பகடி வதை –தீர்வுக்கான பாதையை நோக்கி

– கே.பாலமுருகன்

கடந்த 18 ஆகஸ்டு மாதம் கல்வி அமைச்சரும் உள்துறை அமைச்சரும் பகடி வதை தொடர்பான புகார்களைச் சமர்ப்பிப்பதற்கான அதிகாரப்பூர்வ இணைப்புப் பகுதியைத் திறப்பு விழா செய்து வைத்தனர். அதன் தொடர்ச்சியாக நாட்டில் பகடி வதை தொடர்பான அதிவிரைவான விழிப்புணர்வு அலை ஏற்பட்டு வருகிறது.

பகடி வதையால் பள்ளிக்கூடங்களில் பாதிக்கப்பட்டிருக்கும் மாணவர்கள் சுயமாக உறுதிசெய்யப்பட்ட உண்மை தகவல்களைக் கொண்டு தன் மீது நிகழ்த்தப்பட்ட பகடி வதை தொடர்பாக புகாரளிக்க ஏதுவான தளமாக இது செயல்படும்.

PORTAL ADUAN BULI

moe.gov.my/aduanbuli என்கிற தளத்திற்குச் சென்றுவிட்டால் உங்களின் வலது புறத்தில் sistem aduan SISPAA என்கிற இடத்தில் தட்டிப் புகாரளிப்பதற்கான சிறப்புப் பக்கத்திற்குச் சென்று விடலாம். அங்கு மாணவர்கள் அல்லது பெற்றோர்கள் செய்ய வேண்டியவை:

  1. என்ன மாதிரியான பகடி வதை என்பதைத் தெரிவு செய்ய வேண்டும் (Jenis: adubuli)
  2. அடுத்து புகாருக்கு ஒரு பொருத்தமான தலைப்பிட வேண்டும். (சக பள்ளி மாணவர்களால் கேலி செய்யப்பட்டேன்/ Kes dibuli oleh rakan sekolah)
  3. அடுத்து, பகடி வதை தொடர்பான தெளிவான விளக்கம் அளிக்கப்பட வேண்டும். Butiran என அடையாளமிடப்பட்டிருக்கும் பகுதியில் பகடி வதை நிகழ்ந்த நாள், நேரம், இடம், யாரெல்லாம் சம்பந்தப்பட்டுள்ளனர் போன்ற விவரங்களைத் தட்டச்சு செய்ய வேண்டும்.
  4. அடுத்து, மாணவர்கள் அல்லது புகாரளிக்கும் நபர் தங்களின் முழு விவரங்களையும் தட்டச்சுச் செய்ய வேண்டும். (எடுத்துக்காட்டாக: பெயர், அடையாள அட்டை எண், அழைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி, முகவரி போன்றவை)
  5. பின்னர் பகடி வதை தொடர்பான புகாரை அனுப்பிவிட வேண்டும். இதுதான் கல்வி அமைச்சு புதிதாக அறிமுகப்படுத்தியிருக்கும் பகடி வதையைப் புகாரளிக்கும் இணையத்தளம் பற்றிய விவரங்கள் ஆகும்.

இனி, நாம் என்ன செய்ய வேண்டும்?

  1. இத்தகையதொரு இணைப்புப் பகுதி கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் உள்ளது என்பதை உங்கள் பிள்ளைகளிடம் தெரியப்படுத்த வேண்டும்.
  2. இனி பகடி வதை தொடர்பாகப் பயம் வேண்டாம் என அவர்களுக்கு நம்பிக்கையை உருவாக்க வேண்டும்.
  3. பள்ளியில் மாணவர்களுக்கு நிகழும் பகடி வதைகளை அவர்கள் மறைக்காமல் சொல்லிவிட முன்வர வேண்டும் என்கிற சிந்தனையை அவர்களிடம் ஏற்படுத்த வேண்டும்.
  4. வீட்டிற்கு வந்ததும் அவர்களின் பிரச்சனைகளைப் பெற்றோர்களிடம் மனம் விட்டுப் பேசும்படியான சூழலை உருவாக்க வேண்டும்.
  5. நம்மைவிட பலசாலியான ஒருவன் நம்மைத் தாழ்த்தி அவனுக்குக் கீழ்படிய செய்கிறான் என்றால் அதுவும் ஒருவகையான பகடி வதைத்தான் எனப் பிள்ளைகளுக்குச் சொல்லி உணர்த்த வேண்டும். எடுத்துக்காட்டாக:

அ. பணம் கேட்டு மிரட்டுவது,

ஆ. உணவு பொருள்களைப் பறிப்பது,

இ. அவனுக்கு வேலை செய்து கொடுக்கும்படி மிரட்டுவது,

ஈ. அவனுக்குக் கூலியாள் போல வேலை செய்யப் பணிக்கப்படுவது,

உ.அவன் செய்த குற்றங்களுக்கான பலியை ஏற்றுக்கொள்ளும்படி மிரட்டுவது

ஊ. வீட்டிலிருந்து பணம் எடுத்துவரத் தூண்டுவது

எ. புகைப்பிடிக்க ஆசையைத் தூண்டுவது அல்லது புகை பிடிக்கும்படி மிரட்டுவது

இதுபோன்ற செயல்கள் நாம் விரும்பாமலே நம் மீது திணிக்கப்படும் ஒரு வகை பகடி வதை என்பதை வீட்டிலும் பள்ளியிலும் மாணவர்கள் உணரும்படி விவரிக்க வேண்டும்.

அதுமட்டுமில்லாமல்:

அ. அப்பாவின் பெயரைக் கிண்டல் செய்வது

ஆ. உடல் அமைப்பைக் கேலி செய்வது

இ. நடந்து வரும்போது கால்களைத் தடுக்கி விழச் செய்வது

ஈ. தாக்குவது

உ. கெட்ட வார்த்தையில் திட்டுவது

போன்றவையும் பகடி வதையிலேயே சேரும் என்பதை மாணவர்களுக்கு விளக்க வேண்டும். இவற்றையெல்லாம் முதலில் பெற்றோர்கள் பிள்ளைகளிடம் வீட்டில் பொறுமையாகச் சொல்லி விவரிக்க வேண்டும். அப்பொழுதுதான் பிள்ளைகளுக்கு நாம் தனியாக விடப்படவில்லை என்கிற தன்னம்பிக்கை உருவாகும். நம் மாணவர்கள் பலர் ஆரோக்கியமான வீட்டுச் சூழல் இல்லாததனாலே தம் மீது நிகழ்த்தப்படும் பகடி வதைகள் பற்றி பெற்றோர்களிடம் சொல்லத் தயங்குகிறார்கள். காலப்போக்கில் பகடி வதையைச் செய்பவனிடம் அடிமையாகவும் ஆகிவிடுவார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

முதலில் விழிப்புணர்வு வீட்டிலிருந்துதான் தொடங்க வேண்டும். உங்கள் பிள்ளைகள் பகடி வதைக்கு ஆளாகுவதைத் தடுப்போம்; மேலும், பகடி வதையைச் செய்பவராக உங்கள் பிள்ளைகள் இல்லாமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். நமக்கே தெரியாமல் நம் பிள்ளைகள் மற்ற பிள்ளைகளை அடித்து மிரட்டிப் பணம் பறிப்பவர்களாகவும் இன்னொருவரின் பிள்ளையைத் தனக்கு அடிமையாக ஆக்குவதன் மூலம் மகிழ்பவர்களாகவும் இருக்க வாய்ப்புண்டு. இதுபோன்ற போக்கு அவர்களின் எதிர்காலத்தைப் பாதிப்பதோடு; வன்முறையாளர்களாகவும் உருமாற்றும் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

21ஆம் நூற்றாண்டு கல்வியானது முழுமைப்பெற்ற மாந்தனை; ஆரோக்கியமான குடிமகனை உருவாக்கும் ஒரு மாபெரும் கல்வி வழித்தடம். அதில் நம் பிள்ளைகள் பயணித்து வெற்றியடைய என்ன செய்ய வேண்டும் என்பதை ஆழமாக சிந்திப்போம்.

பகடி வதையை ஒன்றிணைந்து தடுப்போம்.