சொற்களின் பொறியியளாளர்களே கவிஞர்கள் – கவிதை குறித்த உரையாடல் பாகம் 2

கவிதை ஒரு போர் என கடந்த நூற்றாண்டில் ஒரு மனப்பழக்கம் யாருக்கோ தோன்றியிருக்கலாம். அது ஒரு தொற்று நோயாக எல்லோருக்கும் பரவி உலகம் முழுவதும் இந்த நூற்றாண்டுவரை கவிதையை கூக்குரலின் / கூச்சலின் ஆயுதமாகப் பாவித்துக் கொண்டிருக்கிறார்களோ என நினைக்கத் தோன்றுகிறது.

சே குவாரின் கோபம் புரட்சியானது; பாரதியாரின் கோபம் கவிதையானது என எங்கேயோ வாசித்ததாக நினைவு. ஆக, கவிதை உருக்கொண்டு வெளிவர ஓர் உணர்வு தேவையானதாக இருந்திருக்கிறது. அது கோபமாக இருக்கலாம்; கவலையாக இருக்கலாம்; ஆனால், நிச்சயமாக கவிதை தனக்கான  சொற்களைத் தேடி உருப்பெற்று கொள்ள உணர்வு நூதனமான பங்காற்றுகிறது என்றே சொல்லலாம். ஆகவேதான் கவிதைப்போர் எனப் பலர் சொல்லிக் கேட்டிருப்போம். சொற்களைக் கொண்டு செய்யும் போர் கவிதை எனும் ஒரு வாதம் காலம் காலமாக புரையோடிக் கிடக்கின்றது. ஆனால்,  இன்றைய நவீன சூழல் கவிதையை உணரும் தளம் வேறிடத்திற்கு மாறியுள்ளது.

‘கவிதைக்குள் ஒரு சொல் புதியதாகத் திறந்துவிடப்படுகிறது’ – ஜெயமோகன்.

எல்லாம் சொல்லுக்கும் அது புழங்கிற மொழி சார்ந்த கலாச்சார கட்டுமானங்களும் படிமங்களும் இருக்கவே செய்யும். ஒவ்வொரு சொல்லும் நாம் அறியப்படுகிற விதம் அதன் நுட்பமான மதம், அரசியல், பண்பாடு சார்ந்ததாகவே இருக்கும். அதன் பின்புலத்தைக் கொண்டே ஒரு சொல்லுடன் நாம் உறவு கொள்கிறோம்; புரிதலை உருவாக்கி வைத்திருக்கிறோம்.

‘சொக்கட்டான்/பகடை’ என்றதும் எனக்கு ஞாபகத்திற்கு வருவது மகாபாரதம்தான். மகாபாரதத்தின் உச்சக்கட்டம் பஞ்ச பாண்டவர்கள் சூதாட்டத்தில் தோற்பதுதான். அதுதான் மகாபாரதப் போரின் துவக்கம். எப்பொழுது சொக்கட்டான்/பகடை என்ற சொற்களைக் கேட்டாலோ வாசித்தாலோ உடனடியாக மகாபாரதம் என்கிற கதை மனத்திற்குள் சட்டென வந்து உட்கார்ந்து கொள்கிறது. அச்சொல் அறியப்படும் சூழலோடு இதுபோன்ற பண்பாடு சார்ந்த, நிலம் சார்ந்த கதைகள்/சம்பவங்களோடு ஏதாகிலும் ஒருவகையில் ஓர் அர்த்தப்பாடுகளைக் கொண்டிருக்கும். ஆனால், கவிதை எனும்போது அச்சொல் கொண்டிருக்கும் அக்குறிப்பிட்ட மொழியின் பண்பாடுகளையும், மத சாயல்களையும் இன்னும் பலவற்றையும் உடைத்துக் கொண்டு புது அர்த்தம் கொள்வதாகவே நவீன இலக்கியம் கவிதையின் மீதான விமர்சனமாக முன் வைக்கிறது.

எடுத்துக்காட்டு:

முதன் முதலான

உன் சிறகசைப்பில்

உனது ஆண் பொருத்திய

விலை அட்டையை

உடைக்கிறாய்.

  • மேற்கண்ட கவிதை வரியில் சிறகசைப்பு எனும் சொல்லின் மீது சமூகம் கொண்டிருக்கும் பொருள் ஒரு பறவையின் சிறகசைப்பைக் குறிக்கும். உலகைப் பற்றி அறியும்போது பறவை, அதனுடைய சிறகுகள் எனும் அர்த்தங்கள் ஒரு கருத்தாக நமக்குள் பதிகின்றன. ஆனால், இவ்விடத்தில் ஒரு கவிஞன் அச்சொல்லுக்குப் புதிய வாழ்க்கையைக் கொடுக்கிறான்; புதியதொரு பிறப்பை அளிக்கிறான். ஏற்கனவே இருக்கும் / பல காலங்களாகப் புழங்கி வரும் ஒரு சொல்லை எடுத்து மறு கண்டுப்பிடிப்பு செய்கிறான். இவ்வித்தைக் கவிஞர்களுக்கே உரியது. ஆகவேதான், கவிஞன் என்பவர் சொல்லால் போர் செய்பவன் அல்ல; அவன் சொல் பொறியியிளாளன்- word engineering.

பல காலங்களாக எந்தப் பயன்பாடும் இல்லாமல் தேங்கிக் கிடக்கும், பழசாகிவிடும் சொற்களைத் தேடி எடுத்து அதனை உலுக்கி நிகழ்காலத்திற்கேற்ப புத்துயிர் கொடுப்பவன்தான் கவிஞன் என நவீன உலகம் கவிதைக்கு இன்னொரு தளம் உருவாக்குகிறது. மதம், சாதி, சட்டம், பண்பாடு, அரசியல் என பல்வேறான நிலைகளில் அடக்கியாளப்படும் ஒரு சொல்லின் மீதான பாரம்பரியான சாயத்தைக் களைத்தெறிவதுதான் நவீன கவிதையின் செயல்பாடு.

எடுத்துக்காட்டு:

வாருங்கள்
கொலை செய்வோம்:

இதற்காக நீங்கள்

கொலையாளி என அழைக்கப்பட்டாலும்

பரவாயில்லை.

கொலை செய்து மகிழ்வோம்.

நம் பயங்களை கோழைத்தனங்களை

இன்றே கொலை செய்வோம்.

 

  • இக்கவிதை ஆரம்பத்தில் கொலை என்கிற மிகவும் வன்மமான, கொடூரமான ஒரு சொல்லைத் தனக்கான சொல்லாக எடுக்கிறது. ஆனால். அச்சொல்லை ஒரு சமூகம் புரிந்து வைத்திருக்கும் அர்த்தப்பாடுகளிலிருந்து அச்சொல்லுக்கு இக்கவிதை புதியதொரு இடத்தை/ புரிதலை அளிக்கிறது.

 

‘கொலை செய்யாதீர்’ என ஒரு குரல் ஓங்கி சத்தமாக ஒலிக்கும்போது அச்சொல் வேறு எந்தப் படிமத்தையும் குறியீட்டையும் கொண்டிராதபோது அது ஒரு கவிதையாக அல்லாமல்; ஒரு சத்தமாக, ஒரு பிரச்சார வெடிப்பாக மட்டுமே எதிர்க்கொள்ள நேர்கிறது.

கொலை என்கிற ஒரு குற்றத்தின் மீது ஒரு கவிஞன் புனையும் கவிதை ஒரு கூக்குரலாக மட்டும் ஒலிக்காமல் அடுத்த ஒரு நூற்றாண்டுக்குக் கொலை பற்றி பேச விளையும் யாவரையும் உலுக்கி எடுக்கப் போகும் குற்றவுணர்ச்சியின் அடிநாவாக இருக்கப் போகும் ஒரு சொல்லைக் கவிஞன் கண்டறிய வேண்டியக் கடப்பாடடுன் கவிதை உலகில் நிற்கிறான்.

எடுத்துக்காட்டு:

ஒரு கொலைக்குப் பின்

தாராளமாக

நீங்கள் புன்னகைக்கலாம்;

மார்த்தட்டிக் கொள்ளலாம்.

ஆனால், வீடு திரும்பும்போது

தயவு செய்து

பிணங்களை மிதிக்காதீர்கள்.

கடைசி சடங்குகளுக்கு

அவை தேவைப்படுகின்றன.

  • இதுதான் சிறந்த உதாரணம் என்றோ அல்லது முன்சொன்ன கூற்றுகளுக்கு உகந்த கவிதை என்றோ சொல்ல முன்வரவில்லை. இக்கவிதை கொலையைப் பற்றி பேசவில்லை; கொலையின் குரூரமான ஒரு பக்கத்தை/ விளைவை கோபத் தொனியைக் கொன்றுவிட்டு மிக இயல்பாகப் பேசுகிறது. ஆனால், அதற்குள் சொல்ல இயலாத அழுத்தமான ஓர் உணர்வு கரைந்து கிடக்கிறது. இதற்கு மேல் என்ன என்கிற தோரணையில் கையை விரித்து வானத்தைப் பார்த்து மரணத்தை மண்டியிட வைக்கிறது.

 

தொடரும்-

கே.பாலமுருகன்

குறிப்பு: நன்றி, ஜெயமோகன் வலைத்தலம்.

 

கவிதையும் குறியீடும் ஓர் உரையாடல் – பாகம் 1

கவிதை ஏன் சத்தமாக மாறியது?

புதுக்கவிதையின் எழுச்சியே கவிதையைச் சத்தமிக்கதாக மாற்றியது. ஓங்கி ஒலிக்கக்கூடிய கருவியாக, அடித்தால் எட்டுத் திசைக்கும் எதிரொலிக்கக்கூடிய தம்பட்டமாகக் கவிதை, புதுக்கவிதையின் எழுச்சிமிக்க காலக்கட்டத்தில் தோற்றம் கண்டது. கவிதை மொழியின் மிகவும் மௌனமான குரல் என்பதையும், மொழியின் நுட்பமான நாட்டியம் என்பதைப் பற்றியும் மக்கள் மறந்து கவிதையை மேடையேற்றினார்கள். கொள்கைவாதிகளின் எழுச்சிமிக்க உரைகளில் கவிதை சத்தமாக ஒலிக்கத் துவங்கியது. பின்னர், வானம்பாடி கவிஞர்கள் காலக்கட்டத்தில் அந்த வரிசையைச் சேர்ந்த கவிஞர்கள் புதுக்கவிதைக்கு ஒரு சமூகப் பொறுப்பைச் சுமக்கும் வேலையை ஏற்றினார்கள். சமூகத்தின் ஒட்டுமொத்த பிரச்சனைகளையும் குமுறல்களையும் புகார்களையும் ஒரு பெரும் பிரச்சார மூட்டையாகக் கட்டி கவிதை சுமக்கத் துவங்கியது. விடுதலை, உரிமை, சுதந்திரம், போராட்டம் எனப் பலத்தரப்பட்ட சமூக அடுக்குகளிலிருந்து எழும் பிரச்சாரக் குரலாகப் புதுக்கவிதை பாவிக்கப்பட்டது.

இருப்பினும், மூ.மேத்தா, அப்துல் ரகுமான் போன்ற கவிஞர்கள் மொழி அழகியல்களைச் செம்மையாகப் பயன்படுத்தியவர்கள் என்பதால் மக்கள் அவர்களின் கவிதை மொழியில் மயக்கம் கொண்டார்கள்; அவர்களின் கவிதையில் வெட்ட வெளிச்சமாக வெளிப்படும் சமூகப் பொறுப்பின் மீது பற்று கொண்டார்கள். கவிதை காலக்கட்டத்தின் கொண்டாட்ட நாயகர்களாக மூ.மேத்தா வரிசயைச் சேர்ந்த வானம்பாடி கவிஞர்கள் சமூகத்தில் உருக்கொண்டார்கள். கவிதை ஓங்கிச் சத்தமாக சொற்களின் கூட்டமாக ஒலித்துக் கொண்டிருந்தது.

புதுக்கவிதையின் குறீயீடுகள்

புதுக்கவிதையின் வழக்கமான சில படிமங்கள் காலம் காலமாக கவிஞர்களின் மொழிக்குள் தொடர்ந்து பாவிக்கப்பட்டு வந்திருந்திருக்கிறன. கவிதை நேரடியாகப் பேசும் மொழியல்ல. மொழிக்குள் மொழி என்கிற வகையில் குறியீடுகளையும் படிமங்களையும் தன்னகத்தே உருவாக்கிக் கொண்டு நகரக் கூடியவை ஆகும். கவிதை மனத்திலிருந்து பிசிறடிக்கக்கூடியது என்றும் சொல்லலாம். ஆனால், புதுக்கவிதைகள் பெரும்பாலும் அறிவிலிருந்து சமூகத்தின் பிரச்சனைகளையொட்டி எழும் பிரக்ஞைமிக்க குரலாகவே எழுதப்பட்டு வந்தன.

ஒரு கவிஞன் அல்லது ஒரு சமூகம் தனது கவிதைக்கான குறியீடுகளையும் படிமங்களையும் எங்கிருந்து பெறுகிறது? அல்லது உருவாக்குகிறது எனப் பார்க்கும்போது இயற்கையே மனிதனின் வாழ்வில் நெருங்கிய தொடர்பில் இருப்பதைக் கண்டறிய முடிகிறது. இயற்கை பிடிவாதமாக வைராக்கியம் நிரம்பிய ஒரு தனிமைக்குள் இருக்கிறது. அதிலிருந்து அதன் மௌனத்திலிருந்து தன் வாழ்க்கையைப் பார்க்கும் கவிஞன் இயற்கையையே தனது குறியீடாக எடுத்துக் கொள்கிறான். ஒரு சமயம் மரம், மலைகளைத் தனிமைக்கான குறியீடாக ஆக்கிக் கொள்கிறான். ஜென் கவிதைகள் மலைகளைத் தியானத்தில் இருக்கும் துறவி எனச் சொல்கின்றன. தத்துவப்பூர்வமான பார்வையிலிருந்து தோன்றிய கவிதைக்கான குறியீடுகள் பின்னர், எழுச்சிமிக்க குரல்களுக்கு வெகுவாகப் பயன்பட்டன.

எடுத்துக்காட்டாகப் பின்வரும் இரண்டு கவிதைகளில் மரம் பாவிக்கப்பட்ட விதத்தைக் கவனிக்கலாம்:

  1. மரம்

மரங்கள்

நிலத்தின்

மிகப் பழைய

குடிமக்கள்.

 

2. மரம்

ஒரு கதவைப் பாருங்கள்

அதற்குள் ஒரு மரம் தெரிகிறதா?

ஒரு நாற்காலியைப் பாருங்கள்

ஒரு மரம் கதறி செத்த

ஒலி கேட்கிறதா?

மேற்கண்ட இரண்டு கவிதைகளுமே மரத்தின் இருப்பைப் பற்றி பேசும் கவிதைகள்தான். ஆனால், என்ன வித்தியாசம் என அறிய முடிகிறதா?  முதல் கவிதை சத்தம் குறைவாக மரத்தை ஓர் ஆழமான அர்த்தத்திற்குள் மறைமுகமாகச் சத்தமில்லாமல் நிறுவுகிறது. இரண்டாவது கவிதை ஒரு புதுக்கவிதைக்கான எழுச்சியுடன் மரம் என்பதன் தியாகத்தைச் சத்தமாக ஓங்கி ஒலிக்கிறது. இக்கவிதையைப் படிக்கும் யாவரும் குழப்பமில்லாமல் பேசும் பொருளைப் புரிந்துகொள்ள வேண்டும் என்கிற நிதானமும் திட்டமும் இக்கவிதையில் தெரிகிறது. இரண்டாவது கவிதையின் வெளிப்பாடும் மரத்தைப் பற்றி பிரச்சாரம் செய்ய வேண்டும் என்பதே. ஆனால், முந்தைய கவிதை ஒரு தத்துவார்த்தமான பார்வைக்குள்ளிருந்து எழும் குரல். அதைத் தியானிக்க வேண்டும்; அசைப்போட வேண்டும். அதிலிருந்து மேலும் சில கருத்துகளை உருவாக்கிக் கொள்ள முடியும்.

இயற்கையிலிருந்து குறியீடுகளைப் பெற்றுக் கொள்ளும் கவிஞன் மரம் என மட்டுமல்லாமல், பறவைகள், வானம், மேகம், தாவரங்கள், மண், நிலம், மழை எனத் தன் கவிதை பரப்பை மேலும் விரிவாக்கிக் கொண்டான். சமீபத்தில் எழுதப்பட்டு வரும் நவீன கவிதைகள் புதுக்கவிதை கொடுத்த சத்தங்களின் சலிப்புத் தாளாமல் மீண்டும் மௌனத்திற்குத் திரும்புகின்றன. பிரச்சாரம் செய்வதை விட்டுவிட்டு மௌனமாக உரையாடுகின்றன. முந்தைய தத்துவார்த்தமான சூழலிலிருந்து மாறுப்பட்டு தனிமையின் குரலாக ஒலிக்கின்றன. நவீன மனிதன் சந்திக்கும் நெருக்கடிகளைப் பிரதிபலிக்கும் தனிமனித, தனி மனத்தின் நினைவோட்டங்களாக நவீன கவிதை மாறுகிறது. பெருநகர் வாழ்வின் பரப்பரப்பில் இயந்திரத்தனமான செயல்பாடுகளின் சிக்கிச் சிதைந்திருக்கும் நவீன மனிதனின் குரலாகக் கவிதை மாறுகிறது.

 

  1. மரம்

பெரும் கழுகுகள்

கொத்திச் சென்ற

மனக்காட்டிலிருந்து

வெறுமை தாளாமல்

இசைக்கும் ஒற்றை கருவி.

 

இன்றைய இயந்திரத்தனமான வாழ்க்கை ஓட்ட்த்தில் எங்கோ ஒரு மூலையில் ஒரு மனிதன் ஒரு கொடூரமான தனிமைக்குள் அடைப்பட்டுக் கிடக்கும் துயரத்தை ஒரு மரத்தின் வழி மனப்பதிவுகளாக உக்கிரமாகச் சொல்ல முடியுமென்றால் அது நவீன கவிதையில் செயல்பாடாகும். சமூகத்தின் ஒரு பகுதியாக இருந்த கவிதை பின்னர், சிதைந்துபோன சமூகத்தில் வாழும் தனிமனிதர்களின் மன இயக்கமாக மாறுகிறது. நகுலன் பூனையை மரணத்தின் குறியீடாகப் பாவிப்பதை நான் வாசித்திருப்போம். அது அவருடைய அனுபவத்திலிருந்து உதிர்க்கும் குறியீடு. அதே காலக்கட்டத்தின் பெருநகர் தனிமையைத் தரிசிக்கும் இன்னொரு கவிஞனான ஆத்மாநாம் அவர்களும் மிகுந்த வரட்சியான அன்பும் உறவுகளும் அற்ற நகர் வாழ்வின் எச்சங்களை தன் கவிதையின் வழி சொல்லிச் செல்கிறார்.

 

உரையாடல் தொடரும்-

கே.பாலமுருகன், ( 2010ஆம் ஆண்டில் ஒரு கவிதை நிகழ்ச்சியில் ஆற்றிய உரை)

 

 

 

 

தமிழ்ப்பள்ளியே என் தேர்வு எனும் முழக்கம் இனவெறியா? உதயசங்கரின் விமர்சனங்களுக்கான எதிர்வினை

Tamil-school1

மலேசியாவில் மட்டுமல்ல சிறுபான்மை மக்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் பெரும்பான்மையினரால் தொடர்ந்து சீண்டப்பட்டும்/ ஒடுக்கப்படும் ஒரு சிறுபான்மை சமூகம் தன் அடையாளங்களின் மீது வைக்கப்படும் எந்த விமர்சனத்தையும் பற்று நிறைந்த சூழலிலேயே எதிர்க்கொள்ளும். அச்சமூகத்தின் பிடிமானமே அத்தகைய அடையாளங்கள்தான். அந்த அடையாளங்களை நேரடி விவாதத்திற்கு எடுப்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய தொனி மிக முக்கியமானது. அது கொஞ்சம் பிசகினாலும் அச்சமூகத்த்தின் நம்பிக்கைகளை நேரடியாகப் பாதிக்கும். பன்முகச் சூழலில் வாழு யாவருக்கும் இது தெரிந்திருக்க வேண்டும்.

நம் கருத்தை ஒன்றின்மீது வைக்கும்போது எந்த அளவிற்கு அதற்கான தரவுகளையும் அதனைச் சார்ந்த தொடர்புடைய சான்றுகளையும் சேகரிக்க உழைத்துள்ளோம் என்பதைப் பொருட்டே அக்கருத்தின் நம்பக்கத்தன்மை அடங்கியுள்ளது. நம் சமூகத்தில் வாழும் நல்ல சிந்தனையாளர்கள், கலைஞர்கள் பத்திரிகை செய்தியின் முதல் பக்கப் பரப்பரப்பிற்கெல்லாம் செவிசாய்க்கமாட்டார்கள் என நம்புகிறேன். மாற்றுக் கருத்தாக இருந்தாலும் அதனை விவாதத் தொனியிலேயே முன்வைக்கும் திறம் பெற்றிருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு இதுபோன்ற விடயங்களில் கிண்டலையும் கேலியையும் கொண்ட தொனியைக் கொண்டிருப்பது பொறுப்பற்றவர்களின் வழிமுறையாகும்.

இப்பொழுது உதயசங்கர் அவர்கள் தமிழ்ப்பள்ளிகளின் மீது வைத்திருக்கும் கருத்துகளின் அடிப்படையில், அது குறித்து முதலில் விவாதிக்க வேண்டும் என்பதே எனது எதிர்ப்பார்ப்பு.

 

  1. தமிழ்ப்பள்ளிகள் காப்பியடிக்கும் கலாச்சாரத்தை வளர்க்கிறது – உதயசங்கர்

 

//apabila berada di SMK, kumpulan pelajar kaum India ini hilang “tempat bergantung” kerana guru menghalang mereka meniru; berbeza dengan budaya sewaktu di SJKT//

//Hasil perbualan, mereka mendedahkan, sejak Tahun 1, mereka sudah dididik melakukan apa saja – termasuk menipu dan meniru – untuk lulus ujian dan peperiksaan. //

அவருடைய கூற்றின்படி இடைநிலைப்பள்ளிகள் காப்பியடிப்பதை முற்றாகத் தவிர்க்கின்றது ஆனால், தமிழ்ப்பள்ளிகள் அக்கலாச்சாரத்தைப் பேணுகின்றது ஆகும். இதற்கு அவரிடம் எவ்வித எழுத்து ரீதியிலான ஆதாரம் இல்லை. யாரோ சொன்னார்களாம். உடனடியாக இக்கூற்றினை அனைத்து தமிழ்ப்பள்ளிகளின் நிர்வாகத்தின் பார்வைக்குக் கொண்டு வருகிறேன்.  ( சான்று : http://www.themalaysianinsider.com/opinion/uthaya-sankar/article/persoalan-kempen-sjkt-pilihan-kita )

2014ஆம் ஆண்டில் தேர்வுத் தாள் கசிந்த பிரச்சனையில் தமிழ்ப்பள்ளிகள் மட்டும் சிக்கிக் கொள்ளவில்லை என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். தேசியப் பள்ளியில் அறிவியல் தேர்வுத்தாளே முதலில் கசிந்திருப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. சான்று: http://www.themalaysianinsider.com/bahasa/article/polis-siasat-kes-kertas-sains-upsr-bocor

“எனக்கு யூ.பி.எஸ்.ஆர் முக்கியமில்லை. 7 ஏக்கள் பெற்றாலும் உடனே பல்கலைக்கழகம் போக முடியாது. முதலாம் படிவம்தான் போக முடியும்.” என அறிவியல் தேர்வுத்தாள் கசிந்ததையொட்டி மலாய்க்கார்ர் பெற்றோர் ஒருவர் அளித்தப் பேட்டி அது. சான்று: http://www.beritasemasa.com.my/soalan-upsr-bocor-haji-darus-awang-kpm

soalan-spm-bocor-2014

மேலும், தேர்வுத்தாள் கசிவு தொடர்பான பிரச்சனைகள் இடைநிலைப்பள்ளிகளில் இல்லையா? 2013ஆம் ஆண்டில் எஸ்.பி.எம் கணிதம் தாள் கசிந்ததன் தொடர்பில் நாட்டில் பெரும் சர்ச்சை உருவானதை யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. அதற்கான ஆதாரங்கள் பின்வருமாறு:

 

ஆக, தமிழ்ப்பள்ளிகளின் மீதே அனைத்து புகார்களையும் குவிக்க முயலும் மனநிலையுடனே உதயசங்கர் தன் கருத்துகளை முன்வைத்திருக்கிறார் எனத் தெரிய வருகிறது. நாட்டு நடப்பை அறிந்த ஒருவர் தேர்வுத்தாள் கசிவில் தமிழ்ப்பள்ளியை மட்டும் குறைசாற்ற வாய்ப்பில்லை. அது பிரத்தியேக வகுப்புகளின் பேராசையின் மூலம் விளைந்த சிக்கல்/  தேர்வு உருவாக்கும் விளைவுகள் குறித்தான சிக்கல் என்றே நினைக்கிறேன்.

 

  1. மாணவர்களை வீட்டுக்குச் சென்றே அழைத்து வரும் பழக்கம்

//Tugas guru SJKT termasuk pergi ke rumah murid, memandikan mereka, memakaikan baju sekolah, menyuapkan sarapan, basuh punggung selepas berak dan membawa mereka ke sekolah!//

– See more at: http://www.themalaysianinsider.com/opinion/uthaya-sankar/article/persoalan-kempen-sjkt-pilihan-kita#sthash.TpC0zeDl.dpuf

Guru Penyayang – Tindakan Kementerian Pelajaran

Konsep: Guru penyayang menjiwai bahawa murid mereka merupakan aset penting yang perlu diberi perhatian, dijaga, dibimbing, dihargai kewujudannya dan disayangi setiap masa.

மேலே குறிப்பிட்டதைப் போல இத்திட்டம் கல்வி அமைச்சால் புழக்கத்திற்கு வருவதற்கு முன்பே நம் பள்ளி ஆசிரியர்கள் ஒருவேளை மாணவர்கள் பள்ளிக்கு வரமுடியாமையை எதிர்க்கொண்டாலோ அல்லது பள்ளிக்கு மட்டம் போட்டாலோ உடனடியாகத் தன் வாகனத்தில் சென்று அழைத்து வருவதைக் கடைப்பிடித்தே வந்திருக்கிறார்கள். தோட்டப்புறங்களில் வாத்தியார் தன் ஆமை காரில் போய் பள்ளிக்கு வராமல் திரிந்து கொண்டிருக்கும் நம் பிள்ளைகளை அக்கறையோடு அழைத்து வந்திருப்பதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ( துரைசாமி ஐயா, 1950களில் ஆசிரியராக இருந்தவரின் நேரடி வாக்குமூலம்)

ஆகவே, ஒரு மாணவன் மீது அன்பு கொள்வதும் அவனின் மீது அக்கறை எடுத்துக்கொள்வதன் இன்னொரு வடிவம்தான் அவனை வீட்டுக்குச் சென்று அழைத்து வருவதும் அதன் வெளிப்பாடாகும்.

Fasa pertama Pelan Guru Penyayang adalah mengalu- alukan kehaduran murid.

news-1-11-_CTY_15982

கல்வி அமைச்சால் அறிமுகப்படுத்தப்பட்ட அன்புமிக்க ஆசிரியர் கலாச்சாரத்தின் முதல் படிநிலை ‘மாணவர்களைப் பள்ளிக்கு இன்முகத்துடன் வரவேற்பதாகும்’. அதன் தொடர்ச்சியாக ஒரு மாணவன் பள்ளிக்கு வரவில்லை என்றால் அவனை அழைத்து வரப் பள்ளி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அரசாங்காத்தின் கோரிக்கையாகும். ஆகவே, உதயசங்கர்’ ஆசிரியர்கள் வீட்டுக்குச் சென்று பிட்டத்தைக் கழுவி மாணவர்களைப் பள்ளிக்கு அழைத்து வர வேண்டும் என சில சோம்பேறி மாணவர்கள் நினைப்பதாகக் கூறும் குற்றசாட்டு அடிப்படையற்றவை’ அவர் கிண்டலடிக்க நினைப்பது தமிழ்ப்பள்ளிகளை அல்ல; கல்வி அமைச்சின் திட்டத்தை என நான் புரிந்து கொள்கிறேன்.

ஆனால், அதே சமயம் ஆசிரியர்கள் வந்து தங்கள் பிள்ளைகளை அழைத்துச் செல்வார்கள் என எதிர்ப்பார்க்கும் சூழல் வந்தால் அதனை நிச்சயம் கண்டிக்கவே வேண்டும். அத்தகைய நிலைமை இன்னும் உருவாகவில்லை. அதனைப் பழக்கப்படுத்திக் கொள்ளவும் கூடாது. தன் சமூகத்தின் மீது ஓர் ஆசிரியரோ பள்ளியோ அக்கறைக்கொள்வது கண்டிப்பு கொள்வதும் வரவேற்க வேண்டிய விசயமே தவிர அதனைத் தனக்கு சாதகமாகவும் பெற்றோர்கள் பயன்படுத்திக்கொள்ளக்கூடாது. முன்பெல்லாம் பிள்ளைகளுக்குக் காய்ச்சல் வந்தாலும் பள்ளிக்கு அனுப்புவார்கள். பள்ளிக்கூடம் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பார்த்துக் கொள்ளும் என்கிற நம்பிக்கை. (2008ஆம் ஆண்டில் எனக்கு இந்த அனுபவம் நேர்ந்தது: பெற்றோரின் பெயர் திரு. ராஜன்). பள்ளிக்கூடமும் ஆசிரியர்களும் பலவகையான பிரச்சனைகளைச் சந்தித்தும் தான் வாழும் சமூகத்தின் குழந்தைகள் மீது அக்கறைக்கொள்வதை வேடிக்கையான ஒன்றாகக் கருதக்கூடாது. இன்று என் பள்ளியில், ஒரு பையன் அவன் வீட்டு சீன அண்டை அயலாரின் பையனைக் கல்லால் அடித்ததற்காக அவனுடைய பெற்றோர் பள்ளியில் வந்து புகார் செய்கிறார். இதன் தர்மம் என்ன? அவன் அத்தவற்றை செய்யப் பள்ளிக்கூடமும் ஒரு காரணம் என அப்பெற்றோர் முறையிடுகிறார். அப்படியென்றால் ஒரு பையனின் உருவாக்கத்தில் பெற்றோர்களின் பங்கென்ன?

பள்ளிக்கூடம் என்பது ஒரு சமூகத்தின் இணைப்பு. பலவகையான சூழலிலிருந்து, குடும்ப நிலையிலிருந்து பலத்தரப்பட்ட மாணவர்கள் வர நேரிடும். அத்ததைய சூழலில் எந்த வேறுபாடுமின்றி அவனுக்குக் கற்பிப்பதே பள்ளிக்கூடத்தின் கடமை. சமூகத்துடன் எப்படி ஒத்திசைவது என்பதையும் அவன் அங்கிருந்து கற்றுக் கொள்கிறான். ஆனால், எப்படியும் ஒரு மாணவனின் உருவாக்கத்தில் ஆசிரியர்களோடு பெற்றோர்களும் ஒன்றிணைந்தாலே நாம் எதிர்ப்பார்க்கும் ஒரு தலைமுறையை உருவாக்க முடியும். ஆகவே, ஆசிரியர்கள் வீட்டிற்கு வந்து மாணவர்களை எழுப்பிப் பள்ளிக்கு அழைத்துச் செல்ல நேர்ந்தால் அது தார்மீகமான அக்கறையையும் அன்பையும் காட்டுகிறதே தவிர அது சோம்பேறித்தனத்தை ஊக்குவிக்கும் காரியமல்ல. கல்வி அமைச்சின் திட்டமானதும் இதனையே முன்னுறுத்துகின்றது. ஆகவே, இதனை முன்னெடுக்கும் தமிழ்ப்பள்ளிகள் கல்வி அமைச்சின் கொள்கையைப் பின்பற்றுகிறது என்றே அர்த்தம்.

சான்று: http://www.slideshare.net/osowlay/pelaksanaan-programgurupenyayang

 

3. தமிழ்ப்பள்ளியே நன் தேர்வு எனும் வாசகம் இனப்பற்றா அல்லது இனவெறியா?

 

‘தமிழ்ப்பள்ளியே நம் தேர்வு’ எனும் முழக்கம் சமீபமாகத் தொடர்ந்து நம் சமூகத்தில் ஒலித்துக் கொண்டிருப்பதை நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். முதலில் இதுபோன்ற ஒரு நிலை/ பிரச்சாரம் செய்யும் நிலை தமிழ்ப்பள்ளிகளுக்கு வந்திருக்கக்கூடாது. ஆனால், தாய்மொழி கற்பதில் தொடர்ந்து எல்லாம் நாடுகளிலும் பிரச்சனைகள் உதிர்த்துக் கொண்டேதான் இருக்கின்றன.

ஆனால், தமிழ்ப்பள்ளியே நம் தேர்வு எனும் முழக்கம் உருவான பிறகு ஊடகங்களும் பத்திரிகைகளும் இத்திட்டத்துடன் இணைந்து தமிழ்ப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சர்வதேச அளவில் பங்குபெற்று வெற்றிப்பெறும் செய்திகளைப் பரப்பரப்பாகப் பகிர்ந்து கொண்டிருந்தன. இது ஒருவகையில் ஊடகங்களின் கொண்டாட்டமாகவும் இருந்தது என்றே சொல்லலாம்.

 

சான்று: http://www.thaimoli.com/news-detail.php?nwsId=9921

 

தமிழ்ப்பள்ளியில் படித்த மாணவர்கள் அவர்களின் உருவாக்கத்திற்கு அப்பள்ளியே காரணம் என நேரடி வாக்குமூலம் கொடுத்திருப்பதையும் உதயசங்கரின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். அவர் குறிப்பிட்டிருப்பது பின்வருமாறு:

//Realiti ini membuktikan kempen “Wajib Hantar Anak Ke SJKT” yang berunsur rasis dan penerus agenda “pecah dan perintah” penjajah British tidak berjaya mempengaruhi orang ramai. – See more at: http://www.themalaysianinsider.com/opinion/uthaya-sankar/article/persoalan-kempen-sjkt-pilihan-kita#sthash.TpC0zeDl.dpuf //

 

சான்று: களம் இதழ், பிப்ரவரி 2015, இரா.ரிஷிகேஸ்( நேர்காணல்) (சான்று: http://www.thaimoli.com/news-detail.php?nwsId=3049)

01_CTY_3049 (1)

ஆகவே, தமிழ்ப்பள்ளியே நம் தேர்வு என்கிற திட்டம் அரசியல் நோக்கமுடையது என அவர் முழுவதுமாக ஒதுக்குவது ஆதாரமற்றது. அது தொடங்கப்பட்டதன் பின்னணியில் என்ன அரசியல் இருந்திருந்தாலும், அதனைச் சமூகம் தத்தெடுத்துக் கொண்டு தமிழ்ப்பள்ளியின் மீதும் தாய்மொழிக் கல்வியின் மீதும் தன் முழுமையான ஈடுபாட்டையும் காட்டத் துவங்கியது உண்மையே.

 

பின்வரும் ஆதாரங்கள், உதயசங்கர் குற்றம்சாட்டுவதைப் போல தமிழ்ப்பள்ளிகளில் படித்த மாணவர்களின்/ படித்துக் கொண்டிருக்கும்போதே அடைந்த சாதனைகள்:

 

  • கூலிம் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த செல்வி சுஷ்மிதா த/பெ விஜியன், செல்வி பிரவினா த/பெ இராமகிருஷ்ணன், ரஷிகேஷ் த/பெ இராமகிருஷ்ணன் ஆகிய மூவரும் லண்டனில் நடைபெற்ற அனைத்துலக பிரிட்டிஷ் அறிவியல் புத்தாக்க கண்காட்சியில் மின்சார சேமிப்பு இயந்திரம் என்ற புது அறிவியல் கண்டுபிடிப்பில் வெற்றிப் பெற்று இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர்.
  • கூலிம் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த செல்வன் ரஷிகாஷ் த/பெ இராமகிருஷ்ணன் 2013-ஆம் ஆண்டு வடிவமைப்புக் கண்டுப்பிடிப்புகள் (REKACIPTA) போட்டியில் கலந்து வெற்றிப் பெற்று அனைத்துலக போட்டிக்காக ஹாங்கோங் (Hong Kong)(2013) மற்றும் லண்டன் (LONDON) (2014) சென்று வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
  • மேலும், கூலிம் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த செல்வன் ஶ்ரீஅர்வேஷ் த/பெ இராமகிருஷ்ணன் அவர்கள், தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக வடிவமைப்புக் கண்டுப்பிடிப்புகள் (REKACIPTA) போட்டியில் சிறந்து விளங்கி அனைத்துலக ரீதியில் அமெரிக்கா(2012), புருனாய்(2014) மற்றும் இந்தியா(2014) போன்ற நாடுகளுக்கு மலேசியாவைப் பிரதிநிதித்துச் சென்றுள்ளார்.
  • கூலிம் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த செல்வன் பூபதி த/பெ வேலாயுதம் பூப்பந்து போட்டியில் சிறந்து விளங்கி அனைத்துலக ரீதியில் வருகின்ற நவம்பர் 2014-இல் சீனாவிற்குச் செல்லவிருகின்றார்.
  • வலம்புரோசா தமிழ்ப்பள்ளியின் மாணவி வைஸ்ணவி த/பெ அருள்நாதன் உலகமே வியக்கும் வண்ணம் “GOOGLE DOODLE” போட்டியில் பங்கெடுத்து வெற்றிப் பெற்றார். இவ்வெற்றி மலேசியத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தையும் ஆக்கத்தையும் தந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
  • பினாங்கு ராமகிருஷ்ணா தமிழ்ப்பள்ளியின் மாணவர்கள் நாடளாவிய நிலையில் நடத்தப்பட்ட இளம் ஆய்வாளர்கள் விழாவில் வெற்றிப் பெற்று அனைத்துலக ரீதியில் நடைபெற்ற சென்றுள்ளனர் என்பது பெருமைப்படக்கூடிய சாதனையாகும்.
  • 2014-இல் புதுடில்லியில் நடைபெற்ற காமன்வெல்த் நாடுகளுக்கிடையிலான சதுரங்கப் போட்டியில் சிரம்பான், கான்வெண்ட் தமிழ்ப்பள்ளி மாணவி செல்வி நித்தியலெட்சுமி சிவநேசன் இரண்டாவது நிலையில் வெற்றிப் பெற்றுள்ளார்.
  • கடந்த ஆகஸ்டு மாதம் ரவூப் தமிழ்ப்பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் களிமண்ணால் மிகப்பெரியச் தேசியக் கொடி செய்து மலேசிய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர்.
  • மலாக்கா, புக்கிட் லிந்தாங் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த செல்வி அஞ்சலி சிவராமன், செல்வி ஷோபனா சிவராமன், செல்வன் நிரோஷன் கெலேமன் இவ்வருடம் (2014) சென்னையில் நடைபெற்ற அனைத்துலக சிலம்பப் போட்டியில் தங்கம் வென்று நாட்டுக்கு மட்டுமல்லாது தமிழ்ப்பள்ளிகளுக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
  • 2014-இல் உயர்தரப் பள்ளிகள் எனும் சிறப்புப் பெற்று ஜோகூர் ரேம் தமிழ்ப்பள்ளி, பாகங் ரிங்லெட் தமிழ்ப்பள்ளியும் மற்றும் குழுவகைப் பள்ளியாக பேராக் கிரிக் தமிழ்ப்பள்ளி சாதனை படைத்துள்ளனர்.

 

சான்று: http://www.semparuthi.com/?p=115692

 

ஆகவே, உதயசங்கர் முன்வைக்கும் தமிழ்ப்பள்ளிகள் இதுநாள் வரையிலும் தேர்வில் காப்பியடித்தே மாணவர்களைப் பழக்கப்படுத்தியுள்ளது என்கிற குற்றசாட்டு அர்த்தமற்றது என நிருபுணமாகிறது. தேர்வு என்பதே மாணவர்களைச் சோர்வாக்கக்கூடியதுதான். இன்றைய நிலையில் தேர்வு என்பது மனனம் செய்ததைக் கக்கும் ஓர் அங்கமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. தேர்வு உருவாக்கும் விளைவுகளில் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மட்டும் பாதிக்கப்படவில்லை. மலேசியாவில் இருக்கும் அனைத்துப் பள்ளிகளும் தேர்வு வழிமுறையின் மூலம் பல பாதிப்புகளையும் விளைவுகளையும் சந்தித்து வருகின்றன. இதனை ஒரு தனிப்பட்ட விவாதமாக ஆக்கலாம்.

‘தமிழ்ப்பள்ளியே என் தேர்வு’ எனும் திட்டத்தின் மீது எனக்கும் தனிப்பட்ட விமர்சனம் உண்டு. ஆனாலும், அது அரசியல்வாதிகளின் கையிலிருந்து மக்களிடம் சென்ற பிறகு உருவாக்கிய உணர்வலைகள் கவனிக்கத்தக்கது என்றே குறிப்பிட வேண்டும். தமிழ்ப்பள்ளியே எங்களின் தேர்வு என இன்று சமூகம் இத்தனை அக்கறையோடு முழங்குவதற்கு தாய்மொழிக் கற்றலுக்கான முக்கியத்துவம் அறிந்தவர்கள் உணரக்கூடும்.

 

சான்று: https://www.youtube.com/watch?v=16KjY_oP3_I

 

ஒரு சிறுபாண்மை இனத்தவரின் பண்பாட்டையும், கலை கலாச்சாரங்களையும், மொழியையும் பாதுகாக்கும் / கற்பிக்கும் இடமாக இருப்பதுதான் தாய்மொழிப் பள்ளிகள். மலேசியப் பண்முக நாடு. பல்லின மக்கள் வாழும் நாட்டின் தேசியக் கொள்கையில் அவரவர் தன் தாய்மொழியைத் தன் தாய்மொழிப் பள்ளியில் கற்றுக் கொள்வதற்கு முழு சுதந்திரமும் அளிக்கப்பட்டுள்ளது. அதனை மட்டுப்படுத்த நினைக்கும் யாவரும் ஜனநாயக நாட்டில் இருக்கத் தகுதியவற்றவர்கள்.

உதயசங்கர் முன்வைக்கும் சில நியாயமான கேள்விகள்: அதனையும் நாம் கருத்தில் கொண்டு விவாதிக்க வேண்டும்.

  1. தமிழ்ப்பள்ளிக்கு அனுப்புங்கள் என முழக்கமிடும் எத்தனை அரசியல்வாதிகள் தங்கள் பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளியில் சேர்த்துள்ளனர்?
  2. தமிழ்மொழிக்கான ஈடான கவனத்தை மலாய்மொழிப் பாடத்திற்கும் தமிழ்ப்பள்ளிகள் செலுத்த வேண்டும்.

 

  • கே.பாலமுருகன்

எனது 2015ஆம் ஆண்டு ஒரு மீள்பார்வை – பாகம் 1

வருடம்தோறும் புத்தாண்டு கொண்டாட்ட உணர்வெல்லாம் இருந்ததில்லை. ஆனால், நம்மைத் தாண்டி ஓராண்டு நகர்ந்து போகையில் அவ்வருடத்தில் என்னவெல்லாம் நடந்தது, அவ்வருடத்தில் யாரையெல்லாம் சந்தித்தோம், கிடைத்த புதிய நட்பு, பார்த்தப் படங்கள் என அசைப்போடத் தோன்றும். அவ்வருடத்தை மீட்டுரணாமல் அடுத்த ஆண்டை நோக்கி பயணிக்க இலகுவாக இருக்காது.

ஒரு பக்கத்தைத் திருப்புவதைப் போல சட்டென 2015ஆம் ஆண்டு முடிந்துவிட்டது. இத்தனை வேகமாக நகர்ந்த வருடம் என் வாழ்வில் இதற்கு முன் இருந்ததேயில்லை. எதை முறையாகத் திட்டமிட்டேன் என நினைவில் இல்லை. ஆனால், திட்டமிடாமல் நடந்ததுதான் ஏராளம் இருக்கின்றன. எதிர்ப்பாராத பயணங்கள் மட்டுமே ஞாபகத்தில் நிலைக்கின்றன.

2015ஆம் ஆண்டில் வெளிவந்த என் நூல்கள் ஒரு பார்வை:

  1. மலேசியத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான ‘அற்புதத் தீவும் அதிசயக் காலணியும்

 

11802108_10207467632067589_1282655453_n

டிசம்பரில் எழுதி முடித்து ஜனவரியில் வெளிவந்த இந்தக் கட்டுரை நூல் நல்ல வரவேற்பைப் பெற்று இவ்வாண்டு நவம்பர்வரை தொடர்ந்து விற்கப்பட்டன. ஆண்டு முழுவதும் விற்கப்பட்ட நூல் இது. 6000 பிரதிகள் அச்சிட்டு விற்பனையாளர்களின் மூலம் பல மாநிலங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டது. பல தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களும் பெற்றோர்களும் தனிப்பட்ட முறையில் இந்த நூல் மாணவர்களுக்கு உதவியாகவும் வழிகாட்டியாகவும் இருந்ததாகக் குறிப்பிட்டார்கள். எத்தனையோ மெதுப்பயில் மாணவர்கள் இந்த நூலின் வழி பயனடைந்திருப்பது அவர்களுக்கும் பள்ளிக்கும் தெரியும். ஆகையால், எனக்கு அதன் மூலம் மகிழ்ச்சியே.

 

  1. மோகினி மலையின் இரகசியமும் பாழடைந்த மாளிகையும்- சிறுவர் நாவல் பாகம் இரண்டு

522041_483880788426159_5234515917053158740_n

மர்மக் குகையும் ஓநாய் மனிதர்களும் எனும் சிறுவர் மர்ம நாவலின் இரண்டாம் பாகமாக இந்த நாவல் வெளியீடு கண்டது. 10ஆம் திகதி மே மாதத்தில் இந்தச் சிறுவர் நாவலைக் கோலாலம்பூர் சோமா அரங்கத்தில் செம்பருத்தியின் ஏற்பாட்டில் வெளியீடு செய்தேன். வழக்கறிஞர் திரு.பசுபதி அவர்கள் தலைமை தாங்கி நூலை வெளியீடு செய்து வைத்தார். இந்த நாவலையொட்டி ஒரு வாசகர் கடிதம் எழுதும் போட்டியையும் அறிவித்திருந்தேன். 10 கடிதங்கள் மட்டுமே வந்திருந்தன. ரவாங் தமிழ்ப்பள்ளி மாணவியான சர்மிதாவின் கடிதமே என்னைக் கவர்ந்ததாக அமைந்திருந்தது. அம்மாணவி சிறுவர் நாவலை 100 தடவைக்கு மேல் வாசித்ததாக அவளின் பெற்றோர் சொல்லும்போது ஆச்சர்யமாக இருந்தது. இந்த ஆண்டில் சிறுவர் நாவலின் மூலம் பல மாணவர்களின் மனத்தைக் கவர்ந்ததே எனக்கு பெரும் மகிழ்ச்சி. இன்னும் 10 ஆண்டுகளுக்குப் பிறகு இலக்கியத்தை விரும்பும் வாசிக்க ஆர்வப்படும் ஒரு தலைமுறையை உருவாக்க முடியும் என நம்பிக்கையை இவ்வருடம் எனக்குக் கொடுத்தது.

 

  1. ஆப்பே கடையில் நடந்த 236ஆவது மேசை உரையாடல்

 

NEW NOVEL BOOK COVER 01-page-001cc

மலேசியாவில் வெளிவந்த தமிழ் நாவல்களில் மிக நீளமான தலைப்பைக் கொண்ட நாவல் இதுதான் என எழுத்தாளர் அ.பாண்டியன் குறிப்பிட்டார். வெகுநாட்கள் என் மனத்தில் ஊறிக்கிடந்த ஒரு கதைக்கரு இந்த நாவல். புறம்போக்குவாசிகளாக அலைந்து திரிந்த மலேசிய இந்திய விளிம்புநிலை வாழ்க்கையை ஓரளவிற்காவது பதிவு செய்ததில் திருப்தி. இதனையே விரித்து ஒரு முழு நாவலாக எழுதத் திட்டமுண்டு. அதற்கான ஒரு பயிற்சியாக இந்தக் குறுநாவலைக் கருதுகிறேன். இந்தக் குறுநாவலுக்கான முகப்பு ஓவியத்தைப் புகைப்படமெடுக்க நானும் நண்பர் ஹென்றியும் சிமிலிங் பழைய சீனப் பட்டணத்திற்குச் சென்றது மறக்க முடியாத அனுபவமாகும்.

மேற்கண்ட மூன்று நூல்களை மட்டுமே 2015ஆம் ஆண்டில் கொண்டு வர முடிந்தது. ஆப்பே நாவல் சிறுவர்களுக்குரியது அல்ல. இருப்பினும் இதுவரை 600 பிரதிகள் விற்க முடிந்ததே மகிழ்ச்சி. பெரும்பாலும் நம் சமூகத்தினர் வாசிப்பது அரிதாகும். தொலைக்காட்சி தொடர்கள் வந்த பிறகு வாசிப்பு முற்றிலும் அந்நியமாகிவிட்ட சூழலில் நூல்கள் வாங்கப்படுவது அரிதான செயலாகிவிட்டது.

2015ஆம் ஆண்டில் நான் வாசித்த நூல்களில் என்னைக் கவர்ந்தவை:

  1. அ.முத்துலிங்கத்தின் சிறுகதை தொகுதி ‘பிள்ளைக் கடத்தல்காரன்’

 

அங்கதமான தொனியில் ஆழமான விசயத்தைப் பேசக்கூடியவர் அ.முத்துலிங்கம். கனடா வாழ்வின் அபத்தங்களைத் தன் கட்டுரைகள், கதைகளின் வழி நிறைய பதிவு செய்திருக்கிறார். எந்த அலட்டலுமில்லாத இயல்பாக ஒலிக்கும் அவருடைய நகைச்சுவை உணர்வு சட்டென நம்மை ஈர்த்துவிடும். ஆனாலும், அவையாவும் மேலோட்டமான பார்வைகள் கிடையாது. எந்தச் சிரமும் இல்லாமல் வாழ்க்கைக்குள் நம்மை இழுத்துச் செல்பவர் அ.முத்துலிங்கம்.

 

  1. உலகத் திரைப்பட மேதை அகிரா குரோசாவின் சுயசரிதை

 

கல்லூரிப் படிக்கும் காலத்திலேயே எனக்கு அகிரா குரோசாவாவின் படங்கள் அறிமுகமாயின. 1950களிலிலேயே ரஷமோன் என்கிற ஜப்பானியப் படத்தின் மூலம் உலகத் திரைக்கதை சூழலில் பெரும் பாதிப்பையும் புதிய அலையையும் உருவாக்கியவர். அவருடைய இளமை பருவம் தொடங்கி வாழ்க்கை அனுபவம், சினிமா அனுபவம் எனத் தமிழில் மொழிப்பெயர்க்கப்பட்ட இந்த நூல் படிப்பதற்குச் சிறப்பாக இருந்தது. ஒருவகையில் பயணமே அகிரா குரோசாவின் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை உருவாக்கியிருக்கின்றது.

2015ஆம் ஆண்டில் நான் மேற்கொண்ட தமிழ்ப்பள்ளி பயணம்

  1. தமிழ்மொழி சிறுகதை/ தமிழ்மொழித் தேர்வு வழிகாட்டிப் பட்டறைகள்

கடந்தாண்டின் மலேசியா முழுவதும் பல தமிழ்ப்பள்ளிகளுக்குச் சிறுகதை பட்டறை நடத்தவும் தமிழ்மொழி வழிகாட்டிப் பட்டறை நடத்தவும் சென்றுள்ளேன். இதுபோன்ற நிகழ்ச்சிகள் நானே வழிந்து கேட்டுச் செல்வதல்ல. எல்லாமே அப்பள்ளி நிர்வாகத்தின் அழைப்பின் பேரில் செல்வதே ஆகும். நான்கு பட்டறைகள் மட்டும் சுடர் பதிப்பகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டதாகும். இவ்வாண்டு நான் சென்ற தமிழ்ப்பள்ளிகளின் வட்டாரம்:

????????????????????????????????????

  1. தெலுக் இந்தான் மாவட்டத் தமிழ்ப்பள்ளிகள்
  2. தைப்பிங் 16 தமிழ்ப்பள்ளிகள், பேராக்
  3. காராக், பகாங்
  4. பெந்தோங், பகாங்
  5. முவார் மாவட்டத் தமிழ்ப்பள்ளிகள், ஜொகூர்
  6. தாப்பா மாவட்ட 6 தமிழ்ப்பள்ளிகள், பேராக்
  7. சிலிம் ரீவர் மாவட்டச் சிறிய தமிழ்ப்பள்ளிகள், பேராக்
  8. ஈப்போ 6 தமிழ்ப்பள்ளிகள், பேராக்
  9. பினாங்கு, செபெராங் ப்ராய், நிபோங் தெபால் 14 தமிழ்ப்பள்ளிகள், பினாங்கு
  10. யூ.எஸ்.ஜே, ஷா அலாம், 12 தமிழ்ப்பள்ளிகள், சிலாங்கூர்
  11. காப்பார் தமிழ்ப்பள்ளிகள், சிலாங்கூர்
  12. வாட்சன், வளம்பூரோசா, பத்து அம்பாட் மேலும் கிள்ளான் தமிழ்ப்பள்ளிகள், சிலாங்கூர்
  13. லங்காவி, கெடா
  14. கூலிம் தமிழ்ப்பள்ளிகள், கெடா
  15. இண்ட்ரா மாக்கோத்தா குவாந்தான் தமிழ்ப்பள்ளிகள், பகாங்
  16. கேமரன் தமிழ்ப்பள்ளிகள், பகாங்
  17. சுங்கை தமிழ்ப்பள்ளிகள், பேராக்

????????????????????????????????????

????????????????????????????????????

மேலும் பல இடங்கள், என 150க்கும் மேற்பட்ட தமிழ்ப்பள்ளிகளுக்குப் பயணம் செய்துவிட்டேன். பலத்தரப்பட்ட மாணவர்கள், பலவகையான அனுபவங்கள் நிறைந்த வருடமாக இப்பயணங்கள் மூலம் கிடைக்கப்பெற்றது.

 

  1. சுடர் பயிற்சிப் பட்டறைகள்

சுடர் மூலம் நடைபெற்ற நான்கு பட்டறைகளுக்குத் தமிழ்ப்பள்ளிகளின் ஆதரவு மிகச் சிறப்பாக இருந்தது.

சுடர் பட்டறை 1: யூ.எஸ்.ஜே துன் சம்பந்தன் பள்ளியின் வளாகத்தில் நடைபெற்றது. கிள்ளான், ஷா அலாம், சுபாங் ஜெயா என 350 மாணவர்கள் 14 தமிழ்ப்பள்ளிகளிலிருந்து வந்து கலந்து கொண்டனர்.

 

சுடர் பட்டறை 2: கிள்ளான் பத்து அம்பாட் தமிழ்ப்பள்ளியில் நடைபெற்றது. சுமார் 150 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

சுடர் பட்டறை 3: கிள்ளான் வாட்சன் தமிழ்ப்பள்ளியில் நடைபெற்றது. கோலாலம்பூர், கிள்ளான் ஆகிய பகுதிகளிலிருந்து 300 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

சுடர் பட்டறை 4: பினாங்கு, நிபோங் தெபால் அறிவியல் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. பினாங்கு, நிபோங் தெபால், செபெராங் ப்ராய் போன்ற பகுதியிலிருந்து 14 தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

  1. சுடர் இலவசப் பயிற்சி நூல்

 

கடந்தாண்டு சுடர் இலவசப் பயிற்சி நூல் 3000 பிரதிகள் நாடு முழுவதிலும் உள்ள 120க்கும் மேற்பட்ட சிறிய பள்ளிகளுக்கு இலவசமாக அனுப்பப்பட்டது. பலரும் அழைப்பேசியின் வாயிலாக அப்பயிற்சி நூல் பயனளித்ததாக அறிவித்தனர். நாட்டின் ஒதுக்குப்புறங்களில் இருக்கும் சிறிய பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் தேவை குறித்து இத்திட்டத்தை மேற்கொண்டேன்.

2015ஆம் ஆண்டில் மேற்கொண்ட இலக்கியப் பயணங்கள்

  1. சிங்கை பயணம்

 

இவ்வாண்டு ஜூன் மாதத்தில் நானும் தம்பி தினகரனும் என்னுடைய இரண்டு நாவல்களையும் அறிமுகம் செய்வதற்கு சிங்கை சென்றிருந்தோம். சிங்கப்பூர் வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில் அந்த நாவல் அறிமுக நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது. தீவிரமாக வாசிப்பவர்கள் 25க்குப் பேர் மேல் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

 

  1. மலேசிய ஆசிரியர் கழகங்களில் சிறுகதை பட்டறை

 

மலேசியாவின் இரண்டு ஆசிரியர் கழகங்களில் சிறுகதை தொடர்பான உரை ஆற்றுவதற்காகச் சென்றிருந்தேன். அது நிறைவான அனுபவமாக இருந்தது. ஈப்போ ஆசிரியர் பயிற்சிக் கழகத்தின் ஏற்பாட்டில் நான்கு மணி நேரம் சிறுகதை பட்டறையை வழிநடத்தினேன். 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் அப்பட்டறையில் கலந்து கொண்டனர். ஐயா குணசீலன் அவர்கள் ஏற்பாட்டில் அச்சிறுகதை பட்டறை சிறப்பாக நடந்தது. அடுத்து, சிரம்பான் ராஜா மலேவார் ஆசிரியர் கழகத்தில் மாணவர்களின் படைப்புகளை உள்ளடக்கிய நூல் வெளியீடு கண்டது. அவர்களுக்கு படைப்பு ஒருங்கிணைப்பாளராக இருந்து செயலாற்றினேன். அதுவும் சிறந்த அனுபவமாக இருந்தது.

 

  1. சுங்கைப்பட்டாணியில் குறுநாவல்கள் தொகுப்பு வெளியீடு

 

27ஆம் திகதி நவம்பர் மாதத்தில் கெடா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஆதரவில் எனது ஆப்பே கடையில் நடந்த 236ஆவது மேசை உரையாடல் குறுநாவல் தொகுப்பு ஐயா திரு.பெ.தமிழ்ச்செல்வன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. நண்பர்கள், வாசகர்கள், எழுத்தாளர்கள் எனப் பலர் திரண்டனர்.

அலசல் தொடரும்

கே.பாலமுருகன்

 

கூமோன் – நேரமும் அறிவும் ஒரு விவாதம்

1958ஆம் ஆண்டில் ஜப்பான் ஓசாக்காவில் கூமோன் வகுப்பு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது. ‘தோரு கூமோன்’ தன் மூத்த மகனின் கணிதப் பிரச்சனையைத் தீர்க்கக் கண்டுப்பிடிக்கப்பட்ட இந்த கூமோன் முறை பின்னாளில் சமூகக் கல்வியியலில் தனித்த இடம் பிடித்து உலகம் முழுவதும் 48 நாடுகளில் பரவியது. இன்று கோடிக் கணக்கில் கூமோன் நிலையங்களில் மாணவர்கள் பயின்று வருகிறார்கள்.

மலேசியாவில் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களும் மேல்தட்டு மனிதர்களும் கூமோன் நிலையங்களின் வாசலில் நின்று கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது கேட்டாலும் கணித அறிவிற்குக் கூமோனே சிறந்தது என எல்லோரும் சாதாரணமாக நம்புவதை உணர முடிகிறது. நாம் வாழும் காலத்தின் முடிவு செய்யப்பட்டஅறிவிற்கு அடிப்பணிவதைப் போல மக்கள் கூமோனை எந்தக் கேள்விகளுமின்றி முழுவதுமாக நம்புகிறார்கள். அறிவு சார்ந்த தர்க்கங்கள் சமூகத்தில் எழுவது மிகக் குறைவே. எல்லாம்விதமான பிரச்சனைகளையும் உணர்வு தளத்தில் வைத்துப் பேசும் சூழலில் அறிவுக்கான போர் நடைபெறுவதே இல்லை. இதுபோன்ற சமூகம் மிக இயல்பாக சுலபமாகப் புகழ்ச்சியின் கொண்டாட்டத்தின் உச்சத்தில் இருக்கும் ஒன்றிடம் சரணடைந்துவிடுவது இயல்பானதே. கூமோன் தெற்கிழக்காசியா நாடுகளில் புகுந்து தன் புகழிடத்தைத் தேடிக் கொண்டதும் இப்படித்தான் எனக் கருதுகிறேன்.

the_ultimate_kumon_review

மூன்று ஆண்டுகள் அமெரிக்காவில் கூமோன் பயிற்றுனராகப் பணியாற்றி பின்னர் அதிலிருந்து முற்றிலுமாக விலகிய காரலாய்ன் முக்கிசா அவர்கள் எழுதிய ‘The ultimate Kumon Review’ ஒட்டுமொத்தமாகக் கூமோன் கல்வி முறையைத் தர்க்கம் செய்து விமர்சிக்கும் நூலாகும். கூமோனின் நல்லது கெட்டது என்ற அடிப்படையில் அதனைத் தேர்வு செய்யலாமா வேண்டாமா எனத் தீர்மாணிக்கப் பெற்றோர்களுக்கு ஆலோசனைகளும் வழிகாட்டுதலும் வழங்குகிறார். அப்புத்தகம் பல நாடுகளில் கவனம் பெற்றவையாகும். காரலாய்ன் அவர்கள் தன் மகனைக் கூமோனில் மூன்று வருடம் படிக்க வைத்த அனுபவத்திலிருந்தும் மூன்று வருடம் கூமோன் பயிற்றுனராக இருந்த அனுபவத்திலும் இந்த நூலை எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.

கூமோன் நம் குழுந்தைகளை என்ன செய்கிறது?

கூமோன் பயிற்சியை மேற்கொள்ளும் குழந்தைகளுக்குக் குறிப்பிட்ட நேரம் வழங்கப்படுகிறது. அந்த நேரத்திற்குள்ளேயே அவர்கள் கொடுக்கப்பட்டிருக்கும் அக்கணக்குகளைச் செய்து முடித்தாக வேண்டும். நம் தேர்வு முறை இப்படிப்பட்ட மாணவர்களை உருவாக்க முயல்வதை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஆறாம் ஆண்டு தேர்வில் 40 கணக்குகளைக் கொடுக்கப்பட்ட சொற்பமான நேரத்தில் செய்து முடித்தாக வேண்டும் என்பது கட்டளை ஆகும். ஆனால், பெரும்பான்மையான மாணவர்களால் அந்த ஒரு மணி நேரத்திற்குள் 40 கணக்குகளை முடிக்கச் சிரமங்களை எதிர்நோக்குவது எல்லாம் பள்ளிகளிலும் இருக்கும் ஒரு பொதுவான சிக்கலாகும். ஆக, இயல்பாகவே தேர்வு என்பது நேரம் குறித்த, நேரத்தைக் கையாளும் திறன் குறித்த தேவையை உருவாக்குகிறது.

கெட்டிக்கார மாணவர்களாக இருப்பினும் குறித்த நேரத்திற்குள் தேர்வை எழுதி முடிக்கவில்லை என்றால் புள்ளிகள் சரிய வாய்ப்புள்ளது. ஒன்றாம் ஆண்டு முதலே நேரம் குறித்த ஓர் அச்சம் இங்கிருந்து ஆரம்பமாகிறது. எனது பள்ளிப் பருவத்தில் தேர்வு மண்டபத்தின் சுவரில் தொங்கும் கடிகாரமே எனது முதல் எதிரி. பரீட்சை எழுதி முடிக்கும்வரை கடிகாரத்தின் மீது ஒரு கூடுதல் கவனம் இருக்கும். கைகளின் நடுக்கம் குறையாமலேயே தேர்வை எழுதி முடித்திருப்பேன். இளங்கலைப்பட்டப்படிப்பு வரை அது தொடரவே செய்கின்றன. எழுதி முடிக்கும்வரை நேரத்தோடு ஒரு பந்தயமே நடந்து விடுகிறது. கல்வி நேரத்தோடு பிணைக்கப்பட்டது எப்பொழுது நடந்திருக்கும்? கால சுழற்சியோடு ஒரு மிகப் பெரிய மனப்போராட்டமே நடத்திவிட்டுத்தான் ஒவ்வொரு மாணவர்களும் தேர்வு மண்டபத்தைவிட்டு வெளியேறுகிறார்கள். அறிவிலிருந்து தகவலை உருவி தாளில் கொட்டித் தீர்ப்பதற்கு நேரம் வழங்கப்படுகிறது. அந்நேரத்தின் ஓட்டத்தை/ நகர்ச்சியைக் கண்டு மனம் இயல்பாகவே பதற்றமும் நிலைதடுமாற்றமும் கொள்கிறது.

எட்டு வயது நிரம்பிய எனது உறவினர் மகள் அன்று கூமோன் பயிற்சிகளைச் செய்து கொண்டிருந்ததைப் பார்த்தேன். இடையில் அவள் என்னிடம் ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை. நான் கேட்டக் கேள்விக்கும் அவளிடம் பதில் இல்லை. சைகையில் காத்திருக்கும்படி சொல்லிவிட்டு எதையோ பதற்றமாகச் செய்து கொண்டிருந்தாள். அவளுடைய வலது கைக்குப் பக்கத்தில் கைக்கடிகாரம் இருந்தது. ஒரு நிமிடத்திற்கு ஒரு முறை பதற்றமான கண்களுடன் அக்கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டாள். இலேசாக வியர்த்த நெற்றி, கைகளில் அவசரம் ஏற்படுத்திய நடுக்கம், அன்று அவள் எனக்கு எட்டு வயது சிறுமியாகத் தெரியவில்லை. நேரம் குறித்தான கட்டுப்பாடுகள் குழந்தைகளின் மனத்திற்குள் ஒரு கலவரத்தை ஏற்படுத்துவதை யாராவது மறுக்க முடியுமா?

ஒரு மணி நேரப் பாடத்திற்குள் அன்றைய பாட நோக்கத்தை அடைய ஓர் ஆசிரியர் உருவாக்கும் நேரப் பந்தயமும் இங்குக் கவனத்தில் கொண்டாக வேண்டும். எல்லாவற்றுக்கும் ஒரு நேர கடப்பாடு இருப்பதைத் தவிர்க்க முடியாதுதான். குறிப்பாக ஓர் ஆண்டில் ஒரு மாணவன் அடைய வேண்டிய திறன்கள் முன்பே வகுக்கப்படுவதை மேற்கோளாகக் காட்டலாம். ஆனால், அது ஆசிரியரால் தீர்மானிக்கப்படுபவை. பந்தயமாக இல்லாவிட்டாலும் திட்டத்திற்கேற்ப நகர்த்த முடிந்தவை. பரீட்சை என்பது அப்படியல்ல.

அறிவை நோக்கி குழந்தைகளைத் துரத்தும் சமூகம்

மேற்கண்ட சூழலில் கூமோன் என்பதை ஒரு நிறைவான வழிமுறை என என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. அரசு தேர்வின் மூலம் உருவாக்கும் நேரம் குறித்தான ஒரு பதற்றத்தையே கூமோனும் வழங்குவதாகத் தோன்றியது. அறிவு ரீதியில் சிறுவர்களை ஒரு படி மேலே உயர்த்தப் பயிற்சியளிக்கும் கூமோன், கணிதப் பாடத்தில் வழிமுறைகளைளற்ற விரைவான பதிலளிக்கும் முறையைத் தூண்டும் உத்தியையே பிரதானமானக் கொண்டுள்ளது. உடனடியாகக் கூடுதல் அறிவைப் பெற்றுவிட குழந்தைகளைத் துரத்தும் சூழலை இலாவகமாகக் கூமோன் அமைத்துக் கொடுக்கிறது. பரிச்சார்த்த முறையில் இதனை முயன்றும் பார்க்கலாம்.

விரைவு உணைவைப் போல, விரைவு இரயிலைப் போல நகர் வாழ்க்கை எல்லாவற்றுக்கும் உடனடி தீர்வு, உடனடி வளர்ச்சி, உடனடி மாற்றம் என்பதை நோக்கியே இன்றைய வாழ்க்கைச் சூழல் விரைகிறது. இன்று விதைத்து நாளை அறுவடை செய்தாக வேண்டிய எதிர்ப்பார்ப்பையே நகர் வாழ்க்கை விட்டுச் செல்கிறது. பிள்ளைகளின் கல்வியிலும் பெற்றோர்கள் அவசரமான சூழலை நோக்கியே ஓடுகிறார்கள். தன் பிள்ளை இரண்டாம் ஆண்டிலேயே ஆறாம் ஆண்டு மாணவனுக்குரிய பாடத்திட்ட அறிவைப் பெற்றிருக்க வேண்டும் எனப் பேராசை கொள்கிறார்கள். அறிவை வற்புறுத்தி திணிப்பது ஆபத்தே.

ஒரு ஐந்தாம் ஆண்டு மாணவன் பல்கலைக்கழக மாணவர்களுக்குரிய கணக்குகளுக்கான தீர்வைச் செய்ய முடிந்தால் அவனை அதிபுத்திசாலி என சமூகம் ஆச்சர்யமாகப் பார்க்கிறது. ஆனால், தன் வயதிற்குரிய ஐந்தாம் ஆண்டு கணக்குகளைத் திறம்பட செய்ய முடிந்த11 வயது மாணவனை அவனுக்குக் கீழாக வைத்துப் பார்க்கப் பழக்குகிறது. அறிவை எதன் அடிப்படையில் ஒப்பிட்டுப் பார்க்கிறோம்? கல்வி வரையறுத்துக் கொடுத்திருக்கும் பாடத்திட்டத்தைக் கொண்டுத்தான் அறிவையும் அறிவாளியையும் தீர்மானிக்கப் போகிறோமா? பாடத்திட்டத்தைத் தாண்டிய உலகியல் அனுபவ அறிவு குறித்தான சிந்தனைக்கு இங்கு இடமில்லாமல் போய்விட்டது.

பாடத்திட்டம் என்பது பொதுவானது. வயதையும் அந்த வயதிற்குரிய அறிவையும் உண்மையில் அத்தனை துல்லியமாக முடிவு செய்துவிட முடியாது. வயதிற்கு மிஞ்சிய அறிவுடன் இருப்பவனை உன் வயதிற்கு மீறி பேசாதே எனச் சொல்வது ஒரு பக்கமும், வயதைத் தாண்டிய கல்வியியல் தொடர்பான சிக்கலைக் களைபவனை மிகச் சிறந்த அறிவாளி எனப் பாராட்டுவது ஒரு பக்கமும் சமன் இல்லாமல் சமூகத்தில் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. ஆறாம் ஆண்டு மாணவன் பல்கலைக்கழகப் படிப்பிலுள்ள சிக்கலைத் தீர்க்க முடிந்தால் எந்தப் பக்கலைக்கழகமும் அவனுக்கு இளங்கலைப்பட்டப்படிப்பிற்கான சான்றிதழைக் கொடுத்துவிடாது என்பதையும் கவனிக்கவும்.

வாழ்க்கை குறித்து சட்டென முதிர்ச்சியான ஒரு கருத்தை முன்வைக்கும் மாணவனை வயதிற்கு மீறிய பேச்சு என மட்டுப்படுத்துவதை நானே பல சூழ்நிலைகளில் பார்த்திருக்கிறேன். அதுவே தன் வயதிற்கு மீறிய பெரும் கணக்கை ஒரு மாணவன் செய்வதை வைத்து அவன் அறிவைப் பாராட்டி மதிப்பீடுவதையும் பார்த்திருக்கிறேன். அறிவு எப்படி முடிவு செய்யப்படுகிறது? வரையறுத்து வழங்கப்பட்டிருக்கும் பாடத்திட்டத்தை ஒரு மாணவன் பின்பற்றுவதும் அதனை மிஞ்சுவதுமே அவன் அறிவைத் தீர்மானிக்கப் பாவிக்கப்படும் கருவியாகத் திகழ்கின்றன. மற்றப்படி கேட்டு வாசித்து உணரும் வாழ்க்கை/உலகியல் தொடர்பான எந்தக் கூடுதலான அறிவையும் இச்சமூகம் அங்கீகரிக்கத் தயாராக இல்லை.

கூமோன் மிக விரைவாகக் கணக்கைச் செய்யும் இயந்திரங்களை உருவாக்கித் தள்ளுவதாகவே எனக்குத் தோன்றுகிறது. இன்றைய பெருநகர் சூழலிருந்து வரும் பெற்றோர்களுக்கு இக்கருத்து முரணாகத் தோன்றலாம். ஆனால், கூமோன் கல்வி நிலையங்களில் பணியாற்றிய ஒரு அமெரிக்கர் கூமோன் குறித்துப் பெற்றோர்கள் உடனடி முடிவை எடுக்காமல் விவாதிக்கத் தூண்டும் வகையில் ஒரு நூல் எழுதுகிறார் என்றால் அதனை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றே நினைக்கிறேன்.

எல்லோரும் ஓடுகிறார்கள்; நாமும் அதை நோக்கி ஓடுவோம் என்ற முடிவுக்கு வருவதைத் தவிர்த்து விட்டு இந்த நவீன சமூகம் வழங்கும் இதுபோன்ற விடயங்களையும் அதன் நன்மை தீமைகளையும் சமமாக உற்று நோக்கும் ஆற்றலைப் பெற்றோர்கள் பெற்றிருக்க வேண்டும். ஒரு சமூகத்தின் பெரும்பான்யையினர் ஆதரிக்கிறார்கள் என்றால் அது கட்டாயம் நம் வீட்டுப் பிள்ளைகளுக்கும் உகந்ததாக இருக்கும் எனச் சிந்திக்காமல் அதன் பின்னே ஓடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இது பந்தயம் அல்ல.

-கே.பாலமுருகன்