ஹைக்கூ: கலை வடிவத்தை நோக்கிய ஒரு தொடக்க நிலை

‘ஒரு மொழியின் கவிதை வடிவம் உலகளவில் புகழ் பெறுவது வியப்பிற்குரியது. இப்புகழுக்கு ஒரு காரணம் உண்டு. உலகக் கவிதை வடிவங்களிலேயே ஹைக்கூவிற்கு யாரையும் மயக்கக்கூடிய சக்தி உண்டு’

  • டாக்டர் தி.லீலாவதி (ஜப்பானிய ஹைக்கூ, 1987)

தமிழ்க் கவிதை வரலாற்றில் புதுக்கவிதைக்குப் பின்னர் வருகையளித்துத் தமிழ் எழுத்தாளர்களின் கவனத்தை ஈர்த்த இலக்கிய வடிவமாகவே ஹைக்கூ பார்க்கப்படுகிறது. ஜப்பானில் 16ஆம் நூற்றாண்டில் தோன்றி வளர்ந்த ஹைக்கூ வடிவம் தமிழிலும் செல்வாக்கு பெற்று இன்று வரையில் எழுதப்பட்டு வருகிறது. மகாகவி பாரதியாரால் ஹைக்கூ தமிழில் அறிமுகப்படுத்தப்பட்டு 1980களில் பிரபலமானதாக ஹைக்கூவை விரிவாக ஆராய்ந்த எழுத்தாளர் ந.பச்சைபாலன் குறிப்பிடுகிறார்.

ஹைக்கூ மூன்று சின்னஞ்சிறு அடிகளால் அமைந்து வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களின் காட்சிகளை அழுத்தமாய், விரிவாய், ஆழமாய் தொட்டு விரிந்து செல்லும் கலை விடிவம் எனலாம். ஒரு சிலர் ஹைக்கூவை தத்துவ வடிவம் என்றும் போற்றுகிறார்கள். ஆனாலும் ஒவ்வொருவரின் இரசனைக்கும் தேடலுக்குமேற்ப ஹைக்கூ மறுவாசிப்பிற்கு உட்படுத்தப்பட்டும் வருகிறது. ஜப்பானியக் கவிதைகளில் ‘ரெங்கா’, ‘டங்கா’ போன்ற மரபுக்கவிதைகளின் இறுக்கமான வடிவங்களிலிருந்து விடுப்பட்டு உருவானதுதான் ஹைக்கூ என டாக்டர் லீலாவதி குறிப்பிடுகிறார்.  இந்தக்  குறும்பாட்டிலிருந்து மேலும் இறுகியும் குறுகியும் ஆன வடிவம்தான் ‘ஹைக்கூ’ எனக் கவிஞர் பச்சைபாலன் மேலும் குறிப்பிடுகிறார். 1600-1850 காலப்பகுதியில்தான் ஜப்பானிய கவிதை உலகம் ஹைக்கூவின் உன்னதத்தை முழுமையாகத் தரிசித்தது எனலாம்.

நவீன இலக்கிய சூழலில் சிலர் ஹைக்கூவைக் கொண்டாடியும் வருகிறார்கள். அதே சமயம் ஹைக்கூவைக் கேள்விக்குட்படுத்துபவர்களும் அதன் வடிவத்தன்மையையும் ஆழத்தையும் விசாரணைக்கு உட்படுத்தி வருபவர்களும் இருக்கவே செய்கிறார்கள். கலை, இலக்கியங்களின் இன்னொரு திறப்பு தத்துவம் என்பதோடு உடன்பாடு உள்ளவர்கள் ஹைக்கூவை முக்கியமான இலக்கிய வடிவமாகவே கருதுகிறார்கள். ஹைக்கூ பருவநிலை மாற்றங்களையும் அவை உண்டாக்கும் காட்சிகளையும் தமது பிரதானமான உள்ளடக்கங்களாக எடுத்துக் கொண்டு உருவானது எனலாம். தன் உள்ளத்தில் திடீரென ஒளியேற்றிய ஒரு காட்சியைக் கவிஞன் அப்படியே சித்தரிக்கிறான். தனக்கு உண்டான உணர்வெழுச்சிகளைக் கவிஞன் அதனுள் நுழைப்பதில்லை. ஹைக்கூ இந்த அடிப்படையான புரிதலிலிருந்துதான் பிறக்கிறது.

ஹைக்கூவின் சில பொதுவான இலக்கணங்கள்:

  1. 5,7,5 என்று அசை அமைப்பை உடைய மூன்று அடிகளால் ஆன கவிதை வடிவம்
  2. பெரும்பாலும் பருவங்களின் மாற்றங்களை, அவை மனித மனத்தில் ஏற்படுத்தும் பாதிப்புகளைச் சித்தரிக்கும்
  3. ஜென் தத்துவப் பார்வையைக் கொண்டது
  4. ஹைக்கூ கவிஞன் வாசகனையும் தன்னைப்போல் பக்குவம் உடையவனாக மதித்து தன் உணர்வு அனுபவத்தில் பங்குக்கொள்ளச் செய்கிறான்
  5. ஹைக்கூவின் மொழியமைப்பு தந்தியைப் போன்றது
  6. ஹைக்கூவின் அழகும் ஆற்றலும் அதன் ஈற்றடியில் உள்ளது; அஃது உணர்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி முழுக்கவிதையையும் வெளிச்சப்படுத்தும்
  7. ஈற்றடியில் ஆற்றல் மிக்க வெளிப்பாட்டிற்காகப் பெயர்ச்சொல்லையே பயன்படுத்தும்
  8. ஹைக்கூ கவிதைக்குத் தலைப்பு தேவையில்லை

மேற்கண்ட இலக்கணங்கள் யாவும் ஹைக்கூவைப் பற்றிய முதல் புரிதலை உருவாக்கிக் கொள்ள உதவும்; ஆனால், இவையாவும் மீறப்பட்டும் ஹைக்கூ கவிதைகள் இயற்றப்படுவதன் யதார்த்தத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். ஜப்பானிய கவிஞர் பாஷோதான் புகழ்பெற்ற ஹைக்கூ கவிஞராவார். ஹைக்கூவை முதன்முதலில் தமிழில் மொழிப்பெயர்த்தவர் சி.மணி ஆவார். நடை என்கிற இதழில் ஹைக்கூ மொழிப்பெயர்ப்புகள் முதன்முதலில் பிரசுரமானது குறிப்பிடத்தக்கதாகும்.

‘இந்த வண்ணக் கிண்ணத்தில்

மலர்களை வைப்போம்

அரிசிதான் இல்லையே

  • பாஷோ

அனுபவப்பூர்வமாக ஹைக்கூவைப் பற்றிய புரிதலை மேம்படுத்த ஒரு ஹைக்கூ போட்டியொன்றும் கடந்த செம்டம்பர் மாதம் நடத்தப்பட்டது. முப்பது கவிஞர்கள் அப்போட்டியில் பங்கெடுத்தனர். அவர்களின் ஹைக்கூ படைப்புகளைப் படித்துவிட்டு அதிலிருந்து சில முக்கியமான ஹைக்கூவிற்கான தொடக்க நிலையென ஏற்றுக்கொள்ளக்கூடியவற்றை ந.பச்சைபாலன் அவர்கள் தேர்ந்தெடுத்திருந்தார்.

ஹைக்கூவைப் பற்றிய ந.பச்சைபாலன் அவர்களின் சில விளக்கங்கள்:

  1. ஹைக்கூ பற்றிய புரிதல் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் மாறுப்பட்டே வருகின்றது.
  2. ஹைக்கூவில் மிகைப்படக் கூறுதல், உவமை, உருவகம் போன்ற அழகியல்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
  3. ஒரு காட்சியைச் சொற்களில் அசலாக வடித்துக் கொடுக்க வேண்டும் என்பதே ஹைக்கூவின் ஒரு வெளிப்பாடு. அதைச் சுவைப்படக் கூறுகிறேன் என்கிற முயற்சி ஹைக்கூவின் வெளிப்பாட்டுத் தன்மையைப் பாதித்துவிடும்.
  4. ஹைக்கூவில் ஒரு காட்சியின் தரிசனம் என்பது வாசகனுக்குப் பலவகையான பல கோணங்களிலான புரிதலை உருவாக்க வேண்டும்.
  5. போட்டிக்கு வந்த ஹைக்கூ படைப்புகள் பொதுவான ஹைக்கூ விதிகளுக்கு அப்பாற்பட்டு இருக்கின்றன.
  6. ஹைக்கூவின் புரிதல் விரிவடையும்போது என்னுடைய சில பழைய ஹைக்கூ படைப்புகளையே நான் நீக்க வேண்டியதாகிறது. அத்தகைய கூர்மையான வடிவம் ஹைக்கூ.
  7. படத்திற்கு ஹைக்கூ எழுதுவது என்பது உண்மையில் மிகவும் சிரமமான பணியாகவே தோன்றுகிறது. ஆயினும், அதனை வார்த்தைகளாக வார்த்தெடுக்கக் கவிஞர்கள் முயன்றுள்ளனர். அதற்குப் பாராட்ட வேண்டும்.
  8. போட்டிக்கு வந்த ஹைக்கூ படைப்புகளில் நான்கு மட்டுமே தேர்ந்தெடுக்க முடிந்தன. ஆயினும், அவை யாவும் ஹைக்கூவா என்று கேட்டால் அதற்குப் பதிலளிப்பது சிரமமாக உள்ளது. ஹைக்கூவை நோக்கி முதற்கட்டம் என்று ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், ஹைக்கூவிற்குள் அடங்க மறுக்கின்றன.
  9. இதற்குமுன் முன்மொழியப்பட்ட ஹைக்கூவைப் பற்றிய பொதுவான விதிகளில் சிலவற்றை நாம் கவனத்திற்குட்படுத்த வேண்டும். ( இலக்கணங்கள்: 3-7 வரை)

ஹைக்கூவில் வெளிப்படையாக உணர்வுகளைக் கூறுவதைத் தவிர்க்க வேண்டும்; படிக்கும் வாசகன்தான் பல்வேறான உணர்வு நிலைகளை எட்ட வேண்டும். ஹைக்கூ கவிஞன் காட்சியை மட்டுமே தன் சொற்களால் கட்டமைக்க வேண்டும். அத்துடன் அவன் வேலை முடிந்துவிட்டது. இனி அக்காட்சி சித்தரிக்கப்பட்டதன் இடைவெளிக்குள் வாசகன் தனக்கான கண்டடைதலைத் தேடிக் கொள்கிறான். ஹைக்கூ இவ்வாறுதான் தனது வாசகர்களைக் கண்டடைந்து கொள்கிறது.

எடுத்துக்காட்டு:

மலர்கள் குவிந்தன

நண்பர்கள் கூடினார்கள்

ஓர் இறுதி ஊர்வலம்.

மேற்கண்ட ஹைக்கூவில் எந்த உருவகமும் உவமையும் உணர்ச்சி கொந்தளிப்புகளும் இல்லை. ஒரு காட்சியை மட்டுமே விட்டுச் செல்கிறது. ஆனால், அக்காட்சியைத் தரிசிக்கும் வாசகன் பல்வேறான உணர்வு நிலைக்குள் ஆளாகின்றான்; பல புரிதல்கள் உண்டாகின்றன. மூன்றாவது வரியைக் கவனிக்கவும். அதில்தான் மொத்த வெளிப்பாட்டுக் கோணங்களும் அடங்கியுள்ளன. ஒரு தத்துவத் திறப்பிற்கு வித்திடும் பகுதியே மூன்றாவது வரி. சிறுகதைக்கு முடிவு முக்கியம் என்பதுபோல் ஹைக்கூவிற்கு மூன்றாவது வரி முக்கியமாகும். முதல் இரு வரிகளைத் தாண்டி மூன்றாவது வரியை எட்டும் வாசகன் அங்குத்தான் ஹைக்கூவிற்கான தரிசனத்தைப் பெறுகிறான் என்பதை நினைவில் கொள்ள வேண்டியுள்ளது.

எடுத்துக்காட்டு 2:

கொசுக்களுக்கு நன்றி

ஜன்னல் வழியே

எனக்கு முழு நிலா.

  • ந.பச்சைபாலன்

மேலே உள்ள ஹைக்கூவைப் படிக்கும்போது நாம் எதை அடைகிறோம்? கருத்தையோ படிப்பினையோ அல்ல. ஓர் ஏகாந்த அனுபவத்தை அடைகிறோம். மேற்கண்ட காட்சியில் ஒருவன் கொசு தொல்லையால் உறக்கமின்றி விழிக்கிறான். ஜன்னல் வழியாக முழு நிலைவைக் காண்கிறான். இந்தச் சொற்கூட்டம் உணர்த்தும் காட்சி இவ்வளவுதான். ஆனால், இதனை விரிவாக்கிப் பார்க்கும்போது ஓர் அனுபவத்தைத் தொட முடிகிறது. அதைக் கவிஞர் பூடகமாக ‘கொசுக்களுக்கு நன்றி’ எனக் கூறித் தொடங்குகிறார்.

எடுத்துக்காட்டு 3:

உதிர்ந்த இலை

நகருகிறது

தன் நிழலோடு.

  • ராஜகுமாரன்

மேற்கண்ட ஹைக்கூவும் ஒரு சாதாரணக் காட்சியை மட்டுமே சொல்லி செல்கிறது. அதனூடாக ஒரு வாசகன் எட்டும் அனுபவம் விரிவானதாக இருக்கக்கூடும். இங்கு எதும் நிரந்திரமல்ல; அனைத்தும் நம்மோடு பிறந்து நம்மோடு நகர்கின்றன என உணர முடியுமா? அல்லது மரணத்தைச் சுட்டுகிறதா அல்லது அதனையும் தாண்டி விரிகிறதா என வாசகன் மனமும் இக்கவிதையோடு நகரக்கூடும். இத்தகையதொரு அனுபவத்திற்கு நம்மை சுதந்திரமாகத் தள்ளிச் செல்வதே ஹைக்கூவின் நகர்தலிலுள்ள கலை அம்சம்.

ஹைக்கூவை நோக்கி ஒரு தொடக்க நிலைக்காக ஏற்படுத்தப்பட்ட போட்டியில் தேர்வான படைப்புகள்:

புணராத இதயங்களின்

அரவணைப்பில்

திணரும் தலைமுறை

(ஏ.கே ரமேஷ்)

நீ பாதி நான் பாதி

கலந்து பிரிந்தோம்

கலையாமல் பிரிந்தது மகவு

(தேவி ராமசாமி)

ஒரு கரத்தில்

இரு குழந்தையை ஏந்துகிறது

ஆண் மனம்.

(நவீன் கணேசன்)

நம் காதல் இடைவெளியில்

நயந்த முரண்

கரு.

(லோகேந்தினி சுப்ரமணியம்)

மேலே கட்டுரையில் குறிபிடப்பட்டுள்ள அனைத்து அலசல்களையும் மீள்வாசிப்புக்குட்படுத்தி தேர்வான ஹைக்கூவிலுள்ள நிறைகளையும் குறைகளையும் கவிஞர்கள் திறந்த மனத்துடன் ஆராய்வுக்குட்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம். மிகச் சிறந்த ஒரு ஹைக்கூவிற்கு நம்மை தயார் செய்யும் பொருட்டே இந்தப் போட்டி நடத்தப்பட்டது. நடுவர் ந.பச்சைபாலன் அவர்களின் பகிர்தலுக்கும் தேர்வுக்கு நன்றி. அவருடைய கருத்துகளைக் கவிஞர்கள் கவனத்திற்குள்ளாக்க வேண்டும். தேர்வுப் பெறாத படைப்பாளர்களும் தங்களின் ஹைக்கூ அனுபவத்தை மேலும் ஆழப்படுத்திக் கொள்ள இப்போட்டி வாய்ப்பாக அமைந்திருக்கும் என்று நம்புகிறோம்.

ஆக்கம்

கே.பாலமுருகன்

(ந.பச்சைபாலன் – கருத்துகளை உட்படுத்தி எழுதப்பட்ட கட்டுரை)

மேற்கோள்

ஹைக்கூ அறிமுகம் – டாக்டர் தி.லீலாவதி

ந.பச்சைபாலன் கட்டுரை

நானும் எழுத்துப் பயணமும் பாகம் 3: உலக சினிமாவும் இளவேனிலும்

ஆறாம் படிவத்தில் பாரதியின் மீதும் கவிஞர் வாலியின் மீதும் ஏற்பட்ட வாசிப்பார்வத்துடன் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தபோதுதான் நண்பர் காளிதாஸ் மூலமாக உலக சினிமாக்கள் குறித்து அறியத் துவங்கினேன். சிறுவயது முதல் நான் சினிமா இரசிகன் என்பதால் எளிதாக சினிமாவின் மீதான ஈர்ப்பை மீண்டும் புதுப்பித்துக் கொள்ள முடிந்தது. அகிரா குரோசோவா தொடங்கி சத்ய ஜித்ரே வரை பல உலக சினிமாக்களைப் பார்க்கத் துவங்கினேன். ஆரம்பத்தில் புரியவில்லை என்றாலும் நண்பர்களுடன் சேர்ந்து உரையாடும்போது அப்படங்கள் பற்றிய புரிதல் விரிவடையவே செய்தது. அப்பொழுது காளிதாஸின் அண்ணன் சு.யுவராஜன் அவர்களின் அறிமுகமும் கிடைத்தது. அவரும் எங்களுடன் உலக சினிமா குறித்தும் ஜெயமோகனின் தம்பி சிறுகதை குறித்தும் பேசினார்.

நான் முதலில் வாசித்த நவீன சிறுகதையாக ஜெயமோகனின் தம்பி சிறுகதையைக் குறிப்பிடலாம். அப்பொழுது எனக்கு 19 வயதுதான். இரண்டு முறை வாசித்தும் தம்பி சிறுகதையின் அமானுடமும் உளவியலும் சற்றே வாசிப்புச் சவாலை உருவாக்கியது. ஆயினும், நண்பர்களுடனான (வினோத், சுந்தரேஸ், காளிதாஸ்) உரையாடலே அவற்றையும் புரிதலுக்குச் சாத்தியப்படுத்தின. அப்பொழுதுதான் நாம் அறியாத ஒரு திறப்பு ஒரு கதைக்குள் சூசகமாக ஒளிந்திருக்கும் என்றும் அதனைத் தேடி ஒரு வாசகன் கதைக்குள் பயணிக்க வேண்டும் என்கிற புரிதல் ஏற்பட்டது. அதுதான் வாசக இடைவெளி என்பதெல்லாம் அப்பொழுது விளங்கவில்லை; ஆனாலும் ஓர் உந்துதலை உருவாக்கிவிட்டது.

தேடல் விரிவாகிக் கொண்டிருந்த அக்காலக்கட்டத்தில்தான் பலகலைக்கழகத்திற்கு விண்ணப்பித்துவிட்டு ஆசிரியர் பயிற்சி கழகத்தில் இணையவும் வாய்ப்புக் கிட்டியது. அதுவரை ஆசிரியர் ஆக வேண்டும் என்கிற எந்த முன்முடிவுகளும் இல்லாமல் இருந்த எனக்கு வரும் வாய்ப்பினை மனம் திறந்து ஏற்றுக் கொள்ளவும் தோன்றியது. அதன்படி சுல்தான் அப்துல் அலீம் ஆசிரியர் பயிற்சிக் கழகத்தில் இணைந்தேன். தமிழ் அறிவியல் வகுப்பில் பயில வாய்ப்புக் கிடைத்தது. சேர்ந்த நான்கு மாதத்தில் மலேசிய சபா அரசு பல்கலைக்கழகத்தில் இராசாயணப் பொறியிலாளர் துறையில் படிக்கவும் அழைப்புக் கடிதம் வந்து சேர்ந்தது. எல்லோரும் பல்கலைக்கழகம் செல்லும்படி என்னை வற்புறுத்தினர். ஆனால், சில மாதங்களிலேயே ஆசிரியம் என் மனத்தில் ஒன்றிவிட்டதாக மாறிவிட்டிருந்தது. மேலும், அப்பாவும் அச்சமயத்தில் உடல்நலமில்லாமல் இருந்தார். போய்ப் படி என வாய் சொன்னாலும் என்னைத் தூரம் அனுப்ப மனமில்லாமல் தவித்துக் கொண்டிருந்ததை உணர முடிந்தது. ஆசிரியர் பயிற்சியை மேற்கொள்ளத் தீர்மானித்தேன்.

ஒருவேளை அன்று நான் பல்கலைக்கழகம் சென்றிருந்தால் இப்பொழுது எழுத்துலகில் இருந்திருப்பேனா என்பது எப்பொழுதும் ஒரு கேள்விக்குறித்தான். ஆக, அப்போதைய எனது முடிவு சரியானதே எனத் தோன்றுகிறது. தமிழோடு பயணம் தீவிரமானது. ஆசிரியர் பயிற்சிக் கழகத்தில் ஒவ்வொரு பருவத்திலும் இளவேனில் விழாவும் இதழ் வெளியீடும் நடைபெறும். என்னைக் கலைஞனாக மாற்றிய மேடை அது. முதலில் யசோதா அக்கா பாடிய பஜனைக்குத் மிருதங்கம் வாசிக்க மேடை ஏறினேன். ஹரே கிருஷ்ணப் பக்தி இயக்கத்தில் இருந்தபோது மிருதங்கம் வாசிக்கக் கற்றுக் கொண்டதன் விளைவை முதல் பருவத்திலேயே வெளிப்படுத்த முடிந்தது.

அடுத்ததாக, மேடை நாடகத்திற்குள் களம் இறங்கினேன். சுயமாக நகைச்சுவை நாடகங்கள் எழுதி வகுப்பு சார்பில் பல்வேறு நாடகங்களை அரங்கேற்றம் செய்தேன். என் வகுப்பு நண்பர்கள் (மதனராஜ், ஜெப்ரி, ஈஸ்வரி, சுபா, சுகந்தி, இன்னும் பலர்) அதற்குப் பெரிதும் துணையாக இருந்தார்கள். புராணக் கதைகளின் தெம்பளட்டைப் (Template) பயன்படுத்தி அதனை நவீனப்படுத்தி கதை எழுதி நாடகமாக்குவது போன்ற முயற்சிகளில் இறங்கினேன். எங்கள் வகுப்பு நாடகங்களுக்குப் பாராட்டுகளும் கைத்தட்டல்களும் கிடைத்தன. அதுவொருவிதமான மனநிறைவையும் கலை உணர்வையும் மனத்திற்குள் ஆழப்படுத்தின.

திரு.ப.தமிழ்மாறன் ஐயா

எனது நடிப்பாற்றலைப் பாராட்டி எனது மனத்திற்கு நெருக்கமானவர்தான் விரிவுரைஞர் திரு.ப.தமிழ்மாறன். வகுப்பில் நாங்கள் அரங்கேற்றிய நாடகத்தின் சிறப்புகளைக் கூறிப் பாராட்டுவார். அவரது ஊக்கமான வார்த்தைகள் மிகுந்த பலம் வாய்ந்தவையாகத் தெரிந்தன. அடுத்து, அவர் பாரதியைப் பற்றி மிகவும் ஆழமாகவும் தீராப்பற்றுடனும் பேசக்கூடியவர். எனக்கும் பாரதியின் மீது ஈர்ப்பும் ஈடுபாடும் இருந்ததால் அவருடன் இணைவதற்கான ஓர் ஊக்கம் தானாகவே உருவானது. பாரதி கவிதைகளை மீண்டும் நூலகம் சென்று தேடி வாசிக்கத் துவங்கினேன்.

திரு.தமிழ்மாறன் அவர்கள் வகுப்பில் தீவிரமாக நவீன எழுத்தாளர்கள் பலரின் படைப்புகளைப் பற்றி சிலாகித்துப் பேசுவார். எம்.ஏ இளஞ்செல்வன், சீ.முத்துசாமி, புதுமைப்பித்தன், வண்ணதாசன் எனப் பல நவீன எழுத்தாளர்களின் படைப்புகளை வாசிக்கத் தூண்டினார். நானும் நூலகம் சென்று இவர்களைத் தேடி வாசிக்கத் துவங்கினேன். சிறுவயது முதலே எனது வாசிப்பு மாயாஜாலக் கதைகளில் துவங்கி, நயனம் ஷோபியில் வளர்ந்து, பாரதி வாலியை எட்டிப் பிடித்து எனது 21ஆவது வயதில் புதுமைப்பித்தன், வண்ணதாசனை அடைந்து விரியத் துவங்கியது.

அதுவரை மேடைப் படைப்புகளை மட்டுமே வழங்கிக் கொண்டிருந்த நான் வாசிப்பின் ஆழத்தால் மெல்ல எழுதத் துவங்கினேன். இளவேனில் இதழ்களுக்குக் கவிதைகள், ஹைக்கூ, எண்ணச்சிதறல்கள் எழுதினேன். அது பிரசுரமானபோது அதைப் பார்த்து மகிழ்ந்தேன். பிறகு நான் எழுதிய முதல் சிறுகதை ‘மஞ்சள் துறவிகள்’ இளைவேனில் இதழ் விழாவில் பரிசுக்குத் தேர்வானது. விரிவுரைஞர் தமிழ்மாறன் அவர்கள் அச்சிறுகதையைப் பாராட்டி உன்னிடம் ஒரு சிறந்த எழுத்து உருவாவதற்கான ஒளித் தெரிகிறது என்றார். அதையே கெட்டியாகப் பிடித்துக் கொண்டு அதன்பின் நம்பிக்கையுடன் எழுதத் துவங்கினேன். இன்னும் பல ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன என்பது தெரியாமல் சிறுகதைகள் எழுதி நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தேன்.

தமிழின் நவீனப் படைப்பாளிகளின் தீவிர வாசகனானேன். நான் பார்த்து வியந்த அகிரா குரோசோவின் சினிமாக்களில் வரும் விசித்திரமான மனிதர்கள் வண்ணநிலவன், வண்ணதாசன் கதைகளிலும் தெரியத் துவங்கினார்கள். வாழ்க்கையை அதுவரை நான் பார்த்த கோணங்களிலிருந்து சற்றே நகரத் துவங்கியிருந்தேன். (ஆண்டு 2004-2005)தொடரும்-கே.பாலமுருகன்

பாகம் 1: https://balamurugan.org/2021/09/07/கட்டுரைத்-தொடர்-நானும்-எ/

பாகம் 2: https://balamurugan.org/2021/09/08/நானும்-என்-எழுத்துப்-பயண/

நானும் என் எழுத்துப் பயணமும்- பாகம் 2

பாரதியும் வாலியும்

எல்லோரின் இளம் பருவத்திலும் அவர்களின் இரகசிய நண்பன் கண்டிப்பாக ஒரு டைரியாகத்தான் இருக்க முடியும். எனது நான்காம் படிவத்தில் (16 வயது) கிறுக்கல்களுக்காக ஒரு நூலைத் தயார்செய்து கொண்டேன். இயற்கை, பிரிவு, அன்பு, நட்பு, காதல் கவிதைகளுக்கென்று அப்பொழுது ஒரு தனித்த இடமிருந்தது. நானும் என் வகுப்பு நண்பன் விஜயனும் இத்தகைய ஒரு புத்தகத்தில் குட்டிக்கதைகள், கவிதைகள் எனப் போட்டிக் போட்டுக் கொண்டு எழுதி கொண்டிருந்த காலமது. Chemistry பாடத்திற்குச் சென்றால் அங்கு வேறு கெமட்ஸ்ரி தன் வேலையைத் துவங்கிவிட்டதும் உடனே கவிதைகள் எழுத ஆரம்பித்துவிடுவேன்.

அப்பொழுது நண்பன் விஜயன் தொடர்ந்து தொடர்க்கதைகளைத் தனது அறிவியல் நீளப் புத்தகத்தில் எழுதி என்னிடம் கொடுப்பான். நானும் ஆவலுடன் அத்தொடர்களை வாசிக்கத் துவங்கிவிடுவேன். அவனது கதைகளுக்கு என்னைத்தான் மானசீக வாசகனாக அவனே நியமனம் செய்து கதைகளை என்னைத் துரத்தித் துரத்திக் கொண்டு வந்து வாசிக்கச் சொல்வான். கதை உலகத்தில் அவன் காட்டும் ஆர்வம் ஆச்சரியமாக இருக்கும். ஒருவேளை அவன் தொடர்ந்து எழுதி கொண்டிருந்தால் இந்நேரம் நாட்டில் ஒரு நல்ல எழுத்தாளனாக மிளிர்ந்திருப்பான் என்பதில் சந்தேகமில்லை.

அவன் அளவிற்கு நான் என் காதல் கவிதைகளையும் இன்னும் சில கவிதைகளையும் யாரிடமும் காட்டியதில்லை. கவிதைகளுக்கு வாசகர்கள் தேவையில்லை என்று தோன்றும். அவை என் மனத்துடன் நான் முணுமுணுத்துக் கொள்ளும் வார்த்தைகள் என்றே நினைப்பேன். நான் நினைப்பவைகளை என் உணர்வுகளைக் கொட்டி தீர்க்கும் ஓர் இடமாகவே அப்போதைய என் கவிதைகள் இருந்தன. இப்பொழுது அந்தக் குறிப்புப் புத்தகத்திலுள்ள கவிதைகளைப் படித்தால் நகைச்சுவையாகவும் சிறுப்பிள்ளைத்தனமாகவும் இருக்கும். ஆனால், அப்போதைய வயதில் அவைதான் எனது பெருந்திறப்பு. எனக்கு அப்பொழுதும் அதிக நண்பர்கள் கிடையாது. வகுப்பு நண்பர்களிடம் மட்டும் அளவோடு பேசுவேன்.

எஸ்.பி.எம் முடிந்து ஆறாம் படிவத்துக்காக இப்ராஹிம் இடைநிலைப்பள்ளிக்குச் சென்றேன். அங்குத் தனிமை மேலும் அடர்ந்து நின்றது. இந்திய மாணவர்களும் ஒருவருக்கொருவர் மலாயில் ஆங்கிலத்திலும்தான் பெரும்பாலும் பேசிக் கொள்வார்கள். எனது தயக்கத்தைப் போக்கிக்கொள்ள மாணவர்த் தலைவர் பிரிவில் சேர்ந்து நண்பர்களைத் தேடிக் கொண்டேன். நான் அறிவியல் பிரிவு மாணவன் என்பதால் தமிழைக் கூடுதல் பாடமாக எடுக்க முடிவெடுத்தேன். ஆயினும், 15க்கும் கூடுதலான மாணவர்கள் தமிழை எடுத்தால் மட்டுமே ஓர் ஆசிரியர் கிடைக்கக்கூடும் எனச் சொல்லிவிட்டார்கள். நானும் கலைப்பிரிவில் உள்ள சிலரைச் சேர்த்துக் கொண்டு ஒவ்வொரு வகுப்பாகச் சென்று தமிழைப் பாடமாக எடுக்கும்படி பலரிடம் கேட்டு இறுதியில் ஐந்து பேர் மட்டுமே மீதமாக இருந்தோம் என்பதால் எங்களுக்குத் தனி ஆசிரியர் கிடைக்கவில்லை. ஆயினும், ஆறாம் படிவத்தில் தமிழ் இலக்கியத்தை எடுத்தாக வேண்டும் எனப் பிடிவாதமாகப் பதிந்து கொண்டேன். நண்பர்களிடம் நூல்களை இரவல் வாங்கிப் படிக்கத் துவங்கினேன்.

அப்படித்தான் பாரதியின் பக்கம் கவனம் திரும்பியது. சிறுவயதில் பாடநூல்களில் பார்த்துப் படித்ததோடு சரி. இடைநிலைப்பள்ளிக்கு வந்த பின்னர்தான் பாரதியை ஆழமாக வாசிக்கத் துவங்கினேன். அப்பொழுது ஆறாம் படிவப் பாடத்திட்டத்தில் காணி நிலம் வேண்டும் எனும் கவிதை பாடமாக இருந்தது. அங்கிருந்து அக்கவிதையைத் தாண்டி பாரதியின் மற்ற கவிதைகளையும் தேடி வாசிக்கத் துவங்கினேன். குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் எனப் பாரதியாரின் எல்லையில் பிரவேசிக்கத் துவங்கினேன். நண்பன் சுந்தரேஷ்வரனும் பாரதியின் சில தன்னிகரற்ற கவிதைகளை வாசித்துக் காட்டுவான். மு.வ, நா.பா போன்ற அப்பொழுது வாசிப்பிலும் கல்வியிலும் பிரபலமாக இருந்த எழுத்தாளர்களைப் படிக்கும் முன்பே நான் பாரதியைத்தான் முதலில் வாசித்துப் பாரதிக்குள் நெருக்கமாகியிருந்தேன்.

அடுத்து, கவிஞர் வாலியின் பொய்க்கால் குதிரைகள் எனும் கவிதை ஆறாம் படிவத்தில் இன்னொரு பாடமாக இருந்தது. வாலியின் சொற்களில் மிரண்டு திளைத்தேன். ஒவ்வொரு படிமமும் எனக்குள் புதிய தேடலுக்கான அலைகளை உருவாக்கி விட்டது. மரங்களின் மீது அவர் பொய்க்கால் குதிரையில் உருவாக்கிய வார்த்தை விளையாட்டைக் கண்டு அக்கவிதையை பலமுறை புத்தகத்தில் எழுதி இரசித்தேன். அதனாலேயே தமிழ் இலக்கியத்தை ஆர்வத்துடன் படித்தேன். இரசாயணம், இயற்பியல், கூடுதல் கணிதம் போன்ற அறிவியல் பிரிவுப் பாடங்களைப் படித்துக் கொண்டிருந்த அதே காலக்கட்டத்தில் இலக்கியத்திலும் இரசனையை வளர்த்துக் கொள்ளத் துவங்கினேன்.

அந்தக் காலக்கட்டத்தில் நெருங்கிய நட்பு வட்டமாக உருவானவர்கள்தான் ‘மகாரிஷி’ நண்பர்கள் கூட்டம். மொத்த ஏழு பேர் கொண்ட குழு. இளங்கோதை, தினா, சுபாஷினி, புஷ்பராஜா, சண்முகம், ராதிகா என இவர்கள்தான் என் உலகம் என ஆனது. ஒன்றாய்ப் படிப்போம்; ஒன்றாய் திரிவோம். அவர்களைப் பற்றி நான் சில பதிவுகள் எழுதத் தொடங்கினேன். ஒவ்வொரு நண்பர்களைப் பற்றியும் அனைவரும் அந்நூலில் எழுதி கொள்வோம். சொல்ல முடியாத உணர்வுகளை அப்புதக்கத்தில் எழுத்துக்களாக எழுதிப் பார்த்துக் கொண்டோம். அப்புத்தகம் கைமாறி ஒவ்வொருவரிடமும் போகும்போது அதைத் திறந்து நண்பர்கள் நம்மைப் பற்றி என்ன எழுதி வைத்துள்ளார்கள் எனப் படிக்கும்போது பேரானந்தமாக இருக்கும். நான் அதன் பிறகு அப்புத்தகத்தில் நண்பர்களுடனான அனுபவங்களைத் தொடர்க்கட்டுரை பதிவு போல எழுதினேன்.

இப்பொழுது ஏடுகள் குறைந்து மெலிந்த என் புத்தக அலமாரியிலிருந்து இவ்விரு புத்தகங்களையும் எடுத்துப் பார்த்தேன். சிரிப்பும் ஆர்பாட்டமும் தனிமையும் இரசனையும் நிரம்பிய ஓர் அலை மனத்தில் எழுத்துக்களாக எழுகின்றன. கிறுக்கல் புத்தகத்தில் கிடக்கும் எண்ணற்ற கவிதைகளும் மகாரிஷி புத்தகத்தில் கிடக்கும் பதிவுகளும்கூட என் எழுத்திற்கு ஒரு தொடக்கப்புள்ளிகளாகின்றன. அப்பொழுது மனத்தில் அறிவில் பாரதியும் வாலியும் நிறைந்திருந்தார்கள்.

படிவம் ஆறு படித்துக் கொண்டிருக்கும்போது கிறுக்கல் நூலில் விளையாட்டாய் எழுதிய ஒரு கவிதை:

முற்றுப்புள்ளி என்கிற

அர்த்தம் தெரியாமல் நீண்ட நடைபோட

ஆயுள் கைதிகளாக

என் கவிதைகள்

என்னிடம்.

தொடரும்

-கே.பாலமுருகன்

(இத்தொடரில் வரும் எனது நண்பர்கள்தான் எனது நினைவுகளின் சாட்சிகளாகவும் எழுத்துப் பயணத்தின் ஒரு பகுதியாகவும் இருக்கின்றார்கள்)

கட்டுரைத் தொடர்: நானும் எனது எழுத்துப் பயணமும் – பாகம் 1

நான் எப்பொழுது எழுதத் துவங்கினேன், என் எழுத்துப் பயணம் எத்தகையது, யாரெல்லாம் உடன் இருந்து பங்காற்றியுள்ளார்கள், யாருடன் இணைந்து பயணித்துள்ளேன், என்னென்ன முயற்சிகள் மேற்கொண்டுள்ளேன் என விரிவாக இலக்கியம், இலக்கிய செயல்பாடுகள் சார்ந்து மட்டும் பதிவு செய்ய வேண்டியுள்ளது. பலமுறை ஆங்காங்கே நேர்காணல், பத்திகளில் இதனைக் குறிப்பிட்டிருந்தாலும் மொத்தமாகத் தொகுத்து வைத்துக்கொண்டால் அடுத்து வரக்கூடிய தலைமுறைக்கு மேற்கோளாக இருக்கும் என்றே நினைக்கிறேன். என்னை நானே தொகுத்துப் பார்த்துக் கொள்ளவும் கூடுதல் வாய்ப்பாக இருக்கும்.

நயனத்தில் வெளிவந்த ஷோபி உண்மை கதைகள் பகுதிக்குத்தான் நான் முதலில் இலக்கியம் சார்ந்த வாசகனானேன். (ஆரம்பப்பள்ளியில் கிருஷ்ணர் கதைகள் விரும்பி வாசிப்பேன் என்றாலும் இடைநிலைப்பள்ளி காலத்திலிருந்தே என் இலக்கிய அனுபவ வரலாற்றைத் தொடங்கலாம் என நினைக்கிறேன்)

இரண்டாம் படிவம் படித்துக் கொண்டிருக்கும்போதே (14 வயது) நயனம் இதழைத் தீவிரமாக வாசிக்கத் துவங்கியிருந்தேன். நானே எனது மவுண்டன் சைக்கிளில் சென்று சுங்கைப்பட்டாணியில் இப்பொழுது இருக்கும் முத்தையா கடைக்கு எதிர்ப்புறத்தில் ஓர் ஒட்டுக்கடையில் நயனம் இதழை வாங்கிக் கொள்வேன். அப்படிச் சேகரித்து வைத்து நயனம் இதழ்கள் வீட்டின் அறையில் நிரம்பிக் கிடக்கும். அக்காவும் என்னுடன் சேர்ந்து நயனம் இதழை வாசிக்கத் துவங்கினார்.

எனது சிறார் பருவத்தில் நான் தீவிர சினிமா இரசிகன். எனது நினைவாற்றலைப் பரிசோதிக்க சினிமாவின் பெயர்களையே கேட்பார்கள். அப்பொழுதிலிருந்தே சுயமாக நடித்துக் கொள்வது, நடிகர்களின் படங்களைப் புத்தகத்தில் சேகரித்துக் கொள்வதென சினிமாவைப் பின்தொடர்ந்தேன். அப்படிச் சினிமா செய்திகளைப் படிக்கத்தான் நயனம் இதழுக்கு வாசகனானேன். அப்படியே அந்த இரசனை இலக்கியத்தின் பக்கமும் திரும்பியது. குறிப்பாக ஷோபி எழுதும் உண்மை கதைகள் சுவாரஷ்யமாக இருக்கும் என்பதால் அதற்குத் தீவிர இரசிகனானேன். அப்பொழுதெல்லாம் ஷோபி என்பவர் ஓர் ஆண் என நினைத்திருந்தேன். ஆனால், அவர் ஒரு பெண் எழுத்தாளர் என்பது பின்னர்தான் தெரிந்துகொண்டேன். மேலும், ஷோபியின் உண்மை கதைகள் பகுதிக்கு அப்பொழுது பக்கங்கள் வடிவமைத்துக் கொண்டிருந்தது ஓவியர் சந்துருத்தான் என்பது சமீபத்தில்தான் எனக்குத் தெரியும். ஆக, என்னை முதலில் ஈர்த்த இதழ் நயனம் தான்.

அந்தக் காலக்கட்டத்தில்தான் கிருஷ்ணப் பக்தி இயக்கத்தின் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டத்தில் மேடை நாடகத்தில் நடிக்க நண்பர் பொண்ணுதுரை மூலமாக வாய்ப்புத் தேடி வந்தது. எனக்கிருந்த நடிக்கும் ஆவலை அதன்வழி தீர்த்துக் கொண்டேன். முதல் வேடமே அரக்கன் வேடம்தான். கம்சன் தன் தங்கை தேவகியைச் சிறையில் அடைத்துவிடுவான். அந்தச் சிறையைப் பாதுகாக்கும் அரக்கனில் ஒருவனாக நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்தேன். அரங்கம் முழுவதும் கிருஷ்ணப் பக்தர்கள். அத்தனை பேருக்கு முன்னால் முதன்முதலில் நடிக்கும் தருணம் பேரனுபவமாக மாறியது. பிறகு மெல்ல, பரதன், சைத்தன்ய பிரபு, சித்திரக் குப்தன் என எனக்கான பாத்திரங்கள் விரிவடைந்தன.

நண்பர்களுடன் சேர்ந்து புராண நாடகங்களை எழுதி இயக்கவும் செய்தேன். நான் எனது 16ஆவது வயதில் முதலில் நண்பருடன் இணைந்து எழுதியது எமலோகம் நாடகம்தான். அதனை நாங்கள் பினாங்கு மாநிலத்தில் அரங்கேற்றினோம். சினிமாவும் நயனம் வாசிப்பும் மேடை நாடகமும்தான் என்னை இலக்கியத்தின் பக்கம் இழுத்து வந்தன. இலக்கியத்தின் மீதான இரசனையை உருவாக்கியதில் இந்தத் துவக்கக் கால அனுபவங்களுக்குப் பெரும் பங்குண்டு.

கூடுதல் இணைப்பு:

2007ஆம் ஆண்டில் திண்ணை.காமில் நான் எழுதி, பின்னர் என் வலைப்பக்கத்தில் பிரசுரித்த ஒரு கவிதை இது. இந்தக் கவிதையை எழுதும்போதெல்லாம் நான் கவிதையை யாரிடமும் அல்லது பட்டறைகளிலும் பயிலவில்லை. ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி காலக்கட்டத்தில் (2004-2006) நான் உருவாக்கிக் கொண்ட தீவிர வாசிப்புத்தான் எனக்குள் இருந்த எழுத்தாளனையும் வாசகனையும் கூர்மைப்படுத்தியது. அது தொடர்பான பதிவு அடுத்தடுத்தத் தொடரில் இடம்பெறும்.

இறந்தவர்களின் கைகள் (2007)

அந்த மங்கிய

நீர் முகப்பில்

அவர்களின் கைகள்

நெருங்கி வருகின்றன.

நீர் அலைகளில்

அவர்களின் கைகள்

விட்டுவிட்டு தவறுகின்றன.

எப்பொழுதோ ஏதோ ஒரு பொழுதில்

அவர்களின் கைகள்

உயிர் வாழ வேண்டி

நீர் முகப்பின் மேற்பரப்பில்

அசைந்து அசைந்து

எத்தனை பேர்களை

அழைத்திருக்கும்…

இன்றுஅது இறந்தவர்களின்கைகள்.

“எத்தன பேரு இங்க

உழுந்து செத்துருக்கானுங்க…

இந்தத் தண்ணீ அப்படியே ஆளே

உள்ளெ இழுத்துரும்”

நீர் முகப்பின்

அருகில் அமர்ந்துகொண்டு

ஆழத்தை வெறிக்கிறேன்.

மங்கிய நிலையில்

ஓர் இருளை சுமந்திருக்கிறது.

இருளுக்குள்ளிலிருந்து

எப்பொழுது வரும்

இறந்தவர்களின் கைகள்…

தொடரும்

கே.பாலமுருகன்

(முடிந்தவரை வலைப்பக்கப் பதிவுகள், நாளேடுகள், கிறுக்கல் புத்தகங்கள், புகைப்படங்கள் எல்லாவற்றுக்கும் மேலாக இன்னும் களையாமல் இருக்கும் நினைவுகள் அடிப்படையில் என் எழுத்து வரலாற்றைப் பதிவு செய்கிறேன். இவற்றுள் தொடர்புள்ளவர்கள் எங்கேனும் பிழையறிந்தால் என்னிடம் தெரியப்படுத்தலாம்)

இரசனை விமர்சனம் ஓர் எளிய புரிதல்

ஒரு படைப்புடன் வாசகன் உறவுகொண்டு அவனது மனம் அடையும் உணர்வுகளை, புரிதல்களை, விருப்பங்களை, விருப்பமற்றவைகளைச் சொல்ல விளையும் இடத்திலிருந்து உருவாவதுதான் இரசனை சார்ந்த விமர்சனமாகும். பின்னர், வாசகன் அப்புரிதலை மொழியின் வாயிலாக தர்க்கம் செய்து அறிவுத்தளத்தில் நிறுவுகிறான். அது விமர்சனப்பூர்வமான ஓர் அந்தஸ்த்தைக் கொடுக்கிறது. தமிழ்ச்சூழலில் அதிகம் பேசப்பட்ட அல்லது சர்ச்சையான இலக்கிய விமர்சனங்கள் யாவும் தனிப்பட்ட இரசனையிலிருந்து உருவாகி வந்த பின்னணியைக் கொண்டிருப்பதைக் காணலாம். அதனையே நாம் இரசனை விமர்சனம் என்கிறோம். இரசனை விமர்சனத்திற்கு எப்பொழுதும் ஒரு கவனமும் மதிப்பும் இலக்கிய சூழலில் இருப்பதையும் நாம் தவிர்க்க இயலாது. படைப்பு மனம் என்பதுபோல் அது வாசக மனத்தின் எழுச்சி.

அத்தகைய இரசனை என்பது மிகவும் நுட்பமாக வாசிப்பின் வழியே இலக்கியப் பார்வையாகக் கட்டமைக்கப்பட்டுக் கொண்டவை. வாழ்வியல் அனுபவமும் வாசித்துப் பெற்ற நுண்ணுர்வும் இணைந்து உருவாக்கும் வாசக மனோபாவம் ஒரு வாசகனின் இலக்கியத்தைப் புரிந்து கொள்வதற்கான எளிய அளவுக்கோல்களாக மாறுகின்றன.

அவற்றின் வழியாகவே இலக்கியம் சார்ந்த மதிப்பீடுகளை வாசகன் தனக்குள் உருவாக்கிக் கொள்கிறான். அதுவே பிற படைப்புகளின் மீதான தமது மதிப்பீடாக முன்வைக்கப்படுகிறது. நாளையே அவை களைந்தும் அல்லது செயலிழந்தும் போக முடியும் காரணம் இவை அனைத்திற்கும் ஆதாரமாய் நிற்பது இரசனை என்கிற மனம் சார்ந்த அசைவுகள் என்பதே. நாளை அவனேகூட அதனை உதறித் தள்ளிவிட்டு அல்லது பாம்புகள் தோலுரித்து விட்டுச் செல்வதைப் போன்று நகர்ந்திட வாய்ப்புண்டு.

ஒரு படைப்பின் முன் வாசகன் அடையும் அகம் சார்ந்த ஓர் உரையாடலையே அவன் விளக்க முற்படுகிறான். அதுவே இரசனை விமர்சனமாகிறது. இத்தகைய ஒரு விமர்சனப் பார்வைக்கு அவன் எவ்வித கோட்பாடுகளையோ அல்லது ஒப்பீட்டு ஆய்வுகளையோ முன்வைக்கவில்லை. அவன் மனத்தை மட்டும் முழுவதுமாகத் திறந்து வைக்கிறான். இதுபோன்ற இரசனை விமர்சனங்களை நாம் இலக்கியத்தின் நிரந்தரமான மதிப்பீடாகக் கொள்ளுதல் சாத்தியப்படாது. அது மாற்றத்திற்குட்பட்டு நகர்ந்து கொண்டே இருக்கும்.

ஆனால், திறனாய்வு என்பதை இத்தகைய பின்புலத்தைக் கொண்டு நாம் புரிந்துகொள்ள இயலாது. அது முற்றிலும் நம் அறிவுக்குப் பயிற்சியளித்து ஓர் இலக்கியப் படைப்பை அணுகும் முறைமைகளை வகுத்துக் கொடுக்கிறது. இலக்கியத்தை ஆய்வு செய்து அணுகுவதற்கான திறன்களை அடிப்படையாகத் தொகுத்துக் கொண்டவை. முற்றிலும் இரசனை விமர்சனம் கொடுக்கக்கூடிய நெகிழ்வுத்தன்மைகளுக்கு அப்பாற்பட்டவையாக அமையக்கூடியவை. மொழி, அரசியல், கோட்பாடுகள், கூறுமுறை, பாத்திரப்படைப்பு என்கிற இன்னும் பற்பல உள்சட்டகங்களைக் கொண்டு நிகழ்த்திப் பார்த்து அறிவின் வழியே அளந்துபார்க்கக்கூடிய தன்மைகள் கொண்டவை.

திறனாய்வுக்கு இன்னும் பல மேற்கோள்கள், சான்றுகள் அவசியமாகிவிடும். மனத்தின் வழியே முன்வைக்கப்படும் மதிப்பீடுகளுக்கு இருக்கும் தளர்வு அறிவின் வழியே முன்வைக்கப்படும் மதிப்பீடுகளுக்குக் கிடையாது. திறனாய்வுக்கு நாம் ஆதாரப்பூர்வமானதொரு பின்புலத்தை முடிந்தவரை கட்டியெழுப்ப வேண்டும். அதனால்தான் ஓர் எளிய வாசகன் அவன் இரசனையினாலே ஒரு படைப்பைக் கடந்தும் ஆழ்ந்தும் சென்று புரிந்து கொள்கிறான்.

வாசிப்பைப் பன்முகமாகக் கொண்டிருக்காமல் ஒரு படைப்பை விமர்சனம் செய்ய முயல்வது ஆபத்தானதாகும். அத்தகையோரின் விமர்சனமும் ஆபத்தானதுதான். ஆழமான, விரிவான வாசிப்பின் வழியே தன் இரசனையைக் கட்டமைத்து வைத்திருப்பவனின் விமர்சனப் பார்வையும் இன்னும் வாசிப்பில் தன்னை ஆழப்படுத்திக் கொள்ளதவனின் விமர்சனப் பார்வையும் ஒன்றுபோலவே வந்து இன்று குவிந்து கிடக்கின்றன. அவற்றுள் பெரும்பாலும் ‘சிறந்த’ ‘சிறந்த’ என்ற வார்த்தை உருவாக்கும் மயக்கம் இரசனையை உருவாக்கிக் கொள்ள இலக்கிய வாசிப்பினுள் ஆவலுடன் வரும் இளைஞனுக்கு ஒரு குழப்பத்தை உருவாக்க முடியும்.

இங்குச் சிறந்தவைக்கு நாம் எந்த இலக்கணத்தையும் வகுத்து வைத்திருக்கவில்லை. அவரவர் வாசிப்பனுபவம், தேடல், அரசியல் புரிதல், அறிவாற்றல், வாழ்வனுபவம் போன்றவற்றின் அடிப்படையில் தொகுத்துக் கொள்ளப்படும் இரசனையின் வெளிப்பாடே.

ஆக, யாருடைய இரசனைக்குள்ளும் சிக்கிக் கொள்ளாமல் அதே சமயம் பொருட்படுத்த வேண்டிய இலக்கியப் பார்வைகளைக் கவனத்தில் கொண்டும் நாம் நமக்கான வாசிப்பனுபவத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். யாரோ ஒரு வாசகனால் ஒதுக்கப்பட்டுவிட்ட படைப்பைத் தாமும் ஒதுக்கிவிட வேண்டும் என்று நினைப்பதும் எல்லோரும் கொண்டாடும் ஒரு படைப்பைத் தாமும் அவசரமாகக் கொண்டாடிவிட வேண்டும் என நினைப்பதும் இலக்கியத்திற்குள் பயணிக்கும் உங்களின் வாசக மனநிலையை அவை பாதிக்கக்கூடும். வாசக மனம் விரிவு பெறாமல் போய்விட வாய்ப்புண்டு. எல்லா படைப்புகளும் எல்லோருக்கும் ஒரே மாதிரியான திறப்புகளைக் கொடுப்பதில்லை.

இரசனை சார்ந்து முன்வைக்கப்படும் விமர்சனங்கள் பெரும்பாலும் சர்ச்சையில் முடிவதை நாம் அறிந்திருக்கக்கூடும். எழுத்தாளனும் வாசகனும் இரசனை சார்ந்து முன்வைக்கப்படும் மதிப்பீடுகளுள் முரண் கொள்கிறார்கள். ஒரு பொது வாசகனால் எந்நேரத்திலும் ஒரு படைப்பை நிராகரிக்க முடியும் என்பதுபோல் ஓர் எழுத்தாளனால் எந்த விமர்சனத்தையும் புறக்கணித்து நகர முடியும். ஆயினும், தான் ஒரு படைப்பை நிராகரிப்பதற்கான விமர்சனம் சார்ந்த அளவுகளை ஒரு வாசகன் முன்வைப்பது இரசனை விமர்சனத்திற்குச் செய்யக்கூடிய ஒரு நேர்மையாகவே கருதலாம். ‘சிறப்பு வாழ்த்துகள்’ எனச் சொல்லிவிட்டு ஒரு படைப்பைப் பொய்யாகப் பாராட்டுவது எத்துணைக் குறைமிக்கது என நினைக்கிறோமோ அதே போல் பிடிக்கவில்லை, இது கதையே இல்லை என்பதற்கும் ஒரு வாசகன் தன் பார்வைகளை இலக்கியப் பின்புலத்திலிருந்து முன்வைக்காமல் விடுவதும் குறையேயாகும். இத்தகைய குறைபாடுகள்தான் எழுத்தாளனுக்கும் விமர்சகனுக்கும் இடையே முரண்களை உருவாக்குகின்றன.

எழுத்தாளனே வியந்து உணரக்கூடிய விமர்சனங்கள் உள்ளன. எழுத்தாளனைவிட ஒரு விமர்சகன் ஒரு படைப்பிற்குள் திறந்து காட்டும் இடங்கள் அபூர்வமானவையாக அமைந்துவிடுவதுண்டு. எனது ‘அலமாரி’ என்கிற சிறுகதைக்கு மறைந்த எழுத்தாளர் ரெ.கார்த்திகேசு எழுதிய விமர்சனத்தை நான் இன்றும் ஆச்சரியத்துடனே அணுகுகிறேன். என் கதையை எனக்கே திறந்து அதன் புரிதலை விரிவாக்கிக் காட்டிய விமர்சனப் பார்வை அது. ஆக, ஓர் எழுத்தாளன் விமர்சனத்தைப் பொருட்படுத்தாமல் போய்விடுவதும் சில ஆச்சரியங்களையும் திறப்புகளையும் கிடைக்கப் பெறாமல் செய்துவிடும். அதற்காக, அனைத்து விமர்சனங்களுக்கும் ஓர் எழுத்தாளன் இசைந்துகொடுக்கத் துவங்கிவிட்டாலும் சிக்கல்தான். விமர்சனத்தைக் கருத்தில் கொண்டு ஒரு படைப்பு உருவாவதில்லை.

படைப்பை முன்வைத்து உரையாடுவதற்கான சாத்தியங்களைத் தரவல்லதுதான் விமர்சனம். படைப்பு படைத்துவிட்டப் பின்னர் அது வாசகனின் உரையாடலுக்கான தளங்களுக்குள் செல்கிறது. தம்மைத் தாமே மறுகண்டுபிடிப்பு செய்து கொள்கிறது. பல புரிதல் தளங்களை அடைந்து சிலுப்பிக் கொண்டு எழுகிறது. சமூகத்தில் பலவிதமான உரையாடல்களை உருவாக்கி நகர்கிறது. உரையாடல்களிலிருந்து உப உரையாடல் என விரிந்து சென்று விவாதிக்கத் தூண்டுகிறது. இலக்கியம் தொடர்பான மதிப்பீடுகளுக்கு உயிரூட்டி தீவிரமடைய செய்கிறது. இப்படியாக பல அசைவுகளை உருவாக்க வல்லதே படைப்புகள். படைப்புகளிலிருந்து இரசனைகள் மேலெழுகின்றன; இரசனைகளிருந்து படைப்புக் குறித்த புரிதல்கள் விரிவாகுகின்றன. இவையே ஒரு காலக்கட்டத்தின் இலக்கிய மதிப்பீடுகளாகத் தொகுத்துக் கொள்ளப்படுகின்றன. நாளை இதையும் கடந்து போவோம்.

-கே.பாலமுருகன்

யார் கொலையாளி? (விசாரணைத் தொடர்: பாகம் 1)

பார்த்த சாட்சியமோ அல்லது போதுமான ஆதாரங்களோ இல்லாததால் சிவகணேஷ் நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டான். இன்னும் இரு மாதங்களில் மீண்டும் வழக்குச் செவிமடுப்பிற்கு வந்த பின்னரே அவனுக்கான விடுதலை உறுதியாகும்.

இரண்டு வாரம் லோக்காப்பில் இருந்த அயர்வும் நடுக்கமும் கலந்து அவனைச் சூழ்க்கொண்டு பயமுறுத்திக் கொண்டிருந்தாலும், விடுவிக்கப்பட்ட நாளில் மனம் இலேசாகியது. வரும் வழியில் 24 மணி நேரக் கடையில் சாப்பிட்டுவிட்டு ஒரு வெண்சுருட்டை ருசித்துக் கொண்டிருந்தான்.

“அப்படின்னா நீ கொலை செய்யல?”

சிவகணேஷ் நண்பன் மூர்த்தி. அவன்தான் அவனுக்கான வழக்கறிஞரை ஏற்பாடு செய்தது ஜாமின் பணம் எனப் பலவற்றையும் செய்து உதவியவன்.

“மச்சான்! எத்தன தடவ சொல்றது? என்ன சந்தேகப்படறீயா? அதான் புக்தியே இல்லயே… அப்புறம் என்னடா?”

“எவிடன்ஸ் இல்ல… சாட்சியும் இல்ல… ஆனா…”

“செம்ம சூரு… சைட்ல செலுத்தியிருப்பன். அதான் காடிய அங்கப் போட்டுட்டுத் தூங்கிட்டன்…அப்புறம் என்ன நடந்துச்சின்னு தெரில…”

மூர்த்தி எதிரில் இருந்த தடுப்பு இரும்பின் நுனியில் வெண்சுருட்டின் சாம்பலைத் தட்டி உதறினான். சாம்பல் துகள்கள் சுவரில் சரியும் முன்பே காற்றில் பறந்து கரைந்தன.

“அப்படின்னா, அங்க இருந்த பொணத்துக்கும் உனக்கும் எந்தத் தொடர்பும் இல்ல?”

“அட நீ ஒன்னு. கிறுக்கன் மாதிரி பேசிக்கிட்டு இருக்காத… கொலை செஞ்சிட்டுப் எவனாவது அங்கயே தூங்குவானா? நான் என்ன முட்டாளா?”

மூர்த்தி மூச்சை இழுத்து விட்டான். கழுகு போன்ற தன் பார்வையைச் சிவகணேஷ் மீது படரவிட்டான். கண்கள் பொய்மைக்கு அப்பாற்பட்ட உறுப்பு. சொற்களில் ஆயிரம் வேடிக்கை, வித்தைகள் இருந்தாலும் கண்கள் உண்மையைத் தாங்கி நிற்கும்.

“ஜாமீன் காசு பத்தி கவலப்படாத… எப்படியாவது கடன வாங்கியாவது கட்டிருவன்…மாலினி இருக்கா… ஏதாச்சம் உதவி செய்வா…திருடன் மாதிரி பாக்காத…” என்ற சிவகணேஷ் மீதியிருந்த வெண்சுருட்டை வேகமாக இழுத்துவிட்டுக் கீழே வீசினான்.

இருவரும் அங்கிருந்து கிளம்பினர். மூர்த்தி ஏதும் பேசவில்லை. சிவகணேஷ் தன் மனைவி மாலினியை நினைத்துக் கொண்டே அமர்ந்திருந்தான். வீட்டிற்குச் செல்லும் வழியில் கொலை நடந்த சாலையை வாகனம் கடந்து கொண்டிருந்தது. மூர்த்தி தெரிந்துதான் அவ்விடத்தை நோக்கி வாகனத்தைச் செலுத்திக் கொண்டிருந்தான். சிவகணேஷ் கண்களை மூடினான்.

மழை பெய்து விட்டிருந்ததால் வாகனத்தின் கண்ணாடியில் மீந்திருந்த துளிகள் ஒவ்வொன்றாய் உடைந்து உடைந்து ஒழுகிக் கொண்டிருந்த இடைவெளியில் போதையின் உச்சத்தில் இருந்த சிவகணேஷ் பக்கத்து வாகனத்தைவிட்டு வெளியேறும் அந்த மர்ம உருவத்தை மீண்டும் மீண்டும் நினைவுப்படுத்த முயன்றான். கடைசிவரை அது ஓர் ஆணின் முகம் என்பதைத் தவிர அவனிடம் வேறு ஆதாரம் இல்லாததால் அத்தகைய ஒரு தகவலை அவன் கடைசிவரை காவல்துறை விசாரணையில் சொல்லவே இல்லை.

“ஆனா… மச்சான் நான் ஒரு தடவ கண்ணத் தொறந்து பார்க்கும்போது ஒருத்தன் அந்தக் காடிலேந்து வெளிய வந்தான்… அது ஒருத்தனோட முகம்… ரொம்ப பழக்கமான தெரிஞ்ச முகம்தான்… சரியா லின்க்காவ மாட்டுது… இல்லன்னா போலிஸ்ல மாட்டி விட்டுருப்பன்…”

மூர்த்தி செலுத்திக் கொண்டிருந்த வாகனத்தைச் சட்டென ஓரத்தில் நிறுத்தினான். அவன் முகத்தில் சிறிய கலவரம்.

“நீ இந்த மாதிரி ஏதும் பேசாதடா… கம்முன்னு இருக்கீயா? நான் என்ன சொன்னன்? எதையுமே உளறாத… மொத உன் கற்பன குதிரய ஓரங்கட்டு… புரியுதா?”

சிவகணேஷ் இருக்கையைக் கொஞ்சம் இறக்கிவிட்டுச் சாய்ந்து கொண்டான். முதுகில் கணமான வலி அடர்ந்திருந்தது. மூர்த்தி அப்பொழுதுதான் வழக்கறிஞர் மாரிமுத்துவிடமிருந்து வந்த புலனச் செய்தியைப் படித்துக் கொண்டிருந்தான்.

“கேஸ் சாமுன்??? Don’t worry, Everything will be alright for your friend…”

கைப்பேசியை முடக்கிவிட்டுச் சிவகணேஷைப் பார்த்தான்.

அன்று கழுத்தறுப்பட்டுப் பிணமாகக் கிடந்த மாலினியின் பக்கத்தில் உறங்கிக் கொண்டிருந்ததைப் போலவே சிவகணேஷ் அவனுடைய உலகத்தில் அமைதியாகப் படுத்திருந்தான்.

விசாரணை 1: சிவகணேஷ்

கேள்வி: கொலை நடந்த நன்று எங்குப் போயிருந்தீர்கள்?

நானும் என் மனைவியும் அன்று ஒரு காப்புறுதி நிறுவனத்தின் விருத்துக்குப் போயிருந்தோம். நண்பன் மூர்த்தியின் ஏற்பாடு. அவனுக்கு முக்கியப் பதவி உயர்வு என்பதால் எங்களையும் இன்னும் சில குடும்ப நண்பர்களையும் அழைத்திருந்தான்.

கேள்வி: எத்தனை மணிக்கு அங்கிருந்து புறப்பட்டீர்கள்?

11ஐ நெருங்கிக் கொண்டிருந்தது என்று நினைக்கிறேன். அதுவும் மாலினி போகலாம் என்று அத்துடன் மூன்றுமுறை சொல்லிவிட்டதால் வேறு வழியில்லாமல் கிளம்பினேன்.

கேள்வி: விருந்து நடந்த இடத்திலிருந்து வீட்டிற்கு எவ்வளவு தூரம்?

போகும்போது ஏறக்குறைய 45 நிமிடங்கள் எடுத்தன. நான் இதுவரை அந்தக் குறிப்பிட்ட உணவகத்திற்குச் சென்றதில்லை.

கேள்வி: வாகனத்தைச் செலுத்தும்போது நீங்கள் போதையில் இருந்தீர்களா?

ஆமாம். ஆனால், அவ்வளவு போதை என்று சொல்வதற்கில்லை. நான் வாகனத்தை முடுக்கிவிட்டால் எவ்வளவு போதை என்றாலும் முறையாகவே ஓட்டுவேன்.

கேள்வி: உங்கள் மனைவி உங்களை அனுமதித்தாரா?

மாலினிக்கு இரவில் வாகனம் ஓட்டுவதென்றால் கொஞ்சம் பயம். எதிரில் வரும் வாகனங்களின் விளக்கு வெளிச்சம் அவளுக்கு உபாதை. பார்வையை மறைத்துவிடும் என்று பயப்படுவாள்.

கேள்வி: பிறகு நீங்கள் ஏன் வாகனத்தை நிறுத்தினீர்கள்?

அன்று என்னவோ என்னால் என் மயக்கத்தைக் கட்டுப்படுத்த இயலவில்லை. ஒருவேளை நான் அருந்திய மதுபானம் எனக்கு ஒப்புக்கொள்ளவில்லை என்று நினைக்கிறேன்.

கேள்வி: சரியாக எத்தனை மணிக்கு வாகனத்தை அங்கு நிறுத்தீனீர்கள் என்று ஞாபகம் உள்ளதா?

ஆம், 12.05 மணி இருக்கலாம். அப்பொழுதுதான் நான் வாகனத்தை முடக்கினேன்.

கேள்வி: எப்படி இத்தனைத் துல்லியமாக நேரத்தைச் சொல்ல முடிகிறது?

சரியாக 12 மணிக்கு வானொலியில் தேசிய கீதம் ஒலிப்பாரகியது என்னால் ஞாபகப்படுத்த இயல்கிறது.

கேள்வி: பிறகு என்ன நடந்தது?

அதன் பிறகு மாலினி ஏதோ கத்திக் கொண்டிருந்தாள். என்னால் நினைவுப்படுத்த இயலவில்லை. அப்படியே மயக்கம் அதிகமாகி நான் ஓர் ஆழ்ந்த உறக்கத்திற்குள் சென்றுவிட்டேன்.

கேள்வி: பிறகு எத்தனை மணிக்கு எழுந்தீர்கள்?

எனக்கு அப்பொழுது நேரம் சரியாக நினைவில் இல்லை. எழுந்ததும் என் வாகனத்தைச் சுற்றி ஆள் கூட்டம் நிரம்பியிருந்தது. சில வாகனங்களும் அங்கே நிறுத்தப்பட்டிருந்தன. அதில் ஒன்று காவல் துறை வண்டி.

தொடரும்

கே.பாலமுருகன்

கொரோனாவும் எறும்புண்ணியும்: ஓர் இயற்கையின் சீற்றம்



‘சார்ஸ் தொற்றுக்கிருமி சம்பவத்திற்குப் பிறகும் ஒவ்வொருநாளும் குறைந்தது 1400 பன்றிகள் கொல்லப்பட்டு ஹங்கோங் எல்லையைக் கடந்து வுஹானுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன’

நான் எறும்புண்ணி. உலகில் அழிந்து வரும் மிருகங்களின் கூட்டத்தைச் சேர்ந்தவன். 2003ஆம் ஆண்டு என்னை வேட்டையாடக்கூடாது என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், வூஹானின் 20,000 கள்ளத்தனமான பண்ணைகளிலிருந்து பல்லாயிரம் மிருகங்கள் வேட்டையாடப்பட்டுக் கொல்லப்பட்டு வூஹானின் பிரபலமான Wet Market-க்குக் கொண்டு வரப்படுகின்றன என்கிற உண்மை கொரோனா பரவிய பிறகுத்தான் உங்களுக்கெல்லாம் தெரிய வந்தது அல்லவா? ஆமாம், நாங்கள் வாழ்ந்தால் என்ன அழிந்தால் என்ன?

நான் எறும்புகளையும் பூச்சிகளையும் மட்டும் தின்று அதன் மூலம் உயிர் வாழக்கூடிய ஓர் எளிய மிருகம். ஆனால் வூஹான் மார்க்கெட்டிற்குச் சென்றுள்ளீர்களா? பாம்பு, முதலை, வௌவால் இன்னும் என்னென்ன மிருகங்கள் உள்ளன என்பதை நாள் முழுவதும் நீங்கள் கணக்கிடலாம்.

சரி, ஏன் சீனாவில் இவ்வளவு மிருகங்கள் வேட்டையாடப்பட்டு உணவாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. அதற்கொரு வரலாறும் சொல்லப்படுகிறது. 1959-1961 வரை சீனாவில் ஏற்பட்ட மிகப்பெரிய பஞ்சத்தால் 3 கோடி மக்கள் இறந்துபோனார்கள் என்று சொல்லப்படுகிறது. அக்காலக்கட்டத்தில் ஏற்பட்ட கொடூர பஞ்சத்தால் கிடைக்கும் மிருகங்களைக் கொன்று சாப்பிடத் துவங்கிய ஒரு பழக்கம்தான் இன்றுவரை நவீன சமூகத்தால் போற்றப்பட்டும் வருகிறது. ஆனால், இது இப்பொழுது சீனாவின் சிக்கல் மட்டுமல்ல. உலகின் சிக்கலாகவும் மாறிவிட்டன. ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமாக இறைச்சிகள் சாப்பிடப்படுகின்றன. இம்மண்ணில் உணவு தொடர்பான ஒரு புரட்சி வரும்வரை மனிதர்கள் வெறித்தனத்துடன் மிருகங்களை வேட்டையாடி தின்று கொண்டிருப்பதும் அதனால் இன்னும் பல இயற்கை எதிர்வினைகள் வருவதும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

‘கட்டுப்படுத்த முடியாத மனித நாக்குகளே கிருமிகளை உற்பத்தியும் செய்கின்றன’
என்ன செய்வது? இன்று உலகம் முழுவதும் துரித உணவுக்கும் கே.எப்.சி கோழிக்கும் நாக்குகள் அடிமையாகிவிட்டன அல்லவா?

தவளை, வாத்து, உடும்பு என்று எந்த மிருகத்தையும் விட்டு வைப்பதில்லை. உணவிற்கும் குணத்திற்குமான தொடர்பை இப்பொழுதாவது விளக்க நேரிடும் போல. அப்படியாக சட்டவிரோதமாகத்தான் டிசம்பர் மாதம் என்னை வூஹான் சந்தைக்குக் கொண்டு வந்தார்கள். இது என் தவறா? மிருகங்களான எங்களின் வாழ்விடங்கள் அனைத்தையும் சேதப்படுத்தி மாசுப்படுத்தி அழித்துக் கொண்டிருக்கும் மனித வர்க்கத்திற்குத் தெரியாமலில்லை; இயற்கையைச் சீண்டும்போது அதற்கான எதிர்வினையைச் சந்தித்துதான் ஆக வேண்டும் அல்லவா? கிருமிகள் இப்படியாகத்தான் தோன்றுகின்றன.

‘மிக அழகிய உயிரினமான மயில்களின் இரைச்சிகள் ஆயிரம் கணக்கில் இன்று இறைச்சி சந்தையில் பிரசித்திப் பெற்றுள்ளன’

என் உடலிலிருந்துதான் கொரோனா பரவியது என்று இன்னும் உலகத்தால் நிரூபிக்க முடியாத சூழலில் கிருமி எப்படி உருவாகியிருக்கும் என்று சிந்திக்க வாய்ப்புண்டா?

கிருமிகள் நம்மால் நம் அலட்சியத்தால்தான் உருவாகின்றன. ஒரு ரொட்டியைப் பாதி சாப்பிட்டுவிட்டு அதை அப்புரப்படுத்தாமல் அப்படியே வைத்துப் பாருங்கள். ஓரு சில நாட்களில் அந்த ரொட்டியில் கிருமி தொற்ற ஆரம்பிக்கும். ஆக, கிருமிகள் அபிவிருத்தி செய்வதற்கான வாய்ப்புகளை மனிதர்கள்தான் உருவாக்குகிறார்கள். அதற்குரிய ஓர் இடமாக பூமி மாறிக் கொண்டிருக்கிறது. கொரோனா மட்டுமல்ல இதைவிட கொடிய கிருமிகள் மேற்கொண்டும் வரலாம். கொரோனா குடும்பத்தைச் சேர்ந்த ஒருவகையான கிருமி மட்டுமே இப்பொழுது பரவி உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன. மேற்கொண்டு அக்குடும்பத்தைச் சேர்ந்த கிருமிகளும் பரவத் துவங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எப்படியிருப்பினும் இயற்கையின் சீற்றத்தை எதிர்கொண்டே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

இதையே ‘கிருமி சுனாமி’ என்றும் அழைக்கலாம். மிக நுண்ணிய உயிர் என்றாலும் அவை மனித உடலுக்குள் உருவாக்கும் விளைவுகள் கணிக்க முடியாதவை ஆகும். அனைத்து மிருகங்களையும் வேட்டையாடி சாப்பிடுவது இயற்கைக்குப் புறம்பாகும் என மனிதர்கள் முதலில் உணர வேண்டும். கொரோனா பரவிக் கொண்டிருக்கும் இக்காலக்கட்டத்திலாவது சைவ உணவைக் கடைப்பிடிக்கவும். என்னைக் குறைச் சொல்வதை நிறுத்திவிட்டு உங்களைப் பாதுகாக்க இயற்கையை அழிக்காதீர்.

உலக முன்னேற்றத்திற்காக காடுகளை அழிக்கும் மலைகளைச் சுரண்டும் பன்னாட்டு நிருவனங்களின் அத்துமீறல்களை நோக்கி கேள்வி எழுப்ப ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு என்பதை உணருங்கள்.
சிதைவுண்டு கிடக்கும் பூமியில் நச்சு உணவுகளையே தின்று கொளுத்துக் கிடக்கும் எங்களை நீங்கள் சாப்பிட்டால், நீங்கள் உருவாக்கிய விஷத்தை நீங்களே மீண்டும் உட்கொள்வதற்குச் சமம் என்பதை இந்தக் கொரோனா தாக்குதலுக்குப் பிறகாவது உணருங்கள். இதை ஒவ்வொரு அரசும் கருத்தில் கொண்டு உணவு புரட்சியிலும் இயற்கை பசுமை திட்டங்களிலும் துரிதமாக ஈடுபட வேண்டும்.

இப்படிக்கு,
எறும்புண்ணி.

ஆக்கம்: கே.பாலமுருகன்

‘இந்தப் பூமியில் உயிர்வாழ உரிமையுள்ள எத்தனையோ கோடி மிருகங்களை மனிதர்கள் திண்பதற்கும் தன் விருப்பத்திற்குக் கொல்லவும் செய்கிறார்கள்’

-Deborah Cao, a professor at Griffith University in Australia

மரணத் தண்டனையை அகற்றிய மனித உரிமை நாடாக மலேசியாத் திகழ வேண்டும் – 2020 தூர இலக்கின் முதல் வெற்றியாகட்டும்

‘கட்டாய மரண தண்டனை விதிக்கும் சட்டத்தை அகற்ற உத்தேசிக்கப்பட்டிருப்பதால் ஏற்கனவே மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கான மாற்றுத் தண்டனை குறித்து பரிசீலிக்க வேண்டியுள்ளது ‘

மேற்கண்ட கூற்றை பிரதமர்துறை அமைச்சர் லியு வுய் கியோங் இன்று  மனித உரிமை நாளை முன்னிட்டு கோலாலம்பூரில் அறிவித்துள்ளார்.

செய்தி: https://malaysiaindru.my/180287

 

 

இச்செய்தி என் கவனத்தை ஈர்த்ததற்கான முக்கியமான காரணங்களை முன்னிறுத்தியே இச்சிறிய பகிர்வாகும். 2018 அக்டோபருக்குப் பின்னுள்ள கணக்கின்படி உலகின் 106 நாடுகள் மரணத் தண்டனையை இரத்து செய்துவிட்டு அதற்கு மாற்றான தண்டனைகளையும் சீர்த்திருத்தங்கள் பற்றியும் ஆலோசித்துக் கடைப்பிடித்தும் வருகிறது. 26 பிப்ரவரி 2002ஆம் ஆண்டு செர்பியா நாட்டின் அரசு மரணத் தண்டனையை அதிகாரப்பூர்வமாக இரத்து செய்தபோது அவர்கள் உலகிற்குக் கவனப்படுத்திய காரணம் ‘ஒருபோதும் மரணத் தண்டனைகள் குற்றங்களைக் குறைக்க உதவாதபோது ஏன் அதனை அமல்படுத்த வேண்டும் என்கிற மையக்கேள்வியிலிருந்தே மரணத் தண்டனையை இரத்துச் செய்யும் கலந்துரையாடல் தொடங்கியது’.

ஆனால், தூக்குத் தண்டனையை இரத்து செய்துவிட்டால் குற்றம் அதிகரித்துவிடும் எனக் கவலைப்படுவதும் நியாயமான ஒரு சிந்தனையே. இருப்பினும், ஒவ்வொரு ஆண்டும் தூக்குத் தண்டனையால்தான் குற்றங்கள் குறைகிறது அல்லது குற்றவாளிகள் பயமுறுகிறார்கள் என்று ஆதாரத்துடன் நம்மால் நிரூபிக்க இயல்கிறதா? அதனைக் கலந்துரையாட வேண்டிய நிலையிலேயே நாம் உள்ளோம்.

 

அதே போல, Uzbekistan நாடு 2005ஆம் ஆண்டு மரணத் தண்டனையை முற்றாக நிராரிக்கும் சட்ட மசோதாவை அறிமுகப்படுத்தி 2008ஆம் ஆண்டு மரணத் தண்டனைச் சட்ட ஏட்டிலிருந்து நீக்கியது. நாகரிமடைந்து வரும் அரசு மனித உரிமையின் மீது அதீத கவனம் செலுத்துவதோடு மக்களுக்குப் பாதுகாப்பு அரணை அமைப்பதில் முன்னுரிமை செலுத்த வேண்டும் என்பதே அந்நாட்டின் அரசு மேற்கொண்ட கருத்தியல்வாதம் ஆகும்.

2007ஆம் ஆண்டு கசகஸ்த்தான் நாட்டின் பிரதமர் நுர்சுல்தான் அவர்கள் அனைத்துத் தூக்குத் தண்டனை கைதிகளுக்கும் ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டார். குற்றங்களை ஒழிக்க நாமும் குற்றத்தையே கையிலெடுக்கக்கூடாது என்பதே அப்போதையை வாதமாக முன்வைக்கப்பட்டிருந்தது. இப்படியாக ஒவ்வொரு நாடும் தனக்கே உரிய மேம்பட்ட கருத்துகளின் புரிதல்களின் அடிப்படையில் மரணத் தண்டனையை மறு ஆய்வு செய்து இரத்தும் செய்திருப்பது வரலாற்றுச் சான்றுகளாகும்.

உலகின் 193 நாடுகளில் 106 நாடுகள் மரணத் தண்டனைய இரத்துச் செய்துவிட்டது என்பது வரலாற்றில் மனித உரிமை மறுகண்டுபிடிப்பு செய்யப்பட்டுத் தொடர்ந்து அரசுகளால் நிறுவப்பட்டு வருவதைக் குறிக்கிறது. ஆகக் கடைசியாக கடந்த 2017ஆம் ஆண்டில் கென்யா நாடு மரணத் தண்டனையை இரத்துச் செய்துவிட்டிருக்கிறது. அடுத்து வரலாற்றின் அவ்வரிசையில் மலேசியா இடம்பெறுமாயின் இந்நாட்டின் குடிமகனாகப் பெரும் மகிழ்ச்சிக் கொள்வேன். கொலைக்குப் பதில் கொலைத்தான் என்பது மனோவியலின்படி  சரியான தீர்வாகாது. அதனைச் சட்டப்படுத்தி அமல்படுத்தினாலும்  சரியான அணுகுமுறையல்ல என்று பரவலாக உலகமெங்கும் வாதிக்கப்பட்டும் வந்திருக்கின்றன. இதனை நம் நாடு மறுஆய்விற்கு எடுத்திருப்பது நாம் மனித உரிமையிலும் வளர்ந்து நிற்கிறோம் என்பதற்கான தக்கச் சான்றாகும். குற்றத்திற்கான நிரந்தரத் தீர்வை எப்படி எங்கிருந்து அமலாக்கம் செய்ய வேண்டும் என்கிற சிந்தனைத்தூண்டல் நம்மில் ஆழம் கொள்ள வேண்டிய காலக்கட்டம் இது.

 

சட்டம், தவறிழைத்த ஒரு மனிதனைச் சீர்ப்படுத்த வேண்டுமே தவிர அவனை மேலும் மிருகமாக்கும் வழிமுறைகளைக் கையாளக்கூடாது. அதே போல ஒரு குற்றவாளியைக் கொன்று விடுவதன் மூலம் சமூக விழிப்புணர்வை உண்டாக்கி இனியொருவனும் தவறிழைக்காமல் பார்த்துக் கொள்ள முடியும் என்பதே ஒரு தவறான புரிதலாகும். 1981ஆம் ஆண்டு நாட்டிற்கே அச்சுறுத்தலாக இருந்த ‘போத்தாக் சீன்’ அவர்களை அரசு தூக்கிலிட்டது. காவல் துணை அதிகாரி திரு.குலசிங்கம் அவர்களைக் கொல்ல ‘போத்தாக் சீன்’ செய்த முயற்சி தவறியதும் உருவான காவல்படை சிறப்புக் குழுவால் போத்தாக் சீன் கைது செய்யப்பட்டார். ஆனால், போத்தாக் சீன்க்கு வழங்கப்பட்ட மரணத் தண்டனை ஒருபோதும் குண்டர் கும்பல் சிக்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை என்பதே வரலாறு நமக்குப் போதித்த உண்மை. ‘போத்தாக் சீன்க்கு’ பிறகு பெந்தோங் காளி என்று குண்டர் கும்பல் கலாச்சாரம் நாட்டில் மேலும் விரிவடைந்து தலைத்தூக்கியது என்பதே கசக்கும் உண்மை. ஆக, இவ்விடத்தில் மரணத்தண்டனையின் இலட்சியம்தான் என்ன என்பது கேள்விக்குறியாகின்றது.

தண்டனைகள் எல்லோருக்கும் நியாயமானதாக அமல்படுத்தப்படுகிறதா? காசுள்ளவன் சட்டத்தின் ஓட்டையிலிருந்து தப்பித்து விடுகிறான். சட்டப் பின்புலம் இல்லாதவன் தண்டிக்கப்படுகிறான். is it we applying a fare punishtment to all? இதுவே விவாதிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக அமலில் இருக்கும் மரணத்தண்டனைத்தான் இந்நாட்டின் குற்றவியல் பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வாக விளங்குகிறதா என்று கேட்டால் நிச்சயம் அதற்குரிய விடை நம்மிடம் இல்லை. சீர்த்திருத்தம் என்பதை அரசு மறுஆய்வு செய்து புதிய சட்டத்திருத்தங்களைக் கொண்டு வருவது என்பதே நாட்டில் நிலவும் பலவகையான குற்றவியல்களுக்குக் குறைந்தது ஒரு சிறிய தீர்விற்கு முன்னெடுப்பாக இருக்கும். தொழில்புரட்சி, அறிவியல் புரட்சி என நாடுகள் நகர்ந்து கொண்டிருக்கையில் அதற்கெல்லாம் அடிப்படையாக இருக்கும் அறிவுப்புரட்சியைக் கொண்டு இதுபோன்ற மனித அடிப்படை தொடர்பான விடயங்களில்  ஆராய்தல் வேண்டும். இனி தவறே செய்ய நினைக்காத ஒரு புதிய தலைமுறையை உருவாக்க வேண்டும்.

சிறைச்சாலைகள் ஒரு குற்றவாளி தன் குற்றத்தை உணர்ந்து மறுவாழ்வை அடைவதற்குரிய இடமாகத் திகழ வேண்டும். மிருகத்தனம் தலைத்தூக்குவதால் உருவாகும் மனப்பிசகல் காரணமாக குற்றம் இழைக்கும் ஒருவன் சிறைச்சாலை சென்று மேலும் மோசமாகி வெளியேற்றப்படக்கூடாது என்பதே மனித உரிமையின் தலையாய எதிர்ப்பார்ப்பாகும். வகுப்பில் ஒரு மாணவன் தசறிழைத்துவிட்டாலே அவனைக் குற்றவாளியைப் போல விசாரிக்காமல் முறையான அணுகுமுறையைக் கையாள வேண்டும் என்று நாம் கவனப்படுத்திக் கொண்டிருக்கிறோம். இந்த வாழ்க்கையும் ஒரு வகுப்பறை மாதிரியே. இதில் பலர் இன்னும் மனத்தளவில் மேம்படாமல் வளர்ப்புக் காரணத்தால் பாதிக்கப்பட்டு சிதைந்து கிடக்கிறார்கள். அவர்களுக்குரிய சரியான அணுகுமுறை கையாளப்பட்டாலே இங்கு மனிதத்திற்கு எதிரான செயல்களைத் தடுக்க முடியும்.

‘மண்ணில் பிறக்கையில் எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைத்தான்’ எனும் மூத்தோர் வாக்குப் பொய்யல்ல.குற்றத்திற்கான வேர்களைத் தேடி அதனைக் களையும் நூதனமான உளவியல் அணுகுமுறைகளைக் கையிலெடுக்க வேண்டியக் கடப்பாடு நமக்கு உள்ளது. குற்றங்களுக்குப் பகிங்கரமான தண்டனைகளை வழங்கி சமூகத்தில் ஓர் அச்ச உணர்வை உண்டாக்குவதன் மூலம் ஒருவனை அல்லது ஒரு சமூகத்தைச் சீர்ப்படுத்த முடியுமா என்று கேட்டால் நிச்சயம் அத்தகைய வழிமுறைகள் தொடர்ந்து தோல்விகளையே தழுவி வருகிறன்றன. பயம் என்பது தற்காலிகமான அதிர்வை உண்டாக்குமே தவிர நிரந்தர தீர்வல்ல, மரணத்தண்டனை என்பது வலி மாத்திரிரையைப் போலத்தான். கொஞ்சம் நேரம் வலியை மறக்கடிக்கும். குற்றம் இழைப்பவர்களைச் சிறிது காலத்திற்கு அச்சுறுத்தும்; ஆனால், குற்றங்களை நிரந்தரமாக நிறுத்திவிடாது. அதற்கு மாற்றான ஒன்றை நாம் முன்னிறுத்த வேண்டிய கட்டத்திலும் கட்டாயத்திலும் இருக்கின்றோம். பல்துறை அறிவுஜீவிகளின் ஆலோசனைகளுடன் ஒரு கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே இன்றைய தேவையாகும்.

இங்கு ஒரு பெண்ணின் வாழ்வை நாசப்படுத்துபவனுக்கு என்ன தண்டனைகள் என்கிற விவரங்கள் எல்லாம் சரியாக இருக்கின்றது. ஆனால், அப்படியொருவன் சமூகத்தில்  உருவாகாமல் இருக்க/ வளராமல் இருக்க என்ன செய்திருக்கிறோம் என்பதே என் கேள்வியாக முன்வைக்கலாம்.

இவையாவற்றையும் நான் தீர்வாக முன்வைக்கவில்லை. நாம் விவாதிக்க ஒரு தளமாக அமைக்க விரும்புகிறேன்.

ஆக, மலேசியா மரணத் தண்டனையை இரத்து செய்யும் திட்டத்தை முன்னெடுத்திருப்பது ஆரோக்கியமான ஒரு துவக்கம் என்றே சொல்லலாம். இதற்கு ஆதரவாக இன்று ‘மனித உரிமை நாள்’ எனவே நாம் இணைந்து இன்னும் ஒரு மூன்று நாள்களுக்கு ‘மரணத் தண்டனையை இரத்து செய்ய ஆலோசித்துக் கொண்டிருக்கும் மலேசியாவிற்கு நல்வாழ்த்துகள்’ என்று முகநூல், புலனத்தில் பகிர்வோம். ஜனவரி மாதத்தில் புதியதொரு விடியல் மலேசியக் குற்ற ஒழிப்பில் உதயமாகும் என்று எதிர்ப்பார்ப்போம்.

கே.பாலமுருகன் 

(மனித உரிமை நாளை முன்னிட்டு…)

 

 

இளையோர் சிறுகதை இலக்கிய விழா 2019 – இளம் எழுத்தாளர்கள் படை

நாட்டிலுள்ள இடைநிலைப்பள்ளி மாணவர்களை இலக்கியத்தின் பக்கம் ஈர்ப்பதன் மூலம் மொழியாளுமையைப் புகட்டுவதோடு அவர்களின் கட்டொழுங்கு சிக்கல்களையும் குறைக்கலாம்’

கே.பாலமுருகன்

 

 

மலேசியத் தமிழ் விடிவெள்ளி கற்பனையாற்றல் கழகம் இந்நாட்டிலுள்ள இளையோர்கள் மத்தியில் நல்ல தரமான எழுத்தாளர்களை அடையாளம் காண வேண்டும் என்கிற நோக்கத்துடன் நடத்திய தேசிய இளையோர் சிறுகதைப் போட்டியின் பரிசளிப்பு விழாவும் வெற்றியாளர்களின் சிறுகதைகள் அடங்கிய நூல் வெளியீடும் கோலாலம்பூர் தேசிய வகை தம்பூசாமி தமிழ்ப்பள்ளியில் கடந்த சனிக்கிழமை 30ஆம் திகதி சிறப்பாக நடைபெற்றது.

 

 

போட்டி அறிவிக்கப்பட்ட கடந்த ஜூலை மாதம் தொடங்கி அக்டோபர் வரையிலும் நாடெங்கிலிருந்தும் சுமார் 215 சிறுகதைகள் மலேசிய இடைநிலைப்பள்ளி மாணவர்களிடமிருந்து கிடைக்கப் பெற்றதாகக் கூறுகிறார் தமிழ் விடிவெள்ளி கற்பனையாற்றல் கழகத்தின் தலைவரும் நாடறிந்த எழுத்தாளருமான திரு.கே.பாலமுருகன். கிடைக்கப்பெற்ற சிறுகதைகளில் சிறந்த பத்து சிறுகதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு கதைகள் எழுதிய இளையோர்களுக்குப் பரிசும் ரொக்கத் தொகையும் வழங்கப்பட்டுச் சிறப்பிக்கப்பட்டன. தன்னைப் போல இந்நாட்டில் சிறுவர்களும் இளையோர்களும் எழுத்துத் துறையில் மிளிர வேண்டும் என்கிற இலட்சியத்தோடு திரு.கே.பாலமுருகன் தொடங்கிய சிறுவர்/இளையோர் இலக்கிய விழா ஒரே ஆண்டில் இரண்டுமுறை நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். பத்து இளம் எழுத்தாளர்களின் சிறுகதைகளை அடையாளம் கண்டு ‘படைப்பிலக்கியத்தின் குரல்கள்’ எனும் தலைப்பில் நூலாகவும் வெளியிடப்பட்டது. ஆசிரியரும் எழுத்தாளருமான திரு.கே.பாலமுருகன் இந்நூலை மிகச் சிறப்பாகத் தொகுத்துள்ளார்.

 

தேசிய அளவில் நடத்தப்பட்ட இச்சிறுகதைப் போட்டிக்குத் தலைமை நடுவராக இருந்த மலேசியக் கல்வி அமைச்சு தேர்வு வாரியத்தின் தமிழ்ப்பிரிவு மேனாள் இணை இயக்குனரும் தமிழாசிரியர் கழகத்தின் தலைவருமான திரு.பி.எம் மூர்த்தி அவர்கள் இதுபோன்ற அரிய முயற்சிகள் அடுத்து வரும் இளம் தலைமுறையினர் மத்தியில் நல்ல எழுத்தாளர்களை உருவாக்கத் துணைப்புரியும் என்று பாராட்டினார்.

 

போட்டியோடு என்பதோடு மட்டுமல்லாமல் இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்குச் சிறுகதை எழுதும் கருத்தரங்கமும் இலவசமாக நடத்தப்பட்டது. கோலா சிலாங்கூர் ஈப்போ, ஜொகூர், கோலாலம்பூர் போன்ற பகுதியிலிருந்து மாணவர்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர். எஸ்.பி.எம் தேர்வில் தமிழ் இலக்கியப் பாடத்தை எடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் துணைப்புரியும் என்று ஏற்பாட்டுக் குழுத் தலைவரும் எழுத்தாளருமான திரு.கே.பாலமுருகன் வழியுறுத்தினார்.

நாட்டின் மிக முக்கியமான எழுத்தாளர்கள் திரு.கே.பாலமுருகன், திரு.பி.எம் மூர்த்தி, திரு.ந.பச்சைபாலன். திரு.மதியழகன், திரு.ஆ.குணநாதன், உப்ஷி பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை தலைவர் திருமதி மனோன்மணி, பாரதி முன்னேற்ற இயக்கத் தலைவர் திரு.விஜயன் என்று பலரும் கலந்து கொண்ட இளையோர் சிறுகதை விழா நாட்டின் இளம் படைப்பாளர்களை உருவாக்கி அங்கீகரித்து வரலாற்றில் இடம்பெற்றது. நிகழ்ச்சியில் பேசிய இலக்கிய ஆசிரியர் நாடறிந்த எழுத்தாளர் திரு.ந.பச்சைபாலன் அவர்கள் தனக்குப் பிடித்த உலகில் கவனிக்கப்பட்ட நல்ல சிறுகதைகளைப் பற்றி இரசிக்கும்படி எடுத்துரைத்தார். மேலும், கோலா சிலாங்கூர் இடைநிலைப்பள்ளியின் ஆசிரியரும் சிறுவர் கதைகள் எழுத்தாளருமான திரு.ஆ.குணநாதன் அவர்கள் தன்னைக் கவர்ந்த சிறுகதைகள் பற்றி மிகவும் நகைச்சுவை உணர்வுடன் பகிர்ந்து கொண்டார். மர்ம நாவல், திகில் நாவல்கள் எழுதி வரும் எழுத்தாளர் மு.மதியழகன் அவர்கள் தனக்கே உரிய பாணியில் மாணவர்களைக் கவரும் வகையில் தன்னுடைய திரைக்கதை அனுபவங்களைக் கொண்டு சிறுகதைக்கான தேவையான கூறுகளைப் பற்றி பகிர்ந்து கொண்டார்.

https://www.youtube.com/watch?v=nt-H6JebNCc

தேசிய அளவிலான இளையோர் சிறுகதை எழுதும் போட்டியில் முதல் நிலை பரிசை சிலாங்கூரைச் சேர்ந்த சிந்து சந்திரன் அவர்கள் பெற்றார். அவர் எழுதிய சிறுகதையையின் தலைப்பு ‘மனசாட்சி’ ஆகும். மேலும், லோகாசினி முருகையா அவர்கள் தன்னுடைய ‘கை கொடுக்கும் கை’ எனும் சிறுகதைக்காக இரண்டாம் நிலை பரிசைத் தட்டிச் சென்றார். அடுத்ததாக, பினாங்கு புக்கிட் மெர்தாஜாம் உயர்நிலைப்பள்ளியைச் சேர்ந்த ஹரீஷ் ஆசைத்தம்பி அவர்கள் மூன்றாம் நிலை பரிசைத் தன்னுடைய ‘முற்றுப்புள்ளி’ எனும் சிறுகதைக்காகப் பெற்றார். ஆறுதல் பரிசு வரிசையில் சுபத்தரா தேவி நவமணி, கிருபாஷிணி தேவன், இலக்கியா சரவணன், பூவிழி ஆனந்தன், ரேஷ்னா ஸ்ரீ சுந்தரேசன், ஹரிசங்கர் கதிரவன், ரீனாமாலினி சந்திர சேகரன் ஆகியோர் பெற்றனர்.

இன்றைய இளையோர் புலனம், டிக் டோக், முகநூல் அரட்டை என சமூக வலைத்தளங்களால் பாதிக்கப்பட்டு நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் நேரத்தை நல்வழிக்குத் திசை மாற்றும் பொருட்டு ஆசிரியர் கே.பாலமுருகன் அவர்களால் நடத்தப்பட்ட ‘வாசிப்புக் காணொளி போட்டி 2019’ பலரின் கவனத்தை ஈர்த்தது என்றே சொல்லலாம். அப்போட்டியில் மாணவர்கள் தாங்கள் வாசித்த ஒரு தமிழ் புத்தகத்தைப் பற்றி இரண்டு நிமிடங்கள் பேசி காணொளியாக முகநூலில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதன் வழி பரிசுக்குரியதாகத் தேர்வான ஏழு வெற்றியாளர்களும் அன்றைய நிகழ்ச்சியில் பரிசும், ரொக்கத் தொகையும் வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டார்கள். பீடோங் இடைநிலைப்பள்ளியைச் சேர்ந்த பிரிவின்குமார் ஜெயவாணன் முதல் பரிசை வென்றார். தைப்பிங் திரேசா தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த தமிழ்செல்வன் கணகநாதன் அவர்கள் இரண்டாம் நிலையும் ஜொகூர் கங்கார் பூலாயைச் சேர்ந்த மாணவி தஷ்வினா முரளி அவர்கள் மூன்றாம் நிலையையும் வென்றார்கள். அதோடுமட்டுமல்லாமல் கோலா சிலாங்கூர் இடைநிலைப்பள்ளியைச் சேர்ந்த கீர்த்தனா சுப்ரமணியன், தபாஹாவ் தோட்டத்தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த தீர்த்தனா முத்துராமன், சுபாங் ஜெயா துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த ஈஷ்வர் ராமசந்திரன், சுங்கை சிப்புட்டைச் சேர்ந்த சஞ்சீவி மகேந்திரன் ஆகியோர் ஆறுதல் பரிசுகளை வென்று சாதனை படைத்தனர்.

Mr.P.M Murthy’s Talk about Book Launching

இளையோர் இலக்கியம் என்பது இளையோர்களின் மனங்களையும் வலிகளையும் போராட்டங்களையும் மகிழ்ச்சியையும் கொண்டாட்டங்களையும் சொல்லக்கூடிய ஓர் இலக்கிய வடிவம் என்று திரு.பி.எம் மூர்த்தி மிகவும் சுவைப்பட விழாவில் தனதுரையில் குறிப்பிட்டார்.

 

 

மொழிக்கும் இலக்கியத்திற்கும் அடுத்த வாரிசுகளை உருவாக்கும் பணியில் மலேசியத் தமிழ் விடிவெள்ளி கற்பனையாற்றல் கழகம் அயராமல் பல அரிய முயற்சிகளை முன்னெடுக்கும் என்று அக்கழகத்தின் தோற்றுனர் எழுத்தாளர் கே.பாலமுருகன் வெளிப்படுத்தினார்.

நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழு செயலாளரும் எழுத்தாளருமான யோகி அவர்களின் நன்றி உரையோடு நிகழ்ச்சி ஒரு நிறைவை நாடியது. தனதுரையில் யோகி அவர்கள் இன்றைய இளையோர்கள் தன்னைச் சுற்றி நடக்கும் சம்பவங்களையும் சமூக சிக்கல்களையும் கூர்மையாக நோக்கி அறிதல் வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

செய்தி/ஆக்கம்

Tamil Vidivelli Creativity Club Of Malaysia

ராஜியின் சில கேள்விகளும் பதில்களும் – குறுநாவல் சர்ச்சை பாகம் 2

தொடர்ந்து பல திசைகளுக்குக் கிளையிட்டுக் கொண்டிருக்கும் குறுநாவல் தொடர்பான சர்ச்சைகளில் எனக்கு ஈடுபாடு இல்லை. என் கருத்துகள், எண்ணங்கள், விளக்கங்களை நான் தெளிவான ஒரு கட்டுரையாக எழுதிப் பதிவிட்டுவிட்டேன்.

https://balamurugan.org/2019/06/25/ஆப்பே-கடையில்-நடந்த-236ஆவது

 

எழுப்பப்படும் தவறான கேள்விகள் படைப்புச் சுரண்டல் தொடர்பாக இவ்விவாதத்தின் போக்கைக் கொண்டு போகாமல் தனிமனித தாக்குதலுக்குள் இட்டுச் சென்றுவிடும். இலக்கியம் சார்ந்த சர்ச்சைகள் உலகளவில்கூட ஓய்ந்தது இல்லைத்தான். ஆனால், உங்கள் கேள்விகளை நான் அப்படிப் பார்க்கவில்லை. உண்மையில் இவ்விவாதம் உங்களுக்கும் உங்கள் நிகழ்ச்சியைப் பற்றிய ‘இலக்கியம் கொச்சைப்பட்டுவிட்டதாக’ எழுதிய பாண்டியனுக்கும் இருக்க வேண்டுமே தவிர ஏன் மீண்டும் மீண்டும் நான் உள்ளே இழுக்கப்படுகிறேன் என்பதே எனக்குக் குழப்பமாக உள்ளது. நான் தூண்டி அவர் எழுதவில்லை என்பதை அவரே குறிப்பிட்டுவிட்டார் என்பதால் இவ்விவாதங்கள் உங்கள் இருவருக்குமிடையே தொடர்ந்திருக்க வேண்டும்.

கபாலி படம் தொடர்பான ஐயங்களை முதலில் எனக்குக் கூறியது எழுத்தாளர் அ.ராமசாமி அவர்கள்தான். அதன் பின்னரே அப்படத்தைப் பார்த்துக் குறிப்பிட்ட சிலவற்றில் என் நாவலின் தழுவல் இருப்பதாக உணர்ந்தேன். குறிப்பாக கபாலி படத்தில் கடைசி காட்சியும், ‘கட்டி’ அதாவது கஞ்சா விற்கும் பெண்மணியும் அவருடைய மகனை கபாலி இடத்தில் சேர்க்க நினைக்கும் இடமும்கூட என் குறுநாவலில் வரும் சரசுடன் பொருந்தியது. இது முதலில் தற்செயலாக நடந்தவையா அல்லது ரஞ்சித் அப்போதைக்கு இந்தியக் குண்டர் கும்பல் தொடர்பாக மலேசியாவில் எழுதப்பட்டிருந்த ஒரே குறுநாவல் என்பதால் வாசித்து அங்கிருந்து சிந்தித்திருப்பாரா என்பதே எனது கேள்வியாகும். அதனையும் ஒரு கேள்வியாகவே முன்வைத்திருந்தேன். மேலும், கபாலி படம் தொடர்பான அரசியல் சிக்கல்கள் பற்றியும் தவறான அரசியல் பார்வையைப் பற்றியும் ஒரு விமர்சனமாகவும் முன்வைத்திருந்தேன். ஆக, நான் கபாலி படத்தோடு உடன்படாத ஒன்றை தனி விமர்சனங்களாக எழுத்து வடிவில் முன்வைத்தாயிற்று. அதற்கு மேல் எனக்கு எந்த வழிகாட்டுதலும் யார் மூலமாகவும் வழங்கப்படவில்லை. எப்படி யாரைக் கொண்டு இதனை முன்னிறுத்துவது அல்லது நிரூபிப்பது என்றும் அப்போதைக்கு என்னால் வகுத்துக் கொள்ளவும் முடியவில்லை. சொன்னார்களே தவிர யாரும் அதைப் பற்றி பதிவிடவும் இல்லை.

ஒரு பட நிருவனத்தை அதுவும் காட்சி ரீதியில் அதனை மறுப்புனைவு செய்து கொண்டதை (பெயர் தோற்றம் போன்றவற்றில் மாற்றங்கள்) எப்படி நிரூபிப்பது என்று அதன் உள்ளார்ந்த வழிமுறைகள் இன்றுவரை சிக்கலான விடயமே. ஆனால், எழுத்தாளர் சுப்ரபாரதி மணியம் தொடர்பான சர்ச்சையில் அவர் தன் நாவலில் அப்பட்டமாக என் குறுநாவலில் உள்ள இடம், இடத்தின் பெயர், கதாப்பாத்திர வடிவமைப்பு, காட்சிகள் என்று கையாண்டதை வெகு எளினையாகச் சுட்டிக்காட்டி நிரூபிக்கவும் முடிந்தது.

அடுத்து, பாண்டியன் அவர்களுடைய கட்டுரையில் இடம்பெற்ற வரிகளையொட்டி என்னிடம் உங்கள் நிகழ்ச்சி தொடர்பான நிலைபாடு என்ன ஏதும் சர்ச்சை உண்டு செய்யதி திட்டமிட்டீர்களா என்று கேட்டுள்ளீர்கள். அதனை நானே நான்கு கேள்விகளாக முன்வைக்கிறேன். அது உங்களுக்கான கேள்வி அல்ல; உங்களுக்கான பதிலைக் கண்டறிவதற்கானது.

 

கேள்வி 1: நீங்கள் அல்லது தோழி ஒருவர் எடுத்து நடத்தும் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சி இது என்று தெரிந்திருந்த மறுகணமே இதனை நீங்கள் செய்யக்கூடாது, இதுதான் உங்கள் தார்மீகமா, நீங்கள் இப்படிச் செய்யலாமா என்று தனிப்பட்ட முறையிலோ அல்லது பொதுவிலோ நான் பதிவிட்டுள்ளேனா? உங்களுக்கு நான் அனுப்பிய புலனம் கூட நிகழ்ச்சி முடிந்ததும் வாய்ப்பிருந்தால் கேளுங்கள் என்கிற தொனியில் இருந்ததே தவிர அது சர்ச்சையை உண்டு பண்ணும் தொனியாக இருக்கவில்லையே.

கேள்வி 2:ஒருவேளை நான் சர்ச்சையாக்க வேண்டும் என்று நினைத்திருந்தால் அவர் மலேசியாவிற்கு வந்தவுடனே சர்ச்சையான பதிவுகள் போட்டு எல்லோரையும் அவதூறுகளுக்குள்ளாக்கியிருப்பேன் அல்லவா? எனது மௌனம் இந்நிகழ்ச்சியில் எனக்கு எந்தக் கருத்து வேறுபாடும் அல்ல என்பதற்கானதே.

கேள்வி 3: இதுபோன்ற நிகழ்ச்சிகள் வரவேற்கத்தக்க ஒன்றாகவே நான் அனைவரிடத்திலும் சொல்லியிருந்தேன். ஒரு  காலக்கட்டத் தொகுப்பின் வழியாக இலக்கிய நகர்ச்சியை நாம் ஆவணப்படுத்த முடியும். அதனால்தான்  இலக்கியம் சார்ந்து நான் அதனை மேற்கொண்டு வருகிறேன். நான் அதற்குக் குறுக்கே இருக்க வேண்டும் என்று நினைத்ததும் இல்லை. நினைத்திருந்தால் என் சர்ச்சை உங்கள் நிகழ்ச்சியை நோக்கியதாக இருந்திருக்கும் அல்லவா? ஆனால் என் சர்ச்சை நியாயமான முறையில் சம்பந்தப்பட எழுத்தாளரை நோக்கியே இருந்ததால்தான் அதனை நான் முறையாகக் கையாள வேண்டிக் காத்திருந்தேன். யோகி, நீங்கள், இன்னொரு தோழி ஆகியோரிடம் நான் முன்வைத்த கோரிக்கை அவரைத் தனிப்பட்ட முறையில் சந்தித்து நிகழ்ச்சி முடிந்து கேட்க வேண்டும் என்பதாகவே இருந்தது. நாம் அனைவரும் நட்பில் இருக்கும்போது நான் ஏன் இதைப் பொதுவில் போட்டுப் புதிய சர்ச்சையை உண்டாக்கியிருக்க வேண்டும்?

கேள்வி 4: ஒருவேளை நான் மறைமுகமாக நீங்கள் நடத்தும் நிகழ்ச்சியில் சர்ச்சையை உண்டு செய்ய வேண்டும் என்கிற திட்டத்துடன் இருந்திருந்தால் நான் ஏன் உங்களுக்குப் புலனத்தின் வழியாகத் தகவல் அனுப்பியிருக்க வேண்டும்? நீங்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஆயிற்றே. சர்ச்சையை மறைமுகமாக எழுப்ப வேண்டுமென்றால் அந்நியர் அல்லது நிகழ்ச்சி ஏற்பாட்டிலிருந்து புறத்தே உள்ள ஒருவரை அல்லவா நான் தயார் செய்து ஏவிவிட்டிருக்க வேண்டும்? சிந்தித்துப் பாருங்கள் தோழி. என் நோக்க அதுவல்ல. இப்பொழுதும் இதுபோன்ற இலக்கிய நிகழ்ச்சிகள் தேவை என்றே கூறுகிறேன். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. உங்கள் இலக்கிய நிகழ்ச்சி தொடர்பான எதிர்வாதத்தை முன்வைத்தவருடனே உங்கள் ஆரோக்கியமான விவாதம் தொடர வேண்டும்.

பாண்டியன் அவர்களின் கட்டுரையில் நான் நிகழ்ச்சியில் வினாவை எழுப்ப சந்தர்ப்பதை உருவாக்கி வருவதாக எழுதியுள்ள பதிவு ஒருவேளை அவருடைய புரிதலால் உண்டாகியிருக்கலாம். அன்றைய நாளில் நான் தெரிந்தும் ஏன் மௌனமாக இருக்கிறேன் , நான் ஏதும் சமரசம் செய்து கொண்டுவிட்டேனா என்கிற கேள்வியை முன்வைத்தார். எனக்கு உண்மையில் அக்கேள்வி வருத்தத்தை ஏற்படுத்தியது. இச்சர்ச்சையெல்லாம் நடக்கும் முன் உருவான திட்டத்தில் என்னால் எந்த இடையூரும் வேண்டாம் என்றே அமைதி காத்திருந்தேன். ஆனால், என் எதிர்வினை நீங்கள் நடத்தும் நிகழ்ச்சியையொட்டியதாக இல்லை. ஆகவே, சுப்ரபாரதி மணியத்தின் நிகழ்ச்சியில் இருக்கும் என் தோழிகளிடம் கேள்விகள் கேட்கச் சொல்லியிருக்கிறேன். சுப்ரபாரதிமணியம் தொடர்பான படைப்புச்சுரண்டல் பற்றி அவர்களிடம் கூறியுள்ளேன் என்பதாகவே இருந்தது. நான் பிரச்சனையை உண்டு செய்து நிகழ்ச்சியைச் சிதைக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் இல்லை என்பதை அவர் புரிந்திருக்க வேண்டும். யோகியிடம் நான் கேட்ட உரிமைத்தொனிக்கூட அந்நிகழ்ச்சியைக் களைக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் அல்ல; மாற்றாக சுப்ரபாரதிமணியத்தைச் சந்தித்து இதைக் கேளுங்கள் என்பதாகவே இருந்தது. பின்னர் ஏன் அப்படியொரு வார்த்தை கட்டுரையில் இடம்பெற்றிருக்கிறது என்பது குழப்பமாகவே உள்ளது. அதை அவர் நீக்குவார் அல்லது திருத்துவார் என்று நம்புகிறேன். இதையும் ராஜி ஒரு கேள்வியாகப் பொதுவில் முன்வைத்ததால் நான் அதற்குரிய பதிலை இங்குப் பதிவிடுகிறேன்.

கிண்டல் பதிவு ஏதும் போடாமல் மிக நேர்மையாக தொடர்ந்து கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கும் உங்கள் நேர்மையை இன்னமும் நான் மதிக்கிறேன். அது எல்லா திசைகளிலும் எல்லார்க்கும் பொதுவானதான இருக்க வேண்டும் என்றும் நம்புகிறேன்.

ஆனால், உங்கள் எழுதும் தொனியை இன்னும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே இந்த நண்பனின் வேண்டுகோள். மேலும், இச்சர்ச்சை சென்று கொண்டிருக்கும் திசை, அதில் பதில் அளித்துக் கொண்டிருப்பவர்களின் தார்மீகம், வாதத்தை முன்வைக்கும் விதம் என அனைத்தையும் அனைவரும் கண்கானித்துக் கொண்டுத்தான் இருக்கிறார்கள். இந்த இலக்கிய விவாதமாவது தனிமனித தாக்குதல்களாக இல்லாமல்; நியாயத்தை நோக்கிய குரலாக இருக்கட்டும்.

எனது அடுத்த பதிவு, ஆப்பே கடையில் நடந்த 236ஆவது மேசை உரையாடல் உருவான கதை பகிரப்படும். இக்குறுநாவல் உருவாக்கத்தில் ஆரம்பத்திலிருந்தே உடன் இருந்தவர் எழுத்தாளர் பாண்டியன். அக்குறுநாவலை மறுவாசிப்பு செய்து, திருத்தங்களுக்கு உதவி, அதனை நூல் வெளியீட்டில் விமர்சனம் செய்த மலேசிய இலக்கிய விமர்சகர் பாண்டியன் அவர்களே. ஆக, ஒரு சிறுகதையாக எழுதப்பட்டு, பின்னர் விரிவாக்கம் அடைந்து ஒரு குறுநாவலாக மாற்றி, அதற்குரிய நேர்காணல்கள், நேராகச் சிலரைச் சந்தித்தல், மலேசியாவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு குண்டர் கும்பல்  ஆய்வேட்டின் துணையோடு தரவுகள் கொண்டு எழுதப்பட்ட அக்குறுநாவல் தொடர்பான பதிவு விரைவில்.

நன்றி, கே.பாலமுருகன்

 

எழுத்தாளர் அ.ராமசாமி எழுதிய ஆப்பே குறுநாவல் தொடர்பான விமர்சனம்: http://ramasamywritings.blogspot.com/2015/05/blog-post_20.html

யார் கொலையாளி? – பாகம் 3 (ஒரு விசாரணைத் தொடர்)

 

கொல்லப்பட்டவரைப் பற்றிய விபரங்கள்:

பெயர்: மணிமாறன் த/பெ கந்தசாமி

வயது: 34

கொல்லப்பட்ட இடம்: செனாய், ஜொகூர் (அவருடைய வீடு)

கொல்லப்பட்டதற்கான காரணம்: ‘கேங்’ சண்டை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கொல்லப்பட்ட விதம்: உடலில் பல இடங்களில் வெட்டுக் காயம், தலையின் இடது பக்கத்தில் ஓர் ஆழமான வெட்டில் மரணம் ஏற்பட்டுள்ளது.

கொலை செய்யப்பட்ட நாள்: 14.12.2018

நேரம்: மாலை 5.00லிருந்து இரவு 8.30க்குள் இருக்கலாம்.

கொல்லப்பட்டவரின் விவரங்கள்:

போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக புக்கிட் காயூ ஹீத்தாம் (தாய்லாந்து மலேசியா எல்லை)-யில் பிடிப்பட்டு நான்காண்டுகள் சிறையில் இருந்து வெளிவந்தவர். பின்னர், ஒரு தொழிற்சாலையில் வேலை செய்து வந்ததாகவும் அதே சமயம் அங்கும் போதைப்பொருள் கைமாற்றம் செய்து வேலையை விட்டு நீக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. கொலைக்கு முன்பு நான்கு மாதங்கள் வேலை ஏதும் இல்லாமல் செனாயில் சுற்றிக் கொண்டு அடித்தடியில் ஈடுபட்டு வந்ததாகவும் தகவல் பெறப்பட்டன. எப்பொழுதும் அவன் வீட்டைத் தேடி பலர் சந்தேகப்படும்படி வந்ததால் அக்கம் பக்கத்தில் காவல்துறையில் புகார்களும் கொடுக்கப்பட்டுள்ளன. ஒரு துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு அவனுடைய வீடு இருந்த அதே வரிசையில் குடியிருந்த திரு.கணேசன் முதலில் காவல்துறையில் புகார் கொடுத்த போதே இக்கொலை கண்டறியப்பட்டது.

 

வாக்குமூலம் 1:

திரு.கணேசன் (அண்டை வீட்டார்)

மணிமாறன் என்பவனை எனக்கு ஒரு வருடம் மட்டுமே பழக்கம். ஆரம்பத்தில் இங்குள்ளவர்களுக்கு கொஞ்சம் உதவியாக இருந்தபோது எனக்கும் வீட்டில் சாயம் பூச ஒருமுறை உதவியிருக்கிறான். அப்பொழுதிலிருந்துதான் பழக்கம். ஆனால், முதலில் அவனுடைய பின்புலம் எனக்குத் தெரியாமல்தான் பழகினேன். பின்னர், அங்கு அவனுக்குக் குண்டல் கும்பல் ஆட்களுடன் தொடர்பு இருப்பதாகக் கேள்விப்பட்டுத்தான் அவனிடமிருந்து விலகினேன். அதன் பிறகு அவனுடன் பேச்சு வார்த்தை இல்லை. ஒருமுறை குடித்துவிட்டு என் வீட்டின் முன் நின்று கத்திக் கொண்டிருந்தான். அப்பொழுதும் அவன் மீது ஒரு புகார் கொடுத்த தகவல் இருக்கும்.

அன்றைய இரவு மணிமாறனின் வீட்டிலிருந்து எனக்குத் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதும் அதிர்ந்துபோனேன். அவன் வீட்டிலிருந்து ஒரு நான்கு வீடு தள்ளியே என் வீடாக இருந்தாலும் அச்சத்தம் என் உடலையே ஒருமுறை நடுங்கச் செய்துவிட்டது. உடனே, நான் தான் முதலில் காவல்நிலையம் சென்று அவன் மீது புகார் கொடுத்தேன்.

 

 

காவல்துறை திரு.கணேசனிடம் எழுப்பியக் கேள்விகள்:

1.உங்களுக்கும் மணிமாறனுக்கும் இருந்த நட்பு அங்குள்ள அனைவருக்கும் தெரியுமா?

கணேசன்: அந்த வீட்டு வரிசையில் இருந்த சிலருக்கும் மட்டும் தெரியும். அவன் அங்கும் சிலரிடம் என்னைப் போலவே பழகி வந்தான். ஆனால், என்னைப் போல அவனிடம் நெருங்கி யாரும் பழகியது பற்றி எனக்குத் தெரியவில்லை.

 

2.அவன் வீட்டுக்கு வந்தவர்களில் யார் மிகவும் சந்தேகப்படக்கூடிய அளவில் இருந்தது?

கணேசன்: எனக்கு அது சரியாகச் சொல்லத் தெரியவில்லை. ஆனால், அந்தத் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்பதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன் அவன் வீட்டை விட்டு ஒரு வயதான பெண்மணி மட்டும் வெளியில் போனதை நான் பார்த்தேன். ஆனால், யார் என்று தெரியவில்லை.

 

3. அவரை இதற்கு முன் வேறு எங்காவது பார்த்த ஞாபகம்?

கணேசன்: இல்லை. அந்த முகம் அவ்விடத்திற்கு முற்றிலும் புதிது என்று நினைக்கிறேன்.

 

4.இதற்கு முன் அப்படி யாரும் பெண்கள் அவர் வீட்டிற்கு வந்ததாக ஏதும் தகவல் உண்டா? நீங்கள் பார்த்த அப்பெண்மணியின் முகத்தை அடையாளம் காட்ட இயலுமா?

கணேசன்: அவன் ஒரு பெண்ணைக் காதலித்து வந்தான். அவளைச் சில நேரங்களில் வீட்டிற்கு அழைத்து வருவதாக ஆட்கள் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், நான் வீட்டில் பார்த்தது இல்லை. ஆனால், நான் பார்த்த அவ்வயதான பெண்மணியின் முகம் இருட்டில் தெளிவாகத் தெரியவில்லை.

 

5.அவருடைய காதலியை உங்களுக்குத் தெரியுமா?

கணேசன்: சிலமுறை அவனோடு மோட்டாரில் செல்வதைப் பார்த்துள்ளேன்.

 

6.துப்பாக்கி சுடும் சத்தம் என்று சொல்கிறீர்கள் ஆனால் இறந்தவர் வெட்டுக் காயங்கள் பட்டுத்தான் மரணம் அடைந்துள்ளார். இதில் உள்ள முரண் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

கணேசன்: எனக்கும் அது புரியவில்லை. அவன் நல்ல வாழ்க்கையை வாழ்ந்திருந்தால் இந்த நியாமெல்லாம் சிந்திக்கத் தூண்டியிருக்கும். இப்போதைக்கு இதுதான் என் எண்ணம்.

 

 

 வாக்குமூலம் 2:

 மணிமாறனின் காதலி சங்கீத்தா

 

எனக்கும் அவனுக்கும் இருந்த உறவு இவ்வருடம் ஜூன் மாதத்திலேயே இல்லாமல் போய்விட்டது. நான் தான் அவனை வேண்டாம் என்று மறுத்துவிட்டேன். அவனுடைய நடத்தையில் எனக்குச் சந்தேகம் இருந்தது. அவனுக்கு இருந்த போதைப்பொருள் பழக்கம்தான் என்னை அவனிடமிருந்து தூரமாக விலக்கியது. மேலும், ஒருமுறை அவன் நண்பன் முரளியை அழைத்து வந்து என்னிடம் தகாத வார்த்தைகளில் பேசினான். அப்பொழுதுதான் என்னால் தொடர்ந்து அவனுடன் காதலில் இருக்க முடியவில்லை. அவன் மரணம்கூட பத்திரிகையில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன்.

 

காவல்துறை சங்கீத்தாவிடம் எழுப்பியக் கேள்விகள்:

 

1.ஜூன் மாதத்திற்குப் பின்னர் மணிமாறனை நீங்கள் வேறு எங்கும் சந்திக்கவில்லையா?

 

சங்கீத்தா: இல்லை. நான் மலாக்காவிலுள்ள என் அக்கா வீட்டிற்கு வந்துவிட்டேன். ஆதலால், அவன் தொல்லை கைப்பேசியின் வழியாகக் கொஞ்ச நாள் இருந்தது. கைப்பேசி எண்ணையும் மாற்றிவிட்டதால் அதன் பின்னர் அவனை நான் முற்றிலும் மறந்துவிட்டேன்.

 

2.நீங்கள் எதுவரை படித்துள்ளீர்கள்? இப்பொழுது என்ன வேலை?

சங்கீத்தா: எனக்குப் படிப்பு அவ்வளவாக இல்லை. பி.எம்.ஆர் வரைத்தான் படித்தேன். இப்பொழுது அக்காவின் சிபாரிசில் ஒரு பேரங்காடியில் வேலை செய்கிறேன்.

 

3.மணிமாறனின் நண்பன் முரளி எப்படிப்பட்டவர்? இருவரின் நட்பு எந்த அளவில் இருந்தது?

 

சங்கீத்தா: அவரைப் போல முரளியும் போதைப்பொருள் கடத்தலில் இருந்தவன் தான். ஆனால், அவன் பெண்கள் விசயத்தில் கொஞ்சம் தீயப்பழக்கங்கள் உள்ளவன். மணி அவனுடன் சில நேரங்களில் மட்டும்தான் இருந்திருக்கிறார். மணிக்கு இன்னொரு நெருங்கிய நண்பர் இருப்பதாகவும் அவர்தான் சிறையில் மணிக்கு உதவியதாகவும் சொல்வார். ஆனால், பெயர் விபரமெல்லாம் எனக்குத் தெரியாது.

 

4.கொலை நடப்பதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன் மணிமாறனின் வீட்டிலிருந்து ஒரு வயதான பெண்மணி வெளியானதை திரு.கணேசன் பார்த்ததாகச் சொல்லியிருந்தார். அப்பெண்மணி யாராக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

 

சங்கீத்தா: மணிமாறனுடைய உறவினர்கள் பற்றியோ குடும்பத்தைப் பற்றியோ என்னிடம் அவர் சொன்னதே இல்லை. அவர் சிறைக்குப் போனதும் அவர் குடும்பத்தினரை விட்டுத் தூரம் வந்துவிட்டதாக சொன்னார். அவருடைய பூர்வீகம் எல்லாம் பெர்லிஸ் என்றுத்தான் கேள்விப்பட்டேன். ஆனால், எது உண்மை என்று இப்பொழுது கணிக்க முடியவில்லை.

 

5.திரு.கணேசன் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

 

சங்கீத்தா: அவர் கொஞ்சம் கோபக்காரர். மணிமாறன் மீது பலமுறை புகார் கொடுத்திருக்கிறார் என்று நினைக்கிறேன். கடைசியாக அவர் வீட்டின் முன் நின்று கத்தியதற்காகக் கடந்த செப்டம்பர் மாதம் என்று நினைக்கிறேன், அவர் புகார் கொடுத்துக் காவல்துறையில் மணிமாறனைப் பிடித்து இரண்டு நாட்கள் உள்ளே வைத்திருந்தார்கள். கணேசனின் வீட்டில் அவருடைய கடைசி மகளை மணிமாறன் சீண்டியிருக்கிறான். என்னுடன் மோட்டாரில் சுற்றும்போதே அவளைப் பார்த்தால் கிண்டல் செய்வான். ஒருவேளை கணேசனுக்கு இதனால்கூட மணியைப் பிடிக்காமல் போயிருக்கலாம்.

 

வாக்குமூலம் 3:  

முரளியின் அம்மா திருமதி செல்லம்மாள்

 

என் பையன் முரளி காணாமல் போய் எப்படியும் இரண்டு மாதங்கள் இருக்கலாம். கடந்த அக்டோபர் 21ஆம் திகதி அவன் கடைசியாக வீட்டிற்கு வந்தான். அதன் பின்னர் வெளியில் போனவன் வரவே இல்லை. இப்பொழுது வரை அவனைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. மணிமாறனின் கொலை செய்தி கேள்விப்பட்டதும் எனக்கும் பயம் ஏற்பட்டுக் கொண்டது. ஒருவேளை முரளியையும் யாராவது கொன்று எங்காவது வீசியிருக்கலாம் என்று சந்தேகப்படுகிறேன்.

 

திருமதி செல்லம்மாளிடம் காவல்துறை எழுப்பியக் கேள்விகள்:

1.உங்கள் பையனுக்கும் மணிமாறனுக்கும் இடையே இருந்த உறவு எப்படிப்பட்டது?

செல்லம்மாள்: இந்த மணிமாறனால்தான் என் பையன் இப்படி ஆனான். அவனைச் சந்திக்கும் முன் முரளி அவன் உண்டு அவன் வேலை உண்டென இருந்தான். இருவரும் ஒரே தொழிற்சாலையில் வேலை செய்தார்கள். அப்பொழுதுதான் பழக்கம் ஏற்பட்டு இந்தப் போதைப்பொருளுக்கும் முரளி அடிமையானான். இரண்டு பேரும் அயோக்கியர்கள்தான். இதில் என் பையன் என்ன அவன் என்ன?

 

2.உங்கள் பையன் காணாமல் போகும் முன் ஏதாவது சந்தேகப்படும்படி நடந்ததா?

செல்லம்மாள்: ஓர் அழைப்பேசி அடிக்கடி வந்து கொண்டிருந்தது அவனும் கொஞ்சம் பரப்பரப்பாக இருந்தான். பின்னர் அன்றைய இரவில் வெளியாகிப் போனவன் மறுநாள் இரவுத்தான் வீட்டிற்கு வந்தான். எங்குப் போனான் என்றெல்லாம் என்னிடம் சொல்ல மாட்டான். வீட்டிற்கு அவனைத் தேடி யாரும் வந்ததில்லை.

 

3.முரளி காணாமல் போன பின் நீங்கள் அவரைப் பற்றி மணிமாறனிடம் கேட்டீர்களா?

செல்லம்மாள்; இரண்டு முறை அவனிடம் கெஞ்சிக் கேட்டேன். முகத்தில் அடித்ததைப் போல அவன் காட்டிய அலட்சியங்கள்தான் என்னைப் பெருத்த ஏமாற்றத்திற்குள்ளாக்கியது. என் பையனின் வாழ்க்கையைச் சீரழித்துவிட்டு என்னை எட்டி உதைக்காத குறையாக துரத்தினான்.

 

4.முரளியைப் பற்றி எந்தத் தகவலையும் மணிமாறன் சொல்லவில்லையா?

செல்லம்மாள்: இல்லை. எனக்குத் தெரியாது என்று மட்டுமே சொன்னான்.

 

5.நீங்கள் மணிமாறனை எங்கு எப்பொழுது சந்தித்தீர்கள்?

 

செல்லம்மாள்: முரளி காணாமல்போன அதே மாதத்தில்தான். திகதியெல்லாம் ஞாகபத்தில் இல்லை. அவனைத் தேடி ஒருமுறை வீட்டிற்குப் போனேன். ஆனால், அவன் அங்கு இல்லை. பின்னர், மதியத்தில் அவனை அங்கிருக்கும் ஒரு சீனக்கடையில் கண்டுவிட்டேன். அதன் பின்னர் ஒரு வாரம் கழித்து அவனை தெஸ்கோ பேரங்காடியில் தற்செயலாகப் பார்த்துக் கேட்டேன். அவ்வளவுத்தான் ஐயா.

 

**************

 

 

சந்தேகத்திற்குரிய தடயம் 1: துப்பாக்கி சத்தம் கேட்டதாக திரு.கணேசன் மட்டுமே புகார் கொடுத்துள்ளார். ஆனால், அந்த வரிசையில் இருக்கும் சிலர் அப்படிக் கேட்கவில்லை என்றும் அது பட்டாசு சத்தம் என்றும் தெரிவித்திருந்தார்கள். மேலும், திரு.கணேசன் அவருடைய கடைசி மகள் விவகாரம் குறித்து இதுவரை எந்தப் புகாரிலும் குறிப்பிட்டத்தில்லை.

 

சந்தேகத்திற்குரிய தடயம் 2: ஜூன் மாதத்திற்குப் பின்னர் தனக்கும் மணிமாறனுக்கும் பேச்சு வார்த்தை இல்லை என்று வாக்குமூலத்தில் குறிப்பிட்டிருக்கும் சங்கீத்தா அதே வாக்குமூலத்தில் செப்டம்பர் மாதத்தில் நடந்த கணேசன் மகள் விவகாரம் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

 

சந்தேகத்திற்குரிய தடயம் 3: கொலை நடப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன் திருமதி செல்லம்மாள் செனாயில் இருக்கும் (மணிமாறனை அவள் சந்தித்த) சீனக்கடையில் வெகுநேரம் அமர்ந்திருந்ததைச் சிலர் தனிப்பட்டப் புகாரில் குறிப்பிட்டுள்ளார்கள்.

 

சந்தேகத்திற்குரிய தடயம் 4: திரு.கணேசன் அவர்களுக்கு இரண்டு முறை கண் சிகிச்சை செய்திருப்பதால் அவருடைய அருகாமை மற்றும் தூரப்பார்வையில் சிக்கல் இருப்பதாக மருத்துவச் சான்றிதழ் குறிப்பிடுகிறது.

 

சந்தேகத்திற்குரிய தடயம் 5: மணிமாறனின் வீட்டின் பின்பகுதியில் இருக்கும் சீனர் ஒருவர் ஒரு வாரத்திற்கு முன் மணிமாறனின் நண்பன் முரளி பின்பக்கமாக மணிமாறனின் வீட்டில் நுழைந்ததாக உறுதியாக விசாரணையில் குறிப்பிட்டுள்ளார்.

 

சந்தேகத்திற்குரிய தடயம் 6: மணிமாறன் சிறையில் இருக்கும்போது ஒரு பெண்மணி பெயர் குறிப்பிட விரும்பாமல் அவனைப் பார்க்க 17 முறை வந்துள்ளார்.

 

சந்தேகத்திற்குரிய தடயம் 7: பெர்லிஸில் மணிமாறனின் குடும்பத்தைப் பற்றி எந்தவொரு தகவலும் காவல்துறைக்குக் கிடைக்கவில்லை. இன்னும் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

 

யார் கொலையாளி?

 

சந்தேகத்திற்குரிய நபர் 1: திரு.கணேசன்

சந்தேகத்திற்குரிய நபர் 2: திருமதி செல்லம்மாள்

சந்தேகத்திற்குரிய நபர் 3: சங்கீத்தா

சந்தேகத்திற்குரிய நபர் 4: நண்பன் முரளி

சந்தேகத்திற்குரிய நபர் 5: இன்னமும் விசாரணையில் உள்ளது.

 

குறிப்பு: மணிமாறன் இறப்பதற்கு முந்தைய இரவு அவனுக்குச் சில கனவுகள் வருகின்றன.

கனவு 1: அவன் போதையில் ஒரு நிலத்தைத் தோண்டிக் கொண்டிருக்கிறான். மண்ணிலிருந்து திடீரென பாலும் தண்ணீரும் இரத்தமும் கொந்தளித்து வெளிவருகின்றன.

கனவு 2: அவனை விடாமல் யாரோ துரத்துகிறார். அவனால் யாரென்று கணிக்க இயலவில்லை.

கனவு 3: ஒரு பளபளப்பான கத்தி அவன் முன்னே தொங்கிக் கொண்டிருக்கிறது.

 

ஆக்கம்: கே.பாலமுருகன்

சீ.முத்துசாமி – மலேசிய நவீன இலக்கியத்தின் நேர்மையான குரல்

2017ஆம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருதைப் பெற்ற மலேசிய நவீன இலக்கியத்தின் படைப்பிலக்கியக் குரலான சீ.முத்துசாமி அவர்களுக்கு என் வாழ்த்துகள். தமிழ் இலக்கியம் என்றால் அது தமிழகம்தான் என்கிற மாயையைக் களைத்தெறிந்து தமிழர்கள் வாழும் நிலத்தில் பரவியிருக்கும் தமிழிலக்கிய படைப்புகளை, இலக்கிய செயல்பாடுகளைக் கூர்ந்து கவனித்து அதன்பால் தன் ஆழ்ந்த வாசிப்பை முன்னெடுத்து விஷ்ணுபுரம் எனும் அங்கீகாரத்தைத் தந்தமைக்கு எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கும் என் நன்றி. விஷ்ணுபுரம் விருது விழாவிற்கு சுவாமி பிரம்மாநந்தாவுடன் வருவதற்கான அனைத்துத் திட்டங்களும் இருந்தன. விமான டிக்கேட்டுகளும் பதிவாகியிருந்தது. தற்சமயம் தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பயின்று கொண்டிருப்பதால் சில தவிர்க்க முடியாத காரணத்தால் விழாவிற்கு வர முடியாமல் போனதால் ஏற்பட்ட வருத்தம் விழா குறித்த நண்பர்களின் பதிவுகளை வாசித்தபோது. மேலும் அதிகரித்துப் போனது.

 

விஷ்ணுபுரம் விருதளிப்பு விழாவில் வல்லினம் ஆசிரியர் நவீன் ஆற்றிய உரையை, சிங்கப்பூர் பாண்டித்துரை எனக்கு அனுப்பி வைத்திருந்தார். அவ்வுரையில் ‘சீ.முத்துசாமி என்கிற ஆளுமையிடமிருந்து வந்தவர்தான் பாலமுருகன்’ என அவர் குறிப்பிட்டபோது, எழுத துவங்கிய காலங்களில் இரண்டாண்டுகள் சீ.முத்துசாமியுடனே அலைந்து திரிந்த பொழுதுகள் மனத்தின் ஆழத்தில் நெளிந்தன. அவரிடமிருந்து அக்காலக்கட்டத்தில் பெற்றவை அனைத்தையும் ஒருமுறை தொகுத்துப் பார்க்கும் சந்தர்ப்பமாக அது அமைந்திருந்தது. ஒருவேளை விழாவிற்கு வந்திருந்தால், எனக்குப் பேச வாய்ப்புக் கிடைத்திருந்தால், பேச வேண்டியவைகளையே இக்கட்டுரையில் இணைத்துள்ளேன்.

 

சீ.முத்துசாமிக்கும் எனக்குமான நட்புறவு 2005ஆம் ஆண்டிலிருந்து தொடங்குகிறது. அப்பொழுது நான் மலேசிய நாளேடுகளில் தீவிரமாக எழுதிக் கொண்டிருந்தேன். அப்படிப் பிரசுரமான என் சில சிறுகதைகளை வாசித்துவிட்டுப் பலரிடம் என்னைப் பற்றி விசாரித்தவாறே என்னைத் தேடியும் கொண்டிருந்தார். புதியதாக எழுதுபவர்களின் மீதான அக்கறை மிகுந்தவராக எழுத்தாளர் சீ.முத்துசாமி இருந்திருக்கிறார். பெரும்பாலும், நாமேத்தான் மூத்த எழுத்தாளர்களைத் தேடி அவர்களிடமிருந்து எதையாவது கற்றுக் கொள்ள வேண்டும் என நான் நம்பிக் கொண்டிருந்த ஒரு காலக்கட்டம். ஏனோ சில தயக்கங்களால் யாரையும் சென்று சந்திக்காமல் வீட்டிலேயே இருந்து கொண்டு வாசிப்பு எழுத்து என எனக்குள்ளே நான் இயங்கிக் கொண்டிருந்தேன். ஆனால், கோலாலம்பூரில் நடந்த ஒரு நாவல் பட்டறையில் நான் கலந்து கொண்டபோது எப்படியோ நான் அங்கு இருப்பதை அறிந்து சீ.முத்துசாமி அவரே வந்து கைக்குலுக்கி எனக்குள் இருந்த மேற்சொன்ன மூத்த படைப்பாளிகளின் மீதான புரிதலை உடைத்தார்.

 

“உன்னைத்தான் நான் சில நாட்களாகத் தேடிக் கொண்டிருக்கிறேன்” என்பதுதான் அவர் என்னிடம் உதிர்த்த முதல் வார்த்தை. அன்றிலிருந்து என் எழுத்தின் மீதும் என் மீதும் தனித்த அக்கறையைக் காட்டத் துவங்கினார். அடிக்கடி சந்திக்கவும் செய்தோம். தமிழிலக்கியத்தின் மீது எனக்கிருந்த ஆர்வத்தைப் பாராட்டியப்படியே இருப்பார். நவீன எழுத்திற்கான வீச்சு என் எழுத்தில் இருப்பதாகவும் அதனைச் செம்மைப்படுத்த வேண்டும் என்று கவனமும் செலுத்தினார். கோணங்கி, ஜெயகாந்தன், வண்ணதாசன் எனப் பலரின் நூல்களை அறிமுகப்படுத்தினார். அப்பொழுது எனக்கு வயது 24 தான். ஒரு சக நண்பனைப் போல என்னை நடத்தினார். நிறைய பேர் வழிகாட்டுவதாகச் சொல்லிவிட்டுக் குருபீடத்தில் ஏறி அமர்ந்து கொள்கிறார்கள், பிறகு அவர்களுக்கு நாம் விசுவாசிகளாக இருக்க வேண்டும். இந்த நிலை இலக்கியத்தில் நீடித்தால் அதைவிட ஒரு கொடூரமான விசயம் இருக்காது என்று சொல்லிக் கொண்டே இருந்தார். அதனாலேயே யாருக்கும் ஒரு படைப்பாளன் விசுவாசியாக இருக்க வேண்டியதில்லை என நான் தீர்க்கமாக சீ.முத்துசாமியுடன் உடன்பட்டேன். என் சிறுகதைகள் மீது உனக்கு மாற்றுக் கருத்து இருந்தாலும் தாராளமாக அதனை நீ விமர்சிக்கலாம் என்கிற சுதந்திரத்தையும் எனக்குக் கொடுத்தார். அதே போல என் கதைகளில் இருந்த போதாமை குறித்து அவர் மிக இயல்பாகக் கடிந்தும் கொண்டார். சீ.முத்துசாமி என்கிற ஒரு நேர்மையான, முகத்துதிக்காக, தேவைக்காகப் பாராட்டும் குணமற்ற மனிதரை நான் மேலும் ஆழமாகப் புரிந்து கொண்டேன். என் சிறுகதை ஒன்றை வல்லினத்திற்கு அனுப்பி வைத்து அறிமுகப்படுத்தியவரும் அவரே.

 

மண் புழுக்கள் நாவல் படிக்கக் கிடைத்தபோது அதுவரை சில படைப்புகள் வாசித்து நான் புரிந்து வைத்திருந்த புரிதல்களும் உடைந்து போயின என்றுத்தான் சொல்ல வேண்டும். எல்லாக் கதைகளும் ஒரு சில மையக் கதாபாத்திரங்களின் வழியாகவே வெளிப்படும் என்கிற எனது அப்போதைக்கான புரிதலை அவருடைய மண் புழுக்கள் மாற்றியமைத்தது. அந்நாவல் முழுவதும் சொல்லும்படியான எந்தக் கதாபாத்திரங்களின் மீது கதையை அவர் குவிக்கவில்லை. மாறாகத் தோட்டப்புற வாழ்வின் அடித்தட்டில் அசைந்து கொண்டிருக்கும் மனித உணர்வுகளின் துல்லியமான ஆழத்தையும், அதன் மேற்பரப்பில் உழன்று கொண்டிருக்கும் அப்போதைக்குப் பலரும் பேச மறந்த வாழ்க்கையையும் அவர் நாவலில் மையப்படுத்தியிருந்தார். மண் புழுக்கள் நாவலின் மீது பலரும் மொழிச் சிக்கல் இருப்பதாகவும், பேச்சு வழக்கு மொழி வாசிக்கத் தடை ஏற்படுத்துவதாகவும் புகார்கள் சொல்லி அந்நாவலை மறுத்துக் கொண்டிருந்தனர். அச்சமயத்தில்தான் மண் புழுக்கள் நாவலைப் பற்றி நான் பத்திரிகையில் விமர்சனமும் எழுதியிருந்தேன். அதே சமயத்தில் மறைந்த எழுத்தாளர் ப.ஆ.சிவத்தின் கட்டுரையும் வெளிவந்திருந்தன. இப்படியாக அவர் படைப்புகள் எனக்குள் ஏற்படுத்திய மாற்றுப் பார்வைகள் நவீன இலக்கியத்தின் ஆழத்தை அடைய ஒரு வாசக மனத்தை உண்டாக்கியது என்றே சொல்ல வேண்டும்.

 

அச்சமயத்தில்(2007) அவர் கெடா மாநிலத் தமிழ் எழுத்தாளர் இயக்கத்தின் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டிருந்தார். ஆகவே, என்னையும் இயக்கத்தில் சேர அழைத்துச் சென்றார். அப்படி அறிமுகமானதுதான் கெடா மாநில எழுத்தாளர் இயக்க நண்பர்கள். அப்பொழுதெல்லாம் மாதமொருமுறை வாசகர்கள் எழுத்தாளர்கள் கூடி சிறுகதையொட்டி விவாதிப்பதுண்டு. ஆனால், பெரும்பாலான சமயங்களில் நம்மிடையே தீவிரமான தேடலுள்ள வாசகர்கள் இல்லாததாலே எல்லா விமர்சனக் கூட்டங்களும் ஒழுக்கம், மொழிச்சீர்மை போன்றவற்றில் சிக்கிக் கொண்டு மொன்னையாகிவிடுவதுண்டு. நானும் சீ.முத்துசாமியும் ஒன்றிணைத்த சில விமர்சன சந்திப்புகள் மேற்சொன்ன சிக்கல்களினாலேயே முடங்கிப் போயின. மேலும், ஒரு படைப்பாளன் அதுவும் தன்னைச் சுதந்திரமானவனாக உணரும் ஓர் எழுத்தாளன் இதுபோன்ற இயக்கங்களில் செயல்பட முடியாது என சீ.முத்துசாமி அக்காலக்கட்டத்தில் உணர்ந்தார். அவர் அப்படியொரு சிந்தனைக்கு வரும் காலங்களில் நான் அவருடன் இருந்தேன். ஒரே ஆண்டில் அவர் தன் தலைவர் பதவியை விட்டு விலகினார்.

 

அவர் விலகினாலும் என்னையும் உடன் வெளியேற அனுமதிக்கவில்லை. நான் இன்னும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என நம்பினார். அதே எழுத்தாளர் இயக்கத்தில் நான் செயலாளராகப் பதிவியேற்று கல்வி இலாகாவுடன் இணைந்து ஆசிரியர்களுக்காகக் கவிதை பட்டறை, சிறுகதை பட்டறை, வாசிப்புத் தினம் என சில நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தேன். அப்பொழுது மிகுந்த உற்சாகமான செயல்பாட்டாளராக மாறியிருந்தேன். ஆனாலும், நவீன இலக்கியத்தின் மீதான பலரின் வாசிப்பும் தேடலும் விரிவடையாதனாலேயே அதையும் தொடர்ந்து முன்னெடுக்க முடியவில்லை. புரியவில்லை என்கிற ஒரு சாதாரண காரணத்தை முன்வைத்துப் பலர் என்னைத் தாண்டிப் போய்க்கொண்டே இருந்தனர். மேலும், இயக்கத்தில் ஏற்பட்ட சில சிக்கல்களினால் நானும் அப்பதவியை விட்டு விலகினேன். அதன் பிறகு கடந்தாண்டு வரை நான் இயக்கத்தின் எந்தப் பதவியையும் நிர்வகிக்கவில்லை( (இடையில் ஓர் ஆண்டு, தலைவராக இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு அதுவும் பிரச்சனையிலேயே முடிந்து, இப்பொழுது முற்றிலும் விலகிவிட்டேன்). ஓர் எழுத்தாளன் இயக்கத்தின் சட்டத் திட்டங்களுக்கேற்ப செயல்பட முடியாது என சீ.முத்துசாமி சொன்னதை, நம்பியதை என் அனுபவத்தால் நான் மீண்டும் உறுதிப்படுத்தினேன்.

 

2009ஆம் ஆண்டில் நவீன படைப்பாளர்கள் மத்தியில் இலக்கியம் தொடர்பான சர்ச்சைகளும் உருவாகியிருந்தன. அச்சர்ச்சையில் எனக்கும் சீ.முத்துசாமிக்கும் மாற்றுக் கருத்து உண்டாகி பிரியவும் நேர்ந்தது. அதுவரை அவருக்கும் எனக்குமிருந்த நெருக்கம் முற்றிலும் துண்டித்துப் போனது. அவரே முன்பு சொன்னதைப் போல எந்தவித நிபந்தணைகளும் இன்றி இருவரும் விலகிக் கொண்டோம். உறவில் நிபந்தணைகள் விதித்துக் கொள்ளும் பண்பை என்னிடமிருந்து நீக்கியவரும் அவரே.

 

சில வருடங்கள் பேசாமல் இருந்து, பின்னர் கோலாலம்பூரில் நடந்த அவருடைய நூல் வெளியீட்டிற்குச் சென்றிருந்தேன்(2010). அங்கு என்னைப் பார்த்ததும் மற்ற அனைத்தையும் மறந்து அன்புடன் பேசினார் உறவைப் புதுப்பித்துக் கொள்ளும் ஆற்றல் இருவருக்குமே இல்லாததால் மீண்டும் ஒரு மௌனம் பல காலம் நீடித்தது. அதன் பிறகு இலக்கிய நிகழ்ச்சிகளில் பார்த்தால் பேசிக் கொள்ளும் அளவிற்கே இருவரின் உறவும் இருந்தது. அவர் படைப்புகள் மீது எனக்கிருந்த வாசிப்பும் தேடலும் எப்பொழுதுமே இச்சர்ச்சைகளால் குறைந்ததே இல்லை. ஆகவேதான், எப்பொழுதும் அவருடைய படைப்புகள் பற்றி எழுதிக் கொண்டே இருந்தேன். என் வலைப்பக்கத்திலும் அதனைப் பிரசுரித்திருந்தேன். படைப்பாளன் வேறு; படைப்பு வேறு என்று சொன்னவரும் சீ.முத்துசாமியே.

 

அவருடைய குரல்களைப் பல சந்தர்ப்பங்களில் எனக்குள் சேமித்து வைத்துள்ளேன். இரண்டாண்டுகள் அவருடனே சுற்றி அலைந்ததால் படைப்பிலக்கியத்தின் குரல் எத்தனை தீர்க்கமாக, அதிகாரங்களுக்கு வளைந்து கொடுக்காமல் தன் சுயத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்பதை அவரிடமிருந்து கற்றுக் கொண்டேன். இன்று எந்த இயக்கத்தோடும் அமைப்போடும் தொடர்பில்லை என்றாலும் இலக்கியத்தில் தனித்து இயங்குவதற்கான  துணிச்சலைச் சீ.முத்துசாமியிடமிருந்து கற்றுக் கொண்ட ஒருவன் எனச் சொல்லிக் கொள்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. கடந்தாண்டு தோழிப் பதிப்பகத்தின் மூலம் வெளிவந்த என்னுடைய ‘இறந்தகாலத்தின் ஓசைகள்’ எனும் சிறுகதை தொகுப்பிற்குச் சீ.முத்துசாமியே முன்னுரை எழுதிக் கொடுத்திருந்தார். நூல் வெளியீட்டு விழாவிலும் அவரே விமர்சனமும் செய்தார். அவையாவும் என் எழுத்திற்குக் கிடைத்த அங்கீகாரமே ஆகும்.

 

எழுத்தாளர், சகோதரர் ஜெயமோகன் அவர்கள் தொகுத்த ‘சீ.முத்துசாமி- மலேசிய நவீன இலக்கியத்தின் முன்னோடி’ கட்டுரை தொகுப்பில் என் கட்டுரை இடம் பெற்றிருப்பதைக் கண்டதும் ஏற்பட்ட மகிழ்ச்சியால் இக்கட்டுரையை எழுதி அனுப்பியுள்ளேன். வேறு யாரையும்விட அவருடன் ஆத்மார்த்தமாகச் சுற்றி அலைந்தவன் நான். பல சமயங்களில் அவரால் கடுமையாகத் தாக்கவும் பட்டுள்ளேன். அவர் வாழ்நாளின் ஒரு பகுதியில் நான் இருக்கிறேன் என்கிற நினைவு ஒன்றே போதும். மலேசிய நவீன இலக்கியத்தின் நேர்மையான ஒரு குரலாக எப்பொழுதும் எனக்குள் ஒலித்துக் கொண்டே இருக்கும் சீ.முத்துசாமிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

 

– கே.பாலமுருகன்

Thanks jeyamohan.in (pictures)

‘இறந்தகாலத்தின் ஓசைகள்’ சிறுகதை தொகுப்பில் இருக்கும் என் சிறுகதைகள் பற்றி ஒரு பார்வை

வருகின்ற 19 ஆகஸ்டு 2017 மாலை 6.00 மணிக்குச் சுங்கை பட்டாணியில் தோழி பதிப்பகத்தால் வெளியிடப்படும் என்னுடைய ‘இறந்தகாலத்தின் ஓசைகள்’ சிறுகதை தொகுப்பிலுள்ள ஒவ்வொரு சிறுகதைக்கும் ஒரு பின்னணியும் வரலாறும் உள்ளன. அவற்றை இக்கட்டுரையில் மீட்டுணர்கிறேன்.

இத்தொகுப்பிற்கான சிறுகதைகளைத் தேர்ந்தெடுக்கும் போது நானும் சு.யுவராஜன் அவர்களும் எந்தச் சமரசமும் இல்லாமல்தான் செயல்பட்டோம். தேவையற்றதாக அவர் கருதிய இரண்டு சிறுகதைகளை இத்தொகுப்பிலிருந்து நீக்குவதற்கு நான் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. நம்மை விட நம் சிறுகதைகளின் மீது கூர்மையான பார்வையுடையவர்கள் நம் வாசகர்களும் விமர்சகர்களும் தான்.

அவ்வகையில் மீதி உள்ள 10 சிறுகதைகளும் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் என்னை ஒரு சிறுகதையாளனாகச் சமூகத்தாலும் அமைப்புகளாலும் சக எழுத்தாளர்களாலும் அடையாளம் காட்டியவை என்றே சொல்லலாம். இத்தொகுப்பிலுள்ள அத்தனை சிறுகதைகளுக்கும் அம்முக்கிய த்துவம் உள்ளது. 2007ஆம் ஆண்டு தொடங்கி 2014ஆம் ஆண்டு வரை எழுதப்பட்ட இவ்வனைத்து சிறுகதைகளும் காலத்தைத் தாண்டியும் நினைவுக்கூறப்படுவதற்கும் பேசப்படுவதற்கும் அச்சிறுகதைகளின் யதார்த்தமும் வாழ்வியலின் மீது அவை கவிழ்ந்து கிடக்கும் ஆழமும் முக்கியம் என்றே எழுத்தாளர் சீ.முத்துசாமியும், சு,யுவராஜனும் எப்பொழுதும் சொல்லிக் கொண்டிருப்பார்கள்.

  1. பேபி குட்டி

2014ஆம் ஆண்டில் ஜெயமோகன் மலேசியாவிற்கு வந்துபோன பிறகு உடனே எழுதிய சிறுகதை. எனது வலைத்தலத்தில் பதிவேற்றம் செய்திருந்தேன். இலக்கியத்தின் தீவிர வாசகரான சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி தொடங்கி எழுத்தாளர் ஜெயமோகன் வரை அனைவராலும் பாராட்டுப் பெற்ற சிறுகதையாக அது சட்டென தொய்ந்துகிடந்த என் சிறுகதை உலகைத் தூக்கி நிறுத்தியது என்றே சொல்லலாம். வெகுநாட்கள் இடைவெளிக்குப் பிறகு எழுதப்பட்ட இச்சிறுகதை என்னை மீண்டும் எனக்கு மீட்டுக் கொடுத்ததாகவே அடையாளம் காண்கிறேன். அதோடுமட்டுமல்லாமல் மின்னல் வானொலியில் சிறுகதை பிரிவில் இரண்டு முறை இச்சிறுகதை ஒலிபரப்பப்பட்டு மலேசிய வாசகர்களின் கவனத்தை ஈர்த்தது என்றே சொல்ல வேண்டும்.

  1. அலமாரி

2008ஆம் ஆண்டில் மக்கள் ஓசை பத்திரிகையில் பிரசுரமான சிறுகதை. அவ்வாண்டின் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் மாதாந்திர சிறுகதை தேர்வில் சிறந்த சிறுகதையாகத் தேர்வானது குறிப்பிடத்தக்கது. மேலும், என்னை முதலில் நல்ல சிறுகதை எழுத்தாளனாக அடையாளம் காட்டிய சிறுகதையாக இதனையே பலரும் குறிப்பிட்டார்கள். எனது ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி விரிவுரையாளர்கள் திரு.ப.தமிழ்மாறன், திரு.அ.பன்னீர் செல்வன், திரு.ந.பாஸ்கரன், அமரர் திரு.அர்மம் ராஜூ, எழுத்தாளர் பொ.சந்தியாகு மேலும் அக்காலக்கட்டத்தில் வாசித்த பலர் இச்சிறுகதையைச் சிலாகித்துப் பேசினர். சிறுகதை உலகில் எனக்கு ஏற்பட்ட ஒரு பெரும்திறப்பாக ‘அலமாரி’ சிறுகதையைக் குறிப்பிடலாம். அதோடுமட்டுமல்லாமல் ‘பண்புடன்’ கூகள் குழுமம் நடத்திய சிறுகதை போட்டியிலும் இக்கதை சிறந்த சிறுகதையாகத் தேர்வாகி பரிசையும் பெற்றது.

  1. இறந்தகாலத்தின் ஓசைகள்

2009ஆம் ஆண்டில் எழுதப்பட்ட இச்சிறுகதை கெடா மாநிலத் தமிழ் எழுத்தாளர் இயக்கம் நடத்திய சிறுகதை போட்டியில் முதல் பரிசைப் பெற்றது. அப்பொழுது அப்போட்டிக்கு நீதிபதியாக இருந்த மறைந்த மூத்த எழுத்தாளர் திரு.ரெ.கார்த்திகேசு அவர்கள் இச்சிறுகதையை மலேசிய நவீன இலக்கியத்தின் பாய்ச்சலாகக் கருதுவதாகக் குறிப்பிட்டிருந்தார். தனிப்பட்ட முறையிலும் இச்சிறுகதையின் இருண்மையும் மொழியும் அப்பொழுது மிகவும் புதியதாகத் தோன்றியதாக என்னிடமும் சீ.முத்துசாமி ஐயாவிடமும் விமர்சனப் பார்வையாக வெளிப்படுத்தியிருந்தார். ஒரு மூத்த இலக்கிய விமர்சகரிடமிருந்து கிடைக்கப்பெற்ற அத்தகைய ஊக்கமிக்க விமர்சனம் இச்சிறுகதையினாலேயே சாத்தியமானது.

  1. வீட்டைத் தொலைத்தவர்கள்

2012ஆம் ஆண்டு தினக்குரல் பத்திரிகையில் பிரசுரமான கதை. அப்பொழுது அப்பத்திரிகையின் ஞாயிறு பதிப்பாசிரியராக இருந்த திரு.ராஜசோழன் அவர்களால் பாராட்டுப் பெற்று பிரசுரத்திற்குத் தேர்வானது. இச்சிறுகதை என் தாத்தாவை நினைத்து எழுதப்பட்டவை. நேரடியான அனுபவத் தாக்கத்திலிருந்து உருவான சிறுகதை இது.

  1. பாட்டி வீட்டில் ஒரு கிணறு இருந்தது

இச்சிறுகதை 2011 ஆண்டில் எழுதப்பட்டு தமிழ்நாட்டின் ‘வார்த்தை’ இதழில் பிரசுரமானதாகும். இதுவும் ஓர் உண்மை சம்பவத்திலிருந்து கிளர்ந்தெழுந்த சிறுகதையே. வயோதிகர்களின் வாழ்க்கை எப்படிச் சிதைவுக்குள்ளாகி தூக்கியெறியப்படுகிறது என்பதன் கொடூரத்தைச் சொல்ல வேண்டும் என்பதற்காக எழுதப்பட்ட சிறுகதை. எழுதி முடித்த நாளில் உறங்காமல் ஏற்பட்ட தவிப்பு இன்னமும் ஞாபகத்தில் இருக்கிறது.

  1. நடந்து கொண்டிருக்கிறார்கள்

மலேசியத் தேசிய பல்கலைக்கழகத்தின் 2007ஆம் ஆண்டு தேசிய அளவில் நடந்த சிறுகதை போட்டியில்  எனக்குப் முதல் பரிசினைப் பெற்று கொடுத்த சிறுகதை. அப்போட்டிக்கு நீதிபதியாகப் பணியாற்றிய டாக்டர் முல்லை இராமையா அவர்கள் சிறுகதையின் யதார்த்த பாணியையும் சிறுகதையில் பாவிக்கப்பட்டிருக்கும் வாழ்க்கையை வேறு கோணத்தில் அவதானிப்பு செய்யும் மொழியையும் பாராட்டிப் பேசினார்.

 

  1. உறங்கிக் கொண்டிருக்கிறார்கள்

மலேசியத் தேசியப் பல்கலைக்கழகத்தின் சிறுகதை போட்டியில் 2008ஆம் ஆண்டு இரண்டாம் நிலை பரிசைப் பெற்ற இச்சிறுகதை என் வாழ்வில் நான் கண்டு தாண்டி வந்த சில பாட்டிகளைப் பற்றியதாகும். இதே சிறுகதை தமிழ்நாட்டின் ‘யுகமாயினி’ இதழில் பிரசுரம் கண்டது குறிப்பிடத்தக்கதாகும்.

 

  1. செல்லம்மா பாட்டியின் மரணத்திற்கு வந்தவர்கள்

இச்சிறுகதை 2013ஆன் ஆண்டு எழுதப்பட்டு எனது சொந்த வலைத்தலத்தில் பிரசுரமானது. மரணம் குறித்து சமூகம் பொதுமனங்கள் எப்படி இரட்டை வேடங்களை அணிந்து கொள்கிறது என்பதைப் பற்றிய சிறுகதையாக இடம்பெற்றுள்ளது.

 

  1. லாந்தர் விளக்கும் காட்டேரிப் பாதையும்

இச்சிறுகதை 2015ஆம் ஆண்டில் எழுதப்பட்டு ‘திண்ணை’ இணைய இதழில் பிரசுரம் கண்டது. நான் முதன் முதலில் எழுத வந்த காலங்களில் என் படைப்புகளைப் பிரசுரித்தது ‘திண்ணை’ இணைய இதழ்தான். அங்குப் பிரசுரமான கவிதைகளைத்தான் சிங்கை பாலு மணிமாறன் ஒரு நூலாகத் தொகுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

  1. பாட்டியின் தோள் துண்டு

இச்சிறுகதை எனக்கு மிகவும் நெருக்கமான சிறுகதையாகும். 2010ஆம் ஆண்டில் எழுதப்பட்டு மக்கள் ஓசை பத்திரிகையிலும், பின்னர் 2012ஆம் ஆண்டில் வல்லினம் இணைய இதழிலும் இச்சிறுகதை பிரசுரமாகிக் கவனிக்கவும் பட்டது. சீ.முத்துசாமி மிகவும் சிலாகித்துப் பேசிய இச்சிறுகதை நண்பர் ஒருவரின் தயாரிப்பில் ஒரு குறும்படமாகவும் இயக்கப்படவிருப்பதை இங்கே அறிவிக்கிறேன்.

மேற்கண்ட பல சிறுகதைகளை வாசித்துக் கருத்துரைத்த எழுத்தாளர் மஹாத்மன் அவர்களுக்கும் அ.பாண்டியன் அவர்களுக்கும் நன்றி.

  • கே.பாலமுருகன்

 

ஒளி என்பது வெளுப்பான இருட்டு- கே.பாலமுருகனின் சிறுகதைகள் விமர்சனம்

         ருள் என்பது குறைந்த ஒளி என்கிற பாரதியின் கூற்றை முற்றமுழுக்க மறுதலிப்பவராய் தெரிகிறார் பாலமுருகன். அவரைப் பொறுத்தவரை ஒளி என்பதேகூட வெளுப்பான இருட்டுதான் போலும். ஆமாம், அவருக்கு பூமியே ஒரு இருளுருண்டையாகத்தான் தெரிகிறது. எனவே அவரது கதையுலகமும் இருளுக்குள் தான் இயங்குகிறது. இருட்டு இருட்டு என்று இருட்டைப் பற்றியே இத்தனைக் கதைகள் எழுத முடியுமா என்கிற மலைப்பு ஒருபுறமிருக்க அதைப் பற்றி இன்னும் சொல்லிமுடிக்கவில்லை என்கிற ஒரு துயரத்தோடுதான் அவரது ஒவ்வொரு கதையும் முடிந்திருக்கிறது என்பதைத்தான் கவனப்படுத்தி சொல்லவேண்டியிருக்கிறது.

       ருளுக்குள் நுழைகிறபோதான தத்தளிப்பு, சற்றே பழகிய பின் கண்களுக்குப் புலப்படுகிற மங்கலான உருவங்கள், அவற்றின் நடமாட்டங்கள், முழுப் பரிமாணத்தில் தெரிந்துகொள்ளவியலாத அவற்றின் மீதான பயம் பரவசம் என்பவையெல்லாம் ஏற்கனவே வெளிச்சம் என்கிற ஒன்றை அறிந்திருப்பவருக்குத் தானேயொழிய பாலமுருகனின் கதைமாந்தர்களுக்கல்ல. ஏனென்றால் அவர்கள் வெளிச்சம் என்பதை வாழ்நாளில் ஒருபோதும் கண்டவர்களல்ல. எனவே அவர்கள் இருளில் பிறந்து இருளிலேயே வளர்ந்து வாழ்ந்து அதிலேயே மடிந்து ஆகக்கடைசியில் அந்த இருளுக்குள்ளேயே புதைந்தும் போகிறவர்களாக இருக்கிறார்கள். வெளிச்சத்துக்குள் நுழையும் தருணங்களில்கூட அதுதான் வெளிச்சம் என்பதை முன்பின் அறிந்திராத காரணத்தால் அவர்கள் கூசும் கண்களை மூடி அவ்விடத்தை இருளாலடித்து தமக்கிசைவாக்கிக் கொண்ட பின்பே இயல்புநிலைக்குத் திரும்புமளவுக்கு அவர்கள் இருள்வயப்பட்டிருக்கிறார்கள்.

 

கிட்டாதாயின் வெட்டெனவோ சட்டெனவோ மறந்துவிட அவர்களொன்றும் துறவிகளல்ல. வெளிச்சத்தின் மீதான அவர்களது தணியாத ஆவல் அது கிடைக்கவே போவதில்லை என்பதனால் தீராப்பகையாகவும் மாறிவிடுவதில்லை. ஆனால் அவர்களது பிரார்த்தனைகள் ஒளியுமிழும் தேவதைகளை எதிர்பார்த்தல்ல. மஞ்சள் வண்ண இருளைப்போல எப்போதும் அணையாத தீப்பந்தங்களையும் மண்ணெண்ணெய் விளக்குகளையுமே வேண்டுதலாய் கொண்டிருக்கின்றனர். அவர்களது அதிகபட்சக் கனவான ஜெனரேட்டர் விளக்குகளும்கூட கருமையாய் ஒளிர்பவை என்பது புனைவல்ல, வாழ்க்கை. ஆமாம், அவர்களது வாழ்க்கை இருள்மயமானது. அந்த இருளின் வயது இரண்டு நூற்றாண்டுகள்.

2.

‘உலகெங்கும் தமிழர்கள் இருக்கிறார்கள், மலேசியாவில் மட்டும்தான் வாழ்கிறார்கள்’ என்று ஒருமுறை அண்ணா சொன்னாராம். எப்படி வாழ்கிறார்கள் என்று அவரும் சொல்லவில்லை, ஏனோ அவரிடம் யாரும் கேட்கவுமில்லை. கை தட்டுவதற்கே நேரம் போதாதபோது கேள்வியாவது பதிலாவது? ஆனால் பாலமுருகன் தன் கதைமாந்தர்கள் வழியே இந்த கேள்விகளையும் பதில்களையும் முன்பின்னாகவும் அடுக்குகள் மாற்றியும் முரணொழுங்கிலும் சொல்ல முயன்றிருக்கிறார்.

தமிழ்நாட்டின் இண்டுஇடுக்கு சிற்றூர்களைச் சேர்ந்த எளிய மனிதர்கள் நாகை, ராமேஸ்வரம், தூத்துக்குடி போன்ற துறைமுகங்கள் வழியே உலகின் 40க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பிரிட்டிஷாராலும் பிரான்சினராலும் கொண்டு செல்லப்பட்ட வரலாற்றுடன் பின்னிப் பிணைந்ததுதான் மலேசியத்தமிழரது வரலாறும். அப்படியான மலேசியத் தமிழரது வரலாற்றின் மிகத்தொடக்ககால உளவியல் போக்குகளின் வகைமாதிரிகளே பாலமுருகனின் கதைமாந்தர்களாக இருக்கிறார்கள்.

இந்தியாவைப் போலவே மலேசியாவையும் காலனியாகக் கொண்டிருந்த பிரிட்டிஷார் அங்கு ரப்பர் தோட்டங்களை உருவாக்கவும், தோட்டங்களையும் துறைமுகங்களையும் இணைப்பதற்கான சாலைகளையும் பாலங்களையும் நிர்மாணிப்பதற்காகவும் இங்கிருந்து உழைப்பாளிகளை கொண்டு சென்றனர். எங்கு கோண்டுபோய் சேர்க்கப்போகிறார்கள் என்கிற விவரமே தெரியாமல் கப்பலுக்குள் அடைபட்ட அந்தக்கணத்தில் மனதிற்குள் ஏற்பட்ட வெறுமையும் நிச்சயமற்றத்தன்மையும் அவர்களது மனதில் என்றென்றைக்குமான இருளாக கவிந்திருக்கிறது. பக்கத்து ஊரைக்கூட பார்த்திராத அவர்கள் நாடுகடந்து கடல் தாண்டி மலேய மண்ணில் மனிதச்சுவடே அதுவரை பட்டிராத பாகங்களிலெல்லாம் தமது முதலடிப் பதித்திருக்கின்றனர். கண்ணுக்கெட்டியவரை காடாகிப் பரந்திருந்த அந்நிலப்பரப்பில்தான் இனி என்றென்றைக்கும் தாங்களும் தங்களது சந்ததிகளும் கிடந்தழியப் போகிறோம் என்றுணர்ந்தவர்கள் கண்ணில் அன்றைக்கு அப்பிய இருள் இன்னும் விலகவேயில்லை என்பதற்கான எழுத்தாவணங்களில் ஒன்றாக பாலமுருகன் கதைகளையும் சேர்த்துக் கொள்ளலாம். (‘கதவச் சாத்துடி கண்ணு கூசுது’ என்று வெளிச்சத்தைக் காண்பதற்கு அஞ்சி ஒரு கதையில் முறையிடுகிறவனும், அம்பாம் பாசா தோட்டத்து இருளுக்குள் புழங்கியே பழகிவிட்டதால் நகரத்து தங்கும் விடுதியறையில் விளக்குகளை அணைத்துவிட்டு இருளுக்குள் படுத்து நிம்மதியடைகிறவனாக இன்னொரு கதையில் வருகிறவனும் ஒரே மனநிலையின் இருவேறு பிரதிகள்).

 

விலங்குகளின் இடமான அடர்க்காடுகளுக்குள் மனிதர்கள் நுழையும்போது உயிராபத்திலிருந்து தற்காத்துக்கொள்வதுதான் முதற்பெரும் சவால். அதிலும் அங்கேயே நிரந்தரமாய் வசிக்க நேரும்போது இந்த சவாலும் ஒவ்வொரு கணத்துக்குமானதாய் மாறிவிடுகிறது. எனவே அவர்கள் விலங்குகள் ஏறிவர முடியாத உயரத்திற்கு தரையில் மரத்தூண்களை நட்டு அவற்றின்மீது பரண்போன்ற கொட்டகைகளை அமைத்து வசிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். முன்னிரவில் கொளுத்தப்படுகிற தீப்பந்தங்களையும் மண்ணெண்ணெய் விளக்குகளையும் விடியவிடிய எரியவிடுமளவுக்கு எண்ணெய் வளப்பமோ பொருள்வளப்பமோ அற்ற அவர்கள் இருளைப் போர்த்திக்கொண்டு நசநசக்கும் வியர்வையோடு விடிவதற்காக பதுங்கியிருந்திருக்கிறார்கள். விடிந்தால் மட்டுமென்ன, இரவின் மிச்சம்போல இருண்டுகிடக்கும் காடுகளுக்குள் புகும் அவர்களுள் எத்தனையோ பேர் ஒவ்வொரு நாளும் காணாமல் போயினர். ஆமாம் காடுகள் மனிதர்களை தின்று கொழுத்தன.

அச்சம் எப்போதும் இருக்கத்தான் செய்கிறது, அதற்காக அடங்கிக்கிடந்துவிட முடிகிறதா என்ன? அந்த மக்கள் காடுகளுக்குள் அலைகிறார்கள். காடுகாடாக அலைகிறார்கள். தங்களது மரணத்தை தாங்களே தேடியலைவதுபோல இருக்கிறது அவர்களது அலைச்சல். காடுகள் வழிகளை மறக்கடித்து அவர்களை எங்கோ திசைமாற்றி கூட்டிப் போகின்றன. இப்படி மயக்கி கூட்டிப்போவதற்கென்றே பேய்களும் முனிகளும் மோகினிகளும் காடுகளுக்குள் வெவ்வேறு ரூபங்கொண்டு அவர்களை பின்தொடரவும் முன்வந்து மறிக்கவும் காத்திருக்கின்றன. ஆனாலுமென்ன, அவ்வளவு சேட்டைகளையும் கட்டுப் படுத்தவும் விரட்டியடிக்கவும் அங்கு திருநீறுடன் ஒரு சாமியாடி காத்திருக்கிறார். மட்டுமல்ல, வழிதப்பி அல்லாடுகிறவர்களை தானே வழியும் துணையுமாக வந்து பத்திரமாய் வீடு கொண்டு சேர்த்துவிட்டு மாயமாய் மறைந்துவிடுகிற நல்ல ஆவிகளும் காடுகளுக்குள் இருக்கத்தான் செய்கின்றன. காணாமல் போனவர்கள், காணாமல் போக்கடிக்கப்பட்டவர்கள், தூக்கத்திலேயே கொல்லப்பட்டவர்கள், காட்டு/நாட்டு விலங்குகளுக்கு இரையாகிப்போனவர்கள், சயாம் மரண ரயில்பாதை அமைக்க தூக்கிச் செல்லப்பட்டவர்கள், வெள்ளை வேன்களில் பிடித்துச் செல்லப்பட்டவர்கள், ஒரிஜினல் மற்றும் போலி என்கவுண்டர்களில் போட்டுத்தள்ளப்பட்டவர்கள், பதுங்குக்குழிகளிலேயே புதைந்துபோனவர்கள் என்று பலவந்தமாக உயிர் பறிக்கப் பட்டவர்கள் மீது இரக்கக்கொண்ட மக்கள் அவர்களை ஆவிகளாக்கி தம்மோடு சேர்த்துக் கொள்கின்றனர்.

ஒரு மர்மத்தின் விடையாக இன்னொரு மர்மம் அல்லது ஒரு மர்மத்தை இன்னொரு மர்மமே வந்து விளக்கிவிடுவது போன்று தெரிந்தாலும் ஆகக்கடைசியில் காட்டுவாழ்க்கை மர்மங்களாலேயே சூழப்பட்டதாய் இருக்கிறது. இருள் ஏற்படுத்திய மரணங்களையும் மரணங்கள் ஏற்படுத்திய இருளையும் எதிர்கொள்ளும் வகையறியாது அல்லது அதையே இயல்பாக ஏற்றுக்கொண்ட தோட்டக்காடுகளுக்குள் தனது பால்யத்தை கழிக்க நேர்ந்த பாலமுருகனின் ஆழ்மனப்பதிவுகளே இத்தொகுப்பின் கதைகளாக வெளிப்பட்டுள்ளன. இருளில் தொலைந்தவர்களின் துர்க்கனவுகள் என்ற ஒரு கதையைத்தான், இருளினை இழையிழையாகப் பிரித்தும் கோர்த்தும் காட்டுவதுபோல 12 கதைகளாக அவர் எழுதிப் பார்த்திருப்பதாக தோன்றுகிறது. ஒவ்வொரு கதையிலும் வெவ்வெறு இடத்தில் நின்றுகொண்டு அவர் தன் கதையைத்தான் சொல்லிக் கொண்டிருந்திருக்கிறார் என்பதற்கான தடயங்கள் கதைக்குள்ளேயே இருக்கின்றன. பழைய பட்டணத்தின் மரணக்குறிப்புகள் என்ற இத்தொகுப்பின் கடைசிக்கதையில் தனது தந்தையின் பெயரை நேரடியாக குறிப்பிடுவதை ஒரு துப்பாக வைத்துக்கொண்டு இந்தக் கண்ணியை பிடிக்கமுடியும். ஆனால் அவ்வாறான யூகங்களை விடுத்து கதைகளை அதனதன் அளவில் தனித்துப் பார்த்தாலும் காடன்றி வேறொன்றறியாத சிறார்களின் உலகே அவரது கதைகளாகி இருப்பதையும், அவர் கதைகளுக்கு வெளியே தன்னை நிறுத்திக் கொள்ள தொழில்நுட்பரீதியாக எவ்வித முனைப்பும் கொள்ளவில்லை என்பதை அறிய முடியும்.

உடும்புக்கார தாத்தா, நல்லம்மா பாட்டி, சைக்கிளில் உட்காரவைத்துக்கொண்டு காடு சுற்றும் தாத்தா, விளக்கைப் பற்றியே பினாத்திக் கொண்டு செத்துப்போகிற அம்மாச்சி பாட்டி, ஊரடங்கின பின்பு கிணற்றோடு பேசுகிற தாத்தா, அந்தக் கிணற்றை எட்டிப் பார்க்கவும் அனுமதிக்காத பாட்டி என்று வருகிறவர்களை கதாபாத்திரமாக குறுக்குவதா கதையாக விரிப்பதா? பாட்டிகளும் தாத்தாக்களும் கதைசொல்லும் இயந்திரங்களல்ல, அவர்கள்தான் கதைகளாக இருக்கிறார்கள் என்று படிக்கத் தெரிந்திருக்கிறது பாலமுருகனுக்கு.

3.

தோட்டக்காடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களின் இடைத்தங்கல் முகாம்களைப் போன்ற கம்போங் / கம்பத்தில் (கிராமங்கள்) தமிழர்களின் வாழ்க்கை மேலும் சிக்கலானதாகவும் சவாலானதாகவும் மாறுகிறது. தோட்டக்காட்டிலிருந்து விடுபட்டு விட்டார்கள் என்றாலும் மரணமும் இருளும் காணாமல் போதலும் அவர்களை நிழலெனத் தொடர்வது குறித்த பதற்றம் கதைகளுக்குள் இருக்கிறது. அவர்களைப் பொறுத்தவரை புலப்பெயர்வும் முற்றுப்பெற்றுவிடவில்லை. பூர்வீகத்திலிருந்து பெயர்ந்துவந்த அவர்கள் இன்னமும் நிலைகொள்ளவியலாமல் மலேசியா முழுக்க அலைந்து கொண்டே இருப்பது குறித்த துயரம் கதைகளுக்கிடையேயான பொதுத்தன்மையாக இருக்கிறது.

தோட்டக்காடுகளிலும் கம்போங்கிலும் சாகாமலும் தொலைந்துபோகாமலும் எஞ்சியவர்களை வரவழைத்து காணாமல் போக்கடிக்கவோ அல்லது சாகடிக்கவோ பட்டணங்கள் காத்திருக்கின்றன. மீனா அக்காவும் தனசேகர் அப்பாவும் மட்டுமா அங்க காணாமல் போகிறார்கள்? வருகிற ஒவ்வொருவரும் காணாமல் போகிறார்கள் அல்லது இயல்பு திரிந்து வேறொன்றாகிறார்கள். மனநலம் குன்றியவர்கள், பாலியல் தொழிலாளர்கள், மொடாக்குடியர்கள், பிச்சைக்காரர்கள், நம்பர் தாள் விற்பவர்கள், உறங்கும் குழந்தையை விட்டுவிட்டு அகாலத்தில் பிரியும் தந்தையர்கள், அப்பா முகம் காணும் ஏக்கத்தில் வதங்கும் குழந்தைகள், கிறுக்குத்தேவன்கள் என்று பலபக்கமிருந்து வந்து சேரும் இவர்கள் பட்டணங்களின் உதிரிகளாக உழன்றலைகிறார்கள். உடல் வளர்ச்சிக் குன்றிய பூச்சாண்டி, யார் கண்ணிலும் படாதவாறு சாத்திய அறைக்குள்ளேயே படுத்தப் படுக்கையாய் கிடக்கும் அவனது தந்தை, பஸ்கட்டணம் செலுத்தமுடியாமல் ஒளிந்துகொள்ள முயற்சித்து தவறி விழுந்து செத்துப்போகிற மாணவன், வயிற்றுக்குள் சுடுகாடு இருப்பதாய் பிதற்றுத் திரிகிற இளைஞன், கணவனின் புறக்கணிப்பை இடையறாத செல்போன் உரையாடல் வழியே கடக்க முனையும் பெண், குற்றவுணர்ச்சியில் மடிந்துகொள்ளும் அவளது கணவன் என வருகிறவர்களும்கூட அவரவர் இருப்பில் உதிரிகள்தான். இந்த உதிரிகளின் குரலாக இருந்து எழுதி தியாகச் செம்மலாகிவிடும் பேராசையற்ற பாலமுருகன் அந்த உதிரிகளில் ஒருவராக கரைந்து எழுதியிருக்கிறார். மலேயாவில் தமிழர்கள் உதிரிகள் என்றால், அந்த தமிழர்களில் உதிரிகள் எவரோ அவர்களின் கதைகள் இவை.

ஆதவன் தீட்சண்யா, 2015

யார் கொலையாளி? – பாகம் 2 ( ஒரு விசாரணைத் தொடர்)

கொல்லப்பட்டவளைப் பற்றிய விவரங்கள்:

இறந்தவரின் பெயர்: தினேஸ்வரி

இடம்: சேலாயாங் அம்பாட் அடுக்குமாடி

கொல்லப்பட்டவைக்கான காரணம்: தெரியவில்லை

கொல்லப்பட்ட விதம்: மணிக்கட்டில் சிறிய வெட்டுக்காயம், தலையில் மண்டை ஓட்டில் சிறிய பிளவு (கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கிறார்), ஆங்காங்கே இரத்தக் கசிவு.

கொலை கண்டறியப்பட்ட நேரம்: 21 ஜூன் 2017, இரவு 8.45க்கு

கொலை செய்யப்பட்ட நாள்: கண்டறியப்பட்ட நாளில்  கொலை செய்யப்பட்டிருக்கிறார்.

கொல்லப்பட்டவரின் சில விவரங்கள்:

ஒரு தனியார் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த மாணவி. சொந்த வீடு டாமான்சாரா. இங்குக் கடந்த ஒரு வருடமாகத் தங்கிப் படிக்கிறார். தினமும் வேலைக்கு அதே கல்லூரியில் பயிலும் ஒரு மாணவருடன் செல்வாள். அவர்தான் அவளை இங்குக் கொண்டு வந்து விடுவதும்கூட. இரவில் எங்கும் வெளியில் போகும் பழக்கம் அவளுக்கு இல்லை. வீட்டுக்கு ஒரே பிள்ளை. ஏற்கனவே குடியிருந்த இன்னொரு பெண்ணுடன் சில கருத்து வேறுபாட்டால் தனியாகத் தங்க வேண்டிய நிலை கடந்த மார்ச் மாதத்தில் ஏற்பட்டுள்ளது.

காவல்துறை அதன் பிறகு ஒரு வாரம் தீவிர விசாரணையை மேற்கொண்டது.

தினேஸ்வரி பற்றிய முதலில் காவல் நிலையத்தில் தகவல் கூறிய பக்கத்து வீட்டு திரு.மூர்த்தியின் வாக்குமூலம்:

திரு.மூர்த்தி:

அன்றைய மதிய நேரம் இருக்கும், நான் வேலையில் அரைநாள் கேட்டு வீட்டுக்கு வந்துவிட்டேன். எங்கள் வீடு இரண்டாவது மாடியின் கடைசி. என் வீட்டுப் பக்கத்தில்தான் அந்தப் பெண் தங்கியிருந்தார். அமைதியான பெண் தான். ஆனால், கடந்த சில வாரங்களாக அவள் வீட்டுக்குள் கத்தும் சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டே இருந்த்து. யாருடனோ கைப்பேசியில்தான் கத்திக் கொண்டிருக்கிறார் என யூகித்துக் கொண்டேன். வேறு எந்தக் கெட்டப் பழக்கமும் அவளிடம் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. ஆனால், அவள் இறப்பதற்கு அன்றைய கடைசி ஒரு வாரம் மட்டும் அவள் வீட்டில் அவளுடைய வழக்கத்திற்கு மாறான சத்தம் மட்டும் விநோதமாகத் தெரிந்தது.

அவள் இறந்துவிட்ட அன்றைய நாளில் நான் வேலை முடிந்து வந்த சமயம் அவள் வீட்டுக்குள் கண்ணாடி குவளைகள் உடையும் சத்தமும் அவள் கத்தும் சத்தமும் அதிகரித்துக் கொண்டிருந்த்து. என் வீட்டில் மனைவியும் இல்லை. இருந்திருந்தால் அவளை உடனே அனுப்பி விசாரிக்கச் சொல்லியிருப்பேன். பெண் பிள்ளை தனியாக இருக்கும் வீடு என்பதால் முதலில் எனக்குத் தயக்கமாக இருந்தது.

பின்னர் மாலை 6.00 மணிக்கு மேல் ஒரு சிறிய குட்டித் தூக்கம் போட்டு மீண்டும் எழுந்தபோது பக்கத்து வீட்டில் சத்தமே இல்லை. குளித்துவிட்டு வீட்டுக்கு வெளியே வந்து பார்த்தேன். அவளுடைய வழக்கமான காலணி வைத்த இடத்தில் அப்படியே கிடந்தது. அவள் எங்கேயும் போகவில்லை என்றே தோன்றியது. ஏதோ வழக்கமான சண்டைத்தான் என அமைதியாக இருந்துவிட்டேன்.

மணி 8.00 இருக்கும் அவள் வீட்டில் விளக்கு எதுமே எரியவில்லை. வழக்கமாக அத்தனை மணிக்கு அவள் வீட்டில் இருந்தும் விளக்கேதும் போடாமலிருப்பது சற்று உறுத்தலாகவே இருந்தது. உடனே என் மனைவியை அழைத்து அந்தப் பெண் இருக்கும் வீட்டின் கதவைத் தட்டச் சொல்லியிருந்தேன். அவளும் தட்டித் தட்டிக் களைத்துப் போய் மீண்டும் வந்துவிட்டாள். எனக்கு அப்பொழுதுதான் சந்தேகம் வலுத்தது. உடனே, நானும் பலம் கொண்டு கதவைத் தட்டினேன் அப்பெண்ணின் பெயரைச் சொல்லி அழைத்தேன். அதன் பிறகுத்தான் உடனடியாகக் காவல் நிலையத்திற்குத் தொடர்புக் கொண்டேன்.

திரு.மூர்த்தியிடம் காவல்துறை எழுப்பியக் கேள்விகள்:

  1. உங்களுக்கும் தினேஸ்வரிக்கும் ஏதேனும் பேச்சு வார்த்தை இருந்ததுண்டா?

மூர்த்தி: அப்படி ஏதும் இல்லை. எப்பொழுதாவது படிக்கட்டில் சந்திக்க நேர்ந்தால் புன்னகைப்பார். அவ்வளவுத்தான்.

  1. ஒரு வருடம் பக்கத்து வீட்டில் இருந்த பெண்ணுடன் ஏன் எந்தப் பேச்சு வார்த்தையும் இல்லை?

மூர்த்தி: நாங்கள் வீட்டுக்கு வருவதே இருட்டியப் பிறகுத்தான். அந்தப் பெண்ணும் இரவில் அதில் உலாவமாட்டாள். ஆதலால், அவளைச் சந்தித்துப் பேசுவது சாத்தியமில்லாமல் போய்விட்டது.

  1. சந்தேகம்படும்படி வேறு யாரும் அவள் வீட்டுக்கு வந்ததுண்டா?

மூர்த்தி: அவளுடைய அம்மா இரண்டுமுறை வந்து தங்கியிருக்கிறார். அவள் அம்மாவுடன் ஒரு ஆள் வந்துவிட்டுப் போனார். அவர் யார் என்று கேட்கவில்லை.

  1. அவளைத் தினமும் கல்லூரிக்கு ஏற்றிச் செல்லும் பையனைப் பற்றி ஏதும் தெரியுமா?

மூர்த்தி: அந்தப் பையன் பார்க்க நல்ல பையன் மாதிரித்தான் தெரிந்தான். ஆனால், அவனுடன் ஏதும் பேசியதில்லை.

  1. தினேஸ்வரியுடன் தங்கியிருந்த மணிமாலா பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

மூர்த்தி: அந்தப் பெண் கொஞ்சம் பிரச்சனையான பெண்தான். நானே ஒருமுறை அப்பெண் குடி போதையில் படிக்கட்டில் ஏறிப் போனதைப் பார்த்துள்ளேன்.

  1. கொலை நடப்பதற்கு சில நாட்களுக்கு முன் ஏதாவது சந்தேகம்படும்படி ஆள் நடமாட்டம் இருந்ததா?

மூர்த்தி: இந்த இடத்தில் எந்தப் பாதுகாப்பும் இல்லை; பாதுகாவலர்களும் இல்லை. பாதிக்கு மேல் காலியான வீடுகள். ஆகவே, இரவில் நாங்கள் கூட வெளியே வருவதில்லை. என்னால் அப்படியேதும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை.

தினேஸ்வரி கல்லூரியில் படிக்கும் அவளைத் தினமும் ஏற்றிச் செல்லும் சரவணனின் வாக்குமூலம்:

தினேஸ்வரியை எனக்கு ஒரு வருடமாகத்தான் பழக்கம். கல்லூரியில் வைத்து அவர்தான் நான் அவர் தங்கியிருக்கும் இடத்தைத் தாண்டிப் போவதைத் தெரிந்து கொண்டு உதவிக் கேட்டார். எனக்கும் அது அத்தனை சிரம்மாகத் தெரியவில்லை. ஆகவே, ஒரு வருடமாக அவளை ஏற்றி மீண்டும் வீட்டில் விட்டுவிடுவேன்.

இரண்டு மூன்று தடவை அவளுடைய வீட்டுப் பிரச்சனையை என்னிடம் மனம் விட்டுப் பேசியிருக்கிறார். அவளுடைய அப்பா ஒரு போதைப்பித்தர் என்றும் அவரால் வீட்டில் நிம்மதி இல்லை என்றும் அவள் சொல்லியிருக்கிறாள். நிறைய தடவை அவளுடைய அம்மா அப்பாவுடன் சண்டை போட்டுவிட்டு இங்கு வந்து இவளுடன் தங்கியிருப்பதாகச் சொல்லியிருக்கிறார். ஆரம்பத்தில் ஒருசில நாள்கள் பதற்றமாகவே இருந்தாள். வீட்டில் அவளுக்கும் அவளுடன் தங்கியிருக்கும் மணிமாலாவிற்கு ஏதோ சில வாரங்களாகத் தொடர் பிரச்சனை என்று மட்டும் சொல்லியிருந்தாள். நான் கேட்கப்போக அது பெண்கள் தொடர்பான விசயம் எனச் சொல்ல மறுத்துவிட்டாள். ஒரேயொரு முறை அவளை நான் வீட்டில் இறக்கிவிட்டவுடன் அவளுடைய பக்கத்து வீட்டில் இருக்கும் ஒருவரின் மனைவி அவசரமாக ஓடி வந்து அவள் கையைப் பிடித்துக் கொண்டே படிக்கட்டில் ஏறினாள். ஏன் என்று விளங்கவில்லை. நானும் அதைப் பற்றி அவளிடம் கேட்கவும் இல்லை.

மற்ற நேரங்களில் எல்லாம் காரில் ஏறினால் எதாவது சினிமா பற்றியும், கல்லூரி கதைகள் பற்றியும்தான் பேசுவாள். மற்றப்படி தினேஸ்க்கும் எனக்கும் எந்தவிதமான ஆழ்ந்த நட்போ பழக்கமோ இல்லை.

தினேஸ்வரியுடன் முதலில் ஒன்றாகத் தங்கியிருந்த தோழி மணிமாலாவின் வாக்குமூலம்:

எனக்குத் தினேஸ்வரி என்றால் மிகவும் பிடிக்கும்தான். 6 மாதம் நாங்கள் ஒரே வீட்டை வாடகைக்கு எடுத்துத் தங்கியிருந்தோம். அவளால் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. சின்ன சின்ன சண்டைகள் வரும்தான். ஆனால், அதனை நாங்கள் பெரிதுப்படுத்திக் கொள்ள மாட்டோம்.

எனக்கு ஒரு காதலர் இருந்தார். அவர் கோலாலம்பூரில் வேலை செய்கிறார். அவரை ஒருமுறையாவது என் வீட்டுக்கு வர வைக்க வேண்டுமென ஆசைப்பட்டேன். அவளிடம் அனுமதிக் கேட்கப் போகத்தான் எங்களுக்குச் சண்டை மாட்டிக் கொண்டது. நான் இத்தனைக்கும் தங்க வைக்கும்படிக்கூட கேட்கவில்லை. அவர் காலையில் வந்து மாலையில் போய்விடுவார் என்றுத்தான் சொல்லி வைத்திருந்தேன். அதைச் சொன்னதிலிருந்து தினேஸ்வரி என்னிடம் முகம் காட்டத் துவங்கினாள். அங்கிருந்துதான் சில கருத்து வேறுபாடுகள் தோன்றின. எனக்கும் வெறுப்பாகி நான் அங்கிருந்து வேறு வீட்டுக்கு மாறி வந்துவிட்டேன்.

 

தினேஸ்வரியின் நெருங்கியக் கல்லூரி தோழி சுஜித்தாவின் வாக்குமூலம்:

 கல்லூரி வந்த நாளிலிருந்து மணிமாலாவைவிட நான் தான் அவளுக்கு மிகவும் நெருக்கம். நான் இங்குள்ள ஆள் என்பதால் அவளுடன் தங்க முடியவில்லை. ஆனாலும் கல்லூரி நேரத்தில் நாங்கள் இருவரும் ஒன்றாகத்தான் இருப்போம். அவள் வீட்டுப் பிரச்சனைகளை எப்பொழுதும் என்னிடம் சொல்வாள். வீட்டில் அப்பாவினால் ஏற்பட்ட கடன் தொல்லைகள் பற்றியும் அவளுக்கும் மிரட்டல் வந்திருப்பதாகவும் சொல்லி அழுதும் இருக்கிறாள். என்னால் அப்பொழுது அவளுக்கு மன ஆறுதல் மட்டுமே சொல்ல முடிந்தது. அவள் இறப்பதற்குக் கடைசி ஒரு வாரம் அவள் கலவரமாகவே இருந்தாள். வகுப்பில்கூட அவள் முகம் ஒருவிதப் பதற்றத்துடனே இருந்தது.

சுஜித்தாவிடம் கேட்கப்பட்ட சில கேள்விகள்:

  1. அவளுக்கு வேறு யாருடனும் ஏதேனும் பிரச்சனைகள் இருந்ததாகச் சொல்லியதுண்டா?

சுஜித்தா: அவளைத் தினமும் வீட்டில் கொண்டு போய்விடும் சரவணன் பற்றி சிலமுறைகள் சொல்லி என்னிடம் கவலைப்பட்ட்துண்டு. அவர் எங்கள் கல்லூரியில் வேறு வகுப்பில் பயிலும் மாணவன்தான். அவருடைய பார்வையும் நடவடிக்கையும் சரியில்லை என்று மட்டும்தான் தினேஸ் என்னிடம் சொன்னாள். மேற்கொண்டு ஏதும் சொல்லவில்லை.

  1. மணிமாலா எப்படிப் பட்டவள்?

சுஜித்தா: மணிமாலா என் வfகுப்புத்தான். சதா கைப்பேசியில் யாருடனோ பேசிக் கொண்டே இருப்பாள். கொஞ்சம் கோபக்காரி. எடுத்தெறிந்து பேசிவிடும் பழக்கம் இருப்பதால் யாரும் அவளுடன் அவ்வளவாகப் பேச்சு வைத்துக் கொள்வதில்லை.

சந்தேகத்திற்குரிய தடயம் 1: பக்கத்துவீட்டுக்காரர் மூர்த்தி அன்று வேலை முடிந்து வரும்போது தினேஸ்வரியின் வீட்டில் இன்னொரு வகையான ஆண்கள் அணியும் காலணியையும் பார்த்திருக்கிறார். ஏனோ காவல்துறை விசாராணையில் அதனைக் குறிப்பிடவில்லை. அந்தக் காலணி கொலைக்குப் பிறகு அங்கு இல்லை.

சந்தேகத்திற்குரிய தடயம் 2: மணிமாலா அங்கிருந்து வேறு வீடு மாறிப்போன பிறகு பொருள்கள் எடுப்பதாகச் சொல்லி மூன்றுமுறை தினேஸ்வரியைச் சந்திக்க அங்கு வந்திருக்கிறாள். அவள் வரும்போதெல்லாம் இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. அப்படியென்ன பிரச்சனை என்று இதுவரை விசாரணையில் கண்டறியப்படவில்லை.

சந்தேகத்திற்குரிய தடயம் 3: தினேஸ்வரி தங்கியிருக்கும் வீட்டுக்கு மூன்று வீடு தள்ளியிருக்கும் ஒரு பெண்மணி கொலை நடந்த அன்றைய தினம் தினேஸ்வரியுடன் மதியம் வீட்டிற்குள் வேறு ஒரு பெண்ணும் நுழைந்ததாகத் தெரிவித்தார்.

சந்தேகத்திற்குரிய தடயம் 4: அன்றைய தினம் தினேஸ்வரி கல்லூரிக்கே செல்லவில்லை. ஆனால், காலையில் அவளை வழக்கம்போல சரவணன்தான் வந்து ஏற்றிச் சென்றிருக்கிறார். சரவணன் மட்டும்தான் கல்லூரிக்கு வந்ததாகக் குறிப்புகள் உள்ளன.

சந்தேகத்திற்குரிய தடயம் 5: தினேஸ்வரியின் கைப்பேசியில் ஆக்க் கடைசிவரை அவளுக்கு வந்த குறுந்தகவல்கள், புகைப்படங்கள், அழைப்புகள் பற்றிய விவரங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டிருந்தன.

சந்தேகத்திற்குரிய தடயம் 6: பக்கத்து வீட்டுக்காரர் மூர்த்திக்கும் தினேஸ்க்கும் நல்ல பேச்சு வார்த்தை இருந்துள்ளது. ஆனால், விசாரணையில் அவ்விசயம் வெளிவரவில்லை.

 

யார் கொலையாளி?

சந்தேக நபர் 1: பக்கத்து வீட்டுக்காரர் திரு.மூர்த்தி

சந்தேக நபர் 2: வீட்டுத் தோழி மணிமாலா

சந்தேக நபர் 3: சரவணன்

சந்தேக நபர் 4: அப்பாவிற்குக் கடன் கொடுத்த யாரோ…

சந்தேக நபர் 5: மர்ம நபர்

 

குறிப்பு: தினேஸ் இறப்பதற்கு முந்தைய இரவு அவளுக்குத் திடிர் கனவுகள் தோன்றி மறைகின்றன.

கனவு 1:  கருப்புநிறத்தில் ஓர் உருவம் அவள் வீட்டுக் கதவை விடாமல் தட்டிக் கொண்டிருக்கிறது.

கனவு 2: அவளுடைய ஒரு காலணி எங்கோ தொலைந்துவிடுகிறது. அதனைத் தேடி அவள் அலைகிறாள்.

கனவு 3: அவள் படுத்திருக்கும் படுக்கைக்குக் கீழே ஓர் உருவம் தன் தொலைந்த ஒரு காலணி ஜோடியைத் தேடுகிறது.

ஆக்கம்: கே .பாலமுருகன்

தொடர்புடைய பதிவுகள்:

https://balamurugan.org/2017/02/03/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-1/