உயிர்தெழல் : இறந்தகாலத்தின் ஓசைகள் சிறுகதை தொகுப்பிற்கு, எழுத்தாளர் சீ.முத்துசாமியின் முன்னுரை
மரணம் மனிதன் எதிர்க்கொள்ளும் இருண்மை வெளியின் உச்சபட்ச புதிரின் ஆழ்வெளி. பிரக்ஞை அழிந்த வெளி. சன்னஞ் சன்னமாக முழு பிரக்ஞை வெளிக்குள் நிகழும் மரணம் அதற்கு முன்பானது. முதுமையும் வறுமையும் நொய்மையும் சுமந்தபடி, மனிதனுள் நிகழும் அந்த மரணம் துயரமிக்கது.
அது வரையிலான அவனது உலகத்தையே தலைகீழாகப் புரட்டிப் போட்டுவிடும். ஆழ்கடலின் இருளுக்குள் கைவிடப்பட்ட குழந்தையின் மரண ஓலம் எதிரொலிக்கும் மயானக் காடு. காலம் அவனது உடலுக்குள் புகுத்திவிடும் நோய்மைக்கு நிகராக மனம், மூளை என அவனது இருப்புக்கு அர்த்தப்பாடு வழங்கும் அனைத்து நுண் செயலிகளும் ஒன்றன் பின் ஒன்றாய் அணையத் துவங்க, தொடங்கிவிடும் ஒரு திகிலூட்டும் அமானுஷ்ய இறுதி பயணத்துக்கென திறக்கப்படும் வாசல் அது.
இடியப்ப பாட்டி, ஒருநாள் இறந்த பின், அடுத்து அவளது பிரியத்திற்குரிய அந்தப் பழைய அலமாரியும் வீட்டிலிருந்து அகற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட, அதன் அபரிமிதமான ‘கனம்’ அவர்களைத் தடுமாற வைக்கிறது. அந்தக் கனம், அவள் தன் குடும்பத்தில் சுமந்த துயரத்தின், வலியின், துரோகத்தின் ஒட்டுமொத்த ‘கனம்’ என்பதை நாம் உணரும் தருணத்தில், இடியப்ப பாட்டி, நம்முள் விஷ்வரூபம்மெடுக்கிறாள்.
மரணத்தின் நுழை வாயிலில் நின்று கொண்டு, சமூகத்தின் அனைத்து தரப்பாலும் கைவிடப்பட்ட துயருற்ற ஆன்மாக்களாய் அவர்களது சிதறுண்ட இருட் பிரக்ஞையின் ஊடாய், அவர்கள் நம்மை வந்தடையும் நொடிகள் ஒவ்வொன்றும் நாம் இதுவரை கண்டு வந்த நமது கருப்பு வெள்ளை உலகத்தைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டுவிடுகிறது.
உள்ளடங்கிய ஆரவாரமற்ற சித்தரிப்பில், வடிவ நேர்த்தியும் கலையமைதியும் குறைவுபடாத கட்டமைப்புக்குள் – தினம் தினம் நம் குடும்பச் சூழலில் எதிர்க்கொள்ளும், மிக எளிய வாழ்வியல் பார்வையும் புரிதலும் கொண்ட, சமூகத்தின் ஒரு தரப்பை, நம் கண் முன் நிறுத்தும் கதைவெளிக்குள், அவர்களில் பலரும் ஒன்று அவர்கள் வீட்டைத் துறந்து தெருவில் இறங்கி நடந்து, இந்த உலகத்து ஜனத் திரளில் ஒரு துளியாய் கலந்து, மறைந்து போகிறார்கள் அல்லது மரணிக்கிறார்கள்.
அதிலும், இக்கதைகளின் பரப்பில் நிகழும் காணாமல் போகுதலும் அல்லது மரணமும், ஒரு மிகுந்த மன உளைச்சலுக்குப் பின்பான முடிவுகளாக அமைந்துள்ளது ஒரு காலக் கொடுமை. மரணம் முற்றுப்புள்ளி. ஒரு தருணத்தில் மனம் சமாதானம் கொண்டு விடுகிறது. ஆனால், காணாமல் போகும் மனிதர்கள் நமக்குள் விரித்துச் செல்லும் உலகம் அச்சுறுத்தலாக உள்ளது.
வாழ்வுப் பயணத்தின் கடைசிப் புள்ளியில் நின்று கொண்டு, சமூகத்தின் அனைத்து தரப்பாலும் ஓரங்கட்டப்பட்டு, கவிடப்பட்ட துயரருற்ற ஆன்மாக்களாய், சிதையுண்டு பிரக்ஞை இழந்து அவர்கள் நம்மை வந்தடையும் தருணங்கள் ஒவ்வொன்றும் நம்முள்ளே இதுநாள்வரை வாழ்வு கட்டமைத்திருக்கும் கற்பனை உலகையும் உடைத்து நொறுக்கி தரைமட்டமாக்கிவிடுகிறது.
இறந்த காலத்தின் ஓசைகள் முற்றிலும் ஓர் இருண்மை வெளியில், மிக மெலிதானதொரு ஒளியின் ஊடாய் நகரும் பாவைக் கூத்தென – மயக்கம் தரும் சர்யலிச வடிவிலான, மிக குழப்ப திரிபு மனநிலைக்குள்ளிருந்து, ஒரு முதியவர், தன் முன் கண்ணாமூச்சியாடும் நிதர்சன உலகை – உள்வாங்கவோ எதிர்க்கொள்ளவோ இயலாது குழம்பித் தவிக்கும் கையறு நிலை. வார்த்தைகளுக்குள் வசப்பட மறுத்து, கைகளில் சிக்க மறுக்கும் விறால் மீனாய், நழுவி ஓடிக் கொண்டிருக்கும், மிகச் சிக்கலானதொரு இருளடைந்த மனநிலையை அது இயக்கம் கொண்டிருக்கும் அதற்கு நேர்நிகர் இருண்மை சூழலோடு பொருத்தி – ‘படைப்பு’ வெளிக்குள் அதைக் கொண்டு சென்று, வெற்றிகரமாக நிறுவ கே.பாலமுருகனால் முடிந்திருக்கிறது.
இந்த முதியவர்களின் மிகப் பெரும் துயராக, குடும்ப அரசியலில், அதுநாள்வரை, தங்கள் கைவசமிருந்த குடும்பத் தலைமை அதிகார மையத்தை, ஒரு தருணத்தில், குழந்தைகளுக்குக் கைமாற்றி – உணவுக்கும், உடைக்கும், உறைவிடத்துக்கும், தங்கள் சுயத்தை அழித்துக் கொண்டு கையேந்தி நிற்க நேர்ந்த அவலத்தை, மிக நுட்பமானதொரு களத்தில் நிறுவி, தன் இலக்கைச் சென்றடைந்துவிடுகிறது, ‘பாட்டியின் தோள் துண்டு’. ஓட்டுப் போடத் துடிக்கும் அந்தப் பாட்டியின் மனவோட்டத்திலிருக்கும், தன் அடையாள மீட்பு என்றும் நுண் அரசியல், சட்டென மாற்றம் கண்டுவிட்ட அவரது உடல்மொழியில் உயிர்ப்புடன் எழுந்து வருகிறது.
குடும்பம் எனும் சிறிய வட்டத்துள் நிகழும் அதிகார இழப்பின் துயரத்தைக் கடந்து செல்ல, அவர் கண்டடையும் அந்தத் தற்காலிக மீட்பில், அவர் அடையும் ஆனந்தமும் திருப்தியும், அவரது பயணத்தின் கடைசிப் புள்ளி, தொட்டு நிற்கும், அந்த வெறுமையின் பிரம்மாண்டத்தை, நம் முன் நிறுத்தி, அமைதியிழக்கச் செய்துவிடுகிறது.
பேபி குட்டியில், தன்னுடன் தினமும் ஓடிப்பிடித்து கண்ணாமூச்சியாடிய, தனது பேரன், இடுகாட்டுக்குப் புறப்படத் தயார் நிலையில், சவப் பெட்டிக்குள் படுத்திருக்கிறது. துயர்மிக்க சூழலில் – பேபி குட்டி மட்டும் ‘அங்கில்லாமல்’ வேறு எங்கோ இருக்கிறாள். தன் மகளின் அழுகைக் குரல் அழைக்க, சடாரென உள்ளே புரண்டு விழித்துக் கொள்கிறாள். கருவில் சுமந்து கேட்ட தன் உதிரத் துளி ஒன்றின் முதல் குரல் மண்ணில் விழுந்த கணத்தில் பீரிட்டடித்து, அவள் ஆழ்மனத்துக்குள் பயணித்து, நங்கூரமிட்டுக் கொண்ட, அதன் வீரிடல். மகளுடனான உறவில், நீண்டு செல்லும் நினைவுச் சரடின், முதல் கண்ணி.
தாய்மையின், அந்த நொடி நேர உயிர்த்தெழலில், ஒட்டுமொத்த மனிதகுல மேன்மையின் உச்சபட்ச மகோன்னத தருணங்கள் ஒன்றின் மர்ம முடிச்சை- ஒரு கலைஞனின் கண்கள் தொட்டுவிடுகிறது. வாழ்த்துகள்.
அன்புடன்
சீ.முத்துசாமி