கட்டுரைத் தொடர்: நானும் எனது எழுத்துப் பயணமும் – பாகம் 1

நான் எப்பொழுது எழுதத் துவங்கினேன், என் எழுத்துப் பயணம் எத்தகையது, யாரெல்லாம் உடன் இருந்து பங்காற்றியுள்ளார்கள், யாருடன் இணைந்து பயணித்துள்ளேன், என்னென்ன முயற்சிகள் மேற்கொண்டுள்ளேன் என விரிவாக இலக்கியம், இலக்கிய செயல்பாடுகள் சார்ந்து மட்டும் பதிவு செய்ய வேண்டியுள்ளது. பலமுறை ஆங்காங்கே நேர்காணல், பத்திகளில் இதனைக் குறிப்பிட்டிருந்தாலும் மொத்தமாகத் தொகுத்து வைத்துக்கொண்டால் அடுத்து வரக்கூடிய தலைமுறைக்கு மேற்கோளாக இருக்கும் என்றே நினைக்கிறேன். என்னை நானே தொகுத்துப் பார்த்துக் கொள்ளவும் கூடுதல் வாய்ப்பாக இருக்கும்.

நயனத்தில் வெளிவந்த ஷோபி உண்மை கதைகள் பகுதிக்குத்தான் நான் முதலில் இலக்கியம் சார்ந்த வாசகனானேன். (ஆரம்பப்பள்ளியில் கிருஷ்ணர் கதைகள் விரும்பி வாசிப்பேன் என்றாலும் இடைநிலைப்பள்ளி காலத்திலிருந்தே என் இலக்கிய அனுபவ வரலாற்றைத் தொடங்கலாம் என நினைக்கிறேன்)

இரண்டாம் படிவம் படித்துக் கொண்டிருக்கும்போதே (14 வயது) நயனம் இதழைத் தீவிரமாக வாசிக்கத் துவங்கியிருந்தேன். நானே எனது மவுண்டன் சைக்கிளில் சென்று சுங்கைப்பட்டாணியில் இப்பொழுது இருக்கும் முத்தையா கடைக்கு எதிர்ப்புறத்தில் ஓர் ஒட்டுக்கடையில் நயனம் இதழை வாங்கிக் கொள்வேன். அப்படிச் சேகரித்து வைத்து நயனம் இதழ்கள் வீட்டின் அறையில் நிரம்பிக் கிடக்கும். அக்காவும் என்னுடன் சேர்ந்து நயனம் இதழை வாசிக்கத் துவங்கினார்.

எனது சிறார் பருவத்தில் நான் தீவிர சினிமா இரசிகன். எனது நினைவாற்றலைப் பரிசோதிக்க சினிமாவின் பெயர்களையே கேட்பார்கள். அப்பொழுதிலிருந்தே சுயமாக நடித்துக் கொள்வது, நடிகர்களின் படங்களைப் புத்தகத்தில் சேகரித்துக் கொள்வதென சினிமாவைப் பின்தொடர்ந்தேன். அப்படிச் சினிமா செய்திகளைப் படிக்கத்தான் நயனம் இதழுக்கு வாசகனானேன். அப்படியே அந்த இரசனை இலக்கியத்தின் பக்கமும் திரும்பியது. குறிப்பாக ஷோபி எழுதும் உண்மை கதைகள் சுவாரஷ்யமாக இருக்கும் என்பதால் அதற்குத் தீவிர இரசிகனானேன். அப்பொழுதெல்லாம் ஷோபி என்பவர் ஓர் ஆண் என நினைத்திருந்தேன். ஆனால், அவர் ஒரு பெண் எழுத்தாளர் என்பது பின்னர்தான் தெரிந்துகொண்டேன். மேலும், ஷோபியின் உண்மை கதைகள் பகுதிக்கு அப்பொழுது பக்கங்கள் வடிவமைத்துக் கொண்டிருந்தது ஓவியர் சந்துருத்தான் என்பது சமீபத்தில்தான் எனக்குத் தெரியும். ஆக, என்னை முதலில் ஈர்த்த இதழ் நயனம் தான்.

அந்தக் காலக்கட்டத்தில்தான் கிருஷ்ணப் பக்தி இயக்கத்தின் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டத்தில் மேடை நாடகத்தில் நடிக்க நண்பர் பொண்ணுதுரை மூலமாக வாய்ப்புத் தேடி வந்தது. எனக்கிருந்த நடிக்கும் ஆவலை அதன்வழி தீர்த்துக் கொண்டேன். முதல் வேடமே அரக்கன் வேடம்தான். கம்சன் தன் தங்கை தேவகியைச் சிறையில் அடைத்துவிடுவான். அந்தச் சிறையைப் பாதுகாக்கும் அரக்கனில் ஒருவனாக நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்தேன். அரங்கம் முழுவதும் கிருஷ்ணப் பக்தர்கள். அத்தனை பேருக்கு முன்னால் முதன்முதலில் நடிக்கும் தருணம் பேரனுபவமாக மாறியது. பிறகு மெல்ல, பரதன், சைத்தன்ய பிரபு, சித்திரக் குப்தன் என எனக்கான பாத்திரங்கள் விரிவடைந்தன.

நண்பர்களுடன் சேர்ந்து புராண நாடகங்களை எழுதி இயக்கவும் செய்தேன். நான் எனது 16ஆவது வயதில் முதலில் நண்பருடன் இணைந்து எழுதியது எமலோகம் நாடகம்தான். அதனை நாங்கள் பினாங்கு மாநிலத்தில் அரங்கேற்றினோம். சினிமாவும் நயனம் வாசிப்பும் மேடை நாடகமும்தான் என்னை இலக்கியத்தின் பக்கம் இழுத்து வந்தன. இலக்கியத்தின் மீதான இரசனையை உருவாக்கியதில் இந்தத் துவக்கக் கால அனுபவங்களுக்குப் பெரும் பங்குண்டு.

கூடுதல் இணைப்பு:

2007ஆம் ஆண்டில் திண்ணை.காமில் நான் எழுதி, பின்னர் என் வலைப்பக்கத்தில் பிரசுரித்த ஒரு கவிதை இது. இந்தக் கவிதையை எழுதும்போதெல்லாம் நான் கவிதையை யாரிடமும் அல்லது பட்டறைகளிலும் பயிலவில்லை. ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி காலக்கட்டத்தில் (2004-2006) நான் உருவாக்கிக் கொண்ட தீவிர வாசிப்புத்தான் எனக்குள் இருந்த எழுத்தாளனையும் வாசகனையும் கூர்மைப்படுத்தியது. அது தொடர்பான பதிவு அடுத்தடுத்தத் தொடரில் இடம்பெறும்.

இறந்தவர்களின் கைகள் (2007)

அந்த மங்கிய

நீர் முகப்பில்

அவர்களின் கைகள்

நெருங்கி வருகின்றன.

நீர் அலைகளில்

அவர்களின் கைகள்

விட்டுவிட்டு தவறுகின்றன.

எப்பொழுதோ ஏதோ ஒரு பொழுதில்

அவர்களின் கைகள்

உயிர் வாழ வேண்டி

நீர் முகப்பின் மேற்பரப்பில்

அசைந்து அசைந்து

எத்தனை பேர்களை

அழைத்திருக்கும்…

இன்றுஅது இறந்தவர்களின்கைகள்.

“எத்தன பேரு இங்க

உழுந்து செத்துருக்கானுங்க…

இந்தத் தண்ணீ அப்படியே ஆளே

உள்ளெ இழுத்துரும்”

நீர் முகப்பின்

அருகில் அமர்ந்துகொண்டு

ஆழத்தை வெறிக்கிறேன்.

மங்கிய நிலையில்

ஓர் இருளை சுமந்திருக்கிறது.

இருளுக்குள்ளிலிருந்து

எப்பொழுது வரும்

இறந்தவர்களின் கைகள்…

தொடரும்

கே.பாலமுருகன்

(முடிந்தவரை வலைப்பக்கப் பதிவுகள், நாளேடுகள், கிறுக்கல் புத்தகங்கள், புகைப்படங்கள் எல்லாவற்றுக்கும் மேலாக இன்னும் களையாமல் இருக்கும் நினைவுகள் அடிப்படையில் என் எழுத்து வரலாற்றைப் பதிவு செய்கிறேன். இவற்றுள் தொடர்புள்ளவர்கள் எங்கேனும் பிழையறிந்தால் என்னிடம் தெரியப்படுத்தலாம்)

About The Author