கவிதையை விசாரிக்காதீர்கள்: ஒரு பரந்தவெளி பார்வை

(இங்குக் கவிதைகள் எனப்படுவது ஆழமும் விரிவும் கொண்டு புனையப்படும் கவிதைகளையே குறிக்கும்)

நாம் கவிதையை இரசிக்க இயலாத ஒரு சமூகத்தினுள் இருக்கிறோமோ? அல்லது நம்மை அறியாமல் கவிதைக்கான வாசிப்பை இழந்துவிட்டோமோ என்கிற ஒரு தயக்கம் தொடர்ந்து நெருடிக் கொண்டே இருக்கிறது. மௌனம் இதழ் வெளிவந்து கொண்டிருந்த காலக்கட்டத்தில் கவிதையின் மீதான இரசனை சார்ந்த வாசிப்பும் உரையாடலும் கூடுதலாகவே நிகழ்ந்து கொண்டிருந்தன. ஆனால், இப்பொழுதெல்லாம் கவிதைக்குக் கிடைக்கும் ‘சூப்பர், அருமை, வாழ்த்துகள்’ போன்ற முகநூல், இமோஜி விமர்சனங்களைப் பார்க்கும்போது கவிதை எப்படிப் புரிந்துகொள்ளப்படுகிறது என்கிற ஆழ்ந்த கவலையும் தொற்றிக் கொள்கிறது. ஒரு கவிதை உணர்வில் சிறு சலனத்தைக்கூட தூண்டிவிடவில்லை எனில் அங்கு இலயித்தல் நிகழாது. கவிதையோடு கலத்தலுக்கு வாசக மனம் தயாரில்லை என்றால் அங்கு உரையாடலும் நிகழாது. உரையாடலற்ற, கலத்தலற்ற ஒரு வெளியில் கவிதைகள் தனித்துவிடப்பட்டுக் கடக்கப்படுகின்றன.

இப்பொழுதெல்லாம் கவிதையை விசாரிக்கும் போக்கை அதிகம் பார்ப்பத்துண்டு. ஒரு கவிதையின் ஏதோ ஒரு வரியை அல்லது வார்த்தையை மட்டும் அதன் மொத்த கூட்டு ஆன்மாவிலிருந்து பிரித்தெடுத்து அதைக் கொண்டு விசாரணையைத் துவங்குபவர்கள் கவிதையோடு முழுமையான உறவை வளர்த்துக் கொள்ள முனையவில்லை என்பதை இரசனை தேக்கம் என்றே சொல்ல முடியும். காதல் என்கிற ஒரு வார்த்தை கவிதையில் வந்துவிட்டால் உடனே எழுதுபவன் யாரையோ காதலிக்கிறான் என்றும் அது யாரென்றும் மொத்த கவிதை கொடுக்கும் உணர்வையும் புறந்தள்ளிவிட்டு விசாரணையில் இறங்கிவிடுவார்கள். இது எப்படிப்பட்ட அந்நியப்படுதல்?

நான் யாரோ ஒரு அம்முவின் கதைகள் என ஒரு கவிதை எழுதுகிறேன்.

அம்மு

இப்படியொரு மழைநாளில்

நீ என்னுடன்

இருந்திருக்கலாம் அம்மு.

இடியெழுப்பும் ஓசைகளில்

சின்னஞ்சிறு கைகளால்

உன் சிவந்த காதுகளைப்

பொத்தி விம்முகிறாய்.

இந்த மழைப்பொழுது

உனது குறும்புகளை

இழந்து பேய்கிறது.

உன் விரல் நுனியில்

விழும் சாரல் துளிகளை

என்னிடம் காட்டி

மழையை வென்றுவிட்டதாய்

பெருமிதம் கொள்கிறாய்.

நீயில்லாத ஒரு தருணத்தில்

மழை யாருக்காகப்

பெய்கிறது?

உன் உள்ளங்கையில்

அடங்காமல் வழிந்துவிடும்

மழையைக் கோபத்துடன்

நோக்குகிறாய்.

உன் சிரிப்பொலி

கேளாத மழைநாள்

வெறும் இரைச்சலாகவே

நீடிக்கிறது.

இப்படியிருக்கையில் நீ

எப்பொழுது பிறப்பாய் அம்மு?

ஒவ்வொரு மழைநாளிலும்

வந்துபோகும்

யாரோ ஓர் அம்முவின் கதைகள்.

இக்கவிதையைப் படித்துவிட்டு இவை முழுவதும் உருவாக்கும் கணங்களில் இலயித்துவிடாமல் என்னிடம் பலரும் கேட்டது யார் அந்த அம்மு என்கிற விசாரணை கேள்வியே. இங்கு அம்மு என்பவள் இன்னும் பிறக்காத நிலையில் உள்ளாள். அவள் இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. அம்மு என்பது ஓர் உருவகமாக பாவிக்க மட்டுமே மனம் தூண்டுகிறது என்பதாலே விசாரணைகள் தோன்றுகின்றன. கவிதை என்பது திட்டவட்டமான உருவகத்தால் ஆன இறுக்கமான கலை வடிவம் அல்ல. அது நம்மை ஒரு பரந்தவெளிக்குக் கொண்டு வரும் அனுபவம். அரூபமான மாயை. அம்மு எனும் வார்த்தை கொடுக்கும் அர்த்தத்தை மட்டுமே நோக்கி நம் மனம் செல்லுமாயின் கவிதைக்குள் கடைசிவரை நம்மால் கலந்திடல் முடியாது. கவிதை உருவாக்கும் கணங்களில் சற்றே அமைதிப்படுவது போன்ற ஒரு தியானத்தில் நம் மனங்கள் இலயிக்க நமக்கு நேரமிருப்பதில்லை. ஒரு சிறுகதையில் வரிகள் கொடுக்கும் தெளிவை, நேரடியான அர்த்தப்பாடுகளைக் கவிதையும் கொடுக்க வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறோம். அத்தகையதொரு நிலை இல்லாதபோது நாம் கவிதையை அறிவுத்தளத்திற்குக் கொண்டு வந்து விவாதிக்கிறோம்; கேள்விகள் எழுப்புகிறோம்; விசாரணையை மேற்கொள்கிறோம். இங்குத்தான் கவிதை தனக்கான வாசகர்களை இழக்கவும் செய்கிறது.

கவிதை முழுவதும் உணர்வுத்தளத்தில் பயணிக்கும் ஒரு குழந்தை. குழந்தையின் மொழியைப் புரிந்துகொள்ள நாமும் குழந்தையாக வேண்டும். அதன் அர்த்தமில்லாத சேட்டைகளில், குறும்புத்தனங்களில் கலந்திட வேண்டும். அவ்வளவுத்தான். அங்கொரு தருணத்தில் ஒரு மந்திரம் போல கவிதை தன்னை விரித்துக் காட்டும். அது ஒரு தரிசனம் போல உங்கள் மனத்தில் ஆழமாகும். அத்தகையதொரு அனுபவத்திற்குத்தான் கவிதை காத்திருக்கிறது. அதனுடன் உணர்வுத்தளத்தில் உரையாடத் தயாரில்லாத அவசரக்கால மனிதர்கள் அவர்களுக்குப் புரியும்படி கவிதை தெளிவான கருத்துகளை முன்வைக்க வேண்டும் என்கிற கோரிக்கையுடன் ஒரு கவிதையை வாசித்து இரசனையை வார்க்க முடியாமல் கைவிட்டுவிட்டுப் போய்விடுகிறார்கள்.

கவிதையின் அழகியல் அதன் பொருள் மயக்கத்தில்தான் உள்ளது. பொருள் தெளிவு என்பது ஒரு கட்டுரையில் அல்லது அறிவியலில் இருக்கலாம். ஆனால், கவிதை ஆடும் நடனத்தில் பொருள் வளைந்தும் நெளிந்தும் நெகிழ்ந்தும் பல சாகசங்கள் செய்து தன்னை வெளிபடுத்திக் கொள்ளும் நுட்பமான வேடத்தைப் பூண்டிருக்கும் என்பதை நாம் உணர்ந்தால்தான் கவிதைக்கான இரசிகனாக மாற இயலும்.

ஒரு சொல் அது புழங்குகின்ற மொழியில் கொண்டிருக்கும் பொருள்களை மட்டும் தெரிந்து கொண்டு ஒரு கவிதையைப் படிக்கத் துவங்கினாலும் அக்கவிதையின் ஆழத்தைச் சென்றடைய இயலாமல் பொருள்களையும் அர்த்தங்களையும் தேடியே களைத்துவிட நேரிடும். இதனால்தான் கவிதை பெரும்பான்மையான அளவில் தன் வாசகர்களை இழக்கவும் நேரிடுகிறது. கவிதை ஒரு மொழியின் குறியீட்டுத் தளத்தில் நின்றப்படியே மொழிக்கான பல சாத்தியங்களை விரிவாக்கி வாழ்வையும் தருணங்களையும் சொல்லிக் கொண்டிருக்கிறது. நாம் மொழியில் ஒரு சொல் வழங்குகின்ற பொருள்களை மட்டுமே கவிதையைப் புரிந்து கொள்வதற்கான அளவுக்கோளாக எடுத்துக் கொண்டால் கவிதை கடைசிவரை தன்னைக் காட்டிக்கொள்ளாது.

தேவதேவன் கவிதை

ஒரு சிறு குருவி

என் வீட்டுக்குள் வந்து
தன் கூட்டை கட்டியது ஏன் ?

அங்கிருந்தும்
விருட்டெனப் பாய்ந்தது ஏன் ஜன்னலுக்கு ?
பார் ஜன்னல் கம்பிகளை உதைத்து
இப்பவும் விருட்டென்று தாவுகிறது அது
மரத்திற்கு
மரக்கிளையினை
நீச்சல்குளத்தின் துள்ளுபலகையாக மதித்து
அங்கிருந்தும் தவ்விப்பாய்கிறது
மரணமற்ற பெருவெளிக்கடலை நோக்கி

சுரேலென தொட்டது அக்கடலை என்னை
ஒரு பெரும் பளீருடன்
நீந்தியது அங்கே உயிரின்
ஆனந்த பெருமிதத்துடன்

நீந்தியபடியே திரும்பிப் பார்த்தது தன் வீட்டை

ஓட்டுகூரையெங்கும்
ஒளியும் நிழலும் உதிர் சருகுகளும்
உள் அறைகளெங்கும்
சிரிப்பும் அழுகையும் மரணங்களும்

தேவதேவனின் கவிதை மொழி என்பது நாம் புரிந்து வைத்திருக்கும் எல்லைகளைக் கடந்தவை. ஒரு சிறு குருவி என்கிற இந்தக் குறியீடு ஒட்டுமொத்தமாக மானுட வாழ்வின் வரையறைகளை எள்ளி நகையாடிவிட்டுப் பறக்கிறது. வாழ்வின் யதார்த்தம் நம் கண் முன்னே நிகழ்கின்றது என்றால் வாழ்வின் கவித்துவம் நமக்கு மேலே நின்று நம்மைக் கூர்ந்து கவனிக்கிறதோ என்பது கவிதைகளை வாசிக்கும்போது எழும் உள்ளெழுச்சி உணர்த்திக் கொண்டே இருக்கின்றது. கவிதை வாழ்வின் மேலான தரிசனம் என்றால் அது மிகையில்லையே.

குருவியின் வீடு ஒருபோதும் நம் வீட்டுக்குள் அவை கட்டும் குச்சிகளான கூடுகள் அல்ல; நம் கூரைகளைத் தாண்டி மனித வரையறைக்குள் இல்லாத பரந்தவெளித்தான் அதன் இருப்பு. பறவையும் ஒரு கவித்துவமான அடையாளம்தான். கவிதை கவித்துவமாக மாறி நம் அகத்தினுள் உருவாக்கும் விரிவாக்கம் ஒரு பேரனுபவத்திற்குள் நம்மை தள்ளிவிடும்.

கூச்சலும் புகார்களும் உணர்ச்சிப் பொங்கல்களும் பிரச்சாரங்களும் என எதுவுமே அற்ற ஒரு கவிதை எண்ணற்றவைகளை நம் கண் முன்னே மந்திரம் போல நிகழ்த்திக் காட்டிக் கொண்டே இருக்கும் என்பதற்கு தேவதேவனின் இக்கவிதை பெருஞ்சான்று. கவிஞனை மீறி கவிதை மரணமற்ற ஒரு பெருவெளிக்கடலை நோக்கி நகருமாயின் அதுவே நித்தியமான கலையாகும். அத்தகைய ஓர் அனுபவத்தை அடையக்கூடிய மனப்பாங்கினை நாம் எந்த அளவில் உருவாக்கிக் கொள்கிறோம்? கவிதையின் முன் நாம் மேற்கொள்ளும் அத்தனை விசாரணைகளும் நம் கவிதை மனத்தை இழக்க வைத்து விடுகிறது. இதனால் யாருக்கும் எந்த நட்டமும் இல்லை. கவிதை அதன் பொருட்டு நித்தியமான ஒரு பரந்தவெளியில் திரிந்து கொண்டே இருக்கும். அதற்கான முனிவன் அக்கவிதையைக் கண்டு தரிசித்து அதன் மேலான ஓர் உலகைக் கண்கொண்டு பார்த்துப் பரவசமடையும்வரை அதன் பறத்தல் தொடரும். நாம்தான் கவிதைக்குக் கீழே அறிவுக்கணத்துடன் நம்மை மேதாவிகளாகப் பாவித்துக் கொண்டு குழந்தைமையை இழந்து விட்டிருப்போம். எவ்வளவு கொடூரமான இழத்தல் அது?

மரத்தின் வீடு

யார் சொன்னது,
மரம் தனக்கோர்
வீடு கட்டிக் கொள்ளவில்லையென்று?

தனது இலைகளாலும் கிளைகளாலும்
கொம்புகளின் அற்புத அமைப்புகளாலும்
தனக்குள்ளே மரம் தனக்கோர்
வீடு கட்டிக் கொண்டுள்ளது

மழை புயல் வெயில் பனி திருடர்கள்
ஆகியவற்றிடமிருந்து நம்மைப்
பாதுகாக்கவே வீடு என அறிந்திருந்த
மனிதனைத் திகைக்க வைத்தது அதன் வீடு

காலம், மரணம், வேதனை ஆகியவற்றிலிருந்து
தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும்
தன் மலர் காய் கனி மற்றும்
இவை எல்லாமுமான தனக்காகவே
அது தனக்கோர் வீடு கட்டிக்கொண்டுள்ளது

-கவிஞர் தேவதேவன்

-கே.பாலமுருகன்