உலக சினிமா தொடர் – 1 : Camp X –Ray திரைவிமர்சனம் ஈராக் சினிமா: ஒரு சிறையின் மிகக்கொடூரமான தனிமை
ஒரு தூக்குக் கைதியின்
சிறையில்
அவன் மரணத்திற்குப் பிறகு
என்ன இருக்கும்?
மௌனம்.
சில வருடங்களுக்கு முன்பு கோலாலம்பூரில் இருக்கும் ‘புடு சிறை’ பொதுமக்களின் பார்வைக்கு வைத்திருந்தபோது அங்குப் போக நேரிட்டது. பல ஆண்டுகளாகச் சிறை கைதிகள் வாழ்ந்து தண்டனைகளை அனுபவித்த ஒவ்வொரு சிறையையும் கடக்கும்போது விவரிக்க இயலாத ஒரு தனிமையின் கதறல் மனத்தில் அப்பிக்கொண்டதை உணர முடிந்தது. மரணத் தண்டனை என்னைப் பொறுத்தவரை சட்டத்தின் அனுமதியுடன் செய்யப்படும் கொலையே. சட்டமும் தண்டனைகளும் ஒரு மனிதன்/ குற்றவாளி மீண்டு வருவதற்கு ஒரு உளவியல்பூர்வமான வாய்ப்பை வழங்க வேண்டுமே தவிர ஒருவனைக் கொலை செய்வது மனித உரிமை மீறலே.
இந்தச் சமூகம் குற்றவாளி எனத் தண்டிக்கும் யாராவது ஒருவரை அவருடைய தண்டனைக் காலத்திலோ அல்லது தண்டனைக்குப் பிறகோ நீங்கள் சந்தித்து உரையாடியிருக்கிறீர்களா? பத்திரிகையில் அவர்களின் செய்தியைப் படிப்பதோடு நமக்கும் அவர்களுக்கு என்ன உறவு இருந்திருக்கிறது? அதிகபட்சமாக நாம் அவர்களின் மீது ஒரு வெறுப்புணர்வைக் கொண்டிருந்திருக்கலாம். ஆனால், எத்தனையோ இரவுகளில் அவர்களின் சிறைக்குள் இருந்துகொண்டு அவர்களால் பார்க்கவியலாத இந்த உலகத்தைப் பற்றி அவர்கள் எத்தனை கற்பனை செய்து அழுதிருப்பார்கள்? அப்படிப்பட்ட மிகக் கொடூரமான சிறைச்சாலை என வரலாற்றில் சொல்லப்படும் குவாண்டனாமோ–வில் தீவிரவாதி என அடைக்கப்பட்டிருக்கும் ஒருவனின் கதைத்தான் ‘Camp X – Ray’.
Peter sattaler இயக்கி கடந்த வருடம் வெளிவந்திருக்கும் மிக முக்கியமான படம் ஆகும். அநேகமாக இந்த ஆண்டில் பல விருதுகளைக் குவிக்கலாம் என எதிர்பார்க்கப்படும் படமாகும். தன்னுடைய சிறுநகரத்தைவிட்டு இராணுவத்தில் சேரும் ப்லோண்டி எனும் ஓர் இளம் பெண்ணுக்கும் Guantanamo சிறையில் 8 வருடமாக அடைப்பட்டிருக்கும் அல்கைடா தீவிரவாதி என நம்பப்படும் அலி என்பவருக்கும் இடையில் உருவாகும் ஒரு மெல்லிய நட்புதான் படத்தின் கதை. குவாண்டனமோ 1990களில் நிறுவப்பட்ட உலகின் மிகவும் கொடூரமான மனித வதைகள் நடந்த சிறைச்சாலையாகும்.
9 செப்டம்பர் சம்பவத்திற்குப் பிறகு பல இஸ்லாம் கைதிகள் அங்கு அடைக்கப்படுகிறார்கள். அதில் ஒருவர்தான் ஜெர்மனிய விரிவுரையாளர் அலி. ஆனால், திவீரவாதி என்ற அடையாளத்துடனே அங்கு 8 வருடங்களைத் தனிமையில் கழிக்கிறார். அன்பான உரையாடல்கள் இல்லாத, கவனிப்புகள் இல்லாத பெண் வாடையே இல்லாத ஒரு பயங்கர நரகமாக மாறியிருக்கிறது அவரின் அறை. ஆனால், படத்தின் முதன்மை கதைப்பாத்திரமான ப்லோண்டி எனும் இளம் பெண் அவர்களின் வருகை, அலி என்பவனின் வாழ்க்கைக்குள் சில அசைவுகளை உருவாக்குகிறது. அது நெடுங்கால இறுக்கத்தின் உடைவாக மாறி அலி மீண்டும் ஒரு மனிதனாக மாறும் தருணம். படத்தில் மனித வதைகள் காட்டப்படவில்லை. அப்படியென்றால் குவாண்டனமோ மிகவும் அமைதியில்தான் இருந்தது போன்ற ஒரு தவறான எண்ணம் எழுகிறது.
கதையில் வரும் அலி, தான் குற்றவாளி அல்ல என்றே அந்த எட்டு வருடங்களும் கத்தி கதறி சொல்லி உச்சமான மன எழுச்சிக்குப் பலமுறை ஆளாகி தன்னை வருத்திக்கொள்ளும் ஒரு பாத்திரமாக வருகின்றான். கடைசிவரை அவன் உண்மையில் அல்கைடா தீவிரவாதியா அல்லது இல்லையா என்பது படத்தில் முதன்மையாக விவாதிக்கப்ப்டவில்லை. சில நேரங்களில் தன் மீதான குற்றத்தைச் சாடும் வகையில் அமெரிக்கா இராணுவத்தைப் பழிக்கின்றான். சில சமயங்களில் தான் குற்றவாளி அல்ல என முனகுகின்றான்.
குற்றம் என்பதைவிட குற்றத்திற்கான வேர்கள் என்னவாக இருக்கும் என்பதில் இச்சமூகமும் சட்டமும் கவனிப்பதே இல்லை. இதுதான் குற்றத்திற்கு உடந்தையான ஒரு மனநிலை என நினைக்க வைக்கிறது. இச்சமூகத்திற்கு சட்டத்திற்கும் குற்றவாளிகள் தேவை. குற்றங்களை உருவாக்கி வைத்திருக்கும் சமூகம் குற்றவாளிகளைத் தேடிக் காத்திருக்கிறது. பழியைப் போடுவதற்கும் மக்களை மிரட்டுவதற்கும் குற்றவாளிகள் எப்பொழுதும் தேவைப்படுகிறார்கள். ஆகவே, ஒரு குற்றவாளி எவ்வளவுத்தான் தான் குற்றம் செய்யவில்லை எனக் கதறினாலும் அவனுடைய குரலைச் செவிமடுக்க சட்டத்திற்கோ சமூகத்திற்கோ மனமில்லை. அவை காதுகளைப் பொத்திக் கொண்டு தொடர்ந்து கருப்பு வெள்ளை என சமூகத்தைப் பிரித்துக் காட்டிவிட குற்றவாளிகளை வலை வீசித் தேடிக் கொண்டிருக்கின்றன.
ப்லோண்டி அங்கு வந்த நாட்களில் முதலில் அவளை அவமானப்படுத்துகிறான். தன் மலத்தை அள்ளி அவள் மீது வீசுகிறான். அவனுடைய அந்தச் செயல் முதலில் அவளுக்குக் கோபத்தை உண்டாக்குகிறது. ஆனால், பிறகு மெல்ல அவனை அவனது 8 வருடத் தனிமைக்குள் வைத்துப் புரிந்து கொள்கிறாள். அலி அவளிடம் சதா தனக்கு ஹாரி போட்டர் நாவல் வேண்டும் எனக் கேட்கிறான். குவாண்டனாமோவில் அந்த நாவல் முன்பு இருந்ததாக வாதிடுகிறான். ஆனால், அவளுக்கு அந்த நாவல் தட்டுப்படவில்லை. அதுவே அலிக்கு மிகவும் ஏமாற்றமாக இருக்கிறது.
மிகவும் யதார்த்தமான சினிமாக இருக்கின்றது. அலியும் ப்லோண்டியும் பட்த்தில் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். குறிப்பாக அலியின் கதைப்பாத்திரம் அழுத்தமான நடிப்பு. ஆர்பாட்டம் இல்லாத கதையோடு பொருந்தி போகிற நடிப்பை வெளிக்கொணர்வதில் இயக்குநர் முக்கியத்துவம் பெறுகிறார்.
இறுதியில் அதுவரை ஓர் இராணுவ அதிகாரியாகவே இருக்க வேண்டும் என்கிற ப்லோண்டியின் உறுதி அலியின் முன் கொஞ்சம் கொஞ்சமாக தளர்ந்து போகிறது. அவள் ஓர் அன்பானவளாக மாறுகிறாள். அலியை நேசிக்கிறாள். அவனது தனிமைக்குள்ளிருந்து அவனை வெளியே கொண்டு வர அவனுடன் விதிமுறைகளையும் மீறி உரையாடுகிறாள். பிறகு வழக்கம்போல ஆகஸ்ட் மாத்ததில் சில இராணுவத்தினர் இடம் மாற்றப்படுவார்கள். புதியவர்கள் அங்கு வருவார்கள். அவள் மாற்றலாகி வேறு இடம் போக வேண்டிய நிலை. இறுதி சந்திப்பில் அலி அவளிடம் சொல்கிறான் உனக்குப் பிறகு இங்கு வரப்போகும் அந்தப் புதியவர் இது போல என்னிடம் உரையாடுவார்களா எனத் தெரியவில்லை, இந்தத் தனிமை இனி பல வருடங்களுக்கு என்னை விட்டு நீங்காது என வருத்தத்துடன் கூறுகிறான்.
மறுநாள் அவள் பேருந்து ஏறி குவாண்டானமோவை விட்டுச் சென்று கொண்டிருக்கிறாள். அவளுக்குப் பதிலாகப் புதியதாக வந்த இராணுவ இளைஞன் புத்தகங்களை ஒரு தள்ளு வண்டியை வைத்து எடுத்து வருகிறான். அந்தப் புத்தக அடுக்கில் அலி தான் தேடிக்கொண்டிருந்த ஹாரி போட்டர் நாவலைப் பார்க்கிறான். அதனை வாங்கித் திறக்கின்றான். ப்லோண்டி அங்கிருந்து செல்வதற்கு முன்பாக அந்த நாவலைத் தேடி எப்படியோ கண்டடைந்து அதில் ‘அன்பான அலிக்கு – ப்லோண்டி’ என எழுதியிருக்கிறாள். எந்தப் பதற்றமும் இல்லாமல் தன் அறையில் அமர்ந்து அலி அந்த நாவலை வாசிக்கத் துவங்குகிறான். படம் நிறைவடைகிறது. என் கண்களில் வெகுநாட்களுக்குப் பின் கண்ணீர். அழ வைக்க வேண்டும் என்கிற எந்த முன்னேற்பாடுகளும் பரப்ப்பரப்பும் இன்றி படம் முடிகிற இடத்தில் நாம் அழுவோம். பட்த்தின் ஆழம் நம் மனத்தைத் தொட்டிருக்கும்.
மனித கூட்டம் எதிர்க்கொள்ளும் சிறை தனிமை என்பது எத்தனை ஈவிரக்கமற்றது என்கிற வலி மனத்தை அழுத்தும். எத்தனையோ நல்லவர்கள் இன்னமும் நம் கண்ணுக்குத் தெரியாத சிறைக்குள் இருந்து தனக்கு மட்டுமே தெரியும் உண்மைக்குள் தகித்துக் கொண்டிருக்கிறார்கள். நீதி அவர்களுக்கு எதிராக இழைக்கப்பட்டிருக்கும். தீமையின் ருசி அறிந்த நிறைய பேர் வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும்போது, எந்தத் தீமையும் செய்யாதவர்கள் குவாண்டணமோ போன்ற மிகக் கொடூரமான சிறைக்குள் எரியும் நிஜத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கலாம். நிச்சயம் பார்க்க வேண்டும் ஒரு படம். Camp- x-ray.
கைவிடப்பட்ட
ஒரு கைதியின்
அறைக்குள்ளிருந்து
ஒரு தீர்க்கமான
மௌனம்
எப்பொழுதும்
கேட்டுக் கொண்டே
இருக்கின்றது.
தன் தண்டனை காலங்களுக்குப் பிறகு ஒரு பூர்ணமான சீர்த்திருத்தம் பெற்ற ஒருவனைத்தான் சிறைச்சாலைகள் வெளியேற்றுகின்றனவா? அதில் எந்த அளவிற்கு நம்பிக்கை கொண்டுள்ளீகள்? மனித உரிமை மீறப்படும்போது குரல் எழுப்பும் சமூகமே ஜனநாயகத்தன்மையுடைய சமூகமாகும். மரணத் தண்டனையை இரத்து செய்யத் தூண்டும் ஒரு விழிப்புணர்வுமிக்க சமூகம் உருவாக வேண்டும். அதற்கான ஒரு மனப்பூர்வமான தூண்டுதலை இந்தச் சினிமா உண்டாக்குகிறது.
கே.பாலமுருகன்
Thavakumaran
நல்ல விமர்சனம்..கேள்விப்படாத படம்..கண்டிப்பாக பார்க்க முயற்சி செய்கிறேன்..
சினிமா சம்பந்தமான தங்களது பார்வையும் கருத்துக்களும் சிறப்பாக உள்ளது.வாழ்த்துக்கள்.தொடருங்கள்.நன்றி.