சித்தி நூர்ஹலிசாவின் மகத்துவமான குரல்

தமது 16ஆவது வயதில் பாடத்துவங்கிய மலேசியாவின் புகழ்ப்பெற்ற பாடகர் சித்தி நூர்ஹலிசா ‘முன்பே வா’ பாடலை ரஹ்மான் கலை நிகழ்ச்சியில் பாடி மலேசிய இரசிகர்களின் மொத்த கவனத்தையும் தம் பக்கம் ஈர்த்துக் கொண்டார். நிகழ்ச்சிக்குப் போக முடியாவிட்டாலும் சமூக ஊடகங்களில் அவருடைய இக்குரல் ஒலித்துக் கொண்டே இருப்பதைக் கேட்டு இரசிக்க முடிகிறது. குறிப்பாக மற்ற மலாய் சகோதரர்களும் ‘முன்பே வா’ பாடலைத் தேடிப் பயிற்சி செய்து பாடத் துவங்கி எல்லைகளற்ற ஓர் இசை அலையை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அதுவரை இப்பாடலைப் பலமுறை கேட்ட நான் நூர்ஹாலிசா பாடிய பின்னர் அதைவிட அதிகம் கேட்கத் துவங்கியுள்ளேன். சித்தி நூர்ஹலிசாவின் இத்தனை ஆண்டு காலக் கலை ஆளுமையின் வெளிபாடுதான் மொழி, இனம் தாண்டி அம்மொழியிலுள்ள பாடலின் ஆன்மாவைத் தொட முடிந்திருக்கிறது. இளம் வயதிலேயே நூர்ஹலிசாவின் பாடலை மலாய் நண்பர்கள் பேசியும் பாடியும் கேட்டிருக்கிறேன்; அவருடைய பிரபலமான மலாய்ப் பாடல்களையும் கேட்டிருக்கிறேன். ஆனால், ரஹ்மான் உருவாக்கிய மேடையில் அவர் பாடிய இந்த ‘முன்பே வா’ பாடலின் வழி தீவிர இரசிகனாகிவிட்டேன் எனத் தோன்றுகிறது.

முன்பே வா siti Nurhaliza version என்கிற அலை கிளம்பிவிட்டது. இனி சில வாரங்களுக்கு இந்தக் காய்ச்சல் தொடரும். இன்னும் பல பாடல்களை நூர்ஹலிசா தமிழில் பாட வேண்டும். அவரின் குரல் மலாய் சகோதரர்களைத் தமிழ் இசையின் மீது கவனத்தைக் குவிக்கும்படி செய்துள்ளது. தமிழைச் சரியாக உச்சரிக்க முயன்றிருக்கும் அவருடைய கலை யத்தனம் போற்றுதலுக்குரியது. தமிழிசைக்குள் நுர்ஹலிசாவின் குரல் சற்றும் துருத்தலின்றி உள்நுழைந்து கரைந்து கொள்கிறது. சபாஷ்.

அவர் மலேசியாவில் பாடிய பாடலைக் கேட்க:

https://www.facebook.com/balabalamurugankesavan/videos/581291880511776

#sitinurhaliza #arrahmanconcert

குறுங்கதை மீதான வாசகப் பார்வை –கவித்துவத்தின் உச்சமும் புனைவின் ஆழமும்

‘நான் எழுந்தபோது, டைனோஸர் இன்னும் அங்கேயே இருந்தது’

– அகஸ்டா மாண்டிரஸோ

மேற்கண்ட குறுங்கதை ஆறே சொற்களில் அமைந்து தனக்குள் பற்பல அடுக்குகளை உருவாக்கிக் கொள்கிறது. வாசகன் ஒரு திறப்பிற்குள் போய்ச் சேராமல் இந்த ஆறு சொற்களின் கூட்டுக்குள் தனக்கான புரிதலை வெவ்வேறு கோணங்களில் கட்டியெழுப்பிக் கொள்ளும் வாசகநிலையை அடைய முடிகிறது. ஒரு ஹைக்கு போலவும் கவிதையின் முதல் கன்னியைப் போலவும் வடிவச் சுருக்கம் கொண்டிருந்தாலும் கடல்நீரை அள்ளி உள்ளங்கையில் வைத்துக் கொண்டு கடலைப் பிடித்துவிட்டதாகச் சொல்லும் குழந்தையின் ஒரு பரவசத்திற்குள் ஊடுபாய்ந்த மனநிலையை எட்டும் அனுபவத்தைத் தரவல்ல ஒரு குறுங்கதையைத்தான் அகஸ்டா மாண்டிரஸோ எழுதியுள்ளார்.

ஏன் குறுங்கதை என்கிற வடிவம் சிறுகதையைப் போல விரியாமலும் அல்லது கவிதையைப் போன்ற ஒரு கவித்துவ உச்சத்தை எட்டாத பாணியிலும் சுருக்கமாக அமைந்துவிடுகிறது என்கிற கேள்வியே ஆரம்பத்தில் வாசிக்கும்போது மனம் ஏற்படுத்திக் கொள்ள வாய்ப்புண்டு. ஆனால், குறுங்கதை இவை இரண்டிற்குமிடையில் அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சியைப் போன்றதே என்பதை அதை வாசித்துக் கடக்கையில் உணர முடியும். குறுங்கதை, கவிதையின் கவித்துவ உச்சத்திற்கும் சிறுகதையின் ஆழத்திற்கும் இடையே நின்று விரிந்து தனக்குள் இடமளிக்கும் இலக்கிய வடிவம் என்பதை என்னால் வாசிப்பின்போது உணர முடிந்திருக்கிறது. இவையிரண்டும் கிட்டாத குறுங்கதைகளைக் கடக்க முடியாமலும் போனதுண்டு. ஒரே வடிவத்திற்குள் கவிதைக்கும் சிறுகதைக்குமான ஒரு வாசக மனநிலையை அடையும் அனுபவத்தைக் குறுங்கதைகள் உருவாக்கித் தருகின்றன.

குறுங்கதைகளை வாசிப்பதிலும் இயற்றுவதிலும் விரிவற்ற ஒரு நிலைக்குக் குறுங்கதைகள் சார்ந்த பரவலான வாசகர் பரப்பு உருவாகாததும் காரணமாக இருக்கலாம். இம்மாதிரியான படைப்புகளை உரையாடுவதன் வாயிலாக அதன் மீது குவிந்துகிடக்கும் சிடுக்குகளை அவிழ்க்க முடியும்; இரசனையைக் கூட்ட முடியும் என்கிற சிந்தனையில் இன்று இளையோர்கள் மத்தியில் அகஸ்டா மாண்டிரஸோவின் மேற்கண்ட பிரபலமான குறுங்கதையைப் பகிர்ந்திருந்தேன். வழக்கமாக இலக்கியம் சார்ந்த இதுபோன்ற இரசனை உரையாடலில் நமக்குப் பல ஆச்சரியங்கள் நிகழும் என்பார்கள். வாசகப் பரப்பில் ஒரே படைப்பைச் சுற்றியுள்ளவர்கள் எப்படி தனக்குள் உள்வாங்கிக் கொள்கிறார்கள் என்பதன் கோணங்களை அறியும்போது ஏற்படும் திறப்பு குதூகலமானது.

‘நான் எழுந்தபோது, டைனோஸர் இன்னும் அங்கேயே இருந்தது’

இக்குறுங்கதையை அதிகம் மெனக்கெடாமல் நேரடியாகப் புரிந்துகொள்ள முயலும்போது நாம் அடையும் இடம் டைனோஸர் காலக்கட்டமாகும். அப்படியென்றால் ஒரு நவீன மனிதன் காலப் பயணம் செய்து டைனோஸர் காலக்கட்டத்திற்குச் சென்றுவிட்டான் எனப் புரிந்து கொள்ள நேரிடும். அப்படிப் புரிந்து கொள்ளும்போது இதுவொரு அதிர்ச்சியூட்டும் ஓர் அறிவியல் குறுங்கதை என்று மட்டுமே நின்றுவிடக்கூடும். இக்குறுங்கதைக்குள் அடுத்துக் கவனிக்க வேண்டிய சொல் ‘இன்னும்’ ஆகும். ஆகவே, அவன் எழுவதற்கு முன்பும் டைனோஸர் அங்கேதான் இருந்திருக்கிறது என்று அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். அப்படியென்றால் அவன் காலப்பயணம் செய்யவில்லையா என்கிற கேள்வியும் எழுகிறது. இக்குறுங்கதையின் வாயிலாக ஒருவன் அடையும் எளிய புரிதல் அடுத்த கணமே விந்தையென உடைந்து நிற்கும் சூட்சமத்தை எழுத்தாளர் ஆறே சொற்களில் உருவாக்க முடிந்ததற்குக் காரணம் இக்குறுங்கதையில் நிலவும் கவிதைக்கேயுரிய கவித்துவ எல்லைகளாகும்.

வாசகன் ஒரு புரிதலுக்குள் சிக்காமல் மீண்டும் குறுங்கதைக்குள் பயணித்துச் செல்ல இக்குறுங்கதை தன்னை விரிவாக்கி இடமளிக்கிறது. அடுத்து ஒரு வாசகன் என்ன மாதிரியான அனுபவங்களை அடைய முடியும் என்பதை இன்று இக்குறுங்கதையை வாசித்துத் தம் இரசனை பார்வையைப் பகிர்ந்து கொண்ட வாசகர்களின் புரிதலையும் சற்றுப் பார்ப்போம்.

அனிதா, அமெரிக்கா.

Inception படத்தைப் போல அவன் கனவுக்குள் இன்னொரு கனவில் சிக்கிக் கொண்டுள்ள ஒரு மனநிலையில் உள்ளான். இரண்டாவது கனவடுக்கில் அவன் டைனோஸரிடமிருந்து போராடி தப்பித்து வந்திருக்கக்கூடும். சட்டென இரண்டாவது கனவடுக்கிலிருந்து எழுந்து முதல் கனவடுக்கில் அந்த டைனோஸர் அங்கேயே இருப்பதைக் காண்கிறான் என்பதே இக்குறுங்கதை எனச் சொல்கிறார். இக்குறுங்கதையை ஓர் அறிவியல் படைப்பாகவே உள்வாங்கிக் கொண்டு அது உருவாக்கும் சாத்தியங்களின் எல்லைகளைத் தொட்டுச் செல்லும் பார்வை.

இன்னொரு கோணத்தில் இதே குறுங்கதையை வாசகர் அனிதா ஒரு குழந்தையின் மனோபாவத்திற்கு மாற்றிப் பார்க்கிறார். நான் கனவில் எனது டைனோஸர் பொம்மையைத் தொலைத்துவிட்டேன். கனவிலிருந்து எழுந்ததும் பார்க்கிறேன், எனது டைனோஸர் பொம்மை இன்னும் அங்கேயே இருந்தது என்பதாகவும் இருக்கலாம் எனச் சொல்கிறார். தொடக்கத்தில் இந்தக் குறுங்கதையின் மீதிருந்த அறிவியல் புனைவுக்கான சிடுக்குகளையும் புரிதல் சிக்கலையும் மிகவும் இலாவகமாகக் களைந்தெடுத்துச் செல்கிறார் அனிதா.

ராஜேஸ் கன்னி, பகாங்

அவருடைய கணிப்பில் இக்கதையில் ‘டைனோஸர்’ என்பது கதைமாந்தரின் வாழ்க்கையில் ஏற்பட்ட ஏதோ ஒரு நீங்காத துயரத்தையோ அல்லது ஏதோ ஒரு சிக்கலையோ குறிக்கிறது.

தூங்கி எழுந்ததும் துயரம் நீங்கி விடும் என மனித மனம் எதிர்நோக்க இன்னும் அந்தத் துயரம்  அப்படியே இருக்கிறது என எண்ணத் தோன்றுகிறது. முழுவதுமாக ராஜேஸ் கன்னியின் வாசக மனம் டைனோஸர் என்பதைக் குறியீடாக மாற்றிக் கொள்வதன் வாயிலாக எழும் புரிதல் இது. குறுங்கதைக்குள் இருக்கும் சில விந்தையான தருணங்களை வாழ்வியலாக மாற்றி ஏற்றுக் கொள்கிறார். இது முழுக்க வாசகனின் தேர்வாகும். அகஸ்டாவின் ஆகாயத்தை இவர் எளிமையாக்கி வாழ்வெனும் பெருவெளிக்குள் கொண்டு வந்துவிடுகிறார்.

காந்தி முருகன், கெடா

அகஸ்டோ மண்டிராசோவின் எட்டு சொற்களில் அடங்கிய குறுங்கதையில் இடம்பெறும் ‘டைனாசோர்’ என்கிற சொல் குறீயீடாகத்தான் தோன்றுகிறது. டைனோசர் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கொடுர மிருகங்கள். மனிதன் தனக்குள்ளேயே உருவாக்கிவிட்டிருக்கும் அரக்கக் குணங்கள், விட்டொழிக்க வேண்டிய எண்ணங்கள் யாவும் இன்னமும் அவர்களிடத்தில் ஓர் இராட்சத டைனோஸர் போல குடிக்கொண்டுதான் உள்ளன. மனித மனம் எத்தனை முறை ஆழ்நிலைக்குச் சென்றாலும் மீண்டும் மீண்டும் அதே தீய எண்ணங்களால் சூழ்ந்து கிடக்கிறன என்பதுதான் மீண்டும் விழிக்கையிலும் டைனோஸர் இன்னும் அங்கே இருந்தது என்பதற்கான படிமமாக மாறுகிறது.

நான் (நாம் ) எழுந்தபோது (தூங்கும் போதும் விழித்திருக்கும் போதும்) டைனோசர் (மனிதநேயமற்ற எண்ணங்கள் ) அங்கேயே (இன்னும் நமக்குள்) இருந்தது (விதைத்துக் கொண்டே உள்ளன).

எழுத்தாளர் காந்தி முருகனும் டைனோஸர் என்பதை எல்லையற்று விரியும் மனித மனத்தின் வன்மங்களின் குறியீடாக உருவகப்படுத்தி இக்குறுங்கதையை அணுகுகிறார்.

சுமித்ரா அபிமன்னன், சிலாங்கூர்

எட்டு சொற்களில் குறுங்கதை என்பதே வாசகனைச் சிந்திக்க தூண்டுவதற்காக எழுதப்பட்டதாகவே உணர்கிறேன். இக்குறுங்கதையைப் படித்து முடித்ததும் நமக்குள் தேடல் துவங்கி விடுகிறது. பலவாறான கோணங்கில் சிந்திக்கத் தூண்டுகிறது. பல போராட்டங்கள் நடத்தி விட்டு வென்று விட்ட களைப்பிலும் களிப்பிலும் ஓய்வெடுத்து நிகழ்காலத்திற்கு வரும் பொழுது அந்த வெற்றி நிஜமல்ல ஓய்வில் வந்த கனவே என்பதை இவ்வரிகள் உணர்த்துகின்றன. நமக்குள் அந்த டினோசோர் (குறியீடு) எப்படியெல்லாம் சமாளித்திருப்பார்/ போராடியிருப்பார் என்ற சிந்தனை கற்பனையாக வளர்ந்து கொண்டே போகிறது. இப்படியாகதான் இருக்க வேண்டும் என்ற ஒருநிலை வரவில்லை. அவருக்கும் டினோசோரும் நடந்த (flashback) போராட்டத்தைப் பற்றிய கற்பனை நம்மைப் போராட்டத்தில் தள்ளுகிறது. வார்த்தைகள் குறைய குறைய வாசகனின் கற்பனை விரிவடைகிறது.

சு.லோகேந்தினி, இளையோர்

ஒருவேளை அது பொம்மையாக இருக்கலாம்.மனம் கற்பனைக் காட்சியில் இலயித்திருந்த கணம் ஏதோ ஒருவழியில் தடை ஏற்பட்டு நிகழ்காலத்திற்கு அம்மனிதர் திரும்பியிருக்கலாம்.

விக்கினேஸ்வரன் பார்த்திபன், இளையோர்

எட்டே சொற்களில் அமைந்துள்ள இக்குறுங்கதை பல்வேறு கோணங்களில் நம்மை சிந்திக்கத் தூண்டுகிறது. மனித வாழ்வில் போராட்டங்கள், சவால்கள், துன்பங்கள் ஏற்படுவதென்பது இயல்பு. இவற்றை தீர்க்கவும் மறக்கவும் மனிதன் முயலாமல் அதையே சிந்தித்துக் கொண்டிருந்தால் அதிகப்படியான சிக்கல்களே வந்து குவியும். ‘நான் எழுந்தபோது, டைனோஸர் இன்னும் அங்கேயே இருந்தது’ என்ற வரியில் குறியீடாக விளங்கும் டைனோஸர், பிரச்சனையாகவோ, மறக்க இயலாத கொடூர சம்பவமாகவோ எண்ணுகிறேன். அதனைத் தனி மனிதன் மறப்பதற்கு எவ்வளவு முயன்றும் ஆழ்மனத்தில் அது நீங்காமல் தேங்கி நிற்கிறது. உலகில் டைனோஸர் இனம் அழிந்துவிட்ட போதிலும் மனிதனின் துயரங்கள் எளிதில் அழிவதில்லை.

சிறுவர்கள் சிலரும் இக்குறுங்கதையைப் படித்துத் தனது புரிதலைப் பகிர்ந்து கொண்டார்கள்.

ரஷ்மித்தா, அமெரிக்கா

கதாநாயகன் காலப்பயணம் மேற்கொண்டுவிட்டான். ஏதோ ஒரு கனவில் இருப்பதாக நினைத்துக் கொண்டு கண்களைத் திறக்கிறான். மில்லியன் ஆண்டுகள் கடந்து அவன் டைனோஸர் வாழ்ந்த காலத்திற்கு வந்துவிட்டான்.

ரஜித்தா, அமெரிக்கா

அவன் ஒரு டைனோஸருடன் போராடி மயக்கம் அடைந்துவிட்டான். பிறகு விழித்துப் பார்க்கும்போது அந்த டைனோஸர் அங்கேதான் இருந்தது.

பாவணன், மலேசியா

சட்டென டைனோஸர் ஒன்று கடலிலிருந்து எழுந்து வந்துவிட்டது. மனிதர்கள் ஆயுதங்களோடு அதனுடன் போர் செய்கிறார்கள். ஆனால், அந்த டைனோஸர் அனைவரையும் அழித்துவிடுகிறது. அவற்றிடமிருந்து தப்பித்த கடைசி மனிதன் மட்டும் மயக்கம் தெளிந்து எழுந்தான். அந்தக் கொடூர டைனோஸர் அங்கேயே இருந்தது.

பெரியவர்கள் ஒரு சிடுக்கிலிருந்து இன்னொரு சிடுக்கிற்குக் கதையைத் தமது வாசக மனத்தால் நகர்த்திச் செல்கிறார்கள் என்றால் சிறுவர்கள் அதனை எளிமையுடன் தன் உலகத்திற்குள் கொண்டு வந்துவிடுகிறார்கள். இத்தகைய குறியீட்டு நிகழ்வுகளையும் படிம மாறுதல்களையும் சாத்தியப்படுத்திக் காட்டக்கூடிய ஓர் இலக்கிய படைப்பே குறுங்கதைகள் என்கிற ஓர் இரசனை எல்லையை நம்மால் அடைய முடிகிறது. மேற்குறிபிட்ட புரிதல்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு கோணத்தையும் வேறு சில வாசகர்கள் கொண்டிருக்க வாய்ப்புண்டு. உரையாடுவதன் வாயிலாகவும் இரசனையைக் கூர்த்தீட்டுவதன் வாயிலாகவும் இலக்கிய புரிதல் உருவாக்கும் அதிசயங்களின் முன்னே பிரமித்துக் கொள்ள நேரிடும்.

-கே.பாலமுருகன்

வாழ்வினூடே கரையும் தருணங்கள் – 1: கேலியும் அப்பாவும்

பள்ளிப் பருவத்தில் அதிகம் கேலி செய்யப்பட்டது நமது அப்பாவின் பெயர்களாகத்தான் இருக்கும். கேசவன் என்கிற என் அப்பாவின் பெயரைக் கேசரி என்று கேலி செய்யும் நண்பர்கள்தான் வாய்த்திருந்தார்கள். அப்பொழுது கேலியில் மிகவும் சிறந்த இடத்தைப் பெற்றிருந்தது அப்பாவின் பெயர்களை மாற்றி உச்சரித்து நம்மை அவமானப்படுத்துவதுதான். அப்படியே குறுகிபோய்விடும் மனம்.

வகுப்பில் ஒவ்வொருவரின் அப்பாவிற்கும் இன்னொரு பெயர் வைக்கப்பட்டிருக்கும். அன்று நாம் சிக்கிவிட்டால் அந்தப் பெயரை வைத்துதான் கேலி செய்வார்கள். நம்மை அவமானப்படுத்தினாலும் தாங்கிக் கொள்ள முடியும்; ஆனால், நம்மைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு எங்கோ உழைத்துக் கொண்டிருக்கும் அப்பாக்கள் கேலி செய்யப்படுவதைச் சிலசமயங்களில் தாங்கிக் கொள்ள முடியாமல் போவதுண்டு. உச்சமான கோபத்திற்கே சென்றுவிடும் சூழலும் அமைந்துவிடும்.

அப்படியொருமுறை அப்பாவைக் கிண்டலடித்த வகுப்பு நண்பனை அடிக்கச் சென்று ஆசிரியரிடம் மாட்டிக் கொண்டேன். இதுபோன்ற சூழ்நிலையில் தவறு இழைத்தவனும் சேர்ந்து நம் மீது பழிப்போடுவதுதான் வேடிக்கையாக இருக்கும். நானும் அவனது அப்பாவின் பெயரைக் கேலி செய்தேன் என்று புகார் கொடுத்துவிட்டால் இருவரில் யார் சொல்வதை நம்புவது என்கிற குழப்பத்தை வெற்றிகரமாக ஏற்படுத்திவிட முடியும். தவறிலிருந்து தப்பிக்கும் சிறந்த உத்தி அது. இறுதியில் இருவரும் தண்டிக்கப்படுவதுதான் நடவடிக்கையாக இருக்கும்.

வீட்டிலிருக்கும் அப்பாகளுக்குக் கடைசிவரை தனக்கு இத்தனை கேலி பெயர்கள் உண்டு என்பது தெரியாமலேயே போய்விடும். ஆனால், எங்களோடு படித்த தோழி ஒருவள் மட்டும் அவளுடைய அப்பாவைக் கேலி செய்ததைப் பள்ளியில் மிகப்பெரிய பிரச்சனையாக மாற்றிவிட்டாள். அவளுடைய அப்பாவின் பெயர் மாணிக்கம். அப்பொழுது பாட்ஷா படம் வந்த காலக்கட்டம் என்பதால் ‘மானிக் பாட்ஷா என்று வகுப்பிலுள்ள சிலர் விடைத்ததற்காக அழுது ஆர்பாட்டம் செய்து அவளது அப்பா பள்ளிக்கு வந்து புகார் செய்யும் வரை அப்பிரச்சனையைப் பெரிதாக்கினாள். இதுபோன்று அப்பாக்களின் பெயர்களைக் கேலி செய்பவர்கள் சிலரின் மீது எனக்கிருந்த பலநாள் கோபத்திற்கு அன்றுதான் ஒரு தணிந்தநிலை ஏற்பட்டது. வகுப்பிலிருந்த ஏழு பேர் தலைமை ஆசிரியரிடம் மாட்டிக் கொண்டார்கள்.

அந்தப் பிரச்சனைக்குப் பிறகு மீண்டும் அப்பாக்களின் பெயரைக் கேலி செய்யும் போக்கு ஒரு சில மாதங்கள் இல்லாமல் இருந்தாலும் அவ்வப்போது சண்டையின்போது சில மாணவர்கள் அப்பாவின் பெயரைப் பயன்படுத்தி கேலி செய்வதை நிறுத்தாமல்தான் இருந்தார்கள். கேலி வதை இன்று பள்ளிக்கூடங்களில் பற்பல ரூபங்களில் வேட்டை நாய்களைப் போல உள்ளத்தைக் காயப்படுத்த உலாவிக் கொண்டிருக்கின்றது. ஆரம்பத்தில் அப்பாவின் பெயரை மாற்றி கேலி செய்வதில் தொடங்கும் இதுபோன்ற கேலி வதை பின்னர் வன்முறைக்கும் தூண்டுகின்றன. உள்ளத்தால் ஒருவனை அவமானப்படுத்துவது தாண்டி உடலாலும் கேலி வதைகள் எல்லை மீறுகின்றன.

ஆரம்பப்பள்ளிகளில் இதுபோன்று குடும்பத்தாரின் பெயரை மாற்றி கேலி செய்வது அல்லது மாணவர்களின் சொந்தப் பெயர்களைத் திரித்துக் கேலி செய்வது போன்றவற்றை பார்க்க/கேட்க நேர்ந்தால் உடனடியாக அதனைக் களைந்திட வேண்டும். கேட்க ஏதோ வேடிக்கையாகவும் நகைச்சுவையாகவும் இருந்தாலும் இதுபோன்ற கேலி வதைகள் காட்டப்போகும் அகோரமான முகங்களை இனி எப்பொழுதும் நம்மால் தடுக்க முடியாமல் போய்விடும்.

அப்பாவின் பெயர் இப்படிக் கேலி செய்யப்படுவதை நினைத்துச் சத்தமில்லாமல் அறைக்குள் அழுத நாள்கள் எனக்குள் ஏற்படுத்திய தாக்கம் இன்றும் நினைத்துப் பார்க்கும்போது வலியை உண்டாக்குகின்றன. அவமானம் என்பது அத்தனை சீக்கிரமாக நம்மை விட்டு விலகிவிடாது. அதுவும் சிறுவயதில் படும் அவமானங்கள் குழந்தைகளின் அழுகையைப் போன்று. அடம்பிடித்தாவது மனத்தினுள் தங்கிவிடும்.

-கே.பாலமுருகன்

சமூக நன்மதிப்பைப் பெறுவது எப்படி? – பாகம் 1

சமூக நன்மதிப்பைப் பெறுவது எப்படி?

வளர நினைக்கும் அனைவருக்கும் இக்கேள்வி முதன்மையாக மனத்தில் தோன்றும். சமூகத்திற்குள் ஓர் அங்கமான குடும்பத்தில் வளர்க்கப்படும் எல்லோருக்கும் தோன்றும் முக்கியமான கேள்வியும்கூட. வீட்டில் அப்பாவிலிருந்து அம்மாவரை அனைவரும் சொல்லும் வார்த்தையும் இதுவாகவே இருக்கும். நாளைக்குச் சமூகம் உன்னை மதிக்கும்படி வாழ் என்கிற கட்டளையைக் கேட்டுக் கேட்டுப் பழகியிருப்போம்.

சமூகத்தில் நீ மதிக்கப்பட வேண்டுமென்றால் நீ மருத்துவர், ஆசிரியர், வழக்கறிஞர் ஆக வேண்டும் என்கிற முதல் கட்டளை குடும்பத்தில் பிறப்பிக்கப்படும். பின்னர், அதே கட்டளையை ஊராரும் சொல்லிக் கேட்டிருப்போம். ஆக, மீண்டும் மீண்டும் சொல்லப்படும் அக்கட்டளை/விதிமுறை நம் மனத்தில் ஆழப் பதிந்து விடுகிறது. சமூகம் எதிர்ப்பார்ப்பதைப் போல ஆக வேண்டும் அதன் நன்மதிப்பைப் பெற்றுவிட வேண்டும் என்று போராடி கடைசியில் அப்படி ஆக முடியாமல் போகும் ஒவ்வொரு இளைஞனும் ஒரு தோல்வி மனப்பான்மைக்குள்ளாகுவதும் இந்தக் கட்டளைகளால்தான். கட்டளைகளை உற்பத்தி செய்தவர்கள்கூட மறைந்து போயிருப்பார்கள். ஆனால், அக்கட்டளைகளைக் காலம் முழுவதும் சுமந்து திரிந்த இளையோர் அதனால் பாதிப்பிற்குள்ளாகி சமூக மதிப்பை இழந்துவிட்டோம் என்கிற புரிதலுக்குள் தள்ளப்படுகிறார்கள்.

மருத்துவராக முடியாமல் மருத்துவ உதவியாளராகவும், வழக்கறிஞர் ஆக முடியாமல் வழக்கறிஞர் அலுவலகத்தில் வேலை செய்பவராககவும் வாழ்ந்து கொண்டிருக்கும் நம்மில் பலர் சமூகத்தின் முன் குருகி நின்றுவிடுகிறார்கள். தாம் வெற்றிப்பெற வில்லை என்கிற முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். சமூகம் என்றால் என்ன? வழக்கறிஞர்களும் மருத்துவர்களும் மட்டும் வாழும் மாளிகையா? முதலில் அதுபோன்ற மாயையிலிருந்து நம் இளம் தலைமுறையை விடுவிக்க வேண்டும்.

சமூகம் என்றால் என்ன? மனிதர்கள் விதிக்கப்பட்ட சில வரையறைகளைப் பின்பற்றி அவரவர் குடும்பத்திற்குள் வாழ்வது ஆகும். சமூக அமைப்பிற்கென்ற பல விதிமுறைகள் இருக்கலாம். ஆனால், அச்சமூகம் எந்தத் தனிமனிதனின் சுதந்திரத்தையும் கட்டுப்படுத்த இயலாது. விதிமுறைகளை உருவாக்கி அதன்படி பின்பற்றுவோர் தான் இந்தச் சமூகம் என்று அடையாளப்படுத்திக் கொள்வதற்கான வசதிகள் மட்டுமே சமூகத்தின் வழி நாம் பெறக்கூடிய வாய்ப்புகள் ஆகும். மற்றப்படி ஒவ்வொரு தனிமனிதனும் அவனுடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்கான முழு சுதந்திரம் பெற்றவன் என்பதை இளம் தலைமுறையினர் உணரும்படி செய்தல் வேண்டும். சமூகத்தை மீற வேண்டும்; சமூகத்தை அவமதிப்பு செய்ய வேண்டும் என்பதல்ல இவ்விவாதம்; சமூகத்தை மதி; சமூகத்திற்கு வாழ்; ஆனால், உன் வாழ்க்கையையும் சுதந்திரத்தையும் சமூகத்திடமும் சமூக மதிப்பீடுகளிடமும் கொடுத்து விடாதே என்பதையே இங்கே வலியுறுத்துகிறேன்.

சமூகம் 1960களில் சொன்ன ஒரு விதி இப்பொழுது நடைமுறையில் உண்டா? உதாரணத்திற்குப் பெண்கள் இரவில் வெளியில் செல்லக்கூடாது என்கிற விதி ஆரம்பகாலங்களில் சமூகத்தின் வழியாகக் குடும்பங்களில் தரவிறக்கம் செய்யப்பட்டுப் பின்பற்றப்பட்டும் வந்து கொண்டிருந்தது. ஆனால், அவ்விதி 1980களில் பெண்கள் தொழிற்சாலை வேலைக்குச் செல்லத் துவங்கியதும் உடைந்து போனதை எல்லோரும் அறிவோம். குடும்ப சவால்களை எதிர்க்கொள்ள பெண்கள் கூட்டம் கூட்டமாக தொழிற்சாலை வேலைக்கு இரவு பகல் என்று ‘shift’ அமைப்பில் செல்லத் துவங்கினார்கள். ஆக, சமூகம் விதிக்கும் விதிகளைச் சமூகமே மீறி மறுவடிவமைப்பு செய்து கொள்ளும்போது நம் வாழ்க்கையைத் திட்டமிட, வடிவமைத்திட ஏன் சமூக விதிகளைப் பிரதானமாக மேற்கொள் கொள்ள வேண்டும்? மேலும், அச்சமூகம் விதித்த விதிகளுக்கு முன் ஏன் தோல்வி அடைவதாக நினைத்துக் கொள்ள வேண்டும்?

இன்று மருத்துவர் இல்லாவிட்டாலும் தொழிலில் உயர்ந்து விளங்குபவர்களையும் சமூகம் மதிக்கத் தொடங்கியுள்ளதைக் காணலாம். ஆக, சமூக மதிப்பீடு என்பது மாறிகொண்டே இருக்கக்கூடிய ஒன்றாகும். அத்தகைய சமூக மதிப்பீடுகளை மாற்றியமைக்கும் வல்லமை நம்மிடம்தான் உண்டு. எத்தனையோ தனிமனிதர்கள் தங்களின் சாதனையால் சமூக மதிப்பீடுகளை மாற்றியுள்ளார்கள். சமூகம் நம்மை மதிக்காமல் போய்விடும் என்று பயப்படுவதைத் தவிர்த்துவிட்டு, சமூகத்தின் மதிப்பீடுகளைச் சீரமைப்பு செய்யும் வகையில் நாம் வாழ்ந்து காட்ட முயல வேண்டும்.

அதற்காக சோம்பேறியாக இருந்துவிட்டு சமூகம் என்னை மதிக்கவில்லை என புலம்புவதும் அபத்தம் என்பதை ஞாகபத்தில் கொள்ள வேண்டும். உங்களுக்கென்று ஒரு திறமை இருக்கும்; ஓர் ஈடுபாடு இருக்கும். அவற்றில் சிறந்து விளங்கினால் இதற்கு முன் சமூகம் நிர்ணயித்து வைத்திருக்கும் மதிப்பீடுகள் உடையும்.

அப்பேற்பட்ட பாரதியையே அவர் வாழ்ந்த காலத்தில் சமூகம் மதிக்கவில்லையே. ஆனால், இன்று இலக்கியம், மொழி, சமூகவியல், கல்வி என்று பாரதி பேசப்படாத இடங்களே அல்ல என்பதைக் கருத்தில் கொள்வோம்.

ஆகவே, சமூக நன்மதிப்பைப் பெறுவது எப்படி?

சமூகம் என்ன சொல்லும், சமூகம் என்ன நினைக்கும் சமூகம் மதிக்குமா என்கிற பயம் இல்லாமல் வாழ்ந்து உங்களின் தனித்துவ வழியில் வெற்றிப் பெற்றுக் காட்டுவதே சிறந்த வழியாகும்.

 

-கே.பாலமுருகன் 

2018ஆம் ஆண்டிலிருந்து 2019 ஆண்டிற்குள்

காலத்திற்கு ஒரு வயது கூடும்போது நாமும் உடன் பயணிக்க நேர்கிறது. வேண்டாம் என்று பின்னால் ஓட காலம் அனுமதிப்பதில்லை. நாமும் காலமும் ஒரே கூட்டிற்குள் வாழும் இரட்டையர்கள் போல. ஒருவரையொருவர் சார்ந்திருந்து நகர்ந்து போகும் எதார்த்தமிக்க பாதை. இப்பொழுது பயணம் நீள்கிறப் புள்ளியில் இருக்கின்றோம். ஒருமுறை பின்னால் திரும்பிப் பார்க்கக்கூடிய சந்தர்ப்பத்தையும் காலம் வழங்குகிறது.

2018ஆம் ஆண்டில் அப்படி என்ன செய்துவிட்டோம் என்று நமக்கு நாமே கேட்டுக் கொள்ள வேண்டிய மாபெரும் கேள்வியின் முன் நானும் தயக்கத்துடன் நிற்கிறேன். ஒவ்வொரு வருடமும் உருவாக்கும் திட்டங்களில் சில நடந்துவிடுகின்றன; சில நடத்த முடியாமல் போய்விடுவதுமுண்டு; சில எதிர்பாராமல் நடந்துவிடுவதும் உண்டு.

 

2018 ஒரு மீள்பார்வை

  1. சிறுவர் நாவல்

2018ஆம் ஆண்டில் சிறுவர் நாவல் பாகம் மூன்று என் திட்டத்தில் இருந்து அதனை நிறைவேற்றினேன். சிறுவர் உலகிற்குள் சென்றால் மட்டுமே சிறுவர் நாவலுக்குரிய மொழியும் அதனைக் கட்டமைக்கும் மனமும் வாய்க்கும். ஆனால், அதற்குக் கொஞ்சம் காலத்தாமதம் ஏற்பட்டே எழுத முடிந்தது.

 

  1. காட்சித் தொடர்பியல் துறை விருது

அன்னை வேளாங்கன்னி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, காட்சித் தொடர்பியல் துறை எனக்கு ‘தமிழ் நாயகர் தனி நாயகர்’ விருது கிடைக்கப்பெற்றது கடந்தாண்டின் மிகப்பெரிய அங்கீகாரமாகக் கருதுகிறேன். காட்சி தொடர்பியல் துறையைச் சேர்ந்த பேராசியர்களின் முயற்சியோடு நடத்தப்பட்ட அவ்விழாவில் எனது சிறுவர் நாவல்கள் விமர்சிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டதும், என் சினிமா நூல்கள் பேராசிரியர் திரு.வெற்றிச்செல்வன் அவர்களால் கருத்துரைக்கப்பட்டதுமே ஒரு படைப்பாளிக்கு மிக முக்கியமான களமாகும்.

  1. தமிழ்நாட்டு அரசு பாடநூலில் சிறுகதை

இவையனைத்தையும்விட கடந்தாண்டு என் படைப்புகளுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்கியது தமிழ்நாட்டுப் பள்ளிப் பாடப்பிரிவால் 11ஆம் வகுப்பு சிறப்புத் தமிழ் பாடநூலில் என் ‘பேபி குட்டி’ சிறுகதை தேர்வானதுதான் என்று சொல்லலாம். அதுவே தமிழக அரசு பாடநூலில் இடம்பெறும் முதல் மலேசிய சிறுகதையும் ஆகும். இதற்கு முந்தைய தலைமுறையினரில் இத்தகைய அங்கீகாரம் ஓர் இலட்சியமாக இருந்தது என்றும் அது இப்பொழுது நிறைவேறியதாகவும் மறைந்த எம்.துரைராஜ் அவர்கள் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு கூறினார்.

 

  1. பாரதி விருது

நாமக்கல் மாவட்டத்தில் ஆசிரியர் தினக் கொண்டாட்டத்தில் பல்திறன் கொண்ட ஆசிரியர்கள் பேராசியரியர்கள் விருதுகள் கொடுத்து அங்கீகரிக்கப்பட்டார்கள். அச்சூழலில் வெளிநாட்டில் வாழும் ஒரு தமிழருக்குப் ‘பாரதி விருது’ கொடுத்து அங்கீகரித்தார்க> அத்தகைய விருதையும் முதன்முறையாக பெற்றேன். பாரதி எனது ஆசான். இலக்கியத்தில் பாரதியின் வழியாக உள்ளே வந்தவன் நான். அத்தகைய ஆளுமையின் பெயரில் ஒரு விருது கொடுக்கப்பட்டப்போது பொறுப்பு இன்னும் கூடியுள்ளதாகவே கருதினேன்.

 

  1. இலக்கிய நட்பு ராம்சந்தர் – சுஜா செல்லப்பன்

2018ஆம் ஆண்டில் கிடைக்கப்பெற்ற மிக முக்கியமான இலக்கிய நட்பு சுஜாவும் ராம்சந்தரும் என்றே சொல்லலாம். அவர்களுடனான என் இலக்கிய உரையாடல்கள், விமர்சனங்கள் சமரசங்கள் இல்லாதவை. அவர்கள் இருவரும் முகத்துதிக்காகப் புகழும் தன்மை இல்லாதவர்கள். விரிவான இலக்கிய வாசிப்பும் கலை ஈடுபாடும் கொண்ட இரு நண்பர்களும் எதார்த்தமானவர்களாக இருந்தார்கள். ஒரு வட்டத்திற்குள் அல்லது ஒரு குழுக்குள் அடங்காமல் தன்னிச்சையாகச் செயல்படும் அவர்களின் இருப்பு எனக்கொரு பலமாகத் தெரிந்தது. ராமின் ‘அப்புவின் உலகம்’ என்கிற சினிமா இதழிலும் சுஜாவின் அரூவிலும் என் படைப்புகள் பிரசுரமாயின; பிரசுரமாகும். நான் தனித்து இயங்கும் ஒரு சுதந்திரமான படைப்பாளி. எனக்கென்று குழுக்கள் இல்லை; எனக்கென்று எழுத பத்திரிகைகளும் இல்லை. ஆக, சிங்கை நண்பர்களான இவர்கள் இருவரும் எந்த நிபந்தனைகளும் விதிமுறைகளும் இன்றி பழகுகிறார்கள். அவர்களின் வழியாக ஒரு நல்ல தரமான இலக்கியத் தடங்கள் நோக்கிப் பயணிக்கத் தோன்றியது; தோன்றுகிறது.

 

6. துவான்கு பைனுன் கல்லூரியில் சிறுவர் நாவல் பட்டறை

இதுவரை சிறுகதை பட்டறைகள் நடத்தி வந்த எனக்கு இவ்வாண்டு நாவல் பட்டறை நடத்த முதல் வாய்ப்புக் கிட்டியது. எதிர்கால ஆசிரியர் வர்க்கத்தின் மனத்தில் தமிழ் நாவல்கள், சிறுவர் நாவல்கள் குறித்த தேடல்களை விதைக்க முடிந்த அப்பட்டறை மறக்க முடியாத அனுபவமாகும். விரிவுரைஞர் மணியரசன் அவர்களின் ஏற்பாட்டில் அப்பட்டறை நடந்தேறியது.

மேற்கண்ட ஆறு விடயங்கள் 2018ஆம் ஆண்டில் எனக்கு மகிழ்ச்சியளித்தவை; என்னை நோக்கி என்னை நகர்த்தியவை என்றே சொல்லலாம். என்றாலும் இன்னும் ஏதோ நிறைவேறாமல் மிச்சமிருக்கிறது என்கிற உணர்வோடுத்தான் 2019ஆம் ஆண்டை நோக்கி நகர்ந்துள்ளேன்.

 

2019ஆம் ஆண்டின் திட்டங்கள்

 

இவ்வாண்டு எந்தத் திட்டமும் முன்னமே போடக்கூடாது என்பதே திட்டம் ஆகும். நடப்பவை நல்லதே; காலம் தன்னகத்தே பல விடைகளுடன் நம்மோடு பயணிக்கும். நிறைய வாசிக்க வேண்டும்; நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என்கிற தேடலோடு நகர்கிறது அடுத்த கட்டம்.

நன்றி.

 

கே.பாலமுருகன்

யூ.பி.எஸ்.ஆர் தேர்வு முடிவுகளும் ஆலோசனைகளும்

வருகின்ற வியாழக்கிழமைக்குத் தள்ளி வைக்கப்பட்டிருக்கும் ஆறாம் ஆண்டு மாணவர்களுக்கான யூ.பி.எஸ்.ஆர் தேர்வு முடிவுகள் குறித்துப் பல்வேறான ஆருடங்களும் கருத்துகளும் வெளிவந்த வண்ணமே உள்ள இவ்வேளையில் அத்தேர்வு முடிவுகள் குறித்துச் சில முன்னேற்பாடுகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று தோன்றியதில் இக்கட்டுரை உருவாகியுள்ளது. ‘Pass vs Fail’ என்கிற இரு முனைகளுக்கும் இடையே மாணவர்களைத் துரத்தும் நாள். அதிலிருந்து அவர்களை மீட்க நாம் போராட வேண்டியுள்ளது. ஆகவே, அது குறித்து நம் அகங்களைத் திறக்க முனைகிறேன். கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் அடுத்த தலைமுறைக்கு நாம் எதைக் கொடுக்கப் போகிறோம் என்பதில் நாம் ஒன்றுப்பட வேண்டியுள்ளது.

  1. மனத்திடம்

எப்பொழுதுமே தேர்வு முடிவுகள் குறித்து மாணவர்களுக்கு ஏற்படும் பயம் உண்மையில் அவர்களுடையதல்ல. பெற்றோர்கள், உறவினர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள், எதிர்த்த வீட்டுக்காரர்கள் என இன்னும் பலர் உருவாக்கும் எதிர்ப்பார்ப்பின் விளைவுகளே மாணவர்களின் மனத்தில் பயம் என்கிற ஒரு தடுப்பை ஏற்படுத்திவிடுகிறது. வயதிற்கு மீறி ஏற்படும் அச்ச உணர்வால் அவர்கள் சூழப்படுகிறார்கள். ஒரு சிலருக்கு மாணவர்களின் தேர்வு முடிவுகள் கௌரப் பிரச்சனையாகவும் ஆகிவிடுவதால் அப்பயம் மேலும் அழுத்தமாக மாணவர்களின் மனத்தில் ஊடுபாய்ந்து கொள்கிறது. ஆகவே, பெற்றோர்கள் தயவு செய்து தேர்வு முடிவுகள் குறித்து மாணவர்கள் முன் அதிகம் பரப்பரப்பையோ பயத்தையோ காட்டிக் கொள்ளாதீர்கள். நம்மை விட மனதளவில் குழந்தைகள் பலவீனமானவர்கள்; நம்மைவிட அவர்களின் பயம் ஆபத்தானது என்பதால் தேர்வு முடிவுகளைத் துணிவுடன் எதிர்க்கொள்ளும் பக்குவத்தை அவர்களிடத்தில் ஏற்படுத்தவும்.  யூ.பி.எஸ்.ஆர் தேர்வு என்பது வாழ்க்கையை நிர்ணயிக்கும் களம் அல்ல; ஆரம்பப்பள்ளிக் கல்வியின் ஒட்டுமொத்த மதிப்பீட்டில் ஒரு பகுதி மட்டுமே என மாணவர்களுக்குப் புரிய வைக்கவும். பயத்தோடு இருக்கும் மாணவர்களின் பயங்களைப் போக்கும் பொறுப்பு நம்முடையது என்று உணரக் கேட்டுக் கொள்கிறேன். வியாழக்கிழமைக்குள் அவர்களின் மனத்தைத் திடப்படுத்த முயலுங்கள். அதீதமான எதிர்ப்பார்ப்புகளை மாணவர்களின் மீது திணிக்காதீர்கள்.

 

2. மதிப்பீட்டின் யதார்த்தம்

 

ஓர் ஆண்டு முழுவதும் மிகவும் திறமையுடன் கற்கும் ஒரு மாணவன் தேர்வு நாளின்போது ஏற்படும் சிறிய தடுமாற்றம், பதற்றம், உடல்/மன நல நிலைத்தன்மை பிசகல், போன்ற பல்வேறான புறச்சூழல் தாக்கங்களால்  ஏற்றம் இறக்கம் ஏற்பட வாய்ப்புண்டு. ஆகவே, ஒரு மாணவனின் முழு கெட்டிக்காரத்தனத்தை அளக்கும் கருவி ‘தேர்வு’ மட்டுமே என்கிற முடிவுக்கு வரும் பழக்கத்தை நாம் கைவிட வேண்டியுள்ளது. மதிப்பீடு என்பது ஒரு நாள் தேர்வில் நிர்ணயிக்கப்படுவதல்ல. ஆண்டு முழுவதும் அல்லது ஆறாம் ஆண்டு வரையிலும் (ஆறு ஆண்டுகள்) கண்கானிப்பு, கற்றல் நடவடிக்கையில் ஈடுபாடு, விளையாட்டு, சுறுசுறுப்பு, பங்கேற்பு என ஒரு மாணவனின் ஒட்டுமொத்த மதிப்பீட்டில் ‘தேர்வு’ ஒரு பகுதி மட்டுமே என்கிற நம் புதிய கல்வி அணுகுமுறையைப் பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு அப்பால் மாணவர்கள் செல்ல வேண்டிய தூரம் இன்னும் உள்ளது. அவர்களை நிரூபித்துக் கொள்ள நாம் மேலும் வாய்ப்பைத் திறக்க வேண்டுமே தவிர யூ.பி.எஸ்.ஆர் தேர்வு முடிவுகளைக் காட்டி அவர்களின் ஆளுமையைச் சுருக்கிவிடுதல் கூடாது. இங்குக் குறைந்த தேர்ச்சிப் பெறும் மாணவனுக்கு நாம் கொடுக்கும் ஊக்கம் நாளை வெற்றியாக மாறலாம்.

 

 

3. சொல் பிரயோகம் 

வியாழக்கிழமை தேர்வு முடிவுகளைப் பெறும் மாணவர்களை நாம் விமர்சிக்கும்போது நாம் உபயோகிக்கும் வார்த்தைகளின் மீது கவனம் தேவை. அவர்களின் மனத்தையும் உள்ளுக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் ஆற்றலையும் சாகடிக்கும் சில வார்த்தைகள் ஒவ்வொரு காலத்திலும் பலர் பயன்படுத்திக் கேட்டதுண்டு.

– நான் தான் சொன்னனே நீ எங்க உருப்படப் போறேனு…

– இது எங்கத் தேரப்போது…

– அவ்ளதான் இனிமேல் நீ…

– அதான் அப்பவே சொன்னேன்டா படிச்சாதானே…

இப்படியாக இன்னும் கொடூரமான வார்த்தைகளும் உண்டு. இவ்வாண்டு நாம் நம்மை மாற்றிக்கொண்டால் என்ன? ஒரு குழந்தையின் வாழ்க்கையில் எப்பொழுது திருப்பம் உண்டாகும் என நம்மால் கணிக்கவே இயலாது. கடைசி வரிசை மாணவர்களே இன்று வாழ்க்கையில் சாதித்தவர்களாக உள்ளார்கள் என்கிற நிஜம் நாம் அறியாததா? நாம் போட்ட விதை நிச்சயம் நல்விளைவைக் கொடுக்கும். ஆனால், அதற்கான காலமும் நேரமும் நம்மால் யூகிக்க முடியாமல் இருக்கலாம். நல்வார்த்தைகள் கொண்டு அவர்களின் மனத்தைத் தேற்ற யாரும் முன்வரமாட்டார்கள். பெற்றோர்கள், நண்பர்கள், உறவினர்கள் தவிர அவர்களை யார் தூக்கி நிறுத்த முடியும்.

“சரிடா அடுத்த முறை பார்த்துக்கலாம். உன்னால முடியும்”

“கவலைப்படதேமா… இது ஆரம்பம்தான் அடுத்த பரீட்சையில நீ யாருனு காட்டு”

இப்படி நீங்கள் உதிர்க்கும் வார்த்தைகள் அவர்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போடலாம் அல்லவா? சொல்லுக்கு இல்லாத சக்தியா?

 

4. பத்திரிகை நண்பர்கள்

பத்திரிகை நண்பர்களுக்கும் என் வேண்டுகோள் 8ஏ என்பது மட்டுமே கொண்டாட்டத்திற்குத் தகுதியான வெற்றி கிடையாது. தேர்வில் பங்கெடுத்த அனைத்து மாணவர்களுக்கும் உற்சாகமூட்டும் பதிவுகளைக் கொண்டு வாருங்கள். வழக்கமாக தேர்வு முடிவுகள் வெளியான மறுநாள் ‘8ஏ’ கொண்டாட்டங்கள் தொடர்பான செய்திகள் மட்டுமே பிரசுரம் ஆகும். இவ்வாண்டு ஏன் நீங்கள் வரலாற்றை மாற்றியமைக்க முடியாது? மிகவும் பின் தங்கிய நிலையில் இருந்து தேர்வில் முன்னேறியிருக்கும் ஒரு பள்ளிக்கு ஒரு மாணவனை அடையாளம் கண்டு அவனைப் பேட்டிக் காணுங்கள்; அல்லது அவர்களைப் பற்றிய செய்தியைப் பிரசுரியுங்கள். இதுவரை இல்லாத ஒரு முயற்சியாக இருக்கும். வெற்றி என்பதன் அர்த்தத்தையே நாம் ‘ஏக்களை’ கொண்டாடி மறக்கடித்துவிட்டோம். சிறு சிறு அடைவுகள் கூட அங்கீகாரமின்றி அழிந்துவிடுகின்றன.

 

பின் குறிப்பு:

வரும் வியாழக்கிழமை வெளியாகும் தேர்வு முடிவுகள் குறித்து உங்கள் கருத்துகளை, பகிர்வுகளை வெளிப்படுத்த எனது ‘Bahasa Tamil Upsr Balamurugan’ என்கிற முகநூலின் வழியாக செய்யவிருக்கிறேன். கலந்துகொள்ள ஆர்வமும் உள்ளவர்கள் உங்கள் கருத்துகளை முன்கூட்டியே எனக்கு அனுப்பி வைக்கலாம். அதே போல தன் சுய முயற்சியால் வெற்றிப்பெற்றிருக்கும் (8 ஏக்கள் மட்டுமல்ல) மாணவர்கள் ‘http://btupsr.blogspot.com‘ என்கிற வலைத்தலத்தில் அங்கீகரிக்கப்படுவார்கள். அவர்களை நேர்காணல் செய்து பிரசுரம் செய்யவிருக்கிறேன். என் முகநூலில் தொடர்பு கொள்ளவும்.

இத்தேர்வு முடிவுகளை மட்டுமே பிராதானமாகக் கொண்டு நம்மை விமர்சிக்கும்; நம்மை பரிசோதிக்கும் மனப்பான்மைகளுக்கு எதிராக நாம் உரையாட வேண்டிய விடயங்கள் நிறைய உள்ளன. முன்பே சொன்னதைப் போல ‘தேர்வு’ என்பது கல்வியில் இருக்கும் பலவகையான மதிப்பீட்டுக் கருவிகளில் ஒன்றாகும். அது மாணாக்கரின் அறிவின், கற்றலின் முழுமையைக் காட்டிவிடாது என்பதைத் திறந்த மனத்துடன் நாம் ஏற்றுக்கொண்டு அடுத்த தலைமுறையை வடிவமைக்கும் தூரநோக்கு சிந்தனைக்கு மாறிட வேண்டும்.

கே.பாலமுருகன் 

 

முன்னுரை எழுதுதல் – ஒரு கனவும் சில உண்மைகளும்

நேற்றிரவு சட்டென்று கனவில் முன்னுரை எழுதுவதைப் பற்றி ஒரு கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தேன். இதுபோன்று கனவுகள் எப்பொழுதும் வராது. அபூர்வமாக அதுவும் ‘முன்னுரை’ பற்றி நான் ஏதும் சிந்திக்கவும் இல்லை. இரண்டு வாரங்களுக்கு முன் சீனி நைனா முகம்மது எழுதிய ‘தொல்காப்பியக் கடலின் ஒரு துளி’ நூலை வாசித்திருந்தேன். அதில் அவர் தொல்காப்பியத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் யாரெல்லாம் முன்னுரை எழுதலாம்  என்கிற விளக்கத்தை எழுதியிருந்தார்.

நூலாசியரின் ஆசான், அதாவது நூலாசிரியருக்குக் கற்றுக் கொடுத்த ஆசிரியர். அது கல்வித் துறையாகவும் இருக்கலாம்; அல்லது இலக்கியத்தில் அவருக்கு முன்னோடியாக இருப்பவரும் ஆசான் என்றே பொருள் கொள்ளலாம். உதாரணத்திற்கு எழுத்துலகில் எனக்கு எப்பொழுதுமே ஒரு முன்னோடி ஊக்கியாக இருந்தவர் எழுத்தாளர் சீ.முத்துசாமி ஆவார். ஆக, அவர் எனக்கு இலக்கியத்தில் பாடம் ஏதும் நடத்தவில்லை என்றாலும் அவருடைய படைப்புகளினால் என்னை ஊக்கப்படுத்தியவர் என மனப்பூர்வமாக நான் ஏற்றுக்கொண்டிருக்கிறேன். சமீபத்தில் தோழி பதிப்பகத்தின் வெளியீடாக வந்த எனது ‘இறந்தகாலத்தில் ஓசைகள்’ எனும் சிறுகதை நூலிற்கு அவர்தான் முன்னுரை எழுதியிருந்தார். கூடுதலான புகழுரை ஏதும் இல்லாமல் என் சிறுகதைக்குள் நுழைந்து பிரவேசிக்க என் கதைப்பரப்புகளை விரிவாக்கிக் காட்டக்கூடிய ஓர் எழுத்து அது. கவிதை நடையில் எண்ண ஓட்டமாக எழுத்துகளால் நிரம்பி என் கதைகளை நோக்கி வழிந்த ஓர் எழுத்துமுறை.

ஆக, முன்னுரை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதே கனவில் நான் பேசிய கருத்தாக இருந்தது. ஒரு நூலை முன்வைத்து ஆயரங்கம் நடந்து கொண்டிருக்கிறது. அந்த நூலுக்கு முன்னுரை எழுதியவர் பிரபலமான ஒருவர் என்பதால் பலரும் நூலாசிரியரின் படைப்புகளை விட்டுவிட்டு முன்னுரையைப் புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அக்கூட்டத்தில் இருக்கும் எனக்கு ஆச்சர்ய முரண் தோன்றி சட்டென்று நான் முன்னே சென்று இந்நூலின் முன்னுரை அதன் தன்மைக்கேற்ப இல்லை; என்னைச் சற்றும் கவரவில்லை எனக் கூறுகிறேன். முன்னுரை என்றால் அந்நூல் குறித்து வாசகனுக்கு ஓர் ஆர்வத்தையும் தேடலையும் தூண்டிவிட வேண்டும் அல்லவா? என்று விவாதிக்கிறேன்.  உடனே கூட்டத்தில் இருந்த ஒரு பெண்மணி ‘நீங்கள் ஏன் எல்லாவற்றையும் குதர்க்கமாகவே பார்க்கிறீர்கள்? ஊருடன் ஒத்துப் போக முடியாதா?’ எனக் கேள்விக் கேட்கிறார்.

நான் உடனே முன்னுரை எவ்வாறு இருக்க வேண்டும் எனக் கனவில் சில வார்த்தைகள் மட்டுமே விவரிக்கிறேன். உண்மையில் இதுவரை முன்னுரை எழுதுதல் பற்றியோ அல்லது முன்னுரைகள் பற்றிய எந்த நூலையும் நான் வாசித்ததும் இல்லை. என்றாலும் முன்னுரையை எழுதுதலில் அவசியங்கள் குறித்து உரையாட வேண்டியுள்ளது.

நூலின் உள்ளடகத்தை முழுமையாக விவரித்தல் கூடாது.         

முன்னுரை அது எழுதப்படும் நூலின் உள்ளடக்கத்திற்கேற்றவாறு ஆனால் உள்ளடக்கத்தை முழுவதுமாக விவரிப்பதாக இருத்தல் கூடாது. குறிப்பாக சிறுகதை, அல்லது நாவல் என்றால் கூடுதல் கவனத்துடன் கையாள வேண்டியுள்ளது.  எடுத்துக்காட்டாக ஒரு சிறுகதை நூலிற்கு முன்னுரை எழுதுபவர்கள் அந்நூலாசிரியரின் இதற்கு முந்தைய சில சிறுகதைகள் பற்றியோ அல்லது சிறுகதை வாசித்தல் பற்றியோ, அல்லது அந்நூலை ஏன் வாசிக்க வேண்டும்; வாசித்தால் என்ன பயன் போன்ற அடிப்படையிலான சில கேள்விகளுக்கு விடையாக அனுபவ ரீதியிலான பகிர்வாகவும் முன்னுரை அமையலாம்.

ஆனால், அத்தொகுப்பிலுள்ள சிறுகதைகள் கொண்டிருக்கும் முடிச்சுகளையும் நூதமான கதை உரையாடல்கள் அத்தனையையும் சொல்லுதல் கூடாது. புனைவு நூலுக்கான முன்னுரையில் அங்கனம் சொல்லிவிடுவது வாசிப்பு ருசியைக் கெடுத்துவிடும். இனி அந்நூலை வாசிக்கக்கூடிய வாசகனுக்கான அக்கதைகள் வைத்திருக்கும் பல்லாயிர திறப்புகளை இதுபோன்ற முன்னுரை அடைத்துவிடும் அபாயம் உண்டு என நினைக்கிறேன். ஒரு தொலைக்காட்சி வாங்குகிறோம் அதனை எவ்வாறு எப்படியெல்லாம் பயன்படுத்த வேண்டும் என்று ஒரு வழிகாட்டி நூல் கொடுப்பார்கள். அது தொலைக்காட்சிக்குச் சாத்தியம். ஆனால், சிறுகதை நூலில் அச்சிறுகதைகளை எவ்வாறு வாசிக்க வேண்டும்; எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும்; என்றெல்லாம் வழிகாட்டப்பட்டால் ‘இலக்கியம் என்பது அனுபப்பூர்வமாக மனத்தில் எழும் கலை’ என்பதற்கான அர்த்தமே புரண்டு போய்விடும்.  அவரவர் தன் வாசிப்பிற்கேற்ப ஒவ்வொரு முறையும் கதையின் பல எல்லைகளை அடைய வாய்ப்புண்டு. அதுவொரு படைப்பும் வாசகனும் சந்தித்துக் கொள்ளும் நுட்பமான புள்ளி. அதனை ஒரு முன்னுரையில் வரையறுத்தல் கூடாது. சில முன்னுரைகள் அச்சிறுகதைகள் பற்றி முழுவதுமாக விவரித்துவிடப்படுகின்றன. பிறகு ஏன் அந்நூலை வாசிக்க வேண்டும்?

சுந்தர ராமசாமி ஜீ.நாகராஜன் சிறுகதை நூலிற்கு எழுதிய  முன்னுரையில் ஜீ.நாகராஜனின் சிறுகதைகள் தனக்கு எவ்வாறான எண்ணங்களை ஏற்படுத்தியது என்று அச்சிறுகதையை முழுவதுமாக விவரிக்காமல் மிகவும் நுனித் தொடுதலில் அச்சிறுகதைகள் பற்றி சொல்லியிருப்பார். அது ஒரு கைத்தேர்ந்த முன்னுரை. சற்றும் வாசிப்பின் ருசி கெட்டுவிடாமல் அதே சமயம் சிறுகதைகளையொட்டிய தன் மன எழுச்சிகளையும் துல்லியமாகச் சொல்லியிருப்பார். சிலர் முன்னுரையில் தொகுப்பில் ஒட்டுமொத்த கதையையும் முதலில் இருந்து கடைசிவரை ஒப்புவிப்பதைக் காணலாம். ஏன் அச்சிறுகதையை முன்னுரையில் விவரிக்க வேண்டும்? அதுதான் நாம் படிக்கப் போகிறோமே?

 

நூலாசியரைப் பற்றிய அதீதமான புகழுரை தவிர்த்தல் நலம்

ஒரு வரி சொன்னால் கூட அது அந்நூலாசிரியரின் குருவாக அல்லது மாணவராக அல்லது உடன் படித்தவராக இருத்தல் நலம் என்பதே தொல்காப்பியத்தின் கூற்றாகும். ஏன் தொல்காப்பியர் அவ்வாறு வரையறுக்கிறார்? நூலாசியருடன் இம்மூன்று வகையில் தொடர்பில்லாதவர்களின் முன்னுரை நம்பகத்தன்மையுடன், உண்மையுடன் இருக்க வாய்ப்பில்லை; அது வெற்றுப் புகழ்ச்சியாகிவிடும் என்பதே தொல்காப்பியரின் கூற்றுக்குப் பின்னே உள்ள சான்றாகும்.  ஆக, முன்னுரையில் வெற்றுப் புகழுரை அவசியம் இல்லை என்பதே இதன் வழி நாம் புரிந்து கொள்ள முடிகிறது.

நமக்குக் கற்பித்த ஆசான் அல்லது நம் துறையின் முன்னோடி, நம்மிடம் படித்த மாணவர், நம்முடன் படித்தவர்  ஆகியோர் எக்காரணத்தைக் கொண்டும் நம்மை வெறுமனே புகழமாட்டார்கள். நம் திறன் அறிந்து பேசக்கூடிய கச்சிதத்தையும் யதார்த்தத்தையும் கொண்டிருப்பார்கள் என்பதனாலே தொல்காப்பியர் இவர்கள் யாவரையும் முன்னுரை எழுதலாம் எனப் பரிந்துரைத்திருக்கிறார் என்று நினைக்கிறேன்.

முன்னுரை சமரசமின்றி இருத்தல் வேண்டும் 

ஜெயகாந்தன் எழுதிய முன்னுரைகள் ஏராளம். அதனை அவர் ஒரு தொகுப்பாகவே வெளியிட்டுள்ளார். ‘ஜெயகாந்தன் முன்னுரைகள்’ என்ற நூலில் அவர் எழுதிய பற்பல முன்னுரைகளைக் காணலாம். அவற்றுள் பல முன்னுரைகள் சமரசமின்றி அவர் எழுதியிருப்பதையும் அறிய முடியும். முன்னுரை எழுதுவது ஒரு நூலுக்கும் அந்நூல் வெளிவரும் காலக்கட்டத்தின் அறிவு, கலைத் துறைக்கும் இடையே உருவாகப்போகும் வரலாற்று உரையாடல் என்பதைப் போல மிகுந்த கவனத்துடன் ஜெயகாந்தன் கையாண்டிருப்பதே நமக்கு மிகச் சிறந்த சான்றாகும். அதே போல, எழுத்தாளர் சுந்தர ராமசாமி அவர்களின் முன்னுரைகளும் படைப்பை நோக்கி விரியும் கச்சிதமான ஓர் உரையாடல் ஆகும். வரலாறு, தத்துவம், கலை என அவை அலசி ஆராய்ந்துவிட்டு அந்நூலின் மீது கவனத்தைக் குவிக்கக்கூடியவை.

நானும் இதுவரை ஐவருக்கு முன்னுரை எழுதியுள்ளேன். குறிப்பாக கவிதை நூல்கள் தான் அதிகம். எம்.கே. குமார், றியாஸ்  குரானா அதில் முக்கியமானவர்கள். றியாஸ்  குரானாவின் கவிதை நூலுக்கு நான் எழுதிய முன்னுரை கொஞ்சம் மாறுப்பட்டு இருந்ததைக் கவிஞர் லீனா மணிமேகலையும் அவருடைய முகநூலில் குறிப்பிட்டிருந்தார். விமர்சனப்பூர்வமாக அம்முன்னுரையில் கவிதையின் மீதான பலவகையான பதிப்பீடுகளையும் கேள்வி எழுப்பியிருப்பேன். றியாஸ்  அவர்களை மட்டும் புகழ்ந்துவிட்டுப் போகாமல் அதனை ஒரு தளமாகப் பயன்படுத்திக் கொண்டு கவிதை என்கிற மிக நுட்பமான கலையின் மீதான பகுத்தறிவின் செயல்பாட்டினை விமர்சித்திருப்பேன். அக்கட்டுரையை இங்கே வாசிக்கலாம்:

https://balamurugan.org/2016/11/04/இலக்கியத்தைக்-கொல்பவனின

//விமர்சனம் என்கிற பெயரில் தட்டையான பகுத்தறிவு சார்ந்து நாம் உருவாக்கும் மதிப்பீடு இலக்கியத்தைக் கொல்கிறது என்பதுதான் றியாஸ் குரானாவின் வாக்குமூலம். சார்புடைய விமர்சனங்களின் மூலம் மிகவும் அழுத்தமாக உருவாக்கப்படுவது இலக்கியத்தை அழிக்கும் அதனுடைய நிச்சயமற்ற வெளியைச் சிதைக்கும் ஒரு மதிப்பீட்டு முறையைத்தான் எனப் புரிந்துகொள்ள முடிகிறது. அப்படியென்றால் இலக்கியத்திற்கான விமர்சனம் எது? மதிப்பீட்டின் நேர்மையை எப்படி அடையாளம் காண்பது?//

இதை நாம் கருத்தில் கொண்டு ‘முன்னுரை எழுதுதல்’ பற்றி மேலும் உரையாடலாம்.

-கே.பாலமுருகன் 

நன்றி: தொல்காப்பியக் கடலின் ஒரு துளி- சீனி நைனா முகம்மது

தமிழ்நாடு 11ஆம் வகுப்பு மேல்நிலை மாணவர்களுக்கான அரசுப் பாடநூலில் மலேசிய எழுத்தாளர் கே.பாலமுருகனின் ‘பேபி குட்டி’ சிறுகதை சேர்க்கப்பட்டுள்ளது

தமிழ்நாடு அரசு, பள்ளிக் கல்வித்துறை உருவாக்கத்தில்  புதிய பாடத்திட்டத்திற்கான  மேல்நிலை முதலாம் வகுப்பு (11ஆம் வகுப்பு) மாணவர்களுக்கான ‘சிறப்புத் தமிழ்’ அரசுப் பாடநூலில் அயலக சிறுகதைப் பிரிவில் மலேசிய எழுத்தாளர் கே.பாலமுருகன் எழுதிய ‘பேபி குட்டி’ சிறுகதை தேர்ந்தெடுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளதாக அத்துறையின் பாடநூல் உருவாக்கக் குழுவில் இடம்பெற்ற மாவட்டக் கல்வி ஒருங்கிணைப்பாளர் திரு.சீ.பன்னீர்செல்வம் தெரியப்படுத்தினார். இதுபோன்ற அரசு பாடநூலில் சேர்க்கப்படும் அயலக இலக்கியப் பிரிவில் இதுவே மலேசியவிற்கான முதல் சிறுகதை என்றும் அறியப்படுகின்றது.

 

இந்திய மொழிக்கதைகள், அயலகக் கதைகள் ஆகியவற்றை வாசித்து அறிந்து கொள்ளும் திறனை மாணாக்கர் மத்தியில் வளர்க்கவும் பரந்துபட்ட இலக்கிய வாசிப்பை உருவாக்கவும் சிறப்புத் தமிழ் பாடநூல் திட்டத்தில் இலக்கியப் படைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளதாக பாடநூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வகையில் 2014ஆம் ஆண்டில் மலேசிய எழுத்தாளர் கே.பாலமுருகன் எழுதிய ‘பேபி குட்டி’ சிறுகதை மிகுந்த கவனத்தைப் பெற்ற சிறுகதையாகும்.

சிறுகதையின் சுட்டி: https://balamurugan.org/2016/09/25/சிறுகதை-பேபி-குட்டி/

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் பாலமுருகனின் ‘பேபிக் குட்டி’ சிறுகதையைத் தமிழில் தான் வாசித்தக் கதைகளில் முக்கியமான கதை என்று தன் அகப்பக்கத்தில் குறிப்பிட்டிருந்ததும் கவனிக்கத்தாகும். அதே சிறுகதை 2018ஆம் ஆண்டு பாடநூல் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதும் அச்சிறுகதையின் மீது வாசகக் கவனத்தைக் குவிக்கின்றன.

ஜெயமோகன் அகப்பக்கத்தில்: https://www.jeyamohan.in/48659#.WyozyVUzaM8

 

மலேசிய இடைநிலைப்பள்ளிப் பாடநூலில் தமிழகத்தின் சிறுகதைகள் இடம்பெற்றிருப்பதைப் போன்று, தமிழகத்தின் அரசுப் பாடநூலில் முதன்முதலாக ஒரு மலேசிய சிறுகதை இடம்பெற்றிருப்பது அதுவும் மலேசிய நவீனப் படைப்பாளி கே.பாலமுருகனின் சிறுகதை சேர்க்கப்பட்டிருப்பது, அயலகத் தமிழின் மீது சமீபத்தில் குவிந்திருக்கும் வாசகக் கவனத்தின் விரிவாக்கத்தைக் காட்டுகிறது.

ஒரு குழந்தையின் மரணம் நிகழ்ந்திருக்கும் வீட்டில் வாழும் 92 வயது நிரம்பிய பேபி குட்டியின் ஒரு நாள் வாழ்க்கையைக் கே.பாலமுருகன் யதார்த்த நடையில் சித்தரித்திருக்கிறார். நம் சமூகத்தின் முதியவர்கள் மீதான புரிதலையும், குழந்தைமை என்பதன் மீது நமக்கிருக்கும் எண்ணங்களையும் களைத்துப் போடுவதாக இச்சிறுகதையைப் பற்றி பலர் கருத்துரைக்கிறார்கள்.

செய்தி: சு.அர்ஷினி

 

இச்செய்தி தொடர்பான உலகத் தமிழர்களின் கருத்துகள்:

 

கணேஷ் பாபு, சிங்கை எழுத்தாளர்

 

மலேசிய எழுத்தாளர் கே. பாலமுருகனின் எழுத்துகள் எனக்கு எப்போதுமே மிக விருப்பமானவை. நவீன தமிழ் இலக்கியத்தின் அடிப்படைகளை அவரது கதைகளை வாசிக்கும் ஒருவர் எளிதாக அறிந்து கொள்ளலாம். பிரம்மாண்டமான இந்த வாழ்வின் நுட்பமான தருணங்களை கலை உசாவுகிறது. கலையின் நுட்பமான தருணங்களை இவரது எழுத்து பிரதிபலிக்கிறது. வாழ்வும் கலையும் முயங்கியும் பிரிந்தும் செல்லும் பல்வேறு புள்ளிகளை அடையாளப்படுத்துவதை இவரது கதைகள் தொடர்ந்து செய்து வருகின்றன.

இவரது “பேபி குட்டி” என்ற கதையை ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஜெயமோகன் தளத்தில் அளிக்கப்பட்டிருந்த சுட்டியின் மூலம் முதன்முதலில் வாசித்தேன். அப்போதே அந்தக் கதை என்னை வெகுவாகப் பாதித்தது. அதன்பின் பல தருணங்களில் அவரது கதைகள் என்னை ஈர்த்திருக்கின்றன. கதைக்குள் எழுத்தாளன் பிரவேசிக்காமல், ஆர்ப்பரிக்காமல், அடங்கிய குரலில் கதை சொல்லும் இவர், கதையின் முடிவுக்குப் பின் வாசகன் மனதில் சன்னதம் கொண்டெழும் இயல்புள்ளவர். பேபி குட்டி கதையும் இதை நிரூபிப்பது போலவேதான் இருக்கிறது. 


சிறுகதை வடிவத்தின் அனைத்து சாத்தியங்களையும் இக்கதையில் நன்கு பயன்படுத்தியிருக்கிறார் பாலமுருகன். எந்த விதமான அலங்காரமும் இன்றி சட்டெனத் துவங்கிவிடுகிறது கதை. இரண்டு வயதுக் குழந்தையை சாகக் கொடுத்த வீட்டின் காட்சி விவரணை, மழித்தலும் நீட்டலும் இன்றி சரியான சொற்றொடர்களால், துல்லியமாகச் சொல்லப்பட்டுள்ளது. சாதாரணமான சொற்களிலேயே வாசிப்பவன் மனதில் துக்கத்தின் அடர்த்தியை ஏற்றிவிடுகிறார். 


“இதுவரை எதற்குமே சட்டென அழாத ஒருவர், அப்படி அழுது கதறும்போது உடல் சிறுத்துக் குழந்தையாகி எல்லோரின் மடியிலும் விழுகிறார்”,


“பின்கட்டிலிருந்து முன்வாசலுக்கு ஓடிவரும் சிறிய இடைவெளியில் சட்டென முடிந்து விட்ட வாழ்க்கை”


“ஒரு குழந்தையின் மரணத்திற்கு முன் அனைத்து மனங்களும் குழந்தையாகிவிடுகின்றன.”


மேற்கண்ட வரிகள் புதைமணலைப் போல வாசிப்பவனின் அகத்தை உள்ளிழுத்துக் கொள்கின்றன. எளிய வடிவத்தையும், சொற்களையும் கையாளும் கதை, வாசகன் முன் வலுவான கேள்விகளை முன்வைக்கின்றன. மரணம் என்பது என்ன? குழந்தை என்பது என்ன? உருவத்தாலும் வயதாலும்தான் குழந்தையை கற்பிதம் செய்துகொள்கிறோமா? அகத்திலுறையும் குழந்தையை சமூகம் எப்போதுதான் கண்டுகொள்ளும்? கைவிடப்பட்ட முதுமை என்பதன் பெறுமதிதான் என்ன? போன்ற கேள்விகள் கதையின் வீச்சை பன்மடங்கு பெருக்குகின்றன.


ஒரு குழந்தையின் மரணத்திற்கு துக்கப்படும் மனிதர்கள், இன்னொரு குழந்தையை கைவிடுகிறார்கள். ஆனால் அந்த இரண்டு குழந்தைகளுக்குமே இவர்கள் ஒரு பொருட்டேயல்ல. ஒரு குழந்தை இறந்துவிட்டது. இன்னொரு குழந்தையோ அகத்தளவில் இவர்கள் வாழும் உலகின் தாழ்வாரத்திற்கு வெகு தொலைவில் உள்ளது. மனிதர்கள் குழந்தைகளையும் புரிந்து கொள்வதில்லை, முதியவர்களையும் புரிந்து கொள்வதில்லை. புறக்கணிப்பும், அன்பின்மையும்தான் நம் காலத்தில் முதியவர்கள் சந்திக்கும் ஆகப்பெரிய இடர். அந்த இடரை வலுவாகக் காட்சிப்படுத்தியிருப்பதால்தான் பாலமுருகனின் இக்கதை தனித்துவமாக ஒளிர்கிறது. இனிய இசை சோகமுடைத்து என்பார் ஷெல்லி. இனிய கதையும் அப்படித்தானிருக்கிறது.


இக்கதையை தமிழ்நாடு அரசு, பள்ளிக்கல்வித் துறை, மேல்நிலை முதலாம் வகுப்பு(11 ஆம் வகுப்பு) சிறப்புத் தமிழ் பாட நூலில் சேர்த்துள்ளது மிகவும் மகிழ்சியளிக்கிறது. இதுபோன்ற அரசு பாடநூலில் இடம்பெறும் முதல் மலேசிய சிறுகதை என்ற பெருமையையும் இக்கதை அடைந்திருக்கிறது. பாலமுருகனுக்கு வாழ்த்துகள்.

 

குமார் ஐயா, திருவாரூர்

அயலகத் தமிழ் எழுத்துக்களை,படைப்புகளைத் தாயகத்து தமிழர்கள் படித்தல் வேண்டும் என பத்து ஆண்டுகளாய் போராடினேன்.வாய்ப்பு கிடைத்தது .11ம் வகுப்பு பாடத்திட்ட வாய்ப்பு ,இன்று தமிழக மாணவர்கள் அயலகத் தமிழ் படைப்புகளைப் படிக்கின்றனர் .மகிழ்ச்சியாக உள்ளது .வகுப்பறையில் நானே நடத்தும் போது…புலம் பெயர்வின் வலியுடன் எனது மாணவர்கள்…
11ம் வகுப்பு பொதுத்தமிழில் ஈழம் ஈன்று எடுத்த சு.வில்வரத்தினத்தின் யுகத்தின் பாடல் மொழிவாழ்த்தாய்… அடுத்து எங்கள் அ.முத்துலிங்கம் அவர்களின் ”ஆறாம்திணை ” உரைநடையில் வைத்துள்ளோம்.


சிறப்பு தமிழ் பாடப்பிரிவில் மலேசிய எழுத்தாளர் என் நண்பர் கே .பாலமுருகனின்
“பேபிகுட்டி” சிறுகதையும்,

ஈழ எழுத்தாளர் தாமரைச்செல்வியின் “பசி” சிறுகதையும் பாடதிட்டத்தில் இடம் பெற்று 9ம் வகுப்பு தமிழ் பாடத்தில் காசி ஆனந்தனின் பாடலையம் சேர்த்து ..இன்று பல லட்சம் தமிழக மாணவர்கள் கற்கின்றனர் …மனது மகிழ்ச்சியாக உள்ளது. அயலத் தமிழர் வாழ்க..

 

 

FIFA World Cup 2018 – ஒர் இடைக்காலப் பார்வை: ஏமாற்றமும் அதிர்ச்சியும்

 

நான் எப்பொழுதுமான காற்பந்து இரசிகன் அல்ல; உலகக் கிண்ணப் போட்டியின் மீது மட்டும் மிகுந்த ஆர்வம் உண்டு. கடந்த 1994 முதல் உலகக் கிண்ணத்தைத் தீவிரமாக இரசித்து வருகிறேன். உலகத்தை ஓர் உருண்டையாக்கி அவரவர் திறமைக்கேற்ப கையாள்வதைப் போன்ற குதூகலத்தை உண்டாக்கும்.

இம்முறை நம்பிக்கையை உருவாக்கியிருக்கும் பிரபமில்லாத அணிகளில்,காற்பந்து ஜாம்பவன் என்று உலக மக்கள் கொண்டாடும் பிரேசிலுக்கே சவாலைக் கொடுத்த Switzerland முன்னிலை வகிக்கிறது. இரண்டாம் பாதியில் முழுவதுமாக விளையாட்டைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அசத்திவிட்டார்கள்.

அடுத்து, கவனத்தை ஈர்த்தக் காற்பந்து குழு Iceland ஆகும். அர்ஜெண்டினா குழுவிற்குச் சவால் கொடுத்துக் கதிக்கலங்க வைத்தது என்று சொல்லலாம். அடுத்ததாக இரண்டுமுறை உலகக் கிண்ணத்தை வென்ற பிரான்ஸிக்குக் கடுமையான போட்டியைக் கொடுத்த ‘ஆஸ்ட்ரோலியா’ ஆகும். அவ்விளையாட்டில் ஆஸ்ட்ரோலியா 2-1 என்று தோல்வியடைந்தாலும் மிகச் சிறப்பான போட்டியை உண்டாக்கியது என்றே சொல்லலாம்.

அடுத்து, போர்த்துகல், ஸ்பேய்ன் அணி மோதிய விளையாட்டுக் கவனித்தக்கது ஆகும். இரண்டுமே பலம் வாய்ந்த அணி. ஆனாலும், ஸ்பேய்ன் சிறப்பாக விளையாடியது என்றே சொல்ல வேண்டும். ரொனால்டோ ஒருவர் இல்லையென்றால் போர்த்துகல் 3 கோல்கள் அடித்திருக்குமா என்கிற கேள்வியும் நம்மிடையே உள்ளது.

அடுத்து, நம் எதிர்ப்பார்ப்புகளை உடைத்த அணிகள் வரிசையில் முதல் நிலையில் ஜெர்மனி ஏமாற்றத்தை உருவாக்கியுள்ளது. வாய்ப்பை நழுவவிடுதல் என்பது ஒரு பக்கம் இருக்க, ஜெர்மனி வாய்ப்பை உருவாக்கவே இல்லை என்பது பல இரசிகர்களின் மனக்குமுறல்.

அடுத்து, ஏமாற்றத்தை ஏற்படுத்திய அணி அர்ஜெண்டினா ஆகும். குறிப்பாக கிடைத்த அருமையான வாய்ப்பை ‘மெஸ்ஸி’ நழுவவிட்டது இரசிகர்களின் அதிருப்தியைக் கிளப்பி விட்டது. ‘ஐஸ்லேண்ட்’ போன்ற மிகச் சிறிய நாடு உலக அரங்கத்தில் இத்தனை வீரியத்துடன் எழுந்து நின்றது இதற்கு முன் உலக அளவில் ஜாம்பவான் என்று இடத்தைத் தக்கவைத்திருந்த அணிகளுக்குப் படிப்பினை என்றே சொல்லலாம்.

நடுவில் இருந்து கொண்டு ஆச்சர்யத்தை உண்டாக்கிய அணி, பிரேசில் ஆகும். திறமையாக ஆடினாலும் வாய்ப்புக் கிட்டவில்லை. குறிப்பாக ‘நெய்மார்’ காலில் பந்து வந்ததும் உடனே நான்கு எதிரணி ஆட்டக்காரர்கள் அவரைச் சூழ்ந்து நின்று தாக்குகிறார்கள். வாய்ப்பிருப்பின் பிரேசில் முன்னேறும்.

ஆயினும், பந்து என்பது அனுமாணிக்க இயலாத ஓர் அதிசயம். யாரையும் எங்கும் நிறுத்தும். பொறுத்திருந்த பார்ப்போம். என்னளவில் இவ்வாண்டு உலகக் கிண்ணத்தை ‘ஸ்பேய்ன்’ வெல்ல வாய்ப்புண்டு என்றே தோன்றுகிறது.

-கே.பாலமுருகன்

சிறுவர் நாவல் வெளியிட்டு விழாவும் சிறுவர் சிறுகதை எழுதும் போட்டியும்

2014ஆம் ஆண்டில் மர்மக் குகையும் ஓநாய் மனிதர்களும் என்கிற மர்ம சிறுவர் நாவலை எழுதி முடிக்கும்போதே இதே சிறார் கதாபாத்திரங்களைக் கொண்டு சிறுவர் மர்மத் தொடர் நாவல் என்று பத்து பாகங்கள் வெளியிடத் திட்டமிட்டேன். அதற்குரிய உந்துதலை எனக்குள் உண்டாக்கியவர் மேனாள் தேர்வு வாரியத்தின் துணை இயக்குனரும் இலக்கிய வாசகரும் நண்பருமான திரு.பி.எம் மூர்த்தி அவர்கள்தான். உரையாடலின் வழியாகவே எனக்குள் சிறுவர் இலக்கியம் குறித்த அக்கறையை ஏற்படுத்தினார். அதனால், சிறுவர் நாவலை எழுதவும் தொடங்கினேன். இந்நாட்டு சிறுவர்களுக்கான நாவல் உருவாக வேண்டும் என அவர் கண்ட ஆசையை முதலில் நிறைவேற்றிய வாய்ப்பு எனக்குக் கிடைத்ததாகவே கருதுகிறேன்.

ஆகவேதான், இதனை மலேசியத் தமிழ் இலக்கியத்தில் சிறுவர்களுக்கான முதல் சிறுவர் மர்மத் தொடர் நாவல் என்று குறிப்பிட்டிருந்தேன். இன்னும் நான்காண்டுகளில் மலேசியக் கல்வியிலும் இலக்கியத்திலும் இப்பத்துத் தொடர் சிறுவர் நாவல் மலேசிய இந்திய மாணவர்களுக்கு வழிகாட்டுதலாக அமையும் என்கிற நம்பிக்கை எனக்குண்டு.

நாம் யாருக்காக எழுதுகிறோம் என்கிற தெளிவுடனே இந்நாவல்களை எழுதத் துவங்கினேன். மொழியிலும், கதை அமைப்பிலும், பாத்திரப் படைப்பிலும் சிறார்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காகவே மர்மம் என்கிற ஒன்றைத் தெரிவு செய்து கொண்டேன். அதே போன்று தலைப்புகளிலும் முகப்போவியங்களிலும் சிறுவர்களைக் கவரும் தன்மை இருக்க வேண்டும் என்றே முழு ஈடுபாட்டுடன் சிறார்களின் வயதிற்கும் மனநிலைக்கும் ஏற்ப என்னை உருவகித்துக் கொண்டேன்.

  1. மர்மக் குகையும் ஓநாய் மனிதர்களும்
  2. மோகினி மலையில் இரகசியமும் பாழடைந்த மாளிகையும்
  3. பதிமூன்றாவது மாடியும் இரகசியக் கதவுகளும்

 

ஆகிய மூன்று தலைப்புகளிலும் ஒரு மர்மமும் தூண்டலும் அடங்கியிருக்கும். இதுவே மாணவர்களை வாசிக்கத் தூண்டும் ஓர் உத்தியாகும். இம்மாணவர் சமூகத்தை வாசிப்பின் மீது ஓர் ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் இந்நாவல்களால் உருவாக்க முடிந்ததற்குத் தலைப்பும் ஒரு காரணியாகும். கடந்த நான்கு ஆண்டுகளின் மூன்று சிறுவர் தொடர் நாவல் பற்பல சவால்களுக்கு மத்தியிலேயே வெளியீடு கண்டுள்ளது. என்னை ஊக்கப்படுத்தவும் உற்சாகப்படுத்தவும் யாருமற்ற சூழலில்தான் இம்மூன்றாவது நாவலை எழுதி முடித்தேன்.

இச்சிறுவர் நாவல்களால் என்ன பயன் என்று ஒரு கேள்வி எல்லா மனங்களிலும் இடம்பெற்றிருக்கும். முதலாவது சிறுவர்களின் வாசிப்பை இதுபோன்ற மர்ம நாவல்களின் வழியாக ஊக்கப்படுத்த முடியும். இதற்கு என் நாவல்களே உதாரணமாகும். இதுவரை இந்நாவல்களை வாங்கி முயற்சித்தப் பள்ளிகளை ஓர் எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். ஒரு மாணவனை அவனே ஆர்வத்துடன் புத்தகத்தை வாசிக்க வைத்துவிடலே மிகப் பெரிய வெற்றியாகக் கருதுகிறேன்.

அடுத்து, எனது சிறார் நாவல்கள் முழுக்கவும் சிறார் கதாபாத்திரங்களை முதன்மை மாந்தர்களாக முன்னிறுத்துபவை ஆகும். சிறுவர்களே இந்நாவல்களில் முக்கியத்துவம் வாய்ந்த மாந்தர்களாக இடம் பெறுகிறார்கள். இது அவர்களின் வாசிப்பிற்கு உந்துபவையாகவும் இருக்கும் அதே சமயம் அவர்களின் மனநிலைக்கும் ஏற்றவாறு புதிய வாசிப்பனுபவத்தை ஏற்படுத்தும். புத்திமதி சொல்லும் பாங்கிலிருந்து சிறார் உலகை ஆற்றலும் அனுபவமுமிக்க பகுதிக்கு நகர்த்தும். சிறுவர்கள் திறன்கள்மிக்கவர்கள் என்கிற நம்பிக்கையை உண்டாக்கும். மனத்தில் அடைத்துக் கொண்டிருக்கும் உணர்வலைகளுக்கு ஏற்ற வடிக்காலை அமைத்துக் கொடுக்கும். இது முழுக்க சிறார் மனநிலையிலிருந்து எழுதப்பட்டவை என்பதால் அவர்களின் மனங்களைத் தொட்டு பேரெழுச்சியை உண்டாக்கும்.

 

அத்தகையதொரு நாவல் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாணவர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது. இந்நாவலை விமர்சித்தவரும் ‘மர்மக் குகையும் ஓநாய் மனிதர்களும்’ என்கிற நாவலின் தீவிர வாசகரான மாணவர் சிவசந்திரன் ஆகும். நாவல் வெளியீட்டு விழாவின் சிறப்பு விருந்தினராக மாவட்டக் கல்வி அதிகாரியான திரு.பெ.நகுலன் ஆவார். கற்பனைவளம் வாசிப்பவர்களின் இரசனையைத் தூண்டும் என்பதால் இதுபோன்ற கற்பனை நாவல்கள் மாணவர்களுக்கு அவசியம் என்று பேசினார். சிறுவர் இலக்கியத்தின் பயன்கள் என்கிற தலைப்பில் நாட்டின் மூத்த எழுத்தாளர் திரு.கோ.புண்ணியவான் அவர்கள் இலக்கிய உரையை ஆற்றினார். தேடல்மிக்க சமூகமே அதற்குரிய ஞானத்தை அடையும் என்று காகம் கதையை முன்வைத்து இரசிக்கும்படி கூறினார்.

100க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் நாவல் வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அ.கலைமலர் எழுத்தாளர் இயக்கம் சார்பாக வாழ்த்துரையை வழங்கினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு.அ.ரவி அவர்களும் வாழ்த்துரை வழங்கி நிகழ்ச்சியைச் சிறப்பித்தார். மேலும், சிறப்பு வருகையாக முன்னாள் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திரு.முருகன், தலைமை ஆசிரியர் திரு.சந்திரசேகரன், திரு.ம.தனபாலன், வாரியப் பொருளாளர் அண்ணன் திரு.சுப்ரமணியம், திரு.வீரையா, ஆசிரியை மணிமாலா, பிரேமதி, ஹென்ரி, மேலும் பல ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இவ்விழாவை முன்னிட்டு மும்முனை போட்டியாக ‘சிறுகதை எழுதும் போட்டியும்’ நடத்தப்பட்டது. மூன்று தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டனர். ஆயினும், 12 வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நாவல் வெளியிட்டு விழாவில் கௌரவிக்கப்பட்டனர். இதுபோன்ற இலக்கியக் களங்களில் அங்கீகரிக்கப்படும் மாணவர்கள் நாளைய படைப்பாளர்களாக உருவெடுக்கப் பலவிதமான வாய்ப்புகள் உள்ளன.

 

அதே போல இச்சிறுகதை போட்டியின் வாயிலாகக் கடந்தாண்டு இரண்டு விருதுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அவை, ‘சிறந்த சிறுகதைக்கான விருது’ ‘சிறந்த எழுத்தாளருக்கான விருது’ ஆகும். இவ்வாண்டு அவ்விருதுகளுக்கு இரண்டு மாணவர்கள் தகுதி பெற்றார்கள். மாணவி ம.சுஜித்தா ‘சிறந்த எழுத்தாளருக்கான’ விருதையும், மாணவன் காளிஸ்வரன் ‘சிறந்த சிறுகதைக்கான’ விருதையும் பெற்றனர். அம்மாணவர்களின் இலக்கியத் தொடக்கத்திற்கு அவ்விருதுகள் ஓர் உற்சாகமாக அமைந்திருந்தது.

நாவல் பயணம் மேலும் தொடரும். இந்நாட்டில் இன்னும் பத்தாண்டுகளில் சிறுவர் நாவல்களின் தீவிர வாசக சிறுவர்கள்  நாடெங்கிலும் பரவியிருப்பார்கள். அவர்களின் வழியே நாட்டின் இலக்கியம் புத்தெழுச்சியைப் பெறும்.

நாவலைப் பெற விரும்புபவர்கள் அல்லது நாவலைப் பள்ளிகளுக்கு அன்பளிப்பாகக் கொடுக்க விரும்புபவர்கள் முன்வந்து கைக்கொடுக்கவும். சிறுவர்களுக்காக எழுதப்பட்ட இந்நாவல் அவர்களைச் சென்றடைய முன்வருவோம்.

-கே.பாலமுருகன்

புதிய பிரதமருக்கு ஓர் ஆசிரியரின் வேண்டுகோள் கடிதம்

‘முதலாவதாக நம் நாட்டின் புதிய பிரதமருக்கு ‘அன்னையர் தின வாழ்த்துகள்’ -ளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்நாட்டிற்கு நீங்கள் ஓர் அன்னையாக இருந்து எங்களை அரவணைக்க வேண்டும் என்று பெரிதும் விரும்புகிறோம்.’

 

புதிய ஆட்சியைத் தொடங்கியுள்ள, புதிய மலேசியா உருவாக்கத்திற்கு வித்திட்டு அரசியல் மறுமலர்ச்சியை உண்டாக்கிய நாட்டின் ஏழாவது பிரதமருக்கு ஓர் ஆசிரியரின் வேண்டுகோளாக இதனை முன்வைக்கிறேன். இது ஒட்டுமொத்த ஆசிரியர்களுக்கான குரலாகவும் எனக்குள் பலநாட்களாக சலனமுற்றுக் கொண்டே இருக்கின்றது. அதனை வெளிப்படையாக எவ்வித தயக்கமும் இன்றி வெளிப்படுத்துவதற்கான ஓர் ஆரோக்கியமான அரசியல் சூழல் இப்பொழுதுதான் உருவாகியிருப்பதாக நம்புகிறேன்.

  1. கருத்து சுதந்திரம்

கடந்த பல ஆண்டுகளாக மலேசியாவில் கருத்து சுதந்திரம் என்பது பெயரளவில் மட்டுமே இருந்து வந்திருக்கிறது. நடைமுறையில் மக்களின் எவ்விதமான கருத்துகள் மீதும் அத்துமீறலான அரசியல் அதிகாரம் செயல்பட்டுக் கொண்டே வந்திருப்பதுதான் உண்மை. அப்படிக் கருத்து சுதந்திரத்தோடு எழுதிய பலர் கைதாகியிருப்பது அதற்கொரு எடுத்துக்காட்டாகும். அதோடுமட்டுமல்லாமல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான கருத்து சுதந்திரத் தடையை  ஆரோக்கியமற்றதாக கருதுகிறேன். எல்லா துறையையும் ஒட்டி சுதந்திரமாகப் பேசக்கூடிய குரல் ஆசிரியர்களுடையதாக இருந்தால்தான் அடுத்த தலைமுறையை உருவாக்கும் பணியை  நாங்கள் விரிவான தளத்தில் மேற்கொள்ள முடியும். எங்கள் குரல்வளையை இதுநாள் வரையில் மிதித்துக் கொண்டிருந்த அதிகாரங்களை அகற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அரசின் நடவடிக்கைகளை, திட்டங்களை ஆரோக்கியமான முறையில் ஒரு குடிமகன் என்கிற வகையில் விமர்சிக்கக்கூடிய சுதந்திரம் எங்களுக்கும் வழங்கப்பட வேண்டும். அத்தகையதொரு சூழல் இருந்தால்தான் ஆசிரியர்களின் உரிமை குரல் இச்சமூகத்தை ஆரோக்கியமான திசையில் வழிநடத்தக்கூடியதாக இருக்கும். சமூகம் ஆசிரியர்களை நம்புகிறது; அரசு ஆசிரியர்களை முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதே வேண்டுகோள்.

 

2. அரசியல் ஈடுபாடு

ஆசிரியர்கள் வெளிப்படையாக அரசியல் பேசக்கூடாது, அரசியல் நடவடிக்கைகளில் ஈடுப்படக்கூடாது என்கிற ஒரு மிரட்டல் எப்பொழுதும் இருந்து வந்திருக்கிறது. ஆசிரியர்கள் நடுநிலையானவர்களாக இருத்தல் வேண்டும் என்கிற குரல் எழும்போதெல்லாம், அப்படியென்றால் கடந்த ஆட்சியில் எதிர்க்கட்சிகள் ஒட்டி எவ்வித கருத்தையும் வெளிப்படையாக முன்வைக்கும் சுதந்திரம் எங்களுக்கு இல்லாமல் இருந்தது ஏன்? நடுநிலை என்றால் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என பாராபட்சமில்லாமல் தங்களின் அரசியல் கருத்துகளை முன்வைக்கும் சுதந்திரத்தைத்தானே குறிக்கிறது? சிந்தனையாற்றல் உள்ள ஆசிரியர்களின் மனங்களை இதற்கு முந்தைய அரசு கட்டிப்போட்டு ஒரு பயத்திற்குள்ளே ஆழ்த்தியுள்ளது. ஆகவேதான், நடந்து முடிந்த தேர்தலில் தைரியமாக ஓட்டுப் போடும் தன் உரிமை குறித்து அவர்கள் ஓர் அச்சத்தோடும் தயக்கத்தோடும் இருந்தார்கள். நான் எதிர்க்கட்சிக்குத்தான் ஓட்டுப் போடுவேன் என்று சொல்வதற்குக்கூட தயங்கினார்கள். இத்தடையை நீங்கள் மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். கற்றல் கற்பித்தலுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாத, பணியை முன்னிலைப்படுத்தக்கூடிய வேளையில், அரசியல் குறித்தும் தங்களை ஈடுப்படுத்திக் கொள்ள ஒரு தளம் எங்களுக்கு வேண்டும். குறிப்பாக தேர்தலின்போது நாங்கள் யாருக்கு ஓட்டுப்போட வேண்டும் என்கிற  கட்டுப்பாடுகள் இனி இருக்கக்கூடாது என்பதுதான் முதன்மையான கோரிக்கையாகும்.

3. பணியிட சிக்கல்கள்

ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பணியிட சிக்கல்கள் குறித்து விரிவான ஆய்வை அரசாங்கத் துறைகளில் மேற்கொள்ள வேண்டும் என்று பெரிதும் எதிர்ப்பார்க்கின்றோம். இங்குப் பெற்றோர்கள் ஆசிரியர்களைப் பகையாக நினைத்தல், பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் உருவாகும் சிக்கல்கள், ஆசிரியருக்கும் தலைமைத்துவத்திற்கும் உருவாகும் பிரச்சனைகள் என்று பலவகைகளிலான உள்சிக்கல்கள் இத்துறையில்  இருப்பதாக பலத்தரப்பட்ட கருத்துகளும் புகார்களும் உள்ளன. அறிவைப் போதிக்கும் ஆசிரியர்களுக்கு இவ்விதமான சிக்கல்களால் ஏற்படும் மனத்தடைகள் மாணவர்களைப் பாதிக்கும் என்று யாரும் விளங்கிக் கொள்வதே இல்லை.  ஆகவே, அரசாங்கத் துறைகளில் நிலவும் பணியிடச் சிக்கல்கள் குறித்து மேலதிகாரிகளுக்கோ அல்லது குறிப்பிட்ட தலைமைத்துவங்களுக்கோ, அல்லது ஆசிரியர்களுக்கோ மத்தியில் ஒரு கலந்துரையாடல் அரங்குகளை ஏற்படுத்தினால் இப்பிரச்சனையை ஒருங்கிணைத்துக் களைய ஏதுவாக இருக்கும் என்பது ஒரு வேண்டுகோளாக முன்வைக்கிறேன். ஆயிரம் புகார்களோடு திரியும் எங்கள் மனங்களை ஆற்றுப்படுத்தினால்தான் புதியதொரு தலைமுறை உருவாக்கத்தில் நாட்டின் கொள்கைக்கேற்ப சிறந்து செயல்பட முடியும். இதில் தனிப்பட்டு யாரையும் குறை சொல்வதற்கில்லை; நல்லாசிரியர்களும், நன் தலைமைத்துவங்களும் நிரம்பிய இவ்வாசிரியர் துறையில் நிலவும் கருத்தொருமையில்லாமை, பகைமை, எதிர்ப்புணர்வு போன்றவற்றை களைந்தால் இத்துறை மேலும் மிளிர்ந்து நிற்கும் என்பதே எங்கள் கருத்தாகும்.

 

4. வேலை மாற்றம்

சொந்த ஊர்களுக்குத் திரும்ப முடியாமல், கணவன், மனைவியைப் பிரிந்து, குடும்பத்தை விட்டு வெகு தொலைவில் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஆசியர்களை மீண்டும் அவர்களின் ஊர்களில் உள்ள பள்ளிகளில் பணியாற்ற ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும். பல வருடங்களாக மாறி வருவதற்காகப் பற்பல முயற்சிகளை மேற்கொண்டு, அவர்களைச் சந்தித்து, இவர்களிடம் கெஞ்சி  சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் ஆசிரியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்கள். அவர்களுக்கான உரிமை மறு ஆய்வு செய்யப்பட்டு இன்றைய அரசு எல்லாருக்கும் நடுநிலையான ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.  வேலைக்குச் சென்று உடனே மாற்றம் கேட்பவர்களைவிட பல வருடங்களாகக் குடும்பங்களைச் சொந்தங்களைப் பிரிந்திருக்கும் ஆசிரியர்களை முன்னிலைப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். பலர் வீட்டிலிருந்து 100 கிலோ மீட்டர் வரையில் தினமும் பயணப்படுபவர்களும் நம்மிடையே உண்டு என்பதுதான் வருத்தமான செய்தியாகும். அவர்களால் எப்படி நிம்மதியாகப் போதிக்க முடியும் என்பது ஒரு கேள்வியாக முக்கியத்துப்படுத்த வேண்டும்.

 

5. வேலைப்பழு

இன்றைய ஆசிரியர்கள் எதிர்நோக்கும் தலையாய சிக்கல் வேலைப்பழுவே. ஒரே ஆசிரியர் வகுப்பாசிரியராகவும் இருப்பார்; முதன்மைப் பாடங்களைப் போதிப்பவராகவும் இருப்பார்; அவரே மற்ற முக்கியமான கடமைகளுக்கும் தலைமை வகிப்பார்; ஒருவரே 20க்கும் மேற்பட்ட கோப்புகளை நிர்வகிப்பவராகவும் இருப்பார்; இத்தனைக்கும் மத்தியிலும் ஆண்டிறுதியில் அனைத்து மாணவர்களையும் சிறந்த தேர்ச்சிப் பெற வைக்க வேண்டும் என்கிற அழுத்தமும் கூடி நிற்கும். அப்படி தேர்ச்சியில் சிக்கல் ஏற்பட்டால் மேலதிகாரிகள் தொடங்கி, பெற்றோர்கள்வரை பலருக்கும் அதே ஆசிரியர்தான் பதில் சொல்லவும் வேண்டும். இதுபோன்ற நிலையில் எங்களுக்கு இரண்டு கைகளை மட்டும் கொடுத்த இறைவனின் மீதுதான் கோபம் ஏற்படும். இத்தகைய நிலையில் ‘போதிப்பதுதான்’ எங்களுடைய முதல் வேலை என்கிற வகையில் மற்ற வேலைகளின் மூலம் ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் ஓர் ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து ஆசிரியர்களின் சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன். கடந்த காலங்களில் நிறைய புது திட்டங்கள், ‘ஆன்லைன் வேலைகள்’ என்று கணக்கில்லாமல் குவிந்து கொண்டே இருந்தன. ஒரு திட்டத்தை முழுமையாக உள்வாங்கிக் கொள்வதற்கு முன்பாகவே இன்னொரு திட்டம் வந்து காத்திருக்கும் சூழல் பல நெருக்கடிகளை உண்டாக்கின. அதனையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

மேற்கண்ட ஐந்து கோரிக்கைகளும் இத்தனை ஆண்டுகளில் பலரின் மனத்திற்குள் ஒரு புலம்பலாக ஒரு புகாராக வெளிப்படுத்த முடியாமல் திணறிக் கொண்டிருந்தவை ஆகும். உங்கள் ஆட்சியில் கருத்து சுதந்திரமும் நாட்டு மக்களின் நலனும் முதன்மை பெறும் என்கிற தீர்க்கமான நம்பிக்கையில் இக்கோரிக்கைகளை முன்வைத்துள்ளேன். இதனை இந்நாட்டின் குடிமகன் என்கிற உரிமையில் எழுதி முடிக்கின்றேன். நன்றி.

-கே.பாலமுருகன், ஆசிரியர்.

குறிப்பு:

இதனை மலாய்மொழியில்/ஆங்கில மொழியில் மொழிப்பெயர்க்க ஆர்வமுள்ள தன்னார்வ ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், நண்பர்கள் என்னை நாடலாம். ஒரு கைத்தட்டினால் ஓசை வராது. நான் முன்வைத்திருக்கும் இக்கோரிக்கைகளுடன் உங்களுக்கும் உடன்பாடு இருந்தால் இது ஆசிரியர் வர்க்கத்தின் குரலாக மாற்ற முன்னெடுங்கள். மறுமலர்ச்சி நம் மனங்களில் உருவாக வேண்டும்.

 

நாம் ஏன் ஓட்டளிக்க வேண்டும்?

 

சிலரிடம் ‘நீங்கள் ஏன் ஓட்டுப் போட வேண்டும்?’ என்று கேட்டவுடனே ‘எனக்கு அரசியலில் ஈடுபாடு இல்லை’ என்று ஒரே வார்த்தையில் நழுவி விடுகிறார்கள்.  அல்லது ‘எனக்கு அரசியல் பிடிக்காது’ என்று அலட்சியமான பதிலைக் கொண்டிருக்கிறார்கள்.

இளையோர்களிடம் அரசியல் பேச்சுகளைத் தொடக்கினால் எங்களுக்கு இன்னும் வயதில்லை என்று பயப்படுகிறார்கள்; நடுத்தரவர்க்கத்தைச் சேர்ந்தவர்களிடம் அரசியல் உரிமையைப் பற்றி பேச்செடுத்தால் இப்பொழுதிருக்கும் வாழ்க்கையைக் கட்டமைக்கவே எங்களுக்கு நேரம்  போதவில்லை என்கிற புகாரை முன் வைக்கிறார்கள். முதியவர்களிடம் அரசியல் பற்றி கேட்டால் எங்கள் காலம் முடிந்துவிட்டது என்று ஓரம் தள்ளிப் போகிறார்கள். படித்தவர்களிடம் அரசியல் பற்றி பேச முயன்றால் ‘ஐயோ நாங்கள் அரசியல் பேசவேக்கூடாது’ என்று ஒரே வார்த்தையில் முடித்துக் கொள்கிறார்கள். பணக்காரர்களிடம் அரசியல் என்று சொன்னதும் ‘எங்களுக்கு அதில் உடன்பாடில்லை, நாங்கள் யாரையும் நம்பியில்லை’ என்று ஒதுங்கிவிடுகிறார்கள். ஆகக் கடைசியாக எளிய மக்களிடம் அரசியல் பேசச் சென்றால், ‘எங்களுக்கு என்ன தருவீர்கள்?” என்று பரிதபாத்துடன் நிற்பார்கள். இங்கு அரசியலைப் புரிந்து கொள்ளவும்; அரசியல் சார்ந்த அறிவார்ந்த உரையாடலை மேற்கொள்ளவும் யாருக்கும் பொறுமையும் இல்லை; தருணமும் இல்லை; அவர்களின் வாழ்க்கையில் அதற்குரிய இடமுமில்லை. ஆனால், அவர்கள், அவர்களுடைய பிள்ளைகள், அடுத்த சந்ததியினர் என அனைவரையுமே நிர்வகிப்பது, காப்பது, வழிநடத்துவது என எல்லாமும் அரசியல் என்பதை அவர்கள் உணர்வதில்லை.

1.நேரடி அரசியல்

அரசியல் என்பதை மூன்று வகையில் பிரித்தறியலாம். முதலாவதாக,  ஒரு கட்சி சார்ந்து அரசியலில் நேரடியாக ஈடுபட்டு மக்களுக்குப் பணி செய்வது. மக்களுக்கே அரசு என்கிற கொள்கையின்படி அரசியலை அவ்வாறு புரிந்து கொள்ளலாம். முதலாவது இரகத்தில் எல்லோருக்கும் ஈடுபாடு இருந்ததில்லை. மக்களில் ஒரு சிலர் மட்டுமே அரசியலில் நுழைந்து தன்னைத் தலைவனாக்கிக் கொள்கிறார்கள்.

‘எனக்கு அரசியலில் நேரடியாக ஈடுபட ஆர்வமில்லை’ என்கிற இரகத்தைச் சேர்ந்தவர்கள் மேற்கண்ட அரசியல் வகைக்குள் வரமாட்டார்கள்.

2. அரசியல் விமர்சகர்கள் 

அடுத்த ஒரு வகையினர் அரசியலை விமர்சிப்பவர்கள். காலம் முழுவதும் அரசியல் நடவடிக்கைகளைக் கண்கானிக்க ஆர்வம் கொண்டவர்கள். ஆனால், இவர்களுக்கும் அரசியலில் நேரடியாக ஈடுபட ஆர்வம் இருக்க வாய்பில்லை. ஆனாலும், அரசியலில் விமர்சிப்பதன் மூலம் எப்பொழுதும் தன்னை அரசியலோடு இணைத்துக் கொள்ளக்கூடியவர்கள். இவர்களின் நுனிவிரலில் அரசியல் தகவல்கள், கோட்பாடுகள், இன்றைய நிலவரம் என அனைத்தையும் வைத்திருப்பார்கள். இவர்களிடம் கேட்டாலும் ‘அரசியலில் ஆர்வமில்லை’ என்பார்கள். ஆனால், அவர்கள் குறிப்பிடும் ஆர்வமில்லை என்பது ஒரு அரசியல் கட்சிக்குள் இருந்து கொண்டு அரசியல் செயல்பாடுகளில் ஈடுபடுவதில் ஆர்வமில்லை என்பதைக் குறிக்கிறது.

3.மக்கள்

மூன்றாவது இரகத்தைச் சேர்ந்தவர்கள் மக்கள். மக்கள் என்றால் யார்? நாம் அனைவரும் ‘மக்கள்’ என்கிற குழுமத்திற்குள் இடம்பெறுவோம். சரி, மக்கள் எனும் வகைக்கும் அரசியலுக்கும் என்ன தொடர்பு என்கிற கேள்வி எழும். நம் நாட்டு அரசியல் ஜனநாயகத்தன்மை கொண்டது என்று எல்லோரும் படித்திருப்போம். ஜனநாயகத்தன்மைக் கொண்ட அரசியல் ‘மக்களாட்சி’ முறையைப் பின்பற்றவல்லது ஆகும். அதாவது, அரசை மக்களே தேர்ந்தெடுக்க வேண்டும். நாட்டின் அரசியல் கோட்பாடுகளில் ‘மக்களாட்சி’ கொள்கையைப் பற்றி தெரிந்திருக்க வேண்டும் என்பதே ஒரு குடிமகனின் தலையாயக் கடமை. அதனைத் தெரிந்து கொள்வதன் மூலம் இந்நாட்டின் அரசு உருவாக்கத்தில் மக்களுள் ஒருவனான தனக்கும் சீரிய பங்குண்டு என்பதை உணர முடியும். அதனையே நாம் இவ்விடத்தில் ‘அரசியல்’ என்கிறோம். அதன் அடிப்படையிலேயே அரசியல் பேச்சுக்களைத் துவங்குகிறோம்.

 

இப்பொழுது சொல்லுங்கள், ‘நீங்கள் ஏன் ஓட்டளிக்க வேண்டும்?’ என்கிற கேள்விக்குப் பின்னால் எந்தத் தனிப்பட்ட அரசியல் விமர்சனமும், அரசியல் தாக்குதல்களும் இல்லை. அது மக்களாட்சியைத் தன் தேசியக் கொள்கைகளில் ஒன்றாகப் பின்பற்றும் மக்கள் உரிமை பற்றியது என்று விளங்கும். ‘எனக்கு அரசியலில் ஈடுபாடு இல்லை’ என்கிற உங்கள் புறக்கணிப்பு உங்களுக்கு அரசியலில் நேரடியாகவும், அரசியலை விமர்சிப்பதிலும் ஈடுபாடு இல்லை என்று சொல்லலாம். ஆனால், மக்கள் என்கிற முறையில் ஓட்டுரிமையைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்வதில் ஆர்வம் கொண்டிருக்கவே வேண்டும். அதுவும் அரசியலே.

ஆக, நாம் ஏன் ஓட்டளிக்க வேண்டும்? இது ஜனநாயக நாடு என்கிற வகையில் அரசைத் தேர்ந்தெடுக்கும் முழு உரிமையும் நம்மிடம் உள்ளது; ஆகவே, ஓட்டளிப்பதன் மூலம் ஜனநாயக சலுகையை நாம் பாவித்து நம் கடமையை நிறைவேற்றுவோம் என்கிற தன்னுணர்வு அனைத்துக் குடிமக்களுக்கும் எழ வேண்டும். அரசியலில் ஈடுபாடு கொள்வது ஓட்டுரிமையை உணர்ந்து நமக்கான தலைவர்களை நாமே தேர்ந்தெடுக்கும் பணியாகும் என்று உணர்வோம்.

வருகின்ற மே 9ஆம் திகதி

தூரம் கருதாமல்

நேரம் கருதாமல்

ஓட்டளிக்கச் செல்லுங்கள்.

உங்களிடைய ஓட்டு செலுத்தும் தகவல்களை அறிந்துகொள்ள கீழ்க்கண்ட முகவரிக்குச் செல்லவும்:

http://www.spr.gov.my/

கீழ்க்காணும் குறும்படத்தைப் பார்க்கவும். வயதான ஒரு பாட்டியால் தன் உரிமையை விட்டுக் கொடுக்க முடியாமல் ஓட்டளிக்கச் செல்ல முடிகிறதென்றால் நாம் மட்டும் ஏன் நம் உரிமையை விட்டுக் கொடுக்க வேண்டும்?

வருகின்ற மே 9ஆம் திகதி காலை மணி 8.00 தொடக்கம் மாலை 5.00 வரையில் நீங்கள் ஓட்டளிக்கச் செல்லலாம். நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை:

1. ஓட்டளிக்கும் இடத்தினை முன்கூட்டியே உறுதி செய்து கொள்ளவும். (அகப்பக்கம், குறுந்தகவல் மூலம் அறிய முடியும்)

2. முறையான உடையை அணிந்து செல்லவும். பெரும்பாலான ஓட்டளிக்கும் இடம் பள்ளிக்கூடம் என்பதால் உடை நேர்த்தியைப் பின்பற்றவும்.

3. வாக்களிக்கும் முன் மையிடப்பட்டிருக்கும் கையில் ஓட்டுப் பாரத்தைப் பிடிக்க வேண்டாம். மை பட்டுவிட்டால் அது செல்லாத ஓட்டாகிவிடும்.

4. வாக்களிக்கும் இடத்தில் ‘அரசியல் பிரச்சாரத்தை’ மேற்கொள்ள வேண்டாம்.

நன்றி.

தேர்தல் நம் களம்

ஓட்டு நம் உரிமை.

வாழ்த்துகள்.

மக்களாட்சி முறைப்படி வெற்றி பெற்று நல்லரசை உருவாக்க அனைத்துத் தலைவர்களுக்கும் வாழ்த்துகள்.

-கே.பாலமுருகன்

குழந்தை வளர்ப்பில் நாம் இழந்தது என்ன?

‘உங்கள் துணையுடன் பிறந்ததால் குழந்தைகள் உங்களின் கைதிகள் அல்லர்’

John Bowlby, பிரிட்டிஷ் உளவியல் ஆய்வாளர்

 

பலரும் பல நூல்களில் குழந்தை வளர்ப்பு பற்றி எழுதியும் பேசியும்விட்டார்கள். நாமும் பல கருத்தரங்குகளுக்குச் செல்லும்போது பெற்றோரியல் பற்றியும் ஒரு மிகச் சிறந்த பெற்றோராக இருப்பதைப் பற்றியும் கேட்டிருப்போம். ஆனாலும் இன்னமும் குழந்தை வளர்ப்பில் நம் இந்திய சமுதாயத்தில் தொய்வு இருப்பதாகவே சமூகத்தில் நடக்கும் சிறார் தற்கொலைகள், சிறார் குற்றவியல் செயல்கள் போன்ற பலதரப்பு ஆவணங்களின் மூலம் அறிய முடிகிறது. பெரும்பாலும் இது குறித்து யாருக்கும் எந்த ஆழமான அக்கறையும் இருப்பதுமில்லை. அதற்கு ஒரே காரணம் குழந்தை வளர்ப்பு என்பது அவரவர் அல்லது அந்தந்த பெற்றோரிகள் தொடர்புடையது என எல்லோரும் ஒதுங்கிவிடுகிறார்கள்.

 

 

குழந்தை வளர்ப்பு – இயல்பைக் கண்டறிதல் 

குழந்தைகள் நம் அதிகாரத்திற்கு உட்பட்டவர்கள் என்கிற சிந்தனையே அவர்களை முழுமையாக ஆக்கிரமித்து அவர்களின் இயல்புகளைப் புரிந்துகொள்ள முயற்சிக்காமல் நம் விருப்பங்களைத் திணித்து, நாம் சாதிக்க முடியாதவையை, நாம் பெற முடியாமல் போனதை, நாம் அடைய முடியாமல் போனதை எல்லாம் மீட்டுக்கொள்ள அவர்களை ஒரு கருவியாகத் தயாரித்துக் களத்தில் எறிகிறோம். அவர்களும் நம் விருப்பப் பந்தய குதிரைகளைப் போல ஓடித் தோற்கிறார்கள். அது அவர்களுடைய தோல்வி அல்ல. நம்முடைய குழந்தை வளர்ப்பின் தோல்வியே. ஆக, நமக்கு வேண்டியது ஒவ்வொரு குழந்தைகளுக்கும் ஒரு தன்னியல்பும் தன்னாற்றலும் இருக்க வாய்ப்புண்டு என்கிற புரிதலே. பின்னர் அதனைத் தேடிய நம் அகபயணம்.  அதனை அவர்களின் நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனித்து அறிய முற்பட வேண்டும். அதுவே பெற்றோர்களின் முதல் வெற்றி.

உங்களால் ஒன்றை  வெற்றிப் பெற முடியாமல் போனதற்கு நீங்கள் மட்டுமே காரணம். உங்களின் குழந்தைகளின் மூலம் உங்களை ஆசையை நிறைவேற்றிக் கொள்ள ஒவ்வொருவரும் முயற்சிக்கும்போது ஒருவேளை நீங்கள் உங்களின் தாழ்வுமனப்பான்மையையும் தோல்வியையும் பிள்ளைகளின் வழி வென்றுவிட முடியும். ஆனால், உங்கள் விருப்பத்திற்கு உருவாகி தன்னுடைய இயல்பு என்ன என்பதைத் தெரிந்து கொள்ளாமலேயே ஒரு குழந்தை வளர்ந்து கரைகிறது. இப்படியாக வாழ்நாள் முழுவதும் பிறரின் மகிழ்ச்சிக்காக, பிறரின் ஆசைக்காக, பிறரின் தேவைக்காக என வாழ்ந்து மறைய வேண்டிய துர்வாழ்க்கை அக்குழந்தைக்கு வழங்கிவிடும் நிலை ஏற்படும்.

குழந்தை வளர்ப்பு – நுட்பமான வழிகாட்டல் 

குழந்தை வளர்ப்பு என்பது உலக அனுபவங்களைத் திறந்து காட்டும் ஒரு நுட்பமான வழிகாட்டலாகும். உலக அனுபங்களிடமிருந்து குழந்தைகளை ஒளித்து நம் அகக்கூட்டிற்குள் அவர்களைப் பூட்டி வைத்தல் முதிர்ந்த சமூகம் செய்யக்கூடிய காரியமல்ல என்பதைப் பெற்றோர்கள் உணர வேண்டும். நாளை உலகை எதிர்க்கொள்ளும்போது உளரீதியிலும் அனுபவ ரீதியிலும் அவர்களிடத்தில் இருக்கும் காலியான இடத்தால் ஏமாற்றப்படவும் பாதிப்பிற்குள்ளாகவும் வாய்ப்புண்டு. இதுதான் உலகம் இப்படித்தான் இருக்கும் என்கிற திறந்த மன உரையாடலைப் பெற்றோர்கள் குழந்தைகள்  வளரும் காலக்கட்டத்திலேயே தொடங்கிவிட வேண்டும். பெற்றோர்கள் திறப்பவர்களாக இருக்க வேண்டுமே தவிர அடைப்பவர்களாக இருக்கக்கூடாது. அவர்கள் அடைத்தால் இவ்வுலகின் இருண்ட பகுதியைத் திறக்க ஆயிரம் கரங்கள் காத்திருக்கின்றன என்பதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

குழந்தை வளர்ப்பு-  பன்முகத்தன்மை கொண்டது

குழந்தை வளர்ப்பில் நம் இடம் எது என்கிற கேள்விக்கு முதலில் உங்களிடம் தீர்க்கமான பதில் இருத்தல் வேண்டும். அப்படி இல்லையெனில் அதனை முதலில் கண்டடையுங்கள். ஒரு குழந்தைக்கு நாம் தாயாக இருக்கலாம்; தந்தையாக இருக்கலாம்; அது உறவுமுறை குறித்து உலகம் நமக்குள் கற்பிக்கும் விதிமுறை. ஆனால், நாம் அவர்களுக்கு என்னவாக இருக்கப் போகிறோம் என்பதில் சூசகமான ஒரு கண்டறிதல் இருக்க வேண்டும். ஒரு நல்ல நண்பனாக, ஒரு நல்ல ஆசானாக இப்படியாக அவர்களுடன் நாம் ஏற்படுத்திக் கொள்ளவிருக்கும்  உறவானது பன்முகத்தன்மை கொண்டதாக அமைந்திருக்க வேண்டும். ஒரு தந்தை தன் வாழ்நாள் முழுவதும் தன் பிள்ளைகளுக்குத் தந்தையாக மட்டுமே இருந்துவிட அவசியமில்லை.

அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க நாம் தயாராக இருக்க வேண்டும். அவர்களின் வடிக்காலாக நாம் இருந்தாலே அவர்கள் அமைதி, சமாதானம் பெறும் இடமாக நாம் மாறிவிடலாம். அத்தகைய நம்பிக்கையையே அவர்களிடத்தில் நாம் உருவாக்க வேண்டும். மன வலிக்கு அவர்கள் தேடும் மருந்தாக நீங்கள் நிலைத்திருக்கும்படி உறவினை அமைத்துக் கொள்ளுங்கள். அதுவே குழந்தை வளர்ப்பில் நாம் கவனப்படுத்த வேண்டிய அதிமுக்கியக் கூறாகும்.

குழந்தைகளுக்கு ஏது உணர்வு, அவர்களுக்கு ஏது வலி என நாம் அவர்களைப் பொருட்படுத்துவதே இல்லை. பலர் முன்னிலையில் அவர்களைத் தண்டிக்கிறோம்; அவர்களை அவமானப்படுத்துகிறோம்; நம் சொற்களால் அவர்களின் நம்பிக்கையை வேரறுக்கிறோம். இங்கிருந்து தாழ்வு மனப்பான்மையையும் உளத்தளர்ச்சியையும் நாம் அவர்களின் மனங்களில் உருவாக்கிவிடுகிறோம்.

ஆக, குழந்தை வளர்ப்பு ஒரு கலை என்று சிலர் சொல்லியிருக்கிறார்கள். கலை என்றாலே அதனை ஓர் உயர்ந்த இடத்தில் வைத்துவிட்டு நாம் ஒதுங்கிவிடுவோம். அதற்கும் நமக்கும் எந்தத் தொடர்பும் இல்லாததைப் போல நகர்ந்து விடுவோம். குழந்தை வளர்ப்பு என்பது அடிப்படை தேவை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அது எந்தக் குழந்தையாகவும் இருந்தாலும், இவ்வுலகம் குழந்தைகளாலும் நிரம்பியிருப்பதால் நாம் எல்லோரும் அதனைப் பற்றி அக்கறை கொள்வதில் எந்த நஷ்டமும் இல்லை என்பதே உண்மை.

-கே.பாலமுருகன்

இரண்டு விதைகளின் வரலாறு

எரிந்த மண்ணில்
தகிக்கும் வெய்யிலில்
இரண்டு விதைகள்
புதைக்கப்பட்டன.
இருள் சூழ்ந்து சூடு தாளாமல்
இறுகக் கவ்விப் பிடித்திருக்கும்
காலச்சுமையில் நெளிந்து புரண்டு
முட்டிமோதிப் போராடியக் களைப்பில்
இரண்டு விதைகளும்
இருவிதமான முடிவுகளுக்கு
வந்தன.
முதல் விதை
எப்படியும் வெளிச்சத்தைக் காணத்
துடியாய் இருக்க
மற்றுமொரு விதை
இருளுக்குள்ளே சோம்பிக் கிடக்க
ஆயாசமாய் மண்ணில் தலைச்சாய்த்துப்
படுத்துறங்கியது.
முதல் விதை
பூமியை எக்கிப் பார்த்ததும்
மிதிப்பட்டது.
மீண்டும் எழுகையில்
மீண்டும் மிதிப்பட்டது.
வெளிச்சத்தை நுகரும் வெறியில்
விடாமல் மீண்டும் தலைத் தூக்கியது.
அடுத்த முறையும் பாதியாகக்
கத்தரிக்கப்பட்டது.
மீண்டும் மண்ணுக்குள் புதைந்தபோது
மற்றொரு விதை
உள்ளேயே இருந்திருக்கலாமே என்று
எகத்தாளமாய் சிரித்தது.
முதல் விதை
தன்னுடைய கடமை
மண்ணிலிருந்து துளிர்த்தெழுவது என்று
மீண்டும் முயற்சித்து எழுந்தது.
மழையால் அலைக்கழிக்கப்பட்டது;
காற்றால் வேரதிர அசைக்கப்பட்டது.
பிடிவாதமாய் நின்று வளர்ந்தது.
மண்ணுள்ளே புதையுண்ட விதை
மெல்ல சக்தியை இழந்து
நகர முடியாமல்
இருள்பிடித்த மிச்சமாய்
புழுக்கள் தின்ன
குற்றுயிராய் தவித்துக் கொண்டிருக்க
சட்டென சில விதைகள் மண்ணுக்குள்
விழுந்தன.
திடீரென ஒரு வேர்
மண்ணைச் சூழ்ந்து கொண்டது.
மண்ணை மட்டும்
புசித்து வாழ்ந்து
வயதொடிந்த விதை
அந்த விதைகளை எங்கோ
பார்த்திருப்பதாக நினைத்தது.
கடைசியாக ஒருமுறை
மண்ணைவிட்டு வெளியாகி
பூமியைப் பார்க்க ஆசைப்பட
விதையை யாரோ தோண்டி
வெளியே வீசினார்கள்.
இங்கிருந்து சிரமப்பட்டு
மண்ணைப் பிளந்து சென்ற
விதை….
மரமாகி
உரமாகி
ஆயிரமாயிரம் விதைகளைத் தூவி
எரிந்து சாம்பலாகியிருந்த நிலத்தை
பூக்களும் பழங்களும் செழிப்பும்
நிறைந்த தோட்டமாக்கியிருந்தது.
மரங்களுக்கு நடுவே
தலை நிமிர்ந்து
கிளை விரித்து
தோட்டத்துக்கே நிழலாக
ஒய்யாரமாய் நின்று கொண்டிருந்தது
முன்பொரு சமயம்
மண்ணில் புதைக்கப்பட்ட
அச்சிறு விதை.
ஒவ்வொரு பிறப்பிலும்
புதைந்திருக்கும் அர்த்தங்களை முட்டு
 மண்ணை முட்டு
உன் சோம்பலை முட்டு
உன் கண்ணீரை முட்டு
உன் வீழ்ச்சியை முட்டு
உன் தோல்வியை முட்டு
முட்டும்வரை முட்டு.
ஒரேயொருமுறையாவது
வெளிச்சம் பிறக்கும்.
விதை
உன்னை விதை
உன் வீரத்தை விதை
உன் திறமையை விதை
உன் ஆர்வத்தை விதை
உன் முயற்சிகளை விதை
உன் விதைத்தலை விதை.
விதை வீணாகாது.
நிச்சயம் முட்டும்.
(இது கவிதை அல்ல)
– கே.பாலமுருகன் 

ஒரு மிகப் பெரிய கொள்ளைச் சம்பவத்தைப் பற்றி- விசாரணைகளின் பலவீனங்கள்

 

சம்பவம் நடந்த நாள்: கடந்த ஜனவரி 24

இடம்: (இரகசியமாக்கப்பட்டுள்ளது)

நேரம்: காலை 10.00 மணி

 

இதுவொரு மிகப் பயங்கரமான கொள்ளைச் சம்பவமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றது. இக்கொள்ளைச் சம்பவத்தில் மொத்தம் நான்கு பேர் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் ஓர் ஆள்தான்  என்றாலும் இன்றளவும் அக்கொள்ளைச் சம்பவம் குறித்துப் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

காவல்துறையினர் இதுபோன்ற ஒரு குரூரமான கொள்ளைச் சம்பவத்தைப் பார்த்ததில்லை என்றும் விசாரணையை எந்தக் கோணத்திலிருந்து தொடங்குவது என்றும் தீவிரமாகக் கலந்தாலோசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஒரு காவல்துறை அதிகாரியின் வாக்குமூலம் பின்வருமாறு:

“எனது 10 வருட வேலை  அனுபவத்தில் இதுதான் நான் கண்டு அதிர்ச்சியடைந்த ஒரு கொள்ளைச் சம்பவம் ஆகும். சமீபத்தில் ஒரு தமிழ் சினிமாக்கூட குற்றப் பரம்பரையில் கொள்ளைச் சம்பவத்தின் வன்முறையைக் காண்பித்தது. அப்படத்தைவிட பன்மடங்கு கேள்விப்படுவோருக்கு முழு அதிர்ச்சியையும் பயத்தையும் கொடுக்கக்கூடியதாக இக்கொள்ளைச் சமபவம் எப்பொழுதுமே பீதியை உண்டாக்கும் என்றே நினைக்கிறேன்”

அக்கொள்ளைச் சம்பவத்தை நேரில் பார்த்த ஒரு பெயர் குறிப்பிட விரும்பாத நபரின் வாக்குமூலம்:

“என் வாழ்நாளில் அத்தகையதொரு கொள்ளையர்களையும் கொள்ளைச் சம்பவத்தையும் நான் பார்த்ததே இல்லை. இன்னமும் என் நடுக்கம் குறையவே இல்லை. முடிந்தால் அக்கொள்ளைச் சம்பவத்தைப் பற்றி குழந்தைகளிடம் சொல்ல வேண்டாம். அக்கொள்ளையர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்”

விசாரணை மிகவும் தீவிரமாக முடுக்கப்பட்டு சம்பந்தப்பட்ட கொள்ளையர்களைக் காவல்துறை கைது செய்தது. உண்மை சம்பவம் அவர்களுக்கு மட்டுமே தெரியும் என்பதால் நேரடி வாக்குமூலம் பெறக் காவல்துறை முடிவெடுத்தது. எல்லோரும் ஒன்று திரண்டு கொள்ளையர்களைப் பொதுமக்கள் முன்னிலையில் விசாரணைக்குட்படுத்த தீர்மானிக்கப்பட்டது.

கொள்ளையர்களின் பெயர்கள் பின்வருமாறு:

  1. முரளி
  2. கபிலன்
  3. குமார்
  4. வினோத் 

 

கேமரா பதிவுடன் விசாரணை தொடங்கப்பட்டது:

காவல்துறை : முரளி, நீங்கள் சொல்லுங்கள். ஏன் அதைச் செய்தீர்கள்?

முரளி: எனக்கு அது பிடிக்கல… அதான்…

காவல்துறை: ஏன் பிடிக்கவில்லை?

முரளி: அது என் கூட்டாளி இருக்கான் இல்ல? குமாரு… அவனோட…

காவல்துறை: அது எப்படி உங்களுக்குத் தெரிய வந்தது.

முரளி: அவன் தான் சொன்னான்…(சிரிக்கிறான்)

காவல்துறை: சரி, எப்படி அக்கொள்ளையை மேற்கொண்டீர்கள்?

கபிலன்: அது நான் சொல்றன். நாங்க கேட்டோம், சுபா கொடுக்கல. அப்பறம் அது சாப்ட போச்சா… அப்பத்தான் நான் போய் எடுத்தன்…

காவல்துறை: அப்படிச் செய்யலாமா?

முரளி: நான் கேட்டன் அதுதான் கொடுக்கல… அதான் அது குமாரோடையா இல்லயான்னு பாக்க எடுத்தன்…

காவல்துறை: பார்க்கத்தான் எடுத்தீர்கள் என்று எப்படி நம்புவது?

குமார்: நாங்கப் பாத்துட்டு வைக்கறதுக்குள்ள  எங்கள பிடிச்சிட்டாங்க   தெரியுமா?

காவல்துறை: இதை எப்படி நாங்கள் நம்புவது?

வினோத்: வேணும்னா சுபாகிட்ட கேட்டுப் பாருங்க…

கொள்ளையில் பாதிக்கப்பட்ட சுபா வரவழைக்கப்படுகிறாள்.

காவல்துறை: சொல்லுங்கள் சுபா, என்ன நடந்தது?

சுபா: (அழுதுகொண்டே…) என் அழிப்பானை இவனுங்கத்தான் எடுத்தானுங்க…

காவல்துறை: பிறகு என்ன நடந்தது?

சுபா: குமாரு, திரும்பி வந்து கொடுத்துட்டான். ஆனால், அதுல கொஞ்சம் பிஞ்சிருக்கு… எனக்கு புது அழிப்பான் வேணும்….(மீண்டும் அழுகை)

சுபா மீண்டும் அனுப்பப்பட்டவுடன் காவல்துறை அந்த நான்குக் கொள்ளையர்களின் முகத்திலும் கருப்புத் துணியை மூடி வெளியே கொண்டு வந்தது.

மக்கள் கூட்டம் அந்த 7 வயது நிரம்பிய கொள்ளையர்களைப் பார்வையிட அலைமோதினர். கடுமையான  காவலுடன் காவல்துறை அவர்களை வண்டியில் ஏற்றி நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்றது. குற்றவாளி கூண்டில் நிற்க வைக்கப்பட்டிருந்த அவர்கள் மீது பலர் கல்லெறிந்தனர். பலர் வசைப்பாடினர். பலர் எதிர்ப்புப் பலகையையெல்லாம் காட்டிக் கொண்டு முழக்கமிட்டனர்.

சிறிது நேரத்திற்குப் பின் நீதிமன்றத்தில் அவர்களுக்குத் தீர்ப்பு வாசிக்கப்பட்டது.

“ஏழு வயது நிரம்பிய பள்ளி மாணவர்களான முரளி, கபிலன், குமார் மற்றும் வினோத் ஆகிய நால்வரும் கடந்த ஜனவரி 24 2018ஆம் ஆண்டில் காலை 10 மணிக்கு ‘சுபா’ என்கிற அதே ஏழு வயது ஆகிய சிறுமியின் 50 சென் மதிப்புள்ள அழிப்பான் ஒன்றை எடுக்க முயன்றுள்ளனர். ஆகவே, விசாரணைக்குப் பின் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவர்களைத் தொடர்ந்து 10 நாட்கள் கடுங்காவலில் வைத்து ரோத்தானில் அடிக்கவும், தொடர்ந்து கடுமையாகத் திட்டவும், தீர்ப்பளிக்கப்படுகின்றது’

குறிப்பு: மேற்கண்ட நீதிமன்றம் நம் வீடாக இருக்கலாம்; பள்ளிக்கூடமாகவும் இருக்கலாம். மேற்கண்ட காவல்துறை என்பவர்கள் பெரியர்களாக இருக்கலாம், பெற்றோர்களாக இருக்கலாம்… யாராக வேண்டுமென்றாலும் இருக்கலாம். தீர்ப்பு என்பது நம் மனசாட்சியின் குரலாக இருக்கலாம்.

ஓர்  அழிப்பானை எடுத்த சிறுவர்களையும் ஒரு வங்கியைக் கொள்ளையடித்த திருடர்களையும் நாம் ஒரே மாதிரித்தான் நடத்திக் கொண்டிருக்கிறோமா என்கிற கேள்வியை உங்கள் முன் சிந்தனைக்காக வைத்துவிடவே இக்கற்பனை கொள்ளைச் சம்பவம். இதை யாரையும் எந்தத் தனிநபரையும் தனி அமைப்பையும்  குறிப்பிட அல்ல.  நம் விசாரணைகளில் முறையான உளவியலும் பெற்றோரியலும் அன்பும் இல்லாதனாலேயே பெரும்பாலான சம்பவங்களுக்குக் குற்றம் என்கிற பெயரைச் சூட்டி சிறார்களைக் காயப்படுத்துகிறோம். நம் விசாரணைகளின்/ அணுகுமுறைகளின்  பலவீனங்களிலேயே ஒரு தலைமுறையின் சீரழிவு ஒளிந்துள்ளது என்பதே இப்பதிவின் எதிர்வினை.  சிறார் செய்யும் தவறுகளை அணுகும் நம் விதத்தை நோக்கி நம்மை நாமே விசாரித்துக் கொள்ள இதுவொரு சந்தர்ப்பத்தை  உருவாக்கும் எனில்…

-கே.பாலமுருகன்