தமது 16ஆவது வயதில் பாடத்துவங்கிய மலேசியாவின் புகழ்ப்பெற்ற பாடகர் சித்தி நூர்ஹலிசா ‘முன்பே வா’ பாடலை ரஹ்மான் கலை நிகழ்ச்சியில் பாடி மலேசிய இரசிகர்களின் மொத்த கவனத்தையும் தம் பக்கம் ஈர்த்துக் கொண்டார். நிகழ்ச்சிக்குப் போக முடியாவிட்டாலும் சமூக ஊடகங்களில் அவருடைய இக்குரல் ஒலித்துக் கொண்டே இருப்பதைக் கேட்டு இரசிக்க முடிகிறது. குறிப்பாக மற்ற மலாய் சகோதரர்களும் ‘முன்பே வா’ பாடலைத் தேடிப் பயிற்சி செய்து பாடத் துவங்கி எல்லைகளற்ற ஓர் இசை அலையை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
அதுவரை இப்பாடலைப் பலமுறை கேட்ட நான் நூர்ஹாலிசா பாடிய பின்னர் அதைவிட அதிகம் கேட்கத் துவங்கியுள்ளேன். சித்தி நூர்ஹலிசாவின் இத்தனை ஆண்டு காலக் கலை ஆளுமையின் வெளிபாடுதான் மொழி, இனம் தாண்டி அம்மொழியிலுள்ள பாடலின் ஆன்மாவைத் தொட முடிந்திருக்கிறது. இளம் வயதிலேயே நூர்ஹலிசாவின் பாடலை மலாய் நண்பர்கள் பேசியும் பாடியும் கேட்டிருக்கிறேன்; அவருடைய பிரபலமான மலாய்ப் பாடல்களையும் கேட்டிருக்கிறேன். ஆனால், ரஹ்மான் உருவாக்கிய மேடையில் அவர் பாடிய இந்த ‘முன்பே வா’ பாடலின் வழி தீவிர இரசிகனாகிவிட்டேன் எனத் தோன்றுகிறது.
முன்பே வா siti Nurhaliza version என்கிற அலை கிளம்பிவிட்டது. இனி சில வாரங்களுக்கு இந்தக் காய்ச்சல் தொடரும். இன்னும் பல பாடல்களை நூர்ஹலிசா தமிழில் பாட வேண்டும். அவரின் குரல் மலாய் சகோதரர்களைத் தமிழ் இசையின் மீது கவனத்தைக் குவிக்கும்படி செய்துள்ளது. தமிழைச் சரியாக உச்சரிக்க முயன்றிருக்கும் அவருடைய கலை யத்தனம் போற்றுதலுக்குரியது. தமிழிசைக்குள் நுர்ஹலிசாவின் குரல் சற்றும் துருத்தலின்றி உள்நுழைந்து கரைந்து கொள்கிறது. சபாஷ்.
மாரியாய் பாட்டியின் இரண்டாவது மகனும் இறந்துவிட்டான். சிரமப்பட்டுதான் பாட்டியைத் தூக்கி வந்து அமர வைத்தனர். காதுகள் தாடை அளவிற்குத் தொங்கியிருந்தது. 100 வயதைத் தாண்டியவர் என எல்லோரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர். சிலர் காலில் விழுந்து வணங்கினர். மெலிந்த உடல். ஒரு சிறுமி அமர்ந்திருப்பது போல் தெரிந்தது.
“பாட்டி இப்ப சாமி மாதிரி… ஆயுள் அதிகம் வேணும்னா அதோட கால்ல விழுந்து கும்புட்டுக்கோ…”
பாட்டியின் முகத்தில் சலனமே இல்லை. தன் முன்னே என்ன நிகழ்கிறது என்பதைக்கூட பாட்டியால் உணர முடியாது எனப் பேசிக் கொண்டனர். இரண்டாவது மகனுக்கு மாரடைப்பு. வயது எழுபது இருக்கும். மனைவி, பிள்ளைகள் அழுது ஆர்ப்பரித்து ஓய்ந்திருந்தனர். பாட்டி ஏதும் பேசாமல் அப்படியே உட்கார வைத்தத் தோரணை மாறாமல் இருந்தார்.
“பாட்டி, சாவு பொறப்பு எல்லாத்தயும் கடந்திருச்சி… அந்த மாதிரி இருக்க ஒரு ஆன்மீக மனசு கிடைக்கணும்…”
“பாட்டி தலையில கை வைச்சிச்சுன்னா பெரிய ஆசீர்வாதம்… ஒரு ரெண்டு வெள்ளி காலுகிட்ட வச்சிருங்க…”
இறப்பு வீடு எனும் பிரக்ஞையைத் தாண்டி எல்லோரின் பேச்சிலும் மரணப் பயம் வியாபித்திருந்தது. பிணத்தைத் தூக்கிச் செல்லும்வரை பாட்டியை யாரும் அமர்த்தி வைத்த இடத்திலிருந்து தூக்கவில்லை. அவருடைய கடைசி பையன் கோபால்தான் தூக்கி காரில் ஏற்ற வேண்டும். அவரும் உடல் அடக்கத்தில் வேலையாக இருந்தார்.
“கோபாலு பையன்கிட்ட சொல்லி பாட்டிய வீட்டுக்குக் கூட்டிட்டுப் போகச் சொல்லிரு… அதோட மயன் செத்ததுகூட தெரில…கல்லு மாதிரி கெடக்கு…”
எதிர்வீட்டு ஆள்கள் வந்து பாட்டியிடம் ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டனர். இன்னும் ஒரு சிலர் பாட்டியை வணங்கினர். கோபாலின் மகன் பாட்டியைத் தூக்கிச் செல்லும்போதும்கூட பாட்டியினுடைய கண்ணீரை யாரும் அறிந்திருக்கவில்லை. அது விழும் முன்னே காற்றில் கலந்தது.
‘ஒரு மொழியின் கவிதை வடிவம் உலகளவில் புகழ் பெறுவது வியப்பிற்குரியது. இப்புகழுக்கு ஒரு காரணம் உண்டு. உலகக் கவிதை வடிவங்களிலேயே ஹைக்கூவிற்கு யாரையும் மயக்கக்கூடிய சக்தி உண்டு’
டாக்டர் தி.லீலாவதி (ஜப்பானிய ஹைக்கூ, 1987)
தமிழ்க் கவிதை வரலாற்றில் புதுக்கவிதைக்குப் பின்னர் வருகையளித்துத் தமிழ் எழுத்தாளர்களின் கவனத்தை ஈர்த்த இலக்கிய வடிவமாகவே ஹைக்கூ பார்க்கப்படுகிறது. ஜப்பானில் 16ஆம் நூற்றாண்டில் தோன்றி வளர்ந்த ஹைக்கூ வடிவம் தமிழிலும் செல்வாக்கு பெற்று இன்று வரையில் எழுதப்பட்டு வருகிறது. மகாகவி பாரதியாரால் ஹைக்கூ தமிழில் அறிமுகப்படுத்தப்பட்டு 1980களில் பிரபலமானதாக ஹைக்கூவை விரிவாக ஆராய்ந்த எழுத்தாளர் ந.பச்சைபாலன் குறிப்பிடுகிறார்.
ஹைக்கூ மூன்று சின்னஞ்சிறு அடிகளால் அமைந்து வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களின் காட்சிகளை அழுத்தமாய், விரிவாய், ஆழமாய் தொட்டு விரிந்து செல்லும் கலை விடிவம் எனலாம். ஒரு சிலர் ஹைக்கூவை தத்துவ வடிவம் என்றும் போற்றுகிறார்கள். ஆனாலும் ஒவ்வொருவரின் இரசனைக்கும் தேடலுக்குமேற்ப ஹைக்கூ மறுவாசிப்பிற்கு உட்படுத்தப்பட்டும் வருகிறது. ஜப்பானியக் கவிதைகளில் ‘ரெங்கா’, ‘டங்கா’ போன்ற மரபுக்கவிதைகளின் இறுக்கமான வடிவங்களிலிருந்து விடுப்பட்டு உருவானதுதான் ஹைக்கூ என டாக்டர் லீலாவதி குறிப்பிடுகிறார். இந்தக் குறும்பாட்டிலிருந்து மேலும் இறுகியும் குறுகியும் ஆன வடிவம்தான் ‘ஹைக்கூ’ எனக் கவிஞர் பச்சைபாலன் மேலும் குறிப்பிடுகிறார். 1600-1850 காலப்பகுதியில்தான் ஜப்பானிய கவிதை உலகம் ஹைக்கூவின் உன்னதத்தை முழுமையாகத் தரிசித்தது எனலாம்.
நவீன இலக்கிய சூழலில் சிலர் ஹைக்கூவைக் கொண்டாடியும் வருகிறார்கள். அதே சமயம் ஹைக்கூவைக் கேள்விக்குட்படுத்துபவர்களும் அதன் வடிவத்தன்மையையும் ஆழத்தையும் விசாரணைக்கு உட்படுத்தி வருபவர்களும் இருக்கவே செய்கிறார்கள். கலை, இலக்கியங்களின் இன்னொரு திறப்பு தத்துவம் என்பதோடு உடன்பாடு உள்ளவர்கள் ஹைக்கூவை முக்கியமான இலக்கிய வடிவமாகவே கருதுகிறார்கள். ஹைக்கூ பருவநிலை மாற்றங்களையும் அவை உண்டாக்கும் காட்சிகளையும் தமது பிரதானமான உள்ளடக்கங்களாக எடுத்துக் கொண்டு உருவானது எனலாம். தன் உள்ளத்தில் திடீரென ஒளியேற்றிய ஒரு காட்சியைக் கவிஞன் அப்படியே சித்தரிக்கிறான். தனக்கு உண்டான உணர்வெழுச்சிகளைக் கவிஞன் அதனுள் நுழைப்பதில்லை. ஹைக்கூ இந்த அடிப்படையான புரிதலிலிருந்துதான் பிறக்கிறது.
ஹைக்கூவின் சில பொதுவான இலக்கணங்கள்:
5,7,5 என்று அசை அமைப்பை உடைய மூன்று அடிகளால் ஆன கவிதை வடிவம்
பெரும்பாலும் பருவங்களின் மாற்றங்களை, அவை மனித மனத்தில் ஏற்படுத்தும் பாதிப்புகளைச் சித்தரிக்கும்
ஜென் தத்துவப் பார்வையைக் கொண்டது
ஹைக்கூ கவிஞன் வாசகனையும் தன்னைப்போல் பக்குவம் உடையவனாக மதித்து தன் உணர்வு அனுபவத்தில் பங்குக்கொள்ளச் செய்கிறான்
ஹைக்கூவின் மொழியமைப்பு தந்தியைப் போன்றது
ஹைக்கூவின் அழகும் ஆற்றலும் அதன் ஈற்றடியில் உள்ளது; அஃது உணர்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி முழுக்கவிதையையும் வெளிச்சப்படுத்தும்
ஈற்றடியில் ஆற்றல் மிக்க வெளிப்பாட்டிற்காகப் பெயர்ச்சொல்லையே பயன்படுத்தும்
ஹைக்கூ கவிதைக்குத் தலைப்பு தேவையில்லை
மேற்கண்ட இலக்கணங்கள் யாவும் ஹைக்கூவைப் பற்றிய முதல் புரிதலை உருவாக்கிக் கொள்ள உதவும்; ஆனால், இவையாவும் மீறப்பட்டும் ஹைக்கூ கவிதைகள் இயற்றப்படுவதன் யதார்த்தத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். ஜப்பானிய கவிஞர் பாஷோதான் புகழ்பெற்ற ஹைக்கூ கவிஞராவார். ஹைக்கூவை முதன்முதலில் தமிழில் மொழிப்பெயர்த்தவர் சி.மணி ஆவார். நடை என்கிற இதழில் ஹைக்கூ மொழிப்பெயர்ப்புகள் முதன்முதலில் பிரசுரமானது குறிப்பிடத்தக்கதாகும்.
‘இந்த வண்ணக் கிண்ணத்தில்
மலர்களை வைப்போம்
அரிசிதான் இல்லையே’
பாஷோ
அனுபவப்பூர்வமாக ஹைக்கூவைப் பற்றிய புரிதலை மேம்படுத்த ஒரு ஹைக்கூ போட்டியொன்றும் கடந்த செம்டம்பர் மாதம் நடத்தப்பட்டது. முப்பது கவிஞர்கள் அப்போட்டியில் பங்கெடுத்தனர். அவர்களின் ஹைக்கூ படைப்புகளைப் படித்துவிட்டு அதிலிருந்து சில முக்கியமான ஹைக்கூவிற்கான தொடக்க நிலையென ஏற்றுக்கொள்ளக்கூடியவற்றை ந.பச்சைபாலன் அவர்கள் தேர்ந்தெடுத்திருந்தார்.
ஹைக்கூவைப் பற்றிய ந.பச்சைபாலன் அவர்களின் சில விளக்கங்கள்:
ஹைக்கூ பற்றிய புரிதல் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் மாறுப்பட்டே வருகின்றது.
ஹைக்கூவில் மிகைப்படக் கூறுதல், உவமை, உருவகம் போன்ற அழகியல்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
ஒரு காட்சியைச் சொற்களில் அசலாக வடித்துக் கொடுக்க வேண்டும் என்பதே ஹைக்கூவின் ஒரு வெளிப்பாடு. அதைச் சுவைப்படக் கூறுகிறேன் என்கிற முயற்சி ஹைக்கூவின் வெளிப்பாட்டுத் தன்மையைப் பாதித்துவிடும்.
ஹைக்கூவில் ஒரு காட்சியின் தரிசனம் என்பது வாசகனுக்குப் பலவகையான பல கோணங்களிலான புரிதலை உருவாக்க வேண்டும்.
போட்டிக்கு வந்த ஹைக்கூ படைப்புகள் பொதுவான ஹைக்கூ விதிகளுக்கு அப்பாற்பட்டு இருக்கின்றன.
ஹைக்கூவின் புரிதல் விரிவடையும்போது என்னுடைய சில பழைய ஹைக்கூ படைப்புகளையே நான் நீக்க வேண்டியதாகிறது. அத்தகைய கூர்மையான வடிவம் ஹைக்கூ.
படத்திற்கு ஹைக்கூ எழுதுவது என்பது உண்மையில் மிகவும் சிரமமான பணியாகவே தோன்றுகிறது. ஆயினும், அதனை வார்த்தைகளாக வார்த்தெடுக்கக் கவிஞர்கள் முயன்றுள்ளனர். அதற்குப் பாராட்ட வேண்டும்.
போட்டிக்கு வந்த ஹைக்கூ படைப்புகளில் நான்கு மட்டுமே தேர்ந்தெடுக்க முடிந்தன. ஆயினும், அவை யாவும் ஹைக்கூவா என்று கேட்டால் அதற்குப் பதிலளிப்பது சிரமமாக உள்ளது. ஹைக்கூவை நோக்கி முதற்கட்டம் என்று ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், ஹைக்கூவிற்குள் அடங்க மறுக்கின்றன.
இதற்குமுன் முன்மொழியப்பட்ட ஹைக்கூவைப் பற்றிய பொதுவான விதிகளில் சிலவற்றை நாம் கவனத்திற்குட்படுத்த வேண்டும். ( இலக்கணங்கள்: 3-7 வரை)
ஹைக்கூவில் வெளிப்படையாக உணர்வுகளைக் கூறுவதைத் தவிர்க்க வேண்டும்; படிக்கும் வாசகன்தான் பல்வேறான உணர்வு நிலைகளை எட்ட வேண்டும். ஹைக்கூ கவிஞன் காட்சியை மட்டுமே தன் சொற்களால் கட்டமைக்க வேண்டும். அத்துடன் அவன் வேலை முடிந்துவிட்டது. இனி அக்காட்சி சித்தரிக்கப்பட்டதன் இடைவெளிக்குள் வாசகன் தனக்கான கண்டடைதலைத் தேடிக் கொள்கிறான். ஹைக்கூ இவ்வாறுதான் தனது வாசகர்களைக் கண்டடைந்து கொள்கிறது.
எடுத்துக்காட்டு:
மலர்கள் குவிந்தன
நண்பர்கள் கூடினார்கள்
ஓர் இறுதி ஊர்வலம்.
மேற்கண்ட ஹைக்கூவில் எந்த உருவகமும் உவமையும் உணர்ச்சி கொந்தளிப்புகளும் இல்லை. ஒரு காட்சியை மட்டுமே விட்டுச் செல்கிறது. ஆனால், அக்காட்சியைத் தரிசிக்கும் வாசகன் பல்வேறான உணர்வு நிலைக்குள் ஆளாகின்றான்; பல புரிதல்கள் உண்டாகின்றன. மூன்றாவது வரியைக் கவனிக்கவும். அதில்தான் மொத்த வெளிப்பாட்டுக் கோணங்களும் அடங்கியுள்ளன. ஒரு தத்துவத் திறப்பிற்கு வித்திடும் பகுதியே மூன்றாவது வரி. சிறுகதைக்கு முடிவு முக்கியம் என்பதுபோல் ஹைக்கூவிற்கு மூன்றாவது வரி முக்கியமாகும். முதல் இரு வரிகளைத் தாண்டி மூன்றாவது வரியை எட்டும் வாசகன் அங்குத்தான் ஹைக்கூவிற்கான தரிசனத்தைப் பெறுகிறான் என்பதை நினைவில் கொள்ள வேண்டியுள்ளது.
எடுத்துக்காட்டு 2:
கொசுக்களுக்கு நன்றி
ஜன்னல் வழியே
எனக்கு முழு நிலா.
ந.பச்சைபாலன்
மேலே உள்ள ஹைக்கூவைப் படிக்கும்போது நாம் எதை அடைகிறோம்? கருத்தையோ படிப்பினையோ அல்ல. ஓர் ஏகாந்த அனுபவத்தை அடைகிறோம். மேற்கண்ட காட்சியில் ஒருவன் கொசு தொல்லையால் உறக்கமின்றி விழிக்கிறான். ஜன்னல் வழியாக முழு நிலைவைக் காண்கிறான். இந்தச் சொற்கூட்டம் உணர்த்தும் காட்சி இவ்வளவுதான். ஆனால், இதனை விரிவாக்கிப் பார்க்கும்போது ஓர் அனுபவத்தைத் தொட முடிகிறது. அதைக் கவிஞர் பூடகமாக ‘கொசுக்களுக்கு நன்றி’ எனக் கூறித் தொடங்குகிறார்.
எடுத்துக்காட்டு 3:
உதிர்ந்த இலை
நகருகிறது
தன் நிழலோடு.
ராஜகுமாரன்
மேற்கண்ட ஹைக்கூவும் ஒரு சாதாரணக் காட்சியை மட்டுமே சொல்லி செல்கிறது. அதனூடாக ஒரு வாசகன் எட்டும் அனுபவம் விரிவானதாக இருக்கக்கூடும். இங்கு எதும் நிரந்திரமல்ல; அனைத்தும் நம்மோடு பிறந்து நம்மோடு நகர்கின்றன என உணர முடியுமா? அல்லது மரணத்தைச் சுட்டுகிறதா அல்லது அதனையும் தாண்டி விரிகிறதா என வாசகன் மனமும் இக்கவிதையோடு நகரக்கூடும். இத்தகையதொரு அனுபவத்திற்கு நம்மை சுதந்திரமாகத் தள்ளிச் செல்வதே ஹைக்கூவின் நகர்தலிலுள்ள கலை அம்சம்.
ஹைக்கூவை நோக்கி ஒரு தொடக்க நிலைக்காக ஏற்படுத்தப்பட்ட போட்டியில் தேர்வான படைப்புகள்:
புணராத இதயங்களின்
அரவணைப்பில்
திணரும் தலைமுறை
(ஏ.கே ரமேஷ்)
நீ பாதி நான் பாதி
கலந்து பிரிந்தோம்
கலையாமல் பிரிந்தது மகவு
(தேவி ராமசாமி)
ஒரு கரத்தில்
இரு குழந்தையை ஏந்துகிறது
ஆண் மனம்.
(நவீன் கணேசன்)
நம் காதல் இடைவெளியில்
நயந்த முரண்
கரு.
(லோகேந்தினி சுப்ரமணியம்)
மேலே கட்டுரையில் குறிபிடப்பட்டுள்ள அனைத்து அலசல்களையும் மீள்வாசிப்புக்குட்படுத்தி தேர்வான ஹைக்கூவிலுள்ள நிறைகளையும் குறைகளையும் கவிஞர்கள் திறந்த மனத்துடன் ஆராய்வுக்குட்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம். மிகச் சிறந்த ஒரு ஹைக்கூவிற்கு நம்மை தயார் செய்யும் பொருட்டே இந்தப் போட்டி நடத்தப்பட்டது. நடுவர் ந.பச்சைபாலன் அவர்களின் பகிர்தலுக்கும் தேர்வுக்கு நன்றி. அவருடைய கருத்துகளைக் கவிஞர்கள் கவனத்திற்குள்ளாக்க வேண்டும். தேர்வுப் பெறாத படைப்பாளர்களும் தங்களின் ஹைக்கூ அனுபவத்தை மேலும் ஆழப்படுத்திக் கொள்ள இப்போட்டி வாய்ப்பாக அமைந்திருக்கும் என்று நம்புகிறோம்.
ஆக்கம்
கே.பாலமுருகன்
(ந.பச்சைபாலன் – கருத்துகளை உட்படுத்தி எழுதப்பட்ட கட்டுரை)
அஞ்சலை அலறியடித்துக் கொண்டு ஓடி வரும்போது கணேசன் பத்து தீகா செங்கல் ஆலையில் இருந்தான். வெயில் எரித்துப் போட்ட காட்டத்தில் அப்படியே மல்லாந்து படுத்திருந்தவாறு மெல்ல வாயைத் திறந்து மூடிக் கொண்டிருந்தான். உடலின் உள்ளே அடைத்துக் கிடந்த மொத்த உஷ்ணத்தையும் வெளியேற்ற முயன்றான். ஒரு லாரி செங்கல்களை ஏற்றி முடித்த களைப்பு.
கயல்விழி என்றதும் கணேசன் பக்கென்று எழுந்து அமர்ந்தான். தூரத்தில் வெறுங்காலுடன் அஞ்சலை ஓடி வந்தாள். அவளுடைய பதற்றம் புழுதியைக் கிளப்பிவிட்டபடி வரும் கால்களில் தெரிந்தது. செங்கல் ஆலையின் வாசலில் வந்து நின்றவள் கணேசனைக் கைக்காட்டி அழைத்தாள். இவனும் மகளுக்கு ஏதோ ஆகிவிட்டதெனக் கழற்றி சிமெண்டு தரையின் விளிம்பில் வைத்திருந்த சிலிப்பரை மறந்து ஓடத் துவங்கினான்.
செங்கல் துகள்கள் நிறைந்த மண். எதையும் பொருட்படுத்தாது கணேசன் அஞ்சலையுடன் வீட்டை நோக்கி ஓடினான்.
“ஐயோ! என்ன ஆச்சுடி? அப்பவே பயந்தன்… நெனைச்ச மாதிரி நடந்துருச்சி… நீ எங்க போயி தொலைஞ்ச?”
“ஐயோ… இங்கத்தான் சீனன் கடை வரைக்கும் போனங்க… அதுக்குள்ள இப்படி ஆச்சி…”
“அறிவிருக்கா உனக்கு? பிள்ளைய ஒண்டியா விட்டுட்டுப் போயிருக்க… ஐயோ! நான் என்ன பண்ணுவன்…”
வழியெல்லாம் கணேசன் பிதற்றிக் கொண்டே வந்தான். அந்த மூங்கில் கழிப்பறையைக் கடந்த மாதம்தான் கணேசன் செய்து கொடுத்தான். இதற்கு முன்பு பலகையில் வெட்டப்பட்டு வைக்கப்பட்டிருந்த கழிப்பறையின் சந்திலிருந்து பாம்புகள் நுழைந்துவிடும். பலமுறை கயல்விழி பார்த்துவிட்டுக் கழிப்பறைக்குப் போகாமல் அடம் செய்துவிடுவாள். அவளுடைய கழிப்பறை போராட்டம் குறிப்பாக இரவில் உச்சமாக ஒலிக்கும். கீழே உட்கார்ந்து கொண்டு கால்களை உதறுவாள். ஒரு ஆள் வேகமாக ஓடினாளே வீடு தாங்காமல் அதிரும். கயலுடைய சிறிய கால்கள் உண்டாக்கும் அதிர்வைச் சத்தமில்லாமல் வீடு விழுங்கிக் கொள்வது ஆச்சரியம்தான்.
“ஐயோ! என் பிள்ளைக்கு என்ன ஆச்சுன்னு தெரியலையா… யாராவது இருந்தா ஒடியாங்க…”
பதறியடித்துக் கொண்டு வீட்டைச் சேர்ந்ததும் கணேசன் வீட்டின் கீழடுக்கில் நுழைந்தான். ஊர்ந்து சென்று சேற்றுப் பரப்பை அடைந்தான். வீட்டின் கீழடுக்குச் சற்று இருளாக இருந்தது. அங்கு ஆற்றுக்கும் வீட்டின் மண்தரைக்கும் இடையிலிருந்த சேற்றில் கயல் இடுப்புவரை மூழ்கி கிடந்தாள்.
“பா… பா… காப்பாத்துப்பா… உடும்பு வரப்போது…”
கணேசனைப் பார்த்ததும் கயல் அலறத் தொடங்கினாள்.
“அசையாதம்மா… அசைஞ்சன்னா இன்னும் சேறு உள்ள இழுக்கும்… அப்படியே இரு… அப்பா வந்துட்டன்…”
குப்பைகளும் மலங்களும் கலந்த சேற்றில் கயல் போராடி தோற்றக் களைப்பில் சோர்ந்து தெரிந்தாள். கணேசனுக்கு அவளைப் பார்த்ததும் மேலும் அழுத்தமும் பதற்றமும் கூடின. அதுவரை பயந்திராத அந்த ஆற்றைக் கணேசன் முதன்முறையாக கடுஞ்சீற்றமும் பயமும் கலந்து பார்த்தான். கயலை உள்ளே இழுத்துக் கொள்ளும் அளவிற்கு ஆபத்தான ஆறு என்பதைக் கணேசன் அறிந்திருந்தான்.
அத்தாப் கம்பத்து வீடுகளுக்குக் கழிப்பறை என்பது ஒரு வெட்டவெளி ஏற்பாடு. மேக்கடை வீடு ஆற்றின் மேலே தூக்கி நிறுத்தப்பட்டிருந்தது. சொதசொதப்பான மண்தரைக்கு மேலே இரண்டடியில் வீடு. மண்ணைப் பிளந்து உள்ளே செருகப்பட்டிருக்கும் பெரிய மரத்தூண்கள். வீட்டின் உள்ளே இரண்டு இடங்கள் மட்டும்தான். ஒன்று படுத்துக் கொள்ளவும் சமையலுக்கும். அடுத்து அதன் கடைசி தொங்கலில் ஒரு சிறு பலகை தடுப்பிற்கு உள்ளே கழிப்பறை. ஓர் ஆள் உள்ளே நுழைந்தால் உட்கார மட்டுமே இடமுண்டு. உள்ளேயே குளித்தும் கொள்ள முடியும். பலகை சட்டங்களின் பிடியைப் பிடித்துக் கொண்டு உட்கார வேண்டும். பலகையைக் கணக்காக வெட்டிப் பிளந்து வைத்திருக்கும் இடத்திலிருந்து பார்த்தால் ஆற்றின் மேற்பரப்பு தெரியும். சில சமயங்கள் தண்ணீர் வற்றி வீட்டின் கீழ்ச்சட்டத் தூண்களைக் கெட்டியாகப் பிடித்திருக்கும் சகதியின் சொதசொதப்பான பரப்பு மட்டுமே தெரியும். அதனைப் பார்த்தபடிதான் உட்கார வேண்டும்.
“மா… பயமா இருக்குமா… உடும்பு வந்துரும்…”
கயல்விழியின் உச்சப் பிடிவாதமே மலம் கழிப்பதில் மட்டுமே இருந்தது. அதுவும் இரவில் உள்ளே போகவே மாட்டாள். மேலே எரிந்து கொண்டிருக்கும் மங்கிய பல்ப் வெளிச்சத்தில் கீழே ஒன்றும் தெரியாது. இருளில் ஆற்று நீரின் மெல்லிய சலசலப்பு மட்டுமே கேட்கும். அதுவும் நீர் உடும்பின் சத்தமாக இருக்கலாம் என கயல்விழி சுயமாகக் கற்பனை செய்து கொள்வாள். அது நாக்கை நீட்டியப்படியே தன்னைக் கவனித்துக் கொண்டிருப்பதாக அவளே பயந்து அலறுவாள். தேற்றி மீண்டும் உட்கார வைத்துவிட்டு வருவதற்குள் அஞ்சலைக்குப் போராட்டமாகிவிடும்.
அப்பொழுதும், “மா, கக்கா வரலம்மா…” என்று சொல்லி சமாளித்துவிட்டு வந்துவிடுவாள். நள்ளிரவில் வயிற்று வலி தாளாமல் அஞ்சலை வீட்டுக்கு வெளியிலுள்ள மரத்தடிக்கு அழைத்துச் செல்வாள்.
“உனக்கு இதே பொழப்புடி… உள்ள ஜாமான்கொட்டாய் கட்டிக்கொடுத்தா இது வெளில வந்து தெறந்த வெளில போகுது…”
இருளுக்குள் தரையைப் பார்த்தபடி கயல்விழி கவனமாக அமர்ந்திருப்பாள். அம்மா சொல்வதும் திட்டுவதும் அவள் காதில் விழாது. தூரத்தில் ஆற்றுச் சலனம் மட்டுமே அவளுக்குள் பேரலையாக எழுந்து வரும். இங்கிருந்து இந்த ஆறு ஒரு சிற்ரோடையாக மாறி குறுகி சென்று பின்னர் நாற்பது மீட்டருக்கு அப்பால் மீண்டும் விரிந்து ஓடும். அத்தாப் கம்பத்தின் கடைசி வீடு அது. அதனாலேயே அசூயையும் வசதியும் ஒன்றரக் கலந்திருந்தன. ஆற்றினோரம் இருபது வீடுகள் கொண்ட நீள்வரிசை. கொட்டித் தீர்க்கும் அனைத்துக் குப்பைகளும் சிற்றோடையாக மாறும் இடத்தில் வந்து அடைத்துக் கொள்ளும். அது நிரம்பும்போது கணேசன் வீட்டின் கீழே பிளாஸ்டிக் குப்பைகள் முதல் சைக்கிள் டீயுப்கள் வரை சட்டங்களை வளைத்துக் கொள்ளும். இரவில் நீரோடும் ஓசை மாறியும் பெருகியும் வரும். அதைக் கேட்டு உறங்கி பழகிவிட்டார்கள்.
“யேங்க, ஆறு பொங்கிருச்சி… சுத்தம் செஞ்சுருங்களேன்…”
கணேசன் மறந்தாலும் அஞ்சலை ஆற்றில் குப்பைகள் வீட்டுக்குக் கீழாக நிறைந்துவிட்டதை நினைவுப்படுத்திவிடுவாள். கணேசன் வீட்டிக்கு அடியில் நுழைந்து நீண்ட கம்பியைக் கொண்டு குப்பைகளை ஆற்றோட்டத்திற்கேற்ப தள்ளுவான். இந்த வேலையை முடிக்க அரை நாள் எடுக்கும். மேட்டிலிருந்து வாங்கி வந்த கள்ளை ஒரு டப்பாவில் ஊற்றி வைத்துக் கொள்வான். விட்டுவிட்டு மேலேறி வந்து கள்ளைக் குடித்துவிட்டுத்தான் மீண்டும் கீழடுக்கிற்கு இறங்குவான். மிகவும் குறுகலான இடம். குனிந்து கொண்டே தோதாக படுத்தபடி குப்பைகளைத் தள்ள வேண்டும். அப்படித் தள்ளி சுத்தப்படுத்தினால்தான் வீட்டிலிருந்து வெளியேறும் அழுக்குகளையும் மலங்களையும் அப்புறப்படுத்தி ஆற்றோட்டத்தில் விட முடியும்.
“நாறுதுடி…தாங்க முடில…”
“அதான் மூனு நாளைக்கு ஒரு வாட்டி சுத்தம் செஞ்சிட்டா இப்படி நாறுமா? சொன்னா கேக்கறது இல்ல…”
நேற்றைக்கு வீட்டின் கீழடுக்கைச் சுத்தம் செய்ததால் இப்பொழுது கணேசனால் மாட்டிக் கொண்ட கயலை அடைய சுலபமாகிவிட்டது. அதற்குள் பக்கத்து வீட்டுப் பையன்கள் வீட்டைச் சுற்றி கூடிவிட்டனர். அவர்களின் சலசலப்பு பெருகி வீட்டின் அடியில் எதிரொலித்தது. கயல் போன்ற சிறு உருவம் கொண்டவர்கள் தாராளமாகக் கீழடுக்கில் நுழைந்து ஒளிந்து கொள்ள இயலும். கயலுக்கு அந்த விளையாட்டு மிகவும் விருப்பமானது. யாருக்கும் தெரியாமல் மதியத்தில் வீட்டின் கீழடுக்கில் நுழைந்து கொண்டு படுத்துக் கொள்வாள். அங்கிருந்து கொண்டு வீட்டுக்கு வருபவர்களின் கால்களைக் கவனிப்பாள்.
கணேசனின் கால்கள் வெண்மை பூத்திருக்கும். செங்கல் ஆலையில் வேலை செய்வதால் அந்த வெண்மை படிந்து பின்னர் கால்களில் அப்படியே நிலைத்துவிட்டது போன்று காட்சியளிக்கும். அம்மாவின் வலது காலின் தீக்காயம் அவருக்குத் தனி அழகு எனச் சொல்லி எல்லோரும் கேலி செய்வார்கள். மெலிந்த கால்கள். பெருவிரலின் நகம் கோணலாக இருக்கும். ஆள்களைப் பார்க்காமல் கயல் கால்களைக் கொண்டு யார் வருகிறார்கள் என்பதை அறிந்து கொண்டு சப்தம் எழுப்பி விளையாடுவாள்.
“கணேசன் ஹீ ஹீ ஹீ!!!!” எனக் கயல் கத்தும்போது அது அவளுடைய குரல்தான் எனத் தெரிந்தும் கணேசன் அலறுவது போல் பாவனை செய்து அவளை மகிழ்விப்பான்.
பெரும்பாலும் கயல் இங்குள்ள பிள்ளைகளோடு சேர மாட்டாள். கம்பத்தை விட்டுப் பெரிய சாலைக்கு அந்தப் பக்கமுள்ள ஆற்றோர வீடுகளுக்குச் சென்றுவிடுகிறார்கள் என அஞ்சலைக்கு அங்குள்ள பிள்ளைகளைப் பிடிக்காது. காலப்போக்கில் கயலுக்கும் அவர்களைப் பிடிக்காமல் போய்விட்டது. அதனால், வீட்டைச் சுற்றி அவளே பல விளையாட்டுகளைக் கண்டு பிடித்துக் கொண்டாள். அதில் ஒன்றுதான் வீட்டின் கீழடுக்கில் ஒளிந்து கொண்டு நோட்டமிடுவது. ஒரு பூனையைப் போன்று பகலை வேடிக்கை பார்த்தவாறு இருப்பாள். அவ்வப்போது சேற்றிலிருந்து நீர் உடும்பு வந்துவிடும் என்கிற அச்சமும் உடன் இருக்கும்.
அஞ்சலை வருவோரிடம் பயத்தில் புலம்பத் தொடங்கினாள். கணேசன் நிதானத்தை இழக்கவில்லை. கயலிடமிருந்து ஓரடியில் ஆறு சற்றே இறங்கி தடுப்புக் கம்பிகள் பக்கம் ஓடிக் கொண்டிருந்தது. சேறு பிடித்து வைத்திருக்கும் அவளுடைய கால்கள் சற்றுத் தளர்ந்தாலும் அவள் ஆற்றோட்டத்தில் சிக்கிக் கொள்வாள். நீந்தி சென்று அவளைப் பிடிப்பதற்குள் கம்பி தடுப்பில் மாட்டி கீழ்நோக்கி இருக்கும் அதன் கூர்முனைகளில் முகமோ அல்லது முதுகோ கிழிப்பட வாய்ப்புண்டு. கணேசனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. வீட்டில் நீர் சேமிக்கப் பயன்படுத்திய நீலத் தோம்பொன்று ஆற்றில் மிதந்து கொண்டிருந்தது.
அஞ்சலை கீழே குனிந்து கத்தினாள். அவளுடைய குரலைக் கேட்டதும் கயல் மேலும் பரபரப்பானாள். சோர்ந்து உடைந்திருந்த குரலால் அம்மாவை அழைத்தாள். அச்சத்தம் கணேசனுக்கு மட்டும் கேட்டதே தவிர அதைத் தாண்டி போகவில்லை.
“மா… கயலு… அப்படியே இருடா… அசையாத செல்லம்… அப்பா வந்துட்டன்… சரியா?”
அவள் வழக்கமாக அணிந்து கொள்ளும் சிவப்புக் கவுனின் பின்கயிறு அவள் மூழ்கியிருந்த சேற்றில் பாழ்படாமல் அப்படியே மேலே கிடந்தது. கணேசன் ஊர்ந்து சேற்று முகவாயின் விளிம்புக்கு வந்துவிட்டான். மண்தரையில் கிடந்த ஜூஸ் போத்தலின் மூடி அவன் முட்டியைக் கிழித்திருந்தது. எரிச்சலைப் பொருத்துக் கொண்டு கையை நீட்டி அவளைத் தொட முயன்றான். விரல்களிலிருந்து இன்னும் நான்கடி தூரத்தில் கயல் இருந்தாள். தூரத்திலிருந்து பார்க்கப் பக்கத்தில் இருப்பது போல் தெரிந்த கயல் சற்றுத் தூரம் தள்ளிதான் இருந்தாள்.
கயல், கணேசனின் ஒரு பகுதியாக இருந்தாள். அஞ்சலையைவிட கணேசன் மீது அதிக உரிமை கொண்டவளாக இருந்தாள். அப்பா எந்நேரமும் தனக்கருகில் இருக்க வேண்டுமென விரும்புவாள். அதனாலேயே பள்ளி விடுமுறை நாள்களில் காலையில் அவள் விழித்தெழும் முன் கணேசன் வேலைக்குக் கிளம்பிவிடுவான். இல்லையென்றால் அவனை விட மாட்டாள். சைக்கிளில் ஏற்றிக் கொண்டு கம்பத்தை வலம் வர வேண்டுமென அடம் செய்வாள். கணேசனின் சைக்கிளில் கால்களை நீட்டிக் காற்றில் மோதவிட்டவாறு அமர்ந்திருப்பதில் அவ்வளவு குதூகலம் அவளுக்கு. உலகைச் சுற்றி வந்துவிட்ட திருப்தியுடன் இருப்பாள். வேறு யாராலும் அவளுக்கு அத்தகையதொரு மகிழ்ச்சியை வழங்கிவிட முடியாது.
கணேசனுடைய நேரம் அவனுடயதாக இல்லாமல் கயலுக்காக மட்டுமே செலவிட்டான். அவனுக்குச் சொல்லிக்கொள்ளும் அளவில் நண்பர்கள் கிடையாது. கள்ளை வாங்கிக் கொண்டு வந்து யாருக்கும் தெரியாமல் வீட்டினோரம் அமர்ந்து குடித்துவிட்டுப் படுத்துவிடுவான். கயல் ஒரு கணம்கூட அவனை வெளியே செல்ல விடமாட்டாள். அவளுக்குத் தெரியாமல் எங்கும் செல்லக் கணேசன் திட்டமிட வேண்டியிருக்கும். குளிக்கும்போது கழிப்பறையில் இருக்கும்போது அவளுக்குத் தெரியாமல் ஓடிவிடுவான்.
“ணே, மேலேந்து தூக்கிரலாமா?”
பக்கத்து வீட்டுப் பையன் விஜயன் கீழே ஊர்ந்து அவருக்குப் பின்னால் வந்து சேர்ந்தான்.
“டே, கயலோட பாரத்தையே அந்த மூங்கிலு தாங்கலடா… நீ போனன்னா மொத்தமா இடிஞ்சி அவத் தலையிலதான் விழும். ஆபத்துடா… ஏதாவது நீட்டுக் கட்ட இருக்கானு பாரு…”
விஜயன் மீண்டும் வெளியே ஓடிப்போய் அவன் வீட்டுக்குப் பக்கத்தில் கொய்யா அறுக்க வைத்திருந்த கட்டையைக் கொண்டு வந்தான். அதன் முனையில் பழத்தை அறுக்க வளைந்த கம்பி இருக்கும். அதனைக் கழற்றிவிட்டுக் கட்டையை மட்டும் கணேசனிடம் நீட்டினான்.
“மா… அப்பா இந்தக் கட்டய நீட்டறன்… அப்படியே கெட்டியா பிடிச்சிக்குறியா? அப்பா உன்ன மெதுவா இழுத்துருவன்…”
கணேசன் சொன்னதற்குக் கயல் பயந்த விழிகளோடு கட்டையைப் பார்த்தாள். மரணப் பயம் அவள் மீது முழுவதுமாக படிந்திருந்தது. மீண்டும் இந்த ஆற்றைவிட்டு வெளியேறி தூரத்தே தெரியும் மண் தரையில் ஓடியாடி விளையாடவும் குட்டியப்பன் நாயோடு துரத்திப் பிடித்து விளையாடவும் உள்ளே சேற்றுக்குள் அசையாமல் கிடக்கும் கால்களுக்கு வாய்ப்பில்லாதது போல் அதிர்ச்சியாலும் கவலையாலும் தோய்ந்து கிடந்தாள். கால்களால் சேற்றின் வழவழப்பை அவளால் உணர முடிந்தது. இடையிடையே கூராக ஏதோ ஒன்று காலை உரசிச் செல்வதாக உணர்ந்தாள். கால்கள் அவள் வசம் இல்லை. அப்படியே அசையாமல் கிடந்தாள்.
“மா… ஒன்னு நல்லா ஞாபகம் வச்சுக்கோ… கால மட்டும் அசைச்சிராத…அப்படியே சேத்துக்குள்ளே இருக்கட்டும்… சேத்துல வெளையாட வந்தேன்னு நெனைச்சிக்கோ… தோ… இன்னும் ரெண்டு நிமிசத்துல அப்பா உன்ன இழுத்துறவன்… சரியா?”
கயல், கணேசன் சொல்வதைக் கேட்டு அதனைச் செய்து பார்க்கும் நிதானத்தில் இல்லை. ஒன்பது வயது பிள்ளைக்கு சாத்தியமில்லாத பொறுமையை வரவழைக்கத்தான் கணேசன் ஆபத்தின் விளிம்பில் போராடிக் கொண்டிருந்தான்.
இந்த மூங்கில் கழிப்பறையைக் கணேசன், கயலுக்காகத்தான் செய்து கொடுத்தான். வழக்கம்போல் ஆற்றைப் பார்க்கக் தேவையிருக்காது. கழிக்கும் மலம் சாய்வாக வைக்கப்பட்டிருக்கும் மூங்கில் பிளவுகளின் வழியாகக் கீழே ஓடி விழுந்துவிடும். நான்கைந்து மூங்கிளைப் பிளந்து அதனைச் சற்றுக் கீழே இறக்கிச் சாய்வான அல்லூரைப் போன்று கம்பியில் இருகி கட்டிவிட்டான். மூங்கில் கம்புகளை ஒன்றொடொன்று இறுகி கட்டி இரு முனைகளிலும் இருக்கும் பலகை சட்டங்களின் பிடியோடு உட்கார்ந்து கொள்ளும் அளவில் கவனமாகத்தான் செய்திருந்தான். வீட்டின் உறுதியான சட்டங்களின் ஓரங்களைத் தாண்டி வீட்டிற்குள் போய் நீண்டிருக்கும் மூங்கிள் கால்களில் ஆணியும் அடித்திருந்தான். ஓர் ஆள் உள்ளே நுழைந்து வசதியாக உட்கார்ந்து கொள்வதில் எந்தச் சிக்கலும் ஏற்படாது என்றுதான் நினைத்திருந்தான்.
வெளியில் அஞ்சலையின் புலம்பல் ஓயவில்லை. அவளும் அழுது ஓய்ந்திருந்தாள். குரலின் தொனி இறங்கி அதில் சோர்வும் கையறுநிலையும் கலந்திருந்தன. இந்தச் செங்கல் ஆலையில் வேலையை விட்டுவிட்டால் டவுனில் எந்த வேலையும் சரிப்பட்டு வராது என்பது கணேசனுக்குத் தெரியும். அதுவும் சிறுவயதில் ‘கேளாங் லாமா’ தோட்டத்திலிருந்து வந்ததிலிருந்து இந்தக் கம்பத்தை விட்டு அவன் நகர்ந்ததே இல்லை.
சென்ற வருடம் ஆற்றில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் காந்தராவ் வீட்டின் பின்பகுதி கீழ்ச்சட்டம் உடைந்து அவன் வீடு சாய்ந்து கொண்டதை யாராலும் மறக்க முடியாது. எல்லோரும் வெளியேறி மழையில் நின்று கொண்டே ஆற்று வெள்ளத்தில் பிடிமானமில்லாமல் அசைந்து கொண்டிருந்த வீட்டைப் பார்த்தனர். விடிவதற்குள் வீடு ஆற்றோடு போய்விடும் என்றுதான் நினைத்தார்கள். எப்படியோ மழை ஓய்ந்ததும் வீடு தப்பித்துக் கொண்டது. இப்பொழுது நினைத்தாலும் வெள்ளக்காலத்தில் எல்லோருக்கும் பீதி கிளம்பிவிடும்.
அந்தச் சம்பவத்திற்கு அடுத்து இப்பொழுது கயல் சேற்றில் விழுந்த செய்தி கம்பத்தில் சட்டெனப் பரவியது. கணேசனின் நண்பர்கள் பலர் தூரத்தில் இருக்கும் தொழிற்சாலைகளில் வேலை செய்கின்றனர். உடனே அவர்களுக்குத் தகவலும் சொல்ல முடியாது. கணேசன் மெதுவாகக் கட்டையைக் கயல் பக்கம் கொண்டு போனான். கயல் அதன் முனையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டால் போதுமானது. சட்டென அவளை இழுத்துவிடலாம். நான்கடி தூரம்தான்.
“ணே, பாலத்துக்கு அந்தப் பக்கம் நிசாம் அங்கள்கிட்ட ‘போட்’ இருக்கும்… எடுத்துட்டு வரச்சொல்லட்டா? அதுல போய் அந்தப் பக்கத்துலேந்து கயல இழுத்துறலாம்…”
“இருடா… இதுலே இழுத்துறலாம்னு நெனைக்கறன்… எதுக்கும் நீ போய் சொல்லு… அதுக்குள்ள முடிஞ்சா நான் இழுத்துர்றன்…”
விஜயன் வீட்டின் கீழடுக்கிலிருந்து வெளியேறி பாலத்திற்கு அந்தப் பக்கமிருக்கும் மலாய்க்காரக் குடியிருப்பிற்கு ஓடினான்.
கயல் தன்னைச் சூழ்ந்திருக்கும் சேற்றை உற்றுக் கவனித்தாள். காலுக்கடியில் ஏதேதோ ஊர்ந்து செல்வதும் உரசுவதுமாக இருப்பதாக உணர்ந்தாள். அவையெல்லாம் உடும்பு என்பதாகவே கற்பனை செய்தாள். மேலே உடைந்த மூங்கில் வாய்ப்பிளந்து அவளுடைய தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருந்தது. அது உடும்பின் நாக்கென நினைத்தாள். தன் உடலை மொத்தமாகப் பிடித்து அசைக்க முற்படும் சேற்றை நீர் உடும்பின் மொத்த வாயாக நினைக்கத் தொடங்கினாள். வீடும் மனிதர்களும் அவளுக்குத் தெரியவில்லை. இந்த ஆற்றிலிருக்கும் ஒரு ராட்சர உடும்பு தன்னைக் கௌவியிருப்பதாக அவள் உண்டாக்கிய கற்பனையின் உச்சத்தில் இருந்தாள்.
அவள் நினைத்தது போல கணேசனிடமிருந்து ஓர் உடும்பு நாக்கை நீட்டியபடி தன் சிறிய கால்களைச் சேற்றில் மென்மையாக வைத்துத் தன்னை நெருங்கிக் கொண்டிருப்பதைக் கவனித்தாள். யாருடைய குரல்களும் அவளுக்குக் கேட்கவில்லை. அந்த ஒல்லியான உடும்பு வெகுநாள் பசியுடன் தன்னை நெருங்குகிறது என அலறினாள்.
“பா… அன்னிக்கு நீ வீட்டுக்கு வந்தப்ப உன்கூட இன்னொரு கால் வந்துச்சே… அது யாரு? அம்மாவோட கால் இல்லயே?”
“இல்லப்பா, அம்மா அன்னிக்கு மாரியம்மன் கோயிலுக்குப் போய்ட்டாங்க… நான் வீட்டுலக் கீழடுக்குல இருந்தன்… அப்பத்தான் பாத்தன்… அது யாரோட காலு?”
அன்று கணேசன் அது பேயின் கால்கள் எனச் சொல்லி அவளை மிரட்டி சமாளித்துவிட்டான். ஆனால், அந்தக் கால்கள்தான் சற்றுமுன் அவள் கழிப்பறையில் அமர்ந்திருக்கும்போது தண்ணீர் நிரம்பிய நீலத்தோம்பைத் தூக்கி மூங்கில் தரையின் மீது போட்டுவிட்டு ஓடியது எனக் கடைசிவரை கயலால் சொல்ல முடியவில்லை.
அம்மா எப்பொழுதும் கிண்டல் செய்யும் தன் ‘குட்டிஜப்பான்’ கால்களைப் பலம் கொண்டு அசைத்தாள். சேற்றின் ஒரு பகுதி அசைந்து ஆற்றோட்டத்தில் சரிந்தது.
1. ஒரு திரைப்படமாக இப்படைப்பு ஏன் முக்கியத்துவம் பெறுகிறது?
இலக்கியத்தின் ஒரு பகுதியைப் படமாக்குவது என்பது எழுத்தாளர்கள், இலக்கிய வாசகர்கள் பலரும் பெரிதும் எதிர்ப்பார்க்கும் ஒரு கலை தருணமாகும். சிறுகதைகள் திரைப்படங்களாக வேண்டும்; நாவல் படமாக்கப்பட வேண்டும் என்றெல்லாம் தொடர்ந்து பல உரையாடல்களில் முன்னிலைப்படுத்தப்பட்டதுண்டு. அவ்வகையில் கல்கியின் மாபெரும் சரித்திரத் தமிழ் நாவலை 70 ஆண்டுகளுக்குப் பின்னர் படமாக்கியிருப்பதை நாம் வரவேற்கவே வேண்டும்.
2. இப்படம் நாவலை எந்த அளவில் வெளிக்கொணர்ந்துள்ளது?
நாவலும் திரைப்படமும் வடிவ ரீதியிலும் உள்ளடக்கத்திலும் மாறுப்பட்டக் கலை கட்டமைப்புகள் கொண்டவை. நாவலில் முக்கியமான தருணமாக இருக்கும் காட்சிகள் ஒருவேளை திரைப்படத்தில் ஒருங்கிணைக்கப்பட்டு வேறு அலைகளுடன் வேறு தருணத்திற்குள் உருவாக்கப்பட்டிருக்கக்கூடும். இந்த நூதனமான வேறுபாட்டை இருவேறு கலை வடிவங்களின் கட்டமைப்புகளைப் புரிந்து கொள்வதன் மூலமே அதன் வெளிப்பாட்டுத் தன்மையையும் ஆராய முடியும்.
நாவல், மொழியைப் பிரதானமாகக் கொண்டு காட்சிகளை உருவகித்துச் செல்கிறது என்றால், திரைப்படம் காட்சியைப் பிரதானமாகக் கொண்டு ஒரு கதைச்சொல்லலை உருவகித்துச் செல்கிறது. இரண்டின் மொழி உச்சங்களும் கச்சாப்பொருளும் வெவ்வேறானவை. அவற்றை புரிந்து கொள்ளும்போதே நாவலிலிருந்து திரைப்படம் எங்கணம் கச்சிதமாகவும் சுருக்கியும் தேவையானவற்றை எடுத்துக் கொண்டு உருவாகிறது என்பதையும் அளவிட முடியும்.
ஐந்து பெரும் பாகங்கள் கொண்ட நாவலை இரண்டு பாகங்களாக சினிமாவிற்குள் சுருக்கும்போதே இயக்குநருக்கு ஒரு நெருக்கடி உருவாவதையும் தவ்ர்க்க இயலாது. ஆக, ஒரு திரைமொழிக்குள் எவ்வளவு சொல்ல முடியும் எதைச் சொல்ல முடியும் என்கிற சுயத்தேர்வுக்கு ஆளாக நேரிடுகிறது. அதனைக் கொண்டே மணிரத்திரனம் இப்படத்தை இயக்கியுள்ளார். கதை நகர்தலில் ஓர் அவசரத்தன்மை ஏற்பட்டுவிடுவதைத் தவிர்க்க முடியாமல் போயிருக்கலாம். அவை தாவித் தாவி செல்வதை நாவல் வாசகர்கள் அடையாளம் கண்டு கொள்வார்கள். ஆயினும், முன்பே சொன்னது போல இது ஒரு கலை படைப்பு இன்னொரு வடிவத்திற்குள் நுழையும்போது ஏற்படும் தவிர்க்க இயலாத நெருக்கடிகள் சார்ந்தவை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.
3. நிறைய நடிகர்கள் இருந்தாலும் அனைத்துப் பாத்திரங்களும் மனத்தில் இடம்பிடிக்கின்றனவா?
இப்படத்தின் நடிகர்கள் தேர்வு கவனமாகக் கையாளப்பட்டுள்ளது. யாருக்கு எந்தக் கதாப்பாத்திரம் பொருத்தமானதாக இருக்கும் என்பதைக் கடந்த பல ஆண்டுகளாகத் தமிழ் சினிவாவைத் தீவரமாக அவதானித்து வரும் மணி அவர்கள் உன்னிப்பாகக் கவனித்து வடிவமைத்துள்ளார்.
துரோகமும் வஞ்சமும் சூழ்ந்து நிற்கும் ஆதித்தக் கரிகாலன், பாண்டிய வம்சத்தின் மொத்த வன்மத்தையும் தனக்குள் ஏந்திக் கொண்டு சோழ அரியணையின் வீழ்ச்சியைக் குறிவைத்துக் காத்திருக்கும் நந்தினி, திமிரும் கர்வமும் புத்திசாலித்தனமும் நிறைந்திருக்கும் குந்தவை என ஒவ்வொரு பாத்திர வடிவமைப்பும் மிகைப்படுத்தப்படாமல் கையாளப்பட்டுள்ளன.
நந்தினி கதாபாத்திரத்தை மட்டும் இன்னுமும் கூர்மையுடன் வடிவமைத்திருக்கலாம் என நினைக்கத் தூண்டியது. தன் மொத்த வன்மத்தையும் பழிவாங்கும் உணர்ச்சியையும் தனது அழகெனும் மாயைக்குள் அவள் கவனமாகப் பதுக்கி வைத்திருக்கும் தருணங்களை இன்னும் அதிகரித்துக் காட்டியிருந்தால் அக்கதாபாத்திரம் மனத்தினுள் விரிவாகியிருக்கக்கூடும்.
4. சண்டை காட்சிகள் ஏன் பிரம்மாண்டமாக இல்லை?
வழக்கமான சரித்திர நாவலைப் போன்று போரை மட்டுமே பகிங்கரமாக காட்டும் நோக்கில் எழுதப்பட்டத் தொகுதிகள் அல்ல பொன்னியின் செல்வன் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். துரோகத்தாலும் வன்மத்தாலும் எழும் வஞ்சகம் எப்படிச் சோழ அரியணையினை நோக்கி நகர்கிறது என்பதை மையப்படுத்தும் இலக்கியப் படைப்பு. ஆக, பாகுபலி போல் போரைப் பிரம்மாண்டமாகக் காட்ட வேண்டும் என்கிற நெருக்குதல் இப்படத்திற்கு இல்லை என்பதே எனது பார்வை. அதனால்தான் சண்டை காட்சிகள் கதை எவ்வளவு கோருகிறதோ அந்த அளவிலேயே யதார்த்தமாகக் கையாளப்பட்டுள்ளன.
– தொடரும்
கே.பாலமுருகன்
பின்குறிப்பு: தாராளமாக நம்மில் பலர் இரசனையாலும் கலையை உள்வாங்கும் நிலையிலும் மாறுபடலாம். பொன்னியின் செல்வனை மீண்டும் ஒருமுறை பார்க்க வேண்டியுள்ளது.
மாலையில் தூங்குவது எப்பொழுதாவதுதான் சாத்தியப்படும். அன்றைய நாள் அடை மழை. வானம் மின்னிக் கொண்டே இருந்தது. மின்சாரத் துண்டிப்பு வேறு. எங்கோ கடுமையான வெள்ள நெரிசல் உண்டாகியிருக்கலாம். வெளிவேலைக்கும் போக முடியாததால் வெகுநாளுக்குப் பிறகு மாலை உறக்கம் கிட்டியது. எனது அறை மேல் மாடியில் தனித்து இருக்கும்.
“ரெண்டு மணி நேரம் படுக்கறன்… எழுப்பாதீங்க…”கீழேயிருந்த மனைவியிடம் எச்சரிப்பது போல் சொல்லிவிட்டுக் கதவைச் சாத்திக் கொண்டேன். மனைவி என் அம்மாவுடன் சேர்ந்து நேற்றிரவு பார்க்கத் தவறிய தொடர் நாடகங்களை உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருக்கக்கூடும்.
குளிரூட்டி அறையைக் குளிர்ச்சிப்படுத்திவிட்டிருந்தது. அதுவும் மழைக்குளிரில் போர்வைக்குள் அடங்குவது வரம். இடி சத்தம் ஓயவில்லை. இப்படியொரு மழையைக் கண்டு வெகுநாளாகிவிட்டது.
எப்பொழுது கண்ணயர்ந்தேன் எனத் தெரியவில்லை. ஒரு பெரும் ஒளித்திரளில் மாட்டிக் கொண்டு தவிப்பது போன்ற ஒரு கனவு. மகா வெளிச்சம் என்னைச் சூழ்ந்து தடுத்துக் கொண்டது. சட்டென விழிப்பு. தூங்கச் செல்லும்போது மணி மாலை 3.00 இருந்திருக்கும். இப்பொழுது 5.00 ஆகி விட்டிருந்தது. அடுத்து ஒரு தேநீருக்குத் தயாராகலாம் எனக் கதவைத் திறந்து கீழே இறங்கினேன்.
யாரோ அறிமுகமில்லாதவர்கள் வீட்டின் வரவேற்பறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். நடுத்தர வயத்தை ஒத்த பெண்மணி என்னைப் பார்த்ததும் அதிர்ந்து கத்தினாள். வயதான ஆண் எழுந்து நின்று பின்னோக்கி நகர்ந்தார். சிறுபிள்ளை ஒருத்தி அம்மாவின் பின்னாள் ஒளிந்து கொண்டாள்.
“யாரு நீ? எங்க வீட்டுக்குள்ள எப்படி வந்த?” என அப்பெண்மணி கேட்டுக் கொண்டே மேசையிலிருந்த கைப்பேசியை எடுக்க முயன்றாள்.
“நீங்கலாம் யாரு? எங்க என் மனைவி? கீதா! கீதா!”ஒன்றும் புரியாதவனாய்ச் சுற்றிலும் பார்த்தேன். வேறு பொருள்கள், வேறு படங்கள், வேறு அலங்காரங்கள் ஆனால் அதே வீடுதான்.
“இருங்க… கீதாவா? நீங்க மனோகரா?”
அவள் ஆச்சரியத்துடன் கேட்டாள். நானும் ஆமாம் என்பது போல் தலையசைத்தேன்.
“பா… போன வருசம் இந்த வீட்ட அந்தக் கீதா அக்காகிட்ட இருந்துதான வாங்கனோம்… அவங்களோட ஹஸ்பன்ட் இவரு…”
எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. திக் பிரமையுடன் சுற்றிலும் பார்த்துக் கொண்டிருந்தேன்.
தலை சுற்றலுடன் அப்படியே நாற்காலியில் உட்கார்ந்து கொண்டேன். ஒரு மாலை நேரத்து உறக்கத்திற்குப் பின் இப்படி நடந்தால் என்ன தோன்றும் எனக்கு? எதிரில் நின்றிருந்தவள் கீதாவிற்கு அழைப்பதாக வெளியில் சென்றாள்.
“அங்கள் நீங்க எப்படி எங்க வீட்டுக்குள்ள வந்தீங்க? நீங்க திருடனா?”
என் தோற்றத்தைப் பார்த்து வேடிக்கையுடன் சிறுமி கேட்டாள். சிறிது நேரத்தில் அப்பெண்மணி மீண்டும் உள்ளே வந்தார்.
“அவுங்க இங்க இல்லையாம்… சிங்கப்பூர்ல செட்டல் ஆயிட்டாங்களா… நான் ஏதோ பொய் சொல்றன்னு திட்டறாங்க… நான் வேணும்னா உங்கள போட்டோ எடுத்து அவுங்க வாட்சாப்க்கு அனுப்பட்டா சார்?”
எனக்கு எதுவும் தோன்றவில்லை. நினைவுகள் காலியானதைப் போல இருந்தது. வேண்டாமென மறுத்தேன்.
“ஒரேயொரு உதவி முடியுமா?”
தயங்கியப்படித்தான் கேட்டேன். அவரும் என்னவென்று கேட்டார்.
“இன்னும் ஒரு ரெண்டு மணி நேரம் மேல ரூம்புல தூங்கிக்கிட்டா?”
கடந்த 18 ஆகஸ்டு மாதம் கல்வி அமைச்சரும் உள்துறை அமைச்சரும் பகடி வதை தொடர்பான புகார்களைச் சமர்ப்பிப்பதற்கான அதிகாரப்பூர்வ இணைப்புப் பகுதியைத் திறப்பு விழா செய்து வைத்தனர். அதன் தொடர்ச்சியாக நாட்டில் பகடி வதை தொடர்பான அதிவிரைவான விழிப்புணர்வு அலை ஏற்பட்டு வருகிறது.
பகடி வதையால் பள்ளிக்கூடங்களில் பாதிக்கப்பட்டிருக்கும் மாணவர்கள் சுயமாக உறுதிசெய்யப்பட்ட உண்மை தகவல்களைக் கொண்டு தன் மீது நிகழ்த்தப்பட்ட பகடி வதை தொடர்பாக புகாரளிக்க ஏதுவான தளமாக இது செயல்படும்.
moe.gov.my/aduanbuli என்கிற தளத்திற்குச் சென்றுவிட்டால் உங்களின் வலது புறத்தில் sistem aduan SISPAA என்கிற இடத்தில் தட்டிப் புகாரளிப்பதற்கான சிறப்புப் பக்கத்திற்குச் சென்று விடலாம். அங்கு மாணவர்கள் அல்லது பெற்றோர்கள் செய்ய வேண்டியவை:
என்ன மாதிரியான பகடி வதை என்பதைத் தெரிவு செய்ய வேண்டும் (Jenis: adubuli)
அடுத்து புகாருக்கு ஒரு பொருத்தமான தலைப்பிட வேண்டும். (சக பள்ளி மாணவர்களால் கேலி செய்யப்பட்டேன்/ Kes dibuli oleh rakan sekolah)
அடுத்து, பகடி வதை தொடர்பான தெளிவான விளக்கம் அளிக்கப்பட வேண்டும். Butiran என அடையாளமிடப்பட்டிருக்கும் பகுதியில் பகடி வதை நிகழ்ந்த நாள், நேரம், இடம், யாரெல்லாம் சம்பந்தப்பட்டுள்ளனர் போன்ற விவரங்களைத் தட்டச்சு செய்ய வேண்டும்.
அடுத்து, மாணவர்கள் அல்லது புகாரளிக்கும் நபர் தங்களின் முழு விவரங்களையும் தட்டச்சுச் செய்ய வேண்டும். (எடுத்துக்காட்டாக: பெயர், அடையாள அட்டை எண், அழைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி, முகவரி போன்றவை)
பின்னர் பகடி வதை தொடர்பான புகாரை அனுப்பிவிட வேண்டும். இதுதான் கல்வி அமைச்சு புதிதாக அறிமுகப்படுத்தியிருக்கும் பகடி வதையைப் புகாரளிக்கும் இணையத்தளம் பற்றிய விவரங்கள் ஆகும்.
இனி, நாம் என்ன செய்ய வேண்டும்?
இத்தகையதொரு இணைப்புப் பகுதி கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் உள்ளது என்பதை உங்கள் பிள்ளைகளிடம் தெரியப்படுத்த வேண்டும்.
இனி பகடி வதை தொடர்பாகப் பயம் வேண்டாம் என அவர்களுக்கு நம்பிக்கையை உருவாக்க வேண்டும்.
பள்ளியில் மாணவர்களுக்கு நிகழும் பகடி வதைகளை அவர்கள் மறைக்காமல் சொல்லிவிட முன்வர வேண்டும் என்கிற சிந்தனையை அவர்களிடம் ஏற்படுத்த வேண்டும்.
வீட்டிற்கு வந்ததும் அவர்களின் பிரச்சனைகளைப் பெற்றோர்களிடம் மனம் விட்டுப் பேசும்படியான சூழலை உருவாக்க வேண்டும்.
நம்மைவிட பலசாலியான ஒருவன் நம்மைத் தாழ்த்தி அவனுக்குக் கீழ்படிய செய்கிறான் என்றால் அதுவும் ஒருவகையான பகடி வதைத்தான் எனப் பிள்ளைகளுக்குச் சொல்லி உணர்த்த வேண்டும். எடுத்துக்காட்டாக:
அ. பணம் கேட்டு மிரட்டுவது,
ஆ. உணவு பொருள்களைப் பறிப்பது,
இ. அவனுக்கு வேலை செய்து கொடுக்கும்படி மிரட்டுவது,
ஈ. அவனுக்குக் கூலியாள் போல வேலை செய்யப் பணிக்கப்படுவது,
உ.அவன் செய்த குற்றங்களுக்கான பலியை ஏற்றுக்கொள்ளும்படி மிரட்டுவது
ஊ. வீட்டிலிருந்து பணம் எடுத்துவரத் தூண்டுவது
எ. புகைப்பிடிக்க ஆசையைத் தூண்டுவது அல்லது புகை பிடிக்கும்படி மிரட்டுவது
இதுபோன்ற செயல்கள் நாம் விரும்பாமலே நம் மீது திணிக்கப்படும் ஒரு வகை பகடி வதை என்பதை வீட்டிலும் பள்ளியிலும் மாணவர்கள் உணரும்படி விவரிக்க வேண்டும்.
அதுமட்டுமில்லாமல்:
அ. அப்பாவின் பெயரைக் கிண்டல் செய்வது
ஆ. உடல் அமைப்பைக் கேலி செய்வது
இ. நடந்து வரும்போது கால்களைத் தடுக்கி விழச் செய்வது
ஈ. தாக்குவது
உ. கெட்ட வார்த்தையில் திட்டுவது
போன்றவையும் பகடி வதையிலேயே சேரும் என்பதை மாணவர்களுக்கு விளக்க வேண்டும். இவற்றையெல்லாம் முதலில் பெற்றோர்கள் பிள்ளைகளிடம் வீட்டில் பொறுமையாகச் சொல்லி விவரிக்க வேண்டும். அப்பொழுதுதான் பிள்ளைகளுக்கு நாம் தனியாக விடப்படவில்லை என்கிற தன்னம்பிக்கை உருவாகும். நம் மாணவர்கள் பலர் ஆரோக்கியமான வீட்டுச் சூழல் இல்லாததனாலே தம் மீது நிகழ்த்தப்படும் பகடி வதைகள் பற்றி பெற்றோர்களிடம் சொல்லத் தயங்குகிறார்கள். காலப்போக்கில் பகடி வதையைச் செய்பவனிடம் அடிமையாகவும் ஆகிவிடுவார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
முதலில் விழிப்புணர்வு வீட்டிலிருந்துதான் தொடங்க வேண்டும். உங்கள் பிள்ளைகள் பகடி வதைக்கு ஆளாகுவதைத் தடுப்போம்; மேலும், பகடி வதையைச் செய்பவராக உங்கள் பிள்ளைகள் இல்லாமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். நமக்கே தெரியாமல் நம் பிள்ளைகள் மற்ற பிள்ளைகளை அடித்து மிரட்டிப் பணம் பறிப்பவர்களாகவும் இன்னொருவரின் பிள்ளையைத் தனக்கு அடிமையாக ஆக்குவதன் மூலம் மகிழ்பவர்களாகவும் இருக்க வாய்ப்புண்டு. இதுபோன்ற போக்கு அவர்களின் எதிர்காலத்தைப் பாதிப்பதோடு; வன்முறையாளர்களாகவும் உருமாற்றும் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
21ஆம் நூற்றாண்டு கல்வியானது முழுமைப்பெற்ற மாந்தனை; ஆரோக்கியமான குடிமகனை உருவாக்கும் ஒரு மாபெரும் கல்வி வழித்தடம். அதில் நம் பிள்ளைகள் பயணித்து வெற்றியடைய என்ன செய்ய வேண்டும் என்பதை ஆழமாக சிந்திப்போம்.
இன்னும் சற்று நேரத்தில் சபைக்கூடல் தொடங்கப்படவிருந்தது. முரளிக்குச் சபையின் முன்னே பேசுவதெல்லாம் பெரிய சவால் இல்லை. அவனுடைய பேச்சுத் திறமையினாலே தலைமை மாணவன் பொறுப்பு அவனுக்குத்தான் என உறுதியாக நம்பினான். ஆயினும், கடந்த வாரம் சிற்றுண்டியில் முறையாகக் கண்காணிப்பு செய்யவில்லை எனக் கட்டொழுங்கு ஆசிரியரிடம் மாட்டிவிட்ட கலைமதியின் மீது வெறுப்பாக இருந்தான்.
‘என்னயே மாட்டிவிட்டல… இரு… உன்ன என்ன பண்றேன்னு பாரு…’ என மனத்தில் புலம்பிக் கொண்டே மயக்கம் வருவது போல் அப்படியே மேடையின் ஓரத்தில் கவனமாகச் சரிந்தான். உடன் நின்றிருந்த சில மாணவர்களும் வாரப் பொறுப்பாசிரியரும் சட்டென அதிர்ந்து போயினர்.
“முரளி விழுந்துட்டான் டீச்சர்!”
கலைமதிதான் முதலில் பதறிக் கொண்டு வந்தாள். மயக்கமடைந்தது போல நடித்தாலும் கலையின் குரல் அவனுக்குக் கேட்காமலில்லை. இலேசாக மனம் குறுகுறுத்தது அவனுக்கு. இனி ஒன்றும் செய்ய இயலாது. அவன் போட்ட திட்டம் நிறைவேறப் போகிறது. அவன் சபைக்கூடலில் பேச முடியவில்லை என்றால் அவனுக்குப் பதிலாகக் கலைமதியே பேசியாக வேண்டும். அவள் தயாரில்லாமல் தடுமாறி சபையில் அவமானப்படுவதைப் பார்க்கவே முரளி மயங்கிக் கீழே விழுந்தான்.
அவனைத் தூக்கி ஓரமாக அமர வைத்து கோபு ஆசிரியர் தண்ணீர் கொடுத்தார்.
“எப்படி க்ளினிக் கூட்டிட்டுப் போய்டலாமா…?” என்கிற தலைமை ஆசிரியரின் குரல் கேட்டதும்தான் போதும் முரளி கண்களைத் திறந்து முனகியவாறு மயக்கம் தெளிந்துவிட்டதைப் போன்று பாவனை செய்தான்.
“சரி, சாப்டீயா இல்லையா?” எனக் கேட்டுக் கொண்டே ஆசிரியர் கோபு ஒரு நாற்காலியைக் கொண்டு வந்து கொடுத்தார். கலைமதிதான் பேசுவதென முடிவாகிவிட்டது. சற்றுமுன் அவள் பதறியது மட்டும்தான் முரளியின் மனத்தில் கேட்டுக் கொண்டிருந்தது. தவறு செய்துவிட்டோம் என வருந்தினான்.
கலைமதி கைகளைப் பிசைந்து கொண்டே மேடை ஏறினாள். உடன் எந்தத் தாளும் இல்லை. தயாரிப்பும் இல்லை. 600 மாணவர்கள் மேடையையே கவனித்தனர். அத்தனை கண்களும் கலைமதியின் மீதிருந்தன. இறை வணக்கத்துடன் தொடங்கி பொறுப்பாசிரியர் நன்றி உரை ஆற்றும்வரை ஒரு வழியாகச் சமாளித்துச் சபைக்கூடலை முடித்து வைத்தாள்.
ஆசிரியர்கள் அனைவரும் கலைமதியைப் பாராட்டினர்.
“கலை, நீ இவ்ள நல்லா பேசுவேன்னு நெனைச்சி பார்க்கலமா, அருமை!” குமுதவள்ளி ஆசிரியை அவளின் முதுகில் தட்டிக் கொடுத்தார்.
பூரிப்புடன் மேடையிலிருந்து இறங்கியதும் முரளியிடம்தான் ஓடி வந்தாள். அவன் இன்னுமும் மயக்கமடைந்த பாவனையிலிருந்து வெளியேற முடியாமல் நடித்துக் கொண்டிருப்பதை அவமானமாகக் கருதினான்.
“டேய், முரளி. இப்ப எப்படி இருக்குடா? ஏதோ என்னால முடிஞ்ச வரைக்கும் பேசிட்டன்டா…”
முரளி அவளுடைய கண்களைப் பார்க்க முடியாமல் தடுமாறினான்.
“ஒன்னும் இல்ல எல்லாம் ஓகே ஆய்டும்டா…” எனத் தேற்றிவிட்டு வகுப்பிற்குச் சென்றுவிட்டாள்.
குற்றம் செய்த மனம் குறுகுறுக்கும் என்பார்கள். மனவேதனையுடன் நாற்காலியைவிட்டு எழுந்து நேரே கட்டொழுங்கு ஆசிரியர் அறைக்கு விரைந்தான்.
நம் பள்ளிக்கு இனி தலைமை மாணவன் வேண்டாம்; அது தலைமை மாணவியாக இருக்கட்டும் எனச் சொல்லிவிட வேண்டுமென்ற துணிச்சல் அவனுக்கு எங்கிருந்து வந்ததெனத் தெரியவில்லை. இவ்வளவு நாள் ஏறிப் பழகிய மேடை இப்பொழுது அவனுக்கு வேறொன்றாகக் காட்சியளித்தது.
எனது அனல் சிறுகதையைப் பற்றி சென்னை, திருவான்மியூரில் வாசகசாலையும் பனுவல் புத்தக நிலையமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த கதையாடல் 58ஆம் நிகழ்ச்சியில் வாசகர்/விமர்சகர் பாக்கியராஜ் அவர்கள் வழங்கிய விமர்சன உரை.
அனல் சிறுகதை கடந்த மாதம் சொல்வனம் இதழில் பிரசுரமாகியிருந்தது. மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழகத்து இதழில் பிரசுரமான சிறுகதை. பாக்கியராஜ் அவர்கள் இத்தனை விரிவாக அக்கதையைத் தனக்குள் உணர்ந்து பேசியிருப்பது மகிழ்ச்சியையும் நிறைவையும் அளிக்கிறது.
அப்பாவிடம் எப்படிக் காண்பிப்பது எனத் தெரியாமல் வெகுநேரம் தவித்துக் கொண்டிருந்தாள் பவித்திரா. வழக்கமாக ஓவியத்திற்கு வண்ணம் தீட்டிவிட்டு அப்பாவிடம் அல்லது அம்மாவிடம் காட்டிப் பாராட்டுப் பெற்ற பின்னரே மறுநாள் பள்ளியில் ஒப்படைப்பாள்.
இன்று அப்பா அம்மாவிடம் சண்டையிட்டு ஓய்ந்திருந்தார். முகம் வேறு கடுப்புடன் தெரிந்தது.
“புது வீடு விலையே 4 லட்சம்… இப்போ அதைச் செய்யணும் இதை மாத்தணும்னு… இன்னும் ரெண்டு லட்சத்துக்கு எங்க போவன்?”
அறையினுள்ளே இருந்த அம்மாவிடம் கத்தத் தொடங்கினார். இப்பொழுது இருக்கும் வீட்டிலிருந்து வெளியேற இன்னும் மூன்று மாதங்கள் மட்டும்தான் கெடு.
“சேவா வீட்டுல இருந்தா இதான் தொல்ல… நமக்குனு சொந்தமா ஒரு வீடு… அதை நம்ம நெனைச்ச மாதிரி செஞ்சிட்டுப் போனாதானே நல்லாருக்கும்?”
பதிலுக்கு அம்மாவும் அறையிலிருந்து கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பவித்திரா ஓவியத்தைக் காட்டுவதிலிருந்து பின்வாங்கினாள். இப்பொழுது போனால் ஒருவேளை ஓவியம் கிழிக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்பதை உணர்ந்தாள்.
“ஆமா… வீட்ட முழுசா செஞ்சிட்டுத்தான போக முடியும்? அப்புறம் என்ன அங்க இருந்துக்கிட்டா செய்வீங்க? தூசு… அது இதுன்னு பெரச்சன வராதா?”
பவித்திராவிற்கு மனம் ஆதரவடையவில்லை. அம்மாவிடமாவது ஓவியத்தைக் காட்டிவிடலாம் என அறைக்குள் நுழைந்தாள்.
“ரெண்டு லட்சம் வராது… ஒன்றர லட்சத்துல முடிச்சிறலாம்… நீங்க யேன் சிரமப்படறீங்க… நான் லோன் எடுத்துத் தறென்…” என அம்மா முனகிக் கொண்டிருந்தபோது பவித்திரா ஓவியத்தை நீட்டினாள்.
“என்னம்மா இந்த நேரத்துல நொய் நொய்ன்னு…?” எனத் திட்டிக் கொண்டே அம்மா ஓவியத்தை வாங்கினாள்.
பவித்திரா அழகான முருகன் படத்திற்கு வண்ணம் தீட்டியிருந்தாள்.
“ஏன்மா… உள்ள மட்டும்தான் கலர் அடிச்சிருக்க? சுத்தி பின்னால எல்லாம் கலர் அடிச்சிட்டா இன்னும் நல்லாருக்குமே?” என்றார் அம்மா.
“இல்லம்மா… டீச்சர் சொன்னாங்க முருகனோட உருவத்துக்குத்தான் கலர் அடிக்கணும்னு… வெளில அடிச்சாலும் மார்க் இல்லம்மா… அப்புறம் அடிக்கச் சொன்னாங்கனா நான் வெளில நீலக் கலரு சுத்தி அடிச்சிக்கறன்…” என்றால் பவித்திரா.
அம்மா ஓவியத்தை நன்கு உற்றுக் கவனித்தார். உடனே அறைக்கு வெளியே வந்தார்.
“ங்ஙே… இல்லன்னா முதல்ல வீட்டு உள்ள என்ன தேவையோ அத எல்லாம் செஞ்சிக்கலாம்… வெளில செய்ய வேண்டியத நாம எப்ப வேணும்னாலும் காசு இருக்கறப்ப செஞ்சிக்கலாம்…” என்று கூறிவிட்டுப் பவித்திராவின் ஓவியத்தை மீண்டும் பார்த்தார்.
வாழ்த்து அட்டையைத் தயார் செய்துவிட்டேன். கடைசி ஒரு வார்த்தையை எழுத வேண்டும். அது மட்டும்தான் வாய்க்கவில்லை. நேற்றிலிருந்து பல கடைகள் சென்றலைந்தும் மனத்திற்குப் பிடித்த ஒரு கார்ட் கிடைக்கவில்லை. கடைசியில் மணிலா அட்டையில் நானே ஒரு கார்ட்டைத் தயார் செய்துவிட்டேன். இப்பொழுது உறையும் காத்திருந்தது. அந்த வார்த்தையை எழுதி உள்ளே வைத்துவிட்டால் கார்ட் பெறுநரை நோக்கிப் பயணத்தைத் தொடங்கும்.
என்ன எழுதலாம் என்கிற கேள்விக்கு முன் மனம் அல்லல்பட்டுக் கொண்டிருந்தது. இதுவரை யாருக்கும் இப்படியொரு வாழ்த்து அட்டை அனுப்பிய அனுபவம் இல்லை. முதல் முறையாக அனுப்ப வேண்டுமெனத் தோன்றியது. மேசை விளக்கின் வெளிச்சம் போதவில்லை. பற்ற வைத்து விரல் இடுக்கிலேயே புகைந்து கொண்டிருந்த சிகரெட்டைப் பார்த்தேன். நெருப்பைத் துறந்த நுனி சாம்பல் விழத் தயாராக இருந்தது. எடுத்து நானே மேசையின் மீது தட்டிவிட்டு சிகரெட்டை அணைத்தேன்.
படித்து முடிக்கலாம் என மேசையில் வைத்திருந்த நாவலைப் புரட்டினால் ஏதாவது வார்த்தைகள் கிடைக்கக்கூடும் என்கிற சிந்தனை இவ்வளவு தாமதமாக வந்திருக்கக்கூடாது எனத் தோன்றியது. படித்து முடிக்காமல் எனக்காகப் பல வாரங்கள் காத்திருக்கும் புத்தகத்தைத் தொடவே அவமானமாக இருந்தது. அறையைச் சுற்றிலும் படித்து முடிக்காத புத்தகங்கள் சூழ்ந்திருந்தன.எனது இன்றைய பொழுதைக் கடக்கவிடாமல் செய்யும் இன்னும் சிக்காமல் அடம்பிடித்துக் கொண்டிருந்த வார்த்தையின் மீது கோபமாக இருந்தது. கிடைத்தால் மட்டும் என்ன செய்துவிடப் போகிறேன்? உடனே கார்ட்டில் எழுதி அனுப்பிவிடுவேன்.
இப்படிக்கு
வடிவேல்
(ஷார்ப் தொழிற்சாலையின் பாதுகாவலர்)
கார்ட்டின் முடிவுவரை எழுதிவிட்டேன். இடையில் ஒரு வார்த்தை போதும். படிப்பவருக்கு மனம் சில்லிட வேண்டும். மீண்டும் மீண்டும் படித்துப் பூரிப்படைய வேண்டும். கண்கள் குளிர்ந்து போக வேண்டும். நமது ஒரு வார்த்தையில் ஒருவரின் வாழ்நாள் முழுவதும் அதை நினைத்து மகிழ முடிந்தால் இனி என்ன வேண்டும் எனத் தோன்றியது.
நான் விட்டுவிட்டால் பேனாவே அந்த வார்த்தையை எழுதி கொள்ளும் என்பதுபோல் துடித்துக் கொண்டிருந்தது. ரவுண்ட் செல்வதற்கு நேரமாகிவிட்டது. சாப்பிட்டேனா என்று கூட கேட்க ஆளில்லாத வெறும் இயந்திரங்கள் எழுந்து கத்திக் கொண்டிருக்கும் இவ்விடத்தைச் சுற்றி வலம் வரும் நேரம். அந்தக் கசப்பான தருணத்திற்கு முன் வார்த்தை கிடைத்துவிட்டால் பேரானந்தத்துடன் தொழிற்சாலையை வலம் வரலாம்.
ஒருவேளை வார்த்தை கிடைத்துவிட்டாலும் கார்ட்டில் எழுதி யாரிடம் கொடுப்பது?
எழுந்து காற்சட்டையைத் தூக்கி இடுப்பில் உட்கார வைத்தேன். இந்த 56 ஆண்டுகளில் அப்படியொரு வார்த்தை எனக்குச் சிக்கியதே இல்லை.
பெரிய சாலையிலிருந்து செம்பனைத் தோட்டத்தில் நுழைந்து இரு கிலோ மீட்டர் சென்றால்தான் கம்பத்திற்குச் செல்லும் பாதை வரும். வேலையிடத்திலிருந்து இதுதான் குறுக்குப் பாதை. பெட்ரோல் மிச்சம். வேடியப்பனுக்கு இந்தப் பாதையில் பெரிதாக மிரட்சி இல்லை. ‘தூக்குக் கோவிலை’ தாண்டும் போது மட்டும் மனம் பீதியடைவதை அவனால் தவிர்க்க முடிந்ததில்லை.
“அங்கன இருந்த எஸ்டேட்டுக் கோயிலு அது… கடன் தொல்ல தாங்காம முனியாண்டி பூசாரி கோயில்லயே தூக்குப் போட்டுக்கிட்டாரு… அதுனாலத்தான் அது தூக்குக் கோயிலு… அதுலேந்து கோயிலயும் கைவிட்டுட்டாங்க…” என அக்கோவிலைப் பற்றி சொல்லாதவர்கள் இல்லை.
“அந்தக் கோயில் பக்கம் வரும்போது மட்டும் யாராவது நிப்பாட்டனா நின்னுறாத… நாக்கத் தொங்க போட்டுக்கிட்டு முனியாண்டி பூசாரி அந்தப் பாதையில நடக்கறத முன்ன காட்டுக்கு வேலைக்குப் போனவங்க பாத்திருக்காங்க…”
காளிமுத்து தாத்தா அந்தச் செம்பனைத் தோட்டப் பாதையைப் பயன்படுத்துவோரிடம் எப்பொழுதும் நினைவுப்படுத்துவார். அவர்தான் கம்பத்தில் பழைய ஆள். முன்பிருந்த தோட்டத்தை விட்டுத்தான் எல்லோரும் இந்தக் கம்பத்திற்கு வந்தனர். கித்தா தோட்டம் அழிந்து செம்பனை தோட்டமாகியது.
வேடியப்பன் இன்று துணைக்கு உடன் வேலை செய்யும் மாரியையும் அழைத்து வந்தான். வழக்கமாக மாரி கம்பெனி வேனில்தான் போவான். இருவரும் மோட்டாரில் செம்பனை பாதையில் நுழைந்தனர். மோட்டாரின் முன்விளக்கு வெளிச்சம் பாதையைச் சூழ்ந்திருந்த இருளைச் சற்றும் அசைக்க முடியவில்லை.
தூரத்தில் இடது பக்கம் இடிந்து கிடக்கும் சுவரும் அதைச் சூழ்ந்து அடர்ந்து வளர்ந்திருக்கும் காட்டுச் செடிகளும் என அச்சுறுத்தலாகக் காட்சியளித்தது ‘தூக்குக் கோவில்’.
“அட நீங்க ஒன்னு… இந்தக் கம்பத்துல உள்ள பழசுங்க எல்லாம் கட்டுக் கதை சொல்லி ஏமாத்திச்சிருங்க… எங்க பாட்டி சாவுறதுக்கு முன்னால என்கிட்ட இந்தக் கோயில பத்தி ஒரு கதை சொன்னுச்சி… தெரியுமா?”வேடியப்பனுக்கு ஆச்சரியமாக இருந்தது.
“என்னடா சொல்ற?”
“ஆமாம்ணே… அறுபது வருசத்துக்கு முன்னால இங்க இருந்த தோட்டத்துல சீன முதலாளியோட மகனுங்கக்குள்ள பயங்கர சொத்துப் பெரச்சன… ஒரே தோட்டத்த ரெண்டாக்கிட்டானுங்க… டிவிஷன் ஒன்னு, டிவிஷன் ரெண்டுன்னு பிரிஞ்சி போச்சி… அப்போ டிவிஷன் ஒன்னுல இருந்த முனியாண்டி கோயில் சிலைய அங்கேந்து தூக்கிட்டு இங்க வந்து வச்சிட்டாங்க… அதான் ‘தூக்கி வந்த கோவில்’ன்னு சொல்லுவாங்களாம்… இவனுங்க தூக்குக் கோயில்னு அவுட்டா விட்டுட்டாய்ங்க… கொண்டு வந்தவங்க அதுக்கப்பறம் ஒழுங்கா பராமரிக்கல… என்ன ஆச்சின்னு தெரில…”
வேடியப்பன் சட்டெனப் ‘ப்ரேக்’ பிடித்துவிட்டு இடிந்து கிடக்கும் தங்களின் மூதாதையர்கள் தூக்கி வந்து கைவிட்ட கோவிலையும் அதனுள் கரைந்திருக்கும் இருளையும் பார்த்தான்.
முனியாண்டி தாத்தாவிற்குப் பாதி வாய் திறந்து மீண்டும் மூடியபடி இருந்தது. சிரமப்பட்டு மூச்சை இழுத்தார். மருத்துவமனையில் ஒரு வாரம் வைத்திருந்து இனி பிழைக்க மாட்டார் என வீட்டிற்குக் கொண்டு போகச் சொல்லிவிட்டனர். அவர் நாற்பது ஆண்டுகள் உழைத்துக் கட்டிய வீட்டின் வரவேற்பறையில் ஒரு சிறிய கட்டிலைப் போட்டனர். அவரை அதில் படுக்க வைத்து வாசல் கதவைத் திறந்து வைத்தனர். உயிர் போனால் வாசல்வழி வெளியேற வேண்டுமென ஓர் ஏற்பாடு.
“மனுசன் இவ்ள பெரிய வீட்டக் கட்டி கடைசி வரைக்கும் கால் நீட்டி உக்காந்து சுகத்தக் கண்டானா?”
முனியாண்டியின் வயதை ஒத்த நண்பரான மணியத்திற்கு மரணப் பயம் தொற்றிக் கொண்டது. வீட்டிலுள்ளவர்களுக்குச் சமாதானம் சொல்வதைப் போல தன்னைத் தானே சாந்தப்படுத்தினார்.
முனியாண்டியின் கண்கள் வாசலை நோக்கின. நேரமானதும் ஒரு சில நெருங்கிய சொந்தங்கள் வந்து முகத்தை உற்றுக் கவனிப்பதை முனியாண்டி அசூசையாக உணர்ந்தார். அவர்களின் பார்வையில் இருக்கும் கழிவிரக்கம் பயத்தை உண்டாக்கியது. சற்று நேரத்தில் அவன் வந்து வாசலில் நின்றான். கறுத்த உருவம். முகம் சரியாகத் தெரியவில்லை. அவன் இன்னும் அருகில் வந்தால் முகத்தை அடையாளம் கண்டு கொள்ளலாம் என நினைத்தார். நினைப்பதை அவரால் வார்த்தைகளாகக் கோர்க்க இயலவில்லை. நினைப்பு நினைப்பாக அவருக்குள் உழன்று கொண்டிருந்தது.
அவனுடைய வருகைக்குப் பின்னரே முனியாண்டியின் உடல் சிலிர்த்து உதறிக் கொண்டிருந்தது. குரல் புலம்புவது போல் கேட்டது.
இப்பொழுது அவன் முனியாண்டியை மூர்க்கமாகப் பார்க்கத் தொடங்கினான். எந்நேரத்திலும் தன் மீது பாய்ந்து உயிரை எடுக்கக்கூடும் என முனியாண்டி கற்பனை செய்தார். அவன் குனிந்து முட்டிகாலிட்டு முன்னகர்ந்து வந்தான். இப்பொழுது அவனுடைய கண்களை நன்றாகப் பார்க்க முடிந்தது. மிகவும் நெருக்கமான கண்கள் அவை. தினமும் பார்த்துப் புழங்கிய கண்கள். நெருக்கமாக வந்ததும் அது தன்னுடைய கண்கள்தான் என உணர்ந்தார். அவன் முனியாண்டியைப் போலவே இருந்தான். முனியாண்டிக்கு இருபது வயதிருக்கும்போது எப்படி இருந்திருப்பாரோ அதே தோற்றம்.
மற்றவர்களைப் போல அவனும் முனியாண்டியின் முகத்தை நெருங்கி வந்து மரண வாடையை நுகர்ந்தான். முனியாண்டி கண்களிலே கெஞ்சினார். கண்ணீர் துளி பெருகி வழிந்துவிடாமல் கண்களுக்குள்ளே பளபளத்துக் கொண்டிருந்தது. கைகளைக் கூப்பி வணங்க முடியவில்லை. கண்கள் வணங்கி தவித்தன.
வந்தவன் முனியாண்டியின் கன்னத்தில் முத்தமிட்டு நெஞ்சோடு அனைத்துக் கொண்டான். அவனுடைய உடலின் கதகதப்பு முனியாண்டிக்கு அவ்வளவு ஆறுதலாக மாறியது. தன் வயதைக் கடந்து பின்னோக்கி நகர்ந்தது நினைவு. கால்கள் சிறுத்து கைகள் சுருங்கி வீட்டின் தரையில் எச்சில் வடிய தவழ்கிறார். எல்லாம் பின்னகர்கின்றன. உலக நினைவுகள் இழந்து தன்னுணர்வு கரைந்து ஒரு தொட்டிலில் தன் பெருவிரலைக் கடித்தபடியே ஆடிக் கொண்டிருக்கிறார்.
முனியாண்டியின் உயிர் போவதற்கு முன்பாக கண்ணீர் வடிந்து கன்னத்தில் சரிந்ததாகப் பேசிக் கொண்டனர்.
முதல் நாள் வகுப்பை ஒரு கதையுடன் தொடங்கலாம் என மூர்த்தி முடிவெடுத்தார். முதலாம் ஆண்டு மாணவர்கள் பதற்றத்துடனும் அழுது ஓய்ந்த களைப்புடனும் அமர்ந்திருந்தனர்.
“சரி, இன்னிக்கு எல்லாம் கதை சொல்லப் போறிங்க… எல்லாத்துக்கும் கதைன்னா பிடிக்கும்தான?” என ஆசிரியர் கேட்டதும் அனைவரும் உற்சாகத்துடன் கையை உயர்த்தினர். சிறுவர்கள் சொல்வதற்கு ஏராளமான கதைகளைத் தனக்குள் பூட்டி வைத்திருக்கிறார்கள்.
“சரிமா… நீங்க வாங்க…”முன்வரிசையில் அமர்ந்திருந்த கவினா எழுந்து வந்தாள். புன்னகையும் வெட்கமும் அவள் பார்வையில் கலந்திருந்தன.
“கதை சொல்லுவிங்களா?” என மூர்த்தி கேட்டதும் “எங்க அப்பாவோட ‘திக்தோக்ல’ நிறைய கதை சொல்லிருக்கன், நீங்க பார்த்தது இல்லயா?” எனப் பதிலுக்கு கவினாவும் கேட்டாள்.
“சரி என்ன கதை சொல்லப் போறீங்க?”
“நல்ல முயலும் கெட்ட ஆமையும்…” என்று சொல்லிவிட்டு முறைத்தாள்.
“ஏன்மா கோவமா பாக்கறீங்க?”
“ஆமா சார்… அதென்ன எல்லாக் கதையிலும் ஆமை நல்லதா இருக்கு… முயலு சோம்பேறியா இருக்கு? எங்க வீட்டுல நான் வளர்க்கற முயல் நல்லா வேகமா ஓடும்… ரொம்ப நல்லது… தெரியுமா?” என்றவள் முயல் போல் ஓடிக் காண்பித்தாள்.
“சரிமா, கதையெ சொல்லுங்க…”
“ஒரு ஊர்ல முயல் மட்டும்தான் இருந்துச்சாம்… ம்ம்ம்… சரி… பரவால… பாவம்… அதே ஊர்ல ஒரு ஆமையும் இருந்துச்சாம்…”
“ஓ! அப்படியா?”
“ஆமாம்… அதுல முயலுக்குக் காது கேட்காதாம்…” என்று சோகமாகச் சொன்னாள்.
“ஓ! ரெண்டும் என்னா பண்ணுச்சாம்?”
“அதுங்க அதுங்க வேலைய பாத்துக்கிட்டு இருந்துச்சாம்…” என்று கூறினாள்.
“அப்போ ரெண்டுக்கும் ஓட்டப்பந்தய போட்டி நடக்கலையா?”
கவினா மீண்டும் மூர்த்தியைப் பார்த்து முறைத்தாள்.
“நீங்க என்னம்மா சும்மா சும்மா சார பார்த்து முறைக்கிறீங்க?”
“அதுங்களே அதுங்க பாட்டுக்கு இருக்குங்க… நீங்க யேன் போட்டி வைக்கறீங்க? அதனாலத்தான் என் செல்ல முயலு கதையில கெட்டதா வருது, பாவம்! வேணும்னா ஆமைக்கும் ஆமைக்கும் போட்டி வச்சுக்கங்க…” என்று முகத்தைச் சோகமாக வைத்துக் கொண்டாள்.
“சரிமா… போட்டியே வேணாம்… ஓகேவா?”
சிறிது நேரம் சிந்தித்தவள், “போட்டியே இல்லாமல் எல்லாம் மிருகங்களும் மகிழ்ச்சியா வாழ்ந்துச்சாம்… தெரியுமா சார்?” என்றாள்.
“சரிமா… கதைய சொல்லி முடிங்க…”
“ஒரு ஊர்ல ஒரு முயல் இருந்துச்சாம்…”
“சரி இருக்கட்டும்… அப்புறம் என்ன நடந்துச்சி?” மூர்த்தி பொறுமையை இழந்தார்.
“ஒன்னுமே நடக்கல சார்… எல்லாம் ஓடுனுச்சாம்?” எனப் புருவத்தை உயர்த்தினாள்.
“யேன் மா? ஏதும் போட்டியா?” என மூர்த்தி ஆர்வத்துடன் கேட்டார். கவினா மீண்டும் அவரைப் பார்த்து முறைத்தாள்.
“சரி, யேன் அந்த முயலுக்குக் காது கேட்காதுமா?”
“யேன்னா… நீங்கத்தான் போட்டி போட்டின்னு சொல்லிக்கிட்டே இருக்கீங்கள… அதான் அதுக்குக் காது கேட்காம நிம்மதியா இருக்கட்டும்…” என்றவள் கோபத்துடன் போய் உட்கார்ந்தாள்.
வினோத் விளையாட்டு ஆசிரியர் வருவாரென ஆவலுடன் வகுப்பறைக்கு வெளியில் நின்றிருந்தான். அவர் காலை 7.20க்குள் வந்துவிடுவார். இன்று 7.25 ஆகியும் அவரது மகிழுந்து இன்னும் பள்ளியின் வளாகத்திற்குள் நுழையவில்லை. வினோத் பதற்றத்துடன் இருந்தான்.
“வினோத்து, என்ன சிலுவாரு கீழ கிழிஞ்சிருக்கு…?”
நண்பன் கேட்டதும் வினோத் விளையாட்டுக் காற்சாட்டையின் கால்பக்க நுனியைப் பார்த்தான். ஒரு சிறிய பொத்தல். காலூறையை மேலே இழுத்து அதனை மறைத்தான். இன்று எப்படியாவது விளையாட்டு உடையுடன் வந்திவிட வேண்டுமென உறுதியில் எடுத்து அணிந்து கொண்டான். அம்மா அப்பொழுதே திட்டினார்.
“டேய், இன்னிக்குப் சார் வருவாருதானே?”
“எனக்கெப்படிடா தெரியும்?”
வினோத்தால் நிலைக்கொள்ள முடியவில்லை. அவன் கடந்த எட்டு மாதங்களாக மாலையில் விளையாடச் செல்வதில்லை. தம்பி பிறந்தவுடன் தினமும் அவனைப் பார்த்துக் கொள்வதிலேயே பொழுதுகள் கழிந்துவிடும். வீட்டிற்கு எதிரில் விளையாட்டுத் திடல் என்பதால் மாலையில் நண்பர்கள் காற்பந்து விளையாடும்போது போடும் சத்தத்தைக் கேட்டுக் கொண்டே தம்பியின் தொட்டிலை ஆட்டிக் கொண்டிருப்பான்.
பள்ளி அடைக்கப்பட்டுக் கடந்த வாரம்தான் மீண்டும் திறந்திருந்தார்கள். ஆனால், இன்னுமும் விளையாட்டு ஆசிரியர் திடலுக்கு அழைத்துச் செல்லவில்லை. இன்று அழைத்துச் செல்லக்கூடும் என வினோத் நேற்று இரவிலிருந்து கற்பனை செய்து கொண்டிருந்தான்.
7.30க்கு ஆசிரியரின் மகிழுந்து வேகமாக வந்து பள்ளியின் வளாகத்தினுள் நுழைந்தது. உடனே, வினோத் மகிழுந்து நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு ஓடினான்.
“சார், இன்னிக்கு விளையாட்டு இருக்குமா?” என மூச்சிரைக்கக் கேட்டான்.
“யா, இன்னும் பள்ளிக்கூடமே ஆரம்பிக்கல… கிலாஸ்க்குப் போங்க சார் 7.45க்கு வரேன்…” என ஆசிரியர் சொன்னதும் வினோத் கவலையும் ஏக்கமும் நிரம்ப வகுப்பறைக்கு நடந்தான்.
கடந்த வாரம் போல வகுப்பறைக்குள்ளே நிற்க வைத்து உடற்பயிற்சியை முடித்துவிட்டு எழுத்து வேலைகள் கொடுத்துவிடுவாரோ என வினோத் பயந்தான். திடலைச் சுற்றி ஓட வேண்டும் என வினோத்தின் கால்கள் பரப்பரத்தன. மாணவர்கள் விளையாடாமல் திடலில் புற்கள் அடர்ந்து பச்சையாகத் தெரிந்தன.
பக்கத்திலிருந்த நண்பனின் கைக்கடிகாரத்தை வினாடிக்கு வினாடி நோட்டமிட்டுக் கொண்டிருந்தான். சரியாக 7.45க்கு ஆசிரியர் வகுப்பறைக்குள் வரும்போது எங்கிருந்து வந்ததெனத் தெரியாமல் சட்டென மழையும் பெய்யத் தொடங்கியிருந்தது.
“இன்னிக்குத்தான் திடலுக்குக் கூட்டிட்டுப் போலாம்னு நெனைச்சன்… ஓகே… எல்லாம் இடத்துல உக்காருங்க…” என ஆசிரியர் சொன்னதும் வினோத்தைத் தவிர மற்ற அனைவரும் அமர்ந்தனர்.
“டேய் வினோத்து… அங்கப் பாரு திடல்ல ஆறாம் ஆண்டு பையனுங்க நேத்து வெளையாண்ட பந்த அங்கயே வச்சிட்டுப் போய்ட்டானுங்க… ஓடிப் போய் எடுத்து வந்து ஸ்டோர்ல வச்சிரு… சாரோட இந்தக் குடைய எடுத்துக்கோ…” என்றதும் குடையை எடுத்துக் கொண்டு வினோத் திடலை நோக்கி வளைந்து வளைந்து ஓடினான். மழைநீர் தேங்கியிருந்த இடங்களையெல்லாம் தாவிக் குதித்துக் கடந்தான்.
அவனுக்காகவே அந்த ஒற்றைப் பந்து நேற்றிலிருந்து திடலில் காத்திருந்தது.