சிறுகதை: இக்கவிதையில் விலங்குகள், பறவைகள் யாவும் துன்புறுத்தப்படவில்லை

கீழ்க்கண்ட கதையில் வரும் அனைத்து சம்பவங்களும் கற்பனையே. யாரையும் குறிப்பிடுபவன அல்ல.

கவிதை உடலுக்கும் உயிருக்கும் ஆபத்து. அதிகமான கவிதைகள் தீங்கையே விளைவிக்கும்.

குறிப்பு: இக்கதையில் விலங்குகள் யாவும் துன்புறுத்தப்படவில்லை.

நன்றி: இதுவரை கவிதைகளை விடாமல் வாசித்து மருத்துவனையில் சேர்க்கப்பட்டவர்கள்; என் கவிதைகளை வாசித்து இரத்தம் சூடாகி சமூகப் புரட்சிகளில் ஈடுபட்டவர்கள். படிக்கவே இல்லையென்றாலும் அலுக்காமல் ‘லைக்’ போட்ட முகநூல் நண்பர்கள்.

சிறுகதை:

 

like-button-2015-06

கண் விழித்தேன். அறையே இருட்டாக இருந்தது. சட்டென படுக்கையைவிட்டு எழும் முன்பே ஒரு கவிதை மண்டைக்குள் செரித்து தொண்டைக்குழிக்குள் நின்றிருந்தது. வாயைக் கொப்பளித்தால் சரியாகிவிடும் என நினைத்து முடிந்தவரை வாயில் இருமடங்கு தண்ணீரை அடைத்துக் கொப்பளித்தேன். மீண்டும் மூச்சை இழுத்துவிட்டு யோசித்தேன். அக்கவிதை இன்னும் கூர்மையாகியிருந்தது. எப்பொழுது வேண்டுமென்றாலும் கொட்டிவிடலாம் எனப் பயந்து வாயைப் பொத்திக் கொண்டேன்.

நான் எப்பொழும் அறை சன்னலைத் திறக்கவே மாட்டேன். அதற்கு எனக்கு எப்பொழுதும் தைரியம் வந்ததில்லை. சன்னல் திரைச்சீலையை விலக்கினால் கண்களில் வானம் பட்டுவிடும் எனப் பயம். மேலும் குருவிகள் ஏதும் பறந்தும் போகலாம். அப்படிப் பார்க்க நேர்ந்தால் எனக்குள் கவிதைகள் ஊற்றெடுத்து பொங்கிப் பெருகும். மூச்சடைத்து மயங்கி விழுந்த அனுபவமும் உண்டு. வீட்டுக்குள் வெளியே வந்தாலும் வானத்தை அண்ணாந்து பார்க்க மாட்டேன். அப்படி யதார்த்தமாகப் பார்க்க நேரும் சமயங்களில் சட்டென ஒரு முணுமுணுப்பு தோன்றும். “ஏய் வானமே! ஏய் மேகமே!” ஆச்சர்யக்குறிகள் தோன்றி நெஞ்சை அடைக்கும்.

இப்பொழுதெல்லாம் வேலை உண்டு வீடு உண்டு என இருந்துவிடுகிறேன். கடற்கரையோரங்கள் ஆபத்தானவை. அதிலும் மணல், சிற்பி, அலை போன்றவைகள் வயிற்றின் அடிப்பாகத்தில் சொற்களை உற்பத்தி செய்து கவிதையாக வெளியே தள்ளிவிடும். இப்படிப் பல முயற்சிகள் செய்து பாதுகாப்பாக இருந்தும் இன்று விழித்தெழுந்ததும் இப்படி ஆகுமென நினைக்கவில்லை. சாப்பிடும்போது தொண்டைக்குழிக்குள் இருந்த அக்கவிதை இம்சித்துக் கொண்டிருந்தது. நான் உண்ட அனைத்தையும் அது விழுங்கிக் கொழுத்துப் பெருத்து மேலும் மூச்சிரைக்கச் செய்தது. எப்படியாவது இன்று பிரசவமாகி ஒரு நான்கு வாசகர்களின் உயிர்களை வாங்கியே ஆக வேண்டும் என அது துடித்தத் துடியில் எனக்குத் தலை சுற்றியது.

நேற்றைய இரவில் எதைப் பார்த்துத் தொலைத்தேன் என வீட்டை விட்டு வெளியேறும் முன் சிந்தித்துக் கொண்டே இருந்தேன். எந்தப் பறவைகளும் வானத்தில் பறப்பதைப் பார்க்கவில்லை; எந்த மானும் என் வீட்டுக்குள் துள்ளிக் குதிக்கவும் இல்லை. பிறகெப்படி இந்தக் கவிதை? தொண்டைக்குழிக்குள் இருந்த கவிதை மெல்ல கடைவாயை முட்டிக் கொண்டு நின்றது. கண்கள் இரண்டும் பிதுங்க மீண்டும் அதனை விழுங்கினேன். கடை நாக்கில் அக்கவிதையை உள்ளே அழுத்தும்போது இரு கன்னங்களும் சிலிர்த்தன.

எப்படியாவது இன்று இக்கவிதையை உள்ளே வைத்துத் தீர்த்துக் கட்ட முடிவு செய்தேன். வேலைக்கு விடுமுறை சொல்லிவிட்டு வீட்டிலுள்ள படிகளைத் தொடர்ந்து ஏறி இறங்கிக் கொண்டிருந்தேன். மூச்சு வாங்கினால் கவிதை சோர்ந்து கீழிறிங்கிவிடும் என்கிற நம்பிக்கை உருவானது. வேகமாக அதிவேகத்தைத் தொடும்வரை ஓடினேன். மூச்சிரைத்து எப்பொழுது மயங்கி விழுந்தேன் எனத் தெரியவில்லை. மீண்டும் எழும்போது உடல் நனைந்திருந்தது. தொண்டைக்குழியில் ஏதோ கனமாகிக் கொண்டிருப்பதை அறிந்ததும் மனம் சோர்வானது. ஒருவேளை இன்று இக்கவிதை பிறந்தால் இது எனது 27825 ஆவது கவிதையாகும். வாசிப்பவர்கள் செத்தே விடுவார்கள் என்கிற பொதுநலம் ஒரு பக்கம் முட்டிக் கொண்டிருந்தது.

எனக்கு யாரைப் பார்த்தாலும் கவிதை வரும். எதைப் பார்த்தாலும் கவிதை வரும். எந்த நேரமும் கவிதைகளால் சூழ்ந்திருப்பேன். கவிதை கவிதை எனப் பிதற்றிக் கொண்டே இருப்பேன். யார் கேட்டாலும் ஒரு கவிதை எழுதி கொடுத்துவிடுவேன். அது கவிதையா இல்லையா என்பதைப் பற்றி கொஞ்சமும் கவலை இல்லாமல் கவிதையைத் தினமும் பிதுக்குவேன். அதோடுமட்டுமல்லாமல் ஒரு வரி கவிதைப்போட்டி, தலைப்பு கொடுத்து கவிதை போட்டி, வாரக்கவிதை, மாதக்கவிதை எனப் பல போட்டிகளால் நாடு விரிவாகியிருந்தது. என்ன செய்வதென்று தெரியாமல் நான் உறங்கிக் கொண்டிருக்கும்போதும் கவிதை வாய் வழியாக ஒழுகத் துவங்கியது. அக்கவிதையை என் வீட்டுப்பூனை எலியைக் குருகுருவென்று பார்ப்பதைப் போல நோட்டமிடும்.

இப்பொழுதெல்லாம் கவிதையை அடக்கவே முயல்கிறேன். கவிதையை அடக்கும் பயிற்சிகள் எங்கே வழங்குகிறார்கள் எனத் தேடியலைந்தேன். எந்த விடுதலையும் பிறக்கவில்லை. சோர்ந்து உட்காரும்போது “ஏய் சோர்வே… உன்னைப் பார்த்த பிறகு வானமும் சோர்ந்ததே” என மனம் சொல்லத் துவங்கியதும் சட்டென இன்னொரு மனம் அழுத்தும், “எங்கே ஆச்சர்யக்குறி?” என.

எழுந்து ஓடுவேன். எங்கே ஓடுவேன் எனத் தெரியாமல் ஓடுவேன். எப்படியெல்லாம் தப்பிக்க முடியும் எனத் திட்டமிட்டும் இன்று அது தோன்றிவிடும் எனப் பயமாக இருந்தது. ஒரு வெள்ளை ஆடையை அணிந்து கொண்டு பவ்வியமான முகத்துடன் உலகத்தையே தூக்கி தன் முதுகில் வைத்துச் சுமந்து கொண்டு அக்கவிதை காத்திருந்தது. இன்று வெளியானதும் உலகத்தையே திருத்திவிட வேண்டுமென அபாயப் பார்வை அக்கவிதைக்குள் தெரிந்தது. “ஏய் உலகமே!” என்பதுதான் என் தொண்டைக்குழிக்குள் இருந்த கவிதையின் முதல் வரி.

வீட்டின் இரு மூலைக்கும் நடந்து கொண்டிருந்தேன். எப்பொழுதோ வைத்த அலாரம் அன்று ஏன் அடிக்க வேண்டும்? கவிதை பாய்ந்து வாய் வழியாக வெளியே கொட்டியது. பூக்கள் மலர்ந்தன; மேகங்கள் விலகின, மழைத்துளிகள் கொட்டின; மரங்கள் அசைவதை நிறுத்தின; பறவைகள் சிறகு விரித்துப் பறந்தன. எனது 27825ஆவது கவிதை பிறந்தது.

இக்கவிதை என்ன செய்யப் போகிறது?

சமூகத்தில் வாழும் 72.5% இளைஞர்களின் அறிவை வளர்க்கும்.

சமூகத்தில் வாழும் 82234 பேரின் வாழ்க்கையில் விடிவெள்ளியாக இருக்கப் போகிறது.

சமூகத்தில் நடக்கும் குற்றங்களில் 23.5% குறைத்துவிட்டு 13.7% குற்றங்களை அடியோடு அழிக்கப் போகிறது.

தரையில் படுத்துப் புரண்டுவிட்டு அக்கவிதையைப் பார்த்தேன். பார்த்ததும் இன்னொரு கவிதை தோன்றியதும் என மனம் திக்கு முக்காடியது. எழுந்து தலை தெறிக்க ஓடினேன்.

  • கே.பாலமுருகன்

About The Author