Drishyam – 2 : பாவத்தில் கரையும் அறம்

தமிழில் பாபநாசம் படத்தைப் பார்த்தவர்களுக்கு Drishyam & – Drishyam 2 பற்றி அறிந்திருக்க வாய்ப்புண்டு. ஜீத்து ஜோசப் எழுதி இயக்கிய மலையாளப்படம்தான் தமிழில் கமல், கௌதமி நடிப்பில் வெளியாகியிருந்தது. அந்தப் (பாபநாசம்) படத்தின் இரண்டாம் பாகம்தான் மலையாளத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் வெளியாகிவிட்டது.

பல அடுக்குகள் கொண்ட திருப்புமுனைகளுள் நம்மை ஆழ்த்தி ஆச்சரியப்பட வைத்த இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இன்னும் எங்கு, எப்படி, எந்த முனையில் விரித்திழுக்கப் போகிறார்கள் எனக் கேள்வியுடனே பார்க்கத் துவங்கினேன். பெரும்பாலும் சிறந்த படங்கள் பாகம் இரண்டாக உருவாக்கப்பட்டால் முதல் பாகத்தில் இருந்த தீவிரமும் ஆழமும் இல்லாமல் போனதுண்டு. முதல் பாகம் கொடுத்த தாக்கம் இரண்டாவதில் குறைந்திருக்கும்.

ஆனால், ஜீத்து ஜோசப் அவர்களின் எழுத்தில் அவர் காட்டும் துல்லிதம்தான் அவருடைய Drishyam பாகம் இரண்டையும் முதல் பாகத்தைப் போல அதே சுவாரஷ்யத்துடன் வழிநடத்திச் செல்ல ஊக்கப்படுத்தியுள்ளது. பாகம் 2இன் திரைக்கதை சற்றே மெதுவாக நகர்வதாகச் சிலர் சொன்ன பார்வையை நானும் உணர்ந்தேன். ஆனால், அவை இறுதியில் கட்டியெழுப்பும் ஓர் அற்புதத் தருணத்திற்கான நகர்ச்சியாகவே பார்க்கிறேன். படத்தில் ஒரு காட்சிக்கூட கதைக்கு அநாவசியம் இல்லாமல் இடம்பெற்றிருக்காது. திரைக்கதை வடிவமைத்தில் ஜித்து ஜோசப்பிடம் கலை உலகம் நிறைய கற்றுக் கொள்ளலாம். அல்லது அவருடன் ஒரு தீவிரக் கலந்துரையாடலாவது நடத்தலாம். (இதற்கு முன் அத்தகையதொரு நிகழ்ச்சி நடந்திருக்குமாயின், மகிழ்ச்சி).

ஒரு கொலை நிகழ்ந்து விடுகிறது. திட்டமிட்டக் கொலை கிடையாது. சூழல் அமைத்துக் கொடுக்கும் சந்தர்ப்பத்தால் உருவாகும் கொலை. அந்தக் கொலையை மறைத்தால்தான் தன் குடும்பத்தைக் காப்பாற்ற முடியும் எனக் கதாநாயகன் முடிவெடுக்கிறான். அவனது செயலுக்குப் பின்னாள் அவனே ஓர் அறத்தையும் கற்பித்துக் கொள்கிறான். அதற்காக வேண்டி அவன் வாழ்நாள் முழுவதும் குற்றவுணர்ச்சியில் திளைத்துத் தன் அகத்தை ஓர் இருளுக்குள் அடைத்துக் கொள்ளவும் தயாராக இருக்கிறான். அவனே அவனுக்குக் கொடுத்துக் கொள்ளும் தண்டனையாக, அவனது உள்ளம் என்கிற தண்டனை கூடத்தில் தன்னை ஏற்றிக் கொள்கிறான்.

இரண்டாம் பாகத்தில் முதல் பாகத்தைக் காட்டிலும் இன்னும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் திருப்புமுனைகள் கைவந்திருப்பது, அதுவும் முதல் பாகத்திலேயே பார்வையாளர்களுக்குத் திறந்து காட்டிவிடப்பட்ட ஒரு திரைக்கதையினை இரண்டாம் பாகத்தில் நகர்த்தும் சாமர்த்தியம் பாராட்டப்பட வேண்டியது. இரண்டாம் பாகம் கொலைக்குப் பிறகான மன உணர்வுகளையும் அதனையொட்டி அவர்கள் அடையும் குற்றவுணர்வுப் போராட்டங்களையும் மையப்படுத்தி நகர்கிறது.

கொலை, கொலை விசாரணை, இப்படியான கருப்பொருளில் ஏராளமான கலை படைப்புகள் அனைத்து மொழிகளிலும் வந்துவிட்டன. அத்தகைய ஒரு கருவைத் தேர்ந்தெடுத்து அதனை அறத்திற்கு உள்ளே வைத்து சாதூர்யமாக உரையாடி வெற்றிப் பெற்றுள்ளார் ஜீத்து.

குறிப்பாக, மோகன்லால் நடிப்பைக் குறிப்பிட்டாக வேண்டும். தமது முதிர்ச்சியான நடிப்பில் மொத்த திரைக்கதையும் தாங்கிக் கொள்கிறார். ஆர்பாட்டமில்லாமல் மெனக்கெடுவது ஆச்சரியமானவை. அவரது முகத்தில் அல்லது உடல்மொழியிலும்கூட கண்டறிய முடியாத புத்திசாலித்தனமான நடிப்பது.

இரண்டாம் பாகத்தின் கடைசி வரி, ‘இந்தக் கணம் நாம் அடுத்து என்ன செய்வோம் என்ன நடவடிக்கை எடுப்போம் என அவன் சிந்தித்துப் போராடிக் கொண்டிருப்பான்; இதைவிட ஒரு கொடுமையான தண்டனையை நம்மாலும் அவனுக்குக் கொடுத்திர முடியாது’ என ஜோர்ஜ்குட்டி தன் குடும்பத்தைக் காக்க வேண்டி செய்த அத்தனை செயலின் மீதும் சாயமாகப் படிந்திருக்கும் அறம்; தர்மம்; நியாயம்; அநீதி என அனைத்தும் வெளுத்துக் கொட்டுகின்றன.

-கே.பாலமுருகன்