கேள்வி பதில் – பாகம் 5 : அறிக்கை எழுதுதல்
கேள்வி: வணக்கம் ஐயா, அறிக்கை எழுதுதல் பற்றி விளக்க முடியுமா? இவ்வாண்டு இத்தலைப்பை எதிர்ப்பார்க்கலாமா? (ஜென்னி, தைப்பிங்)
பதில்: வணக்கம். தலைப்புகள் வர வாய்ப்புண்டா என்று கேட்டால், அணுமானம் அடிப்படையில் இவ்வாண்டு அறிக்கை ஒரு முக்கியமான தலைப்பாகும் என்பதில் ஐயமில்லை. அறிக்கை எழுதுதல் மிக எளிமையான முறை. நம் பாடத்திட்டத்தில் ‘நிகழ்ச்சி அறிக்கை எழுதுதல்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கும். கடந்த காலங்களில் இச்சொல் பயன்பாடு இடம்பெறவில்லை. ‘அறிக்கை’ என்று மட்டுமே சொல்லப்படும். ஆனால், புதிய தேர்வு அணுகுமுறையில் பாடத்திட்டத்தில் ‘நிகழ்ச்சியறிக்கை’ என்றே பொருள்படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம்.
நிகழ்ச்சி + அறிக்கை , அறிக்கையில் குறிப்பிடப்போகும் நிகழ்ச்சியை அதன் நிரலுக்கேற்ப வரிசைக்கிரகமாக எழுதுவதையே நாம் அப்படிப் பொருள் உணர்ந்து கொள்ளலாம்.
2016க்கு முன்: நடந்து முடிந்த ஒரு நிகழ்ச்சியைப் பற்றி எழுதுவதுதான் அறிக்கை என்று உணர்ந்திருந்தோம்.
2016லிருந்து: எழுதுவதற்கு எடுத்துக் கொண்ட நிகழ்ச்சியின் தொடக்கம் முதல் முடிவு வரை அதன் நிரலை உற்றாராய்ந்து நேர்த்தியாகக் குறிப்பிட வேண்டும்.
எடுத்துக்காட்டாக, அறிக்கை எழுதும் மாணவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை:
தலைப்பு: உன் பள்ளியில் நடந்த பரிசளிப்பு விழாவைப் பற்றி நிகழ்ச்சியறிக்கை எழுதிடுக.
முதலாவதாக, மாணவர்கள் பரிசளிப்பு விழாவின் நிகழ்ச்சி நிரலைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஒவ்வொரு நிகழ்ச்சியும் முதலில் இறை வாழ்த்தில் தொடங்கும். அடுத்து, வரவேற்புரை என்று ஒரு பொதுவான நிரலுடன் இடம்பெறும். அதனைக் கீழ்க்கண்டவாறு வகுத்துக் கொள்ளலாம்:
– இறை வாழ்த்து
– வரவேற்புரை
(இடையே கவிதை ஒப்புவித்தல், பாடல், நடனம், நாடகம் என்று ஒன்றிரண்டு நிகழ்ச்சிகளைச் சேர்க்கலாம்)
-தலைமை உரை
-சிறப்புரை
-வகுப்பில் முதல், இரண்டாம், மூன்றாம் நிலையில் வந்த மாணவர்களுக்குப் பரிசளித்தல்
-நாடகம்
-மாணவர் வருகை, தன்னொழுக்கம், புறப்பாட நடவடிக்கைகளில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்குப் பரிசளித்தல்.
-குழுமப் பேச்சு
-சிறந்த மாணவர், சிறந்த மாணவி விருதளிப்பு
– நன்றி உரை
-விருந்துபசரிப்பு.
மேற்கண்ட நிகழ்ச்சி நிரலை மாணவர்கள் அதன் நேரத்தைக் குறிப்பிட்டு வரிசைக்கிரகமாக எழுதினாலே அறிக்கை முழுமை பெற்றுவிடும். வர்ணிப்புகள் ஏதும் அதிகமாகப் போகாமல் நடந்த நிகழ்ச்சியை நடந்தப்படியே விளக்குதல் அவசியமாகும்.
அறிக்கையின் வடிவம் தவறில்லாமல் இருத்தல் வேண்டும். முதலில் பள்ளியின் பெயரையும் நிகழ்ச்சியின் தலைப்பையும் குறிப்பிடுதல் அவசியமாகும்.
தேசிய வகை தைப்பிங் தமிழ்ப்பள்ளி
பரிசளிப்பு விழா அறிக்கை 2018
மேலும், முன்னுரை எழுதும்போது மாணவர்கள் நிகழ்ச்சியைப் பற்றி அறிமுகம் செய்தல் அவசியமாகும். அவற்றை பின்வருமாறு அறியலாம்:
எடுத்துக்காட்டு 1:
பரிசளிப்பு விழா | தேசிய வகை தைப்பிங் தமிழ்ப்பள்ளியில் கடந்த 23.07.2018ஆம் நாளில் பரிசளிப்பு விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. மாணவர்களின் தேர்ச்சி அடைவை அங்கீகரிக்கப்பதற்காக நடத்தப்பட்ட அந்நிகழ்ச்சியில் நூறுக்கும் மேற்பட்ட பெற்றோர்களும் பள்ளியின் நூற்று ஐம்பது மாணவர்களும் கலந்து கொண்டனர். |
முன்னுரையில் இடம்பெற வேண்டிய தகவல்கள்: | (பள்ளியின் பெயர், நிகழ்ச்சியின் தலைப்பு, நோக்கம், கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை) |
எடுத்துக்காட்டு 2:
ஆசிரியர் தினம் | தேசிய வகை சுங்கை புலோ தமிழ்ப்பள்ளியில் கடந்த 16.05.2018ஆம் நாளில் ஆசிரியர் தினக் கொண்டாட்டம் மிகவும் விமரிசையாக நடத்தப்பட்டது. ஆசிரியர்களின் சேவையைப் பாராட்டும் வகையில் பெற்றோர் ஆசிரியர் சங்கத்துடன் இணைந்து நடத்தப்பட்ட இக்கொண்டாட்டத்தில் பள்ளியின் அறுபது ஆசிரியர்களும் முன்னூற்று ஐம்பது மாணவர்களும் பெற்றோர்கள் சிலரும் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டனர். |
முன்னுரையில் இடம்பெற வேண்டிய தகவல்கள்: | (பள்ளியின் பெயர், நிகழ்ச்சியின் தலைப்பு, நோக்கம், கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை) |
எடுத்துக்காட்டு பத்தி 1:
பத்தி 1:
இடம்பெற வேண்டிய தகவல்கள்: |
காலை 8.00 மணிக்குச் சிறப்பு சபைக்கூடலுடன் அன்றைய நாள் தொடங்கப்பட்டது. முதலில் தேசிய கீதம் ஒலிக்க ஆசிரியர்கள் அனைவரும் கம்பீரத்துடன் நின்று மரியாதை செலுத்தினர். பின்னர், ஆசிரியர் தின சிறப்புப் பாடல் பாடப்பட்டது. அடுத்து, தலைமை ஆசிரியர் கூற ஆசியர்கள் அனைவரும் உறுதி மொழி எடுத்தனர். ஆசிரியர் திரு.குணாளன் கல்வி அமைச்சரின் வாழ்த்துச் செய்தியை வாசித்தார்…… |
குறிப்பு: இப்படி நிகழ்ச்சி நிரலுடன் அறிக்கையை மாணவர்கள் எழுதிட வேண்டும். 120 சொற்களுக்குக் குறையாமல் எழுதுவதை மாணவர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
பெரும்பாலும் அறிக்கை எழுதும்போது மாணவர்கள் செய்யும் பிழைகள் சில:
- நிகழ்ச்சி நிரலை அறிந்து நேர்த்தியாக எழுதுவதில்லை. எடுத்துக்காட்டாக, சிறப்புரை முடிந்தவுடன் தலைமை உரை நிகழ்த்தப்பட்டது என்று தவறாக எழுதுதல்.
- போதுமான விளக்கம் இல்லாமல் கட்டுரை குறைந்த சொற்களில் இடம் பெறல். ஒரு குறிப்பிட்ட நடவடிக்கையையும் அதன் விளைவையும் குறிப்பிட்டு விவரித்து எழுதினாலே அறிக்கை விரிவாக இருக்கும் என்பதைக் குறிப்பெடுத்துக் கொள்ளவும்.
- இறுதியில் கையொப்பம், பதவி, திகதி போன்றவற்றை குறிப்பிடுதல் இல்லை.
எடுத்துக்காட்டு:
அறிக்கை தயாரித்தவர் திகதி: 20.05.2018
………(கையொப்பம்)…………..
பெயர்: குணாளன் த/பெ முனியாண்டி
பதவி: செயலாளர், ஆசிரியர் தினக் கொண்டாட்டம்.
ஆக்கம்: ஆசிரியர் கே.பாலமுருகன்
(கேள்விகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்: bkbala82@gmail.com
இக்கட்டுரையின் PDF வடிவத்தைத் தரவிறக்கம் செய்ய பின்வரும் சுட்டியைப் பயன்படுத்தவும்: