முக்காடு அணிந்து குள்ளமாகத் தெரிந்த சிறுமி நாற்காலி போட்டு விளக்குகளைத் தட்டிவிட்டாள். அவளுடைய அம்மா போலிருந்தவள் அங்கிருந்த மேசைகளைத் துடைத்து விட்டு ஒவ்வொரு மேசையிலும் நாசி லெமாக் பொட்டலங்களை அடுக்கத் துவங்கினாள். கடையிலிருந்து புறப்பட்ட வாசம் அவ்விடத்தின் சாக்கடை வீச்சத்தைக் கடந்து வீசிக் கொண்டிருந்தது. கோமதி வாசம் வந்த திசையைக் கவனித்துக் கொண்டிருந்தாள். எதுவும் பேசக்கூடாது என அவளிடம் எச்சரித்திருந்தேன். இந்த இரண்டு வாரங்களாகக் கேள்வி கேட்க வேண்டுமென்ற துடிப்பு அவளிடம் இருந்தது. வார்த்தைகளால் நச்சரித்துக் கொண்டே இருக்கிறாள். வரும்போதே ஒரு நாசி ஆயாம் சாப்பிட்டு முடித்துவிட்டாள். ஆதலால், சாப்பிடுவதைப் பற்றி ஏதும் பேச வேண்டாம் எனச் சொல்லிவிட்டேன்.
யூ.டி.சி பேருந்து நிலையத்தின் அருகே அமர்ந்திருந்தோம். அத்தனை வசதியான இடம் இல்லை. ஆனால், வேடிக்கை பார்க்கத் தோதாக அமைந்திருக்கும். பயணச்சீட்டு விற்கும் கவுன்ட்டர்களுக்கிடையே இருந்த சிமெண்டு நாற்காலியில் அமர்ந்திருந்தோம். அங்கே இடம் கிடைப்பது அத்தனை எளிதான காரியம் அல்ல. எப்பொழுதும் யாராவது அமர்ந்து கொண்டிருப்பார்கள். வாடகை வண்டி ஓட்டுநர்கள் இரவு நேரங்களில் உட்கார்ந்து கதையடிக்கும் இடம் அது. இரவில் வாடிக்கையாளர் கிடைப்பது சிரமம் என்பதால் கிரேப் அழைப்பு வரும் வரை அங்கே அமர்ந்து சிரித்துக் கொண்டும் புகைத்துக் கொண்டும் இருப்பார்கள். மெல்ல இருளத் துவங்கியிருப்பதால் யாரேனும் வந்து எங்களை விரட்டக்கூடும் என அச்சமாக இருந்தது.
பரபரப்பாக இருக்கும் நகரம் சரியான இடமாகத் தோன்றியது. அதுவும் இந்த டவுன் சந்து வசதியாக இருந்தது. டூத்தா என எழுதி ஒரு பக்க சங்கிலி அறுந்து போர்ட் மட்டும் தொங்கிக் கொண்டிருந்தது. ஒரு காலத்தில் இந்த டூத்தா ஹோட்டல் பிரபலமாக இருந்தது. இரவில் கோலாலம்பூரிலிருந்து வந்து சேரும் பயணிகளுக்கு முப்பது ரிங்கிட்டிற்கு உடனே மலிவான அறை கிடைக்கும் என்பதாலே விடியும் வரை மணி கணக்கிற்கு அறையை எடுத்துக் கொள்வார்கள். கலா அக்காவை இங்கு வைத்துதான் அவளுடைய அப்பா கண்டுபிடித்தார். டூத்தாவில் மசாஜ் செய்து கொண்டிருந்தவளை அடித்து இரவோடு இரவாக இழுத்துச் சென்றார். வரமறுத்தவளை இந்த டவுன் சாலையில் தரதரவென்று இழுத்துச் சென்றபோது எல்லோரும் வேடிக்கை பார்க்கும்படி ஆகிவிட்டது. டூத்தா கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்குப் பின்னர் இந்த இடம் பொழிவிழந்து இருள் சந்தாகிவிட்டது. இப்பொழுது அட்டை பெட்டிகளை விரித்து யாராவது படுத்துக் கிடக்கும் இடமாக மட்டுமே இருக்கிறது.
கோமதி சிமெண்டு நாற்காலியின் முனையில் உடைந்து உள்ளே தெரியும் கம்பியைத் தொட்டுப் பார்த்துக் கொண்டிருந்தாள். சாய்ந்து அமர்ந்தால் தலைப்பகுதியில் உடைந்த கம்பிகள் குத்தும் என்பதால் நிமிர்ந்து உட்கார்ந்தபடி சாலையைக் கவனித்துக் கொண்டிருந்தோம். சாலை விளக்கொளி படர்ந்து விரிந்திருந்தது. அதன் அதீதமான மஞ்சள் ஒளியிலிருந்து தள்ளியிருக்க மனம் விரும்பியது. அடுத்தமுறை வேறு இடம் தேடிக் கொள்ள வேண்டும். நகரம் ஏதேனும் ஓர் இடத்தை நமக்குக் கொடையாக அளிக்கத் தயாராகவே இருக்கிறது.
“இன்னிக்கும் விடிஞ்சிதான் வரணுமா…?”
கோமதிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அவளால் வெகுநேரம் அமைதியாக இருக்க இயலவில்லை. அதுவரை எங்களுக்கிடையில் இருந்த அமைதியைக் கலைத்தாள். வீட்டிலும் எந்நேரமும் இப்படிதான் சத்தம் போட்டுக் கொண்டே இருப்பாள். அவள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வதற்கு முன்பாகவே அடுத்த கேள்விகளுடன் தயாராக இருப்பாள். பார்வையை அவள் பக்கம் திருப்பினால் அடுத்த கேள்வியையும் கேட்பாள் எனத் தெரியும். என் கவனத்தைச் சாலையிலிருந்து அகற்றவில்லை. அவள் காலில் அணிந்திருந்த ‘ஹை ஹீல்ஸ்’ பளபளப்பைத் தடவிப் பார்த்துக் கொண்டாள். அதில் அவளுக்கொரு ஈடுபாடு இருக்கிறது. கடந்த வாரம் வாங்கிய காலணி அது. அதன் கூர்மையான குதிகால்பகுதியை அடிக்கடி தரையில் தட்டி சப்தத்தை எழுப்பி புன்னகைத்துக் கொண்டாள். அங்கிருந்த மளிகை கடைக்கு வெளியில் ஆள்கள் நுழைவதும் வெளியேறுவதுமாகப் பரபரத்துக் கொண்டிருந்தார்கள். இரண்டு கைகளிலும் பெரிய நெகிழி மூட்டையில் எதையோ வாங்கிக் கொண்டு அவசரமாகச் சாலையின் இருமுனைகளிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களில் ஏறிக் கொண்டிருந்தனர்.
“அது நம்ம பாபுஜீ பாட்டி மாதிரி இல்ல?”
நான் கவனித்துக் கொண்டிருக்கும் திசையில்தான் அவளது பார்வையும் மேய்ந்து கொண்டிருந்தது.
“ஷ்ஷ்ஷ்ஷ்!” அதட்டுவதைப் போல குரல் எழுப்பினேன். அவளைப் பார்க்கும் துணிவில்லை. எங்கேயோ பார்த்துக் கொண்டு உறுமினேன். சற்று நேரம் அமைதியானாள்.
இத்துடன் கடந்த இரண்டு வாரத்தில் எட்டு முறை இங்கு வந்து அமர்ந்திருக்கிறோம். ஒருவேளை எங்களை இங்குள்ள கடைக்காரர்கள் யாராவது கவனித்திருக்கலாம். கைப்பேசி கடைக்காரன் வாடிக்கையாளர்களைக் கவனித்துக் கொண்டே எங்களையும் பார்த்துக் கொண்டிருந்தான். பெரும்பாலும் இளைஞர்களே அக்கடையைச் சூழ்ந்து நின்று கொண்டு கண்ணாடிப் பேழைக்குள் இருக்கும் கைப்பேசிகளை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர். அதற்குப் பக்கத்து மருந்து கடையைச் சீனன் ஒருவன் அடைக்கத் தயார் செய்து கொண்டிருந்தான். பரதேசி போல காட்சியளிக்கும் என்னை இவர்களுள் யாராவது ஒருவர் கேவலமாக நினைத்திருக்கலாம். யார் என்ன நினைத்தாலும் நம்மிடம் வந்து சொல்லப் போவதில்லை. வலது காலை எடுத்து இடது தொடையின் மீது வைத்துக் கொண்டு வேகமாக ஆட்டினேன். சிலிப்பர் காலிலிருந்து நழுவி சாலையில் விழுந்தது.
“சிலிப்பர் பிஞ்சிருச்சா?”
கோமதி சிலிப்பரை எடுக்கக் கீழே குனிந்தாள். கால் முட்டியால் அவளை மெல்ல இடித்து நிறுத்தினேன். உச்சுக் கொட்டியதும் அவள் மீண்டும் வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள். என் சைகையிலேயே நான் கோபத்தில் இருக்கிறேன் எனப் புரிந்து கொண்டாள்.
கோமதியை ஐந்து வயது முதலே தெரியும். நான் அவளை முதன்முறையாகப் பார்க்கும்போது நீலநிறக் கவுனுடன் பெரியசாமியின் புரோட்டோன் ஈஸ்வராவில் அமர்ந்து கொண்டிருந்தாள். ஒரு மழைப் பொழுது அது. பெரியசாமி மட்டும் கீழே இறங்கி வந்தான். கோமதி கார் கண்ணாடியைத் திறந்து கைகளை வெளியே நீட்டி மழைநீரை உள்ளங்கையில் சேகரிக்க முயன்று கொண்டிருந்தாள். கைகளில் அணிந்திருந்த நீலநிற வளையல்களின் சத்தம் கேட்கவில்லையென்றாலும் அதனைக் கற்பனை செய்து கொள்ள முடிந்தது.
“எத்தன பிள்ளைங்க, சாமி?”
மழைச்சத்தத்தில் நான் கேட்டது விளங்கவில்லை. மழையில் நனைந்து நெற்றியில் ஒதுங்கிய துண்டு முடிகளை வழித்துக் காதுக்கு மேலாக ஒதுக்கினான்.
“வட்டிய ஏத்திராத குமாரு…” என உரத்த குரலில் சொன்னான். அந்தச் சத்தம் எரிச்சலூட்டியது. மழைக்காக அவன் குரலை உயர்த்தவில்லை. அவன் குரலே அப்படித்தான். அதட்டுவது போல் ஒலிக்கும். பெரியசாமி பெரிய கடன்காரன். லெபாய்மான் கம்பத்தில் சிறியதும் பெரியதுமாய்ச் சிலரிடம் கடன் வாங்கி அதைக் கட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான். அவனுடைய பயமெல்லாம் கடனைவிட அது ஏற்படுத்தியிருக்கும் வட்டிகள் மீதுதான்.
“சாமி, நாந்தான் மூனு காசு… வெளிலலாம் ஐந்து, பத்து காசு வரைக்கும் போகுது…” நானும் மெனக்கெட்டுக் கொஞ்சம் கத்திச் சொன்னேன். அவனது நெஞ்சுப் பகுதிவரை மழைநீர் வழிந்து சட்டையை நனைத்திருந்தது. மீண்டும் பெரியசாமியின் காரைப் பார்த்தேன். கண்ணாடி மேலே ஏற்றப்பட்டிருந்து சிறிய இடைவெளியில் கோமதியின் சிறுவிரல் மட்டும் வெளியே தெரிந்தது.
“வீட்டுக்காரவங்க வரலய்யா?”
பெரியசாமி திரும்பி காரைப் பார்த்துவிட்டுக் கண்ணாடி திறந்திருப்பதைக் கவனித்தான். “ஏய் கண்ணாடிய மூடு…!” எனச் சத்தமாக அதட்டிவிட்டு மீண்டும் என் கேள்விக்குள் வந்தான்.
“உள்ளத்தான் இருக்கு… அதுக்கு வேல பாக்கலாம்னுத்தான் வந்தோம்… இந்தக் காச பொரட்டறதுக்கே நான் படாதபாடு பட்டுட்டன்… இன்னும் சொச்ச மாசத்த எப்படி ஓட்டறதுன்னு தெரில…”
எத்தனைமுறை பார்த்தாலும் பெரியசாமியின் முகம் கருணைக்கு ஏங்குவதாகத் தெரிவதில்லை. திமிர்க்கொண்ட பார்வை. அடர்ந்து தெரியும் புருவம் கண்களைக் காட்டிலும் நம் கவனத்தை அங்கே ஈர்த்துக் கொள்ளும். கொஞ்சம் மிடுக்கான அவனது தோற்றத்தின் முன் இரக்கம் தோன்றாது. இதனால்தான் கடன்காரர்கள் அவனை விடுவதில்லை எனத் தோன்றியது. வயது நாற்பதைத் தாண்டியும் இன்னும் மிரட்டலான தோற்றத்துடன் தெரிந்தான். இலேசான தொப்பை சட்டையை முட்டிக் கொண்டிருந்தது.
“சாமி, நானே இன்னொருத்தன்கிட்ட இருந்து காச வாங்கி வட்டிக்கு விடறன்… என் வயித்துல கைய வச்சிறாத… ஒழுங்கா மாசம் பொறந்தோன வந்து கொடுத்துரு…”
பெரியசாமி சிறிது நேரம் எதையோ யோசித்துக் கொண்டே மழையை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான். சாப்பாட்டுக் கடையைவிட்டு வெளியேற தயங்கிக் கொண்டிருந்தவர்களில் சிலர் இனி மழை நிற்காது என முடிவெடுத்து வெளியேறி ஓடிக் கொண்டிருந்தனர்.
“ஏதாச்சம் புங்குஸ் பண்ணட்டா?” காரில் அமர்ந்திருந்த கோமதியின் விரல்கள் நினைவுக்கு வந்ததும் அப்படிக் கேட்கத் தோன்றியது. பெரும்பாலும் உறவுக்காரர்களாக இருந்தாலும் இலவசமாக யாருக்கும் சாப்பாட்டைக் கொடுப்பதில்லை. பாவமெனப்பட்ட சிலருக்கு மட்டும் மிச்ச உணவுகளைப் பொட்டலம் கட்டிக் கொடுப்பதுண்டு.
“குமாரு, உன் கடைல என் பொண்டாட்டிக்கு ஏதாச்சம் வேல போட்டுக் கொடுக்குறீயா? நல்லா சமைப்பா… இல்ல மங்கு ஜாமான் கழுவறதா இருந்தாலும் சரிதான்…”
அவன் கண்கள் உதவி கேட்கும் தோரணையில் இல்லை. கொடுத்தால் கொடு என்கிற அலட்சியப்பார்வையுடன் தென்பட்டன. கோமதியின் அந்த விரல் மட்டுமே என் நினைவில் உறுத்திக் கொண்டிருந்தது.
“இந்தோனேசியாகாரி ஒருத்தி இருக்கா… அவள வச்சுச் சமாளிக்கவே பெரிய கஸ்டம்மா இருக்கு…”
பெரியசாமி அமைதியாக இருந்தான். மேலும் கெஞ்சுவான் என நினைத்தேன். அவனிடம் இன்னும் சில வார்த்தைகளை எதிர்ப்பார்த்தேன். கார் கண்ணாடியை இறக்கிவிட்டுக் கோமதி மீண்டும் இரண்டு கைகளையும் வெளியே நீட்டி மழைத்துளிகளை உள்ளங்கையில் பிடித்துக் கொண்டிருந்தாள். திறந்திருந்த கண்ணாடியினூடே பெரியசாமியின் மனைவியை இப்பொழுது ஓரளவு பார்க்க முடிந்தது. சுறுசுறுப்பான தோற்றம். கோமதியைப் பிடித்து அமர வைக்கப் போராடிக் கொண்டிருந்தாள். கோமதி அவளிடம் முரண்டு பிடித்தபடியே விரல்களைக் கண்ணாடியின் வெளியே நீட்டத் துடித்தாள். அவர்களின் போராட்டத்தின் சத்தம் எனக்குக் கேட்கவில்லை. மழை கடையின் தகறக் கூரையில் விழுந்து இடுக்குகளின் வழியாக விளிம்பில் வந்து நேர்க்கோடாகக் கொட்டிக் கொண்டிருந்தது.
“சாமி, அடுத்த வாரம் கூட்டிட்டு வா… இருந்துட்டுப் போகட்டும்… அந்த இந்தோனேசியக்காரிய வேற வேலைக்கு மாத்திர்றன்…”
சட்டென அவனுடைய முகத்தில் சிரிப்பு. அச்சிரிப்பும் தாடிக்குள் ஒளிந்து கொண்டது. அடுத்து அவன் எனக்கு நன்றி சொல்லியிருக்க வேண்டும். ஆனால், அடுத்த வாரம் எந்தக் கிழமையில் வர வேண்டும் எனக் கேட்டான்.
உதித்தக் கோபத்தை உள்ளுக்குள்ளே அடக்கிக் கொண்டேன். பெரியசாமி எந்தச் சலனமும் இல்லாமல் என் பதிலுக்குக் காத்திருந்தான். என் கண்களை உற்று நோக்கினான். என்னால் அவனுடைய கண்களைத் தொடர்ந்து பார்க்க இயலவில்லை.
“ஞாயித்துக்கெழம போல வா… முதல்ல வேலயக் கத்துக்கிட்டம்… அப்புறம் சம்பளம் பேசிக்கலாம்…”
மேரி காருக்குப் பக்கமாய் நின்று கடையையே பார்த்துக் கொண்டிருந்தாள். கடந்த வாரத்தில் அவளுக்கு மூன்றுமுறை சாப்பாடு கொடுத்துவிட்டேன். ருசி கண்ட பூனை மீண்டும் வாசலில் வந்து நின்று கொண்டே நோட்டமிட்டுக் கொண்டிருந்தது.
“மகேனு அந்தச் சனியன அடிச்சித் தொரத்துங்க… இப்படியே வரவன் போறவனுக்குக் கொடுத்தா கடையச் சாத்திட்டு ரோட்டுலத்தான் நிக்கணும்…”
மேரிக்கு நான் சொன்னது விளங்கியிருக்காது. அவள் இருந்த தூரத்திற்கும் மழை, கூரையில் போடும் சத்தத்திற்கும் இடையில் எனது உடல்மொழியை மட்டும் சரியாக ஊகித்துக் கொண்டாள். மகேன் வெளியே வருவதற்குள் என்னைப் பார்த்துக் கொண்டே நடக்கத் துவங்கிவிட்டாள்.
“இன்னிக்கும் விடியக்காலைல வரைக்கும் இருக்கணுமான்னு கேட்டன்?”
கோமதியின் அதட்டல் பெரியசாமியின் குரலை ஒத்திருந்தது. சாலையின் பரபரப்பில் சப்தங்கள் பெருகியபடி இருந்தன. மாலை வெயில் விட்டுப்போன புழுக்கம் இன்னும் தீரவில்லை. மோட்டார்களின் சத்தம் காதுக்குள் நமைச்சலை உண்டாக்கியது. மோட்டார்க் குழாய்களை வெட்டி அதன் சத்தத்தைக் கூர்மையாக்கி கேட்போரை எரிச்சலூட்டும் விளையாட்டு அது. தாகத்திற்கு ஏதாவது சில்லென்று குடித்தால் நன்றாயிருக்கும் எனத் தோன்றியது. எனக்கு முன்னே கோமதி ஐஸ் கடையைப் பார்த்துவிட்டு என் தோளைப் படபடவெனத் தட்டினாள். அவள் இதைச் செய்யாமல் இருந்தால்தான் ஆச்சரியம். மூன்று பெரிய கலனில் மஞ்சள், சிவப்பு, பச்சையென வண்ணப் பானங்கள் குடைக்கம்பியில் மாட்டப்பட்டிருந்த விளக்கொளியில் பட்டு தனியாகத் தெரிந்து கொண்டிருந்தன. அதுவும் கலனைக் கிண்டும்போது பனிக்கட்டிகள் உண்டாக்கும் சத்தம் தாகத்தைக் கூட்டியது. கோமதியை அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு எழுந்து நடந்தேன். காற்றில் கலந்திருந்த புகை சுருக்கென்று மூக்கில் ஏறி எரிச்சலை உண்டாக்கியது.
சீராப் ஐஸ் பானத்தை வாங்கிக் கொண்டு பத்திரமாகச் சாலையைக் கடந்து கோமதியிடம் வந்தேன். முட்டிவரைக்குமான கவுனுடன் மிதப்பாக அமர்ந்திருந்தாள். நகரத்திற்குச் சற்றும் பொருந்தாத சிண்ட்ரல்லா பொம்மையாகக் காட்சியளித்தாள். தலையில் தொப்பியை அணிந்துவிட்டால் இந்த நகரம் அவளைத் தாங்கிக் கொள்ளாது என்பதாகப் பட்டது. என்னைவிட உயரமாக வளர்ந்துவிட்டிருந்தாள். சட்டெனப் பார்க்கும்போது லலிதா அமர்ந்திருப்பது போன்று தெரிந்தது. இன்னும் கொஞ்சம் சதை போட்டுவிட்டால் லலிதாதான். சாலையின் பரபரப்பு அப்படியே இருந்தது. ஒல்லியான ஒரு சீனத்தி சமிக்ஞை விளக்கிடம் கிடந்த பெட்டியை எடுத்து நோண்டிக் கொண்டிருந்தாள். சட்டென சீனத்தி என்றும் சொல்லிவிட முடியாது. வெளிச்சத்தில் பார்ப்பதற்கு லீனாவின் முகத்தோற்றத்தை ஒத்திருந்தாள்.
“வட்டிக்கு விட்டுச் சம்பாரிச்சல… அதான்… அடுத்தவன் வயித்தல அடிச்சிப் பொழைக்கறவன் பொழப்புக் கடைசியா வீதிக்குத்தான் வரும்…”
லீனாவின் வார்த்தைகள் மனத்தின் ஆழத்தில் இன்னும் ஒலித்துக் கொண்டிருந்தன. சாப்பாட்டுக் கடை ஏலத்திற்குப் போன நாளன்று வீட்டின்முன் வந்து மண்ணை வாரி அடித்துவிட்டுப் போனாள். எத்தனை கோபத்தைச் சுமந்து அடக்கி வைத்திருந்தாள் எனத் தெரியவில்லை. நகங்கள் உடைந்து மண்துகள்கள் விரலிடுக்குகளில் இறங்க சாலையில் இருந்த மண்ணை அவள் அள்ளும்போது படபடப்பாகிவிட்டது. முன்வாசல் இரும்புக் கதவில் அவள் மண்ணைத் தூக்கியெறிந்தபோது அது மழை பெய்யும் சத்தத்திற்கு நிகரானதாக மாறியது.
அவளின் கணவன் என்னிடமும் இன்னும் சிலரிடமும் வட்டிக்குக் கடன் வாங்கிவிட்டு எங்கோ ஓடிப்போனவன் மீண்டும் வரவேயில்லை. இருந்த அவளுடைய கொஞ்சம் நகைகளைப் பிடுங்கிவரப் போன அன்றைய இரவில் அவள் வீட்டைவிட்டு வெளிவரவே இல்லை. உடன் இரண்டு தடியன்களைக் கொண்டு போனது அவளுக்கு அச்சத்தை உருவாக்கியிருக்கலாம். பயந்துபோய் என்னையே பார்த்துக் கொண்டிருந்த அந்தக் கண்களில் பயத்தைக் கடந்து எனக்கு வேறேதும் தெரியவில்லை.
“வட்டிக் காசு நம்மள சுத்தி ஒரு வலைய பின்னிக்கிட்டே இருக்கும்… ஒரு குதுகலத்த கொடுக்கும்… அது ஒரு நேரம் நம்ம கழுத்துக்கிட்ட வந்து நிக்கும்… பொல்லாத காசு…”
என்னைச் சுற்றியிருந்த பெண்கள் இந்த எச்சரிக்கையைப் பல வகைகளில் பல தொனியில் சொல்லி விட்டார்கள். அம்மா, பெரியக்கா என உடன் இருந்தவர்கள் அத்தனை பேரும் போதும் சேர்த்தது எனத் தெரிவித்து விட்டார்கள். ஆனால், பணம் கையிலிருக்கும்போது பரபரத்துக் கொண்டே இருக்கும். கடைக்கு வருபவர்களின் உரையாடலில் சிலர் பணத்துக்குச் சிரமப்படுவது தெரிந்துவிட்டால் போதும். “மூனு காசுக்கு எவன் கொடுப்பான் வட்டி இந்தக் காலத்துல…” எனத் தொடங்கும் என் வியாக்கியானங்களில் கரைந்துவிடுவார்கள். காரியத்தைச் சாதித்துக் கொள்ள அதுவே எனக்குச் சரியான தருணங்களாக மாறிவிடும். ஏக்கத்துடன் பார்க்கும் அவர்களின் கண்களை என்னால் நன்கு அடையாளங்கண்டு கொள்ள முடியும்.
“இப்படி வரும் காசு ஒட்டாது…” பெரியசாமியின் மனைவி லலிதா கடையில் வேலை செய்த காலத்தில் பலமுறை சொல்லியிருக்கிறாள்.
“இப்ப என்னா உன் புருஷன் வட்டிய கொறைக்கணும். அதானே உன் எண்ணம்?” எனக் கிண்டலாகச் சொல்லி அவளுடைய முயற்சிகளைத் திசைமாற்றி விடுவேன். கோமதி அவளுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு என்னை வியப்பாகப் பார்ப்பாள். புருவத்தை உயர்த்திக் காட்டி மிரட்டுவது போல் பாவனை செய்வேன். சட்டென லலிதாவின் பின்னே மறைந்து கொள்வாள்.
“அங்கள்! அம்மா யேன் செத்தாங்கன்னு தெரியுமா?”
விரைவு பேருந்து பெருஞ்சத்ததுடன் வந்து நின்றது. கோலாலம்பூரிலிருந்து திரும்பும் பயணிகளை இறக்கிவிட்டுச் சென்றதும் அனல் பறந்தது. கோமதி எழுந்து ஏதும் புகை பட்டுவிட்டதா என்று தன் ஆடையைச் சரிபார்த்துவிட்டு மீண்டும் அமர்ந்தாள். அவள் அணிந்திருந்த கவுன் உடல் அளவிற்கு பொருந்தும் வகையில் தைக்கப்பட்டிருந்தது. சிண்ட்ரேலாவின் தோற்றம் முக்கியமானது. சாலை விளக்கொளியின் வெளிச்சத்தில் கோமதி அழகாக மிளிர்ந்து கொண்டிருந்தாள். நகரத்தின் மொத்த வெளிச்சமும் இருளும் அவளைச் சுற்றியே இருந்தன.
“உங்கம்மா மாரடைப்புல செத்துட்டா…” என்றேன். பலமுறை சொல்லப்பட்ட பொய். லலிதா இறக்கும்போது கோமதிக்கு ஒன்பது வயது. முன்பொருமுறை சொல்லப்பட்ட பொய் இப்போதும் காப்பாற்றப்படுகிறது. இன்னும் சிறிதுகாலத்தில் அவளே உண்மையைத் தெரிந்து கொள்ளக்கூடும்.
“கோமதி… அப்பாவோட இருக்க பிடிக்கலைனா அங்கள் வீட்டுக்கு வந்துரு… அங்கள் உன்ன என் பிள்ளையாட்டம் பாத்துக்கறன்…”
அன்று நான் அப்படிக் கேட்டதும் கோமதியைவிட பெரியசாமிதான் மகிழ்ந்து போனான். எதிர்பார்ப்புடன் என்னைப் பார்த்தான். அதுவரை அந்த ஏக்கமிகுந்த பார்வையை அவன் கண்களில் பார்த்தது கிடையாது. என் முடிவை நான் மாற்றிக் கொண்டுவிடுவேனோ எனப் பயந்தான். அவனுடைய பயம் கண்களில் அப்பட்டமாகத் தெரிந்தது. அவனை அப்படியொரு நிலையில் பார்க்கப் பேரானந்தமாக இருந்தது. அவன் மனைவி இறந்த சமயம்கூட எல்லோரிடம் சகஜமாகவே பேசிக் கொண்டிருந்தான். இரவெல்லாம் அழுது அவனுடைய கண்கள் வீங்கியிருக்கும் என நினைத்திருந்தேன். அதற்கு நேரெதிராக அன்று நிதானமாகக் காணப்பட்டான். ஆனால், கோமதியை நான் அழைத்துச் செல்லட்டுமா எனக் கேட்ட பின் உடைந்து என் முன்னே யாசகம் பெறுபவனைப் போல் நின்றிருந்தான்.
“குமாரு… நீ நல்லாருப்ப… என் பொண்டாட்டிக்கு வேல போட்டுக் கொடுத்த… என் வட்டிக் காச வேணாம்னு சொல்லிட்ட… இப்ப என் மகள வளர்க்கறன்னு சொல்ற… நீ என் தெய்வம்…” என என் கால்களைப் பிடித்துக் கொண்டான். தடுப்பதைப் போல பாவனை செய்தேனே தவிர என் கைகள் அவனைத் தடுக்கவில்லை. கோமதி சிரிப்புடன் என்னைப் பார்த்தாள். அவளால் லலிதாவின் இடத்தில் பெரியசாமியைப் பார்க்க முடியவில்லை. தத்தளித்துக் கொண்டிருந்த கண்கள் நான் அப்படிச் சொன்னதும் அகன்று பூத்தன.
“அங்கள் பசிக்குது. ஒரு நாசி லெமாக் சாப்ட்டுக்கலாமா?”
கைகள் இரண்டையும் தொடைக்கிடையில் அழுத்திக் கொண்டு கெஞ்சினாள். முன்பு சாப்பாட்டுக் கடையில் மிட்டாய்கள் வேண்டுமென இப்படித்தான் கெஞ்சுவாள்.
“உனக்கு நேத்து உள்ள போத இன்னும் இறங்கலயா? சும்மா இருக்க மாட்ட? அதான் நாசி ஆயாம் சாப்ட்டல…” மீண்டும் அதட்டினேன். அவளுடைய கண்கள் சிவந்திருப்பதைக் கவனித்தேன்.
“கோமதி…”
கோமதி கோபித்துக் கொண்டு முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொண்டாள். அவள் முகம் வாடியதும் போகமாட்டேன் என்று மறுத்து விடுவாளோ எனத் தோன்றியது. முதலில் வாங்கிக் கொடுத்த சீராப் ஐஸ் கரைந்து சிவப்பு நிறம் குறைந்திருந்தது. மெல்ல எழுந்து எதிரில் இருந்த நாசி லெமாக் கடையில் இரண்டு பொட்டலங்களை வாங்கிக் கொண்டேன். கடையில் இருந்த சிறுமி உள்ளேயிருந்த மேசையில் அமர்ந்து எதையோ வரைந்து கொண்டிருந்தாள். நீண்ட விளக்குகள் வெளிச்சத்துடன் இம்சிக்கும் சத்தத்தையும் எழுப்பிக் கொண்டிருந்தன. இந்நேரம் நான் வருவதை அவள் ஓரக்கண்ணால் கவனித்துக் கொண்டிருப்பாள்.
நாசி லெமாவைக் கொடுத்ததும் சட்டெனப் பொட்டலத்தைப் பிரித்து பிளாஸ்டிக் கரண்டியால் சாப்பிடத் துவங்கினாள். நான் பிறகு சாப்பிட்டுக் கொள்ளலாம் என ஒரு பொட்டலத்தை எடுத்துப் பக்கத்தில் வைத்துக் கொண்டேன். கோமதி கால்களை ஆட்டியபடியே சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். பெரியசாமியின் கண்கள் நினைவுக்கு வந்தன. எல்லா சமயங்களிலும் மிடுக்கான பார்வை. தாழ்ந்து நிற்காது. சிரிப்பை ஏந்தியிருக்கும். கோமதியின் கண்களும் அப்படிப்பட்டவை.
சாப்பிட்டதும் சற்றே நிதானமானாள். கால்கள் தரையில் இருக்க முடியாமல் அதிர்ந்து கொண்டிருந்தன. “டொக்! டொக்!” எனத் தொடர்ந்து தட்டிக் கொண்டிருந்தாள்.
“எப்ப அங்கள் கார் வரும்?”
“டைம் சொல்ல மாட்டாங்க… நீ கொஞ்சம் அமைதியா இரு…”
கோமதி திடீரென எழுந்து நடனமாடத் துவங்கினாள். மஞ்சள் விளக்கொளியில் அவளுடன் அவளது நிழலும் சேர்ந்து கொண்டது. அவளை நிறுத்தி அமர வைத்தேன்.
“என்ன கோமதி இது?”
“போரிங்கா இருக்கு அங்கள்…எல்லாம் மிதக்குற மாதிரி இருக்கு…”
முதுகைத் தட்டிக் கொடுத்துப் பொறுமை காக்கும்படி சைகையால் சொன்னேன். அவளின் கால்கள் நிதானத்தில் இல்லை. வழக்கம்போல் அல்லாமல் இன்று கருப்புநிற கேம்ரி வந்து நின்றது. இருளிலும் அதன் நிறம் மின்னியது. இரட்டைச் சிக்னல் போடப்பட்டவுடன் கோமதியை அழைத்துக் கொண்டு காரை நோக்கி நடக்க எழுந்தேன்.
“சரி, கோமதி… விடியக்காலைல வந்து நிக்கறன்… ஏதாச்சம்னா போன்ல சொல்லு…சும்மா எல்லாத்தக்கிட்டயும் கண்டதும் பேசிக்கிட்டு இருக்காத… போனமா வந்தமான்னு இரு…”
கோமதி எழுந்து நின்றாள். ‘ஹை ஹீல்ஸ்’ சப்தம் எழுப்பியது.
“அங்கள்! அங்க போனோன ஏதோ மாத்திர கொடுத்து கொஞ்சம் பீரும் தறாங்க… அது இப்ப வரைக்கும் ஒரு மாதிரியா ஆக்குது… அது மட்டும் வேணாம்னு சொல்ல முடியுமா?”
என்ன பதில் சொல்வதென்று யோசித்தேன். காரில் வந்திருப்பவன் ஓட்டுநர் மட்டும்தான். அவனிடம் எதையும் சொல்ல முடியாது.
“சரி, நான் டைகர்கிட்ட சொல்றன்… நீ இன்னிக்கு மட்டும் எடுத்துக்கோ…”
கோமதி ஏறிக்கொண்டதும் கார் புறப்பட்டது. சீனத்தி அங்கிருந்த குப்பைக்கூளங்களிலிருந்து எதையோ எடுத்துப் பெட்டியினுள் சேகரித்துக் கொண்டிருந்தாள். இருள் அடர்ந்து கௌவியிருந்த டூத்தா ஹோட்டல் பக்கத்தில் இருந்த சாலைக்குள் நுழைந்து நடக்கத் துவங்கினேன்.
-கே.பாலமுருகன்
(நன்றி: உயிர்மை மின்னிதழ்)
நாசி ஆயாம் – சீனர்களின் விருப்ப உணவு,
நாசி லெமாக்- மலேசிய மலாய்க்காரர்களின் விருப்ப உணவு
புங்குஸ் – பொட்டலம்