யார் கொலையாளி? (விசாரணைத் தொடர்: பாகம் 1)
பார்த்த சாட்சியமோ அல்லது போதுமான ஆதாரங்களோ இல்லாததால் சிவகணேஷ் நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டான். இன்னும் இரு மாதங்களில் மீண்டும் வழக்குச் செவிமடுப்பிற்கு வந்த பின்னரே அவனுக்கான விடுதலை உறுதியாகும்.
இரண்டு வாரம் லோக்காப்பில் இருந்த அயர்வும் நடுக்கமும் கலந்து அவனைச் சூழ்க்கொண்டு பயமுறுத்திக் கொண்டிருந்தாலும், விடுவிக்கப்பட்ட நாளில் மனம் இலேசாகியது. வரும் வழியில் 24 மணி நேரக் கடையில் சாப்பிட்டுவிட்டு ஒரு வெண்சுருட்டை ருசித்துக் கொண்டிருந்தான்.
“அப்படின்னா நீ கொலை செய்யல?”
சிவகணேஷ் நண்பன் மூர்த்தி. அவன்தான் அவனுக்கான வழக்கறிஞரை ஏற்பாடு செய்தது ஜாமின் பணம் எனப் பலவற்றையும் செய்து உதவியவன்.
“மச்சான்! எத்தன தடவ சொல்றது? என்ன சந்தேகப்படறீயா? அதான் புக்தியே இல்லயே… அப்புறம் என்னடா?”
“எவிடன்ஸ் இல்ல… சாட்சியும் இல்ல… ஆனா…”
“செம்ம சூரு… சைட்ல செலுத்தியிருப்பன். அதான் காடிய அங்கப் போட்டுட்டுத் தூங்கிட்டன்…அப்புறம் என்ன நடந்துச்சின்னு தெரில…”
மூர்த்தி எதிரில் இருந்த தடுப்பு இரும்பின் நுனியில் வெண்சுருட்டின் சாம்பலைத் தட்டி உதறினான். சாம்பல் துகள்கள் சுவரில் சரியும் முன்பே காற்றில் பறந்து கரைந்தன.
“அப்படின்னா, அங்க இருந்த பொணத்துக்கும் உனக்கும் எந்தத் தொடர்பும் இல்ல?”
“அட நீ ஒன்னு. கிறுக்கன் மாதிரி பேசிக்கிட்டு இருக்காத… கொலை செஞ்சிட்டுப் எவனாவது அங்கயே தூங்குவானா? நான் என்ன முட்டாளா?”
மூர்த்தி மூச்சை இழுத்து விட்டான். கழுகு போன்ற தன் பார்வையைச் சிவகணேஷ் மீது படரவிட்டான். கண்கள் பொய்மைக்கு அப்பாற்பட்ட உறுப்பு. சொற்களில் ஆயிரம் வேடிக்கை, வித்தைகள் இருந்தாலும் கண்கள் உண்மையைத் தாங்கி நிற்கும்.
“ஜாமீன் காசு பத்தி கவலப்படாத… எப்படியாவது கடன வாங்கியாவது கட்டிருவன்…மாலினி இருக்கா… ஏதாச்சம் உதவி செய்வா…திருடன் மாதிரி பாக்காத…” என்ற சிவகணேஷ் மீதியிருந்த வெண்சுருட்டை வேகமாக இழுத்துவிட்டுக் கீழே வீசினான்.
இருவரும் அங்கிருந்து கிளம்பினர். மூர்த்தி ஏதும் பேசவில்லை. சிவகணேஷ் தன் மனைவி மாலினியை நினைத்துக் கொண்டே அமர்ந்திருந்தான். வீட்டிற்குச் செல்லும் வழியில் கொலை நடந்த சாலையை வாகனம் கடந்து கொண்டிருந்தது. மூர்த்தி தெரிந்துதான் அவ்விடத்தை நோக்கி வாகனத்தைச் செலுத்திக் கொண்டிருந்தான். சிவகணேஷ் கண்களை மூடினான்.
மழை பெய்து விட்டிருந்ததால் வாகனத்தின் கண்ணாடியில் மீந்திருந்த துளிகள் ஒவ்வொன்றாய் உடைந்து உடைந்து ஒழுகிக் கொண்டிருந்த இடைவெளியில் போதையின் உச்சத்தில் இருந்த சிவகணேஷ் பக்கத்து வாகனத்தைவிட்டு வெளியேறும் அந்த மர்ம உருவத்தை மீண்டும் மீண்டும் நினைவுப்படுத்த முயன்றான். கடைசிவரை அது ஓர் ஆணின் முகம் என்பதைத் தவிர அவனிடம் வேறு ஆதாரம் இல்லாததால் அத்தகைய ஒரு தகவலை அவன் கடைசிவரை காவல்துறை விசாரணையில் சொல்லவே இல்லை.
“ஆனா… மச்சான் நான் ஒரு தடவ கண்ணத் தொறந்து பார்க்கும்போது ஒருத்தன் அந்தக் காடிலேந்து வெளிய வந்தான்… அது ஒருத்தனோட முகம்… ரொம்ப பழக்கமான தெரிஞ்ச முகம்தான்… சரியா லின்க்காவ மாட்டுது… இல்லன்னா போலிஸ்ல மாட்டி விட்டுருப்பன்…”
மூர்த்தி செலுத்திக் கொண்டிருந்த வாகனத்தைச் சட்டென ஓரத்தில் நிறுத்தினான். அவன் முகத்தில் சிறிய கலவரம்.
“நீ இந்த மாதிரி ஏதும் பேசாதடா… கம்முன்னு இருக்கீயா? நான் என்ன சொன்னன்? எதையுமே உளறாத… மொத உன் கற்பன குதிரய ஓரங்கட்டு… புரியுதா?”
சிவகணேஷ் இருக்கையைக் கொஞ்சம் இறக்கிவிட்டுச் சாய்ந்து கொண்டான். முதுகில் கணமான வலி அடர்ந்திருந்தது. மூர்த்தி அப்பொழுதுதான் வழக்கறிஞர் மாரிமுத்துவிடமிருந்து வந்த புலனச் செய்தியைப் படித்துக் கொண்டிருந்தான்.
“கேஸ் சாமுன்??? Don’t worry, Everything will be alright for your friend…”
கைப்பேசியை முடக்கிவிட்டுச் சிவகணேஷைப் பார்த்தான்.
அன்று கழுத்தறுப்பட்டுப் பிணமாகக் கிடந்த மாலினியின் பக்கத்தில் உறங்கிக் கொண்டிருந்ததைப் போலவே சிவகணேஷ் அவனுடைய உலகத்தில் அமைதியாகப் படுத்திருந்தான்.
விசாரணை 1: சிவகணேஷ்
கேள்வி: கொலை நடந்த நன்று எங்குப் போயிருந்தீர்கள்?
நானும் என் மனைவியும் அன்று ஒரு காப்புறுதி நிறுவனத்தின் விருத்துக்குப் போயிருந்தோம். நண்பன் மூர்த்தியின் ஏற்பாடு. அவனுக்கு முக்கியப் பதவி உயர்வு என்பதால் எங்களையும் இன்னும் சில குடும்ப நண்பர்களையும் அழைத்திருந்தான்.
கேள்வி: எத்தனை மணிக்கு அங்கிருந்து புறப்பட்டீர்கள்?
11ஐ நெருங்கிக் கொண்டிருந்தது என்று நினைக்கிறேன். அதுவும் மாலினி போகலாம் என்று அத்துடன் மூன்றுமுறை சொல்லிவிட்டதால் வேறு வழியில்லாமல் கிளம்பினேன்.
கேள்வி: விருந்து நடந்த இடத்திலிருந்து வீட்டிற்கு எவ்வளவு தூரம்?
போகும்போது ஏறக்குறைய 45 நிமிடங்கள் எடுத்தன. நான் இதுவரை அந்தக் குறிப்பிட்ட உணவகத்திற்குச் சென்றதில்லை.
கேள்வி: வாகனத்தைச் செலுத்தும்போது நீங்கள் போதையில் இருந்தீர்களா?
ஆமாம். ஆனால், அவ்வளவு போதை என்று சொல்வதற்கில்லை. நான் வாகனத்தை முடுக்கிவிட்டால் எவ்வளவு போதை என்றாலும் முறையாகவே ஓட்டுவேன்.
கேள்வி: உங்கள் மனைவி உங்களை அனுமதித்தாரா?
மாலினிக்கு இரவில் வாகனம் ஓட்டுவதென்றால் கொஞ்சம் பயம். எதிரில் வரும் வாகனங்களின் விளக்கு வெளிச்சம் அவளுக்கு உபாதை. பார்வையை மறைத்துவிடும் என்று பயப்படுவாள்.
கேள்வி: பிறகு நீங்கள் ஏன் வாகனத்தை நிறுத்தினீர்கள்?
அன்று என்னவோ என்னால் என் மயக்கத்தைக் கட்டுப்படுத்த இயலவில்லை. ஒருவேளை நான் அருந்திய மதுபானம் எனக்கு ஒப்புக்கொள்ளவில்லை என்று நினைக்கிறேன்.
கேள்வி: சரியாக எத்தனை மணிக்கு வாகனத்தை அங்கு நிறுத்தீனீர்கள் என்று ஞாபகம் உள்ளதா?
ஆம், 12.05 மணி இருக்கலாம். அப்பொழுதுதான் நான் வாகனத்தை முடக்கினேன்.
கேள்வி: எப்படி இத்தனைத் துல்லியமாக நேரத்தைச் சொல்ல முடிகிறது?
சரியாக 12 மணிக்கு வானொலியில் தேசிய கீதம் ஒலிப்பாரகியது என்னால் ஞாபகப்படுத்த இயல்கிறது.
கேள்வி: பிறகு என்ன நடந்தது?
அதன் பிறகு மாலினி ஏதோ கத்திக் கொண்டிருந்தாள். என்னால் நினைவுப்படுத்த இயலவில்லை. அப்படியே மயக்கம் அதிகமாகி நான் ஓர் ஆழ்ந்த உறக்கத்திற்குள் சென்றுவிட்டேன்.
கேள்வி: பிறகு எத்தனை மணிக்கு எழுந்தீர்கள்?
எனக்கு அப்பொழுது நேரம் சரியாக நினைவில் இல்லை. எழுந்ததும் என் வாகனத்தைச் சுற்றி ஆள் கூட்டம் நிரம்பியிருந்தது. சில வாகனங்களும் அங்கே நிறுத்தப்பட்டிருந்தன. அதில் ஒன்று காவல் துறை வண்டி.
தொடரும்
கே.பாலமுருகன்