வாசகர் பார்வைகள்: அறிவியல் புனைவு: மாலை 7.03: இராஜேஸ் கன்னி ஆறுமுகம்

#எனது_பார்வையில்_மாலை_7.03

அறிவியல் புனைவு சிறுகதைகளை எழுதுவது என்பது ஆழமான ஒரு விடயம் தான். பல நுணுக்கங்களைக் கையாண்டு வாசிப்பவர்களின் எண்ணம் சிதறாமல் அவர்களுக்குச் சலிப்பு தட்டாமல் கதையோட்டத்தினைக் கொண்டு செல்ல வேண்டும். அவ்வாறு வாசகர்களின் எதிர்பார்ப்பினை நிறைவாய் பூர்த்தியாக்கி இருக்கிறார் தனது அறிவியல் புனைவு சிறுகதையான மாலை 7:03 இல் எழுத்தாளரும் ஆசிரியருமான திரு கே. பாலமுருகன் அவர்கள்.

கதையின் தொடக்கமே, வாசிப்பவர்களை எங்கும் நிறுத்த விடாமல் மேலும் ஆர்வத்தோடு தொடர்ந்து வாசிக்கத் தூண்டுகிறது.

மார்ச் 2 எட்டாவது முறையான மாலை 5.55.

“காலம் தொடர்ந்து உன்னை வாந்தியெடுத்துகிட்டே இருக்கும்.”

இவ்வாறாகக் கதை தொடங்கிட , எட்டு முறையும் என்ன தான் நடந்திருக்கும். தொடக்கமே புதிரோடு இருக்க வாசிப்பவர்களுக்குத் தொடர்ந்து வாசிக்கும் ஆவல் கண்டிப்பாக எழும்மேலும் இக்கதையினை வாசிப்பவர்கள் , கண்டிப்பாகக் கதையினூடே பயணித்து கதையோடு கலந்து விடுவார்கள் என்பது உண்மை. நானும் அவ்வாறே பயணித்தேன் என்பதும் உண்மை. மாலை 7:03 இன் கதைக்குள் என்ன தான் நடக்கிறது. கதை ஒரு பரபரப்பான நகரத்தில் வாழும் ஒரு கதாபாத்திரத்தை வளைத்து பின்னப்பட்டுள்ளது. ஒரே நாளில் சிக்கி கொண்டு மீண்டும் மீண்டும் அதே நிகழ்வுக்குள் பயணிக்கும் ஒருவரின் மனநிலை தான் கதையோட்டம். அறிவியல் ரீதியாக பார்க்கும் போது ஒரே நாளுக்குள்ள மாட்டி கொண்டு, அதாவது மாலை 7:03 க்கு படிகளிலிருந்து கீழே விழுந்து மீண்டும் மாலை 3:00 மணிக்குச் சென்று, இப்படியாக அன்றைய நாள் மீணடும் மீண்டும் அவன் வாழ்க்கையில் வருகிறது. உளவியல் ரீதியில் பார்க்கும் போது அந்தக் கதாபாத்திரம் அந்த ஒரு நாளில் நடக்கும் நிகழ்வுகளைத் மீண்டும் மீண்டும் நிகழ்த்தி, அதில் ஏதாவது மாற்றங்கள் வருமா என்று எதிர்பார்க்கிறது என்றே எண்ண தோன்றுகிறது.

கதையில் ஆசிரியர் குறிப்பிட்டு இருக்கும் சூழல்கள், கதாபாத்திரத்தின் வேலை, வேலையோடு தொடர்புடைய நேரம், முதல் நாள் பெய்த மழை, காயாத துணிகள், குவளை விழும் சத்தம், அந்த அடுக்குமாடி குடியிருப்பின் சூழல், மீ கோரேங், புடுராயா படிக்கட்டுகள், தன்னிடம் காப்புறுதி வாங்கியவரின் நினைவு, சீன முதலாளியின் தோற்றம், இதற்கிடையே அப்பா வந்து போன ஞாபகங்கள். இப்படி கதாபாத்திரத்தின் வாழ்வில் மீண்டும் மீண்டும், மறுபடியும் மறுபடியும் வரும் நேரச் சுழற்சியோடு…… ‘அடுத்து என்ன தான் நடக்கபோகிறது ? ‘என்ற கேள்வியோடு , வாசிக்கும் ஒவ்வொரு வரிகளையும் கண் முன் காட்சியாகக் கற்பனைச் செய்ய வைத்தும் வாசிப்பவர்களையும் கதைக்குள் சேர்ந்து பயணிக்க வைத்திருக்கிறார் ஆசிரியர் திரு கே. பாலமுருகன்.

கண்டிப்பாக வாசித்து உய்த்துணர வேண்டிய அருமையான அறிவியல் புனைவு கதை

இராஜேஸ்கன்னி ஆறுமுகம்

சிறுகதையை வாசிக்க: https://balamurugan.org/2021/08/03/அறிவியல்-சிறுகதை-மாலை-7-03/

ஆள்துளையாத ஆழ்துளை கிணற்றிலிருந்து சுஜித் பேசுகிறேன் – ஒரு கடைசி வேண்டுதல்

ஒரு கடைசி வேண்டுதல்

உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சுஜித் இறப்பதற்கு முன் அளித்த வாக்குமூலம் இதுவாகக்கூட இருந்திருக்கலாம்:

 

அன்பு அம்மாவிற்கு…
நான் நான்கு நாட்களாக வீட்டில் இல்லை என்று எல்லோரும் என்னை நினைத்துக் கவலைப்பட்டீங்களா அம்மா?

நான் இங்க ஓர் இருட்டுக்குள்ள ஒளிஞ்சிருக்கன். என் கைகால்கள அசைக்க முடியல்லை, என்னால் மூச்சிவிட முடியல்லை. எனக்கு பயமாக இருக்கும்மா. நான் ‘சின்ன பிள்ளைத்தானம்மா?’

அம்மா இது என்ன இடம் மா? நம் வீடு எவ்வளவு பெருசா இருக்கும் தெரியுமா… இங்கு என்னால் நகரவே முடியல்லை. என் தலைல சேரும் சகதியும் விழுந்துகிட்டே இருக்கும்மா.

அம்மா, உன் கையால எனக்குச் சோறு ஊட்டி விடுவீயா? ரொம்ப பசிக்குதுமா. மயக்கமா இருக்கு. நான் பசி தாங்க மாட்டனேமா…

யாரோ என்னை இன்னும் இன்னும் கீழே அழுத்துறது போல இருக்குமா…அம்மா, பக்கத்தில யாருமா அவ்ள பெரிய சத்தம் போடறது? ஏதோ ஒன்னு அதிரும் அளவுக்கு நான் இருக்கும் சில அடி தூரத்துல என்னை நெருங்கிக்கிட்டே இருக்கே மா… அது நெருங்க நெருங்க நான் கொஞ்சம் கொஞ்சமா கீழே போய்க்கிட்டு இருக்கன்மா…

அம்மா என்னால மூச்சி விடவே முடிலம்மா…
என் பார்வை மங்குதுமா…
என்னைக் காப்பாற்ற நீ வரவே மாட்டீயாம்மா…
உன் வயித்துல பத்து மாசம் வச்சிருந்து கொண்டு வந்தீயே…
இப்ப நான் யாரோட வயித்துலம்மா இருக்கன்? ரொம்ப இருட்டா இருக்கும்மா…

அம்மா, அப்பா சொல்லுவாரு இந்த உலகம் ரொம்ப வளர்ந்துருச்சியா.. நீ நல்லா படிச்சி பெரிய ஆளா வரணும்… உன் படிப்புக்குத் தகுந்த முன்னேற்றம் இந்த உலகத்துல இருக்குனு… ஆனா, நான் நாலு நாளா இங்க இருக்கன்… அப்பா சொன்ன அந்த வளர்ச்சியோ முன்னேற்றமோ ஏன்ம்மா என்னைத் தூக்க வரல? நான் ‘சின்ன பிள்ளைத்தானம்மா?’

அம்மா, நான் உங்கள விட்டு ரொம்ப தூரம் போய்க்கிட்டு இருக்கன்மா… இதென்ன இடம் மா? ஆழ்துளை கிணறா? ஏன்ம்மா இவ்ள ஆழமா குழிய தோண்ட முடியுதுனா அதுக்கு ஒரு மூடிப் போட்டு வைக்க ஏன்மா யாருக்கும் தோணல? அவங்களோட அலட்சியத்துக்கு நான் என்னம்மா பாவம் செஞ்சன்?

பெரியவங்க செய்ற தப்புக்கு ஏன்ம்மா ஆழ்துளை கிணறு சின்ன பிள்ளைங்களோட உயிரை இவ்ள ஆக்ரோஷமா எடுத்துக்குது?

இது நிலத்துல விழுந்த ஓட்டையாம்மா? இல்லம்மா… இது எத்தனையோ கனவுகளோட உலகத்தை இன்னும் இரசிக்கக் காத்திருந்த என் வாழ்க்கைல விழுந்த ஓட்டைம்மா… இந்த மண்ணுல நீதி இருக்குனு சொன்னாங்களே அதுல ழுந்த ஓட்டைம்மா…

அம்மா
அம்மா
கண்ணுலாம் இருளுது…
மூச்சு முட்டுது…
கடைசி வரைக்கும்
உன் கைகள்
என்னைத் தூக்கும்னு
நம்பனனேம்மா…
ஐயா என் சாமின்னு சொன்னியேம்மா…
நான் எந்த இயந்திரத்தையும்
வளர்ச்சியையும் நம்பலம்மா…
உன் ஒரு வார்த்தையை மட்டும்தான்
கெட்டியா பிடிச்சிக்கிட்டு இருந்தன்மா…

அம்மா…
ம்மா…
எனக்காக ஒரே ஒரு உ தவி செய்ம்மா…
இந்த ஆழ்துளை கிணத்துல
விழுந்து சாகும்
கடைசி குழந்தையா இந்த ‘சுஜித்’
மட்டுமே இருக்கணும்மா…

மேல இருக்காங்களே
அவுங்ககிட்ட நீ எனக்காக சேர்த்து வச்சிருந்த
காசைலாம் கொடுத்து …
இந்தியா கிராமங்கள இருக்கும்
எல்லாம் ஆழ்துளை கிணத்தையும்
மூட சொல்லுமா.
சொல்லுவீயா?

இன்னொரு ‘சுஜித்’ சாகக்கூடாதுமா…
அவ்ள வேதனையா இருக்குமா…

‘ஆள்துளையாத ஆழ்துளை கிணற்றிலிருந்து’
காயங்களுடன்
‘சுஜித்’

எழுத்து
கே.பாலமுருகன் (சுஜித்திற்காக)

கணேஷ் பாபுவின் வாசிப்பு – ஒரு கடிதம்

Ganesh Babu

 

வணக்கம் பாலா,

தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். என்னுடைய வாசிப்பு குறித்து கேட்டிருந்தீர்கள். என் அம்மா நிறைய வாசிப்பார்கள். சுஜாதாவின் தீவிர வாசகி. அதனால் எனக்கு கணேஷ் என்றும் என் தம்பிக்கு வசந்த் என்றும் பெயரிட்டார்கள். என்னுடைய பள்ளியிறுதி வகுப்பில் அம்மாதான் முதன்முதலில் கல்கியின் பொன்னியின் செல்வனை வாசிக்கத் தூண்டினார்கள். அதன்பின் சரித்திரப் புதினங்கள் அனைத்தையும் வாசித்தேன்(கல்கி, சாண்டில்யன், விக்கிரமன், கோவி மணிசேகரன் இவர்கள் எழுதிய அனைத்து நாவல்களையும் வாசித்தேன்.

பின்னர் அது சலிப்பூட்டத் தொடங்கியதும் பாலகுமாரனை முழுக்க வாசித்தேன். அவர் எழுதிய அனைத்து நாவல்களையும் வாசித்தேன். அதுவும் ஒருகட்டத்தில் சலிப்பு ஏற்படுத்தத் தொடங்கியது. என் கல்லூரி நாட்களில் விகடனில் எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய “துணையெழுத்து” கட்டுரைத் தொடர் வெளியானது. அதன்பின் கனவில் கூட எஸ். ராமகிருஷ்ணனின் பெயரையே சொல்லிக் கொண்டிருந்தேன். புது பேனா வாங்கினால் கூட எஸ். ராமகிருஷ்ணன் என்ற பெயரையே எழுதிப் பார்ப்பேன். அவருக்கு கடிதங்கள் எழுதினேன். அவரும் போஸ்ட் கார்டில் பதில் போடுவார். மெல்ல மெல்ல அவரது அனைத்து சிறுகதைகளையும் நாவல்களையும் வாசித்தேன். அவர் காட்டிய உலகம் வித்தியாசமாக இருந்தது. அதுவரை வெகு ஜனக் கதைகளை வாசித்து வந்தவனுக்கு தீவிர இலக்கியம் அப்போதுதான் அறிமுகமானது. வாசிப்பு சார்ந்து அவர் எழுதிய பல்வேறு கட்டுரைகள் வழியே உலக இலக்கியத்தின் முக்கிய படைப்பாளிகளை வாசித்தேன்.

ஆங்கில வாசிப்பும் உடன் தொற்றிக் கொண்டது. ஒரு விடுமுறை நாளில் ஜெயமோகனின் திசைகளின் நடுவே என்ற சிறுகதைத் தொகுப்பை வாங்கினேன். அத்தொகுப்பில் முதல் கதை “நதி”. அந்த மொழியில் கிட்டத்தட்ட கிறங்கினேன் என்றே சொல்லலாம். அத்தொகுப்பின் இறுதி கதை “லங்காதகனம்”. அந்த கதை சிறுகதை குறித்து எனக்குள் எத்தனையோ விஷயங்களைச் சொன்னது. அதன்பின்னர் ஜெயமோகனின் அனைத்து கதைகளையும் நாவல்களையும் வாசித்தேன். இன்றுவரை அவருடன் தொடர்பில் இருக்கிறேன்.

அதன்பின் கோணங்கியின் மதினிமார் கதை, உப்புக்கத்தியில் மறையும் சிறுத்தை ஆகிய தொகுப்புகளை வாசித்தேன். இப்படி எஸ்.ரா மற்றும் ஜெயமோகனின் தொடர் கட்டுரைகளை விடாமல் வாசிப்பதன் வழியே தான் நான் எனக்கான வாசிப்பைக் கண்டுகொண்டேன்.ஆங்கில எழுத்தாளர்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்கள், ஹெமிங்வே, ஜாக் லண்டன், சார்லஸ் டிக்கன்ஸ், எமிலி பிராண்ட், எமிலி டிக்கன்ஸன். மற்றைய மொழிகளில் பிடித்த எழுத்தாளர்கள் செல்மா லாகர்லாவ், பால்ஸாக். ருஷ்ய கதைகளின் மேலுள்ள மோகமும் அளவில்லாதது. எனக்கு மிகவும் பிடித்த ருஷ்ய ஆசிரியர்கள் தஸ்தாவெய்ஸ்கி, டால்ஸ்டாய், செகாவ்.

தமிழில் முன்னோடிகள் அனைவரையும் வாசித்திருக்கிறேன். புதுமைப்பித்தன், பிச்சமூர்த்தி, கு.ப.ரா, மௌனி, எம்.வி.வி, சுந்தர ராமசாமி, அசோகமித்திரன் தொடங்கி இன்றுவரை எழுதும் எழுத்தாளர்களை வாசித்து வருகிறேன். கவிதையில் கம்பரும் ஆண்டாளும் பிடித்தமானவர்கள். ஆண்டாளின் திருப்பாவை தரும் பிரமிப்பில் இருந்து இன்னும் விலகவில்லை. நவீன கவிதையில் பிடித்தமானவர்கள் சுகுமாரன், தேவதச்சன், தேவதேவன்.

அதிகம் வாசிக்க வாசிக்க இன்னும் வாசிக்க வேண்டியது அதிகம் என்றுதான் தோன்றுகிறது. தமிழில் இந்த நாள்வரை நான் என்றும் மறக்கமுடியாதவர்கள் சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், எஸ்.ரா, ஜெயமோகன் ஆவர். எஸ்.ரா வும் ஜெயமோகனும் எனது இரு கண்கள் போல என நண்பர்களிடம் சொல்வேன். எதை எழுதத்தொடங்கும் முன்னரும் இவர்கள் இருவரையும் மானசீகமாக வணங்கி விட்டுத்தான் எழுதத் துவங்குகிறேன். நேரில் சந்திக்கையில் நிறைய பேசலாம். உங்கள் வாசிப்பு அனுபவத்தையும் நேரம் கிடைக்கையில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி. இன்னும் நிறைய எழுத வேண்டும் என்பதுதான் இப்போதைக்கு என்னுடைய குறிக்கோள். இவ்வளவு பேர் எழுதிக்கொண்டிருக்கிறார்கள், நாமும் எழுதவேண்டுமா என்று ஒரு சில சமயம் தோன்றும். ஆனாலும் ஒவ்வொருவரின் உலகமும் அனுபவமும் தனித்தனி. எழுதித்தான் ஆகவேண்டும். இதே கேள்வியை வாசகர் ஒருவர் ஜெயமோகனிடம் கேட்டபோது அவர் சொன்னது: “தஸ்தாயெவ்ஸ்கி எழுதியபின்னர்தானே நானும் எழுதுகிறேன்”. சுந்தர ராமசாமி ஒரு உரையில் சொன்னார், “வேறு யாருக்காக இல்லாவிட்டாலும் எனக்காக நான் தொடர்ந்து எழுதிக் கொண்டேயிருக்க வேண்டியவன்தான்”

இவ்வார்த்தைகளை அடிக்கடி நினைவு கூர்வேன். அதுதான் எழுத ஊக்கமளிக்கிறது.

-கணேஷ் பாபு

 

அன்புள்ள கணேஷ்பாபு,

நீங்கள் ஆச்சர்யப்படுத்துகிறீர்கள். உங்கள் வாசிப்பின் விரிவும் ஆழமும் பன்மொழிகளில் ஆழ்ந்துள்ளன. அதுவே உங்கள் எழுத்தில் உருவாகியிருக்கும் தாக்கத்திற்கும் காரணம் என்றே சொல்லலாம். விரைவில் கனவுலகவாசிகளைப் போல மற்ற சிறுகதைகளையும் வாசிக்க ஆவலாக உள்ளேன். முடிந்தால் இவ்வருடத்தில் உங்களின் ஒரு சிறுகதை தொகுப்பும் வெளியாகும் என்றால் நான் தான் முதலில் மகிழ்ச்சிக் கொள்வேன்.

சுந்தர ராமசாமி தனது ஒரு நேர்காணலில், என் எழுத்துகள் என்பது எல்லாவற்றுக்குமான சாவி கிடையாது; ஆனால், சிலவற்றின் பூட்டுகளை அது திறக்கும் என்றே நம்புகிறேன் என்கிறார். நாம் எழுதுவது ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கான விடியல் அல்ல; ஏதோ ஏங்கோ சிலரின் மனத்தைத் திறக்குமானால் அதுவே எழுத்திற்கும் புரிதலுக்கும் வாழ்விற்குமான இடைவெளியில் கலை செய்யும் நுட்பமான தொடுதல் ஆகும். அதே ஊக்கத்துடன் எழுதுங்கள். குறிப்பாக விமர்சனம் இப்போதைய இலக்கிய நகர்ச்சிக்கும் புதுப்பித்தலுக்கும் இலக்கிய பார்வைகளைத் தடம் மாற்றி விடுவதற்கான முக்கியமான தளமாகும். அந்த விமர்சனப் போக்கைச் சிறிதும் சமரசம் இன்றி முன்னெடுக்க உங்களைப் போன்ற விசாலமான வாசிப்புள்ள ஒருவரால் நிச்சயம் முடியும். விமர்சனத்தை இன்னும் கறாராக்குங்கள்; ஊக்கப்படுத்துங்கள்.

எனது வாசிப்பும் உங்களைப் போல எஸ்.ராவின் ‘துணையெழுத்து’, ‘கதா விலாசம்’ ஆகிய நூல் வாசிப்பிலிருந்து நவீன இலக்கியத்தின் நீட்சிக்குள் நுழைகிறது. கல்லூரி காலத்தில் மனுஷ்ய புத்திரன், தேவத்தேவன், எஸ்.ரா, பாரதி, புதுமைப்பித்தன் ஆகியோரே நான் முதலில் வாசித்துத் தாக்கம் பெற்ற எழுத்தாளர்கள். பின்னர் அதன் வழியாக, வண்ணநிலவன், வண்ணதாசன், பிரபஞ்சனை அடைந்தேன். புதுமைப்பித்தனின் தாக்கத்தை வண்ணநிலவன் அவர்களிடம் பார்க்க முடிந்தது. வண்ணநிலவன், வண்ணதாசன் அவர்களின் தாக்கத்தை எஸ்.ராவிடம் பார்க்க முடிந்தது. இப்படி, வாசிப்பின் தேடல் நிமித்தம் ‘ஷோம்பி’ போல தாக்கப்பட்டு, தாக்கப்பட்டுத்தான் இலக்கியம் தனக்கான இடத்தை நிரப்பிக் கொள்கிறது என்று நினைக்கிறேன். ஒருவரிடத்தில் இன்னொருவரின் மொழி, சொல்முறை தாக்கம் ஆரம்பத்தில் தென்பட்டாலும் அடுத்த சில படைப்புகளிலேயே அவர்களின் தனித்துவம், தனித்த மொழி அடையாளம், போன்றவை தன்னகத்தே உருவாக்கிக் கொள்ள முடியும். ஆனால், அதற்கு அவனிடம் தொடர் படைப்புகள் இருக்க வேண்டும். ஜெயமோகன் சொல்வதைப் போல தொடர்ந்து எழுதுவதன் மூலமே தனக்கான இலக்கிய நடையை ஒருவன் அடையாளம் கண்டு கொள்ள முடியும்.

 

albert camus

ஜெயமோகனுடைய ‘தம்பி’ சிறுகதைத்தான் நான் முதலில் வாசித்த அவருடைய கதையாகும். கல்லூரியில் அக்கதையை ஒட்டி நண்பர்கள் வெகுநேரம் பேசிக் கொண்ட்டிருந்தோம். ஒரு கதை விவாதத்தை முதலில் தொடக்கி விட்டது அச்சிறுகதைத்தான். விவாதத்தின் ஊடாக நாங்கள் கண்டடைந்த பலவகையில் நோக்கக்கூடிய சாத்தியப் பார்வை எங்களுக்குள் ஒரு அகத்தூண்டலை உண்டாக்கியது. அப்பொழுதும் இப்பொழுதும் விவாதமே ஒரு படைப்பைப் பல கோணங்களில் இருந்து திறந்து காட்டும் என நம்புகிறேன். அதன் பின்னர், நான் தனியாக ஒரு சிறுகதையை வாசித்தாலும், என்னுள் பல குரல்கள் எழுந்து அக்கதையை விவாதிக்கும். நானே எனக்குள்ளே விவாதித்துக் கொள்வேன்.

அங்கிருந்து எனது வாசிப்பு மேலும் விரிவடைந்து உலக இலக்கியத்தில் தஸ்தாவெய்ஸ்கி, டால்ஸ்டாய், செகாவ்  என நீண்டாலும் ஆல்பர்ட் காம்யூவின் அந்நியன் நாவல் படிக்கும்வரை வேறு யார் மீதும் அப்படியொரு தாக்கம் உருவானதில்லை என்பதை அப்பொழுதே உணர்ந்தேன். அந்நாவலை வாசித்த பின்னர் உருவான உணர்வைப் பிடித்துக் கொண்டு இரண்டு மூன்று நாட்கள் நிம்மதியின்றி இருந்தேன். மனம் கனத்துக் கொண்டிருந்தது. ஏதோ தட்டுப்படாமல் அலைந்து கொண்டிருந்தேன். அதுநாள் வரை இலக்கியம் உருவாக்கியிருந்த மனநிலையை அந்நியன் களைத்துப் போட்டது என்றே சொல்ல வேண்டும். மறுவாசிப்பில் மனத்தை ஏதோ ஒருநிலைப்படுத்த முடிந்தது. அதே போல அசோகமித்ரனை வாசிக்கும்போதும் அம்மனநிலைக்குள்ளே தள்ளப்பட்டிருந்தேன். ஆல்பார்ட் காம்யூவும் அசோகமித்ரனும் எனக்குள் என்னை அலைக்கழித்த இரு முக்கியமான படைப்பாளர்கள் என்றே சொல்வேன்.

இப்படியாக நீங்கள் சொல்வதைப் போல எவ்வளவு வாசித்தாலும் வாசிக்க வேண்டியவை நீண்டு கொண்டே போகின்றன. அதுவொரு அடங்காத தேடல். அணையாத தீயைப் போல. எப்பொழுதும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

-கே.பாலமுருகன்

(கடிதங்களின் மூலம் இலக்கியம், சினிமா, விமர்சனம், சிறுகதைகள், தொடர்பாக உரையாடலாம்)

மின்னஞ்சல் முகவரி: bkbala82@gmail.com