குறுங்கதை 2 : கொரோனாவும் தாதியர் அம்பிகாவும்
நான் தாதியர் அம்பிகா. இப்பொழுது அசந்து உறங்கிக் கொண்டிருக்கிறேன். ஒரு விநோதமான கனவு என்னைச் சூழ்ந்து கொண்டிருக்கிறது. என் ஐந்து வயது மகன் ‘ஐயாவு’ எனது அறையில் என்னைத் தேடிக் கொண்டிருக்கிறான்.
“அம்முளு! அம்முளு!” அப்படித்தான் அவன் என்னைச் செல்லமாக அழைப்பான். தேடி அசந்து வரவேற்பறை நாற்காலியிலேயே உறங்கிவிட்டான்.
“ஐயாவு! அம்மா செல்லம்! அம்மா இன்னும் பத்து நாளுல வந்துருவன்யா… அப்பா சொல்றதைக் கேட்டுக்கிட்டு பத்திரமா இருக்கணும். சரியா?”
கடந்த பத்து நாட்களுக்கு முன் எனது சுங்கை சிப்புட் ஊரிலிருந்து தாதியர் பற்றாக்குறையைத் தீர்ப்பதற்காக கோலாலம்பூருக்கு அழைத்து வரப்பட்டுள்ளேன். ஒவ்வொருநாளும் குறைந்தது பத்து மணி நேரம் நோயாளிகளைக் கவனித்துக் கொண்டிருக்கிறோம். கிடைக்கும் சிறிய இடைவெளியில் கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் அசதி, எப்பொழுதுதாவது பழைய நினைவுகள் என்று நாள்களை நகர்த்திக் கொண்டிருக்கிறேன்.
அவசர சிகிச்சை அறையில் இப்பொழுது கண்கானிப்பில் என்னிடம் விடப்பட்டுள்ள ஓர் சீனப்பெண்மணி எப்பொழுதும் அவருடைய பிள்ளைகளின் நினைவுகளையே பிதற்றிக் கொண்டிருக்கிறார். ஒவ்வொருமுறையும் அவருக்கு ஆறுதல் சொல்வதாக என் மனத்தைப் பிடித்து அழுத்திக் கொண்டிருக்கும் என் பையனின் நினைவுகளுக்கும் சமாதானம் வழங்கிக் கொள்கிறேன்.
மகன் சட்டென விழித்து எழுகிறான். இதுவொரு கனவுத்தானே? அல்லது மயக்கமா? அசந்து உறங்கிக் கொண்டிருக்கிறேன். நடுநிசியைத் தாண்டிய பொழுது. கொரோனாவால் சிக்குண்டு உயிர் வாழவேண்டி போராடிக் கொண்டிருக்கும் அச்சீனப்பெண்மனி ஏதோ முணுமுணுக்கிறார். அவரும் ஒரு கனவுக்குள் தன் பிள்ளைகளைப் பார்த்துக் கொண்டிருக்கக்கூடும். நேற்று என் கைகளைப் பிடித்துக் கொண்டு பேச முடியாமல் தவித்தபோது அவருடைய கண்களில் நிறைந்திருந்த அன்பு தாய்மைக்குரியவை.
“ஐயாவு! செல்லக்குட்டி. அம்மாவ தேடறீங்களா? அம்மா இங்க நெறைய பேருக்கு உதவி செய்றன்யா. அழக்கூடாது சரியா? வீட்டுக்கு வெளில வந்துறாதீங்கயா… வெளில ஒரு பெரிய பூதம் காத்துக்கிட்டு இருக்கு. நம்மள எல்லாம் சாப்டறதுக்கு ரெடியா இருக்கு. அது ரொம்ப கெட்ட பூதம்யா. அல்ட்ராமேன் கார்ட்டூன்ல வருமே அந்தப் பெரிய பூதம் மாதிரி… சரியா செல்லமே? அம்மா சொல்றத கேட்டா ஐயாவுக்குக் கோலாலம்பூர்லேந்து உனக்குப் பிடிச்ச நிறைய விளையாட்டு ஜாமான்லாம் அம்மா வாங்கிட்டு வருவேனாம்… சரியா?”
உறக்கம் ஒரு பெரும் இருள் வெளியில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. என்னையும் என் மகனையும் சுற்றி இருள். நான் கைகளை அவனை நோக்கி நீட்டுகிறேன். அது ஒரு பரப்பரப்பான நகரத்தின் நடுவே நீண்டு செல்கிறது. மகன் அந்நகரைக் காண்கிறான். அவனுடைய ஒரு பொம்மை தவறி அந்நகரத்தின் நடுவே விழுந்துவிடுகிறது.
“ஐயா! அம்மா செல்லம். அங்கயே இருங்கய்யா. ஓடி வந்துறாதீங்க. இங்க எவ்ள சொன்னாலும் இந்த மனுசனுங்க கேட்க மாட்டாங்கய்யா. வீட்டுல இருன்னு யார் சொன்னாலும் கேட்க மாட்டாங்கய்யா. நீ இங்க வந்துறாத. அம்மா பொம்மையை எடுத்துத் தரேன்யா… இங்க இன்னும் யாருக்குமே பரவுர சாத்தான் பற்றி கவலையே இல்லையா. அது அவங்களை நெருங்கி வந்து சாவு பயத்தைக் காட்டற வரைக்கும் யாருக்குமே மனசுல கொஞ்சம்கூட பயம் இல்லையா…”
“அம்முளு! அம்முளு!” மகன் அவனுடைய சின்னஞ்சிறு கைகளை நீட்டி என்னைத் தொட முயல்கிறான்.
“ஐயா! அம்மாவ தொடாதீங்கய்யா. அம்மா இங்க நோயாளிகள சுற்றித்தான் வேலை செய்றன். என் உடம்புக்கு வெளில கொரோனா கிருமி கூட்டம் எப்ப என்னைத் தாக்கும்னு தெரியாம காத்திருக்குய்யா. அம்மாவ தொட வேணாம்யா. இங்க எல்லோரும் உயிர் வாழணும். அவுங்க எல்லாம் காப்பாற்றப்பட்டு அவுங்க வீட்டுக்குப் போற வரைக்கும் அம்மா இங்கத்தான் இருக்கணும்யா. அம்மா இங்க இருக்கன், அம்மாவுக்காக மத்தவங்க எல்லாத்தையும் வீட்டுல இருக்க சொல்லுயா… சொல்லுவியா?”
“Ambiga! Tolong buang urine patient!”
மருத்துவர் வந்து கூறிவிட்டச் சென்றதும் சட்டென விழிப்பு. சுற்றிலும் மகா வெளிச்சத்துடன் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. இன்னமும் கண்களில் ஐயாவு ஒரு பொம்மையுடன் நின்று கொண்டிருக்கிறான்.
-ஆக்கம்: கே.பாலமுருகன்
(கண்களுக்குத் தெரியாது எங்கேயோ நமக்காக உழைத்துக் கொண்டிருக்கும் அத்தனை தாதியர்களுக்கும் மருத்துவர்களுக்கும் இக்கதையைச் சமர்ப்பிக்கிறேன். அவர்கள் உணர்வுகளுக்கு ஒரு சித்திரம்)
Kevin
தாதியர்களின் தற்போதிய மனநிலைமையும்
விதிமுறைகளை பின்பற்றாத மனிதர்களின் ஏனோ தானோ போகும் நன்கு தெரிகின்றது