சிறுகதை: பூட்டு

சிறியதாக இன்னும் ஒரு பூட்டு போதும் என முடிவாகிவிட்டதும் உடனே ‘ஆ மேங்’ கடைக்கு இறங்கினேன். மூன்றாவது மாடியிலிருந்து கீழே இறங்கி எதிர்ப்புறம் இருக்கும் பெரிய சாலையைக் கடந்துபோனால் இருக்கும் ஓரே ஒட்டுக் கடை அதுதான்.

அப்பாவிற்குப் பூட்டென்றால் மிகவும் பிடிக்கும். சதா காலமும் அவருடைய மோட்டார் வண்டியிலும் சிறிய வைப்புப் பெட்டியிலும் பூட்டுகள் இருக்கும். எதையாவது பூட்டியப்படியேதான் இருப்பார். அம்மாவின் அலமாரி, அவருடைய அலமாரி, ஒரு கதவு உடைந்து பாதி சாய்ந்து கிடக்கும் தாத்தாவின் அலமாரி என ஒரு சமயத்தில் அலமாரிக்கெல்லாம் பூட்டுப் போடுவார். அவசரத்திற்கு எதையுமே அவர் அனுமதியில்லாமல் எடுக்க முடியாது. சாவி தொலைந்த சமயத்தில் அவர்தான் அதனை உடைக்கவும் செய்வார். இழுத்துக் கட்டி ஒட்ட வைத்து மீண்டும் பூட்டுவார்.

மற்ற சில சமயங்களில் சாமி மேடையிலுள்ள இழுவையைப் பூட்டி வைப்பார். அதில் ஊதுபத்திகளும் சூடங்களும் மட்டுமே இருக்கும். கேட்டால் அவர் உழைத்து வாங்கியது எனக் கத்துவார்.

“ஏன்பா எப்பவும் பூட்டிக்கிட்டே இருக்கீங்க?” என ஒருமுறை கேட்டேவிட்டேன்.

அக்கேள்வியைக் கேட்டதற்கு என் வாய்க்கேற்ற ஒரு பூட்டு அவர் கற்பனையில் ஓடிக் கொண்டிருக்கும் என என்னால் அப்பொழுது யூகிக்க முடிந்தது. ஆனால், அவர் அப்படியெல்லாம் செய்யவில்லை. சிறுவயதில் சீனனின் பூட்டுக் கடையில் தான் வேலை செய்ததாகச் சொல்லி சமாளித்தார். சிலநாள் அம்மாவையும் அறைக்குள் வைத்துப் பூட்டிவிடுவார். நாங்கள் கேட்டால் அம்மா தியானத்தில் இருக்கிறார் எனச் சொல்வார். ஒருநாள் கடந்து மறுநாள் இரவுவரை அம்மா அறைக்குள்தான் இருப்பார்.

வீட்டு வாசலுக்கு மட்டும் இரண்டு பூட்டுகள். ஆனால், வீட்டில் அப்படியொன்றும் இல்லை. ஆனாலும், அப்பா இரண்டு பூட்டுகளையும் பூட்டிவிட்டு நான்குமுறையாவது இழுத்துப் பார்ப்பார். அம்மா கேட்கும்போதெல்லாம் ‘ரெடிமெட்டாக’ ஒரு அறையும் காத்திருக்கும். சிலவேளைகளில் கீழே இறங்கி மோட்டார்வரை வந்துவிட்டு, கதவைப் பூட்டிவிட்டோமா எனப் பார்ப்பதற்காக மீண்டும் மேலே ஓடுவார். உலகிலேயே மிகப் பெரிய பூட்டொன்று அப்பொழுது மட்டும் மலேசியாவில் இருந்திருந்தால்  அப்பா அதனைக் கொண்டு ஒட்டு மொத்த வீட்டையே மொத்தமாகப் பூட்டியிருப்பார்.

அம்மா இறந்தவுடன் அப்பா அளவுக்கதிகமாகத் தொல்லையாகியிருந்தார். வீட்டுக்கு வெளியே வந்து தேவையில்லாமல் பக்கத்து வீட்டு ஆட்களையும் எதிரில் வருபவர்களையும் பார்த்துக் கெட்ட வார்த்தையில் கத்துவார். பலமுறை யார் அடித்தது எனத் தெரியாமல் முகத்தில் காயத்துடன் வீட்டுக்கு வெளியில் உள்ள வரந்தாவில் விழுந்து கிடப்பார். வேலை முடிந்து இருண்டு கிடக்கும் வீட்டை நோக்கி வரும் எனக்கு அது அழுத்தத்தையும் வருத்தத்தையும் கலந்து கொடுத்தது.

கடைக்குள் இருந்த ஆ மேங்கின் மகனுக்கு என்னை நன்றாகத் தெரியும். கடைக்குள் நுழைந்ததும் கொஞ்சம் தரமான பூட்டே நல்லது என மனத்தில் தோன்றியது.

“வாவ் செக்காராங் அவாக் சுடா மூலாக்கா இனி மச்சாம்?” என அவன் வேடிக்கையாகக் கேட்டான்.

அப்பாத்தான் ஆ மேங் காலத்திலிருந்தே பூட்டு வாடிக்கையாளர். அவர் வந்தாலே பெரும்பாலான சமயங்களில் வாங்கவில்லை என்றாலும் பூட்டுகளை வெறுமனே தடவிப் பார்த்துவிட்டுப் போவார் என அவர்களுக்குத் தெரியும்.

தரமான கொஞ்சம் சிறியதான ஒரு பூட்டை வாங்கிக் கொண்டு வெளியேறினேன். வீட்டுக்குள் நுழைந்ததும் அப்பா அவருடைய அறையிலுள்ள கிழட்டு கட்டிலில் சுருங்கிக் கிடந்ததைப் பார்த்தேன். எப்பொழுதாவது திடீரென எதையாவது போட்டு உடைப்பார் அல்லது கத்திக் கொண்டே முன்கதவைப் பிடித்து உலுக்குவார். வயதாகிவிட்டால் அப்படித்தான் என அக்கம் பக்கத்தில் சொல்லும்போதெல்லாம் அம்மாவை நினைத்துக் கொள்வேன்.

சில மாதங்களுக்கு முன்புவரை அறையின் மூலையில் கிடந்த தடித்த சங்கிலி இப்பொழுது அங்கே இல்லை. ஆனால், எப்பொழுது அவ்வறைக்குள் நுழைந்தாலும் அது அங்குத்தான் இருப்பதைப் போல தோன்றும். அம்மாவின் இறப்பிற்குப் பிறகு அதை அம்மாவின் அலமாரிக்குக் கீழ் ஒரு திருப்பிடித்த பழைய பூட்டுடன் சேர்த்துக் கண்டெடுத்த போது என் மனம் நடுங்கியது. உடைந்து அன்றையநாள் முழுவதும் அழுதேன்.

‘ஸ்ப்ரீங்’ தொங்கிப் போய் கிடந்த அக்கட்டிலில் படுத்திருந்த அப்பாவைப் பார்த்தேன். அப்பாவிற்கு அப்பொழுது அதிகமாக மூச்சிரைத்தது. வெளியே வைத்திருந்த கஞ்சி தட்டை அவரின் கட்டிலுக்கு அருகில் வைக்கும்போது தொலைப்பேசி மீண்டும் அலறியது. சிங்கப்பூர் நண்பனின் அழைப்பு. ஜொகூரில் தங்கியிருக்கிறான். இன்று முழுவதும் ஐந்துமுறை அழைத்துவிட்டான். அவருடைய இரும்புக் கட்டிலை முடிந்தவரை தள்ளி சுவரினோரம் இருத்தினேன். அப்பொழுதுதான் அது விலகாது. அவர் அறைக்குள் மட்டும் மஞ்சள் நிற சிறிய விளக்கை எரியவிட்டேன். மற்ற இடங்களில் எரிந்து கொண்டிருந்த விளக்குகளை அடைத்துவிட்டேன்.

கடைசியாகச் சன்னலின் வழியாகக் கையைவிட்டு முன்கதவை உள்நோக்கிப் பூட்டினேன். புதியதாக வாங்கி வந்த பூட்டு சட்டென பிடித்துக் கொண்டது. நாற்றம் அடிக்கத் துவங்கும் சமயத்தில் உடைத்தால் உடனே உடைந்து கொள்ளும் அளவிற்காகவாவது அது சிறிய பூட்டாக இருக்க வேண்டும் எனக் கவனமாக இருந்தேன்.

எனக்கு ஒன்பது வயதிருக்கும்போது நான் பார்த்திருக்கிறேன். அது அத்தனை காலங்களுக்குப் பின் ஒருநாள் சட்டென ஞாபகக் கதவைத் தட்டும் என நினைக்கவே இல்லை. அம்மாவின் அறையில் கண்டெடுத்த அந்தக் கறைப்படிந்த சங்கிலியும் திருப்பிடித்தப் பூட்டும் மனத்தில் அப்படியே கிடந்தன. தோளில் தொங்கிக் கொண்டிருந்த துணிப்பை மட்டுமே கணக்க, கீழே இறங்கிக் கொண்டிருந்தேன்.

  • கே.பாலமுருகன்

சிறுகதை: நெடி

shutterstock_124425031

இரயில் கிளம்பும்போது மணி 4.50 இருக்கும். இரயில் பயணம் என நினைக்கும்போது ஒரு வகையான பூரிப்பு சட்டென மனத்திலிருந்து தாவி உடலில் நெளிகிறது. பயணங்களில் கிடைக்கும் ஓர் அர்த்தமற்ற தனிமை விசாரணைகளற்றது. எவ்வித யோசனையுமின்றி வெறுமனே வெளியைப் பார்த்துக் கொண்டிருப்பது ஒரு தவம். காலையில் வேலைக்குப் போனால் மீண்டும் திரும்ப இரவாகும் நாட்களில் அது நமக்கு கிடைக்காது.

‘The next station is Butterworth’

என்னை நான் கவனிக்கும் ஒரு தருணம் எப்பொழுதும் கிடைத்ததில்லை. அவசரமாகத் தலை சீவும்போது கண்ணாடியில் நான் என்னைக் கவனித்ததில்லை. அதுவொரு சடங்கைப் போல பகட்டுமேனியைக் கவனிக்கும் நேரம் மட்டுமே. ஆனால், அன்று முதன்முறையாகப் பல நாட்களுக்குப் பிறகு என்னை நான் உற்றுக் கவனிக்கும் ஓர் இடைநிலைப்பள்ளி மாணவனாக மாறினேன். என் எதிர் நாற்காலியில் வந்தமர்ந்த பெண் யாராக இருக்கும்? அவளை நான் அத்தனை ஆச்சர்யமாகப் பார்ப்பேன் என நினைத்துப் பார்க்கவில்லை. ஒரு பெண்ணை, அதுவும் நமக்கு அறிமுகமில்லாத ஒரு பெண்ணை அப்படி நான் பார்த்ததில்லை. வாய் சொல்லில் இருக்கும் வீரம் ஒரு பெண்ணின் கண்களை எதிர்க்கொள்ளும்போது தாவி குதித்து உள்ளுக்குள் போய் கொடூரமாகச் சுருண்டு படுத்துக்கொள்ளும் இரகசியம் எனக்கு மட்டுமே தெரியும். அன்று அவளை அப்படிப் பார்த்த மாத்திரத்தில் நான் என்னை வெகுநாட்களுக்குப் பிறகு துல்லியமாகக் கவனிக்கத் தொடங்கினேன். காற்சட்டையின் ஓர் இடத்தில் ஏதோ அழுக்குப் படிந்திருந்தது.

கால் மேல் காலைப் போடுவதைப் போல செய்து அதனைத் துடைத்தேன். கண்ணாடியில் வெளிக்காட்சியைப் பார்ப்பதைப் போன்று முடியைச் சரி செய்தேன். மீண்டும் அவளைப் பார்த்தேன். ஓர முடி அவள் வலது கண்ணை மறைத்தவாறு குறுக்காக விழுந்து கிடந்தது. பெண்களின் அனைத்தையும் இரசிக்கும் ஒரு சுபாவத்தை ஆண்களுக்கு இயற்கை வழங்கிவிட்டிருக்கிறது. சட்டென எழுந்துபோய் அவள் அருகில் அமர்ந்து கொள்ள மனம் துடித்தது.

நான் ஒரு பேச்சாளன். நாடு முழுவதும் சென்று தன்முனைப்பு உரை வழங்குபவன். பெரும்பான்மையான பேருக்கு என்னைத் தெரியும். நான் இப்படி அற்பத்தனமாக நடந்து கொள்வது சரியா? மீண்டும் கால் மேல் காலிட்டு உசுப்பும் என் எண்ணங்களைக் கட்டுப்படுத்த முயன்றேன். ஒரு பேச்சாளனுக்கே உரிய ஞானப்பார்வையை வரவழைக்க முயன்று தோற்றேன். மீண்டும் கண்கள் அவளைத் தேடின.

ஏதாவது பேச வேண்டும் என மனம் அலைக்கழித்துக் கொண்டிருந்தது. யாரோ குச்சியைவிட்டு மனம் என்ற பிரமையான ஒன்றைத் திடப்பொருளாக்கி உள்ளே கணக்க வைத்துவிட்ட திடீர் அலர்ஜிக். அவள் தன் கைப்பேசியையே கவனித்துக் கொண்டிருந்தாள். அவள் அப்படிக் குனிந்து கொண்டு கால் மேல் காலிட்டு அமர்ந்திருக்கும் தோரணையும் உதட்டில் சட்டென உருவாகி மறையும் மெல்லிய சிரிப்பும் எப்பொழுது வேண்டுமென்றாலும் களையலாம் என்கிற நுனியில் தத்தளித்துக் கொண்டிருந்தன. இந்தியப் பெண்கள் எப்பொழுதும் உடனே பேசிவிட மாட்டார்கள். ஒரு எளிய சிரிப்புக்குக்கூட ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டும்.

அவள் கண்கள் விரிந்து மீண்டும் அமைதி கொள்வதில் என்னால் அப்படி மட்டுமே அனுமானிக்க இயன்றது. கண்ணாடியில் தெரியும் அவளின் பிம்பத்தைக் கவனித்தேன். சற்று திரும்பி என்னையும் பார்த்தேன். பாதி விழுந்துவிட்ட வழுக்கை. திடீரென மனம் என்னிடமிருந்து விலகி நின்றது. அவள் பளிச்சென்ற நிறத்தில் இருந்தாள். என்னைவிட இளமையாகவும் தெரிந்தாள். அடுத்த கணம் என் பக்கத்து இருக்கையில் ஒரு சீனப் பெண்மணி வந்தமர்ந்தாள். முட்டிவரை பாவாடை போட்டுக் கொண்டிருந்த அவள் என்னைப் பார்த்தாள். என் கண்கள் எனக்கு எதிரில் இருந்த பெண்ணைப் பார்த்த பூரிப்பில் அதே நிலையில் உயிர்ப்பாய் இருந்தது அவளுக்கு ஏதும் அசூசையை உருவாக்கிவிட்டிருக்கலாம். சட்டென என்னைப் பார்ப்பதிலிருந்து தவிர்த்துவிட்டு கொஞ்சம் தள்ளி அமர்ந்தாள்.

நான் ஒன்றும் அத்தனை மோசமாகவும் இல்லை. எது அசிங்கம் எது அழகு என்பதில் எப்பொழுதும் எனக்கு மாற்றுக்கருத்துண்டு. வியர்வை வடியும் ஒருவனைக் கொஞ்சம் ஒதுக்கிப் பார்ப்பதும் வாசனை திரவியம் பூசியிருக்கும் ஒருவனோடு சமூகம் கூடித்தழுவதையும் நினைத்தால் எரிச்சல் உண்டாகும். அவள் அப்படித் தள்ளி அமர்ந்ததை மட்டும் என் எதிரில் அமர்ந்திருந்த பெண் கூர்ந்து கவனித்தாள்.

ஒரு பெண் அத்தனை இலாவகமாக இன்னொரு பெண்ணிடம் எந்தச் சமிக்ஞையும் காட்டாமலே தன் அசௌகரிகங்களைப் பறிமாறிவிடுகிறாள். என் எதிரில் அமர்ந்த பெண் வலது காலை இறக்கி தொடை இரண்டையும் ஒட்டி வைத்துக் கொண்டு தன் ஆடையைச் சரிப்படுத்தினாள். அது மேலும் என்னை எரிச்சல்படுத்தியது. அச்சீனப்பெண்மணியைப் பார்த்தேன். நான் அவளைப் பார்ப்பதை அவள் கண்ணாடியின் வழியாகப் பார்த்திருக்கலாம். அவளுடைய குட்டை பாவாடையைக் கவனித்துவிட்டு அதனை முடிந்தவரை இழுத்து சரிப்படுத்தினாள். எனக்கு அவமானமாக இருந்தது. அவர்களைப் பார்க்கக்கூடாது என முடிவு செய்து கைப்பேசியை வெளியில் எடுத்தேன். யாராவது குறுந்தகவல் அனுப்பியிருந்தால் அதற்குப் பதிலளிக்கலாம் எனத் தேடினேன்.

featuredimagebrodie

கையை அசைக்கும்போது அக்குளில் இருந்து ஒருவிதமான நெடி சட்டென அவ்விடத்தைச் சூழந்ததற்கு நான் பொறுப்பில்லை. அவசரமாகக் கிளம்பி வந்து வேகமாகக் காரை பார்க் செய்துவிட்டு ஓடிவந்து இரயிலில் ஏறும் யாவருக்கும் நிச்சயம் வியர்க்கும். மேலும் தள்ளி அமர்ந்த அந்தச் சீனப்பெண்மணியைக் கவனித்த அவள் தன் கைக்குட்டையை எடுத்து மூக்கைத் துடைப்பதைப் போன்று பாவனை செய்தாள். அது நிச்சயம் பாவனைத்தான். அந்த நெடி அவளைத் தாக்கியிருக்கும். ஏன் சிவப்பாக இருக்கும் பெண்களுக்கு வியர்வை நெடி என்றால் விரோதமா? அம்மாவும் சிவப்புத்தான். அவர் அப்பாவின் மோட்டார் பட்டறை நெடி வீசும் சட்டைகளைத் துவைக்கும்போது முகம் சுழித்ததே இல்லையே. அதுவரை என் அருகில் அமர்ந்திருந்த அந்தச் சீனப்பெண்மணி எழுந்து வேறு இடத்திற்குப் போனாள். எனக்குள் எரிச்சலும் கோபமும் தகித்துக் கொண்டிருந்தன.

மீண்டும் அப்பெண்ணைப் பார்த்தேன். இப்பொழுது அவள் கைக்குட்டையைக் காணவில்லை. இயல்பாக இருந்தாள். அவள் கண்களைச் சந்தித்தேன். அவள் சிரித்தாள். ஒரே சிரிப்பில் என் மொத்த தடுமாற்றங்களையும் அள்ளி எடுத்தாள். ஆச்சர்யமாக இருந்தது. கால்களில் இருந்த இறுக்கம் குறைந்திருந்தது.

“உங்க பேரு என்ன?” அவளே முன்வந்து பேசியது மேலும் மகிழ்ச்சியையும் நடுக்கத்தையும் ஒன்றெனக் கூட்டியது.

“ம்ம்ம்…மனோகரன். உங்க…”

“ஷாலினி. எங்கப் போய்க்கிட்டு இருக்கீங்க?”

“கோலாலம்பூருக்கு…ஒரு முக்கியமான நிகழ்ச்சி. வழக்கமா கார்லய போய்டுவேன். ரெண்டு நாளா சரியா தூக்கம் இல்ல…அதான்…ரொம்ப நாளுக்குப் பிறகு…என்னைத் தெரியுதா? நாந்தான் தன்முணைப்பு மனோகரன்”

அவளுக்கு அழைப்பு வந்ததும் வலது கண்னை மூடிவிட்டு இடது கண்ணால் மன்னிப்பைத் தெரிவிக்கும் போக்கில் கெஞ்சினாள். அதிகம் பேசிவிட்டதைப் போல உணர்ந்தேன். அவள் பார்க்காதபடி என் உடலை முகர்ந்தேன். வியர்வை நெடி அப்படியே இருந்தது. அவள் அழைப்பைத் துண்டித்துவிட்டு என்னைக் கவனித்தாள்.

“மன்னிச்சிடுங்க சார்…என்ன சொன்னீங்க?”

“இல்ல பரவால….ஆங்ங்…ஒன்னும் இல்ல. நம்மள பார்த்தாலே மத்த இனத்துப் பெண்களுக்கு ஒரு மாதிரி ஏளனம்தான்னு நினைக்கறன்?”

“ஏன் அப்படிச் சொல்றீங்க?”

“எல்லா தமிழங்களையும் திருடன் மாதிரி பாத்தா எப்படி?”

“ஏங்க? உங்கள யாராவது அப்படிச் சொன்னாங்களா?”

“அதுக்கு சொல்லல…நான் இப்படிப் பப்ளிக்ல வர்றது குறைவுத்தான். இப்படித்தானே தெரியுது…”

“அப்ப அடிக்கடி வாங்க சார். அப்பத்தானே இரயில்லயும் பஸ்ஸூலயும் கால் கடுக்க போற வர்றவங்கள தெரியும்… ஆ ஆஆ”

அவள் சிரித்தாள். ஆனால் அது சிரிப்பல்ல. நான் வரவழைக்க நினைத்த ஞானத்தை அவளுடைய சிரிப்பு அத்தனை சாதூர்யமாகத் தாங்கியிருந்தது. பெண்களால் மட்டுமே சிரித்துக் கொண்டே நிதானமாக நம்மை விமர்சிக்க முடியும்.

“ஆமாம்… என்ன பப்ளிக்? அடுத்த மனுசனோட சிரமங்களைப் புரிஞ்சிக்காமல் நடந்துக்குறதுதான் பப்ளிக்கா?”

“பப்ளிக்க ஏன் அப்படி நினைக்கிறீங்க? நீங்களும் நானும்தான் பப்ளிக்”

அவள் வாக்குவாதத்திற்குத் தயாராகிவிட்டதைப் போன்று தோன்றியது. பெண்கள் சட்டென நாம் எதிர்ப்பார்க்காத தருணத்தில் வாதத்திற்குத் தயாராகிவிடுவார்கள். மேலும் ஆண்களைவிட அவர்கள் வார்த்தைகளைக் கூர்மையாக்கி சரியான நேரத்தில் பயன்படுத்தும் வல்லமை உள்ளவர்கள். அதனால்தான் சாபம் விடுவதில் பெண்களுக்கு ஒரு மரபுண்டு. என் அப்பா செய்த அத்தனை வருடங்களின் கொடூமைக்கும் முன் என் அம்மா ஆகக் கடைசியாக அவருடைய 47ஆவது வயதில் போட்ட சத்தத்தில் மொத்த வீடே அமைதியாகி போனது. அதன் பின் அப்பாவிடமிருந்து வீடு அம்மாவிடம் வந்து சேர்ந்தது.

“அப்படி இல்லைங்க…கொஞ்ச நேரத்துக்கு முன்னால இங்க இருந்தாங்களே அந்தச் சீனப்பொண்ணு… என் மேல வீசற நாத்தத்துக்கு என்ன ரியேக்ஷன் பண்ணாங்கனு பாத்தீங்கத்தானே?”

“ஆ..ஆஆ ஏங்க… நாத்தம் அடிச்சா உலகத்துல எல்லாரும் அப்படித்தான் ரியேக்ட் பண்ணுவாங்க. அவுங்க என்னா உங்கப் பொண்டாட்டியா சகிச்சிக்கிட்டு இருக்க?”

“ஏங்க? இந்த இரயிலுக்கு வெளிய நாத்தமே இல்லையா? ஏன் பப்ளிக் இந்த மாதிரி சில விசயங்களை மற்ற மனுசன் மனசு பாதிக்காமல் சகிச்சிக்கக் கூடாது? அதை அப்படியே வெளிப்படுத்தி அடுத்தவனைக் காயப்படுத்தனும்னா என்னா பப்ளிக்?”

நான் அப்படிக் கோபப்பட்டிருக்கக்கூடாது. அவள் என் கணகளை உற்றுக் கவனித்துவிட்டு வேறு பக்கம் திரும்பினாள். புதிதாக அறிமுகம் ஆனவளிடம் கோபத்தைக் காட்ட எனக்கென்ன உரிமை உண்டு? மீண்டும் நிதானத்திற்கு வந்து சிரித்தேன்.

“சார்…ஆம்பளைங்க சத்தம் போட்டு பேசனா வீரம்னு நினைச்சிக்கிட்டு இருக்காங்க. கத்துனா உண்மையெ பேசிட்டதாக அவங்களே நினைச்சிக்கிட்டு ஏமாந்து போறாங்க…அவங்க உண்மையிலே பாவம். கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஹார்ண் அடிச்சதுக்காக ஒருத்தன் காடிலேந்து இறங்கி வந்து அந்தப் பொண்ணை ஏசிட்டுக் கார்ல எச்சில் துப்பிட்டுப் போய்ருக்கான்… இதுதானே ஆம்பளைங்க? எங்க அப்பா…சும்மா சும்மா கத்திக்கிட்டே இருப்பாரு. எதுக்கெடுத்தாலும் மிரட்டுவாரு. மிரட்டுனா அதட்டுனா அப்பா கடமைய செஞ்சிட்டதா நினைக்கறாரு…அவ்ளத்தான் ஆம்பளைங்களா? இப்ப நீங்களும் உங்க கோபத்தை அப்படித்தான் சத்தம் போட்டுக் காட்ட நினைக்கிறீங்க சார்”

“என்னங்க இப்படிச் சொல்லிட்டீங்க? நான் கத்தலங்க. என் நியாத்தைச் சொன்னங்க”

“அதே மாதிரித்தான் சார் அந்தப் பொண்ணுக்கு அவங்க நியாயம். அவங்க ஏன் நீங்க எதிர்ப்பார்க்கற மாதிரி இருக்கும்னும்னு நீங்க நினைக்கிறீங்க? அவுங்களுக்குப் பிடிக்கல அவுங்க போய்ட்டாங்க”

பெண்களின் கோபம் நிதானமானது. மெதுவாகத் தன்னை உருவாக்கும். அதன் வளர்ச்சி நம்மால் அணுமானிக்க இயலாது. அடுத்த கட்டம் அது ஆக்ரோஷமாக உருவாகி நிற்கும். அவள் கண்களில் அந்த ஒளியைக் கண்டேன். தன் நியாயத்தைக் கூற முடியாமல் இதற்கு முன் தடுத்த பல ஆண்களின் மீதான கோபத்திற்கு இன்று நான் பலியாகக்கூடாது எனத் தோன்றியது.

“சரிங்க…தப்புத்தான். நம்ம எதிர்ப்பார்க்கறது மாதிரி பப்ளிக் இருக்கக்கூடாது. நம்ம பப்ளிக்கு ஏத்த மாதிரி மாத்திக்கணும்? அப்படித்தானே?”

“சார்…உங்களால என் கருத்தைப் புரிஞ்சிக்கவே முடில. சார் இங்க எல்லாருக்கும் எல்லா உரிமையும் இருக்கு. நீங்க நீங்களாவே இருங்க. அவுங்க அவுங்களாவே இருக்கட்டும். நீங்க பத்து நாள் குளிக்காமல் வந்து பொதுவுல திரிஞ்சாலும் உங்கள யாரும் கேள்விக் கேட்க முடியாது. ஆனால், அந்த நாத்தத்தை அடுத்தவன் சகிச்சிக்கணும்னு மட்டும் நினைக்காதீங்க…அவ்ளத்தான்”

அவள் முடிக்கும்போது அவளுக்கு வழக்கத்திற்கு மாறாக மூச்சிரைத்தது. அதுவரை கண்களில் இருந்த நிதானம் கோபமாகியிருந்தது.

“பொண்ணுங்கனா மேக்கப் மட்டும்தான் போடுவாங்க…எது சொன்னாலும் தலையாட்டிக்குவாங்கனு நினைக்கிறீங்களா சார்?”

அவளுடைய கண்களின் என் அம்மாவைப் பார்த்தேன்.

“தோ பாரு…நீ குடிக்கிற கிலாஸ்லே உன் மண்டைய பொளந்துருவேன். குடிச்சிட்டா வீரம் வருதா? குடிச்சிட்டா நீ பெரிய மன்மத குஞ்சா? செருப்பால அடிப்பென்…பொம்பளையெ எட்டி உதைப்பெ? உன் காலை எடுத்து நெருப்புல பொசுக்கிருவென்…பாத்துக்க…”

அன்று நான் பார்த்த அம்மா வேறு. அவளிடம் மேற்கொண்டு ஏதும் பேசாமல் அவ்விடத்தை விட்டு நகர்ந்து வேறு நாற்காலியைத் தேடினேன். எங்குமே இடம் இல்லாமல் ஒருவரையொருவர் இடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தனர். தூரத்தில் ஒரு நாற்காலி மட்டும் காலியாக இருந்தது. அருகில் ஒரு மலாய்க்காரப் பெண் அமர்ந்திருந்தார். முதலில் தயக்கமாக இருந்தது. உடலை முகர்ந்தேன். நெடி குறையவே இல்லை.

கே.பாலமுருகன்
Jan, 2016

சிறுகதை: டீவி பெட்டி

c2bf4e93a8212e8378cd81ec82b8768a

அப்பா கொண்டு வந்து வீட்டின் வரவேற்பறையில் வைக்கும்வரை என்னால் அதை யூகிக்க முடியவில்லை. முன்கதவை இடித்துத் தள்ளிக் கொண்டு உள்ளே வரும்போதே ஏதோ கனமான பொருள் என்று மட்டும் தெரிந்தது.

“ம்மா! இந்தா டீவி பெட்டி,” என அப்பா உரக்க சொன்னதும் வீடே விழித்துக் கொண்டது. பாட்டியின் கண்கள் அகல விரிந்து மூடின.

பாட்டி பெரியப்பா வீட்டில்தான் இருந்தார். மூன்று வாரத்திற்கு முன் மயங்கி கீழே விழுந்து கால் உடைந்து போனதும் இங்கே வந்து விட்டார். பெரியப்பா அப்படித்தான். அவருக்கு உடல் சுகமுள்ள பாட்டித்தான் தேவை.

பாட்டிக்கு இரண்டு கிழட்டு இறக்கைகள் முளைத்துக் கொண்டன. சமையலறையிலிருந்து இதுவரை அவர் முகத்தில் காணாத பூரிப்புடன் நொண்டி நொண்டி வந்தார். பழுப்பு நிறப் பெட்டிக்குள் இருந்த தொலைகாட்சியை அப்பா வெளியில் எடுக்கும்போது கடவுளே வீட்டுக்குள் வந்துவிட்டதைப் போல எல்லாரும் மலைத்து நின்றோம்.

அம்மா வைத்திருந்த ஒரு பழைய ‘சிங்கர்’ வானொலித்தான் வீட்டில். அதை அப்படி யாரும் பொருட்படுத்த மாட்டோம். சாப்பிட்டுவிட்டு சமையலறைக்குப் போகும்போதும், கழிப்பறைக்குப் போகும்போதும் அதில் ஏதாவது ஒரு பழைய பாடல் ஓடிக் கொண்டிருப்பது சன்னமாகக் கேட்டுத் தொலைக்கும். அவ்வளவுத்தான். சில நேரங்களில் அம்மா அதைத் தூக்கிக் கொண்டு அங்குமிங்கும் அலைந்து கொண்டிருப்பார். பாடல் கிடைக்கவில்லை என வானொலியை வானத்தை நோக்கி காட்டியப்படி எதையோ தேடுவார்.

“மேல என்ன தேடற?” என அப்பா கேட்டால், “ஏரியல் கிடைக்க மாட்டுது,” என மிகவும் அழுப்புடன் கூறுவார்.

மற்றப்படி தொலைகாட்சி என்றால் பக்கத்து வீட்டு வேடியப்பன் தாத்தாதான் ஒரே அடைக்கலம். அவர் வீடு அப்பொழுதே கொஞ்சம் ஏற்றத்தில் கட்டப்பட்டிருக்கும். அந்த வரிசையில் அவர் வீடு மட்டும் வித்தியாசம். வெளியே வாசலில் படிகள் இருக்கும். அதில் ஏறி நின்று பார்த்தால் உள்ளே வேடியப்பன் தாத்தா வீட்டில் தொலைகாட்சி தெரியும். பல நேரங்களில் படத்தில் வரும் வசனங்கள் விளங்காது. அவர் சத்தத்தையும் கூட்டி வைக்கமாட்டார். வெளியிலிருந்து எல்லோரும் பார்த்து ‘உச்சு’ கொட்ட வேண்டும் என்பதற்காகவே நடு வீட்டில் தொலைகாட்சியை வைத்திருப்பார். அவரே நடு வீட்டில் உட்கார்ந்து 24 மணி நேரமும் பல்லிழித்துக் கொண்டிருப்பதைப் போல அவர் வீட்டில் எந்நேரமும் தொலைகாட்சி ஓடிக் கொண்டிருக்கும். அவருக்கு திருவிழாவில் படம் ஓட்டும் நினைப்பு.

முதன் முதலில் ஞாபகம் அறிந்து அம்மாவுடன் அப்படிக்கட்டில் அமர்ந்து இரஜினிகாந்த் நடித்த மன்னன் படம் பார்த்தேன். அதன் பிறகு 8.00 மணியாகிவிட்டால் அம்மா படம் பார்க்கப் பக்கத்து வீட்டு படிக்கட்டுக்கு அழைத்துப் போய்விடுவார்.

பிறகொருநாள் என்னையும் அம்மாவையும் வேடியப்பன் உள்ளே அழைத்துப் படம் பார்க்கவிட்டார். அது சத்யராஜ் நடித்த ஒரு படம். பெயர் ஞாபகத்தில் இல்லை. அன்றுத்தான் அம்மா என்னுடன் படம் பார்த்த கடைசிநாள். அதன் பிறகு அம்மா அங்கு வருவதையோ அல்லது படிக்கட்டில் அமர்ந்து கொண்டு படம் பார்ப்பதையோ நிறுத்திக் கொண்டார். நானும் அக்காவும் தான் போய் ஏதாவது ஒரு படத்தைப் பார்த்துவிட்டு வருவோம். இரவு கொஞ்சம் நேரம் தூங்காமல் அப்படத்தில் விளங்காமல் போன வசனங்களை நானும் அக்காவும் பேசிப் பார்ப்போம்.

பாட்டி காலுடைந்து வந்த நேரம் வீட்டிற்கு ஒரு தொலைகாட்சி தேவைப்பட்டது. பாட்டிக்குத் தெரிந்த ஒரே பொழுதுபோக்கு ‘டீவி பெட்டித்தான்’. வந்த நாளிலிருந்து ஒரு பத்து முறையாவது ‘டீவி பெட்டி’ கதையைச் சொல்லிவிடுவார். பெரியப்பா வீட்டில் தொலைக்காட்சி இருப்பதால் அவருக்குச் சௌகரியமாகப் போய்விட்டது.

“ஏன்டா வேலு! ஒரு வீடுன்னா டீவி பெட்டி இருக்க வேணாமா?”

“என்னம்மா வீடு இது? ஒரு டீவி பெட்டி சத்தம் இல்ல?”

இப்படி ஏதாவது ஒன்றைச் சொல்லிச் சொல்லியே அப்பாவை இம்சித்துக் கொண்டிருந்தார். அப்பொழுதுதான் முதன் முதலில் எங்களுக்கு வீட்டில் தொலைகாட்சி இல்லாதது பெரும் பாவம் எனத் தோன்றியது.

“சந்தோசமா மா? டீவி பெட்டி! இனிமேல இது வீடுதானே?” எனச் சொல்லிவிட்டு அப்பா சிரிப்பை உதட்டுக்கு மத்தியில் அடக்கினார்.

வரவேற்பறையில் இருந்த ஒரு மேசையை அப்பா தொலைகாட்சியைத் தாங்கி நிற்கப் பயன்படுத்தினார். அந்த மேசையும் ஒரு சிறிய பொருளை வைத்தாலே பயங்கர ஆட்டம் போடும். ஆகையால், நாளிதழ்களைக் குவித்து அதன் காலுக்கு முட்டுக் கொடுத்தார். பாட்டி தன் உடைந்த காலை ஆயாசமாக நாற்காலியின் மீது வைத்துக் கொண்டே அப்பா செய்யும் வேலையைக் கவனித்துக் கொண்டிருந்தார். அப்பா அவருடைய ‘முட்டிக் கிழிந்த ஜீன்ஸை’ இழுத்துவிட்டுக் கொண்டார். முட்டிப் பகுதியில் இரண்டு பக்கமும் அந்த ஜீன்ஸ் கிழிந்திருக்கும். எனக்குத் தெரிந்து அப்பாவிடம் இருக்கும் ஒரே ஜீன்ஸ் அதுதான். வெளுத்து நிறமிழந்தும் அப்பா அதை சித்ரவதை செய்து கொண்டிருக்கிறார்.

தொலைகாட்சி சதுர வடிவத்தில் இரு முனைகளுக்கும் இடையில் கொஞ்சம் வளைந்திருந்தது. அதன் திரை பளபளப்புடன் காட்சியளித்தது. கோலாலம்பூரிலிருந்து வருடம் இரண்டுமுறை எங்கள் வீட்டுக்கு வரும் பெரிய அத்தையைப் போல குறையாத மினுமினுப்புடன் தொலைகாட்சி தெரிந்தது.

பாட்டி முகத்தில் மகிழ்ச்சி கலந்த பரித்தவிப்பு.

“சீக்கிரம் போடுடா வேலு,” என அப்பாவைத் தொடர்ந்து துரத்திக் கொண்டிருந்தார்.

“இரு மா. ஏரியல் சரி பண்ணனும். உடனே படம் வந்துருமா?” என அப்பா அலட்டிக் கொண்டே தொடர்ந்தார்.

பாட்டியின் சிரிப்பு வாய்க்குள்ளேயே அலம்பியது. கம்பீரமும் சிரிப்புமாக எல்லோரையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தார். வீட்டுக்கு வந்த நாளிலிருந்து அவர் அப்படி இருந்ததில்லை. எதையோ இழந்துவிட்ட பார்வையும் அதிகம் பேசாத மௌனமாகவே வீட்டில் காணப்பட்டார்.

“சரசு! இனிமேல ராத்திரிலே என்னை விட்டுடுங்க. டீவி பெட்டி பாத்துட்டுத்தான் படுப்பேன், சொல்லிட்டேன்,”

 

old_tv

பாட்டிக்கு இரண்டு பிள்ளைகள்தான். அப்பாவிற்கு அத்தனை வசதியில்லாததைக் காட்டியே பெரியப்பா பாட்டியை அவருடனே வைத்துக் கொண்டார். வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்றுமுறை பாட்டியைப் பார்க்க பஹாவ் போவோம். பாட்டி அப்பொழுதெல்லாம் அதிகம் பேச மாட்டார். பெரியப்பாவிற்கு அது பிடிக்காது. பாட்டியின் குடுமி பெரியப்பாவின் கையில் இருந்தது.

நாங்கள் பஹாவ் போனால், பாட்டி குதூகலமாகி எங்களிடம் பேச நினைப்பார். ஆனால், நாங்கள் போன பிறகு பாட்டியைப் பெரியப்பா கடிந்து கொள்வார் எனப் பாட்டிக்குத் தெரியும். அதனாலேயே நாங்கள் போகும்போதெல்லாம் தொலைகாட்சியை மட்டுமே பாட்டி பார்த்துக் கொண்டிருப்பார். அவருடைய கவலை தொய்ந்த முகத்தை யாருக்கும் காட்டமாட்டார்.

அப்பா தொலைகாட்சியைத் திறந்தார். வெறும் வெள்ளைப் பொறிகள் மட்டுமே தெரிந்தன. ஏரியலைச் சரிப்படுத்திப் பார்த்தார். அப்பொழுதும் எந்த மாற்றமும் இல்லை.

“டேய்..நான் கூரையில ஏறி மேல உள்ள ஏரியல சரி பண்றேன். படம் வந்துச்சுன்னா சொல்லு, சரியா?”

அப்பா ஏணியைக் கொண்டு கூரைக்கு ஏறினார். நான் தொலைகாட்சியின் முன்னே நின்று கொண்டேன்.

“டேய்!!! படம் வருமா வராதாடா?”

பாட்டியின் புலம்பல் வெள்ளைப் பொறிகளை விட சத்தமாகக் கேட்டது. வெள்ளைப் பொறியில் எந்த மாற்றமும் இல்லை. அப்பா மேலே ஏதேதோ செய்து கொண்டிருந்தார். ஏரியலை நகர்த்தினார்; வளைத்தார். தொலைகாட்சியில் எந்தப் படமும் வரவே இல்லை.

“ப்பா! ஒன்னுமே வரலெ”

வியர்த்த உடலுடன் அப்பா கீழே இறங்கி வந்தார். தொலைகாட்சியை வெகுநேரம் பார்த்துக் கொண்டே ஏதோவொரு சிந்தனையில் ஆழ்ந்தார். பாட்டி நாற்காலியிலே அசந்து விட்டார். கேட்டுக் கேட்டு அழுத்தக் குழந்தையின் தோற்றம். எப்பொழுது தூங்கினார் எனத் தெரியவில்லை. மீண்டும் எழுந்தால் ‘டீவி பெட்டி’ கதையைத் தொடங்கிவிடுவார்.

அப்பா தொலைகாட்சியின் தலையில் இரண்டுமுறை தட்டிப் பார்த்தார். அவர் தட்டுவதிலேயே அவருடைய எரிச்சல் தெரிந்தது. பிறகு, வெளியில் யாரிடமோ  பேசிக் கொண்டிருந்தார். கொஞ்ச நேரத்தில்  மோட்டார் கிளம்பி போகும் சத்தம் மட்டும் கேட்டது.

இரவு சாப்பாட்டிற்கு அம்மா பாட்டியைத் தயங்கியபடியே எழுப்பினார். பாட்டி எழுந்ததும் தொலைகாட்சியைத்தான் பார்த்தார்.

“டேய் எங்கடா படம்? என்னடா இன்னுமா வரலெ?”

அப்பா அப்பொழுது வீட்டில் இல்லாததால் பாட்டியின் கேள்விக்கு யாரும் வாயைத் திறக்கவில்லை. கொஞ்ச நேரத்தில் வீட்டு அழைப்பேசி அலறியது. பெரியப்பா அவருடைய கறாரான குரலில் வழக்கம்போல உணர்ச்சியில்லாமல் பேசினார். அம்மா பேசிவிட்டு எங்களையெல்லாம் பார்த்தார்.

“ம்மா! பெரியவரு உங்கள நாளைக்குக் காலைலெ கிளம்பி இருக்க சொன்னாரு. வீட்டுக்குக் கூட்டிட்டுப் போறாராம்…” எனத் தெம்பில்லாமல் உச்சரித்தார்.

பாட்டி தோளிலிருந்து விலகியிருந்த தன்னுடைய கலர் துண்டை எடுத்து மீண்டும் தோளில் போட்டுக் கொண்டார். பின்னர், எழுந்து நின்று தொலைகாட்சியின் திரையில் தெரியும் அவருடைய முகத்தைக் கவனித்துக் கொண்டிருந்தார்.

“பாட்டி, சாப்பிடுங்க. மணியாச்சி,”

என்னுடைய அழைப்பை அவர் பொருட்படுத்தவில்லை. தொலைகாட்சியின் திரையையே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார்.

“பாட்டி அதுல என்ன படமா தெரியுது? வெறும் டீவிய அப்படிப் பாக்குறீங்க?”

பாட்டியின் முகத்தில் திடீர் புன்னகை. பிறகு மெல்லிய சிரிப்பாக மாறியது. தன் இடுப்பை ஆட்டியபடியே மெதுநடனம் செய்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அடிப்பட்ட காலைப் பற்றி பொருட்படுத்தாமல் பாட்டி ஆடினார்.

“டேய், வாடா வந்து பாருடா. பாட்டி டீவி பெட்டில நடிக்கிறேன், எப்படி ஸ்ரீதேவி மாதிரி இருக்கனா?”

எனக்குச் சிரிப்பும் ஆச்சரியமும் திணறின. பாட்டி மீண்டும் இரண்டு பக்கமும் இடுப்பை ஆட்டிக் கொண்டே சுழன்றார்.

“இதென்ன கூத்து?”

அம்மா பயந்துவிட்டார். பாட்டி விழுந்துவிடுவார் என்கிற பயம்.

“ஏய் சும்மா கத்தாதெ பிள்ள… வந்து ஆடு வா…வா, டீவி பெட்டில தெரிவோம் பாரு…”

ஒன்றுமே இல்லாத வெறும் தொலைகாட்சியின் முன்னே பாட்டி பலம் கொண்டு ஆரவாரத்துடன் கத்திக் கொண்டே ஆடிக் கொண்டிருந்தார்.

  • கே.பாலமுருகன்

சிறுகதை: சுருட்டு

1

பெரியம்மா தலைமுடியை வாரிக் கட்டிக் கொண்டு பெரியப்பாவைக் கெட்ட வார்த்தையிலேயே திட்டிக் கொண்டு மேலே வந்தார். அன்றுத்தான் பெரியம்மா அப்படிப் பேசுவார் எனத் தெரிந்தது. அதிர்ச்சியாகவும் இருந்தது. பெரியப்பா அண்ணனைத் தூக்கி வரந்தாவில் வீசும்போது அம்மாவும் அங்கு வந்துவிட்டார். அண்ணன் அலறிக் கொண்டு எழ முயன்று மீண்டும் விழுந்தான்.

“என் சுருட்டெ தொட்டனா…நீ செத்தடா,” எனக் கத்திவிட்டு பெரியம்மா அலறுவதைக்கூட பொருட்படுத்தாமல் பெரியப்பா தன் கையில் வைத்திருந்த சுருட்டை எடுத்து நிதானமாகப் பற்ற வைத்தார்.

2

வீரமாணிக்கம் பெரியப்பா எங்கள் வீட்டுக்கு வந்து மூன்று வருடங்கள் ஆகின்றன. எப்பொழுதும் சுருட்டும் கையுமாகத்தான்  இருப்பார். அப்பாவின் மரணத்திற்குப் பிறகு கம்போங் ராஜாவில் வாடகை வீட்டில் இருந்த பெரியப்பாவையும் பெரியம்மாவையும் அம்மாத்தான் அழைத்து வந்தார். பெரியப்பா பன்றி வேட்டைக்கும் உடும்பு வேட்டைக்கும் பேர் போனவர். நாய்களைப் பிடித்து அதனை வெறியேற்றும் வித்தையும் தெரிந்தவர். அவருடைய கம்பத்து வீட்டில் பின்புறம் ஒரு நாய் கொட்டாயைக் கட்டிவிட்டு பல சமயங்களில் அங்கேத்தான் இருப்பார். உடும்பின் பித்தப்பையைக் கொண்டு நாயின் மூக்கில் அதை வைத்து அதன் நுகர்வுத்தன்மையை உசுப்பேத்துவார். அப்படித்தான் நாயின் வெறியை ஏற்ற முடியும்.

பெரியப்பா வழக்கமாக சாயங்காலம்வரை கம்போங் ராஜா காட்டில் இருந்துவிட்டு வீட்டுக்கு வந்துவிடுவார். காட்டில் மூலை முடுக்கெல்லாம் பெரியப்பாவிற்குப் பழக்கம். எங்குப் பன்றி இருக்கும்; எங்கு உடும்பு அலையும் என அவருக்குத் தெரியும். காட்டிலேயே கம்புகளைச் செருகி, தீ வைத்து பன்றியைக் கவிழ்த்துப் போட்டு ஒரு பதம் பார்த்துவிட்டுத்தான் அவரும் பெரியப்பாவின் நண்பர்களும் மீண்டும் கம்பத்துக்கு வருவார்கள். இப்படிப் போனபோக்கில் இருந்த பெரியப்பாவினால் கடன் தொல்லைத்தான் அதிகமானது. வேலைக்கு ஏதும் போகாமல் கடன் தொல்லையில் இருந்த அவர்களுக்கு அம்மா வீட்டோடு வந்து இருக்கும்படி சொன்னதும் வசதியாகவே இருந்தது. என்ன ஏது எனக் கேட்காமல் அப்போதைக்குப் பெரியம்மாவுடன் கிளம்பி இங்கு வந்துவிட்டார். கொஞ்ச நாள் அவருக்கு இங்கு இருப்புக்கொள்ளவில்லை.

நாயைக் கொண்டு வந்து வளர்க்கப் பார்த்தார். ஆனால், அங்கு நாய் வளர்க்க அனுமதி இல்லை. தெருவில் அலையும் நாய்களின் தொல்லைகளே பெரும்பாடாக இருந்ததால் நாய் வளர்ப்பதற்கு அங்குக் கடுமையான மறுப்பிருந்தது. ஆகவே, அங்குத் திரியும் நாய்களை நோட்டமிட்டுக் கொண்டும் அதனுடன் விளையாடிக் கொண்டும் இருப்பார். பெரியப்பாவிற்குச் சாதாரணமாகவே எச்சில் நிறைய ஊறும். எப்பொழுதும் துப்பிக் கொண்டே இருப்பார். வாயிலுள்ள சுருட்டும் நனைந்து நஞ்சிவிடும். பாதி நேரம் நெருப்பில்லாமல் வெறுமனே வாயில் வைத்திருப்பார். மேல் மாடிக்கும் கீழ் மாடிக்கும் சதா உலாவிக் கொண்டிருப்பார். அவருடைய சுருட்டு வாடை எல்லோருக்கும் பரிச்சயம்.

மாடிப்படிகளில் எப்பொழுதும் சிறுநீர் வாடை வீசும். இங்கிருப்பவர்கள் நன்கு அறிந்து வைத்திருந்த வாடை அது. இரவு முழுவதும் நாய்கள் படிகளில்தான் படுத்துக் கிடக்கும். அதைத் தாண்டி போவதும் சிறுநீர் வாடை மூக்கில் ஏறி ஒரு கட்டத்தில் சட்டென சகஜமாவதும் அங்கு எல்லோருக்கும் பழக்கம். எவ்வளவு கழுவினாலும் அது தொலையாது. எச்சிலும் வெற்றிலையும் துப்பி துப்பி கரைப்படிந்து போன வெளிச்சுவர்கள். புதிதாக அவ்விடம் வருபவர்களுக்கு குமட்டலை உண்டாக்கிவிடும். அங்கிருக்கும் கிழவிகளின் கூட்டு சதி அது. மேலும், இரண்டாவது மாடியின் மூலையில் பீர் போத்தல்கள் கிடக்கும். அது ‘டத்தோ’ சாமிக்கு வைத்துவிட்டுப் பின்னர் யாரோ எடுத்துக் குடித்துப் போட்ட போத்தலா அல்லது கொசு மருந்து பற்ற வைக்கப்பட்டு பின்னர் இங்கேயே விடப்பட்ட போத்தலா எனத் தெரியாது. பெரியப்பா அதை எடுத்து வெளியில் வீசுவதை ஒரு பொழுதுபோக்காக வைத்திருந்தார். அவர் வேறு எந்த வேலைக்கும் போகவும் இல்லை. வேறு எந்த வேலையும் அவருக்குத் தெரியாது எனப் பெரியம்மா சொல்லிவிட்டார். அம்மாவும் பெரியப்பா வேலைக்குப் போவதை விரும்பவில்லை.

பெரியப்பா அப்பாவின் குடும்பத்தில் மூத்தவர். இரண்டே பேர் கொண்ட குடும்பம் அது. அப்பாவும் பெரியப்பாவும் இரண்டாடுகள்தான் வித்தியாசம். இருவரும் ஒரே மாதிரி முரட்டுடல் கொண்டவர்கள். 70 வயது என எப்பொழுது சொன்னாலும் யாரும் நம்பமாட்டார்கள். அந்தந்த வயதிற்கு எல்லோரும் ஓர் உடலைக் கற்பனை செய்து வைத்திருக்கிறார்கள். தளர்வு முதுமையின் நீக்க முடியாத அடையாளம். ஆனால், வீரமாணிக்கம் பெரியப்பா பெயருக்கு ஏற்றதைப் போல உடலில் சோர்வு இல்லாமல் விறைப்புடன் மட்டுமே இருப்பார். ஓர் உடும்பு பளபளப்பு மிளிர திடத்துடன் நகர்வதைப் போல காலையும் மாலையும் இரவும் பார்க்கும் அனைத்துப் பார்வைகளிலும் பெரியப்பா திடமாகத் தெரிந்தார்.

பெரியப்பாவிற்குக் கோபம் வந்துவிட்டால் வீட்டில் ஏதாவது பொருள் உடையும், அடுத்து வீடே உப்பி வெடித்துவிடும் அளவிற்கு அவருடைய சத்தம் அடுக்குமாடிக்கே கேட்கும். பெரியப்பாவின் அலறலும் குரலும் சாதாரணமானதல்ல. ரொம்பவும் கறாரான குரல். பெரும்பாலும் அங்கு வசிப்பவர்கள் சீனர்கள் என்பதால் பலமுறை சொல்லிப் பார்த்தும் பெரியப்பா அடங்கவில்லை என்பதால் அவர்களும் விட்டுவிட்டார்கள். சுருட்டு வாசம் வீசும் பெரியப்பாவை அங்கு யாரும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்கள். பெரியபாவின் முகத்தில் ஒரு கொடூரமான தணியாத கோபம் அப்படியே இருக்கும்.

“செத்தடி மவளே!” எனப் பல சமயங்களில் பெரியம்மாவைத் துரத்திக் கொண்டு வீட்டுக்கு வெளியேயும் பெரியப்பா வீட்டுச் சண்டையைக் கொண்டு வந்ததுண்டு. பெரியம்மா மேல்மாடிக்கு ஓடுவார். அங்குச் சில இந்தியர்களின் வீடு இருப்பதால் யாராவது ஒருவரின் வீட்டுக்குள் நுழைந்து ஒளிந்து கொள்வார். பெரியப்பா அருள் உடல் முழுவதும் பிரவாகமெடுக்க மேலேயும் கீழேயும் ஒரு பன்றியை வேட்டையாடுவதைப் போல ஓடிக் கொண்டிருப்பார்.

அப்பா இருந்தபோது வருடத்திற்கு இரண்டுமுறைகூட பெரியப்பா இங்கு வருவது ஆச்சர்யம்தான். இன்று அப்பா இல்லாத வீட்டில் அவருடைய சத்தம் ஓங்கியிருந்தது. பெரியப்பாவிற்குப் பிள்ளைகளே இல்லை. எங்களுக்கும் ஆசைக்காக ஒரு பொருள்கூட அவர் வாங்கிக் கொடுத்ததும் இல்லை. வீட்டில் இருக்கும் எங்களை அவர் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. அவர் பிள்ளைகளிடம் அன்புடன் பேசியும் நான் பார்த்ததே இல்லை. ஒரு வரட்டு பூச்சியைப் போல பெரியப்பா. அம்மா எங்களுக்காக வாங்கி வைக்கும் உணவு பொருள்களைக்கூட பெரியப்பா எடுத்து சாப்பிட்டுவிடுவார்.

“ஏன்யா அந்தப் பையன சும்மா சும்மா அடிச்சிக்கிட்டு இருக்கெ?” எனப் பெரியம்மா கேட்கும்போதெல்லாம் மிகவும் அசட்டையாக இருப்பார். மேற்கொண்டு பெரியம்மா ஏதும் கேட்டால் கத்திக் கொண்டே வாளியையோ செருப்பையோ பெரியம்மாவின் மீது விட்டடிப்பார்.  பெரியப்பாவின் இரைச்சல் எப்பொழுதும் குறைந்ததேவில்லை. எல்லோரையும் திட்டிக் கொண்டே இருப்பார். அவருக்கு வாழ்க்கை திருப்தியளிக்கவே இல்லை. வீட்டில் எல்லாம் பக்கங்களிலும் கோபம் வந்துவிட்டால் வீட்டை உற்று கவனித்துவிட்டு உடும்பைப் போல நடந்து கொண்டிருப்பார். பின்னர், வீட்டுக்கு வெளியில் போய் கத்திக் கொண்டிருப்பார். எப்பொழுதும் அவர் கோபமாக இருக்கும்போது பெரியம்மா உணவைப் போட்டுவிட்டு பெரியப்பாவைச் சாப்பிட அழைக்கும் போராட்டம் கொடுமையானது.

“நான் ஏண்டி சாப்டணும்? இப்படியே பட்டினிலெ சாவறேன். அல்சர் வந்து தொலையட்டும்”

பெரியம்மா கேட்டு கேட்டு சலித்த வசனம். பெரியம்மா சாப்பிடச் சொல்லி கேட்கும்போதெல்லாம் பெரியப்பா தட்டை ஓங்கி சுவரில் அடித்துவிடுவார். சாம்பாரும் சோறும் ஒருவகையான வீச்சத்துடன் குலைந்து ஒழுகும். உடனே அம்மா வழக்கம்போல உள்ளே ஓடி துடைப்பத்தைக் கொண்டு வந்து துடைக்க ஆரம்பித்துவிடுவார். அம்மாவிற்கு வீடு சுத்தமாக இருக்க வேண்டும். அங்கு நடப்பதைப் பற்றி கவலையில்லாமல் அம்மா சாம்பார் விழுந்து கொட்டிய இடத்தைத் துடைக்கத் துவங்கிடுவார்.

“சாப்பாடு போட்டு கொல்றீயா? என்னா சோத்துக்கா பொறந்தேன்? வேட்டையாடின உடம்புடி…”

பெரியம்மா ஒரு வாயில்லா பூச்சி. பெரும்பான்மையான சமயங்களில் அவர் வாயே திறப்பது இல்லை. வெறுமனே முனகுவார். அதையும் பெரியப்பாவினால் பொறுத்துக் கொள்ள முடியாது.

“உன்னெ அடிச்சி வெளில தொரத்துனாதான் தெரியும்”

பெரியம்மாவின் மீது பாய்வார். பெரியம்மா உதறியடித்துக் கொண்டு எங்காவது ஓடுவார். அவருக்கு வேறு எதுவும் தெரியாது. சண்டையெல்லாம் முடிந்து பெரியம்மா அழுகையுடனோ அல்லது உடலில் ஏதும் காயங்களுடனோ வீட்டில் வந்து அடங்குவார். சிறிது நேர அமைதிக்குப் பிறகு அம்மா பெரியம்மாவின் முதுகில் தடவிக் கொடுத்துவிடுவார்.

3

பாண்டியன் மாமா அம்மாவின் ஒரே தம்பி. மாதத்தில் இரண்டுமுறை வீட்டுக்கு வருவார். அவர்தான் வீட்டுச் செலவுக்கு அம்மாவிடம் பணம் கொடுப்பார். அவருடைய தயவிலேயே வீடு ஓடிக் கொண்டிருந்தது. அப்பாவின் பணமும் மாதம் வந்து கொண்டிருக்கும். பெரியப்பா அங்கு இருப்பதால் மாமா வீட்டில் தங்கமாட்டார். பெரியப்பாவின் மீது அவருக்குக் கொஞ்சம் கோபம் உண்டு. சாப்பிட்டுவிட்டு வீட்டைவிட்டுப் போகும்வரை நிலைக்காத கோபம் அது. சட்டென பெரியப்பா வந்துவிட்டால் அது இன்னும் குறுகி வளைந்து இளைத்துவிடும்.

பெரியப்பாவும் மாமாவும் பேசிக் கொள்ளமாட்டார்கள். ஆனாலும், மாமா வரும்போதெல்லாம் பெரியப்பா மீசையைக் கொஞ்சம் நீவிக் கொண்டே வரவேற்பறையில் விறைத்தவாறு அமர்ந்திருப்பார். மாமா எதுவும் நடக்காததைப் போல போய்விடுவார்.

பெரியப்பாவும் அம்மாவும்கூட பேசிக்கொள்ளமாட்டார்கள். பெரியப்பா இருக்கும் இடத்திற்கு அம்மா வரமாட்டார். பெரியப்பாவை எதிர்க்கொள்ளும்போதெல்லாம் முகத்தைத் தொங்கவிட்டுக் கொள்வார். அடுக்குமாடி வீடு சிறியது. பத்தடி எடுத்து வைத்தால் வீடு முடிவடைந்துவிடும். சுற்றி சுற்றி வந்தாலும் சீக்கிரமே சலிப்படைய செய்யும் வீடு. மூன்று மகா சிறிய அறைகள். ஒன்றில் பாதிக்கும் மேற்பட்ட துணிமணிகள் குவித்து மூட்டை மூட்டையாகக் கட்டி வைக்கப்பட்டிருக்கும். பெரியப்பாவும் பெரியம்மாவும் அந்த அறையில்தான் உறங்குவார்கள். அம்மா மட்டும் முதல் அறையில். நானும் என் அண்ணனும் சாமி அறையில் படுத்துக் கொள்வோம். ஒரு வரவேற்பறை அங்கிருந்து தலையை மட்டும் எக்கினால் சமையலறை. அவ்வளவு சிறிய வீடு.

அம்மாவிற்குப் பக்தி அதிகம். சாமி காரியங்களுக்காக மட்டும்தான் வீட்டில் வாயைத் திறப்பார். மற்றப்படி வீட்டில் எல்லோரும் சாப்பிட்டிருக்க வேண்டும். காலையில் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து சாமி காரியங்களைத் தொடங்கிவிடுவார். அடுக்குமாடி வீடு என்றாலும் அம்மாவின் பக்திக்கு அளவே இல்லை. பக்கத்து வீட்டுக்கும் சேர்த்துதான் மணி அடிப்பார். ஒரு கட்டம் அது அதீதமான எல்லைக்குச் செல்லும்.

பிறகு, வீடு முழுக்க மஞ்சள் தண்ணீர் தெளித்துவிட்டு சமையலறையிலுள்ள சன்னலுக்கு வெளியில் தொங்கும் ரோஜா செடிக்கு அபிஷேகம் செய்யத் துவங்குவார். அம்மாவின் அபிஷேகம் அங்குப் பிரசித்திப் பெற்றதாகும். அவர் செடிக்கு நீர் ஊற்றுவதைத்தான் எல்லோரும் ‘அபிஷேகம்’ என்பார்கள். காலை மணி 6.30க்கு அது தொடங்கும். வீட்டின் சலையறையில் உள்ள சன்னலுக்கு வெளியே இருக்கும் கம்பியில் நெகிழி பாசியில் ரோஜாவை அம்மா வைத்திருக்கிறார். மாதத்தில் ஒருமுறை அது செழிக்கும். பூக்களைப் பார்க்கலாம். அம்மா அச்செடிக்கு கைகளைக் சன்னல் கம்பிகளுக்கு நடுவே இருக்கும் பெரிய ஓட்டையில் விட்டு நீரை ஊற்றவோ அல்லது நீண்டு வளர்ந்துவிடும் தண்டை வெட்டவோ முடியும். அம்மா நீரை ஊற்றும்போது அது விலகி சுவரில் வடிந்து கீழ்மாடி சுவர்வரை ஒழுகும்.

அம்மாவின் சமையலறைக்கு எப்பொழுது போனாலும் ஒருவகை சாம்பார் வாடையும் சமையல் பட்டை வாடையும் வீசிக் கொண்டே இருக்கும். அம்மா அன்று சமைக்கவில்லை என்றாலும் அந்த வாசம் அப்படியேத்தான் இருக்கும். குறுகலான அறை. சன்னலைத் திறக்கும்போது மட்டும் சட்டென ரோஜா செடியின் ஒரு சுகந்தமான வாசம் உள்ளே பரவும். அத்தனை நெடிக்கு மத்தியிலும் அதனை நுகர முடியும்.

அம்மா எழுந்து பசியாறை சமைத்துவிட்டு அதனைச் சாமிக்குப் படைக்கும்போது பெரியப்பா எழுந்திருப்பார். எழுந்து குளிக்காமலேயே சுருட்டைப் புகைக்கத் துவங்கிவிடுவார். அந்தச் சுருட்டு வாசம் அம்மாவுக்குப் பிடிக்காது. காலையில் பெரியப்பாவுக்கு அதுதான் தெம்பு. வெளிவாசலைத் திறந்துவிட்டு சுருட்டைப் புகைப்பார். வாயில் ஊறும் எச்சிலையும் துப்பிக் கொள்வார். வீட்டு வாசலில் பெரியப்பாவின் எச்சில் வீச்சம் அம்மாவுக்கு எரிச்சலை உண்டாக்கும். எல்லாம் வேலையும் முடிந்த பிறகு வாசலைச் சவர்க்காரத் தூளைப் போட்டுக் கழுவுவார். எவ்வளவு கழுவியும் எச்சில் வாடை அகன்றதே இல்லை. சவர்க்காரத் தூள் வாசனையுடன் அது கலந்து வீசும்.

அம்மாவுக்கு எந்த வேலையும் இல்லாவிட்டால் உடனே வாளியைக் கொண்டு வந்து வீட்டைத் துடைக்கத் துவங்கிவிடுவார். பெரியப்பாவிற்கு அது பிடிக்காது. பெரியம்மாவிடம் திட்டிக் கொண்டிருப்பார்.

“இப்படியே துடைச்சிக்கிட்டு இருந்தா சுத்தமா எல்லாம் போய்டும். எதுமே தங்காது,” எனக் கத்துவார்.

அம்மா துடைப்பதை நிறுத்தவே மாட்டார். பெரியப்பா அப்படிக் கத்தும்போது இடத்தை மாற்றி துடைப்பாரே தவிர அவருக்கு வீடு எப்பொழுதும் சுத்தமாக இருக்க வேண்டும். பெரியப்பா இல்லாதபோது அவருடைய அறையையும் துடைத்துவிடுவார். வீட்டின் ஒட்டுமொத்த அழுக்கே அங்குத்தான் இருக்கிறது என்பதைப் போல அம்மா அழுத்தித் துடைப்பார்.

பெரியம்மா அங்குள்ள சீனர்களின் வீட்டுக்கு வீட்டு வேலைக்குச் செல்வதை வைத்துதான் பெரியப்பாவின் சில தேவைகள் நிறைவேறின. சுருட்டுப் புகைப்பதைத் தவிர அவருக்குக் கொஞ்சம் குடி பழக்கமும் உண்டு. குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததும் படுத்து உறங்கிவிடுவார். குடிக்காத நாட்களிலேயே அவருடைய சத்தம் வீட்டில் ஓங்கி இருக்கும்.

இருந்தாலும் அவருடைய விறைப்பு, பிடிவாதம், தோற்றம் ஒரு காலக்கட்டத்திற்குப் பிறகு அவரிடமிருந்து எங்களை ஒதுக்கிவிட்டன. பெரியம்மா ஒரு மௌனி. அதிகம் பேசமாட்டார். ஒரு கலர் துண்டைத் தோளில் எப்பொழுதும் போட்டிருப்பார். அம்மாத்தான் அவருக்கு உலகம். பெரியப்பாவின் மீது எரிச்சலும் கோபமும் தலைக்கேறும் போதெல்லாம் அம்மாவின் கால்களைக் கட்டியணைத்துக் கொண்டு அழுவார். அவருக்கு அதற்கு மேல் தெரியாது. பெரியப்பா முன்பு மண்டையிலேயே அடித்து அடித்து பெரியம்மா பாதி சக்தியையும் நினைவுகளையும் இழந்துவிட்டார் என்றே சொல்ல வேண்டும்.

4

அன்றைய நாளில் அண்ணன் அவர் வைத்திருந்த சுருட்டுக் கட்டை எடுத்து மாடியிலிருந்து வீசிவிட்டான். அதனைப் பார்த்துவிட்டு பெரியப்பா தாண்டவம் ஆடினார். அண்ணனின் இரு கால்களையும் பிடித்து ஐந்தாவது மாடிக்கு வெளியே தொங்கவிட்டார். அன்று எனக்கும் அண்ணனுக்கும் மறக்க முடியாத நாள். அம்மாவும் பெரியம்மாவும் வெளியே போய்விட்டார்கள். பெரியப்பா வீட்டில் ஆள் இருக்கும்போதே திமிறாகத்தான் இருப்பார். அன்று யாரும் இல்லை என்பதால் அண்ணனைப் பிடித்து இரண்டு கால்களையும் கயிற்றில் கட்டி ஐந்தாவது மாடியிலிருந்து கீழே இறக்கி பயம் காட்டும்போது எனக்கு பாதி உயிர் போய்விட்டது.

அம்மா வந்ததும் பெரியப்பா அண்ணனைத் தூக்கி வரந்தாவில் போட்டார். அப்பொழுது அம்மாவுக்குக் கோபம் திமிறிக் கொண்டு வந்தது. கண்களில் பொங்கி வந்த அழுகையை அடக்கிக் கொண்டு அம்மா முதன்முறையாகப் பெரியப்பாவைப் பார்த்து முறைத்தார். சுருட்டுப் புகைக்கத் துவங்கிய பெரியப்பாவிற்கு அநேகமாகக் கதிகலங்கியிருக்கலாம். அண்ணனைத் தூக்கி அணைத்துக் கொண்டு மீண்டும் வீட்டுக்குள் போய்விட்டார். அண்ணன் ரொம்பவே பயந்து போய்விட்டான்.

“ஏன்யா! உனக்குப் பிள்ளக்குட்டி இருந்திருந்தாதானே அருமை தெரியும்? மலட்டு நாய்த்தானே நீ,” எனப் பெரியம்மா கத்தினார்.

பெரியப்பா ஒரு கனம் அதிர்ந்துவிட்டார். பெரியம்மா கதறி அழுது கொண்டே அம்மாவின் பின்னே சென்றார். அவர் அன்று இரவுவரை வீட்டுப் பக்கம் வரவே இல்லை. பெரியம்மா துண்டைத் தோளில் போட்டுக் கொண்டு அழுகையும் முகமுமாக அம்மா ஏதும் சொல்லும்வரை அப்படியே அமர்ந்திருந்தார்.

“ஏய் பிள்ள! இந்தா இதுல பத்து வெள்ளி இருக்கு. போய் நான் சொல்ற ஜாமான வாங்கிட்டு அப்படியெ அந்த மனுசனுக்குச் சுருட்டு வாங்கியா… இருந்தா கூட அழைச்சிட்டு வா. மணி என்ன ஆவுது”

பெரியம்மா உடனே எழுந்து புறப்பட்டார்.

கே.பாலமுருகன்

seranggon times, singapore, july issue.

சிறுகதை: பேபி குட்டி

கடைசியாகத்தான் பெரிய மாமா வந்தார். அதுவரை வீடு ஒரு கனத்த துயரத்தைக் கெட்டியாகப் பிடித்து வைத்திருந்து இப்பொழுது தளரவிட்டதைப் போல உடைந்தது. அப்பா கதறி அழும்போது உடன் யாராலும் அழாமல் இருக்க முடியவில்லை. இதுவரை எதற்குமே சட்டென அழாத ஒருவர். அப்படி அழுது கதறும்போது உடல் சிறுத்துக் குழந்தையாகி எல்லோரின் மடியிலும் விழுகிறார்.

மாணிக்கம் பக்கத்து வீட்டு ஆள். அப்பாவின் நெருங்கிய உலகமே அவர்தான். அவருக்குச் சொல்லும்படியாக நண்பர்கள் இல்லை. ஒரு வீடு தள்ளிக்கூட யார் இருக்கிறார்கள் என அப்பாவிற்குத் தெரியாது. மாணிக்கம் அப்பாவைப் பிடித்து ஓர் இடத்தில் உட்கார வைக்கும்போது அவர் வேட்டி கழன்றுவதைப் போல இருந்தது.

“யப்பா…தலைய வடக்காலே வைக்கனும்…தூக்குங்க,” என நெற்றி நிறைய திருநீர் பூசி முகத்தை மறைத்திருந்தவர் கூறினார். அவர்தான் பெரியசாமி. இரண்டு வயது குழந்தையின் மரணம் யாரையும் சமாதானப்படுத்தக்கூடியதில்லை. வருவோர் போவோர் அனைவரும் புலம்பியபடியே இருந்தனர். ஆகக் கடைசி வார்த்தையாக ஒரு புலம்பலையே விட்டுப் போய்க்கொண்டிருந்தனர். வீட்டில் அவன் கடைசி பையன். பின்கட்டிலிருந்து முன்வாசலுக்கு ஓடிவரும் சிறிய இடைவெளியில் சட்டென முடிந்துவிட்ட வாழ்க்கை. இத்துனை அவரசமான முடிவு.

“டேய் சாக வேண்டிய வயசாடா இது…என்ன விட்டுவிட்டுப் போய்ட்டியேடா,” என அப்பா மீண்டும் தரையை அடித்துக் கொண்டு அழுதார்.

பேபி குட்டி தலை விரித்த கோலமாய் அப்பொழுதுதான் வெளியில் வந்தாள். பேபி குட்டிக்கு 92 வயது. அப்பாவின் அம்மா. பொக்கை வாய். கண்கள் இரண்டும் ஒடிந்து உள்ளே சொருகிக் கிடந்தன. பேசுவதைச் சட்டென புரிந்துகொள்ள முடியாது. ஒரு சொல்லை உச்சரிக்கவே நிதானமாக அடுக்குவார். அவருடன் உரையாடப் பொறுமை தேவைப்படும். ஆனால் ஓயாமல் வேலை செய்து கொண்டே இருப்பார்.

மெலிந்துபோன தோள். அதன் மேலே எப்பொழுதும் தொங்கும் ஒரு கலர் துண்டு. வெளுத்தக் கைலி. தாடைவரை நீண்டு தொங்கும் காதுகள். ஆனால் . தூரத்தில் வருபவர்களையும் பேசுபவர்களையும் அவளால் உன்னிப்பாகக் கேட்கப் பார்க்க முடியும். அவள் யாரையும் பொருட்படுத்தியதே இல்லை. சாமி அறைக்குப் பக்கத்தில்தான் படுத்திருப்பாள், ஆனால், இதுவரை சாமியை வணங்கியதே கிடையாது. திடிரென சாமிப் படங்களையே கவனித்துக் கொண்டிருப்பாள். பிறகு மீண்டும் தன் இடத்திற்கு வந்துவிடுவாள்.

“அடியே பேபி குட்டி உன் பேரன பாத்தயா?” என அவர் வயதை ஒத்த மூக்குத்தி கிழவி தூரத்திலிருந்து அரற்றிக் கொண்டே வீட்டுக்குள் வந்தாள்.

பேபி குட்டி வீட்டுக்கு வெளியில் வந்து ஓரமாய் நின்றிருந்த விளக்கமாறை எடுத்து வாசலைப் பெருக்கத் துவங்கினாள். அது அவரின் அன்றாட வேலை. எந்தச் சலனமும் இல்லாமல் ஏற்கனவே சுத்தமாக இருந்த வாசலைப் பெருக்கினாள். அவளால் அவளுடைய வேலைகளைச் செய்யாமல் இருக்க முடியாது.

“இந்தக் கெழவிக்கு எத்தன வயசாகுது…போய் சேர வேண்டியதெல்லாம் நல்ல திடக்காத்தரமா இருக்கு…கடவுளுக்கு என்ன கேடு? இந்தச் சின்ன பையனைக் கொண்டு போய்ட்டாரு,” வந்தவர்களில் யாரோ சொன்னதை எல்லோரும் கேட்டனர்.

அவர்களில் சிலர்  இப்பொழுது பேபி குட்டியை வைத்தக் கண் வாங்காமல்  கவனித்தனர். ஒரு சிறு கவனம் திரும்புதல் அது. மரணத்திலிருந்து வாழ்வுக்குத் திரும்பும் கணம். அதுவரை சோகமாக இருந்தவர்கள் அதுவரை புலம்பியவர்கள் இப்பொழுது நிமிர்ந்து உட்கார்ந்தனர். பேபி குட்டி இரு கால்களையும் அகட்டி உட்கார்ந்தவாறு தரையைப் பெருக்கினாள். அது அவளுக்கு எந்த அசௌகரிகத்தையும் கொடுக்கவில்லை.

“இந்த வயசுலையும் இதுனாலே நல்லா ஆரோக்கியமா இருக்க முடியுது?”

“ஆமாம்….92 வயசுகிட்ட”

பேபி குட்டி பெருக்குவதை நிறுத்திவிட்டு அங்கே இருந்த நாற்காலிகளை அடுக்கத் துவங்கினாள். ஒவ்வொரு நாற்காலியையும் அவளால் இயல்பாகத் தூக்கி நகர்த்த முடிந்தது. உடலில் இருந்த முதுமை செயலில் குறைவாக இருந்தது.

“ஏய்ய் பாட்டி.. அங்க போய் உக்காரு.. யேன் தேவை இல்லாத வேல செஞ்சிகிட்டு இருக்க?” பெரியசாமிக்கு உதவியாக வந்தவர் கத்தினார்.

பேபி குட்டி அதனைக் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. எவ்வளவு சோற்களைக் கோர்த்துத் திரட்டி பேபி குட்டி காதில் திணித்தாலும் அது அவளுடைய மண்டைக்குப் போய் சேராது. அவள் அவளது உலகத்தில் இயங்கிக் கொண்டே இருப்பாள். ஏற்கனவே அடுக்கப்பட்டிருந்த நாற்காலிகளைத் தூக்கிக் கொண்டு போய் வேறு இடத்தில் அடுக்கத் துவங்கினாள்.

பேபி குட்டியின் உண்மையான பெயர் குட்டியம்மாள். ஆனால் அப்பொழுதெல்லாம் பெண் குழந்தை பிறந்தால் பேபி என்றும் ஆண் குழந்தை பிறந்தால் போய் என்றும் அடைப்பெயரிட்டு அழைப்பார்கள். அப்படியே தொடர்ந்து அழைத்து குட்டியம்மாள் பேபி குட்டியானாள்.

சுந்தரி அத்தை வந்து சேர்ந்த பிறகு வீடு மீண்டும் அலறத் துவங்கியது. தம்பியை 2 மாதம் தூக்கி வளர்த்தவள் அவள்தான். தேம்பி தேம்பி அழுததில் சட்டென மூர்ச்சையற்று விழுந்தாள். சிறிது நேரம் எல்லோரும் பதறிப் போயினர். தண்ணீரை முகத்தில் அடித்து அவளை ஓர் ஓரமாக உட்கார வைத்தார்கள். முகம் தொங்கிப் போய்க் கிடந்தது.

“யப்பா சொந்தக்காரனுங்க எல்லாம் எண்ணை வைக்கலாம்,” எனப் பெரியசாமி சொன்னதும் படுத்திருந்த அத்தை திடீரென எழுந்து தம்பியின் பெட்டியருகே ஓடினாள்.  அவள் அப்படி ஓடும்போது ஓர் ஆணாக மாறியிருந்தாள். கால்கள் இரண்டையும் பரப்பியபடி ஓடினாள். அவள் அப்படிச் செய்பவள் அல்ல. வீட்டில் மகன்கள் இருந்தாலே சத்தமாகப் பேசவோ தனது இயல்பான பதற்றத்தையோ காட்ட விரும்பாதவள்.

“மகேனு மகேனு ஐயாவு வந்துருடா…அம்மாவெ விட்டுப் போவாதடா,” எனப் பெட்டியின் வலப்பக்கத்தில் சரிந்தாள். அதுவரை நாற்காலியை அடுக்கிக் கொண்டிருந்த பேபி குட்டிக்குச் அத்தையின் அலறல் கேட்டது. அத்தை பேபி குட்டிக்குக் கடைசி மகள். பாசமாக வளர்ந்தவள். ஆனால் ஒரு காலத்திற்குப் பிறகு பேபி குட்டியை அவள் அவ்வளவாகக் கண்டுகொள்ளவில்லை. ஒரு சடங்கிற்காக மட்டுமே பேபி குட்டிக்கு மாதம் கொஞ்சம் பணம் தருவாள்.

பேபி குட்டி தட்டுத் தடுமாறி அத்தையிடம் போனாள். அவள் பெட்டியைக் கூட கவனிக்கவில்லை. அவளால் அமர்ந்திருப்பவர்களையும் தரையையும் மட்டுமே அதிகப்படியாகக் கவனிக்க முடியும். கூன் வளைந்து நடப்பவளுக்கு அது மட்டுமே சாத்தியம். அத்தையின் அருகே அமர்ந்துகொண்டு அவளுடைய தலையை வருடினாள். விழியோரம் இலேசாகக் கண்ணீர் முட்டிக்கொண்டு கிடந்தது.

“சின்ன பையன்..இன்னும் உலகத்தையே பாக்காத்தவன்,” எனப் பேபி குட்டியிடமிருந்து தன்னை விடுவித்த அத்தை மீண்டும் கதறி அழுதாள். பேபி குட்டி அத்தையின் கையை விட மறுத்தாள். கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள். அதில் ஒரு முரட்டுத்தனம் தெரிந்தது.

“கையெ விடு,” அழுகையினூடாக அத்தைத் திமிறி முனகினாள்.

பேபி குட்டி சுருங்கிய இரு கைகளையும் முட்டிக்களுக்கிடையே குவித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். எல்லோரும் பேபி குட்டியையும் அத்தையும் கவனித்தனர். சன்னமான புலம்பல்கள் ஓங்கி ஒலித்துப் பிறகு மீண்டும் ஓய்ந்தன.

“குமாரு கெழவியெ கூட்டிட்டுப் போ” குமார் தம்பிக்கு மூத்தவன். பேபி குட்டியைப் பிடித்து மேலே தூக்கினான். அவள் வர மறுத்தவள் போல முரடு பிடித்தாள்.

“பாட்டி ஏஞ்சி வா,” எனப் பதிலுக்கு அவனும் பலமாக இழுத்தான்.

பேபி குட்டி மெலிந்தவள். 30 கிலோ கிராம்கூட இருக்க மாட்டாள். ஏதோ முனகியவாறு அவனுடைய இழுப்புக்குப் போனாள். குழந்தைகளின் மரணம் எந்தத் தத்துவத்தாலும் நிகர் செய்ய இயலாதது. ஒரு குழந்தையின் மரணத்திற்கு முன் அனைத்து மனங்களும் குழந்தையாகிவிடுகின்றன. தம்பி இப்பொழுதுதான் பெட்டிக்குள் ஒளிந்துகொள்ள சென்றதைப் போல படுத்திருந்தான். அது விளையாட்டு. இன்னும் சிறிது நேரத்தில் அது முடிந்துவிடும் என அனைவரின் மனமும் படப்படத்துக் கொண்டிருந்தன.

“டேய் வீட்டு நிம்மதியயெ கொண்டு போய்ட்டான்டா,” மீண்டும் அத்தை புலம்பினாள். அவள் குரல் சோர்வுற்றிருந்தது. தம்பி ஒரே ஒரு சிரிப்பில் அனைத்து இறுக்கங்களையும் உடைப்பவன். நம் வேலைகளையும் விட்டுவிட்டு உடனே கவனிக்கக்கூடிய அலட்டலே இல்லாத மெல்லிய சிரிப்பு. குழி விழும் கன்னங்கள். சிறுத்த கைகள்.

பேபி குட்டிக்கும் அவனுக்கு நடக்கும் சண்டை வீட்டிலேயே பிரபலமானவை. வீடு முழுக்க அவனைத் துரத்திக் கொண்டு பேபி குட்டி ஓயாமல் ஓடுவாள். அவளிடமிருந்து ஒளிந்து கொள்வதே தம்பியின் மகத்தான விளையாட்டாக இருக்கும். பேபி குட்டி கொஞ்ச நேரம் உறங்கிவிட்டாலும் அவள் பொக்கை வாயில் எதையாவது சொருகி விடுவான். அவள் திணறிக் கொண்டு எழுந்து பார்ப்பாள்.

“நீ என்னிக்காவது என்னைக் கொன்னுருவடா,” என அதையும் முழுமையாக உச்சரிக்க முடியாமல் பேபி குட்டியின் வாய்க்குள்ளே கரைந்துவிடும்.

குமார் பேபி குட்டியை வீட்டின் ஓர் ஓரத்தில் உட்கார வைத்துவிட்டு மீண்டும் வாசலுக்கு வந்தான். பெட்டியை வாசலில் கிடத்தியிருந்தார்கள். பிண ஊர்தி வந்ததும் வீடு மீண்டும் பரப்பரபானது. அவ்வளவாகப் பழக்கமில்லாத தூரத்து நண்பர்களும் சொந்த வீட்டின் சோகத்தைப் போல உணர்ந்தனர்.

பேபி குட்டி அவ்விடத்தை விட்டு மீண்டும் வாசலுக்கு வந்தாள். ஆங்காங்கே சிதறிக் கிடந்த சப்பாத்துகளை எடுத்து அடுக்கத் துவங்கினாள். குனிந்து குனிந்து அவள் பெருக்கி சப்பாத்துகளை அடுக்குவதைச் சிலர் பார்த்துக் கொண்டிருந்தனர்.

“அந்தக் கெழவியெ இழுத்துட்டுப் போய் கட்டி வச்சாத்தான் என்ன? சனியன் மாதிரி நடந்துக்குது,” துரை வாத்தியார் அப்படிச் சொல்வார் என யாரும் எதிர்ப்பார்த்திருக்க மாட்டார்கள்.

துரை வாத்தியார் அப்பாவின் ஆசிரியர். இந்த வீட்டில் அதிகம் உரிமையுள்ள மனிதர். எல்லாம் விழாக்காலங்களிலும் இந்த வீட்டில்தான் இருப்பார். ஒரு முக்கியமான விருந்தாளி என்றே சொல்லலாம். ஒரு வருடத்தில் கைவிட்டு எண்ணக்கூடிய அனைத்து பண்டிகைகளின்போதும் தவறாமல் வந்து தன் உறவைப் புதுப்பித்துவிட்டுப் போய்விடுவார். அவருக்கும் 50 வயது இருக்கும். எல்லோரும் அவருக்குக் கொஞ்சம் அடங்கிப் போவர்.

“டேய் குமாரு இதை இழுத்துப் போய் வீட்டுக்குள்ள உடு.. சாக வேண்டிய வயசுலே..உசுரே வாங்குது,” என அவர் சொன்னதும் உடனே குமார் எழுந்து நின்றான். எல்லோரும் பேபி குட்டியை அசூசையாகப் பார்த்தனர். குமார் மீண்டும் பேபி குட்டியின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போனான்.

அவளுக்கு வீட்டில் ஒரு மூலை உண்டு. சாமி அறைக்குப் பக்கத்தில் இருக்கும் சிறிய இடைவேளி. அங்குத்தான்  எல்லாம் வேலைகளும் முடிந்த பிறகு அவள் நாள் முழுக்க இருப்பாள். வெறுமனே கவனித்துக் கொண்டிருப்பாள். எதுவுமே இல்லாத ஒன்றை அவள் கவனித்துக் கொண்டே இருப்பாள். அவளால் வெகுநேரம் ஓர் இடத்தில் அமரவும் முடியாது.

“பாட்டி இங்கையே இரு.. போற வரைக்கும் வந்திடாத,”என அதட்டிவிட்டு குமார் வாசலுக்குப் போனான்.

எல்லாம் சடங்கும் முடிந்த பிறகு பெட்டியைத் தூக்கினர். கனத்த மனங்களால் அதைப் பார்க்க இயலவில்லை. எல்லோரும் வாய்விட்டு அழுதனர். அப்பா சாலையிலெயே படுத்துப் புரண்டார்.

வீட்டில் இருந்தவர்கள் எல்லோரும் வெளியில் போனதுடன் பேபி குட்டி எழுந்தாள். மெதுவாக நடந்து சென்று நாற்காலிக்குப் பின்னால் ஒளிந்தாள். பிறகு எழுந்துபோய் அறைக்கதவிற்குப் பின்னால் ஒளிந்தாள். அவள் வழக்கம்போல தம்பியைத் துரத்துவதைப் போல அவனுடைய பெயரை உச்சரித்துக் கொண்டே வீட்டுக்குள் ஓடத் துவங்கினாள்.

–    கே.பாலமுருகன், March 2014

 
சமீபத்தில் வாசித்த மிகச்சிறந்த கதைகளில் ஒன்று இது. ஒரு குழந்தையின் மரணம். அந்த இழப்பின் பின்னணியில் நிகழ்ந்துகொண்டிருக்கும் இன்னொரு குழந்தைமையை எவரும் கவனிப்பதேயில்லை. மேலும் முதுமை என்பது மரணத்தின் இன்னொரு வடிவம். ஆகவே அதை சபிக்கிறார்கள், பழிக்கிறார்கள். – jeyamohan

சிறுகதை: மஞ்சள் நிறத் தேவதையின் மரணக்குறிப்புகள்

 

download

1

சரவணன் கண்களைத் திறந்ததும் முனியாண்டியின் படுக்கைக் காலியாகியிருந்ததைப் பார்த்தான்.  நான்கு நாட்களுக்கு முந்தைய ஓர் இரவில் 9.00 மணிவரை முனியாண்டி தனது தேவதைகளுடன் இங்குதானே இருந்தார் என்ற வியப்புடன் சரவணன் சோம்பலேறிய கண்களுடன் அறையின் சின்ன இருட்டில் இலேசாகத் திறந்திருக்கும் ஜன்னல் பக்கமாகப் பார்த்தான். முனியாண்டியின் அந்த நீல நிறச் சட்டை தொங்கிக் கொண்டிருக்கும் கறுத்த ஆணி இன்னமும் காலியாகச் சுவரில் ஒட்டிக் கொண்டிருந்தது.

“அப்பா. .  காராக் ஹைவேலெ(Karak Highway) வந்துகிட்டு இருக்கும் போதுதான் அந்தப் பச்ச கலரு தேவதயெ பாத்தென்யா. .  அது கைய கூப்பிக்கிட்டுப் பாவமா நின்டுக்கிட்டு இருந்துச்சு… அதுக்குக் குடும்பமே இல்லயாம்… அனாதயாதான் வாழுதாம், அதான் இப்படி ஊர் ஊரா சுத்துதாம், நேத்து அதெ கூட்டியாந்து சிரம்பான்ல உட்டுட்டு வந்துட்டேன். .  மறுபடியும் எப்ப வேணும்னாலும் கூப்டும்யா”

சரவணம் சிறிது நேரம் அந்த ஜன்னலின் விளிம்பில் கைகளை வைத்துக் கொண்டு அப்பா அன்று சொன்னதையே மனத்தில் அசைப்போட்டவாறே வெளிமுற்றத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கு வீட்டைச் சுற்றிலும் பச்சை வர்ணத்தில் தேவதைகள் ஒளிந்து கொண்டு விளையாடுவது போலவே இருந்தது. எதிர்புறத்தில் நின்று கொண்டிருந்த ஒர் உயரமான செடியின் மீது  ஏறி கொண்டு “பாப்பாயே சாலமோன். .  பூங் பூங். . பீ. . பீ” என்று கத்திக் கொண்டே பச்சை தேவதையுடன் முனியாண்டி ஏதோ ஒரு தூரத்துத் தேசத்துக்குப் பறந்து போய்விட்டதாகச் சரவணன் நினைத்துக் கொண்டிருந்த கனத்தில் இயலாமைகளின் கரங்கள் அவனை இறுக்கியது.

“ஐயா. .  நாளைக்கு அப்பா ஒன்ன குருவிக் கடைக்குக் கூட்டிட்டுப் போறேன், ஒரு சிட்டுக் குருவி வாங்கிக்கலாம். அப்பறம் தேட்டருக்குப் போய் பைடர்மேன் படம் பாக்கலாம், என்னா ஓகே வா?”

அதே ஜன்னல் இலேசாகத் திறந்திருக்க, வானத்தைச் சிறிய ஓட்டையின் வழியாக இருவரும் பார்த்தப்படி படுத்திருந்தபோது முனியாண்டியால் உதிர்த்துவிடப்பட்ட வார்த்தைகள். வழக்கமான பூச்சாண்டி வார்த்தைகள். சோம்பலுடன் வெறுமனே ஜன்னல் கம்பிகளின் இடுக்குகளில் முகத்தைப் புதைத்துக் கொண்டிருந்தான் சரவணன். தொடர்ந்து மூன்று நாட்களின் சோம்பல் அவன் முகத்தில்.கண்களின் பார்வை மங்கிப் போயிருந்தது.

இன்று மதிய வெயில் பொழுதில்  கொஞ்சமாக வீட்டினுள் நுழையும் வெயிலுடன் தாராளமாக உறைய வேண்டும், பக்கத்து வீட்டு சீனக் கிழவனின் குருவி சத்தங்களைக் கேட்டு வெறுப்படைய வேண்டும், பிறகு ஆகக் கடைசியாக தொலைக்காட்சியில் போடும் கார்ட்டூன்களுடன் சமாதானம் தேடிக் கொள்ள வேண்டும். இவையணைத்தையும் பக்குவமடையாத சரவணன் செய்யவேண்டுமென்பதில்தான் ஆச்சர்யம்.

“டேய் சரவணா! ஏஞ்சிட்டியா? படுக்கய மடிச்சிட்டு வெளிய வா, அப்படியே போட்டுட்டு வந்துறாதெ”

சரவணன் எழுந்து திடமாக நின்று கொள்ள முயற்சி செய்தான். சோம்பலின் பிடி அவனை மேலும் தளர்த்தியது. வலது கையால் எட்டாத முதுகின் ஓர் ஓரத்தைச் சிரமப்பட்டுச் சொரிந்து கொண்டே படுக்கையிலிருந்து போர்வையை இழுத்தான். படுக்கையின் மேல் விரிப்பை ஒழுங்குப்படுத்தும் பொழுது, அறையின் வெண் கூரையைப் பார்த்துக் கொண்டான்.

“அப்பா தூங்கிக்கிட்டே இருப்பென்டா, திடிர்னு இந்த மேல இருக்கெ கூரைலாம் தொறந்துக்கும்…  வெளில இருக்கே நிலா, அதோட வெளிச்சம் அப்படியே கீழ எறங்கி வர, அதுலேந்து ஒரு வெள்ளக்கலரு தேவத வரும்யா… அதுதான் அப்பா மாரான்க்கு(Maran) ஒரு தடவ ஆள் எறக்கிட்டு வரும் போது பாத்த தேவத. அது மனுசாளுங்கள ஆபத்துல காப்பாத்துற தேவதயா… அது அப்பாகூட கூட்டாளி ஆச்சு. அதுக்கப்பறம் அது என்னய வந்து அப்பப்பெ கூட்டிட்டுப் போயிரும்யா, அத ஏத்திகிட்டு ஆளுங்கள காப்பத்த போயிருவன்யா. .  முடியாதுனு சொன்னா அவ்ளதான்”

கூரைகள் களையாமல் அப்படியேதான் இருந்தன. மறுபடியும் பார்வையைக் கீழே இறக்கிப் படுக்கையைச் சுத்தப்படுத்துவதில் தீவிரப்படுத்திக் கொண்டான். முயற்சி செய்து பார்த்தான். கண்களின் விளிம்பில் கண்ணீரின் உரசல்.

“இன்னும் என்னாடா பண்ற? ஏஞ்சிட்டியா இல்லயா? வீட்டுப் பாடலாம் இருந்தா குளிச்சிட்டு வந்து செய்யு”

அறையிலிருந்து வெளியேறி உடலில் சாத்தியிருந்த வானீர் ஒழுகிய போர்வையுடன் வரவேற்பறைக்குச் சென்று கொண்டிருந்தான். எப்பொழுதும் முனியாண்டியின் நீலக் கோடுகலுள்ள துணிப்பையுடன் ஒடுங்கி கிடக்கும் மேஜை அன்றும் காலியாக இருந்தது.  முனியாண்டி எப்பொழுதோ கழற்றிப் போட்டிருந்த வெள்ளைப் பணியன் மட்டும் நாற்காலியில் தொங்கிக் கொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் சரவணனுக்குத் திடிர் அழுகை, எல்லாவற்றையும் மீறிய வெளிப்பாடு. அத்துனைக் கணமானதாக இல்லாவிட்டாலும் அந்த அழுகை அவனை உடைத்துக் கொண்டு திமிறியது.

அந்தப் பணியனையும் எடுத்துக் கொண்டு குளியறையின் நுழைவாயிலுள்ள வக்குளில் போர்வையோடு சேர்த்துப் போட்டுவிட்டு அம்மாவைப் பார்த்தான்.

“ஏன்மா அப்பா எங்கமா போனாரு? இவ்ள நாளாச்சு?”

“அன்னிக்கு விடியக் காலைலே போய்ட்டாரு. . வேலயா”

“அப்பா எந்தத் தேவத கூடமா போய்ட்டாரு? நீ பாத்தியா?”

“அட இவன் ஒருத்தன், போய் குளிடா மொத”

அம்மாவுடைய முனகல் விரிந்து ஓய்வதற்குள், சரவணன் குளியலறையின் கதவை மூடிக் கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் வக்குளின் பக்கத்தில் அவனுடைய கலர் துண்டு வந்து விழும் சத்தம் கேட்கிறது. தொட்டியில் தண்ணீர் நிரம்பியிருந்தது. தொட்டியை எட்டிப் பார்த்தான். அவனுடைய பிம்பம், அதையும் கடந்து சிறியதாய் அல்லது ஒரு மையப் புள்ளியாய் முனியாண்டியின் தேவதைகளின் பிம்பமும் தெரிந்து கொண்டிருந்தன.

“அப்பா குளிச்சிகிட்டே இருப்பேன், திடிர்னு காணாமெ போயிருவேன்யா. .  நீ டியுசனுக்குப் போய்ட்டு வருவ, அப்பா இருக்க மாட்டேன், அது எப்படி? அதான்யா நம்ப வீட்டு பாத்ரூம்ல இருக்கெ தொட்டி? அதுலதான் அப்பா ஒரு மஞ்சக் கலரு தேவதயெ ஒளிச்சி வச்சிருக்கேன். அது ஒரு சீக்குப் பிடிச்ச தேவதயா. அப்பப்ப சீக்கு வந்துரும். அப்பறம் பயங்கரமா அழுந்துகிட்டு இருக்கும். அத நான்தான் கூட்டிக்கிட்டு கெந்திங் மலைக்குப்(Genthing Highlands) போயிட்டு வரனும். அங்கதான் அதுக்கு மருந்து இருக்குயா. அப்படியே அப்பாவெ வந்து கூட்டிட்டுப் போயிரும், ரெண்டு பேரும் இந்தத் தொட்டியில பூந்து அப்படியே போயிருவோம்”

சரவணன் மீண்டும் தொட்டியைப் பார்த்தான். அவன் மட்டும்தான் எக்கிக் கொண்டிருந்தது மிக நெருக்கத்தில் தெரிந்தது. தண்ணீரில் வீழ்ந்து கொண்டிருந்த நிழல் பிம்பம் ஒரு சிறிய இருளைப் பூசிக் கொண்டு நெளிந்து கொண்டிருந்தது.

குளித்து முடிக்கும்வரை தொட்டித் தண்ணீரில் எந்தச் சிறு சலனமும் ஏற்பட்டுவிடக் கூடாது. மறுகனமே ஒரு துள்ளலுடன் தொட்டியைப் பார்த்து ஏமாந்து போவான். மீண்டும் மீண்டும் அவன் மட்டும்தான் தொட்டித் தண்ணீரின் எதிர் பிம்பத்தில்.

“மா நான் டியுசனுக்குப் போலமா. .  அப்பா எப்பமா வருவாரு?”

“டியுசனுக்குப் போலயா? ஆமாண்டா, ஒனக்குக் காசு கட்டறது, என்னாத்துக்குத் தண்டத்துக்கா?”

“இல்லமா, அப்பா எந்தத் தேவத கூடமா போய்ட்டாரு?”

அவள் பதிலேதும் கூறாமல் சலித்துக் கொண்டே சமையலறைக்கு நகர்ந்துவிட்டாள். சரவணன் ஈர உடலுடன் அறைக்குள் நுழைந்ததும் கூரையை எட்டிப் பார்த்தான். ஜன்னல் விளிம்புகளைப் பார்த்தான். கட்டிலுக்கடியில் பார்த்தான். பிறகு 3ஆம் ஆண்டு பாடப் புத்தகங்களைத் தயார்ப்படுத்தி டியுஷன் புத்தகப் பையில் திணித்தான்.

அறையில் எந்தப் பக்கங்களிலும் சிறு சலனமாவது கேட்டு விடாதா என்ற ஏக்கம் சரவணனுக்கு மனம் முழுவதும் நிரம்பியிருந்தது. தேவதைகள் எந்த நேரத்திலும் சிறு சலனத்தையாவது உருவாக்கி விடக்கூடிய சாத்தியங்களை நம்பியிருந்தான். கதவைத் திறந்து கொண்டு சாலையில் நடந்து கொண்டிருக்கும் போது யாரோ தூரத்திலிருந்து அழைப்பது போலவே இருந்தது.

“ஐயா சரவணா! அப்பா தேவதைங்க கூட பறந்துகிட்டு இருக்கேன்யா, வந்துருவேன்”

 

2

இரவு மணி 8 இருக்கும். எந்தச் சலனமும் இல்லாத ஒரு சோர்வான பொழுது. முனியாண்டி உள்ளே நுழைந்து கொண்டிருந்தார்.

“சரவணன் தூங்கிட்டானா?”

“அவன் மொதயே தூங்கிட்டான். .  போன வியாழக்கெழமெ ஏதோ சொல்லிட்டுப் போய்ட்டிங்க போல, எங்கயோ கூட்டிட்டுப் போறேனு, ஒரே நச்சரிப்பு”

“சாப்ட்டானா?”

“சாப்ட்டான், அவன் கிட்ட கண்டதுயும் சொல்லி வைக்காதிங்க, தொல்ல தாங்கல”

நீலக் கோடுகலுள்ள துணிப்பையை எடுத்து மேஜையில் போட்டுவிட்டு, வெள்ளை பணியனைக் கழற்றி நாற்காலியில் தொங்கவிட்டார்.

“எத்தன நாள் ட்ரிப்ங்க? மாரானா?”

“இல்ல. கோலேஜ் பிள்ளிங்க, 3 நாளு யூ.கே.ஏம்ல அப்பறம் மலாக்கால ஒரு நாளு. நேத்து ராத்திரி புடுராயா போய்ட்டேன். அங்கேந்து 25 பேர ஏத்திகிட்டு சிரம்பான்ல டிரிப் அடிச்சிட்டுதான் வர்றேன். மறுபடியும் 12 மணிக்கு புடுராயா போகணும்”

“ஏங்க மறுபடியும்?”

“பஸ் பத்தலயாம். எக்ஸ்ட்ரா பஸ் தேவபடுதாம், சுங்கைப்பட்டாணிக்குத்தான்.12 மணிக்கு”

“எப்ப வருவீங்க? அப்படியே நம்ப மணிமாறன் வீட்டுக்குப் போய்ட்டு வாங்க”

“2 நாள் ஆவும் போல, அலோஸ்டாருக்குப் போயிட்டுதான் வருவேன்”

மிகவும் சாதாரணமாகப் பயணக் குறிப்புகளை வழக்கம் போல அவசரமாக ஒப்பித்துவிட்டு குளியலறைக்குள் நுழைந்ததும், சுவரில் ஏதோ கிறுக்கியிருந்ததைப் பார்த்தார். எழுத்துக் கூட்டித்தான் படித்தார்.

“அப்பாவோட சீக்கு தேவத” என்று பெரியதும் சிறியதுமான எழுத்தில் வர்ணப் பென்சிலில் எழுதியிருந்தது. இலேசான புன்முறுவலுடன் தொட்டித் தண்ணிரை சின்ன வாளியில் சேகரித்து உடலை நனைக்கும் போது, உடலின் பின்புறப் பாகத்தில் அனைத்திலும் பயங்கரமான எரிச்சல். பழகிப் போன அதே எரிச்சல்தான். சமாளித்துக் கொண்டு குளித்து முடித்ததும், அரை தூக்கத்தில் கவிதா மேஜையில் உணவைத் தயார்ப்படுத்திவிட்டு நாற்காலியில் சாய்ந்திருந்தது தெரிந்தது.

அறைக்குள் நுழைவதற்குக் கொஞ்சம் தயங்கினார் முனியாண்டி. சரவணன் நல்ல உறக்கத்தில் இருப்பதை உறுதி செய்து கொண்ட பின்னரே கால்களின் நகர்வை மெதுவாக்கிக் கொண்டே உள்ளே நுழைந்தார். அந்த ஜன்னல் கம்பிகளின் விளிம்புகளிலும் ஏதோ கிறுக்கியிருந்தது. சரியாகக் கவனிக்கவில்லை. உடைகளை எடுப்பதற்கு அலமாரியைத் திறந்தார். அலமாரியின் மறுமுனையில் இருந்த கண்ணாடியில் உடலைப் பார்த்துக் கொண்டார். அரை நிர்வானமாக, சோர்ந்து போயிருந்த தேகம். முதுகில் யாரோ ஏறி அமர்ந்து கொண்டிருப்பது போலவே இருந்தது. எவ்வளவு முயன்றும் உதற முடியாத ஒரு கணமான உணர்வு.

“அம்மா. .  ஆஆஆ” கால்களை நன்றாக உதறிக் கொண்டு நிமிர்ந்தார். இடுப்பை வளைத்து உடலைப் பலமாக நெளித்துக் கொண்டே சமையலறைக்குள் நுழைந்தார். கவிதா இன்னமும் அரை தூக்கத்தில்தான் கிடந்தாள்.

“கவிதா! கவிதா! பார்லி தண்ணி இருக்கா?”

“இருக்குங்க. யேன் ஒடம்பு சூடா?”

“எரிச்சல் தாங்கல போ. 7-8 மணி நேரம் ஏக்கோன்லே போனா, அதான். சுங்கை பீசி ஹைவேலெ எறங்கி, மூத்திரம் பேஞ்சப்ப, மஞ்சள் மஞ்சள்னு போது. எரிச்சலு தாங்கல போ”

பார்லி தண்ணீரைக் குடித்துவிட்டு, அவசரமாகவே சாப்பிட்டார். நீலக் கோடுகலுள்ள துணிப்பையில் புதிய மாற்று உடைகளை எடுத்துத் திணித்துக் கொண்டிருந்தாள் கவிதா. பிறகு முனியாண்டி உடலை நாற்காலியில் சிறிது நேரம் அமர்த்தி தூக்கத்தில் தொலைந்து போக தயார்ப்படுத்திக் கொண்டார். காற்றாடி அந்தரத்தில் சுழன்று கொண்டிருப்பது போல ஒரு பிரமையில் அமிழ்ந்து கொண்டிருந்தார். கால்களில் கருநாகங்கள் வீழ்ந்து ஊர்ந்து செல்வது போலவே இருந்தது.

வெகு சமீபத்தில் தெரு விளக்குகளும் காடுகளும் இருளும் அதையும் கடந்து யாரோ சிலர்

(45 பேருக்கு மேல்) முதுகில் அமர்ந்திருப்பது போலவே பிரக்ஞை. ஏதோ ஒரு பயங்கர மிருகம் ஓடிக் கொண்டிருக்கிறது. அதன் தலைகள் முனியாண்டியை உரசுகிறது. உடல் இரு பக்கங்களிலும் இடைவிடாது அசைந்து கொள்வதை விரும்புகிறது. கால்களை உதறிக் கொண்டே ஒரு திடிர் விழிப்பு.

“யேங்க என்னாச்சு?”

“ச்சே. .  ஏதோ கனவு போல”

மீண்டும் உறக்கம். கவிதா துணிப்பையைத் தயார்ப்படுத்திவிட்டு முனியாண்டியின் எதிரில் வந்து அமர்ந்தாள். உறக்கத்தில் ஆழ்ந்து போய் கிடந்த முனியாண்டியைப் பார்த்தாள். அவருடைய கைகள் மெல்லிய அதிர்ச்சியை எப்பொழுதும் சுமந்திருந்தன. சிறு அசைவுகள். உதறிக் கொள்கிறது. கால்கள் எதையோ மிதிக்கும் பாவனையில் மேலேயும் கீழேயும் தொடர்ந்து அசைந்து கொண்டிருக்கின்றன.

மறுபடியும் அவர் விழித்துக் கொண்ட போது, மணி 11 ஆகியிருந்தது. எழுந்து முகத்தைக் கழுவிக் கொண்ட பின் அறைக்குள் நுழைந்தார். சரவணன் உறங்கிக் கொண்டுதான் இருந்தான். ஆணியில் தொங்கிக் கொண்டிருந்த “பஸ் எக்ஸ்பிரேஸ் சேர்வீஸ்” என்ற எழுத்துகளைப் பதித்திருந்த நீல நிறச் சட்டையை எடுத்து மாட்டிக் கொண்டார்.

வேளியேறுவதற்கு முன், சரவணனை எட்டிப் பார்த்தார். ஆழ்ந்த உறக்கத்தில் தொலைந்து போயிருந்தான் சரவணன். முகத்திற்கு அருகில் போய் அவனுக்கு முத்தம் கொடுத்துவிட்டு, தலையைக் கோதிவிட்டார். சரவணனின் முகம் சோம்பலில் சுருங்கிப் போயிருந்தது. எழுந்து நிமிரும் போது முதுகில் அந்தக் கணமான உணர்வு. இன்னமும் விட்டு விலகாமல் கணத்துக் கொண்டிருந்தது.

“சரி கவிதா, போய்ட்டு வரேன். போனோனெ போன் போடறேன். கதவ சாத்திக்க. அப்பா வருவாரா?”

“நாளைக்கு வரேனு சொன்னாருங்க”

“ஒகே. அப்பனா பாத்துக்க. சரி…”

கதவை அடைத்துவிட்டு கவிதா உள்ளே நுழைந்து கொண்டிருந்தாள். இருளடைத்துக் கொண்டிருந்த வெளி. நீண்ட மௌனம் முனியாண்டி காணாமல் போய் கொண்டிருந்தார்.

 

3

சரவணன் மீண்டும் காலையில் எழுந்ததும், முனியாண்டியின் நீல நிறச் சட்டை தொங்கிக் கிடக்கும் ஆணி காலியாக இருந்ததைப் பார்த்தான். எழுந்து திடமாக நின்று கொள்ள முயற்சி செய்தான். ஜன்னலின் விளிம்பில் கைகளை வைத்துக் கொண்டே அகலத் திறந்து விரிந்து கிடக்கும் பச்சை வெளியைப் பார்த்தான்.

கவிதாவின் வழக்கமான அழைப்புகள் நிகழாதவரையில் சிறிது நேரம் சோம்பலின் பிடியில் தாராளமாகக் கிடக்கலாம் என்று விரும்பியிருந்தான்.

“டேய் ஏஞ்சிட்டியா? போர்வையெ மடிச்சி வச்சிட்டு வெளிய வா…இன்னிக்கும் அப்பா வந்துருவாறா வந்துருவாறானு கேட்டுத் தொல்ல பண்ணாதெ… தாத்தா கூட கடைக்குப் போயிட்டு வரலாம்”

சரவணனுக்குக் கோபம் பீறிட்டுக் கொண்டு வந்தது. அறையிலிருந்து வெளியேறி அவசரமாகக் குளியலறைக்குள் புகுந்து கதவைச் சாத்திக் கொண்டான். தண்ணீர் தொட்டியில் தலையை நுழைத்து வேகமாக கத்தினான்.

“ஏய் மஞ்சக் கலரு தேவத, அப்பாவெ இன்னிக்கு ஒழுங்கா அனுப்பி விட்டுடு….எங்க அப்பா வேணும்…விளங்குதா உனக்கு?”

இறுகி தளர்ந்து மேலெழும்பி தேவைதைகளாக மனிதனாக மனிதப் பிண்டமாக உருமாறி உருகுலைந்த சரவணன் அந்தத் தண்ணீர் தொட்டிக்குள் ஆத்திரத்துடன் குதித்தான்.

முடிவு

ஆக்கம்: கே. பாலமுருகன்

சிறுகதை: சற்று முன்பு சமூகம் கடத்தப்பட்டது

02stone-blog480

அன்று அப்படி நடக்கும் என யாருமே எதிர்ப்பார்க்கவில்லை. இரவோடு இரவாக அந்தக் கடத்தல் சம்பவம் நடந்துள்ளது. இரவில் தூங்கிக் கொண்டிருக்கும்போது அச்சமூகத்தை அப்படியே யாரோ தூக்கிக் கொண்டு வந்து நடு வீதியில் வைத்துவிட்டார்கள். புதிய நாகரிகம், புதிய இடம், புதிய மக்கள். சமூகத்தில் இருந்த அத்தனை பேரும் காலையில் எழுந்ததும் திடுக்கிட்டுப் போனார்கள். ஒருவருக்கும் என்ன செய்வதென்றும் தெரியவில்லை. யார் தம்மை இப்படித் தூக்கி வந்து போட்டிருப்பார்கள் என்றும் அவர்களுக்கு விளங்கவில்லை.

சமூகம் வெளியே வந்து பார்த்தது. மொழியும் புரியவில்லை. அங்கிருந்தவர்கள் அவரவர் வேலையைக் கவனித்துக் கொண்டிருந்தனர். இப்படியொரு காலையை அச்சமூகம் அனுபவித்ததே இல்லை. ஏறக்குறைய அங்கிருந்த யாவரும் சமூகத்திற்கு அறிமுகமே இல்லை. அந்த இடம் விநோதமாகத் தென்பட்டது. எல்லோரும் தனித்தனியாகத்தான் நடமாடிக் கொண்டிருந்தார்கள். யாரும் யாருடனும் பேசிக் கொள்ளாதது சமூகத்திற்கு ஆச்சர்யமாக இருந்தது.

சமூகம் மெல்ல நகர்ந்து நகர்ந்து அவர்கள் வேலை செய்யும் இடங்களைக் கண்ணோட்டமிட்டது. எல்லோரும் புன்னகையுடன் அவரவர் வேலையைச் செய்து கொண்டிருந்தனர். சமூகம் கண்கள் விரிய அக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தது. கடைகளில் பொருள்கள் விற்று கொண்டிருந்தவர்களை நோக்கி சமூகம் அடியெடுத்து வைத்தது.

அமைதியாக எல்லோரும் பொருள்கள் வாங்கிக் கொண்டிருந்தனர். ஒரு சிலர் தனித்தனியாகக் கடைகளுக்கு வெளியில் உள்ள நாற்காலிகளில் உட்கார்ந்து வாசித்துக் கொண்டிருந்தனர். சமூகத்திற்கு வயிறு பிரட்டிக் கொண்டு வந்தது. சமூகம் அதிக சோர்வாக இருந்ததால் அப்பெரிய கட்டிடத்தின் ஓரம் போய் மீண்டும் உறங்கத் துவங்கியது. அப்படித் தூங்கும்போது சமூகமே ஒட்டுமொத்தமாக ஒரு கனவு கண்டது. அக்கனவு ஒரு காலை பொழுதில் ஆரம்பிக்கிறது.

சாலை நெரிசல் பொறுக்காமல் சமூகம் மனத்தில் வெடித்துப் பொங்குகிறது. அந்நேரம் அழைப்பு வருகையில் இரண்டு பொய்கள், மூன்று பேரிடம் கத்தல் கதறல் எல்லாம் முடிந்து நெரிசலில் சாலையைக் கடக்கும் பள்ளிக்கூட சிறுமியைப் பார்த்து சாபமிடுதல். பொன்மொழிகள் பிதுங்கி பிய்ச்சியடிக்கும் அந்த இனிமையான காலையைத் தூக்கி முதுகில் சுமந்து கொண்டு அலுவலகம் சேர்ந்தால் பிய்த்தலும் பிடுங்கலுமாகக் கூட்டம். காதிற்குள் யாரோ சங்கூதி சங்கூதி செல்வதைப் போன்ற இனிமையான இரைச்சல்களுடன் வேலையை முடுக்கினால் பக்கத்து வேலையாள் “ ஏய் நான் செல்பி போட்டுருக்கேன் பேஸ்புக்குல, மறந்திறாம லைக் போடு தெரியுமா?” என்கிற குரல்.

வேலைப்பளு மண்டைக்குள் சந்தோசமாக மணியாட்ட இந்தப் பக்கம் திரும்பினால், “ஏய் உன் பக்கத்துல இருக்காலே அவக்கிட்ட பார்த்து இருந்துக்கோ. நெறைய பேர வச்சிருக்கா. அவ பேஸ்புக்குல போய் பாரு தெரியும்…” இன்னொரு குரல். மண்டைக்குள் ஆட்டிக் கொண்டிருந்த மணியை யாரோ எடுத்து இப்பொழுது அதிலேயே இனிமையான தாளம் போடுவது போல இருந்தது. மேலேயிருக்கும் ஒரு கோப்பை எடுக்கலாம் என நிமிர்ந்தால், “ஏய்! உன்கூட உக்காந்துருக்குங்களே ரெண்டுமே பயங்கர ஜால்ரா. முதலாளிக்கிட்ட உன்னைப் பத்தியே போட்டுக் கொடுக்குதுங்க, பாத்து இருந்துக்கோ,” என்கிறது எதிர்ப்புறக் குரல். ஆனந்த வெள்ளம் உள்ளுக்குள் பெருக்கெடுத்து பொங்கி வழிந்தது.

சட்டென்று அலுவலகத்தில் ஒரே பரப்பரப்பு. யாரோ கழுத்தறுப்பட்டுக் கிடக்கும் புகைப்படத்தை எல்லோரும் மாற்றி மாற்றி பார்த்து ஆரவாரம் செய்து கொண்டிருந்தனர். காலை மணி 8.45 தான் இருக்கும். இன்னும் சூரியன்கூட சூடாகவில்லை. வெளியேறலாம் என நினைக்கும்போது, “என்னடா இது? கழுத்து அறுந்துருக்குனு சொல்றீங்க. ஆனால், இரத்தமே இல்ல. இரத்தத்தைப் பாத்தாதான் நம்புவேன்,” என ஒலிக்கிறது ஒரு தடித்த குரல். காலை பொழுது இனிதே மங்களகரமாகியது

மண்டைக்குள் உருளும் காயு பாலாக் பெருங் கட்டைகள் போல மகிழ்ச்சி அடுக்கியடுக்கி விளையாடிக் கொண்டிருந்தபோதே வெளியேறலாம் என்றால், “ஏய்! இங்கப் பாரு. இவங்கள உனக்குத் தெரியுமா? ரெண்டு பேரும் கிஸ் அடிக்கிற அழகைப் பாரு. எவனோ தூரத்துலேந்து படம் எடுத்துட்டான்,” என்கிறது ஓர் ஆன்மீகக் குரல். அப்பொழுதுதான் பரவச வெள்ளம் மனத்தை ஆற்றுப்படுத்தி அன்றைய காலையைக் குதுகலமாக்கியது. பறந்துபோய் எல்லோர் அறைக்குள்ளும் ஒளிந்து காதுகளைக் கழட்டி அங்கேயே நட்டு வைக்கலாம் என்கிற பரவசம் மனத்தை அழுத்தியது.

கடத்தப்பட்ட சமூகம் சட்டென்று விழித்தது. எதிரில் இருந்த யாவரின் கையிலும் கைப்பேசி இல்லை. அவரவர் யாருடனும் பேசிக்கொள்ளாமல் அவரவர் வேலையைக் கவனித்துக் கொண்டிருந்தனர். எல்லோரும் ஒரு மிக மோசமான புன்னகையை மட்டும் சுமந்து கொண்டிருந்தனர். கோபமடைந்த சமூகம் விழித்தெழுந்தது. சட்டென எதிரில் வந்த ஒருவனை அடித்து அவன் ஆடைகளைக் களைந்தது. கையில் வைத்திருந்த கைப்பேசியில் அந்தச் சண்டையைச் சமூகம் பதிவு செய்து அனைவருக்கும் அனுப்பியது.

சமூகம் காத்திருந்த பரப்பரப்பு கிடைத்ததும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தது. மேலும், பரப்பரப்பு போதாமல் சமூகம் அடுத்தடுத்தவர்களை நோக்கி பாய்ந்தது.

‘சமூகம்டா! வாழுங்கடா! The social zombie is return”

 

  • கே.பாலமுருகன்

கைவிடப்பட்ட ஒரு பேனாவின் கதை

art-ink-pen-23590017

அரைமயக்கத்தில் இருக்கும் சிறு பட்டணத்தில் கைவிடப்பட்ட ஒரு பேனாவின் கதை இது. சரியாக மாலை 4.00 மணியைப் போல ஒரு சீன சாப்பாட்டுக் கடையில் அப்பேனா கைவிடப்பட்டது. ‘பார்க்கர்’ பேனா. மூடியில் ஒரு சிறிய கோடு. உடலில் பாதி மை மிச்சமாக இருந்திருக்கக்கூடும். யார் அதனுடைய முதலாளி என்றெல்லாம் தெரியவில்லை.

சப்பாட்டுக் கடையின் மிச்ச உணவை எடுக்க வரும் ஒரு கிழவர் அங்கே வந்தார். வெகுநேரம் அந்தப் பேனா இருந்த மேசையையே கவனித்துக் கொண்டிருந்தார். அவர் அப்படியொரு விலையுயர்ந்த பேனாவைத் தொட்டுப் பார்த்ததே இல்லை. அக்கடையில் அவருக்கு எடுக்க அனுமதிக்கப்பட்டது மிச்ச மீதிகள் மட்டுமே. சாப்பாட்டு தட்டின் அருகே இருந்த அந்தப் பேனாவின் மீதான கவனம் கிழவருக்குக் குறையவே இல்லை.

எப்படியும் எடுத்து விடலாம் என்று நினைத்து சரியாக மாலை 5.30க்கு அப்பேனாவின் மீது கிழவர் கையை வைத்தார். அவர் பின்னந்தலையில் ஒரு தடிப்பான கை விழுந்தது. அடுத்த கணம் அந்தக் கிழவர் நாற்காலியில் மோதி கீழே விழுந்தார். கடை முதலாளி கத்தினான். ஆள் இருந்ததால் தன் கோபத்தை அடக்கிக் கொண்டு உள்ளே போய்விட்டான். அந்தப் பேனா அங்கேத்தான் இருந்தது. தன் தோளில் தொங்கிக் கொண்டிருந்த ஒரு நெகிழிப் பையில் மிச்சமாகக் கிடைத்த நாசி ஆயாம் சோற்றை உள்ளே கொட்டிவிட்டு ஒருமுறை அப்பேனாவை ஏக்கத்துடன் பார்த்தார் கிழவர்.

இரவு மணி 8.00 வரை அப்பேனா மேசையிலேயேதான் இருந்தது. அதன் பிறகு அம்மேசைக்கு யாரும் வந்ததாகவும் தெரியவில்லை. சீனன் கடையை 10.00 மணிக்கு அடைத்துவிடுவான். அதுவரை அமைதியாக இருந்த கடை சட்டென இரவு வேலை முடிந்து வந்தவர்களால் பரப்பரப்பானது. அந்தப் பேனா இருந்த மேசையில் இரண்டு வெவ்வேறு தம்பதிகள் வந்து அமர்ந்தனர்.

ஆளுக்கொரு ‘சூப்’, கோழிப் பிரட்டல் எனத் தொடர்ந்து உணவுகள் வந்து கொண்டே இருந்தன. வலது பக்கத்தில் இருந்த சீனத்திக்கு அப்பேனா பிடித்திருந்தது. அதன் உடல், கருப்பு நிறம், மஞ்சள் பல்ப் ஒளி பட்டு அது உடலில் ஏற்படும் பளப்பளப்பு என அப்பேனாவைத் திருட்டுத்தனமாகக் கவனித்துக் கொண்டிருந்தாள். அது அங்கிருக்கும் இன்னொரு தம்பதியினரின் பேனா என அவள் நம்பினாள். வெறுமனே பார்த்திருந்துவிட்டு அவர்களும் எழுந்து போய்விட்டார்கள்.

கடையை அடைக்கும் நேரம் நெருங்கியது. கடையில் வேலை செய்யும் இந்தோனேசியா பெண் மேசைகளைத் துடைக்கத் துவங்கினாள். ஆகக் கடைசியாக அப்பேனாவின் மீது உட்கார வந்த ஈயைத் தான் வைத்திருந்த மேசை துணியாள் சட்டென கோபம் பொங்கியவளாக அடித்து விரட்டிவிட்டு மீதம் இருந்த மேசையை மௌனமாகத் துடைக்கத் துவங்கினாள். கைவிடப்பட்ட அப்பேனா அப்படியே இருந்தது.

– கே.பாலமுருகன்

இளையோர் சிறுகதை: ஒரு கால் இல்லாத நாற்காலி

chair 2

 

17 ஜனவரி 2016

“டேய் மச்சான்… சேகரு! அந்த நாற்காலியெ உடைச்சி கட்டையெ எடுத்துக் கைல வச்சுக்கோ. இன்னும் அஞ்சி நிமுசுத்துல அவனுங்க வருவானுங்க…ரெடியா இரு…”

இந்தக் கட்டளையை வாழ்நாள் முழுவதும் என்னால் மறக்க முடியவில்லை. இப்பொழுது நான் திரைப்படக் கலைஞராக இருக்கிறேன் என்றால் என்னைப் புரட்டிப் போட்டு ஒரு கனம் வாழ்க்கையைத் திருப்பிவிட்டது அந்தக் கட்டளைத்தான். எனது இரண்டு படங்கள் இப்பொழுது மலேசியாவில் கவனத்தை ஈர்த்துள்ளன.

என் நண்பன் முரளி. 1998ஆம் ஆண்டில் பத்துடுவா இடைநிலைப்பள்ளிக்கு வெளியில் நடந்த ‘கேங் சண்டையில்’ அன்று இறந்துவிடுவான் என நான் எதிர்ப்பார்க்கவே இல்லை. கடைசியாக அவன் என்னிடம் சொல்லிவிட்டுப் போன வார்த்தை அதுதான்.
…………………………………………………………………………..

ஆகஸ்டு 24 1998

எனக்கு முன்னே இருந்த, நான் ஓராண்டு அமர்ந்து, கிறுக்கி, சூடாக்கிய நாற்காலியைக் கீழே போட்டு ஒரு மிதியில் அதன் காலை உடைத்தேன்.

“Segar! Beridiri diatas kerusi. Inilah hukuman kamu…”

சைட் வாத்தியார் பலமுறை ஏறி நிற்க வைத்த நாற்காலி. வகுப்பில் இருந்த மணியம், முரளி, சுகுமாறன் என அனைவரின் கேலிப்பெயர்களையும் கிறுக்கி வைத்த நாற்காலி.

“டேய்! அறிவாளி. இரண்டு கால்ல ஆடாதேனு எத்தன தடவெ சொல்றது? நாற்காலிக்கு என்ன ரெண்டு காலா?

பண்ணீர் வாத்தியாரிடம் என்னால் இந்த நாற்காலி வாங்காத அடியில்லை. என்னை அடிப்பதாக நினைத்துப் பலமுறை கோபத்தால் அவர் கையிலிருக்கும் பிரம்பால் நாற்காலியை வெளுத்துள்ளார். அப்பொழுது என் நாற்காலிக்கு ஒரு பெயரும் வைத்திருந்தேன். இடிதாங்கி.

அப்படிப்பட்ட நாற்காலி ஒரு காலை எனக்குக் கொடுத்துவிட்டு கீழே கவிழ்ந்து கிடந்தது. கேள்விகள் எனக்குள் அலையலையாய் பெருகி வந்தன.
……………………………………………………………………………………………………………

ஜூன் 15 1998

அன்று சரியாக காலை 10.20க்கு என் வகுப்பு நண்பன் அமலதாஸ் கழிவறைக்குச் சென்றான். ஒரு நாளில் மூன்று முறையாவது கழிவறைக்கு வெளியாவது இவன் தான். பாட நேரத்தில் வெளியில் திரிந்து கொண்டிருக்கும் ஒருவனைத் திடீரென்று பார்க்க நேர்ந்தால் அவன் பெயர்தான் அமலதாஸ். கொஞ்சம் குட்டையான ஆள். மெலிந்து காணப்படுவான். அதனாலேயே அவனை வெகு சீக்கிரம் கேலி வதை செய்துவிடுவார்கள்.

“டேய் சேகரு! கட்டையா பிறக்கறது தப்பா? நான் என்னடா செஞ்சேன்?” எனப் பரிதாபமாக அவன் என்னிடம் கேட்கும்போதெல்லாம் “வீட்டுல உள்ள கம்பியைப் பிடிச்சி தொங்குடா,” என நானும் கேலியே செய்திருக்கிறேன்.

அவன் அன்று கழிவறைக்குள் நுழையும்போது நான்காம் படிவம் படிக்கும் ஜெயகணேசும் மாரிமுத்துவும் உள்ளே இருந்தார்கள். அமலதாஸ் ஐந்தாம் படிவம் என்றாலும் அவர்களைவிட உயரம் கம்மியே. அதனால் அவனுக்கு இயல்பாகவே தன்னைவிட உயரமானவர்களை எதிர்க்கொண்டால் உடனே ஒரு பயம் வந்துவிடும்.

கழிவறைக்குள் நுழைந்ததும் வலது பக்கத்தில் தண்ணீர் தொட்டி இருக்கும். அதிலிருந்து தண்ணீரை எடுத்து ஊற்ற ஒரு நெகிழிக் குவளையும் இருக்கும்.

“வந்துட்டான் பாரு தொடை நடுங்கி…. இவன்லாம் பெரிய பையன்…”

“டேய் நீ அமலாவா அமலாதாஸா? ஹா ஹா”

அன்று அவர்கள் அவனுடைய தலையில் அடிப்பார்கள் என அவன் எதிர்ப்பார்த்திருக்க மாட்டான். மாரிமுத்து அவனுடைய பின்னந்தலையில் அடிக்கும்போது அங்கு நீர்த்தொட்டியின் முனையை யாரும் கவனிக்கவில்லை.
…………………………………………………………………………………………..

ஜூன் 16 1998

பள்ளியின் முதல்வர் மாரிமுத்துவையும் ஜெயகணேசுவையும் விசாரித்துவிட்டு வெளியில் இழுத்து வந்தார். நான், முரளி இன்னும் சில நண்பர்கள் நிழற்குடையின் மேல் கட்டையில் வரிசையாக அமர்ந்திருந்தோம். என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அமலாதாஸ் மண்டையில் காயம் பட்டதைப் பற்றி கூட எங்களுக்குக் கவலை இல்லை. ஆனால், மாரிமுத்து அன்று தலை கவிழ்ந்து அடுத்து என்ன நடக்கப் போகிறது என திரு திருவென விழித்தப்படி நின்றிருப்பதைப் பார்க்கும்போது மனமெல்லாம் பரவசமாகியது. நம் எதிரியைத் தண்டித்துப் பார்ப்பதில் கிடைக்கும் ஆன்ந்தத்தை அன்று முரளி எனக்குச் சொல்லிக் கொடுத்தான்.

மாரிமுத்துவும் ஜெயகணேசுவும் பள்ளியிலிருந்து ஒரு வாரத்திற்கு நீக்கப்பட்டார்கள். மேலும் கட்டொழுங்கு ஆசிரியரிடமிருந்து சபையில் இருவருக்கும் ஆறு ரோத்தான்கள் வழங்கப்பட்டன. மனத்தில் யாரோ மயிலிறகால் வருடிவிடுவதைப் போன்று நானும் முரளியும் நின்றிருந்தோம்.

“யாருடா இந்த மாரிமுத்து? ஏன் உனக்கு அவன் மேல இத்தனை கோபம்?” என நான் கேட்டக் கேள்விக்குப் பதில் சொல்ல அவன் வார்த்தைகளைத் தன் மனத்தின் ஆழத்திலிருந்து சேகரித்துக் கொண்டிருந்தான்.

“இந்த மாரிமுத்துவும் நானும் ரெண்டு வருசத்துக்கு முன்னால சின்ன வயசு கூட்டாளி. ஒரே கம்பம். ஒரே ஸ்கூல்லத்தான் படிச்சோம். அவுங்க அப்பாவுக்கும் எங்க அப்பாவுக்கும் ஒரு நாள் பயங்கர சண்டெ. எங்க அப்பாவெ ஆளு வச்சி அடிச்சிட்டாரு. மட்டமா பேசிட்டாரு. நாங்க அங்கேந்து ராத்திரியோட ராத்திரியா வெளிய வந்துட்டோம்”

அவனுக்குள் கோபம் தலை தூக்கியது.

“எப்படிடா உங்க ரெண்டு அப்பாக்கும் சண்டெ?”

“எல்லாம் ஜாதி பெரச்சன. ரெண்டு பேரும் சேர்ந்து தண்ணி அடிக்கிற கைங்க. பேச்சு வாக்குல எங்க அப்பாவெ இவனோட அப்பா தப்பா பேசிட்டாரு. அதான்”

“சரி விடுடா. இனிமே இவனால உனக்கு பெரச்சன வராது”

நான் சொன்னதை அவன் கேட்டதாகத் தெரியவில்லை. மாரிமுத்து அடி வாங்குவதையே இலேசான புன்னகையுடன் இரசிக்க இரசிக்கப் பார்த்துக் கொண்டிருந்தான். என்னால் அப்பொழுதும் முரளியைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

ஜூன் 20 1998

முரளி சைக்கிளைப் பள்ளிக்கு வெளியில் வைத்து யாரோ தீயிட்டுக் கொழுத்தியதைக் கேள்விப்பட்டு இருவரும் வெளியே ஓடினோம். கையில் தலை கவசத்தை வைத்துக் கொண்டு பெரிய ஆட்கள் நின்றிருந்தார்கள். அவர்கள் உடலெல்லாம் பச்சை குத்தப்பட்டிருந்தது.

“டேய்! நீதான் முரளியா? பெரிய மண்டயா நீ?”

அவர்கள் எங்களை நோக்கி வருவதைச் சுதாரித்துக் கொண்டதும் மீண்டும் பள்ளி வளாகத்திற்குள் ஓடி ஒளிந்து கொண்டோம். அன்று சாயங்காலம்வரை ஆண்களின் கழிப்பறையிலேயே ஒளிந்திருந்தோம். எல்லோரும் வீட்டுக்குச் சென்று விட்டனர்.

“என்னடா முரளி இப்படி ஆச்சு? அவனுங்க கேங்ல உள்ளவனுங்கடா…செத்தோம்”

முரளி கழிவறையில் இருந்த குழாயை உடைத்து எடுத்தான். அதனைக் கெட்டியாகக் கையில் பிடித்துக் கொண்டு வெளியே வந்தான். பள்ளிக்கு வெளியே வந்து பார்த்தோம். யாருமற்ற சாலை வெறிச்சோடிக் கிடந்தது.


ஜூன் 21 1998

முரளி இப்பொழுது தங்கியிருந்த வீட்டுக்கு யாரோ தேடி வந்து அவனுடைய அப்பாவின் மோட்டரையும் அடித்து உடைத்துவிட்டு வீட்டில் கல்லெறிந்துள்ளார்கள். காவல்துறை அதிகாரிகள் வருவதற்குள் எல்லோரும் ஓடிவிட்டார்கள். முரளியின் அப்பா காவல்துறையில் மாரிமுத்துவின் மீதும் அவன் அப்பாவின் மீதும் புகார் கொடுத்தார். அம்மா இல்லாத பிள்ளை முரளி. எல்லாவற்றுக்கும் அப்பாவையே நம்பி இருந்தான்.

அதன் பின்னர், இரண்டு நாட்களுக்கு முரளி பள்ளிக்கூடம் வரவே இல்லை. அவனுடைய பெரியப்பாவின் வீட்டில் இருவரும் தங்கிவிட்டதாகக் கேள்விப்பட்டேன். எனக்கும் அவனைப் பார்க்காமல் ஒரு மாதிரியாக இருந்த்து.

ஜூன் 24 1998

மாரிமுத்து நீக்கப்பட்ட காலம் முடிந்து மீண்டும் பள்ளிக்கு வந்தான். அன்று முரளியும் விடுமுறைக்குப் பின் பள்ளிக்கு வந்துவிட்டான். எனக்குக் கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. இருவரும் கோபத்தின் உச்சத்தில் இருப்பார்கள் எனத் தெரியும். முரளி கேட்பதாக இல்லை. அவனுக்குத் தெரிந்த வேறு பள்ளி நண்பர்களை மட்டம் போட்டுவிட்டு சரியாக 1.10க்குப் பள்ளியின் எதிர்புறம் கூடச் சொல்லிவிட்டதாகச் சொன்னான். அவன் கண்களில் வெறி இருந்தது.

மணி 1.00ஐ நெருங்கியது. பெரிய மண்டபத்தின் பின்புறத்தில் இருவரும் வந்து நின்று கொண்டோம். அங்கிருந்து வலதுபுறத்தில் எங்களுடைய வகுப்பறை.

“டேய் மச்சான்… சேகரு! அந்த நாற்காலியெ உடைச்சி கட்டையெ எடுத்துக் கைல வச்சுக்கோ. இன்னும் அஞ்சி நிமுசுத்துல அவனுங்க வருவானுங்க…”எனச் சொல்லிவிட்டு முரளி மட்டும் முதலில் வெளியே போனான்.

வகுப்பிலிருந்து மாணவர்கள் வெளியானதும் நான் மட்டும் உள்ளே நுழைந்தேன். வகுப்பே அமைதிக்குள் மூழ்கியிருந்தது. மணி 1.15ஐத் தொட்டது. இந்நேரம் முரளி அவனுடைய வெளிநண்பர்கள் சூழ மாரிமுத்துவைத் தாக்கத் தயாராகியிருப்பான். எனக்கு நெஞ்சம் பதற்றமாக இருந்தது. என்னை இத்தனை நாள் தாங்கிய நாற்காலியை உடைத்து அதன் ஒரு காலைக் கையில் பிடித்திருந்தேன். அப்பொழுது ஊனமாகி நின்றிருந்தது நாற்காலி மட்டுமல்ல.

கே.பாலமுருகன்

சிறுகதை: இக்கவிதையில் விலங்குகள், பறவைகள் யாவும் துன்புறுத்தப்படவில்லை

கீழ்க்கண்ட கதையில் வரும் அனைத்து சம்பவங்களும் கற்பனையே. யாரையும் குறிப்பிடுபவன அல்ல.

கவிதை உடலுக்கும் உயிருக்கும் ஆபத்து. அதிகமான கவிதைகள் தீங்கையே விளைவிக்கும்.

குறிப்பு: இக்கதையில் விலங்குகள் யாவும் துன்புறுத்தப்படவில்லை.

நன்றி: இதுவரை கவிதைகளை விடாமல் வாசித்து மருத்துவனையில் சேர்க்கப்பட்டவர்கள்; என் கவிதைகளை வாசித்து இரத்தம் சூடாகி சமூகப் புரட்சிகளில் ஈடுபட்டவர்கள். படிக்கவே இல்லையென்றாலும் அலுக்காமல் ‘லைக்’ போட்ட முகநூல் நண்பர்கள்.

சிறுகதை:

 

like-button-2015-06

கண் விழித்தேன். அறையே இருட்டாக இருந்தது. சட்டென படுக்கையைவிட்டு எழும் முன்பே ஒரு கவிதை மண்டைக்குள் செரித்து தொண்டைக்குழிக்குள் நின்றிருந்தது. வாயைக் கொப்பளித்தால் சரியாகிவிடும் என நினைத்து முடிந்தவரை வாயில் இருமடங்கு தண்ணீரை அடைத்துக் கொப்பளித்தேன். மீண்டும் மூச்சை இழுத்துவிட்டு யோசித்தேன். அக்கவிதை இன்னும் கூர்மையாகியிருந்தது. எப்பொழுது வேண்டுமென்றாலும் கொட்டிவிடலாம் எனப் பயந்து வாயைப் பொத்திக் கொண்டேன்.

நான் எப்பொழும் அறை சன்னலைத் திறக்கவே மாட்டேன். அதற்கு எனக்கு எப்பொழுதும் தைரியம் வந்ததில்லை. சன்னல் திரைச்சீலையை விலக்கினால் கண்களில் வானம் பட்டுவிடும் எனப் பயம். மேலும் குருவிகள் ஏதும் பறந்தும் போகலாம். அப்படிப் பார்க்க நேர்ந்தால் எனக்குள் கவிதைகள் ஊற்றெடுத்து பொங்கிப் பெருகும். மூச்சடைத்து மயங்கி விழுந்த அனுபவமும் உண்டு. வீட்டுக்குள் வெளியே வந்தாலும் வானத்தை அண்ணாந்து பார்க்க மாட்டேன். அப்படி யதார்த்தமாகப் பார்க்க நேரும் சமயங்களில் சட்டென ஒரு முணுமுணுப்பு தோன்றும். “ஏய் வானமே! ஏய் மேகமே!” ஆச்சர்யக்குறிகள் தோன்றி நெஞ்சை அடைக்கும்.

இப்பொழுதெல்லாம் வேலை உண்டு வீடு உண்டு என இருந்துவிடுகிறேன். கடற்கரையோரங்கள் ஆபத்தானவை. அதிலும் மணல், சிற்பி, அலை போன்றவைகள் வயிற்றின் அடிப்பாகத்தில் சொற்களை உற்பத்தி செய்து கவிதையாக வெளியே தள்ளிவிடும். இப்படிப் பல முயற்சிகள் செய்து பாதுகாப்பாக இருந்தும் இன்று விழித்தெழுந்ததும் இப்படி ஆகுமென நினைக்கவில்லை. சாப்பிடும்போது தொண்டைக்குழிக்குள் இருந்த அக்கவிதை இம்சித்துக் கொண்டிருந்தது. நான் உண்ட அனைத்தையும் அது விழுங்கிக் கொழுத்துப் பெருத்து மேலும் மூச்சிரைக்கச் செய்தது. எப்படியாவது இன்று பிரசவமாகி ஒரு நான்கு வாசகர்களின் உயிர்களை வாங்கியே ஆக வேண்டும் என அது துடித்தத் துடியில் எனக்குத் தலை சுற்றியது.

நேற்றைய இரவில் எதைப் பார்த்துத் தொலைத்தேன் என வீட்டை விட்டு வெளியேறும் முன் சிந்தித்துக் கொண்டே இருந்தேன். எந்தப் பறவைகளும் வானத்தில் பறப்பதைப் பார்க்கவில்லை; எந்த மானும் என் வீட்டுக்குள் துள்ளிக் குதிக்கவும் இல்லை. பிறகெப்படி இந்தக் கவிதை? தொண்டைக்குழிக்குள் இருந்த கவிதை மெல்ல கடைவாயை முட்டிக் கொண்டு நின்றது. கண்கள் இரண்டும் பிதுங்க மீண்டும் அதனை விழுங்கினேன். கடை நாக்கில் அக்கவிதையை உள்ளே அழுத்தும்போது இரு கன்னங்களும் சிலிர்த்தன.

எப்படியாவது இன்று இக்கவிதையை உள்ளே வைத்துத் தீர்த்துக் கட்ட முடிவு செய்தேன். வேலைக்கு விடுமுறை சொல்லிவிட்டு வீட்டிலுள்ள படிகளைத் தொடர்ந்து ஏறி இறங்கிக் கொண்டிருந்தேன். மூச்சு வாங்கினால் கவிதை சோர்ந்து கீழிறிங்கிவிடும் என்கிற நம்பிக்கை உருவானது. வேகமாக அதிவேகத்தைத் தொடும்வரை ஓடினேன். மூச்சிரைத்து எப்பொழுது மயங்கி விழுந்தேன் எனத் தெரியவில்லை. மீண்டும் எழும்போது உடல் நனைந்திருந்தது. தொண்டைக்குழியில் ஏதோ கனமாகிக் கொண்டிருப்பதை அறிந்ததும் மனம் சோர்வானது. ஒருவேளை இன்று இக்கவிதை பிறந்தால் இது எனது 27825 ஆவது கவிதையாகும். வாசிப்பவர்கள் செத்தே விடுவார்கள் என்கிற பொதுநலம் ஒரு பக்கம் முட்டிக் கொண்டிருந்தது.

எனக்கு யாரைப் பார்த்தாலும் கவிதை வரும். எதைப் பார்த்தாலும் கவிதை வரும். எந்த நேரமும் கவிதைகளால் சூழ்ந்திருப்பேன். கவிதை கவிதை எனப் பிதற்றிக் கொண்டே இருப்பேன். யார் கேட்டாலும் ஒரு கவிதை எழுதி கொடுத்துவிடுவேன். அது கவிதையா இல்லையா என்பதைப் பற்றி கொஞ்சமும் கவலை இல்லாமல் கவிதையைத் தினமும் பிதுக்குவேன். அதோடுமட்டுமல்லாமல் ஒரு வரி கவிதைப்போட்டி, தலைப்பு கொடுத்து கவிதை போட்டி, வாரக்கவிதை, மாதக்கவிதை எனப் பல போட்டிகளால் நாடு விரிவாகியிருந்தது. என்ன செய்வதென்று தெரியாமல் நான் உறங்கிக் கொண்டிருக்கும்போதும் கவிதை வாய் வழியாக ஒழுகத் துவங்கியது. அக்கவிதையை என் வீட்டுப்பூனை எலியைக் குருகுருவென்று பார்ப்பதைப் போல நோட்டமிடும்.

இப்பொழுதெல்லாம் கவிதையை அடக்கவே முயல்கிறேன். கவிதையை அடக்கும் பயிற்சிகள் எங்கே வழங்குகிறார்கள் எனத் தேடியலைந்தேன். எந்த விடுதலையும் பிறக்கவில்லை. சோர்ந்து உட்காரும்போது “ஏய் சோர்வே… உன்னைப் பார்த்த பிறகு வானமும் சோர்ந்ததே” என மனம் சொல்லத் துவங்கியதும் சட்டென இன்னொரு மனம் அழுத்தும், “எங்கே ஆச்சர்யக்குறி?” என.

எழுந்து ஓடுவேன். எங்கே ஓடுவேன் எனத் தெரியாமல் ஓடுவேன். எப்படியெல்லாம் தப்பிக்க முடியும் எனத் திட்டமிட்டும் இன்று அது தோன்றிவிடும் எனப் பயமாக இருந்தது. ஒரு வெள்ளை ஆடையை அணிந்து கொண்டு பவ்வியமான முகத்துடன் உலகத்தையே தூக்கி தன் முதுகில் வைத்துச் சுமந்து கொண்டு அக்கவிதை காத்திருந்தது. இன்று வெளியானதும் உலகத்தையே திருத்திவிட வேண்டுமென அபாயப் பார்வை அக்கவிதைக்குள் தெரிந்தது. “ஏய் உலகமே!” என்பதுதான் என் தொண்டைக்குழிக்குள் இருந்த கவிதையின் முதல் வரி.

வீட்டின் இரு மூலைக்கும் நடந்து கொண்டிருந்தேன். எப்பொழுதோ வைத்த அலாரம் அன்று ஏன் அடிக்க வேண்டும்? கவிதை பாய்ந்து வாய் வழியாக வெளியே கொட்டியது. பூக்கள் மலர்ந்தன; மேகங்கள் விலகின, மழைத்துளிகள் கொட்டின; மரங்கள் அசைவதை நிறுத்தின; பறவைகள் சிறகு விரித்துப் பறந்தன. எனது 27825ஆவது கவிதை பிறந்தது.

இக்கவிதை என்ன செய்யப் போகிறது?

சமூகத்தில் வாழும் 72.5% இளைஞர்களின் அறிவை வளர்க்கும்.

சமூகத்தில் வாழும் 82234 பேரின் வாழ்க்கையில் விடிவெள்ளியாக இருக்கப் போகிறது.

சமூகத்தில் நடக்கும் குற்றங்களில் 23.5% குறைத்துவிட்டு 13.7% குற்றங்களை அடியோடு அழிக்கப் போகிறது.

தரையில் படுத்துப் புரண்டுவிட்டு அக்கவிதையைப் பார்த்தேன். பார்த்ததும் இன்னொரு கவிதை தோன்றியதும் என மனம் திக்கு முக்காடியது. எழுந்து தலை தெறிக்க ஓடினேன்.

  • கே.பாலமுருகன்

சிறுகதை: பறவையே எங்கு இருக்கிறாய்?

5290885-a-smiling-baby-with-a-pacifier-is-sitting-in-the-toy-truck-on-the-grass-Stock-Photo

கடைசியாக அலமாரியை எடுத்து வைக்கும்போது எனக்கு மட்டும் கொஞ்சம் இடம் மிச்சமாக இருந்தது. ஓர் ஓரமாகப் போய் நின்று கொண்டால் எப்படியும் இரண்டு மணி நேரம் போகும் கனவுந்து பயணத்தில் கால்களில் வலி இருக்காது. ஒரே தாவில் கனவுந்திற்குள் ஏறினேன். அப்பாவுடைய கனவுந்தில் எல்லாமே எனக்கு பழக்கம். இடையில் ஒரு பலகை அதன் மீது கால் வைத்தால் இலேசாக முனகும். அதைத் தவிர்த்து லாரியில் சுதந்திரமாக நடமாடவும் எகிறிக் குதிக்கவும் எனக்கு நன்றாகத் தெரியும்.

“கடன்காரனுங்க…” என ஏதோ முனகிக் கொண்டே அப்பா லாரியை முடுக்கினார். அம்மாவும் அவர் பக்கத்தில் அமர்ந்து கொள்ள கனவுந்து தாசேக் கம்போங்கை நோக்கிப் புறப்பட்டது. அப்பாவுடைய லாரி என்றால் எனக்குப் பிடிக்கும். அதுவும் என்னைப் பின்னே காற்றோட்டமாக அமர வைத்துப் போகும் பயணங்களில் மகிழ்ச்சியாக இருக்கும். அவர் கடனுக்கு வாங்கி வாழ்நாள் முழுக்கப் போராடி லாரியின் கடனைக் கட்டி முடித்தும் அவருக்குப் பிரச்சனை நின்றபாடில்லை.

“இப்படியே ஓடிக்கிட்டெ இருக்க வேண்டியதுதானா?”

அம்மா எப்பொழுதும் இப்படி வீடு மாறி போகும்போது உதிர்க்கும் அதே வசனம். அப்பா அதற்கெல்லாம் சளைத்தவர் அல்ல. சோக முகத்துடன் தப்பித்துவிடுவார். அவருக்குத் தெரிந்த்தெல்லாம் உடனே அடுத்து 10 மைக்கு அப்பால் ஒரு புதிய வாடகை வீட்டைக் கண்டுபிடித்துவிடுவது. அப்பாவிற்கு இத்தனை வீடுகள் தெரிகிறது என ஆச்சர்யமாக இருக்கும்.

இத்துடன் இந்த ஆண்டில் இது மூன்றாவது வீடு. ஆறு மாதத்திற்குள் இரண்டு பள்ளிகள் மாறிவிட்டேன். அடுத்து போகும் பள்ளி எது, எப்படி இருக்கும் எனத் தெரியவில்லை. சுதாகர் நாளை வழக்கம்போல காலையில் வீட்டின் முன் வந்து நிற்பான். என்னை விடாமல் அழைப்பான். எப்பொழுதுமே அவன் வரும் முன்பே காலணியை அணிந்துவிட்டு வீட்டு வராந்தாவில் அமர்ந்திருக்கும் என்னை நாளை அவன் பார்க்காமல் ஏமாந்து போவான். ஒருவேளை நான் நாளை விடுமுறை என நினைத்து அதற்கு மறுநாளும் வந்து நிற்பான். அப்பொழுதும் ஏமாந்து போவான். நாங்கள் ஒன்றாகக் கடந்து செல்லும் பெரியசாமி இரம்புத்தான் மரம், ஆச்சி நாசி லெமாக் கடையிலிருந்து வரும் வாசம், பூங்காவில் காலை பயிற்சிக்கு வந்து நிற்கும் தாத்தா என அனைத்துமே நாளை நான் பார்க்கவே முடியாது. சுதாகர் தனியாக இதனையெல்லாம் தாண்டிப் போவான்.

சுதாகரிடம் ஒரு வார்த்தை சொல்லி வரவும் அவகாசம் இல்லை. இன்று இரவு 8 மணிக்கு அப்பா லாரியைக் கொண்டு வந்து எல்லாம் ஏற்பாடும் செய்துவிட்டேன் உடனே புறப்படுங்கள் எனச் சொன்னதும் என் பூனைக்குட்டியை மட்டும் பக்கத்து வீட்டுக்குச் செல்லும் சிறிய சந்தின் வழி விட்டுவிட்டு வந்தேன். வேறு எதையும் செய்ய நேரமில்லை.

நாளை காலை ஆனந்தி ஆசிரியர் என்னைத் தேடுவார். நடந்தே பள்ளிக்கு வருவதால் நானும் சுதாகரும் கொஞ்சம் சீக்கிரம் பள்ளிக்குப் போய்விடுவதால் ஆனந்தி ஆசிரியருக்கு அவருடைய புத்தகங்கள் தூக்கி வர உதவுவேன். இன்னும் முழுமையாக விடியாத அக்காலையிலும் ஆனந்தி ஆசிரியரின் வெள்ளை கார் பனிமூட்டத்தைப் போல பள்ளிக்குள் நுழையும். உடனே எனக்கும் சுதாகருக்கும் ஒரு போட்டித் தயாராகிவிடும். யார் முதலில் போய் ஆனந்தி ஆசிரியரின் காருக்குப் போய் சேர்வது என தலைத்தெறிக்க இருவரும் ஓடுவோம். பெரும்பாலான நேரத்தில் நான் தான் ஆசிரியரின் வலது கை. சுதாகர் தோற்றுவிடுவான். நாளை அவன் மட்டும் தான் போய் நிற்பான். ஆனந்தி ஆசிரியர் நிச்சயம் நான் எங்கே எனக் கேட்பார்.

சட்டென பூவிழியின் அழிப்பான் என்னிடம் இருப்பது நினைவுக்கு வந்தது. என் புத்தகப்பையைத் திறந்து உள்ளே கைவிட்டுத் துழாவினேன். இன்று காலையில் அவள் என்னிடம் கண்களைச் சிமிட்டி உதட்டைக் குவித்து கவனமாகக் கொடுத்த அழிப்பான். பூவிழி வகுப்பிலேயே கொஞ்சம் வசதியான மாணவி. எப்பொழுதும் புதிய பொருள்களே பயன்படுத்துவாள். இழுத்துச் செல்லும் புத்தகைப்பையை என் வகுப்பிலேயே முதன்முதலில் பாவிக்கத் துவங்கியது அவள்தான். அவள் பொருள்கள்தான் வகுப்பில் அடிக்கடி திருட்டுப் போகும். ஓய்வுக்குப் போய்வந்த பிறகு நிச்சயம் அவளுடைய ஒரு பொருள் காணாமல் போயிருக்கும், எங்களுக்குக் கேட்டு கேட்டு சலித்துப் போன ஒரு செய்தி அது.

“என் ஜாமான எடுத்தவன்… அவனைச் சாமி கண்ணெ குத்தும். இது சத்தியம்,” எனச் சொல்லிவிட்டு மீண்டும் அமைதியாகிவிடுவாள்.

அவ்வளவுத்தான். மறுநாள் புதிய பொருளுடன் வந்து நிற்பாள். நேற்று நடந்த திருட்டைப் பற்றி மறந்து புதிய பொருளைக் காணாமலடிக்கத் தயாராகிவிடுவாள். இது என்னவோ அவளுக்குப் பிடித்த அழிப்பான் என்றும் என்னிடம் கொடுத்துப் பத்திரமாக வைத்துக் கொள்ள சொன்னாள். நாளையும் இனியும் நான் அப்பள்ளிக்குப் போகப்போவதில்லை. அவள் நான் இந்த அழிப்பானைத் திருடிவிட்டேன் என உறுதியாக நம்புவாள். அன்றாடம் என்னைச் சாமி கண்ணைக் கொத்த வேண்டும் என அவள் வேண்டிக்கொள்வாள்.

கையில் பிடித்திருந்த அந்த அழிப்பானைத் தூக்கி வெளியே வீசினேன். அது சட்டென பார்வையிலிருந்து மறைந்து எங்கோ விழுந்தது. மூன்றாம் ஆண்டில் படிக்கும் தினேஸ் அன்றாடம் ஓய்வுக்கு என் வகுப்பிற்கு வந்துவிடுவான். என்னுடன் தான் சிற்றுண்டிச்சாலைக்கு வருவான். ஐந்தாம் ஆண்டு மாணவர்கள் அவனைக் கிண்டல் செய்து அடிக்கிறார்கள் என்பதைப் பலமுறை என்னிடம் சொல்லியிருக்கிறான். அதனாலேயே அன்றாடம் என் பாதுகாப்பில் ஒரு ‘ரொட்டி சானாய்’ செலுத்திவிட்டுத்தான் வகுப்பிற்குப் போவான். நாளை அவன் எப்படிச் சாப்பிடுவான்? ஐந்தாம் ஆண்டு மாணவர்கள் அவனை என்ன செய்வார்கள்? மறுநாளும் அவன் என்னைத் தேடி வகுப்பிற்கு வருவான்.

“டேய். உனக்கு மிலோ வேணுமா?”

அப்பாவின் குரல் கேட்டதும் எக்கிக் கீழே பார்த்தேன். லாரி ஏதோ ஒரு கடை முன்பு நின்றிருந்தது. தலையை மட்டும் ஆட்டினேன். புதிய இடம். சாலை பரப்பரப்பாக இருந்தது. மிலோவை அப்பா நெகிழிப் பையில் கட்டிக் கொடுத்தார். எடுத்து மெதுவாக உதட்டில் வைத்தேன். சூடாக இருந்தது.

  • ஆக்கம் கே.பாலமுருகன்

 

சிறுகதை: Torch Light – டார்ச் லைட்

Document-page-001 (3)

“சார் கரண்டு இல்ல சார்… இந்த நேரத்துல வந்துருக்கீங்க? என்ன ஆச்சி?”

முனியாண்டி அண்ணன் கையில் வைத்திருந்த டார்ச் லைட்டை என் கண்களுக்கு நேராகக் காட்டினார். கண்கள் கூசியதில் தலையை வேறு திசையில் திருப்பியவாறு பதிலளித்தேன்.

“முக்கியமான பைலு விட்டுட்டேன். நாளைக்கு மீட்டிங்க்கு அது இல்லாமல் போனனா அப்புறம் தலைமை ஆசிரியர் ஏசுவாரு…அதான் எடுத்துப் போலாம்னு வந்தென்”

என் பதிலை அவர் கேட்டாரா எனக்கூட தெரியவில்லை. வெளிச்சத்தைக் கக்கத் தடுமாறிய டார்ச் லைட்டை உள்ளங்கையில் வைத்துத் தட்டிக் கொண்டிருந்தார்.

“சரிங்க சார்… இருங்க”

பள்ளியின் தகறக் கதவை அவர் இழுக்க அந்தக் கும்மிருட்டில் அக்கதவு தறதறவென கதறியது. முனியாண்டி அண்ணன் அப்பள்ளியின் பாதுகாவலராக 10 வருடங்களாக வேலை செய்து வருகிறார். கதவைத் திறக்கும்போதும் பள்ளியைச் சுற்றி வலம் வரும்போதும் எப்பொழுதுமே உடனே காட்டுவதற்காக உதட்டிலேயே புன்னகையைக் குவித்து வைத்திருப்பார். யாரைப் பார்த்தாலும் உடனே ஒரு சிரிப்பு. அன்றாடம் எதிர்க்கொள்ளும் போதெல்லாம் பார்த்து பார்த்து சலித்த சிரிப்பு சில சமயங்களில் வெறுப்பை உருவாக்கியதுண்டு.

“கரண்டு இல்ல சார்… எப்படித் தேடுவீங்க?”

சொன்னதையே மீண்டும் சொல்லிவிட்டு கையிலிருந்த டார்ச் லைட்டை எடுத்து என்னிடம் நீட்டினார். கைப்பிடிக்கு வசதியான டார்ச் லைட். இதற்கு முன் டார்ச் லைட்டை எப்பொழுது கடைசியாகப் பயன்படுத்தினேன் எனக் கூட ஞாபகமில்லாத அளவிற்கு அதற்கும் எனக்கும் தூரமாகியிருப்பதை உணர முடிந்தது. டார்ச் லைட்டின் தலை கொஞ்சம் தளர்ந்திருந்தது. வெளிச்சமும் மங்கியிருந்தது.

“அதைக் கொஞ்சம் கைல வச்சி தட்டுனா சரியா வரும் சார்”

“சரிங்கண்ணெ. நான் தேடிட்டுப் போறேன்”

“நான் ஏதும் கூட வரட்டா சார்?”

“இல்லணெ…பரவால. அது எங்க வச்சன்னே தெரியல… தேடணும்”

முதல் கட்டிடத்திற்குச் செல்லும் படிக்கு முன் வந்து நிற்கும்போது பள்ளிக்கூடமே இருண்டிருந்தது. அதற்குமுன் பள்ளிக்கூடத்தை இருட்டில் பார்த்ததில்லை. எப்பொழுதும் மாணவர்களின் கூச்சலும் ஆர்பாட்டமும் ஆசிரியர்களின் தனித்த குரல்களும் நடமாட்டங்களும் நிறைந்த ஒரு பள்ளியின் வெளிக்குள் யாருமற்ற ஒரு சூழலில் நுழைகிறேன். காட்டுப்பூச்சிகளின் விடாமல் ஒலிக்கும் ரிங்காரம் மட்டும் அந்த இருளை அடர்த்தியாக்கிக் கொண்டேயிருந்தது.

அந்தக் கோப்பை உடனே தேடியாக வேண்டும். மணி 10.00ஐத் தாண்டி வேகமாக நகர்ந்து கொண்டிருந்தது. இவ்வேளையில் நான் இங்கு வந்தது பாதுகாவலர் முனியாண்டிக்கு அசூசையாக இருந்திருக்கலாம். நான் போகும்வரை அவர் அவருக்கே உரிய நாற்காலியில் ஆயாசமாகச் சாய முடியாது; வாங்கி வைத்திருக்கும் நாசி லெமாக்வைச் சுவைக்க முடியாது; தன் அறைக்குள் பதுக்கி வைத்திருக்கும் வானொலியைச் சத்தமாகத் திறந்துவிட முடியாது; கம்போங்கில் இருக்கும் மற்ற சக நண்பர்களை வரவழைத்து கதைகள் பேச முடியாது. இவை அனைத்தையும் அவர் விருப்பப்படி செய்ய நான் இங்கிருந்து போயாக வேண்டும்.

உடனே படியேறி மேல் மாடிக்குச் சென்றேன். தூரத்தில் கம்பத்தில் யாரோ சிலரின் வீட்டில் எரிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்திகள் அவ்வீட்டின் உருவங்களின் அசைவுகளைச் சிறியதும் பெரியதுமாகக் காட்டி மிரட்டிக் கொண்டிருந்தன. அதுவொரு இருண்ட கம்பம். பெரும்பாலானோர் இங்கிருந்து மாறி போய்விட்டார்கள். காட்டுப்பகுதி என்பதால் நாளாக நாளாக ஆட்கள் குறைந்து கொண்டிருந்தனர். இருப்பினும் அன்று ஏனோ ஆட்கள் இருக்கிறார்கள் என்பது மனத்திற்கு சௌகரிகமாக இருந்தது.

முதலில் அலுவலகத்தின் கதவைத் திறக்க நினைத்தேன். டார்ச் லைட்டைப் பூட்டின் மீது பாய்ச்சினேன். சாவியைப் பிடிக்கத் தடுமாறியதால் முதலில் பூட்டைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு சாவித் துவாரத்தை உற்று நோக்கினேன். ஒரு கையாலே பூட்டைத் திறந்து கதவை உள்ளே தள்ளினேன். ‘கிரேங்ங்ங்’ என ஒரு குழந்தையைப் போன்று முனகி வழிவிட்டது. நான் தேடி வந்த கோப்பைத் தலைமை ஆசிரியரின் கதவுக்கு அருகே இருக்கும் பெட்டியில் வைத்திருக்கக்கூடும். டார்ச் லைட்டின் விளக்குப் போக போக மங்கிக் கொண்டே வந்தது.

“இந்தச் சனியன் வேற…ஒழுங்கா வேலை செய்ய மாட்டுது”

இம்முறை ஓங்கி கைவிளக்கை உள்ளங்கையில் அடித்தேன். அடித்த வேகத்தில் அதன் தலை கழன்று எங்கோ உருண்டோடியது. வெளிச்சம் சிதறி கரைந்தது. கொஞ்ச நேரத்தில் இருள் சூழ்ந்து கொண்டது. பாக்கெட்டில் இருந்த கைப்பேசியை எடுத்து அதன் வெளிச்சத்தைக் கொண்டு நான் இருக்கும் இடத்தைச் சுதாரிப்பதற்குள் எங்கோ ஒரு குரல் கேட்டது. அக்குரல் பின்னர் பலரின் குரலாக மாறியது. கைப்பேசியின் கம்மியான வெளிச்சத்தைக் கொண்டு சுற்றிலும் தேடினேன். யாரும் இருப்பதற்கான அறிகுறியே இல்லை. ஆனால், எங்கோ சன்னமாகக் குரல்கள் மட்டும் கேட்டன. யாருமற்ற சூழல் என்பதாகத்தான் நம்பியிருந்தேன். மனம் கணத்து ஒரு ஜடப்பொருளாகி உள்ளுக்குள் துடித்துக் கொண்டிருந்தது. சுவரில் காது வைத்தால் ஒருவேளை அச்சத்தத்தின் ஆதாரத்தைக் கண்டுபிடிக்க முடியும் எனத் தோன்றியது. மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு சுவரில் வலது காதை வைத்தேன். பக்கத்தில் இருக்கும் முதலாம் ஆண்டு வகுப்பறையிலிருந்துதான் அச்சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.

மெதுவாக அலுவலகத்தை விட்டு வெளியில் வந்தேன். முதலாம் ஆண்டு வகுப்பறை மற்றதைக் காட்டிலும் கொஞ்சம் சிறியது. மொத்தம் 15க்கும் குறைவான மாணவர்களே கடந்த 6 வருடங்களாகப் பதியப்பட்டு வருவதால் ஏற்கனவே வைப்பறையாக இருந்த இவ்வறையை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கானதாக மாற்றிவிட்டோம். 3 மேசைகள் தாராளமாக ஒரு வரிசையில் போட முடிந்த பரப்பளவு. கரும்பலகையில் மட்டும் வானத்தின் வெளிச்சம் குறைவில்லாமல் படர்ந்திருந்தது. சத்தம் அங்கிருந்து வருவதை நன்றாகக் கேட்க முடிந்தது.

பதற்றமாக இருந்தாலும் வகுப்பறைக்குள் நுழைந்தேன். கொஞ்ச நேரத்திலேயே அது மாணவர்களின் குரல்கள் என அறிய முடிந்தது. நடுக்கம் மனத்தின் மொத்த பரப்பையும் அதிரச் செய்தது. இருள் அறை முழுவதும் பரவி நின்றது. வெளியில் இருக்கும் யாவற்றையும் பார்க்க முடியவில்லை. வெளியே இல்லாமல் ஓர் ஒற்றை அறையாக மட்டுமே அது மாறிக் கொண்டிருந்தது. வெட்டவெளிக்கு நடுவே ஒரே ஒரு அறை. எதையும் அழுத்தமாகச் சுதாரிக்க இயலவில்லை. கம்பம் இல்லை. மெழுகுவர்த்திகளும் இல்லை. வெளியில் இருக்கும் முனியாண்டி அண்ணனை அழைக்க முயன்றேன். சத்தம் எழவில்லை. இருள் என்னைச் சுற்றி பெரும் சுவராக எழுந்து கொண்டிருந்தது. சுற்றிலும் எதையும் கவனிக்கவும் முடியவில்லை.

காற்றை அலசினேன். எதாவது தட்டுப்பட்டால் அதன் வழி வெளியே ஓடிவிட எத்தனித்தேன். கைகள் காற்றில் உலாவி ஓய்ந்தன. உடல் கனமாகிக் கொண்டே இருந்தது. தூரத்தில் சட்டென கரும்பலகை மீண்டும் பார்வையில் பட்டது. அதன் ஓரத்தில் டார்ச் லைட் விட்டு விட்டு எரிந்து கொண்டிருந்தது. யாரோ இப்பொழுதுதான் அங்கு அதைத் தூக்கி வீசியதைப் போல உருண்டு சமநிலைக்குத் திரும்பிக் கொண்டிருந்தது. உடலை நிதானப்படுத்திக் கொண்டு டார்ச் லைட்டைக் கையிலெடுத்து அறையெங்கும் காட்டினேன். சுவர்களில் பெயர்கள் மட்டுமே பொறிக்கப்பட்டிருந்தன. ஏதேதோ பெயர்கள். ஒரு சிலவற்றை ஞாபகப்படுத்த முடிந்தது. அவை என் மாணவர்களின் பெயர்கள்.

ஒவ்வொரு பெயர்களுக்கும் பின் ஏதோ ஒரு நினைவு மனத்தை அழுத்தியது. பின்னே நகர்ந்தபோது ஒரு மேசை தடுக்கிக் கீழே விழுந்தேன். உருவத்தில் சிறுத்த ஒரு பையன் கீழே முட்டி காலிட்டு அழுதபடி என்னைக் கவனித்துக் கொண்டிருந்தான். அவன் கையெல்லாம் வீங்கீயிருந்தன.

“என்னடா ஆச்சு? ஏன் இங்க இருக்க?”

“சார்…மூனு வருசத்துக்கு முன்ன இதே இடம்…ஞாபகம் இருக்கா சார்? என்னை முட்டிப் போட வச்சு கையிலெ அடிச்சிங்களே? பாடம் செய்யலைனு. ஞாபகம் இருக்கா சார்?”

“டேய் டேய்..வேணும்னே அடிக்கலடா. உன் நல்லதுக்குத்தானே அடிச்சென்…”

“சார்! நீங்க அடிச்சது தப்பு இல்ல. அன்னிக்கு என்ன நீங்க பேசவிட்டிருக்கலாம். நான் வேணும்னே பாடம் செய்யாமல் வரல சார். வீட்டுல அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சண்டெ. முடில சார். அப்பா வீட்டை விட்டு அடிச்சி விரட்டிட்டாரு. எங்க சார் போவோம்? ரோட்டுலெ படுத்துக் கெடந்துட்டு மறுநாள் ஸ்கூலுக்கு வந்தெ என்ன நீங்க அப்படி அடிச்சிருக்கலாமா சார்?”

ஓங்கி மனத்தை யாரோ மிதிக்கும் கணம் உள்ளுக்குள் இறங்கியது. மனம் எழ முடியாமல் தடுமாறி மேலும் ஏதோ ஓர் ஆழத்தில் சரிந்தது. டார்ச் லைட்டை மேசைக்கு வலது புறம் கேட்ட சத்தத்தை நோக்கிக் காட்டினேன். சட்டை வெளியே எடுத்துவிடப்பட்ட நிலையில் புத்தகப்பையை மாட்டிக் கொண்டு ஒரு பையன் சுவரில் சாய்ந்து நின்று கொண்டிருந்தான். அவன் கண்களில் பயம் மட்டுமே மீந்திருந்தது. அப்பயத்தைக் கண்டு எனக்கும் பீதி உண்டானது. உயிரை நுனிவரை பிடித்து நிற்கும் பயம். அவன் உடலில் உள்ள மொத்த பலத்தையும் சேர்த்து ஓர் ஒற்றை பயத்தைக் கண்களில் தாங்கி நின்றிருந்தான். ஒரு விரலால் தொட்டாலே உடைந்து வீழ்ந்துவிடும் அளவுக்கு உறைந்திருந்தான்.

“டேய்! நீ வினோத் தானே? என்னடா ஆச்சு? ஏண்டா இப்படி இருக்கெ?”

“சார்…என் கண்ணெ பாருங்க. பயம் சார். பயம் ஒரு பேய் மாதிரி என்னெ தின்னுது. தினம் தினம் நடுங்கி பார்த்திருக்கீங்களா? என் கண்ணெ பாருங்க சார்”

“ஏண்டா பயப்படுறெ?”

“சார் இந்தப் பயம்…உங்கனாலெத்தான் சார். உங்கள பாத்தாலெ நடுங்குது. நீங்க வந்துட்டுப் போற வரைக்கும் உயிரெ கழுட்டிக் கையுல வச்சிருப்பன் சார்… உங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும் சார். எத்தனையோ நாள் பேச நெனைச்சு வருவேன் சார்… ஆனா நீங்க… முடியல சார்”

சட்டென அவனும் காணாமல் போனான். ஒன்றும் புரியாமல் கையில் வைத்திருந்த டார்ச் லைட்டைச் சுவரில் காட்டினேன். என் எதிரே ஒரு பழைய கண்ணாடி தொங்கிக் கொண்டிருந்தது. யாரும் பயன்படுத்தாமல் பலநாள் விடப்பட்ட கண்ணாடி. அருகே சென்று என் உருவத்தைப் பார்த்தேன். பேயொன்று நின்று கொண்டிருப்பதைப் போல தென்பட்டது. பேய், இருட்டுப் பேய். இருளை விழுங்கி நிற்கும் பேய். இருளாகி நிற்கும் பேய். எனக்கு என்னைப் பார்க்க முதன் முதலாய் ஆச்சர்யமாக இருந்தது. தலையே சுற்றிக் கொண்டு வந்தது.

சட்டென சுவர் இரண்டாகப் பிளந்து ஒரு பெரும் இருளை நோக்கி சென்று கொண்டிருந்தது. என்னையறிமால் கால்கள் நடக்கத் துவங்கின. உடல் என் ஆணைக்காகக் காத்திருக்கவில்லை. யாரோ இயக்கிக் கொண்டிருந்தார்கள். வெறும் குரல்கள். என்னை இழுத்துச் சென்று கொண்டிருந்தன. சற்று முன்பிருந்த பள்ளிக்கூடத்தின் எந்த அடையாளமும் அங்கு இல்லை. முனியாண்டி அண்ணன், சுற்று வட்டார மக்களின் வீடுகள் எதுவும் கண்ணுக்குத் தெரியவில்லை. ஓர் இருண்ட பாதை. தூரத்தில் ஒரு வெளிச்சம். என் கையிலிருந்த டார்ச் லைட் மட்டும் பிரகாசமாக அவ்விருளை உடைத்து உள்நோக்கிப் படர்ந்து கொண்டிருந்தது. இருள் எப்பொழுதுமான நிஜம் என மனம் சொல்லிக் கொண்டே இருந்தது.

இருண்ட பாதை எங்கோ நடந்து கொண்டிருந்தேன். வழிநெடுகிலும் அறையும் சத்தமும் படீர் படீர் என அடிக்கும் ஒலியும் அழும் குரல்களும் கேட்டுக் கொண்டே இருந்தன. அழும் குரல்களில் கெஞ்சல்களும் மன்னிப்பும் மாறி மாறி தத்தளித்துக் கொண்டிருந்தன.

சட்டென ஒரு மேசைக்கு முன் அமர்ந்திருந்தேன். முனகிக் கொண்டிருந்த நாற்காலி. கையில் டார்ச் லைட்.

“நல்லா பிடிங்க சார். சார்!!! கையில தட்டுங்க லைட்டு வரும். சார்! கேக்குதா?”

குரல் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது. எனக்கு முன்னே இருந்த கரும்பலகை மெல்ல மறைந்து வானம் தெரிந்தது. மேசை நாற்காலி மறைந்து படிக்கட்டு மட்டும் தெரிந்தது. யாரோ முதுகில் கையை வைத்தது நினைவுக்கு எட்டியது.

“சார்! என்ன சார்? ஏன் இங்க உக்காந்துட்டீங்க? லைட்டு பெரச்சன பண்ணுதா?”

முனியாண்டி அண்ணன் நின்றிருந்தார். படிக்கட்டில் எப்பொழுது அமர்ந்தேன் என ஞாபகம் இல்லை. என்ன நடந்தது என்பதும் குழப்பமாக இருந்தது. பள்ளிக்கூடம் இருட்டில் மூழ்கியிருந்தது. எழுந்து நின்றேன். கையிலிருந்த டார்ச் லைட்டை எடுத்துத் தட்டினேன். அதிலிருந்த பாய்ந்த வெளிச்சம் மனம் முழுவதும் பிரகாசத்துடன் பரவியது.

  • ஆக்கம்: கே.பாலமுருகன்

சிறுகதை: விசாரிப்பு

heart-1920x1080

அன்று பெரியசாமி தாத்தாவைப் பார்க்க முடியவில்லை. காலையில் தன் கேள்விகளுடன் தயார்நிலையில் இருக்கும் அடுத்த வீட்டுத் தாத்தாவின் நாற்காலி காலியாக இருந்தது. ஆச்சர்யமாகவும் நிரம்ப மகிழ்ச்சியாகவும் இருந்தது. அமைதியான ஒரு காலையை அன்று தரிசிக்கிறேன். குறிப்பாக விசாரிப்புகள் இல்லாத காலை.

எங்கள் வீட்டு மரத்திலிருந்து ஓர் இலை விழுந்தாலும் பெரியசாமி தாத்தாவிடம் சொல்லியாக வேண்டும். அதற்கும் ஒரு நான்கு கேள்விகள் வைத்திருப்பார். அவருடைய வீட்டுக்கு வெளியே மரத்தால் ஆன பெரிய நாற்காலியும் ஒரு மேசையும் போடப்பட்டிருக்கும். இரண்டு வீட்டுக்கும் ஒரு பொத்தல் கம்பி வேலி மட்டுமே. நாற்காலியை வேலிக்கு அருகாமையில் போட்டுக் கொண்டு நாள்தோறும் எங்கள் வீட்டையே பார்த்துக் கொண்டிருப்பார்.

வீட்டிலிருந்து வெளியேறும் எல்லாரிடமும் எதையாவது விசாரிப்பார். அவருக்குத் தெரியாமல் எங்கள் வீட்டில் ஓர் அணுவும் அசையக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார். அதில் அப்பாத்தான் பாவம். அவரிடம் சிக்கி சிதறிவிடுவார். வேலைக்குத் தாமதமாகிவிடும் என்கிற பதற்றமும் பதில் சொல்ல முடியாமல் நகர முடியாத சங்கடமும் சேர்த்து அவரை அழுத்தும். அதை அப்படியே முகத்தில் காட்டிக் கொண்டு நிற்பார்.

“முனுசாமி! நேத்து என்னடா வீட்டுக்குள்ள ஏதோ சத்தம்?”

“முனுசாமி! உன் பெரிய மயன் என்னிக்கு வருவான்?”

“முனுசாமி! மோட்டர்லேந்து எண்ணெ ஒழுகிட்டே இருக்கு போல?”

எங்கள் வீட்டைவிட்டு வெளியேறும் யாவரும் முதலில் தலையை மட்டும் விட்டு இராமசாமி தாத்தா இருக்கும் இடத்தைக் கவனிப்பதுண்டு. பிறகொரு நாட்களில் எல்லாருக்கும் இப்பழக்கம் தொற்றிக் கொண்டது. ஆனால், இராமசாமி தாத்தா காலையில் எங்களுக்கெல்லாம் முன்பே எழுந்து நாற்காலிக்கு வந்துவிடுவார்.

“அந்த மனுசன் என்னா நம்ம வீட்டு ஜாகாவா? இதெல்லாம் ஓவரா இல்ல? அவரு மகன்கிட்ட சொல்லி வச்சுடு. எனக்கு மண்டைக்கு மணி அடிச்சிச்சினா அவ்ளத்தான்”

அப்பாவுக்கும் அம்மாவிற்கும் வீட்டுச் சண்டை உள்மோதும். பெரியசாமி தாத்தா சலனமே இல்லாமல் எங்கள் வீட்டு வாசலையே பார்த்துக் கொண்டிருப்பார். பெரும்பான்மையான நேரத்தில் அவர் கேள்விகள் எனக்கு எரிச்சலாக இருந்தாலும் அவருடைய இருப்பு அதைவிட எரிச்சலூட்டும். ஒருமுறை தாங்கமுடியாமல் கேட்டுவிட்டேன். ஆனால், அவர் கேட்டதாகத் தெரியவில்லை. அடுத்த கேள்விக்கு வந்துவிட்டார்.

பெரியசாமி தாத்தாவிற்கு ஒரே மகன். வீட்டில் அவருடைய மகனும் அவருடைய மருமகளும் மட்டும்தான். அவர்களுக்குக் குழந்தை இல்லை. வீட்டில் பகல் முழுவதும் அவருக்கு வேலை இல்லை. பெரியசாமியின் மனைவி ஆச்சியம்மா இறந்த நான்காண்டுகளில் அவர் கற்று கொண்ட ஒரே வித்தை வேடிக்கை. வேடிக்கை பார்ப்பது. ஒரு தியானத்தைப் போன்று நிதானமானது அது.

தாத்தாவின் வேட்டி எப்பொழுதும் வேலியில் அத்துமீறி தொங்கும். பாதிக்கு மேல் எங்கள் வீட்டுச் சுவரில் இறக்கியப்படித்தான் அவர் காயப்போடுவார். பல சமயங்களில் அது வேலி தாண்டி எங்கள் வீட்டின் தரையில் விழுந்துவிடும். அதை எடுத்துக் கொடுக்க சதா எங்களை அழைத்துக் கொண்டிருப்பார். அப்படி எடுக்க வெளியில் வந்தால் மாட்டிக் கொள்வோம். ஒரு ஐந்து நிமிடமாவது பேசிவிட்டுத்தான் அனுப்புவார். அப்பா வீட்டில் கொஞ்சம் சத்தம் போட்டுப் பேசிவிட்டால், அதன் பிறகு வெளியில் வரும் எல்லாரிடமும் பெரியசாமி தாத்தா அப்பா சத்தம் போட்டதைப் பற்றி விசாரிப்பார்.

“டேய்! ஏண்டா உன் அப்பன் அப்படிக் கத்துறான்?”

“ஏம்மா உன் மனுசன் அப்படி இருக்கான்? அவனுக்கு என்ன பெரச்சன?”

இப்படிக் கேள்விகள் நாக்காக நீண்டு எங்களை வழித்துத் தீர்த்துவிடும். பெரும் எரிச்சல் மண்டைக்குள் நுழைந்து குடையும். கடவுள் என்னைக் காது கேளாமல் படைத்திருந்தால் என்னவென்று தோன்றும். இப்படிச் சில நாட்களுக்குப் பிறகுத்தான் அப்பாவிற்கு ஒரு யோசனை தோன்றியது. வீட்டின் பின்பக்கக் வேலியில் ஒரு பெரிய பொத்தலைப் போட்டு அதனைப் பிரித்து கதவாக்கினார். அப்பா மட்டும் பின்வழியில் வீட்டுக்குள் வரத் துவங்கியது ஆச்சர்யமாக இருந்தது. வீடு நெருங்கியதும் மோட்டாரை அடைத்துவிட்டு சத்தமே இல்லாமல் பின்வாசல் வழியாக உள்ளே வந்துவிடுவார்.

“என்னப்பா முனுசாமியெ ஆளே காணம்? எங்கப் போய்ட்டான்?”

உங்களுக்கென்ன எனக் கேட்கும் தோன்றும். அப்பாவை வெளியாள் யாராவது அவன் இவன் எனச் சொல்லிக் கூப்பிட்டால் எனக்குக் கோபம் வந்துவிடும். வார்த்தைகளை மென்று அதன் உக்கிரத்தைக் கண்களில் காட்டுவேன். சிலர் புரிந்து கொள்வார்கள். இராமசாமி தாத்தா அதற்குச் சளைத்தவர் அல்ல. அடுத்த கேள்வியை அவர் தனது தொண்டைக்குள் உற்பத்தி செய்து கொண்டிருப்பார். விட்டால் போதும் என ஓடி வந்துவிடுவேன்.

அப்படிப்பட்ட தாத்தா அன்று வெளியில் வரவே இல்லை. மனம் ஒரு பக்கம் அவர் காலம் முடிந்து போயிருக்கலாம் என நினைக்கத் தூண்டியது. படுக்கையிலேயே அவர் நேற்றைய இரவில் தன் உயிரை விட்டிருக்கலாம். அதை யாரும் இன்னும் கவனிக்கவில்லை. சாயங்காலம் வரும்போது இங்கொரு பந்தல் போடப்பட்டிருக்கக்கூடும். கூப்பாடும் அழுகையுமான ஒரு பொழுது இன்னும் சிறிது நேரத்தில் இவ்விடத்தைச் சூழ்ந்து கொள்ளும். அப்பாவிடம் சொல்லி பின்வேலியை மீண்டும் அடைக்கச் சொல்லிவிடலாம்.

நேற்றைய இரவு நெஞ்சுவலி வந்து அப்பா பெரிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். ஒருவேளை அந்த நெஞ்சுவலி இந்தத் தாத்தாவினால்கூட வந்திருக்கலாம் எனத் தோன்றியது. அம்மாவை மீண்டும் ஏற்றிக் கொண்டு வந்து வீட்டில்விட மருத்துவமனைக்குக் கிளம்பினேன். போகும்போது பெரியசாமி தாத்தாவின் ஒரு வேட்டி எங்கள் வீட்டில் விழுந்து கிடந்ததைப் பார்த்தேன்.

அப்பாவிடம் ஆறுதல் சொல்லிவிட்டு அம்மாவை அழைத்து வீட்டுக்கு விட வரும் வழியில் பெரியசாமி தாத்தா வியர்த்துக் கொட்ட வெயிலில் நின்றிருப்பதைக் கண்டேன். மோட்டார் என்னையறியாமல் அவர் பக்கமாகப் போய் நின்றது.

“என்னடா மகேன்? அப்பா ஆஸ்பித்திரில இருக்கானாம்? காலையிலெ கிளம்பி வந்தென் பாக்கலாம்னு. எடம் தெரிலடா. யாரும் ஒழுங்கா சொல்ல மாட்டறாங்க. நடந்தெ வந்து கொஞ்சம் அப்படியெ தலை கிர்ர்ர்னு ஆச்சு. அப்பா எப்படி இருக்கான்?”

கேள்விகளுடன் நின்றிருந்தார் பெரியசாமி தாத்தா.

  • கே.பாலமுருகன்

 

சிறுகதை: மண்டெ

 

PAINTINGSimage3

லோரோங்னா ரோடு. அதுவும் லோரோங் 64ன்னா எல்லோருக்கும் ஒரு பயம் இருக்கும். நாலு வீடு பெரிய மண்டைங்களோட வீடு. எல்லாம் கஞ்சா தவுக்கே. எவனாவது படம் காட்டெ வந்தானா அவன் மோட்டரெ எரிச்சுருவாங்க. ஆள் மாட்டனா அடிச்சி தூக்கிக் காட்டுல போட்டுருவாங்க.

அதுல ஒரு மண்டையெ பாக்கத்தான் பெரிய ஆஸ்ப்பித்திரிக்கு வந்துருக்கென். ரோட்ல லாரிக்காரன் மோதிட்டு ஓடிட்டான். கஞ்சா பாவ் பண்றவனுக்கெல்லாம் இதான் கதின்னு சொல்லிட்டு பொண்டாட்டி பிள்ளைங்களும் பாக்கவே வரல. கேக்கப் போனென். வீட்டுல யாரும் இல்ல. சொந்தக்காரனுங்களும் யாரும் இல்ல. கூட்டாளிங்களுக்கும் தெரிஞ்சவனுங்களுக்கும் இருக்கறப்பல்லாம் கொடுத்துச்சி. கொடுத்து என்ன பண்ண? எல்லாம் கஞ்சா காசு. நிக்காது. பாவத்தையும் கழுவாதுன்னு லோரோங் 64ல்ல நிறைய சாபம்.

மேல, அஞ்சாம் நம்பர் வார்ட்டுல நுழைஞ்சோனே பாக்கலாம். மூஞ்சி கிழிஞ்சி அங்கங்க தைச்சிருப்பாங்க. ஒரு கால் இல்ல. எடுத்தாச்சு. டையர ஏத்திட்டானுங்க. வயிறு பொடைச்சிக்கிட்டு இருக்கும். அதுதான் அந்த லோரோங் 64 மண்டெ. ரோட்டு வாசல்லே மோட்டர நிப்பாட்டிட்டு எந்நேரமும் உட்காந்துக்கும். கூட ரெண்டு பேரு எப்பவும் இருப்பானுங்க. அந்த லோரோங்க்கு காவல் தெய்வம் மாதிரி அங்கேத்தான் எல்லாமே. பீர் போத்தல்லே குடும்பம் நடத்திட்டு விடியக்காலைல வீட்டுப் பக்கம் போகும்.

லோரோங் 64ல்ல அதுக்குன்னு ஒரு பயம் இருந்துச்சு. அதோட அப்பாவும் முன்ன அப்படித்தான். தூக்குல போட்டுட்டானுங்க. இதுவும் நாலு தடவ கேங் சண்டெ கேஸ்ல உள்ளப் போய்ட்டு வந்துருக்கு. யாரும் சொல்லித் தர்லெ. வீட்டுல ரத்தம் பாத்த வளப்பு. என்ன பண்றது?

“மண்டெ! மண்டெ! இப்ப எப்படி இருக்கு?”

மண்டைக்கிட்ட இருந்து பதிலே இல்ல. அப்படியே மல்லாக்க பாத்துக்கிட்டு மூச்சை இழுத்துப் பிடிச்சி சுவாசிச்சிக்கிட்டு இருந்துச்சி. உள்ள போய்ட்டு மீண்டும் வெளில வர்ற காத்து திணறிக்கிட்டு இருந்துச்சி. கண்ணு ரெண்டும் உள்ள போயிருச்சி. ஓரக் கட்டில். சன்னலுக்கு வெளியெ வெளிச்சம் அதோட மூஞ்சில பட்டு சுத்தம் செஞ்சிக்கிட்டு இருந்துச்சி. பச்சை உடுப்பு போட்டுருக்கு. ஆஸ்பித்திரி உடுப்பு அதுக்குப் பத்தல. பாவம். பெரிய உடம்பு, இன்னும் உப்பிருச்சி வேற. முட்டிக்குக் கீழ கொஞ்சம்தான். இல்லாத காலு மனசுல துருத்திக்கிட்டு இருந்துச்சி. போர்வையெ இழுத்து மூடிட்டேன். முட்டிக் கிழிஞ்ச ஜீன்ஸோட மண்டெய பாத்த ஞாபகம். மனசுக்கு முடிலெ.

‘ஸ்ட்ரோக்’ வரலாம்னு சொல்லிட்டாங்க. பக்கத்து படுக்கைல இருந்த மலாய்க்கார தாத்தா சொல்லிக்கிட்டு இருந்தாரு. மண்டெ மோட்டர்ல ஜம்முன்னு தெறிக்கற காட்சி மனசுல வந்துட்டு வந்துட்டுப் போய்க்கிட்டு இருந்துச்சி.

“மண்டெ? மண்டெ விளங்குதா?”

மூச்சு மட்டும் சீரா இல்லாம திணறுனுச்சி. முகத்துல உயிரெ இல்ல. வெறும் உடம்பு. அசையாத அந்த உடம்பெ ரொம்ப நேரம் பாத்துக்கிட்டே இருக்கென். மேட்டு வீட்டுல உள்ள சிவாவெ தனியாளா தூக்கிட்டு வந்து லோரோங் 64ல்ல வச்சு அடிச்சி ரோட்டுல போட்டு மூஞ்செ தேய்க்கும்போது மண்டைக்கு நிகர் மண்டைத்தான்னு பேசிக்கிட்டாங்க.

மண்டெ காடி திருட்டு, கஞ்சா, ஆளைக் கடத்துறதுன்னு மும்முரமா இருந்தப்பத்தான் இந்தப் பெரச்சன. சிகரேட் வாங்க நிப்பாட்டிருக்கு. போன் அடிச்சிருக்கு. பேசிக்கிட்டெ ரோட்டு ஓரத்துல நிண்டுருச்சி. அது லோரி ஒதுங்கர வலவு. சட்டுன்னு தெரிஞ்சிக்க முடியாது. சின்ன லோரோங்.

மண்டென்னு இருந்த பேரு ‘கஞ்சா மண்டென்னு’ மாறி எல்லாத்துக்கும் பழகிடுச்சு. ஆனா, நான் மண்டென்னுத்தான் கூப்டுவேன். அப்பா செத்துப் போனப்ப ரோட்டுல நிண்டென். மண்டெத்தான் கூட்டிப்போய் சீனன் கடையில வேல வாங்கிக் கொடுத்துச்சி. வேற ஒன்னும் தெரியாது. எடுப்பிடி வேலயும் கொஞ்சம் செஞ்சென். அப்ப்ப்ப காசு இல்லன்னு சொன்னா பாக்கேட்டுல அஞ்சு பத்து திணிக்கும். சூருல சிவந்த கண்ணு அதுக்கு. அழுந்த கண்ணு. ஆனா, மண்டெ அழுந்ததெ இல்ல. போலிஸ்ல வச்சு அடிச்சி பாதி உயிர் உடம்புல இல்ல. நெஞ்செ நிமித்திக்கிட்டு நிக்கும். பயப்படாது. ஆனா, இப்ப சொத்த உடம்பா போச்சு. காலும் இல்ல. கையும் நரம்பு பிச்சிக்கிச்சாம்.

“மண்டெ! மண்டெ! நான் பேசறது கேக்குதா?”

பதிலே இல்ல. அது போட்டுருந்த ஜீன்ஸ் மடிச்சி ஒரு பிளாஸ்டிக் பைல கட்டி வச்சிருந்தாங்க.

“யாரும் பாக்க வந்தாங்களா?”

பக்கத்து படுக்கையில இருந்தவரு இல்லைன்னு தலைய மட்டும் ஆட்டனாரு. அதுக்குமேல அங்க இருக்க பிடிக்கல. கீழ இறங்கிட்டென். மண்டெ எங்கன்னு யாரும் கேக்க மாட்டாங்கன்னு நினைக்கும்போது மனசு பிச்சிக்கிட்டுப் போலாம்னு தோணுச்சி. விருவிருன்னு நடந்தென்.

கே.பாலமுருகன்

சிறுகதை: அரிவாள்

2185442044_20ce21b26c_z

பாசார் முனியாண்டி கோவிலில் முனியாண்டி பிடித்திருந்த அரிவாள் காணாமல் போனதிலிருந்துதான் அவர்களுக்குப் பீதி கண்டது. அரிவாள் இல்லாத முனியாண்டி வெறும் கையுடன் இருந்தார். அதுவரை பாசார் கம்பத்தில் திமிருடன் சுற்றிக் கொண்டிருந்த சூரும் அவன் வீட்டில் செத்துக் கிடந்தான்.

முனியாண்டியை அரிவாள் இல்லாமல் பார்ப்பது எல்லோருக்கும் சங்கடமாகவும் தீட்டாகவும் தோன்றியது. மேட்டு வீட்டு சுப்பிரமணியம் மாலையில் கோவிலுக்குப் போய் விளக்கைக் கொளுத்திவிட்டு சாமி ஆடுவதையும் நிறுத்திக் கொண்டார். முனியாண்டியை மஞ்சள் துணியால் கட்டி மூடினார்கள். கோவில் வெளிச்சமில்லாமல் கிடந்தது. பாசார் கம்பத்தில் நுழைந்ததும் குறுக்குப் பாதையில் ஒரு பழைய வண்டி இருக்கும். அதுவொரு தள்ளு வண்டி. எத்தனையோ வருடத்திற்கு முன் யாரோ போட்டுவிட்டுப் போனது. கருவடைந்து திருப்பிடித்து மண்ணோடு மக்கியும் போய்விட்டது. ஒரு சில இரும்புகள் மட்டும் வெளியே பிளந்து கிடக்கும். அதற்குப் பின்னால் உள்ள முனியாண்டியை எல்லோரும் பாசார் முனியாண்டி என்றுத்தான் அழைப்பார்கள்.

கோவிலுக்குள் சுவர் இருக்காது. வெறும் தூண்கள் மட்டும்தான். அதுவும் பெரியசாமி காலத்தில் அவருடைய முயற்சியால் கட்டப்பட்டது. அதற்கும் முன் கையில் அரிவாளுடன் வெட்ட வெயிலில் கூரையில்லாமல் முனியாண்டி நின்றிருப்பார். வெய்யிலில் வெளுத்துப் போன முனியாண்டியை வருடம் ஒருமுறை சாயம் பூசி பொங்கல் தினத்தில் பூஜை செய்துவிடுவார்கள். அதுவும் பெரியசாமி குடும்பத்தினர்தான் பொறுப்பு. இப்பொழுது கொஞ்சம் வசதி வந்ததும் கோவில் இழுத்துக் கட்டப்பட்டு கூரையும் தூண்களும் கட்டப்பட்டன. பாசார் கம்பத்திற்குள் நுழைந்ததும் ஆக்ரோஷமான திமிர் பார்வையுடன் கோபத்தைக் கக்கிக் கொண்டிருக்கும் முனியாண்டியைக் கண்டு பயப்படாமல் இருக்க மாட்டார்கள்.

இரவில் கம்பத்தில் காய்ச்சல் வந்தவர்களுக்கு சுப்பிரமணியம்தான் சாட்டையடிப்பார். இரண்டுமுறை வலிக்காதபடி சடங்கிற்குச் சாட்டையை முனியாண்டியின் அரிவாளிலிருந்து எடுத்து காய்ச்சல் கண்டவர்களின் முதுகில் அடிப்பார். சாட்டை மாலை நேரத்தில் முனியாண்டியின் அரிவாளில் தொங்கவிடப்பட்டிருக்கும். மாலை பூஜைக்கு வரும் சுப்பிரமணியம் அதனை எடுத்து அரிவாளில் மாட்டுவார். அப்பொழுது அதற்குத் தனி சக்தி கிடைப்பதாக நம்பிக்கை.

சாட்டையின் பிடியில் கருப்புத் துணி மொத்தமாக வைத்துக் கட்டப்பட்டிருக்கும். அதன் நுனியில் ஒரு சிவப்புத் துணியும் அதில் எப்பொழுதும் திர்நீர் வாசமும் வீசும். சாட்டை முருக்கேறி விறைப்பாக இருக்கும். யாருக்காவது பேய் பிடித்துவிட்டால் முனியாண்டி கோவிலில் வைத்து சுப்பிரமணியம் சாட்டையால் அடிக்கும்போது பார்க்கும் எல்லோருக்கும் வலிக்கும். சாட்டையடி வாங்கி மயங்கி விழுந்தவர்க்குப் பேய் போனதோ இல்லையோ உயிர் பாதி போய்விட்டிருக்கும்.

கம்பீரமாகக் கையில் அரிவாளுடன் நிற்கும் முனியாண்டியின் முன் எந்தப் பேயும் பயந்தோடிவிடும் என நம்புவதால் அவரின் அரிவாளில் தொங்கவிடப்பட்டிருக்கும் சாட்டையின் மகிமை எல்லோருக்கும் தெரியும். சுப்பிரமணி அதனைக் கையில் எடுத்து விலாசும்போது முனியாண்டியாக மாறிவிடுவார். கண்கள் இரண்டையும் உருட்டிக் கொண்டும் நாக்கை வெளியில் நீட்டிக் கொண்டும் கத்துவார். அவருடைய பெருத்த கைகளிலிருந்து நரம்புகள் புடைத்துக் கொண்டு தெரியும். அப்படி அவர் சாட்டையுடன் நிற்கும்போதுதான் நிறைய பேருக்குக் காய்ச்சல் கூடி வேறு வழியில்லாமல் பெரிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.

பாசார் முனியாண்டியின் கையில் இருக்கும் அரிவாள் கொஞ்சம் பிரசித்திப் பெற்றது. பெரியசாமியும் அவர் குடும்பத்தாரும் ஒவ்வொரு வருடம் அரிவாளை முனியாண்டியின் கையிலிருந்து உருவி அதனை எண்ணெயில் ஊற வைப்பார்கள். அரிவாளை அப்படிச் சாதாரணமாக உருவியெடுக்கவும் முடியாது. ஒரு வருடம் முனியாண்டியின் கையில் இருந்த அரிவாள். ஒரு குழந்தையின் கையிலிருந்து ஒரு பொம்மையை அத்தனை சாதாரணமாகப் பிடுங்கிவிட முடியாது. முதலில் அதற்குச் சிரிப்புக் காட்ட வேண்டும். அதன் கவனத்தைப் பொம்மையிலிருந்து வேறு பக்கம் மாற்ற வேண்டும். குழந்தை அறியாத கணத்தில் அதன் கையிலிருக்கும் பொம்மையை எடுக்க வேண்டும். பொறுமை இல்லாதவர்களால் அப்படிச் செய்ய முடியாது. முனியாண்டியின் கையிலிருக்கும் அரிவாளும் அப்படித்தான். யாரும் தொடக்கூட மாட்டார்கள். அது தலையில் இருக்கும் கிரிடத்தைப் போன்று.

பெரியசாமி அல்லது சுப்பிரமணி மட்டுமே அதை ஒரு தெய்வக் காரியமாக நினைத்து செய்வார்கள். ஓரிரு நாள் எண்ணெயில் ஊறிய கத்திக்குப் பின்னர் சாயம் பூசுவார்கள். அதன் பளபளப்பு கூடிவிடும். பின்னர், பெரியசாமியின் மகன் அரிவாளில் பட்டையை வரைவான். மூன்று கோடுகள், நடுவில் ஒரு சிவப்பு வட்டம். அரிவாள் ஜோடிகப்படுவதுகூட அன்றைய தினத்தில் பெரிய விழாவாக இருக்கும். தப்படிக்க பாசார் பையன்கள் நான்கு பேர் வந்துவிடுவார்கள். முருகேசனின் குரல் கேட்டால் பாசார் பெண்களுக்கு அருள் வந்திவிடும். அந்த அளவுக்கு கனீரென்ற குரல். தன்னுடைய குரலிலேயே உடுக்கை அடிக்கும் சக்தி முருகேசனுக்கு மட்டுமே உண்டு. முருகேசன் பாட, தப்படித் தெறிக்கும். பெரியசாமி முனியாண்டிக்குப் படையல் வைத்துவிட்டு அவரை ஆசுவாசப்படுத்திவிட்டு அரிவாளை உருவுவார். கைகள் நடுங்கும். ஒரு மாபெரும் வீரன் உறங்கிக் கொண்டிருக்கும்போது அவனுடைய இடைவாரிலிருந்து அவனுடைய கூர்மையான கத்தியை உருவும்போது உருவாகும் பயம் பெரியசாமியைத் தாக்கும். மற்ற ஆளாக இருந்தால் அதனைத் தாங்கிக் கொள்ள முடியாது. உடல் சூடேறி இறந்துவிடுவார்கள் என நம்பப்படுகிறது. ஆகையால்தான், பெரியசாமி அக்காரியத்தைச் செய்கிறார்.

அரிவாளை உருவியுடன் பாசாரில் இன்னொரு வழக்கம் உண்டு. அரிவாள் இல்லாத முனியாண்டியைக் கம்பத்தில் யாரும் பார்க்கக்கூடாது. ஆகவே, அவரை ஒரு மஞ்சள் துணியால் கட்டி மூடிவிடுவார்கள். ஒவ்வொரு வருடமும் இரண்டு நாட்கள் மட்டும் முனியாண்டி அப்படி இருப்பார். அவ்வழியே போகும் யாவரும் கோவிலைத் திரும்பிப் பார்க்கக்கூடாது. அப்படி இரண்டு நாட்கள் முனியாண்டி அரிவாள் இல்லாமல் இருக்கும் நாட்களில்தான் கம்பத்தில் திருட்டுச் சம்பவங்கள் நடப்பதும் கெட்ட கனவுகள் தோன்றுவதும் ஏற்படும். மக்கள் பீதியில் இருப்பார்கள். இப்பொழுது முனியாண்டியின் கையிருந்த அரிவாள் திடீரென காணமல் போனதும் சூரு செத்துப் போனதும் கம்பமே அதிர்ந்து போனது. எல்லோரையும் பயம் பிடித்துக் கொண்டது.

சூரு காந்திராவின் பையன். 37 வயதில் கஞ்சா கடத்தி பாசாரிலேயே பிடிப்பட்டான். பத்து வருடங்கள் கமுண்டிங் சிறையிலேயே காலத்தைத் தள்ளிவிட்டு மீண்டும் வந்தபோது பாசாரில் அவன் மீது ஒரு பயம் இருந்தது. அந்தப் பயம் அவன் சிறைக்குப் போய் வந்ததால் இல்லை. காந்திராவ் பாசாரில் செய்ததாகச் சொல்லப்படும் மூன்று மர்மக் கொலைகளை யாரும் மறக்கவில்லை. வழிவழியாக அப்பயம் எல்லோரின் மீதும் திணிக்கப்பட்டே வந்தது.

காந்திராவின் மனைவி ஓடிப்போனதும் அன்றைய இரவே அவருடைய மனைவியுடன் ஓடியவனின் அப்பாவையும் அவன் இரண்டு தம்பிகளையும் யாரோ கொலை செய்துவிட்டார்கள். வீட்டுக்குள் கழுத்தறுப்பட்டு கிடந்தவர்களின் உடல்களை இரத்த வெள்ளித்திலிருந்து மீட்டார்கள். அப்பொழுது காந்திராவ் தலைமறைவானவர்தான். இன்றுவரை அவர் வரவே இல்லை. ஆகையால்தான், அவருடைய மகன் மீது எல்லோருக்குள்ளும் ஒரு தவிர்க்க முடியாத பயம் ஒட்டிக் கொண்டிருந்தது. அவன் எங்கு இருந்தாலும் சுருட்டு வாசம் வீசிக் கொண்டே இருக்கும். சுருட்டு அவனுக்கு ஆறாவது விரல் மாதிரி உடலிலேயே இருக்கும். காதில் செருகியிருப்பான்; விரலுக்கு இடையில் வைத்திருப்பான்; புகைக்காமல் அவன் வாயில் வெறுமனே நஞ்சு கிடக்கும். அவனையும் சுருட்டையும் பிரிக்க முடியாது.

சிறையிலிருந்து சூரு வந்து ஆறு மாதமாகியும் அவனை யாரும் ஒரு கேள்வி கேட்கவில்லை. கிடைக்கும் வேலைகளைச் செய்து கொண்டு கம்பத்தில் திரிந்து கொண்டிருந்தான்.

சரசு வீட்டில் அவளுக்கும் கணவனுக்கும் சண்டை வந்த நாளில்தான் சூருவின் சுயரூபம் வெளிப்பட்டது. அன்றைய இரவில் சரசு வீட்டில் நடந்ததை வைத்து சூரு யார் எனத் தெரிந்து கொண்டார்கள்.

“ஏய் சனியனே! எவன் கூட கூத்தடிக்கறியோ அடிச்சிக்கோ. ஆனா, வீட்டுலேந்து போய்ரு. உன்ன வச்சிக்க என்னால முடியாதுடி”

சரசுடைய கணவன் இராமசாமி அவளின் முடியைக் கொத்தாகப் பிடித்து வெளியே கொண்டு வந்து போட்டான்.

“சொல்லு வேற என்ன இருக்கு? ஒரு மனசாட்சி இருக்கா உனக்கு? தினத்திக்கும் சாப்பாட்டுக்கு வழி செஞ்சேன்ல. குடிச்சிட்டு வந்து வாய்க்கு வந்த மாதிரி பேசுறீயே உங்கம்மா உன்ன எந்த நேரத்துலே பெத்தா?”

இராமசாமிக்கு அம்மாவைப் பற்றி பேசியதும் கோபம் தலைக்கேறியது. மேசையில் இருந்த மைலோ டின்னை எடுத்து வீசினான். அவ்வளவுத்தான். சரசின் புருவத்தைப் பிளந்தது. சாலையிலேயே கதறிக் கொண்டு விழுந்தாள். இராமசாமியின் வீட்டுப் பக்கத்தில் தனியாக இருந்த சூரு வெளியில் வந்தான். கட்டம் போட்ட கைலி அப்பொழுது ஆண்கள் மத்தியில் பிரபலம். சூரு வெளுத்தக் கைலியை மடுத்துவிட்டு சுருட்டைப் புகைத்துக் கொண்டிருந்தான். சரசின் அழுகையும் கதறலும் சாபமும் அவனுக்குள் ஏதோ செய்தது.

“டேய் நாயே! கட்டையிலெ போறவனே. குட்டிசோரா போய்ருவடா…என் மண்டய உடைச்சிட்டெ இல்ல…மவனே உனக்கு இருக்குடா”

இராமசாமி வெளியில் வரவே இல்லை. அவளை விலாசிவிட்டு உள்ளே போனவனின் சத்தமே இல்லை. சரசு முடியை விரித்துவிட்டு கால்களை உதறிக் கொண்டு சாபமிட்டாள். ஆக்ரோஷமான அவளுடைய குரல் உடைந்தது. சூரு கால்களை அகட்டி குத்திட்டான். சுருட்டை இன்னும் வேகமாகப் புகைத்தான். அவன் கண்கள் செத்திருந்தன. நாக்கு வரண்டிருந்தது.

“ஆம்பள நாய்ங்களா. உங்களுக்கு என்ன திமிருடா. பொம்பளையே போட்டு அடிக்கிறியெ ஆம்பளயாடா நீ?”

அன்று சரசைத் தரதரவென அவள் வீட்டுக்குள் இழுத்துக் கொண்டு போன சூரு அவள் கணவனின் காதை அறுத்துவிட்டான். சரசு சூரைக் காட்டிக்கொடுக்கவில்லை. பின்னர் அந்த வீட்டில் என்ன நடந்தது என யாருக்கும் முழுமையாகத் தெரியவில்லை. பெரியசாமியை அடித்து மலத்தொட்டியில் வைத்து முக்கினான் சூரு என சரசின் மூலம் தகவல் வெளியானதும் வதந்தியாகவே இருந்தது.

பிறகொருநாள் சரசின் கணவன் வீட்டை விட்டே ஓடிவிட்டான். தனியாக இருந்த சரசை சூரு எடுத்துக் கொண்டான் என்றும் பேசிக் கொண்டார்கள். அத்தனை நாட்கள் அமைதியாக இருந்த சூரு செய்த இந்தக் காரியத்தைக் கண்டு எல்லோரும் மேலும் பயந்தார்கள். அவனுக்குத் தனி பலம் இருப்பதாகவும் அவன் ஒரு வெறிநாய் என்றும் பேசிக்கொண்டார்கள். காந்திராவின் கொலைவெறி அவனிடம் இருப்பதாகவும் சொல்லிக் கொண்டார்கள்.

“முனியாண்டி சாமித்தாண்டா இந்தக் கம்பத்தைக் காப்பாத்தெ இந்த சூரு பையன கொன்னுட்டாரு…இல்லாட்டினா இந்த சரசை வச்சுருந்தான்லே…அவளே முனியாண்டியோட அரிவாள்ல வெட்டிக் கொன்னுட்டு ஓடிட்டா போல ஓடுகாலி…”

“சும்மா சொல்லாதீங்க சாமி. தினமும் அவளைப் போட்டு அடிச்சி சாப்பாடு கொடுக்காமல் கொடும பண்ணான் இந்த சூரு…சாமி கோவம் வரும் அவளுக்கு. அதான் முனியாண்டி அவ உடம்புல இறங்கி முடிச்சிட்டாரு”

சுப்பிரமணியும் பட்டையப்பனும் வீதியிலே கத்தி சண்டையிட்டுக் கொண்டனர். தொய்வடைந்த கிடந்த கம்பம் மெல்ல விழித்தது. பக்கத்துக் கம்பத்தில் போய் பாசார் முனியாண்டிக்கு அரிவாள் செய்து வர பெரியசாமி கிளம்பினார். அதற்கு முன் மஞ்சள் துணியால் கட்டப்பட்டிருக்கும் முனியாண்டி சாமியிடம் அனுமதி கேட்டு வரக் கோவிலுக்குச் சென்றார். கோவிலில் இருள் கவிழ்ந்திருந்த்து. பாசார் முனியாண்டியின் முகம் உயிர்ப்பில்லாமல் சோகம் கவிழ்ந்த முகத்தைப் பெரியசாமி பார்த்ததும் பதறினார்.

கோபத்தைக் கழற்றி வைத்துவிட்டு வந்த குழந்தையாய் முனியாண்டி நின்றிருந்தார். அங்கிருந்து பெரியசாமி வெளியேறும்போது சூரு வந்தால் வீசும் சுருட்டு வாசம் சட்டென சூழ்ந்து கொண்டது.

கே.பாலமுருகன்
(Malaigal.com)