சிறுகதை: ஆதியில் ஒரு மரமும் இருந்தது

 

காந்தம்மாள் வீட்டுக்கு எதிரே தெரியும் எரிந்த மரத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். முதலிலிருந்து வயிற்றை குடைந்து கொண்டிருக்கும் பசியையும் அவர் பொருட்படுத்தவில்லை. கடந்த மழைக்காலத்தில் மின்னல் தாக்கி எதுவுமே மிஞ்சாமல் வெறும் கருத்தத் தண்டுடன் காட்சியளித்த மரத்தின் கிளை நுனியில் வந்தமர்ந்த சிட்டுக்குருவி ஒன்று தலையை எல்லாத் திசைகளுக்கும் திருப்பிக் கொண்டிருந்தது. வலுவில்லாத மரப்பட்டை ஒன்று சிட்டுக்குருவியின் காலசைவின் வலிமை தாளாமல் சட்டென்று கீழே சரிந்து விழுந்தது.

“மா… சொல்றத சொல்லிட்டன். இனிமேல நீ இங்க இருந்தன்னா உனக்கு மரியாதை இல்ல. சுந்தர் உன் பக்கம் நிக்க மாட்டான். பொண்டாட்டின்னு வந்துட்டா… அப்புறம் நீ நடுரோட்டுலத்தான் நிக்கணும், சொல்லிட்டன்…”

வீட்டுக்கு  வெளியில் நிலவியிருந்த எப்பொழுதாவது மட்டுமே காந்தம்மாளுக்குக் கிடைக்கும் கொஞ்சம் அமைதியும் அவளுடைய மூத்த மகள் சரசினால் பறிப்போனது. கோபத்துடன் அவள் காலில் அணிய எடுத்துதறிய சப்பாத்து சற்றுத் தூரம் தள்ளிப் போய் விழுந்தது. அது கவனக்குறைவு அல்ல; கவன் ஈர்ப்பிற்காக விழுந்திருக்கலாம் என்று காந்தம்மாளுக்குத் தெரியும். அவருடைய பார்வை எரிந்த மரத்தின் விளிம்பில் இன்னமும் நுனியை உராய்ந்து கொண்டிருந்த சிட்டுக்குருவியின் கால்களின் மீதே இருந்தன.

“அடுத்த தடவ உன்னை நான் தொந்தரவு செய்ய மாட்டன்மா. இதுக்கப்பறம் நீயாச்சு உன் மகனாச்சு மருமகளாச்சு… ஒரு நல்ல மாட்டுக்கு ஒரு சூடுன்னு நீதான சொல்லுவ…”

எழுபத்து ஐந்து வயது காந்தம்மாளுக்கு அவர் இதுவரை வாழ்வில் செலவலித்த வார்த்தைகள் பற்றி எதுமே ஞாபகத்தில் இல்லை. பேசத் துவங்கினால் ‘உளறு வாய்’ என்றோ ‘மறதி கேஸ்’ என்றோ  மருமகளோ அல்லது பேரப்பிள்ளைகளோ கேலி செய்வார்கள் என்று காந்தம்மாளுக்குத் தெரியும்.

“அவருக்கு எவ்ள நல்ல மனசுன்னு தெரியுமா? உங்கம்மா வந்தா நான் பாத்துக்கறன்னு எந்த மருமகனாவது சொல்லுவாங்களா? நான் எதுக்குமா ச்சீ படணும் இங்க வந்து… இனிமே உன் இஸ்டம்…”

காந்தம்மாளின் மூத்த மகள் அதற்கு மேல் பொறுமை இல்லாதவளைப் போல தன்னைக் காட்டிக்கொள்ள வேண்டுமென்ற பிடிவாதத்துடன் குரலை உயர்த்தியே பேசிக் கொண்டிருந்தாள். அவள் சீண்டுவது தன்னையல்ல உள்ளே இருக்கும் மருமகள் சீதனாவை என்று ஒருவேளை காந்தம்மாளுக்குத் தெரிந்திருக்கலாம். கொஞ்சமும் அசராமல் தொடர்ந்து எரிந்த மரத்தின் மீது விழும் அடங்காத வெயிலை உற்று நோக்கிக் கொண்டிருந்தார்.

சற்று நேரத்தில் மேலும் இரண்டு சிட்டுக்குருவிகள் ஏற்கனவே மரத்தின் கிளையில் அமர்ந்திருந்த குருவியின் அருகாமைக்கு வந்து சேர்ந்தன. சீனியர் குருவி அப்பொழுதுதான் வந்து சேர்ந்த குருவியிடம் அதன் ஆணவத்தைக் காட்டுவது போன்று எரிந்த மரக்கிளையை ஒருமுறை கொத்திக் காட்டியது.

“ஆமாம்… இவுங்க வீட்டுல உங்கள தங்கத் தட்டுல வச்சு தாங்குவாங்க. போறதுன்னா அங்கய போய்ருங்க அத்த… எங்களுக்கு எதுக்குக் கெட்டப் பேரு…” நேற்றிரவில் அணிந்திருந்த நைட்டியை இன்னமும் மாற்றாமல் தலையில் போட்டிருந்த குண்டு கொண்டையுடன் வெளியில் வந்தாள் சீதனா.

“பேசுவீங்க… என் தம்பி வீட்டுல இல்லாதப்ப இங்க என்ன கூத்து நடக்குதுன்னு எங்களுக்கும் தெரியும்…”

“ஓ! ஏன் அத்த… எல்லாத்தையும் ‘கோல்’ போட்டு சொல்லிருவீங்களோ? இங்க என்ன அப்படிக் கொடுமை பண்றம் உங்கள?”

சட்டென்று அங்கிருந்து மூன்று குருவிகளும் பறந்துவிட எரிந்த மரக்கிளை இலேசாக அதிர்ந்தது. அதன் அசைவு அடங்க சில வினாடிகள் பிடித்தன. காந்தம்மாளின் பெரிய பொழுதுபோக்கே இந்த மரம்தான். இதற்கு முன் அடர்ந்து விரிந்து கிளைகளைப் பரப்பி நின்றிருக்கும் அதன் தோற்றத்திற்குள் மேலும் பல அர்த்தங்கள் கிடைப்பதாகவே தோன்றும். எங்கிருந்து இந்த மின்னல் வந்திருக்கும் என்று வானத்தைக் கோபத்துடன் பார்த்தார்.

“நியாயத்த கேளுங்க… அவுங்களுக்கு நிம்மதி இருக்கானு கேளுங்க… வாய்க்கிழிய பேசறீங்கள… எங்கம்மாவ என்கூட அனுப்பி வைக்க வேண்டியதுதான? என் தம்பிக்குத்தான் எதையுமே கேக்க வக்கில்ல…” மூத்த மகளுக்கே உள்ள வீரியமான குரலில் சரசு வெடித்தாள். அவளுடைய ஆவேசம் மூச்சிரைப்பில் கேட்டிருக்கலாம். சீதனா சற்று அமைதியானவளாய் குரல் தொனியை இறக்கினாள்.

“வேணும்னா கூட்டிட்டுப் போங்க… எங்களுக்கென்ன…? அவர ஒரு வார்த்தை கேட்டுட்டுக் கூட்டிட்டுப் போங்க. அதுக்காக நாங்க பெரிய கொடுமைக்காரவங்க மாதிரி பேசாதீங்க… அவங்கக்கிட்ட கேளுங்க இங்க என்ன குறைன்னு…”

“என்ன குறையா? உங்க பிள்ளைங்களுக்கு அவங்க செய்யாததா? பிள்ளைங்க போறதை எல்லாத்தையும்  அவுங்கத்தான அள்ளிப் போடறாங்க? வயசானவங்க… கொஞ்சம் ஓய்வு கொடுக்கறதுக்கு என்ன? அவங்களே கேட்பாங்கன்னு நெனைச்சிக்கிட்டு இருக்கீங்களா? வயசானவங்க எவ்ள கஷ்டப்பட்டாலும் அத வாய் தொறந்து சொல்ல மாட்டாங்க…”

சற்று நேரம் பதிலேதும் இல்லாமல் வெளிவரந்தா அமைதிக்குள் ஆழ்ந்தது. காந்தம்மாள் எரிந்த மரத்தின் மீதான தன் கவனத்தைக் கொஞ்சமும் நகர்த்தவில்லை; அல்லது யாருமே எந்தச் சலனமும் அதைக் களைக்கவும் முடியவில்லை.

“எங்க அம்மா இந்தக் குடும்பத்துல இருக்கற கடைசி பெரியவங்க… அவுங்களுக்கு ஒரு மரியாதை இருக்கு… நான் வரும்போது அம்மா இல்லாமல் வரமாட்டன்னு அவர்கிட்ட சொல்லிட்டுத்தான் வந்துருக்கன். நான் கூட்டிட்டுப் போறன்… அப்புறம் என் தம்பிய அவருக்கு அடிச்சி பேச சொல்லிக்குங்க…” என்று சரசு கூறிமுடித்துவிட்டு அம்மாவைப் பார்த்தாள்.

காந்தம்மாள் மரத்தின் காலுக்கடியில் முறிந்து விழுந்துகிடக்கும் ஆதி கிளையைக் கண்ணுற்றார். மரம் செழிப்பாக இருந்தபோது மிகவும் நேர்த்தியுடன் மரத்திற்கே பெரும் அழகுடன் இருந்த தடித்த கிளை அது. எப்படியும் நான்கைந்து குருவிக்கூடுகளைத் தாங்கியிருந்த கிளை. மரம் எரிந்தபோது அநேகமாக முதலில் விழுந்த கிளையும் அதுதான். விழுந்து பல நாள்கள் ஆகியிருக்கலாம் போல. பாதி உடல் இத்து மண்ணில் கரைந்திருந்தன. வெளுத்தக் கைலியுடன் தொங்கிப் போயிருந்த காந்தம்மாளின் கண்கள் அம்முறிந்த கிளையில் நிலைக்குத்தி நின்றன.

“எங்கம்மாவுக்கு யாரும் இல்லைன்னு மட்டும் நினைச்சிராதீங்க…கேக்கறதுக்கும் பேசறதுக்கும் மூத்த மக நான் இருக்கன்…ம்மா எழுந்துரு… துணிமணிலாம் எடுத்து வை… கெளம்பலாம்… இனி ஒருத்தன் பேச்சைக்கூட நான் கேக்கத் தயாரா இல்ல…”

சரசு அமைதியில் உறைந்திருந்த அம்மாவின் தோள்பட்டையை உலுக்கினாள். காந்தம்மாள் அதிர்ச்சியுடன் சரசைப் பார்த்துவிட்டு எழுந்தார். ஏதும் பேசாமல் வீட்டினுள்ளே நுழைந்து தன் துவைத்த துணிகளை எடுத்துப் பையில் வைக்கத் துவங்கினார்.

“ம்மா… எந்தத் துணியும் மிச்ச வைக்காத. இனிமேல் இங்க வர்றதைப் பத்தி நான் யோசிக்கணும்…”

சீதனா கொஞ்சம் பதற்றமாகி கைப்பேசியைத் தேடினாள். அந்நேரம் பார்த்து அதை எங்கு வைத்தாள் என்று ஞாபகப்படுத்த முடியாமல் காந்தம்மாள் கிளம்புவதையும் ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டாள். சீதனாவிற்குச் சரசைவிட சரசின் பேச்சின் மீது கொஞ்சம் கிளி பிடித்துக் கொண்டது. சரசு இவ்வளவுக்கு அதிகாரத்துடன் பேசி சீதனா கேட்டதில்லை என்பதால் ஏற்பட்ட பயத்தால் கொஞ்சம் ஸ்தம்பித்துவிட்டாள்.

“ம்மா… கெளம்பிட்டீயா?”

துணிப் பையுடன் வெளியே வந்த காந்தம்மாள்ளின் முகத்தில் சற்றும் சலனமில்லை. எதையோ இழந்து கொண்டிருக்கிறோம் என்கிற அளவில்கூட அவருடைய முகத்தில் துளியும் மாற்றமில்லை; பிசகலுமில்லை. இவையாவும் தான் திட்டமிட்டதைப் போன்று நடக்கிறது என்பதைப் போல எல்லாவற்றையும் மிகச் சரியாகச் செய்து கொண்டிருந்தார்.

இருவரும் வெளியில் வரும்போது சீதனாவின் மகன் அழும் குரல் தூரத்தில் கேட்டது. அவன் கடைசி அறையில் தூக்கத்திலிருந்து விழித்திருப்பான் போல. சீதனா அவனைத் தூக்குவதற்காக ஓடினாள்.

“வாம்மா போலாம்… உன் பேரனைக் கொண்டு வந்து சீன் போட்டு உன்னை இங்கயே இருக்க வச்சாலும் வைப்பா… நீ கெளம்பு…”

காந்தம்மாள் சரசின் வாகனத்தில் ஏறும் முன் அந்த எரிந்த மரத்தைப் பார்த்தாள். எரிவதற்கு முன்னும் பின்னும் எவ்வித மாற்றமுமில்லாத அதே சலனமற்றநிலையுடன் பொறுமையாக அசைந்து கொண்டிருந்தது. சரசு அம்மாவை நேராக வீட்டிற்கே கொண்டு சென்றாள். அடுக்குமாடி வீடு. ஆறாவது மாடிக்கு மின்தூக்கியில் ஏறி வீட்டை அடைந்தார்கள்.

“ம்மா… அவரு ராத்திரித்தான் வருவாரு. உன்னோட ரூம்பு அந்தச் சாமி ரூம்புத்தான். எதுத்தாப்புல படுத்துக்கலாம். நல்லா வசதியாத்தான் இருக்கும். நீ போய் குளிச்சிட்டுக் கொஞ்சம் சமைச்சிரு. எனக்கு வலது கைல பயங்கர வலி…” என்று சொல்லிவிட்டுத் தன் அறைக்குள் நுழைந்தாள் சரசு.

அங்கிருந்து இனி பார்த்துக்கொள்ள ஏதேனும் மரம் இருக்கலாம் என்று காந்தம்மாள் சன்னலைப் பார்த்து மௌனித்தார்.

-கே.பாலமுருகன்

மரணத் தண்டனையை அகற்றிய மனித உரிமை நாடாக மலேசியாத் திகழ வேண்டும் – 2020 தூர இலக்கின் முதல் வெற்றியாகட்டும்

‘கட்டாய மரண தண்டனை விதிக்கும் சட்டத்தை அகற்ற உத்தேசிக்கப்பட்டிருப்பதால் ஏற்கனவே மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கான மாற்றுத் தண்டனை குறித்து பரிசீலிக்க வேண்டியுள்ளது ‘

மேற்கண்ட கூற்றை பிரதமர்துறை அமைச்சர் லியு வுய் கியோங் இன்று  மனித உரிமை நாளை முன்னிட்டு கோலாலம்பூரில் அறிவித்துள்ளார்.

செய்தி: https://malaysiaindru.my/180287

 

 

இச்செய்தி என் கவனத்தை ஈர்த்ததற்கான முக்கியமான காரணங்களை முன்னிறுத்தியே இச்சிறிய பகிர்வாகும். 2018 அக்டோபருக்குப் பின்னுள்ள கணக்கின்படி உலகின் 106 நாடுகள் மரணத் தண்டனையை இரத்து செய்துவிட்டு அதற்கு மாற்றான தண்டனைகளையும் சீர்த்திருத்தங்கள் பற்றியும் ஆலோசித்துக் கடைப்பிடித்தும் வருகிறது. 26 பிப்ரவரி 2002ஆம் ஆண்டு செர்பியா நாட்டின் அரசு மரணத் தண்டனையை அதிகாரப்பூர்வமாக இரத்து செய்தபோது அவர்கள் உலகிற்குக் கவனப்படுத்திய காரணம் ‘ஒருபோதும் மரணத் தண்டனைகள் குற்றங்களைக் குறைக்க உதவாதபோது ஏன் அதனை அமல்படுத்த வேண்டும் என்கிற மையக்கேள்வியிலிருந்தே மரணத் தண்டனையை இரத்துச் செய்யும் கலந்துரையாடல் தொடங்கியது’.

ஆனால், தூக்குத் தண்டனையை இரத்து செய்துவிட்டால் குற்றம் அதிகரித்துவிடும் எனக் கவலைப்படுவதும் நியாயமான ஒரு சிந்தனையே. இருப்பினும், ஒவ்வொரு ஆண்டும் தூக்குத் தண்டனையால்தான் குற்றங்கள் குறைகிறது அல்லது குற்றவாளிகள் பயமுறுகிறார்கள் என்று ஆதாரத்துடன் நம்மால் நிரூபிக்க இயல்கிறதா? அதனைக் கலந்துரையாட வேண்டிய நிலையிலேயே நாம் உள்ளோம்.

 

அதே போல, Uzbekistan நாடு 2005ஆம் ஆண்டு மரணத் தண்டனையை முற்றாக நிராரிக்கும் சட்ட மசோதாவை அறிமுகப்படுத்தி 2008ஆம் ஆண்டு மரணத் தண்டனைச் சட்ட ஏட்டிலிருந்து நீக்கியது. நாகரிமடைந்து வரும் அரசு மனித உரிமையின் மீது அதீத கவனம் செலுத்துவதோடு மக்களுக்குப் பாதுகாப்பு அரணை அமைப்பதில் முன்னுரிமை செலுத்த வேண்டும் என்பதே அந்நாட்டின் அரசு மேற்கொண்ட கருத்தியல்வாதம் ஆகும்.

2007ஆம் ஆண்டு கசகஸ்த்தான் நாட்டின் பிரதமர் நுர்சுல்தான் அவர்கள் அனைத்துத் தூக்குத் தண்டனை கைதிகளுக்கும் ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டார். குற்றங்களை ஒழிக்க நாமும் குற்றத்தையே கையிலெடுக்கக்கூடாது என்பதே அப்போதையை வாதமாக முன்வைக்கப்பட்டிருந்தது. இப்படியாக ஒவ்வொரு நாடும் தனக்கே உரிய மேம்பட்ட கருத்துகளின் புரிதல்களின் அடிப்படையில் மரணத் தண்டனையை மறு ஆய்வு செய்து இரத்தும் செய்திருப்பது வரலாற்றுச் சான்றுகளாகும்.

உலகின் 193 நாடுகளில் 106 நாடுகள் மரணத் தண்டனைய இரத்துச் செய்துவிட்டது என்பது வரலாற்றில் மனித உரிமை மறுகண்டுபிடிப்பு செய்யப்பட்டுத் தொடர்ந்து அரசுகளால் நிறுவப்பட்டு வருவதைக் குறிக்கிறது. ஆகக் கடைசியாக கடந்த 2017ஆம் ஆண்டில் கென்யா நாடு மரணத் தண்டனையை இரத்துச் செய்துவிட்டிருக்கிறது. அடுத்து வரலாற்றின் அவ்வரிசையில் மலேசியா இடம்பெறுமாயின் இந்நாட்டின் குடிமகனாகப் பெரும் மகிழ்ச்சிக் கொள்வேன். கொலைக்குப் பதில் கொலைத்தான் என்பது மனோவியலின்படி  சரியான தீர்வாகாது. அதனைச் சட்டப்படுத்தி அமல்படுத்தினாலும்  சரியான அணுகுமுறையல்ல என்று பரவலாக உலகமெங்கும் வாதிக்கப்பட்டும் வந்திருக்கின்றன. இதனை நம் நாடு மறுஆய்விற்கு எடுத்திருப்பது நாம் மனித உரிமையிலும் வளர்ந்து நிற்கிறோம் என்பதற்கான தக்கச் சான்றாகும். குற்றத்திற்கான நிரந்தரத் தீர்வை எப்படி எங்கிருந்து அமலாக்கம் செய்ய வேண்டும் என்கிற சிந்தனைத்தூண்டல் நம்மில் ஆழம் கொள்ள வேண்டிய காலக்கட்டம் இது.

 

சட்டம், தவறிழைத்த ஒரு மனிதனைச் சீர்ப்படுத்த வேண்டுமே தவிர அவனை மேலும் மிருகமாக்கும் வழிமுறைகளைக் கையாளக்கூடாது. அதே போல ஒரு குற்றவாளியைக் கொன்று விடுவதன் மூலம் சமூக விழிப்புணர்வை உண்டாக்கி இனியொருவனும் தவறிழைக்காமல் பார்த்துக் கொள்ள முடியும் என்பதே ஒரு தவறான புரிதலாகும். 1981ஆம் ஆண்டு நாட்டிற்கே அச்சுறுத்தலாக இருந்த ‘போத்தாக் சீன்’ அவர்களை அரசு தூக்கிலிட்டது. காவல் துணை அதிகாரி திரு.குலசிங்கம் அவர்களைக் கொல்ல ‘போத்தாக் சீன்’ செய்த முயற்சி தவறியதும் உருவான காவல்படை சிறப்புக் குழுவால் போத்தாக் சீன் கைது செய்யப்பட்டார். ஆனால், போத்தாக் சீன்க்கு வழங்கப்பட்ட மரணத் தண்டனை ஒருபோதும் குண்டர் கும்பல் சிக்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை என்பதே வரலாறு நமக்குப் போதித்த உண்மை. ‘போத்தாக் சீன்க்கு’ பிறகு பெந்தோங் காளி என்று குண்டர் கும்பல் கலாச்சாரம் நாட்டில் மேலும் விரிவடைந்து தலைத்தூக்கியது என்பதே கசக்கும் உண்மை. ஆக, இவ்விடத்தில் மரணத்தண்டனையின் இலட்சியம்தான் என்ன என்பது கேள்விக்குறியாகின்றது.

தண்டனைகள் எல்லோருக்கும் நியாயமானதாக அமல்படுத்தப்படுகிறதா? காசுள்ளவன் சட்டத்தின் ஓட்டையிலிருந்து தப்பித்து விடுகிறான். சட்டப் பின்புலம் இல்லாதவன் தண்டிக்கப்படுகிறான். is it we applying a fare punishtment to all? இதுவே விவாதிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக அமலில் இருக்கும் மரணத்தண்டனைத்தான் இந்நாட்டின் குற்றவியல் பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வாக விளங்குகிறதா என்று கேட்டால் நிச்சயம் அதற்குரிய விடை நம்மிடம் இல்லை. சீர்த்திருத்தம் என்பதை அரசு மறுஆய்வு செய்து புதிய சட்டத்திருத்தங்களைக் கொண்டு வருவது என்பதே நாட்டில் நிலவும் பலவகையான குற்றவியல்களுக்குக் குறைந்தது ஒரு சிறிய தீர்விற்கு முன்னெடுப்பாக இருக்கும். தொழில்புரட்சி, அறிவியல் புரட்சி என நாடுகள் நகர்ந்து கொண்டிருக்கையில் அதற்கெல்லாம் அடிப்படையாக இருக்கும் அறிவுப்புரட்சியைக் கொண்டு இதுபோன்ற மனித அடிப்படை தொடர்பான விடயங்களில்  ஆராய்தல் வேண்டும். இனி தவறே செய்ய நினைக்காத ஒரு புதிய தலைமுறையை உருவாக்க வேண்டும்.

சிறைச்சாலைகள் ஒரு குற்றவாளி தன் குற்றத்தை உணர்ந்து மறுவாழ்வை அடைவதற்குரிய இடமாகத் திகழ வேண்டும். மிருகத்தனம் தலைத்தூக்குவதால் உருவாகும் மனப்பிசகல் காரணமாக குற்றம் இழைக்கும் ஒருவன் சிறைச்சாலை சென்று மேலும் மோசமாகி வெளியேற்றப்படக்கூடாது என்பதே மனித உரிமையின் தலையாய எதிர்ப்பார்ப்பாகும். வகுப்பில் ஒரு மாணவன் தசறிழைத்துவிட்டாலே அவனைக் குற்றவாளியைப் போல விசாரிக்காமல் முறையான அணுகுமுறையைக் கையாள வேண்டும் என்று நாம் கவனப்படுத்திக் கொண்டிருக்கிறோம். இந்த வாழ்க்கையும் ஒரு வகுப்பறை மாதிரியே. இதில் பலர் இன்னும் மனத்தளவில் மேம்படாமல் வளர்ப்புக் காரணத்தால் பாதிக்கப்பட்டு சிதைந்து கிடக்கிறார்கள். அவர்களுக்குரிய சரியான அணுகுமுறை கையாளப்பட்டாலே இங்கு மனிதத்திற்கு எதிரான செயல்களைத் தடுக்க முடியும்.

‘மண்ணில் பிறக்கையில் எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைத்தான்’ எனும் மூத்தோர் வாக்குப் பொய்யல்ல.குற்றத்திற்கான வேர்களைத் தேடி அதனைக் களையும் நூதனமான உளவியல் அணுகுமுறைகளைக் கையிலெடுக்க வேண்டியக் கடப்பாடு நமக்கு உள்ளது. குற்றங்களுக்குப் பகிங்கரமான தண்டனைகளை வழங்கி சமூகத்தில் ஓர் அச்ச உணர்வை உண்டாக்குவதன் மூலம் ஒருவனை அல்லது ஒரு சமூகத்தைச் சீர்ப்படுத்த முடியுமா என்று கேட்டால் நிச்சயம் அத்தகைய வழிமுறைகள் தொடர்ந்து தோல்விகளையே தழுவி வருகிறன்றன. பயம் என்பது தற்காலிகமான அதிர்வை உண்டாக்குமே தவிர நிரந்தர தீர்வல்ல, மரணத்தண்டனை என்பது வலி மாத்திரிரையைப் போலத்தான். கொஞ்சம் நேரம் வலியை மறக்கடிக்கும். குற்றம் இழைப்பவர்களைச் சிறிது காலத்திற்கு அச்சுறுத்தும்; ஆனால், குற்றங்களை நிரந்தரமாக நிறுத்திவிடாது. அதற்கு மாற்றான ஒன்றை நாம் முன்னிறுத்த வேண்டிய கட்டத்திலும் கட்டாயத்திலும் இருக்கின்றோம். பல்துறை அறிவுஜீவிகளின் ஆலோசனைகளுடன் ஒரு கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே இன்றைய தேவையாகும்.

இங்கு ஒரு பெண்ணின் வாழ்வை நாசப்படுத்துபவனுக்கு என்ன தண்டனைகள் என்கிற விவரங்கள் எல்லாம் சரியாக இருக்கின்றது. ஆனால், அப்படியொருவன் சமூகத்தில்  உருவாகாமல் இருக்க/ வளராமல் இருக்க என்ன செய்திருக்கிறோம் என்பதே என் கேள்வியாக முன்வைக்கலாம்.

இவையாவற்றையும் நான் தீர்வாக முன்வைக்கவில்லை. நாம் விவாதிக்க ஒரு தளமாக அமைக்க விரும்புகிறேன்.

ஆக, மலேசியா மரணத் தண்டனையை இரத்து செய்யும் திட்டத்தை முன்னெடுத்திருப்பது ஆரோக்கியமான ஒரு துவக்கம் என்றே சொல்லலாம். இதற்கு ஆதரவாக இன்று ‘மனித உரிமை நாள்’ எனவே நாம் இணைந்து இன்னும் ஒரு மூன்று நாள்களுக்கு ‘மரணத் தண்டனையை இரத்து செய்ய ஆலோசித்துக் கொண்டிருக்கும் மலேசியாவிற்கு நல்வாழ்த்துகள்’ என்று முகநூல், புலனத்தில் பகிர்வோம். ஜனவரி மாதத்தில் புதியதொரு விடியல் மலேசியக் குற்ற ஒழிப்பில் உதயமாகும் என்று எதிர்ப்பார்ப்போம்.

கே.பாலமுருகன் 

(மனித உரிமை நாளை முன்னிட்டு…)

 

 

இளையோர் சிறுகதை இலக்கிய விழா 2019 – இளம் எழுத்தாளர்கள் படை

நாட்டிலுள்ள இடைநிலைப்பள்ளி மாணவர்களை இலக்கியத்தின் பக்கம் ஈர்ப்பதன் மூலம் மொழியாளுமையைப் புகட்டுவதோடு அவர்களின் கட்டொழுங்கு சிக்கல்களையும் குறைக்கலாம்’

கே.பாலமுருகன்

 

 

மலேசியத் தமிழ் விடிவெள்ளி கற்பனையாற்றல் கழகம் இந்நாட்டிலுள்ள இளையோர்கள் மத்தியில் நல்ல தரமான எழுத்தாளர்களை அடையாளம் காண வேண்டும் என்கிற நோக்கத்துடன் நடத்திய தேசிய இளையோர் சிறுகதைப் போட்டியின் பரிசளிப்பு விழாவும் வெற்றியாளர்களின் சிறுகதைகள் அடங்கிய நூல் வெளியீடும் கோலாலம்பூர் தேசிய வகை தம்பூசாமி தமிழ்ப்பள்ளியில் கடந்த சனிக்கிழமை 30ஆம் திகதி சிறப்பாக நடைபெற்றது.

 

 

போட்டி அறிவிக்கப்பட்ட கடந்த ஜூலை மாதம் தொடங்கி அக்டோபர் வரையிலும் நாடெங்கிலிருந்தும் சுமார் 215 சிறுகதைகள் மலேசிய இடைநிலைப்பள்ளி மாணவர்களிடமிருந்து கிடைக்கப் பெற்றதாகக் கூறுகிறார் தமிழ் விடிவெள்ளி கற்பனையாற்றல் கழகத்தின் தலைவரும் நாடறிந்த எழுத்தாளருமான திரு.கே.பாலமுருகன். கிடைக்கப்பெற்ற சிறுகதைகளில் சிறந்த பத்து சிறுகதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு கதைகள் எழுதிய இளையோர்களுக்குப் பரிசும் ரொக்கத் தொகையும் வழங்கப்பட்டுச் சிறப்பிக்கப்பட்டன. தன்னைப் போல இந்நாட்டில் சிறுவர்களும் இளையோர்களும் எழுத்துத் துறையில் மிளிர வேண்டும் என்கிற இலட்சியத்தோடு திரு.கே.பாலமுருகன் தொடங்கிய சிறுவர்/இளையோர் இலக்கிய விழா ஒரே ஆண்டில் இரண்டுமுறை நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். பத்து இளம் எழுத்தாளர்களின் சிறுகதைகளை அடையாளம் கண்டு ‘படைப்பிலக்கியத்தின் குரல்கள்’ எனும் தலைப்பில் நூலாகவும் வெளியிடப்பட்டது. ஆசிரியரும் எழுத்தாளருமான திரு.கே.பாலமுருகன் இந்நூலை மிகச் சிறப்பாகத் தொகுத்துள்ளார்.

 

தேசிய அளவில் நடத்தப்பட்ட இச்சிறுகதைப் போட்டிக்குத் தலைமை நடுவராக இருந்த மலேசியக் கல்வி அமைச்சு தேர்வு வாரியத்தின் தமிழ்ப்பிரிவு மேனாள் இணை இயக்குனரும் தமிழாசிரியர் கழகத்தின் தலைவருமான திரு.பி.எம் மூர்த்தி அவர்கள் இதுபோன்ற அரிய முயற்சிகள் அடுத்து வரும் இளம் தலைமுறையினர் மத்தியில் நல்ல எழுத்தாளர்களை உருவாக்கத் துணைப்புரியும் என்று பாராட்டினார்.

 

போட்டியோடு என்பதோடு மட்டுமல்லாமல் இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்குச் சிறுகதை எழுதும் கருத்தரங்கமும் இலவசமாக நடத்தப்பட்டது. கோலா சிலாங்கூர் ஈப்போ, ஜொகூர், கோலாலம்பூர் போன்ற பகுதியிலிருந்து மாணவர்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர். எஸ்.பி.எம் தேர்வில் தமிழ் இலக்கியப் பாடத்தை எடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் துணைப்புரியும் என்று ஏற்பாட்டுக் குழுத் தலைவரும் எழுத்தாளருமான திரு.கே.பாலமுருகன் வழியுறுத்தினார்.

நாட்டின் மிக முக்கியமான எழுத்தாளர்கள் திரு.கே.பாலமுருகன், திரு.பி.எம் மூர்த்தி, திரு.ந.பச்சைபாலன். திரு.மதியழகன், திரு.ஆ.குணநாதன், உப்ஷி பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை தலைவர் திருமதி மனோன்மணி, பாரதி முன்னேற்ற இயக்கத் தலைவர் திரு.விஜயன் என்று பலரும் கலந்து கொண்ட இளையோர் சிறுகதை விழா நாட்டின் இளம் படைப்பாளர்களை உருவாக்கி அங்கீகரித்து வரலாற்றில் இடம்பெற்றது. நிகழ்ச்சியில் பேசிய இலக்கிய ஆசிரியர் நாடறிந்த எழுத்தாளர் திரு.ந.பச்சைபாலன் அவர்கள் தனக்குப் பிடித்த உலகில் கவனிக்கப்பட்ட நல்ல சிறுகதைகளைப் பற்றி இரசிக்கும்படி எடுத்துரைத்தார். மேலும், கோலா சிலாங்கூர் இடைநிலைப்பள்ளியின் ஆசிரியரும் சிறுவர் கதைகள் எழுத்தாளருமான திரு.ஆ.குணநாதன் அவர்கள் தன்னைக் கவர்ந்த சிறுகதைகள் பற்றி மிகவும் நகைச்சுவை உணர்வுடன் பகிர்ந்து கொண்டார். மர்ம நாவல், திகில் நாவல்கள் எழுதி வரும் எழுத்தாளர் மு.மதியழகன் அவர்கள் தனக்கே உரிய பாணியில் மாணவர்களைக் கவரும் வகையில் தன்னுடைய திரைக்கதை அனுபவங்களைக் கொண்டு சிறுகதைக்கான தேவையான கூறுகளைப் பற்றி பகிர்ந்து கொண்டார்.

https://www.youtube.com/watch?v=nt-H6JebNCc

தேசிய அளவிலான இளையோர் சிறுகதை எழுதும் போட்டியில் முதல் நிலை பரிசை சிலாங்கூரைச் சேர்ந்த சிந்து சந்திரன் அவர்கள் பெற்றார். அவர் எழுதிய சிறுகதையையின் தலைப்பு ‘மனசாட்சி’ ஆகும். மேலும், லோகாசினி முருகையா அவர்கள் தன்னுடைய ‘கை கொடுக்கும் கை’ எனும் சிறுகதைக்காக இரண்டாம் நிலை பரிசைத் தட்டிச் சென்றார். அடுத்ததாக, பினாங்கு புக்கிட் மெர்தாஜாம் உயர்நிலைப்பள்ளியைச் சேர்ந்த ஹரீஷ் ஆசைத்தம்பி அவர்கள் மூன்றாம் நிலை பரிசைத் தன்னுடைய ‘முற்றுப்புள்ளி’ எனும் சிறுகதைக்காகப் பெற்றார். ஆறுதல் பரிசு வரிசையில் சுபத்தரா தேவி நவமணி, கிருபாஷிணி தேவன், இலக்கியா சரவணன், பூவிழி ஆனந்தன், ரேஷ்னா ஸ்ரீ சுந்தரேசன், ஹரிசங்கர் கதிரவன், ரீனாமாலினி சந்திர சேகரன் ஆகியோர் பெற்றனர்.

இன்றைய இளையோர் புலனம், டிக் டோக், முகநூல் அரட்டை என சமூக வலைத்தளங்களால் பாதிக்கப்பட்டு நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் நேரத்தை நல்வழிக்குத் திசை மாற்றும் பொருட்டு ஆசிரியர் கே.பாலமுருகன் அவர்களால் நடத்தப்பட்ட ‘வாசிப்புக் காணொளி போட்டி 2019’ பலரின் கவனத்தை ஈர்த்தது என்றே சொல்லலாம். அப்போட்டியில் மாணவர்கள் தாங்கள் வாசித்த ஒரு தமிழ் புத்தகத்தைப் பற்றி இரண்டு நிமிடங்கள் பேசி காணொளியாக முகநூலில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதன் வழி பரிசுக்குரியதாகத் தேர்வான ஏழு வெற்றியாளர்களும் அன்றைய நிகழ்ச்சியில் பரிசும், ரொக்கத் தொகையும் வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டார்கள். பீடோங் இடைநிலைப்பள்ளியைச் சேர்ந்த பிரிவின்குமார் ஜெயவாணன் முதல் பரிசை வென்றார். தைப்பிங் திரேசா தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த தமிழ்செல்வன் கணகநாதன் அவர்கள் இரண்டாம் நிலையும் ஜொகூர் கங்கார் பூலாயைச் சேர்ந்த மாணவி தஷ்வினா முரளி அவர்கள் மூன்றாம் நிலையையும் வென்றார்கள். அதோடுமட்டுமல்லாமல் கோலா சிலாங்கூர் இடைநிலைப்பள்ளியைச் சேர்ந்த கீர்த்தனா சுப்ரமணியன், தபாஹாவ் தோட்டத்தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த தீர்த்தனா முத்துராமன், சுபாங் ஜெயா துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த ஈஷ்வர் ராமசந்திரன், சுங்கை சிப்புட்டைச் சேர்ந்த சஞ்சீவி மகேந்திரன் ஆகியோர் ஆறுதல் பரிசுகளை வென்று சாதனை படைத்தனர்.

Mr.P.M Murthy’s Talk about Book Launching

இளையோர் இலக்கியம் என்பது இளையோர்களின் மனங்களையும் வலிகளையும் போராட்டங்களையும் மகிழ்ச்சியையும் கொண்டாட்டங்களையும் சொல்லக்கூடிய ஓர் இலக்கிய வடிவம் என்று திரு.பி.எம் மூர்த்தி மிகவும் சுவைப்பட விழாவில் தனதுரையில் குறிப்பிட்டார்.

 

 

மொழிக்கும் இலக்கியத்திற்கும் அடுத்த வாரிசுகளை உருவாக்கும் பணியில் மலேசியத் தமிழ் விடிவெள்ளி கற்பனையாற்றல் கழகம் அயராமல் பல அரிய முயற்சிகளை முன்னெடுக்கும் என்று அக்கழகத்தின் தோற்றுனர் எழுத்தாளர் கே.பாலமுருகன் வெளிப்படுத்தினார்.

நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழு செயலாளரும் எழுத்தாளருமான யோகி அவர்களின் நன்றி உரையோடு நிகழ்ச்சி ஒரு நிறைவை நாடியது. தனதுரையில் யோகி அவர்கள் இன்றைய இளையோர்கள் தன்னைச் சுற்றி நடக்கும் சம்பவங்களையும் சமூக சிக்கல்களையும் கூர்மையாக நோக்கி அறிதல் வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

செய்தி/ஆக்கம்

Tamil Vidivelli Creativity Club Of Malaysia