார்வையாளர் ஒருவர் எதற்காகவோ அம்மண்டபத்தைவிட்டு வெளியே வந்தார். சட்டென அவர் முகத்திலிருந்த சிரிப்பு காணாமல் போனது. மீண்டும் முகத்தைக் கடுகடுவென வைத்துக் கொண்டு யாரிடமோ கத்திப் பேசிக்கொண்டிருந்தார். வெளியே இருந்த என்னை எதிர்க்கொண்ட போதும் அவரிடம் சிரிப்பு இல்லை. மீண்டும் உள்ளே சென்றதும் சிரிக்கத் துவங்கினார். இச்சம்பவம் என்னை மிகவும் பாதித்தது. அவரிடமிருந்து சிரிப்பை வரவழைக்க அவரிடமே 30 ரிங்கிட் வாங்க வேண்டியிருக்கிறது.

30 வெள்ளிப் பணம் செலுத்திவிட்டு வயிறு வலிக்கச் சிரித்துவிட்டு மீண்டும் தன் பழைய வாழ்க்கைகுள் நுழைந்து கொள்ளவே எல்லோரும் விருப்பப்படுகிறார்கள். வாழ்க்கையின் மிக வேகமான ஒரு சக்கரத்திற்குள் மாட்டிக் கொண்டவரகள் எப்பொழுது  உண்மையாகச் சிரித்திருப்பார்கள்? அப்படிச் சிரிப்பவர்களின் சிரிப்பு எப்படி இருக்கும்? தெரியவில்லை. ஆனால், ஏதோ சிரிப்பு வரும்போது சத்தமாகச் சிரிக்கப் பல நேரம் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். சத்தமான சிரிப்பு குறிக்கோளை முதுகில் கட்டிக் கொண்டு ஓடுபவர்களின் தியானத்தைக் களைத்துவிடுகிறது. சிரிக்கத் தெரியாதவர்களின் கோபத்தைக் கிளறுகிறது; சிரிப்பதற்கும் நடத்தைக்கும் தொடர்பிருப்பதாக நம்பிக் கொண்டிருப்பவர்களின் எரிச்சலை அதிகப்படுத்துகிறது; எதிரிகளின் பொறாமைகளைத் தூண்டுகிறது. சிரிப்பது அத்தனை பெரிய குற்றமாக விரிந்து நிற்கிறது.

ஒருமுறை, பரீட்சை மண்டபத்தில் சிரிப்பு வந்துவிட்டது. அப்பொழுது நான் ஆறாம் படிவம் படித்துக் கொண்டிருக்கிறேன். ஆப்பிளைச் சாப்பிட்டு வகுப்பில் திட்டு வாங்கிய ஒரு நண்பனின் நினைப்பு அப்பொழுது எப்படி வந்தது எனத் தெரியவில்லை. ஆனால், நிச்சயம் அந்த நினைப்பு எப்பொழுது வந்தாலும் என்னால் சிரிக்காமல் இருக்க முடியாது. சிரிப்பதற்கான நரம்பு மண்டலம் ஏதாவது உடலில் இருந்தால் நிச்சயம் அந்த நரம்பிலிருந்து அந்த ஆப்பிள் சம்பவத்தை அறுவை சிகிச்சை செய்து எடுக்கச் சொல்லிவிட்டிருப்பேன். அமைதியான ஒரு சூழலில் வெடி சிரிப்பைக் கேட்டதுண்டா? அன்று எல்லோரும் கேட்டு அதிர்ந்துவிட்டார்கள். பிறகென்ன? சிரிப்புப் பிறரிடம் தண்டனை பெறச் செய்யும் எனத் தெரிந்து கொண்டேன்.

அம்மா எனக்கு 10 வயது இருக்கும்போது சீனனைக் கல்லெறிந்தற்காக ஏசிக் கொண்டிருந்தார். அப்பொழுது அவருடைய முகம் கொஞ்சம் நகைச்சுவையாக இருந்ததற்கு நான் என்ன செய்ய முடியும்? அம்மாவிற்குக் கோபப்படவே தெரியாது. அப்படி அவர் கோபப்பட்டாலும் அது பொய்யாகவே இருக்கும். எங்கே நான் சேட்டைகளைத் திரும்பி செய்துவிடுவேன் என்ற பயத்திலேயே பொய்யாகக் கோபப்படுவார். அல்லது அப்பாவிடம் அடிவிழும் எனப் பயந்து அதற்கு முன்னாலேயே அவர் கடுமையாக நடந்து கொள்வதைப் போல நடிப்பார். அப்படி அன்று அம்மா ஏசும்பொழுது எனக்கு சிரிப்பு மட்டுமே வந்தது. தரையில் விழுந்து கட்டுப்படுத்த முடியாமல் சிரித்தேன். அப்பொழுது சட்டென நடு முதுகில் விழுந்த அடியை இன்னும் மறக்க முடியவில்லை. என் பெரிய அக்கா. அம்மா சொல்வதைக் கேட்காமல் அப்படி என்ன சிரிப்பு எனக் கடிந்து கொண்டார். சிரிப்பது தவறென உரைத்தது.

யாராவது தீவிரமாக நமக்கு அறிவுரை சொல்லிக் கொண்டிருக்கும்போது சிரிப்பு வந்தால் எப்படி இருக்கும்? அதுவொரு பயங்கரமான இக்கட்டான நிலை. சிரிப்பைச் சமாளிக்க முடியாமல் உதட்டின் வழியாகக் கசிந்து சிரித்துவிடும்போது அவர்கள் நம்மிடமிருந்து நட்பை முறித்துக் கொள்வதும் நடந்துள்ளது. ஆகவே, அறிவுரை கேட்கும்போது சிரிக்கக்கூடாது. சமூகத்தில் இப்படிச் சிரிக்கக்கூடாது என்பதற்குப் பல விதிகள் உண்டு. இப்படிப்பட்ட சிரிக்கக்கூடாது என்பதற்காக விதிகள் நிரம்பிய சமூகத்தில் எப்படி ஒரு மனிதன் சிரிப்பான்? பணம் கொடுத்து ஓர் அரங்கை நோக்கி சிரித்துவிட்டு வந்துவிடுகிறான். அல்லது பலநாள் அடக்கப்பட்ட தன் சிரிப்பை ஏதோ ஒரு சினிமாவின் மூலம் சிரித்து வெடித்து வெளிப்படுத்துகிறான். அது ஒரு சாதாரண காட்சியாகக்கூட இருக்கலாம்.

32d4349e0df97a29b0aa6cf5065efde7

எதார்த்தமான சம்பவங்களை நினைத்து சிரித்த காலம் போய், சிரிப்பதற்காக ஒரு சம்பவத்தை உருவாக்கும் நிலைக்கு வந்துவிட்டோம். முகம் தெரியாதவர்களிடம் நம் சிரிப்பைச் செலவு செய்ததில்லை. எதிரில் வரும் ஒருவரிம் சிரிக்கத் தயங்குகிறோம். சிரிப்பைச் சேமித்து சேமித்து அது உள்ளுக்குள் பெருகி வழிந்து கரைந்தும் விடுகிறது. 1906 ஆம் ஆண்டில் ‘ப்ரேட் கார்னோ’ நகைச்சுவை நிறுவனத்தில் சார்லி சாப்லின் சேரும்போது வாழ்க்கையில் வெறும் தோல்விவையை மட்டுமே ருசித்தவராக இருந்தார். நடிகனாக வேண்டும் என்ற அவருடைய ஆசை சிதைந்த தருணத்திலிருந்து நகைச்சுவையை ஏற்கிறார். அத்தனை வலிகளுடன் ஏழ்மையின் தகிப்பை சுகித்தப்படி மேடையில் ஏறி அத்தனை பேரையும் சிரிக்க வைக்கிறார். சிரிப்பு ஓர் ஆன்மீகமல்லவா? அதை ஏன் வெறுக்கிறோம்? நமக்குள் ஒரு சார்லி சாப்லின் இருக்கிறான். எந்தச் சோகத்திலும் சிரிக்கத் தெரிந்தவன். அவனைக் கொன்று விடாதீர்கள்.

  • கே.பாலமுருகன்

சர்ச்சை: ஆசிரியர்களும் இன்னொரு தோட்டக்காரர்களே

susunan bilik darjah

“சட்டையெல்லாம் சாயத்துடன், வியர்வை வடிந்து கொட்டும் முகத்துடன், கருவடைந்த கண்களுடன் பள்ளிக்கூடத்தில் நீங்கள் ஒருவரை சந்தித்தால் அவர் தோட்டக்காரர் என நினைத்துவிடாதீர்கள். அவர்கள் ஆசிரியராகக்கூட இருக்கலாம்.”

வருடம் தொடங்குவதற்கு முன்பே தன் விடுமுறையிலோ அல்லது விடுமுறையின் இறுதியிலோ தனக்கு வழங்கப்பட்டிருக்கும் வகுப்பறைக்குச் சாயம் பூசி, ஜோடித்து, அதற்கான அனைத்து வேலைகளையும் செய்து புதுப்பித்தல் பணியை மேற்கொள்வது ஆசிரியர்கள்தான். மேலும், பல பள்ளிகளில் அக்குறிப்பிட்ட ஆசிரியர்களே தனது சொந்த பணத்தைச் செலவிட்டு ஒரு வகுப்பறையை உருவாக்குகிறார்கள்.

நாம் வேலை செய்யும் அலுவலகத்தை நம் சொந்த செலவில்தான் புதுப்பிக்கிறோமா? ஆனால், தனக்கு வழங்கப்பட்டிருக்கும் வகுப்பறையைத் தன் சொந்த செலவில் சொந்த உழைப்பில் உருவாக்குவதுதான் ஆசிரியரின் பணியாக இருக்கின்றது. 7 லீட்டர் சாயம் ரிங்கிட் மலேசியா 35.00 வெள்ளியாகிறது என்றால் ஒரு வகுப்பறைக்கு 7 லீட்டருக்கு மேலேயே தேவைப்படும் சூழல் உண்டு. ஆசிரியர்கள் காலாட்டிக் கொண்டிருக்கிறார்கள் எனச் சொல்லும் அத்தனை பேரும் வருட இறுதியில் அவர்கள் வகுப்பறையைச் செதுக்கும் உழைப்பை ஒருமுறை வந்து கவனியுங்கள்.

12468128_569755399838697_1829164002_n

அதுவும் இந்த முறை 21 ஆம் நூற்றாண்டுக்கேற்ப வகுப்பறையை வித்தியாசமாக உருவாக்கப் பல ஆசிரியர்கள் விடுமுறைக்கே செல்லாமல் ஒவ்வொரு கணமும் வகுப்பறையை உருவாக்குவதிலேயே கவனம் செலுத்தி வருகின்றனர். இதைத் தியாகம் எனச் சொல்லிக்கொள்ளவில்லை. ஆனால், இதை ஒரு பணிச்சுமையாக நினைக்காமல் முகம் சுழிக்காமல் நம் பிள்ளைகள் நல்ல சூழலில் படிக்க வேண்டும் எனும் சிந்தனையுடன் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை எனப் புரிந்து கொள்ள வேண்டும். பள்ளியின் முதல் நாளில் உங்கள் பிள்ளைகளை வகுப்பறையில் விடும்போது ஒரு முறை அங்கு வீசும் சாயத்தின் வாசத்தையும் அதனூடாக வீசும் ஆசிரியர்களின் வியர்வையின் வாசத்தையும் முகர்ந்து பாருங்கள்.

பாராட்டப்பட வேண்டிய விசயங்கள்:

ஒரு சில பள்ளி நிர்வாகம் ஆசிரியருக்குத் துணையாகச் சில தோட்டக்காரர்களை நியமித்து வகுப்பறை உருவாக்கும் பணியை மேற்கொள்கிறார்கள். ஆசிரியர்கள் திட்டமிட அதற்கான வேலைகளைச் செய்யப் பணியாளர்களைப் பள்ளி நிர்வாகம் தருகிறது. உண்மையில் அதுபோன்ற நிர்வாகத்தைப் பாராட்ட வேண்டும்.

அடுத்து, வகுப்பறையை உருவாக்கும் செலவில் சில பள்ளி நிர்வாகம் கொஞ்சம் அல்லது பாதியை ஏற்றுக்கொள்கிறது. அனைத்து ஆசிரியர்களும் பணக்காரர்கள் அல்ல; பலரும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களே என்கிற எண்ணம் அப்பள்ளி நிர்வாகத்திற்கு உண்டு. தன்னிடம் வேலை செய்யும் பணியாளர்களைப் புரிந்து கொள்வதின் மூலம் ஒரு நிர்வாகம் சிறந்த தலைமைத்துவப்பண்பைப் பெறுகிறது என்றே நினைக்கிறேன். இதையும் நிச்சயம் நாம் பாராட்ட வேண்டும்.

இன்னும் சில பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களே இறங்கி ஆசிரியர்களுக்கு உதவுகிறார்கள். சோஷலிசம். ஏற்ற தாழ்வற்ற தலைமைத்துவம். பாராட்டப்பட வேண்டிய உதாரணமாகும். ஆண்டு முழுவதும் ஓர் ஆசிரியரின் உண்மையான உழைப்பைப் பெற ஒரு நிர்வாகம் தட்டிக் கொடுத்து வேலை பெறும் உத்தியையும் அங்கீகரிக்கும் மனத்தையும் பெற்றிருக்க வேண்டும். இல்லையேல் எவ்வளவு போராடினாலும் ஆசியர்களுக்கும் நிர்வாகத்திற்கும் ஓர் இடைவெளி இருந்து கொண்டிருக்கவே செய்யும்.

  • கே.பாலமுருகன்