குறுங்கதை 2: சன்னல்கள்
1985
அடர்ந்த வரிசை மரங்களின் அசைவுகள் பார்க்க இரம்மியமாகக் காட்சியளித்தன. வெயில் புக முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தது. அரணிட்டு பகலின் குளிர்ச்சியைத் தமக்குள் தக்க வைத்திருந்த மரங்கள் பவாணியின் நான்காவது வயதிலிருந்து அவள் பார்த்துக் கொண்டிருக்கிறாள். இறுக்கமான சன்னல் கம்பிகளிலிருந்து மரங்களை நோக்கி கைகளை அசைப்பாள். அதுவரை மட்டுமே அவளது அனுமதி.
தினமும் காலையில் எழுந்ததும் அம்மரங்கள் சுதந்திரமாக காற்றில் அலசிக் கொண்டிருப்பதைக் கண்டு மகிழ்வாள்.
“பவாணி! துணி அவ்ள கெடக்கு… போய் வேலய பாரு…”
பெரியக்காவின் கடுமையான குரல். பழக்கமானது போல் அதற்கு உடன்பட்டாக வேண்டும். தூரத்தில் ஒரு சிறுமி நடந்து வருவதைப் பவாணி பார்த்துவிட்டுச் சட்டென நின்றுவிட்டாள்.
அச்சிறுமி பவாணியின் வயத்தை ஒத்திருந்தாள். மரங்களிலிருந்து விழுந்த இலைகளை எடுத்து மீண்டும் காற்றில் பறக்கவிட்டுச் சிரித்தாள். மீண்டும் குதித்தோடு வெறிச்சோடியிருந்த அச்சாலையை அலங்கரித்துக் கொண்டிருந்தாள். பவாணி அச்சிறுமியின் துள்ளலில் தனது சுருங்கிப் போன சுதந்திரத்தைப் பொறாமையுடன் பார்த்துக் கொண்டாள்.
வலியின் உச்சம் சென்ற அவள் அப்படியே சன்னல் கம்பிகளின் இடைவெளிக்குள் முகத்தைப் புதைத்தாள். தூரத்திலிருந்து வந்த சிறுமி சன்னலையும் பவாணியும் பார்த்தாள்.
‘சொந்தமா ஒரு வீடு ஒரு ரூம்பு இருக்கு… என்ன மாதிரி வேலைக்குப் போகாம இந்தப் பிள்ளை… சுதந்திரமா வீட்டுல இருக்கு… கடவுளே எங்கப்பாவ ஏன் நீ எடுத்துக்கிட்டு எனக்கு இந்த நெலமைய கொடுத்த?’ என மனத்தினுள் புலம்பிக் கொண்டே சிறுமி சாலையைத் தாண்டி தூரத்தில் இருக்கும் கையுறை தொழிற்சாலைக்கு நடக்கத் துவங்கினாள்.
ஆக்கம்: கே.பாலமுருகன்