சிறுகதை: கால்கள்

அஞ்சலை அலறியடித்துக் கொண்டு ஓடி வரும்போது கணேசன் பத்து தீகா செங்கல் ஆலையில் இருந்தான். வெயில் எரித்துப் போட்ட காட்டத்தில் அப்படியே மல்லாந்து படுத்திருந்தவாறு மெல்ல வாயைத் திறந்து மூடிக் கொண்டிருந்தான். உடலின் உள்ளே அடைத்துக் கிடந்த மொத்த உஷ்ணத்தையும் வெளியேற்ற முயன்றான். ஒரு லாரி செங்கல்களை ஏற்றி முடித்த களைப்பு.

“கயலு மூங்கிலு கொட்டாய் ஒடைஞ்சி சேத்துல விழுந்துட்டா…”

கயல்விழி என்றதும் கணேசன் பக்கென்று எழுந்து அமர்ந்தான். தூரத்தில் வெறுங்காலுடன் அஞ்சலை ஓடி வந்தாள். அவளுடைய பதற்றம் புழுதியைக் கிளப்பிவிட்டபடி வரும் கால்களில் தெரிந்தது. செங்கல் ஆலையின் வாசலில் வந்து நின்றவள் கணேசனைக் கைக்காட்டி அழைத்தாள். இவனும் மகளுக்கு ஏதோ ஆகிவிட்டதெனக் கழற்றி சிமெண்டு தரையின் விளிம்பில் வைத்திருந்த சிலிப்பரை மறந்து ஓடத் துவங்கினான்.

செங்கல் துகள்கள் நிறைந்த மண். எதையும் பொருட்படுத்தாது கணேசன் அஞ்சலையுடன் வீட்டை நோக்கி ஓடினான்.

“ஐயோ! என்ன ஆச்சுடி? அப்பவே பயந்தன்… நெனைச்ச மாதிரி நடந்துருச்சி… நீ எங்க போயி தொலைஞ்ச?”

“ஐயோ… இங்கத்தான் சீனன் கடை வரைக்கும் போனங்க… அதுக்குள்ள இப்படி ஆச்சி…”

“அறிவிருக்கா உனக்கு? பிள்ளைய ஒண்டியா விட்டுட்டுப் போயிருக்க… ஐயோ! நான் என்ன பண்ணுவன்…”

வழியெல்லாம் கணேசன் பிதற்றிக் கொண்டே வந்தான். அந்த மூங்கில் கழிப்பறையைக் கடந்த மாதம்தான் கணேசன் செய்து கொடுத்தான். இதற்கு முன்பு பலகையில் வெட்டப்பட்டு வைக்கப்பட்டிருந்த கழிப்பறையின் சந்திலிருந்து பாம்புகள் நுழைந்துவிடும். பலமுறை கயல்விழி பார்த்துவிட்டுக் கழிப்பறைக்குப் போகாமல் அடம் செய்துவிடுவாள். அவளுடைய கழிப்பறை போராட்டம் குறிப்பாக இரவில் உச்சமாக ஒலிக்கும். கீழே உட்கார்ந்து கொண்டு கால்களை உதறுவாள். ஒரு ஆள் வேகமாக ஓடினாளே வீடு தாங்காமல் அதிரும். கயலுடைய சிறிய கால்கள் உண்டாக்கும் அதிர்வைச் சத்தமில்லாமல் வீடு விழுங்கிக் கொள்வது ஆச்சரியம்தான்.

“ஐயோ! என் பிள்ளைக்கு என்ன ஆச்சுன்னு தெரியலையா… யாராவது இருந்தா ஒடியாங்க…”

பதறியடித்துக் கொண்டு வீட்டைச் சேர்ந்ததும் கணேசன் வீட்டின் கீழடுக்கில் நுழைந்தான். ஊர்ந்து சென்று சேற்றுப் பரப்பை அடைந்தான். வீட்டின் கீழடுக்குச் சற்று இருளாக இருந்தது. அங்கு ஆற்றுக்கும் வீட்டின் மண்தரைக்கும் இடையிலிருந்த சேற்றில் கயல் இடுப்புவரை மூழ்கி கிடந்தாள்.

“பா… பா… காப்பாத்துப்பா… உடும்பு வரப்போது…”

கணேசனைப் பார்த்ததும் கயல் அலறத் தொடங்கினாள்.

“அசையாதம்மா… அசைஞ்சன்னா இன்னும் சேறு உள்ள இழுக்கும்… அப்படியே இரு… அப்பா வந்துட்டன்…”

குப்பைகளும் மலங்களும் கலந்த சேற்றில் கயல் போராடி தோற்றக் களைப்பில் சோர்ந்து தெரிந்தாள். கணேசனுக்கு அவளைப் பார்த்ததும் மேலும் அழுத்தமும் பதற்றமும் கூடின. அதுவரை பயந்திராத அந்த ஆற்றைக் கணேசன் முதன்முறையாக கடுஞ்சீற்றமும் பயமும் கலந்து பார்த்தான். கயலை உள்ளே இழுத்துக் கொள்ளும் அளவிற்கு ஆபத்தான ஆறு என்பதைக் கணேசன் அறிந்திருந்தான்.

அத்தாப் கம்பத்து வீடுகளுக்குக் கழிப்பறை என்பது ஒரு வெட்டவெளி ஏற்பாடு. மேக்கடை வீடு ஆற்றின் மேலே தூக்கி நிறுத்தப்பட்டிருந்தது. சொதசொதப்பான மண்தரைக்கு மேலே இரண்டடியில் வீடு. மண்ணைப் பிளந்து உள்ளே செருகப்பட்டிருக்கும் பெரிய மரத்தூண்கள். வீட்டின் உள்ளே இரண்டு இடங்கள் மட்டும்தான். ஒன்று படுத்துக் கொள்ளவும் சமையலுக்கும். அடுத்து அதன் கடைசி தொங்கலில் ஒரு சிறு பலகை தடுப்பிற்கு உள்ளே கழிப்பறை. ஓர் ஆள் உள்ளே நுழைந்தால் உட்கார மட்டுமே இடமுண்டு. உள்ளேயே குளித்தும் கொள்ள முடியும். பலகை சட்டங்களின் பிடியைப் பிடித்துக் கொண்டு உட்கார வேண்டும். பலகையைக் கணக்காக வெட்டிப் பிளந்து வைத்திருக்கும் இடத்திலிருந்து பார்த்தால் ஆற்றின் மேற்பரப்பு தெரியும். சில சமயங்கள் தண்ணீர் வற்றி வீட்டின் கீழ்ச்சட்டத் தூண்களைக் கெட்டியாகப் பிடித்திருக்கும் சகதியின் சொதசொதப்பான பரப்பு மட்டுமே தெரியும். அதனைப் பார்த்தபடிதான் உட்கார வேண்டும்.

“மா… பயமா இருக்குமா… உடும்பு வந்துரும்…”

கயல்விழியின் உச்சப் பிடிவாதமே மலம் கழிப்பதில் மட்டுமே இருந்தது. அதுவும் இரவில் உள்ளே போகவே மாட்டாள். மேலே எரிந்து கொண்டிருக்கும் மங்கிய பல்ப் வெளிச்சத்தில் கீழே ஒன்றும் தெரியாது. இருளில் ஆற்று நீரின் மெல்லிய சலசலப்பு மட்டுமே கேட்கும். அதுவும் நீர் உடும்பின் சத்தமாக இருக்கலாம் என கயல்விழி சுயமாகக் கற்பனை செய்து கொள்வாள். அது நாக்கை நீட்டியப்படியே தன்னைக் கவனித்துக் கொண்டிருப்பதாக அவளே பயந்து அலறுவாள். தேற்றி மீண்டும் உட்கார வைத்துவிட்டு வருவதற்குள் அஞ்சலைக்குப் போராட்டமாகிவிடும்.

“கயலு… கீழ ஆத்தப் பாக்காதடி… கண்ண மூடிக்கிட்டுப் போய்ட்டு வந்துரு…”

அப்பொழுதும், “மா, கக்கா வரலம்மா…” என்று சொல்லி சமாளித்துவிட்டு வந்துவிடுவாள். நள்ளிரவில் வயிற்று வலி தாளாமல் அஞ்சலை வீட்டுக்கு வெளியிலுள்ள மரத்தடிக்கு அழைத்துச் செல்வாள்.

“உனக்கு இதே பொழப்புடி… உள்ள ஜாமான்கொட்டாய் கட்டிக்கொடுத்தா இது வெளில வந்து தெறந்த வெளில போகுது…”

இருளுக்குள் தரையைப் பார்த்தபடி கயல்விழி கவனமாக அமர்ந்திருப்பாள். அம்மா சொல்வதும் திட்டுவதும் அவள் காதில் விழாது. தூரத்தில் ஆற்றுச் சலனம் மட்டுமே அவளுக்குள் பேரலையாக எழுந்து வரும். இங்கிருந்து இந்த ஆறு ஒரு சிற்ரோடையாக மாறி குறுகி சென்று பின்னர் நாற்பது மீட்டருக்கு அப்பால் மீண்டும் விரிந்து ஓடும். அத்தாப் கம்பத்தின் கடைசி வீடு அது. அதனாலேயே அசூயையும் வசதியும் ஒன்றரக் கலந்திருந்தன. ஆற்றினோரம் இருபது வீடுகள் கொண்ட நீள்வரிசை. கொட்டித் தீர்க்கும் அனைத்துக் குப்பைகளும் சிற்றோடையாக மாறும் இடத்தில் வந்து அடைத்துக் கொள்ளும். அது நிரம்பும்போது கணேசன் வீட்டின் கீழே பிளாஸ்டிக் குப்பைகள் முதல் சைக்கிள் டீயுப்கள் வரை சட்டங்களை வளைத்துக் கொள்ளும். இரவில் நீரோடும் ஓசை மாறியும் பெருகியும் வரும். அதைக் கேட்டு உறங்கி பழகிவிட்டார்கள்.

“யேங்க, ஆறு பொங்கிருச்சி… சுத்தம் செஞ்சுருங்களேன்…”

கணேசன் மறந்தாலும் அஞ்சலை ஆற்றில் குப்பைகள் வீட்டுக்குக் கீழாக நிறைந்துவிட்டதை நினைவுப்படுத்திவிடுவாள். கணேசன் வீட்டிக்கு அடியில் நுழைந்து நீண்ட கம்பியைக் கொண்டு குப்பைகளை ஆற்றோட்டத்திற்கேற்ப தள்ளுவான். இந்த வேலையை முடிக்க அரை நாள் எடுக்கும். மேட்டிலிருந்து வாங்கி வந்த கள்ளை ஒரு டப்பாவில் ஊற்றி வைத்துக் கொள்வான். விட்டுவிட்டு மேலேறி வந்து கள்ளைக் குடித்துவிட்டுத்தான் மீண்டும் கீழடுக்கிற்கு இறங்குவான். மிகவும் குறுகலான இடம். குனிந்து கொண்டே தோதாக படுத்தபடி குப்பைகளைத் தள்ள வேண்டும். அப்படித் தள்ளி சுத்தப்படுத்தினால்தான் வீட்டிலிருந்து வெளியேறும் அழுக்குகளையும் மலங்களையும் அப்புறப்படுத்தி ஆற்றோட்டத்தில் விட முடியும்.

“நாறுதுடி…தாங்க முடில…”

“அதான் மூனு நாளைக்கு ஒரு வாட்டி சுத்தம் செஞ்சிட்டா இப்படி நாறுமா? சொன்னா கேக்கறது இல்ல…”

நேற்றைக்கு வீட்டின் கீழடுக்கைச் சுத்தம் செய்ததால் இப்பொழுது கணேசனால் மாட்டிக் கொண்ட கயலை அடைய சுலபமாகிவிட்டது. அதற்குள் பக்கத்து வீட்டுப் பையன்கள் வீட்டைச் சுற்றி கூடிவிட்டனர். அவர்களின் சலசலப்பு பெருகி வீட்டின் அடியில் எதிரொலித்தது. கயல் போன்ற சிறு உருவம் கொண்டவர்கள் தாராளமாகக் கீழடுக்கில் நுழைந்து ஒளிந்து கொள்ள இயலும். கயலுக்கு அந்த விளையாட்டு மிகவும் விருப்பமானது. யாருக்கும் தெரியாமல் மதியத்தில் வீட்டின் கீழடுக்கில் நுழைந்து கொண்டு படுத்துக் கொள்வாள். அங்கிருந்து கொண்டு வீட்டுக்கு வருபவர்களின் கால்களைக் கவனிப்பாள்.

கணேசனின் கால்கள் வெண்மை பூத்திருக்கும். செங்கல் ஆலையில் வேலை செய்வதால் அந்த வெண்மை படிந்து பின்னர் கால்களில் அப்படியே நிலைத்துவிட்டது போன்று காட்சியளிக்கும். அம்மாவின் வலது காலின் தீக்காயம் அவருக்குத் தனி அழகு எனச் சொல்லி எல்லோரும் கேலி செய்வார்கள். மெலிந்த கால்கள். பெருவிரலின் நகம் கோணலாக இருக்கும். ஆள்களைப் பார்க்காமல் கயல் கால்களைக் கொண்டு யார் வருகிறார்கள் என்பதை அறிந்து கொண்டு சப்தம் எழுப்பி விளையாடுவாள்.

“கணேசன் ஹீ ஹீ ஹீ!!!!” எனக் கயல் கத்தும்போது அது அவளுடைய குரல்தான் எனத் தெரிந்தும் கணேசன் அலறுவது போல் பாவனை செய்து அவளை மகிழ்விப்பான்.

பெரும்பாலும் கயல் இங்குள்ள பிள்ளைகளோடு சேர மாட்டாள். கம்பத்தை விட்டுப் பெரிய சாலைக்கு அந்தப் பக்கமுள்ள ஆற்றோர வீடுகளுக்குச் சென்றுவிடுகிறார்கள் என அஞ்சலைக்கு அங்குள்ள பிள்ளைகளைப் பிடிக்காது. காலப்போக்கில் கயலுக்கும் அவர்களைப் பிடிக்காமல் போய்விட்டது. அதனால், வீட்டைச் சுற்றி அவளே பல விளையாட்டுகளைக் கண்டு பிடித்துக் கொண்டாள். அதில் ஒன்றுதான் வீட்டின் கீழடுக்கில் ஒளிந்து கொண்டு நோட்டமிடுவது. ஒரு பூனையைப் போன்று பகலை வேடிக்கை பார்த்தவாறு இருப்பாள். அவ்வப்போது சேற்றிலிருந்து நீர் உடும்பு வந்துவிடும் என்கிற அச்சமும் உடன் இருக்கும்.

“யக்கா, கயலு சேத்துல விழுந்துருச்சிக்கா… மாரியாத்தா மகளக் காப்பாத்து…”

அஞ்சலை வருவோரிடம் பயத்தில் புலம்பத் தொடங்கினாள். கணேசன் நிதானத்தை இழக்கவில்லை. கயலிடமிருந்து ஓரடியில் ஆறு சற்றே இறங்கி தடுப்புக் கம்பிகள் பக்கம் ஓடிக் கொண்டிருந்தது. சேறு பிடித்து வைத்திருக்கும் அவளுடைய கால்கள் சற்றுத் தளர்ந்தாலும் அவள் ஆற்றோட்டத்தில் சிக்கிக் கொள்வாள். நீந்தி சென்று அவளைப் பிடிப்பதற்குள் கம்பி தடுப்பில் மாட்டி கீழ்நோக்கி இருக்கும் அதன் கூர்முனைகளில் முகமோ அல்லது முதுகோ கிழிப்பட வாய்ப்புண்டு. கணேசனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. வீட்டில் நீர் சேமிக்கப் பயன்படுத்திய நீலத் தோம்பொன்று ஆற்றில் மிதந்து கொண்டிருந்தது.

“யேங்க, கயல தூக்கிட்டிங்களா? காப்பாத்திருங்க பிள்ளய…”

அஞ்சலை கீழே குனிந்து கத்தினாள். அவளுடைய குரலைக் கேட்டதும் கயல் மேலும் பரபரப்பானாள். சோர்ந்து உடைந்திருந்த குரலால் அம்மாவை அழைத்தாள். அச்சத்தம் கணேசனுக்கு மட்டும் கேட்டதே தவிர அதைத் தாண்டி போகவில்லை.

“மா… கயலு… அப்படியே இருடா… அசையாத செல்லம்… அப்பா வந்துட்டன்… சரியா?”

அவள் வழக்கமாக அணிந்து கொள்ளும் சிவப்புக் கவுனின் பின்கயிறு அவள் மூழ்கியிருந்த சேற்றில் பாழ்படாமல் அப்படியே மேலே கிடந்தது. கணேசன் ஊர்ந்து சேற்று முகவாயின் விளிம்புக்கு வந்துவிட்டான். மண்தரையில் கிடந்த ஜூஸ் போத்தலின் மூடி அவன் முட்டியைக் கிழித்திருந்தது. எரிச்சலைப் பொருத்துக் கொண்டு கையை நீட்டி அவளைத் தொட முயன்றான். விரல்களிலிருந்து இன்னும் நான்கடி தூரத்தில் கயல் இருந்தாள். தூரத்திலிருந்து பார்க்கப் பக்கத்தில் இருப்பது போல் தெரிந்த கயல் சற்றுத் தூரம் தள்ளிதான் இருந்தாள்.

கயல், கணேசனின் ஒரு பகுதியாக இருந்தாள். அஞ்சலையைவிட கணேசன் மீது அதிக உரிமை கொண்டவளாக இருந்தாள். அப்பா எந்நேரமும் தனக்கருகில் இருக்க வேண்டுமென விரும்புவாள். அதனாலேயே பள்ளி விடுமுறை நாள்களில் காலையில் அவள் விழித்தெழும் முன் கணேசன் வேலைக்குக் கிளம்பிவிடுவான். இல்லையென்றால் அவனை விட மாட்டாள். சைக்கிளில் ஏற்றிக் கொண்டு கம்பத்தை வலம் வர வேண்டுமென அடம் செய்வாள். கணேசனின் சைக்கிளில் கால்களை நீட்டிக் காற்றில் மோதவிட்டவாறு அமர்ந்திருப்பதில் அவ்வளவு குதூகலம் அவளுக்கு. உலகைச் சுற்றி வந்துவிட்ட திருப்தியுடன் இருப்பாள். வேறு யாராலும் அவளுக்கு அத்தகையதொரு மகிழ்ச்சியை வழங்கிவிட முடியாது.

கணேசனுடைய நேரம் அவனுடயதாக இல்லாமல் கயலுக்காக மட்டுமே செலவிட்டான். அவனுக்குச் சொல்லிக்கொள்ளும் அளவில் நண்பர்கள் கிடையாது. கள்ளை வாங்கிக் கொண்டு வந்து யாருக்கும் தெரியாமல் வீட்டினோரம் அமர்ந்து குடித்துவிட்டுப் படுத்துவிடுவான். கயல் ஒரு கணம்கூட அவனை வெளியே செல்ல விடமாட்டாள். அவளுக்குத் தெரியாமல் எங்கும் செல்லக் கணேசன் திட்டமிட வேண்டியிருக்கும். குளிக்கும்போது கழிப்பறையில் இருக்கும்போது அவளுக்குத் தெரியாமல் ஓடிவிடுவான்.

“ணே, மேலேந்து தூக்கிரலாமா?”

பக்கத்து வீட்டுப் பையன் விஜயன் கீழே ஊர்ந்து அவருக்குப் பின்னால் வந்து சேர்ந்தான்.

“டே, கயலோட பாரத்தையே அந்த மூங்கிலு தாங்கலடா… நீ போனன்னா மொத்தமா இடிஞ்சி அவத் தலையிலதான் விழும். ஆபத்துடா… ஏதாவது நீட்டுக் கட்ட இருக்கானு பாரு…”

விஜயன் மீண்டும் வெளியே ஓடிப்போய் அவன் வீட்டுக்குப் பக்கத்தில் கொய்யா அறுக்க வைத்திருந்த கட்டையைக் கொண்டு வந்தான். அதன் முனையில் பழத்தை அறுக்க வளைந்த கம்பி இருக்கும். அதனைக் கழற்றிவிட்டுக் கட்டையை மட்டும் கணேசனிடம் நீட்டினான்.

“மா… அப்பா இந்தக் கட்டய நீட்டறன்… அப்படியே கெட்டியா பிடிச்சிக்குறியா? அப்பா உன்ன மெதுவா இழுத்துருவன்…”

கணேசன் சொன்னதற்குக் கயல் பயந்த விழிகளோடு கட்டையைப் பார்த்தாள். மரணப் பயம் அவள் மீது முழுவதுமாக படிந்திருந்தது. மீண்டும் இந்த ஆற்றைவிட்டு வெளியேறி தூரத்தே தெரியும் மண் தரையில் ஓடியாடி விளையாடவும் குட்டியப்பன் நாயோடு துரத்திப் பிடித்து விளையாடவும் உள்ளே சேற்றுக்குள் அசையாமல் கிடக்கும் கால்களுக்கு வாய்ப்பில்லாதது போல் அதிர்ச்சியாலும் கவலையாலும் தோய்ந்து கிடந்தாள். கால்களால் சேற்றின் வழவழப்பை அவளால் உணர முடிந்தது. இடையிடையே கூராக ஏதோ ஒன்று காலை உரசிச் செல்வதாக உணர்ந்தாள். கால்கள் அவள் வசம் இல்லை. அப்படியே அசையாமல் கிடந்தாள்.

“மா… ஒன்னு நல்லா ஞாபகம் வச்சுக்கோ… கால மட்டும் அசைச்சிராத…அப்படியே சேத்துக்குள்ளே இருக்கட்டும்… சேத்துல வெளையாட வந்தேன்னு நெனைச்சிக்கோ… தோ… இன்னும் ரெண்டு நிமிசத்துல அப்பா உன்ன இழுத்துறவன்… சரியா?”

கயல், கணேசன் சொல்வதைக் கேட்டு அதனைச் செய்து பார்க்கும் நிதானத்தில் இல்லை. ஒன்பது வயது பிள்ளைக்கு சாத்தியமில்லாத பொறுமையை வரவழைக்கத்தான் கணேசன் ஆபத்தின் விளிம்பில் போராடிக் கொண்டிருந்தான்.

இந்த மூங்கில் கழிப்பறையைக் கணேசன், கயலுக்காகத்தான் செய்து கொடுத்தான். வழக்கம்போல் ஆற்றைப் பார்க்கக் தேவையிருக்காது. கழிக்கும் மலம் சாய்வாக வைக்கப்பட்டிருக்கும் மூங்கில் பிளவுகளின் வழியாகக் கீழே ஓடி விழுந்துவிடும். நான்கைந்து மூங்கிளைப் பிளந்து அதனைச் சற்றுக் கீழே இறக்கிச் சாய்வான அல்லூரைப் போன்று கம்பியில் இருகி கட்டிவிட்டான். மூங்கில் கம்புகளை ஒன்றொடொன்று இறுகி கட்டி இரு முனைகளிலும் இருக்கும் பலகை சட்டங்களின் பிடியோடு உட்கார்ந்து கொள்ளும் அளவில் கவனமாகத்தான் செய்திருந்தான். வீட்டின் உறுதியான சட்டங்களின் ஓரங்களைத் தாண்டி வீட்டிற்குள் போய் நீண்டிருக்கும் மூங்கிள் கால்களில் ஆணியும் அடித்திருந்தான். ஓர் ஆள் உள்ளே நுழைந்து வசதியாக உட்கார்ந்து கொள்வதில் எந்தச் சிக்கலும் ஏற்படாது என்றுதான் நினைத்திருந்தான்.

“அப்பயே டவுனு வீடொன்னு பாத்துப் போயிறலாம்னு சொன்னன்…”

வெளியில் அஞ்சலையின் புலம்பல் ஓயவில்லை. அவளும் அழுது ஓய்ந்திருந்தாள். குரலின் தொனி இறங்கி அதில் சோர்வும் கையறுநிலையும் கலந்திருந்தன. இந்தச் செங்கல் ஆலையில் வேலையை விட்டுவிட்டால் டவுனில் எந்த வேலையும் சரிப்பட்டு வராது என்பது கணேசனுக்குத் தெரியும். அதுவும் சிறுவயதில் ‘கேளாங் லாமா’ தோட்டத்திலிருந்து வந்ததிலிருந்து இந்தக் கம்பத்தை விட்டு அவன் நகர்ந்ததே இல்லை.

சென்ற வருடம் ஆற்றில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் காந்தராவ் வீட்டின் பின்பகுதி கீழ்ச்சட்டம் உடைந்து அவன் வீடு சாய்ந்து கொண்டதை யாராலும் மறக்க முடியாது. எல்லோரும் வெளியேறி மழையில் நின்று கொண்டே ஆற்று வெள்ளத்தில் பிடிமானமில்லாமல் அசைந்து கொண்டிருந்த வீட்டைப் பார்த்தனர். விடிவதற்குள் வீடு ஆற்றோடு போய்விடும் என்றுதான் நினைத்தார்கள். எப்படியோ மழை ஓய்ந்ததும் வீடு தப்பித்துக் கொண்டது. இப்பொழுது நினைத்தாலும் வெள்ளக்காலத்தில் எல்லோருக்கும் பீதி கிளம்பிவிடும்.

அந்தச் சம்பவத்திற்கு அடுத்து இப்பொழுது கயல் சேற்றில் விழுந்த செய்தி கம்பத்தில் சட்டெனப் பரவியது. கணேசனின் நண்பர்கள் பலர் தூரத்தில் இருக்கும் தொழிற்சாலைகளில் வேலை செய்கின்றனர். உடனே அவர்களுக்குத் தகவலும் சொல்ல முடியாது. கணேசன் மெதுவாகக் கட்டையைக் கயல் பக்கம் கொண்டு போனான். கயல் அதன் முனையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டால் போதுமானது. சட்டென அவளை இழுத்துவிடலாம். நான்கடி தூரம்தான்.

“ணே, பாலத்துக்கு அந்தப் பக்கம் நிசாம் அங்கள்கிட்ட ‘போட்’ இருக்கும்… எடுத்துட்டு வரச்சொல்லட்டா? அதுல போய் அந்தப் பக்கத்துலேந்து கயல இழுத்துறலாம்…”

“இருடா… இதுலே இழுத்துறலாம்னு நெனைக்கறன்… எதுக்கும் நீ போய் சொல்லு… அதுக்குள்ள முடிஞ்சா நான் இழுத்துர்றன்…”

விஜயன் வீட்டின் கீழடுக்கிலிருந்து வெளியேறி பாலத்திற்கு அந்தப் பக்கமிருக்கும் மலாய்க்காரக் குடியிருப்பிற்கு ஓடினான்.

“கயலு… இந்தக் கட்டையக் கெட்டியா பிடிச்சிக்கோ… விட்டுறாத… அப்பா இழுக்கற வரைக்கும் பொறுத்துக்கோ… சரியா?”

கயல் தன்னைச் சூழ்ந்திருக்கும் சேற்றை உற்றுக் கவனித்தாள். காலுக்கடியில் ஏதேதோ ஊர்ந்து செல்வதும் உரசுவதுமாக இருப்பதாக உணர்ந்தாள். அவையெல்லாம் உடும்பு என்பதாகவே கற்பனை செய்தாள். மேலே உடைந்த மூங்கில் வாய்ப்பிளந்து அவளுடைய தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருந்தது. அது உடும்பின் நாக்கென நினைத்தாள். தன் உடலை மொத்தமாகப் பிடித்து அசைக்க முற்படும் சேற்றை நீர் உடும்பின் மொத்த வாயாக நினைக்கத் தொடங்கினாள். வீடும் மனிதர்களும் அவளுக்குத் தெரியவில்லை. இந்த ஆற்றிலிருக்கும் ஒரு ராட்சர உடும்பு தன்னைக் கௌவியிருப்பதாக அவள் உண்டாக்கிய கற்பனையின் உச்சத்தில் இருந்தாள்.

அவள் நினைத்தது போல கணேசனிடமிருந்து ஓர் உடும்பு நாக்கை நீட்டியபடி தன் சிறிய கால்களைச் சேற்றில் மென்மையாக வைத்துத் தன்னை நெருங்கிக் கொண்டிருப்பதைக் கவனித்தாள். யாருடைய குரல்களும் அவளுக்குக் கேட்கவில்லை. அந்த ஒல்லியான உடும்பு வெகுநாள் பசியுடன் தன்னை நெருங்குகிறது என அலறினாள்.

“பா… அன்னிக்கு நீ வீட்டுக்கு வந்தப்ப உன்கூட இன்னொரு கால் வந்துச்சே… அது யாரு? அம்மாவோட கால் இல்லயே?”

“கயலு… சும்மா கற்பனயில பேசிக்கிட்டு இருக்காத… அப்பாவே களைப்புல வந்தன்…”

“இல்லப்பா, அம்மா அன்னிக்கு மாரியம்மன் கோயிலுக்குப் போய்ட்டாங்க… நான் வீட்டுலக் கீழடுக்குல இருந்தன்… அப்பத்தான் பாத்தன்… அது யாரோட காலு?”

அன்று கணேசன் அது பேயின் கால்கள் எனச் சொல்லி அவளை மிரட்டி சமாளித்துவிட்டான். ஆனால், அந்தக் கால்கள்தான் சற்றுமுன் அவள் கழிப்பறையில் அமர்ந்திருக்கும்போது தண்ணீர் நிரம்பிய நீலத்தோம்பைத் தூக்கி மூங்கில் தரையின் மீது போட்டுவிட்டு ஓடியது எனக் கடைசிவரை கயலால் சொல்ல முடியவில்லை.

அம்மா எப்பொழுதும் கிண்டல் செய்யும் தன் ‘குட்டிஜப்பான்’ கால்களைப் பலம் கொண்டு அசைத்தாள். சேற்றின் ஒரு பகுதி அசைந்து ஆற்றோட்டத்தில் சரிந்தது.

  • கே.பாலமுருகன்

சிறுகதை: துள்ளல்

“மகமாயி…”

நெற்றி நிறைய திருநீர் பூசியிருந்த பாட்டி ஒருவர் வீட்டின் வெளிவரந்தாவில் வந்தமர்ந்ததும் கணேசனுக்குக் குதுகலமாகிவிட்டது. வீடு கம்போங் பாரு அம்மன் கோவிலுக்குப் பக்கமாக இருப்பதால் எப்பொழுதாவது அங்கு வரும் வயதானவர்கள் வீட்டுக்கு வெளியில் போடப்பட்டிருக்கும் மாரியாயி பாட்டியின் பழைய பலகை வாங்கில் வந்தமர்ந்துவிட்டுப் போவார்கள். பாட்டி இறந்த பிறகு அதைத் தூக்கி வீச மனமில்லாமல் அப்பா அப்படியே விட்டுவிட்டார். அதன் ஓரத்தில் இரும்புப் பொருள்களையெல்லாம் குவித்து ஒரு வெள்ளைச் சாக்கில் கட்டி வைத்திருப்பார். கணேசனும் தம்பியும் வாங்கில் ஏறி குதித்துத் தினமும் விளையாடுவார்கள். இரண்டடி உயரத்திலிருந்து குதிப்பதுதான் அவர்களின் உல்லாச விளையாட்டு. மதிய நேரத்தில் சாப்பிட்டுவிட்டு வாங்கில் படுத்துக் கொண்டே வானத்தைப் பார்த்தவாறு அம்மா வந்து முதுகில் பளாரென அறைந்து எழுப்பிவிடும்வரைக் கணேசன் தூங்கிக் கொண்டிருப்பான்.

“அம்மா, தாயே நீதான் காப்பாத்தணும்…”

பாட்டி கோவில் கோபுரத்தைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டார். வீட்டிலிருந்து கோபுரத்தை நன்றாகப் பார்க்க முடியும். எழுந்து நிமிர்ந்து குடைப்போன்று நிழலைப் பரப்பிக் கொண்டிருக்கும். வயதானவர்கள் கோவிலுக்கு உள்ளே புலம்புவதைக் காட்டிலும் கோவிலை விட்டுச் சிறிது தூரம் வந்ததும் திரும்பிப் பார்த்துச் சத்தமாகப் புலம்புவதைத்தான் கணேசன் அதிகம் கேட்டிருக்கிறான். விட்டு விட்டுக் கேட்கும் அவர்களின் முனகல் கோர்வையில்லாமல் அவன் மனத்தில் கிடந்தன.

“எல்லாத்தயும் மன்னிச்சிரும்மா… எல்லா பாவக்கார கழுதைங்க…”

நெற்றியோரத்தில் திரண்டு வடியக் காத்திருந்த வியர்வைத்துளியை வழித்து முடியோடு தேய்த்துக் கொண்டார். பாட்டி தனித்து ஜொலிப்பதாக உருவகித்துக் கொண்டான். முகத்தை நன்றாக உற்றுப் பார்த்ததும் எங்கோ பார்த்த மாதிரி தோன்றியது. கோவிலில் பஜனை பாடும் பாட்டி எனக் கணேசன் சட்டென அறிந்து கொண்டான். கடந்த வருடம் நவராத்திரியின்போது கோவிலில் பார்த்த நினைவு. கணீரென்ற பக்தி ததும்பும் அந்தக் குரலைக் கணேசனால் மறக்க முடியாது. கூட்டத்தின் முன்னே அமர்ந்து சிறிய சாமிப் பாடல் புத்தகத்தை மடியில் கவனமாக வைத்துக் கொண்டு இரு கைகளையும் தட்டியவாறு அவர் பாடிய பாடல் இன்னுமும் அவனுக்குள் ஒலித்துக் கொண்டிருக்கிறது. கோவில் பக்கத்திலேயே வளர்ந்ததால் அவனுக்குச் சாமிப் பாடல்களின் மீது அதீதமான விருப்பம். பஜனை கூட்டத்தைப் பரவசத்துடன் பார்த்து மகிழ்வான். காலையில் மாலையில் பெரிய பூசாரி கோவிந்தன் போடும் பாடல்கள் ஒவ்வொன்றையும் சொல் பிசகாமல் ஒப்புவிப்பான். அதுவும் இராம நவமியில் சுங்கை பட்டாணியிலிருந்து வந்த ஹரே கிருஷ்ண பக்தி இயக்கம் மிருதங்கத்தைக் கொண்டு ஆடிப் பாடி பஜனை செய்ததைக் கண்கொட்டாமல் திகைப்புடன் பார்த்தான். குதித்துக் குதித்து அவர்கள் ஆடியபோது இவன் உடலும் சேர்ந்து குலுங்கியது.

சன்னலின் வழியாக வெளியில் அமர்ந்திருந்த பாட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தான். தோளில் ஒரு வெளுத்தத் துண்டு அணிந்திருந்தார். மாரியாயி பாட்டி அடிக்கடி கோபப்பட்டுத் திட்டிக் கொண்டிருக்கக்கூடியவர். ஆனால், இந்தப் பாட்டியின் முகம் சாந்தமாய்த் தெரிந்ததில் அவனுக்கொரு ஈர்ப்பு. நெல்லி மரத்திலிருந்து கீச்சிட்டுக் கொண்டிருந்த சிட்டுக்குருவிகள் கிளைகளில் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தன. பாட்டி அவற்றை கவனித்தார்.

“என்னம்மா அம்மாவ கூப்டுறீங்களா?”

யாரோ தெரிந்தவர்களிடம் பேசுவதாக ஒலித்த பாட்டியின் குரல் கணேசனுக்கு மேலும் ஆர்வத்தைத் தூண்டியது. குருவியிடம் யாரும் பேசி அவன் கேட்டதில்லை. மாரியாயி பாட்டி ஒருநாளும் மரத்திற்கு வந்து கீச்சிடும் குருவிகளைப் பொருட்படுத்தியதில்லை. கணேசன்கூட மரத்தில் கல்லெறிந்து குருவிகளைத் துரத்தியிருக்கிறானே தவிர அவைகளிடம் பேசியதில்லை. இப்பொழுது பாட்டியின் நெற்றியில் இருக்கும் திருநீர் அவன் கண்களுக்கு இன்னும் அடர்ந்து தெரிந்தது.

பாட்டி வீட்டின் வாசலிலிருந்து வெளியேறி விருட்டென நடக்கத் துவங்கினார். அசதிக்கு உட்கார்ந்தவர் போல் தெரியவில்லை. உடனே கிடைத்துவிட்ட சுறுசுறுப்புடன் புடவையைச் சற்றே தூக்கிப்பிடித்தவாறு நடந்தார். அவர் புறப்படுவதைக் கணேசனால் பொறுத்துக் கொள்ள இயலவில்லை. யாராவது வந்து சிறிது நேரம் அமர்ந்துவிட்டுப் போகும்போதெல்லாம் அவர்களைக் கணேசன் கவனித்தபடியே இருப்பான். அவர்கள் அங்கிருந்து போகும்போது சற்றுக் கவலைப்படுவான். ஆனால், இந்தப் பாட்டி போகும்போது எதையோ எடுத்துச் செல்வதைப் போன்று உணர்ந்தான். அந்தி வெயில் மீந்திருந்த வெக்கையுடன் ஓய்ந்துபோகத் தயாராகிக் கொண்டிருந்தது. தம்பி உமிழ்நீர் ஒழுக இன்னமும் தரையின் குளிர்ச்சியை அனுபவித்தவாறு தூங்கிக் கொண்டிருந்தான். அம்மா கடைசி தம்பி படுத்திருந்த ஸ்பிரிங் தொட்டிலை ஆட்டியாட்டி சோர்ந்து வெறுமனே கைவைத்தபடியே தூங்கிப் போயிருந்தார்.

கணேசன் வீட்டிலிருந்து சத்தம் போடாமல் வெளியேறி சற்றும் யோசிக்காமல் பாட்டியைப் பின் தொடர்ந்து நடந்தான். கம்பத்து முனைவரையாவது பாட்டியைப் பின் தொடரலாம் என யோசித்துக் கொண்டே நடந்தான். பாட்டி ஆங்காங்கே இருந்த சகதி தேக்கங்களைக் கவனமாகக் கடந்து சென்றார். ஈரத்தில் தோய்ந்துபோன அவரது சிலிப்பர் சதக் சதக் எனச் சப்தத்தை எழுப்பிக் கொண்டிருந்தது. கணேசனை விட வேகமாக அவர் நடந்ததை அவன் ஆச்சரியமாகப் பார்த்தான். சில இடங்களில் சகதி தெறிக்காமல் இருக்க துள்ளிக் குதித்து விலகி நடந்தார். அதைக் கண்டதும் இவனுக்கும் ஒரு துள்ளல். மாரியாயி பாட்டி இப்படி இருந்ததில்லை. அப்பா அவரைச் சதா திட்டிக் கொண்டே இருப்பதால் வாங்கில் அமர்ந்து கொண்டு அப்பாவைப் பதிலுக்குத் திட்ட முடியாத கோபத்தைக் கணேசனிடமும் தம்பியிடமும் காட்டிக் கொண்டிருப்பார்.

“வாங்குல கால வச்சிங்கன்னா அவ்ளத்தான்…உங்கப்பனோட திமிரு அப்படியே இருக்கு…!”

மாரியாயி பாட்டியின் பஜனை இப்படித்தான் ஆரம்பிக்கும். கேளாங் லாமா தோட்டத்திலிருந்து பாதுகாத்துக் கொண்டு வரப்பட்ட வாங்கு அது. கணேசன் அந்த வாங்கில் ஏறாவிட்டாலும் பாட்டி திட்டுவதற்குக் காரணத்தை உருவாக்கிக் கொள்வார். அதுவும் விளையாட வேண்டும் என இருவரும் வீட்டுக்கு வெளியில் வந்தாலே கத்தத் துவங்கிவிடுவார். இவையெல்லாம் அப்பா வரும் வரைத்தான். அப்பா வந்த பின்னர் பாட்டியைச் சபித்துக் கொண்டிருப்பார்.

“வயசானா… கொரங்கு புத்தி வந்துரும்னு சொல்றது சரியாத்தான் இருக்கு… இங்க கஞ்சிக்கே வழியில்ல… அடிச்சி தொரத்திருவன்… ஒழுங்கா இருந்துக்கோ…” என அப்பா திட்டும்போதெல்லாம் ஒன்றும் பேச முடியாமல் கோவில் கோபுரத்தைப் பார்த்துக் கொண்டிருப்பார். இரண்டாண்டுகளுக்கு முன்னர் சாயம் அடிக்கப்பட்ட கோபுரத்தின் வண்ணங்கள் பளிச்சென்று தெரியும்.

முன்னே நடந்து கொண்டிருந்த பாட்டியின் பஜனை குரல் கேட்டது. வழக்கமாக அவர் பாடும் சாமிப் பாடல்களில் ஏதோ ஒன்றனை முணுமுணுத்துக் கொண்டே நடந்தார். இவர் நிச்சயம் சாமி பாட்டியாகத்தான் இருக்க வேண்டும் என உறுதியாக நினைத்துக் கொண்டான். அவனுடைய உரோமங்கள் சிலிர்த்து நிமிர்ந்து நின்றன. சாமியும் பேயும் நம்மைச் சுற்றி இருந்தால் மட்டுமே உரோமங்கள் உயரும் எனக் கணேசன் நினைத்தான். அவரிடம் ஓடிப்போய் முதுகில் ஏறிக் கொள்ள வேண்டும் எனக் கணேசனுக்குத் தோன்றியது. கம்பத்துப் பெரிய பாதைக்கு வந்துவிட்டார்கள். பாட்டியைப் பின் தொடர்ந்து அப்படியே சென்றுவிடலாம் என்று கணேசனுக்கு ஆசை மேலிட்டது. இரவெல்லாம் பெல்ட்டில் அடி வாங்கத் தேவையில்லை. சாப்பாடு போதாமல் கோவில் அன்னதான சாப்பாட்டைக் கேட்டுவரப் போக வேண்டியதில்லை. பாட்டியுடன் கோவில்களுக்குப் பஜனைக்குப் போய்விடலாம் எனக் கணேசனுக்குத் தோன்றி கொண்டிருந்தது. பொங்கல், கச்சானுக்குப் பாவ முகத்தைக் காட்டுவதைக் காட்டிலும் முன்வரிசையில் அமர்ந்து ஜம்மென்று கைகளைத் தட்டிக் கொண்டு பாடலாம். பாட்டியை இன்னும் வேகமாகப் பின் தொடர்ந்தான்.

‘பாட்டி என்னயும் கூட்டிட்டுப் போய்டுங்க…’

இப்படிக் கேட்டால் எந்தப் பாட்டியும் மறுக்கமாட்டார். அதுவும் இவர் சாமி பாட்டி. எப்படிப் பேசலாம்; கெஞ்சலாம் என ஓரிருமுறை சரிப்பார்த்துக் கொண்டான். எங்கிருந்து இந்தத் துணிச்சல் கிடைத்தது என அவனுக்குத் தெரியவில்லை. பாட்டியின் நெற்றி நிறைய இருந்த திருநீரும் அவரது சாந்தமான முகமும் அவனுக்குள் உந்துதலை ஏற்படுத்தியிருந்தன.

இந்நேரம் அம்மா அவனைத் தேடத் துவங்கியிருப்பார் என ஊகித்துக் கொண்டான். அதற்குள் பாட்டி இந்தக் கம்பத்தைவிட்டு வெளியேறி பெரிய சாலைக்குப் போய்விட்டால் அப்படியே அவரைப் பின் தொடர்ந்து போய்விடலாம் என நினைத்தான். சற்றுத் தொலைவு சென்றவுடன் பாட்டியின் கைகளைப் பிடித்துக் கொண்டு கெஞ்சலாம் எனத் திட்டமிட்டுக் கொண்டான். இதெல்லாம் அவனது அம்மா கொடுத்த பயிற்சி. வீட்டிற்கு அல்லது கோவிலுக்கு யாராவது வந்தால் அவர்களிடம் கெஞ்சி பணம் கேட்க அனுப்புவார். சில சமயங்களில் பணம் கிடைத்துவிடும். ஐந்து வெள்ளிவரை கொண்டு வந்து கொடுத்திருக்கிறான். கிடைக்காத சமயத்தில் அம்மா முதுகில் பளார் என்று வைப்பார். வலியில் நெளிந்தவாறு சுவரில் தேய்த்துக் கொள்வான்.

கம்போங் பாரு மாரியம்மன் கோவிலுக்கு முன்புறம் பெரிய வீடமைப்புத் திட்டங்கள் மெல்ல வளர்ந்துவிட்டன. கோவிலோடு ஒட்டியிருந்த இந்தக் கம்பம் இப்பொழுது கோவிலுக்குப் பின்புற வாசலாகிவிட்டது. முன்புற வாசலில் போய் நின்று கொண்டால் பெரிய கார்களில் வரும் சிலரிடம் பணம் கேட்கலாம் எனக் கணேசனும் தம்பியும் போய் நின்று கொள்வார்கள். கணேசனுக்குச் சில சமயம் காசு கேட்க வெட்கமாக இருக்கும். தம்பியை அழைத்துக் கொண்டு கால் கழுவும் பைப்படிக்குப் பின்னால் ஒளிந்து கொள்வான்.

அப்படியான நாள்களில் வீடு திரும்பும்போது, “வாயிருக்குல… மத்த நேரத்துல தொண்டக்கிழிய கத்தற?” என்று சொல்லி அம்மா வெளுப்பார்.

சாமி பாட்டி இன்னுமும் தனக்கு முன்னே வேகமாக நடந்து செல்வதைக் கணேசன் பார்த்துக் கொண்டான். இனி எல்லோரும் தன்னை மதித்து வழிவிடுவர். உடலெல்லாம் திருநீர் பூசிக் கொண்டு கோவிலில் நிமிர்ந்து வலம் வரலாம். ஒரு துள்ளல் மனத்தில். நினைத்தபடி பாட்டி பெரிய சாலையை நெருங்கிவிட்டார். அதன் பின்னர் ஒரே வளைவுத்தான். கம்பத்துப் பார்வையிலிருந்து முழுவதுமாக விடுப்பட்டுவிடலாம். அவனுக்குக் கால்கள் பரபரத்தன. ஒரு தெய்வம் அவனுக்கு முன்னே சென்று வழிகாட்டுவதாய் நினைத்துக் கொண்டான்.

“அதுவொரு கொடூரமான அரக்கனுங்க நெறைஞ்ச காடு… பக்தன் அதுக்குள்ள மாட்டிக்கிட்டான். கைய தூக்கி சாமிய வேண்டுனான்… காப்பாத்தும்மா தாயேன்னு… அந்தத் தாயும் அவன காப்பாத்த வந்தாங்கலாம்… பக்தன முன்னால நடக்கச் சொல்லிட்டு சாமி பின்னால நடந்து வந்தாங்கலாம்… திரும்பிப் பார்த்தா சாமி சிலையா ஆயிருவேன்னு சொல்லிட்டாங்கலாம்… சலங்க சத்தம் கேக்கறது நிண்டோன பக்தன், சாமி பின்னால வரலைன்னு நினைச்சி சட்டுன்னு திரும்பிப் பார்த்துட்டானாம்… அவ்ளத்தான் சாமி அப்படியே சிலையா ஆயிருச்சாம்…”

கோவில் திருவிழாவில் ஒருமுறை பெரிய பூசாரி பிள்ளைகளிடம் சொன்னதைக் கணேசன் நினைவுக்கூர்ந்து பார்த்தான். இம்முறை சாமி முன்னால் நடந்து சென்று கொண்டிருப்பதாய் உணர்ந்தான். ஒருவேளை இவரும் மறைந்துவிட்டால் என்கிற பயமும் கணேசனைத் தொற்றிக் கொண்டது. பாட்டியின் கால்களைக் கவனித்தான். அவை இன்னும் சிலிப்பர் சத்தத்துடன் முன்னகர்ந்து கொண்டிருந்தன.

அப்பா வரும் நேரம். இங்கிருந்து பத்து கிலோ மீட்டரில் இருக்கும் நாகா லீலீட், கூலிம் போன்ற இடங்களில் இரும்புகளைச் சேகரித்துவிட்டுக் கடுமையான வெறுப்புடன் வந்து கொண்டிருப்பார். எங்காவது வெளியில் பார்த்தால் துரத்தி வந்து உதைப்பார். கணேசன் கம்பத்துக்குள் நுழையும் பாதையை உன்னிப்பாய்க் கவனித்துக் கொண்டே நடந்தான். ஒருவேளை அப்பா வந்துவிட்டால் பக்கத்தில் ஓடும் கால்வாயில் எகிறிக் குதித்துவிடலாம் என்றும் திட்டமிட்டுக் கொண்டான். பத்து தீகா தமிழ்ப்பள்ளிக்கு அப்பால் தெரியும் வானத்தில் சூரியன் மறைவதற்குத் தயாராகிக் கொண்டிருந்தது. மஞ்சள் வெளியில் பகல் சுருங்கியபடி இருந்தது. இரு மருங்கிலும் தெரிந்த கம்பத்து வீடுகளில் பாதிக்குப் பாதி காலியாகி இருந்தன. கதவுகள் திறந்துகிடக்க கொடிகள் ஊர்ந்து சுற்றியிருந்தன.

பாட்டி இன்னும் சத்தமாக அம்மன் பஜனையைப் பாடிக் கொண்டே நடந்தார். அவர் குரல் இப்பொழுது சற்றே நிதானத்திலிருந்து உச்சத்தொனிக்கு மாறிக் கொண்டிருந்தது. கணேசனுக்குக் கால்கள் துடித்தன. பாட்டியுடன் சேர்ந்து அவருக்கு ஒரு பக்தனாகிவிடலாம் என யோசித்துக் கொண்டான். வேட்டியை அணிந்து இடுப்பில் ஒரு வெள்ளைத் துண்டைக் கட்டிக் கொண்டால் அப்படியே கோவிலுக்கு வரும் வாசகி வாத்தியாரின் மகன்கள் மாதிரி காட்சியளிக்கலாம். எச்சிலில் ஊறிப்போயிருந்த சட்டை காலரை எடுத்து மூக்கைத் துடைத்துக் கொண்டான்.

“அங்கள் ரெண்டு வெள்ளி தர்றீங்களா?” என்கிற வசனத்தை இனி யாரிடமும் கேட்க வாய்ப்பில்லை என ஊகித்துக் கொண்டான். “திருநீரு எடுத்துக்கங்க… இப்பப் பஜன பாட்டி அம்மன் பாட்டுப் பாடப்போறாங்க… எல்லாம் அமைதியா இருங்க…” என்பதை ஒருமுறை சொல்லிப் பார்த்துப் பரவசப்பட்டுக் கொண்டான்.

பாட்டி பெரிய சாலையை அடைந்ததும் ஓரமாக நடக்கத் துவங்கினார். சில கார்கள் மட்டும் வேகமாகப் போய்க் கொண்டிருந்தன. இதுவரை பெரிய சாலைக்குக் கணேசன் தனியாக வந்ததில்லை. சில மாதங்களுக்கு முன் அப்பாவுடன் பொருள்களைக் கட்டிக் கொண்டு சைக்கிளில் அமர்ந்து இரும்புக் கடைக்குப் போனதுதான் கடைசி. பொருள்கள் குறைவாகக் கிடைத்த நாள்களில் அப்பா கணேசனை பின்சீட்டில் அமர்ந்து கொண்டு இரும்பு மூட்டையை அவன் மடியில் வைத்துப் பிடித்துக் கொள்ள அழைத்துச் செல்வார். சுப்பரமணி பெரிய இரும்புக் கடை பாயா பெசார் முற்சந்தியில் இருக்கும். அந்தக் கடைக்குத்தான் அப்பா இரும்புகளைக் கொண்டு செல்வார். அங்குச் சேரும்வரை மூட்டையின் கணம் அவன் கால் தொடையில் இறங்கி வலியையும் வடுவையும் உருவாக்கிவிடும். வலியைத் தாங்கிக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் அப்பா கத்திக் கொண்டே வருவார். சைக்கிள் சிறிய மேட்டில் ஏறி இறங்கும்போதெல்லாம் தொடை சதை பிய்ந்துகொண்டு வருவதாக நினைத்து அதிர்ந்து கொள்வான்.

“கெழட்டுப் பையன் மாதிரி யேன் முனகற?”

முடியவில்லை என முகத்தைக் காட்டினால் அப்பா கேட்கும் கேள்விகள் கணேசனின் மனத்தில் முள்ளாய் தைக்கும். வலது கையைப் பற்றி உடலை உலுக்கி “கெழட்டு மாடு” என்று கத்துவார். அப்பா கொடுக்கும் வேலையில் டின்களைக் காலில் நசுக்கிப் போடுவது மட்டும்தான் அவனுக்கு எளிதாக இருக்கும். சுவைப்பான டின்களைக் கீழே வைத்துவிட்டுக் கவனமாக அதன் மீது குதித்துத் தரையோடு நசுக்கி அமிழ்த்துவான். மற்ற சமயத்தில் மூட்டையைத் தூக்கும்போது அவனுக்கு ஏற்படும் தடுமாற்றத்தையும் தள்ளாட்டத்தையும் கண்டு “வயசாச்சா ஒனக்கு? ஒரு மூட்டய நவுத்தி வைக்க முடில…?” என அப்பா கத்துவார். கணேசன் மெலிந்து எலும்போடு ஒட்டிக் கிடக்கும் தன் உடலைப் பார்த்து அதற்கு வயதாகிவிட்டது என நினைத்து வேதனைப்படுவான்.

“யேன்டா நானும் நாளன்னைக்கு மாரியாயி பாட்டி மாதிரி வயசாய்டுவனா?”

கணேசன் தம்பியிடம் இரவெல்லாம் கேட்டு நச்சரிப்பான். என்ன சொல்வதென்று கேள்வியும் புரியாமல் தம்பி தூங்கிவிடுவான். அப்பாவின் வார்த்தைகள் கம்பத்து வாசல்முகடுவரை அவனைத் துரத்தி வந்தன. அதற்குள் பாட்டி விரைந்து நடப்பது தெரிந்தது. பாட்டிக்குக் கூன் இல்லை என்பதைக் கணேசன் கவனித்தான்.

“கூன்விழுந்த பாட்டி குட்ட கால நீட்டி வாயில பொயல கொட்டி ஊர்வம்ப தெரட்டி ஓடவோடத் தொரத்தி சாபம் விடுவா கத்தி…” பாட்டிகளுக்குக் கணேசன் பாடும் பாடல். நான்காம் ஆண்டு வரை பள்ளிக்கூடத்திற்குச் சென்றதால் கற்றுக் கொண்ட பாடல் வரி. மாரியாயி பாட்டி விட்ட சாபங்களையெல்லாம் சிறுக சிறுக கடந்து வந்துவிட்டான். வீடு தொலைவில் உள்ளதாக நினைத்துப் பூரித்தான். காற்று அவனைத் தூக்கி ஊஞ்சலாட்டுவது போல இரு கைகளையும் விரித்து அண்ணாந்து பார்த்தான்.

பாட்டி வேகமாக நடந்து சென்று சாலையின் ஓரம் நின்று கொண்டிருந்த காரின் பக்கம் போய்க் கொண்டிருந்தார். கணேசன் பாட்டியை விட்டுவிடக்கூடாது என வேகத்தைக் கூட்டினான். பாட்டி அநேகமாக அந்தக் காரில் வந்திருப்பார் என அதனுள் அவர் ஏறுவதற்குள் அவரை அடைந்துவிட எண்ணினான். பாட்டியுடன் காரில் கம்பத்தை விட்டு விரைந்து பறந்திட முடியும் என நம்பினான். சாலையின் ஓரத்தில் இருந்த மண் வெதுவெதுப்பாக இருந்தது. அப்பொழுதுதான் வெறுங்கால்களோடு நடந்து வந்திருப்பதைக் கணேசன் பார்த்தான்.

பாட்டி அதற்குள் காரை நெருங்கிவிட்டார். அடுத்து ஓடலாம் எனக் கணேசன் முடிவெடுத்தான். அதற்குள் காரிலிருந்து இறங்கிய தடித்த உருவம் கொண்ட ஒருவன் பாட்டியிடம் கை நீட்டி அதட்டுவது போல பேசிக் கொண்டிருந்தான். ஆள்காட்டி விரலை அசைத்து மிரட்டினான். அவனுடைய கண்களில் கோபமும் எரிச்சலும் கொப்பளித்துப் போயிருந்தன. பாட்டி பயந்து குறுகினார். காரின் கதவைத் திறந்துவிட்டுப் பாட்டியின் பின்மண்டையைத் தட்டினான்.

அவர்கள் பேசுவது எதுவும் கேட்கவில்லை. பாட்டி சுற்றும் முற்றும் பார்த்துவிட்டுப் பயந்தபடியே காருக்குள் ஏறினார். அவர் வாய் மட்டும் எதையோ முணுமுணுப்பதை நிறுத்தவில்லை. கார் சட்டென்று அங்கிருந்து புறப்பட்டது. வெயில் முழுவதும் அடங்கி இருளத் துவங்கியது. கடைசி தம்பி எழுந்து அழுவான் என்கிற நினைவு சட்டென எட்டியதும் கணேசன் திரும்பி வீட்டை நோக்கி வேகமாக ஓடத் தொடங்கினான்.

-கே.பாலமுருகன்

(2015-இல் எழுதிய சிறுகதை)

சிறுகதை: மீட்பு

முக்காடு அணிந்து குள்ளமாகத் தெரிந்த சிறுமி நாற்காலி போட்டு விளக்குகளைத் தட்டிவிட்டாள். அவளுடைய அம்மா போலிருந்தவள் அங்கிருந்த மேசைகளைத் துடைத்து விட்டு ஒவ்வொரு மேசையிலும் நாசி லெமாக் பொட்டலங்களை அடுக்கத் துவங்கினாள். கடையிலிருந்து புறப்பட்ட வாசம் அவ்விடத்தின் சாக்கடை வீச்சத்தைக் கடந்து வீசிக் கொண்டிருந்தது. கோமதி வாசம் வந்த திசையைக் கவனித்துக் கொண்டிருந்தாள். எதுவும் பேசக்கூடாது என அவளிடம் எச்சரித்திருந்தேன். இந்த இரண்டு வாரங்களாகக் கேள்வி கேட்க வேண்டுமென்ற துடிப்பு அவளிடம் இருந்தது. வார்த்தைகளால் நச்சரித்துக் கொண்டே இருக்கிறாள். வரும்போதே ஒரு நாசி ஆயாம் சாப்பிட்டு முடித்துவிட்டாள். ஆதலால், சாப்பிடுவதைப் பற்றி ஏதும் பேச வேண்டாம் எனச் சொல்லிவிட்டேன்.

யூ.டி.சி பேருந்து நிலையத்தின் அருகே அமர்ந்திருந்தோம். அத்தனை வசதியான இடம் இல்லை. ஆனால், வேடிக்கை பார்க்கத் தோதாக அமைந்திருக்கும். பயணச்சீட்டு விற்கும் கவுன்ட்டர்களுக்கிடையே இருந்த சிமெண்டு நாற்காலியில் அமர்ந்திருந்தோம். அங்கே இடம் கிடைப்பது அத்தனை எளிதான காரியம் அல்ல. எப்பொழுதும் யாராவது அமர்ந்து கொண்டிருப்பார்கள். வாடகை வண்டி ஓட்டுநர்கள் இரவு நேரங்களில் உட்கார்ந்து கதையடிக்கும் இடம் அது. இரவில் வாடிக்கையாளர் கிடைப்பது சிரமம் என்பதால் கிரேப் அழைப்பு வரும் வரை அங்கே அமர்ந்து சிரித்துக் கொண்டும் புகைத்துக் கொண்டும் இருப்பார்கள். மெல்ல இருளத் துவங்கியிருப்பதால் யாரேனும் வந்து எங்களை விரட்டக்கூடும் என அச்சமாக இருந்தது.

பரபரப்பாக இருக்கும் நகரம் சரியான இடமாகத் தோன்றியது. அதுவும் இந்த டவுன் சந்து வசதியாக இருந்தது. டூத்தா என எழுதி ஒரு பக்க சங்கிலி அறுந்து போர்ட் மட்டும் தொங்கிக் கொண்டிருந்தது. ஒரு காலத்தில் இந்த டூத்தா ஹோட்டல் பிரபலமாக இருந்தது. இரவில் கோலாலம்பூரிலிருந்து வந்து சேரும் பயணிகளுக்கு முப்பது ரிங்கிட்டிற்கு உடனே மலிவான அறை கிடைக்கும் என்பதாலே விடியும் வரை மணி கணக்கிற்கு அறையை எடுத்துக் கொள்வார்கள். கலா அக்காவை இங்கு வைத்துதான் அவளுடைய அப்பா கண்டுபிடித்தார். டூத்தாவில் மசாஜ் செய்து கொண்டிருந்தவளை அடித்து இரவோடு இரவாக இழுத்துச் சென்றார். வரமறுத்தவளை இந்த டவுன் சாலையில் தரதரவென்று இழுத்துச் சென்றபோது எல்லோரும் வேடிக்கை பார்க்கும்படி ஆகிவிட்டது. டூத்தா கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்குப் பின்னர் இந்த இடம் பொழிவிழந்து இருள் சந்தாகிவிட்டது. இப்பொழுது அட்டை பெட்டிகளை விரித்து யாராவது படுத்துக் கிடக்கும் இடமாக மட்டுமே இருக்கிறது.

கோமதி சிமெண்டு நாற்காலியின் முனையில் உடைந்து உள்ளே தெரியும் கம்பியைத் தொட்டுப் பார்த்துக் கொண்டிருந்தாள். சாய்ந்து அமர்ந்தால் தலைப்பகுதியில் உடைந்த கம்பிகள் குத்தும் என்பதால் நிமிர்ந்து உட்கார்ந்தபடி சாலையைக் கவனித்துக் கொண்டிருந்தோம். சாலை விளக்கொளி படர்ந்து விரிந்திருந்தது. அதன் அதீதமான மஞ்சள் ஒளியிலிருந்து தள்ளியிருக்க மனம் விரும்பியது. அடுத்தமுறை வேறு இடம் தேடிக் கொள்ள வேண்டும். நகரம் ஏதேனும் ஓர் இடத்தை நமக்குக் கொடையாக அளிக்கத் தயாராகவே இருக்கிறது.

“இன்னிக்கும் விடிஞ்சிதான் வரணுமா…?”

கோமதிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அவளால் வெகுநேரம் அமைதியாக இருக்க இயலவில்லை. அதுவரை எங்களுக்கிடையில் இருந்த அமைதியைக் கலைத்தாள். வீட்டிலும் எந்நேரமும் இப்படிதான் சத்தம் போட்டுக் கொண்டே இருப்பாள். அவள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வதற்கு முன்பாகவே அடுத்த கேள்விகளுடன் தயாராக இருப்பாள். பார்வையை அவள் பக்கம் திருப்பினால் அடுத்த கேள்வியையும் கேட்பாள் எனத் தெரியும். என் கவனத்தைச் சாலையிலிருந்து அகற்றவில்லை. அவள் காலில் அணிந்திருந்த ‘ஹை ஹீல்ஸ்’ பளபளப்பைத் தடவிப் பார்த்துக் கொண்டாள். அதில் அவளுக்கொரு ஈடுபாடு இருக்கிறது. கடந்த வாரம் வாங்கிய காலணி அது. அதன் கூர்மையான குதிகால்பகுதியை அடிக்கடி தரையில் தட்டி சப்தத்தை எழுப்பி புன்னகைத்துக் கொண்டாள். அங்கிருந்த மளிகை கடைக்கு வெளியில் ஆள்கள் நுழைவதும் வெளியேறுவதுமாகப் பரபரத்துக் கொண்டிருந்தார்கள். இரண்டு கைகளிலும் பெரிய நெகிழி மூட்டையில் எதையோ வாங்கிக் கொண்டு அவசரமாகச் சாலையின் இருமுனைகளிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களில் ஏறிக் கொண்டிருந்தனர்.

“அது நம்ம பாபுஜீ பாட்டி மாதிரி இல்ல?”

நான் கவனித்துக் கொண்டிருக்கும் திசையில்தான் அவளது பார்வையும் மேய்ந்து கொண்டிருந்தது.

“ஷ்ஷ்ஷ்ஷ்!” அதட்டுவதைப் போல குரல் எழுப்பினேன். அவளைப் பார்க்கும் துணிவில்லை. எங்கேயோ பார்த்துக் கொண்டு உறுமினேன். சற்று நேரம் அமைதியானாள்.

இத்துடன் கடந்த இரண்டு வாரத்தில் எட்டு முறை இங்கு வந்து அமர்ந்திருக்கிறோம். ஒருவேளை எங்களை இங்குள்ள கடைக்காரர்கள் யாராவது கவனித்திருக்கலாம். கைப்பேசி கடைக்காரன் வாடிக்கையாளர்களைக் கவனித்துக் கொண்டே எங்களையும் பார்த்துக் கொண்டிருந்தான். பெரும்பாலும் இளைஞர்களே அக்கடையைச் சூழ்ந்து நின்று கொண்டு கண்ணாடிப் பேழைக்குள் இருக்கும் கைப்பேசிகளை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர். அதற்குப் பக்கத்து மருந்து கடையைச் சீனன் ஒருவன் அடைக்கத் தயார் செய்து கொண்டிருந்தான். பரதேசி போல காட்சியளிக்கும் என்னை இவர்களுள் யாராவது ஒருவர் கேவலமாக நினைத்திருக்கலாம். யார் என்ன நினைத்தாலும் நம்மிடம் வந்து சொல்லப் போவதில்லை. வலது காலை எடுத்து இடது தொடையின் மீது வைத்துக் கொண்டு வேகமாக ஆட்டினேன். சிலிப்பர் காலிலிருந்து நழுவி சாலையில் விழுந்தது.

“சிலிப்பர் பிஞ்சிருச்சா?”

கோமதி சிலிப்பரை எடுக்கக் கீழே குனிந்தாள். கால் முட்டியால் அவளை மெல்ல இடித்து நிறுத்தினேன். உச்சுக் கொட்டியதும் அவள் மீண்டும் வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள். என் சைகையிலேயே நான் கோபத்தில் இருக்கிறேன் எனப் புரிந்து கொண்டாள்.

கோமதியை ஐந்து வயது முதலே தெரியும். நான் அவளை முதன்முறையாகப் பார்க்கும்போது நீலநிறக் கவுனுடன் பெரியசாமியின் புரோட்டோன் ஈஸ்வராவில் அமர்ந்து கொண்டிருந்தாள். ஒரு மழைப் பொழுது அது. பெரியசாமி மட்டும் கீழே இறங்கி வந்தான். கோமதி கார் கண்ணாடியைத் திறந்து கைகளை வெளியே நீட்டி மழைநீரை உள்ளங்கையில் சேகரிக்க முயன்று கொண்டிருந்தாள். கைகளில் அணிந்திருந்த நீலநிற வளையல்களின் சத்தம் கேட்கவில்லையென்றாலும் அதனைக் கற்பனை செய்து கொள்ள முடிந்தது.

“எத்தன பிள்ளைங்க, சாமி?”

மழைச்சத்தத்தில் நான் கேட்டது விளங்கவில்லை. மழையில் நனைந்து நெற்றியில் ஒதுங்கிய துண்டு முடிகளை வழித்துக் காதுக்கு மேலாக ஒதுக்கினான்.

“வட்டிய ஏத்திராத குமாரு…” என உரத்த குரலில் சொன்னான். அந்தச் சத்தம் எரிச்சலூட்டியது. மழைக்காக அவன் குரலை உயர்த்தவில்லை. அவன் குரலே அப்படித்தான். அதட்டுவது போல் ஒலிக்கும். பெரியசாமி பெரிய கடன்காரன். லெபாய்மான் கம்பத்தில் சிறியதும் பெரியதுமாய்ச் சிலரிடம் கடன் வாங்கி அதைக் கட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான். அவனுடைய பயமெல்லாம் கடனைவிட அது ஏற்படுத்தியிருக்கும் வட்டிகள் மீதுதான்.

“சாமி, நாந்தான் மூனு காசு… வெளிலலாம் ஐந்து, பத்து காசு வரைக்கும் போகுது…” நானும் மெனக்கெட்டுக் கொஞ்சம் கத்திச் சொன்னேன். அவனது நெஞ்சுப் பகுதிவரை மழைநீர் வழிந்து சட்டையை நனைத்திருந்தது. மீண்டும் பெரியசாமியின் காரைப் பார்த்தேன். கண்ணாடி மேலே ஏற்றப்பட்டிருந்து சிறிய இடைவெளியில் கோமதியின் சிறுவிரல் மட்டும் வெளியே தெரிந்தது.

“வீட்டுக்காரவங்க வரலய்யா?”

பெரியசாமி திரும்பி காரைப் பார்த்துவிட்டுக் கண்ணாடி திறந்திருப்பதைக் கவனித்தான். “ஏய் கண்ணாடிய மூடு…!” எனச் சத்தமாக அதட்டிவிட்டு மீண்டும் என் கேள்விக்குள் வந்தான்.

“உள்ளத்தான் இருக்கு… அதுக்கு வேல பாக்கலாம்னுத்தான் வந்தோம்… இந்தக் காச பொரட்டறதுக்கே நான் படாதபாடு பட்டுட்டன்… இன்னும் சொச்ச மாசத்த எப்படி ஓட்டறதுன்னு தெரில…”

எத்தனைமுறை பார்த்தாலும் பெரியசாமியின் முகம் கருணைக்கு ஏங்குவதாகத் தெரிவதில்லை. திமிர்க்கொண்ட பார்வை. அடர்ந்து தெரியும் புருவம் கண்களைக் காட்டிலும் நம் கவனத்தை அங்கே ஈர்த்துக் கொள்ளும். கொஞ்சம் மிடுக்கான அவனது தோற்றத்தின் முன் இரக்கம் தோன்றாது. இதனால்தான் கடன்காரர்கள் அவனை விடுவதில்லை எனத் தோன்றியது. வயது நாற்பதைத் தாண்டியும் இன்னும் மிரட்டலான தோற்றத்துடன் தெரிந்தான். இலேசான தொப்பை சட்டையை முட்டிக் கொண்டிருந்தது.

“சாமி, நானே இன்னொருத்தன்கிட்ட இருந்து காச வாங்கி வட்டிக்கு விடறன்… என் வயித்துல கைய வச்சிறாத… ஒழுங்கா மாசம் பொறந்தோன வந்து கொடுத்துரு…”

பெரியசாமி சிறிது நேரம் எதையோ யோசித்துக் கொண்டே மழையை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான். சாப்பாட்டுக் கடையைவிட்டு வெளியேற தயங்கிக் கொண்டிருந்தவர்களில் சிலர் இனி மழை நிற்காது என முடிவெடுத்து வெளியேறி ஓடிக் கொண்டிருந்தனர்.

“ஏதாச்சம் புங்குஸ் பண்ணட்டா?” காரில் அமர்ந்திருந்த கோமதியின் விரல்கள் நினைவுக்கு வந்ததும் அப்படிக் கேட்கத் தோன்றியது. பெரும்பாலும் உறவுக்காரர்களாக இருந்தாலும் இலவசமாக யாருக்கும் சாப்பாட்டைக் கொடுப்பதில்லை. பாவமெனப்பட்ட சிலருக்கு மட்டும் மிச்ச உணவுகளைப் பொட்டலம் கட்டிக் கொடுப்பதுண்டு.

“குமாரு, உன் கடைல என் பொண்டாட்டிக்கு ஏதாச்சம் வேல போட்டுக் கொடுக்குறீயா? நல்லா சமைப்பா… இல்ல மங்கு ஜாமான் கழுவறதா இருந்தாலும் சரிதான்…”

அவன் கண்கள் உதவி கேட்கும் தோரணையில் இல்லை. கொடுத்தால் கொடு என்கிற அலட்சியப்பார்வையுடன் தென்பட்டன. கோமதியின் அந்த விரல் மட்டுமே என் நினைவில் உறுத்திக் கொண்டிருந்தது.

“இந்தோனேசியாகாரி ஒருத்தி இருக்கா… அவள வச்சுச் சமாளிக்கவே பெரிய கஸ்டம்மா இருக்கு…”

பெரியசாமி அமைதியாக இருந்தான். மேலும் கெஞ்சுவான் என நினைத்தேன். அவனிடம் இன்னும் சில வார்த்தைகளை எதிர்ப்பார்த்தேன். கார் கண்ணாடியை இறக்கிவிட்டுக் கோமதி மீண்டும் இரண்டு கைகளையும் வெளியே நீட்டி மழைத்துளிகளை உள்ளங்கையில் பிடித்துக் கொண்டிருந்தாள். திறந்திருந்த கண்ணாடியினூடே பெரியசாமியின் மனைவியை இப்பொழுது ஓரளவு பார்க்க முடிந்தது. சுறுசுறுப்பான தோற்றம். கோமதியைப் பிடித்து அமர வைக்கப் போராடிக் கொண்டிருந்தாள். கோமதி அவளிடம் முரண்டு பிடித்தபடியே விரல்களைக் கண்ணாடியின் வெளியே நீட்டத் துடித்தாள். அவர்களின் போராட்டத்தின் சத்தம் எனக்குக் கேட்கவில்லை. மழை கடையின் தகறக் கூரையில் விழுந்து இடுக்குகளின் வழியாக விளிம்பில் வந்து நேர்க்கோடாகக் கொட்டிக் கொண்டிருந்தது.

“சாமி, அடுத்த வாரம் கூட்டிட்டு வா… இருந்துட்டுப் போகட்டும்… அந்த இந்தோனேசியக்காரிய வேற வேலைக்கு மாத்திர்றன்…”

சட்டென அவனுடைய முகத்தில் சிரிப்பு. அச்சிரிப்பும் தாடிக்குள் ஒளிந்து கொண்டது. அடுத்து அவன் எனக்கு நன்றி சொல்லியிருக்க வேண்டும். ஆனால், அடுத்த வாரம் எந்தக் கிழமையில் வர வேண்டும் எனக் கேட்டான்.

உதித்தக் கோபத்தை உள்ளுக்குள்ளே அடக்கிக் கொண்டேன். பெரியசாமி எந்தச் சலனமும் இல்லாமல் என் பதிலுக்குக் காத்திருந்தான். என் கண்களை உற்று நோக்கினான். என்னால் அவனுடைய கண்களைத் தொடர்ந்து பார்க்க இயலவில்லை.

“ஞாயித்துக்கெழம போல வா… முதல்ல வேலயக் கத்துக்கிட்டம்… அப்புறம் சம்பளம் பேசிக்கலாம்…”

மேரி காருக்குப் பக்கமாய் நின்று கடையையே பார்த்துக் கொண்டிருந்தாள். கடந்த வாரத்தில் அவளுக்கு மூன்றுமுறை சாப்பாடு கொடுத்துவிட்டேன். ருசி கண்ட பூனை மீண்டும் வாசலில் வந்து நின்று கொண்டே நோட்டமிட்டுக் கொண்டிருந்தது.

“மகேனு அந்தச் சனியன அடிச்சித் தொரத்துங்க… இப்படியே வரவன் போறவனுக்குக் கொடுத்தா கடையச் சாத்திட்டு ரோட்டுலத்தான் நிக்கணும்…”

மேரிக்கு நான் சொன்னது விளங்கியிருக்காது. அவள் இருந்த தூரத்திற்கும் மழை, கூரையில் போடும் சத்தத்திற்கும் இடையில் எனது உடல்மொழியை மட்டும் சரியாக ஊகித்துக் கொண்டாள். மகேன் வெளியே வருவதற்குள் என்னைப் பார்த்துக் கொண்டே நடக்கத் துவங்கிவிட்டாள்.

“இன்னிக்கும் விடியக்காலைல வரைக்கும் இருக்கணுமான்னு கேட்டன்?”

கோமதியின் அதட்டல் பெரியசாமியின் குரலை ஒத்திருந்தது. சாலையின் பரபரப்பில் சப்தங்கள் பெருகியபடி இருந்தன. மாலை வெயில் விட்டுப்போன புழுக்கம் இன்னும் தீரவில்லை. மோட்டார்களின் சத்தம் காதுக்குள் நமைச்சலை உண்டாக்கியது. மோட்டார்க் குழாய்களை வெட்டி அதன் சத்தத்தைக் கூர்மையாக்கி கேட்போரை எரிச்சலூட்டும் விளையாட்டு அது. தாகத்திற்கு ஏதாவது சில்லென்று குடித்தால் நன்றாயிருக்கும் எனத் தோன்றியது. எனக்கு முன்னே கோமதி ஐஸ் கடையைப் பார்த்துவிட்டு என் தோளைப் படபடவெனத் தட்டினாள். அவள் இதைச் செய்யாமல் இருந்தால்தான் ஆச்சரியம். மூன்று பெரிய கலனில் மஞ்சள், சிவப்பு, பச்சையென வண்ணப் பானங்கள் குடைக்கம்பியில் மாட்டப்பட்டிருந்த விளக்கொளியில் பட்டு தனியாகத் தெரிந்து கொண்டிருந்தன. அதுவும் கலனைக் கிண்டும்போது பனிக்கட்டிகள் உண்டாக்கும் சத்தம் தாகத்தைக் கூட்டியது. கோமதியை அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு எழுந்து நடந்தேன். காற்றில் கலந்திருந்த புகை சுருக்கென்று மூக்கில் ஏறி எரிச்சலை உண்டாக்கியது.

சீராப் ஐஸ் பானத்தை வாங்கிக் கொண்டு பத்திரமாகச் சாலையைக் கடந்து கோமதியிடம் வந்தேன். முட்டிவரைக்குமான கவுனுடன் மிதப்பாக அமர்ந்திருந்தாள். நகரத்திற்குச் சற்றும் பொருந்தாத சிண்ட்ரல்லா பொம்மையாகக் காட்சியளித்தாள். தலையில் தொப்பியை அணிந்துவிட்டால் இந்த நகரம் அவளைத் தாங்கிக் கொள்ளாது என்பதாகப் பட்டது. என்னைவிட உயரமாக வளர்ந்துவிட்டிருந்தாள். சட்டெனப் பார்க்கும்போது லலிதா அமர்ந்திருப்பது போன்று தெரிந்தது. இன்னும் கொஞ்சம் சதை போட்டுவிட்டால் லலிதாதான். சாலையின் பரபரப்பு அப்படியே இருந்தது. ஒல்லியான ஒரு சீனத்தி சமிக்ஞை விளக்கிடம் கிடந்த பெட்டியை எடுத்து நோண்டிக் கொண்டிருந்தாள். சட்டென சீனத்தி என்றும் சொல்லிவிட முடியாது. வெளிச்சத்தில் பார்ப்பதற்கு லீனாவின் முகத்தோற்றத்தை ஒத்திருந்தாள்.

“வட்டிக்கு விட்டுச் சம்பாரிச்சல… அதான்… அடுத்தவன் வயித்தல அடிச்சிப் பொழைக்கறவன் பொழப்புக் கடைசியா வீதிக்குத்தான் வரும்…”

லீனாவின் வார்த்தைகள் மனத்தின் ஆழத்தில் இன்னும் ஒலித்துக் கொண்டிருந்தன. சாப்பாட்டுக் கடை ஏலத்திற்குப் போன நாளன்று வீட்டின்முன் வந்து மண்ணை வாரி அடித்துவிட்டுப் போனாள். எத்தனை கோபத்தைச் சுமந்து அடக்கி வைத்திருந்தாள் எனத் தெரியவில்லை. நகங்கள் உடைந்து மண்துகள்கள் விரலிடுக்குகளில் இறங்க சாலையில் இருந்த மண்ணை அவள் அள்ளும்போது படபடப்பாகிவிட்டது. முன்வாசல் இரும்புக் கதவில் அவள் மண்ணைத் தூக்கியெறிந்தபோது அது மழை பெய்யும் சத்தத்திற்கு நிகரானதாக மாறியது.

அவளின் கணவன் என்னிடமும் இன்னும் சிலரிடமும் வட்டிக்குக் கடன் வாங்கிவிட்டு எங்கோ ஓடிப்போனவன் மீண்டும் வரவேயில்லை. இருந்த அவளுடைய கொஞ்சம் நகைகளைப் பிடுங்கிவரப் போன அன்றைய இரவில் அவள் வீட்டைவிட்டு வெளிவரவே இல்லை. உடன் இரண்டு தடியன்களைக் கொண்டு போனது அவளுக்கு அச்சத்தை உருவாக்கியிருக்கலாம். பயந்துபோய் என்னையே பார்த்துக் கொண்டிருந்த அந்தக் கண்களில் பயத்தைக் கடந்து எனக்கு வேறேதும் தெரியவில்லை.

“வட்டிக் காசு நம்மள சுத்தி ஒரு வலைய பின்னிக்கிட்டே இருக்கும்… ஒரு குதுகலத்த கொடுக்கும்… அது ஒரு நேரம் நம்ம கழுத்துக்கிட்ட வந்து நிக்கும்… பொல்லாத காசு…”

என்னைச் சுற்றியிருந்த பெண்கள் இந்த எச்சரிக்கையைப் பல வகைகளில் பல தொனியில் சொல்லி விட்டார்கள். அம்மா, பெரியக்கா என உடன் இருந்தவர்கள் அத்தனை பேரும் போதும் சேர்த்தது எனத் தெரிவித்து விட்டார்கள். ஆனால், பணம் கையிலிருக்கும்போது பரபரத்துக் கொண்டே இருக்கும். கடைக்கு வருபவர்களின் உரையாடலில் சிலர் பணத்துக்குச் சிரமப்படுவது தெரிந்துவிட்டால் போதும். “மூனு காசுக்கு எவன் கொடுப்பான் வட்டி இந்தக் காலத்துல…” எனத் தொடங்கும் என் வியாக்கியானங்களில் கரைந்துவிடுவார்கள். காரியத்தைச் சாதித்துக் கொள்ள அதுவே எனக்குச் சரியான தருணங்களாக மாறிவிடும். ஏக்கத்துடன் பார்க்கும் அவர்களின் கண்களை என்னால் நன்கு அடையாளங்கண்டு கொள்ள முடியும்.

“இப்படி வரும் காசு ஒட்டாது…” பெரியசாமியின் மனைவி லலிதா கடையில் வேலை செய்த காலத்தில் பலமுறை சொல்லியிருக்கிறாள்.

“இப்ப என்னா உன் புருஷன் வட்டிய கொறைக்கணும். அதானே உன் எண்ணம்?” எனக் கிண்டலாகச் சொல்லி அவளுடைய முயற்சிகளைத் திசைமாற்றி விடுவேன். கோமதி அவளுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு என்னை வியப்பாகப் பார்ப்பாள். புருவத்தை உயர்த்திக் காட்டி மிரட்டுவது போல் பாவனை செய்வேன். சட்டென லலிதாவின் பின்னே மறைந்து கொள்வாள்.  

“அங்கள்! அம்மா யேன் செத்தாங்கன்னு தெரியுமா?”

விரைவு பேருந்து பெருஞ்சத்ததுடன் வந்து நின்றது. கோலாலம்பூரிலிருந்து திரும்பும் பயணிகளை இறக்கிவிட்டுச் சென்றதும் அனல் பறந்தது. கோமதி எழுந்து ஏதும் புகை பட்டுவிட்டதா என்று தன் ஆடையைச் சரிபார்த்துவிட்டு மீண்டும் அமர்ந்தாள். அவள் அணிந்திருந்த கவுன் உடல் அளவிற்கு பொருந்தும் வகையில் தைக்கப்பட்டிருந்தது. சிண்ட்ரேலாவின் தோற்றம் முக்கியமானது. சாலை விளக்கொளியின் வெளிச்சத்தில் கோமதி அழகாக மிளிர்ந்து கொண்டிருந்தாள்.  நகரத்தின் மொத்த வெளிச்சமும் இருளும் அவளைச் சுற்றியே இருந்தன.

“உங்கம்மா மாரடைப்புல செத்துட்டா…” என்றேன். பலமுறை சொல்லப்பட்ட பொய். லலிதா இறக்கும்போது கோமதிக்கு ஒன்பது வயது. முன்பொருமுறை சொல்லப்பட்ட பொய் இப்போதும் காப்பாற்றப்படுகிறது. இன்னும் சிறிதுகாலத்தில் அவளே உண்மையைத் தெரிந்து கொள்ளக்கூடும்.

“கோமதி… அப்பாவோட இருக்க பிடிக்கலைனா அங்கள் வீட்டுக்கு வந்துரு… அங்கள் உன்ன என் பிள்ளையாட்டம் பாத்துக்கறன்…”

அன்று நான் அப்படிக் கேட்டதும் கோமதியைவிட பெரியசாமிதான் மகிழ்ந்து போனான். எதிர்பார்ப்புடன் என்னைப் பார்த்தான். அதுவரை அந்த ஏக்கமிகுந்த பார்வையை அவன் கண்களில் பார்த்தது கிடையாது. என் முடிவை நான் மாற்றிக் கொண்டுவிடுவேனோ எனப் பயந்தான். அவனுடைய பயம் கண்களில் அப்பட்டமாகத் தெரிந்தது. அவனை அப்படியொரு நிலையில் பார்க்கப் பேரானந்தமாக இருந்தது. அவன் மனைவி இறந்த சமயம்கூட எல்லோரிடம் சகஜமாகவே பேசிக் கொண்டிருந்தான். இரவெல்லாம் அழுது அவனுடைய கண்கள் வீங்கியிருக்கும் என நினைத்திருந்தேன். அதற்கு நேரெதிராக அன்று நிதானமாகக் காணப்பட்டான். ஆனால், கோமதியை நான் அழைத்துச் செல்லட்டுமா எனக் கேட்ட பின் உடைந்து என் முன்னே யாசகம் பெறுபவனைப் போல் நின்றிருந்தான்.

“குமாரு… நீ நல்லாருப்ப… என் பொண்டாட்டிக்கு வேல போட்டுக் கொடுத்த… என் வட்டிக் காச வேணாம்னு சொல்லிட்ட… இப்ப என் மகள வளர்க்கறன்னு சொல்ற… நீ என் தெய்வம்…” என என் கால்களைப் பிடித்துக் கொண்டான். தடுப்பதைப் போல பாவனை செய்தேனே தவிர என் கைகள் அவனைத் தடுக்கவில்லை. கோமதி சிரிப்புடன் என்னைப் பார்த்தாள். அவளால் லலிதாவின் இடத்தில் பெரியசாமியைப் பார்க்க முடியவில்லை. தத்தளித்துக் கொண்டிருந்த கண்கள் நான் அப்படிச் சொன்னதும் அகன்று பூத்தன.

“அங்கள் பசிக்குது. ஒரு நாசி லெமாக் சாப்ட்டுக்கலாமா?”

கைகள் இரண்டையும் தொடைக்கிடையில் அழுத்திக் கொண்டு கெஞ்சினாள். முன்பு சாப்பாட்டுக் கடையில் மிட்டாய்கள் வேண்டுமென இப்படித்தான் கெஞ்சுவாள்.

“உனக்கு நேத்து உள்ள போத இன்னும் இறங்கலயா? சும்மா இருக்க மாட்ட? அதான் நாசி ஆயாம் சாப்ட்டல…” மீண்டும் அதட்டினேன். அவளுடைய கண்கள் சிவந்திருப்பதைக் கவனித்தேன்.

“கோமதி…”

கோமதி கோபித்துக் கொண்டு முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொண்டாள். அவள் முகம் வாடியதும் போகமாட்டேன் என்று மறுத்து விடுவாளோ எனத் தோன்றியது. முதலில் வாங்கிக் கொடுத்த சீராப் ஐஸ் கரைந்து சிவப்பு நிறம் குறைந்திருந்தது. மெல்ல எழுந்து எதிரில் இருந்த நாசி லெமாக் கடையில் இரண்டு பொட்டலங்களை வாங்கிக் கொண்டேன். கடையில் இருந்த சிறுமி உள்ளேயிருந்த மேசையில் அமர்ந்து எதையோ வரைந்து கொண்டிருந்தாள். நீண்ட விளக்குகள் வெளிச்சத்துடன் இம்சிக்கும் சத்தத்தையும் எழுப்பிக் கொண்டிருந்தன. இந்நேரம் நான் வருவதை அவள் ஓரக்கண்ணால் கவனித்துக் கொண்டிருப்பாள்.

நாசி லெமாவைக் கொடுத்ததும் சட்டெனப் பொட்டலத்தைப் பிரித்து பிளாஸ்டிக் கரண்டியால் சாப்பிடத் துவங்கினாள். நான் பிறகு சாப்பிட்டுக் கொள்ளலாம் என ஒரு பொட்டலத்தை எடுத்துப் பக்கத்தில் வைத்துக் கொண்டேன். கோமதி கால்களை ஆட்டியபடியே சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். பெரியசாமியின் கண்கள் நினைவுக்கு வந்தன. எல்லா சமயங்களிலும் மிடுக்கான பார்வை. தாழ்ந்து நிற்காது. சிரிப்பை ஏந்தியிருக்கும். கோமதியின் கண்களும் அப்படிப்பட்டவை.

சாப்பிட்டதும் சற்றே நிதானமானாள். கால்கள் தரையில் இருக்க முடியாமல் அதிர்ந்து கொண்டிருந்தன. “டொக்! டொக்!” எனத் தொடர்ந்து தட்டிக் கொண்டிருந்தாள்.

“எப்ப அங்கள் கார் வரும்?”

“டைம் சொல்ல மாட்டாங்க… நீ கொஞ்சம் அமைதியா இரு…”

கோமதி திடீரென எழுந்து நடனமாடத் துவங்கினாள். மஞ்சள் விளக்கொளியில் அவளுடன் அவளது நிழலும் சேர்ந்து கொண்டது. அவளை நிறுத்தி அமர வைத்தேன்.

“என்ன கோமதி இது?”

“போரிங்கா இருக்கு அங்கள்…எல்லாம் மிதக்குற மாதிரி இருக்கு…”

முதுகைத் தட்டிக் கொடுத்துப் பொறுமை காக்கும்படி சைகையால் சொன்னேன். அவளின் கால்கள் நிதானத்தில் இல்லை. வழக்கம்போல் அல்லாமல் இன்று கருப்புநிற கேம்ரி வந்து நின்றது. இருளிலும் அதன் நிறம் மின்னியது. இரட்டைச் சிக்னல் போடப்பட்டவுடன் கோமதியை அழைத்துக் கொண்டு காரை நோக்கி நடக்க எழுந்தேன்.

“சரி, கோமதி… விடியக்காலைல வந்து நிக்கறன்… ஏதாச்சம்னா போன்ல சொல்லு…சும்மா எல்லாத்தக்கிட்டயும் கண்டதும் பேசிக்கிட்டு இருக்காத… போனமா வந்தமான்னு இரு…”

கோமதி எழுந்து நின்றாள். ‘ஹை ஹீல்ஸ்’ சப்தம் எழுப்பியது.

“அங்கள்! அங்க போனோன ஏதோ மாத்திர கொடுத்து கொஞ்சம் பீரும் தறாங்க… அது இப்ப வரைக்கும் ஒரு மாதிரியா ஆக்குது… அது மட்டும் வேணாம்னு சொல்ல முடியுமா?”

என்ன பதில் சொல்வதென்று யோசித்தேன். காரில் வந்திருப்பவன் ஓட்டுநர் மட்டும்தான். அவனிடம் எதையும் சொல்ல முடியாது.

“சரி, நான் டைகர்கிட்ட சொல்றன்… நீ இன்னிக்கு மட்டும் எடுத்துக்கோ…”

கோமதி ஏறிக்கொண்டதும் கார் புறப்பட்டது. சீனத்தி அங்கிருந்த குப்பைக்கூளங்களிலிருந்து எதையோ எடுத்துப் பெட்டியினுள் சேகரித்துக் கொண்டிருந்தாள். இருள் அடர்ந்து கௌவியிருந்த டூத்தா ஹோட்டல் பக்கத்தில் இருந்த சாலைக்குள் நுழைந்து நடக்கத் துவங்கினேன்.

-கே.பாலமுருகன்

(நன்றி: உயிர்மை மின்னிதழ்)

நாசி ஆயாம் – சீனர்களின் விருப்ப உணவு,

நாசி லெமாக்- மலேசிய மலாய்க்காரர்களின் விருப்ப உணவு

புங்குஸ் – பொட்டலம்

அறிவியல் சிறுகதை: தாழ்ப்பாள்

கதவிற்குப் புதிய தாழ்ப்பாள் போடும்வரை மனம் ஓயவில்லை. கதவைத் திறந்து வைத்திருந்தால் எனக்கு ஒவ்வாது. கதவென்றால் சாத்தித்தான் இருக்க வேண்டும். அதற்குத்தான் கதவு. எந்நேரமும் எல்லா வேளைகளிலும் கதவை இறுகப் பிடித்துக் கொள்ள ஏதாவது வேண்டும். இப்போதைக்குத் தாழ்ப்பாள் இல்லாத கதவு ஆபத்துமிக்கது.

கடந்த வாரம் இதே கிழமையில் இங்கு ஏற்பட்ட ஒரு சுழல் காற்று அனைத்தையுமே மாற்றிவிட்டுப் போய்விட்டது. அதுவொரு மழை இரவு. வானம் பளிச்சென்று விடாமல் மின்னிக் கொண்டிருந்தது. மின்னலொளி சுழற்சிக்குள் திரண்டு வந்து பேரோசையாக எழும்பி கொண்டிருந்தது. அத்தகையதொரு காட்சியை இதுவரை பார்த்ததில்லை.  தனியாக வீட்டிலிருந்து கொண்டு அதுவும் ஆறாவது மாடியிலிருந்து மழையின் உக்கிரத்தைக் கேட்கப் போதுமான மனத்திடமும் இல்லை. அன்றைய நாளில் சட்டென உருவான சுழல் காற்று வானிலிருந்து மின்னியவாறு இறங்கி வந்து மீண்டும் மேலெழுந்து பரவியது. 15 நிமிடங்களுக்கு மின்சாரம் இரத்தானது. அவ்விடமே இருண்டு ஒரு பெரும் புகைச்சலுக்குள் சிக்குண்டது. கால்கள் அதிர்வை உள்வாங்கிக் கொண்டன. வெளிக்காட்சிகள் மறைந்து ஒரு சுழலுக்குள் இருந்த நிமிடங்கள் இப்பொழுதும் மனத்தில் வியப்புடன் மிரள்கின்றன. தாழ்ப்பாள் இல்லாத கதவுகள் அதிர்ந்து அடித்துக் கொண்டன.

“தாழ்ப்பாளு கீழ செலவு ஜாமான் கடையில இருக்கும்தானே தாத்தா?”

அவர் பதில் பேசாமல் மீண்டும் என் கண்களைத் தேடிக் கொண்டிருப்பார். அன்று வீட்டுக் கதவிற்குத் தாழ்ப்பாள் முக்கியமமெனத் தோன்றியது. மாலை அத்துணை மந்தாரமாக இருக்கும் என நினைக்கவில்லை. கடந்த வாரம் நிகழ்ந்தது போல மீண்டும் இன்றோர் அதிசயத்திற்கு மனம் காத்திருந்து மப்பாகிக் குழம்பிக் கொண்டிருந்தது. தலையைச் சாய்த்து வெளியை நோக்கினேன். வீட்டுக்கு வெளியில் கொஞ்சம் தூரத்தில் வெளிவரந்தாவில் அரற்றிக் கொண்டிருந்தவர்களின் சத்தம் குறையவே இல்லை. மீதி இருப்பவர்களின் சத்தம் அது. அவ்வப்போது ஆறுதலாகவும் சில சமயங்களில் தொல்லையாகவும் தோன்றும். அதுவும் இன்றைய நாளில் அவர்களின் சத்தம் அச்சுறுத்தலாக இருந்தது. வீட்டிலுள்ள பொருள்களைக் கீழே இறக்கிக் கொண்டிருக்கும் சத்தமது. அநேகமாகக் கீழே ஒரு கனவுந்து உறுமிக் கொண்டிருக்கக்கூடும். அதில் ஏறி மறையப் போகும் பொழுதோடு அவர்களும் கரைந்திட ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

“எல்லாம் போங்கடா… இப்படியே ஓடிக்கிட்டே இருக்க வேண்டியதுதான்…”

அலுப்பின் உச்சம் ஓர் அனல் போல உள்ளுக்குள் கனன்று கொண்டிருந்தது. அம்மோய் அக்கா வீட்டுக்கு வெளியிலுள்ள சுவரோடு கம்பிக் கட்டிக் காய வைத்திருக்கும் துணியை அப்படியே மறந்துவிட்டுப் போய்விட்டாள். மழைக்காற்று அத்துணிகளை அசைத்து அதன் நெடியை இங்குவரை கொண்டு வந்து சேர்த்துக் கொண்டிருந்தது. கடைசி மகனின் ஒரு பழைய காற்சட்டையும் அவளது அம்மாவின் ஒரு கிழிந்த கைலியும் அப்படியே கைவிடப்பட்டிருந்தன. அதனை யாரும் திருடவும் இல்லை. எப்பொழுதும் இந்த அடுக்குமாடியில் எதையாவது மறந்து வெளியில் வைத்துவிட்டால் மறுநாள் அது காணாமல் போய்விடும். குறிப்பாக, காலணிகளைத் தேடிக் கொண்டு வருபவர்களின் தொல்லைகள் எரிச்சல் மிக்கவை.

“என் சப்பாத்திய பாத்தீங்களா?” இப்படித் தினமும் யாராவது இங்குத் தேடிக் கொண்டே வருவார்கள்; போவார்கள். பதில் சொல்ல சிலசமயங்களில் பிடிக்காமல் வெறுமனே பார்ப்பேன். வீட்டு வாசலில் அவர்களின் கண்கள் கவனத்துடன் பாய்ந்து செல்லும். பின்னர், புலம்பிக் கொண்டே பக்கத்து வீட்டின் வாசலுக்குப் போய்விடுவார்கள். என்னுடைய அறுந்துபோன ஜப்பான் சிலிப்பர் அவர்களுக்குப் பாதகமில்லை. அதுவும் ஜோடியில்லாமல் அறுந்து கிடக்கும் சிலிப்பரை அவர்கள் பார்த்துவிட்டுக் கழிவிறக்கத்துடன் நகர்ந்துவிடுவார்கள். அதனாலேயே அந்த ஒற்றைச் சிலிப்பரை நான் வாசலிலிருந்து அகற்றவே இல்லை.

லெபாய்மான் அடுக்குமாடி பலர் விட்டுச் சென்ற காலி வீடுகளுக்கு இடையில் ஆடம்பரமற்ற அங்கலாய்ப்புகளுடன் மிச்சம் மீதிகளைத் தனக்குள் அதக்கிக் கொண்டிருந்தது. கண்ணாடிச் சன்னலை மெதுவாகத் திறந்தேன். துருப்பிடித்த பிடி இலேசாக முனகியது. சில வாரங்களுக்கு முன் உடைந்திருந்த அனைத்துக் கண்ணாடிகளையும் மாற்றிவிட்டேன். சாத்த அடம்பிடிக்கும் முன் சன்னல்களையும் சரிப்படுத்திவிட்டேன். எல்லோரும் விட்டுப் போய்க்கொண்டிருக்கும் வீட்டை எதற்குச் சரி செய்ய வேண்டுமென மனம் கேட்டது.

இரண்டாண்டுகளுக்கு முன் லெபாய்மான் வட்டாரத்தில் இருந்த இரண்டு பெரிய தொழிற்சாலைகள் தீயில் கருகிய பிறகு அவ்விடம் கைவிடப்பட்டதைப் போல ஆகிவிட்டது. இங்கிருப்பவர்கள் பெரும்பாலும் அந்தத் தொழிற்சாலையில் வேலை பார்த்தவர்கள். சிலர் இரப்பர் தொழிற்சாலைக்கும் கையுறை தயாரிக்கும் தொழிற்சாலைக்கும் பாதுகாவலராகவும் இருந்தனர். காலையில் மூவர், இரவில் நால்வர் என இங்கிருந்துதான் ஆள்கள் செல்வார்கள். கணேசன் அண்ணன் அந்தத் தீ விபத்தை அருகில் நின்று பார்த்தவர் என்பதால் கடந்த வாரம் வரை எல்லோரிடமும் அச்சம்பவத்தை விவரித்தபடியே இருந்தார். அவர் கண்களில் தீயின் ஜூவாலைகள் பொங்கியபடியே இருந்தன. அவரும் நான்கு நாள்களுக்கு முன் மகனோடு இருந்துவிடலாம் எனச் சென்றுவிட்டார். சதா வெளிவரந்தாவில் யாராவது ஒருவரின் வீட்டுக்கு முன் நின்று கதை அளந்து கொண்டிருப்பார். எனக்கு அப்படியெல்லாம் பழக்கமில்லை. பக்கத்து வீட்டு ஆள்களிடம்கூட சாதாரண உரையாடலுக்கே தயங்குவேன். வார்த்தைகள் கெட்டியாக இறுகிக் கொண்டுவிடும். அதுவும் கடந்த ஒரு வாரத்தில் வீட்டிற்குள் கவனத்துடன் இருக்கிறேன். ஒரு மிரட்சியின் பிடிக்குள் தவித்துக் கொண்டிருந்தேன்.

“குமாரு, சும்மா விட்டுக்குள்ள தனியா உக்காந்து என்ன அடகாத்துக்கிட்டா இருக்க? நாளு மனுசாளுங்ககிட்ட வந்து பேசுடா…நல்லா படிச்சிருக்க… ஆனா வேற வேலைக்குப் போக மாட்டற…” கணேசன் அண்ணன் எப்பொழுதோ வீட்டுக்குள் இருந்த என்னைப் பார்த்துக் கத்திவிட்டுப் போனது மட்டும் நினைவில் உயிர்ப்புடன் ஒலித்துக் கொண்டிருந்தது. இப்பொழுது நினைத்தாலும் அவர் குரலை இங்குக் கேட்க இயலாது. யார் வீட்டின் முன்னும் அவர் நின்று பேசப்போவதில்லை. எல்லா வீட்டின் முன்பக்கமும் ஆள் அரவமில்லாமல் அமைதியில் கணத்துப்போகும். மௌனம் பித்துப் பிடித்தாற்போல அங்குமிங்குமாக அசைந்து கொண்டிருந்தது. இரப்பர் தொழிற்சாலையில் இருந்தவரை ஒரு மதிப்பு இருந்தது. ‘லைன் லீடர்’ என்று என் மீது சிலருக்குப் பயமும் இருந்தது. அந்தப் பயம் உருவாக்கிக் கொடுத்த வட்டத்தினுள் என்னை நானே பத்திரமாகப் புதைத்துக் கொண்டிருந்தேன்.

இப்பொழுது நிலைமை அப்படியல்ல. ஒரு சிலர் சிங்கப்பூருக்கு ஓடிவிட்டார்கள். கடன் தொல்லை அவர்களை விரட்டிவிட்டது. மேசையில் வெகுநேரம் காய்ந்து கொண்டிருந்த ரொட்டித் துண்டைக் கவனித்தேன். அதில் அண்ணாசி ‘ஜேம்’ தடவிச் சாப்பிட்டிருக்க வேண்டும். எப்பொழுது அதைச் செய்ய மறந்திருப்பேன் என ஞாபகமில்லை. அண்ணாசி ஜேம் போத்தல் காலியாகும் வரை நாவில் தித்திப்பைக் கொண்டு வர முடியும். அதுவும் முடிந்துவிட்டால் வெறும் ரொட்டியைத் தின்பதற்கு ஒரு மனத்திடம் வேண்டும். சட்டெனத் தாத்தா இரும்பினார். அறையின் இருளுக்குள் படுத்திருந்த அவருக்கு இன்று இரும்பல் அதிகரித்திருந்தது. அவரிருக்கும் அறையில் பழுதாகிப்போன விளக்கை மீண்டும் மாற்றவில்லை. அப்படியே விட்டுவிட்டேன். சன்னல்களையும் துணியால் இழுத்து மூடிவிட்டேன். பகல் வெளிச்சம்கூட உள்ளே நுழையாது. பகலிலும் வீடு இருண்டுதான் தெரியும். அவருக்கு அதுவொரு சமாதானமாகக்கூட இருக்கலாம். இருளை வெறித்திருப்பது அவருக்கு ஆறுதல் அளிக்கலாம். வெளிச்சத்தில் எல்லாமும் தெரிந்துவிடும். அதனை அவர் தாங்கிக் கொள்ள முடியாது. இருள் எல்லா உண்மைகளையும் ஒரு குழந்தையாக்கிவிடும்.

ஒரேயொரு மேசை விளக்கு. மஞ்சள் ஒளியைக் கக்கிக் கொண்டிருந்தது. அதுவும் வரவேற்பறையில் இருந்த மேசையில் வைத்து எரியவிட்டிருந்தேன். மெல்ல சக்தியை இழந்து கொண்டிருந்தது. மெழுகுவர்த்தியைத் தேடிப் பார்த்தேன். வீட்டில் அப்படி எதுவுமே இல்லை. இருந்தும் இல்லாததைப் போலத் தோன்றும் உணர்வு. முன்பு எப்பொழுதோ பற்ற வைத்துப் பாதி எரிந்து சன்னலுக்கடியில் குற்றுயிராய்க் கிடந்த மெழுகுவர்த்தி கண்ணில் பட்டது. பற்ற வைத்ததும் நெருப்புப் படபடத்தது. மெதுவாக சுடரை அணைத்தவாறு அறைக்குள் கொண்டு சென்றேன்.

தாத்தா ‘ஸ்ப்ரிங்’ மெலிந்து தொங்கும் கட்டிலில் படுத்திருந்தார். ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை இரும்பித் தன் இருப்பைக் காட்டிக் கொண்டிருந்தார். அந்தச் சத்தம் வெளியில் போகாமல் தற்காத்துக் கொள்ள வேண்டும். அறையைச் சாத்தியே வைப்பதுதான் அதற்கான தீர்வு. இருளும் அடைப்பும் தாத்தாவின் இருப்பைக் கவனமாகக் காத்துக் கொண்டிருந்தன.

“என்ன தாத்தா? மூத்திரம் போய்ட்டியா?”

பதில் பேசமாட்டார் எனத் தெரிந்தும் அவரிடம் பேசுவது எனக்குப் பிடிக்கும். என்னுடனே நான் பேசிக் கொள்வதற்கு ஒரு சந்தர்ப்பம் அது. இல்லையென்றால் சொந்தமாகப் பேசிக் கொள்ள வேண்டும். அது என்னை நானே அபூர்வமாகப் பார்க்கத் தூண்டிவிடும். அவர் உடலைச் சற்றே அசைத்தால் குப்பென்று ஒரு நெடி பரவும். தாத்தாவின் உடல் வியர்த்துப் பின்னர்க் காய்ந்து பிசுபிசுக்கும் சிறுநீர் வாடையில் கலந்து எழுப்பும் நெடியைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். பக்கத்தில் வெள்ளிப் பாத்திரத்தில் நேற்று வைத்த தண்ணீர் அப்படியே சில கொசுக்கள் செத்துக் கிடக்க அலம்பலில்லாமால் தெரிந்தது. அதனுள் ஊறிக் கிடந்த துணியை எடுத்துத் தாத்தாவின் முதுகுபுறத்தையும் கால்களையும் துடைத்துவிட்டேன்.

“என்ன தாத்தா, பயமா இருக்கா? இருட்டுன்னா பயமா?” சொல்லிவிட்டு வேடிக்கையாகச் சிரித்தேன். அவர் ஒன்றும் பேசவில்லை. கண்கள் அசையாமல் என்னையே கவனித்துக் கொண்டிருந்தன. அவரது உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. இரும்பும்போது நெஞ்செலும்புகள் புடைத்து அமிழும். அதைப் பார்க்க வேண்டாமென மெழுகுவர்த்தியைத் தள்ளிச் சுவரை நோக்கி வைத்தேன். சுவரில் என் உருவம் பெருத்துப் பரவியது.

தட்டில் வைத்திருந்த கஞ்சை எடுத்துத் தாத்தாவின் வாயில் வைத்தேன். நான்கு மணி நேரத்திற்கு மேல் ஆகிவிட்டதால் கரண்டியைப் பதற்றத்துடன் கௌவினார். வாயிலிருந்து மிச்சக் கஞ்சி கட்டிலில் சரிந்து கீழே ஒழுகியது. வீட்டில் அரிசி இல்லை என்ற ஞாபகம் அப்பொழுதுதான் நினைவில் தட்டியது. வீட்டில் எதுவுமே இல்லை என்பதுதான் உண்மை. அறையிலிருந்து வெளியே வந்தேன். சிறிய வெளிச்சம் மட்டுமே எங்கும் பரவியிருந்தது. முழுவதும் இருள வேண்டும் எனக் காத்திருந்தேன்.

வீட்டில் இரண்டு நாற்காலிகள் மட்டுமே இருந்தன. ஒன்றில் குழி விழுந்து மஞ்சள் பஞ்சுகள் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தன. இன்னொன்று கால் உடைந்து முட்டுக் கொடுக்கப்பட்டு இரும்பில் கட்டி வைக்கப்பட்டிருந்தது. சுவரில் அம்மாவின் படம். ஒரேயொரு பழுப்பு நிற மேசை. அதில் பழைய நாளிதழ்களும் மிச்ச ரொட்டித் துண்டும் கொஞ்சம் ஈக்களும் மொய்த்துக் கொண்டிருந்தன. அப்பா மட்டும் தற்கொலை செய்து கொள்ளாமல் இருந்திருந்தால் நானும் அம்மாவும் இந்த லெபாய்மான் அடுக்குமாடிக்கு வந்திருக்க மாட்டோம். கோலா கெட்டிலில் அப்பா வைத்திருந்த குளிர்சாதனம் பழுது பார்க்கும் கடைக்கு மேலேயே இருந்திருப்போம். எனக்கும் அங்கேயே ஏதாவது வேலையும் கிடைத்திருக்கும்.

அப்பாவின் கழுத்தை இறுக்கிப் பிடித்திருந்த கயிற்றை அவரிடமிருந்து விடுவிக்கும்போது நான் அவருடைய கண்களை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தேன். உயிரின் மொத்தக் கணமும் கண்களில்தான் மீந்திருக்கின்றது.

“ஊருல அங்கயும் இங்கயும் கடன வாங்கிட்டு இப்படித் தொங்கிட்டான்… கோழ…”

இந்த வரியைப் பிசிறில்லாமல் அடுக்கு மாறாமல் அம்மா கடைசிவரை சொல்லிக் கொண்டே இருந்தார். பிதற்றலாகவும் புலம்பலாகவும் கோபமாகவும் சாபமாகவும் எரிச்சலாகவும் துக்கமாகவும் அது ஒவ்வொரு சமயத்திலும் வெவ்வேறு தொனியில் காலம் முழுவதும் என்னைத் தொடர்ந்து கொண்டிருக்கும் வரி.

“அப்பாவும் அம்மாவும் தற்கொல கேஸ்… நீயும் பாத்திரு… உனக்கும் அந்த எண்ணம் வரலாம்… தனியா இருக்காதடா…”

எனக்குத் தெரிந்தவர்கள் நான் விரும்பாவிட்டாலும் என்னிடம் தொடர்ந்து சொன்ன ஆலோசனைகள் இவை. நான் தனித்திருக்கக்கூடாது என்பதே அவர்களின் அறிவுரை. நானும் தனித்திருக்க விரும்பவில்லை. என்னை நானே உள்நோக்கி பார்த்துக் கொள்ளும் தருணத்தில் எனக்குத் தற்கொலை உணர்வுகள் வரலாம் என நினைத்திருந்தேன். தாத்தா மீண்டும் இரும்பினார். அவருடைய இரும்பல் ஓர் அழைப்பைப் போன்று ஒலிக்கும். பெரும்பாலும் பொருட்படுத்த மாட்டேன். வெறுமனே இருண்டிருக்கும் அவருடைய அறையை எட்டிப் பார்ப்பேன். கட்டில் முனகும் சத்தம் கேட்கும்.

“தாத்தா… இந்த இருட்டுப் பயமா இருக்கா?”

அவரிடம் பதில் இருக்காது. நாங்கள் இருவரும் வெளிச்சத்திற்குள்ளும் இருளுக்குள்ளும் இருந்து கொள்கிறோம்.

“குமாரு, உன்னால இங்க இருக்க முடியலைன்னா… வள்ளலார் மன்றத்துக்குப் போய்ரு… அவுங்க பாத்துக்குவாங்க…”

பக்கத்து வீட்டு அம்மோய் அக்கா முதல் மேரி பெரியம்மா வரை எல்லோரும் வந்து சொல்லிவிட்டார்கள். நான் எங்கும் செல்ல நினைத்ததில்லை. நான் என்னுடனே இருக்க வேண்டும். என்னை நான் கவனித்துக் கொள்ள வேண்டும். எனது அனைத்து இயலாமைகளையும் நான் பார்த்துக் கொண்டே இருக்கிறேன். கடந்த ஒரு வாரமாக இத்தனைநாள் இருந்த தனிமை இல்லை. அன்று பெய்தோய்ந்த மழையும் அபூர்வமான சுழல் காற்றும் அதிசயம் வாய்ந்தவை. ஒரு மின்னல் வெட்டில் கடவுள் வந்துவிட்டுச் சென்றது போன்ற ஆச்சரியங்கள் நிறைந்த கணங்களைக் கொண்டவை. என்னைப் போல் இங்கிருந்தவர்களுக்கும் இது நடந்திருக்கக்கூடுமா என்கிற சந்தேகம் எழுவதுண்டு. அப்படி இருந்திருந்தால் இந்நேரம் இவ்விடம் களேபரம் பூண்டிருக்கும். எனக்கு மட்டுமே தெரிந்த அதிசயத்தின் முன்னே பேரதிர்ச்சியுடன் அமர்ந்திருந்தேன்.

“தாத்தா… நானும் செத்துருவேனோனு ஒரு பயம் இருந்துச்சி… ஆனா, நான் சாவமாட்டேன்னு நீ வந்து சொல்லிட்ட…”

தாத்தாவால் எழ முடியாது; கழிவறைக்குச் செல்ல முடியாது. கஞ்சை தவிர வேறு ஏதும் குடிக்கவும் முடியாது. அவற்றின் மீது நான் இருந்தேன்.

“தாத்தா… இவ்ள அதிசயத்தோட நீ வந்தது எதுக்கு? எனக்கு அது புரியல…”

கையிருப்பில் இருக்கும் கடைசி சேமிப்பு நாளை முடிந்துவிடும். பிறகு, கடன் வாங்க நேரிடும். அப்பாவின் நினைவுகள் சட்டெனப் பூதம் போல வந்துவிடுகின்றன. தாத்தாவின் உடல் அசைவைப் பார்த்தேன். ஒரு காலத்திரளாகப் புரண்டு படுத்துக் கொண்டிருந்தார். கடந்த வாரம் இதுபோன்ற ஓர் இரவில் உருவான பெருஞ்சுழலுக்குப் பின் ஒரு மின்னல்வெட்டு, மின்சாரம் மொத்தமாகப் பாய்ந்து எழுப்பிய இரைச்சலில் சட்டென வீட்டிற்குள் வந்தவர் இப்பொழுதுவரை ஒரு மாயமெனத் தெரிகிறார். கதவுகள் அதிர்ந்து அடித்துக் கொண்ட தருணத்தில் அறையிலிருந்து வெளியில் வந்து நின்றார். திடுக்கிட்டுப் பார்த்தேன்.

“என் பேரு குமாரு… இது என்னோட வீடு… நீ யாரு?”

இது மட்டும்தான் அவர் வந்ததிலிருந்து உச்சரித்துக் கொண்டே இருந்தார். அவரும் மின்சாரம் தாக்கியது போன்ற அதிர்ச்சியில் உறைந்திருந்தார்.

“என்ன வீடு மாறி வந்துட்டீங்களா…? வெளில போங்க…” துரத்தப் பார்த்தேன்.

“இல்ல இது என் வீடு… நான் குமாரு… நான் முன்ன உன்ன மாதிரித்தான் இருந்தன்…”

உற்று நோக்கினேன். முதிர்ந்த அவருடைய முகம் என்னுடையது எனத் தெரிந்து கொண்டதும் நிலைக்குத்திப் போனேன்.

“நீங்க நானா? எப்படி இங்க வந்தீங்க…?”

“எனக்கு 45 வயசு இருக்கும்போது ஒரு வயசானவனக இதே மாதிரி… இதே மின்னல்… காத்து… என் வீட்டுக்குள்ள வந்தாரு… ஒரு வாரத்துல செத்துட்டாரு… அப்படின்னா… அது…”

தடுமாறிக் கீழே உட்கார்ந்தவர்தான். அதன்பின் என் கண்களை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தார். வார்த்தைகள் எழவில்லை. அவருடைய ஏக்கமிகு கண்களையே பார்த்துக் கொண்டிருந்தேன். நான் என்னை உற்று நோக்கும் ஒரு தருணம் கிடைத்தது. ஒன்றும் புரியாமல் சலிப்பின் உச்சத்தில் இருந்த நானும் அவரின் எதிரே அமர்ந்து சூழலைக் கண்காணிக்கத் துவங்கினேன்.

“இன்னும் முப்பது வருசத்துல நான் உன்ன மாதிரிதான் இருப்பன் தாத்தா…”

நான் எனது எதிர்காலத்தின் முன்னே அமர்ந்திருந்தேன். ஆச்சரியங்களுக்குள்ளும் குழப்பத்திற்குள்ளும் மிதப்பது ஒரு போதை. தற்கொலை உணர்வுகள் கூட்டாகச் சேர்ந்து உருவாக்கும் மாயையாகக்கூட இருக்கலாம் எனத் தோன்றியது. மனத்திற்கு ஏதோ நோய் வந்துவிட்டது என்றே நினைத்தேன். ஆனால், தாத்தா இரும்பும் சத்தத்தைக் கேட்டுப் பக்கத்து வீட்டுச் சிறுமி, “யார் அங்கள் இரும்பனது?” எனக் கேட்டுவிட்டுப் போன மறுகணம் எல்லாம் உண்மையென உணர்ந்தேன்.

கதவுக்குத் தாழ்ப்பாள் வாங்க வேண்டும். அதற்கும் பணம் தேவை. இப்போதைக்கு ஒரு நெகிழிக் கயிற்றைக் கொண்டு முன்கதவை அதன் நாதாங்கி ஓட்டையில் வைத்து இறுகக் கட்டினேன். மனத்திற்குள் ஒரு பூரிப்பு. கதவை இழுத்துப் பார்த்தேன். அத்துணை எளிதில் திறக்க வாய்ப்பில்லை. வரவேற்பறையில் தூங்கினாலும் தாழ்ப்பாள் இல்லாத கதவு இதுவரை இப்படி உறுத்தியதில்லை. இன்று பல மணி நேரங்களாக அக்கதவு இம்சித்துக் கொண்டிருந்தது.

“தாத்தா இருட்டிருச்சி…”

அறைக்குள் எரிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்தி இரவு காற்றில் பதற்றம் கொண்டது. தாத்தா இப்பொழுது சத்தமாக இரும்பினார். உள்ளே சென்று அவருடன் மஞ்சள்வெளியில் திட்டுத்திட்டாய் பரவிக் கொண்டிருக்கும் இருளுக்குள் அமர்ந்து கொண்டேன்.

“நாளைக்கு வீட்டுக்காரன் வந்து கத்துவான் தாத்தா… போன வாரமே வீட்ட கொடுக்கச் சொல்லிட்டான்… பங்களாடேஷ்காரனுங்க வாடகைக்கு வரப் போறானுங்களாம்…”

லெபாய்மான் அடுக்குமாடி ஒரு மௌனத்திற்குள் ஆழ்ந்து அடங்கிக் கொண்டிருந்தது. சில வீடுகளில் மட்டும் விளக்குகள் மின்னிக் கொண்டிருந்தன. இடையிடையே தெரியும் இருள் மனத்தை என்னவோ செய்தது. மீண்டும் தாத்தாவைப் பார்த்தேன்.

“நீ என்னோட எதிர்காலத்துலேந்து வந்துருக்கனா… நான் இன்னும் பல வருசங்கள் இங்கதான் இதே எரிச்சலோட… தனிமைக்குள்ள, வறுமையில… பேச நாதியில்லாம கெடந்துருக்கன்… உன்ன பார்க்கும்போது என் மிச்ச வாழ்க்கய நெனைச்சா பயமா இருக்கு, தாத்தா… யேன் நீ இங்க வரணும்? எப்படி வந்த? எனக்கு மெசெஜ் கொடுக்க வந்துருக்கியா? நானும் உன் வயசுக்கு வந்தோன இப்படி என்னோட இறந்தகாலத்துக்குப் போய்த்தான் சாகணும்னா… இது நடந்துகிட்டேதான் இருக்கா?”

எல்லாம் அந்த மழையும் சுழல் காற்றும் மின்னலொளியும் உருவாக்கிய வேடிக்கை. மீண்டுமோர் அடைமழையும் காற்றுச் சுழற்சியும் தோன்றிட வேண்டும். என்னை மீண்டும் எடுத்துச் செல்ல வேண்டும். இப்பொழுது நான் இல்லாத எனது எதிர்காலம் எங்கோ நகர்ந்து கொண்டிருக்கிறது. வாழ்க்கையையும் இயற்கையையும் முழுமையாகப் புரிந்துகொள்ளும் முன்பே நாம் அதற்குள் சுருண்டு சிறுத்துக் காணாமல் போய்விடுகிறோம்.

“தாத்தா பயமா இருக்கா?”

அந்த இருளுக்குள்ளும் தாத்தாவின் கண்கள் என் கண்களைத் தேடிக் கொண்டிருந்தன. நான் அதற்கு வாய்ப்பளிக்காமல் தீச்சுடரின் சுவர் நடனத்தில் இணைந்து கொண்டேன். எங்கள் உருவங்கள் சிறுத்தும் பெருத்தும் அறைச்சுவரில் வித்தையென விரிந்து கொண்டிருந்தன.

“தாத்தா நாம இல்லாத ஒரு காலத்த… உலகத்த கற்பனை செஞ்சி பாரேன்… நான் இப்ப இல்லன்னா நீ இல்ல… இந்தக் காலம் இல்லன்னா அந்தக் காலமும் இல்ல… காலமும் காலமும் செய்ற ஒப்பந்தம்… நீ செத்துட்டா நான் இருப்பன்… இன்னும் முப்பது வருசத்துக்கு இங்கயே இருப்பன்… இதே நினைவுகளோட… மறுபடியும் அந்தச் சுழல் காத்து வரும்… நான் வயசாயி திரும்பியும் என்னோட 45ஆவது வயசுக்கு வருவன்… என்ன தாத்தா இது? இவ்ள விந்தையா இருக்கு? இது நடக்காம இருக்கணும்னா… அதுக்கு ஒரே வழித்தான்…”

தாத்தாவின் தளர்ந்த கைகள் இரண்டையும் ஒன்று சேர்த்து என் கைகளுக்குள் பிடித்துக் கொண்டேன். அவர் முரண்டு பிடிக்கவில்லை. இருள் எங்கள் இருவரையும் சுற்றி ஒரு வேலியை உருவாக்கிக் கொண்டிருந்தது. மீண்டும் அதே மழை பளிச்சிடும் மின்னலொளியுடன் பெய்யத் தொடங்கியது. கயிற்றால் கட்டியிருந்த தாழ்ப்பாள் கதவை உறுதியுடன் பற்றியிருந்தது.

-கே.பாலமுருகன்

அறிவியல் சிறுகதை தொடர்: ஒலி – 2

குறிப்பு: இச்சிறுகதை, ஒலி என்கிற அறிவியல் சிறுகதையின் தொடர்ச்சி என்பதால் முதல் பாகத்தைப் படித்துவிட்டு இரண்டாம் பாகத்தைத் தொடர்ந்து வாசிக்கவும். இணைப்பு: https://balamurugan.org/2021/07/24/அறிவியல்-சிறுகதை-ஒலி/

பலகோடி துகள்களின் ஒரு மகத்தான மௌனம் இது. தூரத்தில் மின்னி பின்னர் இருளில் கரைந்தொழுகும் ஒரு வண்ணக் கலவையால் சூழ்ந்திருக்கும் பிரபஞ்சம். சப்தமற்ற இருள்வெளி. கோடி மைல் தூரத்துக்கு அப்பால் ஒளி மிளிர்கின்றன.

“வாசு, யாராவது உன்கிட்ட எப்பவாது  453ஆம் ரூம்பு, C-vid 12ஆவது சேட்டலைட் அப்படின்னு சொன்னா சிரிச்சிறாத… இந்த வாழ்க்கய 57 வருசம் வாழ்ந்துட்டோம்… அதனால சொல்றன்…கேவலமா சிரிச்சிறாத…”

“யேன் யோகி, அப்படிச் சொல்ற? நீ என்ன தப்பு பண்ண? உன்ன மாதிரி என்ன மாதிரி… இங்க வெளில எத்தனாயிரம் பேரு இருக்காங்கன்னு தெரியுமா?”

நாங்களிருக்கும் அறைக்கு வெளியே ஓயாமல் சுழன்று கொண்டே இருக்கும் வட்ட அறைகள் பல்லாயிரம் முறை இரவுகளை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கின்றன. இரவு ஒரு நட்சத்திரம் போல இணைந்து இணைந்து உருவெடுத்து ஒரு பெரும்சுவரென எங்களை மூடியிருந்தது.

“ஒரு வைரஸ் நம்மள என்னலாம் செஞ்சிருச்சி பாத்தீயா? ம்ம்ம்ம்… இப்படி இந்த இடத்துல இவ்ள இருட்டுக்குள்ள வந்து ஒளிஞ்சிக்கிட்டு… என்ன மாதிரியான வாழ்க்க இது வாசு? உனக்குக் கொஞ்சம்கூட அலுக்கலயா?”

“நீ அப்படி நெனைக்கறதுல அர்த்தமே இல்ல… இப்ப மட்டும் உன்ன மாதிரி இந்த இருபதாயிரம் குழந்தைங்களும் அப்போ கொண்டுட்டு வராம இருந்திருந்தா… இப்ப மனுசன்னு சொல்லிக்க இந்த ஸ்பேஸ்லே யாரும் இருந்திருக்க மாட்டாங்க…நம்ம அதிர்ஷ்டசாலி தெரியுமா?”

கால்களைத் தரையில் வைத்து அழுத்திப் பார்த்தேன். கால்கள் மிதக்கக்கூடாது. ஒவ்வொரு அறையையும் செயற்கை புவி ஈர்ப்புச் சக்தி தமக்குள் இணைத்திருந்தது. ஒருவேளை புவி ஈர்ப்பு சக்தியைக் குறைப்பதன் மூலம் மையச் செயலகம் நம்மைக் கைவிடுவதற்கான ஆய்த்தநிலைக்கு வந்துவிட்டதாக புரிந்து கொள்ளலாம். அது ஒரு மாயையென கால்களைச் சுற்றிப் பிணைந்திருக்கிறது.

“வாசு, கால் மிதக்குதா?”

“இல்ல… நல்லாத்தான் இருக்கோம்…ஏன்?”

அவனிடமே நான் பலமுறை சொல்லிவிட்டேன். பிரபஞ்சத்தில் நம்மை கைவிட முதலில் அவர்கள் புவி ஈர்ப்பு மையத்திலிருந்து நம்மைத் துண்டிக்க வேண்டும். நம் உடல் மிதக்கும். மெல்ல இங்கிருந்து விடைபெற்றுப் பிரபஞ்சத்தின் மிக விரிந்த தாய்மடியில் மிதப்போம். அதுதான் நம் மரணத்துக்கான தொடக்கம். அவனுக்கு இது புரிவதில்லை.

“வாசு, நம்ம ஏன் மத்தவங்ககிட்ட பேசக்கூடாது; பழகக்கூடாதுன்னு தெரியுமா? ஏன் அவுங்க முகங்கள நம்ம ஞாபகம் வச்சுக்கக்கூடாதுன்னு யோசிச்சி பார்த்துருக்கியா?”

அவன் சுவரில் தெரியும் அசையாமல் இருக்கும் கடலலைகளை அவனது கண்களால் கற்பனையால் அசைத்து விளையாடிக் கொண்டிருந்தான்.

“அங்கப் போய் வாழணும், யோகி… இது மட்டும்தான் என் நெனைப்புல இருக்கு…”

“ம்ம்ம்… இதுக்கப்பறம் என்ன வாழ்க்க வாழணும்னு தெரில… வாழ்ந்து முடிச்ச மாதிரி சோர்வா இருக்கு… ரொம்ப அமைதியா இருக்கு இந்த இடம்… அம்பது வருசமா இந்த அமைதிய பார்த்துக்கிட்டு இருக்கோம் வாசு… உனக்குத் தெரியும்தான?”

அவன் அமைதியாக இருந்தான். கடைசி கேள்வியும் பதிலும் என்னுடையதாகவே இருக்கும். அவன் அந்த நேரத்தில் பேசமாட்டான். அமைதியாக இந்தப் பிரபஞ்ச வெளியின் அமைதிக்குள் அமர்ந்திருப்பான்.

“வாசு… உண்மையில பூமிக்குப் போறதுல உனக்கு மகிழ்ச்சியா?”

“ஆமாம்… அங்க இருக்கற இயற்கையோட சத்தத்த நான் காது குளிர கேக்கணும்… அதுவொரு பேரின்பம்…”

“நீ போவேன்னு நெனைக்கறீயா?”

“இன்னும் ஒரு பரீட்சைத்தானே…? போய்றலாம்…”

“வாசு, உனக்கு ஞாபகம் இருக்கா…? நமக்கு மேல 454ஆவது ரூம்புல இருந்தவரு…?”

“யேஸ்… மிஸ்டர் கோவிந்தசாமி… மனநோயாளி…”

கோவிந்தசாமி பொது அரங்குக்கு வந்த அன்றைய நாள் கத்திக் கொண்டே இருந்தார். நான் பூமிக்குச் செல்லவில்லை என அதுவரை அங்கிருந்த அமைதியைச் சீர்குழைக்கும் வகையில் அவரது குரல் இருந்தது. அவர் மாத்திரைகள் சாப்பிடவில்லை என்றும் இங்குள்ள விதிகளை மீறிவிட்டார் என்றும் மைய செயலகத்திலிருந்து சிலர் அங்கு வந்து சேர்ந்தனர். மைய செயலகத்தினர் இப்படி ஏதாவது அசம்பாவிதங்கள் நடக்கும்போது மட்டுமே வெளியில் வருவார்கள். உருவம் தெரியாத அளவில் முழுவதுமாக விண்வெளி உடையில் தங்களை மறைத்துக் கொண்டிருந்தனர்.

“அப்படியில்ல வாசு… மனநோயாளியா ஆயிட்டாரு… இந்த ரூம்புங்களுக்கு ஏன் ஜன்னல் வைக்கலன்னு தெரியுமா?”

“இந்த இருட்டு அவ்ள பயங்கரமானது இல்லையா?”

அறையைச் சுற்றி பளிச்சிட்டுக் கொண்டிருந்த வெளிச்சத்தில் பூமியின் அத்தனை அழகும் ஒன்றுசேர்ந்து காட்சியளித்தன. வாசு ஒரு ஏமாளி. ஓவியங்களைத் தடவி பார்த்துப் பூமியைத் தொடுவதாகக் கற்பனை செய்து கொள்வான். இவையனைத்தும் உண்மையென நம்புகிறவன். அவனுக்குத் தெரிந்து இருளின் மறுபக்கம் வெளிச்சம். அந்த வெளிச்சத்தை நோக்கி தவம் கிடக்கிறான்.

“சரியா சொன்ன வாசு… உன்ன மாதிரி ஒரு புத்திசாலி எல்லா இன்பத்துக்கும் ஆசைப்படற மாதிரி எல்லா துன்பத்துக்கும் துக்கப்படவும் செய்யலாம்…”

“அதுக்குப் புத்திசாலியா இருந்தாகணுமா?”

“உன் கனவுல பூமி மட்டும்தான் இருக்கு வாசு… உன்ன பூமிக்குத் தகுந்த ஒரு மனுசனா நீ மாத்திக்கிட்டே இருக்க… ஆனா என்னால அப்படி முடியாது… நான் இந்தப் பிரபஞ்சத்துக்கு உரியவன்… உன்னோட சின்ன பூமில என்னால வாழ முடியுமான்னு தெரில…”

“யோகி, இப்படித்தான் அந்த மிஸ்டர் கோவிந்தசாமி சாவறத்துக்கு முன்ன நான் பூமிக்குப் போகல பூமிக்குப் போகலன்னு கத்திக்கிட்டு இருந்தாராம்…”

அவர் கடைசியில் என்ன ஆனார் என்பது வியப்புத்தான். கடைசிவரை அவரை நான் மீண்டும் பொது அரங்கில் சந்திக்கவில்லை. கோவிந்தசாமி எங்கோ அழைத்துச் செல்லப்பட்டார். அநேகமாக பிரபஞ்சத்தில் கைவிடப்பட்டிருக்கலாம். அவருக்கான புவி ஈர்ப்புச் சக்தி துண்டிக்கப்பட்டிருக்கலாம். பூமிக்கும் மையச் செயலகத்துக்கும் இடையில் விரிந்திருக்கும் இருள்வெளியில் கோவிந்தசாமியின் உடல் சிதைந்து பாகங்களாக மிதந்து கொண்டிருக்கக்கூடும். இருவரும் இப்பொழுது அமைதியாக இருந்தோம். நாங்கள் அமர்ந்திருந்த அறை சுழல்வதற்கான எந்த அறிகுறியும் காட்டாமல் நிசப்தமாகவே இருந்தது.

“இப்பவே கீழ குதிச்சரலாமா, வாசு?”

“என்ன பேசற? பைத்தியமா உனக்கு, யோகி?”

அவன் உள்ளுக்குள் பரபரப்பானான். நான் இந்தக் கேள்வியை அவனிடம் பலமுறை கேட்டுவிட்டேன். இந்த அறையின் கதவு எனது கட்டுப்பாட்டில் இல்லை. நான் நினைத்தாலும் கதவைத் திறக்க முடியாது. புவி ஈர்ப்பு நம் உடலை மையச் செயலகத்துடன் இணைத்துள்ளது. நினைத்தாலும் நம் கால்கள் பிரபஞ்சவெளியில் குதிக்க இயலாது.

“நீ, நான், மத்தவங்க யார் நெனைச்சாலும் இந்தக் கால்கள விடுவிக்கற சக்தி அவுங்களுக்கு மட்டும்தான் இருக்கு, வாசு”

பொது அரங்குக்குச் செல்லும்போது மட்டுமே இந்த அறையின் கதவு திறக்கப்படும். அதுவும் பொது அரங்கின் ஏறுதளத்தில் நின்று கொண்டு இந்தப் பிரபஞ்ச வெளியில் இத்துணைத் தனிமையில் ஓர் உலகம் இயங்கிக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது ஆச்சரியமாகவும் பயமாகவும் இருக்கும். அப்பொழுதே கீழே குதித்துவிடலாம் என்றும் தோன்றுவதுண்டு. ஆனால், நொடியில் அறைக்குள் ஏறிவிட வேண்டும். இல்லையேல் அலாராம் அடிக்கும். அந்தக் கதவு சில விநாடிகள் மட்டுமே திறக்கும்.  

“ஒருநாள் நம்மளயும் இவங்க கைவிட்டுடுவாங்க, வாசு… நாளைக்கு சைக்கலோஜி பரீட்சையில தோத்துட்டம்னா இங்கயே இந்த இருட்டுக்குள்ளயே இன்னும் பல வருசங்கள் கெடந்து சாகணும், வாசு…”

இருள் ஒரு இராட்சத பூச்சி. சத்தம் எழுப்பாமல் ஒவ்வொரு கணமும் எங்களைக் கவனித்துக் கொண்டிருந்தது.

“என்னால கதவ திறக்க முடியாதுன்னு நெனைச்சியா, வாசு?”

“உன்னால மட்டும் இல்ல… நம்ம யார்னாலயும் இந்தக் கதவுகள திறக்க முடியாது… திறக்கவும் தேவையில்ல… நமக்காக அவுங்க பூமிய திறப்பாங்க… அப்போ அங்கப் போய்க்கலாம்…”

வாசு-2087 பரிதாபத்திற்குரிய ஒரு ஜீவன். இங்குள்ள நியதியை முழுவதுமாக ஏற்று வாழ்பவன். அவனை என் சிறுவயதிலிருந்தே பார்த்துக் கொண்டிருக்கிறேன். இவ்வளவு வயதாகியும் பூமியின் மீது சிறுகுழந்தையைப் போல ஆசைப்படுகிறான். பூமி என்றதும் அவன் துள்ளுகிறான். எனக்கு வேடிக்கையாக இருக்கிறது.

“என்ன சிரிக்கற, யோகி? கீழ குதிச்சா அப்படியே பூமியில போய் விழுந்துடலாமா?”

வாசு ஏன் இத்துணை கருணைமிக்கவனாக இருக்கின்றான் எனத் தெரியவில்லை. மரணத்திலும் ஒரு பூமியைக் கற்பனை செய்கிறான். அவன் ஒரு சிலந்தியாகி ஒவ்வொருநாளும் பூமியைப் பின்னிக் கொண்டிருக்கிறான்.

“வாசு, நம்ம இந்தப் பிரபஞ்சத்துல ஒரு மகா சின்ன ரூம்புல இருந்துகிட்டு எவ்ள பெருசு இருக்கும்னு தெரியாத ஒரு பூமிக்குச் செல்லக் கனவு கண்டுகிட்டு இருக்கோம் தெரியுமா?”

“நீ ஒரு முட்டாள். அங்க பூமிக்குப் போனா இந்த மாதிரி ஆயிரம் ரூம்புகள்ல வாழலாம்…”

வாசு ஒரு குரங்கு. சிந்தனைகளால் தாவிக் கொண்டிருந்தான். வந்த சிரிப்பை என்னால் அடக்கிக் கொள்ள இயலவில்லை. அவனது பரிதாபங்களும் ஏக்கங்களும் மிக்க கண்கள் ஒரு யாசகத்திற்குத் தயாராகிக் கொண்டிருக்கின்றன.

“வாசு, நீ ஒரு கூண்டுக்குள்ள இருக்கற மட்டமான ஒரு மிருகம்… என்ன இந்தக் கூண்டுக்குப் பேரு சையின்ஸ்… சொல்லும்போது கிளேமரா இருக்குல…?”

வாசு நான் கேலி செய்கிறேன் என்பதை ஊகித்துக் கொண்டான். எனது கேலிகளை அவன் நட்சத்திரங்களாக மாற்றிக் கொள்ளும் திறன் உடையவன். இந்த அறையில் அப்படிப் பலநூறு நட்சத்திரங்களைச் சேகரித்து வைத்துள்ளான். அவை அவனைத் தாண்டி ஒளி வேகத்தில் தூரப்பயணித்து மின்னிப் புள்ளியாகிவிடுவதாக அவனே கற்பனை செய்து கொள்வான்.

“தூங்கலாமா?”

“வாசு, நாளைக்கு நடக்கவிருக்கும் சைக்கலோஜி பரீட்சையில நீ தோத்துறவன்னு பயம் இப்பவே வந்துருச்சி போல…?”

“ஏன் சாபம் விடற? போறது உனக்குப் பிடிக்கலயா, யோகி?”

“வாசு, நம்ம எல்லாம் ஒரு கனவுக்குள்ள இருக்கோம்… இந்தக் கனவுல சையின்ஸ் இருக்கு… நம்ம மூளையே அப்படியொரு சையின்ஸ கற்பனை செஞ்சி வச்சிருக்கு… இந்தக் கனவுக்குள்ள நம்ம பல வருசமா மாட்டிக்கிட்டு இருக்கோம்… பூமின்னு ஒன்னு இல்ல… இது எல்லாம் பொய்… நம்ம இந்த அறைக்கு வெளில விரிஞ்சிருக்கும் இருளுக்குள்ள குதிச்சோம்னா ஒரு எலக்ட்ரோனா ஆயி… உடைஞ்சி பிரபஞ்சத்துல துகள்களா கரைஞ்சிருவோம்… நான் சொல்றத கேளு…”

வாசு ஆச்சரியத்துடன் பார்த்தான். புத்திசாலிகளைக் குழப்பது எனக்கு அத்துணைக் கடினமல்ல. புத்திசாலிகளுக்கு இரண்டு பக்கங்கள் மட்டுமே தெரியும். நான் அவன் கற்பனை செய்து வைத்திருந்த வெளிச்சத்தின் பாதைக்குள் நுழைந்துவிட்டேன்.

“நாளைக்கு ஒரு நாள்தான்… அந்தப் பரீட்சையில புள்ளிகள் எடுத்துட்டா நம்ம எல்லோரும் பூமிக்குப் போகலாம், யோகி…”

“அங்க போய் என்ன செய்ய போற…?”

“கடல் அலைகள கேட்கப் போறன்… பரந்தவெளியில ஓடப்போறன்… மண்ணுல சேத்துல குதிச்சி வெளையாடப் போறன்… உணர்ச்சிகளால சூழ்ந்து பெருகி வழியப் போறன்…”

ஒரு ஜடம் போல அமர்ந்திருந்த என்னை வாசு உணர்ந்திருப்பான்.

“உணர்ச்சி… இந்தப் பாடத்துல சொல்லிக் கொடுப்பாங்களே அதுவா… பார்த்துப் பார்த்து சலிச்சிப்போய் அப்புறம் கத்துக்கிட்டதாக நெனைச்சி வாழ்ந்துகிட்டு இருக்கோமே… அதுவா? தோ, இந்த ரூம்புல ஒரு வெளிச்சத்துல வந்து பேசனதே பேசிக்கிட்டு இருப்பாங்களே, அவுங்க சொல்ற அந்த உணர்ச்சிகளா…? வாசு, கேவலமா இருக்கு… என்னால கோபப்பட முடியுல… பொறாமைப்பட முடியுல… ஆசைன்னா என்னா? முத்தம்னா என்ன? தோ, அங்க இருக்குப் பாரு வரிசையா டேப்ளட்ஸ்… அதுல ஒவ்வொருநாளும் பத்து சாப்டறோம்… எதுக்குத் தெரியுமா?”

வாசு ஆச்சரியமாக பெட்டியில் அடுக்கப்பட்டிருந்த மாத்திரைகளைப் பார்த்தான். அவனிடம் இந்தக் கேள்வியை நான் கேட்கும் போதெல்லாம் கொஞ்சமும் பதற்றமில்லாமல் ஆச்சரியப்படுவதைப் போல கண்களை மாற்றிக் கொள்வான். உறுப்புகளையும் அதனுள் இருக்கும் பாவனைகளையும் அதன் இயல்பிலிருந்து மாற்றினால் அதுதான் உணர்ச்சி என என்னைப் போல அவனும் நம்பிக் கொண்டிருந்தான். புருவங்களை உயர்த்திக் கண்களை விரித்தால் அது ஆச்சரியம்.

“அது நம்மளோட சாப்பாடு…”

“வாசு, இங்க வாழணும்னா நீ ஆசை படக்கூடாது… உனக்குள்ள உணர்ச்சிகள் இருக்கக்கூடாது… அவுங்க சொல்லித் தரும் எதையுமே நம்ம பாடமாத்தான் படிச்சிக்கிட்டு அத பொய்யா செஞ்சி பார்த்துக்குறோம்…”

“அப்படின்னா நம்ம யாரு?”

“நீ சொல்றீயே அந்தப் பூமியில புதையுண்டு கெடக்கும் கோடி பிணங்களோட வாரிசு… இன்னொரு பிணம்… அவ்ளத்தான்… நம்மள பூமிக்கு அனுப்பி ஆராய்ச்சி செய்யப் போறாங்க… நம்மனால அங்க வாழ முடிஞ்சிருச்சின்னா… நம்மள கொன்னுட்டு அவுங்க எல்லாம் பூமிக்கு வந்துருவாங்க…”

“அவுங்கன்னா யாரு?”

“மையச் செயலகத்துல இருக்கறவங்க…”

வாசு குழப்பத்திற்குள் சென்றான். நாளை அவன் உளவியல் சோதனையில் நிச்சயம் தடுமாறுவான். அவன் பூமிக்குச் செல்லத் தகுதியற்றவன் என நிரூபிக்கப்படும். இன்னும் சில ஆண்டுகள் இருந்துவிட்டால் இவர்களே தூக்கி பிரபஞ்சவெளியில் வீசிவிடுவார்கள். அப்படித்தான் பலரைத் தூக்கி வீசிவிட்டார்கள்.

“நீ என்ன குழப்பற… நான் மருந்து சாப்டப் போறன்… எனக்கு என்னமோ பண்ணுது… நம்மள வாழ வைக்கத்தான் பூமிக்கு அனுப்புறாங்க…”

நான் சத்தமாகச் சிரித்தேன்.

“57 வயசாச்சு… இன்னும் என்ன வாசு நீ வாழணும்? உன் கால்கள் பூமியத் தொட்டவுடன் நடுங்க ஆரம்பிச்சிரும்… உன் தோல் சுருங்கிரும்… உனக்குப் பசிக்கும்… உனக்குக் காதல் வரும்… உனக்கு ஆசைகள் பெருகும்… அது ஒரு வெள்ளம்போல உன்ன அடிச்சிட்டுப் போய் கொன்னுரும்… உன் மனசு அத தாங்காது வாசு… ஒரே நேரத்துல அவ்ள இன்பமும் உன்ன சாவடிச்சிரும்…”

சுவரில் தெரிந்த பூமியின் வரைப்படங்களை வாசு நடுக்கத்துடன் தொட்டான்.

“எனக்கு என்ன? என் கால் நடுங்கல… என் தோல் சுருங்கல… அப்புறம் எப்படி?”

“நம் உணவுன்னு சொன்னீயே… அந்தக் கெமிக்கல் உன்ன பத்தி உனக்குத் தப்பாகவே காட்டிக்கிட்டு இருக்கு, வாசு… நீ அங்க போனோன நீ நீயாயிருவ… உன் வயசு உனக்குத் தெரியும்… உன் கால்கள் நடுங்கும்…”

சட்டென அறைக்குள் மின் நூலகம் உயிர்ப்பெற்றது. ஒளி வடிவில் பேராசிரியர் அப்துல்லா தோன்றினார். இது உளவியலுக்கான நேரம். வந்ததும் முதலில் அவர் சொன்னது, “வாசு! உன்னோட மருந்துகள நீ சாப்ட்டியா?” என்பதுதான். அவர் கேட்பதற்குள் மஞ்சள் வர்ணத்தில் இருந்த மாத்திரையை வாசு எடுத்துச் சாப்பிட்டான். அந்த மாத்திரியைச் சாப்பிட்டதும் நான் மறைந்துவிடுவேன் எனத் தெரியும். அப்படியே சுருண்டு வாசுவிற்குள் நான் கரைந்துவிடுவேன்.

“நான் மீண்டும் உனக்குள்ள வருவன், வாசு…”

வாய்க்குள் போடப்பட்ட மாத்திரை உள்சென்று என்னைச் சிறுக சிறுக கரைத்துக் கொண்டிருக்கிறது. வாசு மீண்டும் வாசுவானான்.

-தொடரும்

-கே.பாலமுருகன்

முதல் பாகத்தை வாசிக்கக் கீழேயுள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

https://balamurugan.org/2021/07/24/அறிவியல்-சிறுகதை-ஒலி/

அறிவியல் சிறுகதை: மாலை 7.03

மார்ச் 2

எட்டாவது முறையான மாலை 5.55

“காலம் தொடர்ந்து உன்ன வாந்தியெடுத்துக்கிட்டே இருக்கு…அவ்ளதான்…”

இதுதான் எனக்கு ஓரளவில் புரிந்து நான் எளிமைப்படுத்திக் கொண்ட ஒரு வாக்கியம்.  மனம் ரொம்பவே அலுத்துப்போயிருந்தது. புகைநெடியும் நேற்று மழை பெய்து விட்டிருந்ததற்குச் சாட்சியாக காயாமல் கொடிகளில் தொங்கிக் கொண்டிருந்த வங்காளதேசிகளின் உடைகளின் வாசனையும் தன்னுள் கலந்துகொண்டு வீசும் காற்று அத்துணை உவப்பானதாக இல்லை. எதிரே இருக்கும் பெரும்பாலான வீடுகள் அவர்களாலே நிரம்பியிருந்தன. ஒரு வீட்டில் எப்படியும் ஐந்தாறு பேர் ஒன்றாகத் தங்கிக் கொண்டிருந்தனர்.  மூச்சை இழுத்து அதனைத் தம்கட்டி பின்னர் விட்டுக் கொண்டேன்.

“ஓகே, இப்ப நான் என்ன செய்யணும்? அவனத் தடுக்கணும்…”

நிகழ்ச்சிகள் தம்மைத் தாமே அடுக்கிக் கொள்கின்றன. அதில் சற்றும் பிசிறில்லாமல் உபநிகழ்வுகள் தம்மை இறுக்கிக் கொள்கின்றன. அதன் கூட்டுத் தொகைத்தான் நாம். முதல்முறை இப்படியான சிந்தனைகள் ஏதும் தோன்றவில்லை. குழப்பம் ஞானத்துக்கு இட்டுச் செல்லும். அதற்கு முதலில் குழப்பம் அவசியமாகிறது. சற்றும் ஓரவஞ்சனை காட்டாமல் குழப்பம் என்னைத் தூர்வாறி வீசியபடியே இருந்தது.

எனக்கு முன்னே ஒரேயொரு கதவு. இலேசான இடைவெளியில் திறந்திருந்தது. அதை மேலும் திறந்தால் அந்தப் பக்கம் அவன் சாப்பிட்டுக் கொண்டிருப்பான். கையில் வைத்திருக்கும் கட்டையால் அவனைத் தாக்க வேண்டும். இன்னும் ஒரு 10 மீட்டர் இடைவெளியில்தான் நாங்கள் இருக்கின்றோம். குறைந்தபட்சம் அவன் இங்கே மயக்கமடைந்துவிட வேண்டும். இல்லையெனில் அவன் அடுத்த ஒரு மணி நேரத்தில் மீண்டும் பயணத்தைத் துவங்கிவிடுவான். அது நடந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாய் நிற்கின்றேன்.

இதைப் புரிந்து திட்டமிட்டு முடிவெடுப்பதற்குள் எத்தனை ‘தேஜாவுகளை’ கடந்து வரவேண்டியுள்ளது. சுவரின் வெறுமையும் அடியில் அடர்ந்து பூத்திருந்த கருமையும் அப்பொழுதுதான் விநோதமாகக் காடியளித்தன. வீட்டின் சுவரை நான் அலங்கரித்ததே இல்லை. அப்படியே இருக்கட்டும் என விட்டுவிட்டேன். ஆனால், இப்பொழுது அவை வெறுமையின் முடிவிலியாக விரிந்து சென்ரு கொண்டிருந்தது.

கைகள் உதறின. இதுவரை பிறரைத் தாக்கவோ அல்லது தாக்குதல் செய்ய வேண்டும் என்ற எண்ணத்திற்கு முன்போ இத்தகைய நிலையில் நின்றதில்லை. வலது கை கதவின் திருகிக்கு அருகே சென்றது. அதனைக் கெட்டியாகப் பிடித்துக் கதவை உள்பக்கமாக இழுத்தால் அவன் என்னைப் பார்ப்பான். நிச்சயமாக அதிர்ச்சிக் கொள்வான். அதிலிருந்து அவன் மீள்வதற்குள் நான் அவனைத் தாக்க வேண்டும். அவனது மயக்கநிலை மாலை 7.03 வரை நீடித்துவிட்டால் போதும்.

எல்லாம் எங்கிருந்து துவங்கின என்கிற குழப்பத்திலிருந்துதான் முழுத் தெளிவையும் பெற முடியும். நான் இன்னும் முழுமையாக அதன் சுழல்வெளியிலிருந்து அகலவில்லை. மனத்தினுள் அத்துணைப் பதற்றம். ஒரு முழு நூற்றாண்டை வாழ்ந்து கழித்த சலிப்பும் வெறுப்பும் ஒருசேர அழுத்தின. ஒரு பத்து மீட்டர் தூரத்தில் இதற்கான விடை இருக்கின்றது. மனத்தின் எதிரொலி கைகளில் நெளிந்து கொண்டிருந்தது. அடுத்து நடக்கவிருப்பதைச் சட்டென்று மூளை உணர்கிறது. அடுத்த கணமே அவசரத்தில் சன்னல் பக்கத்தில் இருந்த குவளையை மீண்டும் தட்டிவிட்டேன். அது தரையில் உருண்டு பேரொலியுடன் நான் திறக்கக் காத்திருந்த கதவில் மோதி அசைவுகளை நிறுத்தியது.

மார்ச் 2

முதல் முறையான மாலை 6.55

நானிருந்த அடுக்குமாடியிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் பழைய பேருந்து நிறுத்தம் அது. புடுராயா என்றால் எல்லோருக்கும் பழகிபோன இடமாகும். வெளிமாநிலங்களுக்குச் செல்லும் பேருந்துகள் வந்து குவியும். இப்பொழுது செயல்பாட்டில் இல்லையென்றாலும் அங்கு முன்பு சதா கேட்ட பேருந்து ஒலிகள் இப்பொழுதும் உள்ளுக்குள் கேட்டுக் கொண்டே இருக்கும். அதன் மேல்தளத்தையொட்டி விரைவு இரயிலுக்காக அமைக்கப்பட்ட மின்தண்டவாளப்பாதை போய்க் கொண்டிருந்தது. தூக்கி உயரத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட இராட்சத கால்கள் அவை. சட்டென நகரத்தின் எல்லா வாயல்களிலும் நிரந்தமாகிவிட்ட வழித்தடம்.

“அவசரத்துக்குப் பொறந்த ஒவ்வொருத்தனும் கட்டாயம் பயணம் செஞ்சாக வேண்டிய பாதை… சொய்ங்ங்ங்னு போய் சேரவேண்டிய இடத்துல நம்மள கக்கிட்டுப் போய்ட்டே இருக்கும்… போறதும் வர்றதும் தெரியாது… தெரியக்கூடாது… அதுக்குத்தான்…” என யாராவது கேட்டால் இப்படித்தான் அறிமுகப்படுத்தக்கூடிய அளவிற்கு அவதானிப்பு இருந்தது.

இன்றிரவு வயிற்றுப் பிரச்சனைக்கான புதிய மருந்து தொடர்பான கூட்டம். கட்டாயம் ஏஜேண்டுகள் வர வேண்டும் என சீன மேலாளர் சொல்லிவிட்டார். கடந்த மாதம் காப்புறுதி நிறுவனத்தில் அவ்வளவாக முன்னேற்றம் இல்லை. வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் ஒரேயொரு மலாய்க்காரர் நண்பர் குடும்பத்துடன் மாதக் கட்டணம் 250 வெள்ளி என ஒரு மில்லியன் காப்புறுதி திட்டம் வாங்கியதோடு வேறு எந்த வரவும் இல்லை. அலுப்புடன் விரைவு இரயில் நிலையத்தை நோக்கி நடக்கத் துவங்கினேன்.

வீட்டிலிருந்து பார்த்தாலே இந்த விரைவு இரயில் புடுராயா கட்டிடத்தை உரசியவாறே செல்வது தெரியும். ஒரே மாதிரி, ஒரே அளவில் அது நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. சன்னல் வழியாக இந்தப் பரபரப்பை நாள்தோறும் கவனித்துக் கொண்டிருக்கிறேன். அலுப்பில்லாமல் சதா ஒரே மாதிரி அசைந்து கொண்டிருக்கும் நகரம். இரவில்கூட ஓயாமல் சப்தமெழுப்பிக் கொண்டிருக்கும். பளபளக்கும் சிவப்பும் மஞ்சளும் கலந்த பழைய நகர். இங்குக் குடிவந்து கடந்த பதினைந்து ஆண்டுகள் அதன் அத்துணை வளர்ச்சியிலும் என் நினைவுகள் ஒட்டிக் கொண்டிருக்கின்றன. அதுவும் இந்த விரைவு இரயில் வந்து தொலைந்த காலத்தில்தான் இத்தனை ஆர்பாட்டம்.

“உன் வீட்டாண்ட கால்ல சலங்க கட்டிக்கிட்டு ஆடுது டவுன்னு… சாவறதுக்கு வேணும்னா வரலாம்…” இதுதான் அப்பா சொன்னது. எத்தனைமுறை அழைத்தும் கெடாவிலிருந்து அவர் இங்கு வந்து தங்குவதாக இல்லை. கடந்தமுறை ஒரு வாரம் தங்கிவிட்டு ஓடிப்போனவர்தான். இதே புடுராயா நிறுத்தத்தில்தான் பேருந்து ஏற்றிவிட்டேன். தம்பி வீடே சொர்க்கம் என உணர்ந்தவர் எனக்குக் கைக்கூட அசைக்கவில்லை.

“ஒன்னு கல்யாணம் பண்ணிக்கிட்டு கெடா பக்கம் வந்துரு… இங்க வெறும்பையன் மாதிரி வாழ்ந்துகிட்டு இருக்கறதுக்கு அங்க ஏதாச்சம் கேளாங்ல வேலை செஞ்சிருந்தாலும் ஒரு சுப்பர்வைசராவது ஆகியிருக்கலாம்…”

அப்பாவிற்குத் தெரிந்தது காலை 8.00 மணிக்கு உள்ளே நுழைந்து மாலை 5.00 மணிக்கு வெளியேறும் தொழிற்சாலை வேலைத்தான். தம்பியை ‘ஷார்ப்’ தொழிற்சாலையில் ஒப்பந்தத்துக்குச் சேர்த்துவிட்டு “இப்ப அவன் லைன் டெக்னிஷன் ஆயிட்டான் தெரியுமா?” என வியந்து புகழ்வார். அவர் புருவத்தின் வளைவில் அத்தனை பெருமிதம். சப்தங்களையும் பரபரப்பையும் பரந்தவெளியையும் தேடி கோலாலம்பூர் வந்தது அவருக்குச் சற்றும் பிடிக்கவில்லை. அதுவும் பரந்தவெளி எனச் சொல்லிவிட்டு இங்குள்ள சிறிய அடுக்குமாடியொன்றில் அறை அளவிலேயே இருந்த ஒரு சிறிய வீட்டில் வெறும் மெத்தையைத் தரையில் விரித்துவிட்டுச் சன்னலைத் திறந்தால் காற்று வரும் என நான் வாழும் வாழ்க்கை அவருக்குக் கிஞ்சுற்றும் பிடிக்கவில்லை.

“என்னடா இது? பரதேசி மாதிரி… அதென்னடா இவ்ள உயரத்துல தூங்கிட்டு இருக்க பெரிய இவனாட்டம்…” அப்பாவிற்கு அடுக்குமாடி வீடுகளில் இருக்கப் பிடிக்காது. புலம்பித் தள்ளிவிட்டு அவர் ஓடிப்போன அன்றைய நாளில்தான் நான் என்ன மாதிரி வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்ற வியப்பும் வெறுப்பும் பேதியைப் போல் கலந்தடித்தன.

ஓடும் மனிதர்கள் மத்தியில் நடப்பதென்பது அசூசையாகத் தோன்றும். பிறகொரு நாளில் விரைவு இரயிலைப் பிடிக்க நானும் ஓடப் பழகிக் கொண்டேன். ராஜா லவுட் சாலையைக் கடந்து பரபரப்பின் வாய்க்குள் ஓடிக் குதித்தால் புடு சாலை. எல்லோரும் சேர்ந்து படிகளில் ஏறி ஓடுவோம். அதுவொரு ஓட்டப்பந்தயம் போல அமைந்திருக்கும். நமக்கே நமக்கான பந்தயம். காலத்துடன் போடும் சண்டை. ஒரு இரயிலை விட்டால் அடுத்த இரயில் பத்து நிமிடங்களுக்குள்ளே வந்தபடியேதான் இருக்கும் எனத் தெரிந்தும் பதற்றத்துடன் ஓடுவது பிடித்திருந்தது. காலத்தோடு கரைவது அத்தனை இன்பம்.

புடு இரயில் நிலையம் வரை படிக்கட்டுகளில் அமர்ந்து கொண்டு எந்நேரமும் தனது கித்தாரை இசைத்துக் கொண்டிருப்பவரையும் திசு பேப்பர் விற்பவரையும் தெரியாதது போல் கடப்பதுதான் சவால். அதற்கொரு கல் மனம் வேண்டும். மற்றவர்கள் சில்லரை காசுகளைத் தூக்கி வீசிவிட்டுப் போகும் இடைவெளியில் அதன் சத்தம் கித்தாரின் ஒழுங்கற்ற இசையில் கலந்து மனத்திற்குள் குற்ற ஓசையாக அதிர்ந்து ஓயும்வரை ஏதும் நடவாதது போல் நடந்து தொலைய வேண்டும்.

“இவனுங்களுக்கு வேற வேலையே இல்ல… காலைல புடு ராயா… சாய்ங்காலம் மஸ்ஜிட் ஜாமேக்… அப்புறம் ராத்திரில கெலானா ஜெயா… எல்.ஆர்.தி என்னா பிச்ச எடுக்கற வசதியயும் சேர்ந்து செஞ்சி கொடுத்துருக்கா?”

அவர்களின் மீதிருக்கும் கருணையைவிட அவர்களுக்கு உதவ முடியாமல் போகும் குற்றவுணர்வைச் சமாதானம் செய்துகொள்ள யாரிடமாவது இப்படிக் கத்தி வியாக்கியானம் செய்வதுண்டு. அதன் மூலம் கனமான பொழுதுகளைக் கடந்துவிடலாம் எனத் தோன்றும்.

ஏதேதோ நினைப்புகள் உள்ளே மோதிக் கொண்டிருந்தன. தினமும் பார்த்துக் கடந்து சலித்துப்போன நினைவில் பிசிறில்லாமல் சம்மனமிட்டு அமர்ந்திருக்கும் அத்தனை வலுவான குறிப்புகளுடன் நகரம் தெரிந்தது. வாகனப் புகை நெடி சூழ்ந்து அசௌகரியம் தலைக்கேற சாலையைக் கடந்தேன். விரைவு இரயில் படிக்கட்டிற்கு ஏறும் இடைவெளி ஆளரவமில்லாமல் காணப்பட்டது. சிலர் கூர்ந்து மேலேறும் படிக்கட்டின் உச்சத்தில் இருந்தனர். இது கொஞ்சம் நீளமான படிக்கட்டு. படபடவென ஓடினால் தூரம் தெரியாது. ஓடுவதற்குத் தயார்ப்படுத்திக் கொண்டு படிக்கட்டைச் சேரும் முன் நேற்று பெய்த மழையில் தேங்கியிருந்த தண்ணீர் மேட்டைக் கவனிக்காமல் விட்டுவிட்டேன்.

புடு ராயா பேருந்துகள் நிற்கும் பழைய கீழ்த்தளத்திற்குச் சென்றிறங்கும் படிக்கட்டில் சரிந்து விழும்போது காற்றில் மிதப்பது போலவே இருந்தது. நினைவுகள் அறுந்து சிதறல்களாக வட்டமிட்டன. பட்டணத்தின் பெரும் இருளை நோக்கி வீழ்ந்து கொண்டிருந்தேன். மூத்திர வாடையும் புகைத்துப் போட்டு நஞ்சிப்போன சிகரேட்டுகளின் நெடியுமென மண்டைக்குள் மரணம் சூழ்ந்து அமிழ்த்தின. உடல் சுழன்று பள்ளத்தாக்கில் சரிவதாக ஒரு நினைப்பு.

மார்ச் 2

முதல் முறையான மாலை 3.00

அவசரமாக வீட்டை நோக்கி விரைந்தேன். சீன மார்க்கேட் சாலையின் பரபரப்பில் இருந்தேன். சட்டையெல்லாம் கால்வாய் நெடி. எங்கோ சாலையினோரம் படுத்தெழுந்து மீண்டும் நடந்து கொண்டிருந்தேன். இன்று மாலை கூட்டத்திற்குப் போக வேண்டும். அதற்குள் எப்படி இத்தனை அலட்சியமாக இருந்திருக்கிறேன் என என்னை நானே கேட்டுக் கொண்டேன். கூட்டத்தில் எல்லா மொழிகளும் கலந்து ஓர் இரைச்சலாகக் கேட்டது. புரியாத ஊரில் மொழித் தெரியாது ஓர் அந்நியன் போல குழம்பிப் போயிருந்தேன்.

“நேத்து குமாரு பொறந்தநாளுக்குப் போனன்… நைட்ல கொஞ்சம் பீர்… ஆனா… போதை இல்ல… சசிதான் வந்து புடுராயாகிட்ட இறக்கி விட்டான்… நடந்துதான வீட்டுக்குப் போய்ப் படுத்தோம்…? அப்புறம் எப்படி இங்க…?”

மனத்தில் ஆயிரம் கேள்விகள் சூழ்ந்து நின்றன. விரைந்து நடந்தபோது மதிய வெயிலின் மிச்சமான காட்டம் இன்னுமும் முழுமையாக குறையாமல் எங்கும் அலைந்து கொண்டிருந்தது. புறமுதுகில் சூடு பளீரென்று அறைந்து கொண்டிருந்தது. காப்புறுதி நிறுவனத்தின் சட்டையை அணிந்திருப்பதை அப்பொழுதுதான் கவனித்தேன். இன்று மாலைதான் இதை அணியலாம் என்று நினைத்திருந்தேன். நேற்றிரவு வீட்டில் தூங்கும் முன் இந்தச் சட்டையை அணிந்திருக்கலாமோ என்கிற சந்தேகமும் புகுந்து கொண்டது.

“ரூம்பு வேணுமா? எழுபது வெள்ளித்தான்… ஹவுர்ஸ் கணக்கும் இருக்கு…”

சாலையினோரங்களை அவர்கள்தான் நிறைத்துக் கொண்டு நின்று கொண்டிருக்கிறார்கள். போவோர் வருவோரிடம் இந்தக் கேள்விகளைக் கேட்டுவிட வேண்டும் என்கிற பதற்றமிகு ஒழுங்கு. அவனை நானே பலமுறை இந்தச் சாலையில் பார்த்திருக்கிறேன். இதுபோல அவனே என்னிடம் பலமுறை கேட்டு நான் வேண்டாம் என நகர்ந்துள்ளேன். இத்தனையையும் என்னைப் போல அவனால் நினைவுப்படுத்த இயலவில்லை என அவன் மீது கோபமாக வந்தது. இருக்கின்ற குழப்பத்தில் அவனைப் பொருட்படுத்தத் தோன்றவில்லை. குழப்பம் ஒரு குமிழ் போல. தமது வட்டங்களைப் பெரிதாக்கிக் கொண்டே செல்லும்.

அவசரமாக அடுக்குமாடியின் முன்னே வந்து நின்று நான்காவது மாடியில் இருக்கும் என் வீட்டைக் கவனித்தேன். சாலையைப் பார்த்தபடியே அமைந்திருக்கும் சன்னல். காற்றாடி ஓடிக் கொண்டிருந்ததன் அடையாளமாய் சன்னல் துணி படப்படத்துக் கொண்டிருப்பது ஓரளவில் தெரிந்தது. அல்லது அது என் கற்பனையாகக்கூட இருக்கலாம். வழக்கமாக நான் தேநீர் குடிக்கும் குவளையைக் கொண்டு வந்து சன்னல் ஓரத்தில் வைத்துவிட்டு ஓர் உருவம் நகரை வேடிக்கைப் பார்க்கத் துவங்கியது. தூரத்திலிருந்து பார்ப்பதற்கு என்னைப் போலவே இருந்தது.

மார்ச் 2

மூன்றாவது முறையான மாலை 5.55

கீழே மாமாக் கடையில் வாங்கி வைத்திருந்த மீ கோரேங் ஒரு மாதிரி வீச்சம் அடிக்கத் துவங்கிவிட்டது. நேற்று உறங்க நேரமானதால் மதியம் சிரமப்பட்டு எழுந்து சென்று அவசரமாக வாங்கி வைத்துச் சில மணி நேரங்கள் ஆகிவிட்டன. போதையின் அழுத்தம் வேறு. இப்படி எப்பொழுதாவதுதான் குடிப்பதுண்டு. இன்று நடக்கவிருக்கும் ஏஜேண்ட் சந்திப்புக்குச் சரியான நேரத்தில் போய்விட வேண்டும். மாத இறுதிக்குள் புதிதாக அறிமுகம் காணவிருக்கும் மருந்தைக் குறைந்தது இருபது பேரிடமாவது விற்று அவர்களுள் ஒரு பத்துப் பேரையாவது ஏஜேண்டாக்கிவிட்டால் ஒரு முன்னேற்றம் இருக்கும்.

“சொந்தமா ஒரு அம்பது பேருக்கு மேனஜரா ஆயிரணும்… இன்னும் என்னனென்ன பொருள் மார்க்கேட்டுக்கு வருதோ எல்லாத்தலயும் ஏஜேண்டாயிருணும்… இவ்ள மக்கள் கூட்டம் இருக்கற டவுன்னுல வேற எதுக்கு வாழணும்…?”

எனக்கு நானே சொல்லிக் கொள்ளும்போது வரும் உற்சாகத்தில்தான் அப்பா என் மீது திணித்துவிட்டிருந்த அத்துணை வெறுப்புகளையும் தாண்டி இங்கே வாழ முடிந்த ஒரு தெம்பு கிடைக்கும். பெருநகர் சலனம் காதுகளில் ஓயாமல் இரைப்பது சுகமாக இருக்கிறது என நினைத்துக் கொள்வேன்.

“என்னிக்காவது நேரத்த ஒழுங்க கடைபிடிச்சிருக்கியா? நீயெல்லாம் எப்படி மார்க்கேட்டிங்ல பேரு போட முடியும்?”

சீன முதலாளி மலாய்மொழியைச் சிரமப்பட்டு அடுக்க, அது சரியான முறையில் நிரல்படுத்திக் கொள்ள முடியாமல் சிதறும். ஆனால், திட்டுகிறான் என்பது மட்டும் உறுதியாகும். கன்னம் விரைந்து சிவப்பாகியதும் முகம் உப்பிக் கொள்ளும். அவனது கோபத்தைவிட அவனுடைய மலாய்மொழியைப் புரிந்து கொள்வதுதான் சிரமாக இருக்கும். அதனால் பெரும்பாலும் எதிர்த்துப் பேசாமல் “சாரி போஸ்… சாரிலா…” என மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருப்பேன். இங்கு நாம் சிறுமுதலாளியாக வேண்டுமென்றால் முதலில் சுரணையில்லாமல் உடனே மன்னிப்புக் கேட்டுக் கொள்ளும் உத்தி தெரிந்திருக்க வேண்டும். அதுதான் என்னைக் காப்பாற்றியும் வந்தது.

“ஐயோ… இனி மச்சாம் சூசாலா…” என நொந்துகொண்டு உடனே மன்னித்துவிடுவான்.

இன்றும் எப்படியும் தாமதாகிவிடக் கூடாது. ஓட்டத்திற்குத் தயாராக வேண்டும். சாப்பிட்டுவிட்டு ஓடுவது கொஞ்சம் சிரமம் என்றாலும் எப்படியும் விரைவு இரயிலில் இடம் கிடைக்கப் போவதில்லை. நின்று கொண்டே அரை மணி நேரம் பயணிக்க வேண்டும். அதில், உணவு செரிமானம் ஆக வாய்ப்புண்டு.

சட்டென பக்கத்து அறையில் குவளை விழுந்து கதவில் மோதும் சத்தம் கேட்டது. மதியத்தில் குடித்து வைத்த தேநீர் குவளையைப் பூனை பதம் பார்த்துவிட்டிருக்கலாம். அந்தச் சத்தம் இப்பொழுது நான் நினைப்பது அனைத்தும் முன்பே பலமுறை நடந்து விட்டதைப் போல உணர்ந்தேன். இதே சத்தம்; இதே பரபரப்பு. அதே போல கைப்பேசியும் அலறியது. மதியத்தில் வைத்த அலாரம்.

கைப்பேசியை எடுத்துக் கொண்டு ‘மீ கோரேங்கை’ அப்படியே வைத்துவிட்டு வீட்டைவிட்டு வெளியேறினேன்.

மார்ச் 2

முதல் முறையான மாலை 3.45

நான் எப்படி என்னையே பார்க்க முடிகிறது. குழப்பத்தின் பெரும் திரளுக்குள் மிகுந்த துடிப்புடன் மனம் இலயித்திருந்தது. மாடிக்குப் படியேறி என் வீடுவரை சென்றுவிட்டேன். யாராவது பார்த்தால் ஏதாவது சந்தேகம் வரலாம். வீட்டின் குளியலறை முன்கதவின் பக்கத்திலேயே இருந்ததால் வீட்டிலிருக்கும் நான் குளித்துக் கொண்டிருக்கிறேன் என என்னால் ஊகிக்க முடிந்தது. இது ஒருவகையான ஆச்சரியத்தையும் குதுகலத்தையும் உண்டாக்கியது. இப்படி ஏதும் அதிசயம் நடந்தால் அது கொடுக்கும் அளவில்லாத துடிப்பும் தவிப்பும் விநோதமானவையாக இருக்கும்.

‘காலைல எந்திருச்சி… எவன்கிட்ட என்னா பேசி அவன இன்சுரன்ஸ் எடுக்க வைக்கணும்… அவனோட மரணத்துக்கு ஒரு மில்லியனாவது அர்த்தம் இருக்கனும்னு ஆரம்பிச்சி… நீ செத்துட்டா உன் பெண்டாட்டி பிள்ளைங்க கடன்லாம் மாட்டிக்குனுமா வரைக்கும் பேசி, அதையே திரும்ப திரும்ப பேசி, அவன உணர வச்சு, சைன் பண்ற வரைக்கும் அவன்கிட்ட லோல் பட்டு குலைஞ்சி சிரிச்சி… ச்சே… இன்னிக்குத்தான் வாழ்க்கையில ஓர் அதிசயம் அதுவா நடந்துகிட்டு இருக்கு…’

எதுவாக வேண்டுமென்றாலும் இருக்கட்டும். என்னை நான் பார்த்துக் கொள்ளும் ஓர் அற்புதம் என் வாழ்வில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அதற்கு முன்பாக என் வீட்டில் என்னைப் போல குளித்துக் கொண்டிருக்கும் இவன் யார் என்பதே எனக்கான பதில். முன்கதவைத் திறக்க முனைந்தேன். நல்லவேளையாக முன்கதவை அடைக்கவில்லை. இது எனக்கிருக்கும் கெட்டப் பழக்கம். எப்பொழுது வீட்டிற்கு வந்தாலும் முன்கதவைப் பூட்ட மறந்துவிடுவேன். அப்படிப் பூட்டாமல் பலநாள் இரவுகள் கழிந்ததுண்டு. திருடன் உள்ளே வந்தாலும் எடுத்துச் செல்ல நான் மட்டுமே வீட்டில் இருந்தேன். ஆகையால், திருட்டும்கூட இந்த வீட்டில் நடந்ததில்லை. எத்தனை அலுப்பான ஒரு காரியம்? ஒரு திருட்டுக்குக்கூட என் வீடும் நானும் வக்கில்லாமல் இருந்தோம். அந்தக் கெட்டப் பழக்கம்தான் இப்பொழுது வீட்டிற்குள் நுழைய பேருதவியாக இருந்தது.

உள்ளே நுழைந்ததும் வீட்டின் மூலையிலிருக்கும் அறைக்குள் ஒளிந்து கொண்டேன். இப்பொழுது என்னையும் அவனையும் பிரித்துக் கொண்டிருப்பது ஒரு கதவு மட்டும்தான். அவன் தவறுதலாக இவ்வறைக்குள் வந்துவிட்டால் என்ன ஆகும் எனத் திகைப்பாக இருந்தாலும் அதையும் பார்த்துவிடலாம் என்றே தோன்றியது. அதிசயத்தின் முன்னே ஒரு குதுகலமான குழந்தையைப் போன்று எக்கித் தாவி பரவசப்பட்டுக் கொண்டிருந்தேன்.

“அய்யா ஜாலி…” என இந்தப் பெருநகர் சாலையின் நடுவே கத்திக் கொண்டு ஓட வேண்டும் என மனம் பரபரத்துக் கொண்டிருந்தது.

நினைத்ததைப் போல அவன் உள்ளே வரவில்லை. ஏதோ வேலைகள் செய்து கொண்டும் கோப்புகளை உருட்டிக் கொண்டும் இருந்தான். பிறகு, நாற்காலியில் அமர்ந்தபடியே தூங்கிக் கொண்டிருந்தான். இன்று நடக்கும் மாலை கூட்டத்தைப் பற்றி நினைவு வந்துவிட்டது. இந்த அதிசயத்தை முழுமையாகத் தரிசிக்காமல் சந்திப்பாவது கூட்டமாவது என்கிற ஓர் ஏளன மிதப்பில் இருந்தேன்.

நேரம் துள்ளிக் குதித்துக் கடந்தோடிக் கொண்டிருந்தது. சடாரென 5.20க்கு அதிர்ச்சியுடன் எழுந்து எங்கோ கிளம்புவதற்குத் தயாராகிக் கொண்டிருந்தான்.

மார்ச் 2

ஐந்தாவது முறையான மாலை 6.55

புடுராயாவின் பழைய படிக்கட்டு அது. அதன் முடிவில் முளைக்கும் இன்னொரு பாதையில் வலதுபக்கமாக மேலேறி நடந்தால் புடு விரைவு இரயில் நிலையத்துக்குச் செல்ல முடியும். அவன் அதை நோக்கித்தான் நடந்து கொண்டிருக்கிறான். இன்னும் எட்டு நிமிடங்களில் அவனை நிறுத்த வேண்டும். இரண்டு முறை எனது முயற்சிகள் தோல்வியில்தான் முடிந்தன. இவையாவும் எனக்கு மூன்றாவது சுழற்சியில்தான் ஓரளவிற்குப் புரிந்து கொள்ள முடிந்தது. மனம் இத்தனை துண்டுகளாகப் பிரிந்து சுழல்கிறது. ஒவ்வொருமுறையும் மயக்கமும் பதற்றமும் கூடி அழுத்துகின்றன. துவக்கத்தில் இருந்த பரவசம் மெல்ல குறைந்து பயமும் நடுக்கமும் கூடியிருந்தன.

இப்பொழுது எனக்கு முன்னே நடந்து கொண்டிருக்கும் என்னை நான் ஐந்தாவது முறையாக பார்த்துக் கொண்டிருக்கிறேன். என்னால் அவனை எப்படி அங்குச் செல்லாமல் நிறுத்த முடியும் என்கிற தயக்கம். அவனை நிறுத்தாவிட்டால் இது மீண்டும் நிகழத் துவங்கும். சுற்றியிருப்பவர்கள் எங்கள் இருவரையும் பார்த்துவிட்டால் என்ன ஆகும் அல்லது நானே என்னை நேரில் நின்று சந்தித்தால் என்ன ஆகும் என்பதெல்லாம் எனது ஊகமாகவே இருக்கின்றன. எதையும் செய்து பார்க்க மனம் தடுத்துக் கொண்டே இருந்தது.

ஜாலான் லவுட் சாலையின் பக்கம் கவனமாக அவன் பின்னே நடந்து கொண்டிருந்தேன். அங்கிருந்த பேருந்து நிறுத்தத்தில் எந்தக் கவலையும் இல்லாமல் ஒரு கிழவன் மல்லாந்து படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தார். அவரது தூக்கத்தில் எந்தத் தடுமாற்றமும் இல்லை. இத்தனை சுகமாக ஒருவனால் இந்த நகரத்தின் நடுவே தூங்கிக் கொண்டிருக்க முடியுமா? அப்பேருந்து நிறுத்தத்தைக் கடந்து சென்றதும் கொஞ்சம் தன்னம்பிக்கை உண்டானது.

“டேய்! மண்ட ஓடி!” எனச் சத்தமாகக் கத்திவிட்டு புடு சாலையையும் ராஜா லவுட் சாலையையும் பிரித்துக் கொண்டிருந்த அந்த வளைவு சுவரில் பதுங்கிக் கொண்டேன். அப்படி அழைத்தால் அவன் சத்தம் கேட்கும் திசையைத் திரும்பிப் பார்க்கக்கூடும். இதனால் அவன் அங்குச் செல்வது தாமதம் ஆகலாம். அப்படித் தாமதமானால் அவன் விழாமல் படிக்கட்டில் ஏறி மேலே சென்றுவிடக்கூடும். இதெல்லாம் இன்னுமும் என் ஊகம்தான். இந்த ஒன்றை மட்டும் நிகழ்த்திப் பார்த்துவிட்டால் அடுத்து என்ன நடக்கும் என்பதைத் தெரிந்து கொள்ளத் துடிப்புடன் காத்திருந்தேன். சுவரின் முனையிலிருந்து மறைந்துநின்று அவனைப் பார்த்தேன். என் அழைப்பை அவன் சட்டை செய்யாமல் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தான்.

மணி சரியாக மாலை 7.03. அவன் நீர் தேக்கத்தில் கால் வைத்து இடறுகிறான். கீழே செல்லும் படிக்கட்டில் விழுகிறான். சட்டென ஓர் ஒளிவீச்சு என்னைச் சுற்றி சூழ்ந்து என்னைக் கரைத்துக் கொண்டிருக்கிறது. அடுத்து நான் மாலை 3.00 மணிக்குச் சீன மார்க்கேட் சந்தில் விழித்துக் கொள்வேன்.

“ச்சீ! என்ன வாழ்க்க இது?”

மார்ச் 2

ஏழாவது முறையான மாலை 7.03

சரிந்து விழுந்தால் படிக்கட்டு முனைகளில் முகம், தலை, கை, கால்கள் பட்டு உடைப்படும் அல்லது மண்டை உடையலாம். இதுதான் ஒரு தற்செயலான விபத்தில் நடக்கக்கூடிய சாத்தியம். சற்றுமுன்பு இத்துணை ஆண்டுகளில் கடந்து, ஓடி, தாவி, பாய்ந்து சென்ற இத்துணைப் பரிச்சயமான இடத்தின் ஒரு சிறு நீர்த்தேக்கம் எப்படி என்னை வீழ்த்த முடியும்?

இதற்குமுன் பலமுறை இப்படி விழுந்திருப்பது போன்ற ‘தேஜாவுடன்’ கீழே சரிந்து கொண்டிருந்தேன். இனி விழிக்கும்போது மருத்துவமனையில் விழிப்பேன் அல்லது அதுவும் இல்லையென்றால் செத்தொழுந்திருப்பேன். நினைப்பது, திட்டமிடுவது எல்லாம் நடக்க அதுவும் ஓர் எறும்புகூட்டத்தின் இரைச்சலில் அதிலும் அடையாளம் தெரியாத ஒரு சிற்றெறும்பாக இருந்தால் நல்ல இராசிபலன்கள் அமைவதில்லை. சனி உக்கிரத்திலும் குரு பக்கத்து வீட்டிலும் ஓடியாடி விளையாடிக் கொண்டிருக்கும் எனக்கெல்லாம் நினைப்பே இருந்திருக்கக்கூடாது. அப்படித்தான் அங்கு நான் நினைப்பவைகள் ஏதும் நடக்கவில்லை. ஏதோ ஓர் அடர்ந்த இருளுக்குள் வீழ்ந்து கொண்டிருந்தேன். தரை என்ன இவ்வளவு கீழாகப் போய்க் கொண்டிருக்கிறது? படிக்கட்டுகள் தெரியவில்லை. ஓர் இருளுக்குள் சுழன்று கொண்டிருந்தேன்.

கெந்திங் மலை ரோலர் கோஸ்டரில் ஏறியது போல இருள் சுழட்டியடித்துக் கால்களைப் பலம் கொண்டு எங்கோ இழுத்துச் சென்று கொண்டிருந்தது. கண்கள் இருண்டன. இதயத் துடிப்பு அதிகமாகியது. காற்றழுத்தம் தாள முடியவில்லை. நான் கீழே பயணிக்கும் வேகம் அதிவேகத்துடன் உருமாறிக் கொண்டிருந்தது. அப்படியே ஒரு புள்ளியென இந்த இருளில் நான் மறைந்து கொண்டிருந்தேன். பெருநகர் தெரியவில்லை; சத்தங்கள் கேட்கவில்லை. புகைநெடி இல்லை. ஆழ்ந்த சூன்யத்திற்குள் அசூர வேகத்துடன் உள்ளிழுக்கப்பட்டுக் கொண்டிருந்தேன்.

மார்ச் 2

ஒன்பதாவது முறையான மாலை 6.55

கடுமையாக மூச்சிரைத்தது. நகரம் முழுவதும் பதற்றத்துடன் நகர்ந்து கொண்டிருப்பதாகத் தோன்றியது. காலச் சுழற்சி அச்சுறுத்தலாக விரிந்திருந்தது. கடந்தமுறையைக் காட்டிலும் மனமும் மூளையும் ஒழுங்கைவிட்டு நிதானத்தைவிட்டு நழுவிக் கொண்டிருந்தன. எட்டுமுறை இறந்து பிறந்திருப்பது போன்ற மாயை. ஓர் அசூரத்தனமான ஒளிவெட்டுத் தாக்குகிறது. உடல் வலுவிழந்து வெறும் சதையால் மூடிக் கிடந்தது.

‘முன்னுக்குப் போறவன விழாம தடுத்துட்டா மட்டும்தான் இந்த அத்தன போராட்டத்தயும் நிப்பாட்ட முடியும்… நான் வேகமா நடக்கறன்… அவன் விழும் அந்த இடத்துலத்தான் ஏதோ நடக்குது… இது யேன் எனக்கு மட்டும் நடக்கது? என் பக்கத்துல இருக்கறாங்கள இவுங்க எல்லாம்… எப்படித் திரும்ப திரும்ப வராங்க? அப்படின்னா இது அவுங்களுக்குத் தெரியாம நடந்துகிட்டு இருக்கா?’

சுற்றிலும் பெரும் பரபரப்பில் அசைந்து கொண்டிருந்த நகரத்தைப் பார்த்தேன். நகரப் பேருந்துகள் வெளியேறுவதும் கட்டிடங்களின் இடையே செல்லும் சாலைகளுக்குள் நுழைவதுமாக புகையைக் கக்கிக் கொண்டிருந்தன. அப்பொழுதுதான் வடக்கை நோக்கிக் கொண்டிருந்த பேருந்து நிறுத்தத்தைக் கவனித்தேன். நெகிழிப் பையொன்றைத் தலைக்குக் கீழ் தலையணையைப் போல் வைத்துக் கொண்டு மல்லாக்குப் படுத்திருந்த கிழவனைப் பார்த்தேன். கடந்த எல்லா முறையும் நான் இவ்விடத்தைக் கடக்கும்போது அவர் அங்கேயே அதே போல் உறங்கிக் கொண்டிருக்கிறார். அவர் காலம் ஸ்தம்பித்து எப்பொழுதும் போல் இருக்கிறதா? அல்லது என் சுழற்சியினுள் அவர் ஒரு கற்பனையைப் போன்று சிக்கிக் கொண்டு எனக்கு மட்டும் தெரிகிறாரா? இங்குள்ளவர்கள் அனைவரும் எனது தோற்ற மயக்கங்களாக இருக்குமோ என்று சந்தேகித்தேன். இல்லை, இருக்க வாய்ப்பில்லை. சற்றுமுன் நான் நடந்து வந்த எல்லா முறைகளிலும் என்னை இடித்துவிட்டுச் சென்ற ஓர் இளைஞன் ஞாபகத்திற்கு வந்தான். எல்லாமும் உண்மையில் நிகழ்கின்றன. அப்படியென்றால் இது என்ன மாதிரியான உலகம்?

குழப்பம் ஞானத்துக்கு இட்டுச் செல்லும். பின்னர், ஞானம் மீண்டும் குழம்பும். நானும் அப்படித்தான் எனக்கு முன்னே நிகழும் எதனையும் சிறிதும் மாற்ற முடியாமல் அதன் ஓட்டத்தில் கரைந்திருந்தேன். அடுக்குகள் மீண்டும் களைந்து தம்மைத் அதே போல் இந்த நகரத்தின் எந்த முனைகளையும் மாற்றாமல், அதோ அங்குப் படுத்துறங்கும் அந்தக் கிழவனின் உறக்கத்தின் அலைகளையும் சிறிதும் களைக்காமல் மறுமுறை மறுமுறை என நிகழ்ந்து கொண்டிருக்கிறது. பகல் தின்ற பொழுதுகளின் கடைசி கணத்தில் நின்றிருந்தேன். அந்தப் பள்ளத்தில் என்னை விழுங்கத் தயாராக இருக்கும் இருள் துளை என்னவாக இருக்கும்? ஒன்றும் புரியாமல் என்னை நான் பின்தொடர்ந்து கொண்டிருந்தேன்.

‘சரியா 7.02க்கு எனக்கு முன்ன போய்க்கிட்டிருக்கும் என்ன நான் பிடிச்சி நிப்பாட்டப் போறன்… ஒருவேள என்ன நான் பாத்துக்கும்போது அங்க என்ன நடக்கும்னு நான் ஊகிச்சி வைச்சிருந்த எது நடந்தாலும் பாத்துக்கலாம்… இது என் சாவுக்கு அழைச்சிட்டுப் போனாலும் பரவால… இந்த டவுனோட ஒவ்வொரு காட்சியும் என்ன கொல்லுது… இதுக்குமேல உயிர் வாழ்றதல அர்த்தம் இல்லாத மாதிரி அத்தன சோர்வா இருக்கு…”

மாலை மணி 7.02. அவனுக்கு நெருக்கத்தில் சென்று அவன் தோளை அதாவது எனது தோளை நான் தொட்டேன். அவன் திரும்பினான். சட்டென ஒரு மாபெரும் ஒளிவெட்டு எங்களைச் சூழ்ந்து பெருகின. ஒரு புயல் சுழற்சியை ஒளிக்கீற்றுகள் உருவாக்கிக் கொண்டிருந்தன. நகரம் வளைந்து இறுகி அமிழ்ந்து உருமாறிக் கொண்டிருந்தன.

***

திகதியும் ஆண்டும் தெரியாத ஒரு மாலை 7.03

கண் விழித்தேன். எத்தனைமுறை எத்தனை மாலைகள் எத்தனை 7.03க்கள் எனத் தெரியாமல் குழம்பி போயிருந்த மனத்துடன் மொத்த சோர்வும் அழுத்த விழிக்கத் தடுமாறிய கண்களைக் கசக்கிக் கொண்டே கண் விழித்தேன். தலைக்கு அடியில் வைக்கப்பட்டிருந்த நெகிழிப்பை மெல்லிய சத்தம் எழுப்பியது. அதனை எடுத்துப் பக்கவாட்டில் வைத்துக் கொண்டு இருளத் துவங்கியிருக்கும் நகரத்தைக் கவனித்தேன். ராஜா லவுட் சாலை பேருந்து நிறுத்தத்தில் நாளெல்லாம் தூங்கிக் கொண்டிருப்பது அத்தனை சுகமாக இருக்கிறது. முதல் முறை எப்பொழுது இங்கு வந்தேன் எனத் தெரியவில்லை. இங்கு எதுவும் மாறவில்லை. புடு சாலை பரபரப்புக் குறையாமல் அசைந்து கொண்டிருந்தது.  

சரியாக மாலை 7.03க்கு இங்கு இதே இடத்தில் கடந்த எத்தனை ஆண்டுகள் விழித்துக் கொண்டிருக்கிறேன். ஏன் விழிக்கிறேன்; நான் யார் என எதுவுமே எனக்குப் பிடிப்படவில்லை. அங்குத் தெரியும் ஒரு வளைவுக் கடைக்குப் போனதும் எனக்குப் பிடித்தமான ஒரு மாமாக் மீ கோரேங் கிடைக்கும். அதனைச் சாப்பிட்டுவிட்டு அடைக்கப்பட்டக் கடை வரிசையின் எதிரே படுத்துக் கொள்வேன். பிறகு, மீண்டும் மாலை 7.03க்கு இந்தப் பேருந்து நிறுத்தத்தில் விழிப்பேன். யாராவது கொண்டு வந்து தூக்கி வீசிவிட்டுப் போகிறார்களா என்பதும் தெரியாது. கைகள் உதறின; கால்கள் நடுங்கின. என்னைத் தேடி யாரும் வந்ததில்லை. கடந்த பல்லாயிர மாலைகள் எனக்கு ஒரே மாதிரி நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

உடல் அளவில் மனமும் தளர்ந்திருந்தது. இந்தப் பெருநகர் சத்தம்; வாகனங்களின் பளபளக்கும் ஒளிக்கோர்வை; நடனமாடும் சாலை விளக்குகள்; சுகந்தமான புகைநெடி; நாவில் ருசிக்கும் மாமாக் மீ என அனைத்தும் எனக்கு முன்னே நர்த்தணம் ஆடிக் கொண்டிருந்தன. தள்ளாடியபடியே புடு சாலையை நோக்கி நடக்கத் துவங்கினேன்.

-கே.பாலமுருகன்

அறிவியல் சிறுகதை: ஒலி

மிக நீளமான ஒரு மௌனம். ஆளரவமற்ற பொழுதுகள் பொங்கிக் கிடக்கும் வெளியில் ஒரு தனிப்பெருங்கனவுடன் காத்திருக்கிறது மனம்.

“இங்கிருந்து போய்ரு…”

ஆழ்மனத்தில் என்னுடனே நான் பேசிக் கொள்கிறேன். இப்படி ஆயிரம் வார்த்தைகள்; உரையாடல்கள் எனக்கு நானே நிகழ்த்திப் பார்த்துக் கொண்டவை.

“அங்க போனோனே… முதல்ல என்ன செய்வ?”

கேள்விகளின் பின்னே கேளிக்கையாக பல புதிர்கள். அவற்றுள் ஒவ்வொரு வளர்ச்சியிலும் நான். கற்பனை யாரும் கற்றுக்கொடுக்காமலே அரக்கன் போல உள்ளே வளர்ந்திருந்தது.

இருண்டிருந்த அரங்கில் அழுத்துப்போன வெண்திரை. கண்கள் அளவில்லாமல் கூசின. எவ்வளவு காலம்தான் இதையே பார்த்துக் கொண்டிருப்பது. உடல் நாற்காலியில் திடமில்லாமல் வெறுமனே ஒட்டிக் கொண்டிருந்தது. நிமிர்ந்தும் சரிந்தும் அமர்ந்து பார்த்தேன். என்ன நடக்கும் என்கின்ற படபடப்பு எப்பொழுதும் என்னை முழுமையாக ஆட்கொண்டிருந்தது. இந்தப் படபடப்பும் ஒருவித கலவரமும் நீடித்த ஒன்றாகவே எனக்குள் வழக்கமாகியிருந்தன. அடர்ந்த மௌனத்திலும் சில ஒலிகள் கேட்கும். அது மனத்தின் ஒலியா அல்லது கற்பனையின் ஒலியா என்றுகூட வேறுப்படுத்தத் தெரியவில்லை. ஒரு பேரமைதிக்குள் எண்ணங்கள் சுழன்றும் அமிழ்ந்தும் பதறின. சட்டென அரங்கின் விளக்குகள் உயிர்ப்பெற்றுப் பளப்பளப்புடன் தோன்றி கொண்டிருந்தன. இது இங்கிருக்கும் பல அரங்குகளில் ஒன்று. இன்னும் இதுபோல பல அரங்குகள் பார்வைக்கு அப்பால் இருக்கின்றன.

“ஒகே டியர்ஸ்… இன்னிக்குப் பார்த்த காணொளியில என்ன கத்துக்கிட்டீங்க?”

மீண்டும் திரை அமிழ்ந்து வழக்கம்போலக் கறுப்புச் சட்டை அணிந்திருக்கும் ஒருவர் திரையில் ஒரு புள்ளியைப் போல் தோன்றினார். அமைதி களைந்தது போல் சிறிய முனகல் சத்தம் அரங்கம் முழுவதும் ஓடிப் பரவியது. இன்று பிராதனமாக தற்காப்பு உணர்வு பற்றிய போதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தோம். தற்காப்பு உணர்வு நமக்குள் இருக்கும் ஆதியான உணர்வு என அவர் பேசத் துவங்கினார். இதற்கு முன்பும் பேசப்பட்டவைகள்தான். இங்கு அனைத்தும் மீண்டும் நிகழ்ந்து கொண்டிருந்தன. புதிதாகச் செய்வதற்கு ஒன்றில்லாத வேளைகளில் பலமுறை கேட்டுச் சலித்தவைகள் மீண்டும் புதிது போலவே நிகழ்த்தப்படும். அதையும் முகம் கோணாமல் கேட்க வேண்டும்.

“ஒவ்வொரு உயிருக்குள்ளும் இந்தத் தற்காப்பு உணர்வு இருக்கு… அது வெளிப்படற விதமும் வெளிப்படுத்தற விதமும்தான் வித்தியாசம்… உயிர் வாழ வேண்டி நமக்குள்ள தற்காத்துக் கொள்ளும் எனர்ஜி இருக்கணும்… அப்பத்தான் எங்கயுமே சமாளிச்சு வாழ முடியும்… இப்ப உங்க உயிர தற்காத்துக் கொள்ள என்ன செய்வீங்க?”

நான் கணித்திருந்த அந்த வயோதிக குரல்தான் சட்டென பதில்களைச் சொல்லி மேலாளரின் நன்மதிப்பைப் பெறத் துடித்தெழுந்தன. தொண்டையைச் செருமிவிட்டுப் பதில் சொல்லப்பட்டது. மேலாளர் அதிகப்பட்சம் என்ன செய்வார்? கைத்தட்டி சபாஷ் எனச் சொல்வார். இந்தக் கைத்தட்டல் ஒலியும் சவாஷ் என்ற சொல்லும் ஆகப் பழமையென திகட்டின.

“ஆபத்தான விஷயங்கள செய்ய மாட்டன்…”

நேற்று அறிவியல் விரைவுரைஞர் கற்றுக் கொடுத்த பாடத்தை அப்படியே கக்கிக் கொண்டிருந்தான். மேலாளர் புன்னகைத்துவிட்டு, “சபாஷ்!” எனக் கத்தினார். அடுத்து, காணொளியில் கால்வாயில் விழுந்துவிட்ட நாய் பல மணி நேரங்கள் மேலேறி வரத் துடித்துக் கொண்டிருப்பதைக் காட்டினார். திரையில் மீண்டும் வெளிச்சம்.

“இதுல பாருங்க… நாய் தன்னோட உயிர காப்பாத்திக்க எவ்ள போராடுதுன்னு…அது ஒரு மிருகம்… நம்மள விட புத்திசாலி இல்ல…ஆனா அதுக்குள்ள இருக்கற விவேகத்த பாருங்க… தன் உயிர காப்பாத்திக்க அது செய்யற போராட்டத்தப் பாருங்க…”

இதுபோன்ற சமயங்களில் மெய்சிலிர்த்துப் போகும். உயிர் வாழ்தல் எத்தனை பெரிய வரம் எனப் போற்றிக் கொள்வேன். அப்படிச் செய்து கொண்டால்தான் இத்தனை பெரும் தனிமையையும் ஒழுங்குகளையும் பின்பற்றிக்கொள்ளத் தோதான மனம் உண்டாகும்.

“நமக்குள்ளயும் அது இருக்கணும்… அப்பத்தான் இங்க நம்மனால உயிரோட இருக்க முடியும்…”

அரங்கத்தில் எல்லோரும் ஐந்து மீட்டர் இடைவெளியில்தான் அமர்ந்திருந்தோம். ஒருவரையொருவர் தொட்டுக்கொள்ள முடியாத தூரமே எங்களுக்குள் கடைப்பிடிக்கப்பட்டிருந்தது. ஒருவரையொருவர் இதுபோன்ற பொதுக்கூட்டத்தில்தான் தூரத்திலிருந்து பார்த்துக் கொள்ள முடியும். அப்பொழுதெல்லாம் நான் உயிருடன் இருக்கிறேன் என்கிற தன்னுணர்வு மேலோங்கும். மேலதிகமாக எதையும் பேசிக்கொள்ள அல்லது உறவாடிக் கொள்ள அனுமதி இல்லை.

அங்கு இருப்பவர்களின் பலரின் பெயரும் தெரியாது. ஆனால்,எங்களின் அறைகள் மட்டும் ஒன்று போலவேதான் இருக்கும். எனக்குக் கிடைக்கும் வெளிச்சமும் இருளும் பயிற்சிகளும்தான் மற்ற அனைவருக்குமே ஒன்றுபோல வழங்கப்பட்டிருக்கும் என நினைத்துக் கொள்வேன்.

“ஓகே… மனுசன் ஏன் உயிர் வாழணும்?”

அவர் கேட்டக் கேள்வியைத்தான் சில நாள்களுக்கு முன் மனோவியல் விரிவுரைஞரும் என்னிடம் கேட்டிருந்தார். அந்தக் கேள்வியை என்னால் புரிந்து கொள்ள முடியாமல் தடுமாறினேன். சொல்லப்போனால் எல்லாம் புரிந்து பிறகு அதிகமாக புரிந்து பின்னர் மெல்ல புரியாத்தன்மைக்குள் போய்விட்டதைப் போல மாறிவிட்டன. புரிதலின் எல்லையை எத்தனை காலத்திற்குத் தக்க வைத்துக் கொள்ளப் போராடுவது? அதன்பிறகு சலிப்புத்தான் மிஞ்சும்.

“நாயவிட மனுசன் உயர்ந்தவன்… அதுனால அவன் உயிர் வாழணும்…”

மீண்டும் அதே குரல். அரங்கம் கைத்தட்டி அவனுக்கு உற்சாகமூட்டியது. முன் வரிசையில் அமர்ந்திருந்ததால் சட்டென பதில் சொல்ல முடிகிறது. எனக்குக் கேள்வி புரிவதற்குள் அவன் பதில் சொல்லியிருப்பான். நானும் கைத்தட்டினேன். கைகளைத் தட்டினால் அது அடுத்தவருக்கு ஊக்கம் கொடுக்கும் என்கிற விதி. இத்துடன் நாங்கள் பார்க்கும் 2593ஆவது காணொளி அது. அவை பலவிதமான ஒலிகளை எனக்குள் உருவாக்கியிருந்தது. கற்பனைக்கு எட்டாத தூரம் வரை ஒலிகளால் அவ்விடத்தை அடைய முனைந்து கொண்டிருந்தேன்.

தொடக்கத்தில் காணொளிகளைப் பார்த்தால் பதில் சொல்லத் தெரியாது. தோன்றாது. அமைதியாகத் திரையை வேடிக்கைப் பார்த்துவிட்டுப் போய்விடுவேன். பிறகு, திரையில் தோன்றும் மனிதர்களின் விநோதமான பேச்சும் செயலும் என்னை ஈர்க்கத் துவங்கின. மானுடத்தை இரசிக்கத் துவங்கினேன். இங்கே முழுநேரமும் ஏதோ தியானத்தில் ஆழ்ந்திருப்பது போன்று தோன்றும். பேரமைதி. அறைக்கும் அரங்குக்கும் வெளியே மகா இருட்டு. அங்கே அப்படியில்லை. அனைத்துவிதமான ஆர்பாட்டமான ஒலிகளால் அவர்கள் சூழ்ந்திருக்கிறார்கள்.

அவர்களின் கைப்பேசிகள் சதா அவர்களை ஒலிகளால் துரத்திக் கொண்டே இருக்கின்றன. அதனைப் பார்த்துச் சிரிக்கிறார்கள்; மகிழ்கிறார்கள்; கத்துகிறார்கள்; காதல் கொள்கிறார்கள்; முத்தமிடுகிறார்கள்; தூக்கியெறிகிறார்கள். அத்துணைச் சிறிய கைப்பேசியின் ஒலிகள் அவர்களிடத்தில் அவ்வளவு மகிமையுடன் இருந்தது ஆச்சரியம்தான்.

ஒலிகள் விநோதமானவையாக எனக்குள் விரிந்தன. காணொளியில் கேட்டுப் பழகிய ஒலிகளை அறைக்குள் சுயமாக எழுப்பிக் கொள்வேன். பறவையைப் போல் கரைந்து பார்ப்பேன்; புலியைப் போல் உறுமிக் கொள்வேன். சப்தங்களுக்குள் ஒரு வெளிச்சத்தைத் தேடிக் கொண்டிருந்தேன். சத்தம் பலவிதமான உருவங்களாகின. ஒலிகளின் கோர்வைக்குள் என்னைக் கிடத்தியிருந்தேன்.

“மனிதனுக்கு வேறு என்னென்ன குணங்கள் உள்ளன?” மீண்டும் அரங்கில் கேள்வி.

இம்முறை நான்தான் முதலில் கையைத் தூக்கினேன். மற்ற அனைவரும் என்னை நோட்டமிட்டார்கள்.

“எரிச்சல், கோபம், மிருகத்தன்மை, பேராசை…” எனப் பதற்றமான குரலில் நான் சொன்னதும் அரங்கத்தில் கைத்தட்டு.

எனது பக்கத்தில் அமர்ந்திருந்த இன்னொரு குரல், “இவையெல்லாத்துக்கும் நியாயம் சொல்ற புத்தியும் இருக்கும்…” எனச் சொல்லி அமர்ந்தது.

அதற்கும் அரங்கத்தில் கைத்தட்டு. இருவரின் அறிதல் நிலைக்கும் ஒரே வகையான கைத்தட்டு. ஒரே விதமான சத்தம். புள்ளிகளும் சமம். மனிதம், மனம், உயிர் என அனைத்துக்குமே புள்ளிகள் வழங்கப்பட்டன. இங்கிருந்த இத்தனை ஆண்டுகளிலும் புள்ளிகளே எங்களைப் பிரித்துக் காட்டின.

எனக்கு இன்னும் 25 புள்ளிகள்தான். முழுமையடைந்ததும் நான் தயார். மனத்தளவில் தயாரா என்று கேட்டால் அதற்குப் பதில் தெரியவில்லை. ஆனால், சென்றுவிட வேண்டும் என்கின்ற துடிப்பு மட்டும் இன்னொரு இதயமாக உள்ளுக்குள் கிடந்து கலவரப்படுத்திக் கொண்டிருந்தது. கற்பனை செய்து வைத்திருந்த ஒலிகளால் ஆன அவ்விடத்தை எட்டிவிட வேண்டும் என்கிற பதற்றம் உள்ளூர இருந்தது. எத்தனை காலம் உணர்வுகளைப் படித்துப் பார்த்துத் தெரிந்து கொண்டே இருக்க முடியும்? வாழ்தலைவிட அறிதல் அலுப்பூட்டுபவையாக அடர்ந்திருந்தது.

மேலும், பலர் எழுந்து பேசிப் புள்ளிகள் பெறப் போராடிக் கொண்டிருந்தார்கள். இவ்வளவு புரிந்துகொண்டும் நான் யார் என்கிற கேள்வியே மீண்டும் உள்ளே நெளியும். அந்தக் கேள்வியின் முன் இதுவரை கற்றவைகள் எல்லாம் குழந்தைகளாகிவிடும். பேரிரைச்சலாக அவை உள்ளே ஒலிக்கும்.

“ஓகே. இன்றைய பொதுச் சோதனை முடிந்தது… எல்லோரும் அவங்கங்க அறைக்குப் போகலாம்… 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றவங்க மட்டும் இங்கயே இருங்க…”

நானும் அந்தக் குழுவைச் சேர்ந்தவன் என்பதில் பெருமையாக இருந்தது. என் பக்கத்து நாற்காலியில் சற்றே தூரத்தில் அமர்ந்திருந்தவன் என்னைப் பார்க்கிறான். அப்படித்தான் என்கிற என் நினைப்பு. கண் பார்வை அத்துணைக் கூர்மையாக இல்லை. எனது வெண்புருவங்களை உயர்த்தி பெருமையை அவனோடு பகிர்ந்து கொண்டேன். நமக்கான ஏதோ தகவல் அல்லது நற்செய்தி காத்திருக்கக்கூடும் என மனம் துடித்தது. இப்பொழுது உடல் நாற்காலியின் மீது திருப்தி கொண்டது. ஒரு குழந்தையைப் போல நாற்காலியில் ஆர்வத்துடன் அமர்ந்திருந்தேன். மற்றவர்கள் வரிசையுடன் சென்றதும் அரங்கத்தின் இரைச்சல் மெல்லக் குறைந்து மௌனமானது. திரையில் சந்தித்த அந்த நபர் மீண்டும் தோன்றினார்.

“ஹாய்… டியர்ஸ். நீங்க 23 பேர்தான் முதலில் போகப் போறீங்க… உங்க மனநிலை எப்படி இருக்கு?”

எதிர்ப்பார்த்த குரல்தான். நான் அமர்ந்திருந்த வரிசையின் கடைசி நாற்காலியில் அமர்ந்திருந்தவன். அவனுடைய பெயர் ஞாபகத்தில் இல்லை.

“நான் ரொம்ப ஆர்வமா இருக்கன்…எங்க அம்மா அப்பா அங்க இருப்பாங்களா?”

வேடிக்கையான கேள்வி. இந்தக் கேள்வி இந்த அரங்கில் பல ஆண்டுகளாகக் கேட்கப்பட்ட ஒன்றாகும். ஆனால், அதை ஒரு கேள்வியாகவே யாரும் பொருட்படுத்தியதில்லை. பதிலும் இருக்காது. பின்னாளில் ஏதோ சடங்குபோல அனைவரும் அந்தக் கேள்வியை மட்டும் கேட்டுக் கொள்வோம்.

ஒருசிலர் பேசி முடித்ததும் நானும் எழுந்தேன்.

“நான் ஒவ்வொருநாளும் அந்தக் கனவுலதான் இருக்கன்…”

சொல்லி முடித்ததும் மீண்டும் அமர்ந்தேன். மனனம் செய்து ஒப்புவிப்பது அத்துணைக் கடினமாகத் தெரியவில்லை. இந்த ஒவ்வொருநாளும் என்பது எத்தனை அடர்த்தியானது; எத்தனை நீண்ட நெடிய இரவுகள் கொண்டவை; எத்தனை தனிமை மிகுந்த வலிகள் கொண்டவை எனச் சொல்லிப் புரிய வைத்திடல் முடியுமா என்பது குழப்பம்தான்.

“ஓகே டியர்ஸ்…இன்னும் 25-30 புள்ளிகள்தான்… அதுக்கு ஒரு சைக்கோலோஜி பரிட்சை இருக்கு. அவ்ளதான்… நீங்க எல்லாம் ரெடி… உங்கள விட நாங்கத்தான் ஆர்வமா இருக்கோம்… இது நம்மளோட பல வருஷ கனவு…”

இன்னுமொரு சோதனையா? மனம் கோபம் கொண்டது. சற்றுமுன் திரையில் பார்த்தவனின் எரிச்சலை நன்றாகப் பழகிக் கொண்டிருந்தேன். நான் இங்கு ஒளிப்பரப்பட்டக் காணொளிகளின் தொகுப்பென்றே நினைத்துக் கொண்டிருக்கிறேன். எனது தன்னுணர்வு அப்படியாகத்தான் உள்ளெழுப்பட்டுள்ளது. எனது ஒவ்வொரு உணர்வுகளையும் நான் காணொளிகளிலிருந்து கற்று உள்ளே பெருக்கிக் கொண்டவை.

அரங்கத்திலிருந்து வெளியேறியும் முன் வழக்கமாகக் கொடுக்கப்படும் மாத்திரைகள் வழங்கப்பட்டன. உணர்வுகளைப் பாதுகாக்கும்; கட்டுபடுத்தும் ஆற்றல் கொண்டவை. அவை சிறுவயதிலிருந்து கொடுக்கப்படுகின்றன. ஒவ்வொரு மாத்திரையின் ருசியையும் அறிவேன். ஒவ்வொன்றும் சாப்பிட்ட பின் ஏதோ மயக்கத்திற்குள்ளாக்கும்; மகிழ்ச்சியை உற்பத்தி செய்து மனத்தை இலேசாக்கும். வெளியில் என் பெயரிட்ட காத்திருப்புத் தளத்தில் நின்றிருந்த பந்து போன்ற பளபளக்கும் கண்ணாடி சுவர்களால் ஆன எனது அறையில் ஏறி அமர்ந்து கொண்டேன். அது என்னைச் சுமந்து கொண்டு பெரும் இரும்பு கொக்கியின் மூலம் அதனுடைய வட்டப் பாதைக்குச் சென்று சுழலத் துவங்கியது. இங்கு எல்லாமும் சுழன்று கொண்டும் வட்டமிட்டுக் கொண்டும் இருக்கும்.

எல்லாவற்றையும் இயக்கிக் கொண்டிருக்கும் மையச் செயலகம் உற்பத்தி செய்யும் ஈர்ப்புச் சக்தியோடு எல்லாம் நிர்ணயிக்கப்பட்ட சுழல் பாதையில் சுழன்று கொண்டே இருக்கும். அது பலநூறு சுழல் வட்டங்களாக விரிந்து நிர்ணயிக்க இயலாத எல்லைவரை காட்சியளிக்கும். ஒருகண நேரப் பார்வையில் பார்க்கும்போதெல்லாம் வெறுமையும் இருளும் மட்டுமே தெரியும்.

அறைக்குள் போனதும் சுழற்சியை உணர முடியாது. மனத்தில் எப்பொழுதும் இல்லாத ஒரு புதுத்தெம்பு. சுழற்சிகள் இல்லாத எப்பொழுதுமே நிரந்திரமாக நிற்கும் ஒரு நிலத்திற்குப் பயணம். வேகமாக ஓடலாம்; தாவிக் குதிக்கலாம்; சத்தமாகக் கத்தலாம்; ஒருவரையொருவர் திட்டிக் கொள்ளலாம்; கோபத்தால் ஏதாவது பொருள்களை உடைக்கலாம்; பகைமையை வளர்த்துக் கொண்டு பழி வாங்கலாம்; அன்பு செய்யலாம்; முத்தமிடலாம்; காற்றில் பட்டம் விடலாம்; அந்தப் பறத்தலுக்குப் பின்னால் விரிந்திருக்கும் வானத்தைப் பார்க்கலாம். அங்கு வானம் வெளிச்சமாக இருக்கும் என மின்நூலகத்தில் தெரிவித்திருக்கிறார்கள்.

அங்குச் சென்றால் இவையாவும் நம் கண் முன்னே நாம் செய்து பார்க்கலாம். கால்கள் பரபரத்தன. அறையைச் சுற்றித் தெரிந்த ஓவியங்கள் உண்மை போலவே நினைத்துக் கொண்டேன். வயல்வெளி, வாழைத்தோப்பு, கடற்கரை, மலைமுடுக்கு. அங்கு ஓயாமல் கரையில் அலைந்து கொண்டிருக்கும் அலையும் பேரிரைச்சலுடன் கேட்கும் காற்றும். சுவரைத் தொட்டுத் தடவினேன். தோல் சுருங்கிய கைகள் சில்லிட்டன.

அறையின் கதவுக்கு மேலே ‘வாசு 2087’ என நான் இங்குக் கொண்டு வரப்பட்ட திகதியுடன் என் பெயர் தங்க நிறத்தில் பளிச்சிட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். இன்னும் சில நாள்களில் இந்த அறை காலியாகும். இங்கு அடுத்து யார் இருப்பார் என நான் கடற்கரையிலோ வாழைத்தோப்பிலோ வெயிலுக்குக் கீழே பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு நகரத்தின் நடுவிலோ இருந்து கொண்டு சிந்திக்கக்கூடிய ஒரு நாள் ஏற்படும். அப்பொழுது இங்கு யார் இருப்பார் என எனக்குத் தெரிய வாய்ப்பில்லை. ஆனால், ஒரு நினைவு மனத்தை வருடும். ஒரு விடுதலையை உள்ளார்ந்து ருசிக்க முடியும். அகம் விரிந்து நிற்பதை உணர முடியும்.

சட்டெனச் சிறிய ஒலியுடன் மின் நூலகத்திலிருந்து அப்பெண்மணி தோன்றினாள். அப்பொழுதுதான் இது பயிலரங்கத்திற்கான நேரம் என மறந்து விட்டிருப்பதைக் கவனித்தேன். ஒளியின் வழியாக அறைக்குள் அவர் வந்து நின்றார். அவரைத் தொட முடியாது. அவர் வரும்போதும் போகும்போதும் ஒலிகள் கேட்கும்; பெரிதாக ஏதும் முன்னறிவிப்பில்லாமல்தான் ஒளிவடிவில் அறைக்குள் நுழைந்து விடுவார். பல முறை அவருடைய போதனை பிடிக்காமல் அவரது உருவத்தைத் தள்ள முயன்றுள்ளேன். கைகள் காற்றில் அலைந்து ஒளிக்கீற்றுகளுள் நுழைந்து மீண்டும் மறுபக்கம் வருமே தவிர அவரை ஒன்றுமே செய்ய இயலாது. ஆனால், ஓயாமல் சிரித்த வண்ணமே என் பெயரை அழகான உச்சரிப்புடன் அவர் தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருப்பார். எனக்குத் தோல் சுருங்கியதைப் போன்று அவருக்கு அப்படி நிகழவில்லை. எனக்கு உடல் மெலிந்ததைப் போன்று அவருக்கு அப்படி நிகழ்ந்ததில்லை. ஒவ்வொரு வருடங்களிலும் அவர் ஒரே மாதிரியாகவே காட்சியளிக்கிறார் என்பது ஆச்சரியமாக இருக்கும்.

அவர் வாஞ்சையுடன் என் பெயரை அழைக்கும் போதெல்லாம் மனம் குளிரும். யாரோ நம்மோடு இருக்கிறார்கள் என்கிற நினைப்பு மேலோங்கும். மகா தனிமை மெல்ல அகலும். பலமுறை ஆண், பெண் என்கிற பேதங்களை இவர்தான் அழுத்தமாக எனக்குள் கடத்தியுள்ளார். இவரிடமிருந்தே பெண் என்பவளை ஆழமாகப் புரிந்து கொண்டேன். ஒளியில் தோன்றும் மற்ற விரிவுரைஞர்களைவுட இவரையே மனம் பின்னாளில் தேடத் துவங்கியது. நான் இடைமறித்து என்ன பேசினாலும் அவர் சற்றும் தடுமாறாமல் அவர் சொல்ல வந்ததைச் சொல்லிக் கொண்டே இருப்பார். ஒருவேளை என் அம்மாவும் இப்படித்தான் இருந்திருப்பார் என நினைத்துள்ளேன். அவர் இல்லாத நேரத்தில் அவரை அறைக்குள் கற்பனையால் கொண்டு வந்து விடுவேன்.

“ஹாய் டியர் வாசு… இன்னிக்கு நம்ம மன அழுத்தம் ஏற்பட்டா அதை எப்படிக் கொண்ட்ரோல் பண்றதுன்னு பாக்கப் போறோம்…”

கடந்த வாரம் முழுவதும் அன்பை எப்படிக் காட்டுவது எனப் பாடம் எடுத்தார். இந்த வாரம் மனத்தை எப்படி அடக்கியாள்வது எனப் பேசிக் கொண்டிருக்கிறார். உடலில் மனம் என்பது எங்கு இருக்கிறது என்று மட்டும் அவர் இன்னுமும் சொல்லவில்லை. அதுவும் ஓர் உடல் உறுப்பாக இருக்குமோ என்று அறிவியல் விரிவுரைஞரிடம் நான் கேட்ட போது அது மனநல விரிவுரைஞர் விளக்குவார் எனச் சொல்லிவிட்டார். ஆனால், இவரோ எங்கிருக்கிறது எனத் தெரியாத ஒன்றை எப்படி அடக்க வேண்டும் எனப் பேசிக் கொண்டிருக்கிறார். எனக்கு இது புரியவில்லை. ஒருவேளை புரியாவிட்டால் அந்தக் கடைசி மனநலச் சோதனையில் நான் தேர்ச்சி பெறாமல் போய்விடுவேனோ என்கின்ற அச்சமும் மனத்தை வாட்டியது. வேறு வழியில்லை. விரிவுரைஞர் சொல்வதை வழக்கம்போல மனனம் செய்து கொள்ள வேண்டும். கேட்டதைப் பிசிறில்லாமல் மீண்டும் சொல்லிக் கொள்ள வேண்டும். அவரது கண்களை அதிக நேரம் உற்றுப் பார்க்காமல் செவிகளை மட்டும் கூர்த்தீட்டிக் கொள்ள வேண்டும் என என்னை ஆய்த்தப்படுத்திக் கொண்டேன்.

“ஓகே டியர் வாசு… சில கேள்விகள் கேட்கப் போறன்… பதில் சொல்லணும்…”

தெரிந்த கேள்விகள்தான். எனது நான்காவது வயதிலிருந்து கேட்டுப் பழகிய கேள்விகள். ஒவ்வொரு விரிவுரைஞரும் தவறாமல் பாடத்தை முடிக்கும்போது இந்தக் கேள்விகளைக் கேட்டாக வேண்டும். அது அவர்களின் கடமை. அதற்குப் பதில் சொல்ல வேண்டியது எனது கடமை. இங்கு கடமைகளுக்கு மட்டுமே அளவுகோல் இருந்தது; புள்ளிகளும் இருந்தன.

“நீங்க எங்க இருக்கீங்க?”

“அறை எண் 453, C-vid 12ஆவது சேட்டலைட்”

“நீங்க ஏன் இங்க இருக்கீங்க…?”

“நாங்க சாவிலிருந்து காக்கப்பட்டவர்கள்…”

“நீங்க இங்க வந்த வருசம் என்ன?”

“2087, ஜூன் 27”

“நீங்க பூமிக்குப் போக ஆசைப்படறீங்களா?”

“அதுக்காகவே நான் காத்திருக்கன்…”

கைத்தட்டல் சத்தம் கேட்டது. தொடக்கத்தில் அறையைச் சுற்றி யாரோ நின்று கவனித்துக் கைத்தட்டுகிறார்கள் என்று சந்தேகம் கொண்டேன். பின்னர் அந்தச் சத்தம் இயந்திரம் எழுப்பும் ஒலி எனப் புரிந்து கொண்டேன்.

“ஓகே டியர் வாசு… நன்றி…”

அறையிலிருந்து அவர் மறைந்தார். அவர் சென்ற பிறகு நிலவும் தனிமை கொடூரமானது. சத்தமற்ற பொழுது வீரியத்துடன் மீண்டும் வந்து அமர்ந்து கொண்டது.

“அங்க இப்ப யாருமே இல்ல… மொத்த பூமியும் வைரஸ்னால அழிக்கப்பட்டு… இப்போ இயற்கையாவே சுத்தமாய்க்கிட்டு இருக்கு…”

ஒருமுறை பொது சோதனையில் தலைமை விஞ்ஞானி சொன்ன வார்த்தைகளை நான் கெட்டியாகப் பிடித்துக் கொண்டேன். அப்படியென்றால் என் அம்மா, என் குடும்பம் எதுவுமே அங்கிருக்க வாய்ப்பில்லை என்கிற உண்மையை மனம் ஏற்க மறுத்தது. என் வருகையின்போது என்னை வரவேற்க அங்கு யாரும் இருக்கமாட்டார்கள். நான் யாராக அங்குப் போய் நிற்பேன் எனக் குழம்பினேன். காணொளியில் பார்த்தது போல் பிள்ளை பள்ளிக்கூடம் முடிந்து வீட்டிற்கு வந்தால் வாறி கட்டியணைக்க ஒரு பெண் அங்கிருக்க வேண்டும் என மனம் கற்பனைச் செய்து கொண்டது.

“கண்ணுக்குத் தெரியாத ஒரு வைரஸ்கிட்ட மொத்த அறிவியலும் தோத்துப் போச்சு…” எனச் சோகம் படர்ந்த அவருடைய கடைசி உரையை அடிக்கடி போட்டுக் காட்டுவார்கள். அவர் இறந்து சில ஆண்டுகள் ஆகிவிட்டன. அவருடைய திட்டம்தான் நாங்கள் எல்லோரும் எனச் சொல்லி அவருக்கு நன்றி உரைக்கக் கட்டாயப்படுத்துவார்கள்.

“எங்களைப் பூமியிலிருந்து காப்பாற்றி அனுப்பி வைத்த எங்கள் தந்தையே… உம் மூளை தெய்வங்களால் ஆசீர்வதிக்கப்பட்டப் பொக்கிஷம் என நாங்கள் உணர்ந்து போற்றுகிறோம்… மீண்டும் நாங்கள் பூமியைப் புதுப்பிக்கக் கடமைப்பட்டுள்ளோம்… இயற்கைக்குப் புறம்பான காரியங்களில் ஈடுபட மாட்டோம் என உறுதி கொள்கிறோம்…” மனத்தில் ஓர் ஒழுங்கு செய்யப்பட்ட ஒலிகளாக இந்த அனைத்து வார்த்தைகளும் எனக்குள் பல்லாண்டுகளாகச் சூழ்ந்திருக்கின்றன. மண்டைக்குள் எப்பொழுதும் சுழன்று கொண்டே இருக்கின்றன. தினமும் பலமுறை சொல்லிப் பார்த்துப் பழகி கொண்டிருக்கும் வார்த்தைகள் அவை.

“முயற்சி செய்றவங்க… ஆர்வம் உள்ளவங்க… எங்களோடு ஒத்துழைத்து முழுப்புள்ளிகள் பெற்றுத் தகுதி பெறுபவர்கள் மட்டும்தான் அங்க போக முடியும்… இல்லைன்னா இங்கயே இருந்து வயசாயி செத்துறணும்…”

எனக்கு மேலே சுழன்று கொண்டிருக்கும் சில அறைகள் காலியான சம்பவங்கள் எப்பொழுதும் அச்சுறுத்திக் கொண்டே இருக்கின்றன. அவர்கள் என்னைவிட வயதில் மூத்தவர்கள். உடல் தளர்ந்து தனிமை தாளாமல் முதுமையடைந்து அறைக்குள்ளே இறந்து கிடந்தார்கள். அத்தகையதொரு மரணம் கொடூரமானது. அரங்கைவிட்டு அறையில் ஏறும்போதும் இறங்கும்போதும் அவர்களின் அறைகள் திறக்கப்படாமல் மூடியே கிடப்பது மனத்தை என்னவோ செய்யும்.

வரும்போது யாரென்று தெரியாமல், பின்னர் ஏன் இறக்கிறோம் எனத் தெரியாமல் இடையில் சுழன்று கரைந்து காணாமல்போன வாழ்க்கை. என் சுயம் எனக்கு நினைவூட்டிக் கொண்டே இருக்கின்றது.

“இங்கேந்து போய்ரு…”

85,000 கிலோ மீட்டருக்கு அப்பால் கோவிட், வைரஸ் என எந்தக் கொடிய நோய்களும் இப்பொழுது இல்லாமல் எங்கள் வருகைக்காக கடந்த 57 ஆண்டுகளாக ஓயாமல் கரைகளைத் தொடும் அலைகளும் மென்காற்றும் மரங்களின் உரசல்களும் என ஒலிகளுடன் மட்டும் காத்திருக்கும் பூமியை மனத்தில் நினைத்துக் கொண்டேன்.

கே.பாலமுருகன்

ஒலி – 2 (இரண்டாம் பாகத்தை வாசிக்க)

https://balamurugan.org/2021/08/10/அறிவியல்-சிறுகதை-தொடர்-ஒ/

மூக்குத் துறவு: அறிவியல் சிறுகதை

அறுவை சிகிச்சைக்குப் பிறகு கொஞ்சம் அசௌகரிகமாக இருந்தாலும் வீட்டிற்கு வந்து பயிற்சியளிக்கும் தாதியின் பொறுமையும் அக்கறையும் ஓரளவிற்குத் தேற்றியிருந்தது. வீட்டில் இன்னும் ஓர் ‘ஆக்சிஜன்’ களன் மட்டுமே இருந்தது. நாளை நகரத்தில் இருக்கும் ‘உயிர்வளி விண்ணப்ப அலுவலகம்’ சென்று இன்னும் ஒரு மாதத்திற்குத் தேவையானவற்றைப் பெற்று வர வேண்டும். காற்றாடி இருந்து பிறகு பிடுங்கெறியப்பட்ட சுவரில் ஏதோ ஒன்றின் நிழல் அசைந்து பெருத்து மீண்டும் சுருங்கியபடியே இருந்தது. அது காற்றாடி சுழன்று நிற்கும் அசைவைப் போன்றும் தெரிந்தது. கண்களை மூடி மீண்டும் திறக்கையில் சுவர் மட்டுமே வெறுமையோடு விரிந்திருந்தது. மனம் எதிலும் ஊன்றி நிற்க முடியாமல் ஒரு வௌவாலைப் போலத் தலைகீழ் தொங்கியிருந்துவிட்டுச் சோர்வு தாளாமல் பிடிமானத்தை விட்டு எங்கோ விழுந்து கொண்டிருந்தது.

சன்னலை மூடி வைக்கக்கூடாது என்கிற விதிமுறை மட்டும் கொஞ்சம் உறுத்தலாக இருந்தது என்று என்னோடு அறையில் தங்கியிருந்த முரளி சொன்னதுதான் எனக்கு மேலும் எரிச்சலை ஊட்டியது. அவனுக்கும் கடந்த மாதம்தான் மூக்கு அறுவை சிகிச்சை முடிந்திருந்தது. என்னைவிட ஒரு மாதம் முன் அனுபவம் இருந்ததால் அவனால் இயல்பாக இருப்பதற்குரிய பயிற்சியையும் நிதானத்தையும் அடைய முடிந்தது. சென்ற வாரம் அவன் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வீட்டிற்கு வந்து ‘மூக்கடைப்பு விழாவைச்’ சத்தமில்லாமல் செய்துவிட்டுப் போனார்கள். இந்த அறுவை சிகிச்சை கட்டாயமாக்கப்பட்ட நாளிலிருந்து ஒரு சில குடும்பங்கள் அதைக் குலதெய்வ வழிபாட்டோடு பொருத்தி இயற்கையை வழிபட்டனர். அதில் ‘மூக்கடைப்பு விழா’ கட்டாயமாகப் பின்பற்றப்பட்டது. அடைக்கப்பட்ட மூக்குத் துவாரத்தின் சதையின் மீது மஞ்சள், குங்குமம், திர்நீர் பூசி வாயு தேவனை மனத்தில் வேண்டிக்கொண்டு அரைமணி நேரம் அமைதி காத்து அமர்ந்திருக்க வேண்டும். அதுதான் அவ்விழாவின் முதன்மையான சடங்கு. பத்து வாயுக்களில் சிலவற்றுக்கு மதரீதியிலும் தடைகள் உருவாக்கப்பட்டிருந்தன. மீறினால் அரசிடம் புகார் ஒப்படைக்கப்படும்.

கூடுதல் உயிர்வளிக் களனைப் பயன்படுத்தாமல் ஐந்தாண்டுகள் ஒரே துவாரத்தில் சுவாசித்து வெற்றிப் பெற்ற திரு.ப.மாணிக்கவாசகம் அவர்களுக்கு உலக மூக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது’ என்கிற செய்தியுடன் மேசையில் கிடந்த நாளிதழைக் கவனித்தேன். எதையும் வாய்விட்டு உரக்க வாசிக்க உரிமையில்லை. மௌன வாசிப்பு மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தது. ஜெஞ்சாருங் அடுக்குமாடியில் இருந்த பெரும்பாலானோருக்கு மூக்கு அறுவை சிகிச்சை முடிந்து சகஜமான வாழ்க்கைக்குள் வந்துவிட்டார்கள். என்னால் என்னவோ சட்டென உடன்பட முடியாமல் தடுமாறி நான்கு முறை ஆலோசனைக்குச் சென்றும் வந்தேன். ஐந்தாவது முறைக்கு மேல் போனால் அரசால் வழக்கும் தொடுக்கப்படலாம் என்பதால் இறுதியில் கடைசியாக மூக்கைப் பல மணி நேரம் கண்ணாடியின் முன் நின்று தடவி; மூச்சை நிதானமாக இழுத்துவிட்டு ஒப்புக்கொண்டேன்.

“மூக்கில் இருக்கும் கூடுதலான ஒரு துவாரம்தான் நமக்கு எதிரி அன்பர்களே! மூக்கைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளாதீர்கள். ‘மூக்குத் துறவு’ நம் நாட்டையும் குடிமக்களையும் இன்னும் நீண்ட காலம் வாழ வைக்கும்… ஒரு துவாரமே நாம் வாழ்க்கை முழுவதுமே… இரண்டு துவாரங்களோடு இன்னும் இருக்கிறீர்களா? உடனே எங்களைத் தொடர்பு கொண்டு உங்கள் ஒரு துவாரத்தை நாட்டிற்கு அர்ப்பணித்துவிடுங்கள்…காற்றைச் சேமிக்க முன் வாருங்கள்…”

வானொலியில் சதாகாலமும் ஓடிக் கொண்டிருக்கும் அந்த விளம்பரக் குரல் மனத்தின் ஆழத்தில் கசியும் இரகசியக் கண்ணீருக்குள் கல்லெறிந்து கொண்டிருந்தது. சட்டென காற்று இல்லை என்கிற ஒரு பிரமை ஏற்பட்டுக்கொள்கிறது. அப்பொழுதெல்லாம் மூச்சு திணறும். மூக்கு அறுவை சிகிச்சைக்குப் பிறகு குறைந்தது நான்கு நாட்கள் சுவாசக் களனை மூக்கிலேயே பொறுத்தியிருக்க வேண்டும். இல்லையென்றால் மரணிக்கவும் வாய்ப்புண்டு. அருகில் இருந்த தாதி என்னை நிதானமாக இருக்கும்படி செய்கையில் காட்டினாள். ஒரு துவாரத்துடன் இருந்த மூக்கை மெல்ல நீவிவிட்டுக் கை விரல்களை அசைத்துக் காற்று உண்டு என்பதைப் போல என்னைச் சமாதானம் செய்தாள். மெதுவாகக் காற்றை உள்ளிழுத்தேன். மனத்தில் இருந்த அதிர்வு மெல்ல குறைவதாக நானே நினைத்துக்கொண்டேன். யதார்த்தத்தைவிட கற்பனை சக்தி வாய்ந்ததாகத் தெரிந்தது. காற்று உண்டு என்று வலிந்து கற்பனை செய்தேன். உடலெல்லாம் காற்று நிரம்பி பெருகுவதாக நினைத்துக்கொண்டேன்.

கொண்டு வந்திருந்த பைக்குள்ளிருந்து தாதி சிறிய கண்ணாடி பெட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஒரு புகைப்படத்தை வெளியில் எடுத்தாள். பச்சை நிறத்தை வெகுநாட்களுக்குப் பிறகு பார்க்கும்போது கண்கள் குளிர்ந்தது. முன்பு இந்நிலத்தில் சர்வகாலமும் பூத்திருந்த செடியின் படம் என்றாள். இப்படம் மனத்திற்குள் சாந்தத்தை உண்டாக்கும் என்றும் கூறினாள். மூக்கை அறுவை சிகிச்சை செய்து கொண்ட அனைவருக்கும் தரப்படும் சலுகைகளில் இதுவும் ஒன்றாகும் என்று புன்னகைத்துக்கொண்டே என்னிடம் நீட்டினாள். அவள் புன்னகை நிதானமான ஒரு குமிழி. அளவெடுத்து அசைந்து ஓயும்.

“இப்படத்திலிருந்து இது வெளியேறி வளருமா?” என்றேன். கையில் அதனைப் பிடிக்கும்போது பால்ய வயதில் அப்பா சேமித்து வைத்திருந்த செடிகள் சிறுகச் சிறுக வாடி வதங்கிக் கொட்டியதுதான் நினைவிற்குள் மீந்திருந்தன. ஏதோ வளர்ப்புப் பிராணி என்பதைப் போலத்தான் நானும் நினைத்திருந்தேன். அவையனைத்தும் ஒவ்வொன்றாகச் சாகும்போது அப்பா சிறு பிள்ளையைப் போலத் தேம்பி அழுதது குறுக்கு வெட்டாக நினைவை முட்டின.

அவள் சிரிப்பை அடக்க முயன்றவாறே, “இல்ல… இது படம் மட்டும்தான்…நீங்க பயப்படாம இருங்க. இதோட மில்லியன் கணக்குல ஆளுங்க மூக்கை அடைச்சிட்டாங்க… நீங்க இப்பலேந்து நாட்டோட தியாகி… இன்னும் பல லட்சம் உயிரைக் காப்பாத்திருக்கீங்க…” என்று தாதி சொல்லும்போது என் மீது உருவான பெருமிதத்தை அடக்க முயன்றேன். பெருமிதம் கொண்டு மகிழ்ச்சி பொங்கினால் மூச்சு அதிகமாக இரைக்கும். இதுபோன்ற உணர்வுகளைக் கட்டுப்படுத்தியாக வேண்டும்.

“ஏன்டா மூச்சு வாங்குதா? கவனத்த அறிவுல வை. நீ உயிரோட இருக்கறேனு நம்பு. ஒன்னும் ஆகாது…” என்று முரளி வலது கையை மார்பிலிருந்து தலைக்குக் கொண்டு சென்று காட்டிவிட்டு அவன் உதிர்த்த சொற்களை எண்ணிக்கொண்டான். அவன் முகம் கறுத்திருந்தது. கண்கள் இருளுக்குள் அடங்கியிருந்தன. அடுத்த வாரம் தொடங்கி மூச்சடக்குப் பயிற்சிக்குச் செல்ல வேண்டும். அறுவை சிகிச்சை செய்தவர்கள் கட்டாயம் அப்பயிற்சிக்குச் சென்றாக வேண்டும். அதன் பிறகு ஒரு துவாரத்தின் வழியாக மூச்சை விட்டுப் பழகும் பயிற்சி மூன்று வாரங்களுக்குத் தொடரும் எப்படியும் ஒரு மாதம் கடந்துதான் நான் இயல்பான நிலைக்குத் திரும்புவேன் என்று தோன்றியது.

மனம் மீண்டும் படப்படப்பிற்குள்ளானதைக் காட்டிக் கொள்ளவில்லை. அழக்கூடாது என்கிற உறுதி முகமெல்லாம் ஓர் இறுக்கத்தை உருவாக்கியிருந்தது. எங்கே அழ நேர்ந்தால் அப்பாவைப் போல உடைந்துவிடுவேன் என்கிற பயமும் தொற்றிக்கொண்டது. அப்பாவின் மூச்சுத் திணறல் அவருக்கு மட்டுமல்லாமல் வீட்டிலிருந்த அனைவருக்குமே மரண பயத்தை உருவாக்கியது. வீட்டில் அவர் வைத்திருந்த மரம் செடி அனைத்தும் மெல்ல சாக ஒரு நாள் அவரும் எங்களைவிட்டுப் போனார். அப்பா இறந்த மறுவருடமே நாட்டில் மரண எண்ணிக்கை இலட்சங்களை எட்டத் துவங்கின. உலகமே பரப்பரத்துப் போனது.

“சன்னல்கிட்ட போய் நில்லு. கொஞ்சம் ஓகேவா இருக்கும்,” என்று முரளி சொன்னதும் சோம்பல் நெளிந்து கொண்டிருந்த உடலை நிதானப்படுத்தி மெதுவாக எழுந்தேன். கறுமை பூத்த நகரத்தின் ஒரு பகுதியும் வெறிச்சோடியிருந்த வானம் சென்று முடியும் ஒரு புள்ளியும் மங்கலாய்த் தெரிந்தன. நூறு மீட்டருக்கு ஓர் இடத்தில் ‘பொது சுவாசக் களன்’ எல்லா இடங்களிலும் கட்டாயமாக்கப்பட்டிருந்தது. பெரும்பாலும் வயதானவர்கள் வரிசையில் நின்று ‘பொது சுவாசக் களன்’ வழியாக ‘ஆக்சிஜனைச்’ சுவாசித்துவிட்டுப் போய்க் கொண்டிருந்தனர். ஒருவர் ஐந்துமுறை இச்சேவையைப் பயன்படுத்தினால் அவருடைய ஆயுள் கணக்கில் இரண்டு மாதம் கழிக்கப்படும். நம் மூக்கினுள் இணைத்துத் தைக்கப்பட்ட ‘நுண்சில்லின்’ மூலம் ஒவ்வொருவரின் நகர்வும் கண்கானிக்கப்பட்டு வந்தன.

இன்று காலை ஆயுள் முடிந்த பதினாறாயிரம் பேரை அரசு சுட்டுக் கொன்றது. இப்பிரச்சனைக்குப் பிறகு மனிதனின் ஆயுள் ஐம்பது வயது மட்டுமே. அதற்குமேல் ஒருவன் உயிர் வாழ்ந்து காற்றை வீணடிக்க அனுமதி இல்லை. அறைக்குள்ளிருந்து ஜேம்ஸ் வெளியில் வந்தான். எனது இன்னொரு அறை நண்பன். நேற்றுடன் ஜேம்ஸ் முப்பத்தைந்துமுறை ‘பொது சுவாசக் களனைப்’ பயன்படுத்திவிட்டான். அவனுடைய ஆயுளில் ஒரு வருடம் இரண்டு மாதங்கள் கழிக்கப்பட்டதைப் பற்றி ஞாபகப்படுத்திக் கொண்டான். தைக்கப்பட்டிருந்த மூக்கின் ஒரு துவாரத்தைத் தடவினேன். சதையோடு சேர்த்து அடைத்துத் தைத்திருந்தார்கள். மூக்கைத் தைத்துக் கொண்டால் மாதம் ஐநூறு ரிங்கிட், வருடம் மூன்று முறை இலவச மருத்துவப் பரிசோதனை, ஒரு மாதத்திற்கு இலவசத் தாதி சேவை, விண்ணப்பித்தால் கிடைக்கும் உயிர்வளி களன், எல்லாச் சலுகைகளும் உட்பட மின்சாரம், நீர் போன்றவற்றுக்குக் கட்டணமும் தேவையில்லை.

“இந்தச் சின்னோண்டு ஓட்டைய அடைச்சா இவ்ள சலுகையா?” என்கிற கேள்விதான் அதுவரை பிடிவாதமாக இருந்த என்னைத் தியாகியாக்கியது. மூக்கை அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் அனைவருக்கும் புதிய அடையாள அட்டையும் வழங்கப்பட்டன. அவ்வட்டையை வைத்திருப்பவர்கள் பேருந்தில், இரயிலில் இலவசமாகப் பயணம் செய்யலாம்.

“இனிமேல் என்னடா… நீதான் சிறந்த குடிமகன்…” என்று முரளி விளையாட்டாக முதுகில் தட்டினான். “இந்த ஒரு மூக்கும் அடைச்சிக்காதா?” என்கிற கேள்வி அறுவை சிகிச்சைக்குச் சம்மதித்த நாளிலிருந்தே உறுத்திக் கொண்டிருந்ததைக் கேட்டு வைத்தேன். அவன் கிண்டலாகச் சிரித்தான். பிறகு, சிரிப்பை அடக்கிக்கொண்டான். சத்தமாகச் சிரிப்பதைத் தவிர்க்கச் சொல்லிவிட்டார்கள்.

“நமக்கு ஆபரேஷன் செய்யும்போதே அதுக்கான ஊசில்லாம் போட்டுட்டாங்க. மூக்கு அடைப்பு வராது. மருந்தும் இருக்கு. கவலைப்படாதடா,” என்று மீண்டும் முதுகை ஆறுதலாகத் தட்டினான். ஜேம்ஸ் ஏதோ இறுக்கத்துடனே நாங்கள் பேசுவதைக் கவனித்துக் கொண்டிருந்தான். தாதி கிளம்பும் நேரம் வந்ததும் எங்களிடம் சொல்லிவிட்டுப் படியில் இறங்கிச் செல்லும்போது அவளுடைய ஒற்றை மூக்குத் துவாரம் அழகாகத் தெரிந்ததைக் கவனித்தேன். மனம் கொஞ்சம் கூடுதலான ஆசுவாசம் பெற்றது. ஒரு துவாரத்தை அடைப்பது ஊனமல்ல என்று சொல்லப்பட்ட அத்தனை ஆலோசனைகளையும் தாண்டி தாதியின் அந்த அழகான மூக்கு எனக்குள் விழிப்பை உண்டாக்கியது. மீதி இருக்கும் இன்னொரு துவாரத்தை விரல் நுனியைவிட்டு விரிவாக்குவதுபோலச் செய்தேன். காற்று தாராளமாக உள்நுழையும் என்கிற நம்பிக்கை.

சுவரில் இருந்த தவத்திரு குன்றகுடி அடிகளாரின் படம் மனத்தை உறுத்தியது. ‘மூச்சை அடக்கி வாழ்ந்தால் ஆயுள் நீளும்’ எனும் அவரின் கூற்றின்மீது வெறுப்பு தோன்றியது. சன்னல் வழியாக மீண்டும் நகரத்தைக் கவனித்தேன். பழுதாகி சாலையிலேயே நின்றுவிட்ட தன் மகிழுந்தை ஒரு நடுத்தர வயதை ஒத்திருந்தவன் உதைத்துக் கொண்டிருந்தான். பிறகு, அங்கிருந்த இரும்பை எடுத்துக் கண்ணாடிகளை நொறுக்கத் துவங்கினான். அவனுடைய செயலை யாருமே தடுக்கவுமில்லை; கவனிக்கவுமில்லை. சிலர் தள்ளி நடக்கத் துவங்கினார்கள். அவன் மூச்சிரைக்கக் கத்தினான். சிறிது நேரத்திலேயே கருப்பு மகிழுந்தில் அங்கு வந்தவர்கள் அவனைக் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

“இப்படிக் காத்தை வீணாக்கனா உடனே பிடிச்சிட்டுப் போய் கட்டாய ஆப்ரேஷன் செஞ்சி மூக்கு ஓட்டைய அடைச்சிருவாங்களாம்… எந்தச் சலுகையும் இல்லயாம்… சூழ்நிலைய புரிஞ்சிக்கிட்டு ஒத்துப்போறதுதானே சாமர்த்தியம்… நியாயம்…?” என்று முரளி சொன்னதும் நாமே விரும்பி அறுவை சிகிச்சை செய்து கொண்டது பரவாயில்லை என்று தோன்றியது.

“மாணிக்கம் செத்துட்டாராம்… செய்தி வந்துச்சி…” என்று எனக்கு மட்டும் கேட்கும்படியான குரலில் முரளி முணுமுணுத்தான். மேல்மாடியில் இருந்த மாணிக்கத்தின் குடும்பத்திலுள்ளவர்கள் அனைவரும் ஒவ்வொருவராக இறந்து அவர் மட்டும் மேலும் சில மாதங்கள் தாக்கு பிடித்தார். முன்பு மல்யுத்த வீரரான அவர் எப்பொழுதும் திடமான உடலும் முரட்டுப் பாவனையும் கொண்டிருப்பார். நகரத்தில் ‘ஆக்சிஜென்’ சிக்கல் வந்த அடுத்த மாதமே மனைவியைப் பறிக்கொடுத்த பின் மெல்ல உடைந்து உடல் மெலிந்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறினார்.

எப்பொழுதும் அச்சத்தில் வாழ்ந்து வீட்டை விட்டு வெளிவராமல் அனைவரையும் அறைக்குள்ளே பூட்டி வைத்ததுதான் அவர் செய்த பெரிய தவறு. காற்று குறைவால் மூளை மெதுவாகப் பலவீனமாகி, நுரையீரல் செயலிழந்து ஒவ்வொருவராக இறந்தனர். கடைசியாக, அவரைப் ‘காற்று பாதுகாப்பு மையத்திற்குக்’ கொண்டு சென்று முடிந்தவரை உயிர்வளியைச் செலுத்தினர். உடலுக்கும் மூளைக்கும் தேவையான காற்று புகுந்தும் அவர் மனத்திற்குள் ஏற்பட்ட இடைவெளியில் தங்கியிருந்த உயிர் பயத்தை வெளியேற்றவே முடியவில்லை. மூச்சுத் திணறலுக்குள் தன்னை முற்றிலுமாகப் பூட்டிக்கொண்டார். கடைசிவரை யார் சொல்லியும் அவரால் அதிலிருந்து வெளிவர முடியவில்லை. காற்று இருப்பதாக எவ்வளவோ அவரை நம்ப வைக்க முயன்றனர். காற்றில்லை என்கிற உயிர் பயம் பூதாகரமாய் அவரின் மூளைக்குள் ஓர் உயிரியாகப் புகுந்திருந்தது.

“நமக்கும் அப்படி ஒரு நிலை வருமாடா? இப்ப காத்து இருக்குத்தானே?” என்றவாறு கைகளை இரு பக்கமும் வீசினேன். ஒன்றுமற்ற ஒரு வெளிக்குள் கைகள் அசைந்து கொண்டிருப்பதைப் போன்று தோன்றியது. வீட்டில் இருந்த பொருள்களில் எந்த அசைவும் இல்லை. அப்படியே கீழே குதிக்கும்போதாவது காற்று நம்மை உரசும் அல்லவா? சட்டென மனத்தைச் சாந்தப்படுத்தினேன். எண்ணங்களின் உறுமல் எப்பொழுது வேண்டுமென்றாலும் விகாரமாகிப் பாயலாம் என்பதைப் போல இருந்தது. இப்பொழுது மனத்தைக் கட்டுப்படுத்தி நம் வசத்திற்குள் கொண்டு வந்தால் மட்டுமே உயிர் வாழ முடியும்.

“இதுக்குலாம் என்ன காரணம்? நம்ம ஏன் இதை அனுபவிக்கறோம்?” என்று வெளியை நோக்கிக் கத்த முயன்று வார்த்தைகள் வாயைவிட்டு வெகுதூரம்கூடப் போக முடியாமல் தடுமாறி சிதறின. எதிரே இருந்த கட்டிடத்தின் உடைந்த கண்ணாடிகள் வழியாக இரத்தக் கறையுடன் ஒரு குரங்கு வெளியேறிச் சட்டென எங்கோ தாவிச் சென்றது.

முரளி அருகில் வந்து என் மூக்கை நீவிவிட்டான். மூக்கை அன்பாக நீவுவது ஒரு மிகப் பெரிய நன்னெறிப் பண்பாகக் கற்றுக்கொடுக்கப்பட்டிருந்தது. அடுத்தவனுக்குச் செய்யும் மிகப் பெரிய தொண்டில் முதலிடம் காற்று இருப்பதாக நம்ப வைப்பது. அடுத்து, மூக்கை நீவி அடுத்தவரைச் சமாதானப்படுத்துவது. “அப்படில்லாம் நடக்காது நண்பா… அமைதி…அமைதி… நீயும் நானும் உயிரோட இருக்கோம்… நம்பு…” என்றான். மூக்கு அறுவை சிகிச்சைக்குப் பின் இப்படித்தான் தோன்றும் என்றும் விளக்கினான். மீண்டும் நகரத்தின் முடுக்குகளைக் கவனித்தேன். நீரோடையில் செத்து மிதந்து கொண்டிருந்த பூனை, நாய், எலிகளை ஒரு தொழிலாளி அகற்றிக் கொண்டிருந்தார். இலேசாக மூச்சிரைப்பதைப் போலத் தோன்றியதும் கவனத்தை மீண்டும் வீட்டிற்குள் கொண்டு வந்தேன்.

தொலைகாட்சியில் வழக்கம்போல மரணச் செய்திகள். நடுக்கம் ஒரு சிலந்தியைப் போன்று. தனது எட்டுக் கால்களையும் அகலப் பரப்பிச் சட்டென அகத்திற்குள் பாய்ந்தோடுகிறது. இரு தொடைகளைக் குறுக்கி உட்கார்ந்து கொண்டேன். மூச்சிரைப்பில் ஏற்படும் இலேசான ஏற்றம்கூட ஆபத்தானது என்று மருத்துவர்கள் பலமுறை எச்சரித்தார்கள். “சுரேஸ்… உங்க மூக்குல ஒரு துவாரம்தான்… செத்துருவேனோனு பயப்படாதீங்க. ஒரு துவாரத்தோட இன்னும் பல வருசம் நீங்க வாழ முடியும். மூக்கை அந்த மாதிரிதான் வடிவமைச்சிருக்கோம். தும்மல் வராது… சளி பிடிக்காது… தூசி உள்ள போவாது… நீங்க கவலையே படக்கூடாது. மூச்சிரைப்பு வர்ற மாதிரி நீங்க எதையும் செய்யக்கூடாது… அது போதும்,” என்று கூறிவிட்டு ஒரு பட்டியலும் தரப்பட்டது. அதைப் படித்துவிட்டு நான் கையொப்பமும் இட வேண்டும். அதற்கு அப்பாற்பட்டு நான் அந்த நிபந்தனைகளை மீறினால் என் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்றும் உடனடியாக ஒரு தனியார் அமைப்பின் வழியாகக் கைது செய்யப்படலாம் என்றும் கூறப்பட்டது.

பட்டியலில் முதலில் இருந்தது ஒரு நாளில் என்னைப் போலப் பொது ஆட்கள் பேச வேண்டிய மொத்த சொற்கள் இருநூறு மட்டும்தான். ஆசிரியர்களுக்கும் வழக்கறிஞர்களுக்கும் இன்னும் சில பொது சேவை துறையினருக்கும் ஐநூறு சொற்கள் வரை கூடுதல் சலுகை இருந்தது. அதற்கு மீறிப் பேசினால் தற்கொலைக்குச் சமம் என்றும் எச்சரித்துவிட்டார்கள். காற்றை ஒருபோதும் வீணடிக்கக்கூடாது என்பதே பிரதான விதிமுறை. மூச்சிரைக்கக்கூடிய நடவடிக்கைகள் முற்றிலுமாக தவிர்க்கப்பட்டன. மெதுவோட்டம், படி ஏறுதல், போட்டி விளையாட்டுகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டன. பொது இடங்களில் ‘ஓடாதீர், மூச்சு வாங்காதீர், மூச்சை இழுத்து விரையமாக்காதீர்’ என்கிற அறிவிப்புப் பலகைகள் ஆங்காங்கே ஒட்டப்பட்டு நிறைந்திருந்தன. எதையுமே அடக்கியாள வேண்டும் என்பதே எல்லோருக்கும் போதிக்கப்பட்டது. கவலை, மகிழ்ச்சி, அதிர்ச்சி, சிரிப்பு, அன்பு என அனைத்துமே முடிந்தவரை நிராகரிக்கப் பழக வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டன.

பாடத்திட்டத்திலிருந்து அன்புடைமை, பரிவுடைமை, உயிரை நேசித்தல், மகிழ்ச்சி, உடற்பயிற்சி போன்ற அனைத்துமே நீக்கப்பட்டு, அமைதி, சாந்தம், தியானம், பொறுமை, நாட்டை நேசித்தல், தியாக மனப்பான்மை போன்றவையே பாடங்களாக நிலைநிறுத்தப்பட்டன. வீங்கியிருந்த கால் முட்டிகளை ஒருமுறை தடவினேன். அப்பாவுடன் உடும்பு வேட்டைக்காகக் கம்பத்தில் ஓடித்திரிந்த நாட்கள் நெஞ்சை அடைத்தன. அடியெடுத்துக் கவனமாக நடத்தல் என்பதே சில வருடங்கள் நான் செய்து கொண்டிருக்கும் ஆக வேகமான நடவடிக்கை.

“முரளி…” என்றதும் அவன் உடனே பேசக்கூடாது என்று ஆட்காட்டி விரலை உதட்டின் மையத்தில் குவித்திச் செய்கை காட்டினான். இன்றைய இறுநூறு சொற்கள் பேசித் தீர்ந்துவிட்டன. இனி வாயைத் திறந்தால் காற்று வீணடிக்கப்படும். வாயைத் திறந்து மூச்சு விட்டாலோ அல்லது கத்தினாலோ உடனே தகவல் காற்றுப் பாதுகாப்பு மையத்திற்குச் சென்றுவிடும். உடனே கைது ஆணையும் பிறப்பிக்கப்படலாம். மூச்சிரைப்பு அதிகமாகலாம் என்று பயம் உருவானதும் அமைதியானேன். சொற்களை மனத்திற்குள் வைத்துப் பூட்டுவதற்குரிய திறன் எனக்கில்லை. யாரிடமாவது சொல்லிவிட வேண்டும் என்று துடிக்கும் இயல்புள்ள எனக்கு முதன்முதலாகச் சொல்லப்படாத எத்தனையோ சொற்களைக் கொல்லத் தெரிந்தது. இனி நாளையும் அதற்கு மறுநாளும்கூட மனத்தில் மீந்திருக்கும் சொற்களைப் பற்றி நினைவுகள் வந்துவிடக்கூடாது. எண்ணங்கள் இல்லாமல் இருக்கும் பயிற்சிக்குப் போனால் சரியாகிவிடும் என்கிற நம்பிக்கையும் இருந்தது. முரளி அப்படித்தான் மாறிக் கொண்டிருந்தான். என் மூக்கை நீவுவது பிறகு மீண்டும் மீண்டும் அதே வார்த்தையை ஒப்புவிப்பதாக மட்டுமே காணப்பட்டான். “காத்து இருக்கு நம்பு!” என்று மட்டுமே சொல்லிச் சொல்லித் தன் இருநூறு சொற்களையும் முடித்துவிட்டு அமைதியாக உட்கார்ந்துவிட்டான்.

இனி நாங்கள் பேசினாலும் செய்கை மொழிதான். ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம். தொலைக்காட்சியில் ‘அவசர செய்தி’ மீண்டும் ஒளிப்பரப்பாகின. பூமியில் காற்றளவு இன்று இன்னும் 15% குறைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டது. உடனடியாக மனித ஆயுள் அளவு குறைக்கப்பட்டு மேலும் ஒரு இலட்சம் பேருக்கு மரணத் தண்டனை வழங்கப்படலாம் என்று ஆலோசித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. மெல்ல மூச்சிரைக்க வெற்றுச் சுவரைக் கவனித்தேன். அங்குக் காற்றாடியின் நிழல் சுழன்று அசைந்து மீண்டும் சுழல்வதாக ஒரு நினைப்பு. “காற்று இருக்கு, நம்பு!” என்று மேலெழ முயன்ற சொற்களை உள்ளுக்குள்ளே அடக்கினேன்.

“இவைகளுக்குப் பின்பு, பூமியின் நான்கு திசைகளிலும் நான்கு தூதர்கள் நின்று பூமியின்மேலாவது, சமூத்திரத்தின் மேலாவது, ஒரு மரத்தின் மேலாவது, காற்று படியாதபடிக்கு, பூமியின் நான்கு காற்றுகளையும் பிடித்திருக்கக் கண்டேன்” என்று பைபள் வசனத்தைக் கூறிவிட்டு ஜேம்ஸ் திடீரென முடிந்தவரை கத்தினான். அவனுடைய அப்பாவும் அம்மாவும் நாளை சுடப்படவிருக்கும் செய்தி அவனுடைய கைப்பேசியின் வாயிலாக மின்னஞ்சலில் வந்திருப்பதைப் படித்தேன். வந்த அழுகையையும் மூச்சிரப்பையும் ஒன்றுசேர அடக்கிவிட்டு எவ்வித உணர்வும் இல்லாமல் ஜேம்ஸ் சன்னல் வழியாக எகிறிக் கீழே குதிப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். எனதறையில் இப்பொழுது மேலும் கொஞ்சம் காற்று மிச்சப்படுத்தப்படுகிறது.

ஆக்கம்: கே.பாலமுருகன்

நன்றி: அரூ இதழ் 2020

சிறுகதை: கண்ணாடி

1

2004: காலை 11.15

உடைந்ததன் அடையாளமாய் வலது மேற்மூலையில் ஒரு வளைவு கோடு. அதற்கு நடுவில் அம்மாவின் சிவப்புப் பொட்டுகள். பின்னாளில் அதனைச் சுத்தம் செய்ய வேண்டும் என அமுதாவிற்குத் தோன்றவில்லை. பழைய பழுப்புநிற அலமாரிக்குச் சற்றும் பொருந்தாமல் ஆங்காங்கே திட்டுத் திட்டாய் பரவிக் கிடக்கும் வெண்மை பூத்த தோற்றதுடன் கண்ணாடி பலமில்லாமல் கதவோடு ஒட்டிக் கிடந்தது. நின்றால் இடுப்பளவு மட்டுமே காட்டும். அதிலும் சற்றே குனிந்துதான் முகத்தை நன்றாக உற்று நோக்க வேண்டியிருக்கும்.

அம்மாவின் அறைக்கு வரும்போதெல்லாம் அந்தக் கண்ணாடியில் நின்று அமுதா சிறிது நேரம் தன்னைப் பார்த்துக் கொள்வாள். அதன் முன்னே அப்படி நிற்கும்போது காலத்தைத் தாண்டிச் செல்லும் ஒரு போதையுணர்வு ஏற்படும். வீட்டுச் சுவர்கள் விரிந்து பலகை சுவர்களாக மாறி அம்மா வெளுத்தக் கைலியின் இடதுபுற மடிப்பை இழுத்து இடுப்பில் செருகிக் கொண்டு ஈரச் சட்டையுடன் அறைக்குள் நுழைவதைப் போன்று கற்பனை செய்து கொள்வாள். அம்மாவைக் காலம் இன்னமும் கரைக்காமல் சேமித்து வைத்திருப்பது போலவே அக்கண்ணாடி வித்தைக் காட்டிக் கொண்டிருந்தது.

இதே அறையின் கட்டிலில் தன்னைப் படுக்க வைத்துவிட்டு அரண்கள் போல இரண்டு நீண்ட தலையணைகளை இரண்டு பக்கங்களிலும் வைத்துவிட்டு பாட்டி வீட்டு வேலைகள் செய்ய வெளியே போகும்போது “அமுதா கண்ணாடிய பாருங்க… அம்மா வருவாங்க…” என்றுத்தான் பாட்டி சொல்லிவிட்டுப் போவார். அமுதாவின் நான்கு வயதுவரை அவள் இந்த அறைக்குள்தான் உறங்குவாள். சன்னலைத் திறந்து வைத்திருந்தால் வீசும் மெல்லிய காற்றுக்கே அலமாரியின் கதவு திறந்து கொள்ளும். அதை அம்மா காட்டும் விளையாட்டைப் போலவே அமுதா கண்டு இரசிப்பாள்.

கட்டிலின் காலோடு கட்டி வைக்கப்பட்ட சக்கர வண்டியை முடிந்த மட்டிலும் இழுத்துக் கொண்டு கண்ணாடிவரை சென்று அமுதா தனக்கு எதிரே தெரியும் தன் உருவத்தைச் சுரண்டிக் கொண்டே இருப்பாள். முகத்தைக் கண்ணாடியோடு ஒட்டி வைத்து நாக்கால் அதனைச் சுவைப்பாள். அமுதாவின் எச்சில் கண்ணாடியில் வலிந்து பின்னர் காய்ந்துவிடும்.

தனக்குப் பிடிக்காத விளையாட்டுப் பொருள்களை அவள் தூக்கி வீசும் இடமும் அந்தக் கண்ணாடிதான். வன்முறையின் உச்சத்தைக் காட்டும் இடம் கண்ணாடித்தான் எனக் குழந்தைகளும் தெரிந்து வைத்திருக்கிறார்கள் என பாட்டி நொந்து கொள்வார். வீட்டில் அப்பாவின் கோபம் உச்சம் செல்லும்போதெல்லாம் ஒரு கண்ணாடி பொருள் நிச்சயம் உடையும். அது கண்ணாடி குவளையோ அல்லது சாப்பாட்டுத் தட்டாகவோ இருக்கும். அமுதா தூக்கி வீசும் விளையாட்டுப் பொருள்கள் பலமில்லாமல் கண்ணாடியை மென்மையாகத் தொடுமே தவிர வேறெந்த பாதகத்தையும் உருவாக்கியதில்லை.

“அமுதா அந்தக் கண்ணாடி முன்ன நின்னு என்ன அழகு பார்த்துக்கிட்டு இருக்கீயா? வெளில வா… உங்கம்மா மாதிரி பண்ணாத… ஏதோ தாய் வீட்டு சீதனம் மாதிரி அந்த அலமாரிய கூடவே கொண்டு வந்துட்டா… நீயும் அத கட்டிக்கிட்டு அழாத…” பாட்டியின் வாடிக்கையான பிதற்றல். ஓய்ந்து முடிவதற்குள் அறையிலிருந்து வெளியேறவில்லை என்றால் அடுத்த வசைகளை அடுக்கித் தயாராக வைத்திருப்பார். அமுதா கோபத்துடன் வெளியில் வந்தாள். கால்களைத் தரையில் பலமாக அடித்துக் கொண்டே பாட்டியைக் கடந்து சென்றாள்.

“உன்ன என் தலையில கட்டிட்டு உங்கம்மா போய்ட்டா… இந்த வயசுல எனக்கு இது தேவையா?” பாட்டி புலம்பிக் கொண்டே நாற்காலியில் கால் மேல் காலிட்டுக் கொண்டு கையில் கொரில்லா பொம்மையை வைத்து ஆராய்ந்து கொண்டிருந்த தம்பியின் கால்களைத் தட்டிவிட்டாள்.

“ஒனக்கு இந்தப் பொம்மத்தான் ஒரு கேடு…!”

அமுதா வரவேற்பறைக்கு வந்து தொலைக்காட்சி பார்ப்பதைப் போல பாவனைக் காட்டிக் கொண்டிருந்தாள். வீட்டு வேலைகள் அனைத்தும் காலையிலேயே செய்து முடித்துவிட்டாள். அம்மாவின் அறையில் அப்பா ஒருமுறை காட்டிய பழைய புகைப்பட ஆல்பத்தைத் தேடித்தான் உள்ளே சென்றிருந்தாள். நாளை குடும்ப உறுப்பினர்கள் அடங்கிய மர வடிவத்திலான வரைப்படம் ஒன்றனை செய்து புறப்பாட ஆசிரியரிடம் அனுப்பியாக வேண்டும். மீண்டும் அம்மாவின் அறைக்குள் சென்றால் பாட்டி திட்டுவார். அமுதா குடும்ப மர வரைப்படத்தை வரைந்துவிட்டாள். அதில் புகைப்படங்களை ஒட்டியாக வேண்டும்.

அம்மா இறந்த பின்னர் அவருடைய அறைக்குள் அப்பாவும் செல்வதில்லை. அம்மாவின் நினைவுகள் அழுத்துகின்றன எனப் பயந்து ஒரு நாள் அறையிலிருந்து பதறியடித்துக் கொண்டு வந்துவிட்டார். அன்று முதல் அப்பா வரவேற்பறையில் மெத்தையைப் போட்டுப் படுத்துறங்க ஆரம்பித்துவிட்டார். அமுதாவும் பாட்டியும் மட்டும்தான் சில வருடங்கள் அங்குப் படுத்திருந்தனர். இரவில் அமுதா ஏதோ சில குரல்கள் கேட்பதாகச் சொல்லி அழத் தொடங்கிய பின்னர் அந்த அறை முழுவதுமாக அடைப்பட்டது.

“அம்மாவோட ஆவி இந்த வீட்டுல இருக்கா?” இந்தக் கேள்வியை அமுதாவிடம் தம்பிகள் கேட்காத நாள் இல்லை. அதைக் கேட்டு ஆரம்பத்தில் அமுதாவிற்குச் சந்தேகமும் பயமும் அடர்ந்திருந்தன. அதைக் கண்டுபிடிக்கலாம் என 20 சென் சில்லறை காசை வைத்துப் பேயை அழைக்கும் விளையாட்டை விளையாடி கொண்டிருந்தபோது பேய்க்குப் பதிலாக பாட்டியிடம் நடுமுதுகில் அடி வாங்கிய போதுதான் அமுதாவிற்குப் பேயும் இல்லை பிசாசும் இல்லை என்கிற தெளிவே பிறந்தது.

“கா, அந்த ரூம்புக்குப் போய் என்ன பண்ண? பேய் வெளையாட்டு வெளையாண்டீயா?”

ஐந்து வயதாகியும் இன்னும் பால் புட்டியை வாயில் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு பேசிய தம்பியின் கன்னத்தைக் கிள்ள வேண்டும் என மட்டுமே அமுதாவிற்குத் தோன்றியது. அவனிடம் வாதம் செய்ய அவள் விரும்பவில்லை. அம்மாவின் வாசமும் கண்ணீரும் அவளது மனத்திற்குள் எப்பொழுதும் ஒரு மாயையைப் போல பிசுபிசுத்துக் கொண்டே இருந்தன.

பாட்டி மதிய உணவிற்குப் பின்னர் உறங்கும் நேரம் வரும். அக்கணத்தில்தான் அம்மாவின் அறைக்குள் மீண்டும் நுழையத் திட்டமிட்டாள். கடிகார முள்கள் முட்டிகாலிட்டு ஆயாசமாக நகர்ந்து கொண்டிருந்தன. அதனைப் பொறுமையுடன் பார்த்துக் கொண்டிருக்க அமுதாவிற்கு இருப்புக் கொள்ளவில்லை.

“கா… பாட்டி தூங்கிட்டாங்க…”

மதிய உணவு கொடுத்த அரை மயக்கத்தில் தம்பி மறவாமல் அதனை ஒப்புவித்தான். சாப்பிட்ட களைப்பு அமுதாவிடமும் இருந்தது. எழுந்து பாட்டியின் மூச்சிரைப்பை கவனித்தாள். பாட்டி இரும்பும் போதெல்லாம் சட்டென விழித்துவிட்டுச் சுற்றும் முற்றும் பார்க்கும் பழக்கமுடையவர். பாட்டியின் குறட்டை ஒலி சமமான இரைப்பில் இருந்தால் அதுதான் பாதுகாப்பான தருணம் என அமுதாவிற்குத் தெரியும். மெல்ல அடியெடுத்து வைத்து அம்மாவின் அறைக்கதவைத் திறந்தாள். தம்பிகள் தொலைக்காட்சியில் கார்ட்டூன் உலகத்தில் உலாவிக் கொண்டிருந்தார்கள். அதில் ஒருவன் அப்படியே தரையிலேயே தூங்கிவிட்டிருந்தான்.

அமுதா அறையின் விளக்கைத் தட்டவில்லை. விளக்கு கொசு சத்தமிடுவதைப் போல கொய்ங்ங்ங் என்கிற ஒலியைக் கிளப்பிவிடும். அதனால் பாதி இருளுக்குள்ளே கட்டிலின் கீழே அடைத்துக் கொண்டிருந்த பெட்டிகளை மெதுவாக நகர்த்தினாள். பழைய புகைப்பட ஆல்பம் அதனுள் ஒரு பெட்டியில்தான் இருக்கும். தூசு மண்டியிருந்த பெட்டிகள் கட்டிலின் கீழ்ப்பகுதியில் சிலந்தி வலைகளுடன் உறவு கொண்டிருந்தன. அதனைக் கையில் உடைத்தெறிந்து பெட்டிகளை ஒவ்வொன்றாக அமுதா வெளியில் எடுத்தாள். பாசைகள் சில அலறியடித்துக் கொண்டு திக்குத் தெரியாமல் சிதறி ஓடின. அமுதா பாசைகளுக்குப் பயப்படமாட்டாள். அதைக் கையில் பிடித்துப் பதறாமல் தூக்கி தூரம் வீசும் துணிச்சல் உடையவள். ஒரு பன்னிரெண்டு வயது சிறுமியின் வயதைத் தாண்டிய அசாத்தியமான குணங்கள் அவளிடம் இருந்தன.

கடைசி பெட்டி வரைக்கும் கட்டிலுக்கடியின் இருளைத் துழாவி தேடிவிட்டாள். அந்த ஆல்பம் மட்டும் தென்படவே இல்லை. களைத்து அப்படியே கட்டிலின் தடுப்புப் பலகையில் சாய்ந்து கொண்டே அலமாரிக்கு மேலே பார்த்தாள். அது அம்மாவின் பழைய அலமாரி. மேலே சில மூட்டைகள் தெரிந்தன. அம்மூட்டைகளின் கணம் தாளாமல் அலமாரி பிதுங்கி திணறிக் கொண்டிருப்பது போலவே அமுதா நினைத்துக் கொண்டாள்.

‘ஒருவேள இந்த மூட்டைக்குள்ள இருக்குமோ?’ மனம் அப்படி நினைக்கத் தோன்றினாலும் திடீரென கண்ணாடியின் பக்கம் போக அமுதா தயங்கினாள். முதலிலிருந்து கண்ணாடி ஏதோ தண்ணீரின் மேற்பரப்பைப் போல அசைகிறதோ என அமுதா சந்தேகித்துக் கொண்டிருந்தாள். சற்று முன்பு தொலைக்காட்சியில் பார்த்த ‘நேசனல் ஜோகராப்பி’ கடல் சுறாவைப் பற்றியது. அதனால் என்னவோ கண்ணாடி நீரைப் போன்று அலம்புவதாக நினைத்துக் கொண்டாள்.

புகைப்பட ஆல்பம் எப்படியும் தேடியாக வேண்டும். வேறு வழித் தெரியவில்லை. அந்தப் புகைப்பட ஆல்பமில்தான் அம்மா மிகவும் அழகாகத் தெரிவார். வீட்டுச் சுவரில் இருக்கும் அம்மாவின் மாலையிட்டப் புகைப்படம் அவளுக்குப் பிடிப்பதில்லை. அதைப் பார்ப்பதையும் அவள் தவிர்த்துதான் வந்தாள். அவளுக்கு வேண்டியது அம்மாவின் இளமைக்காலப் படங்கள். அதுவும் அம்மா சிவப்புப் பொட்டு வைத்திருக்கும் படம் அவள் ஞாபகத்தில் அப்படியே இருக்கிறது. அப்பா ஒருமுறை காட்டியபோது அப்படத்தையும் அலமாரி கண்ணாடியின் கோடியிலுள்ள பொட்டுகளையும் அவளே உருவகித்துக் கொண்டாள்.

அறையில் இருந்த நாற்காலியை நகர்த்தி அலமாரியின் பக்கம் கொண்டு வந்தாள். நாற்காலி போட்ட சிறுமுனகலில் பாட்டியின் குறட்டை இரைப்பின் சத்தம் மாறியது. அடுத்து அவருக்கு விழிப்பு வரக்கூடும் எனப் பயந்தாள். அதற்குள் நாற்காலியில் ஏறி மூட்டையைத் தொட முயன்றாள். அவளது உயரம் போதவில்லை. கால் விரல்களை ஊன்றி குதிக்காலை நன்றாக உயர்த்தியும் எட்டவில்லை. மெல்ல அவளது கைகள் கண்ணாடியைத் தழுவிச் சென்றது.

2

இரவு 8.25

இரவு வரை அமுதாவை அனைவரும் தேடிக் களைத்துவிட்டனர். கடைசிவரை அவள் எங்குப் போனாள் என யாருக்குமே தெரியவில்லை. அக்கம் பக்கம், பக்கத்து லோரோங் வரை அமுதாவின் அப்பாவும் அவரின் நண்பர்களும் தேடியும் அவள் கிடைக்கவில்லை.

“அமுதா அக்கா அம்மா ரூம்புக்குள்ளத்தான் போனாங்க…” என்பது மட்டும்தான் தம்பியின் ஒரே வாக்குமூலமாக இருந்தது. அதை வைத்துக் கொண்டு எங்குத் தேடுவது எனக் குழப்பமாக இருந்தது. தம்பி சொன்னதை யாரும் கேட்டதாகத் தெரியவில்லை. அப்பா மட்டும் அறைக்குள் நுழைந்து தேடிப் பார்த்து வந்துவிட்டார்.

“வெளில போனுச்சான்னு தெரில… தூங்கிக்கிட்டே இருங்க… உங்கனாலத்தான்…!”

அப்பா பாட்டியைத் திட்டிக் கொண்டே காவல்நிலையத்திற்குக் கிளம்பினார். தம்பிகள் பயந்து அரண்டு நாற்காலியில் ஒன்றாக அமர்ந்திருந்தனர். அவர்களின் விழிகளில் பயம் உள்ளார்ந்து கண்ணீரை அனைக்கட்டி வைத்திருந்தது. அதற்குள் பக்கத்து வீட்டு மாரியம்மா அக்காளும் அங்கு வந்துவிட்டாள்.

“மா… நான் பையனுங்கள கூட்டிட்டுப் போறன்… நீங்க இருக்கற பதற்றத்துல இவனுங்க தொல்லையா இருப்பானுங்க…” மாரியம்மா அக்கா அவளுடைய பிள்ளைகள் மூவரையும் அழைத்துச் சென்றுவிட்டாள். வீடு மீண்டும் மௌனமானது.

பாட்டி அழுது சோர்ந்துவிட்டார். அவர் வயதுக்கு இத்தனை புலம்பல்களைத் தாங்கிக் கொள்ள சக்தி இல்லாமல் பலவீனமாக கைகள் நடுங்க அமர்ந்திருந்தார்.

“என்ன பெத்த மவ… எங்கடி போய்ட்டே… மகராசி… வந்துருடியம்மா… உங்கம்மா உன்ன பெத்துட்டுப் போய்ட்டா… நீயும் போய்றாதடி…”

பாட்டியின் புலம்பல் மீண்டும் முதல் கட்டத்திலிருந்து துவங்கியது. மாலை 3 மணியிலிருந்து அமுதா வீட்டில் இல்லாததை உணர்ந்த பாட்டி வீடு முழுவதும் தேடி அயர்ந்து அப்படியே அமர்ந்துவிட்டாள். அப்பொழுது புலம்பலைத் துவங்கியவள் இப்பொழுது ஓய்ந்து மீண்டும் தொடங்கிவிட்டாள். அமுதாவின் அந்த ஏக்கமிக்க கண்கள் பாட்டியைத் துன்புறுத்திக் கொண்டிருந்தன. வழக்கமாகவே அமுதாவின் கண்கள் அவளுடைய அம்மாவை நினைவுப்படுத்தும் வகையில் ஒரே மாதிரி தோற்றமுடையவை. ஏக்கமிகு கண்கள். சட்டென அக்கண்களைப் பார்க்கும் யாருக்குமே கோபம் இருந்தால்கூட உடனே காணாமலாக்கும் ஆற்றல் அக்கண்களுக்குள் இருந்தன. அதனால்தான் பக்கத்து வீட்டுப் பையன்களை அமுதாவிற்குப் பேச்சுத் துணையாக இருக்கும் என வளர்க்கக் கேட்டுக் கொண்டாள். தம்பிகள் மூவரும் அமுதாவின் சிறுவயதிலிருந்து உடன் வளர்ந்தவர்கள்.

“என் ராசாத்தி… போனதிசை எங்க… என்ன பெத்த என் தாயி எங்கன கெடந்து தவிக்கிறாளோ?”

ஏறக்குறைய நள்ளிரவை எட்டிக் கொண்டிருந்தது. காவல்நிலையம் சென்ற அப்பா இன்னும் வரவில்லை. பாட்டி கண்கொட்டாமல் வாசலையே பார்த்துக் கொண்டிருந்தாள். கண்களில் உறக்கம் நிலைக்கொள்ளவில்லை. அமுதா வந்துவிடுவாள் என வாசற்கதவையே கவனித்துக் கொண்டிருந்தார். வீட்டின் திடீர் மௌனம் அவளை மெல்ல தின்று கொண்டிருந்தது.

3

நள்ளிரவு 2.10

அவள் அம்மாவின் அறைக்கதவைத் திறந்து வெளியில் வந்தாள். பாட்டி வாசலை பார்த்தப்படியே அமர்ந்திருந்தார். உறக்கத்திற்கும் விழிப்பிற்கும் நடுவில் ஊசலாடிக் கொண்டிருந்தன அவரது கண்கள்.

“பாட்டி!”

அமுதாவின் குரல் போலவே சத்தம் வீட்டிற்குள்ளிருந்து வந்தபோது பாட்டி அதிர்ச்சியில் திகைத்தார். சத்தம் கேட்டத் திசைக்குத் தயக்கத்துடன் திரும்பினார்.

“யாரு அது? அமுதாவா?”

பாட்டி அமுதா கிடைத்துவிட்டாள் என மெல்ல எழுந்து ஆவேசத்துடன் அவளை நோக்கி ஓடினார். அவரின் மேல்துண்டு நழுவி தரையில் விழுந்தது.

அவளின் அருகில் சென்றதும் கண்கள் இருண்டிருப்பதைக் கண்டு சட்டென அதிர்ச்சியில் கைகளை உதறிக் கொண்டு பாட்டி தூக்கத்திலிருந்து எழுந்தார். வீட்டைச் சுற்றிலும் பார்த்தார். மௌனத்தைப் பூசி மெழுகியிருந்த வீடு யாருமற்ற அமைதியில் அப்படியே காட்சியளித்தது. அந்த இருண்ட கண்கள் மட்டுமே பாட்டியின் நினைவில் நிலைத்திருந்தது. மீண்டும் மெல்ல எழுந்து வாசலைப் பார்த்தார்.

4

1975

லெட்சுமணன் தாத்தா பழுப்புநிறத்தில் பளபளப்புடன் இருந்த ஒரு பலகை அலமாரியை வீட்டிற்குக் கொண்டு வந்தார். ஸ்காப்ரோ நான்கில் எல்லப்பன் குடும்பம் வீடு மாறி சுங்கைப்பட்டாணி பட்டணத்திற்குச் சென்றுவிட்டார்கள். சாவியைத் தாத்தாவிடம் கொடுத்து எந்தப் பொருள் வேண்டுமோ எடுத்துக் கொள் என்று சொல்லிவிட்டார்கள்.

வீட்டில் அம்பிகாவிற்கு ஒரு அலமாரி இல்லை. துணியை எல்லாம் சாப்பாட்டுத் தட்டுகள் வைக்கப் பயன்படுத்தும் ஒரு கம்பி அடுக்கில் வைத்துக் கொண்டிருந்தாள். தாத்தாவிற்கு அது வெகுநாளாகவே உறுத்தலாக இருந்தது. பெண் பிள்ளைகள் தன் உடைகளை ஒரு பாதுகாப்பான அவர்களுக்கே உரிய ஓர் இடத்தில் வைத்துக் கொள்வதே நல்லது என நினைத்துக் கொண்டிருந்தார்.

“இந்தாடியம்மா உனக்குன்னு இனி இந்த அலமாரித்தான்… பத்திரமா வச்சுக்கோ…”

அம்பிகா பூரித்துப் போனாள். இரண்டே கதவுகள் உடைய சிறிய அலமாரி ஆனாலும் நல்ல திடமான பலகை. சுற்றிலும் முனைகளில் பூத்தண்டுகள் வளைந்து நெளிந்து நடனமாடுவதைப் போன்ற தோற்றத்தில் பலகையிலேயே செதுக்கப்பட்டிருந்தது. தாத்தா சுத்தமாகத் துடைத்துக் கொண்டு வந்திருந்தார். வாசனை குண்டுகளின் வாடை மட்டும் அப்படியே நீங்காமல் இருந்தது. காலியான அலமாரியில் மேல் அடுக்கில் மட்டும் ஒரு வாசனை குண்டு மீந்திருந்தது. அம்பிகா அதனையெடுத்து மோந்து பார்த்தாள். அலமாரியின் முகத்திலேயே இருந்த அத்தனை நீளமான கண்ணாடியை அம்பிகா பார்த்ததே இல்லை. அதுவரை அம்மா வைத்திருந்த சிறிய கண்ணாடியைப் பலகை தடுப்பில் முட்டுக் கொடுத்து வைத்துத் தெரிந்தும் தெரியாமல் வித்தைக் காட்டும் தன் உருவத்தைப் பார்த்துப் பழகியவளுக்கு அதுவே முதன்முறையாக முழு உருவத்தையும் பார்க்கும் சந்தர்ப்பம் கிட்டியது. அணிந்திருந்த பாவாடை வரை காட்டி நின்ற அந்தக் கண்ணாடியை ஆச்சர்யத்துடன் பார்த்தாள். எட்டிச் சென்று சுழன்றாள். ஒரு தேவதையைப் போல காட்சியளித்த அவளை கண்கொட்டாமல் பார்த்து நின்றாள்.

அங்கிருந்து பின்னர் அவர்கள் வீடு மாறி லெபாய்மான் கம்பத்திற்கு வந்தபோதும் அம்பிகா அந்த அலமாரியை விடவில்லை. அவளது ஒவ்வொரு வயது உயர்விலும் அந்த அமலாரி புதுப்புது கோலங்கள் பூண்டு கொண்டிருந்தன. லெபாய்மான் கம்பத்திற்கு வந்ததும் அம்பிகாவிற்குத் தனியான ஓர் அறை கிடைத்தது. அவளுடைய உலகில் அவள் மட்டுமே இருந்தாள்.

அலமாரியில் இருந்த பொம்மை படங்களைச் சுரண்டியெடுத்து பூக்கள், அழகான ஜாடிகளின் ஸ்டீக்கர் படங்களை ஒட்டிக் கொண்டாள். பின்னர், இரவில் தனிமை பயத்தைப் போக்க விநாயகர், முருகர் என சாமிப் படங்களையும் ஒட்டிக் கொண்டாள். அலமாரியில் இருந்த கண்ணாடித்தான் அம்பிகாவின் இன்னொரு தோழி. நாள் முழுவதும் அந்தக் கண்ணாடியின் முன்நின்று தன் அழகை வர்ணித்துக் கொள்வாள். எல்லா பக்கங்களும் திரும்பி தன் உடலைத் தானே இரசித்துக் கொள்வாள். நெற்றியிலிருக்கும் பொட்டுகளை அந்தக் கண்ணாடியின் மேல்மூலையில் ஒட்டி அழகு பார்த்தாள்.

5

1993

அம்பிகா தன் வயிற்றை கண்ணாடியின் முன்நின்று தடவி பார்த்துக் கொண்டாள். இன்னும் சில நாள்களில் தனது தாய்மை பூரணமடையும் என்கிற துள்ளல் அவளுக்குள். திருமணமாகி மறுவருடமே உண்டான மகிழ்ச்சியான செய்தி. ஒவ்வொருநாளும் அதைக் கண்ணாடியின் முன்நின்று வயிற்றின் அளவு பெருக்கத்தைக் கொண்டு இரசித்துக் கொண்டிருந்தாள்.

“அத்த… சட்டைலாம் வாங்கணும்… டபுள் செலவா இருக்கும்…” எனப் பாட்டியிடம் சொல்லி அம்பிகா புலம்பும்போதெல்லாம் “உன் புருஷன் பெரிய மொதலாளி அப்படியே வாங்கிட்டு வந்து குவிச்சிருவான்…” என நொந்து சிரித்துக் கொள்வார்.

அன்றைய இரவு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் முன்புகூட கடைசியாக கண்ணாடியின் முன்நின்று தன்னைத் தானே பார்த்துக் கொண்டு அம்பிகா வேண்டிக் கொண்டாள். அதற்குள் பனிக்குடம் உடைந்து கதறி அழத் தொடங்கியவள் அப்படியே அலமாரியின் பக்கத்தில் அடிவயிற்றைப் பிடித்துக் கொண்டு அமர்ந்தவளை அப்பாத்தான் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

“அத்த வலி உயிரு போகுது…”

அம்பிகாவின் கடைசி வார்த்தை அது.

6

நள்ளிரவு 2.35

“மா… மா… ஏஞ்சிருங்க…”

அப்பா பாட்டியை எழுப்பி அமர வைத்தார். கண்கள் மங்கிப் போயிருந்தன. திறக்க முடியாமல் சிரமப்பட்டார்.

“என்னம்மா ஆச்சு? சாப்டாதனாலயா…?”

பாட்டி மயக்கத்தில் அப்படியே உறங்கிப் போயிருந்தார். சுவரோடு சாய்ந்து உட்கார்ந்ததால் தூக்கத்தில் அப்படியே சரிந்து தரையில் கிடந்தார்.

“டேய்… குமாரு… கனவுனு நெனைக்கறன்… அமுதாடா… அவ அம்மா மாதிரியே நின்றிருந்தா… அவள பாத்த மாதிரியே இருந்துச்சி…”

பாட்டியின் வார்த்தைகள் குழப்பமடைந்தன.

“மா… கனவு கண்டுட்டுக் கண்டதயும் உளறாதீங்க…”

பாட்டி உளறியப்படியே மீண்டும் பேச்சைத் தொடர்ந்தார்.

“டேய் அமுதாவ எதுக்கும் அந்த அலமாரிக்குள்ள போய் பாருடா…” எனக் கத்தினார்.

அப்பா அம்மாவின் அறைக்குள் நுழைந்து அந்தப் பழைய அலமாரியை மெல்ல திறந்தார். கண்ணாடி அதிர்ந்து முனகியது. அமுதா உள்ளே சுருண்டு ஒரு குழந்தையைப் போல படுத்திருந்தாள். இரவில் அறைக்குள் தேடும்போது அலமாரிக்குள் தேடாமல் விட்டதை எண்ணிக் கலவரமடைந்த மனத்துடன் விரைந்து கைத்தாங்கலாய் அமுதாவைத் தூக்கினார்.

-கே.பாலமுருகன்

வெண்பலகை மாணவர்களுக்காக/இளையோர்களுக்காக எழுதிய சிறுகதை.

சிறுகதை: மலிவு

“பா, நொண்டிக்காரன்…”

“மா, அப்படிச் சொல்லக்கூடாது…”,

“வேற எப்படிப்பா சொல்றது…?”

கயல்விழி சிறிய கால்வாயைக் கவனத்துடன் தாண்டும்போது அவளது கால்களில் சிறிய துள்ளல் தெரிந்தது.

“அவுங்கலாம் பாவம்…”

“நான் அவுங்கள வேற எப்படிக் கூப்டறதுன்னு கேட்டன்பா,”

நெற்றியில் கைவைத்து ஓரக்கண்களில் என்னைப் பார்த்தாள். கயல்விழி வளர்ந்து எனது இடுப்பளவைத் தாண்டி வந்துவிட்டதை ஆச்சரியத்துடன் பார்த்தேன். தொலைக்காட்சி பார்க்கும்போது, புத்தகம் படித்துக் கொண்டிருக்கும்போது என அவள் கேட்கும் பல கேள்விகள் ஏற்கனவே அடர்ந்துவிட்ட வேலை அழுத்தங்களுக்கிடையே தலைக்கு மேல் கனத்துச் சுழல்கின்றன.

“அங்கவீனர்… உடல் ஊனமுற்றோர்னு சொல்லக்கூடாது… மாற்றுத்திறனாளிகள்… படிச்சதில்லையா?”

இரண்டு கைகளிலும் துண்டாக்கப்பட்ட கோழி இறைச்சிகள், காய்கறிகள் இருந்தன. அவள் தக்காளி இருந்த பையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருந்தாள். விரல்களில் பிடித்தால் தவறவிடலாம் என்கிற பயத்தில் பையின் பிடிநுனியைக் கைக்குள் விட்டு மணிக்கட்டில் ஏந்திக் கொண்டாள்.

“பா, ஏன் கஸ்த்தமான பேருலாம் சொல்றீங்க? அது நமக்கு நாம அவுங்கள பத்தி பேசும் போது பயன்படுத்திக்கலாம்… இப்ப நான் அவுங்ககிட்ட பேசப் போறன்னா எப்படிக் கூப்டறது?”

கேள்வியைத் தொடுக்கும் போதெல்லாம் அவளது புருவங்கள் மேலுயர்ந்து வலது நெற்றியில் தெரியும் சின்னஞ்சிறிய மச்சத்தைக் காணாமல் ஆக்கிவிடும். நெற்றிச் சுருக்கங்களிடையே அது காணாமல்போய் மீண்டும் தோன்றும். அதனை இரசித்துக் கொள்ள அவளது கேள்விகளைப் பொறுத்துக் கொள்ளலாம் என்று நினைப்பேன்.

“அங்கள்ன்னு கூப்டு… யாரா இருந்தா என்ன… அவுங்களும் மனுசாளுங்கத்தான…”

இருவரும் சந்தைக்கு எதிரிலுள்ள சீனக்கடையில் அமர்ந்து கொண்டோம். தீராத வெயில் தாகத்தையும் அசதியையும் உருவாக்கிவிட்டிருந்தது. நகரத்தை மடக்கி தன் கதகதப்பிற்குள் வைத்திருந்த பகல் பொழுதைக் கண்கொண்டு பார்க்க முடியவில்லை. முகமூடி மனிதர்கள் சந்தைக்குள் நுழைவதும் வெளியேறுவதுமாக பரப்பரத்துக் கொண்டிருந்தனர். சுகுனா இறால் வாங்கும் போராட்டத்திலிருந்து இன்னும் மீளவில்லை. பெரிய அளவு இறால் ஒரு கிலோ எப்படியும் 35 வெள்ளிக்குள்தான் என்று அங்கிருக்கும் மலாய்க்காரனிடம் வம்பிழுத்து முடித்துவிட்டு சுறா மீன் வேறு வாங்க வேண்டும் என்றிருக்கிறாள். எனக்கும் மீன்களுக்கும் வெகுதூரம். அதன் வீச்சத்தைத் தாங்கிக் கொள்ள முடியாது.

“பா… அந்த அங்கள் எவ்ள நேரம் அங்க நிப்பாரு…?”

வட்ட நாற்காலியைத் தரையில் வைத்து இழுத்துக் கொண்டே என்னருகில் நெருங்கி அமர்ந்து கொண்டாள். கடையில் இருந்தவர்கள் அச்சத்ததைக் கவனிக்கவில்லை. சத்தத்திற்குள் சத்தமாக அது கரைந்தது. இரண்டு சீன பாட்டிகள் மட்டும் சத்தமாகச் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர். அதில் ஒருவர் பிறகு சமைப்பதற்கான காய்கறிகளை வெட்டிக் கொண்டிருந்தார். அவருடைய மூக்கின் வலப்பக்கத்தில் கயல்விழிக்கு இருப்பதைவிட பெரிதான மச்சம் தென்பட்டது. கடையின் வெளித்தூணியில் செருகப்பட்டிருந்த ஊதுபத்தி அணைந்து வெறும் குச்சிகள் மட்டும் புகைந்து கொண்டிருந்தன.

“பா… சொல்லுங்க…”

“உன்ன அந்த மச்சக்காரக் கிழவிக்கிட்ட பிடிச்சிக் கொடுத்துட்டுப் போய்றட்டா?”

சிரிப்பாள் என்று நினைத்தேன். ஆனால், பார்வையை அந்தச் சந்தையின் வாயிலில் வெகுநேரம் ஒற்றைக் காலில் நின்றுகொண்டே கையில் நெகிழிக் குவளையை ஏந்திக் கொண்டிருப்பவரையே அவள் கவனித்துக் கலவரமடைந்து கொண்டிருந்தாள்.

“என்னம்மா இப்ப டென்ஷ்னா இருக்க?”

மீண்டும் புருவங்களை மேலுயர்த்தி அடுத்த கேள்வியை உள்ளுக்குள் உருவாக்கிக் கொண்டிருந்தாள்.

“பா, அவருக்கு எல்லோரும் காசு போடறாங்க… நீங்களும் அவர பாவம்னு சொன்னீங்க…”

“ஆமாம் மா… நம்மலாம் வேலை செஞ்சி சம்பாரிக்குறோம். அவுங்களுக்கு இப்படிக் கால் கை போய் வேலையும் இல்லாமல் அடுத்தவங்கக்கிட்ட பிச்சை எடுத்து வாழ்றாங்க… அதான் பாவம்…”

மீண்டும் மௌனமானாள். கயல்விழி தனது ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகளை வீட்டிற்குள் இருந்து கழித்துவிட்டாள். கோவிட் பெருந்தொற்றுக்குப் பயந்து அவளது ஒன்பதாவது வயது வீட்டுச் சுவர்களுக்குள்ளே தீர்ந்துவிட்டது. இப்பொழுதுதான் ஒன்றரை ஆண்டுக்குப் பின்னர் அவள் சந்தைக்கு வந்து மக்கள் கூட்டத்தைப் பார்க்கிறாள். அவளது கண்கள் விரிவதும் அடங்குவதுமாய் மாறிக் கொண்டிருப்பதைக் கவனிக்க முடிந்தது.

“பா, அவர பார்த்தா எனக்குப் பாவம் வரமாட்டுது… பாவம் மனசுல எப்படிப்பா வரும்…?”

“அது பாவம் இல்லடா… இரக்கம்… இப்ப கஷ்டப்படறவங்களா பார்த்தா நம்ம உதவி செய்றோம்ல… ஏன் செய்றோம்? நம்மக்கிட்ட இருக்கற இரக்கக்குணம்…”

“ஓ! அதான் இரக்கமா? அப்படின்னா நம்மகிட்ட இருக்கற இரக்கக்குணம் வெளில வரணும்னா யாராவது கால் இல்லாம கை இல்லாம வாழணும்தானப்பா?”

கேட்டுவிட்டு மீண்டும் கயல்விழி அந்தத் திசையையே கவனிக்கத் துவங்கினாள். எனக்குத் தொண்டை வரண்டிருந்தது. எதிரில் அமர்ந்திருந்த சீன வாலிபன் காப்பி ஐஸ் குடித்துக் கொண்டிருந்தான். சுகுனா வருவதற்குள் ஒரு மிடறு குளிர்ந்த நீரைத் தொண்டைக்குள் இறக்கினால் பரவாயில்லை என்று தோன்றியது.

“பா… உங்களத்தான் கேக்கறன்…”

“என்னம்மா? நீ இப்பத்தான மனுசாளுங்களையே பாக்கற? சும்மா தொண தொணன்னு…”

அன்றைய வெயில் கோபத்திற்குத் தாராளமாக உதவிக் கொண்டிருந்தது.

“பா, அவர பாருங்க… அவர்கிட்ட உள்ளதுல எதைப் பார்த்தா உங்களுக்கு மனசுல இரக்கம் வருது?”

எரிச்சலுடன் சந்தையின் வாசலில் வெகுநேரம் நின்று கொண்டிருந்த அவரைப் பார்த்தேன். ஒற்றைக் காலில் செருப்பில்லை. ஊன்றுகோல் ஆடாமல் அசையாமல் உடலோடு ஒட்டிவிட்டதைப் போல தென்பட்டது. மொத்த பாரத்தையும் அதில் இறக்கி அவரும் பல மணி நேரங்கள் அப்படியே நின்று கொண்டிருந்தார் என்று நினைக்கிறேன். கையில் பிடித்திருந்த நெகிழிக் குவளையில் ஈக்கள் மொய்த்துக் கொண்டிருந்தன. அதனை அவர் விரட்டவும் இல்லை.

“ஆமாமா… அவர பார்த்தா பாவமாத்தான் இருக்கு…”

“அவருக்கிட்ட எந்த எடத்துல பாவம் இருக்குப்பா… எனக்குத் தெரிலயே…”

“அவரோட அந்த ஒத்தக் கால்… அத பாரு… பாவம் இரக்கம் எல்லாம் வரும்…”

கயல்விழி அவருடைய ஒற்றைக் காலைக் கவனித்தாள். கறுத்து ஆங்காங்கே வெள்ளைப் பூத்ததைப் போல தெரிந்தது. முதலில் அவரை நெருக்கத்தில் கடக்கும்போது விரல் இடுக்குகளில் தெரிந்த காயத்தையும் நினைவுப்படுத்திக் கொண்டேன். கயல்விழியும் அதனை நினைத்திருக்கலாம்.

“பா, இருக்கற காலு மேல ஏன் பாவப்படணும்? அதான் இருக்கே…”

“சரி, அப்ப இல்லாத காலு மேல பாவப்படு…”

கயல்விழி மீண்டும் எதையோ யோசித்தாள். சுவரில் ஒட்டப்பட்டிருந்த ‘பார் குறியீடுகளை’ ஸ்கேன் செய்து போய்க்கொண்டிருப்பவர்களில் சிலர் மட்டும் எப்பொழுதாவது அவருக்கு ஒரு வெள்ளி நோட்டைப் போடுவதைக் கயல்விழி பார்த்துக் கொண்டிருந்தாள்.

“பா, பார்த்தாதான் இரக்கம் வரும்னு சொன்னீங்க… இல்லாத காலை எப்படிப்பா பார்க்கறது?”

தொண்டையில் இருந்த தாகம் இப்பொழுது மனம் வரை பரவியிருந்தது. சுகுனா வந்துவிட்டால் விடுதலை கிடைக்கும் என்பதுபோல் ஊன்றுகோலுடன் நிற்கும் அவரைத் தாண்டி கவனம் சென்றது. வாயிலில் வந்துநின்ற ஒரு லோரியிலிருந்து காய்கறி கூடைகள் இறக்கப்பட்டுக் கொண்டிருந்தன. மீன்களை மேசையில் அடுக்கி வைத்திருந்த சீனன் ஒருவன் பைக்குள்ளிருந்து பனிக்கட்டிகளை அதன் மீது கொட்டினான். அதன் குளிர்ந்த தன்மையை உடலெல்லாம் பரவவிட்டுப் பார்த்தேன். வெயிலுக்கு இதமான உணர்வைக் கிளர்ந்தது.

“மா, ரொம்ப ஆராய்ச்சி செய்யாத… அவருக்குக் கால் இல்லன்னுதான் எல்லாரும் இரக்கப்படறாங்க. புரியுதா? நம்மளுக்கு கடவுள் எல்லாத்தையும் கொடுத்துருக்காரு. அவருக்கு அது இல்ல… அதான்…”

“ஓ! சரிப்பா. நம்மக்கிட்டு இருக்கு அதனால நாம கடவுளுக்கு நன்றி சொல்லணும். எனக்குப் புரிஞ்சிருச்சிப்பா. கால் இல்லாததுக்கு அவர் நன்றி சொல்வாராப்பா?”

“நீ ரொம்ப மூளைய போட்டு அலட்டிக்கற… அவருக்கு ஏதாச்சம் விபத்தாயிருக்கலாம்… இல்ல சீக்கா இருக்கும்… அது ஏன் உனக்கு? நீ நல்லாருக்கியா… அதுக்குக் கடவுளுக்கு நன்றி சொல்லு…”

கயல்விழி தரையைக் கவனித்தாள். நாற்காலி உயரமாக இருந்ததால் எட்டாமல் அந்தரத்தில் ஆடிக் கொண்டிருக்கும் அவளுடைய கால்களைக் கவனித்தாள். சீனத்தி ஒருவள் தோளுறித்த கோழிகளைச் சுடுநீரில் முக்கி மீண்டும் எடுத்து வெட்டுக் கட்டையின் மீது வைத்தாள். நகரம் மீண்டும் பரப்பரப்பாகி கொண்டிருந்தது.

“பா, அவர் மேல எனக்கு இரக்கம் வந்துருச்சின்னு நான் எப்படிக் கண்டுபிடிக்கறது? அது என்ன செய்யும்? இரக்கம் வந்துட்டா மனசு எப்படி இருக்கும்?”

கயல்விழி தனக்குள் தன்னையும் தன் உலகையும் தேடிக் கொண்டிருக்கிறாள். அவள் கண்களில் அத்தனை அழுத்தம் தெரிந்தன. அவளுடைய பின்தலையைத் தடவிக் கொடுத்தேன். கண்களில் இன்னமும் ஆற்றமைத்தான் எஞ்சியிருந்தன.

“மா, அதையெல்லாம் கண்டுபிடிக்கற மிஷின்லாம் இன்னும் வரல… அவர பாரு… பார்க்கும்போது ஐயயோ அவருக்கு இப்படி ஆச்சே… கடவுளே அவர நீதான் காப்பாத்தணும்… அப்படின்னு உன் மனசு சொன்னுச்சின்னா அதான் இரக்கம்…”

கயல்விழி நெஞ்சில் கைவைத்துக் கொண்டே மீண்டும் அவரைப் பார்த்தாள். அவர் இப்பொழுது தனது ஊன்றுகோலிலிருந்து விடுபட்டு நொண்டியடித்துத் தரையில் இலாவகமாக அமர்ந்தார். ஒரு துணியை விரித்துக் காலை அதன்மேல் நீட்டிக் கொண்டார். பக்கத்தில் இருந்த ஒரு புட்டியிலிருந்து நீரைப் பருகினார். கயல்விழி ஒவ்வொருமுறையும் அவரைப் பார்க்கும்போது எனது கண்களும் அவரை நோக்கின.

“என்னமா செய்ற நெஞ்சில கை வச்சு?”

“இரக்கம் வருதான்னு பாக்கறன்பா…”

எனக்கு அது வேடிக்கையாக இருந்தது. சிரித்தால் அவள் வருத்தப்படுவாள் என்பதால் அவளுடைய நடவடிக்கையையே உற்றுக் கவனிப்பது போல பாவனையை மாற்றிக் கொண்டேன்.

“பா, இரக்கம் வந்துட்டா என்ன அறிகுறி காட்டும்?”

என்னால் அதற்குமேல் பொறுமைக்கொள்ள இயலவில்லை. அறிவியல் ஆராய்ச்சியைப் போன்று கயல்விழியின் கேள்விகள் நீண்டு கொண்டே இருந்தன.

“ம்ம்ம்… காய்ச்சல், இருமல் வரும்!!!” எனச் சொல்லிவிட்டு கடையைச் சுற்றி பார்வையை அலையவிட்டேன்.

“பா, அது கொரொனா வந்தாதானே வரும்… நான் கேக்கறது இரக்கம்… நீங்க சொன்னீங்களே…”

“பள்ளிக்கூடத்துல சொல்லிக் கொடுக்கலயா?” சமாளிக்க அடுத்த உத்திகளை நாடிச் செல்லத் துவங்கினேன்.

“டீச்சர் கூகள் மீட்ல சொன்னாங்க… நல்ல செயல்களுக்கு பச்சை வர்ணம் தீட்டுன்னு…ஓ, அப்படின்னா இரக்கம் பச்சை கலர்ல இருக்குமா?”

“ஹலோ, ஆச்சி… ஒரு மினரல் போத்த கொடுங்க…” என்று மலாய்மொழியில் கேட்டேன். காய்கறி வெட்டிக் கொண்டிருந்தவள் இழுத்துக் கட்டியும் நெற்றியில் கொத்தாக வந்து விழுந்து கொண்டிருந்த முடியைச் சரிசெய்துவிட்டு கடைக்குள் பார்த்துக் கத்தினாள். சட்டென்று ஒரு பையன் கையில் நீர்ப்புட்டியுடன் வந்தான். அரைக்காற்சட்டையும் பொத்தல் சட்டையும் அணிந்திருந்தான். உதட்டை வலதுபக்கம் பிதுக்கிக் கொண்டே என்னை நோக்கி ஓடி வந்தான். உதட்டில் எதையோ விளையாடிக் கொண்டிருந்தான். கடைக்குள் கூர்ந்து கவனித்தேன். தரையில் சில புத்தகங்களை விரித்து வைத்து எதையோ எழுதி கொண்டிருந்திருக்க வேண்டும். அவன் அமர்வதுக்கென்று சிறிய இடம் அங்குக் காலியாக இருந்தது. புட்டியைத் திறந்து தொண்டையை நனைத்துக் கொண்டேன். அதற்குள் சுகுனாவும் சந்தையைவிட்டு வெளியே கையில் ஒரு நெகிழிப் பையுடன் நிற்பது தெரிந்தது.

“அதோ பாரு அம்மா வராங்க…”

சுகுனா தரையில் அமர்ந்திருந்த அவரின் அருகே சென்று ஒரு வெள்ளி நோட்டை நெகிழிக் குவளையில் போட்டுவிட்டுச் சாலையைத் தாண்டி எங்களிடம் வந்து கொண்டிருந்தாள்.

“தோ பாரு… உங்க அம்மா இப்ப செஞ்சாங்களே… அதான் இரக்கம்… அவுங்கக்கிட்ட கேட்டுக்கோ…” அப்பொழுதுதான் மனத்தில் ஒரு நிம்மதி கிடைத்தது போல உணர்ந்தேன்.

சுகுனா வந்ததும் கயல்விழியின் தலையில் தடவிக் கொடுத்துவிட்டு அவள் கையில் வைத்திருந்த தக்காளி பையை வாங்கிக் கொண்டாள்.

“விட்டா ஏமாத்திருவானுங்க… காண்டா நண்டு வாங்கலாம்னு பாத்தன்… யானை வெலைக்கு விக்கறானுங்க… நம்ம வீட்டுக்கிட்ட இருக்கற சீனன் கடையில வாங்கிக்கலாம்…” உள்ளே சுகுனாவின் சந்தை போராட்டத்தின் காட்டம் இன்னமும் குறையாமல் அப்படியே பேச்சில் தெறித்தன. ஓரிரு நிமிடங்களாகவது சந்தை வாசம் வீசும்.

மூவரும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பழைய சாகா மகிழுந்தை நோக்கி நடக்கத் துவங்கினோம். கயல்விழி இப்பொழுது சுகுனாவின் கையைப் பிடித்துக் கொண்டாள்.

“மா, நீங்க இப்ப அவருக்கு ஏன் காசு போட்டீங்க?”

“பாவம்மா அவரு. கால் இல்ல… அதான்…”

சுகுனா கயல்விழியின் கையை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு நாலாப்பக்கமும் பார்த்துக் கொண்டே சாலையைக் கடந்தாள். அதுவரை தரையில் அமர்ந்திருந்தவர் மீண்டும் சுவர் தடுப்பின் துணைக்கொண்டு எழுந்து நின்று கொண்டார். ஊன்றுகோலுடன் நிற்பதுதான் அவருக்கு வருமானம். நல்லவேளை இதனைக் கயல்விழி பார்க்கவில்லை.

“அப்படின்னா உங்களுக்கு இரக்கம் வந்துச்சிதானம்மா…?”

“ஆமாம்டா… அதான் இரக்கம்…”

“ஓ! அப்படின்னா ஒரு வெள்ளிய கொடுத்தா அதான் இரக்கமா…? இப்ப புரியுதுமா… அப்பா என்னனவோ சொல்லி என்ன கொழப்பிட்டாரு…”

கயல்விழி சொன்னதை சுகுனா கேட்கவில்லை. அதற்குள் எனக்கும் ஓர் அழைப்பு வந்துவிட்டது.

-கே.பாலமுருகன்

சிறுகதை: அவன்

“அவன் வந்துட்டான் சார்… இன்னிக்கு யார கொல்லுவான்னு தெரில… அவன் ரொம்ப கருப்பா இருக்கான்… கண்ணுலாம் செவப்பா இருக்கு…”

சட்டென கபிலன் உறக்கத்திலிருந்து எழுந்து நாலாப்பக்கமும் சூழ்ந்திருக்கும் கருமை படிந்துபோன சுவரை வெறித்தான். இன்று அதிகாலையில் தனசேகரைத் தூக்கிலிட்டதால் புளோக் டி-யில் கைதிகள் பாடும் சத்தம் கேட்டது. அவன் இருக்கும் சிறைக்கு மேல்பகுதியில்தான் ப்ளோக் டி. அங்குத்தான் தூக்கிலிட அழைத்துச் செல்வார்கள். கபிலனின் சிறை எண் 15. இந்த அறையைத் தாண்டித்தான் மேல் புளோக்கிற்குச் செல்லப் படியில் ஏற வேண்டும். தூக்கிலிடும் அறைக்குப் பக்கத்து அறைக்கு நேற்று தனசேகரை அழைத்துச் செல்வதைப் பார்த்தான். மரண வாசலுக்குச் செல்லும் ஒவ்வொரு கைதிகளின் முகத்திலும் கலவரத்தைவிட அமைதியைத்தான் அதிகம் பார்த்திருக்கிறான். வாழ்தலின் மீதான அதீத வெறுப்பிற்குப் பிறகு உருவாகும் அமைதி அது. நேற்று கருப்புத் துணியில் மூடப்பட்டிருந்த தனசேகரின் முகத்தைக் கபிலனால் ஊகித்துக் கொள்ள முடிந்தது. எந்த ஆரவாரமும் இல்லாமல் அமைதியாக நடந்தான்.

அதீதமான இருள் ஒருவகையான வெப்பத்தை உள்ளுக்குள் உருவாக்கியப்படியே இருந்தது. மனவெப்பம் என்று சொல்லலாம். அந்த வெப்பமானது மெல்ல நெஞ்சிலிருந்து தலைக்கும் ஏறிக் கொண்டிருந்தது. ஆங்காங்கே ஒட்டடைகள் சூழ தரை முனையில் எறும்புகள் ஊர்ந்து கொண்டிருந்தன. கபிலன் தலைக்கு மேலே கவனித்தான். அந்தச் சுழற்சி இன்னும் உயிர்ப்புடன் சுவரைச் சுற்றி வட்டமிட்டப்படியே இருப்பதை அவனால் உணர முடிந்தது. கால்களைத் தரையில் வைக்க இயலவில்லை. பாதங்களிரண்டும் கணமாக இருந்தன.

அன்றுடன் அவன் சிறைக்கு வந்து மூன்று மாதங்கள் கடந்துவிட்டன. எப்பொழுதுதாவது வினோஜாவின் நினைவுகள் வந்துபோகும். கடைசியாக பார்த்த அவள் கண்களில் தெரிந்த உயிர் வாழ்தலின் மீதுள்ள அழுத்தமான பிடிப்பு அவனது சிந்தைக்குள்ளே தங்கிவிட்டது. எத்தனைமுறை உதறினாலும் அவள் மூளைக்குள் ஒரு பட்டாம்பூச்சியாய் பறந்து கொண்டிருக்கிறாள். எட்டடிக்கு வைத்தால் ஒரு அரைத்தடுப்பு. அதற்கு அப்பால் கழிவறை. எந்நேரமும் வீசும் வாடை நாசியில் ஒட்டிக் கொண்டு நிரந்திரமாக இம்சித்துக் கொண்டிருந்தது. இரவில்கூட எழுந்து கழுவிக் கொண்டிருப்பான். நீரை உள்ளங்கையில் அள்ளி ஊற்றுவான். ஏனோ அந்த வாடை மறையாது.

“சார்! அவன் செஞ்ச கொலைக்கு என்ன ஏன் சார் தண்டிச்சிங்க? அசந்துருக்கும் நேரம் பாத்து செண்டன்ஸ் போட்டுட்டீங்க சார்… அவன் ரெண்டு தடவ வினோஜாவ கொன்னான் சார்…”

கடந்த மூன்று மாதங்களும் கபிலன் பார்ப்பவர்களிடமெல்லாம் மறவாமல் உச்சரிக்கும் ஒரு வாக்கியம் அது. இம்மியும் பிசகாமல் வரிசை தவறாமல் உச்சரிப்பான். சொல்லப்போனால் அவன் அவ்வாக்கியத்தை மனனம் செய்ய சிரமப்பட்டதில்லை. நீதிமன்ற செவிமடுப்பிலெல்லாம் கபிலன் ஒன்றுமே மறுக்கவியலவில்லை. வினோஜாவின் கண்கள் அவனை ஆட்கொண்டிருந்தன. இறுதி மன்னிப்பு மனுவும் நிராகரிக்கப்பட்ட பின்னரே சிறைக்கு வந்து சேர்ந்தான். மற்றவையெல்லாம் குழப்பமாகவே இருந்தது. யாரையாவது பார்த்தால் அவன் வாய் இந்த வாக்கியத்தையே சொந்தமாக பேசிக் கொள்கிறது. அது செய்யும் முதல் வித்தை இந்த வாக்கியத்தைக் கொட்டி விடுவது.

“கழுத்துல கயிறு மாட்டற வரைக்குமே தனசேகர் பாடிக்கிட்டேதான் இருந்துருக்கான்…”

“அவனுக்குப் பிடிச்ச பாட்டுத்தானே…? நிலாவே வா… நில்லாமல் வா… நான் சிவப்புராணம்தான்…”

தனசேகர் 24ஆவது எண் கொண்ட சிறையில் இருந்தவன். காலையில் அவனைத்தான் தூக்கிலிட்டார்கள். நாள்தோறும் இளையராஜா பாடல்களைப் பாடியப்படியே பொழுதைக் கழித்தவன். வீட்டு விவகாரத்தில் மனைவியையும் மனைவியின் தம்பியையும் கொன்றுவிட்டு வந்தவன். பச்சை பலகை திறந்து வழிவிடும் சத்தம் சட்டென மேல் புளோக் அதிரக் கேட்கும். அது சாவுக்கான ஓசை. ஒருமுறை பெருங்காற்று வெடிப்பு அழுந்த வெளியேறி பரவும். கயிறு கழுத்தை நெருக்கியதும் கடைசி மூச்சுக் காற்றின் ஓசை. மனம் என்னவோ செய்யத் துவங்கியது. வந்ததிலிருந்து மூன்றுமுறை கேட்டுவிட்ட ஓசைகள் அவை.

“மேலயே சுத்திக்கிட்டு இருக்குடா… முடில!”

அவன் கபிலனிடம் சொன்ன கடைசி வாக்கியம் இது. இவ்விடத்தில் அந்த வாக்கியத்தை முழுவதுமாக கபிலன் அளவில் யாருமே புரிந்துகொள்ள இயலாது. மீண்டும் அவன் தலைக்கு மேல் பார்த்தான். அதே சுழற்சி கோபத்துடன் சுழன்று கொண்டிருந்தது.

“மச்சான் செண்டன்ஸ் கிடைச்சோனே செத்துறணும்… மாச கணக்கா வருச கணக்கா தூக்குக் கயிறுக்குக் காத்திருக்கறது இருக்கே… அதுக்கு சாவு எவ்ளவோ தேவலாம்…”

மீண்டும் தனசேகரின் குரல். பசுமையான மரணம் அது. நடந்து சில மணிநேரங்கள் மட்டுமே. கபிலன் மெல்ல கண்களை மூடினான். வெளியே உள்ள இருளுக்கும் உள்ளே தெரியும் இருளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. சிறைக் கம்பிகளை நகத்தால் கீறும் சத்தமும் கம்பிகளை உலுக்கும் சத்தமும் காதிற்கு சமீபத்தில் கேட்டது.

“ஏய்… செத்துருவம்டா… செத்துருவோம்… முடிலமா… அம்மா தாயே! காப்பாத்திரும்மா…”

எங்கோ தூரத்தில் ஏதோ ஒரு சிறைக்குள்ளிருந்து கேட்கும் சத்தமிது. விட்டுவிட்டு இப்படிப் பல குரல்கள் அவ்விடத்தின் சூன்யத்தை இசைத்துக் கொண்டே இருக்கும். சிறைக்கம்பியின் ஓரம் சாய்ந்துகொண்டே வலது கையை கம்பிக்கு வெளியில் தரையில் வைத்தான். எங்கோ காலடி சத்தங்கள் கேட்டுக் கொண்டே இருக்கின்றன. கண்கள் அப்படியே மயங்குகின்றன. காட்சிகள் பலகோணங்களுக்குப் பிளக்கின்றன. தூரத்தில் வினோஜா நடந்து வருகிறாள். அவள் தன் தலையைக் கையில் பிடித்திருக்கிறாள். சிறை இருளுக்குள்ளிருந்து மேலே பார்த்தேன். சுழற்சியில் சிவப்பு வர்ணம் சேர்ந்திருந்தது.

நீண்ட இருக்கையின் கோடியில் வினோஜாவின் அறுப்பட்டக் கழுத்துத் தொங்கிக் கொண்டிருந்தது இன்னமும் உயிர்ப்புடன் நினைவில் உள்ளது. இப்பொழுது வீட்டிற்குப் போனாலும் அவனால் அடையாளம் காட்ட முடியும். கபிலனும் வினோஜாவும் தொலைக்காட்சியில் சன் மியூசிக் பாடல் கேட்டுக் கொண்டிருந்தபோதுதான் அவன் உள்ளே வந்தான். அவன் வழக்கமாக வரும் நேரம் அல்ல அது. அவன் வரும்போது கபிலனால் அவனுடைய நெடியை அறிந்து கொள்ள முடியும். அது ஒரு வகையான சுருட்டு வாடை. அன்றும் அந்த நெடியை அவனால் மிக நெருக்கத்தில் உணர முடிந்தது. அவன் அப்படிச் சட்டென்று அவர்களிடையே நுழைவான் என்று கபிலன் எதிர்பார்க்காத நேரத்தில் கத்தியால் வினோஜாவின் கழுத்தைப் பதம் பார்த்தான். அவள் முற்றத்தை வெறித்தப்படியே தலையை கபிலனின் வலதுபக்க தோள்பட்டையில் சாய்த்திருந்ததால் அவனுக்குக் கழுத்தைக் குறிப்பார்க்க வசதியாக இருந்தது. இத்தனைக்கும் அவள் நேராகத்தான் அமர்ந்து கொண்டே அவளுடைய தொழிற்சாலைக்கு அணியும் சட்டையின் ஒரு பொத்தானைத் தைத்துக் கொண்டிருந்தாள். கபிலன்தான் அவளை வலுக்கட்டாயமாக தன் தோளின் மீது சரிய செய்தான்.

அவன் வாழ்க்கையில் இதுவரை கபிலன் அப்பேற்பட்ட பாவத்தைச் செய்ததே இல்லை. இப்பொழுதும் வினோஜாவின் கண்கள் அவனுக்குள்ளிருந்து அதை மட்டுமே மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கின்றன. அவனுடைய நடமாட்டம் இருப்பதை கபிலன் ஏன் எச்சரிக்கவில்லை அதனை ஒரு பொருட்டாக கருதவில்லை என்று அவள் கேள்விகளை உருவாக்கியபடியே இருக்கிறாள்.

“சார், என்னைக் கொன்னுற முடியுமா? கொஞ்சம் சொல்லுங்களென்…”

எதிரில் அப்படி யாரும் இல்லை. கபிலனின் வாய் சொந்தமாகவே யாரிடமோ பேசிக் கொண்டது. ஒருவேளை அந்த வரிகள் எப்பொழுதுதாவது யார் மனத்தையாவது தூண்டலாம்; அதன் வழி தனக்கு முன்னமே மரணம் நிகழலாம் என்று அவன் வாய்க்குத் தெரிந்திருக்கக்கூடும். காற்றில் கபிலனின் வாக்கியங்கள் குரல்கள் எப்பொழுதும் அலைந்து கொண்டே இருக்கின்றன.

பக்கத்து புளோக்கில் அடுத்த வாரம் தூக்கிலிடப்படப்போகும் ஒருவனுக்கு குர்ஆன் வாசிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. ஒரு பிரிவிற்கு பத்து அறைகள் எனப் பிரிக்கப்பட்டிருந்த சூன்யவெளிக்கு அப்பால் சதா குரல்களும் அழுகைகளும் கேட்டுக் கொண்டே இருக்கும். மரணம் என்கிற மகா உண்மையை எதிர்க்கொள்ள மனத்திடம் தேவை. தனசேகர் நேற்று தனது கடைசி சாப்பாட்டை நாவில் வைத்து ருசிக்கும்போது என்ன நினைத்திருப்பான்? மனம் சட்டென பதற்றம் கொண்டது. மீண்டும் கண்களை இறுக மூடினான். இருளுக்கு நமது இருப்பைத் தொலைக்கும் சக்தி உண்டு. கபிலன் தன் இருப்பைத் தொலைக்க நினைக்கிறான். தான் இங்கு இல்லை. தான் ஒரு கோவிலில் இருக்கிறேன் என்று நினைத்துக் கொண்டான். பூஜை நடந்து கொண்டிருக்கிறது. சாம்பிராணி வாசம் அவனைச் சூழ்கிறது. மணியடிக்கும் ஓசை எழுகிறது. அப்படியே பக்தியில் மூழ்கலாம்.

கபிலன் வேலை செய்யும் தொழிற்சாலையில் ஒரு ஆப்பரேட்டராகப் பணியைத் துவங்கியவள் வினோஜா. அடிக்கடி பார்ப்பவர்களின் மீது ஒரு மேலான கவனம் தோன்றும் தருணம் என்பது அதிசயமான நிகழ்வுதான். காலை 8.00 மணிக்குத் துவங்கும் வேலை 5.00 மணிக்கு முடியும்வரை இந்த மனம் நான்கு சுவருக்குள்ளே என்னவெல்லாம் கற்பனை செய்து கொள்கிறது. இதுதான் உலகம் என்கிற நிலைக்கு கவனம் குவிந்து சுருங்கியும் விடுகின்றது. அச்சிறிய உலகத்தினுள்ளே சதாநேரமும் அவன் கண்களுக்குள் வினோஜா அகப்பட்டுக் கொண்டே இருந்தாள்.

மீண்டும் வினோஜாவின் கண்கள் அவனுக்குள் விழித்துக் கொண்டு அவன் மனத்தையே கவனித்துக் கொண்டிருக்கின்றன.

“அவன் வருவான் சார்… அவன் ஒரு பேய் சார்… இரத்தம் பார்க்காம போவ மாட்டான்…”

அவனை தான் கொல்ல வேண்டும் எனப் புலம்பிக் கொண்டிருந்தான். கொன்றே ஆக வேண்டும். தனக்கு முன்னே அவனுடைய மரணத்தைப் பார்த்துவிட வேண்டும் எனத் துடித்தான். இது பழிவாங்கல் அல்ல; சமன்படுத்துதல். வினோஜாவின் கண்கள் அவனிடம் கேட்கும் கோரிக்கையும் அதுதான். அவன் நிச்சயம் இங்கு வருவான் என்று கபிலனால் ஊகிக்க முடிகிறது. சில நாள்களாக அந்தச் சுருட்டு வாடையை அவனால் ஓரளவிற்கு அறிய முடிகிறது. எங்கோ தூரத்திலிருந்து காற்றில் வீசியப்படியே இருக்கின்றது.

“சார், அவன் வந்தா சொல்லுங்க. என்னய பார்க்க வருவான். நான் இங்க படற கஷ்டம் அவனுக்குப் பெரிய மகிழ்ச்சி சார்… அவன் ஒரு கிறுக்கன்…”

எதிர் சிறையில் தெரிந்த உருவத்திடம் கபிலனின் வாய் பேசிக் கொண்டிருந்தது. நன்றாக உற்றுக் கவனித்தான். அச்சிறையின் மெல்லிய இருளில் யாரோ அமர்ந்திருப்பதைப் போன்றே தெரிந்தது. கபிலனின் அப்பாவின் உருவமேதான். தொப்பை வயிறும் தாடியும் சிவந்த கண்களும். நிச்சயமாக அப்பாத்தான். உடல் சுருங்கி மனம் படப்படத்தது.

“என்னடா எழவெடுத்தவன…ரொம்ப ஆட்டமா? அடிச்சி கால உடைக்கட்டா…?”

அதே குரல்; அதே தொனி. மனம் நடுங்கி சிறையிலேயே அழத் துவங்கினான். அவனையறியாமல் சிறுநீர் தரையில் வடிந்து ஓடிக் கொண்டிருந்தது. மீண்டும் உற்று நோக்கினான். அச்சிறை காலியாகத்தான் இருந்திருக்க வேண்டும். வாளியில் இருந்த நீரை அள்ளி தரையில் ஊற்றினான். மூத்திர நெடி எங்கும் பரவிக் கொண்டிருந்தது, மேலே, சுழல் உக்கிரமடைய துவங்கியது. நினைவுகளின் கோபம் அது. மீண்டும் ஒரு வாளி தண்ணீரைத் தரையில் ஊற்றியடித்தான்.

அச்சிறைக்குள்ளிருந்து அப்பா மீண்டும் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவருடைய பார்வையிலிருந்து தப்பிப்பது அத்தனை எளிதல்ல. ஒரு சாக்கில் அவனை நுழைத்து தலைக்கீழாகக் கட்டி வைத்து வாழை மட்டையில் அடிக்கும்போது அவர் உச்சரிக்கும் ஒரே சொல் “எழவெடுத்தவனே!” என்பது மட்டும்தான்.

“சார் எங்கப்பா அங்க இருக்காறா சார்? கொஞ்சம் பாத்து சொல்லுங்களேன்…”

“டேய்…வாய மூடுடா… பைத்தியக்கார ஆஸ்பித்திரிக்கு அனுப்ப வேண்டியத எல்லாம் இங்க கொண்டு வந்து போட்டுடானுங்க…முடிலடா மண்டைக்கு மணி அடிக்குது…”

பக்கத்து சிறையில் உள்ள ஜோன். தன் தங்கையைக் கொலை செய்துவிட்டு வந்தவன். கொலை தொடர்பான குற்றவுணர்ச்சி அவனுக்கும் உண்டு. அப்பொழுதெல்லாம் கபிலனிடம் சொல்லி அழுவான். அவன் கைகளைப் பிடித்துக் கொண்டு உன் தங்கையின் நினைவுகள் உன்னைச் சுற்றி வட்டமிட்டப்படியேத்தான் இருக்கும் என்று கபிலன் சொன்னதுண்டு. நீ அதனை நினைக்க நினைக்க அது குரூரமாக மாறும். பின்னர், அதுவே உன்னை நீ அழித்துக் கொள்ளத் தூண்டும் என்று பலமுறை அறிவுரைத்துவிட்டான். அவன் பிதற்றுவது தன் மீதான வெறுப்பை அல்ல என்பதை கபிலனால் உணர முடிகிறது. வினோஜாவின் நினைவுகள் தன் அறையைச் சுற்றி போட்டிருக்கும் வட்டம் இலேசான இரத்த நிறத்தில் சுழன்று கொண்டே இருப்பதை அவனால் மீண்டும் உணர முடிகின்றது.

“வினோஜாமா… நான் இல்லடா… நான் ஒன்னும் செய்யலடா… அவுங்கத்தான் நம்பல. நீயுமா என்ன நம்பல?”

தூரத்தில் அவன் வந்து கொண்டிருப்பதைக் கபிலனால் உணர முடிந்தது. சுருட்டு வாடை மெல்ல சிறையின் அறையைச் சூழ்ந்து கொண்டிருந்தது. வாளியின் நுனியை உடைத்து அதன் கூர்மையாக இருந்த கிழித் துண்டை எடுத்து தன் கையில் தயாராகப் பிடித்துக் கொண்டான். அப்பாவும் அவனும் சேர்ந்து இப்பொழுது கபிலனின் அறைக்குள் நுழையலாம் என யூகித்துக் கொண்டான். சுவரில் இருந்த சிறுநீர் வீச்சம் மண்டைக்குள் எதையோ செய்து கொண்டிருந்தது. மேலேயிருந்த வினோஜாவின் நினைவுகள் இப்பொழுது ஒரு பேரலைக்குத் தயாராகிக் கொண்டே இராட்சத வேகத்தில் சுழன்று கொண்டிருந்தன.

“வினோஜா… அன்னிக்கு நீ சொன்ன உனக்கும் அந்தப் பங்களாவுக்கும் கடன் பெரச்சன மட்டும்தான்… வேற எந்தத் தொடர்பும் இல்லன்னு… நான் நம்பனனா இல்லயா? எனக்கு அது மட்டும் சந்தேகமா குழப்பமா இருக்கு வினோஜா… அன்னிக்கு இன்னொரு ஆளோட நடமாட்டம் இருக்குன்னு நான் மட்டுமில்ல பிள்ள… பக்கத்து வீட்டுக்காரனும் சொன்னான… அத யாருமே நம்பலயே…” என்றவாறு கபிலன் எதிர் சிறையைக் கவனித்தான். ‘அவன்’ நின்று கொண்டிருந்தான்.

-கே.பாலமுருகன்

வெண்பலகை குழுவிற்காக எழுதப்பட்ட சிறுகதை.

சிறுகதை: கடைசி ஸ்பைடர்மேன் – வருடம் 2135

‘இந்த எடத்துல இப்ப ரெண்டு இனம்தான் மிச்சமா இருக்கு… வயசானவங்க… மிச்சபேரு ரொம்ப நாள் உயிர் வாழ முடியாத நோயாளிங்க…’

ஸ்பைடர்மேன் தாத்தா வெளியில் வந்து நின்றார். வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. எப்படியும் 50 செல்சியஸ் இருக்கும். வெட்டவெளி. தூரத்தில் காய்ந்து மக்கிப் போன ஒரு ரம்புத்தான் மரம் மட்டும் பெரிய கால்வாயின் ஓரம் குற்றுயிராய் அசைவில்லாமல் நின்று கொண்டிருந்தது. நேற்று முழுவதும் கடுமையான வெப்பக் காற்று வீசி ஓய்ந்ததன் மிச்சமாய் அவ்விடத்தின் அலங்கோலம் மேலும் கூடியிருந்தது. இடிந்து விழுந்த படிக்கட்டுச் சுவர்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. அருகில் இருந்த சிறிய காட்டின் வழியே கொடிகள் படர்ந்து இரண்டு புளோக்குகளின் மீதும் அடர்ந்து படர்ந்திருந்தன. நிதானமாக அடியெடுத்து வைத்து நடக்க வேண்டும். ஏ புளோக்கைத் தாங்கிப் பிடித்திருந்த தூண்களில் நீர் ஒழுகி காய்ந்து பாசி உருவாகியிருந்தது. சுற்றிலும் பார்வையைக் கவனமாகப் படர்விட்டுத் தாத்தா முன்னகர்ந்தார்.

சட்டென பார்த்தால் வெறும் ஸ்பைடர்மேன் உடை மட்டும் கொக்கியில் மாட்டி வைத்திருப்பதைப் போன்றே காட்சியளிக்கக்கூடிய வகையில் தாத்தா மெலிந்து காணப்பட்டார். இன்று பசிக்கு இரண்டு காய்ந்த ரொட்டி மட்டுமே. ஒவ்வொரு நாளும் உணவின் மீது தாத்தாவிற்கு அதீதமான கவனமும் பொறுப்பும் இருந்தது. அங்குலம் அங்குலமாக கணக்கிட்டுத் தினமும் சாப்பிட்டுவிட்டு ஆறாமல் உடலில் தகித்துக் கொண்டிருக்கும் பசி தணியும்வரை பொறுத்திருந்து பழகினார். பசியை உடலிலிருந்து அகற்ற இயலாது. ஆனால், அதனை மறக்க வைக்க மூளைக்குப் பயிற்சியளிக்க முடியும் என்று நம்பினார்.

“பூமிக்கும் வயசாச்சு எனக்கும் வயசாச்சு. ரெண்டு பேருமே சீக்குக் கோழிங்க…” என்றவாறு தாத்தா முணுமுணுத்துக் கொண்டார். பேச்சுத் துணைக்கு உடன் இருந்த பெரியசாமியும் ஒரு வாரத்திற்கு முன் நோய் முற்றி இறந்துபோனார். இந்த எட்டு மாதங்களைக் கடத்த பெரியசாமியின் துணை தாத்தாவிற்குப் பேருதவியாக இருந்தது. சதா பெரியசாமி பேசும் அனைத்தையும் கேட்டுக் கேட்டு உயிர் வாழ்ந்திட முடியும் எனும் அளவிற்கு அவருடைய வார்த்தைகள் உறுதியானவை. கண் முன்னே நிகழும் அத்தனைக்கும் ஒரு நண்பனின் ஆறுதல் வார்த்தை போதும், அதனைச் சிரித்துக் கடக்க. பெரியசாமி அப்படிப்பட்டவர்தான். ஏ புளோக்கின் மூன்றாவது மாடியில் இருந்தவரை அதுவரைக்கும் தாத்தாவிற்கு அறிமுகவே இல்லை. பெரும்பாலும் வயதானவர்கள் வீட்டிற்குள் முடக்கப்பட்டதன் விளைவு.

“பெரியசாமி! இந்நேரத்துக்கு நீ இருந்துறதா என்ன சொல்லியிருப்ப? போக்கத்தவனுங்க விட்டுப்போன பூமி… ஹா… ஹா…அப்படித்தான் இருக்குயா… நாசமா போச்சு…”

தாத்தா வானத்தைப் பார்த்து வணக்கம் வைத்துவிட்டுக் கண்களில் ஏற்பட்ட எரிச்சலைச் சமாதானப்படுத்தும் நோக்கில் உள்ளங்கையைக் கண்களில் வைத்து ஒத்தடம் கொடுப்பதைப் போல செய்தார். உடலில் உருவாகும் நோவை மருந்து கொண்டு நீக்கும் கட்டங்களைத் தாண்டிவிட்ட நிலையில் இப்படி ஏதாவது ஒரு வித்தையைச் செய்து உடலையும் உள்ளத்தையும் சமாதானப்படுத்தத் துவங்கி சில மாதங்கள் கடந்துவிட்டன.

அணிந்திருந்த ஸ்பைடர்மேன் உடையின் கால் பகுதியில் ஒரு சின்ன ஓட்டைத் தெரிந்தது. அது மேற்கொண்டு கிளிந்து பெரியதாக மாறுவதற்குள் அதனை அடைக்க வேண்டும் என்று தோன்றியது. வயத்தைக் குறைத்துக் காட்ட இந்த ஸ்பைடர்மேன் உடை அவருக்கு எப்பொழுதும் தேவைப்பட்டது. வயோதிகத்தை மறைத்து ஒரு பேராற்றலைக் கொடுக்கும் சக்தி அவ்வுடைக்கு இருப்பதாக தாத்தா நம்பினார். சுற்றிலும் காற்று மாசுப்பட்டு ஓலமிட்டுக் கொண்டிருந்தது. பாழ்பட்ட நிலத்தின் நெடி காற்றில் கலந்து வீசியது. பி புளோக்கின் வலது மூலையில் தெரிந்த கடைவரிசைக்குச் சென்றால் ஏதாவது கிடைக்கலாம் என்று மெல்ல நடக்கத் துவங்கினார். கால்களில் அவ்வளவாக வலுவில்லை. ஒவ்வொரு அடிக்குப் பின்பும் முட்டியிலிருந்து ஒரு வலி. எலும்பு தேய்ந்து எழுப்பிக் கொண்டிருக்கும் அசூசையாகக்கூட இருக்கலாம்.

“ஸ்பைடர்மேன் தாத்தா வந்தாராம்… கையிலு கயிறு விட்டாராம்… பூமிய ஆபத்துலேந்து காத்திட்டாராம்…”

தாத்தா, அப்புவோடு அவன் பயிலும் தனியார் பள்ளிக்குச் சென்று ஒருநாள் முழுவதும் காட்சிப் பொருளாக வித்தைகள் காட்டிய அன்றைய தினம் இன்னமும் அவர் மனத்தில் காட்சிகளாக மீண்டும் மீண்டும் ஓடிக் கொண்டிருந்தன. கடைசியாக அப்புவுடன் ஏற்பட்ட ஓர் இனிய நாள் அது.

“தாத்தா! நம்மளும் ஜுப்பிட்டருக்குப் போவமா? தாத்தா… நீங்க வந்தாதான் நான் போவன்… சரியா?”

தாத்தா ஸ்பைடர்மேன் உடையில் இருந்ததால் அதற்குத் தோதாக வலது கையை வான்நோக்கி நீட்டியவாறே, “நீங்க ரோக்கேட்ல போங்க…தாத்தா இப்படி கயித்தப் போட்டு அப்பறம் வந்துருவன்…” என்று செய்து காட்டினார். அப்பு கைகள் இரண்டையும் தட்டிக் கொண்டே குதித்தான். அந்ததொரு தருணம் அதன் பிறகு அப்புவை சிரித்த முகமாக தாத்தா பார்க்கவே இல்லை.

கடைத்தெருவில் நிறுத்தப்பட்டிருந்த மகிழுந்துகளில் பெரும்பாலும் வர்ணம் தெரியாத அளவிற்கு தூசு படிந்து மூடியிருந்தது. அதில் ஒரு மகிழுந்தின் கதவை யாரோ உடைத்துத் திறந்து எதையோ திருடியிருக்கலாம் என்பதைப் போல தெரிந்தது. பெரும்பாலான வீடுகள் காலி செய்யப்பட்டுவிட்டன. ஒன்றிரண்டு வீடுகளில் புற்றுநோயாளிகள் இருக்கக்கூடும் என்று தாத்தாவிற்குச் சந்தேகமும் இருந்தது. பசியில் செத்துக்கிடந்த பெரியசாமியின் வயிற்றுக் குடல்களைப் பிதுக்கியெடுத்த அவர்களில் ஒருவனின் குரூரமான கண்கள் இன்னமும் தாத்தாவின் மனத்தில் அவரின் பலவீனமடைந்து வரும் தேகத்தைக் கூர்மையாகப் பார்ப்பதைப் போன்று தோன்றியது. ஆகவே, பதுங்கியவாறே முன்னே தெரிந்த ஒரு கடைக்குள் நுழைந்தார். கண்ணாடிகள் உடைந்து பாழ்பட்டு மிச்சமாய் சில தேவைப்படாத பொருள்கள் மட்டும் மூலைகளில் பதுக்கப்பட்டிருந்தன.

“ஓடிப்போய்ட்டான் போல… பயந்தாங்கோலி…” என்று பிதற்றியவாறு அங்கிருந்து மூட்டைகளைப் பிரித்துப் பார்த்தார். பெரும்பாலும் துணிகள் மட்டுமே நிரம்பிக் கிடந்தன. அதிலிருந்து ஒரு துணியை உருவி அதனை நீளமாகக் கிழித்து எடுத்துக் கால் பகுதியில் ஓட்டையிருந்த இடத்தில் கட்டிக் கொண்டார். கால் எலும்புகளை ஏதோ பற்றிக்கொண்டதைப் போல ஒரு பிடிமானம் கிடைத்தது. அப்படியே சுவரோடு முதுகைச் சாய்த்துக் கொண்டார். வெற்றுச் சுவர் சில கிறுக்கல்கள் மட்டும் ஆங்காங்கே பளிச்சிட்டன.

“தாத்தா நீங்க எப்ப ஸ்பைடர்மேன் ஆனீங்க?”

“எனக்கு 40 வயசு இருக்கும். செஞ்ச வேலப் போச்சு. கம்பெனிய அடைச்சிட்டாங்க. முன்ன மாதிரி அரிசி, செம்பன, அன்னாசி… எந்த விளைச்சலும் சரியா இல்ல. சைம் டர்பி பல தோட்டங்கள அரசாங்கத்துகிட்டக் கொடுத்துட்டுப் போய்ட்டாங்க. மண்ணுக்குச் சீக்கு… என்னா பண்றதுனே தெரில…”

“ஐயோ! அப்புறம் என்னத்தான் செஞ்சிங்க தாத்தா…?”

“உங்க அப்பாவுக்கு அப்ப 8 வயசுதான் இருக்கும். உங்க பாட்டியயும் அப்பாவயும் கூட்டிக்கிட்டு பெனாங்குக்கு வந்து ‘ஸ்பீட்’ பேர்ரில வேல செஞ்சன்…”

“அது என்ன வேல தாத்தா?”

“அதுலாம் சொல்லக்கூடாது. அசிங்கம்…நாத்தம்… ஆனா… எனக்கு அப்பத்தான் இந்த ஸ்பைடர்மேன் ஐடியா கெடச்சது… பேர்ரிக்கு வெளில ஆளுங்க வந்து எறங்கி நடந்து டவுனுக்குப் போற பாதைல… ஸ்பைடர்மேன் உடுப்பெ போட்டுக்கிட்டு பொம்மைங்க வித்தன்…”

“வாவ்வ்வ்! பிள்ளைங்களுக்கெல்லாம் உங்கள பிடிச்சதா தாத்தா?”

“ஆமாம்… அப்போ ஸ்பைடர்மேன் கார்ட்டுன்லாம் நிண்டு பல வருசம் ஆயிருந்துச்சி…என் காலத்து வரைக்கும் ஸ்பைடர்மேன், சூப்பர்மேன்லாம் பழைய ஹிரோங்க… ஆனா பின்னால எல்லாம் ரோபோர்த்திக்தான்…அதனால நான் ஸ்பைடர்மேன் உடுப்புல நிண்டோன எல்லா பிள்ளைகளும் ரொம்ப சந்தோஷமா பார்த்துப் பிரமிச்சாங்க. அவுங்களோட ஆச்சரியம்… எனக்கு பிஸ்னஸ்…”

தாத்தா சொல்லி முடித்ததும் அவர் கண்கள் கலங்கியிருந்தன.

“யேன் தாத்தா அழறீங்க?”

“அந்த உடுப்புப் போட்டு நிண்டா பிள்ளைங்களுக்குப் பிடிக்கும்… ஆனா… அதுல கஷ்டமும் இருக்கு… நெனைச்சாலாம் ஒன்னுக்குப் போக முடியாது. ஜீப் பின்னால இருக்கும்… முழுசா கழட்டி வெளிய எடுத்துட்டுத்தான் பாத்ரூம்க்குப் போக முடியும்… அப்படியே அடக்கிக்கிட்டு இருக்கணும்… வேர்த்து வடியும்… சில ஆளுங்க எத்திட்டுப் போவாங்க…”

“நீங்கத்தான் ஸ்பைடர்மேன் ஆச்சே! அந்தக் கெட்டவங்கள அப்படியே கயித்த விட்டுக் கட்டிப்போட்டு அடிக்க வேண்டியதுதான?”

தாத்தா மெல்ல சிரித்துவிட்டு அப்புவைக் கட்டியணைத்துக் கொண்டது அவ்வெற்றுச் சுவரில் காட்சிகளாக விரிந்து தெரிந்து கொண்டிருந்தன. சூன்யம் மனத்தின் ஆழத்திலுள்ள அத்தனை காட்சிகளையும் உருவாக்கி வித்தை காட்டிக் கொண்டு அலைந்து திரிந்து கொண்டிருந்தது.சூன்யத்தை விட்டு அகல வேண்டும். இல்லையென்றால் ‘நொஸ்தோல்ஜியாவில்’ சிக்கிக் கொண்டு அழ வேண்டும் அல்லது சோர்வுற்று பலமற்று இங்கேயே காலத்தின் கால்களில் சிக்க ஒழிய வேண்டும். தம் கட்டி எழுந்து நின்றார். கடைக்கு வெளியில் வந்து நின்றதும் அங்கே வீட்டில் மீதமிருக்கும் உணவுகள் பற்றிய ஞாகபம். எப்படியும் இன்னும் இரண்டு நாள்கள் மட்டுமே தாங்கும். உணவைத் தேடி வேறு எங்காவது போக வேண்டும். அல்லது அடுத்த சில நாள்களில் மரணம் நிச்சயம். தண்ணீரைக் குடித்து மேற்கொண்டு வாழ வயதும் தெம்பும் இல்லை.

நோயாளிகள் பலரும் வெளியில் இன்னமும் திரிந்து கொண்டிருக்கலாம். என்னைப் போன்றவர்களை வேட்டையாட அவர்களுக்கு உடலில் போதுமான பலம் இருந்தது. பசியில் சாவதைக் காட்டிலும் கேவலமான ஒரு மரணம் அது. நிச்சயமாக அவர்களின் கண்ணில் படாமல் மீதி இருக்கும் நாள்களில் உணவுகள் போதுமான அளவு கிடைக்கும் வரை கடத்த வேண்டும். அதன்பின் பசியில் வாடி வதங்கி செத்துவிடலாம் என்கிற முடிவுடனே தாத்தா உலாவிக் கொண்டிருந்தார். உணவுத் தீர்ந்துவிடும் ஒரு கட்டத்தில் மனித சதைகள் பலியாகும்.

“முருகா! ஆறு படையில ஒரு படைக்கூடவா இல்ல எங்களக் காப்பாத்த?”

வெயில் முகத்தில் பளீர் என்று அறைந்தது.

அவ்வடுக்குமாடி வீடுகளில் பெரும்பாலான வீடுகள் உடைக்கப்பட்டுக் கொள்ளை யடிக்கப்பட்டிருந்தன. நாட்டிலிருந்து அவசரமாகச் சென்றவர்களும் வீட்டில் அப்படியொன்றையும் விட்டுப்போகவில்லை. சில விலையுயர்ந்த தொலைக்காட்சிகளும், வீட்டு உபயோகப் பொருள்களும் மட்டுமே எஞ்சியிருந்தன. அதையும் ஜுப்பிட்டருக்குக் கொண்டு போக முடியும் என்று யாராவது சொல்லியிருந்தால் கட்டியெடுத்துப் போயிருப்பார்கள் என்றே தாத்தாவிற்குத் தோன்றியது. உடைக்கப்பட்ட வீடுகளில் நுழைந்து தாத்தா தேடுவது உணவுப் பொருள்கள் மட்டுமே. சில வீடுகளில் குளிர்சாதனப் பெட்டிகளில் கிடைத்த பழங்களைச் சிலநாள்கள் தாத்தா வைத்திருந்து சாப்பிட்டார்.

ஜுருந்தோங் அடுக்குமாடி. தெருநாய்களின் குடியிருப்பாக மாறிப் போயிருந்தது. சிறுவர்கள் கத்திக் கொண்டே இரயிலோட்டியபடியே ஏ புளோக்கிலிருந்து பி புளோக்கிற்கு ஓடி படியில் ஏறி மறுமுனையிலுள்ள படியில் இறங்கியோடும்போது பலருடைய வீட்டில் அமைதி சீர்குலைந்து அவர்கள் பின்னர் புளோக்கின் தடுப்பு சுவரிலிருந்து எரிச்சல் கலந்த தகாத வார்த்தைகளில் கீழிருப்பவர்களிடம் கத்தும் சத்தம் இன்னமும் தாத்தாவிற்குக் கேட்பது போலவே தோன்றியது. காயப்போடப்பட்ட நீர் ஒழுகும் துணிகள், சுவர் விளிம்புகளை அலங்கரித்திருக்கும் பூச்செடிகள், அதிலிருந்து விட்டு விட்டு ஒழுகும் நீர்க்கோடுகள், படிக்கட்டுகளுக்குக் கீழே கட்டப்பட்டு நாள்தோறும் குரைத்துக் கொண்டே இருக்கும் நாய்களின் சத்தங்கள் என அனைத்துமே விரிந்து ஒருசேரக் காட்சியளித்து மறைந்தன. எட்டே மாதங்களில் எல்லோரும் தப்பித்தோம் பிழைத்தோம் என்று மன்றாடி அனுமதி பெற்று ஓடிவிட்டார்கள். இங்கிருந்தவர்களில் பாதிப்பேர் வேலையிழந்து மூடப்பட்டத் தொழிற்சாலைகளின் முதலாளிமார்களை எதிர்த்துப் போராடித் தோற்றவர்கள். அவர்களின் மனமும் பணமும் பலவீனமாகியிருந்த காலக்கட்டம். மூடப்பட்டுக் கொண்டிருந்த பலநூறு தொழிற்சாலைகள் அனைவருக்குமே அச்சத்தை ஏற்படுத்தின. கடைசியாக வந்த வாய்ப்பு இது. பூமியை விட்டு ஓடிவிட்டார்கள்.

ஜுருந்தோம் அடுக்குமாடியில் வசித்த மக்கள் 437ஆவது ஜுப்பிட்டர் காலணியத்தைச் சேர்ந்தவர்கள் என்று அப்புவின் அப்பா சொன்னதாக ஞாபகம். இன்னும் பத்து மாதங்களில் அவர்கள் அங்குச் சேர்ந்ததும் புதிய மண்ணில் கால் பதிப்பார்கள். ஸ்பைடர்மேன் தாத்தா அடுக்குமாடி படியில் ஏறி இன்னும் மிச்சம் இருக்கும் வீடுகளில் ஏதாவது கிடைக்குமா என்று தீவிரமாகத் தேடத் தயாரானார். முகம் களைத்துத் தொங்கிப் போயிருந்தது. இரு கண்களும் உள்ளே பதுங்கியிருந்தன.

“அந்தக் கருப்பு அரக்கனுக்கு மேல ஒரு வானம் இருக்குல… அதுதான் ஸ்படைர்மேன் தலைமையகம். எனக்கு அங்கேந்துதான் அழைப்பு வரும். அப்ப நான் அங்கப் போய்ட்டுப் பூமிய காப்பாத்தறதுக்கு அனுமதி வாங்குவன். அப்புறம் நீங்கலாம் போனோனே இங்க இருப்பவங்கள காப்பாத்திட்டு அப்புறம் நான் அங்க வந்துருவன்… சரியா?” அப்புவிற்காக சொல்லப்பட்ட ஆறுதல் வார்த்தைகளில் எத்தனை பொய்மைகள் என்று அவருடைய மனத்திற்கு மட்டுமே தெரியும். ஆழிருளுக்குள் அக்குரல்களை அப்புவின் நினைவுகளை அடக்கி மறைக்க வேண்டும். ஏனோ அவன் திரும்பி வருவான் என்று மேலுழும் ஆசைகளைக் கொல்ல வேண்டும்.

இரண்டு ‘மினரல்’ போத்தல்கள், ஐந்து ‘மேகி’ பொட்டலம், கெட்டழுகிவிட்ட சில ஆப்பிள் பழங்கள். நெஞ்சோடு அணைத்துக் கொண்டு தாத்தா புளோக்கிலிருந்து கீழறங்கினார். மேலே, காலடி சத்தங்கள் ஆக்ரோஷமாகக் கேட்கத் துவங்கின. சத்தம் நெருங்கி வருவது கேட்டதும் கீழுள்ள படிக்கட்டிற்குப் பின்னால் சென்று மறைந்து கொண்டார். புற்று நோயாளிகளின் தேடுதல் வேட்டையில் சிக்கிக் கொள்ளாமல் தப்பிக்க இதுபோன்ற படிக்கட்டுகள் பெரிதும் உதவின. பசி கொண்ட கண்களுடன் அவர்கள் சதைகளைத் தேடி அலசும்போதும் தப்பிக்க ஒரே வழி இவ்விருண்ட படிக்கட்டுகளுக்குக் கீழ்ப்பகுதிதான். ஏற்கனவே அங்குப் படுத்துச் சோர்ந்திருந்த நாய் ஒன்று தரையில் வைத்திருந்த தாடையை உயர்த்தி என்னைப் பார்த்துவிட்டு வேறு பக்கம் திரும்பிக் கொண்டது. அது பசியின் உச்சத்தில் இருந்து சோர்ந்திருக்கக்கூடும். அடுத்து தாத்தாவின் மீது பாய்ந்து அவர் வைத்திருக்கும் உணவுகளைப் பறிக்கக்கூடும். தாத்தா அவற்றை இடது தொடைக்குப் பக்கத்தில் வைத்து மறைத்தார்.

“நாய்ங்களுக்குப் பசி. வெறிப்பிடிச்சி நிக்குது. உன் சதையெ கடிச்சிக் கொதறனாலும் ஆச்சரியமில்ல… சட்டுனு மேல ஏறு…”

பெரியசாமி சொன்னதை இன்றளவும் தாத்தா கவனத்துடன் பின்பற்றுகிறார். நாய்களை நெருக்கத்தில் பார்ப்பதற்கான சந்தர்ப்பங்கள் இதுவரை உருவாகவில்லை. அதுவும் இப்பொழுது அவர் பக்கத்தில் இருக்கும் நாய் பி புளோக்கின் பீட்டர் என்பவர் வளர்த்த நாய். அவருக்கு மிகவும் பழக்கமானது. கீழே இறங்கி வரும்போதெல்லாம் அதனிடம் விளையாடிவிட்டுத்தான் தாத்தா வெளியில் போவார். பெரும்பாலும் கட்டிடத்தின் கீழே கட்டப்பட்டிருந்த நாய்களுக்கு பலரும் முதலாளிகளாகவே இருந்தார்கள். திருட்டும் போதைப்பித்தர்கள் நடமாட்டமும் அதிகம் இருந்ததால் நாய் வளர்க்க அனுமதித்த ஒரே அடுக்குமாடி குடியிருப்பு இது.

பீட்டரின் நாய் மெல்ல உருமத் துவங்கியது. தாத்தாவிற்குக் கால்கள் வெளவெளத்தன. அது சற்றே கோபத்தின் ஆழத்திலிருந்து நாய்கள் உறுமும் சத்தத்தின் முதல் ஒலி. மெல்ல அங்கிருந்து நகர எத்தனிக்கும்போது அங்கே சதைகள் சிதறிக் குதறப்பட்டிருந்த இன்னொரு நாயின் எலும்புக்கூட்டைக் கவனித்தார். அப்படியே நடுக்கத்தில் ஸ்தம்பித்து உட்கார்ந்தார். கண்கள் வேறு எங்குமே நகரவில்லை. அழுகிய வீச்சத்துடன் குதறப்பட்டுக் கிடக்கும் நாயின் எலும்புக்கூட்டையே பார்த்துக் கொண்டிருந்தார். 

“யேய்ய்ய்ய்! எங்க தாத்தா ஒரு கிரேட் ஸ்பைடர்மேன்…” என்று கூறிவிட்டு அப்பு கைத்தட்டுவது அவ்விருளில் சன்னமாகக் கேட்டது.

அப்புவின் கடைசியான பார்வையில் எத்தனை அழுத்தமான நம்பிக்கை? அன்றிரவு எல்லாம் சென்றவுடன் ஜுருந்தோங் அடுக்குமாடி அமைதியுடன் இருந்தது. சில வீடுகளில் எரிந்து கொண்டிருந்த விளக்குகள், சிறிய சலசலப்புகள் மீதமிருக்கும் வயதானவர்களை ஞாகபப்படுத்தின. மகன் வாங்கிக் கொடுத்துக் குவித்து வைத்திருந்த நெகிழி, புட்டி போன்றவற்றில் அடைக்கப்பட்டிருந்த உணவு சேகரிப்புகளைத் தாத்தா பார்த்தார். திதியின்போது படைக்க வேண்டிய அத்தனை உணவுகளையும் மகன் முன்னமே படைத்துவிட்டுப் போய்விட்டான் என்றே தோன்றியது. மௌனச் சிரிப்புடன் வீட்டிற்கு வெளியில் வந்து தடுப்புச் சுவரில் சாய்ந்தவாறே கீழே பார்த்தார்.

“ஸ்பைடர்மேன்! நம்மள விட்டு வைப்பானுங்கன்னு நெனைக்கிறயா? சாவறதுக்கு ரெடியாகு…” என்று கீழிருந்த மூன்றாவது மாடியிலிருந்து யாரோ கிழட்டுத் தொனியில் சொல்வது தாத்தாவிற்குக் கேட்டது. தாத்தா எக்கிப் பார்த்தார். பெரியசாமி என்கிற இன்னொரு கிழவன் பற்களில்லாத பொக்கை வாயில் சிரிப்பை உருவாக்கிக் கொண்டிருந்ததை தாத்தா மீண்டும் சிந்தித்துப் பார்த்தார்.

“நாயும் மனுசனும் இப்ப ஒரே புத்தியிலத்தான் இருக்கு… கவனம்… எல்லா திசையிலயும் உன் கண்ணு இருக்கணும்…” பெரியசாமியின் குரல் மீண்டும் உள்ளார்ந்து ஒலித்ததும் எச்சரிக்கை உணர்வு கூடியது. தாத்தா முணுமுணுத்துக் கொண்டே மெல்ல எழுந்தார். தலையின் வலது பக்கத்தைத் தட்டிக் கொண்டே அடுத்த புளோக்கிற்கு ஓடினார்.

வீட்டிற்குள் புகுந்ததும் கதவைச் சாத்திக் கொண்டார். அழுகிபோன ஆப்பிளில் ஏதாவது பகுதி உண்பதற்கு ஏதுவானதாக இருக்குமா என்று அலசி பார்த்தும் ஒன்றுமில்லை. அவ்வாப்பிள் முழுவதும் அழுகித்தான் போயிருந்தது. மெல்ல கடித்துத் தின்றார். மனித சதைக்கு மனம் ஏங்கும் தருணம் உண்டாகும் வரை கிடைப்பதைச் சாப்பிட்டாக வேண்டும். மனம் பசியின் உச்சத்தில் நாய்க்குச் சமானமாகிவிடும். சற்று முன்பு கேட்ட காற்றின் தனித்த ஓலம் மெல்ல அடங்கிப் போயிருந்தது.

‘உங்கள் ருசிக்குப் புதிய வகை பொறித்தக் கோழி…கே.எஃ.சி சிக்கன்… ஒருமுறை முயன்றால் பலமுறை தேடுவீர்கள். உங்கள் திருப்திக்கு நாங்கள் உத்தரவாதம்’ என்று அச்சிடப்பட்டிருந்த விளம்பரத் தாள் மேசையில் அப்படியே கிடந்தது. பல்லியின் முட்டை அதில் விழுந்து உடைந்திருந்த சிறிய அடையாளம் வலது மூலையில் தெரிந்தது.

“நான் உன்னெ என் பசிக்கான தீனியா பாக்கறத்துக்கு முன்னயோ இல்ல நீ என்னெ அப்படி பாக்கறதுக்கு முன்னயோ நம்ம இந்த பில்டிங்லேந்து விழுந்து செத்துக்கலாம்… எனக்கு இத்தன வயசு வரைக்குமே இப்படியொரு கூட்டாளி கெடைச்சது இல்லடா… ரிமேம்பர் திஸ்… ஐ எம் நோட் யோ சிக்கன்… ஓகே?” என்றவாறு பெரியசாமி சொல்லி சிரித்த தருணம் அங்கே இன்னமும் நிகழ்ந்து கொண்டிருப்பதைத் தாத்தா பார்த்தார்.

இந்த விளம்பரம் கிடைக்கப் பெற்ற நாளில் பெரியசாமி உடன் இருந்தது எத்தனை ஆறுதலானது. இல்லையென்றால் தாத்தா அவ்விளம்பரத் தாளைக் கடித்துக் குதறி ஒரு மிருகக்குணத்திற்குக்கூட போயிருப்பார். பெரியசாமியின் சமயோசிதமான வழிநடத்துதல் தாத்தாவை இத்தனை நாள் காப்பாற்றி வைத்திருந்ததை அவ்விளம்பரத் தாள் ஞாபகப்படுத்தியது.

செத்தொழியட்டும் என்று நோயாளிகளையும் வயதானவர்களையும் ஒன்றாகத் தூக்கி வீசிவிட்டப் பூமியில் என்ன நடந்திருக்கும் என்று அங்கே பல மாதங்களாக வேறொரு பூமிக்குப் பயணப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு என்னென்ன கற்பனைகள் உதித்திருக்கும்? சற்றும் குற்றவுணர்ச்சிகள் தாக்காதிருக்க அவர்கள் ஒரு கனவை உற்பத்தி செய்து கொண்டிருப்பார்கள். இங்கே வயதானவர்கள், நோயாளிகளைப் பார்த்துக் கொள்வதைப் போலவும் நோயாளிகள் தம்மால் முயன்றவரை உணவுகளைத் தேடிக் கொண்டு வந்து வயதானவர்களை உயிர் வாழ வைப்பது போலவும் அவர்கள் ஓர் உன்னத அன்பில் நிறைந்த, தங்களால் கைவிடப்பட்டப் பூமியைக் கற்பனை செய்து கொண்டே பயணித்துக் கொண்டிருப்பார்கள்.

கண்கள் இருளத் துவங்கின. எக்கிருந்தோ பறந்து வந்த கழுகு கட்டிடத்தை வட்டமிட்டு மேலும் உயரப் பறந்து மறைந்தது. பிணவாடைகள் அதனை ஈர்த்திருக்கலாம். தூரத்தில் யாரோ கத்துவதும் பின்னர் அழுது ஆர்ப்பரிப்பதும் கேட்டுக் கொண்டிருந்தது. எதையும் கூர்ந்து கேட்கும் மனநிலையில் தாத்தா இல்லை.

கெட்டுப்போன உணவுகளைச் சாப்பிட்டு வயிற்று உபாதைகளெல்லாம் பழகி போயிருந்தாலும் சில சமயம் உடல் எதிர்வினையாற்றும். அப்படியே சோர்ந்து கிடக்க வேண்டும். அடுத்து வாந்தி அல்லது பேதி உண்டாகும். அதன் பிறகு கொடுப்பனை இருந்தால் அடுத்த நாளைச் சந்திக்கலாம் என்று தாத்தாவிற்குத் தெரியும். பெரியசாமி தூரத்தில் வந்து நிற்பதைப் போன்று நிழல் உருவம் தென்பட்டது.

“சாமி… வந்துட்டீயா? என்னால முடியலயா… கூட்டிட்டுப் போய்ரு… எங்கயோ போய் சாவறதுக்கு உன் மடியில செத்துப் போய்ரேன்யா…”

தாத்தாவின் கண்களின் எரிச்சல் தாள முடியாத ஒரு நிலைக்குச் சென்றதும் கண்களை மூடிக் கொண்டார். மூக்கிலிருந்து நீர் வடியத் துவங்கியது. வயிற்றில் கடுமையான வலி. இறுகப் பற்றிக் கொண்டு அப்படியே உடலைக் குறுக்கினார். தூரத்தில் ஏதேதோ பேச்சொலிகள் கேட்கத் துவங்கின.

“தாத்தா… கயித்த விட்டு அங்க வந்துருங்க… மறந்துறாதீங்க…”

“ஜுப்பிட்டர் உங்களை அன்புடன் வரவேற்கிறது…”

“மொதல்ல தண்ணீ இருக்கறத கண்டு பிடிச்சானுங்க… அப்புறம் 50 வருசத்துல ஆளுங்க வாழ முடியும்னு கண்டுபிடிச்சானுங்க… இப்ப அங்கயும் போய் அதையும் அழிக்கலாம்னு முடிவெடுத்துட்டானுங்க… நாசமா போறவனுங்க…”

“ப்பா… நீங்க அங்க வரமுடியாதுனு ஒரு ரூல்ஸ் போட்டுருக்காங்க…”

“மிச்ச இருக்க நாள்கள சந்தோஷமா சுத்தமான சாப்பாட்டெ சாப்ட்டு இருக்கறவங்கக்கூட பேசிக்கிட்டு வாழ்ந்து சாகலாம்…”

“தெரியும்டா… வயசானவங்களும் நோயாளிகங்களும் அங்கப் போக முடியாது. அதானே? அதெல்லாம் செய்தியிலே நான் பார்த்துட்டன்… போடா…”

“ஸ்பைடர்மேன்? யாரு நீயா? டேய் கெழட்டுப் பயல… காலுலாம் நடுங்குது… இவரு ஸ்பைடர்மேனா?”

“எங்க தாத்தா ஒரு ஸ்பைடர்மேன்…தெரியுமா?”

“டென்ண்ட்டடைங்… நான் தான் பூமில இருக்கற கடைசி ஸ்பைடர்மேன். அப்பு ஜுப்பிட்டர் போயி ஒரு மாசத்துக்குள்ள அங்க நான் வருவன்…”

பேச்சொலிகள் அவரைச் சூழ்ந்து வட்டமிடத் துவங்கின. உடலை, மனத்தை, ஆன்மாவைச் சூழ்ந்திருந்த குரல்கள் ஒவ்வொன்றாகத் தப்பி வெளியேறிக் கொண்டிருந்தன. மகா சூன்யத்தின் பிடிக்குள் செல்வதைப் போல உலகம் திரண்டு வெறும் குரல்களாக மாறிக் கொண்டிருந்தன. அப்படியே மயக்கம் எங்கேயோ இழுத்துச் சென்று கொண்டிருந்தது. குரல்கள் புரியாத ஒரு மொழிக்கு மாறிக் கொண்டிருந்தன. அப்புவின் குரல் தூரத்தில் ஒலிக்கிறது.

இரண்டு முரட்டுக் கைகள் உடலை இழுத்துச் செல்வதைப் போன்று தாத்தா உணர்கிறார். நோயாளிகளாக இருக்கும். தன்னைப் பிடித்துவிட்டார்கள் என்று தாத்தா மனம் சோர்ந்தார். எதில் விழக்கூடாது; கொடூரமான சாவை நோக்கி போய்விடக்கூடாது என்று இத்தனை நாள் போராடினாரோ இப்பொழுது அதே சூழலுக்குள் தள்ளப்படவிருக்கிறார். உள்ளுக்குள்ளேயே அவருடைய வார்த்தைகள் இறுகிக் கொண்டன. வீட்டுக்கு வெளியில் வந்ததும் கட்டிடத்திலிருந்து கீழே அந்தரத்தில் இறக்கப்படுவதையும் தாத்தா உணர்ந்தார். பறப்பதைப் போன்ற ஓர் உணர்வு.

கண்களைத் திறக்க முயன்றார். கண்ணெரிச்சல் இமைகளைத் திறக்க விடாதப்படிக்கு அழுத்திக் கொண்டிருந்தது. சட்டென பளிச்சென்ற ஆயிரம் விளக்குகள் ஒன்றாக இணைந்து எரிவதைப் போன்ற ஓர் உணர்வை மூடியிருக்கும் கண்கள் கொடுத்தன. உடல் பரிப்பூரணம் அடைவதாக உணர்ந்தார். முட்டியில் இருந்த வலி முதற்கொண்டு அனைத்தும் குணமாகத் துவங்கியிருந்து போல உணர்ந்தார். கண் எரிச்சல் குறைந்து கொண்டிருந்தது. ஒருவேளை தான் இறந்துவிட்டேனோ என்றுகூட சிந்தித்தார். கண்களை மெல்லத் திறந்தார்.

எதிரில் நின்றிருந்த தலைப்பகுதி கணினியைப் போலவும் உடல் வட்ட வடிவில் நான்கு கால்களுடன் தென்பட்ட ஒன்று பேனாவைப் போன்றிருந்த லேசர் மூலம் அவரைப் பரிசோதித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தார். என்ன நடக்கிறது, தான் எதற்குள் இருக்கிறேன் என்றெல்லாம் சிந்திப்பதற்குள் அந்தக் கப்பல் வான்நோக்கி அதிவேகத்துடன் பறக்கத் துவங்கியது.

“ஜுப்பிட்டர் – 6 hours…Appu Calling…”

என அறிவித்துவிட்டு அசூர ஒலியுடன் மின்னல் வேகத்தில் அக்கப்பல் புறப்படுவதைப் போன்று தாத்தாவிற்குத் தோன்றியது. மனமெல்லாம் பூரிப்புடன் அப்படியே அந்தரத்தில் மிதப்பதைப் போன்று உணர்ந்தார். கைகளைப் பறவையைப் போல அசைத்தார்.

ஏ புளோக்கின் நான்காவது மாடியிலிருந்து தாத்தா தரையை நோக்கி விழ இன்னும் 50 மீட்டர் மட்டுமே இருந்தது. ஜுருந்தோங் அடுக்குமாடியில் இருந்த கடைசி மனிதன் ஒரு ஸ்பைடர்மேன் என்பது பூமியின் வரலாற்றில் எழுதக்கூட நாதியற்ற நிலம் அவரைத் தாங்கிப் பிடித்துத் தனக்குள் இழுத்துக் கொள்ளத் தயாராகக் காத்திருந்தது.

-ஆக்கம்: கே.பாலமுருகன்

சிறுகதை: பிளவு

அம்மா துரத்திக் கொண்டிருக்கிறார். தூரத்தில் தெரியும் கொய்யா மரத்தை அடைந்துவிட்டால் ஒரு நிழலுக்குள் பதுங்கிவிடலாம் என்று தோன்றியதில் மூச்சிரைக்க ஓடிக் கொண்டிருந்தேன். பின்னால் ஓடி வரும் அம்மாவின் உருவம் சிறுக பெருத்துக் கொண்டிருந்தது. கொய்யா மரம் மேலும் சிறுத்துத் தூரம் போய்க் கொண்டிருந்தது. காலம் ஒரு ரப்பர் மிட்டாயைப் போல நானிருந்த உலகத்தை இரு முனைகளில் இழுத்துக் கொண்டிருந்தது.

சட்டென ஒரு விழிப்பு. அதே கனவு. உடல் வியர்த்துக் கொட்டியிருந்தது. வழக்கம் போல கனவுக்குப் பிறகு உடல் வியர்த்திருப்பது நான் நிஜத்தில் ஓடியது போன்ற ஓர் உணர்வை அளித்தது. சுவரில் அப்பாவின் புகைப்படம். மேசையில் எரிந்து மங்கிப் போய்க்கொண்டிருந்த மேசை விளக்கு மட்டும் உயிரைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்தது. களைப்புடன் எழுந்து அவ்விளக்கை அடைத்தேன். உறக்கம் கண்களில் பசைப் போல ஒட்டிக் கொண்டிருந்தது. மீண்டும் படுக்கையில் சாய்ந்தேன்.

சில நிமிடங்களுக்குப் பின்னர் அறைக்கதவு மெதுவாகத் திறக்கப்படுகிறது. நான் படுத்திருக்கும் அறைக்குள் வந்தது அப்பாதான் என என்னால் கணிக்க முடிந்தது. அரைமயக்கத்தில் இருந்தேன். வெகுநேரம் உறங்க முடியாமல் தவித்து அப்பொழுதுதான் உறக்கத்திற்கும் விழிப்பிற்கும் இடையில் கண்கள் செருகிக் கொண்டிருந்தன. கதவை எப்பொழுதும் பூட்டித்தான் வைத்திருப்பேன். ஆனால், இன்று அறையில் இருந்த புட்டியில் தண்ணீர் தீர்ந்துவிட்டதால் வெளியே சென்று எடுத்து மீண்டும் வரும்போது கதவைப் பூட்ட மறந்துவிட்டேன். சன்னலும் அடைக்கப்பட்டிருந்ததால் வெளியில் ஒன்றுமே தென்படவுமில்லை. மயக்கம் சூழ படுக்கையில் கிடந்தேன்.

அறைக்கு வெளியே காற்றில் அசைந்தபடியே எரிந்து கொண்டிருந்த விளக்கின் ஒளியில் அப்பாவின் உருவம் சுவரில் வரைந்த இருட்டோவியத்தை யூகிக்க முடிந்தது. அவ்வுருவம் தயங்கியவாறே உள்நுழைந்ததன் உள்ளர்த்தமும் எனக்குப் புலப்பட்டது.

“நீ செத்துரு!” என்று அப்பா கதறியவாறே ஒரு கத்தியால் எங்கோ குறிவைத்து அது தப்பி என் தொடையைக் கீறியது. சதை பிளந்து இரத்தம் வடியத் துவங்கியது. சிரமப்பட்டு எழுந்து ஓட முயன்றேன். கால் கட்டிலின் விளிம்பில் மோதி கீழே விழுந்தேன். அப்பாவின் கண்களில் குரூரம் பெருகி சிவந்திருந்தன. அவரையறியாமல் வாயில் எச்சில் ஒழுக என்னைத் தீவிரத்துடன் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். அப்பா அடுத்து என் முதுகைக் குறி வைத்தார். இம்முறை முதுகின் வலதுபுறத்தைக் கத்தி பதம் பார்த்து அரை செண்டி மீட்டர் வரை கீழிறங்கியது. முதலில் இருந்த மயக்கம் இன்னமும் அதிகரித்து கவனத்தைச் சிதறடித்தது. வலி தலைவரை ஏறி நரம்புகள் புடைக்க அழுத்தியது.

கதவோரம் வேறு ஓர் உருவம் வந்து நின்றது நிழல் அசைவில் என்னால் யூகிக்க முடிந்தது. இன்னும் சற்று நேரத்தில் என் மரணம் நிகழப் போகிறது. இத்தனை நாள் நான் சிரமப்பட்டு செய்த கனவுகள் பற்றிய ஆய்வுகள் என்னோடு அழிந்துவிடுமா? பயம் சூழ்ந்து உடல் முழுவதும் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. சிறுவயதிலிருந்தே கனவுகள் எனக்குள் உண்டாக்கிய அதிர்வலைகள் எளிய காரியமல்ல. சட்டென்று அவற்றை கடக்கவும் முடியாமல் ஒவ்வொரு வயத்திலும் நான் ஸ்தம்பித்து நின்றேன். என் வயத்தையொத்த எல்லோரும் என்னைத் தாண்டி நகர்ந்து கொண்டிருந்தார்கள். ஆனால், நான் என் கனவுகளுக்குள் சிக்கிக் கொண்டே வளர முடியாமல் உள்ளாத்தால் தகித்து நின்றேன். ஒவ்வொரு கனவிலிருந்து விழித்தும் அன்றைய நாள் முழுவதும் கனவின் பாதிப்பு என்னிடத்தில் நிலைத்திருக்கும். அதனை உதற முடியாமல் மனத்திலும் உடலிலும் சுமந்து அலைவேன். இது ‘ஹிஸ்த்திரியா’ வகை நோய் என்றும் உறவுக்காரர்கள் அம்மாவைப் பயமுறுத்தினர்.

கனவில் கண்ட சிறுசம்பவம்கூட மறக்காமல் நினைவில் இருக்கும். அப்படியேதான் எனக்குக் கனவு தொடர்பான ஆராய்ச்சிகள் எப்பொழுதும் விருப்பமான ஒன்றாக மாறின. கனவுகளோடு கனவுகளைத் துரத்தி வாழத் தொடங்கினேன். கனவுக்குள் கனவைக் கூர்மையுடன் கவனிக்கும் ஆற்றல் வளர்ந்தது. சூப்பர்மேன் கார்ட்டூனுக்கு நான் அடிமையாக இருந்த ஒரு காலக்கட்டத்தில்தான் என்னைப் பாதித்த முதற்கனவு தோன்றியது. வீட்டிற்குள் வந்து என்னுடன் உரையாடிவிட்ட பிறகு சூப்பர்மேன் முதுகில் என்னைச் சுமந்துகொண்டு கம்பம், தோட்டம் எனப் பறப்பதைப் போன்று கனவு கண்டு எழுந்த அன்றைய நாள் முழுவதும் உடல் எங்கோ மிதக்கும் நிலையிலேயே இருந்தது. கனவு என்பது எனக்கு இன்னொரு உலகம் போன்றே தோன்றியது. சில நாள்கள் விட்டுப்போன இடத்திலிருந்துகூட கனவுகள் தொடர்ந்து என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளன.

அம்மா என்னை ஒரு வயல்வெளியில் துரத்தி வருகிறார். தூரத்தில் தனித்த மரமாய் தெரியும் கொய்யா மரம் வரை நான் ஓடுகிறேன். சட்டென விழிப்பு. சில நாள்கள் கழித்து அம்மா விட்ட இடத்திலிருந்து மீண்டும் என்னைத் துரத்துவதைப் போன்ற கனவு. கனவில் அம்மாவின் உடை, தோற்றம் எதுவுமே மாறவில்லை. கொய்யா மரம் மட்டும் சற்று வளர்ந்து பெருத்திருந்தது. கனவுக்கும் நிஜத்திற்குமான நூதனமான சில வித்தியாசக் குறியீடுகள் இருக்கும் என்று விளங்கிக் கொண்டேன்.

“வீட்டுல ஒரே பையன்… அதனாலத்தான் இப்படிப்பட்டக் கனவுகள் வருது… வேற ஒன்னும் இல்ல…” என்று அம்மாவிடம் ஆறுதல்கள் சொல்லாதவர்கள் இல்லை. எனினும் கனவுகள் பற்றிய எனது சிந்தனைகளை என்னிடமிருந்து யாராலும் பிரித்தெடுக்க முடியவில்லை. அம்மா இரண்டுமுறை ஜாலான் பாரு முனிஸ்வரர் கோவிலுக்கும் அழைத்துச் சென்று வேண்டிக்கொண்டார். கனவில் வந்த முனிஷ்வரர் அவரது குதிரையை என்னிடம் கொடுத்துவிட்டுச் சென்றது எனக்கான ஆசீர்வாதம் என்று நான் மறுநாள் சொன்னதை அப்பா நம்பவே இல்லை. நான் பிதற்றுகிறேன்; எனக்கு மனநோய் என்று கத்தினார்.

அப்பா பல நாள் என் மீது கோபத்துடன் இருந்ததன் விளைவு இது. இன்று வெறிக்கொண்டு என்னைத் தாக்க விளைவார் என்று நான் எதிர்ப்பார்க்கவில்லை. என் ஆய்வுகள் முடியும் தருவாயில் இத்தகையதொரு தாக்குதல் என்னைச் சிதைக்கத் துவங்கியது. முதுகிலிருந்து வடிந்த இரத்தம் தரையில் இறங்கி ஓடிக் கொண்டிருந்தது. திரும்பி பக்கத்தில் இருந்த அலாரக் கடிகாரத்தை அப்பாவின் மீது ஓங்கியடித்தேன். மனம் பதறியது. மெதுவாக எழுந்து பக்கத்தில் இருக்கும் இன்னொரு அறைக்குள் இரத்தக் காயங்களுடன் நுழைந்து கதவைச் சாத்திக் கொண்டேன்.

கடைசியாக வேலை பார்த்துப் பின்னர் நிறுத்தப்பட்ட பலகை தொழிற்சாலைத்தான் என் கனவுகளைக் கூர்ந்து கவனித்து உருவங்கள் கொடுத்து உலாவவிட்ட இடம். பண்டல் கணக்கில் வந்து கட்டைகளை வைப்பறையில் போட்டுவிடுவார்கள். நானும் நண்பன் நந்தாவும்தான் கட்டிலிருந்து பிரித்துக் கட்டைகளை அடுக்குவோம். பெரும்பாலும் எனக்கான வேலை நசுங்கி, உடைந்திருக்கும் கட்டைகளைத் தனியாகப் பிரித்து இன்னொரு பேளட்டில் அடுக்கி வைக்க வேண்டும். மேலும், நான் கற்பனைவாதி என்ரு நந்தாவே கிண்டலடித்துவிட்டு என்னை ஓரிடத்தில் உட்கார வைத்துவிட்டு என்னுடைய வேலையையும் அவனே செய்வான்.

என் ஆராய்ச்சி சிந்தனைக்கு உரம் சேர்த்தவன் அவன் தான். ஒரு நாள் இரவில் அவன் செத்து அவன் வீட்டின் வரவேற்பறையில் பெட்டியில் வைக்கப்பட்டது போன்று வந்த கனவை அவனிடம் சொல்லாமல் என்னால் மூன்று நாள்கள் மட்டுமே மனத்தில் பூட்ட முடிந்தது. அதற்கு மேல் பொருக்காமல் சொல்லியும் விட்டேன்.

“டேய் கனவுல சாவற மாதிரி கனவு கண்டா ஆயுசு கெட்டின்னு அம்மா சொல்லிருக்காங்கடா…” என்று சொல்லிவிட்டுப் புன்னகைத்தான். பெரியோர்கள் போகிற போக்கில் இதைச் சொல்லியிருக்க மாட்டார்கள் என்று மனம் நம்பியது. எனது ஆய்வில் மனம் எதை வேண்டாமென்ரு நினைக்கிறதோ அதைக் கனவு நிறைவேற்றி விளையாடும் என்பதையே நம்பியிருந்தேன். எப்பொழுதுமே மரணம் நமக்கு வேண்டாம் என்றே மனம் விரும்பும். அந்தப் பயத்தைத்தான் ஆழ்மனம் யார் யாரோ இறந்துவிட்டதைப் போல நமக்குக் காட்டி அப்பயத்தை நீக்கப் பார்க்கும். நான் இப்படித்தான் படித்தும் புரிந்தும் வைத்திருந்தேன்.

ஆனால், எனது ஒப்பந்த தவணை  முடிந்து அவ்வேலையை விட்டு வந்த ஒரு வாரத்திற்குப் பின்னர் நந்தாவும் அவன் அப்பாவும் சாலை விபத்தொன்றில் சிக்கி ஈப்போ மருத்துவமனையில் அவசரப் பிரிவில் இருப்பதாக செய்தி கிடைத்தபோது நான் உடைந்துவிட்டேன். போய் பார்க்கத் திட்டமிடுவதற்குள் அடுத்த செய்தி ஆச்சரியத்தில் விழச்செய்தது. நந்தாவின் அப்பா பிழைத்துக் கொண்டதாகவும் நந்தாவின் தலையில் ஏற்பட்ட காயத்தால் அவனைக் காப்பாற்ற முடியவில்லை என்றும் செய்தி வந்து சேர்ந்தது. அப்பாவுடன் அவன் வீட்டிற்குப் போயிருந்தேன். நான் கனவில் கண்ட காட்சிகள் இம்மி பிசகாமல் அங்கே நடந்து கொண்டிருந்தது. ‘தேஜாவூ’ போல அனைத்தும் மீண்டும் நடப்பதைப் போன்று நிகழ்ந்து கொண்டிருந்ததன.

அன்றைய இரவில் ஒரு கனவு. நான் வீட்டின் அறையில் இருக்கிறேன். ஒரு கை மட்டும் தரையில் ஊர்ந்து வந்து தரையை மூன்றுமுறை தட்டிவிட்டு கட்டிலுக்கடியில் போய்விட்டது. சடாரென நந்தாவைப் போன்ற ஓர் உருவம் வீட்டில் அம்மாவுடன் பேசிக் கொண்டிருக்கிறதையும் காண்கிறேன்.  நந்தா எரிக்கப்பட்ட மறுநாளில் ஏன் இந்தக் கனவு வந்தது என்று ஆராய்ந்து கொண்டிருக்கிறேன். விடைக் கிடைக்கும்வரை மனம் ஒவ்வாமல் பதறிக் கொண்டே இருந்தது. அதன் பிறகு கனவுகள் குறித்து மூதாதையர்கள் சொன்ன அத்தனை அபிமானங்களையும் என்னால் நம்ப முடியவில்லை. கனவுக்குள் ஓர் ஆழமான அடுக்குகள் உள்ளன. அவற்றை தேடிச் செல்ல வேண்டும் என்று முடிவெடுத்தேன். நந்தாவின் மரணமும் கனவில்  வந்து தரையைத் தொடர்ந்து தட்டிக் கொண்டிருக்கும் கையும் என்னைத் துரத்திக் கொண்டே இருந்தன.

பின்னர், தேர்ந்தெடுத்து சிலரிடம் அவர்கள் கண்ட கனவுகளின் குறிப்புகளை எழுதி அதன் தொடர்ச்சியையும் அபூர்வமான தருணங்களையும் அலசி ஒரு தொகுப்பையும் தயார் செய்து முடிக்கும் நேரமிது. இதற்காகத்தான் வீடுடன் இருந்த உறவு அறுந்து நான் தனியறைக்குள் வாழ்ந்தேன். எப்படியும் கனவுகள் பற்றி நான் வெளியீடும் ஆராய்ச்சி தொகுப்பு சிக்மன்ட் ப்ராய்ட்டுக்குப் பின்னர் தமிழில் என்னை நிலைத்திருக்க செய்யும் என்று நம்பினேன். மனித மனத்திற்கு மரணம் என்பதே இல்லை. உடலைத் தாண்டிய பின் அதுவொரு நினைவுத் தொகுப்புகளாக மாறி பிரபஞ்சத்தில் நிலைத்திருக்கும் என்கிற நான் மெல்ல கண்டறிந்த உண்மையின் ஆய்வுத் தரவுகளைக் கோர்த்துக் கொண்டிருந்தேன். அப்பாவின் 30 நாள் கனவுகளைப் பட்டியலிட்டுத் தொடங்கிய ஆராய்ச்சி இது. முதலில் அப்பாவிடமிருந்து துவங்கியது நான் செய்த மிகப் பெரிய தவறு என்பது இப்பொழுது புரிகிறது. அப்பாவின் ஆழ்மனத்தின் செயல்பாட்டை ஓரளவிற்குத் தொகுத்துப் பார்க்கவும் முடிந்தது. அவ்வாராய்ச்சித்தான் இப்பிளவிற்கும் காரணமானது.

அப்பாவின் கனவுகள்

கனவு 1 (23 ஏப்ரல் 2019)

அம்மா புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறார். அப்பா அம்மாவின் கால்களை அறுத்துக் கொண்டிருக்கிறார். இரத்தம் நிதானமாக ஒழுகியது. அவசரமில்லாமல் கத்தியின் கூர்முனை சதையை அறுத்து மெல்ல எலும்பை நோக்கி நகர நகர இரத்தம் பதறாமல் சிந்திக் கொண்டிருந்தது. அப்பா புன்னகைத்துக் கொண்டே பார்க்கிறார்.

கனவு 5 ( 28 ஏப்ரல் 2019)

நான் வீட்டிற்கு வெளியிலுள்ள பூங்காவில் சறுக்குப் பலகையில் விளையாடிக் கொண்டிருக்கிறேன். அம்மா பூங்காவிலுள்ள நாற்காலியில் புத்தகம் படித்துக் கொண்டிருந்தார். அப்பா தூரத்தில் புதரில் பதுங்கி பதுங்கி ஆற்றின் முகப்புவரை சென்ற பின் ஒரு முதலையைப் போல உள்ளே இறங்குகிறார்.

கனவு 10 ( 03 மே 2019)

அம்மா பிரசவ வலியில் துடிக்கிறார். நான் வயிற்றுக்குள் இருக்கிறேன். அப்பா மருத்துவமனைக்கு வெளியில் நின்று யாருடனோ சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார். அவர் வாயில் இரத்தம் ஒழுகுகிறது.

கனவு 15 (08 மே 2019)

வீட்டில் ஒரு தேவதை உலாவுகிறாள். பின்னர் ஆக்ரோஷத்துடன் அவள் அம்மாவின் கழுத்தை நெறிக்கிறாள். அப்பா கட்டிலுக்குக் கீழே ஒளிந்து கொண்டு கத்தியைத் தீட்டிக் கொண்டிருக்கிறார்.

கனவு 20 (13 மே 2019)

அப்பா ஒரு பாலத்தில் ஓடிக் கொண்டிருக்கிறார். பின்னால் பலர் துரத்தி வருகின்றனர். மூச்சிரைக்க வேகமாக ஓடியும் அவரால் அப்பாலத்தைக் கடக்க இயலவில்லை. விடாமல் ஓடிக் கொண்டே இருக்கிறார். தூரத்தில் அம்மா மெதுவாக வீட்டுக்கு வெளியிலுள்ள சிறுநிலத்தில் மல்லிகை செடியை நட்டுக் கொண்டிருப்பதைப் போல தெரிகின்றது.

 

கனவு 25 (18 மே 2019)

மீண்டும் அப்பா கட்டிலுக்கடியில் கத்தியை மறைத்து வைக்கிறார். பின்னர், நிறைய கத்திகள் அங்கு மறைக்கப்பட்டிருப்பதைப் பார்க்கிறார். சட்டென ஓர் உருவம் வீட்டில் உலாவிக் கொண்டிருக்கிறது. அவ்வுருவம் அப்பாவைத் தூரத்திலிருந்து முறைத்துப் பார்க்கிறது.

கனவு 30 (23 மே 2019)

அப்பா தனிமையில் ஒரு கயிற்றுத் தொட்டிலில் படுத்திருக்கிறார். காற்று பலமாக வீசிக் கொண்டிருக்கிறது. காற்று அவர் இருக்கும் கயிற்றுப் படுக்கையை அசைக்கிறது. சட்டென கடல் பொங்கி எழுந்து வருகிறது. அவருக்குப் பக்கத்தில் இருக்கும் அனைத்தையும் நாசப்படுத்துகிறது.

அப்பாவின் முப்பது நாள்கள் கனவுகளைத் தினமும் கேட்டு எழுதும்போது அவர் அதைச் சொல்லிவிட்டு நிதானமாக மற்ற வேலைகளில் கவனம் செலுத்தத் துவங்கிவிடுவார். ஆனால், அவருடைய மொத்த கனவுகளையும் தொகுத்து அன்றைய இரவில் நான் அவருடைய ஆழ்மனத் தொடர்பான சில விடயங்களை அவரோடும் அம்மாவோடும் பகிர்ந்து கொண்டேன்.

“இந்த ஒரு மாத அப்பாவோட கனவுகள ஆராய்ச்சி செஞ்சி பார்த்துதல… அப்பாவுக்கு இன்னொரு பெண்ணோட தொடர்பு இருக்கு… அதனால அவருக்குள்ள பயமும் இருக்கு… கூடிய சீக்கிரம் உங்கள கொல்லவும் திட்டம் போட்டுக்கிட்டு இருக்காரு… அந்தப் பயமே அவரோட மனச அல்லல்படுத்திக்கிட்டு இருக்கு…” என்று சொன்னபோது அப்பாவின் முகத்தில் கலவரம் ஆரம்பித்தது. அம்மா நான் சொன்னது புரியாமல் திகைத்தார்.

“என்னடா உளறிக்கிட்டு இருக்க? பைத்தியம் பிடிச்சிக்கிச்சா…?”

நான் மூச்சை இழுத்து விட்டப்படி அப்பாவின் முகத்தைப் பார்த்தேன்.

“அவன் சும்மா வெளையாடறான்…” என்று பேச்சைத் திசைத் திருப்ப முயன்றார்.

“ம்மா… ஆழ்மனசு வித்தைக் காட்டற இடம்தான் கனவு… ஆக, கனவு என்பது நடந்ததோ நடக்கப் போவதோ அதெல்லாம் விட நம்ம ஆழ்மனசுல நம்ம பூட்டி வைக்கற விருப்பு, வெறுப்பு, கோபம், குமுறல், கவலை எல்லாத்துக்கும் ஒரு ரூபம் கொடுத்து ஆட்டி வைக்கற இடம்தான் கனவு…”

“ஏதோ பெரிய டாக்டர் மாதிரி பேசிக்கிட்டு இருக்காத… எதேதோ புக்கு படிச்சிட்டுக் கண்டதயும் உளறாத…” அம்மா வெடுக்கென்று கோபம் வந்தவராய் எழ முயற்சித்தார்.

“ம்மா… நான் யேன் தேவ இல்லாம பொய் சொல்றன்? அவரோட கனவுல பெரும்பாலும் உங்கள எதிராத்தான் வச்சு பாக்கராரு. உங்கள ஒரு விரோதி மாதிரி… இதுக்கும் ஆழ் மனசுக்கும் தொடர்பு இருக்கு…”

“டேய்! ஏதோ நீ கேட்டனு என் கனவுல என்ன வந்துச்சோ அத அப்படியே சொன்னன்… என் உலகமே நீங்க ரெண்டு பேர்தான். நீங்க கனவுல வராம அப்புறம் என்னா எதுத்த வீட்டுக்காரனா வருவான்?” என்றார் சற்றுக் குரலை உயர்த்தியப்படியே.

“ப்பா, எந்தக் கனவும் சும்மா வராது. எல்லா கனவுக்கும் நமக்கும் தொடர்பிருக்கு. உங்க மனசுல அம்மாவ கொன்னுரணும் இல்ல அம்மாவிட்டு ஓடிப் போய்ரணும்னு ஒரு திட்டம் இருக்கு… ஆனா அத உங்களால செய்ய முடியுமான்னு ஒரு பயமும் இருக்கு… உங்க கனவு நிஜத்துல இருக்கற உங்க திட்டத்த செஞ்சி பாக்குது…”

அப்பாவும் உட்கார்ந்திருந்த இடத்தை விட்டு எழுந்தார். “இவன் ஏதேதோ உளர்றான்… சீக்கிரம் தாமான் செஜாத்தில இருக்கற ஜோன்சன் டாக்டர்கிட்டக் கூட்டிட்டுப் போய்டு…அவருத்தான் சரிப்பட்டு வருவாரு…” எனத் திட்டிக் கொண்டே உள்ளே போனார்.

நாற்காலியை விட்டு எழுந்தேன். இப்பொழுது நடந்து கொண்டிருப்பது கனவா அல்லது இது நிஜமா என்றெல்லாம் பிரித்தறியும் மனநிலையை எப்பொழுதோ நான் இழந்திருந்தேன். பலருக்கும் தாம் கண்டு கொண்டிருப்பது கனவென்று உறங்கி எழும்வரை உணர முடியாது. அதுவரை ஏதோ நிஜம் போல நம் முன்னே அது விரிந்து நிகழ்ந்து கொண்டிருக்கும். சிலருக்கு அது கனவிலேயே மாறி மாறி பலவீனமாகிக் பிரக்ஞை காணாமல் போய் மீண்டும் உருவாகி வலுவில்லாமல் மிதக்கும். சிலருக்கு கனவு மனப்பாதிப்புகளை உருவாக்கும். அவரவர் ஆழ்மனம் பொறுத்துதான் கனவுகள் உற்பத்தியாகின்றன. பின்னாளில் எனக்கு இப்பயம் முழுவதுமாகப் பீடித்துக் கொண்டு அலைக்கழிக்கிறது.

வெளியே வந்து சத்தம் எழுப்பிக் கொண்டு நகர்ந்து கொண்டிருக்கும் வாகனங்களையும் பரப்பரப்பான ஜாலான் சுங்கை சாலையையும் பார்த்துக் கொள்ளும்போது நான் எங்கிருக்கிறேன் கனவிலா நிஜத்திலா என்கிற பிரக்ஞை திடமாக உருவாகி நம்பிக்கை அளிக்கும். சிறுவயதில் வழக்கமாகி போன ஒன்று. வீட்டிற்கு வெளியில் 200 மீட்டர் தொலைவில் தெரியும் ஜாலான் சுங்கை. கனவிலும் இதே மாதிரி வீட்டிற்கு வெளியில் வந்து சாலையைப் பார்க்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஆனால், அப்பொழுதெல்லாம் சாலை பேரமைதியுடன் காட்சியளிக்கும். அது கனவென்பது அப்பொழுது உணர்ந்தும் விடுவேன். அடுத்த கணமே சட்டென விழிப்பு வந்துவிடும். அல்லது அச்சாலை சட்டென உருமாறி ஒரு நதியாகிவிடும். இப்படி சில அடையாளங்களைத் தக்க வைத்துக் கொண்டே இரு உலகிற்குள்ளும் நான் உலாவிக் கொண்டிருக்கிறேன். அப்பா கதவை உடைத்து உள்ளே வர முயலலாம். அக்கணம் மீண்டும் எதிர்த்துப் போராட என்னிடத்தில் வலு இல்லை. கால்கள் தளர்ந்திருந்தன. இரத்தம் வடிவதிலிருந்து ஓயவில்லை. தலை சுற்றலும் அதிகமாகிக் கொண்டிருந்தது.

“டேய்! பைத்தியகாரப் பயலே… உன் உசுரு என் கையாலத்தான் போவும்…!!!” என்று அப்பா முணுமுணுப்பது கேட்கிறது. அவர் தலையைக் குறிப்பார்த்து நான் விட்டெறிந்த மேசைக் கடிகாரம் இந்நேரம் ஒரு வழி செய்திருக்கும். அவரால் எழுந்து வர நேரமாகலாம். அதற்குள் நான் என்னைத் திடப்படுத்திக் கொள்ள வேண்டும்.

சுவரோடு சாய்ந்து எதிரில் தெரியும் சன்னலைப் பார்க்கிறேன். எழுந்து சன்னலைத் திறந்து வெளியில் பார்க்க மனம் தூண்டவில்லை. வெறுமனே அமர்ந்திருந்தேன். வலி உடலில் இறுகியது. கண்கள் மங்கின. உறக்கத்திற்கோ அல்லது மரணத்திற்கோ செல்லும் இடைவெளி உணர்வு அது. கண்கள் மூடின. இருள் சூழ்ந்து நின்றது.

சட்டென அம்மா பக்கத்தில் அமர்ந்திருக்கிறார். அறையில் மேசையின் மீது தலைக் கவிழ்த்துச் சாய்ந்திருக்கிறேன். எழுதிய ஆராய்ச்சி நோட்டுகள், குறிப்புகள் எல்லாம் களைந்துகிடக்கின்றன.

“டேய்! ஐயா. இந்த ஆராய்ச்சில்லாம் வேணாம். உனக்கு இன்னும் எதிர்காலம் இருக்கு… வீணாக்கிக்காத… அம்மா உன்ன நல்ல டாக்டர்கிட்டக் கூட்டிட்டுப் போறேன். எல்லாம் சரியாயிடும்…”

அத்துடன் அம்மா கனவில் தோன்றி சொல்லும் பலநூறாவது ஆறுதல் அது. நிஜத்தில் அம்மாவின் ஆறுதல் வார்த்தைகளைக் கேட்க நான் தயாராக இல்லை என்பதால் கனவு அம்மாவுடன் இப்படியொரு தருணத்தைப் பலமுறை உருவாக்கிக் கொள்கிறது. நான் இருப்பது ஒரு கனவு. அவ்விடத்தை விட்டு எழுந்தேன்.

“நான் சொன்ன எதயாச்சம் நம்பனீங்களா? அவரு ஏதோ தப்பு செய்றாருன்னு நான் கண்டுபிடிச்சிட்டென்… இப்ப என்னக் கொலை செய்யப் பாக்கறாரு… இப்ப இந்தக் கனவுலேந்து நான் எழுந்தனா அங்க என் தலைக்கு மேல கத்தி இருக்கும்… நான் செத்துருவன்… என் இத்தன நாள் உழைப்பு எல்லாம் போச்சும்மா… நான் அப்புறம் ஒரு நினைவா மட்டுமே இருக்கப் போறன்…”

அம்மாவின் முகம் நிதானமாக இருந்தது. கனவில் நாம் நினைக்கும் போக்கில் கதாபாத்திரங்கள் இருப்பதில்லை. அம்மா மீண்டும் ஏதோ பேச முற்பட்டார். அதற்குள் அப்பா கதவைத் திறந்து உள்ளே வந்தார். “இவன் பொய் சொல்றான்!!! நம்பாத,” என்று கத்தினார். சட்டென எழுந்த கோபத்தில் மேசை மீதிருந்த கூர்மையான பேனாவை அவர் கழுத்தில் செருகினேன். இரத்தம் கொப்பளித்து வெளிவந்து கொண்டிருந்தது. இத்தனை நாள் கனவில் ஆக்ரோஷத்துடன் உலாவிக் கொண்டிருந்த அப்பா என்கிற ஆழ்மனக் கற்பனையைக் கொன்றுவிட்டேன் என்று நினைத்துக் கொண்டே வழக்கம்போல சன்னலைத் திறந்தேன்.

ஜாலான் சுங்கை எப்பொழுதும் போல வாகனங்களுடன் பரப்பரப்பாக இயங்கிக் கொண்டிருப்பது தெரிந்தது. மேலும் கூர்ந்து பார்த்தேன். சாலை பரப்பரப்பு குறையாமல் அப்படியே காட்சியளித்தன.

கே.பாலமுருகன்

சிறுகதை: நீர்ப்பாசி

குறிப்பு: இச்சிறுகதை உளவியல் சார்ந்து எழுதப்பட்டது. 17 வயதிற்கு மேற்பட்டோர் மட்டுமே வாசிக்கலாம். சிறுவர்களுக்குப் பெரியவர்கள் வாசித்து கதையின் உள்ளார்ந்த விவாதங்கள்/போக்குகள் பற்றி எடுத்துரைக்கலாம். ஆனால், நிச்சயமாக சிறார்களிடம் நீங்கள் பேச வேண்டிய ஒன்றுத்தான்.

“பாத்ரூம்க்கு அனுமதி கேட்டா கொடுக்காமலா போய்ருவேன்? யேன்டா சிலுவார்லே போன?”

தனக்கோடிக்கு ஹென்ரி வாத்தியார் கேட்டது காதில் விழவேயில்லை. வெயில் படும்படி வகுப்பிற்கு வெளியில் நின்று கொண்டே திடலுக்கு அப்பால் தெரியும் வாழைமரக்கூட்டங்களையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“பெரிய வாழ மரம்தான் உங்கப்பா கணேசன்… பக்கத்துல கொஞ்சம் கட்டயா இருக்கே அதான் உங்கம்மா… கீழ ஒன்னு ரொம்ப கட்டயா இருக்கே அது உன் தங்கச்சி… இன்னொன்னு பாரு இப்பத்தான் முளையுது அது உன் கடைசி தம்பி…”

“அப்ப நான் எங்க?”

“நீதான் உஸ் பேய போயிருப்பியே…”

காலையில் யமுனா சொல்லிச் சிரித்த வார்த்தைகளை அசைப்போட்டுக் கொண்டிருந்தான். வாழைமரங்கள் சில பள்ளியின் வேலிக்கு வெளியே கம்பிகளை உரசியவாறு தழைத்து வளர்ந்து செழிப்புடன் காணப்பட்டன. வாழைமரத்தில் ஒரு நூலைக் கட்டி இன்னொரு நுனியை நம் பெருவிரலில் கட்டிக் கையில் முகக்கண்ணாடியை வைத்துக் கொண்டு படுத்தால் சரியாக 12.00 மணிக்குக் கண்ணாடியில் பேய் தோன்றும் என்று காளியம்மா அக்காள் கம்பத்துப் பிள்ளைகளிடம் சொன்னதைத் தனக்கோடி நினைத்துப் பார்த்தான். வீட்டுக்குப் பக்கத்திலுள்ள வாழைமரத்தில் அதனைப் பலமுறை செய்தும் பார்த்தான். அம்மாவிடம் முதுகில் பளார் என்று அடி விழுந்ததே தவிர எந்தப் பேயும் வரவில்லை.

வாழைமரங்கள் சூழ்ந்த கம்பம் அது. பெரிய நிலப்பரப்பில் சீனர்களுடைய இரண்டு வாழைத்தோப்புகளுக்கும் இன்னும் எலுமிச்சை, டுரியான் என்று பல தோப்புகளுக்கும் உகந்த இடமாகவும் திகழ்ந்தது. குரூண் சிறுநகரத்திலிருந்து ஐந்து கிலோ மீட்டர் ஒற்றையடிப் பாதையில் செல்ல வேண்டும். தூரத்திலிருந்து வாழைத்தோப்புகள் சலசலப்பதைக் காணலாம். ஒரு பச்சைக் காடு அசைந்தாடுவதைப் போல இருக்கும். தனக்கோடியின் வீட்டின் எதிரில் உள்ள வாழைத்தோப்புத்தான் அவனுக்கு எப்பொழுதும் புகலிடம் என்றே சொல்லலாம். பள்ளி முடிந்து வீட்டுக்குச் சென்று எதிரில் இருக்கும் வாழைத்தோப்பில் நுழைந்து உள்ளே இருக்கும் குளத்தில் நீந்தலாம் என்று காத்திருப்பான்.

“வாழத்தோப்புக்கு மட்டும் போய்டாத… மலாய்க்காரப் பேய் அங்கத்தான் அண்டுமாம்…ஹன்த்து பொந்தியானாக்…”

வகுப்பு தோழி யமுனா தன் இரண்டு கண்களையும் விரித்துக் கூறியதைத் தனக்கோடி நகைச்சுவையாகப் பார்த்தான். இதே யமுனாதான் கடந்த வாரம் தனக்கோடி தன் பென்சிலைத் திருடிவிட்டான் என்று அவனை ஹென்ரி வாத்தியாரிடம் மாட்டிவிட்டாள். பெரும்பாலும் வகுப்பில் காணாமல்போகும் அத்தனை பொருள்களுக்கும் தனக்கோடித்தான் பொறுப்பு. தேடிக் கண்டடைய முடியவில்லை என்றால் எல்லோரும் இணைந்து கைக்காட்டுவதும் தனக்கோடியைத்தான்.

“செக்கு! உஸ்ஸ்ஸூ” என்று தனக்கோடி ஒரு நாளில் ஐந்து முறையாவது கழிப்பறைக்கு அனுமதி கேட்டு வந்துவிடுவான். அதுவும் ஆசிரியர்களை நெருங்கி அனுமதி கேட்காமல் அப்படியே எழுந்து “உஸ்ஸூ!” என்று கத்துவான். முதலில் ஆசிரியர்கள் திட்டி மிரட்டினாலும் பின்னாளில் அது நகைப்பை மட்டுமே உருவாக்கியது.

அன்று சர்வினும் விமலும் ஓய்வு நேரத்தில் அவனைக் கழிப்பறைக்கு அழைத்துச் சென்று அடித்துவிட்டு “இங்கயே இரு உஸ்ஸு!” என்று உள்ளேயே பூட்டிவிட்டார்கள். இதுவும் தனக்கோடிக்கு வழக்கமான ஒன்றுதான். தனக்கோடி கருப்பாக இருப்பான். உதடுகள், கைகளில் சில பகுதிகள் மட்டும் வைட்டமின் குறைவு காரணத்தால் தோல் நோயாகி வெண்மை படர்ந்திருக்கும். இப்பிரச்சனை அவனுக்குச் சிறுவயதிலிருந்து உள்ளது. அதனாலேயே அவனை ஒரு கேலிப் பொருளாக வகுப்பில் வைத்திருக்கிறார்கள்.

“ரோபர்ட் வரான் பாரு…”

“கருப்பு ரோபர்ட் ஜிங்குச்சா…உஸ்ஸுக்காரன் ஜிங்குச்சா!”

“அவன பார்த்தாலே வெளுக்கணும் போல இருக்கு…”

குறிப்பாக விமலிடம் அடிக்கடி உதை வாங்கிவிட்டு வகுப்பிற்குள் வந்தவுடன் அது ஒரு சாகசம் போல பெருமிதமாக சிரித்துக் கொண்டே உட்காருவான். மற்ற நண்பர்கள் அதனைக் கண்டு சிரிப்பார்கள். ஆசிரியர் வகுப்பில் இல்லாத நேரங்களில் தனக்கோடி எழுந்து வரிகள் விளங்காத பாடலைப் பாடிக் கொண்டே ஆடுவான். அல்லது எல்லோரிடமும் சென்று வாழைத்தோப்பு கதையைச் சொல்ல முயல்வான். பாதி பேர் அதனைக் கவனிக்க மாட்டார்கள். அப்பொழுதும் விமல்தான் அவனைப் பின்னால் உதைப்பான்.

 

கழிப்பறை முழுவதும் சிறுநீர் வாடை பெருகி பரவியது. தனக்கோடிக்கு அதுவொரு பொருட்டே இல்லாமல் உள்ளே அமர்ந்திருந்தான். சில மாதங்களாக அவனுக்கு அவ்வாடை பழகிபோன ஒன்று. ஐந்தாம் ஆண்டு மாணவன் ஒருவன் வந்து தனக்கோடி பூட்டப்பட்டு இருந்த கழிப்பறை கதவைத் திறந்துவிட்டான். உள்ளே வாழைத்தோப்பு குளத்தில் நீந்துவதைப் போல இரண்டு கைகளையும் வெறுமனே அசைத்துக் கொண்டு அமர்ந்திருந்தான். அவன் நினைவெல்லாம் அக்குளத்தில் இறங்கி இன்னொரு உலகத்திற்குள் நுழைய வேண்டும் என்பதே. தனக்கோடி நீச்சலிலும் கெட்டிக்காரன். மழைக்காலத்தில்கூட குளத்தில் முங்கி உள்நீச்சலடித்து மறுமுனையில் எழுவான்.

வாழைக்கன்றுகள் நடும் முன்பே அங்கிருந்த குளம் அது. நீர்ப்பாய்ச்சலுக்காக அதையே பயன்படுத்திக் கொண்டார்கள். வெயில் காலத்தில் மட்டும் சற்று வற்றிப் போய் நீர்ப்பாசி பரவிவிடும். அதன் பிறகு சீன முதலாளி மேலும் சில அடிகளுக்குத் தூர்வாறி விட்டதால் அப்பிரச்சனையும் இல்லை. வாழைத்தோப்பிற்குப் பக்கத்தில் இருக்கும் எலுமிச்சை தோட்டத்திற்கும் தண்ணீர் இதிலிருந்துதான் இயந்திரம் வழியாகத் திறந்துவிடப்படும். தேவராஜன் மாமாதான் வாழைத்தோப்பைப் பார்த்துக் கொள்வார். வாழைமரங்கள் அதிக சூட்டில் வளராமல் போய்விடும் என்பதால் வெயில் காலங்களில் மண்ணை ஈரப்படுத்தியப்படியே இருக்க வேண்டும். இயந்திரத்தை முடுக்கிவிட்டால் நெகிழிக் குழாய் வழியாக குளத்து நீர் பத்திகளுக்குகிடையில் செல்லும் நீண்ட நெகிழியின் வாயிலாக ஒவ்வொரு ஐந்தடிக்கும் குழாயில் இருக்கும் சிறு ஓட்டையின் வாயிலாக மரத்திற்குத் தேவையான அளவு கணிசமாக சேர்ந்துவிடும். மோட்டரைத் திறந்துவிட்ட பின் தேவராஜன் மாமா இன்னும் சில வேளையாள்கள் அதனைக் கண்கானிக்கவும் சுற்றிலும் நடந்து பரிசோதிப்பார்கள். குழாயில் வெடிப்புகள் இருந்தால் உடனே சரிசெய்துவிட வேண்டும். சில சமயம் தனக்கோடியும் மாமாவிற்கு உதவுவதற்காக பத்தி நெடுக ஓர் ஓட்டம் ஓடி குழாயைப் பரிசோதித்துவிட்டு வருவான்.

தேவராஜன் தனக்கோடியின் தூரத்து உறவு என்பதால் அவனுக்கு எந்நேரமும் வாழைத்தோப்பில் நுழைந்து திரிய அனுமதியுமுண்டு. முதலாளி இரண்டு வாரத்திற்கு ஒருமுறை வருவான். அந்நேரத்தில் கடமை மாறாத காவலாளியைப் போல தேவராஜன் பாவனைக் காட்ட வேண்டி தனக்கோடியைத் தோப்பின் பக்கம் சேர்க்க மாட்டார். தேவராஜன் உள்ளேயுள்ள மாமரத்தோடு இணைத்து ஒரு சிறிய கொட்டாய் போல கட்டிக் கொண்டார். ஒரு பழைய ‘பேட்டரி’ வானொலி உள்ளே எப்பொழுதும் ஒலித்துக் கொண்டிருக்கும். அவருடைய வீடு கம்பத்துக்கு வெளியில் ஆறு கிலோ மீட்டர் தாண்டி இருப்பதால் பெரும்பாலும் இங்கேயே தோப்பிலோ அல்லது பள்ளிப் பாதுகாவலர் ஐயாவு வீட்டிலேயோ தங்கிக் கொள்வார். காலையில் தோப்பிற்கு வேலைக்கு வரும் அல்போன்சாவின் தம்பியும் சுராய்டா அக்காவும் இன்னும் சிலரையும் கண்காணித்துக் கொள்வார். சுராய்டா அக்கா முக்காடுக்கு மேல் ஒரு துணியைக் கட்டிக்கொண்டால் அத்துடன் வேலையில் இறங்கிவிடுவார். அல்போன்சா தம்பியும் இன்னும் சிலரும் நெகிழிப் பையால் சுற்றப்படாத வாழைத்தார்களைக் கட்டப் போய்விடுவார்கள். தேவராஜன் சுருட்டைப் புகைத்துக் கொண்டே வேவு பார்ப்பார். இன்னும் ஒரு மாதத்தில் வாழைத்தாரை அறுக்கும் காலம் வந்துவிடும் என்பதால் மேலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லையென்றால் வேலிக்கம்பிகளை அறுத்து உள்ளே வந்து பழத்தைத் திருட ஒரு கூட்டம் தயாராகவே இருக்கும்.

“கொடுத்ததெல்லாம் கொடுத்தார் யாருக்காக கொடுத்தார்… ஒருத்தருக்கா கொடுத்தார்…” என்று எம்.ஜி.ஆர் பாடலைப் பாடிக் கொண்டு தேவராஜன் தோப்பிற்கும் ஐயாவு வீட்டிற்கும் சென்று வந்து கொண்டிருப்பார். அவருக்கு வேண்டியது ஒரு போத்தல் மதுபானம் மட்டும்தான். அதை யார் கொடுத்தாலும் அங்குச் சென்று உலக அரசியல் தொடங்கி உள்ளூர் குடும்பச் சண்டைகள் வரை அனைத்தையும் கக்கிவிட்டு உடன் இருப்பவர்களை மகிழ்ச்சிப்படுத்திவிட்டு வந்துவிடுவார். தேவராஜன் மாமாவைப் பேசவிட்டு மகிழ்வதில் ஐயாவு கெட்டிக்காரன். அவன் பொழுதைக் கழிக்க ஒரு போத்தல் மதுபானம் செலவு செய்தால் போதும். தேவராஜனுக்கு உறவெல்லாம் இல்லை. அப்பா மட்டும்தான். அவரும் அவனுடைய தம்பியுடன் கோலாலம்பூர் போய்விட்டார். வீட்டில் இருந்தாலும் பகலெல்லாம் சுவரை வெறித்துத் தொலைய வேண்டும் என்பதால் தோப்பு வேலைக்கு வந்துவிட்டார்.

போதையில் பகலெல்லாம் கொட்டாயின் பலகை இடுக்கிலிருந்து கோடுகள் போட்டு விளையாட்டுக் காட்டும் வெளிச்சத்திற்கும் அதனூடாக உலாவும் போதை கலந்த உறக்கத்திற்கும் தூரத்தில் கேட்கும் வாழையிலைகளின் உரசல் இசைக்கும் நடுவில் மிதந்து கொண்டிருப்பார். இரவில் வானொலியில் பாடலைக் கேட்டுக் கொண்டே நட்சத்திரங்கள் மின்னும் வானத்தைப் பார்த்துக் கொண்டே தோப்பில் உலா வருவார். வேலியின் வலதுபக்கம் ஓடும் சிறு ஓடையின் நீர் சத்தம் சன்னமாகக் கேட்கும். சிலசமயம் இரவில் குளத்தில் வந்து அசையும் நிலவைப் பார்த்துக் கொண்டே தன் பக்கத்தில் இந்நேரம் யாராவது இருந்தால் பரவாயில்லை என்று சிந்தித்துக் கொண்டே குளத்தினருகே தூங்கியும் விடுவார்.

பெரிய கன்று சிறிய கன்று எனப் பிரிக்கப்பட்ட வாழைத்தோப்பு என்பதால் குளத்திற்கு வலப்பக்கம் மரங்கள் உயர்ந்தும் இடப்பக்கம் குட்டை மரங்களும் வரிசைக் கட்டி நிற்கும். குளத்தில் குளித்துக் கொண்டே தூரத்தில் தெரியும் டுரியான் தோப்பையும் அதனைத் தாண்டி விரிந்து படரும் ஜெராய் தொடரையும் இரசிக்க முடியும். தனக்கோடி அக்குளத்தில் முங்கி முங்கி எழுந்து வாயில் தண்ணீரைச் சேகரித்து ஜெராய் மலையைப் பார்த்துத் துப்புவான்.

“ஒருநாளு அந்தக் குளம் ஒன்ன உள்ள இழுத்துரும் பாத்துக்கோ… வெளையாடாதெ…”

தேவராஜன் மாமா பலமுறை எச்சரித்தும் அவனுக்குப் பழகிபோன குளம் அது. குளத்தினோரம் மண்டியிருக்கும் நீர்ப்பாசியைக் கைகளில் நிதானமாக களைத்து உள்ளே பார்ப்பான். தாமரை செடிகளின் தண்டுகள் நடனமாடிக் கொண்டிருக்க உள்ளே ஆழத்தில் இருளும் அசைந்து கொண்டிருக்கும். அவனைப் பொறுத்தவரை அதுவொரு சாகசமான செயல்.

தனக்கோடி அன்று பள்ளி முடிந்ததும் வாழைத்தோப்பில் நுழைந்து குளத்தைப் பார்த்துவிட்டு மாமா கொட்டாய்க்குள் ஒலிக்கும் பாடலையும் கேட்டுவிட்டு குளத்தின் ஓரங்களை மூடியிருக்கும் நீர்ப்பாசியின் மீது கல்லெறிந்து விட்டு அங்கிருந்த சாக்கடையில் சிறுநீர் கழித்துவிட்டு வீட்டிற்குள் சென்றான். குளம் இருக்கிறதா என்று பரிசோதிக்க வரும் அதிகாரியைப் போன்ற பாவனையுடன் உள்ளே போய்விட்டு வந்தான். வாழைத்தோப்பில் இருக்கும் குளிர்ச்சி அவனது மாலைக்கு இதம் சேர்க்கும். அம்மா வைத்த மீன் கறி வறட்சியில் இருந்தது. தேடித் தேடி வெறும் கறி மட்டும்தான் இருந்தது. உள்ளேயிருந்த வெண்டைக்காயை மீன் போல பாவித்து உறிஞ்சி சமாளித்துக் கொண்டான்.

4.30க்கு மேல் வாழைத்தோப்பில் நுழைந்தால் ஒரு சுற்று வந்து பின்னர் குளத்தில் குதித்துவிடலாம். மாமா அங்கே இருக்கும் தைரியத்தில் வீட்டிலிருந்தும் அழைப்புகளோ எச்சரிப்புளோ வராது.

“டேய்! தனக்கோடி. எங்கடா போய் தொலைஞ்சிட்ட?”

“டேய்…! போனவன் இன்னும் ஆள் வரல பாத்தீயா…?”

அம்மாவின் எச்சரிக்கை மணி ஒலிக்காத வாழ்க்கை தனக்கோடிக்குக் கோடிச் சுகம். மேட்டிலுள்ள டுரியான் தோப்பிற்கு விளையாடச் சென்றால் சிலசமயம் தேடிக் கொண்டே வந்துவிடுவார். கையில் மூங்கில் குச்சியும் இருக்கும் என்பதுதான் தனக்கோடிக்குப் பயம். அதனாலேயே அவன் டுரியான் தோப்பிற்குப் போவதைக் குறைத்துக் கொண்டான். அதுவும் கடந்த வருடம் அங்கு நடந்த ஒரு கொலைச் சம்பவத்திற்குப் பிறகு அந்தப் பக்கம் யாருமே போவதில்லை. தோப்பில் வேலை செய்து கொண்டிருந்த சீனன் ஒருவனின் மரணம் எல்லோரையும் பயத்தில் ஆழ்த்தியது. மண்டையில் உண்டான தாக்குதலில் ஒரு பக்கம் ஓடு உடைந்தே விட்டது.

தனக்கோடி குளத்தில் குளிக்கும்போது அந்தச் சீனனின் கைகள் உள்ளேயிருந்த அவனுடைய கால்களைப் பற்றுவதாக அவனே கற்பனை செய்து பயந்தும் கொள்வான். பயந்து வேகமாக நீந்திக் கரைக்கேறி மீண்டும் உள்ளே குதித்து விளையாடுவான். நீர்ப்பாசி மூடியிருக்கும் இடத்தில் அச்சீனன் பதுங்கி தனக்கோடிக்காகக் காத்திருப்பதாக நினைத்துக் கொண்டு அவ்விடத்தை நோக்கி நீந்தி பின்னர் தப்பித்ததாகக் கரையேறி கத்துவான். அவனோடு விளையாட யாருமற்ற தனிமைக்குள் அவன் பல கதாபாத்திரங்களை உற்பத்தி செய்து கொண்டான்.

குளத்தில் இன்றும் வாழும் டுரியான் தோப்பில் கொலை செய்யப்பட்டச் சீனன், வாழைத்தோப்பில் ஒளிந்திருக்கும் இராணுவ வீரர்கள், அவர்களை ‘அஸ்கார் மேன்’ என்று அவனே பெயரும் வைத்துள்ளான். அடுத்து, கட்டொழுங்குஆசிரியர் சோமசுந்தர். அவரும் இந்த வாழைத்தோப்பில்தான் கடந்த பல மாதங்களாக ஒளிந்துள்ளார். அவரோடு விமல், சர்வீன் என்று சிலரும் வாழைத்தோப்பில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தனக்கோடி அவர்களைத் தினம் தினம் துரத்தி துரத்தி அடித்து விளையாடுவான். மூச்சிரைக்க ஓடிவந்துவிட்டால் உடனே சிறுநீர் வந்துவிடும். அதற்குமேல் அடக்கினாலும் அவனையறிமால் கழித்துவிடுவான்.

தனக்கோடிக்கு சோமசுந்தர் ஆசிரியர் என்றால் மிகுந்த பயம். மற்ற ஆசிரியர்கள் காட்டிலும் அவர் எப்பொழுதுமே இறுக்கமான முகத்துடனும் பாவனையுடனும் இருப்பதைப் போன்றே தனக்கோடி சித்தரித்துக் கொண்டான். ஒவ்வொரு வகுப்பாக உலா வரும்போது தனக்கோடியின் வகுப்பிற்கு வந்ததும் அவனை எழுந்து நிற்கச் சொல்லி அவன் மீதான புகார்களை ஆசிரியர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு அவனை அவருடைய அறைக்கு அழைத்துச் சென்று நிற்க வைத்துவிடுவார். தனக்கோடி அன்று ஓய்வு நேரம் வரை வெறுமனே நின்றிருப்பான். அதுதான் அவனுக்கு மிகக் கடுமையான தண்டனையாக இருக்கும். அதைவிட அவனுக்கு அவசரமாக வந்து முட்டி நிற்கும் சிறுநீர் சிக்கல் வாட்டிவிடும். ஒருமுறை தாங்க முடியாமல் காற்சட்டையிலேயே கழித்து விட்டான். “சொல்லத் தெரியாதா!” என்று அதற்கும் சேர்த்து அடி விழுந்ததுதான் மிச்சம். ஓய்வு மணி அடித்ததும் சோமசுந்தர் ஆசிரியரைப் பரிதாபத்துடன் பார்ப்பான். “என்னடா? பாத்ரூமா? அதெப்படிடா உனக்கு மட்டும் சும்மா சும்மா வருது?” என்று அதட்டினார்.

“உனக்கு இதுதான் லாஸ்ட் வார்னீங்!” என்று அத்துடன் பலமுறை சொல்லப்பட்ட அதே வசனத்துடன் மீண்டும் வெளியே அனுப்பிவிடுவார். பதிலுக்குத் தனக்கோடி வாழைத்தோப்பில் வைத்து அவரைப் பலமுறை சுட்டிருக்கிறான். பத்திகளுக்கு இடையே ஓடவிட்டுப் பின்னால் நின்று சுட்டு மகிழ்ந்துள்ளான். தனக்கோடியின் வாழைத்தோப்பில் சோமசுந்தர் ஓடாத ஓட்டமில்லை. பயந்து வாழைமரங்களுக்கிடையே ஒளிந்து அலறுவதைப் போலவும் தனக்கோடி நினைத்துக் கொள்வான்.

“டேய் கிறுக்குப் பையலே… சும்மா ஒண்டியா பேசிக்கிட்டு இருக்கான் பாரு…”

தனக்கோடியின் அப்பா கணேசன் வேலை முடிந்து அப்பாதையில்தான் வீட்டிற்கு வருவார். மோட்டாரை வாழைத்தோப்பிற்குள் நுழையும் பாதையில் நிறுத்திவிட்டுக் கத்துவார். அப்பொழுது தனக்கோடி குளத்திலோ அல்லது மாமா கொட்டாயின் அருகிலோ பாய்ந்து யாருமில்லாத யாருடனோ சண்டை போட்டுக் கொண்டிருப்பான்.

“டேய் தனக்கோடி… வாழமரம் ஒரு முற தாரெ தள்ளிக் கொடுத்துட்டு அப்புறம் செத்துப் போயிரும்… ஆனா… கீழ விதைச்சிட்டுத்தான் சாவும்… அது வந்து பெறகு அடுத்த தாரெ தள்ளும்…உங்கப்பா குடும்பத்த பார்த்துக்கிட்டாரு… அப்புறம் நீ… இந்த மாதிரி தோப்பு வச்சு பொழைச்சுக்கோ…”

தனக்கோடியைக் கொட்டாய் வரை இழுத்து வந்து தேவராஜன் பக்கத்தில் அமரவைத்துப் பேசத் துவங்கும்போதெல்லாம் தனக்கோடி நெளிவான். குளம் அவனை வா வா என்று அழைக்கும்போது தேவராஜன் மீண்டும் வாழைமரங்களைக் காட்டியப்படியே பேசத் துவங்குவார். அதில் பாதி அவனுக்குப் புரியாது.

“பெரிய தோப்பு மொதலாளி ஆனோனே மாமாவுக்கு வேலக் கொடுப்பியாடா?” என்று அவன் முதுகைத் தடவிக் கொடுப்பார். தனக்கோடி “உஸ்ஸூ!” என்று தோப்புப் பக்கம் ஓடுவான். “டேய் வாழமரத்து மேல பேஞ்சிராதெ. செத்த நீ…!!!” என்று அவர் பதிலுக்குக் கத்துவதையும் வாழைமரங்கள் கேட்டுச் சலித்துப் போயிருக்கும்.

அன்று கணேசன் வந்து பார்க்கும்போது தோப்பில் தனக்கோடியின் சத்தமே இல்லை. வீட்டிற்குள் வந்தவர் குளித்துவிட்டு மீண்டும் வெளியே வந்து பார்த்தார். தூரத்தில் பாடல் சத்தம் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது. எப்படியும் தனக்கோடி வீட்டிற்கு வந்துவிடும் நேரம்தான். கணேசன் வரும்போதோ அல்லது வந்து சில நிமிடங்களிலோ அவன் ஓடி வந்துவிடுவான். டுரியான் தோப்பில் ஒளிந்துகொள்ள சூரியன் தயாராகிக் கொண்டிருந்தது. வாசலில் திசைக்கொன்றாய் சிதறிக் கிடந்த ஜப்பான் சிலிப்பரைத் தேடி அணிந்து கொண்டு வாழைத்தோப்பில் நுழைந்தார்.

கொட்டாயில் வானொலி மட்டும்தான் ஓடிக் கொண்டிருந்தது. வேறு யாரும் அங்கில்லை. குளத்தைப் பார்த்தார். குளித்தெழுந்த சலனமும் இல்லை. தண்ணீரின் மேற்பரப்பு நிதானத்துடன் இருந்தது. குளத்தினோரம் வளர்ந்திருந்த தாமரை செடிகள் சில நசுங்கி ஒடுங்கியிருந்தன. தனக்கோடி அந்தக் கரை முனையிலிருந்து சறுக்கி விளையாடியதன் விளைவாக இருக்கக்கூடும்.

“டேய் தனக்கோடி? எங்கடா இருக்க? எங்காவது ஒன்னுக்கு இருக்கப் போய்ட்டானா?”

கணேசன் பலம் கொண்டு கத்தினார். எரிச்சலும் பயமும் ஒன்றர அவருடைய குரலில் கலந்திருந்தன.

“இந்தப் பயன அடிச்சி துவச்சா என்ன? எங்கயாவது மேஞ்சிக்கிட்டுத்தான் இருக்கான்…” கணேசனுக்கு அழுத்தம் தாளமுடியவில்லை. ஐந்து ஏக்கர் பரப்பிலான தோப்பு அது. எங்கிருந்து துவங்கி எங்குப் போய்த்தேடுவது என்கிற குழப்பத்துடன் நின்றிருந்தார்.

“இந்தத் தேவா எங்கப் போய்ட்டாக…? அவரயும் காணோம்…”

தனக்கோடியின் அம்மா பார்வதிக்குக் கேட்கும்படி கத்தினார். அவர் வீட்டிலிருக்கும் கடைக்குட்டிக்குச் சோறு ஊட்டிக் கொண்டிருந்தார். ஷாலினி பள்ளியில் கொடுத்த பாடத்தைச் செய்து கொண்டிருந்தாள். நாளை வகுப்பிற்கு வெளியே நின்று அவமானப்பட அவள் தயாராக இல்லை.

“ஷாலு! உங்கப்பா கத்தறாரு. என்னானு பாரு…”

ஷாலினி வாசல்வரை வந்து இருண்டு கொண்டிருக்கும் தோப்பைப் பார்த்தாள். அப்பா தூரத்தில் உலாவிக் கொண்டிருப்பதைப் போல தெரிந்தது. மாமரத்தின் மேலே பொருத்தப்பட்டிருந்த மின்கலன் விளக்கு எரியத் துவங்கியிருந்தது. வாழையிலைகள் காற்றில் இன்னமும் அடங்காமல் படப்படத்துக் கொண்டிருக்கும் காட்சிகளைத் துல்லியமாக விளக்கு வெளிச்சம் பரவிய இடத்தில் மட்டும் நன்றாகக் கவனிக்க முடிந்தது.

“மா… அப்பா தோப்புல அண்ணன தேடிக்கிட்டு இருக்காரு…” என்று கத்தினாள். சாப்பிட்டுக் கொண்டிருந்த தம்பி அலறி வாயில் அதக்கி வைத்திருந்த ஒரு பிடி சோற்றை அப்படியே வெளியே துப்பினான்.

“யேன்டி…உயிரா போச்சு? இப்படிக் கத்தற? இந்தா இவனுக்கு ஊட்டு…”

பார்வதி வெளியில் வந்து நின்றார். மூச்சிரைத்தது.

“போய்ட்டானா? அங்க டுரியான் தோப்புக்குப் போய்ருப்பானோ? இல்ல எங்காச்சாம் அல்லுருல பேய்ஞ்சிக்கிட்டு இருப்பாங்க… அது என்ன பெரச்சனன்னு தெரில… வீட்டுலயும் ஒரே மூத்தர வாடெ…”

அவள் கத்தியது கணேசனின் காதில் விழவில்லை. தோப்பை ஆழ்ந்து நோக்கினாள். ஒன்றும் தெரியவில்லை என்பதால் மீண்டும் ஏதோ முனகிக் கொண்டே உள்ளே போய்விட்டாள். சிலசமயங்களில் இப்படி நடக்கும். நேரமாகியும் விளையாட்டில் ஆழ்ந்துபோன தனக்கோடியை அடுத்து கணேசன் அடித்து இழுத்து வருவார் என்று அவளுக்குத் தெரியும். வந்ததும் அவளிடமும் இரண்டடி முதுகில் வாங்கி நெளிந்து கொண்டு மூலையில் போய் ஒடுங்கிக் கொள்வான்.

சில மாதங்களாக வாழைத்தோப்பில் விளையாடிவிட்டு வருவதால் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதில்லை. இப்பொழுது மீண்டும் துவங்கிவிட்டான் என்று அவளுக்கு எரிச்சல் கூடியது. கணேசன் நீண்டு தெரியும் ஒவ்வொரு பத்தியாகக் கவனித்தார். மக்கிய வாழைத்தண்டுகள் சில சரிந்து கிடந்தன. தூரத்திலிருந்து பார்த்தால் யாரோ படுத்துக் கிடப்பதைப் போன்றும் தோற்றமளிக்கும். கணேசன் கடைசி பத்தி வரை செல்ல வேண்டுமென்றால் நேரமெடுக்கும். என்ன செய்வதென்று தெரியாமல் மீண்டும் கத்தினார். பதிலேதும் இல்லாமல் ஒரு காகம் மட்டும் கரைவது எங்கோ தூரத்தில் கேட்டது. வாழைமரங்களுக்கிடையே வளர்ந்திருந்த புதருக்குள்ளிருந்து தேரைகள் எகிறிப் பாய்ந்து எங்கோ போய்க் கொண்டிருந்தன. விளக்கு வெளிச்சத்தில் அவற்றின் உடல் மின்னுவதும் தெரிந்தது. வண்டுகளின் இரைச்சல் மெல்ல பெருகத் துவங்கியது.

குளத்தைப் பார்த்து கடைசி வீட்டு நாய் விடாமல் குரைத்துக் கொண்டிருந்தது. இருளில் அதன் கண்கள் மின்னுவதும் கணேசனுக்கு அச்சத்தைக் கூட்டியது. கணேசன் பதறிக் கொண்டு வீட்டிற்கு ஓடினார்.

“அடியே… அவன் காணம்டி. இவ்வளவு நேரத்துக்கு வராம இருக்க மாட்டான்… நீ இந்தத் தேவாக்குப் போன போடு… வாழத்தோப்புல பாம்புங்க வேற ரொம்ப…”

கணேசனின் பதற்றம் பார்வதிக்கும் ஒட்டிக் கொண்டது. கைப்பேசியைத் தேடி தேவராஜனுக்கு அழைத்துப் பார்த்தார். அழைப்பிற்கு யாரும் பதிலளிக்கவே இல்லை.

“ங்கெ… யாரும் எடுக்க மாட்டறாங்க…”

கணேசன் கைவிளக்கை எடுத்துக் கொண்டு மீண்டும் வாழைத்தோப்பில் நுழைந்தார். இருள் பரவி மூடியிருந்த வாழைத்தோப்பில் காற்றின் ஓலமும் வாழையிலைகளின் சலசலப்பும் பெருகிக் கொண்டிருந்தன. மனத்தில் படப்படப்பு. கைவிளக்கை எதிரில் காட்டியவாறு தோப்பின் பின்பக்க வேலிவரை சென்றார். அதற்கடுத்து செம்பனை காடு. வேலியைத் தாண்டி குதித்து அங்கெல்லாம் தனக்கோடி சென்றிருக்க மாட்டான் என்று உறுதியாக நம்பினார். பின் கதவு மக்கியத் தகறத்துடன் வேலிக் கம்பியோடு இழுத்துப் பூட்டப்பட்டிருந்தது.

வேலியோரம் கைவிளக்கைக் கொண்டு அலசினார். தூரத்தில் வேலியின் கோடியில் யாரோ தரையில் படுத்துக் கிடப்பது தெரிந்தது. மக்கிய வாழைத்தண்டாக இருக்குமோ என்கிற சந்தேகத்துடன் அருகில் சென்று பார்த்தார். தேவராஜன் தரையில் விழுந்து கிடந்தார். கணேசன் பதறியவாறு முகத்தைக் கவனித்தார். வலது நெற்றியில் பொத்தல். இரத்தம் பெருகி வழிந்து முகத்தை மறைத்துக் காய்ந்திருந்தது. கணேசன் அப்படியே தரையிலேயே உட்கார்ந்துவிட்டார். வாழையிலைகளின் அசைவுகள் ஒன்று திரண்டு ஓர் ஓலத்தை உற்பத்தி செய்து கொண்டிருந்தது. மீண்டும் எழுந்து கணேசன் வீட்டுப் பக்கம் ஓடினார்.

“ஐயோ போச்சே… பையன எவன் கொன்னு எங்க போட்டிருக்கான்னு தெரியலயே…” என்று மார்பில் அடித்துக் கொண்டு வீட்டிற்கு ஓடினார். கைவிளக்கில் இருந்து படர்ந்த ஒளி அங்குமிங்குமாகச் சிதறின. குழாயில் பட்டுக் கால் இடறியதால் பாதி தூரத்தில் கைவிளக்கும் நழுவி எங்கோ விழுந்தோடி மறைந்தது. கணேசனுக்கு அதை எடுக்க வேண்டுமென்ற எண்ணமெல்லாம் இல்லை. மண் மிருதுவாக இருந்ததால் கால்கள் புதைந்து சேற்றை வாரி இறைத்தது. காலில் அணிந்திருந்த ஜப்பான் சிலிப்பரும் எங்கோ தவறவிட்டிருந்தார்.

“அடியே! நம்ம பிள்ளயே எவனோ கொன்னுட்டான் போல…” என்று கணேசனின் குரல் உடைந்து சிதற உள்ளே வந்தார்.

தனக்கோடி அம்மாவின் முன் நின்றிருந்தான். சட்டையெல்லாம் சேறாக இருந்தது. கால்களில் இரத்தக் காயம். கணேசன் அப்படியே ஸ்தம்பித்து நின்றார்.

“பையன் எதையோ பார்த்துப் பயந்துருக்கான் போலங்க… ஒன்னும் கேக்காதீங்க…”

பார்வதி அவரைக் கட்டுப்படுத்தினார்.

“அங்க தேவராஜன் செத்துக் கிடக்காறான்டி… அந்த டுரியான் தோப்புல நடந்த மாதிரி எவனோ கொல…”

பார்வதி அவரின் வாயைப் பொத்தியவாறு, “டேய் நீ போய் மொத குளிடா…” என்று தனக்கோடியை விரட்டினாள். தனக்கோடியின் முகத்தில் இருந்த கலவரம் மெல்ல விலக அங்கிருந்து நகர்ந்தான். உள்ளே சென்று முதலில் சிறுநீர் கழித்துவிட்டு தொட்டியில் இருக்கும் நீரை அள்ளி உடலில் ஊற்றினான். பெருவிரலில் இருந்த காயத்தைத் தடவிப் பார்த்தான். சிறிய வெட்டுக் காயம். விரல்களின் இடுக்கில் ஒட்டிக் கொண்டிருந்த நீர்ப்பாசியை எடுத்து உதறிவிட்டு மீண்டும் நீரை உடலில் ஊற்றினான். உடலின் மொத்த உறுப்புகளும் சில்லிட்டன. மெதுவாக தொட்டியில் இறங்கி முங்கினான். அம்மாவிற்குத் தெரியாமல் இப்படிச் சில சமயம் செய்வதுண்டு. வேகமாக நீந்தினாலோ அல்லது தண்ணீர் மேற்பரப்பை ஓங்கி அடித்தாலோ அம்மாவிற்குக் கேட்டுவிடும் என்கிற பயத்தில் மெதுவாக உள்நீச்சல் செய்து முங்கி முங்கி எழுந்து மீண்டும் தொட்டியிலிருந்து வெளியேறினான்.

உடலைத் துவட்டிவிட்டு பின்கட்டிலுள்ள கொடியில் காய்ந்து கொண்டிருந்த அவனுடைய அரைக்கால் சிலுவாரை எடுத்து அணிந்து கொண்டு சாப்பாட்டுக் கூடையைத் திறந்தான். அதே மீனில்லாத மீன் கறிதான். பசி என்பதால் வேறு வழியில்லாமல் சோற்றைப் போட்டுச் சாப்பிடத் துவங்கினான். வெளியில் ஆளரவமும் கூச்சலும் கேட்டுக் கொண்டிருந்தது. அதனூடே அம்மாவின் அழுகை சத்தமும் மலாய்க்காரர்களின் உரையாடல்களும் கேட்டுக் கொண்டிருந்தன. தனக்கோடி சாப்பிட்டு விட்டு அறைக்குள் சென்றான். ஷாலினியும் தம்பியும் விளையாடிக் கொண்டிருந்தார்கள். தம்பி தனக்கோடியைப் பார்த்ததும் கையில் வைத்திருந்த விளையாட்டுப் பொருளை அவன் மீது ஓங்கியடித்தான். இதை அவன் வழக்கமாக செய்வதுதான். பலமில்லாத வீசல் என்பதால் அப்பொருள் தனக்கோடியை நெருங்கும் முன்பே கீழே விழுந்தது.

“அண்ண! தேவராஜன் மாமாவ யாரோ சாவடிச்சிட்டாங்களாம். நீ அங்க தோப்புலத்தான இருந்த பாத்தீயா?”

தனக்கோடி புருவத்தை உயர்த்தி உதடுகளில் ஆள்காட்டி விரலைக் குவித்து ஷாலினியிடம் சத்தம் போடாதே என்று சைகை காட்டினான். பின்னர், மீண்டும் ஷாலினியிடம் வந்து “அஸ்கார் மேன்ஸ் தோப்புல இருக்காங்க தெரியுமா?” என்றான்.

“என்ன அஸ்கார் மேன்ஸா? யாரது?”

“ஷ்ஷ்ஷ்ஷ்! சத்தமா சொல்லாத. அவுங்க உள்ள வந்துடுவாங்க… தோப்புல ஒளிஞ்சிருக்காங்க…”

ஷாலினி தனக்கோடி சொன்னதைக் கேட்டதும் குதுகலமானாள். கட்டிலின் விளிம்பில் அமர்ந்த தனக்கோடியை நெருங்கிச் சென்றாள்.

“அண்ண… எனக்குச் சொல்லுண்ண…”

அதுவரை அவனை எப்பொழுதும் கடிந்து தள்ளும் ஷாலினி வாழைத்தோப்பு கதையைக் கேட்க ஆவலானாள். தனக்கோடி இல்லாத மீசையை நீவிவிட்டவாறே, “ஆ!ஆ! அதுவொரு பயங்கரமான கத…வாழத்தோப்பு வாழத்தோப்பு மட்டும் இல்ல. அதுக்குள்ள கெட்டவங்க இருக்காங்க…” என்று குரலை மாற்றிப் பேசினான்.

“ஐயோ! பேய் இருக்கா?” ஷாலினியின் முகம் மாறியது. பேய்க் கதையைக் கேட்கும் தொனிக்கு அவள் மாறியிருந்தாள். சட்டென கதவைத் திறந்து அம்மா உள்ளே வந்தார். அவர் கண்கள் அழுது வீங்கியிருந்தன. பதற்றத்துடன் இருந்தாள்.

“டேய் கட்டையல போறவன… தோப்பு பக்கம் போனன்னு யாருகிட்டயும் சொல்லிடாதெ. நீ அந்தப் பக்கம் போகலன்னு சொல்லிட்டோம்… அப்புறம் போலிஸ் கூட்டிட்டுப் போய் தேவ இல்லாத கேள்விங்கள கேக்கும்… புரியுதா? ஸ்கூல்லகூட சொல்லிடாத…” என்று சொல்லிவிட்டு மீண்டும் அம்மா வெளியில் போனார்.

“இந்தக் கஞ்சாக்கார பையனுங்களோட வேலண்ணே… இவனுங்க அந்நியாயம் தாங்கல…போன தடவயும் அவனுங்கத்தான் செஞ்சிருக்கணும்…” வெளியில் கம்பத்து தலைவர் அல்போன்சா வந்து அங்குக் கூடியிருந்த கூட்டத்தில் சத்தமாகக் கத்தினார். அவர் குரலில் கோபம் தெறித்தது.

“அண்ணெ! நீ சொல்லு… அங்கத் தோப்புல பேய் இருக்கா?”

தனக்கோடி ஷாலினி அப்படிக் கேட்டதும் மேலும் பூரிப்பானான். அவள் இதுவரை அவனிடம் இப்படி நெருங்கி எதையும் கேட்டதில்லை. பக்கத்தில் படுத்தாலே உதைத்துக் கட்டிலிருந்து தள்ளிவிடும் தங்கை இப்பொழுது தனக்கோடியின் ஒரு சுவாரஷ்யமான கதைக்குத் தயாராக இருந்தாள்.

“அந்த அஸ்கார் மேன்ஸ் ஒரு மூனு பேரு உள்ள ஒளிஞ்சிருக்காங்க… அப்படியே துப்பாக்கிய வச்சிக்கிட்டு தோப்புல சுத்துவாங்க. நான் அன்னாடம் உள்ள போய் அவங்கள சுடுவன் தெரியுமா?”

ஷாலினி சட்டென நிமிர்ந்து உட்கார்ந்து அவனைச் சந்தேகத்துடன் பார்த்தாள். “யாரு நீ சுடுவ? ஓ உன்கிட்ட துப்பாக்கி இருக்கா…? பொய் உடாத சொல்லிட்டன்… உண்மைய மட்டும் சொல்லு…”

அதற்குள் அப்பா உள்ளே வந்து தனக்கோடியை ஓங்கி ஓர் அறைவிட்டார். தனக்கோடி சுருண்டு நிற்க வைக்கப்பட்டிருந்த பாயில் விழுந்து சரிந்தான். பாயில் அதீதமான சிறுநீர் வாடை. பழைய அலமாரி அவன் மோதியதும் அதிர்ந்து ஒரு கதவு திறந்து கொண்டது.

“அறிவு இருக்கா? எத்தன தடவ சொல்றோம் காட்டுக்குள்ள போவாத… தோப்புக்குள்ள போவாதன்னு. வந்தவனுங்க தேவாவுக்குப் பதிலா உன்ன சாவடிச்சிருந்தா?”

தனக்கோடி அறை விழுந்த இடத்தை வேகமாகத் தடவிக் கொடுத்துவிட்டு மூலையில் போய் சுருங்கினான். கண்கள் இருண்டிருந்தன.

“இனிமே அந்தத் தோப்புப் பக்கம் போய் பாரு… செத்தடா நீ!” என்று கண்களைப் பெரிதாக்கி கணேசன் அதட்டிவிட்டு வெளியேறினார். தனக்கோடி அழவில்லை. இதுபோன்று இதைவிடவும் கொடூரமான அடி உதைகளை வாங்கி உடல் மரத்துப் போயிருந்தது. அப்பா சென்று மறைந்ததும் மீண்டும் எழுந்து ஷாலினியிடம் வந்தான்.

“நீ நம்பறியா இல்லயா?”

“எத? நீ துப்பாக்கில சுடறதயா…? போடா…” என்று கிண்டலுடன் கேட்டாள்.

“இரு என் துப்பாக்கிய காட்டறன்…” என்று மெதுவாகக் கதவைத் திறந்து பின்பக்கமாக வெளியேறி வீட்டிற்குப் பக்கத்தில் இருக்கும் பழைய கோழிக் கூண்டினோரம் சென்றுவிட்டுக் கையில் எதையோ கொண்டு வந்தான். ஒரு பழைய துணியில் சுற்றப்பட்டிருந்தது.

“என்னண்ணே இது? துப்பாக்கியா?” என்று ஷாலினி வாயைப் பிளந்தாள். தனக்கோடி உள்ளிருந்து கொக்கி போல நுனியில் ஒரு பக்கம் கூர்மையாக இருக்கும் இரும்பை வெளியில் எடுத்தான்.

“இது துப்பாக்கியா? இது இரும்பு…அள்ளி விடற…”

“ஏய்… இதுதான் என் துப்பாக்கி. உள்ள தோப்புல கிடைச்சது…”

“யேன் ரத்தமா இருக்கு?”

“அந்தக் குளத்துல ஒரு சீனன் இருக்கான். பாசிக்குள்ள ஒளிஞ்சிருக்கான். அவன் தான் தேவா மாமாவெ கொல்லச் சொன்னான்… அதான் நான் அவரெ மண்டையில சுட்டுட்டன்…” இரும்பின் கூர் நுனி பக்கம் கொத்துவதைப் போல காட்டி, சுட்ட விதத்தைச் சிரித்துக் கொண்டே கூறினான்.

“யேன் அந்தச் சீனன் தேவா மாமவெ கொல்லச் சொன்னான்?”

“ஷ்ஷ்ஷ்! தேவா மாமா கெட்டவரு…சும்மா சும்மா கொட்டாய்க்குள்ள பாட்டு கேட்க வான்னு உள்ள கூட்டிட்டுப் போய்டுவாரு… தெரியுமா?”

ஷாலினி ஆச்சரியத்துடன், “என்ன பாட்டு?” என்றாள்.

“ஷ்ஷ்ஷ்! அது இரகசியம். உள்ள பாவர் ரேஞ்சர்ஸ்கிட்ட சொல்லிருக்கன்… பயமா இருக்கும்…அப்புறம் மாமா தோப்புக்குள்ள விடலன்னா நான் எப்படி கொளத்துல குளிக்கறது…அஸ்கார்மேன்ஸ்கூட சண்டெ போடறது…”

ஷாலினி அவன் தலையில் கொட்டிவிட்டுக் கடிந்து கொள்வதைப் போல முகத்தைத் திருப்பினாள். அவனுடைய காற்சட்டை நனைந்து நீர் ஒரு சிறு ஓடையைப் போல கோட்டை உருவாக்கிக் கொண்டே வழிந்து கொண்டிருந்ததும் தெரியாமல் இருட்டில் மின்னும் கண்களோடு உட்கார்ந்திருந்தான்.

-கே.பாலமுருகன்

சிறுகதை: இறைச்சி

அப்பா இறைச்சிகளை கம்பியின் நுனிகளில் மாட்டிக் கொண்டிருக்கிறார். பன்றி, கோழி, ஆடு, மாடு என்று அத்தனை இறைச்சிகளும் வரிசையாகத் தொங்கிக் கொண்டிருக்கின்றன. அடுத்து டைகரின் வாயில் ஒரு நீண்ட இரும்பு கம்பியைச் செருகி அதன் இறைச்சியையும் வரிசையில் மாட்டுகிறார். கண்கள் குரூரமாக வாயில் இரத்தம் சொட்ட அப்பாவிற்குப் பின்னால் நான் நின்று கொண்டிருக்கிறேன். அடுத்து கம்பியைச் செருக நான் வாயைப் பிளக்கிறேன்.

“பட்டர்வெர்த்…!!!”

விரைவு இரயில் வாயைப் பிளந்து பயணர்களை வெளியே கொட்டிக் கொண்டிருந்தது. தம்பி எழுந்து கீழறங்க நானும் தூக்கத்தில் ஏற்பட்ட அரைமயக்கத்துடன் எழுந்து பின் தொடர்ந்தேன். அங்கிருந்து இறங்கி ஒரு நூறு மீட்டர் நடந்து கட்டிடத்தின் முன்னே வந்து சேர்ந்தோம். பக்கத்தில் நிற்கும் என் தம்பியிடமிருந்து ஒரு முத்தம் கிடைத்தால் நான் இங்கேயே சாகத் தயார் என்பதைப் போல நின்றிருந்தேன். உடலின் மொத்த இறுக்கமும் வயிற்றில்தான் இருந்தது. உயிரை வயிற்றுப் பகுதியில் வைத்து அழுத்திக் கொண்டிருப்பதாக உணர்ந்தேன். கட்டிடத்தின் நுழைவாயிலில் நின்று கொண்டிருந்தவர்கள் என்னையே பார்ப்பது போன்று பிரமை. எப்படியும் அதிக நேரம் இல்லை. இன்றுடன் இதுபோன்ற எண்ணமெல்லாம் முடிந்துவிடும்.

அவ்வுயர்ந்த கட்டிடத்தின் பத்தாவது தளத்தை நோக்கி மின்தூக்கி மேலேறிக் கொண்டிருந்தது. அவமானம் மிச்சமாய் உடலிலும் மனத்திலும் நெளிந்து மனத்தை வேரறுத்துக் கொண்டிருந்தது. தம்பியை விட்டுச் சற்றுத் தள்ளி நின்று கண்ணாடி சுவரைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவன் கண்களை எதிர்க்கொள்ள அத்தனை சாதூர்யமோ அல்லது சக்தியோ இருக்கிறதா என்று தெரியவில்லை. கைகள் தளர்ந்து கொட்டிவிடுவதைப் போன்று பிடிமானமற்று உடலில் தொங்கிக் கொண்டிருந்தன. எதையாவது இறுக்கமாகப் பிடித்துக் கொண்டால் போதுமானது எனத் தோன்றியது. கண்ணாடி சுவரில் தெரிந்த என் உடலின் மீது பல்லாயிரக் கைகள் படர்ந்து கொண்டிருந்தன. உடலும் மனமும் குறுகின.

மின்தூக்கி மேலே சென்றடையும்வரை தம்பி ஏதும் கேட்டுவிடக்கூடாது என உறுதியாக இருந்தேன். நேற்றிலிருந்து அவன் என்னிடம் ஏதும் பேசவில்லை. எல்லாவற்றையும் அமைதியாகக் கவனித்துக் கொண்டு மட்டுமே இருக்கிறான். உடைத்துச் சுக்குநூறாக்கிவிடும் ஒரு பிரச்சனையின் முன் சலனப்படாமல் நிற்பதற்கு ஏதேனும் வழிகள் உண்டா என்பதை மட்டுமே மனம் தேடிக் கொண்டிருந்தது. உடலில் இருந்த உதறல் இன்னும் ஓய்ந்தபாடில்லை. மாரியம்மா பாட்டி  உயிரோடிருந்திருந்தால் ‘வாடி கண்ணு என் அம்மா…தாயீ’ என்று கட்டியணைத்து அவர் மார்பில் புதைத்திருப்பார். அது அத்தனை ஆறுதலாக இருந்திருக்கும்.

தம்பி வயதில் என்னைவிட ஐந்தாண்டுகள் சிறியவன். என்னைவிட நல்ல உயரம். அப்படியே அவன் தோளில் சாய்ந்து கதற வேண்டும் என்றுகூடத் தோன்றியது. காலையில் அப்பாவின் மீது இதே எண்ணம் இருந்தது. கால்கள் சிறுத்து கைகள் சுருங்கி மீண்டும் சிறுமியாகி அம்மாவின் மடியில் விழுந்திட மனம் ஒவ்வொரு கணமும் துடித்துக் கொண்டிருந்தது. வெட்கப்பட்டு குறுகி நிற்பதற்குத்தான் இத்தனை ஆண்டுகள் காத்து மெல்ல மெல்ல வளர்ந்து நிற்கின்றேனா என்கிற கேள்விகள் வட்டமிட்டுக் கொண்டிருந்தன. மூளை கனத்து வீங்கி சுமையாகிக் கொண்டிருந்தது.

அப்பா இந்நேரம் என்ன நினைத்துக் கொண்டிருப்பார்? மாஜு பாசார் எனும் சந்தையில் இறைச்சிக் கடையொன்றில் வேலை செய்கிறார். மதியம் 1.00 மணி வரை கோழிகளை வெட்டித் துண்டுகளாக்கிக் கட்டிக் கொடுக்கும் வேலை. கடந்த எட்டு ஆண்டுகளாக அதே வேலைதான். தினக்கூலி. ஒரு நாளில் எப்படியும் முப்பது கோழிகளைத் துண்டுகளாக்கிவிடுவார். மாஜூ பாசாரில் எல்லப்பன் என்றால் சிலருக்கு மட்டும்தான் தெரியும். அதிலும் சிலர் வெகுநேரம் சிரமப்பட்டு முயன்று பின்னர் நினைவுக்கூர முடியாமல் “தத்தாவ் லா!” என்று சொல்லிவிடும் அளவில் மட்டுமே அப்பா.

அப்பாவிற்கு அவ்விடத்தில் தெம்பளிக்கும் ஒரே விடயம் அம்மோய்தான். அம்மோய் அப்பா வேலை செய்யும் கடைக்குப் பக்கத்தில் பன்றி இறைச்சி வெட்டுபவள். இரண்டு கடைக்கும் நடுவில் கம்பிகளான தடுப்பு மட்டுமே. இரண்டு கடைகளுக்கும் பொதுவான நாதமாக வெட்டுச் சத்தங்கள்தான் கேட்கும். இடதுபுறத்தில் ஒரு வெள்ளை நெகிழி விரிப்பைக் கட்டிக் கடையை மூட முயன்ற முதலாளியின் முயற்சி தோற்றுப் பாதியிலேயே அரையுங்குறையுமாகத் தொங்கிக் கொண்டிருக்கும். அதிலும் கோழி இறைச்சின் சதைத் துண்டுகள் தெறித்துக் கழுவியெடுத்துப் பின்னர் பட்டுப் பட்டுப் படர்ந்து பழுத்து வெள்ளை நிறம் நாளடைவில் பழுப்பாகியிருந்தது. அதன்பிறகு அதை எத்தனைமுறை கழுவினாலும் பழைய நிறத்திற்கு வராது என அப்பாவே சபிக்கத் துவங்கிவிட்டார். ஆனால், ஒவ்வொருமுறையும் அதைக் கழுவு என்பதே முதலாளியின் அலம்பலாக இருக்கும் என்பார். அப்பா வீட்டிற்கு வந்ததும் அன்று அம்மோயுடன் நடந்த சாகசப் போரைப் பற்றி மட்டுமே அம்மாவுடன் சுவாரஸ்யமாகப் பேசிச் சிரித்துக் கொண்டிருப்பார். நானும் தம்பியும் அறையிலிருந்து அதனை ஒட்டுக் கேட்போம்.

“இன்னிக்கு அம்மோய் அசந்துட்டா என்கிட்டெ… அப்படியே ஜக்கு ஜக்குன்னு நாலு கோழியெ வெட்டித் பேசன்ல தூக்கிப் போட்டென்… ஒன்னுகூட மிஸ் ஆகல… ஏய் அப்பா மச்சாம் மச்சான்னு அவளே வாயப் பொளந்துட்டா…”

“ஆமாம்… பெரிய சாகசம்தான்…!” என அம்மா அலுத்துக் கொள்வதும் நிகரான நகைச்சுவை யுத்தமாக இருக்கும்.

கடையில் நடந்ததை அப்படியே செய்து காட்டும்போதுதான் அப்பா தனித்துவமாக மாறிவிடுவார். அம்மோய் எப்படிப் பார்த்தாள் இவர் எப்படிக் கோழியை உரித்தார் என்று இறைச்சிக் கடையை மறு உருவாக்கம் செய்து வீட்டினுள்ளே கொண்டு வந்துவிடுவார். கவுச்சி வாசம் வீசாத குறை மட்டுமே எஞ்சியிருக்கும். மற்றப்படி கோழித்துண்டுகளும் அம்மோயும் வீட்டில் உலாவிக் கொண்டிருப்பார்கள்.

கோழிகளின் தோலை உரித்தப் பின்னர் நீர்த்தொட்டியில் கழுவ வேண்டும். நீர்த்தொட்டி இரும்புக் கம்பி தடுப்பில்தான் சாய்த்து வைக்கப்பட்டிருக்கும். அது அப்பாவிற்கு அம்மோயைக் கவனிக்கவும் கண்களில் சைகைக் காட்டவும் மிகப் பொருத்தமான தருணம் என்று அப்பாவே பெருமைப்பட அம்மாவிடம் சொல்லி வெறுப்பேற்றுவார்.

“உங்களுக்கு இந்த அம்மோய் கத சொல்லலன்னா முடியாதுதானெ…? பார்த்து அவக்கூட ஓடிப் போய்ராதீங்க…” என்று அம்மா சிலுப்பிக் கொள்ளும்போது அப்பா அம்மோயை மேலும் வர்ணிக்கத் துவங்கிவிடுவார். தம்பியும் நானும் அறைக்குள் சிரிப்பை அடக்கப் பலவிதமான முயற்சிகளை மேற்கொள்வோம். எப்படியும் இறுதியில் அப்பாவின் சம்பாஷணைகளின் தொடர்ச்சியை அறுத்து முடிவுக்குக் கொண்டு வருவது தம்பியின் எம்பித் தாவிக் காட்டிக் கொடுத்துவிடும் சிரிப்புத்தான். அவனால் ஓரளவிற்கு மட்டுமே சிரிப்பைக் கட்டுப்படுத்த இயலும். கண்களில் நீர்க் கசியத் துவங்கியதும் வயிற்று வலியும் எடுத்துவிடும். ஆகக் கடைசியாக தரையில் விழுந்து சிரித்துச் சுவரோரம் ஒட்டிக் கொள்ளும்போது சத்தம் வெடித்துவிடும். அதுதான் அவனின் எல்லை. அதற்கு மேல் அவனுடைய சிரிப்பலைகள் அதிகமாகி சத்தமாகச் சிரித்துவிடுவான்.

அவ்வளவுத்தான். அதுவரை அம்மாவுடன் துள்ளலாகப் பேசிக் கொண்டிருந்த அப்பா தனது பேச்சை நிறுத்திவிடுவார். அவருக்குத் தெரிந்த உலகில் நாங்கள் இருவரும் படிப்பாளிகள் மட்டுமே. படிப்பதைத் தவிர வேறு எதையும் செய்ய எங்களுக்கு உரிமையும் இல்லை. அவர் பார்க்கும் நேரம் அல்லது அவர் வீட்டில் இருக்கும் நேரம் நாங்கள் மேற்கொள்ளும் எவ்வித நடவடிக்கைகளும் படிப்பைச் சார்ந்து மட்டுமே இருக்க வேண்டும் என்பது வீட்டின் எழுதப்படாத உத்தரவு.

“நான் படிப்பில்லாம சுத்தன இடம் இல்ல. சீனன்கூட நாய் மாதிரி திரிஞ்சன். வீட்டு வேல செஞ்சன்… போர்மேன் கடையில ஸ்பானர் எடுத்துக் கொடுக்கர வேல செஞ்சன்… கம்போங் ராஜால தட்டுக் கழுவற எல்லான்னா இப்பக்கூட வேடிக்கயா சிரிப்பாய்ங்க… சொல்லிட்டன். ஒழுங்கா படிச்சமா நல்ல மார்க்கெடுத்தமா… அரசாங்க வேலைல உக்காந்தமான்னு இருக்கணும்…”

அப்பா எங்களைப் பார்த்து நேரிடையாகப் பேச மாட்டார். அம்மாவிடம் சொல்வதைப் போன்று அதே அறிவுரைகளை எங்களிடம் கடத்திக் கொண்டிருப்பார். கேட்டுச் சலித்து அதன் அடுக்கு மாறாமல் மீண்டும் ஒப்புவிக்கவும் இயலும். தம்பி அளவிற்கு எனக்குப் படிப்பும் ஏறவில்லை என்பதுதான் அவரின் உச்சமான எரிச்சல். வெட்டுக் கத்தியில் பட்டுச் சிதறும் இறைச்சித் துண்டுகளைப் போல அவர் வார்த்தைகள் மனத்தில் தெறிக்கும்.

 

“நான் கை வச்சன் அப்புறம் வேற மாதிரி போய்ரும்… ஒழுங்கா இருந்துக்க சொல்லு,”

எனக்கு அப்பாவின் அதிகப்பட்சமான வசையின் ஆழம் தெரியும். மிரட்டலின் கடைசி தொனியில் அதற்குமேல் எம்ப முடியாமல் தடுமாறுவதின் அறிக்குறியாய் தொண்டையைச் செருமுவார். பிறகு, வெளியில் இருக்கும் டைகரிடம் விளையாடச் சென்று விடுவார். டைகர் அவர் மீது பாய்ந்து முகத்தை நக்கும். மெல்ல சாந்தமாகிவிடுவார். எங்கள் நாக்குகளுக்கு இல்லாத பலம் டைகரின் நாக்கிற்கு இருந்தது.

தம்பி அப்பாவின் சின்ன சின்ன அதட்டலுகெல்லாம் பயந்து அறைக்குள் முடங்கிவிடுவான். அவர் பேச்சு சத்தத்ததை உற்றுக் கேட்டு அவர் எங்கு இருக்கிறார் எங்கு நகர்கிறார் என்று அறைக்குள்ளிருந்து அலசி ஆராய்ந்துவிட்டு அவர் அறைக்குச் செல்வதையும் மோப்பம் பிடித்து அறிந்துவிடுவான். அதன் பின்னர், ஓடிப் போய் அம்மாவிடம் கேட்க வேண்டியதையும் கேட்டு அடம் செய்ய வேண்டியதையும் சாப்பிட வேண்டியதையும் திருட்டுத்தனமாக தொலைக்காட்சியில் சத்தமில்லாமல் அவசரத்திற்குக் கிடைக்கும் நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டும் அறைக்குள் வந்து மீண்டும் அடங்கிவிடுவான்.

எனக்கு அப்பாவின் குரல் எல்லாத் திசைகளிலிருந்தும் கேட்பதாக மட்டுமே தோன்றும். ஒரே தொனியில் ஒரே பாய்ச்சலில் ஒரே அலையில் வீடு முழுவதும் பரவியிருந்தது. அத்தகைய மனநிலைக்கு வருவதற்கு என் வயதும்கூட காரணமாக இருக்கலாம். எஸ்.பி.எம் முடிக்கும்வரை அப்பாவுடன் உண்டான போராட்டம் மிக நீளமானது.

“பொம்பள பிள்ளயா இது? அங்க ஸ்கூல் பஸ்த்தோப்ல எவன் கூட நின்னு பேசிக்கிட்டு இருந்துச்சி கேளு… இப்ப எனக்குத் தெரிஞ்சாகணும்…”

இன்றும் ஞாபகமுள்ள இரவு அது. நான் அறையில் அப்பொழுதுதான் அறிவியல் பாடம் தொடர்பான குறிப்புகள் எழுதலாம் என்று புத்தகத்தையும் சிறிய நோட்டையும் எடுத்து மேசையில் வைத்துக் கொண்டிருந்தேன். அன்று தாமதமாக உள்ளே வந்தவரின் கேள்வி அத்தனை காட்டமாக இருக்கும் என்று நான் எதிர்ப்பார்க்கவில்லை. இதெல்லாம் புதிதல்ல என்று தெரிந்தும் அக்கேள்வி கோபத்தைக் கிளறியது.

“இப்ப சொல்ல சொல்லு… அவன்கூட என்ன பேச்சு? படிச்சி கிழிச்சிட்ட மாதிரி… இதெல்லாம் தறுதலத்தான்… வேற என்ன…?”

அம்மாவிடம் பதில் இருக்காது என்று எனக்குத் தெரியும். அப்பாவைக் கத்தவிட்டு இறுதியில் சாப்பாட்டை எடுத்துப் பரிமாறத் துவங்கிவிடுவார். உணவின் முன் உணர்வுகளும் சோம்பிவிடும். அதுவும் அன்று அம்மா ‘மீன் கிச்சாப்’ செய்திருந்தார். அப்பாவிற்குப் பிடித்தமானது.

“ம்மா… யேன் கூட்டாளிங்கக்கூட பேசக்கூடாதா?”

முதன்முதலாய் 15ஆவது வயதில்தான் எதிர்த்துப் பேசத் துவங்கினேன். பிறகு அதுவே வாடிக்கையாகவும் ஆகிவிட்டது. முதலில் அப்பாவிற்கு நான் எதிர்த்துக் குரல் எழுப்பியது அதிர்ச்சியளித்திருக்கும். இரண்டு நாள் வீட்டில் அவருடைய சத்தமே இல்லை. இரவெல்லாம் தூங்கவில்லை என்றுகூட அம்மா புலம்பிக் கொண்டிருந்தார். அதன் பிறகு அம்மாவிடம் கேட்பதாக எனது கேள்விகளையும் கோபத்தையும் அப்பாவிற்குக் கொண்டு சேர்க்கும் அவருடைய உத்தியையே கைவரப் பெற்றேன்.

“எதிர்த்துக்கிட்டு மட்டும் வந்துரும்… அடுத்தவன் பார்த்துச் சொல்றான்… பிள்ளயோட ஒழுக்கத்த மத்தவன் பேசக்கூடாது…”

“பாக்கற பார்வையில சுத்தம் இல்லன்னா எல்லாமே தப்பாத்தான் தெரியும்… மனசுல அழுக்கு இருந்தாதான அத வெளிலயும் கொட்டுவோம்…”

அன்றைய நாள் விவாதம் இப்படி அறைக்கும் அறைக்கும் வெளியேயுமாக நீண்டு எப்பொழுது ஓய்ந்தது என்றெல்லாம் தெரியவில்லை. அவர் முதலில் தூங்கினாரா அல்லது நானா என்று கூடத் தெரியவில்லை. ஆனால், அதன் பிறகு அவர் கவனமெல்லாம் தம்பியின் மீது மட்டுமே இருந்தது. என்னைப் பற்றி அவர் பேசுவதையும் சாடுவதையும் மெல்ல குறைத்துக் கொண்டார். அவரின் சுவர் இறுகியது. வீட்டிலிருந்தும் அவர் உலகத்தில் நான் பிரவேசிக்கவில்லை. அப்பா என்பது எனக்கொரு சுவராக மட்டுமே தெரியத் துவங்கியது. அப்படியாகவே அவரை ஏமாற்றிப் பெற்ற திருப்தியில்லாத எஸ்.பி.எம் முடிவுகளைக் கொண்டு மேற்கொண்டு எதையும் செய்ய முடியாமல் தவித்துக் கிடைத்த வேலைகளில் சேர்ந்து இப்படியாக ஐந்தாண்டுகள் வந்தடைந்துவிட்டன. எனக்கிருக்கும் ஆறுதல்கள் அம்மாவிற்குப் பிறகு சிவசங்கரியும் பாலகுமாரனும்தான். நாவல்கள் நிரம்பிய அறையே எனக்கான மனக்கிடங்கு.

அன்று காலை விடியும்வரை மெத்தையில் மிதப்புடன் படுத்திருந்தேன். தம்பித்தான் அலறியடித்துக் கொண்டு அறைக்கு ஓடிவந்தான். முகநூலில் என்னுடைய நிர்வாணப்படங்கள் பகிரப்பட்டிருப்பதாகக் காட்டினான். அவன் கைகள் நடுங்கின. யாரிடமோ எங்கோ அவமானப்பட்டு அழுது முடிப்பதற்குள் வீடு வந்தவனின் முகம் காட்டிக் கொடுத்துவிட்டது. படாரென்று கட்டிலிலிருந்து எழுந்து அவன் காட்டிய முகநூலைப் பார்த்தேன். ஏதோ ‘சமூக டைகர்ஸ்’ என்று பெயரிட்ட முகநூல். நடிகைகளின் நிர்வாணப் புகைப்படங்களும் இன்னும் என்னைப் போல பல பெண்களின் நிர்வாணப் புகைப்படங்களும் நிறைந்திருந்த முகநூல். காலை 7.45க்குப் பகிரப்பட்டுள்ளது. இரண்டு மணி நேரம் மட்டுமே ஆகியுள்ளது. அதற்குள் 700 பேரால் பகிரப்பட்டு எப்படியும் ஆயிரத்தைத் தாண்டிய சமூகக் கொந்தளிப்புக் கருத்துகள். எனக்கு என்ன நேர்ந்து கொண்டிருக்கிறது என்பதைச் சுதாரித்துக் கொள்ளும் முன்பே தலை சுற்றியது. மயக்கம் சூழ்ந்து கொண்டது. சில மணி நேரங்களுக்குப் பின்னர் அப்பா கத்திக் கொண்டே வீட்டிற்குள் வந்தார். எப்படியும் அவருக்கும் செய்தி கிடைத்திருக்கும்.

“அப்பவே சொன்னென் எந்தப் பையனையும் நம்பாதன்னு…ஓ! அவன் என் கூட்டாளி… இவன் என் கூட்டாளின்னு இளிச்சா? இப்பப் பாத்தீயா? அவ்ளத்தான் இனிமே வெளில தலை காட்ட முடியாது. சாவ வேண்டியதுதான்…”

அப்பா தலையில் அடித்துக் கொண்டார். ஓங்கி நெஞ்சில் குத்திக் கொண்டார். கோபத்தின் உச்சம் சென்றால் அவர் தன்னைத் தானே தாக்கிக் கொள்வார். சிலசமயம் தொப்பியைக் கொண்டு தன்னையே அடித்துக் கொள்வார்.

“துண்டு துண்டா வெட்டிப் போட்டுருவன் சொல்லு…”

அவருடைய வார்த்தைகள் என்னை ஒன்றுமே செய்யவில்லை. மரத்துப் போய் அறைக்குள் அமர்ந்திருந்தேன். அம்மா பதறியடித்துக் கொண்டு அப்பாவையும் என்னையும் மாறி மாறித் தேற்ற முயன்று தோற்று ஓரிடத்தில் அமர்ந்துவிட்டார். அழைப்புகள் பெருகி மின்னூக்கமில்லாமல் அடைந்துவிட்ட கைப்பேசியின் திரை நொறுங்கியிருந்தது. வேலையிடத்துத் தோழிகள், உறவுக்காரர்கள் எனக் கணக்கில்லாமல் பலரின் அழைப்பிற்கு நான் பதிலளிக்கவே இல்லை.

“அது அவ இல்லங்க… எவனோ வேணும்னே போட்டோவ ஒட்டி எடிட் செஞ்சிருக்காங்க… அதான் கூட்டாளிங்க வந்து சொல்லிட்டுப் போனாங்க. அந்தப் பேஸ்புக்குல எல்லாரும் ரிப்போர்ட் செஞ்சிட்டாங்களாம்…இவனுங்களுக்கு இதே வேலத்தான்…போட்டவன விட இத எல்லாத்துக்கும் அனுப்புறானுங்க பாரு… அவனுங்கள செருப்பால அடிச்சாதான் என்ன?”

அப்பா வெட்டிப்போட்டக் கோழியைப் போல அசைவில்லாமல் கிடந்தார். ஒரு துடிப்பும் இல்லை. கண்கள் எதிரிலிருந்த நாற்காலியின் கால்களை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தன. கண்கள் மேலேறவில்லை.

“ங்க… போலிஸ்ல ரிப்போர்ட் பண்ணிடலாம்…துர அதான் சொன்னான். அவுங்க சைட்டுல போய் ரிப்போர்ட் பண்ணிட்டாங்களாம்… ஆனாலும் நம்ம கண்டிப்பா செஞ்சாகணுமா… இன்னிக்குப் போலிஸ்ல ரிப்போர்ட் பண்ணிட்டு நாளைக்கு ஏதோ இந்த இண்டர்னெட் சைட் ஏதோ ஒன்னு இருக்காம்… என்னடா அது?”

அம்மா அமைதியில் உறைந்திருந்த தம்பியிடம் கேட்டுவிட்டு அவன் முகத்தைப் பார்த்தார். அவனுக்கும் கண்கள் வீங்கியிருந்தன.

“சூருஹான்ஜெயா கொமுனிக்காசி மல்த்திமெடியா…” என்று உச்சரித்துவிட்டு மீண்டும் மௌனமானான்.

“ஆங்ங்… அதான்… நாளைக்கு அவன் கூட்டிட்டுப் போவான்… இன்னிக்குப் போலிஸ்ல ரிப்போர்ட்… நீங்க…”

அப்பா எழுந்து வீட்டிற்கு வெளியில் வேலிக் கம்பியில் உலர்ந்து கொண்டிருந்த தன் நெகிழி ஆடையை எடுத்து மோட்டாரின் முன் வக்குளில் வைத்தார். சந்தைக்குச் செல்லப் போகிறார் என்பதற்கான சமிக்ஞை அது. இந்நேரம் சந்தை அடைக்கப்படுவதற்குத் தயாராகியிருக்கும். எதிலிருந்தோ தப்பிக்க நினைக்கிறார் என்பது புரிந்தது.

“போலிஸ்ல போய் அதயே ரிப்போர்ட் பண்ண சொல்லு. அவன் கேக்கற கண்ட கேள்விக்கு என்னால பதில் சொல்ல முடியாது… அதுக்கு கோழிக் கத்தில நாக்க அறுத்துக்கிட்டுச் சாவலாம்…”

மோட்டார் வக்குளில் வைத்திருந்த வெட்டுக் கத்தியை எடுத்துச் செய்தும் காட்டினார். மொத்த கோபத்தையும் அவமானத்தையும் கண்கள் தாங்கிக் கொள்ள முடியாமல் சிவந்திருந்தன. அம்மாவிற்கு அவர் மீது சந்தேகம் வலுத்தது. குடிப்பழக்கம் இல்லாத அப்பா கோபத்தாபங்களைக் கொட்டித் தீர்க்கும் இடம் வீடும் அம்மாவும்தான். அவராகவே ஓய்ந்துவிடுவார். இப்பொழுது அழுத்தப்பட்டுள்ள கோபத்தை முழுவதும் கொட்டாமல் வேலைக்குச் செல்பவரை அரைமனத்துடன் அனுப்பவும் மனமில்லாமல் தவித்தார்.

“தோ பாரு. அது அவ போட்டோவா இல்ல இது போய் ப்ரண்டுக்கு அனுப்பி அவன் வெளியாக்கன போட்டோவா எனக்கு அதுலாம் தெரில… அத கண்டுபிடிக்கறதும் உன் கர்ப்பப் பையத் தோண்டி வெளிய எடுத்துப் பாக்கறதும் ஒன்னுத்தான். ஒவ்வொருத்தன் வீட்டக் கதவத் தட்டி அது என் பிள்ள இல்ல… அவ நல்ல பிள்ளன்னு சொல்ல முடியாது… அந்தப் பொழப்புக்குப் பேசாம குடும்பத்தோட வெஷத்த குடிச்சி சாவலாம்…”

அதுவரை கண்களின் ஓரங்களில் தேங்கிக் கிடந்த சோகம் சட்டென உடைந்தொழுகியது.

“வாயக் கழுவுங்க… எவனோ செஞ்சதுக்கு இவ என்னா பண்ணுவா? அவனுங்களுக்கு நல்ல சாவு வராதுங்க… கடவுள் இப்பக் காட்ட மாட்டாரு…” என்று அம்மா வலது காலைத் தரையில் ஓங்கியடித்துக் கத்தினார். கண்கள் ஆக்ரோஷமாக மாறியிருந்தன.

வாய்விட்டு அழமுடியாமல் உள்ளுக்குள் அடக்கி வைத்திருந்த சோகத்தின் கேவலை மேலும் உள்ளுக்குள் அதக்கினேன். வெடித்துச் சிதறினால் நான் உடைந்துவிடுவேன் என்கிற அச்சம். எனது முகநூல் கணக்கை மூடிவிட்டப் பிறகு கொஞ்சம் நிம்மதி நிலவினாலும் இந்நேரம் யாருடைய பசிக்கு நான் தீனியாகி கொண்டிருக்கிறேன் என்று நினைக்கும்போது மனம் பதறியது. உடல் முழுவதும் ஆயிரம் கைகள் விரல்களால் என்னைச் சுரண்டிக் கொண்டிருப்பதைப் போன்று சிலிர்த்தது.

“ஆரம்பத்துல போட்டோவ போட்ட எக்கோன்லேந்து பேஸ்புக்கு எல்லாத்தயும் நீக்கிருச்சி… ஆனா…அதுக்கப்பறம் ஷேர் பண்ணவங்க… இன்னும் சில பேஜஸ்… ரிப்போர்ட் பண்ணிக்கிட்டு இருக்கோம்… மல்த்திமீடியான்னா உடனே எல்லாத்தயும் ப்ளோக் பண்ணிருவாங்க. ஒரு ரிப்போர்ட் மட்டும் செஞ்சிருங்க. போகும்போது போலிஸ் ரிப்போர்ட் கொண்டு போங்க…”

துரை மாமா மீண்டும் அம்மாவிடம் பேசிவிட்டு வைத்தார். அவருக்குத் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சில நண்பர்கள் இருந்தார்கள். அவர்களின் ஆலோசனையின்படியே மாமா எங்களுக்குத் தகவல் தெரிவித்துக் கொண்டிருந்தார். அப்பா வைத்திருந்த கத்தியைப் பார்த்ததும் அதனுள் இல்லாமல் போன ஒரு பளபளப்பை நானே கற்பனை செய்து கொண்டேன். கழுத்தைக் கொண்டு போய் அக்கத்தியின் கூர்மையில் உரச வேண்டும் என்று தோன்றி கொண்டிருந்ததை என்னால் தடுக்க முடியவில்லை.

“பாட்டி… உன் சீனிக்குட்டிய பார்த்தீயா? எதுக்குமே புன்னியம் இல்லாமல் போய்ட்டென்… நீ போன இடத்துக்கே என்னயும் கூட்டிட்டுப் போய்டு…” சுவரில் ஒட்டியிருந்த பாட்டியின் படத்தின் முன் மண்டியிட்டுச் சத்தமும் வெளியே போய்விடாமல் புழுங்கினேன்.

அப்பா மோட்டாரை வேகமாகத் தள்ளியதில் அது முன்கதவில் மோதியிருக்கக்கூடும். கோபத்தில் வெளிப்பாடாய் ஒலித்தது.

“அவளுக்குத்தான் தெரியும் எது உண்ம எது பொய்ன்னு…முடிஞ்சா நான் வர்றதுக்குள்ள…” ஏதோ முணுமுணுத்துவிட்டு சொல்ல வந்ததை அவருக்குள்ளே வைத்துக் கொண்டார்.

அப்பொழுதுதான் ஓடிச் சென்று அப்பாவைக் கட்டியணைத்து அழவேண்டும் என்று மனம் ஏங்கித் தவித்தது. முழந்தாளிட்டு கழுத்தை வலதுபக்கமாய் வைத்து அப்பாவைச் சன்னலிலிருந்து பார்த்தேன். அதுவொரு இறக்கமான சன்னல். மோட்டாரில் ஏறி வீட்டிலிருந்து ஒரு பெருஞ்சத்ததுடன் கிளம்பிப் போய்க் கொண்டிருந்தார். கண்களில் பெருமளவு பெருகி பெருகி வழிந்த கண்ணீர்ப்பரப்பில் அப்பா மிதந்தவாறு மறைந்தது இப்பொழுதும் மனத்தை அழுத்துகிறது.

மின்தூக்கியிலிருந்து வெளியேறி வந்தமர்ந்தும் மனத்தின் படப்படப்பு அடங்கவில்லை. வயிற்றில் கசிந்துகொண்டிருந்த ஒருவகையான திரவம் மேலும் எரிச்சலை உண்டாக்கியது. கைகளின் உதறலை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருக்க இரு தொடைகளுக்கும் நடுவே விட்டு மூடிக் கொண்டேன். அது குளிர் என்று எதிரில் அமர்ந்திருந்த மலாய்க்காரத் தம்பதிகள் நினைத்திருக்கக்கூடும். அவர்களின் முகத்தைப் பார்க்கத் திராணியில்லை. அவர்களும் என் நிர்வாணப்படத்தைப் பார்த்திருப்பார்களா? நிர்வாணம் மதம் இனத்தைத் தாண்டியதாயிற்றே. அதற்கு எவ்வித மொழியும் தேவையில்லை. கண்கள் மட்டும் போதும்.

சற்று நேரத்தில் அங்கு வந்த அதிகாரி விவரத்தைக் கேட்டறிந்து கொண்டு பாரம் ஒன்றனையும் கொடுத்து நிரப்பச் சொன்னார். தம்பி அவனுக்குத் தெரிந்த முகநூல் கணக்குகளின் பெயர்களையும் தனியார் பக்கங்களின் பெயர்களையும் பட்டியலிட்டு படங்கள் உள்ள இணைய முகவரிகளையும் இணைத்து எழுதிக் கொண்டிருந்தான்.

“பலேக் ரூமா ஹந்தார் இமேயில் லின்க் லின்க் இனி லகி சென்னாங்…” என்று புன்னகைத்தவாறே அவ்வதிகாரி கூறினார். அப்புன்னகை மருந்திற்குக்கூட எங்களிடம் இல்லை என்பதும் அவரால் உணர முடிந்தது. ஏனோ அங்கிருக்கும் வரை கைகளின் நடுக்கத்தை என்னால் கட்டுப்படுத்த இயலவில்லை. உடலின் எல்லா பகுதிகளையும் மூடிய ஒரு தடிமனான போர்வைக்குள் ஒளிந்து கொள்ளத் தோன்றியது.

வெளியில் வந்து தம்பியுடன் மீண்டும் இரயிலில் ஏறினேன். அவன் கைகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டேன். அது அவனுக்கு ஏதும் சங்கடத்தை உருவாக்கிவிடுமோ என்கிற பயமும் இருக்கவே செய்தது. அதுவரையிலுமே அவன் என்னிடம் ஒரு வார்த்தை ஏதும் கேட்கவுமில்லை. ஏதாவது கேட்டாலும் மனத்திலுள்ளத்தைக் கொட்டிவிடலாம் என்று காத்திருந்தேன். இறுக்கமான உடலுடனே இருந்தான்.

“அது உங்க அக்காவா?”

“அது உங்க அக்காதானடா…?”

“உங்க அக்காவா அது? என்னடா எல்லா குரூப்லயும் வந்துகிட்டு இருக்கு…”

“தனேஸு உங்க அக்காவாடா… என்கிட்ட அந்தப் போட்டோஸ் இருக்கு. அனுப்பி விடட்டா…?”

“டேய்… உங்க அக்கா மருந்து குடிச்சிக்கப் போவுது பார்த்துக்கடா…”

தம்பி இப்படி எத்தனைக் கேள்விகளை எதிர்நோக்கியிருப்பான். ஒவ்வொரு கேள்விகளுக்கும் முன் அவன் எப்படிக் கூனிக் குறுகியிருப்பான். என் கைப்பேசியைத் தரையில் எரிந்து உடைத்ததும் அவன் தான். வெளி உலகத்தின் குரூரமான சபலங்களின் எந்தச் செய்தியும் என்னை வந்து சேர்ந்துவிடக்கூடாது என்கிற அவனின் முயற்சி எதுவரை என்று எனக்குத் தெரியவில்லை. உலகமே ஒரு பெருத்த கண்ணாகி என்னைக் கவனித்துக் கொண்டிருப்பதைப் போல இருந்தது. உடல் உறுப்புகளை அறுத்து இது வெறும் சதைத்தான் என்று கத்த வேண்டும் எனத் தோன்றியது.

“என் சீனிகுட்டி அழகு… சிரிச்சா கன்னத்துல குழி விழும்… என் தாயீ…”

கண்களை மூடி பாட்டியின் முகத்தையும் அம்மாவின் முகத்தையும் நினைவில் நிறுத்தி அழுத்தத்திலிருந்து தப்பிக்க முயன்றேன்.  இன்றிரவு முடித்துக் கொள்ள மனத்தைத் தயார்ப்படுத்திக் கொண்டிருந்தேன். அப்பா வீடு வருவதற்குள் நான் இருப்பது என்னை மேலும் அவமானத்தின் ஆழத்திற்குத் தள்ளிவிடும்.

“அவளுக்குத்தான் தெரியும் எது உண்ம எது பொய்ன்னு…முடிஞ்சா நான் வர்றதுக்குள்ள…”

மீண்டும் மீண்டும் அப்பாவின் இறுகிய சுவர் எழுப்பிய ஒலி மனத்தில் அதிர்ந்து கொண்டிருந்தது. அச்சுவரில் முட்டி மோதி இரத்தம் கசிய அதை அப்பா இரசிக்க நான் மடிய வேண்டும். உடலில் ஓடும் அத்தனை இரத்தமும் அவருடையது. அதை அவர் முன்னே காணிக்கையாக்கிவிட்டு மடிந்தொழிய வேண்டும். இதற்குமேல் வேறெதுவும் என்னை ஆற்றுப்படுத்தாது என்று உறுதியானேன்.

தம்பியும் நானும் வீட்டை வந்தடைந்ததும் அம்மா வெளியில் உட்கார்ந்திருப்பது தெரிந்தது. வெளுத்தக் கைலி மெலிந்த உடல். அம்மாவிற்குச் சோகத்தைத் தாங்கிக் கொள்ள முடியாத மன அமைப்பு. அப்பாவின் கோபங்களுக்கு முன்னே பதற்றமில்லாமல் நிற்கும் அம்மாவிற்குத் துயரத்தைத் தாங்கும் சக்தி இல்லை. பாட்டி, தாத்தாவின் மரணங்களின்போது மற்ற எல்லோரையும்விட அம்மாவுடனேயே இருந்தது நான் மட்டும்தான். இன்றிரவு எனது மரணத்தின் முன்னே அவர் எப்படிச் சமாளிப்பார் என்பது மட்டுமே சட்டென பெருத்த கவலையாகி போனது.

அறைக்குள் சென்றதும் கதவைத் தாழிட்டுக் கொண்டு தலையணையில் முகம் புதைந்து அழத் துவங்கினேன். உள்ளுக்குள் இருக்கும் அரூபமான சோகங்களைக் கண்ணீராக மாற்றிவிடுவதன் மூலம் அழுத்தங்களைச் சமாளித்துவிடலாம் என்று யார் யாரோ கற்றுக் கொடுத்து ள்ளார்கள்தான்.

“அழுந்துரு பிள்ள. எப்பல்லாம் சோகம் மனச அழுத்துதோ அப்ப அழுந்துரு. அழறதுக்கு ஏன் வீம்பு? மனசு குழந்த மாதிரி… அழுந்துட்டு ஒரு மிட்டாய் கொடுத்தா சரியாயிரும்…” என மனம் தொடர்ந்து இன்னொரு குரலாக மாறி தேற்றிக் கொண்டேயிருந்தது.

தலையணையில் வெளிப்பட்ட என் சத்தத்தைக் கேட்டறியும் கூர்மை தம்பிக்கு வாய்த்திருந்தது. அடுத்த இரண்டு நிமிடங்களில் கதவைத் தட்டினான். நேற்றிலிருந்து மௌனித்திருந்த அவன் காட்டிய முதல் எதிர்வினை இது. கதவைத் தட்டும் சத்தம். முகத்தைத் துடைத்துக் கொண்டு கதவைத் திறந்தேன். உள்ளே வந்தவன் கட்டிலுக்குப் பக்கத்தில் இருந்த மேசையில் மடிக்கணினியை வைத்துவிட்டு அதை முடுக்கினான். பின்னர், அவனுடைய முகநூல் கணக்கில் ஏதோ எழுதி பதிவிட்டுக் கொண்டிருந்தான். அவன் தட்டச்சு செய்யும் வேகத்தில் பதற்றமும் பரித்தவிப்பும் தெரிந்தன. அன்று காற்றுகூட ஏதோ பதற்றத்துடன் தான் வீசிக்கொண்டிருந்தது. கண்கள் மெல்ல மங்கின. காட்சிகள் குறுக்கு வெட்டாக ஓடிச் சிதறின. எங்கோ தவறிக் கொண்டிருப்பதைப் போன்று தோன்றியது.

இப்பொழுது அப்பா தூக்கில் தொங்கிக் கொண்டிருக்கிறார். அம்மா அவருடைய கால்களைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறார். சட்டென தம்பியும் துரை மாமாவும் வீட்டைக் கழுவிக் கொண்டிருக்கிறார்கள். அப்பாவின் கால்கள் என் தலைக்கு மேல் ஆடிக் கொண்டிருக்கின்றன. அக்காலிலிருந்து கோழியின் வெட்டிச் சிதறிய துண்டுகள் சொட்டுகின்றன. அப்பா தலை அறுந்து தொங்கும் கோழியைப் போல கழுத்தை இடதுபக்கமாக வளைத்து என்னைப் பார்க்கிறார். அவர் கண்களிலிருந்து இரத்தம் பெருகி வழிகின்றன.

“மோய்… எழுந்துரு! ஒன்னுமே சாப்டல…”

அம்மாவின் குரல் தூரத்தில் ஒலித்துப் பின்னர் நெருங்கிக் கேட்டதும் சட்டென விழிப்பு. உடலில் பயமும் வியர்வையும் சேர்ந்து வழிந்து கொண்டிருந்தன. அன்னாந்து உத்தரத்தைப் பார்த்தேன். தகரச் சட்டங்களும் இலேசான இருளும் மட்டும் வியாபித்திருந்தன. தம்பி மேசையின் மீது தலையைச் சாய்த்துத் தூங்கிக் போயிருந்தான். மணி 7.30 ஆகியிருந்தது. அப்பா வரும் நேரம். இந்நேரம் நான் செத்திருக்க வேண்டும். ஓர் அற்பத் தூக்கம் என் திட்டத்தைக் கெடுத்துவிட்டது. ஆனாலும் உறங்கிப் போவதற்கு முன்புள்ள மனநிலையைத் தூக்கம் கட்டிக் காப்பாற்றியது. சாவதைத் தவிர வேறு முடிவு மேன்மையானதாக இருக்காது. ஒரு விடியலைச் சமாளித்துக் கடப்பதற்குள் ஏற்பட்ட தவிப்புகள் மனத்தில் இன்னமும் உறைந்திருந்தன.

பள்ளியில் உடன் படித்த நண்பர்கள், போதித்த முன்னாள் ஆசிரியர்கள், உறவுக்காரர்கள், அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் என எல்லோரின் முகமும் தோன்றி மறைந்து கொண்டிருந்தன. இன்னும் சிறிது நேரத்தில் தம்பி எழுந்துவிடுவான். அவன் சென்ற பிறகு மாய்த்துக் கொள்ள அம்மாவின் புடவையையும் தயார் செய்து கொண்டேன். தலையணைக்கு கீழ் முதலிலிருந்து பத்திரமாக உள்ளது. எடுத்து மேலே குறுக்காக ஓடும் சட்டத்தில் மாட்ட வேண்டும். அச்சட்டம் தடிமனானது. தாங்குவதோடு என் உடல் உதறி துடிக்கும் அசைவுகளின் அதிர்வுகளையும் காட்டிக் கொடுக்க வாய்ப்புக் குறைவு. அப்படி வீட்டு உத்தரம் அதிர்ந்து காட்டிக் கொடுத்தாலும் கதவை உடைத்துக் கொண்டு தம்பி வருவதற்குள் நான் செத்திருப்பேன். இந்த உலகம் என்னை என்ன நினைக்கும் என்கிற நினைப்பெல்லாம் மறந்து; அப்பா வரும்போது வெறும் உடல் மட்டும் தொங்கிக் கொண்டிருக்கும். அதுதானே அவருக்கும் வேண்டும்.

ஆக, நான் சாவதைப் பற்றி எனக்கே வருத்தமில்லை. தம்பி மெல்ல சிணுங்கினான். எழுவதற்கான சமிக்ஞை அது. கொஞ்சம் சத்தமாகவே இரும்பினேன். அவனின் நினைவை மீண்டும் அவ்வறைக்குக் கொண்டு வர உதவும். மேலும் சத்தமாக இரும்பினேன். சட்டென எழுந்து நிமிர்ந்தான். கழுத்தில் வலி ஏற்பட்டிருக்கலாம். இரண்டு பக்கமும் சுலுக்கெடுக்கும் வகையில் அசைத்துவிட்டு அறையிலிருந்து எழுந்தான். அப்பொழுதும் என்னிடம் ஒன்றும் பேசவில்லை.

அவன் வெளியேறவும் அப்பாவின் மோட்டார் சத்தமும் வீட்டிற்கு வெளியில் கேட்டது. அப்பா சந்தையில் வேலை முடிந்ததும் பிறகு ஒரு மோட்டார் பழுதுபார்க்கும் பட்டறைக்குப் போய்விடுவார். அங்கிருந்துவிட்டுத்தான் வருவார். இன்றாவது அவர் விருப்பத்தை நிறைவேற்ற நினைத்த என் திட்டங்கள் பலிக்காமல் போய்விட்டது. அவர் வீட்டினுள் வரும் தருணம் என் கால்கள் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்திருக்க வேண்டும். ஏமாற்றத்துடன் அம்மாவின் புடவையை வெளியில் எடுத்தேன். கட்டிலின் மீதேறி நின்று கொண்டேன். சட்டத்தின் உயரத்தை எட்ட இது போதுமான வசதியைக் கொடுக்கும். பலம் கொண்டு புடவையை வீச வேண்டும். பின்னர் இரு பக்கமும் வந்து தொங்கும் புடைவயின் இரு நுனிகளையும் இணைத்துச் சுருக்குப் போட்டு மேலேற்றி சட்டத்தோடு இறுக்க வேண்டும். அல்லல்பட்டுக் கொண்டிருந்த மனத்தை நிதானப்படுத்தினேன்.

“எங்க அவ? இன்னும் ரூம்புலயா இருக்கா?”

என்று அப்பா அதட்டிக் கொண்டே உள்ளே வந்தார். கதவு தட்டும் சத்தம்.

“ஏய் கனிஷா… கதவ தொற…!”

அப்பா. அவரேதான். நெடுநாளுக்குப் பின்னர் முதன்முறை என் பெயரைச் சொல்லி அழைத்துக் கேட்கும் தருணம். இருப்பினும் சாகாமல் இருப்பது அவருக்கே துயரத்தை மேலும் கூட்டிவிடும். என்ன செய்வது? இதுவரை என் அறைக்கதவைத் தட்டாத கைகள் அதிவேகத்துடன் தட்டிக் கொண்டிருந்தது. மனம் பதறியது. சட்டென புடவையைக் கீழே இழுத்துக் கட்டிலுக்கடியில் தூக்கியெறிந்துவிட்டுக் கதவைத் திறந்தேன். ஒருவேளை அவரே கூட என்னை வெட்டிச் சாகடிக்கும் வெறியுடன் வெளியில் நின்று கொண்டிருக்கலாம்.

“ஏய்! என்னா? உலகம் அழிஞ்சிருச்சா? இல்ல நான் செத்துட்டன்னா? இங்க வா…”

வெளியே இழுத்துக் கொண்டு போனார். அப்பாவின் முரடான கைகளுக்குள் என் கை. தடிமனான அந்த விரல்கள், தோல் தடித்துச் சொரசொரப்பாக இருந்த அந்தக் கைகள், கவுச்சி வீச்சம் உச்சத்தில் இருந்த அந்தக் கைகளுக்குள் இருந்தேன். வெளியே மரக்கட்டையொன்றில் தோலுரிக்கப்பட்ட மூன்று கோழிகள் கிடந்தன. அப்பா என் கையில் வெட்டுக் கத்தியைக் கொடுத்தார்.

“இந்தா! உனக்கு எவ்ள வெறி இருக்குமோ எனக்குத் தெரில. இந்தக் கத்தியால இந்தக் கோழிங்கள வெட்டிப் பொளந்து எடு பிள்ள… தோ! இந்த உலகமே உன் கண்ணு முன்னத்தான் இருக்கு. வெட்டு… நல்லா வெட்டு… எல்லாம் செதறட்டும்… கோபம்… வெறி… அவமானம்… வெக்கம்… எல்லாம் செதறட்டும். எல்லாம் வெறும் சதைங்கத்தான்…வேற ஒரு மண்ணும் இல்ல… வெட்டிட்டு உள்ள வா…”

அப்பா கையில் கொடுத்த கத்தியிலிருந்து ஒழுகி ஒட்டியிருந்தது வெறும் இரத்தமாக மட்டுமே தெரியவில்லை.

“என் தாயீ… என் சீனிகுட்டி அம்மாடி… ஒடியா… ஒடியா…” மாரியம்மா பாட்டியின் சத்தம் காதின் ஆழத்தில் சன்னமாகக் கேட்டது.

செந்நிறமாகி வானம் இருண்டது.

“யம்மாடி… இன்னிக்கு அந்த அம்மோய் என்ன பார்த்துக் கண்ணடிச்சா தெரியுமா?” என்று அப்பா அம்மாவிடம் கிண்டலடித்துக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்து கொண்டிருந்தார்.

அதுவரை தேக்கி வைத்திருந்த அத்தனை உணர்வலைகளுடன் கீழிருந்த இறைச்சிகளை வெட்ட வெட்டுக் கத்தியைப் பலங்கொண்டு ஓங்கினேன். தோலுரிக்கப்பட்ட இறைச்சிகள் என் முன்னே நிர்வாணமாய் கிடந்தன.

 

-ஆக்கம்: கே.பாலமுருகன்