தொடர்க்கதை: தேவதையின் குறிப்புகள் – பாகம் 1: கே.பாலமுருகன்

முதல் பக்கம்: மரணக் குறிப்பு

17 ஜூன் 2018: இரவு 8.10

“இந்த மனுசன் கத எழுதறன் நாவல் எழுதறன்னு ஒரு வேலைக்கும் போகாம… உறுப்படாம போச்சு. கடனுக்கு இருந்த வீட்ட வித்துட்டு இப்படி சேவா வீட்டுல கெடந்து செத்துருச்சி…”

சாந்தி அத்தையின் குரல் காலையிலிருந்து புலம்பலை விட்டப்பாடில்லை. ஒப்பாரி ஓய்ந்தும் மிச்சமான முனகல்போல ஒலித்துக் கொண்டிருந்தது. வேலைகளை இழுத்துப் போட்டுச் செய்து கொண்டு பரப்பரப்புடனே இருந்தார். முதலிலிருந்து கீழே இறங்கி வர மனமில்லாமல் தயங்கித் தயங்கியே அறையில் காத்திருந்தேன். யாரெல்லாம் இருப்பார்? என்னவெல்லாம் கேட்பார்கள்? என்ன பதில்கள் சொல்ல வேண்டும் என்று ஒரு பக்கம் துக்கமும் இன்னொரு பக்கம் பயமும் மனத்தினுள் சூழ்ந்து பெரும் அணையை உருவாக்கியிருந்தன.

அவற்றை கடந்து வெளிவருவது முடியுமா என்கிற யுத்தம் துவங்கி ஒரு மணி நேரம் கடந்து இப்பொழுது தேற்றிக் கொண்டு கீழே இறங்கினேன். காலையில் அவசரமாக சாப்பிட்டது மட்டும்தான். பசி எல்லையை மீறியிருந்தது. உடனே சாப்பிட சென்றால் சாவு வீட்டில் அது விரோதமானதாகிவிடும் என்பதால் சற்றே பயந்து படிக்கட்டின் அருகே சுவரில் சாய்ந்து நின்று கொண்டிருந்தேன்.

வீட்டில் ஊதுபத்தி வாடை இன்னமும் சூழ்ந்திருந்தது. வரவேற்பறையைச் சுத்தமாகக் கழுவிய பிறகு ஒரு சிறிய மேசையில்  விளக்கை ஏற்றி வாழைச்சீப்பில் ஊதுபத்திகளையும் குத்தி அப்பாவின் படத்திற்கு முன்னே வைத்திருந்தார்கள். சாந்தி அத்தைத்தான் அனைத்தையும் பரப்பரப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தார். மற்றவர்களுக்குச் சோர்வும் தூக்கமும் மிகுந்த களைப்பை உருவாக்கிவிட்டிருந்தன. தம்பி சுடுகாட்டிற்குப் போய்விட்டு வந்த களைப்பில் வரவேற்பறையின் மூலையிலேயே வேட்டியுடன் அப்படியே படுத்து உறங்கிவிட்டான். வீட்டில் எனக்குப் பிறகு ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னர் பிறந்தவன். இன்னும் எனது தோளுயரத்தைத் தாண்டவில்லை. முகம் கறுத்திருந்தான். படிப்பிலும் சரியில்லை என்றே சில புகார்கள் நேற்றைய சலசலப்பில் கேட்டன.

இன்னும் சில நிமிடங்களில் பசி மயக்கம் என் பிரக்ஞையைத் தாண்டி வெளிப்படுவிடும் என்ற பயம் வந்துவிட்டது. இதற்கு மேலும் பொறுமை நல்லதில்லை என சமையலறையில் மூடப்பட்டிருந்த நீண்ட வெள்ளிப் பாத்திரங்களில் இருந்த இடியாப்பத்தைப் போட்டுக் கொண்டு கறியை மெல்ல ஊற்றினேன். நேற்றிரவு ‘பெர்த்’திலிருந்து வந்திறங்க 6 மணி நேரம் எடுத்துக் கொண்டது. கோலாலம்பூரிலிருந்து இன்னொரு விமானம். பினாங்கு வந்து சேரும்போது அப்பா இறந்து அரை மணி நேரம் ஆகியிருந்தது.

கைப்பேசியை முடுக்கியதும் நிறைய அழைப்புகள் குறித்த குறுந்தகவல் வந்து குவிந்தன. 30000 அடி உயரத்தில் வெறும் மேகக்கூட்டங்களுக்கிடையில் நான் பயணித்துக் கொண்டிருந்த சமயம் எனக்கு வேறெந்த நினைவுகளும் அப்பொழுது ஏற்படவில்லை. தூரமும் உயரமும் எண்ணமற்ற ஓர் அமைதியை மட்டுமே உருவாக்கியிருந்தன. அப்பாவின் இறுதி மூச்சு பூமியை விட்டுக் கரையும் முன் அவர் என்ன நினைத்திருப்பார்? ஒவ்வொருமுறையும் வாய் திறந்து மீண்டும் மூடும்போது ஒருமுறையேனும் நந்தினி என்று உச்சரித்திருப்பாரா? எனது பிடிவாதத்தின் மீது அத்தனை வெறுப்பாக இருந்தது.

“நந்தினி அப்பாவுக்குத் தேதி கொடுத்தானுங்கமா. வீட்டுக்குக் கூட்டிட்டு வந்துட்டோம். மூச்சு இழுத்துக்கிட்டு இருக்குடி. உடனே வந்துருடீ…”

அப்பாவை வீட்டிற்குக் கொண்டு செல்லவிருந்த அன்றைய தினம் உடனே ஏர் ஆசியாவில் பயணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்தும் மனம் கணத்துக் கொண்டிருந்தது. ஒருமுறையேனும் அவர் முழுவதுமாக மறையும்முன் அவரைப் பார்த்துவிட வேண்டும் என்று மட்டுமே மனம் தகித்துக் கொண்டிருந்தது. ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் பிறந்த மண்ணில் கால் பதிக்கும்போது கேட்ட முதல் செய்தி என்னை உடைத்தெறிந்தது.

பினாங்கு சித்தி வாசல் பக்கமே வெளியே வைக்கப்பட்டிருந்த சோபாவில் அமர்ந்து கொண்டே என்னைப் பார்க்கும் விதம் குரூரமாக இருந்தது. அவருக்குள் அடக்கி வைத்திருந்த பல கேள்விகள் உதட்டைத் தாண்டி வெடித்துச் சிதறக் காத்திருந்தன. என்னை நேருக்கு நேர் பார்த்தால் நிச்சயமாக களேபரத்தைத் துவங்கிவிடுவார் என்று என்னால் ஊகிக்கவும் முடிந்தது. முட்டிக்கு மேல் அணிந்திருந்த குட்டை காற்சட்டை வெளியே செல்ல எனக்கு அசூசையை உருவாக்கியிருந்தது. மீண்டும் படிகளில் ஏறி மேலேயுள்ள தம்பியின் அறைக்குள் சென்றேன். நான் இங்கே இருக்கும் வரை இந்த அறை என்று சொல்லிவிட்டார்கள்.

மீண்டும் பெர்த் திரும்பும் பயண ஏற்பாட்டைப் பற்றி இன்னமும் சிந்திக்கவில்லை. கைப்பேசியில் பிறகு பார்த்து முன்னமே திகதியை முடிவு செய்து கொள்ளலாம் என்றாலும் மனம் என்னவோ இன்னும் இலேசாகவில்லை. கணம் கூடிக்கொண்டே போனது. அப்பாவிற்கு இறப்பதற்கான வயதுதான். 92ஐத் தாண்டி ஒருவன் நிலைத்திருந்தால் அவனது இருப்பு பலரின் விவாதங்களாகவே மாறிவிடும்.

“நல்ல சாவு! என்ன பெருசா சொத்து சேர்க்கல… கடைசி வரைக்கும் கடன்லயே ஓட்டிட்டான்…”

90ஐ ஒருவன் கடந்து இறந்துபோனால் அவன் என்ன நோய் வந்து செத்தாலும் அது நல்ல சாவுத்தான். மூளை எதையுமே சுதாரித்துக் கொள்ள முடியாமல் தடுமாறியது. தம்பியின் அறைக்கு எதிரில் அப்பாவின் அறை. அவர் மூச்சிழுத்துப் போராடிக் கொண்டிருந்த கடைசி சில நாள்களைக் கடைசிவரை கவனித்துக் கொண்டிருந்த அறை. நான் ஆறு ஆண்டுகள் அருகில் இருந்து கவனிக்கத் தவறிய ஒருவர் அணுவணுவாக என் மீதான ஏக்கங்களைச் செதுக்கிய பொழுதுகள் இங்குத்தான் நிகழ்ந்திருக்கும். சத்தமில்லாமல் வெளியேறி அப்பாவின் அறைக்கதவைத் திறந்தேன். சாம்பிராணி வாடை மேலேயுள்ள அறை வரைக்குமே படர்ந்திருந்தது.

இந்நேரம் படையல் வைக்க அத்தை மீண்டும் பரப்பரப்பாகியிருப்பார். குறைந்தது சாவு வீட்டில் கருமக்கிரியை வரைக்குமாவது இருந்தாக வேண்டும். இல்லையென்றால் வாழ்நாள் முழுவதும் என்னைத் துரத்தும் சாபத்திற்கு ஆளாக்கிவிடுவார்கள். பெர்த்தில் ஆல்பர்ட்டுக்கும் சிந்துஜாவிற்கும் என்ன பதில் சொல்வது? பிறந்து மூன்று வயது மட்டுமே ஆன மகளை விட்டு இத்தனை மைல்களுக்கு அப்பால் நான் எதைத் தேடி வந்தேன்? அப்பா வாங்கிய தங்க மோதிரப் பரிசின் புகைப்படம் மட்டும் சுவரில் பத்திரமாக மாட்டி வைக்கப்பட்டிருந்தது. பலகை சுவர் அடுக்கடுக்காக அமைந்து படத்தின் இரு கீழ்முனைகளைச் சட்டத்தின் விளிம்பில் பிடி கொடுத்து அப்பா நேர்த்தியாக மாட்டியிருப்பதை அருகில் சென்றுத்தான் கவனித்தேன்.  2002 என்று நினைக்கிறேன். பத்திரிகையில் அச்செய்தி வந்ததும் அன்று முழுவதும் வீட்டிலுள்ள எங்களிடம் சொல்லி சொல்லி பெருமைப்பட்டுக் கொண்டிருந்தார்.

“பேரவைப் போட்டிலக்கூட பரிசு கெடைச்சதில்ல. இது பெரிய சாதனைத்தான?” என்று மக்கள் ஓசை பத்திரிக்கையின் அவருடைய தங்க மோதிரப் பரிசு தொடர்பான செய்தி வந்த பகுதியை மட்டும் கிழித்துப் புத்தகத்தில் ஒட்டிக் கொண்டார். அன்று அவர் சாப்பிடவும் இல்லை. கடைசியாக அம்மாவிடம், “எழுத்தாளனுக்கு இதெல்லாமும்தான் ஓர் அங்கீகாரம்…” சொல்லிக் கொண்டிருந்தபோது நான் அப்படியே தூங்கிவிட்டிருந்தேன்.

தான் ஸ்ரீ சோமா அரங்கில் அவருக்குக் கிடைத்த தங்க மோதிர பரிசு படத்தில் அப்பா எப்பொழுதும் அணியும் பாத்தேக் சட்டையுடன் கம்பீரமாகக் காட்சியளித்தார். அவருக்குப் பக்கத்தில் நின்றிருந்த கருணாவுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டிருந்தது. அப்பாவின் எழுத்துலக நண்பர். கடைசியாக 2010ஆம் ஆண்டில் அப்பாவை மருத்துவமனையில் சேர்த்திருந்தபோது இங்கு வந்திருந்தார். அவருக்கும் நீரிழிவு நோயால் வலது காலை முட்டிவரை நீக்கியிருந்தார்கள். பொய்க்கால் அணிந்தும் திடமாக நடக்க இயலவில்லை. தடுமாறியப்படியே மகனின் துணையுடன் வந்து ஒரு மணி நேரம் இருந்துவிட்டுப் போனார். குளுவாங்கில் இருந்ததாக நினைவு. நெடுந்தூரப் பயணம் என்று அழுத்துக் கொண்டார். அதன் பின்னர் நான் அவரைப் பற்றி எதையும் கேள்விப்படவில்லை. பழைய கைப்பேசி எண்ணைத் தொலைத்துப் பலநாள் ஆகிவிட்டன. மீண்டும் அதனை நினைவுக்கூர்ந்திடவும் மனமில்லை.

அப்புகைப்படத்தில் அப்பாவும் அவரும் நின்றிருக்கும் விதம் பெரும் சாதனையாளர்களைப் போன்று காட்சியளித்தது. அப்பாவிடம் இருக்கும் அந்த மிடுக்கு மிகவும் செயற்கையானது. வீட்டில் நொந்து நொடித்துக் கிடப்பார். யாராவது வந்துவிட்டால் வலிந்து ஒரு மிடுக்கை உடலுக்குள் உருவாக்கி சிரமப்படுவார். எழுத்தாளர்கள் அப்படித்தான் இருக்க வேண்டும் என்று அவரே உருவாக்கிக் கொண்ட ஓர் உடல்மொழி அது. ஆனால், அவருக்குச் சற்றும் ஒவ்வாமல் மிகையாகவே உறுத்திக் கொண்டிருக்கும்.

புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், எம்.ஏ.இளஞ்செல்வன் என்று பலரின் புத்தகங்கள் மேசையின் ஓரங்களில் அடுக்கப்பட்டு உயர்ந்திருந்தன. அப்பாவின் புத்தக அலமாரியிலிருந்து வெளியில் எடுத்து வைக்கப்பட்டிருந்ததை மீண்டும் அவர் வைப்பதற்குள் இறந்துவிட்டார் அல்லது நோய்ப்படுக்கையில் சரிந்திருப்பார். சதா புத்தகங்கள் அவரைச் சூழ்ந்திருக்கும். புதுமைப்பித்தன் சிறுகதைகள் தொகுப்பிற்குக் கீழே ஒரு வெண்தாள் மடித்துச் செருகப்பட்டிருந்தது. புத்தகத்தை மெல்ல தூக்கி அத்தாளை எடுத்துப் பிரித்தேன். எழுத்தாளர்கள் எப்பொழுதும் தங்களின் மனத்தை எழுத்துக்களாக்கி எங்கேயாவது பதுக்கி விடுவார்கள். எழுதி பல மாதங்கள் ஆன கடிதமாக இருக்கக்கூடும்.

வாசகர் மறுப்புக் கடிதம்: தினமலர்

இரண்டு வாரத்திற்கு முன் தங்களின் பத்திரிகையில் வெளிவந்த என் மீதான விமர்சனத் தாக்குதல் எனக்குப் புதிதல்ல. என் எழுத்துலக வாழ்க்கையில் நான் இதைவிட கடுமையான பல துரோகங்களையும் இழிவுகளையும் கடுமையான விமர்சனங்களையும் சந்தித்துப் பழகியவன். மணிமாறனின் விமர்சன நடை எழுத்துத் தர்மத்தைப் பின்பற்றவில்லை. அதனை அப்படியே பிரசுரித்த தினமலரைக் கண்டிக்கிறேன். சிலவேளைகளில் எழுத்து நியாயங்கள், விமர்சன சுதந்திரம் இதனைத் தாண்டி அவரைவிட வயத்தில் மூத்தவர்களுக்குக் கொடுக்க வேண்டிய குறைந்தபட்ச மரியாதை கடைப்பிடித்தலுடன் விமர்சனம் இருந்திருந்தால் அதனை விமர்சனம் என்று அதற்குரிய மதிப்பை வழங்கலாம். ஆனால், மணிமாறனின் பேச்சுத் திமிரைப் பாரதியின் திமிருக்கு நிகராக மறுவாரத்தில் ஜெசிக்கா போன்றவர்கள் எழுதியது சரியல்ல. இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். விமர்சனம் என்பது படைப்பை நோக்கியதான உரையாடலைக் கொண்டிருக்க வேண்டும். எழுத்தாளனை மனவுளைச்சலுக்கு ஆளாக்கும் எந்த உரையாடலும் பேச்சும் எழுத்தும் தீவிரம் கிடையாது; தீவிரவாதம் என்று வேண்டுமென்றால் சொல்லலாம். மணிமாறன் பொது மன்னிப்புக் கேட்கவில்லை என்றால் எனது கண்டனம் தொடரும்.

இப்படிக்கு

மணிமாறன் சொன்னதைப் போல

‘எழுத்துலகில் இதுவரை எந்த நூலையும் பிரசுரிக்க வக்கில்லாத’

ஏழை எழுத்தாளன்

அப்புராஜ்.

   அப்படியே கட்டிலில் ஸ்தம்பித்து அமர்ந்துவிட்டேன். அப்பா எப்பொழுதோ எழுதி அதனைப் பத்திரிகைக்கு அனுப்பும் முன்னே எல்லாம் கைவிடப்பட்டுவிட்டது. மீண்டும் அதே வாக்கியங்களைப் படித்துக் கொண்டிருந்தேன். எப்பொழுதுமே ஆறாத இரணம் அது. ஆழ்மனத்திலிருந்து கொப்பளித்தக் குரல். எட்டும் முன்பே சுருங்கி மடிந்து வெறும் வார்த்தைகளாக மட்டும் கடிதத்தில் மீந்திருந்தன.

‘எழுத்துலகில் இதுவரை எந்த நூலையும் பிரசுரிக்க வக்கில்லாத’

மீண்டும் அதே வரியில் மனம் சிக்கிக் கொண்டு தவித்தது. ஆஸ்ட்ரோலியாவிற்குப் பிடித்தவருடன் வீட்டைவிட்டு அப்பாவின் ஏழ்மையை எதிர்த்துத் தப்பியோடி இப்பொழுது என் வங்கியிருப்பில் பல ஆயிரம் டாலர்கள் இருந்த என்ன பயன் என்று மட்டுமே மனம் எரிந்து கொண்டிருந்தது. எல்லாம் இந்த ஒரு வரியின் முன்னே அர்த்தமிழந்து நிற்கிறேன். கைகள் நடுங்குகின்றன. அப்பாவின் மீது நிகழ்த்தப்பட்ட இந்த எதிர்ப்பை மனம் சற்றும் ஏற்றுக்கொள்ள முடியாமல் தடுமாறின. அக்கடிதத்தை நான் பார்க்காமலே இருந்திருக்கலாம் என்று அப்படியே நிலைக்குத்தி சுவரையே வெறித்துக் கொண்டிருந்தேன். காலம் என்னைச் சுற்றி ஒரு பெருஞ்சுவரை எழுப்பிக் கொண்டிருந்தது.

“என்னடி? என்ன லூசு மாதிரி உக்காந்திருக்க?” அத்தைத்தான் உள்ளே வந்தார்.

“அத்த அப்பா இறக்கறதுக்கு முன்ன ஏதாச்சம் பெரச்சனைல இருந்தாரா?”

அத்தை சற்று நேரம் நிதானித்தார். படியேறி வந்ததில் அவருக்கு மூச்சிரைத்தது.

“உங்கப்பன்னா… பெரச்சனைக்கா சொல்லணும்… ஊர் முழுக்க சண்டெத்தான். சரியான சண்ட கோழி… நல்ல வேள இந்த பேஸ் புக்கு இல்ல. அதயும் தொறக்க சொல்லி கேட்டாரு. ஏதோ அவரெ பத்தி திட்டி எவனோ எழுதிருக்கான்னு… நாந்தான் வேணானு சொல்லிட்டன். டென்ஷந்தான…?”

கட்டிலில் அப்படியே சரிந்த அத்தையின் தேகத்தில் முதுமை மெல்ல படர்ந்திருந்ததைக் கவனிக்க முடிந்தது.

“ஏண்டி கேக்கற? ஏதாச்சம் ஆராய்ச்சி பண்ணப் போறீயா? இல்ல… வெளிநாட்டுக்கு ஓடப்போறியா? கல்லு மனசுடி ஒனக்கு…”

வந்ததிலிருந்து அத்தை ஏவும் எந்த வார்த்தையும் என்னைக் காயப்படுத்தவில்லை. அவர் அன்பின் மிகுதியில் எழும் வெறுப்பில் மட்டுமே பேசிக்கொண்டிருந்தார். நான் பெர்த் போன மறுவருடமே அவருடன் கைப்பேசியில் பேசத் துவங்கிவிட்டேன். மீண்டும் வந்துவிடும்படி அவர் கெஞ்சாத நாள் இல்லை. எனக்குத்தான் வரட்டுக் கௌரவம்.

“அப்பாவோட கதைங்க எங்க வச்சிருக்காருன்னு தெரியுமா?” எனது கண்கள் அவருடைய அலமாரியை அலசி படர்ந்தன.

இந்த ரூம்புல எங்க இருக்குன்னு உன்னால கண்டுபிடிக்க முடிஞ்சிருச்சின்னா எடுத்துக்கோ… எது எங்க இருக்குன்னு எனக்குத் தெரியாது…விட்டுரு…”

அத்தை புறமுதுகைக் காட்டியப்படியே புரண்டு படுத்துக் கொண்டார். அப்பாவின் புத்தக அலமாரியைத் திறக்கும்போது கைகள் நடுக்கம் குறையவில்லை. ஓர் எழுத்தாளனின் அகத்தினுள் கைகளை நுழைப்பதைப் போன்று தோன்றியது.

-தொடரும்

ஆக்கம்: கே.பாலமுருகன்

(அடுத்த தொடரில், நந்தினிக்கு அவளுடைய அப்பாவின் கதைகள் கிடைத்தனவா? எதற்காக அவள் அதனைத் தேட நினைக்கிறாள்? அவள் எப்பொழுது பெர்த் செல்ல முடிவெடுத்தாள்?)