அனல் சிறுகதை: வாசக விமர்சனம்- பாக்கியராஜ்

https://youtu.be/RgVVOCssC88

எனது அனல் சிறுகதையைப் பற்றி சென்னை, திருவான்மியூரில் வாசகசாலையும் பனுவல் புத்தக நிலையமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த கதையாடல் 58ஆம் நிகழ்ச்சியில் வாசகர்/விமர்சகர் பாக்கியராஜ் அவர்கள் வழங்கிய விமர்சன உரை.

அனல் சிறுகதை கடந்த மாதம் சொல்வனம் இதழில் பிரசுரமாகியிருந்தது. மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழகத்து இதழில் பிரசுரமான சிறுகதை. பாக்கியராஜ் அவர்கள் இத்தனை விரிவாக அக்கதையைத் தனக்குள் உணர்ந்து பேசியிருப்பது மகிழ்ச்சியையும் நிறைவையும் அளிக்கிறது.

நன்றி: சொல்வனம், வாசகசாலை, பனுவல் புத்தக நிலையம்.

நடனம் சிறுகதை: வாசகப் பார்வை 4: சு.சுதாகர், விமலா ரெட்டி

நடனம்: வாசகர் பார்வை: சு.சுதாகர்

வணக்கம். மூன்று முறை  வாசித்த பிறகு கதையின் திறப்புகள் பலவகையாகின.

நகரத்தில் பெரும்பாலோர் அவரவர் வேலையில் மட்டும் பரபரப்பாக இருப்பவர்கள். மற்றவர்களின் செயல்பாடுகளை உற்றுநோக்க வேண்டிய நேரமோ, அவசியமோ அவர்களுக்கு இருப்பதில்லை. அதனால் சில தீய விசயங்களுக்கு ஏதுவாக நகரம் பல இடங்களை வைத்திருப்பதாக குமார் எண்ணிக்கொள்கிறான். குறுக்கு வழியில் பணம் சம்பாதித்து பழகிவிட்டவனால் வேறு வழியை யோசிக்கமுடியவில்லை. சிலந்திவலை போன்று அதில் சிக்கிக்கொண்டவன் அவன்.

குப்பையிலிருந்து எதையோ பொறுக்கும் சீனத்தி, நகரத்தில் நல்லவழியிலும் சம்பாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் முரண் பாத்திரமாகவே படுகிறாள். குமாரைப் போன்ற சுயநலவாதியால் பாதிக்கப்பட்டவளாக இருப்பாளோ என்றும் தோன்றியது. வேறு கோணத்தில் யோசித்தால் குமாரின் செய்கை அசுத்தமானது என்பதைக் குறிக்கும் குறியீடாகவும் தெரிந்தது.

தாயின் அரவணைப்பில் இருக்கும் மலாய்க்கார சிறுமி தன் இயல்பைத் தொலைக்காது அந்தப் பருவத்துக்கே உரியபடி இருக்கிறாள். தாயில்லாது, காரியவாதியாகிய தந்தையால் கோமதி குமாரின் சுயநலத்தால் சீரழிந்து கொண்டிருக்கிறாள். இருந்தாலும் அவளின் குழந்தைத்தனம் அவ்வப்போது வெளிப்படவே செய்கிறது.

இக்கதையின் தலைப்பானது நடனம். நடனம் பெரும்பாலும் மகிழ்ச்சியின் வெளிப்பாடாகவே  இருக்கும். இக்கதையில் கோமதி போதை மருந்து, மதுபானம் கொடுக்கப்பட்டு, அதன் மூலம் பரவச நிலைக்கு தூண்டப்பட்டு ஆடும் நடனமானது அவளுக்கானது அல்ல.

குழந்தையை மகிழ்ச்சிப்படுத்தக்கூடியவை அவர்களுக்குப் பிடித்தமான உணவு, பிடித்தமான விசயம் இப்படி சிறு விசயங்களில் அடங்கியுள்ளது. கோமதி தான் கேட்ட உணவை உண்டபின் ஏற்பட்ட களிப்பில் ஆடும் நடனம்தான் அவளுக்கானது. ஆட்டுவிப்பான் இறைவன் என்பார்கள். நம் நிலையைவிட சற்றே மேலாக இருப்பவர்களும் நம்மை ஆட்டுவிப்பவர்கள்தான். வாழ்வாதாரத்திற்காக தன்னிடம் வந்து நிற்கும் அனைவரையும் ஆட்டுவிக்கும் மேலான இடத்தில் இருப்பதாக ஒரு மமதை குமாருக்கு உண்டு. அதனால்தான் பெரியசாமியிடமோ, கோமதியிடமோ வெளிப்படும் கொஞ்சமும் பணிந்துபோகாததிடமும், துன்பத்தின் சாயல் துளியும் இல்லாத பார்வையும் அவனுக்கு உவகை அளிக்கவில்லை.

நடனம் என்பது ஆடுவது மட்டுமல்ல; ஆட்டுவிப்பதும் கூட என்பதை இத்தைலைப்பில் உணர்ந்தேன்.

  • சுதாகர் சுப்ரமணியம்

நடனம்- எனது பார்வையில்: விமலா ரெட்டி

கதையைப் படித்த உடனேயே என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இருப்பினும் மறுவாசிப்பு செய்தபோது கதைக்குள் ஆத்மார்த்தமாக உள்நுழைய முடிந்தது. ஒரு பிள்ளைக்குத் தாய் இல்லை என்றால் அப்பிள்ளையின் நிலைமை சிதைந்து போவதைச் சிறப்பாக எடுத்துக் காட்டியிருக்கிறார் எழுத்தாளர். தான் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் குமாரிடம் தன் மனைவிக்கு வேலை கேட்கிறான் பெரியசாமி. அதற்கு குமாரும் சரி அனுப்பி வை என்று சொன்னதும், பெரியசாமி எப்படி மகிழ்ந்து போய் மதமதப்புடன் இருக்கிறான். அப்படி என்றால் பெரியசாமிக்கு அது எப்படிப்பட்ட இடம் என்று தெரிந்தே இருக்கிறது. வேறு தொழிலுக்கு பயன்படுத்திக் கொள்வதற்காக இருக்குமோ? என எண்ணவும் தோன்றியது. இது எனது பார்வை மட்டுமே.

ஓர் இடத்தில் கோமதி குமாரிடம் கேட்கிறாள் ‘அங்கிள் அம்மா ஏன் செத்தாங்க’ என்று கேட்கும் பொழுது அவர் மாரடைப்பால் இறந்துவிட்டார்’ என்று சொல்கிறான். இது புரியாத புதிராக இருந்தாலும், மற்றுமொரு இடத்தில் கோமதி ‘அங்கிள் அங்க போனேனா  ஏதோ மாத்திரையைக் கொடுத்து கொஞ்சம் பீரும் தராங்க. அது இப்ப வரைக்கும் ஒரு மாதிரியா  ஆக்குது அது மட்டும் வேண்டாமுன்னு சொல்ல முடியுமா?’ என்று கேட்கும் பொழுது நமது கண்களும் ஈரமாகிறது.

இது போலத்தான் அவளது அம்மாவுக்கும் நேர்ந்து இருக்குமோ? அதுதான் அவள் தற்கொலைப் பண்ணிக் கொண்டாளோ?  என்று எண்ணவும் தோன்றுகிறது. வாசக இடைவெளி.

மகிழுந்தின் கண்ணாடியைத் திறந்து மழை நீரை உள்ளங்கையில் சேகரித்து  விளையாடும்போது அவள் சிறுமி என்பதை புரிய வைத்தது. அதைப் போலவே தூக்கு சப்பாத்தியைக் காட்டும் பொழுது அவள் பருவமங்கை என்பதையும் காட்டியது. எழுத்தாளர் அவளின் வயதை சொல்லவில்லை. ஆனால் காட்சிகளால் அவளின் வயதை காட்டியது சிறப்பு.

வாங்கிய கடனுக்காக பெரியசாமி மனைவியையும், பிள்ளையையும் கொடுத்து விடும் பொழுது பெரியசாமி இரக்கமற்ற மனதை காட்டுகிறது. தலைவன் சரியாக இருந்திருந்தால் மனைவி மக்களுக்கு இத்தனை பெரிய சோகம் நடப்பதற்கு வாய்ப்பே இல்லை. லீனா, மேரி போன்ற பெண்கள் பிற இனத்தவராக கடன் பெற்றுக் கொண்டு அதன் வட்டியைக் கட்ட முடியாமல் அவர்களின் வயிற்றெரிச்சலைக்  கொட்டி தீர்க்கும் போதும், சாபம் விடுவதும் குமார் போன்றவர்களின் சுயரூபம் தெரிய வருகிறது. அதையும் காட்சியாகத் தான் வெளிப்படுத்தி இருக்கிறார் எழுத்தாளர். 

சொல்ல வந்த செய்திகளை நேரடியாக சொல்லாமல் காட்சியாக சொல்வது அருமை. சிறப்பானக் கதை. ஆசிரியருக்கு எனது வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.

– விமலா ரெட்டி

நடனம் சிறுகதையை வாசிக்க:

கருணையற்ற வாழ்வின் ஒரு நடனம்: வாசகர் கடிதம் 3: எஸ்.பி பாமா

முன்பெல்லாம் மூத்த படைப்பாளர்களின் எழுத்துகள்தான் பிரபலமாகப் பேசப்பட்டும் புகழப்பட்டும் வந்தன.ஆனால் தற்போதைய நிலை அப்படியல்ல. புதுப்புது இளம் எழுத்தாளர்கள் எடுத்த எடுப்பிலேயே மிகவும் நுட்பமாக எழுதி தடம் பதிக்கிறார்கள். அவ்வகையில் நாடறிந்த எழுத்தாளர் பாலமுருகன் இளம் வயதிலேயே பல அற்புதப் படைப்புக்களை எழுதி பாராட்டையும் பரிசுகளையும் குவித்தவர்.

நடனம் சிறுகதை

இச்சிறுகதை மலேசியாவில் எழுதப்பட்ட மிக அண்மைய நவீனத்துவ சிறுகதை என்றே சொல்லலாம். இக்கதை உயிர்மை எனும் மின்னிதழில் வெளிவந்துள்ளது. இவரின் இக்கதை அவ்விதழில் வெளிவந்தது உண்மையில் பெருமைப்பட வேண்டிய விடயம்.

இக்கதை வாசகனுக்கு இடமளித்து அதனை ஓர் அழகியல் சார்ந்த இடைவெளியாக கதாசாரியர் கச்சிதமாகப் புனைத்துள்ளார். எல்லா தகவல்களையும் சொல்வதற்குரிய இடமாக சிறுகதையைப் பார்க்க இயலாது. பிறகு வாசகனுக்கு என்ன வேலை? நமது ஊகங்களுக்குச் சில விடயங்களை விட்டுச் செல்வதன் மூலம் நம் கற்பனையைப் பல எல்லைகளுக்கு விரிவாக்கிக் கொடுக்க முடியுமானால் அதுவே நவீன சிறுகதை.

இச்சிறுகதை வக்கிரமான வாழ்வுக்குள் மனித மனம் எத்துணை கருணையின்மையோடு நடந்து கொள்கிறது என்பதனை எழுத்தாளர் சித்தரிப்புகளால் காட்டிக் கொண்டே செல்கிறார். எடுத்துக்காட்டாக கதையின் இறுதி காட்சியில் வரும் ஒரு சீனத்தி அங்கிருக்கும் குப்பைகளை அகற்றுகிறாள்; ஆனால் குமாரோ தனது வளர்ப்பு மகளான கோமதியை ஒரு குப்பை போன்ற வாழ்க்கைக்குள் தள்ளுகிறான். இது எத்தனை முரணான ஒரு காட்சி. கதையை உள்வாங்கிக் கொள்ள கதாசிரியர் படைத்திருக்கும் இந்தக் காட்சி முரண்கள் நவீனத்தன்மைகளோடு புனையப்பட்டுள்ளது. மேலும் கதையில் எடுத்த எடுப்பிலேயே முக்காடு அணிந்த சிறுமி கடையின் விளக்குகளை தட்டிவிடுகிறாள். அவளின் அம்மா நாசி லெமாக் பொட்டலங்களை அடுக்கி வைக்கிறாள்.நாசி லெமாக் வாசம் சாக்கடையின் வீச்சத்தையும் தாண்டி வீசியது என்பதிலேயே நம்மை சிந்திக்கத் தூண்டிவிடுகிறார்.

கடைக்குள் உள்ள சிறுமி பாதுகாப்புடன் மணம் வீசுவதாகவும், நன்கு வாசனை திரவியங்களோடு குதிகாலுடன் இருக்கும் கோமதி சாக்கடைக்குள் தள்ளப்பட்டுவிட்டாள் என புரிந்துகொள்ள முடிகிறது.

கட்டுரையில்தான் தகவல்கள் வரும். சிறுகதையில் யாவும் காட்சிகள்தான் இடம்பெறும். அவற்றை கொண்டு நாமே அச்சிறுகதையை மனத்தினுள் உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்ற ஒரு வாசக இடைவெளியை எழுத்தாளர் உருவாக்கியுள்ளார். எடுத்துக்காட்டாக, அப்பொழுதுதான் நாசி ஆயாம் சாப்பிட்டு விட்டு வந்த கோமதிக்கு உடனுக்குடன் பசி எடுப்பதாக ஆசிரியர் விவரித்துள்ளார். நான் வாசிக்கும்போது ஒருவேளை அவள் கர்ப்பம் தரித்திருக்கிறாளோ என ஊகிக்க வைத்தது. அப்படிக் கர்ப்பமாக இருந்தால் அடிக்கடி பசிக்கும் என்பது நமது அனுபவம். அதனை இச்சிறுகதையினோடு பொருத்திப் பார்த்தால், கதை இன்னும் பரிதாபத்திற்குள்ளாகிறது. ஒரு இளம் பெண்ணின் மீது நிகழ்த்தப்படும் வன்முறையும் அநீதியும் இன்னும் அடர்த்தியாகி மனத்தை வலிக்கச் செய்கிறது.

ஆக, வாசகந்தான் இக்கதையைத் தனக்குள் விரிவாக்கிக் கொள்ளும்படி எழுத்தாளர் நிறைய இடங்களைக் கொடுத்திருக்கிறார்.

கதாசிரியர் நமக்குப் பாடம் எடுக்கவில்லை. வாழ்க்கையின் குரூரமான பக்கங்களைத் திருப்பிக் காட்டுகிறார். அதைக் கண்டு நாம் மிரள்கிறோம். இப்படி பல உணர்ச்சிகளுக்குள் தள்ளப்படுகிறோம். ஒரு படைப்பை இத்தகைய அனுபவத்தைதான் நமக்கு வழங்கியிருக்க வேண்டும்.

எழுத்தாளர், கோமதியின் வயதைக் குறிபிடவில்லை. ஆனால் வாசிக்கும்போது அவளை நம்மால் காட்சி சித்தரிப்புகளில் ஊகித்து உருவமைத்துக் கொள்ள முடிகிறது. லலிதா ஏன் இறந்தார் எனக் குறிபிடவில்லை. ஒருவேளை கோமதியைப் போல் அவளையும் நாற்றத்தில் தள்ளியிருக்கலாம். தற்கொலையும் பண்ணியிருக்கலாம்.

லீனா, மேரி யாரென்று குறிபிடவில்லை. இவையனைத்தும் குறிப்பிடாமல் போனதற்குக் காரணமாக நான் பார்ப்பது கதைச்சொல்லி வட்டிக்காரன் குமார். அவனது பார்வையிலிருந்து கதை நகர்த்தப்படுகிறது. அவன் லலிதாவின் மரணத்தை மறைக்கிறான். அவன் பார்வையில் கீழானவர்களாக தெரியும் மேரி, லீனாவைப் பற்றி அவன் விவரிக்க விரும்பவில்லை. ஆனால், இவர்கள் கதையில் வரும் ஒரு சிறுத்துளிகள் மட்டுமே.

குமாரின் வாழ்வில் கோமதி மட்டுமே பெருமழை.

வாழ்ந்து கெட்ட குமாரின் வாழ்க்கையைச் சமன்படுத்த கோமதி பணைய வைக்கப்படும் கொடூரமே இச்சிறுகதையின் தரிசனம். அதன் முன்னே பெரும் வருத்தத்தோடும் நெகிழ்ச்சியுடனும் நின்று ,கடன்பட்டார் வாழ்வுக்குள் கடைசி குழந்தை வரை எப்படிச் சிதைக்கப்படுவார்கள் என நினைத்து அச்சப்பட வைக்கிறார் எழுத்தாளர்.

கொஞ்சமும் எதிர்பார்க்காத திருப்பம். சூட்சுமமாக எழுதப்பட்ட படைப்பு. வார்த்தைகளில் அழகியல் மிளிர்ந்தது. தலைப்பும் மிகப் பொருத்தமானது. நம் வாழ்க்கையும் நடனம் போன்றதுதான்.

நடனம் முடியும்போது ஒரு கோரத்தாண்டவமாக மாறுகிறது.

எஸ்.பி.பாமா

நடனம் சிறுகதையை வாசிக்க:

‘நடனம்’ சிறுகதையின் பார்வை- வாசகர் கடிதம் 2

வாசிப்புக்கான தளம் விரிவடையும் போது அங்கு தேடலுக்கான வழிகள் தானாகவே உருவாகி விடுகின்றன. கூர்மையான பார்வையும் நோக்கும் சமூகத்தில் நிகழக்கூடிய பல்வேறு சிக்கல்களைக் கண் முன் நிறுத்துகிறது. அத்தகைய பிரச்சனைகளுக்கு என்னதான் தீர்வு என்பது இதுவரையிலும் கேள்விக்குறியான ஒன்று. அத்தகைய சிக்கலுக்கான தீர்வைத் தேடி நாம் இலக்கியம் வாசிப்பதில்லை. ஆனால், இலக்கியம் நம் கண்ணோட்டத்தைத் திசைமாற்றி விடுகிறது. வேறு கண் கொண்டு வாழ்க்கையைக் கவனிக்குக் கற்றுக் கொடுக்கிறது.

“நடனம்” சமூக சிக்கலின் ஒரு பார்வையை தன் தன் அசைவுகளின் வழி அபிநயத்துக் காட்டுகிறது. நடனமெங்கும் பயணிக்கையில் நம் மனமும் அவ்வப்போது கணத்து அசைந்து ஒடுங்குகிறது. வாழ்க்கை நாம் நினைப்பது போல் அத்துனை சாதூர்யமானதைல்ல. நாம் கடந்து வரும் ஒவ்வொரு விநாடிகள் அனைத்தும் ஒவ்வொரு மன அசைவுகளைப் படம் பிடித்துக் காட்டுகிறது.

எழுத்தாளர் கதை நெடுகிலும் பல சமூக சிதைவுகளைக் குறியீடுகளாக விட்டுச் சென்று நம்மை ஆழமாக சிந்திக்க வைத்து விட்டார். “சாக்கடை வீச்சத்தையும் தாண்டி நாசி லெமாக் வாசனை…” என்பதை இச்சமூகத்தில் நிகழக்கூடிய அனைத்துக் கர்மவினைகளும் பல மாயத் திரைகளிட்டு நடமாடிக் கொண்டிருப்பதை உணர்ந்தவல்லது. யாவரும் உணர்ந்தும் உணராத அறிந்திட முயலாத விடயங்களாகவே சமூகச் சிதைவுகள் தாண்டவமாடிக் கொண்டிருக்கின்றன.

கடன்பட்டார் நெஞ்சத்து வாழ்வை பெரியசாமியின் பார்வையில் அலட்சியமாக இருப்பது இன்று சிலரது நடைமுறை வாழ்க்கையில் காண முடிகிறது. கொடுப்பவர் நிறைய இருக்கக் கேட்பவர் கெட்டுத்தான் போகிறார். கடன் நீரிழிவு நோயைப் போன்றதுதான். இனிப்பு ஒரு கட்டுக்குள் இருக்கும் வரை அது நோயாகத் தெரிவதில்லை. அதன் அளவை நாம் அதிகரிக்கும் போது முழுநேர நோயாளியாகி விடுகிறோம்.

பணத்தாசையின் கீழ் குமார் சம்பாதித்து இழந்தபோது குறுக்கு வெட்டாக கோமதி பலிகடாவாகும் அவலம் மனத்தைக் கிள்ளி நகையாடுகிறது. பணத்தாசையில் மூழ்கியவனுக்கு நேர்வழி என்பது சற்று புத்திக்கு அப்பாற்பட்டதுதான். அத்துணை விபரீதமான மனித கண்களும் சிந்தனைகளும் சுயநலம் எனும் போர்வைக்குள் உறங்கிக் கொண்டிருக்கிறது‌.

குமார் அதிக லாபத்தில் வாழ்ந்து, அவற்றை இழந்து விட்ட போது மேலும் கழிவிரக்கம் இல்லாதவனாகத்தான் உருமாற்றம் பெறுகிறான். அந்த உருமாற்றம் இச்சமூகத்தின் மூலமாகத்தான் நிகழ்கிறது. வட்டித் தொழிலில் அவரவர்களுக்கு தோன்றும்போது நியாயம் அநியாயங்களும் தனிமனித சாடல்களாகவே நடமாடுகின்றது. தான் உண்டு தன் வேலை உண்டு என்று வாழும் சுயநலமிக்க மெத்தனப் போக்கால் கோமதியின் மீது நிகழ்த்தப்படும் அவலத்தைக் கண்டுக்கொள்வார் எவருமில்லை‌. சமூகத்தின் முதல் தளம் குடும்பம்தான். ஒரு தந்தையின் பொறுப்பற்ற போக்கு சிதைவுக்கு வித்திடுகிறது.

கடைக்குள்ளே உட்கார்ந்து கொண்டு ஒரு சிறுமி வரைந்து கொண்டிருக்கிறாள். பாதுகாப்பு உணர்வுடன். வீதியில் ஒரு சிறுமி அழகான ஆடைபுலனுடன் பாதுகாப்பு எனும் போலிக்குள் நடனமாடிக் கொண்டிருக்கிறாள். வரைபவள் கையில் தூரிகை அழகான ஓவியமாகும். விளக்கு வெளிச்சத்தின் கீழ் நடனம் ஆடுபவள் இருண்மையின் அடுக்குகளில் வாழ்க்கையைத் தொலைக்க தயாராக்கப்பட்டுக் கொண்டிருக்கிறாள். நேற்றைய போதையில் இன்றைய சம்பவம் நாளைய சமூக சிதைவுகளாகிறது. நகரம் எப்போதும் ஓர் இடத்தைக் கொடையாக அளிக்க காத்திருக்கையில் கோமதி வெளிச்சத்தில் நடமாடும் இருளாக மாறிக் கொண்டிருக்கிறாள்.

நடனம் சிறுகதையில் மொழியின் பயன்பாடு மற்றும் வார்த்தைகளின் பங்களிப்பு மிக கவனமாக நேர்த்தியாக கையாளப்பட்டது பாராட்டப்பட வேண்டியதொன்று. அனைத்து தரப்பினரின் வாசிப்புக்கும் இக்கதை ஏற்றது. மலேசிய இலக்கியச் சூழலில் நடனம் தனித்துவம் வாய்ந்து நிற்கிறது. எழுத்தாளருக்குப் பாராட்டுக்கள்.

  • காந்தி முருகன்

நடனம் சிறுகதையை வாசிக்க:

நடனம் சிறுகதை ஒரு பார்வை: வாசகர் கடிதம்: ஆதித்தன் மகாமுனி

எழுத்தாளர் கே. பாலமுருகனின் தொடர் படைப்பாகிய ‘நடனம்’ சிறுகதை வாசித்தேன். நிகழ்கால சூழலுக்குள் பிண்ணிக்கிடக்கும் அவலங்களை எழுத்திலே கொண்டு வந்திருக்கிறார். மக்கள் அவரவர் பணியில் தீவிரமாக இருக்க இன்னொருபுறம் வாழ்க்கை விற்பனையாகி கொண்டிருக்கிறது என்பதே ‘நடனம்’ சிறுகதையின் பாணி. சமூகத்தின் சீர்கேடு என்பதும் சீரழிவு என்பதும் சாபகேடாகவே இருக்கிறது.

அசைவுகளின் வழியாக கதை சொல்லுவது நடனம் என்றால் சொல்லும் கதையைப் புரிந்து கொள்ள ஓர் இசை வேண்டும் அல்லவா? அது கதறலாக இருக்கலாம், கடுமையான கோபத்தின் வெளிபாடாக இருக்கலாம், சிரிப்பின், மகிழ்ச்சியின் கொண்டாட்டமாகவும் இருக்கலாம். அழுகையாகவும்கூட இருக்கலாம். இவை அனைத்திலும் ஓர் இராகம் ஒளிந்திருக்கிறது. அதை கதைக்குள் அச்சு பிசராமல் எழுத்தில் கொண்டு வருவதென்பது அவ்வளவு எளிதானது அல்ல. எழுத்தாளர் கே. பாலமுருகன் கதையை நடத்தி செல்லும் விதத்தில் அதை காண முடிகிறது. தேர்ந்த எழுத்தாளனுக்கும் தீவிர வாசகனுக்குமான இடைவெளி என்பது ஒரு புள்ளியில் முடிவதல்ல. அது பல குறியீடுகளைக் கொடுத்துக் கடந்து போக கூடியது.

அப்படிதான் இந்தக் கதைக்குள் கடந்து வந்த வாசகர் இடைவெளியும் குறியீடும் என்னை வியப்பிற்குள்ளாக்கியது. கதையின் திருப்புமுனை என்னைத் திருப்பிப் போட்டது எனலாம்.

சீனத்தி ஒருத்தி சாலையோரத்தில் எதையோ கிளறி கொண்டிருக்கும் காட்சி எதற்கு என்கிற கேள்வியே கதையின் முழு அவலங்களையும் காட்சிப்படுத்தி விடுகிறது. சாதாரணமாக ஒரு இளம் சீனத்தி அவ்வாறு தெருவோர குப்பையைக் கிளறுவது கிடையாது. பேரளம் பெண்ணாக இருந்திருக்க வேண்டும். அதாவது சீன கிழவியைதான் அப்படி சொல்லுகிறேன். ஆண்டு அனுபவித்த கிழவியின் பண பற்றாக்குறையோ அல்லது பணத்தாசையோ விடாமல் துரத்தும்கால் அவ்வாறு ஒருத்தி குப்பையைக் கிண்டுவது சாத்தியமாகும். இங்கு இருவகையான உத்தியை நான் காண்கிறேன். ஒன்று மேலே குறிப்பிட்ட உத்தி. இன்னொன்று உலக மக்கள் அவரவர் வேலையில் மிக கவனமாக இருக்கிறார்கள் என்பதும்.

கோமதியின் நிலையிலிருந்து பார்த்தால், இற்றைய சூழ்நிலையில் இப்படி பல்கலைக்கழக மாணவிகள் சிலர் தங்கள் மேற்படிப்பிற்காக தன்னை அடைமானம் வைக்கவும் துணிந்திருக்கின்றனர். இது கண்ணுக்குத் தெரியாத உண்மை. அதை வெட்டவெளிக்கு கொண்டுவருவதென்பது எளிதானதும் அல்ல. ஆனால் எழுத்தாளர் கே. பாலமுருகன் தன் எழுத்தாற்றலால் கருவின் மூலத்திலிருந்து கொஞ்சம் விடுபட்டு ஆழமான சித்தரிப்புகளாலும் புனைவுகளாலும் அதை சிறுகதையாக வடித்துவிட்டார்.

ஒரு தகப்பன் நிலை தடுமாறும்போதும், குடும்பத்திடமிருந்து விலகி செல்லும்போதும், இன்ன பிற காரணங்களால் பொறுப்பிலிருந்து தள்ளி நிற்கும்போது வீட்டில் வளரும் பிள்ளைகள் தடம் மாறுவது இயல்பாகி விட்ட ஒன்றுதான். ஆனால் கதையில் எதார்த்த சூழலுக்குள் நுழையும் எழுத்தாளர், வட்டிக்குக் கடன்வாங்கும் தகப்பனின் சுயநல போக்கினால் பெற்ற பிள்ளையின் வாழ்க்கையே பேரம் பேசப்படும் அளவிற்கும் மாறும் என்பதை காட்சிபடுத்தியிருக்கிறார்.

பிள்ளையைப் பெற்றுக் கொள்பவனெல்லாம் தந்தையாகிவிட முடியாது. எவ்வளவு துன்பம் வந்தாலும் சுமைகளைத் தாங்கி குடும்பத்தைக் கரைசேர்ப்பவனே சிறந்த ஆணாகவும் பின்னரே தகப்பனாகவும் பார்க்கப்படுகிறான். இந்த நிதர்சன உண்மையைக் காட்டுவதே ‘நடனம்’ சிறுகதை.

மனைவி பின்னர் மகளுக்கு என பேரமாகவும் அடைமானமாகவும் ஒருவனுக்கு பிணையாகிபோன குடும்பத்தின் நடன அசைவுகளே இந்த நடனம் சிறுகதை. எழுத்துலகத்தில் காட்சியாகும் வாழ்க்கையின் அசைவு!

-ஆதித்தன் மகாமுனி-

சிறுகதையை வாசிக்க:

கணேஷ் பாபுவின் விடுதலை சிறுகதையை முன்வைத்து- மரணத்தைத் தாண்டும் கணங்கள்

சிறுகதை சூழலில் இருவிதமான கதை போக்குகள் காலந்தோறும் பொதுமையில் ஒரு படைப்பை வகைப்படுத்தி அறிய உதவுகின்றன. மனித வாழ்வின் புறவயமான போராட்டங்களைச் சொல்வது ஒரு வகையைச் சேரும். புறத்தே நிகழும் மாற்றங்களை, கொடுமைகளை, சுரண்டல்களை, நகர்வுகளை, உறவு சிக்கல்களை என இப்படியாக வாழ்க்கையையும் அதனைச் சார்ந்திருக்கும் பலதரப்பட்ட மனிதர்களையும் காட்டக்கூடியதாகும். அடுத்ததாக, மானுடத்தின் அகவயமான போராட்டங்கள், அகம் சார்ந்த நெருக்கடிகள், மானுட உணர்வுகளின் உச்சக் கணங்கள் என ஒரு நிலத்தில் வாழும் மனிதர்களின் அகம் சார்ந்து உள்முகமாகப் பயணிக்கக்கூடிய வகையைச் சேரும்.

முன்னதாகச் சொல்லப்பட்ட வகையில் அதிகமான படைப்புகள் ஒரே கருப்பொருளில் சொல்லியதை மீண்டும் சொல்லும் பாணியில் தொடர்ந்து படைக்கப்பட்டு வந்தாலும் அது காலத்தால் நிலைப்பதற்குத் தொடர்ந்து போராடி வருகின்றன. இரண்டாம் வகையைச் சேர்ந்த சிறுகதைகள் புறக் கட்டமைப்புகளையும் மேம்போக்கான ஒப்புவித்தல் ஜோடனைகளையும் தாண்டி நமக்குள்ளே பல வாயில்களைத் திறந்துவிடக்கூடிய சாத்தியங்களையும் தருணங்களையும் உள்ளடக்கியவையாகும். கணேஷ் பாபுவின் விடுதலை என்கிற சிறுகதை இரண்டாம் வகை கதை போக்கினைப் பின்புலமாகக் கொண்டு சமக்காலத்து சூழலை ஒரு கோட்டோவியம் போல வரைந்து காட்டுகிறது.

மரணம் என்பது பேசித் தீராத அல்லது பேசித் தீர்வுக்குட்படுத்த முடியாத சிக்கலான அதியாழம் கொண்ட ஒன்றாகும். சிக்மன் பிராய்ட் மரணப் பயம்தான் ஒரு மனிதனை வாழ்நாள் முழுவதும் இயக்கிக் கொண்டிருக்கிறது என்பார். மரணத்திற்கு எதிராகத்தான் தன் பிரக்ஞையை ஆசைகளாலும் இலட்சியங்களாலும் கனவுகளாலும் மனிதன் கட்டமைத்துத் தன்னை அதற்குள் மூடி மறைத்துக் கொள்கிறான் எனக்கூட தோன்ற வைக்கும். Life Of Pie என்கிற திரைப்படத்தில் அந்த இளைஞன் 227 நாள்கள் கடலில் தனியாக ஒரு புலியுடன் மாட்டிக் கொள்கிறான். ஆனால், அவ்விடத்தில் புலி என்பது தனக்கு முன்னே விரிந்து நிற்கும் மரணம் என்கிற யதார்த்தம் என்பதை மெல்ல உள்வாங்கிக் கொண்டு அந்த மரணத்திற்கு எதிராக தனது எச்சரிக்கை உணர்வைப் பலப்படுத்திக் கொள்கிறான். அந்த எச்சரிக்கை உணர்வே அவனை அத்தனை நாள்கள் தனக்குள்ளான வாழ வேண்டும் என்கிற அகப்போராட்டத்தைத் தூண்டிக் கொண்டிருக்கிறது.

கணேஷ்பாபு தத்துவங்களை ஓர் உரையாடலாகத்தான் இச்சிறுகதைக்குள் வளர்த்துச் செல்கிறார். பௌதீகமாகவும் தத்துவமாகவும் மரணத்தையொட்டி ஒரு விவாத அலைகளை உருவாக்குகிறார். அது உரையாடல்களின் வாயிலாக வளர்கின்றன. எங்கேயும் இந்த விவாதத்திற்குப் பதில் கொடுக்க வேண்டும் என்கிற முயற்சி அவரிடம் முழுவதுமாக இல்லை என்பதே இப்படைப்பின் கலை அமைதியைப் பாதுகாத்துள்ளது. மேலும், மரணத்துடன் மனித மனம் கொள்ளும் உள்முரண்களையும் இச்சிறுகதை உரையாடி கேள்விகளையும் தோற்றுவிக்கிறது. தத்துவரீதியாக மரணத்தை மனித மனங்களுள் கட்டமைக்க முடியாதோ? எப்பொழுதும் சரவ நிச்சயத்தின் முன்னே தத்துவங்கள் தோல்வியடைந்து விடுகின்றனவா? இதில் நல்ல சாவு, கெட்ட சாவு, துக்கச் சாவு, நிறைவான சாவு என்றெல்லாம் மனித மனங்கள்தான் சுயமாக வகுத்துக் கொள்கிறதோ? எனக் கேள்விகளை இச்சிறுகதை மனத்தினுள் விட்டுச் செல்கின்றது.

மரணம் உண்மை; சர்வ உண்மை என்பதை ஏற்க மறுக்கும் மனம் மரணத்தைச் சுற்றி பல வளையங்களைக் கட்டமைத்துக் கொள்கின்றன. பிள்ளைகளை வளர்த்து, கல்யாணம் செய்து கொடுத்துவிட்டு, அதில் பேரப்பிள்ளைகளையும் பார்த்துவிட்டு இறந்து போனால் அது நல்ல சாவு என்கிறோம். அப்படியென்றால் பேரப்பிள்ளைகளைப் பார்த்துவிட்டவர்கள் சாவதற்குத் தகுதியானவர்களாகிவிடுவார்களா என்கிற கேள்வியும் உடன் எழும். அல்லது பேரன் பேத்திகள் பார்த்த பின்னரும் 100 வயதுக்கு மேல் உயிரோடு இருந்துவிட்டால் ‘இது இன்னும் செத்துத் தொலைய மாட்டுது’ என்கிற ஓர் உணர்வுக்குத் தள்ளப்படுகிறவர்களும் உண்டு. இப்படியாக மரணத்தைப் பல கோணங்களில் தர்க்கம் செய்து மனம் அதன் உண்மையிலிருந்து தப்பிக்கத்தான் முயல்கிறது. ஒருவேளை மரணத்தை வியாக்கியானம் செய்து வகுத்து அதிலிருந்து தப்பித்துவிட்டால் அதுதான் விடுதலையோ? கணேஷ் பாபு சொல்ல வரும் விடுதலை என்பது சுயத்துக்கான விடுதலையாகக்கூட இருக்கலாமோ என நினைக்கத் தோன்றுகிறது. உண்மையின் முன்னே தற்காலிகமான தப்பித்தலைத்தான் விடுதலை எனப் புரிந்து கொள்கிறோமா?

இச்சிறுகதையில் என்னைக் கவர்ந்ததாக கணேஷ் பாபுவின் கவித்துவமான மொழியைத்தான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு அவதாணிப்புகளையும் ஒரு கவிதையைப் போல பிரதிபலிக்கிறார். ‘நீண்ட மௌனத்திலேயே கரைந்தது பொழுது’ என சிறுகதையின் முதல் வரியே ஒரு நல்ல கவிதைக்கான வரிகளாகிவிடுகின்றது. அந்தியின் காவிநிற வானப்பின்புலத்தில் அகண்ட சமுத்திரத்தில் ஒரு சிறிய படகு, ஊதுகுழல் காற்று, அடுப்பின் அனலை எழுப்புவது போல என வரிகள் அழகியலாக விரிந்து காட்சிகளைக் கடத்துகின்றன. ஒரு நவீன கவிதை சிறுகதைக்கான தன்மைகளை ஏற்று வருவது போல, ஒரு சிறுகதை தனக்குள் கவிதைக்கான கச்சிதங்களையும் பெற்று எழுவது இயல்புதான்.

ஒரு புனைவு பல வாயில்கள் என்பார்கள். அத்தகைய வாசக இடைவெளி இச்சிறுகதையில் உரையாடல்களில் கதைநெடுக வருகின்றன. மரணம் என்கிற சர்வநிச்சயமான ஓர் உண்மையின் முன்னே உரையாடல்கள் அடிப்படைக் கேள்வியிலிருந்து வளர்ந்து ஆழமான தத்துவ விசாரணைகளாக விரிகின்றன.

‘என் நேரம் அப்படி.. கடைசியா அப்பா முகத்தப் பாக்ககூடாதுன்னு எழுதியிருக்கு போல.. பின்னால நெனச்சுக் கூடப் பாக்க முடியாதேடா. அப்பன் முகம் சாகுறப்ப எப்படி இருந்ததுன்னு?”, சொல்லிவிட்டு விசும்பத் துவங்கினான் ஜெயகுமார். இந்த வரியிலிருந்துதான் சிறுகதை மரணம் என்பதன் மீதான ஓர் அடிப்படை உணர்வை கட்டியெழுப்புகிறது. பிறகு அது நண்பர்களுக்கிடையேயான உரையாடல்களாக மாறுகிறது. மரணத்துக்கும் அப்பாவின் ஆளுமைக்கும் இடையே உரையாடல்கள் ஊடாடி அலைகின்றன. அதை நேர்த்தியாக நகர்த்திச் செல்கிறார்.

நீரைப் பற்றிப் பேசியதாலோ என்னவோ அவன் கொஞ்சம் ஆசுவாசமாக இருப்பது போலிருந்தது. இந்த வரி ஏதோ மேலோட்டமான காட்சிப்படுத்துதல் அல்ல. இது ஒரு படிமமாகவே மாறுகின்றது. நீர் என்றாலே அது அழுக்கையும் தேக்கங்களையும் போக்கி ஒரு சுமுகமான ஓட்டத்தை உருவாக்கும் தன்மை கொண்டது. எந்தவொரு இறுக்கமான சூழலையும் நெகிழ்த்திவிடும் என்பது போல இந்த வரி சிறுகதைக்குள் எழுகின்றது.

அடுத்து, கதைச்சொல்லி ஜெயக்குமாரின் ஒவ்வொரு வார்த்தைகளையும் கூர்ந்து கவனித்து அவனை மரணம் என்பது விடுதலைக்கான ஒரு வெளிப்பாடு என நம்ப வைக்கப் போராடுவது சிறுகதையின் யதார்த்தத்தைத் தக்க வைத்துக் கொண்டதில் முக்கியமான அம்சமாகப் பார்க்கிறேன். ஒருவேளை ஜெயக்குமாரின் புலம்பலாக இச்சிறுகதை விரிந்திருந்தாலோ அல்லது மரணத்தைப் பற்றிய கழிவிரக்கப் பாணியிலான வெற்றுக் கூச்சல்களாகவோ இருந்திருந்தால் இச்சிறுகதை மரணம் பற்றி கூப்பாடு போட்டக் கதை வரிசைகளுக்குள் அமிழ்ந்து காணாமல் போயிருக்கும். ஆனால், இது மரணம் என்பதையும் அதற்குள் சிக்கித் தவிக்கும் அகம் சார்ந்த உணர்வுகளையும் உரையாடுகிறது. அது தத்துவ தரிசனமாக விரியும் புள்ளிகளையும் கதைக்குள் கொண்டுள்ளன.

ஆனால், அந்தத் தத்துவ விசாரணைகளுக்கான பதில்களைக் கொடுத்துள்ளதா என்று கேட்டால், ஒருவேளை கொடுத்து நிறைவு செய்திருக்கலாம். கணேஷ் பாபு அதனைச் செய்ய வில்லை. அதுவரை அடர்ந்து விரிந்து சென்ற உரையாடல் மரணம் என்பது அப்பாவிற்கு விடுதலையாகத்தான் இருந்திருக்கும் என்கிற புள்ளியில் வந்து சேர்வது போன்று பாசாங்கு செய்து முடிவில் மீண்டும் துவங்கிய இடத்தில் வந்து ஒரு கேள்வியாக நிற்கிறது. அசோகமித்திரனின் பயணம் சிறுகதையைப் போல காட்டுவழிப் பயணம் நெடுக தன் குருவின் அனைத்து ஆன்மீகமயமான துறப்புகளும் மரணத்தை வெல்லும் வியாக்கியானங்களும் கட்டியெழுப்பப்பட்டு வந்து இறுதியில் மாயத்தன்மையுடன் மானுடத்தின் ஆதி உணர்வில் வந்து குவிந்து நமக்குள் ஆழமாக விரிந்து செல்லும் மனோபவத்தை உருவாக்கும். கணேஷ் பாபுவின் சிறுகதையும் மரணத்தின் முன் மானுட மனங்கள் எதிர்க்கொள்ளும் விவாதங்களையே நமக்குள் கடத்திவிட்டு முடிகிறது. அதையே வாசகனுக்கான ஓர் இடைவேளியாகவும் நான் பார்க்கிறேன்.

இன்னும்கூட நுண்சித்தரிப்புகள் சிறுகதைக்குள் இடம் பெற்றிருக்கலாம் எனத் தோன்ற வைத்தது. இது நடப்பது சிங்கை நிலத்தில் அதுவும் வீட்டில் தனியாக வாழ்பவன். குடியேறியவனின் வாழ்க்கை. ஜெயக்குமாரின் அந்த வாழ்க்கை இச்சிறுகதைக்குள் இன்னும்கூட சித்தரிக்கப்பட்டிக்கலாமோ என நினைத்தேன்.

மரணத்தைத் தர்க்கம் செய்து தத்துவமாக மாற்றுவதிலோ, அல்லது யதார்த்தத்தின் முன் தத்துவங்களை உடைத்துக் காட்டுவதிலோ இச்சிறுகதை கவனம் செலுத்தாமல் இவை இரண்டிற்கும் இடையில் ஊடாடும், அலைந்து கொண்டிருக்கும் புள்ளிகளை நோக்கி உரையாடியிருக்கிறது. இச்சிறுகதை எந்த மொழியில் மொழிப்பெயர்க்கப்பட்டாலும் கவனம் பெறுவதற்குரிய ஆழங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது.

இச்சிறுகதையை உரையாடுவதற்குரிய தளத்தை உருவாக்கிக் கொடுத்த அழகுநிலா, ராமா சுரேஷ் அவர்களுக்கு என் நன்றி.

-கே.பாலமுருகன்

இலக்கியமும் படைப்பும்: இளையோர்களுக்கான ஒரு விமர்சனத் தளம்

கடந்த ஓராண்டு காலம் இளையோர்களின் அதிகமான சிறுகதைகளை வெண்பலகை, கதைச்சாரல் போன்றவற்றின் வாயிலாக வாசித்தும் விமர்சித்தும் வருகிறேன். இளையோர்களுடன் அவர்களின் முதல் படைப்புகளுடன் உரையாடவும் ஒரு விமர்சனப் போக்கை நோக்கி நகரவும் இயன்றது. ஆக்கப்பூர்வமான சிந்தனையுடன் படைப்புத் துறையில் ஈடுபட வேண்டும் என்கிற ஆவலும் தேடலும் உள்ள ஓர் இளைஞர் கூட்டத்தை இயல் பதிப்பகம் சிறப்பாக வழிநடத்தியும் வருகிறது. அவர்களின் சிறுகதைகள் மீது நான் முன்வைத்த சமரசமற்ற பார்வைகளை முழுவதுமாக ஏற்றுக் கொண்டு அவ்விளைஞர்கள் சிறுகதைகளை மீண்டும் எழுதியது ஆரோக்கியமான மாற்றமாகவே நான் பார்க்கின்றேன்.

கல்விக்கும் இலக்கியத்திற்கும் இடையிலான மனோநிலை

நம் நாட்டில் கல்லூரி, பலகலைக்கழகம், இடைநிலைப்பள்ளி என பல்வேறான பின்னணியிலிருந்து இலக்கியம் என்கிற மைய நீரோட்டத்தை நோக்கி வரும் ஒவ்வொரு இளையோருக்குள்ளும் கல்வி சார்ந்த சில அடிப்படையான/திட்டவட்டமான இலக்கிய புரிதல்கள் அமைந்துள்ளன. அதன் வெளிப்பாடாகவே அவர்கள் துவக்கத்தில் எழுதும் சிறுகதைகளும் இருந்துவிடுகின்றன. கல்வித்துறையின் கண்கள் கொண்டு படைப்பிலக்கியத்தை இளையோர்கள் பார்க்கக் கற்றுக் கொள்ளும் நிலை அவர்களுக்கான துவக்கக்கால தேர்ச்சியாகும். கற்பித்தல்முறைக்கேற்றவாறு வரையறைகளுடன் இலக்கியம் கற்பிக்க வேண்டிய துவக்கக்கால அணுகுமுறைகளையும் தேவைகளையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதற்குச் சில எல்லைகளும் இருக்கின்றன.

கற்பனையைத் தூண்டும் அதேவேளையில் திட்டவட்டமான சில புரிதல்களை மாணவர் மனத்தில் உருவாக்கியே படைப்பிலக்கியம் நோக்கி அவர்களைப் படிப்படியாக நகர்த்த வேண்டியுள்ளது. இளையோர்களின் அகத்தில் இலக்கிய வாசிப்பு, எழுத்து வழி மேற்கொள்ளப்படும் உரையாடலும் கற்பித்தலும் இலக்கியத்தின் மீதான அவர்களின் புரிதலில் சில படிநிலைகளை உருவாக்குகின்றன. அப்படிநிலைகள் அதுவரை அவர்கள் புரிந்து வைத்திருக்கும் வாழ்க்கைக்குள் புதிய கண்ணாடியை வைக்கிறது. இதுவரை பார்த்த காட்சிகள், பார்த்த மனிதர்கள், சம்பவங்கள், பறவைகள் என அனைத்திற்கும் ஒரு புதிய கோலத்தை உருவாக்குகிறது. இந்த மனமாற்றமே இலக்கியத்தின் வருகை உருவாக்கும் முதல் அதிர்வு. அதுவே பின்னாளில் இரசனையாக மாறுகிறது. அதுவரை உறுத்திக் கொண்டிருந்த பக்கத்து வீட்டில் கேட்கும் கணவன் மனைவியின் சண்டைக்கூட, வாழ்வின் ஓர் அங்கமென இளையோர்களின் மனம் ஏற்கத் துவங்குகிறது. வாழ்க்கையை அவர்கள் பார்க்கும் விதத்தில் அனுபவ மேம்பாடு உருவாகிறது. இலக்கிய வாசிப்பும், இலக்கியப் போதனைகளும் இத்தகைய ஓர் அனுபவத்தை முதல் கட்டமாக உருவாக்கிவிடுகின்றன.

இதுபோன்ற இலக்கிய வாசிப்பும், வகுப்பறை போதனைகளும் அடுத்தக்கட்டமாக படைப்பிலக்கியப் பகுதியில் எழுத வேண்டும் என்கிற நிலையை மாணவர்களுக்கு உருவாக்குகிறது. அவர்களின் கற்பனைக்கு உதவும் பொருட்டு கருப்பொருள், சூழல், படம் எனும் தூண்டல் பகுதிகள் வழங்கப்படுகின்றன. குறிப்பிட்ட எல்லைக்குள்ளே தனக்கான கதைக்களத்தையும் கதை நிகழ்வுகளையும் மாணவர்கள் உருவாக்கிக் கொள்கிறார்கள். இதை கல்விநிலையிலிருந்து இலக்கியத்தை நோக்கும் ஒரு மனஅமைப்பு. துவக்கத்தில் இளையோர்கள் இதன்வழியே இலக்கிய புரிதல்களைக் கடந்து வரவேண்டியுள்ளது. கற்பித்தல் வசதிக்காகக் கல்வித்துறையில் உருவாக்கப்படும் இந்த அணுகுமுறைகளானது ஆரம்பக்கட்டங்களுக்கு அவசியம். ஆனால், அதனை மாணவர்கள் கடந்து வளர்ந்து இன்னும் விரிவாக வேண்டும் என்பதே அடுத்தக்கட்டத் தேவையாகும். இலக்கியத்தின்பால் உருவாகும் இந்தப் படிகளில் ஏறி மாணவர்கள் இன்னும் மேலே வந்துவிட வேண்டும். தரிசனம் விரிவடையும்போது எழுத்தும் ஆழமாகும்.

எடுத்துக்காட்டாக, மனிதநேயம் என்கிற ஒரு கொள்கையை மாணவர்களுக்குப் பாடமாக நடத்த வேண்டும் என்கிற ஒரு நிலை வருகிறது என்று வைத்துக்கொள்வோமே. அதற்கு ஒரு பாடப்பனுவல் வேண்டும். அப்பாடப்பனுவலை ஒட்டிய சில கேள்விகள், அதனைத் தொடர்ந்து வகுப்பு நிலையிலான கலந்துரையாடல், மேலும் சில உதாரணங்களுடன் மனிதநேயம் என்கிற ஒரு சிந்தனையை மாணவர்களிடத்தில் கல்வியியல் முறையில் புகுத்திடல் முடியும். மாணவர்கள் அதனைப் பாடமாக மனத்தில் ஏற்றிக் கொண்டு அடுத்து தன் வாழ்வில் நடக்கும் அனைத்து சம்பவங்களையும் மனிதநேயம் பொருட்டு மதிப்பிடவும் புரிந்து கொள்ளவும் ஏற்கவும் துவங்குவார்கள். சிலர் அதனைத் தன்னளவில் பயிற்சித்தும் பார்ப்பார்கள். அடுத்து, ஒரு மனிதநேய நடவடிக்கையை மேற்கொள்ளுங்கள் என்கிற இடுப்பணியைக் கொடுத்தால் அவர்கள் உடனே சிறுநீரக நோயாளிகளுக்கு மாதம் 30 ரிங்கிட் நன்கொடையென தொடங்கிட மாட்டார்கள். அவர்களின் சிறிய எல்லைக்குட்பட்ட வசிப்பிடத்திலுள்ள ஓர் ஏழைக்குடும்பத்தின் வீட்டிற்குச் சென்று அவர்களின் வீட்டைத் துப்புரவு செய்துவிட்டு அவர்களுடன் உணவு சமைத்து அன்றைய நாளைப் போக்கியிருப்பார்கள். இளையோர்கள் தங்கள் மனத்தை முதலில் அசைத்துப் பார்த்து பின்னர் மெல்ல விரிக்கும் தன்மையுடையவர்கள். ஆனால், கடைசிவரை தன் சிறகையே தடவிப்பார்த்துக் கொண்டிருக்கும் வரையறைக்குள் சிக்கியும் விடக்கூடாது.

சிறகு விரித்தல் பின்னர் கழுகு பறத்தலாக விரிந்திட வேண்டும். நம் வீட்டு மரத்தில் வந்தமரும் சிட்டுக்குருவிகளுக்குக் கூரைகள் மட்டுமே தெரிய சாத்தியமுண்டு. ஆனால், கழுகின் பறத்தலில் ஒரு நகரமே தெரிந்திடும். கல்வி வசதிக்காக மாணவர்கள் மனத்தில் தொகுத்து வழங்கப்படும் இலக்கியமும் எழுத்தும் அவர்களுக்குள் குருவியிலிருந்து கழுகு நிலைக்கு விரிந்திடல் வேண்டும். வாசிப்பும் பல தடங்களைக் கடந்து விரிந்து செல்ல வேண்டுமே தவிர நான் கடைசியாக எஸ்.பி.எம் நாவல்தான் படித்தேன் என்றிருந்துவிட்டால் நமது ஆக்கமும் வலுவில்லாமல் போய்விடும்.

பொதுவெளியில் உருவாக்கும் சித்திரம்

2012ஆம் ஆண்டில் நானும் எழுத்தாளர் கோ.புண்ணியவான் அவர்களும் பேராக் மாநிலத்தில் இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கான சிறுகதைப் பயிலரங்கத்தில் பேச்சாளர்களாக கலந்து கொண்டோம். அதன் மூன்றாவது அரங்கத்தில் மாணவர்கள் கருத்தரங்கிற்குப் பின் எழுதிய சில சிறுகதைகளை வாசித்துக் கருத்துரைக்கக் கேட்டிருந்தார்கள். நான் வாசித்த ஐந்து சிறுகதைகளிலும் நான் பார்த்த பொதுவான சிக்கல்களையே 2020ஆம் ஆண்டில் தனது முதல் சிறுகதையை எழுதும் இளையோர்களிடமும் பார்க்க முடிகின்றது. சற்றும் மாறாமல் பின்பற்றப்படும் ஒரு பாரம்பரியமான நீட்சியைக் கவனிக்க முடிகின்றது.

அதுபோன்று எழுதப்படும் கதைகளில் காலம் தாண்டியும் தொடர்ந்து நீடித்திருக்கும் தேய்வழக்கு அம்சங்கள் சிலவற்றை காணலாம். வாழ்வில் பல இன்னல்களின் முன் அரும்பாடுப்பட்டு வாழ்வியல் சிக்கல்களை எதிர்க்கொள்ளும் ஓர் இளைஞனின் கதையாக இருக்கும். அவன் பிறந்தது முதல் வெற்றி பெறும்வரை அவன் முழு வாழ்வையும் சிறு சிறு தொகுப்புகளாகக் கதைநெடுக சொல்லிக் கொண்டே வரப்படும். அவன் வாழ்வின் அத்தனை சிக்கல்களும் அச்சிறுகதைக்கு அடர்ந்து ஒரு நெரிசலை உருவாக்கியிருக்கும். வாசிக்கும்போது திணற நேரிடும். அத்தகைய ஒரு வாழ்வியல் பின்னணியில் அப்பா கட்டாயக் குடிகாரராகவும் அந்த இளைஞன் போதைப்பொருள் பித்தனாகவும் சித்தரிக்கப்பட்டிருப்பான். ஆக, அப்பா குடிகாரராக இருக்கும் அத்தனை குடும்பங்களிலும் மகன் போதைப்பித்தனாக மாறியாக வேண்டும் என்கிற ஒரு விதி கடைப்பிடிக்கப்பட்டே வந்திருக்கின்றது. பிற்படுத்தப்பட்ட ஒரு குடும்பத்திலிருந்து வரும் இளைஞன் ஒன்று போதைப்பித்தனாக இருப்பான் அல்லது சிறந்தவனாக இருப்பான் என்பதே விதிவிலக்காக இருக்கும். அதுவே பெண் கதைமாந்தராக இருந்தால் காதல் வலையில் சிக்கி வழித்தவறியவளாகச் சித்தரிக்கப்பட்டிருப்பாள். இதனை நான் பெரும் குறையாக முன்வைக்கவில்லை. இளையோர்கள் தங்களின் படைப்புகளை மீண்டும் பரிசீலனை செய்வதற்குரிய எல்லைகளைத் திறந்துவிடவே செய்கிறேன்.

எப்படி இளைஞன் அதுபோன்ற அவலநிலைகளைக் கடக்கின்றான்? அவனைக் கீழ்மைப்படுத்திய அப்போதைப்பொருளின் பிடியிலிருந்து அவன் எப்படி மீள்கிறான் என்பதையே இதுபோன்ற கதையின் மையக்கரு கொண்டிருக்கும். இப்பொழுது நான் சொன்னது ஓர் உதாரணம் மட்டுமே. இதுபோன்று சில வரையறுக்கப்பட்ட சிறுகதைக்கென்ற விதிமுறைகள் கடந்த பல ஆண்டுகளாகவே தொடர்ந்து காக்கப்பட்டும் போற்றப்பட்டும் எழுதப்பட்டும் வருகின்றன. இது எவ்வகையில் மொழியினூடே நம் இளையோர்களின் மனங்களைப் பேசுகிறது என்றும் எவ்வளவு நெருக்கமாக இளையோர் வாழ்வியலைச் சித்தரிக்கிறது என்றும் விமர்சனப் பார்வைக்குள் வைத்து உரையாட வேண்டியுள்ளது.

எது சிறுகதை?

முதலில் சிறுகதை என்றால் ஒருவனின் முழு வாழ்வையும் 6 பக்கத்தில் அடக்கி பார்க்கும் முயற்சி என நம்புவதை விட்டுவிட வேண்டும். பலர் இத்தகைய பாணியில் எழுதுவதால்தான் ஒரு நாவலின் கதைச் சுருக்கத்தைப் போல அவ்வகையான படைப்புகள் சிறுகதைக்கான ஒருமையிலிருந்து விலகிவிடுகின்றன. தாமான் உத்தாமா எனும் வசிப்பிடத்தில் முத்து என்கிற இளைஞன் வாழ்ந்து வந்தான் என்பதில் துவங்கி அவன் எப்படி வாழ்வில் பல இன்னல்களை அனுபவித்தான், பின்னர் எப்படி அதிலிருந்து மீண்டு வந்தான் என்பது வரை அனைத்தையுமே தாவுதல் காட்சிகளாக விரைந்து எழுதி சுருக்கி முடித்துவிடுகிறார்கள். இது சிறுகதை அல்ல என்பதை இளையோர்கள் புரிந்துகொள்ள வேண்டும். முத்து என்பவனின் வாழ்வின் பல தருணங்கள் இருந்திருக்கும். அவற்றுள் பேரனுபவமாக வாசகனின் அனுபவ எல்லைக்குள் கடத்த முடிந்த, கடத்தினால் வாசகனுக்குள் கவித்துவமான பாய்ச்சலை உருவாக்கக்கூடிய ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதனைத் தொடக்கம், நடு, முடிவு என்று அதன் வேகத்திற்கும் கச்சிதத்திற்கும் ஏற்ப வடிவமைத்துக் கொண்டு எழுதலாம்.

நண்பன் திரைப்படத்தில் ஒரு வசனம் இடம்பெற்றிருக்கும். ‘எனக்கு ரெண்டு கால்களும் உடைஞ்ச பெறகுத்தான் சார் நான் சொந்த காலில் நிக்க ஆரம்பிச்சிருக்கன்…” எத்தனை கவித்துவமான ஒரு வசனம் இது? அதே இடத்தில், “சார் நான் என் குடும்பத்தைக் காப்பாத்தணும். கொஞ்சம்கூட அக்கறையில்லாமல் கூட்டாளிங்கக்கூட சுத்தி திரிஞ்சன்… படிப்புல அக்கற காட்டல… கடைசில மேலேந்து விழுந்து தற்கொலை செஞ்சிக்கிட்டன்… அப்போ கால் ரெண்டும் உடைஞ்சிருச்சி சார்… அப்பத்தான் எனக்குப் புத்தி வந்துச்சி சார்,” என்று எழுதியிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்பதை ஊகித்துப் பாருங்கள். இரண்டு வசனங்களும் உருவாக்கும் கச்சிதமும் பேரனுபவமும் வெவ்வேறானவை என்பதைப் புரியும் இடத்தில் இலக்கியத்தின் மீதான புரிதலும் பயிற்சியும் சற்றே மேம்படும்.

அடுத்து, ஒரு மனிதனின் அத்தனை வாழ்வியல் சிக்கல்களையும் கொண்டு வந்து குவிக்கும் இடமென சிறுகதையைக் கருதுவதையும் விட்டுவிட வேண்டும். இது சிறுகதையின் ஆன்மாவை நெருக்கிவிடும். பெருமளவிலான கவனச்சிதறலை உருவாக்கிவிடும். எதை நோக்கி செல்கிறோம் எனத் தெரியாமல் வாசகர்களின் ஈடுபாடும் சிதைந்துவிடும். சிறுகதை தன்னளவில் ஓர் உணர்வை, ஒரு பிரதான சம்பவத்தை என்று கச்சிதமான வடிவமைப்பை உள்முகமாகக் கொண்டு நகர்த்தப்பட வேண்டிய படைப்பு.

இளையோர்கள் முதலில் இவ்விரண்டையும் கருத்தில் கொண்டு ஒரு இலக்கியப் படைப்பை, குறிப்பாக சிறுகதையை அணுகினால் சிறப்பான மாற்றம் வரும் என்றே கருதுகிறேன். இலக்கியம் குறித்து கல்வித்தான் நமக்குள் முதல் புரிதலையும் அது சார்ந்த அடிப்படைகளையும் விதைக்கிறது. ஒரு போட்டிக்குக் கதை எழுதும்போது கருப்பொருளையும், சூழலையும், வழிகாட்டிப் படத்தினையும் கொடுத்து வழிகாட்டுகிறது. இவை யாவும் மதிப்பீட்டு வசதிக்காக உருவாக்கப்பட்டக் கருவிகள் ஆகும். ஆகையால், அக்கருப்பொருளை வலிந்து புகுத்தி அதனை அழுத்தமாக உணர்த்துவதற்கான மெனக்கெடல் மாணவர்களின் படைப்புகளில் இயல்பாகவே வெளிப்படும். ஆகவேதான், விடாமுயற்சி எனும் கருப்பொருளைப் பாவித்து எழுதப்படும் சிறுகதையில் ஓர் இளைஞன் வாழ்க்கையில் முன்னேற என்ன மாதிரியான விடாமுயற்சிகளையெல்லாம் மேற்கொள்கிறான் எனப் புகுத்த வேண்டிய நிலை உருவாகிவிடும். இது மதிப்பீட்டுக்கு உதவும்; மேலும், மாணவர் பருவத்தில் அது தவிர்க்க இயலாத இலக்கிய அணுகுமுறையாகும்.  ஆனால், பள்ளிப் பருவம் கடந்து வந்து அந்நிலை நீடிப்பதே கவனித்துக் களைய வேண்டியதாகும்.

ஆழமும் விரிவும் கொண்ட வாசிப்பே இளையோர்களின் இலக்கிய புரிதலையும், இலக்கியத்திற்கான மொழியையும் மேம்படுத்தும். அனுபவத்தை அனுபவமாக மட்டுமே எழுதிடாமல் அவ்வனுபவத்தைக் கவித்துவமான ஓர் இடத்திற்குள் மொழியின் வழியாக நகர்த்திடல் வேண்டும். இதுதான் இளையோர்களுக்கான சவாலும்கூட.

ஆக, வாசிப்பை நிறுத்திவிடாமல் தேடல் நிகழ்ந்துகொண்டே இருத்தல் வேண்டும். ஒரு கூட்டாக சேர்ந்து வாசித்த சிறுகதையை ஆரோக்கியமான முறையில் விவாதிக்கத் துவங்குவதே ஓர் கூட்டு இரசனையை உருவாக்கும். அங்கிருந்து நமக்கான இரசனையைக் கண்டடைந்து வளர்த்துக்கொள்ள ஏதுவாகவும் இருக்கும். இதனைப் பயிற்சித்துப் பார்ப்பதே இன்றைய இளையோர்களுக்கான தேவையாகும்.

ஆக்கம்: கே.பாலமுருகன்

21.02.2021

‘அவன்’ சிறுகதை ஒரு பார்வை: ஆதித்தன்

திரைப்படத்தினூடே உளவியல் சார்ந்த பேய்மை கதை களத்தைப் பார்த்திருப்போம். நம்முள்ளேயே அசைபோட்டிருப்போம். எடுத்துக் காட்டாக ‘சந்திரமுகி’ திரைப்படத்தை எடுத்துக் கொள்ளலாம். SPLIT PERSONALITY அல்லது MULTIPLE  PERSONALITY DISODER எனப்படும் ஒருவகை நோயானது மனகோளாறு உள்ளவர்களுக்கு ஏற்படும். அதனுடைய பின்னணியைச் சென்று ஆராய்ந்தால் சிறுவயதில் அவர்கள், பார்த்தது, அனுபவித்தது, மன அழுத்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புப் போன்றவற்றால் இக்கோளாறு ஏற்படுகிறது. 1996 ஆம் ஆண்டு சின்னத்திரையில் ஒளிப்பரப்பான (அண்மைய சில மாதங்களில்) ‘மர்ம தேசம் – விடாது கருப்பு’  எனும் தொடரைப் பலரும் பார்த்திருப்பீர்கள். MULTIPLE  PERSONALITY DISODER எனப்படும் மன கோளாறால் பாதிக்கப்பட்டவன்தான் கருப்பு சாமியாக இருந்து அந்தக் கிராமத்தைப் பாதுகாத்து வருவான். இந்தக் கோளாறினால் நன்மையும் உண்டு தீமையும் உண்டு என்பதை எடுத்துச் சொல்லும் கதையின் கருவாக அமைந்திருக்கிறது ‘அவன்’ எனும் கே. பாலமுருகன் அவர்கள் எழுதிய சிறுகதை. பேய்மையை உள்ளாங்கியிருக்கும் இக்கதையின் மையத்தில் சுழன்று கொண்டிருக்கும் ஒரு வட்டம்தான் கதையை இறுதிவரை கொண்டு சென்று வாசகனை யோசிக்கத் தூண்டுகிறது. சிறைசாலைக்கென்றே உள்ள சிறப்பான தன்மையைத், தனிமையை இந்தச் சிறுகதையைப் படிக்கும் போது உணர முடிகிறது.

தூக்கு மேடைக்காகக் காத்திருக்கும் சில கைதிகளின் மனக்குரல்களை அவ்வப்போது ஆங்காங்கே வெறுமனே சொல்லிவிட்டுப் போகாமல் அதற்குள்ளும் ஒரு மனக்குறிப்பை வரைந்திருக்கிறார் எழுத்தாளர். மனத்திட்பமுடைய ஒருவன் ஆழ்ந்து வாசிக்கின்ற ஒரு நாவலையோ அல்லது சிறுகதையையோ உள்வாங்கி படிக்கும்போது ஏற்படுகின்ற நிறைவில் நிறைவடைய முடியாமல் மீண்டும் மீண்டும் அசைப்போட வைக்கின்ற நூல்போலதான் தவற்றைச் செய்துவிட்டு தூக்குத் தண்டனைக்காகக் காத்திருப்பவனின் மன போராட்டம் இருக்கும். அந்த நூலை என்னால் வைக்க முடியவில்லை என்று எப்போது ஒரு வாசகன் மனகுறிப்பு வரைகின்றானோ அப்போதே அந்த நூல் வெற்றியடைந்து விடுகிறது. அதுபோல எப்போது ஒரு குற்றவாளி தான் செய்த தவற்றை மீண்டும் நினைத்து, வருந்தி தன்னையே புதியவனாக உருமாற்றி கொள்ள நினைக்கின்றானோ அப்போது தூக்கு தண்டனை அவனுக்கு மனப்போராட்டத்தின் வெற்றி. அந்த வெற்றியைதான் இச்சிறுகதை மிக ஆழமான புனைவுகளின் மூலமாகவும் சித்தரிப்புகளின் வழியாகவும் சொல்கிறது.

சிறுவயதில் தான் அனுபவித்த அழுத்தத்தின் காரணமாக மனக்கோளாறால் பாதிக்கப்பட்டவனின் நிலையிலிருந்து கதை நகர்ந்து போய்க்கொண்டிருக்கும். இடையில் நமக்கே தெரியாமல் ஒரு கதை உடன் பயணிக்கும். அந்த கதையினை மட்டும் உள்வாங்கி கொண்டு ஒரு வாசகன்  கதையோடு பயணித்தால் மட்டுமே அதன் பேய்மையை உணர முடியும். மன இருளுக்குள் அடைந்து கிடக்கும் எத்தனையோ சோகங்களும் சிறையின் இருளுக்குள் அடைந்து கிடக்கும் சொல்ல முடியாத வேதனைகளும் ஒன்றாக திரண்டு தலைக்கு மேலே தொங்கி கொண்டிருக்கிறது. அது எந்நேரத்திலும் உச்சந்தலையைப் பதம்பார்க்கலாம். அதனுடைய கூர்மையை மட்டும் உணர்ந்து விட்டால் இக்கதையின் மையத்தோடு பயணிக்க இலகுவாக இருக்கும்.

‘அவன்’ தேடிக் கண்டடைய வேண்டிய உள்ளுணர்வின் சரிபாதி.

ஆக்கம்: ஆதித்தன் மகாமுனி

அவன் சிறுகதையை வாசிக்க: https://balamurugan.org/2020/12/23/சிறுகதை-அவன்/

இது விமர்சனம் அல்ல- நீர்ப்பாசி சிறுகதையை முன்வைத்து: பிரிவின்குமார் ஜெயவாணன்

ஆசிரியர் பாலமுருகன் அவர்களின் “நீர்ப்பாசி” சிறுகதையை வாசிக்கும் வாய்ப்பு கிட்டியது. கதையை முடிக்கும் தருணத்தில் இந்த கதையின் நாயகன் தனக்கோடி தன் சுற்றம் எனும் குட்டையில் வேர் படர இயலாதொரு “நீர்ப்பாசி”யாகவே காலத்தால் மிதக்கவிடப்பட்டிருப்பதாக எனக்கு தோன்றியது. கதை தொடங்கும் இடமே தனக்கோடியின் உளவியலை ஓரளவு படம் பிடித்துக் காட்டிவிட்டது. கதை நெடுகிலும் தனக்கோடிக்கு அடையாளமாகிப்போன அவனது சுபாவம் எனக்கு ஒன்றை உணர்த்தியது. நாம் நம்மை சார்ந்த, முக்கியமாக பாலிய (மாணவர்கள், குழந்தைகள்) பருவத்தில் இருக்கும் ஒருவர் மீது வீசும் முரணான சிந்தணை அல்லது அவரை நாம் நடத்தும் விதம் அவரின் உளவியலில் எத்தகையதொரு எதிர்விணையை ஏற்ப்படுத்தி விடுகிறது என்று.

சற்றே psychological understanding உடன் ஆசிரியர் பாலமுருகன் கதையை கையாண்டுள்ளதாக உணர்கிறேன். நாமும் அதே கருத்தியல் கொண்டு நோக்கினால் தெளிவாக புரியும். மேலோட்டமாக கடந்து சென்றோமேயானால் இது ஒரு சாதாரண கதை போல் தோன்றலாம். கதையில் Child Stress Incontinence மாதிரியான உளவியல் பலவீனம் கொண்ட சிறுவனாக தனக்கோடி இருக்கிறான். இது போன்ற hyper level பலவீனம் உளவியலை மிக ஆளமாக தாக்கிவிடுகிறது. தனக்கோடியின் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பழக்கத்திற்கு இதுவே கூட காரணமாகிருக்களாம் எனத் தோன்றுகிறது. அவனை பாதித்த சம்பவங்களும் அதீத தனிமையும் ஒன்று அல்ல மாறாக பல வேறு வடிவங்களான மனம் சார்ந்த பிரள்வுகளுக்கு இட்டு சென்றுள்ளது.
கதையின் நெடுகிலும் போதிய அன்பு, ஆரோக்கியமான குடும்ப உறவுகள், தனிமை, நல்ல நட்பு என்பன கிடைக்காமையால் உளம் சார்ந்த பலவீனங்களோடு நம்மை சுற்றி, நாம் பொதுவாக அக்கறை கொள்ளாமல் கடந்து செல்லும் மனிதர்களைப் படம் பிடித்து காட்டியுள்ளார். இரு வேறு விதமான மனோவியல் கோளாறுகளை; நோய் எனவும் வகைப்படுத்தி கொள்ளலாம், நம்மால் காண இயலும். இது இரண்டுமே குடும்பம், சுற்றுச்சூழல் மற்றும் தான் எதிர்நோக்கும் சம்பவங்களின் தாக்கத்தின் வெளிப்பாடுகள். ஒன்று தனக்கோடியை அடிப்பதிலும், உதைப்பதிலும் இன்பம் காணும் சர்வின், விமல் போன்ற கதாபாதிரங்களின் sadism. தவிர, அவர்கள் தருகின்ற துன்பத்தை ஏற்றுக்கொண்டு அனுபவிக்கும் தனக்கோடியின் (தன் உடல் மீதான வன்முறையை விரும்பி ஏற்கும் “Masochism”) மாதிரியான மனநிலை. இரண்டுமே மிகப் பெரும் சமூக அழிவுக்கு ஆணிவேர். இதே போல், நனவில் இல்லாதவர்களை இருப்பதாக கற்பனையாக எண்ணி அவர்களோடு சண்டையிடும் மனோபாவம் மற்றும் reality-யில் physically & mentally தன் மீது தொடுக்கப்படும் தாக்குதல்களுக்கு எதிர்வினை ஆற்ற வலுவிலந்த தனது இயலாமையின் வெளிப்பாடாக தனக்கு பிடிக்காத அல்லது தான் எதிரியாக கருதும் கட்டொழுங்கு ஆசிரியர், விமல், சர்வின் ஆகியோரை தினமும் துரத்தி அடித்து விளையாடும் செயல் அனைத்தும் அதீத depression, anxiety மற்றும் ஏமாற்றங்களின் பிரதிபலிப்பே என உணரப்படுகிறது.

ஒழுங்கை போதிக்கும் process-ல் நாம் கொஞ்சம் பிசகினாலும் அது ஒரு குழந்தையை எப்படி ஆக்கும் வல்லமை வாய்ந்த்து என சூசகமாக ஆசிரியர் பாலமுருகன் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மேலும் இந்த சமூகத்துக்கும் காட்ட விளைகிறார்.

குழந்தைகளைத் தவிர வயதில் பெரியவர்களுக்கு ஏற்படும் மனோவியல் பிரள்வுதனை தேவராஜனை வைத்து காட்டியுள்ளார் ஆசிரியர். தேவராஜன் சரியான வயதில் திருமணம் செய்யாததால் அவனால் உளவியல் ரீதியில் தனக்கோடி அனுபவித்த கொடூரமே தனக்கோடியினுள் இருந்த சைக்கோ தனத்தை உச்சத்தை நோக்கி தூண்டியிருப்பதாக கருதுகிறேன். அதுவே இக்கதையின் மாபெரும் twist-ஐ தனக்கோடி வெகு சாதாரணமாக ஷாலினியிடம் ஒரு சுவாரிசியமான fantasy கதையை விவரிப்பது போன்ற நிலைக்கு காரணமாக கருதுகிறேன்.

நம் நாட்டில் பகடி எத்தகைய எதிர்வினைகளை, குறிப்பாக இந்திய சமூகத்தில் ஏற்படுத்தியுள்ளதை என்பதை நாம் நன்கு அறிவோம். உதாரணமாக, மிக அண்மையில் இணைய பகடியினால் உளவியல் ரீதியில் துன்பம் அனுபவித்து மரணத்தை விருப்பமின்றி ஏற்றுக்கொண்ட சகோதரி திவ்யனாயகியை நாம் அறிவோம். விளையாட்டாக நாம் நினைக்கும் வெகு சொற்ப்ப செயலே இத்தகைய முடிவினைக் கொண்டு வந்துள்ளது. 2018-ல் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் மாணவர்கள் 53% வகுப்பு தோழர்களாலும், 39% மாணவப்பருவத்தில் இருக்கும் நபர்களாலும், 36% பெரியவர்களாலும் பகடிக்கு ஆளாக்கப்படுவதை காட்டுகிறது. மேலும், கதை எனக்கு உணர்த்தியதை தவிர்த்து அது எனக்கு நினைவுபடுத்திய விடயங்களும் உள்ளன. அது எனது பாலிய காலத்தில் சிறு குளங்களையும் கடலினையும் தேடி ஓடும் அச்சிறுவனை நினைவுப்படுத்தியது. இரண்டாவதாக, இடைநிலைப்பள்ளி காலங்களில் மாணவர் தலைவராக இருக்கும் போது அதிகமாக என் பள்ளியின் பின்புறம் வாழைமரங்கள் நிறைந்த பகுதியில் duty செய்யும் நேரங்களில் அந்த சில நிமிடங்களின் சிலுசிலுப்பு தொட்டு போகிறது. இதில் முக்கியமாக தமிழ்பள்ளியில் நான் படிக்கின்ற போது என்னுடைய வகுப்பு தோழனும் தனக்கோடியைப் போன்ற மனநிலையில் கிட்டதட்ட 5 வருடங்கள் என்னோடு பயனித்ததை நினைவுப்படுதியது. அன்று அவனுக்கு பேய் பிடித்திருந்த்தாகவே நான் உட்பட அவனது நண்பர்கள், அவனது பெற்றோர், பள்ளி ஆசிரியர்கள் எல்லாம் நம்பி இருந்தோம். 5 வருடங்களுக்கு முன் அவனை ஒரு 15 நிமிடம் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. அப்போது முன்பை விட தெளிந்திருப்பதை கண்டுக்கொண்டேன்.

 

நிறைய அறிய தகவல்களை நான் தவர விட்டதாக உணர்கிறேன். ஆகையால், வாசகர்கள் கீழே இணைக்கப்பட்டுள்ள இணைப்பின் வழி முழு கதையைப் படித்து பயன்பெற வேண்டிக்கொள்கிறேன்.!!!!!👇

https://balamurugan.org/2020/09/06/சிறுகதை-நீர்ப்பாசி/

பிரிவின்குமார் ஜெயவாணன்

பீடோங், கெடா

மார்க்கும் ரேச்சலும்: உமா கதிர் எனும் கதைச்சொல்லி

அகநாழிகை இதழின் ஆசிரியரும் அகநாழிகை பதிப்பகத்தின் பதிப்பாளருமான எழுத்தாளர் பொன். வாசுதேவன் அவர்கள் ஜூலை 2017ஆம் ஆண்டில் சிங்கப்பூர் தமிழ்ச் சிறுகதைகள் சிலவற்றை ‘அக்கரைப் பச்சை’ என்கிற தலைப்பில் தொகுத்து வெளியீட்டுள்ளார். தற்சமயம் சிங்கையில் தீவிரமாக எழுதி வரும் நண்பர்களின் பலரின் சிறுகதைகளைத் தொகுப்பில் வாசிக்கக் கிடைக்கிறது. இத்தொகுப்பை வாசிக்கும்போது சிங்கை சிறுகதை சூழலில் தற்சமயம் ஏற்பட்டிருக்கும் புதிய அலைகளையும், சிறுகதை தொடர்பான விரிவாக்கங்களையும், புதிய முயற்சிகளையும் அவற்றினூடாக இன்னமும் தேங்கி நிற்கும் சில சிக்கல்களையும் அறிந்து கொள்ள வாய்ப்புண்டு.

சமீபத்தில் சிங்கையில் வெளிவந்த இத்தொகுப்பின் வழியாக சிங்கப்பூர் நவீனத் தமிழ்ச் சிறுகதைகள் குறித்த ஒரு விரிவான விமர்சனக் கருத்தாக்கத்தை உருவாக்கிக் கொள்ள முடியும் என நம்புகிறேன். ஒரு காலக்கட்டத்தில் ஒரு நாட்டில் வெளிவரும் இதுபோன்ற தொகுப்புகள் அக்காலக்கட்டத்தின் இலக்கியத் திறனாய்வுக்கும் விமர்சனங்களுக்கும் ஏற்புடையதாகும். குறிப்பாக, அந்நாட்டு இலக்கியப் படைப்புகளை அணுக நினைக்கும் விமர்சகர்களுக்குத் தொகுப்புகளே சிறந்த தடத்தைக் காட்டக்கூடியதாகும்.

ஆகவே, தொகுப்பாளன் என்பவர் இலக்கியத்தை மட்டும் தொகுக்கவில்லை, அந்நிலத்தின் இலக்கிய நகர்ச்சியையும் அடைவையும் சேர்த்தே தொகுக்கும் பணியை ஏற்றுக்கொள்கிறார் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். தொகுப்பது என்பது கவனத்தோடும் அக்கறையோடும் செய்ய வேண்டிய பணியாகும். இத்தொகுப்பில் உள்ள சிறுகதைகள் சிலவற்றை வாசகப் பார்வையுடன் அணுகி விமர்சிக்கும் பொறுப்பையும் ஏற்றுக் கொள்வதன் வழியாக ஒரு தொகுப்பின் அவசியத்தையும் கருத்துரைக்க வாய்ப்புக் கிட்டும்.

இலக்கியத்திற்கும் விமர்சனத்திற்குமான ஓர் அத்தியாவசிய புரிதல் உருவாகியே ஆக வேண்டிய ஒரு காலக்கட்டத்தில் இருக்கிறோம். புதிதாகத் தமிழ் இலக்கியத்தை வாசிக்கத் துவங்கும் வாசகன் எதிர்க்கொள்ளப் போகும் இலக்கிய மதிப்பீட்டு தளங்கள் செம்மைப்படுத்தப்பட வேண்டும். விமர்சனத்தின் நிலைப்பாடுகள் குறித்த விவாதம், கலந்துரையாடல்கள், கட்டுரைகள் அதிகமாகிக் கொண்டிருக்கிறன. விமர்சனம் என்பது மிகையுணர்ச்சியுடன் ஒரு படைப்பைப் புகழ்ந்து பேசுவது என்று மட்டுமே நினைத்துக்கொண்டிருக்கும் மனங்களிலிருக்கும் புராதன எண்ணங்களைக் களையெடுத்தல் வேண்டும்.

ஒரு தனித்த படைப்பு அல்லது ஒரு தனிமனித அகத்தின் வெளிப்பாட்டிலிருந்து உதித்து அதற்கான ஒரு கலைவடிவத்தைக் கண்டடைந்து சமூகத்தை நோக்கி வெளிப்படும் படைப்பு சமூகத்தின் மதிப்பீடுகளுக்குள்ளாகின்றது. அச்சமூகம் என்பது மிக மரபான பண்பாட்டு நிறுவனம். நுகர்வு கலாச்சாரத்தின் இயக்க நியாயங்களுடன் செயல்படும் சமூகம் என்கிற அந்நிறுவனம் கூட்டாக இயங்கும்போது, அதன் இயங்குத் தளத்திற்கு வந்து சேரும் அனைத்தையும் தராசில் வைக்கும். அதுவே மதிப்பீட்டிற்கான நிலையை அடைகிறது. வாழ்க்கையின் இயக்கத்தையும் அது சார்ந்து வெளிப்படும் கலைகளையும் அளக்கவும், சுவைக்கவும், நிறுக்கவும் சமூகம் மதிப்பீடு என்கிற ஓர் அளவுக்கோலை உருவாக்கி வைத்திருக்கிறது. பின்னர் உருவான அறிவுத்தளம் அதனை விமர்சனம் எனக் கண்டறிந்தது. பிறகு, கல்வி உலகம் அதனைத் திறனாய்வு என வகுத்துக் கொண்டது. தற்சமயம் விமர்சனம் என்பதை ஒரு நுகர்வு வெளிப்பாடாகப் புரிந்து கொள்ள இயலாது. சமூகமும் கல்வி உலகமும், விமர்சனம் குறித்து ஏற்கனவே உருவகித்து வைத்திருக்கும் அத்தனை விளக்கங்களிலிருந்தும் அதனைத் தாண்டியும் விமர்சனம் என்பதை மறுகண்டுபிடிப்பு செய்ய வேண்டியுள்ளது. இரசனை விமர்சனம் என்றுகூட சிலவற்றை வகைப்படுத்த முடியும்.

இலக்கியம் என்பது மனித உணர்ச்சிகளின் உச்சக்கணங்கள்தானே? என்று சில தீவிர விமர்சகர்கள் சொல்லியும் கேட்டிருப்போம். காலம் மாறும்போது உருவாகும் வாழ்க்கை, அரசியல், சமூகம், குடும்பம், கல்வி ஆகிய மாற்றங்கள் மதிப்பீடுகளை மாற்றுகிறது. மதிப்பீடுகளின் மாற்றங்களினால் மனித மனம் உணர்ச்சிக் கொந்தளிப்புக்குள்ளாகின்றது. அவ்வுணர்ச்சியின் ஆழத்தைப் பற்றி பேசும் வடிவமும் இலக்கியம்தான். ஆனால், அதற்குண்டான ஆதாரமாக இருப்பது மாறிக் கொண்டே இருக்கும் காலமாகும். ‘காலமாகி நிற்கும் அனைத்தைப் பற்றியும் பேசும் ஒரு மகத்தான கலைத்தான் நாவல்’ என ஜெயமோகன் சொல்வதையே ஒட்டுமொத்த இலக்கியத்திற்குமான புரிதலாக ஏற்றுக் கொள்ளலாம்.

அவ்வகையில் அக்கரைப் பச்சையில் வெளிவந்த சிறுகதைகளில் ஒரு நல்ல சிறுகதை என்பதைவிட விளிம்புநிலை மனிதர்களைக் காட்டிய சிறுகதை பற்றி  இவ்விமர்சனக் கட்டுரையில் இணைத்துள்ளேன்.

மார்க்கும் ரேச்சலும் – உமா கதிர்

உமா கதிர் அவர்கள் எழுதிய இச்சிறுகதையில் சிங்கையின் விளிம்புநிலை வாழ்க்கையையும் பெருநகர் வாழ்க்கையின் இருள்களில் சிக்கி முனங்கிக் கொண்டிருக்கும் வாழ்வை உதாசினப்படுத்தி வாழும் குரல்களையும் பதிவு செய்துள்ளார். நான் வாசித்த சிங்கை சிறுகதைகளில் தனித்துவமான ஒரு கவன ஈர்ப்பை உருவாக்கிய சிறுகதை என ‘மார்க்கும் ரேச்சலும்’ இடம் பெறுகிறது. மேலும், தீவிர வாசகராகக் கடந்தகால சிங்கை சிறுகதை வளர்ச்சியையும் நகர்ச்சியையும் வாசிப்பினூடாக மதிப்பீட்டு வரும் யாவருக்கும் இச்சிறுகதை நவீன இலக்கியத்தின் ஒரு மாற்றுக் குரலாக வாசக சாத்தியங்களை விரிவுப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

கதைச்சொல்லி வாழ்ந்து கொண்டிருக்கும் அதே நகரில் அவர் தங்கியிருக்கும் அறைக்குப் பக்கத்திலேயே குடியிருக்கும் உணவகத்தில் தட்டுகளைக் கழுவும் ஒரு உதிரி மனிதனைப் பற்றிய கவனக் குவிப்பே இச்சிறுகதை. தன் ஒட்டு மொத்த வெளிச்சத்தையும் அக்கதைப்பாத்திரத்தின் மீது குவிக்கிறார் உமா கதிர். அம்மனிதன் வாழ்க்கையில் வெற்றிப்பெற்றவன் அல்ல; பெரிதாகத் தத்துவப் பின்னனியுடன் வாழ்க்கை குறித்த ஏகாந்த கருத்துகளைச் சொல்பவனும் அல்ல; மார்க் என்பவர் ஐம்பத்து ஏழு வயது நிரம்பிய குடும்பத்தை இழந்து, நல்ல வேலையையும் இழந்து, தான் உயிரோடிருப்பதைப் பற்றி உறவினர்களுக்குக்கூட கவலை கிடையாது என்கிற அளவிற்குப் புறக்கணிக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும், வாழ்க்கைக்கு வெளியே தூக்கிவீசப்பட்ட ஒரு சாதாரண மனிதன்.

ஒரு நாள் நான்கு இலக்க எண்ணுடன் வருகிறார்; 4டீ தாளைக் கொடுத்துவிட்டுப் பணம் கேட்கிறார். பின்னர், ஒரு நாளில் கதைச்சொல்லியுடன் நட்பாகிவிடுகிறார். தனக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் தனிமையான ஒரு வாழ்விற்குள் கதைச்சொல்லியை நுழைய விடுகிறார். இருளில் வெளிச்சத் துளியைத் தேடுவதைப் போன்று மார்க்கின் வாழ்க்கையினுள் சம்பவங்களைத் தேடி அலைகிறோம். அவர் வாழ்வினுள் எல்லாமும் வரண்டு கிடக்கின்றன. ரேச்சல் என்கிற காதலியும் அவளுடன் புத்தாண்டில் ஏற்படும் சந்திப்பையும் தவிர மார்க்கிடம் வேறொன்றுமில்லை. அவளைக் கொண்டு பெரும் கனவு தேசத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். ரேச்சலின் இரண்டு மலைகளுக்கு நடுவே இருக்கும் கிராமத்திற்குச் சென்று அங்கொரு புதிய வாழ்க்கையைத் துவங்குவதற்காக மார்க் கனவு கொண்டிருக்கிறார். திடீரென ஒரு நாள் மார்க் கிளம்பிப் போய்விடுகிறார். கதைச்சொல்லியைச் சந்திக்கத் திரும்பவும் வரவுமில்லை. தன் திட்டப்படி இரண்டு மலைகளுக்கு நடுவே இருக்கும் கிராமத்தில் ரேச்சலுடன் மகிழ்ச்சியாக இருக்கக்கூடும் என நினைத்துக் கதைச்சொல்லி சமாதானமாகிவிடுகிறார்.

ஒருவேளை இச்சிறுகதை இங்கேயே முடிந்திருந்தால் வாழ்வெனும் கணிக்க இயலாத முடிச்சிற்குள் வாசகனை ஆயிரம் வினாக்களுடன் விட்டுச் சென்றிருக்கும். வாழ்வெனும் காட்டாறு அப்படியாகத்தான் ஒவ்வொருநாளும் பற்பல அடுக்குகளை அடித்துத் தள்ளி உடைத்து வெற்றிடங்களை விட்டவாறும், வெற்றிடங்களில் வேறு ஊகிக்க முடியாத திருப்பங்களைக் கொண்டு சேர்த்தவாறும் பல்லாயிரம் இரகசியங்களுடன் நகர்ந்து கொண்டே இருக்கிறது. ஒரு புத்தனின் தியானத்தின் முன்னே அமர்ந்து கவனிப்பதைப் போன்ற கூர்மையுடன் இவ்வாழ்க்கையைத் தரிசிக்க, மதிப்பீட, கடந்திட ஒவ்வொருநாளும் ஆயிரமாயிரம் பேர் வந்து சேர்ந்து கொண்டே இருக்கின்றனர். மார்க் என்கிற ஒரு விளிம்புநிலை மனிதனின் சிதறுண்டுபோன அகத்தின் உள்ளே கதைச்சொல்லி வந்து சேர்வதைப் போன்றே.

உமா கதிர் இச்சிறுகதையை முடித்த இடம் படிக்கும்போதே அதனை ஊகிக்க முடிந்தபடியே கொண்டு சேர்த்துள்ளார். கதைச்சொல்லி அவர் ரேச்சலில் கிராமத்தில் சென்று சேர்ந்திருப்பார் என்று சொல்லி, கதையை மேலும் தொடரும்போதே வாசகனால் அப்படி நடந்திருக்காது, ஒன்று மார்க் வேறு இடத்தில் மீண்டும் தட்டுகளைக் கழுவும் வேலையையே செய்து கொண்டிருப்பார் அல்லது மரணமடைந்திருப்பார் என்று சுலபமாக யூகித்துவிட முடிந்த ஒரு முடிவுத்தான். அதனை எழுத்தாளர் இலாவகமாகத் தேர்ந்த வாசகனையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தக்கூடிய வகையில் எழுதியிருந்தால் வாழ்க்கைக்கும் வாழ்க்கையை அளக்கும் மனங்களுக்குமிடையே கலை என்கிற மாபெரும் எழுச்சி உருவாக்கும் அதிர்வலைகளை உணர வைத்திருக்கலாம். அது ஒன்று மட்டுமே இச்சிறுகதையில்  மேம்படுத்தக்கூடியதாகப் பார்க்கிறேன்.  அதையும்கூட ஒரு கவித்துவமான முடிவு என்றும் அறிய முடியும். உமா கதிரி கதையில் இறுதியில் அதிர்ச்சி வைத்தியம் எதனையும் கொடுக்காமல் சிறுகதையை யதார்த்தமாக முடிக்கும் பொருட்டு இத்தகைய முடிவை எழுதியிருக்கலாம் என்றும் நினைத்துப் பார்க்கிறேன்.

உமா கதிர் இச்சிறுகதையில் கையாண்டுள்ள மொழி தனித்துவமான கவனத்திற்குரியது என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். அவருடைய மொழியில் ஊடாடும் கேலியும், நகைச்சுவை உணர்வும் கதையோட்டத்தைக் கூர்ந்து கவனிக்க வைக்கிறது. மேலும், வெறுப்பின் உச்சத்தில் இருந்து கொண்டு வாழ்வை உள்பார்வையிடும் முதிர்ச்சியான மொழிநடையும் வாய்த்துள்ளது. அது சிறுகதையின் ஒருமையையும் அது சட்டென விரிவடைந்து செல்லும் அழகியலையும் வாசிப்பு முழுவதும் செம்மைப்படுத்தியப்படியே வருகிறது. உதாசினப்படுத்தப்பட்ட பெருநகர் மனிதர்கள் எத்தனையோ பேர் சிங்கை மாநகரங்களில் குவிந்து கிடக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கை இருளுடன் உரையாடி பிறகு காணாமல் போகும் கணநேர சிமிட்டல் மட்டுமே. அதனை நூதனமாகக் கவனப்படுத்தி மொழியின் வழியாக நிகழ்த்திக் காட்டும் சாத்தியம் இலக்கியத்திற்குண்டு. அதனை நோக்கிய நகர்தல் நவீன சமூகத்தின் இலக்கிய விசாரணைகளுக்கு வலு சேர்க்கும் என உமா கதிரின் மார்க்கும் ரேச்சலும் உணர்த்திவிட்டுச் செல்கிறது.

 

அறிவிப்பு:

வருகின்ற செப்டம்பர் 22ஆம் நாளில் சிங்கப்பூரில் Bishan Library-யில் மாலை 7.00 மணி துவக்கம் உமா கதிரின் இச்சிறுகதை படமாக்கப்பட்டுத் திரையிடப்படவுள்ளதையும் இதன் வழி தெரிவித்துக் கொள்கிறேன்.

கே.பாலமுருகன்

சிறுகதை விமர்சனம்- நெருப்பு (கணேஷ் பாபு- கருணாகரன்- பிரேமா மகாலிங்கம்)

இக்கதை எனக்கு வைக்கம் முகமது பஷீரின் கதைகளை நினைவுபடுத்தியது. அவரது கதைகளில் மேலோட்டமாகத் தெரியும் எளிமையும் நையாண்டியும் உண்மையில் அக்கதைகளின் ஆழத்தில் உள்ள நம்பமுடியாத துக்கத்தை நெருப்பை சாம்பலென சிறிது நேரம் மூடுவதற்கு மட்டுமே பயன்படுவன. ஒரு வரியை வாசித்ததும் இயல்பாக சிரித்துவிடுவோம். ஆனால் அடுத்த கணம் அப்படிச் சிரித்ததற்காக வெட்கமும் வருத்தமும் நமக்குள் ஏற்படும். பாத்துமாவின் ஆட்டிற்கு அவர் ரூபாய் நோட்டுகளை சாப்பிடத் தரும்போதும் நமக்கு மேற்சொன்ன அதே உணர்ச்சிதான் ஏற்படும்.

பாலமுருகனின் இக்கதை மேலோட்டமாக அங்கதத்தன்மை வாய்ந்ததாக தென்பட்டாலும், உண்மையில் அந்த அங்கதம், ஒரு சிதைந்த குடும்பத்தின் துக்கத்தையும், நம்பமுடியாத வீழ்ச்சியையும், உள்ளோடிய துயரையும், சரிசெய்ய முடியாத வாழ்வின் நெருக்கடியையும், மறைப்பதற்காக சமத்காரமாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. உண்மையில் இவ்வித எளிமையான நடையில், எளிமையான சொற்களில், வலிய துயரைச் சொல்வது சவாலான விஷயம். அதைச் சிறப்பாக கையாண்டிருக்கிறார் பாலமுருகன்.

முகத்தில் தீக்காயங்களுடன் இருக்கும் அம்மா, வலது கை முன்னர் ஒருமுறை ஒடிந்து போன சிறுவன், கல்வியையும் இழந்தவன், ஆண்துணையற்ற குடும்பம் என ஒரு துயர்மிக்க குடும்பத்தின் வீழ்ச்சியை நேரடியாகச் சொல்லாமல் அனைத்தையும் வாசகர்களை ஊகிக்க வைக்கச் செய்வதன் மூலமே சம்பவங்களை காட்டிச் செல்கிறார் பாலமுருகன். நாள் தொடங்கி கிட்டத்தட்ட நடு இரவு வரை ஓயாமல் வேலை செய்யும் தாயும் மகனும். இரக்கமற்ற கடை முதலாளிகள். அதில் பாலியல் வக்கிரப் பார்வைகளும் அடக்கம். மீளமுடியாத ஒரு துன்பியல் தளத்திற்கு வாழ்வு அவர்களை நகர்த்திக் கொண்டுவந்த பிறகும், அந்தச் சிறுவனால், சின்னச் சின்ன சேட்டைகளின் மூலம் அவற்றை எதிர்கொள்ள முடிகிறது.

மீன் முள்ளை சூப்பில் போடுவது துவங்கி, ஈரமான அழுக்குத் துணியை சூப்பில் பிழிவது, அம்மாவை வக்கிரப் பார்வையில் சிரமப்படுத்தும் முதலாளி மீது ஆரஞ்சுப் பழத் தோலைப் போடுவது என சிறு சிறு சேட்டைகளின் மூலம் வாழ்வின் குரூரத்தை சிறுவனால் எதிர்கொள்ள முடிகிறது. இதையெல்லாம் வாசிக்கையில் இந்தச் சிறுவயதில் வாழ்வை எதிர்கொள்ளக் கற்றுவைத்திருக்கும் சிறுவனின் முதிர்ச்சி வியப்பளிக்கிறது.

மேலோட்டமாக எளிமையாகத் தெரியும் இக்கதை உண்மையில் வாசகனுடன் கண்ணாமூச்சி விளையாட்டு ஆடுவதைப் போல அதன் மையத்தை எளிமையென்ற போர்வைக்குள் மூடிவைத்திருக்கிறது. இக்கதையில் கையாளப்பட்டிருக்கும் கவித்துவமும் (பாம்பைப் போல அசதி முதுகில் ஊர்வது..) படிமங்களும் (நெருப்பு, பல்பு, ரொட்டித் துண்டை அபகரிக்கும் பூனை, ஆரஞ்சுத் தோல்) உண்மையில் கதையை அதன் தீவிரத் தளத்திற்கு இட்டுச் செல்பவை.

பழத்தை இழந்து தோல் மட்டுமே எஞ்சும் ஆரஞ்சுத் தோல் எதைக் குறிக்கிறது என யோசித்தாலே போதும், எழுத்தாளர் எவ்வளவு எளிய படிமம் மூலம் கதையின் மையத்தைச் சென்றடைய உதவுகிறார் எனத் தெரிந்துகொள்ளலாம். ‘நெருப்பு’ என்ற படிமமும் அப்படித்தான். கதையின் படிமங்கள் உண்மையில் வாசகனை கதையின் சாரத்தை நோக்கி இழுத்துச் செல்லும் நீரோட்டம் போன்றவை. படிமங்களை கவனமாகப் பின் தொடர்ந்தாலே போதும். கதை நம்மை அதற்குள் மகிழ்ச்சியாக அனுமதிக்கும்.

கற்பனையின் மூலமும், வேடிக்கைச் சேட்டைகளின் மூலமும், தன்முன் பிரம்மாண்டமாக நின்றிருக்கும் துயரத்தைக் குள்ளமாக்கத் தெரிந்த இந்தச் சிறுவன் “Life is beautiful” படத்தின் கதாநாயகனை நினைவுபடுத்துகிறான். இச்சிறுவன் வளர்ந்தால் அவனைப் போன்றுதான் இருப்பான் எனவும் தோன்றுகிறது.

சுராயா என்ற இந்தோநேசியப் பெண்ணின் மகனுக்கு விநோத் என்ற இந்தியப் பெயர் எப்படி வந்தது என்ற ஒரு விஷயம்தான் நெருடலாக இருந்தது. மற்றபடி கதை அமர்க்களம்.

சிறந்த கதையை வாசிக்கத் தந்த பாலமுருகனுக்கு வாழ்த்துகள்.

கணேஷ் பாபு, சிங்கை 

 

வணக்கம், இன்றைய என் இரயில் பயணத்தில் தங்களின் ‘நெருப்பு’ கதையோடு பயணித்தேன். விடியல் முதல் பொழுது சாயும்வரை நடந்த நிகழ்வுகளைக் கண் முன் காட்சிப்படுத்தியது சிறப்பு. சிறுவனுடன் நானும் அந்தக் கடை முழுதும் சுத்தி வந்தேன். ஆரஞ்சு பழச் சுளையை தூக்கி எறிந்தேன், அழுக்கு தூணியில் உள்ள ஈரத்தை சூப்பில் பிழிந்து விட்டேன்…அம்மாவின் உருவம் தெரியாமல் தேடினேன், மேசையைத் துடைத்தேன்…இப்படி கதாமாந்தரிகளோடு நானும் அந்தக் கடையைச் சுற்றி வந்தேன். நிச்சயமாக கதாபாத்திரங்களின் வலியை உணரவைத்து கதை வெற்றி பெறுகிறது.

அந்த முதல் பத்தி கதையில் ஒட்டாதது போல் தோன்றியது…அந்த பத்தியில் குறிப்பிட்ட செய்திகள் வழி வாசகருக்கு உணர்த்துவது என்ன? ஏதேனும் குறியீடு உள்ளதா? அந்த பத்தி இல்லாமலும் கதை வெற்றி பெறுமா? இயல்பாக கதையை நகர்த்தி வாசகனின் மையம் தொட்டுவந்த சாதுரியம் பாராட்டத்தக்கது..வாழ்த்துகள்.

கதை மிகவும் எளிமையாக இருப்பதுபோல் இருந்தாலும் மிக அடர்த்தியாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது….இரசித்து படித்தாலும் சிறுவனையும் அவனது தாயாரையும் நினைக்கும்போது மனம் கனக்கிறது.

 

பிரேமா மகாலிங்கம், சிங்கை 

 

 

இந்தக் கதைக்குள் ஓர் இன வாழ்வு அடங்கியுள்ளது. சுராயாவுக்கு..எப்படி வினோத் மகனாக முடியும். எந்த முனியாண்டியோ, முனிஸ்வரனோ அப்பாவாக இருந்திருக்க முடியும். அக்கரைக்குப் பிழைப்பு தேடி வந்தவள் இங்கே வாழ்விழந்த இனத்தின் பிரதியாக தன்னை மாற்றி கொண்டிருக்கிறாள்.

சீன உணவகத்தில் அடிக்கடி காணும் இச்சம்பவங்கள், நமக்கான கதையாக இருக்கும் என்ற புரிதல் இன்றி கடந்து வந்திருக்கிறோம். தன்னுடன் படித்த நண்பன் கொடுத்த ஒரு வெள்ளி… என்னை ஏதேதோ செய்து கொண்டிருக்கிறது. இச்சிறுகதை காட்டும்  நிகழ்கால சம்பவங்களில் என்னைத் தொலைக்காமல், எப்போது கண்டடைவேன் எனத் தெரியவில்லை.

எம்.கருணாகரன்

 

உணவகம் என்றதும் அங்கே இருக்கும் முதலாளிகள் முதல் தொழிலாளிகள் வரை அனைவரின் வாழ்வும் ஒரு நெருப்பைச் சுற்றியே அடங்கியிருக்கின்றது. அதனை ஒரு குறியீடாக பாலமுருகன் சிறப்பாகப் பாவித்துள்ளார். வெகுநாட்களுக்குப் பிறகு மனத்தை உறுத்தாமல் முதல் வாசிப்பிலேயே மனத்தில் புகுந்து கவர்ந்து ஒரு சிறுகதையாக இக்கதையைப் பார்க்கிறேன். வாழ்த்துகள் பாலமுருகன். நிறைய சிறுகதை எழுத்தில் கவனம் செலுத்த அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

மோகனா

 

Link of story: https://balamurugan.org/2018/02/16/சிறுகதை-நெருப்பு/

அக்கரைப் பச்சை – 4 : கணேஷ் பாபுவின் கனவுலகவாசிகள்

சிங்கப்பூரில் வசிக்கும் கணேஷ் பாபு பற்றி தோழி சுஜாவிடமிருந்து தெரிந்து கொண்டேன். சிறுகதை எழுத்தாளராகவும் நல்ல விமர்சகராகவும் அறியப்படும் அவர் தங்கமீன் வாசகர் வட்டத்தில் ‘கவிதை இரசனை’ என்கிற நவீன கவிதைகள் பற்றிய ஓர் விமர்சன அங்கத்தையும் பல வருடங்களாக நடத்தி வருகிறார். இலக்கியம் தொடர்பான விமர்சனங்களிலும் விவாதங்களிலும்  தீவிரமாக  ஈடுப்பட்டு வரும் அவருடைய ‘கனவுலகவாசிகள்’ சிறுகதை அக்கரைப் பச்சை தொகுப்பில் இணைக்கப்பட்டுள்ளது.

ஒரு படைப்பாளன் தான் வாழும் காலத்தின் சாட்சியமாக இருத்தல் அவசியம். இன்றும் பலர் உடலை இந்நூற்றாண்டில் இருத்திக் கொண்டு எழுத்தைக் கடந்த நூற்றாண்டிலேயே உலாவவிட்டுவிடுவார்கள். அவர்களுடைய எழுத்து கடந்தகாலத்தை மட்டுமே நினைவுப்படுத்திக் கொண்டே இருக்கும். இதுவே, இலக்கியம் என்பது பிரிவேக்கத்தின் புலம்பல் என்பதொரு புரிதல் உருவாகிவிடும். எழுத பேனாவைத் தொடும் எவரும் தன் கடந்தகாலத்தை நோக்கி மட்டுமே கற்பனை செய்யத் துவங்கிவிட்டால் நம் கண் முன் நிகழ்ந்து கொண்டிருக்கும் சமூகத்தையும் வாழ்வையும் யார் சொல்வது? கடந்தகால உணர்வுகளையும் சம்பவங்களையும் தன் எழுத்தில் சேர்த்துக் கொள்வது அவசியமான ஒன்றே. ஆனால், அங்கேயே உழன்று வெம்பி தேம்பி இருந்துவிடக்கூடாது. எழுத்து இன்றைய பொழுதின் நீட்சியாக இருத்தல் இப்போதைக்கு மிக முக்கியம் என நினைக்கிறேன்.

நவீன வாழ்வும் அதன்பால் பெருகி வளர்ந்திருக்கும் சிதைவுகளையும், மனித உணர்வுகளின் சிடுக்குகளையும், நவீன வாழ்வின் உறவு சிக்கல்களையும், அறம் குறித்த எதிர்வினைகளையும் என நவீன வாழ்வை இலக்கியத்தின் ஊடாக மிகத் தீவிரமாக விசாரிக்கும் கூர்மையான எழுத்து நவீன எழுத்தாளர்களுக்குத் தேவை எனக் கருதுகிறேன். அகிரா குரோசாவா தன்னுடைய கலையும் பயணமும் என்கிற கட்டுரையில் கலைஞன் அவன் வாழும் காலத்தின் ஓலங்களையும் கூக்குரல்களையும் வலிகளையும் சிரிப்பையும் சுமந்தவனாக வெளிப்பட வேண்டும் எனக் குறிப்பிடுவதை மேற்சொன்ன விசயங்களுடன் பொருத்திப் பார்த்துக் கொள்ள முடிகிறது.

 

சிங்கை நவீன வாழ்வின் உருவகம்

நவீன வாழ்வின் மிகக் கூர்மையான அவதாணிப்புகளைத் தன் இக்கதையின் வழியாக கணேஷ்பாபு குறியீட்டுக் கதைக்களத்தில் வெளிப்படுத்தியுள்ளார். ஆகையால், தான் வாழும் இப்பரப்பரப்பான வாழ்வின் மீது அவருக்கு ஓர் ஆற்றாமை , விமர்சனம் உள்ளது. அதனையே இச்சிறுகதை படைப்பின் குரலாக வெளியேற்றுகிறது. கதைச்சொல்லியும் அவனுடைய இரண்டு நண்பர்களும் ஒரு புல்வெளியில் அமர்ந்துகொண்டு தாங்கள் கண்ட கனவுகளைப் பற்றி விவரிப்பதுதான் இச்சிறுகதை. ஜூரோங் ஈஸ்ட் ரயிலடி பற்றி கணேஷ் விவரிக்கும் இடம் மிக முக்கியமானவை. அங்குத்தான் கதைக்கான ஒரு சிறிய திறப்பையும் என்னால் அடையாளம் காணவும் முடிந்தது. இதுபோன்ற குறியீட்டு மொழியில் வழங்கப்படும் கதைகளைப் புரிந்து கொண்டு பயணிக்க நமக்குத் திறப்புகள் அவசியம். ஒரு மொழியில் புழங்குகின்ற சொல்லானது அம்மொழி வழங்குகின்ற பாரம்பரியான அர்த்தத்திலிருந்து விடுப்பட்டு புதியதொரு பரிணாமத்தை எட்டுவதே குறியீட்டு மொழிச்சூழலில் நவீன இலக்கியம் ஏற்படுத்தும் தாக்கமாகும். அது கணேஷ் பாபுவிற்குச் சிறப்பாகவே கைக்கூடியுள்ளது. குறியீட்டு மொழி மட்டுமல்ல அவருடைய கதைக்களமே ஒரு குறியீடுதான். தொடர்ந்து சிறுகதையை உருவகித்துக் கொள்ள ஜூரோங் ஈஸ்ட் ரயிலடி பற்றி சொல்லும் இடம் எனக்கு வசதியாக இருந்தது.

‘கதவு திறந்ததும், திசைகளை முறைத்துச் சீறும் ஜல்லிக்கட்டுக் காளைகளைப் போல மக்கள் திசைக்கொன்றாய் தெறித்து ஓடுவார்கள்’ என்கிற இடத்தில் ஜூரோங் ஈஸ்ட் ரயிலைடியக் கதையாசிரியர் ஜல்லிக்கட்டு, வாடிவாசலுடன் இணைத்துக் கொள்கிறார். ஒரு பண்பாட்டு தளத்திலிருந்து தனக்கான அவதாணிப்புகளுக்கேற்ற வார்த்தைகளை அவர் சேகரித்துக் கொள்கிறார். முதல் முறை நான் சிங்கப்பூர் வந்தபோது எனக்கு உண்டான ஆச்சர்யமும் இதுதான். ஒரு பார்டரிலிருந்து இன்னொரு பார்டருக்குப் போவதற்குள் எத்தனை மனிதர்கள், எத்தனை விரைவான ஓட்டம். பார்க்கவே கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. ஏன் எல்லோரும் இவ்வளவு அவசரமாக ஓடிக் கொண்டிருக்கிறார்கள் என்கிற கேள்விக்கு அப்போதைக்கு எனக்கு விளக்கம் தெரியவில்லை. எதையோ பறிக்கொடுத்தவர்களைப் போல ஆண்கள், பெண்கள், வயதானவர்கள் இளைஞர்கள் என எல்லோரும் ஓடிக் கொண்டிருந்தனர். இதனை என் கட்டுரையிலும் நான் குறிப்பிட்டுள்ளேன். இச்சிறுகதை அத்தகையதொரு வாழ்க்கையை நோக்கி நம்மை இழுத்துச் செல்கிறது.

சிங்கையில் வேலை செய்யும் மலேசியர்கள் வேலைக்குக் குறித்த நேரத்தில் போய்விட வேண்டும் என அவர்கள் எதிர்க்கொள்ளும் ‘பார்டர்’ அகநெருக்கடிகளை நினைத்தாலே பதற்றம் ஏற்படுகிறது. வாழ்விற்கும் வாழ்தலுக்கும் மத்தியில் சிதைந்து கரைந்துவிடும் கூட்டம். அதே போல சிங்கையிலும் எம்.ஆர்.டி இரயில் நிலையங்களிலும் இதே பரப்பரப்பைப் பார்க்கலாம். கணேஷ் பாபுவின் கதைக்களம் முழுக்கவும் இப்பரப்பரப்பான சூழலைச் சார்ந்தது அல்ல. விவரிப்புகளாகவே கதை ஓடிவிடும் என முதலில் தயங்கினேன். ஆனால், கதை முழுவதும் பரப்பரப்பான நவீன வாழ்வில் தொய்ந்து கசந்து சிதறுண்டு போன தன் அகத்தை விரித்துக் காட்டுகிறார்.

 

மூன்று பேரின் கனவுகள்

இச்சிறுகதையில் வரும் மூன்று கதாபாத்திரங்கள் தங்கள் கனவுகளை விவரிக்கிறார்கள். ஒவ்வொரு கனவும் நவீன வாழ்வின் மனச்சிதைவுகளையும் நெருக்கடிகளாலும் ஏற்படும் அகம் சார்ந்த சிக்கல்களையே நினைவுப்படுத்துகின்றன. முதலாவதாகக் கதைச் சொல்பவன் ‘முடிவிலியை நோக்கி வேகமாகப் பாயும் செம்மண் நிற நதியில் நான் அடித்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தேன்’ என தான் ஒரு நதியில் சிக்கி மூழ்குவதைப் பற்றி சொல்வான். இச்சித்திரங்கள் நவீன வாழ்வின் நெருக்கடிக்குள் சிக்கி மூழ்கிக் கொண்டிருக்கும் மானுட வாழ்வையே ஞாபகப்படுத்துகின்றன. ஒவ்வொரு கணமும் நவீன வாழ்க்கை நம்மைத் துரத்திக் கொண்டே இருக்கின்றன. ஏன் ஓடுகிறோம் எனத் தெரியாமல் ஓடிக் கொண்டே இருக்கிறோம். அடுத்தவன் ஓடுவதைப் பார்த்துப் பதற்றமுற்று நாமும் ஓடுகிறோம் எனும் நிலையைக் கொடுப்பதுதான் இன்றைய பெருநகர் வாழ்க்கை. வாழ்வு சுருங்கி இயந்திரத்தைப் போல ஆகிவிட்டோம். அதனால் உண்டாகும் ஒரு மனச்சித்தரிப்பே அக்கனவாகத் தோன்றுகிறது. சிக்மன் ப்ராய்ட் தன்னுடைய கனவுகள் பற்றி நூலில், உறங்கிக் கொண்டிருக்கும் ஒருவனின் காலில் நீங்கள் நீரை ஊற்றினால் உடனடியாக அவனுடைய கனவில் சட்டென்று மாற்றம் உருவாகுமாம். தரையில் ஓடிக் கொண்டிருப்பதைப் போல கனவு கண்டு கொண்டிருக்கும் ஒருவனின் காலில் நீங்கள் நீரை ஊற்றினால் உடனே ஓர் ஆற்றில் நிற்பதைப் போல கனவு மாறிவிடுமாம். கனவுகளை ஆராய்ந்து அவர் குறிப்பிட்ட உண்மை இது. அதே போல வாழும் வாழ்க்கைக்கு நிகரான ஒரு கனவு தோன்றுவதிலும் ஆச்சர்யமில்லை. சதா வேலை உலகத்தில் சிக்கி ஓடிக் கொண்டிருக்கும் ஒரு நகர்வாழ் மனிதனுக்குத் தன் உழைப்பையும் இரத்தைத்தையும் உறிஞ்சும் இவ்வாழ்க்கையின் மீது ஒரு கனவு தோன்றுகிறது. அது செந்நிறத்தில் தன்னை மூழ்க்கடித்துக் கொண்டிருக்கிறது.

அடுத்து ஒருவன் சொல்லும் கனவும் விசித்திரமானவை. முதலில் கண்டவனின் கனவின் தொடர்ச்சியாகச் சிறுகதையில் குறிப்பு உள்ளது. ஆகவே, கனவைப் பற்றி விவரிக்கும் மூவரும் ஒருவரே எனும் ஒரு புரிதலுக்குள் வர முடியும். கதைச் சொல்லிக்கு வலதுபுறமும் இடதுபுறமும் இருப்பவர்களும் கதைச்சொல்லியின் வெவ்வேறு அகநிலைகளைக் குறிக்கும் குறியீட்டுக் கதாபாத்திரங்களே. ஆக, கதையில் இருப்பது ஒரு கதாபாத்திரம் மட்டுமே என உருவகித்துக் கொள்ள முடிகிறது. இரண்டாவது கனவில் அவன் சொல்வதாவது ‘ கரைதொட்டு கடல்மீளும் அலைகள் போல’ எந்த உறவுமின்றி நான் வெயில் தகிக்கும் செம்மண் நிலத்தில் நடந்து கொண்டிருந்தேன் என. பெருநகர் வாழ்வின் பரப்பரப்பு ஒவ்வொரு மனிதனையும் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறது என்கிற நிஜமே இக்கனவு. மேலும் அக்கனவில் நவீன மனிதனின் சிதைந்துபோன ஒரு மனம் எவ்வாறெல்லாம் குழம்பியும் நடுநிலை இழந்தும் மீண்டும் நம்பிக்கையைக் கட்டியெழுப்பியும் மாயையில் சிக்கியும் மீண்டும் உருப்பெற்று மீண்டும் தொலைந்து போகும் என்று கதைநெடுக விவரித்துள்ள்ளார். ஒரு நிலையற்ற தள்ளாட்டம் நிரம்பிய மனவெளியில் நாம் பயணித்துக் கொண்டே இருப்போம்.

நவீன வாழ்க்கை கொடுக்கும் உறவு சிக்கல்கள் ஓரளவிற்குக் கதையில் விவாதிக்கவும் பட்டிருக்கிறது. பெருநகர் வாழ்க்கையில் உறவுகள் என்பது அலாரத்தைப் போலத்தான். அன்பு செய்வதும் அக்கறை கொள்வதும் ஏதோ இயந்திரத்தன்மையுடனே இருக்கும். நாம் அளிக்கும் உறுதிகள் காற்றில் கலந்து நம்மையறியாமலேயே கரைந்து கொண்டிருக்கவும் செய்யும். நம்முடன் வருவதாகச் சொன்னவர்கள் எல்லாம் வாழ்க்கை எனும் அவசர வெள்ளத்தில் அடித்துக் கொண்டு போய்விடுவார்கள். வெள்ளம் வடிந்த மிச்சப் பொருளாய் நாம் மட்டும் தேங்கி நின்றிருப்போம். அத்தகையதொரு தனிமையைப் பற்றி இக்கனவும் அதன் நிதர்சனங்களையும் அதன்பால் ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய மீட்பையும் விவாதிக்கிறது.

 

மீண்டும் கதைச்சொல்லியின் வலதுபுறமிருந்தவன் தனக்கு ஏற்பட்ட ஒரு விசித்திரமான அனுபவத்தைப் பகிரத் துவங்குகிறான். அவனுடைய காதல் தோல்வியில் முடியும்போது அவனுக்குள் ஒரு சிக்கல் ஏற்படுகிறது. ஏமாற்றத்தைத் தாளமுடியாமல் அவனை அவனே சுருக்கிக் கொள்ளும்போது அவன் பார்க்கும் பொருள்கள் யாவும் காட்சிகள் யாவும் தூய வெண்ணிறமாக மாறுகிறது. ஆகவே, வேறுப்படுத்திப் பார்க்க முடியாமல் தடுமாறுகிறான். உறவுகளில் உள்ள போலித்தனங்களைத் தரிசிக்கும்போது அதிர்ச்சிக்குள்ளாகுகின்றான். தூக்கமின்மையில் தவிக்கிறான். இவ்வுலகம் எல்லாவற்றிலும் இரண்டு முகங்களைக் கொண்டுள்ளதை அறிகிறான். நவீன உறவுமுறைகளில் உள்ள சிக்கல், போலித்தனம் யாவும் அவனை அலைக்கழிக்கின்றன. அதைப் புரியாமல் தடுமாறிய அவன் மெல்ல அதனை உண்மை முகத்தைக் கண்ட கணம் மீண்டும் யதார்த்தத்திற்குத் திரும்புகிறான். பெருநகர் வாழ்க்கைக்குள் எல்லோர் மனங்களும் அடையும் சிக்கல் இதுதான். அவநம்பிக்கையால் தொற்றப்பட்டு அல்லல்படுகிறோம். ஏமாற்றத்தில் திளைத்துத் தடுமாறுகிறோம். ஆனால், வெகுசீக்கிரமே பெருநகர் வாழ்க்கை நம்மை அதுபோன்ற பொய்மைகளைப் பழகிக் கொள்ள தயார்ப்படுத்தி விடுகிறது. மிகுந்த முரணான இயக்கம் இது. உறவுகளில் ஏற்படும் அவநம்பிக்கைகளைக் காலப்போக்கில் ஏற்றுக்கொள்ளும் இயந்திரத்தனமான சமாதானம் கதையில் வாசிக்கும்போது சட்டென அச்சம் ஏற்படுகிறது. போலியான வாழ்க்கைக்குள் போலியான சமாதானம் பெற்றுக் கொள்கிறோம்.

கணேஷ் பாபு நவீன வாழ்க்கையை அவருக்கே உரித்தான குறியீட்டு மொழியின் வாயிலாகக் கதைக்குள் ஆழமாக விவாதித்துச் செல்கிறார். ஆனால், விவாதத்தின் நெடி கொஞ்சமும் பெருகினாலும் கதைக்குள் கட்டுரைத்தனம் ஏற்பட்டுவிடும் என்கிற கவனமும் அவரிடம் இருந்திருக்கிறது. மிகவும் முதிர்ச்சியான எழுத்து நடை. நவீன மனிதனின் தனிமை, அவநம்பிக்கைகள், பதற்றம், சிக்குண்ட நிலை என அனைத்தையும் இச்சிறுகதையில் விரித்துக் காட்டியுள்ளார். ஆனால், தேர்ந்த வாசகனால் மட்டுமே அதன் ஆழத்தையும் விரிவையும் சென்றடையும்படியான சொல்முறையை உபயோகித்துள்ளார். படிமங்களும் குறியீடுகளும் ஏராளமாகக் கதையிலிருந்து மிதந்து வருகின்றன. இதுவும் ஒரு சொல்முறையே.

writer Vannathasan

நிறைய இடங்களில் சூழல் வர்ணனைகள் மிகுதியாக வந்துவிட்டதானாலேயே கவனம் சிதறுகிறது. வண்ணதாசனின் கதைகளில் வரும் சூழல் வர்ணனைகளின் மீதான யதார்த்தமும் கச்சிதமும் நிறைந்த மொழி கணேஷ் பாபுவிற்கு வாய்க்குமென்றால் அவருடைய சிறுகதைகளின் விவரிப்புகள் மேலும் உயிர்ப்படையும் என்றே கருதுகிறேன். வண்ணதாசனின் ‘பெருக்கு’ , ‘வாழையடிகள்’, ‘கிருஷ்ணன் வைத்த வீடு’ என்கிற சிறுகதைகளில் வரும் சூழல் விவரிப்புகள் மிக இயல்பானவையும் கதைக்குக் கொஞ்சமும் கூடுதலில்லாமலும் கதையின் ஓட்டத்தில் நெகிழ்ந்திருக்கும். அவர் அடுத்து யதார்த்தக் கதைகளின் வழியாக நவீன வாழ்வின் எச்சங்களைச் சொல்வாராயின் சிங்கையின் அவசர உலகத்தினும் மாட்டித் தவிக்கும் அகங்களை நோக்கி நேரடியாக எல்லோரையும் இழுத்துக் கொண்டு போய் உண்மையின் நெருக்கத்தில் வைக்க முடியும் என்பதே என் விமர்சனப் பார்வையாகும்.

Writer I.Santhosh Kumar

கணேஷ் பாபுவின் இச்சிறுகதை, மலையாள எழுத்தாளர் ஈ.சந்தோஷ் குமாரின் ‘மூன்று குருடர்கள் யானையைப் பார்த்த’ சிறுகதையை மீட்டுணர வைத்தது. அதில் வரும் மூன்று பார்வையற்றவர்களையும் பேட்டியெடுப்பதற்காக ஒரு நிருபர் செல்வார். ‘குருடர்கள் யானையைப் பார்த்த கதைகள்’ பெரும்பாலும் உவமைக்காகப் பலர் சொல்லிக் கேட்டிருக்கிறோம். அதைப் பற்றி பார்வையற்றவர்களிடமே கேட்டால் விந்தையாக இருக்கும் என அவர்கள் தங்கியிருக்கும் அறைக்குச் செல்கிறார். ஒவ்வொருவரும் யானை தங்கள் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கங்களையும் அக உணர்வுகளையும் மட்டுமே சொல்கிறார்கள். அவ்விவரிப்பு யானை என்பது உருவம் என்பதை மறந்து யானை என்பது ஓர் உணர்வின் கணத்த அசைவு என்பதைப் போன்ற ஒரு மனநிலைக்கு வந்துவிடுவோம். ஆக, உருவம், காட்சி என்பது மாயை; அவை உருவாக்கும் அக உணர்வுகளே மிக ஆழமான புரிதல். இக்கதையில் வரும் காட்சிகள் அனைத்தையும் ஒரு யானை இருளுக்குள் அசைவதைப் போல மனத்தில் அசைந்தாடுகின்றன.  நவீன வாழ்வின் பிய்த்தெடுக்கப்பட்ட அகங்களின் அசைவே இச்சிறுகதை.

– கே.பாலமுருகன்

அக்கரைப் பச்சை – 3 (சிங்கப்பூர் சிறுகதைகள் விமர்சனம்) சித்ரா ரமேஸின் ஒரு நாள் ராணி- ஒப்பனைகள் நிரம்பிய வாழ்க்கை

 

‘தனியுடமை சமூகத்திற்குள் வந்து அதன் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரிக்கும்பொழுது, உடைமையைப் பெற மனிதர் அலையும்போது, இதன் காரணமாக ஊருக்குள்ளும், உறவுக்குள்ளும் முரண் அதிக்கரிக்கிற போது சிக்கல் புறத்தில் மட்டுமல்லாமல் அகத்திற்குள்ளும் பாதிப்பை ஏற்படுத்தும்’ – கோவை ஞானி (தமிழ் மெய்யியல் அன்றும் இன்றும்)

சிங்கப்பூரில் கடந்த 22 ஆண்டுகளாக வசித்து, தமிழ் இலக்கியம் சார்ந்தும், கல்வியியல் சார்ந்தும் ஒரு புது இரசனை உருவாக்கத்தில் தன்னை முழுவதுமாக ஈடுப்படுத்தி, வாசகர் வட்டத்தின் வழியாகத் தன்னை ஆர்வமிக்க ஓர் இலக்கிய செயல்பாட்டாளராக மாற்றிக் கொண்ட ஒரு கதைச்சொல்லித்தான் சித்ரா ரமேஸ். அவருக்கும் எனக்குமான நட்பு 2007ஆம் ஆண்டிலிருந்து என் முதல் சிங்கை வரிகையிலிருந்தே தொடங்குகிறது. அப்பொழுது புதிய எழுச்சியுடன் எழுதிக் கொண்டிருந்த சிங்கை எழுத்தாளர்களின் வரிசையில் சித்ரா முக்கியமான இடத்தில் திகழ்ந்தார். அவருடைய இரண்டாவது சிறுகதை தொகுப்பான ‘பறவை பூங்கா’-வைக் கடந்தாண்டு படித்துவிட்டு அதைப் பற்றி ஒரு தொடர் எழுதலாம் என்கிற திட்டம் எண்ணத்திலேயே காலாவதியாகியிருந்தது. இதுபோன்று நிறைய எண்ணங்களுக்கு என் மனத்தில் கல்லறைகளே எழுப்பிவிட்டேன். ஏதோ ஒரு உரசல், சந்திப்பு, திறப்பு அதனை உடைத்து ஒழுகவிடும்.

ஒரு விமர்சகன் வாசகனாக இருந்து ஒரு கதையைத் திறக்கிறான். அவனுடைய வேலையே திறப்பதுதான். அத்திறப்பு எத்தனை வலுவானது என்பது இதற்குமுன் எத்தனை கதைகளைத் திறந்து விவாதித்துள்ளான் என்கிற அனுபவத்திலிருந்தும் மதிப்பிடலாம். அப்படித் திறக்கையில், கதவின் ஓரம் கீச்சிடுவதுதான் அக்கதையின் மொழி. திறக்கப்படும் அக்கதவின் தோற்றம்தான் கதையின் வடிவம். கதவைத் திறக்க இலாவகமாக வழிவிடும் கைப்பிடித்தான் கதைக்கான உயிர். இதுபோல சில படைப்பிலக்கியத்தன்மைகள் சாத்தியப்பட்டால்தான் ஒரு கதைக்கான திறப்பு விமர்சன உலகில் பெரும் கூச்சலை உண்டாக்கும். அக்கூச்சல் எல்லா திசைகளிலும் திரண்டு கிடக்கும் அமைதியை, மௌனத்தைக் களைக்கும். திறப்பதற்குரிய சாத்தியப்பாடுகளே இல்லாத கதைகள் மௌனமாக மீண்டும் மூடப்பட்டுவிடும். அதனால்தான் ஒரு கதை இயற்றப்பட்டும் அக்கதை குறித்தான மௌனம் விமர்சன சூழலில் தொடர்ந்து நிலவுகிறது என்றால் அக்கதை திறப்புக்குரியது அல்ல என்பதை ஒரு படைப்பாளன் புரிந்துகொண்டு மீண்டும் படைப்பதில் தன் கூர்மையை அதிகரிக்க வேண்டும்.

தனியுடமை சமூகத்தின் வாழ்வியல் சிக்கல்

சித்ரா ரமேஸ் அவரிகளின் ‘ஒரு நாள் ராணி’ சிறுகதை அது தொட்டிருக்கும் வாழ்க்கை அளவில் மிக முக்கியமான கதையாக இருக்கிறது. கடந்த காலங்களில் சிங்கை இலக்கியம் விளிம்புநிலை வாழ்க்கையைப் பற்றி குறைவாகத்தான் பதிவாக்கியுள்ளது என்கிற விமர்சனம் 2015ஆம் ஆண்டில் ஒரு நூல் வெளியீட்டில் முன்வைக்கப்பட்டிருந்தது. ஆனால், சித்ராவின் இச்சிறுகதை முழுக்கவும் விளிம்புநிலை வாழ்க்கையைத்தான் பதிவாக்கியுள்ளது. வாழ்க்கையின் துரத்தலில் பெண்கள் சென்றடையும் நிலைகளை சித்ரா கதையில் காட்டியுள்ளார். குடும்பமாக வாழும் ஒரு வீட்டில் தனி அறை எடுத்து வாழ்வதில் தனித்து வாழும் பெண்களுக்கே ஏற்படும் சிக்கல்களை ஓரளவிற்குப் பேசியிருக்கிறார். ஆண் துணை இல்லாமல் வாழும் பெண்கள் எத்தனை வயதிற்குரியவர்களாக இருந்தாலும் மெல்ல அவர்கள் மீது படரும் சமூகத்தின் கீழ்மைமிக்க அதிகாரத்தின் குரல்கள் இக்கதையில் ஒலிக்கின்றன.

 

என்றாலும், திறப்பிற்கு வேண்டிய இன்னும் சில விசயங்களை அவர் இக்கதையில் கூர்மைப்படுத்தியிருக்கலாம் அல்லது ஆழமாக்க வாய்ப்பிருக்கிறது என்கிற எண்ணங்கள் தோன்றின. இருப்பினும் நல்ல கதைச்சொல்லி என்கிற அளவில் சித்ரா இக்கதைக்குள் வாசகனின் ஊடாட்டத்தை சாத்தியமாக்கியுள்ளார். உள்ளே நுழைந்து சுவாசிப்பதற்கான இடைவெளியைக் கதையில் சித்ரா தாராளமாகவே உருவாக்கியுள்ளார்.  முகப்பூச்சு இக்கதை நெடுக அழகியலும் அறுவறுப்பும் கலந்த ஒரு வகையான வாசணையை உருவாக்குகிறது. அதுவே இக்கதை நகர்வதற்குரிய வாய்ப்பையும் கொடுக்கிறது.

கோவை ஞானி சொல்வதைப் போல தனியுடமை குறித்த பிரக்ஞை சமூகத்துள் ஆதிக்கத்தை அதிகரிக்கும்பொழுது எல்லோரும் பொருளாதார அவலநிலைக்குத் தள்ளப்படுகிறோம். ஒருவர் மீது ஒருவர் ஏறி உடமையைப் பெறுவதில் ஆக்ரோஷம் கொள்கிறோம். பெருநகர் வாழ்க்கையின் ஒரு மைய வேதனை இது. அதற்குள்ளாகத் தள்ளப்படும் ஒரு சூழலில் இரு பெண்களை மட்டும் கொண்டிருக்கும் அக்குடும்பம் அலைக்கழிப்புகளுக்குள்ளாகிறது. வாழ்க்கைக்குள்ளேயே தொடர்ந்து துரத்தப்படுகிறார்கள். மனம் அலைந்து சோர்கிறது. அங்கிருந்து கதையில் வரும் பேபி ரோஸ் இன்னொரு இடத்தை கண்டடைகிறாள். தமிழிலக்கியத்தில் அதிகம் பேசப்படாத பிறர் பார்வையில் மிகவும் குரூரமாகத் தெரிய வாய்ப்புள்ள ‘பிணங்களுக்கு அலங்காரம்’ செய்யும் தொழிலுக்குள் வருகிறாள். அதிகம் பேசப்படாத அபூர்வமான இவ்வாழ்க்கையைச் சித்ரா மேலும் அழுத்தமாகவும் ஆழமாகவும் பேசியிருக்கலாம் என்றே தோன்றியது. ஒரு சில இடத்தில் இச்சிறுகதை அது குறித்த சிறு தாக்கத்தை ஏற்படுத்தாமலில்லை. இருப்பினும் இதுபோன்ற வாழ்க்கையைப் பேசும்போது மொழியும் கொஞ்சம் அடர்ந்து வெளிப்பட்டிருக்க வேண்டும். சித்ரா ஒரு நல்ல கதைச்சொல்லி என்பதற்கு ஆதாரமே அவருடைய அருகில் அமர வைத்து இலாவகமாகவும் நெருக்கமாகவும் கதையைக் கடத்திச் செல்லும் மொழி பிரயோகங்கள்தான். ஆனால், யாரும் பேச மறுக்கும் இத்தகைய இருண்ட கதைக்களத்திற்கு அதே மொழி இன்னும் வேறு மாதிரி அடர்ந்து வெளிப்பட்டிருக்கலாம் என்றும் தோன்றியது.

அழகும் இழிவும்

அழகு அல்லது அலங்காரம் என்பதுதான் என்ன என்கிற மிகப்பெரிய கேள்வியை உருவாக்கி நம் மனங்களை இக்கதை நெருடுகிறது. நாள் முழுக்க முகப்பூச்சுப் பூசிக் கொண்டும், தன்னை எப்பொழுதும் அலங்காரம் செய்து கொண்டும் இருந்த ஒரு அக்காவை என் வாழ்நாளில் என்னால் மறக்கவே முடியாது. அவர் கொஞ்சம் மாநிறம். ஆனால், அவருடைய சிரிப்பு அத்தனை உண்மையானதாக இருக்கும். அதுவே அவருக்கு அழகாகவும்கூட இருந்திருக்கலாம். எது அழகு எது அழகில்லை என முடிவு செய்ய நாம் யார்? ஆனால், அந்த அக்காள் படித்து முடித்துவிட்டு வேலைக்கு ஏதும் போகாமல் வீட்டிலேயேதான் இருந்தார். நான் அவ்வீட்டிற்கு அவருடைய தம்பியுடன் விளையாடுவதற்காகச் செல்வேன். நாள் முழுக்க அந்த அக்கா அறையில் இருக்கும் கண்ணாடி முன் தான் அமர்ந்திருப்பார். அவரிடம் நிறைய அலங்காரப் பொருட்கள் இருக்கும். தொடர்ந்து தன் முகத்தை அலங்கரித்துக் கொண்டே இருப்பார். முகப்பூச்சு அவர் முகத்தில் மினுமினுத்துக் கொண்டே இருக்கும். தன்னை முற்றிலுமாக அலங்காரத்தின் வழியாக மாற்ற அவர் முயன்று கொண்டே இருந்தார். அப்பொழுது எனக்கு அது குறித்து எந்தக் கருத்தும் இல்லை. அவர் என்ன ‘மேக்காப் பைத்தியமா?’ என்று மட்டும் கேலி செய்வோம்.

ஆனால், அந்த அலங்காரத்தின் பின்னே எத்தனை ஆழமான கண்ணீர் இருந்திருக்கலாம்? தன்னை யாரோ அழகில்லை என்று சொன்ன வார்த்தைக்காக அவர் பல ஆண்டுகள் அலங்காரத்திலேயே தன்னைத் தொலைத்திருந்தார் என்று பிறகுத்தான் எனக்குத் தெரியும். யார் அழகைத் தீர்மானிப்பது? அதுவரை அழகு குறித்து இச்சமூகத்திற்கு இருந்த பண்பாட்டு மதிப்பீடுகளை, பிறகு உருவான அழகு தொடர்பான கம்பெனிகள் மெல்ல உருகுழைத்து மாற்றியமைக்கின்றன. அழகைத் தீர்மானிப்பதில் இயற்கையோடு மட்டும் உழன்று கொண்டிருந்தவர்கள் , மஞ்சள் அரைத்துப் பூசிக் கொண்டிருந்த பெண்களின் அகங்களில் விகாரமான ஓர் உந்துதலை ஒப்பனைகளின் பால் ஈர்த்துச் சென்றவை பன்னாட்டு அழகியல் வியாபார நிறுவனங்களே என்றும் குறிப்பிடலாம். பின்னர் அலங்காரப் பொருட்களை நம்மிடம் திணித்துவிட்டு ‘சிவப்புத்தான்’ அழகு என்று சொல்லும் முதலீட்டு வியாபார நிறுவனங்களின் உள்ளீடு அழகு தொடர்பான தாகத்தைக் கூட்டியது என்றும் சொல்லலாம்.

யார் அழகை முடிவு செய்வது? செத்த பிணம்கூட அழகாகத்தான் இருக்க வேண்டும் என இச்சமூகம் நம்மைக் கட்டமைத்து வைத்திருக்கிறது. அலங்காரம் நம் வாழ்நாள் முழுவதும் நம்மைத் துரத்திக் கொண்டே இருக்கிறது. முதுமை எய்வதில் நமக்கொரு நடுக்கத்தை அளிக்கிறது. அதனாலேயே பன்னாட்டு நிறுவன்ங்களின் முகப்பூச்சி போன்ற அலங்காரப் பொருட்களின் பின்னே ஓடிக் கொண்டிருக்கிறோம். பிணங்களுக்கு அலங்காரம் செய்யும்போதெல்லாம் பேபி ரோஸ் அழகு என்பதற்கான அர்த்தங்களை விழுங்கி விழுங்கி சலித்திருப்பாள். முகப்பூச்சியின் மீது அவளுக்கொரு தீராத வெறுப்பின் வாசனை உருவாகியிருக்கும். அவள் முற்றிலுமாகத் தன்னை ஒப்பனை செய்வதிலிருந்து விலக்கியிருப்பாள். இப்படி அக்கதைக்குள் நுழைந்து பல கதவுகளைத் திறக்கிறேன். எல்லாமே அழகு என்பது என்ன எனும் வினாவை நோக்கியே என்னை இழுத்துச் செல்கின்றன.

புபென் கக்கரின் சிறுகதை

புபென் கக்கர் 1934 தொடங்கி 2003 வரை ஓவியத் துறையிலும் இலக்கியத்திலும் தனக்கான ஆழமான அடையாளங்களைப் பதித்த குஜராத் எழுத்தாளர். மும்பையின் நடுத்தர வர்க்கக் குஜராத் வாழ்க்கையை அம்மொழியிலேயே ஒலித்தக் குரல். மும்பையின்  சிவப்பு விளக்குப் பகுதியான ஃபாக்லண்ட் சாலையை அடுத்த கேட்வாடித் தெருவில் அவரது இல்லம் இருந்ததாகவும் அவருடைய இளமை பருவம் தொடங்கி இறக்கும்வரை அதுதான் அவருடைய வாழ்விடமாக இருந்ததாகவும் எம்.ஜி சுரேஸ் குறிப்பிடுகிறார். அவ்வாழ்க்கைக்குள் மெல்ல மேற்கத்திய பொருட்கள் நுழைந்து இந்தியத் தன்மையுடன் வாழ்ந்த அவர்களின் வாழ்க்கை எப்படி மாறுபட்டு போனதைப் பற்றி அவருடைய சிறுகதைகள் பேசியிருக்கின்றன. அவற்றுள் குறிப்பிடத்தக்க சிறுகதை ‘போரன் சோப்’ ஆகும். ஒரு மேற்கத்திய சோப் இறுகிபோயிருக்கும் தனக்குள்ளே நசுங்கி குறுத்துப் போயிருக்கும் காமத்தை மீட்பதாக மிகவும் குறியீட்டுத்தன்மையுடன் ஆழமாகப் பேசும் சில கதாபாத்திரங்களை முன்வைத்துப் பேசிய சிறுகதையாகும். உடல் குறித்த இந்தியத் தன்மைகளையும் அதற்குள் அடைப்பட்டுக் கிடக்கும் காமத்தையும் விவரிப்பதாக அக்கதை அமைந்திருக்கும். அதே போல அவருடைய இன்னொரு சிறுகதை பக்கத்து வீட்டுக்காரியிடமிருந்து ஒரு மேற்கத்திய சவர்க்காரத்தை இரவல் வாங்கி அன்றைய நாளில் அக்குடும்பமே அச்சவர்க்காரத்தைப் பயன்படுத்தி முடித்துவிடுகிறார்கள் என்று இருக்கும். இந்திய வாழ்வியலில் ஏற்படும் சிறு கலப்புகள் எப்படி அவர்களின் அகத்திற்குள் முரண்களை உருவாக்குகிறது என்பதை மிக விரிவாகப் பேசுபவை புபென் கக்கரின் சிறுகதைகள் ஆகும்.

அதுபோன்ற ஒரு வித்தியாசமான கதைக்களத்தைத் தன் படைப்பில் எடுத்திருக்கும் சித்ரா அதன் ஆழத்தைத் தேடி இன்னும் பயணிக்க வேண்டும். ஒரு பொதுமனிதன் சந்திக்க மறுக்கும் மிகவும் குரூரமான அழகியல் தொடர்பான முகங்களைக் காட்டக்கூடிய எழுத்து சித்ராவிடம் உள்ளதாக இந்தவொரு சிறுகதையை முன்வைத்தே அறிய முடிகிறது. அதன் ஆழத்தை அவர் இன்னும் விரிவாக்கிக் கொள்ளும்போது சிங்கை நவீனப் படைப்பாளிகளில் இலக்கியத் தளத்தில் புதிய பாதிப்புகளையும் பாய்ச்சல்களையும் உருவாக்கும் இடத்தில் மிளிர்வார் என்று உறுதியாகச் சொல்ல முடியும்.

பேபி ரோஸ் ஒரு கனவு காண்கிறாள். அக்கனவில் அவளுடைய அம்மா முகப்பூச்சியைப் பூசிக் கொண்டிருப்பதைப் போல தெரிகிறது. சட்டென கனவிலிருந்து அதிர்ச்சியுடன் மீள்கிறாள். இவ்வரி எனக்குள் ஒரு நடுக்கத்தை உண்டாக்கியது. இதுபோன்ற ஆழம் கதையில் இன்னும் குவிந்திருந்தால் இச்சிறுகதை வேறொரு பரிணாமத்தை எட்டியிருக்கும்.

மக்களுக்காகவே எழுதப்படுவதுதான் இலக்கியம் ஆகவே அது மக்களை அடைய வேண்டும் என்ற திவீரத்தை நவீன இலக்கியம் முன்னெடுத்ததால்தான் நவீன இலக்கியத்தில் சீர்த்திருத்தம், மக்களை இயக்கமாக மாற்றி முன்னெடுத்தல், அறிவுரைத்தல் போன்ற விசயங்கள் செய்யுளிலிருந்து விடுப்பட்டு உரைநடைக்குள் வெளிப்பட்டது. ஆனால், பின்நவீனம் நவீன முயற்களை மறுத்து, அது உருவாக்கும் மையவாதக் கருத்துகளையும் மறுத்து, மக்கள் வாழும் அடித்தட்டு நிலைகளையும், உள்முரண்களையும், அகச்சிக்கல்களையும் என அனைத்தையுமே இலக்கியத்திற்குள் உட்படுத்தியது. சித்ராவின் இச்சிறுகதை அவ்வகையில் அது பேச விளைந்திருக்கும் வாழ்க்கையின் பொருட்டு, பின்நவீன சிறுகதைக்கான அம்சங்கள் உடைய படைப்பாக முன்வைக்கலாம். ஒப்பனைகளின் அபத்தங்களைப் பேசும் ஒப்பனையற்ற வாழ்க்கை.

கே.பாலமுருகன்

அக்கரைப் பச்சை – 2 (சிங்கப்பூர் சிறுகதைகள் விமர்சனம்) ராம் சந்தரின் அப்புவின் கனவு: கனவுகள் கண்டு சாகும் இயந்திரங்கள்

கனவுகள் பற்றி எனக்கு எப்பொழுதும் ஒரு வியப்புண்டு. சிறுவயதில் கனவுகள் வந்துவிடும் என்கிற பயத்தில் கண்களை மூடாமல் வீட்டுத் தகரத்தையே பார்த்துக் கொண்டிருப்பேன். கனவு நிழல் போல என் உறக்கத்தைப் பின் தொடர்ந்து கொண்டே இருக்கும். எப்பொழுது அது உறக்கத்தை விழுங்கி நம் இரவை ஆட்கொள்ளும் என இன்றளவும் யாராலும் கணிக்க இயலாத விந்தையே கனவு. சிக்மெண்ட் ப்ராய்ட் கனவுகள் பற்றி சொல்லும் விளக்கம் விரிவானவை. அதுவரை மாயைப் போல தோற்றமளிக்கும் கனவுகள் பற்றி உளவியல் ரீதியில் பற்பல அர்த்தங்களை ப்ராய்டு கட்டமைக்கிறார். நடக்கக்கூடாதென்று நாம் நினைப்பவற்றை ஆழ்மனம் நடந்ததைப் போல கனவில் நிகழ்த்திக் காட்டும் வித்தையை யார் அதற்குக் கற்றுக் கொடுத்தது எனத் தெரியவில்லை. இதுவொரு உள்முரண் என்றே சொல்ல வேண்டும்.

நமக்கு மரணத்தையொட்டி தீராத பயமொன்று உள்ளுக்குள் வளர்ந்துகொண்டே இருக்கிறது. ஆகவேதான், ஆழ்மனம் அப்பயத்திலிருந்து நம்மை நீக்கவோ அல்லது பழக்கப்படுத்தவோ நாமும் நம்மைச் சார்ந்தவர்களும் இறப்பதைப் போன்று கனவுகளின் வழியாகக் காட்டிக் கொண்டே இருக்கும். இப்படிக் கனவுகளுக்குப் பல விளக்கங்களும் சொல்லப்பட்டாலும் இலக்கியம் கனவென்பதை ஒரு குறியீடாகவே பாவித்து வருகிறது. பெரும்பான்மையான எழுத்தாளர்கள் கனவுகள் பற்றி பல சித்திரங்களை உருவாக்கிச் சென்றுள்ளார்கள்.

கதைக்குள்ளிருந்து கதை

ஜெர்மானிய எழுத்தாளரான பிரெட்ரிக் சில்லர் அவர்களின் சில கவிதைகள் ஜெர்மானிய பண்பாட்டுச் சிதைவுகளை அச்சமூகத்தில் பிறந்த சிறுவன் கனவு காண்பதாக அமைந்திருக்கும். அக்கனவு என்பது நிஜமான ஜெர்மானிய பண்பாட்டு அழிவுகளை முன்பே அறிவிக்கும் பொருட்டு ஓர் எதிர்க்காலக் குரலாக ஒலிக்கும். ராம் சந்தரின் இச்சிறுகதை மாய யதார்த்தவாதமாகக் கதைக்குள்ளிருந்து ஒரு வரலாற்று பின்னடைவை ஓங்கி ஒலிக்கும் களமாகவும் ஒரு வாசகன் அடையக்கூடும். இக்கதையில் வரும் அப்பு பற்பல அதிசய கனவுகளுடன் இருக்கும் சிறுவனாகவும் தனக்கென ஒரு விந்தை உலகைக் கற்பனை செய்தப்படியே இருப்பதாகவும் முதலில் தோன்றும். அடுத்த கனமே வெள்ளை யானையில் வருபவர் முன்னோர்களின் கனவுகள் கூண்டுக்குள் அடைக்கப்பட்டுப் பராமரிகப்படுவது அப்புவிடம் காட்டுவதாக கதை நகரும். இதுவொரு அரசியல் வெளிப்பாடு என்றும் உருவகப்படுத்திக் கொள்ளலாம். முன்னோர்கள் வெறும் கனவு காண்பவர்களாக மட்டுமே இருந்திருக்கிறார்கள். அவர்களின் மறைவிற்குப் பின்னர் அவர்களுடைய கனவுகள் கனவுகளாகவே அடைப்பட்டுக் கிடப்பது ஒரு சமூகத்தின் மிகுந்த கவலைக்குரிய பின்னடைவு என்பதே கதைக்குள் இருக்கும் கதையிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது.

 

அப்புவின் கனவில் எல்லாமும் குதர்க்கமாக நிஜ உலகிலிருந்து விலகிச் செல்லும் மாயையைப் போல தோற்றமளிக்கின்றன. ஒட்டகசிவிங்கி முகம் கொண்ட கழுகின் தலை என்கிற வரி கதைக்குள் வருகிற இடம் இக்கதைக்கான ஒரு சாவி என்று நினைக்கிறேன். நாம் காணும் கனவுகள் அப்படித்தான் குதர்க்கமானது. உலகம் நம்மை நம்ப வைத்திருக்கும் சிந்தைகளுக்கு அப்பாற்பட்டதாக நம் கனவுகள் இவ்வுலகத்தால், ஆள்பவர்களால் தொடர்ந்து சீர்குலைக்கப்பட்டு சிதைக்கப்பட்டு உறக்கத்தில் வரும் கனவெனும் கூண்டுக்குள் அடைக்கப்படுகிறது. இப்படி நாம் காணும் அனைத்துக் கனவுகளும் கனவுகளாகவே நம் மனக்குகையில் சிறைப்படுத்தப்படுகிறது. ஒரு சிறுபான்மை சமூகத்தின் உச்சமான வெற்றியும் தோல்வியும் இதுவே. கனவுகளை உற்பத்தி செய்து அதைக் கனவுகளாகவே கொன்றுவிடும் சாபம். அச்சிறுபான்மை சமூகத்திலிருந்து வரும் ஒரு சிறுவனின் ஊடாக தன் முன்னோர்களின் கனவுகள் காட்டின் நடுவே அடைக்கப்பட்டு எதற்குமே அர்த்தமற்று பொருள்காட்சியமாக மட்டுமே காலம் முழுவதும் நினைவுகளில் நிலைத்து வருகிறது என்கிற உண்மையை மாய யதார்த்த வலைக்குள் பின்னுகிறார் ராம் சந்தர்.

‘கனவு அறைகள்’ என்கிற ஒரு மொழிப்பெயர்ப்பு சிறுகதை படித்ததாக ஞாபகம். தன் வீட்டுக்குள்ளிருந்து உறங்கி எழுந்திருக்கும் ஒருவன், அவன் வீட்டில் பல அறைகள் தோன்றியிருப்பதைக் காண்கிறான். ஒவ்வொரு அறைக்கதவையும் திறக்கும்போது அதனுள் தன்னுடைய நிறைவேறாமல்போன கனவுகள் இருக்கின்றன. இப்படியாக வீடு முழுவதும் அறைகளாகி அவனால் வீட்டை விட்டு வெளியேற முடியாமலேயே கதை முடிவடைந்துவிடும். ஒவ்வொரு மனிதனின் நினைவடுக்குகளிலும் நிறைவேறாத பல கனவுகள் அவனைச் சூழந்துள்ளன. அக்கனவுகளை நோக்கி அவன் உள்மனம் திரும்பும்போது வாழ்க்கையும் சமூகமும் வரலாறும் தொழில்முறையில் கனவுகளை உற்பத்தி செய்யவே நம்மைத் தூண்டிக் கொண்டிருக்கிறன எனத் தெரியும். அப்புவின் கனவு என்கிற சிறுகதையும் தொழில்முறையில் கனவுகளை உற்பத்திப்பதைக் கட்டாயமாக்கிக் காட்டுகிறது. வெள்ளை யானையில் வருபவர் தங்களின் கனவு மிருகத்தைக் காட்டும்படி அனைவரையும் நிர்பந்திக்கிறார். ஆனால், அப்புவின் மிருகம் மட்டும் அவர்களுடைய கண்களுக்குப் புலப்படவில்லை.

அப்பு என்கிற விந்தை

அப்பு எனக்கு மிகநெருக்கமான பெயர் அல்லது உருவகம் என்று சொல்லலாம். அப்பு என்கிற பெயரைக் கொண்டு சிறார் உலகை விவரிக்கும் நிறைய கவிதைகள் எழுதியுள்ளேன். ராம் சந்தரின் இச்சிறுகதை தலைப்பிலிருந்தே ஒட்டிக் கொள்கிறது. அதே போல சிறார்களின் விந்தையான உலகைக் காட்டும் பொருட்டு ‘பவித்திராவின் ஓவியக் குவளைக்குள்ளிருந்து’ என்கிற ஒரு சிறுகதையும் எழுதியுள்ளேன். அக்கதை நாம் நம்ப மறுக்கும் பல விந்தைகள் அடங்கியதுதான் சிறுவர்களின் உலகம் எனக் காட்டிச் செல்லும். அப்புவின் கனவு என்பதும் இதுவரை இச்சமூகம் கண்ட கனவுகளிலிருந்து கொஞ்சம் மாறுப்பட்டவையாக யாரிடமும் சிக்காமல் நகர்ந்து ஒளிந்து மறைகிறது. ஆனால் யாரினாலும் அதனை இவ்வுலகத்தின் கண் கொண்டு தரிசிக்க முடியாமல் அக்கனவு மீண்டும் அழிந்துவிடுகிறது.

 

இதே கதையில் ஒரு கனவு எப்படி அழிகிறது என்பதையும் ராம் காட்டி தன் சிறுகதையை முடிக்கும் இடம் முக்கியமானதாகிறது. அவன் உருவாக்கி வைத்திருக்கும் கனவு யாரினாலும் அறியப்பட முடியாமல் போய்விடுவது எத்தனை பெரிய இழப்பு? இன்று பலருடைய கனவுகளை நாம் மதிப்பதேயில்லை. பலருடைய கனவுகள் அதிகார வர்க்கத்தால் மிதிக்கவும்படுகின்றன. அப்பு கையில் இருந்த அத்தவளை மண்ணுக்குள் குதித்து மறைகிறது. கனவு அவ்விடத்தில் களைந்துவிடுகிறது. மீண்டும் அடுத்த கனவிற்காக உடனே உறக்கம் வந்துவிடுகிறது. அவ்வரிகளைப் படிக்கும்போது அச்சம் கூடுகிறது. ஒரு கனவு அழிந்தால் இன்னொரு கனவுக்கு மட்டுமே இவ்வாழ்க்கை நம்மைப் பழக்கப்படுத்தி வைத்திருக்கிறது. கனவுகள் அழிக்கப்படுவது தெரியாமல் நாமும் அடுத்த கனவு காணத் தயாராகும் இயந்திரம் போல ஆகிவிட்டோம் என்கிற அச்ச உணர்வை இக்கதைக் கொஞ்சம்கூட காத்திரமில்லாமல் எளிய வார்த்தை மாயங்களின் வழியாக மிக முக்கியமான அரசியலை முன்னிறுத்திச் செல்கிறது.

விந்தையிலும் விந்தை

ஒரு சிறுகதை பற்பல பாதைகளின் வழியாக அடைந்திருக்கும் எல்லையை எந்தப் பாதையினூடாக நாம் சென்றடைய போகிறோம் என்கிற ஆச்சர்யம் வாசகனாலே அறிந்து கொள்ள முடியாத அதிசயமாகும். ஒருவேளை அப்புவின் கனவில் நான் கண்டது இதுவாக மட்டும் இருக்காது. ஏதோ ஒரு கதவை நான் திறக்காமல்கூட போயிருக்கலாம். ஆனால், அக்கதவும் இன்னொரு வாசகனால் திறக்கப்பட வாய்ப்புண்டு. அப்பொழுது இக்கதையின் இன்னொரு முகம் கண்டுபிடிக்கப்படலாம். அத்தகையதொரு மாயத் தளத்தில் இக்கதையை ராம் சாமர்த்தியமாகப் புனைந்துள்ளார். கதைக்குள் கனவு மட்டுமே ஒரு நூழிலையில் பயணிக்கிறது. அதனைப் பிடித்துக் கொண்டு கதைக்குள் பயணிக்கும் நமக்கும் ஒரு கனவு வருகிறது. அக்கனவிலிருந்து இன்னொரு மாயக் கரத்தைப் பற்றி ஒரு வெள்ளை யானையின் பின்னால் போகக்கூடும்.

 

கதையின் மற்ற கூறுகள்
சிறுகதையின் மொழி, ராம் சந்தருக்கு மிகவும் அதிசயமாக வாய்த்திருக்கிறது. அவருடைய வேறு சில சிறுகதைகளையும் வாசிக்க நேர்ந்தால் மட்டுமே உறுதியான ஒரு புரிதலுக்குள் வர முடியும் என நினைக்கிறேன். குழந்தையின் கையில் கிடைத்திருக்கும் களிமண்ணைப் போல அதன் வழியாகப் பல உருவங்களை இயற்றியபடியே செல்லும் வித்தையான மொழியை இக்கதையில் கையாண்டுள்ளார். மாய யதார்த்தவாதக் கதைகளில் இத்தகைய குறியீட்டு மொழிகளே இலாவகமாகக் கதைக்கு உயிரளிக்கக்கூடியதாக இருக்கும். எம்.ஜி சுரேஷ் அவர்களின் சில சிறுகதைகளில் இத்தகைய மொழிக்கூறுகளையும் வாசித்திருக்கலாம். அவருடைய ‘கனவுலகவாசியின் நனவுலகக் குறிப்புகள் முதலான சிறுகதைத் தொகுப்பும்’ என்கிற நாவலில் இத்தகைய மொழியை முழுக்க வாசிக்க நேர்ந்த அனுபவத்தால் ராமின் மொழியைச் சுலபமாக உள்வாங்கிக் கொள்ள முடிந்தது. ஆனாலும், இத்தகைய பூடகமான மொழி கொஞ்சம் பிசகினாலும் இறுக்கமாகிவிடும். அதனுள் ஒரு பொதுவாசகனால் நுழைந்து அனுபவிக்க முடியாமல் போய்விடும். ராம் அதனைக் கச்சிதமாகவே பாவித்துள்ளார். இருண்ட மொழி என்று சொல்ல முடியாத அளவிற்கு ஆங்காங்கே கொஞ்சம் வெளிச்சத்தையும் பரப்பியுள்ளார். அதுவேகூட அவருடைய மொழியைக் கொஞ்சம் பலவீனமாக்குவதையும் தவிர்க்க முடியவில்லை. பெரும்பாலும் மாய யதார்த்தவாத/ குறியீடுகளின் வழியாகக் கதைக்களத்தை உருவாக்கி நகர்த்திச் செல்லும் கதைகளுக்கே உரிய மொழிநடை இச்சிறுகதையில் ஓரளவிற்கு மட்டுமே கைக்கூடியுள்ளது.

தன் கதைக்குள் ஒரு கனவை வைத்து அதனுள் வேறொரு கதையை வைக்கும் உத்தி இச்சிறுகதைக்குச் சிறப்பாக அமைந்தாலும் இது யாருக்காகச் சொல்லப்பட்ட கதை என்பதில் குழப்பம் வராமலில்லை. இக்கதையின் மையத்தில் நிழலாடும் இறுக்கங்களை உடைக்கும்போது ராம் மிகுந்த உழைப்பைக் கொடுத்துள்ளார். அதனால்தான் என்னவோ சிறுகதை சிறுவர்களுக்குச் சொல்லப்படுவதைப் போன்ற ஓர் எளிய தோற்றத்தையும் கொண்டிருக்கிறது. ஒரு சமூகத்தின் மிகுந்த வலியைச் சுமந்திருப்பதைப் போன்று கணத்தைக் கொண்டுள்ள சிறுகதை, அதன் கூறுமுறையில் எதையோ இழந்திருப்பதைப் போல ஒரு மாயயையும் உருவாக்காமலில்லை என்றே தோன்றுகிறது. இதனை ஒரு தேர்ந்த வாசக மனநிலையிலிருந்தே பதிவு செய்கிறேன். ராம் இச்சிறுகதையை மேலும் ஆழமாக்கியிருக்க முடியும் என்றும் அதனை மொழியிலும் சிறுகதை கூறுமுறையிலும் கூடுதல் கவனத்தைத் திரட்டும்போது அதற்கான வழியை அவராலேயே கண்டடைய முடியும் என்றும் தோன்றுகிறது.

குறியீடுகளை மொழிப்பெயர்ப்பது

இச்சிறுகதையை வாசிக்கும் பொதுவாசகர்கள் பலரும் கவனச் சிதறலுக்கு ஆளாகி மையத்தைத் தேடி அலைந்து களைத்து மீண்டும் மறுவாசிப்பு செய்து குறியீடுகளை உடைத்து ஒரு உருவகத்தை அடையும் உழைப்பிற்குள்ளாகுவார்கள். அல்லது மறுவாசிப்பு செய்யாமல் கிடைத்ததைக் கொண்டு தனக்கான ஒரு புரிதலை உருவாக்கிக் கொள்வார்கள். அல்லது புரியவில்லை என ஒதுக்கிவிட்டு இது நிஜ உலகைப் பற்றி பேசவில்லை எனப் புறந்தள்ளியும் விடுவார்கள். நிஜ உலகிற்கும் கதைக்கும் நடுவே ராம் ஒரு பாலத்தைப் புதைத்திருக்கிறார். அதனைக் கண்டையை நாம் தடுமாறுவோம் என்கிற தயக்கத்தில் அவரே ஆங்காங்கே வெளிச்சத்தை மெல்ல பரப்பியுள்ளார். இதுபோன்ற கதைகளுக்கே உரிய உழைப்பை அக்கதை வாசகனிடமிருந்து கோரியே தீரும். அதனைப் பற்றி எழுத்தாளன் கவலைப்படத் தேவையில்லை.

வெள்ளை யானை, யானையில் வருபவர், விந்தையான மிருகங்கள், தவளை, கனவுகள் என இக்கதையில் வரும் யாவுமே வெருமனே வரவில்லை. அவை யாவும் குறியீடு என்பதனை ஒரு வாசகன் புரிந்துகொள்ள அவனுக்கு பரந்த வாசிப்பே அவசியம் என நினைக்கிறேன். அதனைப் பற்றி ராம் இக்கதையில் பட்டிருக்கும் அக்கொஞ்சம் கவலைக்கூட அடுத்தமுறை வேண்டாம் என்றே நினைக்கிறேன். குறியீடுகளின் வழியாகப் பயணிக்கும் கதைகளைத் தேர்ந்தெடுக்கும்போதே இது வாசகனுக்குப் புரியாமல் போய்விடுமோ என்கிற தயக்கத்தையும் ஓர் எழுத்தாளன் துறந்துவிட்டால்தான் இவ்வடிவத்திற்கு ஏற்ற சிறுகதை, அதனுடைய கூறுமுறை, அதனுடைய மொழி என்கிற அளவில் ஒரு சிறந்த படைப்பை வழங்கிட முடியும்.

அப்புவின் கனவு இதுபோன்ற ஒரு கதைக்களத்தைத் தேர்ந்தெடுத்து குழந்தைகளின் ஆக்கம் தொலையும் துர்நிகழ்வுகளையும் அதே போல காலம் காலமாகக் கனவுகள் கண்டு பின்னர் மறைந்து, பின்னர் மீண்டும் கனவுகள் காண மட்டுமே வந்து சேரும் அடுத்த தலைமுறை என சில நாடுகளில் வாழும் சிறுபான்மை சமூகத்தின் அவலங்களைச் சொல்ல முனைந்துள்ளது. அதனைக் கொஞ்சும் மொழியில் மிகவும் அழகியல் நிரம்பிய வார்த்தைகளில் அடுக்கிக் காட்டியுள்ளதே இக்கதையின் சிறப்பும்கூட என்று சொல்லலாம்.

இச்சிறுகதை வெறுமனே ஒரே வாசிப்பில் கடந்து விட முடியாத ஒரே காரணத்திற்காக ராமைப் பாராட்டியே ஆக வேண்டும். ராமின் மாயக் கரத்திலிருந்து இன்னும் பல சிறுகதைகளை எதிர்ப்பார்க்கிறேன். அது மாய யதார்த்தவாத கதையாக இருந்தாலும், யதார்த்தக் கதையாக இருந்தாலும், சிங்கப்பூரின் புதிய கதைச் சொல் முறைகள் ராமின் படைப்புகளிலிருந்து இனி வரும் என நம்பலாம்.

  • கே.பாலமுருகன்

அக்கரைப் பச்சை – 1 (சிங்கப்பூர் சிறுகதை விமர்சனம்) அழகுநிலாவின் விரல்

அகநாழிகை இதழின் ஆசிரியரும் அகநாழிகை பதிப்பகத்தின் பதிப்பாளருமான எழுத்தாளர் பொன். வாசுதேவன் அவர்கள் ஜூலை 2017ஆம் ஆண்டில் சிங்கப்பூர் தமிழ்ச் சிறுகதைகள் சிலவற்றை ‘அக்கரைப் பச்சை’ என்கிற தலைப்பில் தொகுத்து வெளியீட்டுள்ளார். தற்சமயம் சிங்கையில் தீவிரமாக எழுதி வரும் நண்பர்களின் பலரின் சிறுகதைகளைத் தொகுப்பில் கண்டதும் ஆர்வம் மேலிட்டது. சமீபத்தில் சிங்கையில் வெளிவந்த இத்தொகுப்பின் வழியாக சிங்கப்பூர் நவீனத் தமிழ்ச் சிறுகதைகள் குறித்த ஒரு விரிவான விமர்சனக் கருத்தாக்கத்தை உருவாக்கிக் கொள்ள முடியும் என நம்புகிறேன். ஒரு காலக்கட்டத்தில் ஒரு நாட்டில் வெளிவரும் இதுபோன்ற தொகுப்புகள் அக்காலக்கட்டத்தின் இலக்கியத் திறனாய்வுக்கும் விமர்சனங்களுக்கும் ஏற்புடையதாகும். குறிப்பாக, அந்நாட்டு இலக்கியப் படைப்புகளை அணுக நினைக்கும் விமர்சகர்களுக்குத் தொகுப்புகளே சிறந்த தடத்தைக் காட்டக்கூடியதாகும். ஆகவே, தொகுப்பாளன் என்பவர் இலக்கியத்தை மட்டும் தொகுக்கவில்லை, அந்நிலத்தின் இலக்கிய நகர்ச்சியையும் அடைவையும் சேர்த்தே தொகுக்கும் பணியை ஏற்றுக்கொள்கிறார் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். தொகுப்பது என்பது கவனத்தோடும் அக்கறையோடும் செய்ய வேண்டிய பணியாகும். இத்தொகுப்பில் உள்ள சிறுகதைகள் ஒவ்வொன்றையும் வாசகப் பார்வையுடன் அணுகி விமர்சிக்கும் பொறுப்பையும் ஏற்றுக் கொள்வதன் வழியாக ஒரு தொகுப்பின் அவசியத்தையும் கருத்துரைக்க வாய்ப்புக் கிட்டும்.

ஒரு நிலத்தின் இலக்கியம் அதே நிலத்தில் எப்படிக் காலாவதியாகிறது? இச்சிந்தனை பலருக்கும் எழுவதில்லை. விமர்சகர்களும் ஒரு சிறுகதை வெளிவரும் காலக்கட்டத்தைப் பொருட்படுத்தத் தவறுவதால் அதுபோன்ற விமர்சனங்கள் தொடர்பாக அவநம்பிக்கைகளும் தோன்றுகின்றன. எடுத்துக்காட்டாக, 1990ஆம் ஆண்டு எழுதப்பட்ட ஒரு சிறுகதையை உருவி எடுத்து 2017ஆம் ஆண்டில் வைத்து இதெல்லாம் என்ன சிறுகதை? கொஞ்சம்கூட நவீனத்தன்மைகள் வெளிப்படவில்லை என நாம் எவ்வளவுத்தான் கதறினாலும், 1990ஆம் ஆண்டில் அந்நிலத்தில் நவீன இலக்கியம் குறித்தான பிரக்ஞை, வாசிப்பு போன்றவையின் தாக்கத்தையும் இருப்பையும் ஒரு விமர்சகன் கவனித்தில் கொள்ள வேண்டியப் பொறுப்புடையவனாகின்றான்.

அடுத்து, 2017ஆம் ஆண்டில் நவீன இலக்கியம் தொடர்பான அத்தனை வெளிபாடுகளும், ஆழமான வாசிப்பும் அந்நிலத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கையில் அதே நிலத்தில் வாழும் ஓர் எழுத்தாளன் எந்தவித புறத்தாக்கங்களுக்கும் அகத்தாக்கங்களுக்கும் ஆளாமல் மூளையைக் கழற்றி ஒரு நூற்றாண்டுக்கு முன்புள்ள இலக்கியப் போக்கிலேயே தக்க வைத்துவிட்டு, எழுத பேனாவை எடுக்கும்போதே அவ்விலக்கியம் காலாவதியாகிவிடுகிறது என்பதனை விமர்சகர்கள் முதன்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். ஓர் இலக்கியம் ஏன் பழமையாகின்றது என்கிற கேள்விக்கும் அதே பதில்தான். பக்கத்து வீட்டில் இருப்பவன் ஜெயமோகன், மாப்பாஸன் என வாசிக்கையில், அடுத்த வீட்டில் இருப்பவன் ‘அட்டா பொன்னியின் செல்வன் தான் நான் கடைசியாக வாசித்த மிகச் சிறந்த எழுத்தாளர்’ என்று சொல்லிவிட்டு அவர் ஒரு சிறுகதை எழுதினால் உங்களுக்கு என்ன தோன்றும்?

இன்னொரு வகையினரையும் நாம் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. சமீபத்தில் வெளிவந்த புதிய படைப்புகள்வரை வாசித்து அதனை விமர்சிக்கக்கூடியவர்களாக இருப்பினும் அவர்களின் எழுத்தில் அதற்குரிய தாக்கத்தையும் மாற்றத்தையும் காண முடியாது. ஆகவே, இவ்விருவகையினரும் ஒரு நிலத்தின் இலக்கியத்தை இன்னமும் காலாவதியான புட்டியில் அடைத்துப் பாதுகாத்து வருபவர்கள் என்று சொல்லலாம். அவர்கள் ஆபத்தானவர்கள் அல்லர். இலக்கியத்தை நேசிப்பவர்களாகவும் இலக்கியத்தின் மீது பற்றுடையவர்களாகவும் திகழ்வார்கள். ஆனால், அடைப்பட்ட அப்புட்டியலைப் பார்த்துப் பழம்பெருமைகளில் குளிர்காய்ந்தே காலத்தை நகர்த்துவார்கள் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். இதனால் இலக்கியத்தின் இருப்பிடம் மாறாது. அங்கேயே ஒரு கோட்டையைக் கட்டி மாலை மாட்டிவிட வேண்டியதுதான். பிற்காலத்தில் மணிமன்றம் ஆகிவிடும். நம் இலக்கிய நோக்கம் அதுவல்ல. நகர்ச்சியும் எழுச்சியும் கொண்டவையாக, நீரோட்டத்தைவிட ஆக்ரோஷம் கொண்ட காட்டாறைப் போல காலத்தை விரட்டிக் கொண்டு ஓட வேண்டும்.

அழகுநிலா நல்ல சிறுகதை எழுத்தாளராக உருவாகிக் கொண்டு வரும் இக்காலக்கட்டத்தில் எல்லோரையும் போல அவரை வெறுமனே புழக வேண்டும் என்பதற்காக இவ்விமர்சனத்தை நான் முன்னெடுக்கவில்லை. நீரின் மேற்பரப்பில் மிதந்து கொண்டிருக்கும் குச்சிகள், இலைகளைக் களைந்து ஆழத்தின் தெளிவைக் காட்ட வேண்டும் என்பதே நோக்கமாகும். இவ்விமர்சனம் அவரின் ஒட்டு மொத்த கதைகளின் மீதானது அல்ல என்பதை ஆரம்பத்திலேயே தெளிவுப்படுத்திக் கொள்கிறேன். அக்கரைப் பச்சையை நோக்கி மட்டுமே இக்கொடி பச்சை ஊர்கிறது.

அழகுநிலாவின் இச்சிறுகதை எனக்கு இருவகையான பார்வைகளை உண்டாக்குகிறது. ஒன்று, அவர் இச்சிறுகதையில் பேசும் கதைக்களமும் ஆனந்தி அக்காவைப் பற்றிய சித்திரங்களும் அவரைச் சுற்றி மேலெழும் வாழ்க்கையையும் பலமுறை பலகதைகளில் வாசித்தவையாக முதல் வாசிப்பிலேயே தோன்றியது. இலக்கிய வாசகனாகப் படிக்கத் தொடங்கும்போதே எனக்கு மனச்சோர்வு உண்டாகிவிடுகிறது. ‘நொஸ்தோலோஜியா’ என்கிற பிரிவேக்க உணர்விலிருந்து தொடங்கும் இச்சிறுகதை ஆனந்தி அக்காவின் மீது முழுமையாகக் குவிகிறது. ஓர் எழுத்தாளனாக இருந்து இக்கதையை நான் சிந்திக்கவில்லை. அப்படிச் சிந்தித்தால் இக்கதையை என் பாணியில் எப்படி எழுதியிருக்கலாம் என்பதிலிருந்து விமர்சனம் தடம்புரண்டுவிடும். நான் முழுக்க முழுக்க வாசிப்பை ஆதாரமாகக் கொண்டு இலக்கியத்திற்குள் உலாவுபவன். ஆகையால், வாசகன் என்கிற நிலையிலிருந்தே இத்தொகுப்பிலுள்ள அழகுநிலாவின் விரல் சிறுகதையை அணுகியிருந்தேன்.

‘அது சிரிக்கறப்ப எங்க குலசாமி புள்ளபூச்சி அம்மன் செல மாதிரியே இருக்கும்’ என்ற வரியைப் படிக்கும்போதே மனம் நெருடுவதைத் தவிர்க்க முடியவில்லை. இவ்வரியில் இருக்கும் அத்தனை சொற்களும் பழமையானவை. சினிமாக்களில்கூட இதுபோன்ற சொற்களை நாம் கேட்டிருக்கக்கூடும். ஒரு நவீன எழுத்தாளர் முதலில் தவிர்க்க வேண்டியவையாக இதுபோன்ற ‘கிளிஷேவான’ உவமைகள்தான் என்று நினைக்கிறேன். இதே அழகுநிலாவின் களம் இதழில் வெளிவந்த ‘விலக்கு’ சிறுகதை முற்றிலுமாக நவீன சமூகத்தின் குரல்களைப் பதிவு செய்வதாக அமைந்திருந்தன. அழகுநிலாவின் சிறுகதைகள் இதுபோன்று அல்லது இதைவிடவும் இன்னும் முன்னகர்ந்து சமூகத்தின் ஆழ்மனத்தின் நுண்ணிய குரல்களைப் பதிவு செய்வதாக அமைதல் வேண்டும் என்றே வாசிக்கும்போது தோன்றியது. சிங்கையின் பலத்தரப்பட்ட மனிதக் குரல்களில் சிக்கிக் கிடக்கும் ஈரங்களைப் பதிவு செய்யக்கூடிய ஆற்றல்மிக்க எழுத்துநடையும் கூர்மையும் கணிவும் நிலாவிடமுண்டு.

இதே சிறுகதையில் மேலத்தெரு ஆளுங்க, கீழத்தெரு ஆளுங்க, தராதாரம் என இன்னும் சில குறியீட்டு சொற்களின் வழியாக சாதி வேறுபாட்டுணர்வு மனித மனங்களில் மாறாமல் புதைந்திருப்பதையும் அழகுநிலா காட்டுகிறார். கதையில் சட்டென திறக்கும் இவ்விடம் கதைக்குப் புத்துயிர் வழங்குகிறது. கதை எதை நோக்கி நகர்கிறது என்கிற போக்கிடம் தெரியத் துவங்கியது. கீழ்த்தெரு, மேல்த்தெரு என்கிற பிரிவினை மலேசியத் தோட்டப்புறங்களிலும் இருந்திருப்பதை சீ.முத்துசாமியின் ‘மண் புழுக்கள்’ நாவலை வாசிக்கும்போது உறுதிப்படுத்த முடியும். இதையே மலேசியாவில் கீழ் லயம், மேல் லயம் என்று சொல்வார்கள். மேல் லயத்தில் உள்ளவர்கள் இச்சாதி பிரிவினர் என்றும் கீழ் லயத்தில் வாழ்பவர்கள் சாதியில் குறைந்தவர்கள் என்றும் நாட்டுக்குள் கொண்டு வரப்படும்போதே ஏற்கனவே அவர்களுக்குள் இருந்த சாதி உணர்வுகள் தக்க வைக்கப்பட்டிருப்பது தெரிகிறது. இதனால் ஏற்படும் சிக்கல், பிரிவினைகள், பிரிவினை தொடர்பான மாற்றங்கள், சாதியால் உண்டாகும் கலவரங்கள் என பற்பல சிறுகதைகள், நாவல்களில் சில பகுதிகள் என பேசப்பட்டுள்ளன.

இருப்பினும் இச்சிறுகதை எடுத்துக் கையாண்டிருக்கும் சாதி தொடர்பான அவதானிப்புகளிலும் ‘சொல்லியதை மீண்டும் சொல்லல்’ போன்ற உணர்வே மேலிடுகிறது. சாதி விட்டு சாதி திருமணம் செய்து கொண்டு ஊரைவிட்டு ஓடி, பின்னர் ஏமாற்றப்பட்டு அப்பெண் ஊரின் எல்லையில் தனிமையில் வாழ்ந்து சிரமப்படுவது என மீண்டும் மீண்டும் கேட்ட, பார்த்த, படித்த ஒன்றாகவே இருக்கின்றன. இப்படிக் கதைநெடுக இதுபோன்ற எண்ணங்கள் வந்து குவிகின்றன. அழகுநிலா இதனை ஒரு சவாலாகக் கொண்டு களைய வேண்டும். இமையம் எழுதிய ‘பெத்தவன்’ சிறுகதையும் இதுபோன்ற சாதி தொடர்பான சிக்கலை மையமாகப் பேசியது. ஆனால், அக்கதை கூறுமுறையிலும், வடிவத்திலும், மொழியிலும் மாறுப்பட்டிருந்தது.

இச்சிறுகதையின் கடைசி காட்சி மிக முக்கியமானவை. அக்கடைசி காட்சியினாலேயே இச்சிறுகதை நிற்கிறது என்று சொல்லலாம். அதற்கு முந்தைய வாசிப்புவரை ஏதோ பழைய சிறுகதையை வாசித்துக் கொண்டிருக்கிறோம் என்று தோன்றும் உணர்வைத் தடுக்க முடியாமல் தடுமாறும்போது அக்கடைசி காட்சியும் முடிவும் கொஞ்சம் தெம்பை அளிக்கிறது. ஒரு சிறுகதை முடியும் புள்ளியில் தன்னை மீளுருவாக்கம் செய்து கொள்ளும் வித்தையை அழகுநிலா நன்கு அறிந்துள்ளார். பலரின் சிறுகதைகள் முடிவினாலேயே புறந்தள்ளப்பட்டுள்ளன. அழகுநிலாவின் விரல் சிறுகதை அதன் முடிவினாலேயே மனத்தில் ஒரு சிறு அசைவை உண்டாக்கிச் செல்கிறது. ஓர் ஆக்கத்தின் அழகு இதுவாகக்கூட இருக்கலாம்.

விரல் என்பதே இங்குச் சிறுமையில் மின்னும் ஒரு துளி வெளிச்சம் என்று அக்கடைசி காட்சியினூடாக உருவகித்துக் கொள்ளலாம். அதே முடிவைக் கொண்டு கீழ்த்தெரு மக்கள் ஒன்றும் பயனற்ற எலும்பற்ற வெறும் சதை பிண்டமாக ஆறாம் விரலாக வாழ்கிறார்கள் என்றும் ஒரு வாசகன் புரிதலை ஏற்படுத்திக் கொள்ளலாம். இப்படிப் பல திறப்புகளின் முன்னிறுத்தும் சாத்தியம் கொண்ட சிறுகதையின் முடிவுக்காக விரல் சிறுகதை குறிப்பிடத்தக்க எளிய சிறுகதையாக வாசிப்பிற்கு முன்னிறுத்தலாம். ஆனாலும், மொழி, கதைக்களம், அதனை முன்னெடுக்கும் விதம், சொற்கள் என இன்னும் பல வகைகளில் அழகுநிலா இச்சிறுகதையைச் செம்மைப்படுத்த வேண்டியக் கடப்பாட்டையும் கொண்டுள்ளார்.

அழகுநிலாவின் விரல் அத்தனை எளிதில் சமரசமாகக்கூடியதல்ல. உமது விரல்கள் இன்னும் பல ஆழமான, காலத்தால் அழியவே முடியாத பல ஆக்கங்களைத் தரவல்லன. அழகுநிலாவின் இதற்கு முந்தைய பல சிறுகதைகள் தரமானவையும் உள்ளன என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். இவ்விமர்சனம் ‘விரல்’ சிறுகதையை முன்வைத்து மட்டுமே.

இப்பொழுது ஒரு சிறுகதையை எழுத பேனாவை எடுக்கும் யாராகிலும் நமக்கு முன்னே பல்லாயிரம் கோடி கதைகள் உலகப் பரப்பில் குவிந்து கிடக்கின்றன என்பதை நினைவில் கொண்டிருக்க வேண்டும்.

கே.பாலமுருகன்