2017ஆம் ஆண்டில் நாம் பார்க்கத் தவறிய அல்லது பார்த்தும் மீட்டுணராமல் போன சிறந்த தமிழ்ப்படங்கள் 25-ஐ இப்பதிவில் குறிப்பிட்டுள்ளேன். கடந்து போய்விட முடியாத நல்ல சினிமாவின் ஆழ்மன குரலை மறுமுறை கேட்கும்போது ஏற்படும் இரசனை மாற்றம் அலாதியானது.
tamil movies countdown 2017: 1st place: Aruvi
மனித மனங்களின் ஈரத்துள் உறையும் வாழ்க்கை
Arun Prabu Purushothaman இயக்கத்தில் வெளிவந்த இவ்வாண்டின் தமிழ் சினிமா சூழல் மட்டுமல்லாமல் 60க்கும் மேற்பட்ட உலகத் திரைப்பட விழாக்களிலும் மிகுந்த கவனத்தையும் வரவேற்பையும் பெற்றிருக்கும் தரமான படம். அருவி என்கிற பெண்ணைச் சுற்றி நிகழும் ஒடுக்குமுறைகள், அவமானங்கள், சட்ட ஒழுங்கின் அத்துமீறல், அதிகாரத்தின் வன்மம், சமூக புறக்கணிப்புகள் என நவீன வாழ்வின் சிதறுண்டுபோன விளிம்பு வாழ்நிலைகளை ஓங்கி ஒலிக்கும் நல்லதொரு முயற்சி ‘அருவி’. ஒரு புதுமுக இயக்குனர், புதுமுக நடிகை ஆனால் தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத தாக்கத்தை உருவாக்கியுள்ளார். எளிய மனிதர்களின் குரல், அருவி. இவ்வாண்டின் முதல் இடத்தைப் பெறுகிறது.
Tamil top movies countdown 2017: 2nd place: Vikram Vedha
தொன்மக் கதைக்குள் ஒலிக்கும் நவீன சமூகத்தின் துரோகக் குரல்
Pushkar-Gayathri இயக்கத்தில் வெளிவந்த இவ்வாண்டின் மிகச் சிறந்த படம் ‘விக்ரம் வேதா’ ஆகும். கதை அமைப்பும், திரைக்கதை அமைப்பும் ஒரு தொன்ம விக்ரமாதித்யன் வேதாளம் என்கிற பழங்கதையிலிருந்து நவீன வாழ்க்கையின் சரடுகளைச் சொல்லும் வகையில் வித்தியாசமான முறையில் அமைக்கப்பட்டிருந்தது. ஒரு அறிவார்ந்த திரைக்கதை அமைப்பு என்றே வியக்க வைத்தது. தன்னைச் சுற்றி நிகழும் துரோகங்களை நோக்கி கதாநாயகன் கேள்விகளை எழுப்பியவாறே செல்ல, கதையில் வரும் இன்னொரு கதாபாத்திரம் அதற்கான முடிச்சவிழ்ப்புகளை நிகழ்த்திப் பதிலளித்துக் கொண்டே வருகிறது. இக்கதையை விகரமாதித்யன் வேதாளம் பாணியில் சொன்னதுதான் மிகச் சிறந்த முயற்சியாகும். சினிமா மட்டுமே தன் சமூகம் மாற்றத்தையும் அழிவையும் வளர்ச்சியையும் உடனுக்குடன் காட்சி ஊடகத்தின் வழியாக மக்களிடம் வெகு சீக்கிரம் பரப்பி தாக்கத்தை உருவாக்க முடிந்த கலை வடிவம். அவ்வகையில் விக்ரம் வேதா, தமிழ் சினிமாவின் வளர்ச்சியையும், இரசனை மாற்ற பெருங்குரலையும் பதிவு செய்கிறது. மாதவன், விஜய் சேதுபதி இரு துருவங்களைப் போல நடிப்பில் யதார்த்தத்தை வெளிப்படுத்திருப்பது படத்திற்குக் கூடுதல் பலம் ஆகும்.
Tamil top movies countdown 2017: 3rd place: 8 Thottakal
மூன்றாம் நிலை:எட்டுத் தோட்டாக்கள் – தரமான தமிழ்ப்படம்
Sri Ganesh இயக்கத்தில் வெளிவந்த இப்படம் இவ்வாண்டின் 3ஆம் நிலையை எட்டுகிறது. மிகவும் யதார்த்தமான, கொஞ்சம்கூட சமரசமில்லாமல் கதைக்கேற்ற திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. ஒரு காவல்துறை அதிகாரியின் துப்பாக்கி காணாமல் போய்விடுகிறது. அத்துப்பாக்கியில் எட்டுத் தோட்டாக்கள் இருக்கின்றன. அக்காவல் துறை அதிகாரி(கதாநாயகன்) துப்பாக்கியைத் தேடி அலைகிறார். சென்னையின் சமூக அடித்தட்டு இருளில் உழன்று கொண்டிருக்கும் பல குற்றவாளிகளைச் சென்று சந்திக்கிறார். துப்பாக்கியும் கைமாறி மாறி இறுதியில் வங்கியைக் கொள்ளையடிக்கத் திட்டம் போட்டிருக்கும் எம்.எஸ்.பாஸ்கரின் கையில் போய் சேர்கிறது. அவர் ஏழு முறை அத்துப்பாக்கியைப் பாவிக்கிறார். அதில் பாவமறியாத ஒரு குழந்தையும் இறக்கிறது. கதாநாயகனும் எம்.எஸ் பாஸ்கரும் குற்ற உணர்வில் தகிக்கிறார்கள். இறுதியில் அந்த எட்டாவது தோட்டா யாருக்கு? கதையின் உச்சம் அதுவே. மிக நேர்த்தியான திரைக்கதை அமைப்பு. கதாநாயகனுக்கு நடிப்பே வரவில்லை என்பதைத் தவிர படத்தில் வேறு குறைகள் இல்லை. குறிப்பாக, நகைச்சுவை நடிகனாகவும் குணச்சித்திர வேடமும் செய்து வந்த எம்.எஸ். பாஸ்கர் அவர்களின் வாழ்நாளில் மிகச் சிறந்த அவருடைய நடிப்பை வெளிப்படுத்திய படம் இதுவாகத்தான் இருக்கும். அநேகமாக அவருக்கு துணை நடிகருக்கான தேசிய விருதே கிடைக்கலாம். தமிழில் இதுவொரு உலகத்தன்மை வாய்ந்த நல்ல படம் என்றே சொல்லலாம். வேறு எந்த மொழியிலும் எடுக்க முடிந்தாலும் அம்மொழியில் சிறந்த கவனம் பெறக்கூடிய கதையம்சம். திரைக்கதை எழுத பயிலும் யாராகிலும் இப்பட்த்தின் திரைக்கதை அமைப்பை விவாதித்து அதிலிருந்து பலவற்றை கற்றுக் கொள்ளும் அளவிற்கான தரம் வாய்ந்ததாக இருக்கின்றது.
Tamil top movies countdown 2017: 4th place: Lens
2017ஆம் ஆண்டின் நான்காம் நிலை
Jayaprakash Radhakrishnan இயக்கத்தில் வெளிவந்த இப்படம் மனிதருக்குள் இருக்கும் அபத்தங்கள் அனைத்தையும் துணிச்சலுடன் பேசி நம்மைக் கதிகலங்க வைத்த படம். ஒருவன் புதுமண தம்பதியின் முதலிரவு காட்சிகளை இரகசிய கேமராவில் பதிவு செய்து அதனை ‘Porn’ அகப்பத்தில் ஏற்றிவிட்ட பிறகு அத்தம்பதி எதிர்க்கொள்ளும் அகநெருக்கடிகள், அவமானங்கள், அதன் பின்பான சமூகத்தின் அபத்தத் தாக்குதல், வக்கிர மனமுடையவர்களின் அத்தனை முகங்களையும் படம் பதிவாக்குகிறது. அவமானத்தைச் சந்திக்க நேரும் அப்பெண் தற்கொலை செய்து கொள்கிறாள். இன்றை நவீன உலகின் இன்னொரு கோரமான முகம் இது. ‘ஸ்மார்ட் கைப்பேசி’ வந்த பிறகு இனி இரகசியம் என்று ஒன்றில்லை; நீங்கள் எப்பொழுதுமே கவனிக்கப்படுகிறீர்கள் என்கிற ஓர் அச்சவுணர்வையும் நடுக்கத்தையும் இப்படம் தந்துவிட்டுப் போகிறது. படம் முடிந்து இரண்டு நாட்களாவது உங்களால் நிம்மதியாக உறங்க முடியாமல் போகலாம். உண்மைக்கு அத்தனை நெருக்கத்தில் நம்மைக் கொண்டுபோய் வைக்கிறது ‘லென்ஸ்’. பெங்களூர் உலகத் திரைப்பட விழாவிலும், டெல்லி பையோஸ்கோப் குளோபல் திரைப்பட விழாவிலும் ‘சிறந்த விருதகள்’ பெற்றதோடு பல உலகத் திரைப்பட விழாக்களில் கவனம் பெற்றது. இயக்குனர் வெற்றி மாறனே இப்பட்த்தைத் தயாரித்து வெளியீட்டுள்ளார். அறங்கள் பற்றியும், குறள் பற்றியும் பேசிக் கொண்டிருக்கும் இதே உலகில்தான் திரைமறைவில் எண்ணற்ற ‘‘Porn’ அகப்பக்கங்களில் அதிகாரப்பூர்வமாகப் பலருடைய வாழ்க்கை சீரழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதும் உண்மையே. இந்த யுகத்தின் இன்னொரு முகம் இத்தனை கொடூரமானதே. ‘லென்ஸ்’ காட்டும் உலகம் நடுக்கத்திற்குரியது.
Tamil top movies countdown 2017: 5th place: Teeran Athikaaram Ondru
2017ஆம் ஆண்டின் ஐந்தாம் நிலை
வினோத் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் இதுவரை வந்த காவல்துறை தொடர்பான தமிழ்ப்படங்களில் மாறுப்பட்ட முயற்சியில் எடுக்கப்பட்ட படம் ஆகும். மிகவும் துணிச்சலான சினிமா என்று இன்றும் பாராட்டப்படுகிறது. மிகவும் விரிவான கள ஆய்வு செய்து தகவல் நுணுக்கங்களுடன் இக்கதையைத் திரையாக்கியிருக்கும் நேர்மை படத்திற்கு வலு சேர்க்கிறது. ராஜாஸ்தானில் வாழும் குற்றப் பரம்பரையைச் சேர்ந்தவர்களின் அச்சுறுத்தும் குற்றவியல் செயல்களை நோக்கி ஒரு தமிழ்நாட்டுக் காவல்துறை அதிகாரி விசாரித்துச் சென்று அவர்களைக் கைது செய்வதுதான் கதையாகும். ஆனால், நாற்காலியின் நுனிக்கு வரவழைக்கும் மிகுந்த பரப்பரப்பான திரைக்கதை அமைப்பே படத்தைத் தூக்கி நிறுத்துகிறது. தமிழ்நாட்டில் நடந்த உண்மை சம்பவத்தை முன்வைத்து இப்படம் இயக்கப்பட்டுள்ளது. உயிரைப் பணையம் வைத்து மிரட்டலாக இருந்த அக்குற்றவாளிகளைக் கைது செய்த தமிழ்நாட்டுக் காவல்துறை அதிகாரிகளுக்கு எந்தப் பதவி உயர்வும் இல்லாமல் ஓரங்கப்பட்ட உண்மையையும் படம் உணர்த்துகிறது. ஒரு கலை படைப்புக்குக் குறைந்தபட்சம் தான் எடுத்திருக்கும் கதையின் மீது நேர்மை இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். அந்நேர்மையின் பிரதிபலிப்புத்தான் தீரன் அதிகாரம் ஒன்று.
Tamil top movies countdown 2017: 6th place: kutram -23
குற்றம் 23: பெண்களின் மீதான உயிரியல் வன்முறை
அறிவழகன் இயக்கத்தில் வெளியான இப்படம் இவ்வாண்டின் யாருமே கற்பனையில்கூட நினைத்துப் பார்க்க முடியாத மருத்துவ அத்துமீறலைப் பேசிய படமாகும். உயிரியலின் மீது மனித ஆதிக்கம் எந்த அளவில் சமூகத்தையும் பெண்களையும் சிதைக்கிறது என்பதனை மிகுந்த பரப்பரப்பான திரைக்கதையின் வ்ழி சொல்லிச் சென்றுள்ளார்கள். உயிரணுக்கள் மீது ஆணாதிக்கம் என்கிற வக்கிரம் எந்தளவில் ஊடுருவி சமூக விழுமியங்கள் மீது கல்லெறிந்து சீர்குழைத்துவிடுகிறது என்பதனைத் தாங்கி நின்ற படம். அருண் குமாரின் வாழ்நாளில் சிறந்த படமாகவே அமைந்திருந்தது. தமிழ்ச் சூழலில் மிகவும் பேசப்பட்ட படமும்கூட.
Tamil top movies countdown 2017: 7th place: Maanagaram
மாநகரம் – விழித்திருக்கும் பெருநகர் வாழ்க்கை
லோகேஸ் கனகராஜ் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த மாநகரம் படம் இவ்வாண்டின் 7ஆம் நிலையை எட்டுகிறது. புதுமுக இயக்குனர், புதுமுக கலைஞர்களின் கூட்டணியில் உருவான இப்படம் மிகவும் யதார்த்தமாகவும் முதிர்ச்சியான திரைக்கதை அமைப்புடனும் சென்னை மாநகரத்தின் நிஜமான முகத்தைக் காட்டிய படம். ஒரு குழந்தை கடத்தல் தவறான போக்கில் போனதால் உருவாகும் சிக்கலில் சென்னையில் வாழும் சிலர் அதில் ஒன்றுக்கொன்று அவர்களுக்குத் தெரியாமலேயே இணைகிறார்கள். அங்கிருந்து திரைக்கதை மிகவும் நகைச்சுவையும், மர்மமும் கலந்து மிகச் சிறப்பாகப் படமாக்கப்பட்டுள்ளது. மாநகரங்கள் எப்பொழுதும் எதற்காகவும் தயாராகத்தான் இருக்கிறது. இதில் நல்லவர் கெட்டவர் என்றெல்லாம் நாம் தீர்மானிக்க முடியாது. அதனை அந்த மாநகரும்தான் தீர்மானிக்கும் என்பதைப் போல கதை மிகவும் இயல்பாக பின்னப்பட்டுள்ளது. ஆழமான வாழ்க்கை அனுபவமிக்க ஒருவரால்தான் தன்னுடைய முதல் படத்தையே இந்த அளவிற்கு நேர்த்தியாக உருவாக்கியிருக்க முடியும் என நினைக்கிறேன்.
Tamil top movies countdown 2017: 8th place: Aramm
Minjur Gobi இயக்கத்தில் நயந்தாராவின் நடிப்பில் வெளிவந்த ‘அறம்’ படம் இவ்வாண்டின் உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு அரசியல் விமர்சனத்தை முன்னெடுக்கும் படமாகும். சமூக அக்கறையுடன் எடுக்கப்பட்ட இப்படத்தில் அரசியல் விமர்சனத்தைவிட, ஆழ்துளை கிணற்றில் சிக்கிக் கொண்டு அச்சிறுமியை வெளியேற்ற அனைவரும் மேற்கொள்ளும் முயற்சிகளே கதைக்கு உயிரூட்டுவதாக அமைந்திருந்தது. விண்வெளிக்கு ரோக்கேட் அனுப்பும் அளவிற்குத் தொழில்நுட்பம் பெருகி வளர்ந்திருந்தாலும் தமிழ்நாட்டுக் கிராமங்களில் இன்னமும் ஆபத்தாக இருக்கும் ஆழ்துளை கிணற்றில் விழுந்தவர்களை மேலேற்ற எந்த வசதியுமில்லாத சூழலைப் படம் மிகவும் தீர்க்கமாகச் சாடியுள்ளது. கதாநாயகர்களைக் கொண்டாடும் இச்சமூகத்தில், கதாநாயகனே இல்லாமல் தனியொரு ஆளாக நின்று நயந்தாரா சாதித்துள்ளார். அதற்காகவே இப்படத்தைப் பாராட்டியே ஆக வேண்டும்.
Tamil top movies countdown 2017: 9th place: Kuranggu Bommai
நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் வெளிவந்த ‘குரங்கு பொம்மை’ மிகச் சிறந்த உணர்ச்சி சித்திரம் என்றே சொல்ல வேண்டும். 80களில் தமிழ் சினிமாவைக் கமர்சியல் உச்சத்திற்குக் கொண்டுபோன இயக்குனர் பாரதிராஜா இப்படத்தில் நடிப்பில் ஒரு படி மேலேறிவிட்டார். ஒரு குரங்கு பொம்மை போட்ட பையைச் சுற்றித்தான் கதை ‘நோன் லீனியர்’ முறையில் வித்தியாசமாக நகர்கிறது. இடையில் துரோகம், கொலை, பிரிவு என்கிற விசயத்தில் திரைக்கதை படத்தின் தரத்தை அதிகரிக்கிறது. பாரதிராஜா தன்னைக் குமரவேல் கொலை செய்யப் போகிறான் எனத் தெரிந்த மாத்திரத்தில் அவர் பேசும் வசனம் யாராக இருந்தாலும் மனத்தை நெகிழ வைத்துவிடும். அது யதார்த்தத்தின் மிகச் சிறப்பான கணம். குரங்கு பொம்மை; நம் மனத்தை ஆட்டி வைக்கும்.
Tamil top movies countdown 2017: 10th place: Thupparivaalan
ஆழமான இலக்கிய வாசிப்பும், உலக சினிமா குறித்த தேடலும் உள்ள இயக்குனர் மிஷ்கின் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த ‘துப்பறிவாளன்’ படம் 10ஆம் நிலையை எட்டுகிறது. அறிவுப்பசியோடு காத்திருக்கும் கனியன் பூங்குன்றன் என்கிற தனியார் துப்பறிவாளரின் வாழ்க்கையில் ஏற்படும் திருப்பங்களே கதையாகும். ஒரு நாயின் மரணத்தைக் கண்டறிய புறப்பட்டு அன்றைய திகதியில் சென்னையில் நிகழ்ந்து கொண்டிருக்கும் கொடூரமான குற்றவியல் தொடர்பான மனிதர்களைச் சென்றடைவதைப் போல அமைக்கப்பட்ட வித்தியாசமான திரைக்கதையே இப்படத்தின் பலமாகும். சில வழக்கமான விசயங்கள் இருந்தாலும், ஒளிப்பதிவு, இசை, வசனம் என அனைத்திலும் கூர்ந்த கவனத்தைச் செலுத்தி இப்படத்தை மிஷ்கின் உருவாக்கியுள்ளார். துப்பறிவாளன் நமக்குள் இருக்கும் தேடலையும் துப்பறிந்து மீட்டுக் கொடுக்கிறது.
Tamil top movies countdown 2017: 11th place: Meesaiyai Murukku
இசையமைப்பாளர் Hiphop-தமிழாவின் இயக்கத்தில் அவருடைய வாழ்க்கை வரலாற்றையே ‘மீசையை முறுக்கு’ என்கிற தலைப்பில் படமாக்கியுள்ளார். இசையுலகைக் கொண்டாடும் 2017ஆம் ஆண்டின் ‘மேஜிக்கல்’ சினிமா என்றே சொல்லிவிடலாம். பிரபலமான நடிகர்கள் யாரும் இல்லாமல், திருப்பம், கமர்சியல் போன்ற தேய்வழக்கத் தூண்டல்கள் இல்லாமல் அத்தனை இளைஞர்களையும் சென்றடைந்து இப்படம் வெற்றிப் பெற்றுள்ளது. வழக்கமான ஒரு கதையாக இருந்தாலும், இசையின் மூலம் மட்டுமே ஒரு துள்ளலை, இரசிப்புத்தன்மையை உருவாக்க முடியும் என ஒரு படத்தின் மூலம் ஆதி அவர்கள் நிரூபித்துள்ளார். யூ-டியுப் மூலம் இன்று எண்ணற்ற கலைஞர்கள் தன் திறமையை வெளிபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். வாய்ப்பிற்காக ஏங்கும் அவர்கள் அனைவரின் சாட்சியாக ஹிப் ஹோப் தமிழா வலம் வருகிறார். இப்படத்தை இவ்வாண்டின் சிறந்த பட வரிசையில் சேர்ப்பதில் மகிழ்ச்சிக் கொள்கிறேன்.
‘ஜெயித்தாலும் தோத்தாலும் மீசையை முறுக்கு’
Tamil top movies countdown 2017: 12th place: Rangoon
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளிவந்த ரங்கூன் படமே 12ஆம் நிலையை எட்டுகிறது. சென்னை பாரிஸ் கார்னரில் வாழும் பர்மாவிலிருந்து புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் வாழ்நிலையைப் பேசிய படம். பெரும்பாலும் சென்னையில் வாழும் பர்மா தமிழர்களின் வாழ்க்கையைத் தொட்டு வெளியான படங்கள் மிகக் குறைவே. அனைவரின் நடிப்பும் திரைக்கதையும் யதார்த்த நிலையில் சிறப்பாக அமைந்திருந்தன. பர்மா தமிழர்களைத் தவறான முறையில் பாவித்துக் கொள்ளும் முதலாளிகளின் அத்துமீறல்களும் படத்தில் பதிவாகியிருந்தன.
Top Tamil movies 2017 countdown: 13th Place: Thiruddu payale -2
சுசி கணேசன் இயக்கத்தில் வெளிவந்த இப்படம் இவ்வாண்டின் அறிவுசார்ந்த சினிமாவிற்கான பிரயத்தனங்கள் கொண்டதாகத் தாராளமாகத் தெரிவிக்கலாம். தொழில்நுட்பம் கடவுளாக மாறிவிட்ட இன்றைய உலகில் எதுவும் இரகசியம் இல்லை என்கிற அச்ச உணர்வை ஏற்படுத்திய படம். எல்லாமும் எங்கோ பதிவாகிக் கொண்டே இருக்கிறது. முகநூல், புலனம் போன்றவற்றை சைபர் குற்றவாளிகள் எப்படிப் பாவித்து தன் காரியங்களைச் சாதித்துக் கொள்கிறார்கள் என்கிற நவீன சமூகத்தின் திரைமறைவுக்குப் பின்னே ஒளிந்திருக்கும் வக்கிர முகத்தை இப்படம் ஓரளவிக் காட்சிப்படுத்தியுள்ளதால் இப்படத்தைச் சிறந்த பட வரிசையில் இணைக்கிறேன். கடைசி காட்சியில் உள்ள தர்மம் மட்டுமே கேள்விக்குறியாகின்றது. மற்றப்படி இக்காலத்தின் ஆன்மாவைப் பிரதிபலிக்கும் நல்ல படைப்பு. திருட்டுப் பயலே, சைபர் திருடர்களின் உலகம்.
Top Tamil movies 2017 countdown: 14th Place: Oru Kidaayin karunai Manu
சுரேஸ் சங்கையாவின் இயக்கத்தில் வெளிவந்த இப்படம் 14ஆம் நிலையை எட்டுகிறது. முழுக்கக் கிராமப்புரத்தைக் கதைக்களமாகக் கொண்டு மனித உணர்வுகளின் ஆதாரத்திலிருந்து மனத்தை நெகிழ்த்தும் நல்ல படம். கிராமிய வாழ்க்கையின் நிதர்சனங்களையும், மண் சார்ந்த மனிதர்களையும் நிஜத்தில் கொண்டு வந்து காட்டியமைக்காக இப்படத்தைச் சிறந்த பட வரிசையில் சேர்க்கின்றேன். ஒரு கிராமமே சேர்ந்து ஒரு கொலையை மறைக்கிறது. உணர்ச்சிக் கொந்தளிப்பின் விளிம்பில் திரைக்கதை பயணிக்கிறது. பாராட்டக்குரிய இயக்கம். இவரின் நேர்மையான படைப்பிற்கு நிச்சயம் வரவேற்பை வழங்கலாம். நிலத்தின் ஆழ்மனம் ஒரு கிடாயின் கருணை மனு.
Top Tamil movies 2017 countdown: 15th Place: Taramani
அடுத்து 15ஆம் நிலையை எட்டும் படம் இலக்கிய வாசிப்பும் மிகுந்த கலை இரசனையுமுள்ள இயக்குனர் ராம் இயக்கிய ‘தாராமணி’ ஆகும். பெரும்பாலும், இப்படம் பார்த்தவர்கள் படம் குறித்து அதிருப்தியைத் தெரிவித்திருந்தார்கள். படமாக்கப்பட்ட விதத்திலும் நிறைய சிக்கல் இருக்கவே செய்தன. ராமின் ஓர் இலக்கியத் தொடுதல் குறைவதாகவே இப்படம் அமைந்திருந்தது. ஆனாலும், நான் பார்க்கும் கோணத்தில் நவீன சமூகத்தின் சிதைவுகளின் ஓர் குரலாக ‘தாராமணி’ முக்கியமான முயற்சியாகவே கருதுகிறேன். தனித்து வாழும் பெண்கள், கணவனை விவாகரத்து செய்துவிட்டு வாழும் பெண்கள், ஆண்கள் ஆண்களை விரும்பும் சமூகநிலை, பெண்களின் அகங்களைத் தன அதிகாரத்தால் கட்டமைக்கும் ஆண்களின் சிதறுண்ட மனநிலை என பலவகைகளில் தனிமைப்பட்டுப் போய்விட்ட பெருநகர் சிதைவுகளின் ஒரு குரலை ராம் திரையாக்க முயன்றுள்ளார். மேலும், கவனம் செலுத்தி அப்படத்தைச் செதுக்கியிருக்கலாம். இருப்பினும், ராமின் இம்முயற்சிக்கு இப்படம் நிச்சயம் 2017ஆம் ஆண்டின் சிறந்த பட வரிசையில் இணைக்கவே வேண்டும்.
Top Tamil movies 2017 countdown: 16th Place: Dora
டோஸ் ராமசாமி அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த நயந்தாரா நடித்திருந்த ‘டோரா’ படம் 16ஆம் நிலையை எட்டுகிறது. நயந்தாராவின் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய படம். இப்படம் தேர்வானதற்கான காரணம் கதையில் இருக்கும் ஆக்கக்கரமான கலை சிந்தனையே. கார்களை வைத்துப் பலர் பல படங்கள் எடுத்திருந்தாலும் ஒரு நாயையும் காரையும் இணைத்து மிகக் கச்சிதமான ஒரு திரைக்கதையை உருவாக்கி ‘டோரா’ படத்தின் ஆழத்தில் ஒரு மனிதநேயத்தையும் விதைத்து, சிறார் பாலியல் வன்கொடுமையை நோக்கி திரையாக்கப்பட்ட விதம் பாராட்டுதலுக்குரியவை.
Top Tamil movies 2017 countdown: 17th Place: Aval
இவ்வாண்டு வெளிவந்த முழுக்க திகில் நிறைந்த படம். ‘கோஞ்சரிங்’ ‘இன்ஸ்டியஸ்’ போன்ற ஆங்கிலப் படம் பார்த்தவர்களுக்குத் தமிழில் அதற்கு ஈடான ஒரு பேய் படமாக ‘அவள்’ படம் மிகவும் அற்புதமான இசை, ஒளிப்பதிவு போன்றவற்றின் வழியாக நமக்கு வழங்கப்பட்டிருந்தது. சிரிப்புப் பேய்ப் படமாக வெளிவந்து கொண்டிருந்த சூழலில் நம்மை அச்சுறுத்திய ஒரு படம். உணர்வு ரீதியில் நம்மைத் திரையுடன் கலக்க வைத்ததற்காக இப்படத்தையும் சிறந்த பட வரிசையில் இணைக்கிறேன். ஒரு சில வழக்கமான விசயங்கள் சலிப்பூட்டின. பேய் என்றால் அருகில் வந்து சடாரென பயமுறுத்தும், கிரகணம் சமயத்தில் பேயின் வலிமை கூடும் போன்ற விடயங்கள் பல படங்களில் பார்த்து சலித்தவைத்தான். ஆனாலும், அவள் படத்தில் ஒலி, ஒளி, நடிப்பு, கேமரா வேலைப்பாடுகள் நம் மனத்தை அசைத்துப் பார்த்தது என்றே சொல்ல வேண்டும்.
Top Tamil movies 2017 countdown: 18th Place: Pandigai
அடுத்த இடத்தைப் பெறுவது, Underground Fighters Club என்கிற ஒரு கதைக்களத்தை மட்டும் நம்பி பெரோஸ் இயக்கத்தில் வெளிவந்த ‘பண்டிகை’ திரைப்படம் ஆகும். கிருஷ்ணா இப்படத்தில் வியர்வையும் இரத்தமும் சிந்தி ஒரு ஃபைட்டராக நடித்துள்ளார். ஒரு சண்டை காட்சியை மட்டும் 17 நாட்கள் படமாக்கியுள்ளார்கள். அவ்வளவுக்கும் உண்மைக்கு மிக நெருக்கமான சண்டை காட்சிகளும், அதற்கு ஊடான வாழ்க்கையையும் ஏமாற்றத்தையும் சுரண்டல்களையும் ‘பண்டிகை’ காட்டியுள்ளது. ஒளிப்பதிவு, கலை, இசை, சண்டை என அனைத்திலுமே ஒரு புதிய தாக்கத்தைத் தமிழ் சினிமாவில் ஏற்படுத்தியதற்காக ‘பண்டிகை’-யைச் சிறந்த பட வரிசையில் இணைக்கிறேன்; கொஞ்சம் அலுப்பூட்டும் திரைக்கதை அமைப்பு என்றாலும் முழுமையாகப் பல உரையாடல்களை மேற்கொண்டு கலந்தாலோசித்து இத்திரைக்கதையைப் பல தகவல்களுடன் உருவாக்கியுள்ளார்கள்.
Top Tamil movies 2017 countdown: 19th Place: Kavan
கே.வி ஆனந்த் இயக்கத்தில் வெளிவந்த விஜய் சேதுபதி நடித்த ‘கவண்’ திரைப்படம், தொலைக்காட்சி நிறுவனங்கள் தங்களின் TRP உயர்விற்காக என்னவெல்லாம் போலித்தனங்களையும் அரசியலையும் மேற்கொள்ளும் என்கிற நிஜத்தைக் கவணால் அடித்து உடைத்துள்ளது. படத்தின் முதல் பாதியில் வெளிப்படும் தொலைக்காட்சிக்குப் பின்னால் உள்ள அரசியல் சாணக்கியங்கள் அதிர்ச்சியளிக்கின்றன. கலைக்கு ஒரு அசாத்தியமான தைரியம் உண்டு. அதிகாரங்களை எதிர்க்கும் வல்லமை கலைக்கே உண்டு. அதனை மிகவும் கமர்சியலாக, வெகுஜன மக்களை அடையும்படி சொன்னதற்காக, கவண் படத்தை 2017ஆம் ஆண்டின் சிறந்த பட வரிசையில் இணைக்கிறேன். ஆனால், படத்தின் இரண்டாம் பாதியில் வில்லனைப் பழிவாங்குதல் படலம் கொஞ்சம் அலுப்பூட்டும் வகையில் அமைந்துவிடுவதே படத்தின் பலவீனமாகும். மேலும், இசையிலும் மாற்று முயற்சிகள் வெளிப்படவில்லை. கவண் அதிகாரத்தை நோக்கியக் கல்லடி.
Top Tamil movies 2017 countdown: 20th Place: Vizhithiru
மீரா கதிரவன் இயக்கத்தில் வெளிவந்த ‘ஒரு நாள் இரவு பொழுதில் நடக்கும் கதைக்களம். கதை தேர்வும் கதைக்களமும் நடிகர்களின் தேர்வும் மிகக் கச்சிதமாகக் கதை போக்கின் பரப்பரப்பிற்குக்கேற்ப பொருந்தி படத்திற்கு வலு சேர்க்கும் வகையில் அமையப் பெற்றிருந்தன. மீரா கதிரவன் அவர்களின் பல நாள் உழைப்பு இப்படம். அதே போல படமும் மாநகரத்தின் ஓர் இரவில் நான்கு வகையான மனிதர்களுக்கு நிகழும் சந்தர்ப்பங்கள் அவர்களை எந்தப் புள்ளியில் இணைக்கிறது என்பதனைச் சிறப்பாகத் திரைக்கதையாக்கியிருப்பார். படத்தில் ஒளிப்பதிவும், இசையும் கதைக்கேற்ப இரவின் மௌனத்தையும் அதன் ஆழத்தில் இரையும் சத்தத்தையும் காட்சிக்குப் பலமாக இசையிலும் ஒளிப்பதிவிலும் க்லை வேலைப்பாடுகளிலும் மிகச் சிறப்பாக வெளிக்கொணர்ந்ததற்காக ஒரு வித்தியாசமான முயற்சியான ‘விழித்திரு’ படத்தைச் சிறந்த பட வரிசையில் இணைக்கிறேன். வெங்கட் பிரபு, வித்தார்த், பேபி சாரா என பலர் இப்படத்தில் சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டிருப்பார்கள். ஒரு நாள் இரவில் வாழும் கதாப்பாத்திரங்கள் என்பதால் அவர்களின் பின்புலம், வாழ்க்கை போன்றவற்றில் அதிகம் கவனம் செலுத்தமுடியாமல் போவதே படத்தின் கதாபாத்திரங்களின் மீது கவனம் குவிய சிரமமாக உள்ளது; அவர்களின் அவஸ்த்தைகளின் மீதும் மனம் சட்டென பதியவும் தடுமாறுகிறது. மற்றப்படி இதுவொரு நல்ல முயற்சி.
Top Tamil movies 2017 countdown: 21st Place: athe Kangal
ரோஹின் வெங்கடேசன் இயக்கத்தில் வருடத் தொடக்கத்தில் வெளிவந்த படம். கலையரசன் என்கிற அருமையான நடிகருக்கு மேலும் தன் நடிப்பைக் காட்டுவதற்குரிய நல்ல படம் என்றே சொல்லலாம். சமூகக் குற்றப்பிரிவுகளை மர்மத்துடன் காட்டியப் படம். ஒருவனின் வாழ்க்கையின் பார்வையில்லாத ஒரு பகுதியிலும் பார்வை கிடைத்த ஒரு பகுதியிலும் எப்படித் தன்னைச் சுற்றியுள்ளவர்களையும் உலகையும் உள்வாங்குகிறான் என்கிற அளவில் ஓரளவிற்குக் கச்சிதமான கதை அமைப்பில் காட்ட முயன்றுள்ள படம் என்பதற்காக இவ்வாண்டின் சிறந்த பட வரிசையில் ‘அதே கண்கள்’-ளை இணைக்கிறேன். அணுமானித்துவிட முடிந்த திருப்புமுனைகள் மட்டுமே இப்படத்தின் பலவீனம். ஆனாலும், நம்மைக் கோபப்படுத்தக்கூடிய கதாபாத்திரத்தில் ஸ்வதா நடித்திருப்பது கதையின் யதார்த்தத்தைப் பிரதிபலித்தது. வித்தியாசமான கதைக்களம் ஆனாலும் திரைக்கதையை மேலும் செம்மைப்படுத்தியிருக்கலாம் என்றே தோன்றியது. அதே கண்கள் நமக்குள் ஆழப்பதியும் பார்வை.
Top Tamil movies 2017 countdown: 22nd Place: Power Paandi
தனுஷ் இயக்கிய முதல் தமிழ்ப் படம் என்றாலும் படத்தின் ஆன்மாவாக இருந்து தூக்கி நிறுத்திய பெருமை நம் ‘அரண்மனை கிளி’ புகழ் ராஜ்கிரன் அவர்களையே சேரும். 60 வயது ஆகிவிட்ட ஒருவர் தன் முதல் காதலியைத் தேடி வீட்டைவிட்டுப் புறப்படுகிறார் எனும் கதையின் மையமே பிரமிப்பைக் கொடுக்கிறது. கமர்சியல் படங்களில் இதுபோன்ற கதை தேர்வுகளை நம்மால் பார்க்க முடியாது. அந்தத் துணிச்சலுக்காகவும் வித்தியாசமான முயற்சிக்காகவும் ராஜ்கிரனின் யதார்த்தமான நடிப்பிற்காகவும் 2017ஆம் ஆண்டின் சிறந்த பட வரிசையில் ‘பவர் பாண்டியை’ சேர்க்கிறேன்.
ராஜ்கிரனுக்கு இருந்த அதே முக்கியத்துவத்தில் கொஞ்சம் நடிகை ரேவதிக்கும் அதிகப்படுத்தியிருந்தால் அவரும் நடிப்பில் தன் ஆளுமையைக் காட்டியிருக்கக்கூடும். நம் வீட்டில் உள்ள பெரியவர்களின் சுதந்திரம் பற்றி நாம் என்றாவது கவலைப்பட்டதுண்டா? வயதாகிவிட்டால் அவர்கள் வீட்டோடு நம் காவலில் இருக்க வேண்டும் என்று மட்டுமே இருக்கும் நம் நினைப்புகளை இப்படம் அசைக்கிறது.
Top Tamil movies 2017 countdown: 23rd Place: Meyaatha Maan
அறிமுக இயக்குனர் ரத்ன குமாரின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் இப்படம் யதார்த்த சினிமாவின் அவசியத்தை உணர்த்தியுள்ளது. பெரும்பாலும் காதல், நட்பு, உறவுகளில் சிக்கல் என்றாலே அதனை ஒரு மிகை உணர்ச்சி காவியமாகப் படைப்பதும், அல்லது தேய்வழக்கில் கதை சொல்வதும் ஒரு தீர்க்கமான ‘பார்மூலா’ ஆகிவிட்ட தமிழ் சினிமா சூழலில் முழுக்கவும் ராயப்புரத்தின் யதார்த்த வாழ்வியலுக்குள் சில இளைஞர்களின் மத்தியில் நிகழும் காதல், நட்பு போன்ற விசயங்களை இயக்குனர் படமாக்கியுள்ளார். படத்தில் வரும் தமிழ் சினிமாவில் துணைக் கதைப்பாத்திரத்தினை ஏற்று நடிக்கும் விவேக் பிரச்சன்னாவை இப்படத்தில் இயக்குனர் மிகவும் சிறப்பாக அவருடைய திறமைகளை வெளிக்கொணர்ந்து கதைக்கேற்ப பாவித்துள்ளார். மொழி, உடல் பாவனை, இசை, நடனம் என அனைத்திலும் ஒரு வாழ்விடத்தின் அசல் அனைத்தையும் திரட்டி உருவாக்கப்பட்டிருக்கும் படம். படத்தின் நீளமும் திரைக்கதையும் கொஞ்சம் அலுப்பூட்டினாலும் இவ்வாண்டின் சிறந்த முயற்சி என்றே சொல்ல வேண்டும். இசை சந்தோஷ் நாராயணன், ராயப்புரத்தின் மக்களைக் கண் முன் கொண்டு வருகிறார்.
Top Tamil Movies 2017 countdown: 24th Place: Velaikaaran
‘தனி ஒருவன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கான அடையாளத்தை உருவாக்கிய மோகன் ராஜா இயக்கத்தில் வெளிவந்த பன்னாட்டு நிறுவனங்கள் தங்களின் இலாபகரமான இடங்களைத் தக்க வைத்துக் கொள்ள பயனீட்டாளர்களின் உயிர்களைப் பணையம் செய்வதையும், அதற்கு உடந்தையாக வேலைக்காரர்களை உட்படுத்தும் அரசியலையும் பேசிய படம். திரைக்கதை, இசை, இணைக் கதைப்பாத்திரங்களின் நடிப்பாற்றல் போன்றவற்றில் நிறைய சிக்கல் இருந்தாலும், மார்க்கேட்டிங்கில் எத்தனை உட்பூசல்களும் அரசியலும் அடங்கியுள்ளன என்கிற ஒரு தெளிவைப் படம் வழங்கியதற்காக, மக்களை மக்கள் விரும்பும் கலையின் மூலம் விழிப்புக்கு உட்படுத்தியதற்காக இப்படத்தை 2017ஆம் ஆண்டின் சிறந்த வரிசையில் சேர்க்கின்றேன். (சிவக்கார்த்திகேயன் பாத்திரத்திற்குச் செலுத்திய அதீத கவனத்தைப் படத்தில் வரும் தரமான துணைக்கதாப்பாத்திரங்களின் மீதும் காட்டியிருந்தால், படம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்)
Top Tamil Movies 2017 countdown : 25th Place: மரகத நாணயம்
ஏ.ஆர்.கே சரவன் இயக்கத்தில் வெளிவந்த இவ்வாண்டின் சிறந்த (புதையல் + நகைச்சுவை + பேய்) என அனைத்தையுமே கதைக்குத் தேவையான அளவு மட்டும் கலந்து கொடுத்து பார்வையாளர்களை மகிழ்வித்த படம். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் போதுமான அளவில் முக்கியத்துவம் வழங்கப்பட்டதோடு அல்லாமல் மரகத நாணயத்தைப் பற்றி வரலாற்று நோக்கும் கச்சிதமாக அமைந்திருந்தது. சமூகத்தின் சிந்தனையைத் தவறான போக்கில் கொண்டு செல்லாதவரை, மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்ற நேர்மையான நோக்குடன் வந்ததற்காக இப்படத்தைச் சிறந்த படம் வரிசையில் சேர்க்கிறேன்.
-கே.பாலமுருகன்