குறுங்கதை: நாக்கு

மாரியாய் பாட்டியின் இரண்டாவது மகனும் இறந்துவிட்டான். சிரமப்பட்டுதான் பாட்டியைத் தூக்கி வந்து அமர வைத்தனர். காதுகள் தாடை அளவிற்குத் தொங்கியிருந்தது. 100 வயதைத் தாண்டியவர் என எல்லோரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர். சிலர் காலில் விழுந்து வணங்கினர். மெலிந்த உடல். ஒரு சிறுமி அமர்ந்திருப்பது போல் தெரிந்தது.

“பாட்டி இப்ப சாமி மாதிரி… ஆயுள் அதிகம் வேணும்னா அதோட கால்ல விழுந்து கும்புட்டுக்கோ…”

பாட்டியின் முகத்தில் சலனமே இல்லை. தன் முன்னே என்ன நிகழ்கிறது என்பதைக்கூட பாட்டியால் உணர முடியாது எனப் பேசிக் கொண்டனர். இரண்டாவது மகனுக்கு மாரடைப்பு. வயது எழுபது இருக்கும். மனைவி, பிள்ளைகள் அழுது ஆர்ப்பரித்து ஓய்ந்திருந்தனர். பாட்டி ஏதும் பேசாமல் அப்படியே உட்கார வைத்தத் தோரணை மாறாமல் இருந்தார்.

“பாட்டி, சாவு பொறப்பு எல்லாத்தயும் கடந்திருச்சி… அந்த மாதிரி இருக்க ஒரு ஆன்மீக மனசு கிடைக்கணும்…”

“பாட்டி தலையில கை வைச்சிச்சுன்னா பெரிய ஆசீர்வாதம்… ஒரு ரெண்டு வெள்ளி காலுகிட்ட வச்சிருங்க…”

இறப்பு வீடு எனும் பிரக்ஞையைத் தாண்டி எல்லோரின் பேச்சிலும் மரணப் பயம் வியாபித்திருந்தது. பிணத்தைத் தூக்கிச் செல்லும்வரை பாட்டியை யாரும் அமர்த்தி வைத்த இடத்திலிருந்து தூக்கவில்லை. அவருடைய கடைசி பையன் கோபால்தான் தூக்கி காரில் ஏற்ற வேண்டும். அவரும் உடல் அடக்கத்தில் வேலையாக இருந்தார்.

“கோபாலு பையன்கிட்ட சொல்லி பாட்டிய வீட்டுக்குக் கூட்டிட்டுப் போகச் சொல்லிரு… அதோட மயன் செத்ததுகூட தெரில…கல்லு மாதிரி கெடக்கு…”

எதிர்வீட்டு ஆள்கள் வந்து பாட்டியிடம் ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டனர். இன்னும் ஒரு சிலர் பாட்டியை வணங்கினர். கோபாலின் மகன் பாட்டியைத் தூக்கிச் செல்லும்போதும்கூட பாட்டியினுடைய கண்ணீரை யாரும் அறிந்திருக்கவில்லை. அது விழும் முன்னே காற்றில் கலந்தது.

– கே.பாலமுருகன்

குறுங்கதை: ஒரு மாலை நேரத்து உறக்கம்

மாலையில் தூங்குவது எப்பொழுதாவதுதான் சாத்தியப்படும். அன்றைய நாள் அடை மழை. வானம் மின்னிக் கொண்டே இருந்தது. மின்சாரத் துண்டிப்பு வேறு. எங்கோ கடுமையான வெள்ள நெரிசல் உண்டாகியிருக்கலாம். வெளிவேலைக்கும் போக முடியாததால் வெகுநாளுக்குப் பிறகு மாலை உறக்கம் கிட்டியது. எனது அறை மேல் மாடியில் தனித்து இருக்கும்.

“ரெண்டு மணி நேரம் படுக்கறன்… எழுப்பாதீங்க…”கீழேயிருந்த மனைவியிடம் எச்சரிப்பது போல் சொல்லிவிட்டுக் கதவைச் சாத்திக் கொண்டேன். மனைவி என் அம்மாவுடன் சேர்ந்து நேற்றிரவு பார்க்கத் தவறிய தொடர் நாடகங்களை உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருக்கக்கூடும்.

குளிரூட்டி அறையைக் குளிர்ச்சிப்படுத்திவிட்டிருந்தது. அதுவும் மழைக்குளிரில் போர்வைக்குள் அடங்குவது வரம். இடி சத்தம் ஓயவில்லை. இப்படியொரு மழையைக் கண்டு வெகுநாளாகிவிட்டது.

எப்பொழுது கண்ணயர்ந்தேன் எனத் தெரியவில்லை. ஒரு பெரும் ஒளித்திரளில் மாட்டிக் கொண்டு தவிப்பது போன்ற ஒரு கனவு. மகா வெளிச்சம் என்னைச் சூழ்ந்து தடுத்துக் கொண்டது. சட்டென விழிப்பு. தூங்கச் செல்லும்போது மணி மாலை 3.00 இருந்திருக்கும். இப்பொழுது 5.00 ஆகி விட்டிருந்தது. அடுத்து ஒரு தேநீருக்குத் தயாராகலாம் எனக் கதவைத் திறந்து கீழே இறங்கினேன்.

யாரோ அறிமுகமில்லாதவர்கள் வீட்டின் வரவேற்பறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். நடுத்தர வயத்தை ஒத்த பெண்மணி என்னைப் பார்த்ததும் அதிர்ந்து கத்தினாள். வயதான ஆண் எழுந்து நின்று பின்னோக்கி நகர்ந்தார். சிறுபிள்ளை ஒருத்தி அம்மாவின் பின்னாள் ஒளிந்து கொண்டாள்.

“யாரு நீ? எங்க வீட்டுக்குள்ள எப்படி வந்த?” என அப்பெண்மணி கேட்டுக் கொண்டே மேசையிலிருந்த கைப்பேசியை எடுக்க முயன்றாள்.

“நீங்கலாம் யாரு? எங்க என் மனைவி? கீதா! கீதா!”ஒன்றும் புரியாதவனாய்ச் சுற்றிலும் பார்த்தேன். வேறு பொருள்கள், வேறு படங்கள், வேறு அலங்காரங்கள் ஆனால் அதே வீடுதான்.

“இருங்க… கீதாவா? நீங்க மனோகரா?”

அவள் ஆச்சரியத்துடன் கேட்டாள். நானும் ஆமாம் என்பது போல் தலையசைத்தேன்.

“பா… போன வருசம் இந்த வீட்ட அந்தக் கீதா அக்காகிட்ட இருந்துதான வாங்கனோம்… அவங்களோட ஹஸ்பன்ட் இவரு…”

எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. திக் பிரமையுடன் சுற்றிலும் பார்த்துக் கொண்டிருந்தேன்.

“நாலு வருசத்துக்கு முன்னால நீங்க காணம்னு சொன்னாங்க… வீட்டுலத்தான் படுக்கப் போனீங்க… ரூம்புக்குள்ள இல்ல… அப்புறம் போலிஸ் ரிப்போர்ட்… எனக்குச் சரியா தெரில சார்… நீங்க…”

தலை சுற்றலுடன் அப்படியே நாற்காலியில் உட்கார்ந்து கொண்டேன். ஒரு மாலை நேரத்து உறக்கத்திற்குப் பின் இப்படி நடந்தால் என்ன தோன்றும் எனக்கு? எதிரில் நின்றிருந்தவள் கீதாவிற்கு அழைப்பதாக வெளியில் சென்றாள்.

“அங்கள் நீங்க எப்படி எங்க வீட்டுக்குள்ள வந்தீங்க? நீங்க திருடனா?”

என் தோற்றத்தைப் பார்த்து வேடிக்கையுடன் சிறுமி கேட்டாள். சிறிது நேரத்தில் அப்பெண்மணி மீண்டும் உள்ளே வந்தார்.

“அவுங்க இங்க இல்லையாம்… சிங்கப்பூர்ல செட்டல் ஆயிட்டாங்களா… நான் ஏதோ பொய் சொல்றன்னு திட்டறாங்க… நான் வேணும்னா உங்கள போட்டோ எடுத்து அவுங்க வாட்சாப்க்கு அனுப்பட்டா சார்?”

எனக்கு எதுவும் தோன்றவில்லை. நினைவுகள் காலியானதைப் போல இருந்தது. வேண்டாமென மறுத்தேன்.

“ஒரேயொரு உதவி முடியுமா?”

தயங்கியப்படித்தான் கேட்டேன். அவரும் என்னவென்று கேட்டார்.

“இன்னும் ஒரு ரெண்டு மணி நேரம் மேல ரூம்புல தூங்கிக்கிட்டா?”

– கே.பாலமுருகன்

குறுங்கதை: பவித்திராவின் ஓவியம்

அப்பாவிடம் எப்படிக் காண்பிப்பது எனத் தெரியாமல் வெகுநேரம் தவித்துக் கொண்டிருந்தாள் பவித்திரா. வழக்கமாக ஓவியத்திற்கு வண்ணம் தீட்டிவிட்டு அப்பாவிடம் அல்லது அம்மாவிடம் காட்டிப் பாராட்டுப் பெற்ற பின்னரே மறுநாள் பள்ளியில் ஒப்படைப்பாள்.

இன்று அப்பா அம்மாவிடம் சண்டையிட்டு ஓய்ந்திருந்தார். முகம் வேறு கடுப்புடன் தெரிந்தது.

“புது வீடு விலையே 4 லட்சம்… இப்போ அதைச் செய்யணும் இதை மாத்தணும்னு… இன்னும் ரெண்டு லட்சத்துக்கு எங்க போவன்?”

அறையினுள்ளே இருந்த அம்மாவிடம் கத்தத் தொடங்கினார். இப்பொழுது இருக்கும் வீட்டிலிருந்து வெளியேற இன்னும் மூன்று மாதங்கள் மட்டும்தான் கெடு.

“சேவா வீட்டுல இருந்தா இதான் தொல்ல… நமக்குனு சொந்தமா ஒரு வீடு… அதை நம்ம நெனைச்ச மாதிரி செஞ்சிட்டுப் போனாதானே நல்லாருக்கும்?”

பதிலுக்கு அம்மாவும் அறையிலிருந்து கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பவித்திரா ஓவியத்தைக் காட்டுவதிலிருந்து பின்வாங்கினாள். இப்பொழுது போனால் ஒருவேளை ஓவியம் கிழிக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்பதை உணர்ந்தாள்.

“முன்னுக்குக் கல்லுப் போடணும், சைட்ல லேன்ஸ்கேப் செய்யணும்… பின்னால கிட்ச்சன் இழுக்கணும்… இன்னும் என்ன?”

“ஆமா… வீட்ட முழுசா செஞ்சிட்டுத்தான போக முடியும்? அப்புறம் என்ன அங்க இருந்துக்கிட்டா செய்வீங்க? தூசு… அது இதுன்னு பெரச்சன வராதா?”

பவித்திராவிற்கு மனம் ஆதரவடையவில்லை. அம்மாவிடமாவது ஓவியத்தைக் காட்டிவிடலாம் என அறைக்குள் நுழைந்தாள்.

“ரெண்டு லட்சம் வராது… ஒன்றர லட்சத்துல முடிச்சிறலாம்… நீங்க யேன் சிரமப்படறீங்க… நான் லோன் எடுத்துத் தறென்…” என அம்மா முனகிக் கொண்டிருந்தபோது பவித்திரா ஓவியத்தை நீட்டினாள்.

“என்னம்மா இந்த நேரத்துல நொய் நொய்ன்னு…?” எனத் திட்டிக் கொண்டே அம்மா ஓவியத்தை வாங்கினாள்.

பவித்திரா அழகான முருகன் படத்திற்கு வண்ணம் தீட்டியிருந்தாள்.

“ஏன்மா… உள்ள மட்டும்தான் கலர் அடிச்சிருக்க? சுத்தி பின்னால எல்லாம் கலர் அடிச்சிட்டா இன்னும் நல்லாருக்குமே?” என்றார் அம்மா.

“இல்லம்மா… டீச்சர் சொன்னாங்க முருகனோட உருவத்துக்குத்தான் கலர் அடிக்கணும்னு… வெளில அடிச்சாலும் மார்க் இல்லம்மா… அப்புறம் அடிக்கச் சொன்னாங்கனா நான் வெளில நீலக் கலரு சுத்தி அடிச்சிக்கறன்…” என்றால் பவித்திரா.

அம்மா ஓவியத்தை நன்கு உற்றுக் கவனித்தார். உடனே அறைக்கு வெளியே வந்தார்.

“ங்ஙே… இல்லன்னா முதல்ல வீட்டு உள்ள என்ன தேவையோ அத எல்லாம் செஞ்சிக்கலாம்… வெளில செய்ய வேண்டியத நாம எப்ப வேணும்னாலும் காசு இருக்கறப்ப செஞ்சிக்கலாம்…” என்று கூறிவிட்டுப் பவித்திராவின் ஓவியத்தை மீண்டும் பார்த்தார்.

-கே.பாலமுருகன்

குறுங்கதை: வார்த்தைகளின் பாதுகாவலன்

வாழ்த்து அட்டையைத் தயார் செய்துவிட்டேன். கடைசி ஒரு வார்த்தையை எழுத வேண்டும். அது மட்டும்தான் வாய்க்கவில்லை. நேற்றிலிருந்து பல கடைகள் சென்றலைந்தும் மனத்திற்குப் பிடித்த ஒரு கார்ட் கிடைக்கவில்லை. கடைசியில் மணிலா அட்டையில் நானே ஒரு கார்ட்டைத் தயார் செய்துவிட்டேன். இப்பொழுது உறையும் காத்திருந்தது. அந்த வார்த்தையை எழுதி உள்ளே வைத்துவிட்டால் கார்ட் பெறுநரை நோக்கிப் பயணத்தைத் தொடங்கும்.

என்ன எழுதலாம் என்கிற கேள்விக்கு முன் மனம் அல்லல்பட்டுக் கொண்டிருந்தது. இதுவரை யாருக்கும் இப்படியொரு வாழ்த்து அட்டை அனுப்பிய அனுபவம் இல்லை. முதல் முறையாக அனுப்ப வேண்டுமெனத் தோன்றியது. மேசை விளக்கின் வெளிச்சம் போதவில்லை. பற்ற வைத்து விரல் இடுக்கிலேயே புகைந்து கொண்டிருந்த சிகரெட்டைப் பார்த்தேன். நெருப்பைத் துறந்த நுனி சாம்பல் விழத் தயாராக இருந்தது. எடுத்து நானே மேசையின் மீது தட்டிவிட்டு சிகரெட்டை அணைத்தேன்.

படித்து முடிக்கலாம் என மேசையில் வைத்திருந்த நாவலைப் புரட்டினால் ஏதாவது வார்த்தைகள் கிடைக்கக்கூடும் என்கிற சிந்தனை இவ்வளவு தாமதமாக வந்திருக்கக்கூடாது எனத் தோன்றியது. படித்து முடிக்காமல் எனக்காகப் பல வாரங்கள் காத்திருக்கும் புத்தகத்தைத் தொடவே அவமானமாக இருந்தது. அறையைச் சுற்றிலும் படித்து முடிக்காத புத்தகங்கள் சூழ்ந்திருந்தன.எனது இன்றைய பொழுதைக் கடக்கவிடாமல் செய்யும் இன்னும் சிக்காமல் அடம்பிடித்துக் கொண்டிருந்த வார்த்தையின் மீது கோபமாக இருந்தது. கிடைத்தால் மட்டும் என்ன செய்துவிடப் போகிறேன்? உடனே கார்ட்டில் எழுதி அனுப்பிவிடுவேன்.

இப்படிக்கு

வடிவேல்

(ஷார்ப் தொழிற்சாலையின் பாதுகாவலர்)

கார்ட்டின் முடிவுவரை எழுதிவிட்டேன். இடையில் ஒரு வார்த்தை போதும். படிப்பவருக்கு மனம் சில்லிட வேண்டும். மீண்டும் மீண்டும் படித்துப் பூரிப்படைய வேண்டும். கண்கள் குளிர்ந்து போக வேண்டும். நமது ஒரு வார்த்தையில் ஒருவரின் வாழ்நாள் முழுவதும் அதை நினைத்து மகிழ முடிந்தால் இனி என்ன வேண்டும் எனத் தோன்றியது.

நான் விட்டுவிட்டால் பேனாவே அந்த வார்த்தையை எழுதி கொள்ளும் என்பதுபோல் துடித்துக் கொண்டிருந்தது. ரவுண்ட் செல்வதற்கு நேரமாகிவிட்டது. சாப்பிட்டேனா என்று கூட கேட்க ஆளில்லாத வெறும் இயந்திரங்கள் எழுந்து கத்திக் கொண்டிருக்கும் இவ்விடத்தைச் சுற்றி வலம் வரும் நேரம். அந்தக் கசப்பான தருணத்திற்கு முன் வார்த்தை கிடைத்துவிட்டால் பேரானந்தத்துடன் தொழிற்சாலையை வலம் வரலாம்.

ஒருவேளை வார்த்தை கிடைத்துவிட்டாலும் கார்ட்டில் எழுதி யாரிடம் கொடுப்பது?

எழுந்து காற்சட்டையைத் தூக்கி இடுப்பில் உட்கார வைத்தேன். இந்த 56 ஆண்டுகளில் அப்படியொரு வார்த்தை எனக்குச் சிக்கியதே இல்லை.

-கே.பாலமுருகன்

குறுங்கதை: தூக்குக் கோவில்

பெரிய சாலையிலிருந்து செம்பனைத் தோட்டத்தில் நுழைந்து இரு கிலோ மீட்டர் சென்றால்தான் கம்பத்திற்குச் செல்லும் பாதை வரும். வேலையிடத்திலிருந்து இதுதான் குறுக்குப் பாதை. பெட்ரோல் மிச்சம். வேடியப்பனுக்கு இந்தப் பாதையில் பெரிதாக மிரட்சி இல்லை. ‘தூக்குக் கோவிலை’ தாண்டும் போது மட்டும் மனம் பீதியடைவதை அவனால் தவிர்க்க முடிந்ததில்லை.

“அங்கன இருந்த எஸ்டேட்டுக் கோயிலு அது… கடன் தொல்ல தாங்காம முனியாண்டி பூசாரி கோயில்லயே தூக்குப் போட்டுக்கிட்டாரு… அதுனாலத்தான் அது தூக்குக் கோயிலு… அதுலேந்து கோயிலயும் கைவிட்டுட்டாங்க…” என அக்கோவிலைப் பற்றி சொல்லாதவர்கள் இல்லை.

“அந்தக் கோயில் பக்கம் வரும்போது மட்டும் யாராவது நிப்பாட்டனா நின்னுறாத… நாக்கத் தொங்க போட்டுக்கிட்டு முனியாண்டி பூசாரி அந்தப் பாதையில நடக்கறத முன்ன காட்டுக்கு வேலைக்குப் போனவங்க பாத்திருக்காங்க…”

காளிமுத்து தாத்தா அந்தச் செம்பனைத் தோட்டப் பாதையைப் பயன்படுத்துவோரிடம் எப்பொழுதும் நினைவுப்படுத்துவார். அவர்தான் கம்பத்தில் பழைய ஆள். முன்பிருந்த தோட்டத்தை விட்டுத்தான் எல்லோரும் இந்தக் கம்பத்திற்கு வந்தனர். கித்தா தோட்டம் அழிந்து செம்பனை தோட்டமாகியது.

வேடியப்பன் இன்று துணைக்கு உடன் வேலை செய்யும் மாரியையும் அழைத்து வந்தான். வழக்கமாக மாரி கம்பெனி வேனில்தான் போவான். இருவரும் மோட்டாரில் செம்பனை பாதையில் நுழைந்தனர். மோட்டாரின் முன்விளக்கு வெளிச்சம் பாதையைச் சூழ்ந்திருந்த இருளைச் சற்றும் அசைக்க முடியவில்லை.

தூரத்தில் இடது பக்கம் இடிந்து கிடக்கும் சுவரும் அதைச் சூழ்ந்து அடர்ந்து வளர்ந்திருக்கும் காட்டுச் செடிகளும் என அச்சுறுத்தலாகக் காட்சியளித்தது ‘தூக்குக் கோவில்’.

“அந்தப் பூசாரி தூக்குப் போட்ட செத்தக் கோயில்தான…?”

பின்னால் அமர்ந்திருந்த மாரி சில ஆண்டுகளுக்குப் பின்னர் அப்பொழுதுதான் அந்தப் பாதையில் வருவதால் கோவிலைப் பற்றி விசாரித்தான்.

“டேய், சும்மா இருடா… மனுசனுக்கே இங்க பீதி கெளம்புது…”

“அட நீங்க ஒன்னு… இந்தக் கம்பத்துல உள்ள பழசுங்க எல்லாம் கட்டுக் கதை சொல்லி ஏமாத்திச்சிருங்க… எங்க பாட்டி சாவுறதுக்கு முன்னால என்கிட்ட இந்தக் கோயில பத்தி ஒரு கதை சொன்னுச்சி… தெரியுமா?”வேடியப்பனுக்கு ஆச்சரியமாக இருந்தது.

“என்னடா சொல்ற?”

“ஆமாம்ணே… அறுபது வருசத்துக்கு முன்னால இங்க இருந்த தோட்டத்துல சீன முதலாளியோட மகனுங்கக்குள்ள பயங்கர சொத்துப் பெரச்சன… ஒரே தோட்டத்த ரெண்டாக்கிட்டானுங்க… டிவிஷன் ஒன்னு, டிவிஷன் ரெண்டுன்னு பிரிஞ்சி போச்சி… அப்போ டிவிஷன் ஒன்னுல இருந்த முனியாண்டி கோயில் சிலைய அங்கேந்து தூக்கிட்டு இங்க வந்து வச்சிட்டாங்க… அதான் ‘தூக்கி வந்த கோவில்’ன்னு சொல்லுவாங்களாம்… இவனுங்க தூக்குக் கோயில்னு அவுட்டா விட்டுட்டாய்ங்க… கொண்டு வந்தவங்க அதுக்கப்பறம் ஒழுங்கா பராமரிக்கல… என்ன ஆச்சின்னு தெரில…”

வேடியப்பன் சட்டெனப் ‘ப்ரேக்’ பிடித்துவிட்டு இடிந்து கிடக்கும் தங்களின் மூதாதையர்கள் தூக்கி வந்து கைவிட்ட கோவிலையும் அதனுள் கரைந்திருக்கும் இருளையும் பார்த்தான்.

-கே.பாலமுருகன்

குறுங்கதை: காலன்

முனியாண்டி தாத்தாவிற்குப் பாதி வாய் திறந்து மீண்டும் மூடியபடி இருந்தது. சிரமப்பட்டு மூச்சை இழுத்தார். மருத்துவமனையில் ஒரு வாரம் வைத்திருந்து இனி பிழைக்க மாட்டார் என வீட்டிற்குக் கொண்டு போகச் சொல்லிவிட்டனர். அவர் நாற்பது ஆண்டுகள் உழைத்துக் கட்டிய வீட்டின் வரவேற்பறையில் ஒரு சிறிய கட்டிலைப் போட்டனர். அவரை அதில் படுக்க வைத்து வாசல் கதவைத் திறந்து வைத்தனர். உயிர் போனால் வாசல்வழி வெளியேற வேண்டுமென ஓர் ஏற்பாடு.

“மனுசன் இவ்ள பெரிய வீட்டக் கட்டி கடைசி வரைக்கும் கால் நீட்டி உக்காந்து சுகத்தக் கண்டானா?”

முனியாண்டியின் வயதை ஒத்த நண்பரான மணியத்திற்கு மரணப் பயம் தொற்றிக் கொண்டது. வீட்டிலுள்ளவர்களுக்குச் சமாதானம் சொல்வதைப் போல தன்னைத் தானே சாந்தப்படுத்தினார்.

முனியாண்டியின் கண்கள் வாசலை நோக்கின. நேரமானதும் ஒரு சில நெருங்கிய சொந்தங்கள் வந்து முகத்தை உற்றுக் கவனிப்பதை முனியாண்டி அசூசையாக உணர்ந்தார். அவர்களின் பார்வையில் இருக்கும் கழிவிரக்கம் பயத்தை உண்டாக்கியது. சற்று நேரத்தில் அவன் வந்து வாசலில் நின்றான். கறுத்த உருவம். முகம் சரியாகத் தெரியவில்லை. அவன் இன்னும் அருகில் வந்தால் முகத்தை அடையாளம் கண்டு கொள்ளலாம் என நினைத்தார். நினைப்பதை அவரால் வார்த்தைகளாகக் கோர்க்க இயலவில்லை. நினைப்பு நினைப்பாக அவருக்குள் உழன்று கொண்டிருந்தது.

அவனுடைய வருகைக்குப் பின்னரே முனியாண்டியின் உடல் சிலிர்த்து உதறிக் கொண்டிருந்தது. குரல் புலம்புவது போல் கேட்டது.

இப்பொழுது அவன் முனியாண்டியை மூர்க்கமாகப் பார்க்கத் தொடங்கினான். எந்நேரத்திலும் தன் மீது பாய்ந்து உயிரை எடுக்கக்கூடும் என முனியாண்டி கற்பனை செய்தார். அவன் குனிந்து முட்டிகாலிட்டு முன்னகர்ந்து வந்தான். இப்பொழுது அவனுடைய கண்களை நன்றாகப் பார்க்க முடிந்தது. மிகவும் நெருக்கமான கண்கள் அவை. தினமும் பார்த்துப் புழங்கிய கண்கள். நெருக்கமாக வந்ததும் அது தன்னுடைய கண்கள்தான் என உணர்ந்தார். அவன் முனியாண்டியைப் போலவே இருந்தான். முனியாண்டிக்கு இருபது வயதிருக்கும்போது எப்படி இருந்திருப்பாரோ அதே தோற்றம்.

மற்றவர்களைப் போல அவனும் முனியாண்டியின் முகத்தை நெருங்கி வந்து மரண வாடையை நுகர்ந்தான். முனியாண்டி கண்களிலே கெஞ்சினார். கண்ணீர் துளி பெருகி வழிந்துவிடாமல் கண்களுக்குள்ளே பளபளத்துக் கொண்டிருந்தது. கைகளைக் கூப்பி வணங்க முடியவில்லை. கண்கள் வணங்கி தவித்தன.

வந்தவன் முனியாண்டியின் கன்னத்தில் முத்தமிட்டு நெஞ்சோடு அனைத்துக் கொண்டான். அவனுடைய உடலின் கதகதப்பு முனியாண்டிக்கு அவ்வளவு ஆறுதலாக மாறியது. தன் வயதைக் கடந்து பின்னோக்கி நகர்ந்தது நினைவு. கால்கள் சிறுத்து கைகள் சுருங்கி வீட்டின் தரையில் எச்சில் வடிய தவழ்கிறார். எல்லாம் பின்னகர்கின்றன. உலக நினைவுகள் இழந்து தன்னுணர்வு கரைந்து ஒரு தொட்டிலில் தன் பெருவிரலைக் கடித்தபடியே ஆடிக் கொண்டிருக்கிறார்.

முனியாண்டியின் உயிர் போவதற்கு முன்பாக கண்ணீர் வடிந்து கன்னத்தில் சரிந்ததாகப் பேசிக் கொண்டனர்.

-கே.பாலமுருகன்

குறுங்கதை: போட்டி

முதல் நாள் வகுப்பை ஒரு கதையுடன் தொடங்கலாம் என மூர்த்தி முடிவெடுத்தார். முதலாம் ஆண்டு மாணவர்கள் பதற்றத்துடனும் அழுது ஓய்ந்த களைப்புடனும் அமர்ந்திருந்தனர்.

“சரி, இன்னிக்கு எல்லாம் கதை சொல்லப் போறிங்க… எல்லாத்துக்கும் கதைன்னா பிடிக்கும்தான?” என ஆசிரியர் கேட்டதும் அனைவரும் உற்சாகத்துடன் கையை உயர்த்தினர். சிறுவர்கள் சொல்வதற்கு ஏராளமான கதைகளைத் தனக்குள் பூட்டி வைத்திருக்கிறார்கள்.

“சரிமா… நீங்க வாங்க…”முன்வரிசையில் அமர்ந்திருந்த கவினா எழுந்து வந்தாள். புன்னகையும் வெட்கமும் அவள் பார்வையில் கலந்திருந்தன.

“கதை சொல்லுவிங்களா?” என மூர்த்தி கேட்டதும் “எங்க அப்பாவோட ‘திக்தோக்ல’ நிறைய கதை சொல்லிருக்கன், நீங்க பார்த்தது இல்லயா?” எனப் பதிலுக்கு கவினாவும் கேட்டாள்.

“சரி என்ன கதை சொல்லப் போறீங்க?”

“நல்ல முயலும் கெட்ட ஆமையும்…” என்று சொல்லிவிட்டு முறைத்தாள்.

“ஏன்மா கோவமா பாக்கறீங்க?”

“ஆமா சார்… அதென்ன எல்லாக் கதையிலும் ஆமை நல்லதா இருக்கு… முயலு சோம்பேறியா இருக்கு? எங்க வீட்டுல நான் வளர்க்கற முயல் நல்லா வேகமா ஓடும்… ரொம்ப நல்லது… தெரியுமா?” என்றவள் முயல் போல் ஓடிக் காண்பித்தாள்.

“சரிமா, கதையெ சொல்லுங்க…”

“ஒரு ஊர்ல முயல் மட்டும்தான் இருந்துச்சாம்… ம்ம்ம்… சரி… பரவால… பாவம்… அதே ஊர்ல ஒரு ஆமையும் இருந்துச்சாம்…”

“ஓ! அப்படியா?”

“ஆமாம்… அதுல முயலுக்குக் காது கேட்காதாம்…” என்று சோகமாகச் சொன்னாள்.

“ஓ! ரெண்டும் என்னா பண்ணுச்சாம்?”

“அதுங்க அதுங்க வேலைய பாத்துக்கிட்டு இருந்துச்சாம்…” என்று கூறினாள்.

“அப்போ ரெண்டுக்கும் ஓட்டப்பந்தய போட்டி நடக்கலையா?”

கவினா மீண்டும் மூர்த்தியைப் பார்த்து முறைத்தாள்.

“நீங்க என்னம்மா சும்மா சும்மா சார பார்த்து முறைக்கிறீங்க?”

“அதுங்களே அதுங்க பாட்டுக்கு இருக்குங்க… நீங்க யேன் போட்டி வைக்கறீங்க? அதனாலத்தான் என் செல்ல முயலு கதையில கெட்டதா வருது, பாவம்! வேணும்னா ஆமைக்கும் ஆமைக்கும் போட்டி வச்சுக்கங்க…” என்று முகத்தைச் சோகமாக வைத்துக் கொண்டாள்.

“சரிமா… போட்டியே வேணாம்… ஓகேவா?”

சிறிது நேரம் சிந்தித்தவள், “போட்டியே இல்லாமல் எல்லாம் மிருகங்களும் மகிழ்ச்சியா வாழ்ந்துச்சாம்… தெரியுமா சார்?” என்றாள்.

“சரிமா… கதைய சொல்லி முடிங்க…”

“ஒரு ஊர்ல ஒரு முயல் இருந்துச்சாம்…”

“சரி இருக்கட்டும்… அப்புறம் என்ன நடந்துச்சி?” மூர்த்தி பொறுமையை இழந்தார்.

“ஒன்னுமே நடக்கல சார்… எல்லாம் ஓடுனுச்சாம்?” எனப் புருவத்தை உயர்த்தினாள்.

“யேன் மா? ஏதும் போட்டியா?” என மூர்த்தி ஆர்வத்துடன் கேட்டார். கவினா மீண்டும் அவரைப் பார்த்து முறைத்தாள்.

“சரி, யேன் அந்த முயலுக்குக் காது கேட்காதுமா?”

“யேன்னா… நீங்கத்தான் போட்டி போட்டின்னு சொல்லிக்கிட்டே இருக்கீங்கள… அதான் அதுக்குக் காது கேட்காம நிம்மதியா இருக்கட்டும்…” என்றவள் கோபத்துடன் போய் உட்கார்ந்தாள்.

கே.பாலமுருகன்

குறுங்கதை: ஒற்றைப் பந்து

வினோத் விளையாட்டு ஆசிரியர் வருவாரென ஆவலுடன் வகுப்பறைக்கு வெளியில் நின்றிருந்தான். அவர் காலை 7.20க்குள் வந்துவிடுவார். இன்று 7.25 ஆகியும் அவரது மகிழுந்து இன்னும் பள்ளியின் வளாகத்திற்குள் நுழையவில்லை. வினோத் பதற்றத்துடன் இருந்தான்.

“வினோத்து, என்ன சிலுவாரு கீழ கிழிஞ்சிருக்கு…?”

நண்பன் கேட்டதும் வினோத் விளையாட்டுக் காற்சாட்டையின் கால்பக்க நுனியைப் பார்த்தான். ஒரு சிறிய பொத்தல். காலூறையை மேலே இழுத்து அதனை மறைத்தான். இன்று எப்படியாவது விளையாட்டு உடையுடன் வந்திவிட வேண்டுமென உறுதியில் எடுத்து அணிந்து கொண்டான். அம்மா அப்பொழுதே திட்டினார்.

“டேய், இன்னிக்குப் சார் வருவாருதானே?”

“எனக்கெப்படிடா தெரியும்?”

வினோத்தால் நிலைக்கொள்ள முடியவில்லை. அவன் கடந்த எட்டு மாதங்களாக மாலையில் விளையாடச் செல்வதில்லை. தம்பி பிறந்தவுடன் தினமும் அவனைப் பார்த்துக் கொள்வதிலேயே பொழுதுகள் கழிந்துவிடும். வீட்டிற்கு எதிரில் விளையாட்டுத் திடல் என்பதால் மாலையில் நண்பர்கள் காற்பந்து விளையாடும்போது போடும் சத்தத்தைக் கேட்டுக் கொண்டே தம்பியின் தொட்டிலை ஆட்டிக் கொண்டிருப்பான்.

பள்ளி அடைக்கப்பட்டுக் கடந்த வாரம்தான் மீண்டும் திறந்திருந்தார்கள். ஆனால், இன்னுமும் விளையாட்டு ஆசிரியர் திடலுக்கு அழைத்துச் செல்லவில்லை. இன்று அழைத்துச் செல்லக்கூடும் என வினோத் நேற்று இரவிலிருந்து கற்பனை செய்து கொண்டிருந்தான்.

7.30க்கு ஆசிரியரின் மகிழுந்து வேகமாக வந்து பள்ளியின் வளாகத்தினுள் நுழைந்தது. உடனே, வினோத் மகிழுந்து நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு ஓடினான்.

“சார், இன்னிக்கு விளையாட்டு இருக்குமா?” என மூச்சிரைக்கக் கேட்டான்.

“யா, இன்னும் பள்ளிக்கூடமே ஆரம்பிக்கல… கிலாஸ்க்குப் போங்க சார் 7.45க்கு வரேன்…” என ஆசிரியர் சொன்னதும் வினோத் கவலையும் ஏக்கமும் நிரம்ப வகுப்பறைக்கு நடந்தான்.

கடந்த வாரம் போல வகுப்பறைக்குள்ளே நிற்க வைத்து உடற்பயிற்சியை முடித்துவிட்டு எழுத்து வேலைகள் கொடுத்துவிடுவாரோ என வினோத் பயந்தான். திடலைச் சுற்றி ஓட வேண்டும் என வினோத்தின் கால்கள் பரப்பரத்தன. மாணவர்கள் விளையாடாமல் திடலில் புற்கள் அடர்ந்து பச்சையாகத் தெரிந்தன.

பக்கத்திலிருந்த நண்பனின் கைக்கடிகாரத்தை வினாடிக்கு வினாடி நோட்டமிட்டுக் கொண்டிருந்தான். சரியாக 7.45க்கு ஆசிரியர் வகுப்பறைக்குள் வரும்போது எங்கிருந்து வந்ததெனத் தெரியாமல் சட்டென மழையும் பெய்யத் தொடங்கியிருந்தது.

“இன்னிக்குத்தான் திடலுக்குக் கூட்டிட்டுப் போலாம்னு நெனைச்சன்… ஓகே… எல்லாம் இடத்துல உக்காருங்க…” என ஆசிரியர் சொன்னதும் வினோத்தைத் தவிர மற்ற அனைவரும் அமர்ந்தனர்.

“டேய் வினோத்து… அங்கப் பாரு திடல்ல ஆறாம் ஆண்டு பையனுங்க நேத்து வெளையாண்ட பந்த அங்கயே வச்சிட்டுப் போய்ட்டானுங்க… ஓடிப் போய் எடுத்து வந்து ஸ்டோர்ல வச்சிரு… சாரோட இந்தக் குடைய எடுத்துக்கோ…” என்றதும் குடையை எடுத்துக் கொண்டு வினோத் திடலை நோக்கி வளைந்து வளைந்து ஓடினான். மழைநீர் தேங்கியிருந்த இடங்களையெல்லாம் தாவிக் குதித்துக் கடந்தான்.

அவனுக்காகவே அந்த ஒற்றைப் பந்து நேற்றிலிருந்து திடலில் காத்திருந்தது.

– கே.பாலமுருகன்

குறுங்கதை: பதில்களின் மௌனம்

இருவரும் பேசாமலே புந்தோங் மலையின் உச்சியைத் தொடும் தூரம் வரை வந்துவிட்டனர். மலையேறும்போது மகேன் கேட்டக் கேள்விக்கு அவர் எந்தப் பதிலும் சொல்லவில்லை. இடையில் அதிக மூச்சிரைத்ததால் சற்று நேரம் அங்கிருந்த கூடாரத்தின்கீழ் நின்று ஓய்வெடுத்தபோதும் அவர் பதில் சொல்வார் என மகேன் அவரின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். அவர் வாயைத் திறந்து வைத்து மூச்சு வாங்கிக் கொண்டிருந்தார்.


‘சிறந்த எழுத்து உருவாவறதுக்கு நான் என்ன செய்யணும், சார்?’ என அவன் கேட்டக் கேள்வியை மறக்காமல் மீண்டும் கேட்கத் தயாராகவே இருந்தான்.

எப்பொழுதும் ஞானிகள் ஒரு ஞானத்தை வழங்குவதற்குச் சரியான இடத்தையும் நேரத்தையும் மனத்தினுள் திட்டமிட்டிருப்பார்கள். ஆக, மலை உச்சியும் மாலை மயக்கமும் அவருக்கு உற்சாகத்தைக் கொடுத்துப் பேச வைக்கலாம் என மகேன் ஆறுதல் கூறிக் கொண்டு நடந்தான். மலையை அடைந்ததும் குறைந்தது ஒரு மணி நேரம் பேசுவார் என ஊகித்திருந்தான். ஒரு சில சிறிய சறுக்கங்களில் இறங்கி ஏறும்போது அவர் மகேனின் தோளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு நடந்தார்.


ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதி சில முக்கியமான விருதுகளையும் பெற்ற எழுத்தாளரோடு இவ்வளவு தூரம் நடந்து வந்ததைப் பெருமையாக நினைத்தான். அன்று தனக்குக் கிடைக்கும் ஆசீர்வாதங்கள் அவனை உயர்த்தப் போவதாகக் கற்பனை செய்தான்.

“உங்க ஒவ்வொரு கவிதையும் ஒரு தத்துவத் திறப்பு சார்!” என்று மகேன் தூண்டிலைப் போட்டான்.


அவர் பதிலேதும் சொல்லாமல் மூச்சிரைத்துக் கொண்டிருந்தார். மகேனுக்கு மௌனத்திற்குள் இருக்க மிகவும் சவாலாக இருந்தது. 50 வயதைத் தாண்டியிருந்ததை அவருடைய நடை நினைவூட்டியது.


ஒரு சிறு பள்ளம் வந்தபோது மகேனின் கைகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். எத்தனை நாவல்கள் எழுதிய கை நம்மைத் தொடுகிறதே என மெய்சிலிர்த்துக் கொண்டான். திரும்பி அவரின் கண்களைப் பார்த்தான். அதில் விழுந்துவிடுவோம் என்கிற பயம் மட்டுமே தெரிந்ததால் பள்ளத்தில் அவரைக் கவனமாக வழிநடத்திச் சென்றான். இருவரும் போராடி மலையின் உச்சியை அடைந்தனர். காற்றை நன்றாக உள்ளிழுத்துக் கொண்டு சிறுத்துத் தெரியும் நகரை நோக்கி இரு கைகளையும் விரித்தார்.


“சார், நான் ஒரு கேள்வி கேட்டன்…” என அவன் சொல்லி முடிப்பதற்குள் எழுத்தாளர் களைப்பாகி தரையில் அமர்ந்துவிட்டார். அதற்குமேல் அவரால் நிற்க முடியவில்லை. குளிரில் நடுங்கிக் கொண்டிருந்த அவருடைய கண்கள் பூண்டிருந்த மௌனம் நிறைய சொல்லிக் கொண்டிருந்தது. இனி, எந்தப் பதிலும் தேவையில்லை என மகேனுக்குத் தோன்றியது. இருவரும் மௌனமாக அமர்ந்திருந்தனர்.

கே.பாலமுருகன்

குறுங்கதை : 101 இரவுகள்


அன்றுதான் 101ஆவது இரவு. சாலினி அன்பு இல்லத்தின் வாசலையே பார்த்துக் கொண்டிருந்தாள். ஒவ்வொரு இரவையும் மனத்தினுள் வரைந்து வைத்திருக்கிறாள். அவன் வரும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. இன்று இரவு உணவிற்குப் பின் அவர்களுக்கு ‘ஆலிஸ் இன் வொண்டர்லெண்ட்’ நாவலின் கடைசி பாகத்தை வாசித்துக் காட்டுவதாகச் சொல்லியிருந்தான்.


சாலினி அன்பு இல்லத்திற்கு வந்து சில வருடங்கள் ஆகியிருந்தன. வெளிச்சத்தை வெறுத்தவள் அவன் வந்துபோன பிறகுதான் மெல்ல அங்குள்ள பிள்ளைகளோடு விளையாடத் துவங்கினாள். சாலினியின் அம்மா இறந்த பிறகு அவளுடைய சித்தி இங்குக் கொண்டு வந்து விட்டுச் சென்றாள். அதன் பின்னர் அவளைக் காண முதலில் வந்தது அவன்தான். வாடிக்கையாக அன்பளிப்புகள், உதவிகள் கொடுக்க வருபவர்களைத் தாண்டி அவன் வித்தியாசமானவனாக இருந்தான்.


“உங்கம்மா இருந்த தாமான்லத்தான் நானும் இருந்தன்… நீ குழந்தைய இருக்கறப்பலேந்து எனக்குத் தெரியும்…” என அவன் சொன்னபோது சாலினிக்கு ஆச்சரியமாக இருந்தது. இந்த உலகத்தில் ஒருவராவது தன்னைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள் எனப் பெருமை கொண்டாள். அவள் உதட்டில் முதல் புன்னகை அவன் எதிரில் இருக்கும்போதுதான் பூத்தது.


அன்றிலிருந்து தினமும் இரவு உணவுகளைப் பொட்டலம் கட்டிக் கொண்டு சாலினிக்கும் அன்பு இல்லத்தில் இருக்கும் மற்ற பிள்ளைகளுக்கும் கொடுத்துவிட்டுப் போவான். அனைவரும் வட்டமாக அமர்ந்து கொண்டு அவன் வாசித்துத் தமிழில் விளக்கும் ‘ஆலிஸ் இன் வொண்டர்லெண்ட்’ நாவலை ஆவலுடன் கேட்பார்கள்.


இன்று அவன் வாங்கி வரும் உணவைவிட நாவலின் கடைசி பாகத்தைக் கேட்கவே சாலினி ஆவலுடன் காத்திருந்தாள். கதைகளைப் பிறர் வாசிக்கக் கேட்கும்போதுதான் சாலினிக்கு அத்துணைச் சுவையாக இருந்தது. ஆலிஸுடன் இருந்த அதிசயப் பூனை அவளுடன் அறைக்குள் உலாவுவதை அவள் கற்பனை செய்து கொண்டாள்.

சற்றுத் தாமதமாக வந்தவன் முகத்தில் பொழிவில்லாமல் தெரிந்தான். சாலினியிடம் முகம் கொடுத்துப் பேசவில்லை. கடைசி பாகத்தை உயிரோட்டமில்லாமல் வாசித்துவிட்டுப் போய்விட்டான். அத்தனை மாதங்கள் அவளுக்குள் தனியுலகமாக நிகழ்ந்து கொண்டிருந்த ஆலிஸ் நாவல் மெல்ல உறைந்து கொண்டிருந்தது.

அதன் பின்னர் சில வாரங்கள் கடந்தும் அவன் வரவில்லை. கடைசியாக அவன் வந்துபோன 101ஆவது இரவு மட்டுமே ஒரு நினைவாக அவள் சேமித்து வைத்திருந்தாள். பிறகு, அன்பு இல்லத்திற்கு வரும் பலரிடம் அவள், அவனைத்தான் தேடித் தோல்வியுற்றாள். அவன் விட்டுப்போன அந்த ஆலிஸின் மாயப்பூனை மட்டுமே சாலினிக்குத் துணையாக இருந்தது.


சில மாதங்கள் கடந்து ஒரு புத்தகம் சாலினிக்குத் தபாலில் வந்தது. அவளுக்கு ஆங்கிலம் படிக்கத் தெரியாது. யாராவது படித்துக் காட்டுவார்கள் என அந்தப் புத்தகத்தை முயலின் மரபொந்து என நினைத்து அலமாரிக்குள் பத்திரப்படுத்தி வைத்தாள்.


‘நூற்றி ஒரு இரவுகள்’ எனப் பெயரிடப்பட்டிருந்த அந்த நூலின் எழுத்தாளன் இறப்பதற்கு முன் எழுதிய நூல் என சாலினிக்கு யாராவது படித்துச் சொன்னால்தான் தெரிய வரும்.


-கே.பாலமுருகன்

குறுங்கதை 22: கூண்டு

‘உங்களின் குற்றவுணர்ச்சியிலிருந்து மீண்டு நல்வாழ்வு வாழ்வதற்கான சிறப்பு வாய்ப்பு’ என்கிற பெயர் பலகை கூண்டிற்கு மேலே பொருத்தப்பட்டிருந்தது.

மாணிக்கம் வெகுநேரம் அந்தக் கூண்டை வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்தார்.கம்பிகளால் பொருத்தப்பட்ட கூண்டு நான்கு பெரிய வசிப்பிடங்களுக்குச் செல்லும் சாலையில் வைக்கப்பட்டது. இதுதான் முதல் முயற்சி என முடிவெடுத்து அங்கு வைத்திருந்தார்கள். குற்றங்கள் செய்துவிட்டு அதை மறைத்து, தண்டனை கிடைக்காமல் குற்றவுணர்ச்சியில் வாழ்பவர்களுக்கான சிறப்புக் கூண்டு அது. சிறப்புக் கழிவில் ஒரு மணி நேரம் உள்ளே சென்று தன்னை அடைத்துக் கொண்டால் ஒரு வருடம் சிறையில் இருந்ததற்குச் சமம் என்று ஒரு குறிப்பும் கூண்டுக்குக் கீழ் வழங்கப்பட்டிருந்தது.

கூண்டுக்கு யாரும் பாதுகாப்பு இல்லை. வைக்கப்பட்டுச் சில மாதங்கள் ஆகியும் யாரும் அதனுள் செல்லவில்லை. அன்று மாணிக்கம் மட்டும் கூண்டுக்குப் பக்கத்தில் வெகுநேரம் நின்று கொண்டிருந்தார். போவோர் வருவோர் மாணிக்கம் அந்தக் கூண்டிற்குள் போக வாய்ப்புள்ளது எனப் பேசிக் கொண்டார்கள்.

“இவன் மேல அப்பவே சந்தேகம் இருந்துச்சி… பொண்டாடிய அடிச்சி வெரட்டனவன்… அந்தக் குற்றம் மனசுக்குள்ள குறுகுறுக்குது போல…”

“எத்தன பேருக்குத் துரோகம் செஞ்சிருக்கானோ… ஆறு மணி நேரமாவது கூண்டுக்குள்ள இருக்கணும் இந்த நாயி…”

மாணிக்கத்திற்கு விளங்கும்படியே எல்லோரும் பேசிவிட்டு அந்தச் சாலையைக் கடந்து போய்க்கொண்டிருந்தார்கள். மாணிக்கம் வீட்டிலிருந்து ஒரு நாற்காலியைக் கொண்டு வந்து கூண்டின் அருகில் போட்டுக் கொண்டார். அமர்ந்தபடி கூண்டை வேடிக்கைப் பார்க்கத் துவங்கினார்.

மாலையில் வீடு திரும்பியவர்கள் மாணிக்கம் இன்னுமும் கூண்டுக்குள் போகாமல் இருந்ததை வெறுப்புடன் பார்த்தனர்.

“ஒரு பத்து நாளு கூண்டுக்குள்ள இருக்கப் போறானோ? இப்படி யோசிச்சிக்கிட்டு இருக்கான்… பாவம் செஞ்சி கொளுத்துப் போனவன் போல…”

மாதங்கள் பல கடந்து இன்றாவது ஒருவன் கூண்டுக்குப் பக்கத்தில் போய் நின்றானே எனப் பலர் ஆர்வத்துடன் அந்தச் சாலையில் வாகனங்களை நிறுத்திவிட்டு மாணிக்கத்தை வேடிக்கைப் பார்த்தனர். மாணிக்கம் உள்ளே போவதற்கான எந்தச் சமிக்ஞையும் இல்லாமல் வெறுமனே அமர்ந்திருந்தார்.

வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களில் சிலர் அவரை அடித்து வலுக்கட்டாயமாகக் கூண்டுக்குள் தள்ளிவிட்டனர்.

– கே.பாலமுருகன்

குறுங்கதை: வரிசையில் ஒருவன்

வரிசையின் பிற்பகுதியில் இருந்ததால் ராமசாமி சற்று ஆசுவாசமாக உணர்ந்தான். அவ்வளவாகப் பயம் இல்லாமல் கொஞ்சம் புன்னகைக்கவும் செய்தான். அவன் இயல்பாக இருப்பதை வரிசையின் முன்னே நிற்கும் சிலர் கோபத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

“என்னா பாக்குறீங்க? இப்ப நான் பயந்து நடுங்கணும்… அதானே வேணும்?” எனக் கேலியாகப் பேசிவிட்டுச் சிரித்தான். வரிசை மெல்ல முன்னகர்ந்தது.

பின்னால் நின்றிருப்பவனின் கால்கள் நடுங்குவதை ராமசாமி பார்த்துவிட்டார். வரிசை முன்னேறும் போதெல்லாம் உடன் நிற்பவர்களின் சுபாவங்கள் மாறிக் கொண்டிருந்தன.

“சார், உங்களுக்குப் பயமே இல்லையா?”

பின்னால் நின்றவன் மரியாதையுடன் ராமசாமியின் முதுகைச் சுரண்டினான். வரிசை இன்னும் ஒரு சில அடிகள் முன்னகர்ந்தது.

“எப்படி இருந்தாலும் வரிசைலேந்து நகர முடியாது… முன்னுக்குப் போய்த்தான் ஆகணும்… அதுக்குள்ள ஏன் பயப்படணும்?”

ராமசாமி அலட்சியமாகச் சொல்லிவிட்டு நகரும் வரிசையோடு முன்னகர்ந்தார்.

“டேய்! கொஞ்சம் சிரிக்காம வர்றீயா? ஆளையும் மூஞ்சையும் பாரு…” என வரிசையின் முன்னாள் நிற்பவர்கள் ராமசாமியைக் கடிந்து கொண்டார்கள். முன்னால் நிற்பவர்கள் திரும்பி வரிசையின் நீளத்தைப் பார்த்து நடுக்கம் கொண்டனர். அதிக நேரம் நின்றதால் இடுப்பு வலி தாளாமல் ராமசாமி சற்றே குனிந்து நின்று கொண்டார்.

இந்த வரிசையில் முன்னால் சென்று நிற்கவோ அல்லது பின்னால் நகர்ந்து போகவோ அனுமதியில்லை. வழங்கப்பட்ட இடத்திலிருந்துதான் வரிசையோடு நகர வேண்டும். வரிசை மேலும் முன்னகர்ந்தது. வெயில் அதிகமாக இருந்ததால் ராமசாமியின் தோல் சுருங்கிக் கொண்டது.

வரிசையைப் பயில்வான்கள் போல சிலர் சுற்றிலும் வலம் வந்து கண்காணித்துக் கொண்டிருந்தனர். ராமசாமி வரிசையின் முதல் ஆளாக வர இன்னும் சில தூரம் மட்டுமே இருந்தது. இருமல் அதிகரிக்கத் துவங்கியதும் மெல்ல அவரின் கால்களும் நடுங்கத் தொடங்கின. வரிசையைத் திரும்பிப் பார்த்தார்.

அடுத்து சில நொடிகளில் வரிசையின் முதல் ஆள் ராமசாமி. காலம் மௌனத்துடன் அவரை வரவேற்றுக் கொண்டிருந்தது.

– கே.பாலமுருகன்

குறுங்கதை: எழுத்தாளனின் கதை – 2

எழுத்தாளர், பங்சார் அடுக்குமாடியில் பகல் தூக்கத்தில் இருந்தார். தமது மூன்றாவது நாவலின் இறுதி பாகத்தை எழுதி முடிக்க முடியாமல் இரவெல்லாம் போராடித் தூங்கியதால் எழவே சிரமமாகிவிட்டது. ஒவ்வொரு நாவலுக்கும் பத்து ஆண்டுகள் இடைவெளி.


கண் பார்வையும் மங்கிவிட்டது. அவரைத் தவிர வேறு யாருமற்ற வீடு. இங்குள்ள ஒரு பொது நூலகத்தில் அதிகாரியாக இருக்கின்றார். வேலை முடிந்து வீடு வந்ததும் தம் நாவல் எழுதும் வேலையைத் தொடங்கிவிடுவார். வாங்கி வந்திருக்கும் உணவு சிலசமயம் அப்படியே இருந்து கெட்டுப் போய்விடுவதுண்டு. எழுந்தவர் கெட்டு வீச்சம் அடித்துக் கொண்டிருக்கும் பொட்டலத்தைத் தூக்கிக் குப்பையில் வீசினார். பகல் வெளிச்சம் குளிர்ந்திருந்தது.


அவரைப் பார்க்க யாரும் வரமாட்டார்கள் என எழுத்தாளருக்குத் தெரியும். அவர் வீட்டு முகவரியை யாருக்கும் தருவதில்லை. யாரையும் அவர் சந்திப்பதையும் விரும்புவதில்லை. அவர் எழுதி கொண்டிருக்கும் மூன்றாவது நாவலின் தலைப்பு மரணப் படுக்கை. கடைசி பாகத்தில் எழுத்தாளரின் புனைவு கதாநாயகனான ராஜனைத் தோட்டத்திலிருந்து தூக்கிச் செல்கிறார்கள். நோயால் சூழப்பட்டிருந்த அவனைச் சாகடிக்க வேண்டுமா அல்லது பிழைத்து எங்காவது அனுப்பி வைத்துவிடலாமா என்பதே எழுத்தாளரின் தடுமாற்றம்.


300 பக்கங்கள் வரை வாழ்ந்த ராஜனைக் கொல்வதில் எழுத்தாளருக்கு உடன்பாடில்லை. கொல்லாமல் விட்டாலும் நாவலின் கரு சிதைந்துவிடும் எனத் தயங்கினார். இரவெல்லாம் சிந்தித்தும் அவரால் முடிவெடுக்க இயலவில்லை. அனைத்து உறவுகளும் கைவிட்டுத் துரத்திய பின்னர் தான் வாழ்ந்த தோட்ட வீட்டுக்கு வந்து தனியாக வாழும் ராஜனின் சிதைந்துபோன மொத்த பாடுகளையும் எழுத்தாளர் எழுதிவிட்டார். இனி, முடிவு மட்டும்தான். என்ன செய்யலாம் என அப்படியே உட்கார்ந்துவிட்டார்.


“இதுதான் சார் என் கதை… ஒரு நாவலை எழுதி முடிக்க ஒரு எழுத்தாளர் கடைசி நிமிசத்துல போராடிக்கிட்டு இருக்காரு,”


என்கிற சத்தம் கேட்டதும் எழுத்தாளர் மேலே பார்த்தார். ஒருவன் நாற்காலியில் உட்கார்ந்தபடியே கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தான். அவன் பெருத்துப் பன்மடங்கு பெரிதாகத் தெரிந்தான். எழுத்தாளர் குனிந்து தன்னைப் பார்த்தார். எழுத்துகளால் சூழ்ந்திருந்த ஒரு தாளின் மேற்பரப்பில் நின்று கொண்டிருந்தார்.


– கே.பாலமுருகன்

குறுங்கதை: அதான்


அவனைக் கடந்த ஒரு வருடமாக பீடோங் ரோட்டோரக் கடையில் பார்த்து வருகிறேன். பெயர் முருகேசன். நான் வேலை செய்யும் இரும்புத் தொழிற்சாலைக்குப் பக்கத்திலுள்ள பலகைத் தொழிற்சாலையில்தான் வேலை செய்கிறான். தொழிற்சாலையின் நீல வெளிர் சட்டையை அணிந்து கொண்டு கழுத்திலுள்ள ‘டேக்கை’க்கூட கழற்றாமல் அமர்ந்திருப்பான்.


முருகேசனிடம் யார் என்ன சொன்னாலும் அவன் பதிலுக்கு “அதான்,” என்று மட்டும்தான் பதிலளிப்பான். அதனாலேயே பெரும்பாலோர் அவனிடம் பேசுவதில்லை. அவன் என்ன சிந்தித்துக் கொண்டிருக்கிறான் என யாரும் கண்டுபிடித்ததில்லை. 7.00 மணிக்கு மேல் இந்த ரோட்டோரக் கடையில் அமர்ந்திருப்பான். மற்ற நேரங்களில் வேறு எங்கும் அவனைப் பார்த்ததில்லை.


ஒருமுறை, “யேன்டா, நீ ‘அதான்’ தவிர வேறு ஏதும் சொல்ல மாட்டீயா?” என்று கடையில் இருந்த ஒருவர் கேட்டதற்கு அதற்கும் “அதான்,” என்றே சொல்லிவிட்டு அமர்ந்திருந்தான். வந்த கோபத்திற்கு அவரும் ஏதேதோ சொல்லித் திட்டியிருக்கிறார். யார் கத்தினாலும் அவன் அப்படியே அசைவில்லாமல் நிதானமாகத் தேநீர் அருந்தி கொண்டே, “அதான்,” எனச் சொல்லிவிட்டு ஆர்பாட்டமில்லாமல் இருப்பான்.


பின்னர், ரோட்டோரக் கடையில் அவனைப் பார்ப்பவர்களும் தொழிற்சாலையில் வேலை செய்பவர்களும் “பொணம் போறான் பாரு,” என்றுதான் சொல்லி விடைப்பார்கள். மனிதர்களுடன் உரையாடலை நீடிக்க விரும்பாதவன் என்கிற ஒரு தோரணை அவனிடம் தெரிந்தது.


‘ரொட்டி சானாய்’ சாப்பிட்டுவிட்டு அடுத்து அவனிடம் நான்தான் பேசப் போகிறேன். அதற்கு என்னைத் தயார்ப்படுத்திக் கொண்டேன். தனியே அமர்ந்திருந்த அவனுக்கு எதிரே போய் அமர்ந்தேன். அவன் என்னைப் பார்க்காததைப் போல் இருந்தான். இப்பொழுது நான் எது கேட்டாலும் அல்லது பேசினாலும் அவன் “அதான்,” என்றுதான் சொல்லப் போகிறான் என்பதையும் ஊகித்துக் கொண்டேன். கடையில் பழக்கமானவர்கள் சிலர் நான் முருகேசனின் எதிரில் அமர்ந்திருந்ததை ஆச்சரியத்துடனும் ஆவலுடனும் பார்த்தார்கள். முருகேசன் என்ன பேசுவான் என எல்லோருக்கும் தெரியும் என்பதால் நான் என்ன பேசப் போகிறேன் என்பதில்தான் அவர்களின் கவனம் குவிந்திருந்தது.


பேசுவதற்கு வாயைத் திறந்து, “அதான்…” என்றேன்.


முருகேசன் புருவங்களை உயர்த்தி முதல்முறையாக எதிரே பேசுபவனைக் கூர்மையுடன் கவனித்தான். பதிலுக்கு என்ன பேசுவதென்று தெரியாமல் அமர்ந்திருந்தான்.


அவனும் எதற்கு இந்த “அதான்,” என்று கேட்கவுமில்லை; நானும் சொல்லவுமில்லை.

-கே.பாலமுருகன்

குறுங்கதை: குமாரி உணவகம்

பள்ளியில் ஒன்றாய்ப் படித்தத் தோழி நான் வேலை செய்யும் ஈப்போ நகரில் புதிதாக உணவகம் தொடங்கியிருப்பதாகச் சொல்லியிருந்தாள். பாலப்பம், தோசை, இட்லி எனக் காலை பசியாறைக்கு மட்டும் திறந்திருக்கும் என்றாள்.

“எப்பவாவது வேலைக்குச் சீக்கிரம் வந்துட்டனா கண்டிப்பா கடைக்கு வா…” என்று தினமும் குமாரி வாட்சாப் அனுப்பிவிட்டாள். கடையில் அவள் சுட்ட தோசை, இட்லி படங்களையெல்லாம் நாள்தோறும் அழகாகக் ‘கோலாஜ்’ வடிவிலான படங்களாக உருவாக்கி அனுப்பி வைப்பாள். ‘தோசைலாம் ஒரு பெரிய ‘மெனுவா?’ என நொந்து கொள்வேன். ஒருமுறை வாழ்த்துகள் எனச் சொன்னதோடு இன்னுமும் கடைக்குப் போக வேண்டும் எனத் தோன்றவில்லை.

‘லோக்டவுனில்’ இருந்தபோது தினமும் ‘கடை இன்று அடைப்பு’ என மட்டும் தகவல் அனுப்பிக் கொண்டிருந்தாள். ஆறுதல் சொல்லவும் முனையவில்லை. இதுவரை கடைக்கே போகாத எனக்கெதற்கு இந்தத் தகவல் என விட்டுவிட்டேன்.

நேற்று முழுவதும் எப்படி இருக்கிறாய், கடையை மீண்டும் திறந்துவிட்டாயா எனத் தொடர்ந்து மூன்றுமுறை வாட்சாப் அனுப்பியும் அவள் அதைப் பார்க்கவே இல்லை. மனம் என்னவோ போல் ஆகிவிட்டது. இடைநிலைப்பள்ளியில் படிக்கும்போது அம்மா சுட்டுத் தரும் பலகாரங்களைத் திருட்டுத்தனமாக எல்லாரிடமும் பகிர்ந்துவிட்டு அரை வயிறாக வீட்டுக்குப் போய்விடுவாள். 20 சென்க்கு இரண்டு வாழைப்பழம் பலகாரம் கிடைக்குமெனச் சிற்றுண்டி வரிசையில் நின்று தவித்துக் கொண்டிருந்த காலமது. குமாரியின் சாப்பாடு டப்பாதான் எங்களுக்குச் சிற்றுண்டி.

இன்று காலையில் முதல் வேலையாக விடிந்ததும் அவள் சொன்ன இடத்திற்குச் சென்றேன். ஒருவேளை கடை திறக்கப்பட்டிருந்தால் ஒரு பாலப்பம் சாப்பிடலாம் என முடிவெடுத்திருந்தேன். அவள் கொடுத்த முகவரியில் பெரிய சீன உணவகம் தான் இருந்தது. சந்தேகத்துடன் ‘கொய் தியோ’ சமைத்துக் கொண்டிருந்த சீன அக்காவிடம் விசாரித்தேன். பக்கத்தில் இருந்த ஒரு சிறிய தள்ளு வண்டியைக் காண்பித்துப் புன்னகையுடன் இதுதான் குமாரி உணவகம் என்றார். இன்று விடுமுறை, கடையைத் திறக்கவில்லை என்று கூறினார். சாமி படம் ஒட்டப்பட்டிருந்த இடத்தில் ஓர் அகல்விளக்கும் இருந்தது.

இனி தினமும் காலையில் பாலப்பம் சாப்பிட்டுவிட்டுத்தான் வேலைக்குப் போவதாக முடிவெடுத்துக் கொண்டேன்.

-கே.பாலமுருகன்