மெலாந்தி பள்ளத்தாக்கு: தொடர்க்கதை: பாகம் 13
மெலாந்தி வீடு – நிகழ்காலம்
சரவணனும் குச்சியும் வீட்டில் இருக்கிறார்கள். சரவணனுக்குப் பின்னால் வந்து நின்ற மூர்த்தியின் உருவத்தைக் கண்டு குச்சிமிட்டாய் மிரண்டு மீண்டும் தரையில் சரிந்துவிட்டான்.
பாகம் 13
“குச்சி! குச்சி! என்ன சும்மா சும்மா பெங்சான் ஆயிடற?”
எதிரில் சரவணன் கையில் வெண்சுருட்டுடன் நின்றிருந்தான். குச்சிமிட்டாய் விழிக்க முயன்று பளிச்சென்று வீட்டுக்குள் நுழைந்து விரிந்திருந்த வெயில் கீற்றுகள் முகத்தில் பட்டதால் கண்கள் கூசின. கண் இமைகள் பாரமாக இருந்தன. சிரமப்பட்டுக் கண்களைத் திறந்து சுற்றிலும் பார்த்தான். ஒரு பிரமை அவனுக்குள்.
“பாங்! என்னால முடில பாங். இந்த வீட்டுல பேய் இருக்கு… வாங்க ஓடிரலாம்… தனசேகர்க்குப் போன் போடட்டா?”
குச்சிமிட்டாய் தனசேகர் சொல்லியதை மீறி அவனுக்கு அழைத்துப் பார்த்தான். அவனது கைப்பேசி அடைந்திருந்தது. பலமுறை தொடர்பு கொண்டும் அதே நிலையே நீடித்தது.
“பாங்! கீழ போய்றலாம்… வாங்க…”
“டேய்! என்ன கிறுக்கா உனக்கு? நானே பயந்துபோய் இங்க இருக்கன். என்ன கீழ நடமாட சொல்றீயா?”
குச்சிமிட்டாய் பதற்றத்தில் முறையாக பேச முடியாமல் தடுமாறினான். பதற்றம் சிந்தனையைத் தடுப்பதில் வல்லமை வாய்ந்த ஒரு பலவீனம். குச்சிமிட்டாய் ஒரு மிருகத்தைப் போல தரையில் புரண்டான்.
“குச்சி! குச்சி! இங்க வந்து உக்காரு… உனக்கு இப்ப என்ன கத? சொல்லு…”
நிதானிக்க முயன்றும் அழுகை உடைந்து கொட்டியது. என்னவென்று தெரியாமல் குச்சிமிட்டாய் அழுதான். கண்கள் இருளத் துவங்கியதும் அவனுக்கு மேலும் கிலிப் பிடித்துக் கொண்டது. அடுத்து மயங்கி எழுந்தால் என்ன ஆகும் எங்கு இருப்பேன் என்றெல்லாம் அரண்டு முகத்தை ஓங்கி அறைந்து கொண்டான்.
சரவணன் சற்று நிதானித்துவிட்டுக் கைப்பேசியை எடுத்தான்.
“துவான்! அவன் தப்பிக்கறதுக்கு ஏதோ ப்ளன் பண்றான். ராத்திரி வரைக்கும் காத்திருக்க முடியாது…”
சரவணன் கைப்பேசியில் பேசிவிட்டு அறைக்குள் வைத்திருந்த துப்பாக்கியைக் கொண்டு வந்து குச்சிமிட்டாயின் நெற்றியில் சுட்டான்.
இரத்தம் சிதற குச்சிமிட்டாய் தரையில் சாய்ந்தான். சரவணன் மறுபடியும் தெய்வீகனுக்கு அழைத்து திட்டமிட்டப்படி அவர்களின் பட்டியலில் இருந்த தனசேகருக்கு அடுத்து குச்சிமிட்டாய் கொல்லப்பட்டதைத் தெரிவித்தான்.
குச்சியின் உடலைச் சுற்றியும் இரத்தம் சூழ்ந்து கொண்டிருந்தது. சரவணன் மெலாந்தி பள்ளத்தாக்கைப் பார்த்தான். அவன் மனத்திற்குள் இப்பொழுது மெல்லிய கலவரம். கண்கள் இலேசாக ஈரமாகின. இது அவன் மேற்கொள்ளும் ஆறாவது வேட்டை. ஆயினும் கொன்றவர்கள் அனைவரும் சமூகத்தின் ஆழ்மனத்தில் போதை என்கிற நச்சைக் கொண்டு அதன்வழி தின்று கொளுத்தவர்கள் என்று அவனுக்குத் தெரியும். இருப்பினும் இவ்வீட்டிற்கு வந்த நாளிலிருந்து அவனுக்குள் ஏதோ ஒரு முணுமுணுத்தல் இசைந்து கொண்டே இருந்ததைக் கவனித்தே வந்தான்.
குச்சிமிட்டாயின் கண்கள் பிதுங்கியப்படியே எதையோ பார்த்துக் கொண்டிருந்தன. சரவணன் சன்னலுக்கு வெளியே இறப்பு, பிறப்பு, அழித்தல், தோன்றல், பசுமை, வெறுப்பு, உயிர்கள், கதறல், கடவுள், சாத்தான் என அத்தனையும் விழுங்கிக் கொண்டு அமைதியுடன் காட்சியளித்துக் கொண்டிருந்த பள்ளத்தாக்கைக் கவனித்தான்.
“குச்சி! உனக்கு போன வருசம் நடந்த ஒரு மிஸ்ஸிங் கேஸ்… லோரிக்காரு, அவுங்க பொண்டாட்டி, ஒரு சின்ன பிள்ள கேஸ் தெரியுமா…?”
“பாங்! இதெப்படி உங்களுக்குத் தெரியும்? அந்தத் தனா ஏதாச்சம் சொன்னானா?”
“இல்ல குச்சி! நான் பத்திரிகைல படிச்சன். அது இந்த இடமா இருக்குமோன்னு சந்தேகம்…”
“பாங்! ஒரு நாளைக்கு நெறைய பேரு மிஸ்ஸிங்தான்… அதுலாம் என்ன மெலாந்தித்தான் காரணமா… அப்படியெல்லாம் இல்ல. நான் இங்க கம்பத்துல எத்தன வருசமா இருக்கன். எக்ஸிடன் கேஸ் இருக்கு. மிஸ்ஸிங்கலாம் யாரும் இல்ல. என் பொண்டாட்டித்தான் மிஸ்ஸிங்…”
சரவணன் இன்று மதியம் குச்சிமிட்டாயிடம் பெற முயன்ற தகவல் தோல்வியில் முடிந்ததை நினைத்துக் கொண்டிருந்தான். இறந்து கிடக்கும் குச்சிமிட்டாயுடன் எத்தனையோ உண்மைகளும் அடங்கிப் போயிருக்கலாம் என்று சரவணனுக்குத் தோன்றியது.
சற்று நேரத்தில் தலைமை காவல்துறை அதிகாரியின் மகிழுந்தும் அதனைத் தொடர்ந்து மருத்துவ வண்டியும் இன்னும் சில அதிகாரிகளின் வாகனங்களும் மெலாந்தி மலையை வந்தடைந்து கொண்டிருந்தன. சரவணன் அத்தனை நாள்கள் தங்கியிருந்த அவ்வீட்டைக் கடைசியாக ஒருமுறை பார்த்தான். ஏதோ ஒரு வரலாற்றின், இயற்கையின், மரணங்களின் வாய்க்குள் இருந்துவிட்டு வெளியேறுவதைப் போல உணர்ந்தான். மனம் கணத்தது.
மழைக்குருவிகள் மேலே கூரையிலிருந்து நெல்லி மரத்திற்குப் பறந்து சென்று கொண்டிருந்தன. சரவணன் வீட்டை விட்டு வெளியேறி கையில் வைத்திருந்த துப்பாக்கியைத் துணைக்காவல் அதிகாரியிடம் ஒப்படைத்துவிட்டுத் தெய்வீகனிடம் சென்றான்.
“துவான்! 3.45 மணிக்குச் சுட்டன். நெத்தியில… மத்த ஒப்சேர்வேஷன் ரிப்போர்ட்ஸ் எல்லாம் கொஞ்சம் டைம் வேண்டும் துவான்…”
சரவணனின் முகத்தில் சற்றுத் தடுமாற்றமும் பயமும் கலந்து வெளிப்பட்டன.
“ஓகே சரா. பெரிய ரிஸ்க் இது. அவன்கிட்ட இருந்து எத்தன பேரோட விவரம் கிடைச்சதோ எல்லாத்தயும் கொடுத்துருங்க…”
“துவான்! நாலு பெரிய ட்ராக் புஸ்சர்ஸ் பத்தி அவன்கிட்ட இருந்து தகவல் கெடைச்சது. எல்லாம் இங்க வந்து தங்கிருக்காங்க… துவான்… ஆனா அந்த மிஸ்ஸிங் கேஸ் பத்தி ஏதும் அவன்கிட்ட இருந்து வரல துவான்… மூர்த்தி பத்தியும் ஏதும் அவன் சொல்லிக்கல…”
தெய்வீகன் அமைதியுடன் மெலாந்தி வீட்டைப் பார்த்துவிட்டுச் சரவணனின் தோளில் தட்டிக் கொடுத்தார்.
“ஆனா… துவான்… இந்த வீட்டுல ஏதோ இருக்கு… இத்தன நாள் தங்கனதுல சொல்றன்… என்னம்மோ உடம்புக்குள்ள ஒரு மாற்றம் துவான். விவரிக்கத் தெரில… மனசுல நெறைய காயம் இருக்கு… எப்படி வந்துச்சி என்னான்னு தெரில துவான்…”
“வீடு முழுக்கப் பாவமும் அழுக்கும் இருக்கு, சரா… அப்படித்தான்…”
இருவரும் ஆர்பாட்டமேதுமின்றி காட்சியளித்த மெலாந்தி வீட்டைப் பார்த்தார்கள்.
- தொடரும்
ஆக்கம்: கே.பாலமுருகன்
(குறிப்பு: இத்தொடர் சிறுவர்களுக்கானது அல்ல; இருப்பினும் வாசிக்க நினைப்பவர்கள் பெற்றோர்களின் வழிகாட்டுதலுடன் வாசிக்கலாம்)
பாகம் 1-ஐ வாசிக்க:
https://balamurugan.org/2020/04/03/தொடர்க்கதை-பாகம்-1-மெலாந்/
பாகம் 2-ஐ வாசிக்க:
https://balamurugan.org/2020/04/04/மெலாந்தி-பள்ளத்தாக்கு-த/
பாகம் 3-ஐ வாசிக்க:
https://balamurugan.org/2020/04/05/மெலாந்தி-பள்ளத்தாக்கு-த-2/
பாகம் 4-ஐ வாசிக்க:
https://balamurugan.org/2020/04/07/மெலாந்தி-பள்ளத்தாக்கு-த-3/
பாகம் 5-ஐ வாசிக்க:
https://balamurugan.org/2020/04/09/மெலாந்தி-பள்ளத்தாக்கு-த-4/
பாகம் 6-ஐ வாசிக்க:
https://balamurugan.org/2020/04/10/மெலாந்தி-பள்ளத்தாக்கு-த-6/
பாகம் 7-ஐ வாசிக்க:
https://balamurugan.org/2020/04/11/மெலாந்தி-பள்ளத்தாக்கு-த-7/
பாகம் 8-ஐ வாசிக்க:
https://balamurugan.org/2020/04/12/மெலாந்தி-பள்ளத்தாக்கு-8/
பாகம் 9-ஐ வாசிக்க:
https://balamurugan.org/2020/04/13/மெலாந்தி-பள்ளத்தாக்கு-த-9/
பாகம் 10-ஐ வாசிக்க:
https://balamurugan.org/2020/04/15/மெலாந்தி-பள்ளத்தாக்கு-த-10/
பாகம் 11-ஐ வாசிக்க:
https://balamurugan.org/2020/04/16/மெலாந்தி-பள்ளத்தாக்கு-11/
பாகம் 12-ஐ வாசிக்க:
https://balamurugan.org/2020/04/17/மெலாந்தி-பள்ளத்தாக்கு-த-12/
ச.அர்வின்
நான் எதிர்ப்பார்க்காத திருப்பங்கள்…