Dangal – பெண்களின் மீதான அடக்குமுறைகளை வெல்லுதல்

அமீர் கான் அவர்கள் தயாரிக்கும் அனைத்து படங்களும் சமூக அக்கறையும் கலை எழுச்சியுமிக்க படைப்பாக இருக்கும் என மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இப்படத்தைப் பற்றி வேறு என்ன சொல்வது? இந்திய சினிமாவையே பெருமைப்பட வைத்துள்ளது. இயக்கம், இசை, ஒளிப்பதிவு, கலை, நடிப்பு, திரைக்கதை என அனைத்திலும் ஆய்வுப்பூர்வமாகவும் தெளிவாகவும் படத்தைத் தயாரித்துள்ளார்கள்.

இந்தியக் கிராமங்களில், மூலை முடுக்குகளில், சமூகத்தின் அடியாழத்தில், திறமையான பெண்கள் நம்பிக்கையுடன் திரைக்குப் பின்னால் காத்திருக்கிறார்கள். அவர்களை வெளியே கொண்டு வர வேண்டும் என்கிற அகத்தூண்டலைப் படம் மசாலாத்தனங்கள், பிரச்சாரப் போக்குகள் இன்றி மிகவும் நேர்மையாக முன்வைத்துள்ளது. சபாஷ். ஓர் உண்மை கதையைப் படமாக்குவதில் இருக்கும் அனைத்து சிக்கல்களையும் இலாவகமாகத் தவிர்த்து இதனை ஒரு அசலான படைப்பாக வழங்கியிருக்கிறார்கள். நம்பிக்கை தூண்டல்களை முன்னெடுக்கும் படங்களில் வரும் வழக்கமான காட்சிகளைக்கூட அமீர் கான் நிராகரித்துவிட்டுப் படத்தைச் சுமக்கும் கதைக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கியுள்ளார்.

பெரும்பான்மையான ஆண்களை முன்னெடுக்கும் குடும்பங்களில் ஆணாதிக்க சமூகங்களில் அடுத்த தலைமுறையின் ஆழமனத்திலும் பெண்களுக்கு எதிரான சிந்தனைகளே மெல்ல விதைக்கப்படுகின்றன. வீட்டில் தம்பி எத்தனை சோம்பேறித்தனமாகவும் இருக்கலாம்; ஆனால், அதே வீட்டில் வாழும் தங்கையோ அக்காவோ  எல்லோருக்கும் முன் எழுந்து வீட்டு வேலைகளைச் செய்ய வேண்டும். தவறினால் அத்தனை சாபங்களையும் பெறுவார்கள். இது குடும்ப நடைமுறை என அனைவரின் மனத்திலும் விதைக்கப்படுவதாலேயே அக்குடும்பத்தால் பயிற்சிப் பெற்று வளரும் ஓர் ஆண் தன் குடும்பத்தையும் ஆணாதிக்கம் சார்ந்து கட்டமைக்கிறான்.

அப்படிப்பட்ட ஒரு குடும்பத்திலிருந்து வரும் அப்பாத்தான் அமீர் கான். தன்னுடைய குத்து சண்டை இலட்சியங்களை அடைய ஓர் ஆண் வாரிசுத்தான் வேண்டும் என விடாப்பிடியாக முயல்கிறார். ஆனால், தொடர்ச்சியாக நான்கு பெண் குழந்தைகளே பிறக்கின்றன. தன்னுடைய கனவுகள் சிதைந்துவிட்டதை எண்ணி வருத்தத்துடன் குடும்பத் தலைவராக அமிழ்கிறார். சட்டென தன் பெண் குழந்தைகளுக்கு இயல்பாகவே குத்து சண்டைக்கான திறமையும் வலிமையும் இருப்பதை உணர்கிறார். அடுத்த நிமிடமே அவர்கள் இருவரையும் குத்து சண்டையையில் ஈடுப்படுத்த சமூகம் உருவாக்கி வைத்திருக்கும் பெண்களுக்கான விதிமுறைகளையெல்லாம் மீறுகிறார். பெண் குழந்தைகளை அடக்கியாளும் வகையிலான நம்பிக்கைகளை உடைத்தெறிகிறார். பெண்களுக்கு நீண்ட கூந்தல் வேண்டும் எனும் பாரம்பரியமான தடைகளை எல்லாம் தாண்டுகிறார். இறுதியில், பெண்களை அடக்கும் மிகவும் மோசமான ஒரு சமூக/குடும்பப் பின்னணியைக் கொண்டிருக்கும் அமீர் கான் அவற்றிலிருந்து விடுப்பட்டு இரு பெண் பிள்ளைகளையும் ஒரு தேசமே பெருமைப்படும் அளவிற்கு நிறுத்துகிறார்.

தந்தை வழி சமூகத்தின்  அடக்குமுறைகள் தொடர்பான அனைத்து  கற்பிதங்களுக்கும் எதிராக ஒரு புதிய தந்தையாக, இந்தியப் பெரும்பான்மை பொதுபுத்திகளுக்கு மாற்றான தந்தையாக உருவாகி நிற்கிறார் அமீர் கான். படத்தில் தனக்கு வேண்டிய உரிய இடங்களில் மட்டும் கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தி கதைக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கியிருக்கிறார். இதனைத் தமிழ் சினிமா நடிகர்கள் நிச்சயம் கற்றுக் கொள்ள வேண்டும்.

ஒரு பெண் தனிமையிலும் இடர்களை வெல்ல துணிய வேண்டும்; தன்னை இழிவாக மதிப்பிடும் சமூகத்தின் முன் வெற்றி பெற்றுக் காட்ட வேண்டும். பெண்கள் சமையலறைக்குரியவர்கள் எனும் பாரம்பரியமான ஒடுக்குமுறை பார்வைகளுக்கு எதிராக எழுச்சிக் கொள்ள வேண்டும் என்பதனை முதன்மையாகப் பதிவு செய்கிறது. படம் பிரச்சாரத்தனங்களுக்கு இடம் கொடுக்காமல் யதார்த்தமாகக் கதையைச் சுமந்து வெளிப்பட்டுள்ளது என்றே சொல்லலாம். கலை எழுச்சிக்கும் சமூக அக்கறைக்கும் மத்தியில் ஒரு புனைவை அதுவும் 2012ஆம் ஆண்டில் காமன்வேல்த் போட்டியில் நடந்த உண்மை சம்பவத்தை அசலான கதையாக ஒரு கலைப் படைப்பாக முன்வைத்த இயக்குனரைப் பாராட்டியே ஆக வேண்டும்.

2016ஆம் ஆண்டின் சிறந்த படம் எனக் கேட்டால், ‘விசாரணை’ படத்தையும் ‘டங்கல்’ படத்தையுமே முன்வைக்க முடியும்.

-கே.பாலமுருகன்

 

 

பைரவா: ஒரு திரைப்பார்வை

பரதன் இயக்கத்தில் பொங்கலை முன்னிட்டு வெளியான ‘பைரவா’ திரைப்படத்தின் விமர்சனம் என்பதைவிட ஓர் எளிய திரைப்பார்வை என்றே சொல்லலாம். பெரும்பாலும் தமிழில் வெளிவரும் ‘மாஸ்’ கதாநாயகர்களின் படங்களில் இருக்கும் வழக்கமான ‘பார்மூலாக்கள்’ இப்படத்திலும் இருக்கின்றன. ஆனால், அவற்றுள் நம்மை இரசிக்க வைக்கும் பகுதிகளையும் மனத்தைக் கவலைக்குள்ளாக்கும் பகுதிகளையும் ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

 

  1. விஜய்

சண்டைக்காட்சிகளுக்கு மட்டுமே அவருக்கு வாய்ப்பிருந்தது. நடிப்பதற்கான, நடிப்பை வெளிப்படுத்துவதற்கான பகுதிகள் திரைக்கதையில் அத்தனை முக்கியம் பெறவில்லை. ஆனால், சண்டைக்காட்சிகளில் சலிக்காமல் இயந்து போயிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். விஜயின் உழைப்பு மொத்தத்திற்கும் அவருடைய படங்களில் அவர் நடிக்கும் சண்டைக்காட்சிகளே சாட்சி என நினைக்கிறேன். இத்தனை வருடங்களில் அவருடைய ‘stemina’ கொஞ்சமும் குறையவில்லை. துப்பாக்கி, கத்தி போன்ற மேலும் வலுவான கதைகளில் அவரை நடிக்க வைப்பதன் மூலம் மட்டுமே விஜயின் திறமைகளை மேலும் தமிழ் சூழலுக்குள் வணிகம் என்பதையும் தாண்டிக் கொண்டு போக முடியும் என நினைக்கிறேன். ஒரு திரைக்கதைக்குச் சண்டைக்காட்சிகள் மட்டுமே தரத்தைச் சேர்த்துவிடாது அல்லவா?

  1. இசை

‘சூது கௌவ்வும்’ ‘ஜிகர்தண்டா’, ‘மெட்ராஸ்’ படங்களின் வழியாக பொதுமக்களின் கவனத்தை ஈர்த்த இசையின் வழி ஒரு சர்வதேச உணர்வை வழங்கக்கூடிய இசை கலைஞராக சந்தோஷ் நாராயணன் அறியப்படத் துவங்கினார். இந்தியக் கலாச்சாரத்தினூடாக இசைக்கத் துவங்கி சிதறுண்டுபோன தமிழ் நவீன சமூகத்தின் ஊடாக வெளிப்படுத்தக்கூடிய ஆற்றல்மிக்க படைப்பாளி சந்தோஷ் நாராயணன். ‘கபாலி’ போன்ற மாஸ் ஜனரஞ்சகப் படத்தில் இசையை வியக்கத்தக்க வகையில் வழங்கிப் பெரும் பாராட்டையும் பெற்றார். ஆனால், அவையனைத்தையும் ஒரே படத்தில் கேள்விக்குறியாக்கிவிட்டார்.

சமீபத்தில் அனிருத் அவர்களின் ‘மார்க்கேட்’ கொஞ்சம் சரிந்து போனதும் சந்தோஷ் நாராயணன் தமிழில் கவனிக்கத்தக்க நிறைய படங்களுக்கு இசையமைக்கும் இசையமைப்பாளராக மாறத் துவங்கினார். கைவசம் நிறைய தமிழ்ப்படங்களுக்குத் தொடர்சியாக இசையமைத்துக் கொண்டிருக்கிறார். அதனால்தான் என்னவோ பைரவா படத்தின் இசையை அத்தனை அலட்சியமாக்கியுள்ளார். ‘கத்தி’ , ‘துப்பாக்கி’ போன்ற கடந்த விஜய் படங்களுக்குப் பலமாக இருந்ததே அதன் இசையும் பின்னணி இசையும்தான். ஆனால், பைரவா படத்தின் ‘வரலாம் வரலாம் வா பைரவா’ என்கிற பாடல் தவிர மற்ற அனைத்தும் நிற்கவில்லை. படம் முழுக்க வரும் ‘வரலாம் வரலாம் வா…’ என்ற பின்னணி இசை மட்டுமே உயிரூட்டுகிறது.

 

  1. கீர்த்தி சுரேஷ்

பெரும்பாலும், வணிக நோக்கமிக்க படங்கள் கதாநாயகிக்கும் கதாநாயகனுக்கும் இடையில் உருவாகும் காதலின் வழி வெளிப்படும் ஒரு வகையான இராசாயணத்தை அதிகமாகக் கவனப்படுத்தியிருக்கும். இப்படத்தில் விஜய்க்கும் கீர்த்தி சுரேஷ்க்கும் அந்த ஜனரஞ்சகக் காதல் உணர்வுகளும் இராசாயண பொருத்தமும் ஒத்தே வரவில்லை என்றுத்தான் சொல்ல வேண்டும். சமீபத்தில் தமிழ் சினிமாவில் மிகுந்த கவனம் பெற்று வரும் கீர்த்தி சுரேஷ் போன்ற கதாநாயகியின் நடிப்பின் மீதும் அவருடைய பாத்திரம் கதாநாயகனுடன் கொள்ளும் இராசாயணத் தொடர்பு குறித்தும் மேலும் கவனித்திருக்கலாம் என்றே தோன்றியது. ‘ரெமோ’ படத்தில் சிவக்கார்த்திகேயனுக்கும் கீர்த்தி சுரேஷ்க்கும் இடையில் இருந்த இராசாயணப் பொருத்தம் தொடர்பான சிறு கவனம்கூட இப்படத்தில் நிற்கவில்லை.

 

  1. கதை

சமூக அக்கறைமிக்க படைப்புகளில் கலைத்தன்மை குறைந்திருந்தாலும், கலைத்தன்மைமிக்க படைப்புகளில் சமூக அக்கறை இல்லாமல் இருந்தாலும் அதுவொரு சிறந்த படைப்பென கருத வாய்ப்பில்லாமல் போய்விடும். ‘கத்தி’ படத்தை நான் விரும்பிப் பார்த்ததற்கான காரணம் அப்படத்தில் விஜய் ஏற்றுக் கொண்ட சமூகப் பொறுப்பு. பல்லாயிரக்கணக்கான தன் இரசிகர்களிடம் நல்ல கருத்தைக் கொண்டு செல்ல அவர் எடுத்த முடிவின் பின்னால் ஏற்பட்ட ஈர்ப்பு. ஆனால், பைரவா படத்தில் சமூக அக்கறைமிக்க கருத்துகளை ஏற்றிருந்தாலும் ஏனோ படத்தின் மற்ற அம்சங்கள் அதனை வலுவாகத் தாங்கிப் பிடிக்க முடியாமல் தடுமாறியே உள்ளது.

கல்வி நிறுவனங்கள் செய்யும் மோசடிகளைச் சமூக அக்கறையுடன் வெளிப்படுத்திய படைப்பை வழங்க முயன்றிருந்தாலும் ‘பைரவா’ படத்தின் இயக்குனர் பரதனின் இயக்கப் போதாமைகள் படத்தை மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்ப்பதில் கொஞ்சம் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளதை அனைத்து விஜய் இரசிகர்களும்கூட ஏற்றுக் கொண்டுத்தான் ஆக வேண்டும். மேலும், கீர்த்தி சுரேஷ், தம்பி இராமையா, இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் எனப் பலரும் பைராவைத் தாங்கிப் பிடிக்கத் தவறியுள்ளார்கள் என்பதை மிகுந்த கவலையுடன் சொல்லிக் கொள்ள நேரிடுகிறது.

படம் முழுக்கச் சோர்வில்லாமல் அத்தனை சக்தியையும் ஒன்று திரட்டி நடிக்கும் விஜய் போன்ற நடிகரின் திறமையை விரிவாக்க, தமிழில் இருக்கும் நல்ல இயக்குனர்கள் முன்வர வேண்டும் என்றே நினைக்கிறேன். விஜய் என்கிற நடிகரின் நடிப்பையும் உழைப்பையும் ஒரு வணிகத் துண்டாக மட்டுமே பாதி படங்களில் பயன்படுத்திய இயக்குனர் பேரரசுவிடமிருந்து கைப்பற்றி அதனைக் காப்பாற்றியது இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ்தான். மேலும், பல நல்ல இயக்குனர்களின் படங்களில் விஜய் நடித்தால் மட்டுமே அவருடைய அடுத்த கட்டம் சிறப்பானதாக இருக்கும். தலையில் ‘விக்’ போடாமல் நடிப்பில் ‘லைக்’ போட வைக்கும் ‘துப்பாக்கி’ விஜய்க்காக மீண்டும் காத்திருப்போம்.

  • கே.பாலமுருகன்

2016 ஆம் ஆண்டின் சிறந்த தமிழ்ப்படங்கள் – ஒரு பார்வை

ஒரு வருடத்தில் வெளிவந்த 100க்கும் மேற்பட்ட படங்களைலிருந்து நல்ல சினிமாக்களைத் தொகுத்துப் பார்க்கும் ஒரு முயற்சிக்காகத்தான் சினிமாவைத் தரவரிசைப்படுத்தியுள்ளேன். பற்பல திரைவிமர்சகர்களின் விமர்சனங்களை உட்படுத்தி, என் இரசனைக்குள்ளிருந்து இப்படங்களை முன்மொழிந்துள்ளேன். சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு என்பதோடு மட்டும் நின்றுவிட முடியாது. கலைக்கு ஒரு பொறுப்புண்டு என்பதையும் நான் நம்புகிறேன். கலைக்கு ஒரு வெளிப்பாட்டுத்தன்மையும் உண்டு. 2016ஆம் ஆண்டில் வெளிவந்த 191 தமிழ்ப்படங்களில் மிகச் சிறந்த 20 படங்களை இங்கே வரிசைப்படுத்தியுள்ளேன். வணிக ரீதியில் அதிகம் சம்பாரித்த படம் பொருளாதார ரீதியில் வெற்றி பெற்றிருக்கலாமே தவிர அவை சிறந்த படம் என அடையாளப்படுத்துதில் சிக்கல் உண்டு.

 

20th place: தேவி

2016ஆம் ஆண்டின் 191 தமிழ்ப்படங்களில் 20ஆவது இடத்தைப் பெறும் படம் ஏ.எல் விஜய் இயக்கத்தில் வெளிவந்த ‘தேவி’ படம் ஆகும். இவ்வாண்டில் வெளிவந்த திகில் படங்களில் தொழில்நுட்ப ரீதியிலும் திரைக்கதை ரீதியிலும் ஒரு வித்தியாசமான முயற்சியைக் கையாண்ட படம். வழக்கமான பேய் படங்களிலிருந்து பலவகைகளில் மாறுப்பட்டிருந்தது. பிரபுதேவா தன் இயல்பான நடிப்பில் படம் முழுவதும் வியாபித்திருந்தார்.

 

19th place: ஒரு மெல்லிய கோடு

ரமேஸ் இயக்கத்தில் வெளிவந்த அர்ஜூன் நடித்த ‘ஒரு மெல்லிய கோடு இவ்வாண்டின் 19ஆவது இடத்தைப் பெறுகிறது. கொலை தொடர்பான விசாரணை படமாக இருந்தாலும், ஒளிப்பதிவு, திரைக்கதை, போன்ற விடயங்களில் அழுத்தமான ஒரு பதிவாக இப்படம் திகழ்ந்தது. ஒரு நாள் இரவில் பிணவறையில் ஒரு பிணம் காணாமல் போய்விடுகிறது என்பதிலிருந்து கதை தொடங்கும். 1980களில் ஹாலிவூட் திரைப்படங்கள் இதுபோன்ற ஓர் எளிய முயற்சியிலிருந்தே உலக சந்தையை எட்டிப் பிடித்தது என்றே சொல்லலாம்.

 

18th place: மெட்ரோ

என் வரிசைப்படி 18ஆம் இடத்தைப் பெற்ற படம் மெட்ரோ. சமூகப் பிரச்சனையைப் பிரச்சார நெடி இல்லாமல் கதையாக்கியப் படம். இப்படம் கையிலெடுத்துக் கொண்ட சமூக சிக்கல் அல்லது குற்றம் நமக்கு மிகவும் அருகாமையில் நடந்த கொண்டிருப்பதும் பெருநகர் வாழ்வின் பெரும் கூச்சல்மிக்க புகார்களும் ஆகும். உணர்ச்சி சித்திரமாய் இப்படத்தை ஆனந்த் கிருஷ்ணன் இயக்கியுள்ளார்.

 

17th place: அழகு குட்டி செல்லம்

சார்லஸ் இயக்கத்தில் 2016ஆம் ஆண்டில் வெளியான ‘அழகு குட்டி செல்லம்’ படம் என்னுடைய வரிசையில் இவ்வாண்டின் 17ஆம் நிலையைப் பெறுகிறது. குழந்தை;குழந்தைமையைச் சுற்றி கட்டமைக்கப்பட்ட சமூகம் சார்ந்த கதையாகும். சிறுவர்கள், பெண்கள், குடும்பம் என சமூகத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் ஒரு கதையைக் கொண்டிருந்த படம் எனப் பலவிதமான பாராட்டைப் பெற்ற படம். சிறுவர்களின் நடிப்பு கதைக்குப் பெரும் பலமாக அமைந்திருந்தது. குழந்தை இல்லாமல் தவிக்கும் தம்பதியினர்; ஆண் குழந்தை கிடைக்காமல் தவிக்கும் அடித்தட்டுக் குடும்பத்தினர்; கருவிலேயே குழந்தையைக் களைக்கத் தூண்டப்படும் பெண் என ஒட்டுமொத்த படமே குழந்தையைச் சுற்றியே பின்னப்பட்டிருந்தது.

 

16th Place: 24

விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யாவின் வித்தியாசமான நடிப்பில் வெளியான படம் ’24’ ஆகும். இவ்வருடம் காலம் பற்றி திரைக்கதை உருவாக்கி வெளியான ஒரே படம். தொழில்நுட்பம், ஒளிப்பதிவு, நடிப்பு என அனைத்திலுமே சிறந்த முயற்சியாக தமிழில் வெளியான நல்ல அறிவியல் சினிமா என்றே சொல்லலாம். சில விசயங்கள் ஜனரஞ்சகமாக இருந்தாலும் இப்படம் கொடுத்த பாதிப்பு கவனிக்கத்தக்கதாகும்.

 

15th place: மனிதன் (2016 countdown)

அமீட் அவர்களின் இயக்கத்தில் 2016ஆம் ஆண்டில் 15ஆம் நிலையைப் பெறும் படம் ‘மனிதன்’ ஆகும். பின்னணி இசையும், படம் முன்னெடுத்த சமூக உணர்வும் மட்டுமே படத்தின் பலம் என்பதால் கவனிக்கத்தக்க ஜனரஞ்சகத்தன்மைமிக்கப் படமாகக் கருதுகிறேன். பிரகாஷ்ராஜ், ராதாரவி, விவேக் என இன்னும் படம் நெடுக வரும் சிறிய கதைபாத்திரங்களும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்தார்கள். ‘முன் செல்லடா’ ஒரு பாடல் வரி நம்மை நிமிர்த்தி வைக்க உற்சாகம் அளிக்கிறது. சபாஷ் சந்தோஷ் நாராயணன்.

 

14th place: அச்சம் என்பது மடமையடா

a musical traveling போன்ற படங்கள் தமிழில் வெளிவருவது மிகக் குறைவுதான். பயணம் கொடுக்கும் திருப்பங்கள் ஆச்சர்யமிக்கவை என்பதை உணர்த்திய படம் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகும். சிம்புவின் தனித்த வழக்கத்திலிருந்து மாறுப்பட்ட நடிப்பும் இசையும் பயணமும் இப்படத்திற்குப் பலமாகும். ‘தள்ளிப் போகாதே’ பாடல் ஒன்றே படத்தைத் தூக்கி நிறுத்தியது என்றும் சொல்லலாம்.

 

13th place: சேதுபதி

அருண்குமார் இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற விஜய் சேதுபதியின் ‘சேதுபதி’ படம் 13ஆம் நிலையைப் பெறுகிறது. ஒரு திமிரான காவல்துறை அதிகாரியின் கதையை நல்ல ஜனரஞ்சக யதார்த்ததுடன் இயக்குனர் படமாக்கியிருந்தார். படத்தின் திரைக்கதை இப்படத்திற்குக் கூடுதல் கவனத்தை வழங்கியது. ஒளிப்பதிவு, பாடல்கள் சிறப்பாக அமைந்திருந்தன. சலிப்புத்தட்டாத அதே சமயம் பல மசாலாத்தனங்களைத் தவிர்த்து உருவாக்கப்பட்ட படம்.

 

12th place: காதலும் கடந்து போகும்

நவீன சினிமா இயக்கத்தில் தனி முத்திரை பதித்து வரும் இளம் இயக்குனர் நலன் குமாரசாமி அவர்களின் ‘காதலும் கடந்து போகும்’ மிகச் சிறந்த முயற்சியாகக் கருதுகிறேன். கடந்த நூற்றாண்டில் காதலில் ஊறிக் கிடந்த தமிழ் சினிமாவின் ஆன்மாவைப் புதுப்பித்துக் காட்டிய படமாக அடையாளப்படுத்துகிறேன். மடோனா செபஸ்தியன் அவர்களின் வரவும், விஜய் சேதுபதியின் யதார்த்த நடிப்பும், பின்னணி இசையும் படத்தின் பலமாகும்.

 

11th place: பிச்சைக்காரன்

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டணி நடித்த ‘பிச்சைக்காரன்’ படத்தை இவ்வாண்டின் சிறந்த 20 படங்களில் பரிந்துரைக்கின்றேன். பிச்சைக்காரர்களின் உலகின் உள்ளே கொண்டு சென்று சிரிக்க வைக்கிறது; சிந்திக்க வைக்கிறது. வழக்கம்போல சினிமாக்குரிய விசயங்கள் இருந்தாலும் திரைக்கதையில் இழையோடும் தாய் அன்பும் கருணையும் நம் மனத்தை நெகிழச் செய்கிறது. பிச்சைக்காரர்களின் மீது பரிதாபத்தை மட்டும் வரவைக்க முயலாமல் அவர்களோடு சேர்ந்து படம் பயணிக்கிறது.

 

10th place: அப்பா & அம்மா கணக்கு

இவ்வருடத்தில் வெளிவந்த இவ்விரண்டு படங்களும் அப்பாவையும் அம்மாவையும் மையப்பொருளாகக் கொண்டு உரையாடியது. ஒரு மகனின்/மகளின் வாழ்வில் அப்பாவின்/அம்மாவின் பங்களிப்பு எப்படியிருக்க வேண்டும் என ஒட்டுமொத்த சமூகமே விழித்தெழுந்து உணர்வதைப் போல படம் சமூக அக்கறைமிக்கதாக அமைந்திருந்தது. சமூக அக்கறைமிக்க ஒரு படைப்பு இயல்பாகவே சமூகத்தின் பெரும்பான்மை மக்களைச் சென்றடைந்துவிடுகிறது.

 

9th place: ஆண்டவன் கட்டளை

காக்கா முட்டை பட இயக்குனர் எம்.மணிகண்டனின் இவ்வாண்டின் வெற்றி படைப்பு ‘ஆண்டவன் கட்டளை’ நிச்சயமாக மிக முக்கியமான படமாகத் திகழ்கின்றது. வெளிநாட்டு வேலைக்குப் பிழைப்புத் தேடிப் போக நினைக்கும் தமிழ் இளைஞர்களின் பெருநகர் வாழ்வின் சிடுக்குகளை மிகவும் யதார்த்தமாகப் படமாக்கியுள்ளார். ஒளிப்பதிவும் கலையும் சென்னையின் பொந்துகளில் எலிகளைப் போல வாழும் இளைஞர்களின் தவிப்புகளைப் பரப்பரப்பில்லாமல் காட்சிப்படுத்துகிறது. மணிகண்டனுக்குச் சபாஷ். யோகி பாபு, நாசர், சேதுபதி, ரித்திகா அனைவருக்கும் பாராட்டு.

 

8th Place: மாவீரன் கிட்டு & உரியடி
(சூழ்ச்சிகளினால் மட்டுமே இங்கு எல்லாம் போராளிகளும் தோற்றிருக்கிறார்கள்)

இவ்விரண்டு படங்களையும் திரையரங்கில் பார்த்திருக்க வாய்ப்பில்லை. சாதி சிக்கலை முன்வைத்துச் சமூக அக்கறையுடன் எடுக்கப்பட்ட படங்கள். தலித் சமூகத்திலும் ஆதிக்க சமூகத்திலும் நிகழும் சாதி சார்ந்த சிக்கல்களை மிகவும் நடுநிலையுடன் நின்று பேசிய படம் என்பதற்காகவே இப்படத்தினை மிகச் சிறந்த படங்களின் பட்டியலில் சேர்க்கிறேன். இதுபோன்ற கதைக்கருக்களை மிகவும் அக்கறையுடன் சுசீந்திரனால் மட்டுமே முன்னெடுக்க முடியும். திரைக்கதையில் இரண்டாம் பாதியில் தொய்வு இருப்பினும் இப்படம் பேசும் அசாதாரண முயற்சி பாராட்டத்தக்கது. 1980களின் இறுதிகளில் கிராமங்களின் உயிரைப் பிடித்து அழுத்திக் கொண்டிருந்த சாதிய வேறுபாடுகளினால் உருவாகும் சமூக சிக்கல்களைப் படம் உரையாட முனைந்துள்ளது. பார்த்திபன், விஷ்ணு, சூரியின் நடிப்பு கதைக்கு ஆழம் சேர்த்தது. அதே போல உரியடி படமும் சாதிய வன்மங்களை அழகாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளது.

 

7th place: அம்மணி

லட்சுமி இராமகிருஷ்ணனின் இயக்கத்தில் இவ்வருடம் வெளியான ‘அம்மணி’ என்கிற யதார்த்த படம் உணர்வு ரீதியில் பயணிக்கும் மிகச் சிறந்த படம் என்றே சொல்லலாம். நடுத்தர வர்க்கத்தின் மனங்களில் படிந்து கிடக்கும் பணத்தின் மீதான வெறியைக் கட்டவிழ்த்துக் காட்டும் படமாகும். பணத்தை நோக்கி ஓடும் இந்த நூற்றாண்டின் கால்களில் நசுங்கிக் கிடக்கும் மனிதநேயத்தையும் அன்பையும் அதற்குப் பதிலாகப் பரவிக் கிடக்கும் போலி முகங்களையும் படம் அழுத்தமாகக் காட்டிச் செல்கிறது. சாலம்மா கதாபாத்திரத்தை விட்டு நம்மால் வெளிவரவே இயலாது. ஒவ்வொருமுறையும் ஒரு முதியவர் குடும்பத்தால் கைவிடப்படும் நிஜங்களை எதிர்க்கொள்ள முடியாமல் காலம் நகர்ந்து போய்கொண்டிருக்கும் உண்மை தனி அறையில் வாழும், குப்பைகளைப் பொறுக்கி வாழும் அம்மணி கதாபாத்திரத்தின் வழி இயக்குனர் ஆழமாக நிறுவுகிறார்.

 

6th place: துருவங்கள் பதினாறு

 

21 வயதே நிரம்பிய இளம் அறிமுக இயக்குனர் கார்த்திக் நரேன் அவர்களின் நுட்பமான திரைக்கதை அமைப்பில் கடந்த வாரம் வெளிவந்த ‘துருவங்கள் பதினாறு’ தமிழ் சினிமா சூழலுக்குள் மகத்தான வரவாகும். இத்தகைய தெளிவான திரைக்கதை அமைப்புடன் எடுக்கப்பட்ட வாழ்வியலைத் தத்துவார்த்தமாகக் காட்சிப்படுத்தும் சினிமாவை இயக்க முதிர்ச்சியான இயக்கப் பயிற்சி அவசியம். ஆனால், கார்த்திக் நரேன் தனது முதல் படத்திலேயே தமிழ் சினிமா இரசிகர்களை அசத்தியுள்ளார். குறிப்பாக, ரகுமான் அவர்களின் நடிப்பும் மிகவும் நிதானத்துடனும் அனுபவப்பூர்வமாகவும் வெளிப்பட்டுள்ளது. திரையரங்கில் காணத் தவறாதீர்கள். 2016ஆம் ஆண்டை நிறைவாக முடித்து வைத்துள்ள படமாகத் திகழும்.

 

5th place: இறுதிச் சுற்று

 

பெண் இயக்குனரான சுதாவின் இயக்கத்தில் பெண்கள் குத்து சண்டையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட 2016ஆம் ஆண்டின் மிகச் சிறந்த அகத்தூண்டல் படம் ‘இறுதிச் சுற்று’ ஆகும். ரித்திகாவின் வருகை தமிழ் சினிமாவிற்குப் புதிய திறப்பாகும். அடித்தட்டு சமூகத்தில் வீட்டோடு ஒடுங்கிக் கிடக்கும் அனைத்துப் பெண்களின் ஆளுமைகளையும் நம் சமூகத்திற்கு நினைவூட்டிய படம். சுதாவின் விறுவிறுப்பான திரைக்கதை அமைப்பு படத்திற்கு மிகப்பெரிய பலமாகும். விளையாட்டுத் தொடர்பாக மிகையான மசாலாத்தனமற்ற ஓர் அசலான சினிமா இது.

 

4th Place: இறைவி

இவ்வாண்டின் தீவிர சினிமா என்கிற அளவில் தமிழில் போற்றக்கூடிய படம் கார்த்திக் சுப்புராஜ் அவர்களின் ‘இறைவி’ படமாகும். நவீன சமூகத்தில் பெண்ணடிமைத்தனத்தின் வேர்களுக்குள் சென்று ஊடுருவி பெண் விடுதலை பற்றி பேசும் துணிச்சலான படமாகும். கார்த்திக் சுப்புராஜ் தமிழ் சினிமாவிற்குக் கிடைத்த பெரும் ஆளுமை என்றே சொல்லலாம். ஆண்களின் உலகம் எத்தனை வன்மத்திலும் குரூரத்திலும் அகப்போராட்டத்திலும் பகைமைக்குள்ளும் சிக்கிக் கிடக்கின்றது என்பதனையும் ஆழமாக எடுத்துக் காட்டிய நல்ல முயற்சியாகும். குற்றங்களும் கோபங்களுக்கும் இடையே பெண் விடுதலையை மூன்று நிலைகளில் மூன்று பெண்களின் வாழ்க்கையினூடாகக் கடந்து சென்று படம் பெண்களுக்கான ஒரு விடுதலை நிலப்பரப்பை வெளிப்படுத்துகிறது. வெகுஜன மக்களை அதிகம் கவராவிட்டாலும் ‘இறைவி’ மிகத் திவீரமான சினிமா என்பதில் சந்தேகமில்லை.

 

3rd Place: குற்றமே தண்டனை

 

பல உலகத் திரைப்பட விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்டு கவனிக்கப்பட்ட எம்.மணிகண்டனின் மற்றுமொரு மனத்தை நெகிழ்த்திய படைப்பு ‘குற்றமே தண்டனை’ ஆகும். இவ்வாண்டின் மிகச் சிறந்த படங்களில் தவிர்க்க முடியாத இடத்தைப் பெறுகின்றது. இப்படத்தைப் பார்த்து முடிக்கும் ஒவ்வொருவரின் மனத்தையும் குற்றவுணர்ச்சிக்கும் மௌனத்திற்கும் ஆளாக்கியது. கண் பார்வை குறையுடைய ( Tunnel vision), சென்னை அடுக்குமாடியில் வாழும் ஓர் இளைஞரின் வாழ்க்கையை மணிகண்டன் ஓர் உளவியல்பூர்வமான மர்மக் கதையாக வழங்கியிருக்கிறார். படத்தின் ஒட்டுமொத்தமான வெளிப்பாடு படத்தின் இறுதி காட்சியில் துளிர்க்கிறது. அதன் பிறகு ஒரு மௌனத்துடன் அழுத்தப்பட்ட மனத்துடன் வெளிவருகிறோம். பார்க்கத் தவறியவர்கள்; அல்லது இப்படத்தின் ஆழ்மனத்தைக் கண்டடைய தவறியவர்கள் மீண்டுமொருமுறை பார்க்கத் தவறாதீர்கள். வித்தார்த் அவர்களின் நடிப்பு தமிழின் சூப்பர் ஹீரோக்களிடம்கூட பார்த்ததில்லை என்றே சொல்ல வேண்டும்.

 

2nd Place: ஜோக்கர்

 

ராஜு முருகனின் இயக்கத்தில் வெளிவந்த ‘ஜோக்கர்’ படம் 2016ஆம் ஆண்டில் வெளியான தமிழ்ப்படங்களில் தெளிவான மக்கள் அரசியலைப் பேசிய படமாகும். இப்படம் சமூகத்தின் ஜனநாயக மனத்தை அலசுகிறது. உலகமயமாக்கலுக்குப் பிறகு வறுமை என்ற சொல்லே நகைப்புரியதாகிவிட்டது என்பதையும் மக்களைப் பற்றி பேசுவதுதான் அரசியல்; தேர்தல் பற்றி பேசுவது அரசியல் கிடையாது என்பதையும் அழுத்தமாக நவீன சமூகத்திற்கு எடுத்துரைத்த படம். மன்னர் மன்னன் என்கிற மனப்பிறழ்வு கொண்ட கதாபாத்திரத்தில் சோமசுந்தரம் தமிழ் சினிமாவின் நடிகர்களுக்கே சவால்விட்டார் என்றே சொல்ல வேண்டும். தன்னை ஒரு ஜனாதிபதியாகக் கற்பித்துக் கொண்டு சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளுக்காகக் குரல் கொடுக்கும் பாத்திரத்தில் அவர் நடித்திருப்பார். வணிக அம்சங்களை நிராகரித்துவிட்டு நேரடியாக மக்கள் பக்கம் நின்ற அக்கறைமிக்க சினிமா என்கிற முறையில் இப்படத்தை எனது பட்டியலில் இரண்டாம் நிலையில் வைக்கிறேன்.

 

1st Place: விசாரணை

 

 

2016ஆம் ஆண்டின் இந்தியாவின் தேசிய விருதைப் பெற்ற வெற்றி மாறனின் ‘விசாரணை’ படம் இவ்வாண்டின் மிகச் சிறந்த படமாக முன்வைக்கிறேன். பிழைப்பு தேடி நாடு விட்டு நாடு போய் எளீய வேலைகளைச் செய்து வாழும் தமிழர்களின் மீது எல்லாம் அமைப்புகளும், அதிகாரங்களும் அரசும் வன்முறையைக் கட்டவிழ்த்துவிடவே முற்படுகின்றன. தமிழன் என்றால் குற்றவாளியாக மட்டுமே இருக்கத் தகுதியுடையவனைப் போல அடித்தட்டு மனிதர்களைப் பொம்மைப் போல கையாளும் காவல்துறையின் அடாவடித்தனத்தை இப்படம் மிகவும் துணிச்சலுடன் பதிவு செய்துள்ளது. மிக நீண்ட இடைவேளிக்குப் பிறகு மனத்தை அதிரவைத்த திரைப்படம். நம் மனத்தை ஒரு படம் உலுக்க முடிந்தால் அதைப் படம் என்பதா அல்லது நிஜம் என்பதா? அதிகாரம் எளிய மனிதர்களை உடல்/உள ரீதியில் வதை செய்யும் ஒவ்வொரு காட்சியும் மிரட்டுகிறது. வெற்றி மாறன் தமிழ் சினிமாவின் மாபெரும் கதைச்சொல்லி என்பதில் சந்தேகம் இல்லை. திரையரங்கைவிட்டு ஒரு பெரிய கூட்டமே சத்தமில்லாமல் கனத்த மனத்துடன் வெளியே வந்ததை என் வாழ்நாளில் அன்று மட்டுமே அனுபவித்தேன். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். நன்றி.

 

  • கே.பாலமுருகன்

 

Train to Busan – கொரிய சினிமா / அறம் என்பது சமூகத்தின் கட்டமைக்கப்பட்ட பொதுவிதிகளுக்கு உடந்தையாவதாகும்

 

sohee-gong-yoo-jung-yoo-mi-choi-woo-sik_1466636416_af_org

“Selfish people are weak and are haunted by the fear of loss of control”

Selfishness is putting your goals, priorities and needs first before everyone else even those who are really in need.

By M.Farouk RadwanMSc.

மேற்சொல்லப்பட்டிருப்பதைப் போல சுயநலம் என்பது ஒரு வகையான மனநோய் தொடர்புடையது எனத் தெரிந்து கொள்ளலாம். இதைத்தான் இன்றைய உளவியல் பகுப்பாய்களும் நிறுவுகின்றன. ஆனால், சுயநலம் என்பது ஒரு தனிமனிதன் தொடர்பான சமூகத்தளத்தில் அவனைச் சம்மற்றக் குணமுடையவனாகக் கற்பிக்க முயலும் ஒரு பொதுப்பிரச்சனையாகவே காலத்திற்கும் பேசப்பட்டு வருகின்றது. ஒரு பொது சமூகத்திற்கு அநாவசியமற்ற அனைத்தையும் ஆராயாமல் அதை ஒரு தனிமனிதனிடமே கொண்டு போய் சுமத்துகிறது. ஆனால், அச்சமூகம் கோரும் அனைத்து பொது நடத்தைகளுடன் ஒரு தனிமனிதன் எல்லாம் வேளைகளிலும் 100% பொருந்திப் போக முடியாதவனாக மாறுகின்றான். அவன் அப்படிச் சமூகத்தின் பொதுவிதிகளுக்கு எதிராகச் செயல்படும்போது அவன் மனத்தை ஆராய்ந்து பார்க்காமல் அவனை விரோதியாக மட்டுமே சமூகம் உருவகிக்க முயல்கிறது. (திட்டமிட்டு செய்யப்படும் எதுவுமே இந்த விவாத்திற்குள் வராது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.)

இக்கொரிய படம் வழக்கமான ‘சோம்பி’ கதையாக இருப்பினும் ‘சுயநலம்’ என்கிற ஒரு விசயத்தை விவாதிக்கத் தூண்டுகிறது. குறிப்பாக, இக்கதையில் இரண்டு விதமான சுயநலவாதிகளைப் படம் அழுத்தமாகக் காட்டுகிறது. கதை நெடுக இவர்கள் பயணிக்கிறார்கள். ஒன்று கதையில் வரும் சிறுமியின் அப்பா மற்றொருவர் அந்த இரயிலில் பயணிக்கும் இன்னொரு வயதான மனிதர். இருவருக்கும் உள்ளே மனக்கூறுகள் களைக்கப்படுகின்றன. பயத்தால் ஆளப்படுகிறார்கள். பதற்ற நிலைக்குள் தள்ளப்படுகிறார்கள். நீரில் மூழ்கி உயிருக்குத் தத்தளித்துக் கொண்டிருக்கும் ஒருவரின் மனநிலையை உங்களால் கணிக்க முடியுமா? அது இருப்பை இழந்து தன் உயிரை மட்டுமே காப்பாற்றிக் கொள்ளப் போரிட்டுக் கொண்டிருக்கும். அத்தகைய ஒருவரைக் காப்பாற்ற நீங்கள் நெருங்கினால் என்ன ஆகும் எனச் சிந்தித்துப் பார்க்க இயல்கிறதா? உங்களை நீருக்குள் அமிழ்த்தி அவர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முயல்வார்கள். இதற்குப் பெயர் சுயநலம் என அத்தனை எளிதாகச் சொல்ல முடியுமா? ஆகவே, சுயநலம் என அறியப்படுகின்றவற்றில் இரண்டு வகைகள் உண்டு என எடுத்துக் கொள்ளலாம்.

உச்சமான பதற்ற நிலையில் உருவாகும் சுயநலம்/ மன உணர்வுகள் கொந்தளிப்புக்குள்ளாகும்போது ஏற்படும் நிலை.

உயிர் மீதான பயம் வந்துவிட்ட பிறகு இத்தகைய குணம் ஒரு மனிதனை அவன் மனத்தை மீறித் தொற்றிக் கொள்கிறது. அடிப்படையான மனக்கூறுகளை அவன் இழந்துவிடுகிறான். அடுத்து, சிந்திக்கும் வலு மெல்ல பலவீனம் அடைகிறது. அடுத்து, அவனை மூர்க்கமாக மாற்றும். அத்தகைய மூர்க்கத்திற்கு ஆளாகிவிட்ட ஒருவனிடம் பொதுநலமோ அன்போ இருக்கப் போவதில்லை. அவன் உணர்வது அவன் உயிர் மட்டுமே.

இரண்டாவது வகையான சுயநலம் பொது சமூகத்திற்கு எதிரானது. தன் மீது அவநம்பிக்கையை உருவாக்கி அவர்களின் செயல்களை ஆட்கொள்ளும் விதத்தைச் சேர்ந்தது. ஒரு பதற்றநிலை உருவாகியதும் முதலில் அதுபோன்ற மனிதர்கள் தன் உடமைகள், தன் இலட்சியங்கள், தன் குடும்பம் குறித்து அதீத கவலைக்குள்ளாகுவார்கள். அடுத்து, தன்னால் தன்னைக் காப்பாற்ற முடியுமா என்கிற சந்தேகத்திற்கு ஆளாகுவார்கள். அடுத்து, தன்னலத்தை முன்னிறுத்தி இயங்கத் துவங்கிவிடுவார்கள். இது அத்தனைக்கு பிறகும் அவர்கள் மனம் நிதானத்தை இழந்திருக்காது. ‘சூ ஒன்’ சிறுமியின் தந்தை இத்தகைய ரகத்தைச் சேர்ந்தவர். அதிக பதற்றத்திற்கு ஆளாகாவிட்டாலும் அருகில் இருக்கும் ஒரு வயதான பாட்டியைக் கூட காப்பாற்ற முனையமாட்டார்; கற்பனி பெண்ணின் உயிரைக் காப்பாற்ற தோணாது. ஆனால், படம் முடியும் தருவாயில் கொஞ்சம் கொஞ்சமாக அக்கதாப்பாத்திரம் தன் சுயநலத்தைக் கொன்றுவிட்டுத் தன் மகளின் இருப்பால் பொதுநலமான ஒரு கதாப்பாத்திரமாக மாறும். இறுதியில் அதுவே தன்னை அழித்தும் கொள்ளும்.

இதே படத்தில் வரக்கூடிய மிகவும் கொடூரமான சுயநலவாதியாகக் காட்டப்படும் இன்னொரு கதாபாத்திரம் படம் நெடுக பலரை சோம்பிக்குப் பலியாக்குவதைப் போன்று சித்தரிக்கப்பட்டிருக்கும். ‘சோம்பியைவிட’ மிகக் கொடூரமானவராக அந்தக் கதாப்பாத்திரத்தைதான் இயக்குனர் சித்தரித்திருப்பார். தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக எல்லோரையும் பலியிடத் தயாராகும் கொடிய மனிதராகக் கதையில் வருவார்.

‘சோம்பியை’ விட சுயநலம் மிகக் கொடிய நோய் என்பதைப் போல அக்கதைப்பாத்திரம் அமைந்திருக்கும். இது ‘எக்ஸ்ட்ரீம்’ நிலை என்றே சொல்லலாம். ஆனால், படத்தின் இறுதி காட்சியில் இத்தனை கொடூரமான மனநிலை கொண்டவராகக் காட்டப்படும் அவரைச் ‘சோம்பி’ கடித்துவிடுகிறது. கதாநாயகன் முன் மண்டியிட்டுத் ‘தன்னுடைய அம்மா வீட்டில் காத்திருப்பார், நான் வீட்டுக்குப் போக வேண்டும், என்னைக் காப்பாற்றுங்கள்’ என ஒரு குழந்தையைப் போல அழுவார். அத்தனை நேரம் மிகக் கொடியவனாகக் காட்டப்பட்ட அவர் ஒரு கணம் மனத்தைக் களைத்துப் போடுகிறார். சட்டென மனம் நெகிழ்கிறது.

 

train_to_busan_h_2016

நீங்கள் ஒரு சில சிறுவர்களைப் பார்த்திருப்பீர்கள். அவர்களின் விளையாட்டுப் பொருளை எடுத்துவிட்டால் கையில் கிடைக்கும் பொருளை நம் மீது விட்டெறிவார்கள். அவர்கள் வன்முறையாளர்கள் என அத்தனை எளிதாகச் சொல்லிவிட முடியுமா? தனக்கு ஐஸ்கிரீம் வேண்டும் என கீழே படுத்துப் புரண்டு அடம் பிடித்துக் கத்தும் குழந்தை சமூகத்திற்கு எதிரான மனம் கொண்டது எனச் சொல்லிவிட முடியுமா? சுயநலம் என்கிற ஒரு வகையான மனக்கூறு ஒருவனை அவனோடு தொடர்புடைய பதற்ற நிலையில் சிறுவனாக்கி விடுகிறது. தான் கரைக்கு ஏறியதும் இன்னொருவரை ஆற்றில் தள்ளிவிடும் சிறுவர்களை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். ஆனால், அது சிறுபிராயத்தில் இயல்பான நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. அதுவே, வளர்ச்சியடைந்து பக்குவமடைந்த மனிதன் அதையே செய்யும்போது அவனை மனநோயாளியாகப் பார்க்க உளவியல் உலகம் கற்பித்து வருகிறது.

இப்படம் சுயநலம் எனும் ஒரு விசயத்தைக் கதையின் ஓட்டத்தில் திணித்துவிடாமல் தனியாக எடுத்து விவாதிக்கும் அளவிற்குக் கவனப்படுத்தியிருக்கிறது என்றே நினைக்கிறேன். மேலும், கதையில் வரும் கற்பனிப் பெண்ணின் கணவர் பொதுநலம் வாய்ந்தவனாகச் சித்தரிக்கப்பட்டுள்ளான். சுயநலவாதிகளைப் பிரித்தறிவதற்காக அக்கதைப்பாத்திரம் படைக்கப்பட்டுள்ளது. மேலும், இத்தகைய மனிதர்களும் நம் மத்தியில் இருக்கவே செய்கிறார்கள். எவ்விதப் பதற்றநிலையிலும் தனக்கான மனக்கூறுகளை இழக்காமல் தன்னம்பிக்கையோடு தன்னலத்தையும் பிறர் நலத்தையும் பொருட்படுத்தும் மனிதர்கள் எங்குமே வியாபித்துள்ளார்கள். பெரும்பாலான உலகப் பேரிடர்களில்கூட இதுபோன்றவர்களைப் பார்க்க முடியும். சில வருடங்களுக்கு முன் சில்லியில் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2000 அடிக்கும் கீழ் 33 தொழிலாளிகள் சிக்கிக் கொள்கிறார்கள். அவர்களை எல்லோரும் உயிர்ப்பிழைக்கக் காரணம் அந்நிலையிலும் மிகச் சாமர்த்தியமாகச் சூழ்நிலையைக் கையாண்ட ஒருவர்தான். 2004ஆம் ஆண்டில் சுனாமி வந்தபோது ஏதோ ஒரு பகுதியில் குழந்தை ஒன்றை நாய் காப்பாற்றி மீண்டும் கரைக்குக் கொண்டு வந்த சம்பவத்தை எல்லோரும் அறிவோம். இதை என்ன பொதுநலம் எனச் சொல்லிவிட முடியுமா? அல்லது அதற்குப் பெயர் என்ன? அத்தகைய அவசர நிலையில் நாயின் எந்த உளவியல் அப்படியொரு காரியத்தைச் செய்யத் தூண்டியிருக்கும்? மனித மனம் விந்தையானது; ஆழமானது என்றால், இதை என்னவென்று சொல்வது?

இது சுயநலத்தைப் பற்றி ஆய்வு கிடையாது. ஆனால், சுயநலம் என்கிற ஒன்றைச் சமூகக் குற்றமாகப் பாவிக்காமல், அதனை மனத்தின் ஒரு செயல்பாடாக, மனத்தோடு தொடர்புடைய ஒரு சிக்கலாகப் பாவிக்கும் மனநிலைக்கு நாம் வரவேண்டும் என்பதற்காக ஓர் உரையாடல் மட்டுமே. சுயநலம் பிடித்த அனைத்து மனங்களிலும் வெறும் குரூரம் மட்டுமே இருந்துவிடாது. அதற்குள் அடம்பிடிக்கும் ஒரு சிறுவனும் குழந்தையும்கூட இருக்கலாம். தனக்குப் பிடித்தமான பொருளை அம்மா யாருக்காவது எடுத்துக் கொடுக்கும்போது அவர் மீது கோபங்கொண்டு பாயும் குழந்தையும்; தன் குட்டியை அதனிடமிருந்து எடுக்கும்போது சட்டென சீரும் பூனையும் அடிப்படையில் யார்?

  • கே.பாலமுருகன்

குழந்தைகள் சினிமா: தனிமை குழந்தைகளின் எதிரி

“ஜப்பானிய சிறுவர்களுக்கும் இளைஞர்களுக்கும் விநோதமான ஒரு பழக்கம் தொடங்கியிருந்த காலக்கட்டம். ஒரு தனிமையான அறைக்குள் தன்னைச் சுயமாக அடைத்துக்கொண்டு வீட்டிலுள்ள மனிதர்களைச் சந்திக்காமல், பள்ளிக்குச் செல்ல விருப்பமில்லாமல் 9 வருடத்திற்கு மேலாக சுயவதைக்கு ஆளாகியிருந்தார்கள். இவர்களை ஜப்பானிய அரசு ‘hikikoman’ என அடையாளப்படுத்தியது.

lonely kid 2

ஒவ்வொரு வீட்டிலும் நாம் அடிக்கடி வீட்டிற்கு வெளியேயும் அல்லது வீட்டிற்குள்ளேயும் பரவலாகக் காணமுடியாத குழந்தைகள் இருக்கவே செய்கிறார்கள். உறவுக்காரர்கள் நண்பர்கள் வீடு தேடி வரும்போது அறைக்குள் சென்று கதவைச் சாத்திக்கொண்டு நம் பார்வையிலிருந்து நீங்கிவிடும் குழந்தைகளைப் பார்த்ததுண்டா? அவர்கள் எப்பொழுதும் சமூகத்திடமிருந்தும் சக மனிதர்களிடமிருந்தும் தனித்திருக்கவே விரும்புகிறார்கள். அவர்களுக்கு மிகவும் நெருக்கமான தேர்வுகள் உள்ளன. தன் அறை மேசை, அறை ஓவியங்கள், தன்னுடைய தலையணை என அவர்களின் உலகத்தைச் சுருக்கிக்கொண்டு அதிலிருந்து வெளிவராமல் நாள் முழுக்க மௌனத்தைத் தரிசித்தப்படியே தனக்குண்டான வேலையில் மூழ்கிக்கிடப்பார்கள். இதைத்தான் anti-social syndrome என்கிறார்கள். இது ஒருவகையான மன அமைப்பு பிரச்சனை என்றும் உளவியல் தீர்க்கமாக நம்புகிறது.

இதே பிரச்சனையைக் கல்வி உலகம் ‘introvert’ என அடையாளப்படுத்துகிறது. யாருடனும் பேசுவதற்கும் பழகுவதற்கும் தன்னம்பிக்கையற்ற மனநிலையைக் கொண்டிருக்கும் மாணவர்களையும் தைரியமாகக் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள முடியாமல் தன்னைத் தானே பதுக்கிக்கொள்ளும் மாணவர்களையும் அப்படி வகைப்படுத்துவார்கள். Introvert and anti social syndrome இரண்டும் ஒரு குழந்தைக்கு மன அளவில் நோய்க்குறிகளை ஏற்படுத்தும் பிரச்சனைகளே. என் வாழ்நாளில் அப்படியொரு சமூகத் தொடர்பு முரண் கொண்ட சில நண்பர்களைச் சிறுபிராயத்தில் சந்தித்துண்டு.

முதலாவது: பேய்வீட்டில் இருந்த முகுந்தன்

நாங்கள்  கம்பத்தில் மூன்று வருடங்கள் தங்கியிருந்தபோது எங்களுக்கு எதிர்வீட்டில் ஒரு மிகப்பெரிய பேய் வீடு இருந்தது. மற்ற வீடுகளைக் காட்டிலும் இந்த வீடு பரவலான நிலத்தையும் விநோதமான வீட்டுக் கட்டுமானத்தையும் கொண்டிருந்தது. வீட்டின் முன்வாசல் இரும்பு கதவிலிருந்து அந்த வீட்டின் வாசல் கதவிற்கு சராசரி ஒரு சிறுவன் ஓடினால் போய் சேர்வதற்கு எப்படியும் இரண்டு நிமிடங்கள் ஆகிவிடும். வீடுகள் இருந்த தெருவைக் கவனிக்காதபடிக்கு வாசல் கதவு வேறு பக்கமாக அமைக்கப்பட்டிருந்த விதம் வித்தியாசமாக இருந்தது. இது போன்ற வாசலைப் பார்க்கும்போதெல்லாம் அந்த வீட்டு மனிதர்கள் யாரிடமிருந்தோ தள்ளி இருக்கவே விரும்புகிறார்கள் எனத் தோன்றும்.

முகுந்தனின் வீடும் அப்படித்தான் எங்களிடமிருந்து விலகியிருந்தது. மதியம் பள்ளி முடிந்து முகுந்தன் முன்வாசல் கதவைத் திறக்கும் சத்தம் கேட்டு வாசலுக்கு ஓடிவருவேன். புத்தகப்பையைத் தலையில் மாட்டிக்கொண்டு வீட்டை நோக்கி நடந்துகொண்டிருக்கும் அவனுடைய புறமுதுகில் விழும் என் பார்வை அதற்கு மேல் நீளாது. மறுநாள் அதிகாலையில் வீட்டிற்கு முன் வந்து நிற்கும் பேருந்தில் ஏறுவதற்கு மட்டுமே மீண்டும் வெளியே வரும் முகுந்தனின் மீது சட்டென ஆர்வம் கூடியது. அவனிடம் ஓரிரு வார்த்தைகள் பேசிவிட வேண்டுமென இலட்சியம் கொண்டிருந்தேன். ஆனால் ஒவ்வொருமுறையும் எனக்கும் அவனுக்கும் மத்தியில் விழுந்துகிடந்த சோம்பலான மதியத்தைத் தவிர வேறொன்றுமில்லாமல் நகர்ந்தது காலம். முகுந்தனின் அப்பா வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருந்தார். அவன் சிறுவயதாக இருக்கும்போதே அவர் சிங்கப்பூர் வேலைக்குச் சென்றுவிட்டாராம். அவனுக்கு அப்பாவை நீங்கிய வாழ்வில் சுவாரஷ்யம் இல்லாமல் போயிருக்கக்கூடும். அவனை அவன் சுருக்கிக்கொள்ள இதுவும் காரணமாக இருக்கலாம்.

காலையில் வேலைக்குப் போய்விட்டு இரவில் வீடு திரும்பும் அவனின் அம்மாவும் அவர்களுடன் இருக்கும் ஒரு தாத்தாவும் என அந்தப் பேய் வீட்டின் மனிதர்கள் மிகவும் சொற்பமானவர்களே. அவனின் அப்பா இருக்கும்போது அவருடைய நண்பர்கள் அடிக்கடி வீட்டுப் பக்கம் வருவது மாலையில் அந்தப் பெரிய இடத்தில் எல்லோரும் பூப்பந்து விளையாடுவது எனப் பேய்வீடு எப்பொழுதும் ஆள்நடமாட்டங்களுடன் பரப்பரப்பாகத்தான் இருந்திருக்கிறது. அவர் வெளிநாட்டிற்குச் சென்றவுடன் பெரிய வீடு பேய்வீடானாது. குடும்பத் தலைவர் இல்லாத வீடு எப்படி இருக்க வேண்டும் என இந்த ஆணாதிக்க சமூகம் வரையறுத்து வைத்திருப்பதைப் போலவே சிறுக சிறுக அவர்களின் வீடும் அப்படியே மாறிப்போனது. இரவு குறிப்பிட்ட நேரத்திற்குள் எல்லோரும் வீட்டுக்குள் இருக்க வேண்டும், முன்வாசல் கதவை எப்பொழுதும் சாத்தியே வைத்திருக்க வேண்டும், வெளியாட்கள் வாசலைத் தாண்டி உள்ளே வந்து பேசக்கூடாது என ஆண்கள் இல்லாத வீட்டிற்கு இப்படிப்பட்ட விதிமுறைகள் இருக்கின்றன. சமூகத்தை உற்றுக் கவனிக்கும் ஒருவன் அடையக்கூடிய புரிதல் இது.

முகுந்தனும் அவனுடைய அம்மாவும் இப்படித்தான் சமூகத்திடமிருந்து விலகியிருக்கத் துவங்கினார்கள். முகுந்தன் பள்ளி பேருந்திலிருந்து இறங்கி வீட்டிற்குள் நுழைவதற்கு முன் தன் வீட்டு நிலத்தின் மண்ணைப் பார்த்து ஏதோ பேசிக்கொண்டே போவதைக் கவனித்திருக்கிறேன். அவன் யாருடன் பேசிக்கொண்டிருக்கிறான் என அப்பொழுது தெரியாததால் அவனுக்குப் பேய்ப் பிடித்திருக்கிறது என நானும் பலரிடம் சொல்லியிருக்கிறேன். அவனுடன் பேச முடியாமல் போன என் இயலாமைக்கு நியாயம் கற்பிக்க நான் ஏற்படுத்திக்கொண்ட வதந்தி அது. தினம் அவனுடைய வருகையைத் தரிசிக்க அல்லது கவனிக்க எனக்கு ஆவல் இருந்தது.

முகுந்தன் வீட்டுக்கு வெளியில் வந்து விளையாடியதும் கிடையாது. அவனுக்கென்று எந்த விளையாட்டும் இல்லை. ஒரு கொடூரமான தனிமையை அணைத்துக்கொண்டு அவனுடைய மர்மமான அறையிலேயே அவன் மௌனித்திருக்கக்கூடும். தெருவிலிருந்து வீட்டின் எல்லை கொண்டிருக்கும் தூரம் அவனைப் பற்றி அனுமானிக்க விடாதப்படிக்குத் தடையாக இருந்தது. தூரத்தைக் கடந்து முகுந்தனை அடையாத எனது பொழுதுகள் தீர்ந்துபோக அங்கிருந்து நாங்கள் வேறொரு இடத்திற்கு மாறி வந்துவிட்டிருந்தோம். என்றாவது தனிமையில் அமர்ந்திருக்கும் யாரையாவது சந்திக்க நேர்ந்தால் முகுந்தனின் ஞாபகம் வரும்.

இரண்டாவது: மேட்டு வீட்டுக் குழந்தைகள்

lonely kid 1

கம்போங் ராஜாவில் கொஞ்ச காலம் வசிக்கும்போது எங்களின் கம்பத்திற்கு அருகாமையில் நான்கைந்து வீடுகள் ஒன்றாக மேட்டில் இருந்தன. அதை மேட்டு வீடு எனத்தான் அழைத்துப் பழகியிருந்தோம். அம்மாவிற்குப் பழக்கமான ஒரு பாட்டி அங்கு இருப்பதால் எப்பொழுதாவது அங்குச் சென்று வருவேன். அந்தப் பாட்டி பலருக்குக் கடன் கொடுத்திருப்பதால் அடிக்கடி மேட்டு வீட்டைவிட்டு கடன் வசூலிக்கவே வெளியே வருவார். அம்மா கூட்டுப் பணத்தைக் கட்டுவதற்காக அங்கே செல்லும்போது நானும் மேடேறி அவருடன் செல்வேன். அங்குள்ள நான்கு வீடுகளுமே எப்பொழுதும் இருளில்தான் கிடக்கும். பாட்டி வீட்டுக்கு வெளியிலுள்ள பெரிய நாற்காலியில் அமர்ந்துகொண்டு அவருடைய கணக்கு புத்தகத்தைச் சரிப்பார்த்துக் கொண்டிருப்பார். அவரை நான் அங்கு 5 முறை பார்த்திருக்கிறேன். ஒவ்வொருமுறையும் அவர் அந்த நாற்காலியில் அமர்ந்துகொண்டு அதே புத்தகத்தைச் சரிப்பார்த்துக்கொண்டிருப்பார். இந்தக் காட்சி என்றுமே மாறியதில்லை.

அங்குள்ள எல்லாம் வீடுகளும் நீண்ட மௌனத்தில் உறைந்திருக்கும். மனிதர்களின் அசைவே இல்லாத அமைதி. பாட்டி மட்டும் பக்கத்து வீட்டில் மூன்று குழந்தைகள் இருப்பதாகவும் அடிக்கடி கடன் வாங்கி வாழ்வை நகர்த்தக்கூடிய சூழல் என்பதாலும் அவர்கள் யாரும் வீட்டைவிட்டு வெளியில் வரமாட்டார்கள் எனச் சொன்னார். முன்கதவு பூட்டிக்கிடக்கும் அந்த வீட்டைப் பார்த்தேன். கதவு முழுக்க குழந்தைகளின் நகம் சுரண்டிய வடுக்கள் இருந்தன. ஒருமுறை பாட்டியைப் பார்க்க அங்குச் சென்றபோது, சன்னல் வழியாக வெளியே எட்டிப் பார்த்துக்கொண்டிருந்த ஒரு சிறுமியைப் பார்த்தேன். என்னைக் கண்டதும் அவளுடைய கண்கள் அகல விரிந்தன. ஆச்சர்யமாக என்னைப் பார்த்தவள் சட்டென சன்னலைச் சாத்திவிட்டு உள்ளே போய்விட்டாள். அவளுக்குப் பின்புறத்தில் தெரிந்த அறை பயங்கர இருளில் அடைந்துகிடந்தது.

கடைசியாகப் பார்த்த அவள் பார்வையை இப்பொழுது மீண்டும் மீட்டுணரும்போது அது மனிதர்களைப் பார்த்து மிரளும் ஒரு பயத்தையும் பதற்றத்தையும் கொண்டிருந்ததை உணர முடிகிறது. அவளுடைய வீட்டின் பெரியவர்கள் தன் இருப்பைப் பாதுகாத்துக்கொள்ள வீட்டில் வளரும் குழந்தைகளை அறைக்குள்ளே வைத்திருக்கிறார்கள். அறைக்குள்ளேயே விளையாடிக்கொண்டு, படுத்துறங்கி, அறைச்சுவரில் கிறுக்கிக் கொண்டு பகலைப் பற்றியும் வெளியில் இருக்கும் உலகத்தைப் பற்றியும் எந்தக் கவலையுமில்லாமல் இருக்கிறார்கள். இப்படி வாழும் குழந்தைகள் சமூகத்திடமிருந்து நீக்கப்பட்டு வளர்க்கப்படுகிறார்கள். தூரமாக ஓடுவது பற்றியும் மனிதர்கள் எத்தனை விதமாகச் சிரிக்கிறார்கள் என்பதைப் பற்றியும் தெரியாமல் அந்த மேட்டு வீட்டுக் குழந்தைகள் இருந்திருக்கிறார்கள் எனச் சொன்னால் யாராவது நம்புவார்களா?

தாய்லாந்து சினிமா

குழந்தைகளின் வாழ்வையும் அவர்களின் அகச்சிக்கலையும் அமானுடமான முறையில் சினிமாவின் வழி பதிவு செய்து உலகக் கவனத்தை ஈர்க்கும்வகையில் செயலாற்றி வருவது தாய்லாந்து சினிமா துறையாகும். கொரியாவிற்கு அடுத்து பேய்ப்படங்களை அதன் கூர்மையான அவதானிப்புடன் தரமாக வாழ்வுடன் மிகவும் நெருக்கமாகக் கொண்டு வந்து பூதக்கண்ணாடியில் காட்டி அச்சுறுத்தும் தொழில்நுட்ப கலை வேலைப்பாடுகள் தாய்லாந்து சினிமா நுட்பங்களில் ஒன்றாகும்.

2010 ஆம் ஆண்டு ’13 beleve’ and ‘the body’ போன்ற பிரபலமான படங்களை இயக்கிய இயக்குனரின் மூன்றாவது படைப்பாக வெளிவந்த படம்தான் பேய்ப்பிடித்த அறை (haunted room). ஜப்பானில் சிறுவர்களுக்கு நிகழ்ந்த மனநோய் குறித்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இயக்கப்பட்டப் படம் இது. ஆகையால் ஜப்பானிய நிலப்பரப்பின் தாக்கமும் அங்குள்ள குழந்தைகளின் அக மன வளர்ச்சி பற்றிய குறிப்புகளும் மேற்கோளாக எடுக்கப்பட்டிருப்பதைப் பார்க்க முடிந்தது.

கதையின் மையப்பாத்திரங்கள் சொற்பமானவர்களே. ஒரு சூன்யமான வீட்டுக்குள் நடப்பதுதான் கதை. அதுவும் நாம் படத்தின் சில காட்சிகளில் மட்டுமே பார்க்க முடிந்த சிறுவனான ‘தொன்’தான் கதையின் மையம். தொலைக்காட்சி நடிகையான sinjai plengpanich கணவனைப் பிரிந்து தன் மகனுடன் வாழ்பவள். இரவில் ஆபாச சீடிக்களை விற்பனை செய்பவளாகவும் வருகிறாள். அவளுக்கு மிக நெருக்கமான நண்பன் ஒருவன் இருக்கிறான். அவனை அழைத்துக்கொண்டு தன் வீட்டிற்குச் செல்லும் மூலமே நம்மையும் இயக்குனர் அவளின் சூன்யம் அடர்ந்த வீட்டிற்குள் அழைத்துச் செல்கிறார்.

வீடு முழுக்க அமானுடமான அதிர்வு இருந்துகொண்டே இருக்கிறது. வீட்டினுள் வரும் நண்பனிடம் அறைக்குள் கடந்த 5 வருடமாக தன்னை அடைத்துக்கொண்டு உள்ளேயே இருக்கும் மகனைப் பற்றி சொல்லத் துவங்குகிறாள். அவனுக்கு இது வித்தியான ஒன்றாகத் தோன்றுகிறது. அதிர்ச்சியுடன் மாடி அறையில் கேட்கும் அவளுடைய மகனின் காலடி ஓசைகளைக் கூர்மையாகக் கேட்கிறான். அவனால் அதைப் பொருத்துக்கொள்ள முடியாமல், ‘எப்படி அவளுடைய மகன் இந்த நிலைக்கு வந்தான்’ எனக் கேட்டுக்கொண்டே இருக்கிறான். திடீரென ஒருநாள் தனக்கு வீடியோ கேம்ஸ் விளையாட வேண்டும் ஆகையால் தனிமையில் இருக்க வேண்டும் என உள்ளே நுழைந்தவன் அதன் பிறகு வெளியே வரவில்லை எனப் பதிலளிக்கிறாள். பலமுறை அவனை அங்கிருந்து வெளியாக்க அவள் செய்த முயற்சிகள் தோல்வியடைகின்றன. கூர்மையான கத்தியை கையின் நரம்பில் அழுத்திப் பிடித்துக்கொண்டு தன்னை வெளியாக்க முயன்ற அம்மாவின் செயலைத் தற்கொலை மிரட்டலின் மூலம் தடுத்துவிடுகிறான்.

அவளுக்கும் மகனுக்கும் இடையில் கடந்த 5 வருடமாக எந்த உரையாடலும் நிகழ்வதில்லை. கதவுக்கடியில் ஒரு தாளில் எழுதி வைத்தே இருவரும் பேசிக்கொள்கிறார்கள். அவனது அறை சன்னல்கள் எல்லாம் நாளிதழ்களால் மூடப்பட்டிருக்கின்றன. இருளைத் தின்று தீர்த்து 5 வருடம் உள்ளேயே கிடப்பதால் மிகவும் மூர்க்கமாக வளர்வதாகப் படத்தில் அவ்வப்போது காட்டப்படுகிறது. ஜப்பானில் இதுபோன்ற மனநோய்க்குறிகளைத் தற்கொலைக்கு வித்திடும் ஒரு பயங்கரமான மனச்சிதைவு எனச் சொல்கிறார்கள். ஜப்பானிய மரபில் தற்கொலை என்பது கௌரமான ஒன்றாகும் என வரலாற்றில் படித்ததுண்டு. தற்கொலை செய்துகொள்வதை அவர்கள் உன்னதமாகப் போற்றுகிறார்கள். போர் வீரர்கள் தன்னுடைய முதுமை காலத்தில் நோயின் வலி தாளாமல் தனது சமுராய் கத்தியிலேயே தன் உயிரை மாய்த்துக்கொண்டதுண்டு எனப் பல கதைகள் உள்ளன. ஆகையால் ஜப்பானில் கண்டறியப்பட்ட இந்தப் பழக்கமும் மனநோயும் இப்படத்தில் உக்கிரமாகவே காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

மீண்டும் அவளுடைய வீட்டிற்கு வரும் அந்த நண்பன், அறையில் அடைந்து கிடக்கும் அவளுடைய மகனுடன் நட்பு கொண்டு அவனை வெளியாக்க முடியும் எனக் கூறுகிறான். அதன்படியே அவனது அறையை நோக்கி இருவரும் மாடியேறும் இடம் மிகவும் பயங்கரமானவை. ஒரு நிசப்தத்தை நோக்கி நம்மையும் நகர்த்துவது நடுக்கமாக இருக்கிறது. அவனுடைய அறையின் கதவுக்கு முன் நின்று அவனுடைய அம்மா அவனை அழைத்துப் பார்க்கிறாள். தன்னுடைய நண்பன் அவனுடன் நட்புக்கொள்ள ஆசைப்படுவதாகக் கூறுகிறாள். தன் அம்மா தன்னைக் காட்டிக்கொடுத்துவிட்டாள் எனக் கோபமடைகிறான் தொன். ஒரு துண்டு கடிதம் மட்டும் கதவுக்கடியிலிருந்து இரத்தக்கரையுடன் வருகிறது. ‘என்னை நெருங்க முயற்சிக்காதே நீ என் அம்மா இல்லை’ என அந்தத் தாளில் எழுதப்பட்டிருக்கிறது. அதைக் கண்ட அவள் கதறி அழுகிறாள். அந்தத் துண்டு கடிதத்துடன் அவனுடைய பெருவிரலும் துண்டிக்கப்பட்டு வைக்கப்பட்டிருப்பது மேலும் அதிர்ச்சியைக் கூட்டுகிறது.

சிறிது நேரத்தில் அவனுடைய அறைக்கதவு திறக்கப்படுகிறது. அவள் படியில் தவறி சரிந்துவிழ அம்மாவின் நண்பன் மட்டும் மகனிடம் மாட்டிக்கொள்கிறான். கையில் கத்தியுடன் வெளியே வரும் அவன், பாய்ந்து அம்மாவின் நண்பனின் உடலைப் பாகம் பாகமாக வெட்டுகிறான். படத்தின் இந்தக் கட்டம் மகனின் சிக்குண்ட உலகத்தையும் தனிமையும் மனச்சிதவின் உச்சத்தையும் காட்டுகிறது. இப்படிப் பல பேரைக் கொன்று அறைக்கு மேலேயுள்ள தனிப்பகுதியில் சாக்கில் கட்டிப் போட்டுவிடுகிறார்கள். அவள் வசிக்கும் வீட்டைச் சுற்றியுள்ளவர்கள் அவளது மகனைப் பற்றியும் அந்த அறையில் நிகழும் மர்ம சத்தங்களையும் நகர்வுகளையும் கேட்கத் துவங்குகிறார்கள். அவள் வீட்டுக்கு வந்து காணாமல் போனவர்களைக் காவல்துறை ஒரு பக்கம் தேடிக்கொண்டிருக்க, அவளுடைய முன்னால் கணவன் ஒருநாள் வீடு தேடி வருகிறான். படத்தில் இந்தக் கட்டம்தான் முக்கியமான திருப்பத்தைக் கொண்டிருக்கிறது. அதுவரை அவளுடைய (அம்மாவின்) பார்வையிலிருந்து காட்டப்பட்ட படம் இப்பொழுதும் மெல்ல உடைந்து நம் பக்கம் திரும்புகிறது.

உள்ளே நுழையும் கணவனைப் பார்த்து தன் மகனைத் தன்னிடமிருந்து பிரிக்க முயற்சி செய்யாதே எனக் கத்துகிறாள். அவளின் உடலைப் பிடித்து உலுக்கும் கணவன் ‘என்ன கனவுலகத்தில் இருக்கிறாயா?’ எனக் கேட்டுவிட்டு வரவேற்பறையின் கூரையில் தெரியும் ஓட்டையைப் பார்க்கிறான். உண்மை கதை மீண்டும் பின்னோக்கி செல்கிறது. சில வருடங்களுக்கு முன்னால் இதே வீடு கணவன் மனைவி சண்டையில் பிளவுற்றுக்கிடக்கிறது. எந்நேரமும் அவர்களுக்கிடையே விவாதங்களும் சண்டையும் அதிகரித்துக்கொண்டிருக்க அவளுடைய மகன் தொன் அவனை அறைக்குள்ளேயே அடைத்துக்கொள்கிறான். பெற்றோரின் கவனிப்பும் அக்கறையும் கிடைக்காமல் திடீரென ஒருநாள் இந்த முடிவுக்கு வந்து அறைக்குள் தன்னைச் சாத்திக்கொள்கிறான். அதன் பிறகு மகனை நெருங்க முடியாமல் அவள் தவிக்கிறாள். அவன் தன்னைப் பார்க்கவில்லையென்றாலும் பரவாயில்லை, ஆனால் கணவனின் நிழல்கூட அவன் மீது படக்கூடாது என எச்சரிக்கையாக இருக்கிறாள்.

ஒருநாள் இருவருக்குமிடையே கடுமையான சர்ச்சை ஏற்படுகிறது. பிரிவதற்கு முடிவெடுக்கும் அவர்கள் மகனை யார் பார்த்துக்கொள்வது என விவாதிக்கத் துவங்குகிறார்கள். பதற்றமடையும் அம்மா, தன் மகனைத் தன்னிடமே வைத்துக்கொள்வதற்காக கணவனைத் துப்பாக்கியில் சுட்டுக் கொன்றுவிடுவதாக மிரட்டுகிறாள். இவர்களின் கைக்கலப்பை அறைக்குள்ளிருந்துகொண்டு ஓட்டையின் வழியாக மகன் தொன் பார்த்துக்கொண்டிருக்கிறான். வீட்டில் நிகழும் பிரச்சனைகளைப் பிள்ளைகள் இப்படித்தான் ஏதோ ஒரு மூலையில் இருந்துகொண்டு பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். துப்பாக்கியைப் பறிக்க முயலும் கணவனிடமிருந்து தப்பிக்க துப்பாக்கி முனையை அழுத்துகிறாள் அம்மா. அந்தநேரம் பார்த்து துப்பாக்கி மேற்கூரையை நோக்கி பார்க்க, குண்டு பாய்ச்சப்படுகிறது. மேல்மாடி அறையிலிருந்துகொண்டு இவையனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த மகனின் கண்ணில் குண்டு பாய்ந்து அவன் அங்கேயே இறக்கிறான்.

படத்தில் காட்டப்படாத முதல் பாதி இதுதான். மகனின் மரணம். அதன் பிறகு மகனைக் கொன்றதற்காக அவள் மனம் சிதைகிறாள். மகன் இறந்துவிட்டதை இருவரும் மறைத்துவிடுகிறார்கள். காலம் நகர மகன் அறைக்குள்ளேயே இருக்கிறான் என அவள் நம்புவதோடு அனைவரையும் நம்ப வைப்பது கதையின் மற்றொரு பகுதி. கதையின் முதல் பாதியின் அடுக்குகளில் மர்மமாக ஒளிந்துகிடந்தது சிதைந்துவிட்ட அம்மாவின் மனப்பிரமை மட்டுமே. அதன் மூலம் அறைக்குள் அடைந்துகிடக்கும் தன் மகனை உருவகித்து நமக்கும் பிறருக்கும் அவள் குற்றவாளி அல்ல என நிருபிக்க முயல்கிறாள்.

இதில் முகத்தைக் காட்டாமல் நடித்திருக்கும் சிறுவன் தொன், அம்மாவாக நடித்திருக்கும் sinjai plengpanich இருவரும் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இசையும் ஒளிப்பதிவும் அறையின் மௌனத்தையும் வீட்டின் அமானுடனத்தையும் மிகக் கூர்மையாகக் காட்சிப்படுத்தி வலுவைச் சேர்த்துள்ளன.

ஜப்பானில் நிகழ்ந்த இந்தக் கொடூரங்களுக்குப் பின்னணியில் ஒரு திகில் கதையை நுழைத்துப் பார்த்து நமக்கு அச்சத்தையும் விழிப்பையும் ஏற்படுத்தியிருக்கிறார் இயக்குனர். குழந்தைகள் தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்வதன் மூலம் பெரியவர்களுக்குக் கடுமையான தண்டனைகளைத் தர முயல்கிறார்கள். வீட்டில் நிகழும் கொடுமைகளுக்கு முன் அவர்கள் நிகழ்த்தும் வன்முறையே ஜப்பானில் நடந்த இதுபோன்ற விநோதமான பழக்கங்கள்தான். அவர்களின் பொழுதுகளைச் சூன்யமாக்கும் எந்தக் காரியத்தையும் செய்யாமல் இருப்பதே அவர்களை மனரீதியில் காப்பாற்ற நாம் செய்யும் முக்கியமான பங்கு என்பதை உணர்கிறேன். ஒரு குழந்தை தன்னை ஓர் அறையில் தொடர்ந்து அடைத்துக்கொள்கிறது என்றால் அதற்கு இரண்டே காரணங்கள் மட்டுமே இருக்கக்கூடும் என்பதை நமக்குப் படம் காட்டுகிறது. Anti social syndrome or japan’s hikikoman.

குழந்தைகளின் அறைக்குள்ளிருந்து தனிமையின் சுவாசம் கேட்டுக்கொண்டிருக்கிறது. அவர்களின் வன்மமான மனநிலை சுவரில் கொடூரமாகக் கிறுக்கப்பட்டு சிதைக்கப்பட்டிருக்கும் ஓவியங்களில் தெரிகிறது. ஒழுங்கற்றுக் களைந்துகிடக்கும் அவர்களின் அறையில் எங்கோ யாருக்கும் தெரியாமல் பதுக்கி வைத்திருக்கக்கூடும் பெரியவர்களின் மீதான வெருப்பையும் கோபத்தையும்.

கே.பாலமுருகன்

(Teernthu Pogaatha venkaddigal)

தாரை தப்பட்டை: ஓங்கி ஒலிக்க முடியாத அடித்தட்டு கலை

 

12650908_10208769576055375_3734414514512719569_n

100% பாலாவின் வழக்கமான படம். கொஞ்சமும் தன் பாணியைக் காலத்திற்கேற்ப உருமாற்றிக் கொள்ளாத பிடிவாதமான படைப்பாளியின் அரதபழமையான கதை. குரூரமான மனித வதை எல்லோருக்கும் உளவியல் ரீதியில் ஏற்புடையதல்ல என்பதாலேயே தாரை தப்பட்டை மக்கள் மத்தியில் கவனம் பெறவில்லை.

கரக்காட்டக்காரர்களின் விளிம்புநிலை வாழ்க்கையைப் பதிவு செய்திருப்பது ஆறுதல். இத்தனை கொடூரமான மனிதர்களை பாலாவினால் மட்டுமே காட்ட முடியும் என நினைக்கிறேன்.

மையக் கதை, தன்னையே காதலித்து வாழ்ந்த கரக்காட்டக்கார சூராவளியை ஒரு அயோக்கியனுக்குத் திருமணம் செய்து வைத்த பிறகு அவள் வாழ்க்கை சிதைக்கப்படுகிறது. கதாநாயகன் இறுதியில் வழக்கமான ஆக்ரோஷத்துடன் தீயவர்களைக் கொடூரமாகக் கொலை செய்கிறார். கிருஷ்ணர் நகராசூரனை அழிப்பதைப் போல; இராமர் இராவணனை அழிப்பதைப் போல். தீயவர்களை அழிப்பதில் புராணக் காலத்து முறையைத்தான் சில படங்கள் பின்பற்றி வருகின்றன. அதில் பாலாவும் விதிவிலக்கு அல்ல.

ஆறுதல்: இளையராஜாவின் நிதர்சனமான இசை. வறண்டுபோன அடித்தட்டு இசைக்கலைஞர்களின் சன்னமான அழுகையை இளையராஜாவின் இசையில் கேட்க முடிந்தது.

பலம்: வழக்கமான வெட்கம், அச்சம் போன்ற இழிவுகள் திணிக்கப்படாமல் ஆணுக்கு நிகரான கதாப்பாத்திரத்தை வரலக்ஷ்மி ஏற்றுள்ளார். படத்தின் முதல் பாதியில் கதையைத் தூக்கி நிறுத்துவதே அவர்தான். இரத்தமும் சதையுமாக வலிமையுடன் கரக்காட்டம் ஆடி வியக்க வைக்கிறார். சபாஷ் வரலக்‌ஷ்மி.

கே.பாலமுருகன்

விசாரணை – குரலற்ற மனிதர்களின் மீதான வன்முறை

Visaranai-–-The-investigation-unveiling-on-Feb-5

மிக நீண்ட இடைவேளிக்குப் பிறகு மனத்தை அதிரவைத்த திரைப்படம். நம் மனத்தை ஒரு படம் உலுக்க முடிந்தால் அதைப் படம் என்பதா அல்லது நிஜம் என்பதா? அதிகாரம் எளிய மனிதர்களை உடல்/உள ரீதியில் வதை செய்யும் ஒவ்வொரு காட்சியும் மிரட்டுகிறது. வெற்றி மாறன் தமிழ் சினிமாவின் மாபெரும் கதைச்சொல்லி என்பதில் சந்தேகம் இல்லை. திரையரங்கைவிட்டு ஒரு பெரிய கூட்டமே சத்தமில்லாமல் கனத்த மனத்துடன் வெளியே வந்ததை என் வாழ்நாளில் இன்று மட்டுமே அனுபவித்தேன்.

ஈவிரக்கமற்ற அமைப்பு தன் காலுக்கடியில் எத்தனையோ குரலற்ற குரல்வலைகளை மிதித்துக் கொண்டிருக்கும் அப்பட்டமான மனித உரிமை மீறல்களைப் பதிவு செய்ததில் வெற்றி மாறனின் குழுவிற்கும் இப்படத்தைத் தயாரித்த நடிகர் தனுஷ்க்கும் நிச்சயம் தமிழ்ச்சமூகம் வாழ்த்தைத் தெரிவிக்க வேண்டும். மிகைக்காகச் சொல்லவில்லை, ஆழ்மனம்வரை சென்று இப்படம் நமக்குள் இருக்கும் மனிதாபிமானத்தைக் கிளறுகிறது. ஒருவனின் உடலை ஆள்வதும் அவனுடைய மூளையை ஆள்வதும் அவனுடைய சுதந்திரத்தை ஆள்வதும் மூன்றுமே வன்முறைத்தான். யாருடைய சுதந்திரத்தையும் வாழ்வாதாரத்தையும் அதிகாரம் செலுத்த எந்தத் தரப்புக்கும் எந்தத் தனி மனிதனுக்கும் உரிமை இல்லை. ஆனால், அந்த உரிமை மீறப்படுவதுதான் சட்டத்தைக் காக்க வேண்டிய அமைப்புகளே அதிகாரத்திற்கு விலை போவதற்கான அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது.

பிழைப்பு தேடி நாடு விட்டு நாடு போய் எளீய வேலைகளைச் செய்து வாழும் தமிழர்களின் மீது எல்லாம் அமைப்புகளும், அதிகாரங்களும் அரசும் வன்முறையைக் கட்டவிழ்த்துவிடவே முற்படுகின்றன. தமிழன் என்றால் குற்றவாளியாக மட்டுமே இருக்கத் தகுதியுடையவனைப் போல அடித்தட்டு மனிதர்களைப் பொம்மைப் போல கையாளும் காவல்துறையின் அடாவடித்தனத்தை இப்படம் மிகவும் துணிச்சலுடன் பதிவு செய்துள்ளது. ஒரு தேசத்தில் அத்தேசத்தின் அரசு சார்புடைய அமைப்பான காவல்துறையின் மறுபக்கத்தை இத்தனை சுதந்திரமாகப் படம் செய்ய முடியும் என்றால் அந்நாடு கலைக்குக் கொடுக்கும் சுதந்திரம் கவனிக்கத்தக்கவையாகும். மலேசியாவிலெல்லாம் இத்தனை துணிச்சலுடன் படம் எடுத்துவிட முடியாது. கருத்து சுதந்திரம் என்பது இங்கு வரையறுப்பட்டவையாகும்.

dhanush-vettrimaran-to-unleash-visaranai-tomorrow

எம். சந்திரகுமார் அவர்களின் ‘லாக்கப்’ என்ற நாவலிலிருந்து தழுவி எடுக்கப்பட்ட இப்படத்தின் முதல் பாதி சந்திரகுமாரின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவமாகும். இப்படத்தின் இரண்டாம் பாதி வெற்றி மாறனின் கதையாகும். இருவரும் தாங்கள் மிகச் சிறந்த கதைச்சொல்லிகள் என்பதை நிரூபித்துள்ளார்கள். முதல் பாதியிலிருந்து இருந்த பரப்பரப்பு இரண்டாம் பாதியில் மேலும் கூடுவதுதான் திரைக்கதையின் பலம். பாடல் காட்சிகள் இல்லை; கதாநாயகி அலட்டல் இல்லை; கதாநாயகத்துவம் இல்லை; எரிச்சல் ஊட்டும் பன்ச் வசனங்கள் இல்லை. இது படமே இல்லை; நிஜம்; நிஜத்தின் அப்பட்டமான உருவாக்கம்.

ஆடுகளம் படத்தைவிட ஒரு படி மேலேறி நிற்கும் இப்படத்திற்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. பத்து வயதிற்குக் குறைவான சிறுவர்களை இப்படத்திற்கு அழைத்துப் போக வேண்டாம் என இயக்குனரே கேட்டுக்கொண்டுள்ளார்.

இப்படத்தைத் திரையரங்குகளில் பாருங்கள். நமது கெட்டித்தட்டிப் போன மனசாட்சியை ஒரு கணம் அசைத்து மௌனமாக்குகிறது.

– கே.பாலமுருகன்

நான் முக்கியமானதாகக் கருதும் 2015ஆம் ஆண்டின் மிகச் சிறந்த தமிழ்ப்படங்கள்- பாகம் 1

சினிமாவில் நான் எதையும் சாதிக்கப் போவதில்லை. அது என் துறையும் கிடையாது. ஆனால், நான் தீவிரமான சினிமா இரசிகன். சினிமாவில் முக்கியமான கூறுகளான, இசை, ஒளிப்பதிவு, ஒலி, வர்ணம், வசனம், திரைக்கதை, கதை, இயக்கம், பின்னணி இசை என பலவற்றை கூர்ந்து கவனிக்கும் பயிற்சியை உலக சினிமாக்களின் வழியும் சினிமா சார்ந்த நூல்களின் வழியும் பழகிக் கொண்டேன். ஒரு சினிமாவை அதன் கலாச்சாரப் பின்னணியோடும் அந்நாட்டின் அரசியல் சூழலோடும், கலை வெளிபாடுகளுடனும் இணைத்துப் புரிந்து கொள்ளும் விமர்சிக்கும் நிலையே சினிமாவில் நான் கண்டைடைந்த இடம். என் இரசனை பலருக்குப் பொருந்தாமலும் போகக்கூடும். அதைப் பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் தொடர்ந்து நல்ல சினிமாக்களைப் பற்றி உரையாடிக் கொண்டுத்தான் இருக்கிறேன். அவ்வரிசையில் 2015ஆம் ஆண்டில் வெளிவந்த மொத்தம் 197 தமிழ்ப்படங்களில் தீவிரமான/ ஒரு சில சிறப்பம்சங்களால் கவனிக்கப்பட்ட 16 சினிமாக்களின் பெயர்களை முதலில் மீட்டுணர்வோம். இப்படங்களில் ஏதேனும் சிலவற்றை நீங்கள் இன்னும் பார்க்கவில்லை என்றால் உடனே பார்த்து மகிழுங்கள்; சிந்தியுங்கள்.

இந்த வரிசை தரத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது அல்ல: படங்கள் வெளியான மாத அடிப்படையில் வரிசைப்படுத்தியுள்ளேன்.

  1. எனக்குள் ஒருவன்மார்ச் 6

Enakkul-Oruvan_B (1)

சித்தார்த் நடித்திருந்த இப்படத்தை பிரசாத் இயக்கியிருந்தார். கிறிஸ்த்தப்பர் நோலனின்  ‘இன்செப்ஷன்’ படத்தைப் போன்று மனித கனவுகளை வித்தியாசமான திரைக்கதையின் வழி படம் சொல்கிறது. வித்தியாசம் என்றாலே பெரும்பாலும் வழக்கமான தமிழ் சினிமா இரசிகர்களின் கவனத்தை ஈர்க்காது என்பது ஒரு சாபக்கேடு. ஆகையால், இப்படம் திரையரங்குகளில் அதிக நாள் ஓடவில்லை; மக்களின் கவனத்தையும் பெறவில்லை. பெரும்பாலான பேரும் அதன் திரைக்கதை நகர்ச்சி குழப்பத்தை உண்டாக்குவதாகச் சொல்லிக் கேட்டேன். ஆனால், முற்றிலும் ஒரு நல்ல முயற்சி என்பதில் சந்தேகமில்லை. திரைக்கதையில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் இப்படம் வெற்றி படமாக அமைந்திருக்கும்.

 

  1. ராஜ தந்திரம்மார்ச் 13

12-1426156476-rajathanthiramreview

புதுமுக இயக்கங்களை நம்பி அமித் இயக்கிய இப்படம் 2015ஆம் ஆண்டின் சிறந்த முயற்சி என்றே பாராட்டலாம். நாம் நினைக்கும் சமூக ஒழுக்கக் கட்டுப்பாடுகள் ஏதும் இல்லாமல் இருக்கும் மூன்று திருடர்களைப் பற்றிய கதையாகும். திரைக்கதை நகர்ச்சி சமரசமின்றி இருந்தாலும் எங்கேயும் சோர்வூட்டாமல் உருவாக்கப்பட்டிருந்தது. வீரா கதாநாயகனாக நடித்திருந்தார். இவர் கௌதம் இயக்கத்தில் நடுநிசி நாய்கள் எனும் படத்தில் நடித்தவர். கதைக்குப் பொருந்தி வெளிப்பட்டுள்ளார்.

 

  1. சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறதுஏப்ரல் 10

Chennai-Ungalai-Anbudan-Varaverkirathu

போபி சிம்ஹா நடிப்பில் மருது பாண்டியன் இயக்கிய இப்படம் மிகவும் கவனத்திற்குரிய படமாகும். அது கையாண்டுள்ள கதைக்களம் கவனிக்கப்படாத மென்ஷன் வாசிகளின் துயரங்கள் ஆகும். படுக்க இடமில்லாமல் இரவு முழுவதும் அலையும் ஓர் இளைஞனின் வாழ்க்கைக்குள்ளிருந்து எழும் குரல். அவ்வகையில் கடந்தாண்டின் கணமான கதையுடன் வெளிவந்த படமாக இப்படத்தைக் கருதுகிறேன்.

 

  1. உத்தம வில்லன்மே 2

Actor Kamal Haasan in Uttama Villain Movie Stills

கமல் நடித்திருந்த இப்படத்தை ரமேஸ் அரவிந்த் இயக்கியிருந்தார். 2015ஆம் ஆண்டில் வெளிவந்த படங்களில் நல்ல கதையம்சம் கொண்டிருந்தாலும் வெற்றிபெறாத படங்களில் ஒன்றாகப் போய்விட்டது. சாவை எதிர்க்கொள்ளும் கலைஞனின் இறுதி நாட்கள்தான் படம். இப்படமும் பலருக்குப் புரியவில்லை எனத் தெரிவித்திருந்தார்கள். அப்படிப் புரியாமல் போகும் அளவுக்குத் திரைக்கதையிலும் குழப்பங்கள் இல்லை. கமல் இப்படத்தில் நடிகனாகவே வந்துள்ளார். மரணத்தைப் பற்றி கடந்தாண்டில் தத்துவப்பூர்வமாக விவாதித்த ஒரு யதார்த்த சினிமா ‘உத்தம வில்லன்’ ஆகும்.

 

  1. 36 வயதினிலேமே 15

36-Vayathinile-songs

ரோஷன் இயக்கத்தில் ஜோதிகா பல வருடங்களுக்குப் பிறகு முதன்மைக் கதைப்பாத்திரத்தை ஏற்று நடித்தப் படமாகும். அவருடைய வருகைக்காவே படம் நன்றாக ஓடியது எனலாம். கணமான கதையாக இல்லாவிட்டாலும் 36 வயதை எட்டும் பெண்கள் மீது சமூகம் கொண்டிருக்கும் பழமைவாதங்களையும், குடும்பங்களில் வைத்து ஒடுக்கப்பட்டு திறமைகள் வெளிப்படாமல் முடங்கிப் போன பெண்களின் எழுச்சிக் குரலாகவும் இப்படம் இருந்ததால் அதன் முயற்சியைப் பாராட்டியே எனது திவீர சினிமாவின் பட்டியலில் சேர்க்கிறேன். சந்தோஷ் நாராயணின் இசை இப்படத்திற்கு மிகுந்த பலம் என்றே சொல்லலாம். தமிழ் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் இசை அது.

 

  1. காக்கா முட்டைஜூன் 5

kakka-muttai-movie-poster_142744642300

எம் மணிகண்டன் இயக்கத்தில் விக்னேஷ், ரமேஷ் என்கிற இரண்டு சிறுவர்கள் நடித்துப் பல விருதுகளை வென்ற படமாகும். உலகமயமாக்கல் எப்படி அடித்தட்டு மக்களின் வாழ்விடங்களையும் அவர்களின் மூளைகளையும் பாதிக்கிறது என்பதுதான் இப்படத்தின் கதையாகும். படம் சொல்லப்பட்ட விசயங்களில் கொஞ்சம் மிகையதார்த்தங்கள் இருந்தாலும், எடுத்துக் கொண்ட கதையும் கதைக்களமும் கமர்சியல் சினிமாக்கள் கண்டுக்கொள்ளாதவையாகும். ஆனாலும், காக்கா முட்டை ஆபத்தான அரசியல் பின்புலம் கொண்ட படமும் ஆகும். அதைப் பற்றி விரிவாகப் பேசலாம்தான். இருப்பினும், பல இடங்களில் காக்கா முட்டை மிக முக்கியமான படமாக நிற்கிறது.

 

  1. இன்று நேற்று நாளைஜூன் 19

Indru-Netru-Naalai2

ரவிக்குமார் இயக்கத்தில் விஷ்ணு நடித்திருந்த இப்படம் இவ்வாண்டில் தமிழ் இரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் காலம் குறித்த பிரக்ஞையையும் பல அற்புதமான தருணங்களையும் உருவாக்கிவிட்டது என்றே சொல்லலாம். சலிப்பூட்டாத அதன் திரைக்கதையின் பலத்தாலே இப்படம் மக்கள் மனத்தில் சீக்கிரமே இடம் பிடித்தது. விஷ்ணுவின் நடிப்பும் கருணாவின் இயல்பான நகைச்சுவையும் திகில்கள் நிறைந்த திரைக்கதையும், அதன் ஊடாக நகரும் காலத்தைத் தாண்டி வாழ முடியாத சிக்கல்களையும் மிகச் சிறப்பாக வெளிப்படுத்திய படமாகும். இதைக் கமர்சியல் சினிமா என ஒதுக்கிவிடலாமா அல்லது தீவிர சினிமா என்று அடையாளப்படுத்தலாமா என்கிற குழப்பத்தினூடாகவே இப்பட்டியலில் இந்தப் படத்தையும் இணைக்கிறேன்.

 

  1. பாபநாசம்ஜூலை 3

Papanasam2

ஜீத்து ஜோசப் என்கிற மலையாள இயக்குனரின் படம். தமிழில் மீண்டும் அவராலே எடுக்கப்பட்டது. கமல் தவிர வேறு யார் நடித்திருந்தாலும் மக்கள் மனத்தில் நீங்கா இடம் பிடித்திருக்கக்கூடிய அத்தனை பலமான கதையும் திரைக்கதையும் கொண்ட படமாகும். என்னைப் பொறுத்தவரை இப்படத்தின் கதாநாயகன் கமல் அல்ல; ஜித்து ஜோசப் தான். ஒரு குடும்பம் தன் கௌரத்தைக் காப்பாற்றிக் கொள்ள எத்தனை ஆபத்தான முறையில் செயல்பட்டு கடைசிவரை பிடிவாதமாகத் தன் குடும்பத்தைக் காப்பாற்றிக் கொள்கிறது என்பதுதான் கதையாகும். ஆனால், அதனைத் திரைக்கதையாக்கிய விதம் அற்புதமான உழைப்பு. மக்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற படமாகத் திகழ்ந்தது.

தொடரும்

கே.பாலமுருகன்

Ola Bola- மலேசிய வரலாற்றின் குரல்

2v112jd

‘ஹரிமாவ் மலாயா’ எனக் கம்பீரமாக அழைக்கப்பட்ட மலேசியக் காற்பந்து குழுவிலுள்ள விளையாட்டாளர்களின் மனப்போராட்டங்களையும், ஈகோ போரையும், குடும்ப சிக்கல்களையும், குழுவில் நடந்த மனக் கசப்புகளையும், தியாகங்களையும் 1980களின் பின்னணியில் வைத்து ஓர் அழுத்தமான திரைக்கதையுடன் ‘ஓலா போலா’ படைக்கப்பட்டுள்ளது. 1963ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட மலேசியக் காற்பந்து குழுவின் எழுச்சி காலம் என 1980-களைச் சொல்லலாம். மலேசியக் காற்பந்து விளையாட்டாளர் மொக்தார் ஆசியாவின் சிறந்த காற்பந்து வீரர் எனும் புகழைப் பெற்று முன்னிலையில் இருந்த காலம். அப்பொழுது ஆசியாவிலேயே 175 கோல்கள் அடித்து முன்னிலையில் இருந்தது மொக்தார் ஆகும். அவர் அணிந்திருந்த ஜேர்சியின் எண் 10. இப்படத்தில் மொக்தாரின் பெயர் சம்சூல் என மாற்றப்பட்டுள்ளது. அதே காலக்கட்டத்தில் ‘spidermen’  ஆறுமுகமும் சிறந்த கோல் கீப்பராக அங்கீகரிக்கப்பட்டு மலேசியாவின் தலை சிறந்த விளையாட்டாளராகத் திகழ்ந்தார். அவரின் பெயர் இப்படத்தில் முத்துவாக மாற்றப்பட்டுள்ளது. டிசம்பர் 1988ஆம் ஆண்டில் மரணமடைந்த மலேசிய விளையாட்டாளர் ஆறுமுகம்தான் மலேசியா மோஸ்கோவ் ஒலிம்பிக் தேர்வு சுற்றில் சிறப்பான வெற்றியைப் பதிவு செய்யக் காரணமாக இருந்துள்ளார். அத்தருணத்தை ‘ஓலா போலா’ படம் உணர்ச்சிகளின் கோர்வையாக மெய்சிலிர்க்கும் வகையில் பதிவு செய்துள்ளது.

7f_mymoviesnottomissjan08

1980 ஆம் ஆண்டில் மோஸ்கோவ், ரஷ்யாவில் நடக்கவிருக்கும் காற்பந்து ஒலிம்பிக் போட்டிக்கான தேர்வு சுற்றில், புருனாய், இந்தோனேசியா என பல நாடுகளைத் தோற்கடித்து இறுதியில் தென்கொரியாவைச் சந்தித்து விளையாடிக் கொண்டிருக்கும்போது, மலேசியா மோஸ்கோ ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளப் போவதில்லை என செய்தி விளையாட்டாளர்களுக்கு வந்து சேர்கிறது. ஆப்கானிஸ்தானில்  அத்துமீறி நுழைந்து ஆக்கிரமிப்பைச் செய்து கொண்டிருந்த ரஷ்யாவின் செயலைக் கண்டிக்கும் வகையில் உலகத்தின் 62 நாடுகள் அவ்வருட ஒலிம்பிக் போட்டியிலிருந்து விலகிக் கொண்டது. அதில் மலேசியாவும் ஒன்றாகும். அச்செய்தியைக் கேட்டதும் அதுவரை உயிரைக் கொடுத்து விளையாடிக் கொண்டிருந்த அனைத்து விளையாட்டாளர்களும் தங்களுக்குக் கிடைக்கப் போகும் வாய்ப்பு அர்த்தமற்றது என உணர்ந்து கண்ணீர் வடிக்கிறார்கள். ‘first half’- க்குப் பிறகு அடுத்த சுற்றில் மீண்டும் அரங்கத்தில் என்ன நடந்தது என்பதுதான் ‘ஓலா போலா’வின் உச்சம்.

image

மூவின மக்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்த ஒரு காலத்தை இப்படத்தின் இயக்குனர் காற்பந்தின் மூலம் பதிவு செய்துள்ளார். ஆறுமுகம், மொக்தார், சோ சின் அவ்ன் என மூவினத்தைச் சேர்ந்த விளையாட்டாளர்களும் அன்றைய தேசிய அணியின் வெற்றிக்குக் காரணமாக இருந்திருக்கிறார்கள். இன மேலாண்மை அற்ற ஒரு காலம் மலேசியாவில் மூவின மக்களையும் ஒருவரைவொருவர் காழ்ப்புணர்ச்சி இல்லாமல் சார்ந்திருக்க வைத்திருந்ததை இயக்குனர் Chiu வரலாற்றின் ஒரு குரலாகப் பதிவு செய்திருக்கிறார். இக்கதையைத் தேர்வு செய்ததற்காகவே இயக்குனரைப் பாராட்டலாம். காலம் சார்ந்த உழைப்பும், கலை வேலைப்பாடுகளும், நடிகர்களின் தேர்வும், அவர்களுக்கு அளிக்கப்பட்ட காற்பந்து அடிப்படை பயிற்சியும், இடத்தேர்வும், சலிப்பூட்டாத திரைக்கதையும் என ஒட்டுமொத்தமாக ‘ஓலா போலா’ மலேசியாவின் 21ஆம் நூற்றாண்டின் திரைப்பட வளர்ச்சியை அறிவிக்கிறது. இதுவொரு மும்மொழிப் படம் என்றும் சொல்லிக்கொள்ளலாம். இப்படியொரு படத்தை இயக்கியதற்கு மூவின மக்களையும் திரையரங்கத்திற்கு வரவழைப்பதற்கான ஓர் உத்தியாகவும் இருக்கலாம். ஆனால், தான் ஒரு மலேசிய இயக்குனர் என தன்னுடைய பொறுப்புணர்வை ஒரு கலையின் மூலம் அழுத்தமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

படத்தில் வரும் மூவினம் சார்ந்த கிளைக்கதைகள் அனைத்தும் கதைக்கு இடையூறாக இல்லாமல் இணைந்து நகர்ந்து மையப்புள்ளிக்கு வருவதுதான் திரைக்கதையின் பலம். காற்பந்து நிகழ்ச்சி அறிவிப்பாளராக வரும் ரஹ்மான், அவருடைய கனவுகள், அவருடைய குடும்பம் எனும் கிளைக்கதையும் கதையோடு ஒட்டி வருகிறது. அத்துனை சாதூர்யமாக வெவ்வேறு கலாச்சார அடையாளங்கள் உடைய இனங்களின் மன உணர்வுகளைச் சேதப்படுத்தாமல் தான் எடுத்துக் கொண்ட வரலாற்றின் ஒரு சம்பவத்திற்குப் பின்னால் கோர்த்து Chiu ஒரு படமாக தந்துள்ளார்.

Syabash Ola bola. Malaysian Movie. Proud of you.

கே.பாலமுருகன்

உலக சினிமா தொடர் 2: ஸ்பானிஷ் சினிமா: ஒரு தீ மூட்டியும் ஒரு சவப்பெட்டியும்

buried2010

ஒவ்வொரு வருடங்களும் தூரத் தேசங்களுக்கு வேலைக்குப் போகும் ஏராளமான மனிதர்களில் யாரெனும் ஒருவரைத் தற்செயலாக எங்காவது பார்த்துப் பேசியிருக்கிறீர்களா? விட்டு வந்த நிலம் குறித்த கவலைகளும் ஏக்கங்களும் நிறைந்த கண்களைத் தரிசிக்கக்கூடும். மனைவி மக்களைப் பிரிந்து வருடக் கணக்கில் ஊர் திரும்பாமலேயே கிடைக்கும் இடத்தில் பெரிய எதிர்ப்பார்ப்புகள் ஏதுமின்றி உலகமெங்கும் பல தொழிலாளிகள், பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் சிதறிக் கிடக்கிறார்கள். அது போன்றவர்களின் மன உளைச்சலையும் பரிதவிப்பையும் நேரில் காட்சிகளாகக் கொடுத்து நம்மை வியப்பிலும் பயத்திலும் ஆழ்த்தும் படம் தான் ‘Buried’.

ஒரு தீ மூட்டி, ஒரு கைவிளக்கு, ஒரு கைத்தொலைபேசி, ஒரு கத்தி மட்டும் கொடுக்கப்பட்டு 6 அடியிலுள்ள பாலைவன மண்ணுக்கு அடியில் சவப்பெட்டியில் உயிருடன் புதைக்கப்பட்டு 90 நிமிடங்கள் எந்த இடத்தில் யாரால் புதைக்கப்பட்டிருக்கிறோம் எனத் தெரியாமல் குறுகலான ஓர் இடத்தில் வெளி உலகமே தெரியாமல் அடைக்கப்பட்டிருந்தால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?  Rodrigo cortes இயக்கத்தில் வெளியான உயிருடன் புதைத்தல்எனும் ஸ்பானிஷ் சினிமா திரைப்பட உலகத்திற்கே பெரிய சவாலை ஏற்படுத்தியிருக்கிறது. இப்படி ஒரு மனதை உலுக்கும் பயங்கரத்தைப் படம் முழுக்கக் காட்டி அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்திய சினிமாவை நாம் பார்த்திருக்க வாய்ப்பில்லை எனக் கருதுகிறேன்.

பெரும்வெளியில் நிகழும் எந்தவகையான குரூரமாகவும் இக்கட்டான சூழலாக இருந்தாலும் அதன் காத்திரம் அத்தனை அழுத்தமாக நமக்குள் பாயாது, பெரும்வெளியின் மற்ற மற்ற விசயங்கள் நம் கவனத்தை ஆங்காங்கே பிடுங்கிக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. ஆனால் இந்தப் படத்தில் நம் கவனம் மேலும் மேலும் ஒரே இடத்திற்குள்ளே காத்திரமாக அழுத்தப்படுகிறது. எங்கேயும் தப்பித்து ஓடாமல் நம் பார்வை ஒரு சிறிய பெட்டிக்குள் வைத்து அடைக்கப்படுகிறது. மேலும் படம் முழுவதையும் தொடர்ந்து எந்தச் சலனமும் மனக்கொந்தளிப்பும் இல்லாமல் திடமாகப் பார்ப்பதென்பது தனிநபரின் மன அமைப்பைப் பொருத்ததே. சில கட்டங்களுக்குப் பிறகு எங்கோ ஒரு சவப்பெட்டிக்குள் சிக்கிகொண்ட சூழலை நிதர்சனமாக நம்மால் உணரப்படவும் வாய்ப்புண்டு. அப்படி உணரப்படுகையில் அந்தச் சவப்பெட்டிக்குள் கதைநாயகனுக்குப் பதிலாகத் தவிப்பு மனநிலையின் உச்சத்தில் நீங்கள் திணறிக்கொண்டிருப்பீர்கள். இதுதான் இந்த ஸ்பானிஷ் திரைப்படம் கொடுக்கும் பயங்கரமான அனுபவம். சவப்பெட்டிக்குள் உயிருடன் புதைக்கப்பட்டிருக்கும் மையக்கதைப்பாத்திரம் மட்டுமே படத்தில் நடித்திருக்கிறார். படம் 5 நிமிடம் இருளில் காட்சிகளின்றி வெறும் ஓசையை மட்டும் குறிப்புகளாக் காட்டியவாறு தொடங்குகிறது. யாரோ ஒருவர் கரகரத்தப்படியே இருமிக் கொண்டிருக்கிறார்.

அவருடைய கைவிரல்கள் எதையோ தேடி சுரண்டும் ஓசையும் தொடர்ந்து 5 நிமிடங்களுக்குக் கேட்கும். இதுவே இறுக்கத்தை உண்டாக்கும் முதல்நிலை. சிறிது நேரத்திற்குப் பிறகு ஒரு தீ முட்டி கொளுத்தப்பட்டதும் அங்கு பாவ்ல் படுத்துக்கிடக்கிறான். தீம்மூட்டியிலிருந்து சட்டென கிளம்பிய ஒளி சுற்றிலும் பரவி அவன் எங்கு கிடக்கிறான் என்பதைத் தேடுகிறது. கொஞ்ச நேரத்திலேயே பாவ்லும் நாமும் அவன் ஒரு சவப்பெட்டியில் அடைக்கப்பட்டுக் கிடக்கிறான் என்பதை உணரமுடிகிறது. ஈராக் தீவிரவாதி கும்பல் ஒன்றால் தாக்கப்பட்ட பிறகு மயக்கமுறும் பாவ்ல், இப்பொழுது இந்தச் சவப்பெட்டிக்குள்ளிருந்துதான் விழித்தெழுகிறான்.

அந்தச் சவப்பெட்டியின் தோற்றம் மிகவும் மிரட்டலான அமைப்பைக் கொண்டிருப்பதோடு கடுமையான பயத்தையும் அளிக்கும் வகையில் இருக்கும். அவனுடைய கால் விரல்களைக் கடந்து மேலும் 10செ.மீட்டர் நீளமும், அவன் கைகளை உயர்த்தினால் மணிக்கட்டு இடமும் வலமும் உள்ள பக்கவாட்டுப் பலகையை மோதும் அளவிற்கான உயரமும் கொண்ட அந்தச் சவப்பெட்டியில் அவன் சிக்கிக் கொண்டு அடையும் பரித்தவிப்பும் பதற்றமும் சீக்கிரமே பார்வையாளனுக்குள் படர்ந்து சென்று அவனையும் சலனமடைய செய்கிறது. இருளும் மங்கிய மஞ்சள் ஒளியும்,

கைத்தொலைப்பேசியிலிருந்து வெளிப்படும் நீல வர்ணமும் என படத்தில் பாவிக்கப்பட்டிருக்கும் ஒளி அனைத்தும் அந்தச் சவப்பெட்டிக்குள் பாவ்ல் பயன்படுத்தும் கருவிகளிலிருந்தே வருகிறது. முதலில் ஒரு தீ மூட்டியைக் கண்டடைந்து அதைப் படம் முழுக்கச் சவப்பெட்டிக்குள் அடர்ந்து கிடக்கும் இருளைத் தவிர்ப்பதற்காகப் பயன்படுத்துகிறான். அதன் பிறகு கைவிளக்கு அவனுக்குக் கிடைக்கிறது. அதனைப் பலம் கொண்டு தட்டி உதறினால்தான் ஒளியைக் கக்குகிறது. வசதியே இல்லாத சவப்பெட்டிக்குள் இடம் பற்றாக்குறை அவனுக்குத் தொடர்ந்து சிரமத்தையும் நெருக்கடியையும் ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது. அவனுடன் சேர்ந்து நாமும் சவப்பெட்டிக்குள் சிக்குண்ட நம் உடலைச் சரிப்படுத்திக் கொண்டே இருப்போம். படம் முடிவடையும்வரை தீராத ஒரு அசௌளகரிகமான சூழலில் ஆழ்ந்திருக்க வாய்ப்புண்டு.

buried-movie

இந்தப் படத்தில் மேலும் கூடுதலான இறுக்கம் என்னவென்றால், படம் தொடங்கி கடைசிவரை நாம் பாவ்ல் சிக்குண்டு கிடக்கும் அந்தச் சவப்பெட்டியிலிருந்து வெளியேறாமல் அங்கேயே அவனுடனே நம்மை முடித்துக் கொள்வோம் என்கிற வித்தியாசமான அனுபவம்தான். எப்படியும் படத்தின் கேமரா அந்தச் சவப்பெட்டிக்குள்ளிருந்து மீண்டு வெளியே நகர்ந்து போகாதா என்கிற எதிர்ப்பார்ப்பு, கடைசிவரை நிறைவேறாமல் மணல் மூடி இருளின் பிடியில் கரைந்து முடிகிறது. பாவ்ல் என்கிற அமெரிக்க பிரஜை, ஈராக்கில் பார வண்டி ஓட்டுனராகப் பணிப்புரிந்து வருகிறான். ஒரு தீவிரவாதி கும்பலால் அமெரிக்க இராணுவ வீரன் எனச் சந்தேகிக்கப்பட்டு, தாக்கப்படுகிறான். பிறகு அவனை அங்குள்ள பாலைவனத்தில் ஆறு அடியில் குழி தோண்டி ஒரு சவப்பெட்டிக்குள் அடைத்து உயிருடன் புதைத்துவிடுகிறார்கள். அவன் அங்கிருந்து கொண்டு 90 நிமிடம் வரை மட்டுமே சுவாசிக்க முடியும்.

ஆகையால் அவனை வைத்து அமெரிக்க அரசாங்கத்திடமிருந்து பணம் கேட்டுப் பெறுவதற்கான திட்டத்தை நடத்துவதற்குச் சவப்பெட்டியில் கிடக்கும் பாவ்லுக்கு 9 மணிவரையே அவகாசம் கொடுக்கப்படுகிறது. அதற்கேற்ப அவன் வெளி உலகத்துடன் குறிப்பாக அமெரிக்க அரசாங்கத்துடன் தொடர்புக்கொள்ள ஒரு கைத்தொலைபேசியும் சவப்பெட்டிக்குள் வைக்கப்படுகிறது. கைப்பேசியைக் கொண்டு அவன் அவனுடைய வேலை தொடர்புள்ள மேலாதிகரிக்கும், குற்றப்புலன் விசாரனை அலுவலகத்திற்கும் அவன் மனைவிக்கும் நண்பர்களுக்குமென தொடர்ந்து அழைத்துக் கொண்டேயிருக்கிறான். அவர்களின் குரல்கள் மட்டும் கைப்பேசியின் வழியாகச் சவப்பெட்டிக்குள் ஒலிக்கிறது. அவர்களுடன் அவன் பலத்தரப்பட்ட மனநிலையில் விவாதிக்கிறான், திட்டுகிறான், மனஇறுக்கத்தை வெளியேற்றுகிறான், துன்பப்படுகிறான், சோர்வடைகிறான் என இவையனைத்தையும் குரலின் ஒலிகளிலே சில சமயங்களில் காட்டுவது படத்தின் மையத்தை மேலும் அடர்த்தியாக்குகிறது.

தொலைப்பேசியில் ஒலிக்கும் யாருடைய குரலின் வழியாவது அந்தச் சவப்பெட்டி கொடுக்கும் பயத்திலிருந்து நீங்கி தப்பித்துக்கொள்ளலாம் எனக்கூட எனக்குத் தோன்றியது. முற்றிலும் வெளிஉலகம் குறித்த அனைத்துவிதமான பிரக்ஞையிலிருந்தும் துண்டிக்கப்பட்டு மண்ணுக்குள் கிடக்கும் மனிதனும் சவப்பெட்டியும் நமக்கான சராசரி மனோபாவத்தைத் தகர்த்து எடுத்துவிட்டு, அதனுடைய பயங்கரமான ஒரு களத்திற்குள் இறக்கி வேடிக்கை பார்க்கிறது படம். இந்தப் படம் வெறும் சவப்பெட்டிக்குள் 90 நிமிடங்கள் நிகழும் ஒற்றைக்காட்சிதன்மையுடைய தொகுப்பாக மட்டுமே பார்க்க முடியாது. ஒட்டுமொத்த ஈராக் நிலப்பரப்பில் பாதுகாப்பில்லாத அமெரிக்கத் தொழிலாளர்களின் வாழ்வையும் காட்டி, 11 செப்டம்பருக்குப் பிறகு ஈராக்கில் அதிவேகமாக வளர்ந்த தீவிரவாத இயக்கங்களின் அமெரிக்க எதிர்ப்புணர்வையும் படம் ஆழ்ந்து தொடுகிறது. ஒரு பார வண்டி ஓட்டுனரான பாவ்ல் சந்தேகத்தின் பெயரில் அமெரிக்க இராணுவப்படையைச் சேர்ந்தவன் எனக் கருதப்பட்டு தாக்கப்படுகிறான். தாக்கப்பட்டு அங்குள்ள தீவிரவாத கும்பல்களால் பிடிப்படும் அமெரிக்க இராணுவர்களின் தலையை அவர்கள் அறுத்து அதை வீடியோ படம் எடுத்து அனுப்புவது வழக்கமான பயங்கரவாத வன்முறை செயலாகும்.

ஆனால் இப்படம் மேலும் ஈராக்கில் நிகழும் இன்னொரு கொடூரத்தைக் காட்டுவது ஆச்சர்யமாக இருக்கிறது. பிடிக்கப்பட்ட பாவ்ல் ஒரு சவப்பெட்டிக்குள் அடைக்கப்பட்டு பாலைவனத்தில் உயிருடன் புதைக்கப்படுகிறான். ஒரு கொலையைவிட, இப்படி உயிருடன் புதைப்பது மனதைப் பாதிக்கக்கூடிய வன்மையான செயலாகும்.  அந்த வன்மையான தண்டனையை முன்வைத்துதான் படம் நீள்கிறது. ஆகையால் படத்தின் பின்னணியில் பயங்கரவாத செயலும் அதைக் கொண்டு உருவாகி வளர்ந்திருக்கும் தீவிரவாத இயக்கங்களின் அரசியலையும் புரிந்துகொள்ள முடிகிறது. இது ஒரு வெறுமனே உருவாக்கப்பட்ட திகில் படமா எனக் கேட்கக்கூடும். ஆனால் முற்றிலும் மறுக்க வேண்டிய ஒரு மாற்றுப் பார்வையை தனக்குள் வைத்துக்கொண்டு தீவிரவாதத்தையும் எதிர்ப்பு அரசியலையும் வித்தியாசமான முறையில் துணிச்சலாகக் கையாண்டிருக்கும் மிக முக்கியமான படமாகவே இதைக் கருதுகிறேன். இப்படத்தின் இயக்குனரான ரோட்ரிகோ தனது 16ஆவது வயதிலேயே முதல் குறும்படத்தின்(Super 8) மூலம் உலகிற்கு அறிமுகமானவர். மேலும் பல விருதுகளைப் பெற்று ஸ்பானிஷ் திரைஉலகத்தில் தனித்த சினிமா அடையாளத்தை ஏற்படுத்தியவரும்கூட. மேலும் பாவ்ல் எதிர்நோக்கும் தொலைப்பேசி உரையாடல்களில் அமெரிக்க அரசாங்கம் அவனைப் புறக்கணிப்பது குறித்தும் அவன் மீதான அக்கறையின்மையைப் பல கட்டங்களில் ஒரு சில அதிகாரிகளின் வழியாகக் காட்டுவதன் மூலமும், அரசின் அலட்சியத்தையும் படம் வெளிப்படுத்துகிறது. ஒரு சாதரண தனிமனிதனின் உயிர் எந்தவகையிலும் முக்கியமில்லை என்பதன் உண்மையை இங்கு நம்மால் உணர முடியும்.

 

இறுதியில் அரசாங்கப் பிரிவைச் சேர்ந்த ஒரு அதிகாரியின் அக்கறையினாலேயே அவனைக் காப்பாற்றக்கூடிய குழு ஒன்று அங்கு வந்து சேர்வதாகத் தொலைப்பேசியின் வழியாக அவனுக்குத் தெரிவிக்கப்படுகிறது. அந்த உரையாடலில் நமக்கும் ஒருவித நம்பிக்கையும் தப்பிக்கப்போகும் உணர்வும் வெளிப்படும். உன்னை நெருங்கிவிட்டோம், நீ இருக்கும் இடம் கண்டுப்பிடித்தாகிவிட்டது, இன்னும் கொஞ்ச நேரம் சில வினாடிகள் மட்டும் பொருத்துக் கொள்என அந்த அதிகாரி தொடர்ந்து பேசிக்கொண்டிருக்க, சவப்பெட்டிக்குள் சிறுக சிறுக மணலும் நிரம்பிக் கொண்டிருக்கும். மெல்ல இருள் பரவ, தொலைப்பேசியில் சவப்பெட்டி ஒன்று தூக்கப்படுவது போன்ற ஓசையும் கேட்கும். ஆனால் பாவ்ல் இருக்கக்கூடிய அந்தச் சவப்பெட்டியில் சிறு அசைவும் தென்படாது. சிறிது நேரத்திற்குப் பிறகு பாவ்லின் சவப்பெட்டி முழுவதும் மணல் நிரப்பப்பட்டு, நம் காட்சிக்குள்ளிருந்து விலகுகிறது. இருள் மூடிய திரைக்குப் பின்னணியில் அந்த அதிகாரியின் குரல் ஒலிக்கிறது,“மன்னித்துவிடு பாவ்ல். இது வேறு ஒரு சவப்பெட்டிஎன்பதோடு படம் முடிகிறது. பாவ்ல் மட்டுமல்ல, இதற்கு முன்பு இப்படி நிறைய பேர் உயிருடன் புதைக்கப்பட்டுச் சாகடிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதையும் நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது.

 

பாவ்லுடன் நம்முடைய மனநிலையும் செத்துவிட்ட ஒரு சூன்யத்தைத் தழுவும்போது, “இப்படிப்பட்ட படமா?” என இறுக்கத்துடன் ஆச்சர்யமும் அதிர்ச்சியும் அடையக்கூடும். தொடர்ந்து 3 நாட்களுக்கு அந்த ஸ்பானிஷ் படம் கொடுத்த அனுபவத்திலிருந்து என்னால் மீளவே முடியவில்லை.

கே.பாலமுருகன்

 

உலக சினிமா தொடர் – 1 : Camp X –Ray திரைவிமர்சனம் ஈராக் சினிமா: ஒரு சிறையின் மிகக்கொடூரமான தனிமை

ஒரு தூக்குக் கைதியின்

சிறையில்

அவன் மரணத்திற்குப் பிறகு

என்ன இருக்கும்?

மௌனம்.

 

1011223_931050030257358_1399325528387543823_n

சில வருடங்களுக்கு முன்பு கோலாலம்பூரில் இருக்கும்புடு சிறைபொதுமக்களின் பார்வைக்கு வைத்திருந்தபோது அங்குப் போக நேரிட்டது. பல ஆண்டுகளாகச் சிறை கைதிகள் வாழ்ந்து தண்டனைகளை அனுபவித்த ஒவ்வொரு சிறையையும் கடக்கும்போது விவரிக்க இயலாத ஒரு தனிமையின் கதறல் மனத்தில் அப்பிக்கொண்டதை உணர முடிந்தது.  மரணத் தண்டனை என்னைப் பொறுத்தவரை சட்டத்தின் அனுமதியுடன் செய்யப்படும் கொலையே. சட்டமும் தண்டனைகளும் ஒரு மனிதன்/ குற்றவாளி மீண்டு வருவதற்கு ஒரு உளவியல்பூர்வமான வாய்ப்பை வழங்க வேண்டுமே தவிர ஒருவனைக் கொலை செய்வது மனித உரிமை மீறலே.

இந்தச் சமூகம் குற்றவாளி எனத் தண்டிக்கும் யாராவது ஒருவரை அவருடைய தண்டனைக் காலத்திலோ அல்லது தண்டனைக்குப் பிறகோ நீங்கள் சந்தித்து உரையாடியிருக்கிறீர்களா? பத்திரிகையில் அவர்களின் செய்தியைப் படிப்பதோடு நமக்கும் அவர்களுக்கு என்ன உறவு இருந்திருக்கிறது? அதிகபட்சமாக நாம் அவர்களின் மீது ஒரு வெறுப்புணர்வைக் கொண்டிருந்திருக்கலாம். ஆனால், எத்தனையோ இரவுகளில் அவர்களின் சிறைக்குள் இருந்துகொண்டு அவர்களால் பார்க்கவியலாத இந்த உலகத்தைப் பற்றி அவர்கள் எத்தனை கற்பனை செய்து அழுதிருப்பார்கள்? அப்படிப்பட்ட மிகக் கொடூரமான சிறைச்சாலை என வரலாற்றில் சொல்லப்படும் குவாண்டனாமோவில் தீவிரவாதி என அடைக்கப்பட்டிருக்கும் ஒருவனின் கதைத்தான் ‘Camp X – Ray’.

Peter sattaler இயக்கி கடந்த வருடம் வெளிவந்திருக்கும் மிக முக்கியமான படம் ஆகும். அநேகமாக இந்த ஆண்டில் பல விருதுகளைக் குவிக்கலாம் என எதிர்பார்க்கப்படும் படமாகும். தன்னுடைய சிறுநகரத்தைவிட்டு இராணுவத்தில் சேரும் ப்லோண்டி எனும் ஓர் இளம் பெண்ணுக்கும் Guantanamo சிறையில் 8 வருடமாக அடைப்பட்டிருக்கும் அல்கைடா தீவிரவாதி என நம்பப்படும் அலி என்பவருக்கும் இடையில் உருவாகும் ஒரு மெல்லிய நட்புதான் படத்தின் கதை. குவாண்டனமோ 1990களில் நிறுவப்பட்ட உலகின் மிகவும் கொடூரமான மனித வதைகள் நடந்த சிறைச்சாலையாகும்.

9 செப்டம்பர் சம்பவத்திற்குப் பிறகு பல இஸ்லாம் கைதிகள் அங்கு அடைக்கப்படுகிறார்கள். அதில் ஒருவர்தான் ஜெர்மனிய விரிவுரையாளர் அலி. ஆனால், திவீரவாதி என்ற அடையாளத்துடனே அங்கு 8 வருடங்களைத் தனிமையில் கழிக்கிறார். அன்பான உரையாடல்கள் இல்லாத, கவனிப்புகள் இல்லாத பெண் வாடையே இல்லாத ஒரு பயங்கர நரகமாக மாறியிருக்கிறது அவரின் அறை. ஆனால், படத்தின் முதன்மை கதைப்பாத்திரமான ப்லோண்டி எனும் இளம் பெண் அவர்களின் வருகை, அலி என்பவனின் வாழ்க்கைக்குள் சில அசைவுகளை உருவாக்குகிறது. அது நெடுங்கால இறுக்கத்தின் உடைவாக மாறி அலி மீண்டும் ஒரு மனிதனாக மாறும் தருணம். படத்தில் மனித வதைகள் காட்டப்படவில்லை. அப்படியென்றால் குவாண்டனமோ மிகவும் அமைதியில்தான் இருந்தது போன்ற ஒரு தவறான எண்ணம் எழுகிறது.

கதையில் வரும் அலி, தான் குற்றவாளி அல்ல என்றே அந்த எட்டு வருடங்களும் கத்தி கதறி சொல்லி உச்சமான மன எழுச்சிக்குப் பலமுறை ஆளாகி தன்னை வருத்திக்கொள்ளும் ஒரு பாத்திரமாக வருகின்றான். கடைசிவரை அவன் உண்மையில் அல்கைடா தீவிரவாதியா அல்லது இல்லையா என்பது படத்தில் முதன்மையாக விவாதிக்கப்ப்டவில்லை. சில நேரங்களில் தன் மீதான குற்றத்தைச் சாடும் வகையில் அமெரிக்கா இராணுவத்தைப் பழிக்கின்றான். சில சமயங்களில் தான் குற்றவாளி அல்ல என முனகுகின்றான்.

camp-x-ray

குற்றம் என்பதைவிட குற்றத்திற்கான வேர்கள் என்னவாக இருக்கும் என்பதில் இச்சமூகமும் சட்டமும் கவனிப்பதே இல்லை. இதுதான் குற்றத்திற்கு உடந்தையான ஒரு மனநிலை என நினைக்க வைக்கிறது. இச்சமூகத்திற்கு சட்டத்திற்கும் குற்றவாளிகள் தேவை. குற்றங்களை உருவாக்கி வைத்திருக்கும் சமூகம் குற்றவாளிகளைத் தேடிக் காத்திருக்கிறது. பழியைப் போடுவதற்கும் மக்களை மிரட்டுவதற்கும் குற்றவாளிகள் எப்பொழுதும் தேவைப்படுகிறார்கள். ஆகவே, ஒரு குற்றவாளி எவ்வளவுத்தான் தான் குற்றம் செய்யவில்லை எனக் கதறினாலும் அவனுடைய குரலைச் செவிமடுக்க சட்டத்திற்கோ சமூகத்திற்கோ மனமில்லை. அவை காதுகளைப் பொத்திக் கொண்டு தொடர்ந்து கருப்பு வெள்ளை என சமூகத்தைப் பிரித்துக் காட்டிவிட குற்றவாளிகளை வலை வீசித் தேடிக் கொண்டிருக்கின்றன.

ப்லோண்டி அங்கு வந்த நாட்களில் முதலில் அவளை அவமானப்படுத்துகிறான். தன் மலத்தை அள்ளி அவள் மீது வீசுகிறான். அவனுடைய அந்தச் செயல் முதலில் அவளுக்குக் கோபத்தை உண்டாக்குகிறது. ஆனால், பிறகு மெல்ல அவனை அவனது 8 வருடத் தனிமைக்குள் வைத்துப் புரிந்து கொள்கிறாள். அலி அவளிடம் சதா தனக்கு ஹாரி போட்டர் நாவல் வேண்டும் எனக் கேட்கிறான். குவாண்டனாமோவில் அந்த நாவல் முன்பு இருந்ததாக வாதிடுகிறான். ஆனால், அவளுக்கு அந்த நாவல் தட்டுப்படவில்லை. அதுவே அலிக்கு மிகவும் ஏமாற்றமாக இருக்கிறது.

மிகவும் யதார்த்தமான சினிமாக இருக்கின்றது. அலியும் ப்லோண்டியும் பட்த்தில் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். குறிப்பாக அலியின் கதைப்பாத்திரம் அழுத்தமான நடிப்பு. ஆர்பாட்டம் இல்லாத கதையோடு பொருந்தி போகிற நடிப்பை வெளிக்கொணர்வதில் இயக்குநர் முக்கியத்துவம் பெறுகிறார்.

இறுதியில் அதுவரை ஓர் இராணுவ அதிகாரியாகவே இருக்க வேண்டும் என்கிற ப்லோண்டியின் உறுதி அலியின் முன் கொஞ்சம் கொஞ்சமாக தளர்ந்து போகிறது. அவள் ஓர் அன்பானவளாக மாறுகிறாள். அலியை நேசிக்கிறாள். அவனது தனிமைக்குள்ளிருந்து அவனை வெளியே கொண்டு வர அவனுடன் விதிமுறைகளையும் மீறி உரையாடுகிறாள். பிறகு வழக்கம்போல ஆகஸ்ட் மாத்ததில் சில இராணுவத்தினர் இடம் மாற்றப்படுவார்கள். புதியவர்கள் அங்கு வருவார்கள். அவள் மாற்றலாகி வேறு இடம் போக வேண்டிய நிலை. இறுதி சந்திப்பில் அலி அவளிடம் சொல்கிறான் உனக்குப் பிறகு இங்கு வரப்போகும் அந்தப் புதியவர் இது போல என்னிடம் உரையாடுவார்களா எனத் தெரியவில்லை, இந்தத் தனிமை இனி பல வருடங்களுக்கு என்னை விட்டு நீங்காது என வருத்தத்துடன் கூறுகிறான்.

மறுநாள் அவள் பேருந்து ஏறி குவாண்டானமோவை விட்டுச் சென்று கொண்டிருக்கிறாள். அவளுக்குப் பதிலாகப் புதியதாக வந்த இராணுவ இளைஞன் புத்தகங்களை ஒரு தள்ளு வண்டியை வைத்து எடுத்து வருகிறான். அந்தப் புத்தக அடுக்கில் அலி தான் தேடிக்கொண்டிருந்த ஹாரி போட்டர் நாவலைப் பார்க்கிறான். அதனை வாங்கித் திறக்கின்றான். ப்லோண்டி அங்கிருந்து செல்வதற்கு முன்பாக அந்த நாவலைத் தேடி எப்படியோ கண்டடைந்து அதில் ‘அன்பான அலிக்கு – ப்லோண்டி’ என எழுதியிருக்கிறாள். எந்தப் பதற்றமும் இல்லாமல் தன் அறையில் அமர்ந்து அலி அந்த நாவலை வாசிக்கத் துவங்குகிறான். படம் நிறைவடைகிறது. என் கண்களில் வெகுநாட்களுக்குப் பின் கண்ணீர். அழ வைக்க வேண்டும் என்கிற எந்த முன்னேற்பாடுகளும் பரப்ப்பரப்பும் இன்றி படம் முடிகிற இடத்தில் நாம் அழுவோம். பட்த்தின் ஆழம் நம் மனத்தைத் தொட்டிருக்கும்.

மனித கூட்டம் எதிர்க்கொள்ளும் சிறை தனிமை என்பது எத்தனை ஈவிரக்கமற்றது என்கிற வலி மனத்தை அழுத்தும். எத்தனையோ நல்லவர்கள் இன்னமும் நம் கண்ணுக்குத் தெரியாத சிறைக்குள் இருந்து தனக்கு மட்டுமே தெரியும் உண்மைக்குள் தகித்துக் கொண்டிருக்கிறார்கள். நீதி அவர்களுக்கு எதிராக இழைக்கப்பட்டிருக்கும். தீமையின் ருசி அறிந்த நிறைய பேர் வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும்போது, எந்தத் தீமையும் செய்யாதவர்கள் குவாண்டணமோ போன்ற மிகக் கொடூரமான சிறைக்குள் எரியும் நிஜத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கலாம். நிச்சயம் பார்க்க வேண்டும் ஒரு படம். Camp- x-ray.

 

கைவிடப்பட்ட

ஒரு கைதியின்

அறைக்குள்ளிருந்து

ஒரு தீர்க்கமான

மௌனம்

எப்பொழுதும்

கேட்டுக் கொண்டே

இருக்கின்றது.

தன் தண்டனை காலங்களுக்குப் பிறகு ஒரு பூர்ணமான சீர்த்திருத்தம் பெற்ற ஒருவனைத்தான் சிறைச்சாலைகள் வெளியேற்றுகின்றனவா? அதில் எந்த அளவிற்கு நம்பிக்கை கொண்டுள்ளீகள்? மனித உரிமை மீறப்படும்போது குரல் எழுப்பும் சமூகமே ஜனநாயகத்தன்மையுடைய சமூகமாகும். மரணத் தண்டனையை இரத்து செய்யத் தூண்டும் ஒரு விழிப்புணர்வுமிக்க சமூகம் உருவாக வேண்டும். அதற்கான ஒரு மனப்பூர்வமான தூண்டுதலை இந்தச் சினிமா உண்டாக்குகிறது.

கே.பாலமுருகன்

குற்றம் கடிதல்: ஒரு மன்னிப்பின் முன்னே மண்டியிடுதல்

201509221241228976_tamil-new-movie-in-kutram-kadital-preview_SECVPF

‘குற்றமே பகையாக மாறலாம்’ என்கிற தெளிவான கருத்துடன் சமூகத்தை நோக்கி விரிகிற குற்றம் கடிதல் படம் பள்ளிக்கூடங்களில் இழைக்கப்படும் குற்றங்களுக்கான மையப்புள்ளியைத் தேடி விரிவாக முனைந்துள்ளது என்றே சொல்லலாம். தற்கால சூழலில் இயங்கி வரும் பள்ளிக்கூடங்கள் என்பது அடுத்த தலைமுறை சந்ததியை உருவாக்கி வெளியே அனுப்பும் தொழிற்சாலை என்பதைப் போல பல தமிழ் சினிமாக்கள் காட்ட முனைந்திருக்கின்றன. டோனி, சாட்டை, நண்பன் போன்ற படங்களைக் குறிப்பிட்டு சொல்லலாம். ஆனால், குற்றம் கடிதல் எவ்வித மாற்றுக் கருத்தையோ அல்லது எதிர்ப்பையோ விளம்பரப்படுத்தவில்லை. நேராகப் பள்ளிக்கூடத்தில் நுழைந்து வகுப்பறையில் ஓர் ஆசிரியரும் மாணவனும் சந்திக்கும் புள்ளியில் குற்றம் எப்படி இழைக்கப்படுகிறது என்பதைக் காட்டிவிட்டு நகர்கிறது.

ஒரு சினிமா உருவாவதன் பின்னணியிலுள்ள நிகழ்வு, புனைவு என இவ்விரண்டையும் ஆய்வாளர் அ.ராமசாமி ‘ஒளிநிழல் உலகம்’ எனும் தன் சினிமா கட்டுரை நூலில் விரிவாக்க் குறிப்பிட்டுள்ளார். நான் அதனை விமர்சனப்பூர்வமான பார்வையுடன் அணுகி பார்க்கிறேன். எல்லா சினிமாக்களும் ஒரு நிகழ்வை மையப்படுத்தி புனைவொன்றை உருவாக்குகிறது. புனைவு அப்படத்தின் நிகவோடு ஒட்டியும் அல்லது ஒட்டாமலும் போக வாய்ப்புண்டு. நிகழ்வு என்பது சமூகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவையாக இருக்க அதனைச் சுற்றி புனைவுகள் கட்டியெழுப்பப்படுகின்றன. ஆகவே, ஒரு திரைப்படத்தின் மையமான நிகழ்வும் அதன் தொடர்ச்சியான புனைவுகளும் ஒரு படத்தை உண்மைக்கு மிக நெருக்கத்தில் கொண்டு போய் வைப்பதாக இருக்க வேண்டும் என அ.ராமசாமி குறிப்பிடுகிறார்.
நிகழ்வும் புனைவும்

குற்றம் கடிதல் படம் உருவாக்க முனையும் நிகழ்வு என்பது ஓர் ஆசிரியர் அடித்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த மாணவனின் பாலியல் தொடர்பான அறியாமையைச் சகித்துக் கொள்ள முடியாமல் அறைந்துவிடுகிறார். இச்சம்பவம்தான் படத்தின் நிகழ்வு. இதனையொட்டியே கதை மேற்கொண்டு நகர்கிறது. மொத்த படத்தையுமே தொய்வின்றி பரப்பரப்புடன் நகர்த்த இயக்குனர் அந்த வகுப்பறை நிகழ்வை உருவாக்குகிறார். குற்றம் கடிதல் படத்தின் புனைவு என்றால் மெர்லின் குற்றம் இழைத்தவுடன் நிகழ்வு நடந்த இடத்திலிருந்து துரத்தியடிக்கப்படுகிறாள்; அம்மாணவனின் தாயிடமிருந்தும் அவனுடைய சமூக மக்களின் கோபத்திலிருந்தும் தப்பித்து ஓடுகிறாள் என்பதே ஆகும். பிரம்மா படத்தின் மூலம் சொல்ல நினைத்த கருத்துடன் மற்ற அனைத்து சம்பவங்களும் மையத்தைவிட்டு விலகாமல் ஈடு கொடுத்துக் கதையை முன்னெடுத்துச் சென்றிருக்கின்றன.

இப்படத்தில் மெர்லின் எனும் ஆசிரியர் குற்றம் இழைப்பதற்குக் காரணமாக இருப்பது பள்ளிக்கூடங்களில் கவனப்படுத்தப்படாமல் இருக்கும் பாலியல் குறித்தான புரிதலின்மையே ஆகும் என இயக்குனர் சமூகத்தின் முன் குற்றச்சாற்றாக வைக்கிறார். இக்கருத்தைத் தாங்கிக் கொண்டே படம் மெர்லின் அம்மாணவனை அறையும் சம்பவத்தை உருவாக்குகிறது. அது வெறும் தண்டனை மட்டுமல்ல. வகுப்பறைகளில் எத்தனையோ தண்டனைகள் இன்று வழக்கத்தில் இருக்கின்றன. நாற்காலியின் மீது ஏறி நிற்க வைத்தல், தரையில் முட்டியிடப் பணித்தல், புத்தகத்தைத் தலையில் கவிழ்த்து நிற்க வைத்தல், திடலைச் சுற்றி ஓட வைத்தல், அறைதல், பிரம்பால் அடித்தல், காதைப் பிடித்துத் திருகுதல் எனச் சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால், இத்தண்டனைகளின் பின்னணியில் பெரிதாக ஒன்றும் இருக்காது. அதுவொரு சம்பவமாகக் கடந்து சென்றுவிடும். வீட்டுப்பாடங்கள் செய்யாமைக்கான ஒரு தண்டனை அவ்வளவே. ஆனால், குற்றம் கடிதல் படத்தில் மெர்லின் வழங்கும் தண்டனைக்குப் பின்னணியாக இருப்பது ஓர் ஆசிரியரும் மாணவனும் பாலியல் தொடர்பான புரிதலில் வேறுப்பட்டு நிற்பதுதான்.

படம் முன்னெடுக்கும் விவாதம்

2015ஆம் ஆண்ற்கான சிறந்த படம் என்கிற தேசிய விருதை வென்ற ‘குற்றம் கடிதல்’ பாலியல் கல்வி எனும் ஒரு மைய இழையை பிடித்துக் கொண்டு இச்சமூகத்தின் எளிய மனிதர்களாய் இருக்கும் ஆசிரியர்களையும் பெற்றோர்களையும் கல்வியையும் விவாதித்துள்ளது. தற்போது வெளிவரும் பெரும்பான்மையான சினிமா எதையும் விவாதிப்பதில்லை. ஆனால், எல்லாவற்றையும் விமர்சிக்கவும் தீர்ப்பு வழங்கவும் தயாராக இருக்கின்றன. குற்றம் கடிதல் கல்வி உலகை விவாதிக்க முயல்கிறது. படம் முடிவடையும்போது தீர்ப்பை நம் கையில் விட்டுச் செல்கிறது. சமூகத்தையும் கல்வியையும் விமர்சிக்கவும் விவாதிக்கவும் ஒரு பார்வையாளனை அப்படம் தயார் மட்டுமே படுத்துகிறது. அதற்கான அனுபவத்தை அப்படத்திலிருந்து அவன் பெறுகிறான். ஒரு சினிமா தன் பார்வையாளனுடன் கொள்ளும் உறவு அவனுக்குத் தொடர்ந்து சிந்திக்கவும் முடிவு எடுக்கவும் ஓர் இடைவெளியை விடுவதாக இருக்க வேண்டும். மூன்று மணி நேரம் அவனுடைய மூளையைக் கழற்றி வைத்துவிட்டு அடிமையாக்கும் நிலைக்கு ஆளாக்கக்கூடாது. இன்று மாஸ் கதாநாயகர்களின் படம் தன் பார்வையாளனைச் சிந்திக்க விடுவதில்லை. அவனுக்கு எது மகிழ்ச்சி; அவனுக்கு எது தேவை என்பதை அப்படமே முடிவு செய்து தீர்ப்பை மட்டும் வழங்குகிறது.

குற்றம் கடிதல் நம்மை விவாதிக்கத் தூண்டும் சினிமா. வழக்கமான சினிமாத்தனங்களைத் திணித்து நம்மை முடக்காமல் ஓர் அறிவார்ந்த நிலையில் விவாதிக்க வேண்டிய ஒன்றை உடைத்து எளிமையாக்கி பாமரனும் சிந்திக்க வழிவிடுகிறது. இத்தன்மைக்காகவே அப்படத்திற்குத் தேசிய விருது கொடுத்தமைக்கு மகிழ்கிறேன். கதையோட்டத்தில் வெளிப்படும் சின்ன விசயம்கூட பார்வையாளனுக்குப் புரிந்துவிட வேண்டுமென்று எளிமையான காட்சிப்படுத்துதலின் வழி அல்லது வசனங்களின் வழி கதையை நகர்த்தியுள்ளார்கள்.

இரண்டு வகையான விவாதங்களைப் படம் தூண்டிவிடுகிறது. அவை இரண்டும் நவீன சமூகம் கருத்தில் கொள்ள வேண்டியதாகும். ஒன்று இதுவரை தமிழ் சினிமா அதிகம் கவனப்படுத்தத் தவறிய பாலியல் கல்வி குறித்தான ஒரு கருத்தாடல். பாலியல் சிக்கல்கள் பற்றி தமிழ் சினிமா விவாதித்தைவிட பாலியல் தொடர்பான அபத்தான தீண்டல்களை முன்னெடுத்ததுதான் அதிகமாகும். பெண்ணுடலை ஒரு மலிவான நுகர்வுப்பொருளாகக் காட்டியே பழக்கப்பட்ட தமிழ் சினிமா பாலியல் தொடர்பான சிக்கல்கள்களையும் அதன் தொடர்ச்சியான உடல் சார்ந்த வன்முறைகளை ஆங்காங்கே சில படங்களில் கவனப்படுத்தியுள்ளது. வழக்கு எண் 18/9, நான் மகான் அல்ல, பருத்தி வீரன் போன்ற சில படங்களில் பாலியல் தொடர்பான சிக்கல்கள் ஓரளவிற்குக் கவனமாகக் கதைக்குள் மறைத்து வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

குற்றம் கடிதல் அதனை நேரடியான விவாதமாகக் கதைக்குள் புகுத்துகிறது. மெர்லின் தன் திருமணம் முடிந்து பள்ளிக்கு வருகிறார். அப்பொழுது பள்ளியின் ஆசிரியர் அறையில் அமர்ந்திருக்கும் ஆசிரியர்களுக்கிடையே பாலியல் கல்வி ஆரம்பப்பள்ளியில் அவசியமா என்கிற விவாதம் ஓடிக் கொண்டிருக்கிறது. ஒரு பெண் ஆசிரியர் ஆசிரியர்களாகிய நாம்தான் பாலியல் கல்வியை முறையான போதனையின் மூலம் மாணவர்களிடம் கொண்டு போக முடியும் என வாதிடுகிறார். ஆனால், பள்ளியில் பணியாற்றும் மூத்த ஆசிரியர் பாலியல் கல்வி இப்பொழுது அவர்களுக்கு அநாவசியம் என மறுக்கிறார். பிஞ்சியிலேயே பழுத்துவிடும் இவர்களுக்குப் பாலியலை நாமே சொல்லிக் கொடுத்தால் அபத்தமாகிவிடும் என முறையிடுகிறார். அதற்குப் பிறகு படம் சட்டென கதைக்குள் நுழைந்து நகர்கிறது. பள்ளியில் நடந்த பாலியல் தொடர்பான அவ்விவாதங்கள் கதைக்குள் ஒரு சாதாரண சம்பவமாக மட்டுமே வந்தாலும் தொடர்ந்து கதைக்கு வலுக்கொடுத்து முன்னகர்த்துகிறது. ஒரு பார்வையாளன் அதனைப் பொருட்டாகக் கருதிவிடாமல் போய்விடக்கூடாது என்பதற்காகவே தெளிவாகப் படத்தின் தொடக்கத்திலேயே ஆசிரியர்கள் பாலியல் கல்வியின் தேவை குறித்துப் பேசுவதைப் போன்ற காட்சியை இயக்குனர் படமாக்கியுள்ளார்.

வகுப்பறையில் நடந்த சமபவம்

ஆசிரியர் மெர்லினிடம் மாணவி ஒருத்தி செழியன் வகுப்பு மாணவிக்குப் பிறந்தநாள் வாழ்த்தைச் சொல்லி முத்தம் கொடுத்துவிட்டதாகப் புகார் கூறுகிறாள். அதனைக் கேட்ட மெர்லின் செழியனை அழைத்து அப்படியெல்லாம் பெண்களுக்கு முத்தம் கொடுக்கக் கூடாது என அறிவுரைக்கிறார். ஆனால், செழியன் உங்களுக்குப் பிறந்தநாள் என்றாலும் நான் முத்தம் கொடுப்பேனே எனச் சொல்கிறான். செழியன் அப்படிக் கூறியதும் வகுப்பிலுள்ள மொத்த மாணவர்களும் சிரிக்கிறார்கள். முத்தம் அத்தனை ஆபாசமானதா? அல்லது ஓர் ஆசிரியருக்கு முத்தம் கொடுப்பேன் என மாணவன் ஒருவன் சொல்தற்குப் பின்னணியில் என்ன அபத்தம் இருந்துவிடப் போகிறது?

எல்லாமே புரியாமை, அல்லது புரிதலில் உள்ள சிக்கல் என்றே அடையாளப்படுத்த வேண்டும். உடனே கோபப்பட்டு மெர்லின் செழியனை அறைய ஏற்கனவே தலையில் பிரச்சனை இருந்த செழியன் மயங்கி சுயநினைவை இழக்கின்றான். அதன் பிறகு மெர்லின் குற்றவாளியாகக் கதைக்குள் நிறுத்தப்படுகிறாள். அவள் அறைந்ததால்தான் அவன் சுயநினைவை இழந்தான் என்பது உண்மை இல்லை என நிரூபிக்கப்பட்ட போதும் மெர்லின் தானாகவே வந்து ஒரு மாணவனைத் தண்டிப்பது குற்றம் என ஒப்புக் கொள்கிறார். ஆனால், மெர்லினின் அந்தக் கடைசி காட்சி வசனம், படம் முன்னெடுக்க நினைத்த ஆழமான கருத்தை விட்டு சட்டென விலகி நிற்க வைக்கிறது. பாலியல் தொடர்பான புரிதலில் வகுப்பறையில் ஏற்பட்ட சிக்கல்தான் குற்றம் கடிதல் தனக்குள் வைத்திருக்கும் கல்வி உலகம் கவனிக்க வேண்டிய கருத்தாடலாகும். ஆனால், மொத்த உழைப்பையும் போட்டு நகர்ந்த படம் இறுதி காட்சியில் ஓர் ஆசிரியருக்குத் தாய்மை வேண்டும்; மாணவர்களை அடிக்கக்கூடாது என்கிற வழக்கமான அறிவுறுத்தலுக்கு இடைவெளிவிட்டுச் செல்வதாக நான் நினைக்கிறேன்.

ஒரு பொது பார்வையாளன் பாலியல் தொடர்பான கல்வி ஒரு மாணவனுக்கு அவசியம் என இப்படத்தின் மூலம் புரிந்து கொள்ள அக்கடைசி காட்சி இடையூறாக இருப்பதாக உணரப்பட்டாலும் குற்றம் கடிதல் இக்காலக்கட்டத்தின் அவசியமான சினிமாவாகும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. செழியனை அடித்த பிறகு அங்கிருந்து பள்ளித்தலைமை ஆசிரியரால் வெளியூருக்கு அனுப்பப்படும் மெர்லின் தான் செய்த குற்றத்தை நேருக்கு நேர் சந்திக்கத் தயாராகிறார். சட்டென பேருந்துலிருந்து இறங்கி அவளும் அவளுடைய கணவனும் லாரியில் ஏறி மீண்டும் செழியன் சேர்க்கப்பட்டிருக்கும் மருத்துவமனைக்கு வருகிறார்கள். அதுவரை தகித்துக் கொண்டிருந்த செழியனின் அம்மாவின் ஆழ்ந்த சோகமும் கோபமும் மெர்லினின் குற்ற உணர்ச்சியும் பயமும் இக்காட்சியில் ஒன்றுக்கொன்று சந்திக்கின்றன. அங்கொரு ஆர்பாட்டமும் தண்டித்தலும் நடக்கப் போகிறது என அழுத்தமான அனுமானங்களை உருவாக்கும் அக்காட்சி அதற்கு நேர்மறையாக நின்று மெர்லின் செழியனின் தாயின் மடியில் விழுந்து அழுவதாக முடிகிறது. சத்தமில்லாமல் ஒரு மன்னிப்பு அங்கே நடந்துவிடுகிறது. புரியாமைலிருந்து மீண்டு வந்து செழியன் கொடுப்பதாகச் சொன்ன முத்தத்திற்குப் பின்னணியில் உள்ள தாயுணர்வை மெர்லின் கண்டடைகிறாள்.

தான் இழைத்துவிட்ட குற்றத்திலிருந்து தப்பிக்க நினைப்பதும் ஓட நினைப்பதும் நமக்கே பாதமாகிவிடும். குற்றத்தைத் தைரியமாகச் சந்திப்பதும் மன்னிப்பின் முன்னே மண்டியிடுதலும் மனிதாபிமானத்தை உருவாக்குகிறது. குற்றம் கடிதல் படம் பல எளிய மனிதர்களின் கதை. அவர்களுடன் பயணித்து மானுடத்திற்குத் தேவையான பல கருத்துகளைச் சிந்திக்க வைக்கிறது.

  • கே.பாலமுருகன்

(நன்றி: அம்ருதா டிசம்பர்)