தைப்பூசம் – அதிர்ச்சி தகவல்கள்

குறிப்பு: ஒரு வருடத்தில் தைப்பூசத்தில் மட்டும் மொத்தம் 5 மில்லியன் லீட்டர் பால் சாக்கடையில் கலக்குவதாகத் தகவல் சொல்கிறது.

 

  1. வெடிகுண்டும் குண்டு வெடியும்

தொடர்ந்து இரண்டு நாட்களாகத் தைப்பூசத் திருத்தலங்களில் வெடிகுண்டு போடப்போவதாக பல தரப்புகளிலிருந்து தகவல்கள் வந்திருப்பதாக வாட்சாப் மூலம் செய்தி பரவிக் கொண்டிருக்கிறது. அது இருக்கட்டும், ஆனால், தைப்பூசத்திற்குத் தங்களின் நேர்த்திக் கடன்களைச் செலுத்த செல்பவர்களும் அவர்களுடன் செல்பவர்களும் அல்லது தைப்பூசத்திற்குச் செல்லும் பொதுமக்களும் முதலில் தயவு செய்து குப்பைகளைக் கீழே போடாதீர்கள். அவர்கள் வெடிகுண்டு போடுவது இருக்கட்டும், ஆனால், அதைவிட மோசம் தைப்பூசத்தில் பொதுசாலைகளையும் பொதுமக்கள் புலங்கும் இடங்களையும் குப்பைக் கூளங்களாக மாற்றிவிடுவது.

taipusam

நாம் கோவிலுக்கு அப்பால் உபயோகிக்கும் மற்ற பொது இடங்களும் சாலையும் இனவேறுபாடற்ற பொதுமக்களுக்குரியது. அவையாவும் மூன்று நாட்களில் குப்பைகள் போட்டு அலங்கோலமாக்கப்படுகின்றன. தைப்பூசத்தின் காவடி படங்களையும் பக்த பெருமக்களின் படங்களையும் நாளிதழில் பார்த்து இரசிக்கும் நாம் என்றாவது தைப்பூசம் முடிந்த நான்காவது நாளில் கோவில் வளாகத்தையும் தைப்பூச ஊர்வலங்கள் நடந்த வளாகத்தையும் பார்த்ததுண்டா? இனி வெடிகுண்டு அவ்விடத்தில் போடத் தேவையிருக்காது. அதன் தோற்றமே ஏற்கனவே வெடிகுண்டு போட்டு சிதைந்து சின்னாம்பின்னமாய் ஆனதைப் போலத்தான் காட்சியளிக்கும். மற்ற இனத்தவர்கள் இதனைப் பார்வையிடும்போது நம் மீதான அபிமானங்கள் பாதிக்கப்படும் என்பதும் உண்மையே. ஆகையால், தயவு செய்து நீங்களோ உங்கள் வீட்டைச் சேர்ந்தவர்களோ குப்பைகளைக் கீழே வீசும் போது ஒன்றை மட்டும் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள், சாலை என்பது உங்கள் சொத்து அல்ல; பொதுமக்களின் உபயோகத்திற்குரியது. அதனைச் சேதப்படுத்துவது என்பது நம் நடுவீட்டைச் சேதப்படுத்துவதற்குச் சமம்.

 

  1. போதைப்பொருள் விநியோகம்

 

அடுத்து, தைப்பூசத்தில் போதைப்பொருள் கைமாற்றம், விநியோகம் நடக்கவிருப்பதாகத் தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. போதைப்பொருள் விநியோகம் இருக்கட்டும், உங்கள் வீட்டுப் பெண்களைப் போதைப்பொருள்/மதுபானம் எடுத்துவிட்டு வந்து தைப்பூசத்தில் பக்தி வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கும் ஆண்களிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். அவர்கள் ஆபத்தானவர்கள் என்பதை நீங்கள் அறியாமலே அவர்களின் பாலியல் சேட்டைகளுக்கும் கிண்டல் கேலிகளுக்கும் உங்கள் வீட்டு பெண்களையும் சிறுமிகளையும் பலியாக்கிவிடாதீர்கள். வீட்டு ஆண்களுக்கு இதெல்லாம் தெரிவதில்லை. நீங்கள் வீர மீசையை முறுக்கிக் கொண்டு முன் நடக்க உங்கள் வீட்டுப் பெண்கள் பாதுகாப்பில்லாமல் இதுபோன்ற மதுபான அடிமைகளின் உரசலுக்குப் பலியாகிக் கூட்டத்தில் மாட்டி நசுக்கப்பட்டு வந்து கொண்டிருப்பார்கள். உங்களிடம் கேட்டால் ‘கூட்டம்னா அப்படித்தான் இருக்கும்’ என்று வீரவசனம் பேசுவதில் குறைச்சல் இல்லாமல் நிற்பீர்கள்

தைப்பூசத்திற்கு வரும் எல்லாம் ஆண்களும் அப்படியில்லை என்றாலும் யாருக்கும் இதுபோன்ற சந்தர்ப்பங்களை உருவாக்காமல் நீங்கள் கவனமாகக் கூட்டத்தைக் கையாள வேண்டும். கூட்டம் அதிகப்படி நெரிசலுக்குள்ளாகும்போது கொஞ்சம் நேரம் ஒதுங்கி காத்திருந்துவிட்டுப் போகலாம். பல ஆண்டுகள் அதே திருத்தலங்களுக்குப் போய்வரும் அனுபவத்துடன் உங்களால் எதையும் முன் அனுமானம் செய்ய முடியும். கிண்டல் கேலி செய்து பெண்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவதற்கென்று ஒரு கூட்டம் எப்பொழுதும் இலவச சேவையில் ஈடுபட்டிருப்பார்கள். அவர்களின் நன்னடத்தையும் நம்மையறிமால் இரசிக்கும்படி இருக்கும். அருகே சென்று பார்த்தால் ‘டாஸ் மார்க்’ வாசம் வீசும். அதை உணர்ந்து அவர்களிடமிருந்து விலகி நீங்கள் மேலும் பாதுகாப்பாக இருக்க முடியும்.

  1. தீவிரவாதிகளின் நடமாட்டம்

தீவிரவாதிகளின் நடமாட்டம் தைப்பூசத்தில் இருக்கப் போவதாகத் தகவல் பரவி வருகிறது. இனிமேல்தான் தீவிரவாதிகள் வர வேண்டுமா என்ன? பழித்தீர்த்தல் என்கிற அடிப்படையில் தைப்பூசங்களில் நடக்காத வெட்டுக் குத்தா? கொலையா? இதுவரைக்கும் கணக்கெடுத்தாலும் பல தைப்பூசங்களில் பல சண்டை சச்சரவுகள் கொலைகள் நடந்துள்ளன. தைப்பூசத்தில் தன் வீரத்தைக் காட்டச் சொல்லி முருக பெருமான் கந்தப் புராணத்தில் சொல்லியிருக்க வாய்ப்பில்லாத போது ஏன் தமிழ்ச்சமூகம் இதுபோன்ற விசயங்களுக்கு எதிர்வினை ஆற்றுவதில்லை? இதை ஒரு பெருமையாகக் கருதி இரசிக்கிறார்களோ?

“பார்டா என் வீட்டு ஆம்பளையா… என்னமா குடிச்சிட்டு ஆடுறாரு? என்ன ஒரு பக்தி?”

இப்படிப் பெருமைப்பட வாயைப் பிளந்து கொண்டு நிற்பீர்களோ?

“என் பாய் ப்ராண்டு பாரு காவடியெ அப்படியே தரையிலெ தேய்க்கும் அழகே அழகு”

அப்படியென்று இளம் பெண்கள் கூட்டம் இரசிக்க வேண்டும் என நம்ம அண்ணன் காவடியைக் கொண்டு தமிழ் சினிமா பாடலுக்குப் போடுவாரு பாருங்க ஒரு குத்து நடனம். யப்பாப்பா…என்ன பக்தி? திருவாசகத்திலும் திருமந்திரத்திலும் பக்திக்கான விளக்கம் அப்படித்தான் இருக்கிறதோ? சரி விடுங்கப்பா. காவடி தூக்கித் தன் காணிக்கையைச் செலுத்துவதில் தவறில்லை. ஆனால், அதில் ஒரு பக்தி மட்டுமே இருக்க வேண்டுமே தவிர ஆடம்பரமும் ஆர்பாட்டமும் அல்ல.

அதே போல குண்டர் கும்பல் சண்டைகள் நடக்கும் இடமாகத் தைப்பூசம் பல வருடங்களுக்கு முன்பிலிருந்து மாறி வருவதையும் அறிகிறோம். காவலில் இருக்கும் காவல்துறையினரின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு தன் பழியைத் தீர்த்துக் கொள்பவர்களும் இருக்கிறார்கள். அவர்களிடமிருந்து பாதுகாப்பாக இருங்கள். இதுதான் தீவிரவாதம் எனக் கருதுகிறேன். தீவிரவாதிகளை விடுங்கள்; நீங்கள் கொஞ்சம் தீவிரமாக உங்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்துங்கள். சந்தேகப்படும்படி எதையாவது பார்த்தால் உடனே காவல்துறைக்குத் தொடர்புக் கொள்ளுங்கள்.

தைப்பூசத்தின் மீது விழும் கட்டுக்கதைகளையும் அதிர்ச்சியான தகவல்களையும் விட்டுத்தள்ளுங்கள். முதலில் நாமே சீர்குழைத்து வைத்திருக்கும் தைப்பூசத்தை மாற்றியமைத்துக் கூட்ட நெரிசலுக்குப் பலியாகி மனமும் உடலும் பாதிக்கும் சம்பவங்களுக்கு இடமளிக்காமல் அமைதியுடன் தைப்பூசத்தைக் கொண்டாடுங்கள்.

யாரோ வேற்று இனத்தவர் ஒருவர் பத்துமலையில் இருக்கும் உயரமான முருகன் சிலையைப் பார்த்து இது தேவைதானா எனக் கேட்டதற்கு நமக்கெல்லாம் கோபம் வந்ததைப் போல, தைப்பூசத்தில் இனத்தையே அவமானப்படுத்தும் சம்பவங்கள் நடந்தால் அதற்கும் கோபப்படுங்கள். உங்களின் கோபம் பிறரை மாற்றக்கூடும்.

பின்குறிப்பு: இதுவரை தைப்பூசங்களில் நடந்த கொலைகளின் எண்ணிக்கை: வருடம் 1999 – 2015/ 21 கொலைகள், ஒரு கை வெட்டு)

கே.பாலமுருகன்

About The Author