மழைச்சாரல் இலக்கியக் குழுவின் நல்ல முயற்சி

 

கவிஞரும் எழுத்தாளருமாகிய தோழி மீராவாணி அவர்களின் முயற்சியில் உருவானதுதான் ‘மழைச்சாரல்’ இலக்கிய வட்டம். இதுவரை வாட்சாப் மூலம் செயல்பட்டுக் கொண்டிருந்த அக்குழவின் முதல் இலக்கிய முயற்சித்தான் 27.12.2015 அன்று கோலாம்பூரில் நடந்த எழுத்தாளர்களுடனான இலக்கியக் கலந்துரையாடல் ஆகும்.

IMG-20151228-WA0012

 

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் திரு.மன்னர் மன்னன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் நாட்டின் மூத்த எழுத்தாளர்கள், இளம் எழுத்தாளர்கள், வாசகர்கள் எனப் பலர் கலந்து கொண்டதாக மீராவாணி தெரிவித்தார். சிங்கப்பூரின் இலக்கிய சூழலில் சித்ரா ரமேஸ் அவர்களின் தலைமையில்  இயங்கி வரும் சிங்கப்பூர் வாசகர் வட்டம், பாலுமணிமாறன் அவர்களின் மூலம் செயல்பட்டு வரும் தங்கமீன் வாசகர் வட்டம் போன்றவை அங்குள்ள இலக்கிய முயற்சிகளை நகர்த்தக்கூடியதாகும். அந்த வகையில் மழைச்சாரல் மலேசியாவில் உருவாகியிருப்பது மகிழ்ச்சியாகும்.

IMG-20151228-WA0011

தொடர்ந்து மலேசிய இலக்கியத்தையும் அதன் செயல்பாடுகளையும் கவனித்து வரும் பலர் இக்குழுவில் இருப்பதால் இதற்கு முன்பு இயக்கங்கள் செய்தவற்றையே முன்னெடுக்காமல் படைப்புத் தரத்தை உயர்த்தும் விசயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து உலக இலக்கிய வளர்ச்சியை அறிந்தவர்களாக மலேசிய இளம் படைப்பாளர்கள் திகழ வேண்டும் என்பதனைக் கருத்தில் கொண்டு தொடர்ந்து செயல்பட வேண்டும் என்பதே என் எதிர்ப்பார்ப்பு.

IMG-20151228-WA0008

மேலும் இந்த நிகழ்ச்சியில் நயனம் இதழாசிரியர் ஆதி.ராஜகுமாரன் அவர்களைப் பற்றி பிற எழுத்தாளர்கள் எழுதிய தொகுப்பும் வெளியீடு கண்டது. அந்த நூலில் அவரைப் பற்றி நான் எழுதிய கட்டுரை பின்வருமாறு:

 

நயனத்தின் ஊடாக நான் அறிந்த ஆதி.ராஜகுமாரன்

பொதுபுத்திக்குத் தெரியாத இதழியல் ஆளுமை

 

எனக்கு 14வயது இருக்கும். அப்பொழுது நான் இரண்டாம் படிவத்தில் படித்துக் கொண்டிருந்தேன். சுங்கை பட்டாணி பழைய முத்தையா கடையின் தள்ளு வண்டிக்கு மேலாகத் தொங்கிக் கொண்டிருந்தது நயனம். அப்பாவுடன் மோட்டாரில் போயிருந்தபோது அதில் இருந்த பாரதியார் படம் போட்ட நயனம் சட்டென என் கவனத்தை ஈர்த்தது. உடனே வாங்கிக் கொண்டு வீட்டிற்குச் சென்ற நாளிலிருந்து நயனம் இதழின் அதிகாரப்பூர்வமான வாசகனானேன்.

அப்பொழுதிலிருந்து தொடர்ந்து ஐந்தாம் படிவம் வரை நான் ஷோபி எழுதிக் கொண்டிருந்த ‘உண்மை கதை’ தொடரை விடாமல் வாசிக்கத் தொடங்கினேன். அத்தொடரை வாசிக்கவே சைக்கிளில் சுங்கை பட்டாணிக்குச் சென்று நயனம் வாங்கத் துவங்கினேன். அப்பொழுதுதான் ஆதி.ராஜகுமாரனின் படைப்புகளும் எனக்கு அறிமுகமாயின. அதன் பிறகு எனது 24ஆவது வயதுவரை நான் நயனத்தை வாசிக்கவில்லை. மீண்டும் வாசிக்கத் துவங்கியபோது நயனம் பத்திரிகையைப் போல வரத் துவங்கியிருந்தன. என்னால் நயனம் வேறு ராஜகுமாரன் ஐயா வேறு என இன்றளவும் பிரித்து அறிய முடியவில்லை. ஒரு வகையில் எனது பதின்ம வயதில் உருவான வாசிப்பு சார்ந்த தகிப்பிற்கு நயனமும் ஆதி ராஜகுமாரன் அவர்களும் காரணமாக இருந்திருக்கிறார்கள் என்றே சொல்லலாம்.

சில காத்திற்குப் பிறகு நான் நயனத்தில் சினிமா விமர்சனம் எழுதத் துவங்கிய காலத்தில் நானும் நாஜகுமாரன் ஐயாவும் மின்னஞ்சலின் வழி உரையாடிக் கொள்வோம். எங்களுக்கிடையில் மின்னஞ்சல் உரையாடல் ஒவ்வொரு கணமும் தீவிரம் அடைந்தது. எனது அனைத்து சினிமா விமர்சனக் கட்டுரைகளையும் அக்கறையுடன் ஒரு முழு பக்கத்தில் பிரசுரம் செய்து வந்தார். எவ்வளவு தாமதமாகப் படைப்பு அனுப்பினாலும் எவ்வித ஆட்சேபனையும் தெரிவிக்காமல் அதே அக்கறையுடன் படைப்புகளைப் பிரசுரித்து வந்தார். மலேசியாவில் சினிமாவின் மீது இத்தனை ஆழமான விமர்சனத்தை நீங்கள் மட்டுமே எழுதுகிறீர்கள் என அவர் அடையாளப்படுத்தியது எனக்குப் பெருமையாக இருந்தது. அதன் வழியே ஆதி ராஜகுமாரன் அவர்கள் நயனம் என்கிற ஜனரஞ்சகமான இதழை நடத்தி வந்தாலும் இலக்கியத்தின் மீது தீவிர புரிதல் உடையவர் என்றும் விளங்கிக் கொண்டேன். அதற்கு முன்பும் அவர் தீவிரமான இலக்கியத்தைப் புரிந்து கொள்வாரா என்ற தயக்கம் அப்பொழுது அகன்றது. ஒருவேளை நயனம் இதழ் ஆசிரியராக மட்டுமே பொதுபுத்தியால் அறியப்பட்ட ஆதி.ராஜகுமார்ன் ஐயா அவர்களுக்குள் இருக்கும் தீவிர இலக்கியத்தின் மீதான ஈடுபாடு அறிய முடிந்திருக்குமா என்பது கேள்விக்குறித்தான். நாம் உரையாடாதவரை ஒருவரை ஆழமாக உள்வாங்கிக் கொள்ள இயலாது.

அவ்வகையில் எனக்கும் அவருக்குமான உறவின் சாத்தியம் எனது அடுத்தகட்ட புரிதலிலிருந்து மேலும் நெருக்கமானது. நெருக்கம் என்றால் கோலாலம்பூர் வந்தால் அலைப்பேசியின் வழி உரையாடி சந்தித்துக் கொள்ளும் நெருக்கம் அல்ல. என் படைப்பை அவர் வாசிப்பதன் மூலம் என் மேல் அவர் கொள்ளும் நம்பிக்கையின் வேரிலிருந்து உருவாகும் நெருக்கமாகும்.

கடந்த மே மாதம் என் இரு நாவல்களைக் கோலாலம்பூரில் வெளியிட்டிருந்தேன். ஆட்கள் குறைவாகத்தான் வந்தார்கள். ஆனால், வந்தவர்கள் அனைவரும் எழுத்தாளர்களாகவும் வாசகர்களாகவும் இருந்தனர். ஆனால், என்னைப் பெரிதும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது முன்வரிசையில் வந்து அமர்ந்து நிகழ்ச்சியின் இறுதிவரை இருந்து எனக்கு ஆதரவாக இருந்த ஐயா ஆதி.ராஜகுமாரன் அவர்களின் அன்றைய வருகையே. சட்டென எங்களுக்கு மத்தியிலான உறவுக்கு அதுவே சாட்சியைப் போல அமைந்தது. பெரும்பாலும் உறவுகளைத் தக்க வைத்துக் கொள்வதில் நான் கொஞ்சம் பலவீனமானவன். ஆனால், நானும் ராஜகுமாரன் ஐயாவும் அதிகம் பேசியதில்லை. பேசாமலே ஓர் உறவை நெருங்கச் செய்ய முடியும் என்றால் அது படைப்பாளிக்கும் வாசகனுக்கும் மத்தியில் உருவாகும் சொல்ல முடியாத நூலிழை புரிதலே.

அந்த மண்டபத்தில் தன்னை எப்பொழுதும் கொண்டாடிக் கொள்ளாத ஓர் இதழியல் துறை ஆளுமையாக ஐயா ஆதி.ராஜகுமாரன் அவர்கள் எனக்குத் தெரிந்தார். எளிமையான சிரிப்புடன் சட்டென நிகழ்ச்சி முடிந்ததும் அவர் சென்றுவிட்டார். தேடினேன்; பிறகு புரிந்து கொண்டேன், இதுதான் ஆதி.ராஜகுமாரன் என்று.

  • கே.பாலமுருகன்

About The Author