மெலாந்தி பள்ளத்தாக்கு: தொடர்க்கதை: பாகம் 7
சரவணன் மெலாந்தி வீட்டிற்கு வருவதற்கு ஒராண்டிற்கு முன்
பாகம் 7
“யா, ஒரு உதவி செய்ய முடியுமா? லோரி கெட்டுப் போச்சு!”
வந்து நின்றவர் எப்படியும் ஐம்பது வயதைக் கடந்திருப்பார். மெலாந்தி அத்தாஸ் கம்பத்திற்கு வெளியில் நின்றிருந்த குச்சிமிட்டாய்தான் முதலில் அந்தக் கனவுந்து ஓட்டுநர் உதவி கேட்டுக் கொண்டிருப்பதைக் கவனித்தான்.
இருள் முணுமுணுத்துக் கொண்டிருந்த நேரம். பெரிய சாலையில் ஒரு சில கனவுந்துகள் மட்டும் கடந்து போய்க்கொண்டிருந்தன.
“யோ! இங்க வா. என்ன ஆச்சு?”
கம்பத்து மரத்தண்டொன்றில் அமர்ந்தவாறு காட்டையும் பெரிய சாலையும் வேடிக்கைப் பார்த்தப்படி யாராவது சிக்கினால் அவர்களுடன் கதை அளப்பது குச்சிமிட்டாயின் வழக்கமான பொழுதுபோக்கு.
கம்பத்து முற்சந்தியில் பல ஆண்டுகள் இருந்து 2013ஆம் ஆண்டு வீசிய ஒரு கடுமையான காற்றில் மெலாந்தி பள்ளத்தாக்கில் இருந்த பல மரங்கள் சரிந்தது போக இந்தப் புளிய மரமும் விழுந்து மக்கி மிச்சமாக அதன் தடித்த தண்டு மட்டும் அப்படியே கிடக்கிறது.
கம்பத்து சிறுவர்கள் ஏறி விளையாடுவது; இளைஞர்கள் சிலர் அரட்டையடிப்பது; காதலர்கள் ஒளிந்து காதல் செய்வது; எல்லாம் போக அவ்வப்போது குச்சிமிட்டாய் இங்கே அமர்ந்து கொண்டு போவோர் வருவோரை நிறுத்தி விசாரிப்பது; பேசுவது; அதட்டுவது என்று பொழுதைக் கழிப்பான்.
“தம்பி. லோரி கெட்டுப் போச்சு மேல ரோட்டுல. ஓரமா நிப்பாட்டிட்டன். அதான் என்ன செய்றதுனு தெரில…”
அருகில் வந்ததும்தான் அவருடைய முகத்தைக் குச்சிமிட்டாய் உற்றுக் கவனித்தான்.
“யோ! ஏதும் சாமூன் இல்லைலே? நெறைய கேஸ் இங்க நடந்துருக்கு. என்கிட்ட ஒன்னும் இல்ல சொல்லிட்டன். நான் ஒரு வேஸ்ட்டு…” எனச் சிரித்துக் கொண்டே மரத்தண்டிலிருந்து கீழே குதித்தான்.
கம்பம் இருண்டிருந்தது. குச்சிமிட்டாய் கைவிளக்கைத் தட்டிவிட்டான். வலது கையில் வைத்திருந்த வெண்சுருட்டை இழுத்துப் புகையை விட்டவாறே முன்னே நடந்தான்.
“தம்பி. அப்படிலாம் இல்ல. நீங்க என்ன நம்பலாம்…”
இருவரும் பெரிய சாலைக்கு வந்து நின்றார்கள். தெருவிளக்கு இடைவெளி விட்டு பரப்பரப்பில்லாமல் எரிந்து கொண்டிருந்தது.
“ஓரமா நடந்து வா. இங்க வர்றவனுங்க அவசரமா மலைக்கு ஏறுவானுங்க. கண்ணு முன்னு தெரியாம லோரிய ஓட்டுவானுங்க. அடிச்சி தூக்கிப் போட்டுட்டுப் போய்கிட்டே இருப்பானுங்க…”
குச்சிமிட்டாய் ஒரு ஞானியைப் போல எல்லாம் அறிந்தவன் என்கிற பாவனையில் பேசினான். பேசும்போது வெண்சுருட்டிருக்கும் கையை உயர்த்தி ஆட்டினான். அது எச்சரிக்கை செய்வதற்குரிய அடையாளம்.
“எத்தன மணிக்கு நிண்டுச்சி?”
“இப்பத்தான் ஒரு 20 நிமிசம் இருக்கும். இது வழக்கமா வர்ற பாதை இல்லயா… அதான் இப்படி ஆச்சு…”
“இப்ப எங்க போய்க்கிட்டு இருக்கீங்க?”
“மேல மெலாந்தில ஏறி தாப்பா காயூல இறங்கனா, ஈப்போவுக்குக் கிட்டன்னு சொன்னாங்க. அதான் இன்னிக்கு இந்தப் பாதையெ எடுத்தன். கடைசில இப்படி ஆச்சுயா…”
அவருடைய குரல் கரகரத்துக் கொண்டிருந்தது. தெம்பில்லாமல் வார்த்தைகளை உச்சரித்துக் கொண்டிருந்தார். கண்கள் இரண்டும் பலநாள் உறக்கமில்லாத தவிப்புடன் காணப்பட்டன.
இருவரும் நடந்து மெலாந்தி பெரிய சாலையினோரம் நின்றிருந்த கனவுந்தை அடைந்தனர். நடுத்தர அளவைக் கொண்டிருந்த கனவுந்து என்பதால் சிக்கல் இருக்காது என்பதைக் குச்சிமிட்டாய் ஊகித்துக் கொண்டான்.
“இஞ்சின் சூடா இருக்கு. அனல் தாங்கல. தண்ணீலாம் செக் செஞ்சாச்சுத்தான?”
கைவிளக்கைக் கொண்டு கனவுந்தைச் சுற்றி வெளிச்சத்தைப் பாய்ச்சினான். கிழட்டொளி தடுமாறியவாறே கனவுந்தின் உடலை மேய்ந்தது.
“இஞ்சின்லத்தான் பெரச்சனனு நெனைக்கறன். எனக்குத் தெரிஞ்ச போர்மேன் ஒருத்தன் இருக்கான் மேல மலைல. கூப்ட்டுப் பாக்கறன்…”
குச்சிமிட்டாய் கனவுந்தின் உள்ளே அமர்ந்திருந்த ஆள்களைக் கவனித்தான். ஒரு வயதான அம்மா, அவருடன் ஒரு சிறுமியும் உள்ளே அலுப்புடன் அமர்ந்திருந்தார்கள்.
“என்னய்யா? வீட்டுல உள்ளவங்களையும் கூட்டியாந்துட்டியா?”
“அவ என் பேத்தியா. எங்க கூடத்தான் இருக்கா…”
குச்சிமிட்டாய் கைப்பேசியை எடுத்து மெலாந்தி மலையிலுள்ள மாணிக்கத்திற்கு அழைத்தான். இரண்டுமுறை முயற்சிக்குப் பின் மாணிக்கம் எடுத்து இப்பொழுது மலையில் இல்லை என்றும் நாளை காலையில் வருவதாகக் கூறிவிட்டு வைத்துவிட்டான்.
“யோ! நாளைக்குக் காலைலத்தான் முடியுமாம். இப்போதைக்கு எவனும் வர மாட்டான் இந்தப் பக்கம்… எப்படி?”
குச்சிமிட்டாய் கைவிளக்கை எடுத்துத் தாடையைச் சொரிந்து கொண்டிருந்தான். அவர் கனவுந்தில் இருக்கும் மனைவியுடன் ஏதோ பேசிவிட்டு மீண்டும் குச்சிமிட்டாயிடம் வந்தார்.
“தம்பி. நாங்க இங்கன லோரிலே படுத்துக்குறோம். நாளைக்குக் காலைல அவரு வந்துருவாருல?”
“யோ! லோரிலயா? இந்த இடம் மோசம்யா. சாமூன் பண்ணிருவானுங்க. நல்லதுக்கு இல்ல. வீட்டுல உள்ளவங்கள வேற கூட்டியாந்துருக்க…”
“அதான்யா. என்ன செய்றதுன்னு தெரில. சின்ன பிள்ள வேற கூட இருக்கு…”
குச்சிமிட்டாய் சிறிது நேரம் யோசித்தான். மேலே மெலாந்தி மலையிலுள்ள பிரிட்டிஷ் வீடு மட்டுமே இப்போதைக்கு வழி என்று உணர்ந்தான்.
“மேல மலைல நமக்குச் சொந்தமா ஒரு வீடு இருக்கு. நல்லா வசதியா இருக்கும். ஒரு ரூம்பு இருக்கு. நீங்க மூனு பேரும் தங்கிக்கங்க… முடியுமா?”
அவர் மீண்டும் கனவுந்தின் உள்ளே சென்று பேசிவிட்டு வந்தார். அவர் முகத்தில் இப்பொழுது ஒரு சிறிய தெளிவு தென்பட்டது.
“தம்பி. உங்க ஒதவிக்கு ரொம்ப நன்றி. எங்களுக்கு ஓகேயா…”
“சரி இங்கயே இருங்க. நான் கம்பத்துல கூட்டாளி காடி எடுத்துக்கிட்டு வந்துர்றன். சாப்ட்டிங்கத்தான?”
“ஐயோ அதெல்லாம் ஆச்சு தம்பி. இந்த உதவியே பெருசு…”
குச்சிமிட்டாய் மெலாந்தி அத்தாஸ் கம்பத்தில் நுழைந்து பெரியசாமி வீட்டிற்கு விரைந்தான். அவரிடம் மட்டும்தான் கேட்டால் உடனே மகிழுந்து கிடைக்கும். மற்ற பேர் ஆயிரம் கேள்விகள் கேட்டும் கடைசியில் முடியாது என்றே சமாளிப்பார்கள் என்று குச்சிமிட்டாய்க்குத் தெரியும்.
இருள் மேலும் இரசகசியமாக முணுமுணுத்துக் கொண்டிருந்தது.
–தொடரும்
ஆக்கம்: கே.பாலமுருகன்
(குறிப்பு: இத்தொடர் சிறுவர்களுக்கானது அல்ல; இருப்பினும் வாசிக்க நினைப்பவர்கள் பெற்றோர்களின் வழிகாட்டுதலுடன் வாசிக்கலாம்)
பாகம் 1-ஐ வாசிக்க:
https://balamurugan.org/2020/04/03/தொடர்க்கதை-பாகம்-1-மெலாந்/
பாகம் 2-ஐ வாசிக்க:
https://balamurugan.org/2020/04/04/மெலாந்தி-பள்ளத்தாக்கு-த/
பாகம் 3-ஐ வாசிக்க:
https://balamurugan.org/2020/04/05/மெலாந்தி-பள்ளத்தாக்கு-த-2/
பாகம் 4-ஐ வாசிக்க:
https://balamurugan.org/2020/04/07/மெலாந்தி-பள்ளத்தாக்கு-த-3/
பாகம் 5-ஐ வாசிக்க:
https://balamurugan.org/2020/04/09/மெலாந்தி-பள்ளத்தாக்கு-த-4/
பாகம் 6-ஐ வாசிக்க:
https://balamurugan.org/2020/04/10/மெலாந்தி-பள்ளத்தாக்கு-த-6/
சிந்துமதி
அடுத்த பாகத்திற்கு ஆவலாய் காத்திருக்கிறேன்..