அசோகமித்ரனின் கண்ணாடி சிறுகதையை முன்வைத்து- சொல்வெளி கலந்துரையாடல்

156989925.IlwG1FBX

தமிழ் இலக்கிய சூழலில் அசோகமித்ரனின் மிகச் சிறந்த சிறுகதைகள் எனச் சொல்லப்படக்கூடிய புலி கலைஞன், பயணம் போன்ற சிறுகதைகளை வாசிக்க வாய்ப்புக் கிடைத்தபோது அசோகமித்ரனின் கதைஉலகம் தவிர்க்கப்பட்ட, நிராகரிக்கப்பட்ட, விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்ட மனித மனங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடியவை என கடந்தகாலங்களில் அறிய முடிந்தது. ஆனால், சொல்வெளி கலந்துரையாடலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இக்கதை முற்றிலும் அகோகமித்ரனின் வேறொரு கதை உலகத்திற்குள் இட்டுச் சென்றுள்ளது என்றுத்தான் சொல்ல வேண்டும். இங்கு அசோகமித்ரன் என்ற கதைச்சொல்லி வேறொரு அதிர்வலைகளை உருவாக்குகிறார். வேறொரு மனிதர்களைக் காட்டிச் செல்கிறார்.

கதைகளின் இறுதிநிலை எது? கதைகளுக்கு இறுதிநிலைகள் இருக்க வாய்ப்பில்லை. ஒரு நல்ல கதை, கதைக்குள் ஒரு கதைக்கான இடைவெளியை விட்டுச் செல்லும். வாசகன் அதற்குள் தீராத பயணத்தில் இருப்பான். வாசகனுக்கும் கதை எழுதியவனுக்குமான பிரக்ஞை களைந்து வாசகனுக்கும் கதைக்குமான ஓர் உறவு கொண்டாடல் ஏற்படும். அப்படியொரு மனநிலை முதல் வாசிப்பில் கண்ணாடி எனக்கு ஏற்படுத்தவில்லை. நான் வாசிக்கும் ஒவ்வொரு கதைக்குள்ளும் நான் என்னைத் தேடிப் பார்க்கும்போது கொடுக்கும் விளைவு இது. நான் மனித உணர்வுகளில் ஒரு கதை பயணிக்க வேண்டும் என ஆழ்ந்து நம்புபவன். கதையின் அடுக்குகளில் மனித உணர்வுகள் வாசகனை அதன் உச்சத்திற்கு நகர்த்திச் செல்ல வேண்டும் எனும் வாசகப் பிடிப்புள்ளவன். ஆகவே, புலி கலைஞன் போலவும், பயணம் சிறுகதை போலவும் அசோகமித்ரன் இக்கதையிலும் சத்தமான ஓர் உணர்வெழுச்சியை வைத்திருப்பார் என நினைத்து வாசிக்கும்போது அதற்கு எதிர்மறையான திசையில் கதை பயணிக்கிறது என்றுத்தான் சொல்ல வேண்டும்.

கண்ணாடி சிறுகதை அசோகமித்ரன் எப்பொழுதும் ஒரு நெருக்கடிக்குள்ளே வாழ்ந்து கழிக்கும் ஆண்களின் மன உலகை விரித்துக் காட்டுவதைப் போன்றுத்தான் இரண்டாவது வாசிப்பில் அறிய முடிகிறது. எந்த வேலையையும் நிரந்தரமாகச் செய்ய முடியாமல், வாழ்க்கையைத் திண்டாட்டத்திலேயே கழித்து முடித்த ஒரு பத்திரிகையாளர் தன் வாழ்நாளின் வயதால் விளிம்பில் நிற்கும் சூழலிலும் அலைக்கழிக்கப்படும், பொருந்தி நிற்க முடியாமல் தடுமாறும் நிலையைக் காட்டி கதை தொடங்குகிறது. அவருடைய ஆணவம் சட்டென உயிர்பெறுவதும் அதை இன்னொரு ஆண் முறியடிப்பதையும்கூட அசோகமித்ரன் கதைக்குள் காட்சிகளின் வழியாகக் காட்டுகிறார்.

ஆண்களின் உலகம் எதனுடனும் பொருந்தி நிற்க முடியாமல், திருப்தி கொள்ள முடியாமல், வாழ்நாள் முழுவதும் தனக்கான ஆணவத்தை அதிகாரத்தைத் தேடி திசையில்லாமல் அலைந்து கொண்டிருக்கும். அதுவும் வயதான ஆண்களுக்கும் பெண்களுக்குமான வாழ்வில் துணையில்லாமலும் வாழ முடிந்தவர்கள் பெண்களாக இருப்பார்கள். வீட்டில் ஒரு தனித்த பாட்டி பலநாள் உயிருடன் வாழ்வதைப் பார்த்திருப்போம். ஆனால், துணையில்லாமல் பிள்ளைகளுடன் நிம்மதியாக வாழும் ஒரு தனித்த தாத்தாவைப் பார்ப்பது அரிதாக இருக்கும்.

ஆணாதிக்க சமூகத்தில் தனக்கு அதிகாரம் உண்டு என அழுத்தமாக நம்புபவர்கள் ஆண்கள். கொடுக்கப்படவில்லை என்றாலும் ஒரு குறிப்பிட்ட வயது வந்ததும் தன் அம்மாவை அதட்டி ஆட்கொள்வதிலிருந்து ஓர் ஆண் தனக்கான அதிகாரத்தைப் பெற்றுக் கொள்கிறான். யாரும் அவனுக்குக் கொடுக்க வேண்டியதும் இல்லை. ஆகவே, அதனைப் பிடித்து வாழ்நாள் முழுவதும் தொங்கிக் கொண்டிருக்கும் கொஞ்சம் பிசிறடித்தாலும் தடுமாறி உருக்குழைந்து போகும் மிகவும் பலவீனமான மன அஸ்திவாரத்தைக் கொண்டவர்களே ஆண்கள் என நினைக்கத் தோன்றுகிறது. அப்படியொரு திருப்தியில்லாத, வெறுமையும் அழுப்பும் நிறைந்த ஓர் ஆணின் அகவுலகத்திற்குள் இக்கதை பயணிக்கிறது. வரண்டுவிட்ட ஒரு தொழில்நுட்பம் போல, கரகரவென பாடும் ஒரு வானொலியைப் போல, தட்டினால் ஓங்கி அடித்தால் சட்டென சத்தமிட்டுவிட்டு மீண்டும் காணாமல்போகும் பழைய தொலைக்காட்சியின் ஓளியைப் போல, வரட்சிமிக்க கடைசி நம்பிக்கையை ஒற்றைக் கையில் சுமந்து திரியும் ஒரு சராசரி ஆணை இக்கதையில் அசோகமித்ரன் காட்டுகிறார்.

கொஞ்ச பேர் மட்டும் வாசிக்கும் ஒரு முக்கியமான பத்திரிகைக்கு விளம்பரம் கேட்டு ஒரு நிறுவனத்திற்குச் செல்கிறார். அவரிடம் ஒரு தீர்க்கமான புலம்பல் மட்டுமே இருக்கிறது. இருப்பினும் ஆண் தன் அதிகாரத்தை நழுவவிடமாட்டான். எதாகிலும் ஒருவகையில் தன்னை நிரூபித்துக் கொள்ள வேண்டும் எனத் துடிப்பவன். அவருக்கு அத்தனை வெறுப்பிருந்தபோதும் தன்னை விட கீழான ஒருவனை அதாவது வாடகை கார் ஓட்டுனரிடம் தன் அதிகாரத்தைக் காட்டுகிறான்.

அதேபோல இன்னொரு ஆண் இன்னொரு சூழலில் இவனிடம் அதிகாரத்தைப் பாவிக்கிறான். தன்னுடைய அதிகாரத்தின்பால் அத்தனை ஆணவம் கொண்ட அவனுடைய இருப்பு அவ்விடத்தில் தடுமாறுகிறது. அதற்காகத் தன்னையே அலைக்கழித்துக் கொள்கிறார். இத்தனை அதிகாரமிக்க, அதிகாரத்தின் நூலிழையைப் பிடித்துத் தொங்கும் ஓர் ஆணைக் காட்டுவதைப் போல, தன்னால் எந்த முடிவும் எடுக்க முடியாமல் பிறரின் நிழலில் வாழும் ஆணையும் கதையாசிரியர் காட்டுகிறார். அந்த விளம்பர நிறுவனத்தின் அதிகாரி, தனக்கு எந்த அதிகாரமும் இல்லை; அதிகாரத்தின் நிழலில் வாழும் ஒரு சராசரி எனக் காட்டி நிற்கிறார். மூடிய கதவுக்கு மேலாக ‘ஆண்கள்’ என எழுதியிருந்தது என கதை முடிகிறது. ‘ஆண்கள்’ எனத் தனித்து எழுதப்படுவது கழிவறையில்தான். ஆகவே, அசோகமித்ரன் அவ்விடத்தில் ஓர் ஆழமான விமர்சனத்தைச் சத்தமில்லாமல் வைத்துவிட்டு கதையை முடிக்கிறார். முடிந்த அவ்விடத்திலிருந்து கதை சட்டென வேறொரு திறப்பை உருவாக்குகிறது.

கதையின் அக்கடைசி வரி கதையின் அழுத்தத்தைக் கூட்டுகிறது. அது ஒட்டுமொத்த கதையைத் தாங்கி நிற்கும் வரி. கதையில் வரும் அவருக்குப் பொருந்தாத கோர்ட்டு, அவரின் நுனிவிரலையும் கடித்து கொண்டு நிற்கும் பூட்ஸ் என தலையிலிருந்து கால்வரை ஆண்களுக்கு எப்பொழுதும் எதுவுமே பொருந்தி வழிவிடுவதில்லை என்பதைக் காட்டுகிறது. எல்லாம் பருவங்களிலும் ஏதோ ஒருவகையான சிக்கலுடன் திருப்திக் கொள்ளாமல் வாழும் ஒரு ஜீவன் ஆண்களே எனச் சொல்லத் தோன்றுகிறது.

ஜூன் சொல்வெளி கலந்துரையாடலில் படைக்கப்பட்ட கட்டுரை

கே.பாலமுருகன்

About The Author