நூல் விமர்சனம்

சீன இலக்கியம்: பெருநகரின் கனவுகள்

மலேசியத் தற்கால சீன இலக்கியம் எந்த இலக்கில் இருக்கிறது என அறிய ஆவலாக இருந்த சமயத்தில் வீட்டின் நூலகத்தில் ஏற்கனவே வாங்கி வைக்கப்பட்டிருந்த சீனா நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதை தொகுப்பு வாசிக்கக் கிடைத்தது. எளிமையான ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கப்பட்ட நூல். பத்து கதைகள் வரை படித்தேன். எல்லாமே ஜனரஞ்சகமாக இருந்தாலும் சீனாவின் புறமாற்றங்களால் எப்படி அங்குள்ள மனங்கள், உறவுகள், கல்வி பாதிப்புக்குள்ளாகின்றன என்பதைக் கதைகள் விவாதிக்கத் தவறவில்லை.

அனைத்துக் கதைகளும் புறவெளியிலிருந்து தொடங்கி குறிப்பிட்ட மனங்களுக்குள் நுழைந்து விரிவதை உணர முடிந்தது. சீனாவின் பெருநகர் பற்றிய விவரனையில் தொடங்கும் கதை ஆரம்பத்தில் ஒரு சலிப்பை உருவாக்கினாலும், அடுத்து கதை ஒரு குடும்பத்தைத் தேர்ந்தெடுத்து, அதிலுள்ள எப்பொழுதும் தனிமையில் இருக்கும் சிறுவனின், எப்பொழுதும் கோபப்பட்டுக் கொண்டே இருக்கும் தாத்தாவின், எல்லோரையும் திட்டிக் கொண்டே இருக்கும் அம்மாவின் அகத்தை நோக்கி செல்லும்போது கதையோட்டம் சட்டென தனக்குரிய வலுவான இடத்தை ஏற்படுத்திக் கொள்கிறது.

ஒரு நிலத்தைத் தேர்ந்தெடுக்கும் இலக்கியம் அதன் வெளிப்பரப்பை மட்டும் ஆராயமல் அக்காலத்தில் வாழும் மனிதர்களின் அகசிக்கல்களையும் விவாதிக்க வேண்டும் என்கிற எதிர்ப்பார்ப்புகளை நான் படித்த அனைத்து கதைகளுமே நிரூபிக்கின்றன. மற்றப்படி மூலமொழியைப் படிக்க முடியாததால் இக்கதைகள் எழுதப்பட்ட மொழியில் அது எத்தனை தீவரமான சொல்லாடல்களைக் கையாண்டுள்ளன என விமர்சிக்க இயலவில்லை.
பனி கொட்டும் ஓர் இரவில் தொடங்கும் ‘பெருநகர் கனவுகள்’ சிறுகதை காணாமல் போன கணவருக்காக ஒரு பெண் பேருந்து நிறுத்தத்தில் நிற்பதைக் காட்சிப்படுத்தும். அவள் சொந்தமாகப் பேசிக் கொண்டிருப்பாள். அந்தப் பேருந்து நிறுத்தத்தின் மீது மட்டுமல்லாமல் சாலை, கடை வீதிகள், தெருவோரப் பொருட்கள் என அனைத்தின் மீதும் பனி கொட்டி வெள்ளை பூசியிருப்பதை மட்டும் கதையில் ஒன்றரைப் பக்கம் விவரிக்கப்பட்டிருக்கும். அதன் பின் மீண்டும் அப்பெண்ணின் புலம்பலுக்குள் நுழையும். அதன் ஊடாக அவளுடைய கணவனைப் பற்றிய சித்தரிப்புகள் சொல்லப்படும். சட்டென சைக்கிளில் அங்கு வரும் ஒரு பெண் அவளைச் சத்தமாகத் திட்டிவிட்டு அழைத்துச் செல்வாள். உனக்கு இதே வேலையாகிவிட்டது என்ற கடைசி வசனத்தில் அவளுடைய கணவன் காணாமல் போகி பல வருடங்கள் ஆகிவிட்டதை வாசிக்கும் நம்மால் உணர முடியும். ஆனால், அவள் கணவனைச் சற்று முன் தொலைத்துவிட்ட மனநிலைக்குள்ளே ஸ்தம்பித்துவிட்டாள். அப்பொழுதுதான் அந்த இரவில்தான் கொட்டிய பனி போல அவளுடைய மனம் ஒவ்வொரு இரவும் விழித்துக் கொள்கிறது. சொல்லப்பட்ட விதம் மிகவும் சுருக்கமாக இருந்தாலும் அக்கதையே மனத்தைக் கணக்க செய்கிறது.

எத்தனையோ உறவுகளை ஒவ்வொரு காலத்திலும் நாம் தொலைத்துக் கொண்டே இருக்கிறோம். ஒரே வீட்டில் இருந்து கொண்டு பேசாமல் இருப்பதும் ஒரு தொலைத்தல்தான் என்பதை ‘மோசாகியின் வீடு’ எனும் கதை சொல்கிறது. தனித்தனியாகக் கணவனும் மனைவியும் வேலைக்குக் கிளம்புவதில் அக்கதை துவங்குகிறது. வீட்டுக்கு வெளியே வரும் இருவரையும் விட்டுக் கதை மெல்ல சீனப் பெருநகரின் பெருத்த வெளியை நோக்கி விரிகிறது. எப்பொழுதும் பரப்பரத்துக் கொண்டிருக்கும் நகர் மனிதர்களைச் சுற்றி அலைகிறது சிறுகதை. பிறகு சட்டென வீடு திரும்பும் அவர்களிடம் கதை மீண்டும் வந்துவிடுகிறது. இருவரும் தனியாகச் சமைக்கிறார்கள். வீட்டில் இரண்டு சமையலறைகள் இருக்கின்றன. எல்லாமே இரண்டு என வீடு இரண்டாகிக் கிடக்கிறது. இரவு உறங்கப் போகும் முன் கணவன் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கிறான். அவள் சமையலறையில் வானொலி கேட்டுக் கொண்டிருக்கிறாள். மணி 10 ஆனதும் இருவரும் வானொலியையும் தொலைக்காட்சியையும் அடைக்கிறார்கள். மேல்மாடியில் இருக்கும் தனித்தனி அறைக்குச் சென்று கதவை அடைப்பதாகக் கதை முடிகிறது. ஒரு திரைப்படம் பார்த்த அனுபவம் கிட்டும்.

நான் முதலில் சொன்னதைப் போல சீனக் கதைகள் பெரும்பாலும் ஜனரஞ்சகமாகத்தான் இருக்கும் என்கிற என நினைப்பை உடைத்த இந்த இரண்டு சிறுகதைகள் இத்தொகுப்பில் முக்கியமான படைப்புகளாகக் கருதுகிறேன். மற்ற எட்டுக் கதைகளும் ரொம்பவும் மேலோட்டமாக இருப்பதால் அதைப் பற்றி இங்கு எழுதவில்லை. சீனா அதிக மக்கள் கொண்ட நாடு. தனிமை அங்குச் சாத்தியமா என்கிற சந்தேகம் எழுகிறது. எப்பொழுதும் மனித இரைச்சலுடன் காணப்படும் நகரின் மற்றொரு முகங்களைக் காட்டியதாகவே சீன இலக்கியத்தை உணர்கிறேன். அது இந்தத் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதை தொகுப்பின் மூலம் மேலும் உறுதியாகின்றது. விரைவில் கொரியா சிறுகதைகள் பற்றி எழுதுகிறேன்.

– கே.பாலமுருகன்