குறுங்கதை 1: வெளிச்சம்
உள்ளிருந்து வெளியே நோக்குவதில் இருந்த பதற்றத்தைக் குறைக்க வேண்டும். சன்னல் துணி காற்றில் படப்படத்து சிறிய இடைவெளியில் வெளிச்சத்தை உள்ளே அனுமதித்த கணம் அவனது மனம் மீண்டும் பதற்றத்திற்குள்ளானது.
“குணா! வெளிச்சத்த பார்த்துறாத…அப்புறம் நீ இருட்டுக்குள்ளயே வாழ வேண்டியதுதான்…”
அக்குரல் மீண்டும் அவனுக்குள் அகோரமாய் ஒலித்து மீண்டும் அமைதியானது. கைகள் நடுங்க சன்னல் திரையை அடைத்து கம்பியால் அவற்றை இறுக்கக் கட்டினான். பகலில் உள்ளேயும் இரவில் வெளியேயுமாக அவனது ஒவ்வொருநாளும் அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டிருந்தன.
காற்றில் எந்நேரமும் பறந்து கொண்டிருக்கும் அந்தத் துகல்கள் முதலில் மூச்சிறைப்பை உருவாக்கும்; பின்னர் இரத்த வாந்தி; அடுத்து கண்கள் பார்வையின்றி போகும். தன்னால் ஓர் இருண்ட வாழ்க்கைக்குள் பார்வையற்று வாழ முடியாது என அவன் பயத்துடனே இருந்தான்.
நேற்று இரவில் சாலையெங்கும் கிடந்த பிணக்குவியல்கள் அவனுக்குக் குமட்டலை உண்டாக்கின.இன்றும் அப்பிணங்களையும் பார்வையற்று அல்லாடிக் கொண்டிருப்பவர்களையும் தாண்டித்தான் உணவு வேட்டைக்குப் போக வேண்டும். வெளிச்ச மிருகம் அடங்கும்வரை காத்திருந்தான். மணி 7.45ஐ தாண்டியும் இருளவில்லை. பயமும் ஆச்சரியமும் அவனைச் சூழ்ந்து நின்றன. மணி 8.10ஐத் தொட்டது. அபார வெளிச்சம் வெளியே. அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. தலை கனத்தது. விழிகள் நிலையாக இல்லை. அதிர்ந்து கொண்டிருந்தன. அறை மெல்ல அதீத வெளிச்சமாக உருமாறிக் கொண்டிருந்தது.
கதறிக் கொண்டு வெளியில் வந்தான். நீர் வடியும் கண்களைக் கசக்கிவிட்டுப் பார்த்தான். ஒன்றுமற்ற ஒரு வெளிச்ச வெளி மட்டும் விரிந்திருந்தது. அவனால் வேறெந்த ஒன்றையும் அங்குக் காண முடியவில்லை. அங்கிருந்த கட்டிடங்கள், வீடுகள், மனிதர்கள் என எதுவுமே அவனுக்குத் தெரியவில்லை. ஓர் அடர்ந்த வெளிச்சம் மட்டுமே வெண்மை பூத்து விரிந்திருந்தது.
ஒரு வெளிச்சத்திற்குள் அவன் பார்வையற்று நின்றிருந்தான்.
ஆக்கம் கே.பாலமுருகன்