குறுங்கதை- 2/50 : பேருந்து கிளம்பியது

யார் மெதுவாக வாகனத்தைச் செலுத்தினாலும் எனக்குச் சட்டென்று கோபம் மேலிடும். அப்பாவும் மோட்டாரை இப்படித்தான் ஆமை போல நகர்த்துவார். அவர் பின்னால் அமர்ந்து கொண்டு வரும்போது எரிச்சல் தாளாது.

பேருந்தைச் செலுத்திக் கொண்டிருந்தவன் தலையில் தட்டிவிடலாம் என்கிற அளவிற்குக் கோபம் உச்சமடைந்த கொண்டிருந்தபோதுதான் அவன் பேருந்தை ஓரமாக நிறுத்திவிட்டுக் கீழே இறங்கிவிட்டான்.

ஏற்கனவே எனக்குச் செல்ல வேண்டிய இடத்திற்குப் போய்சேரத் தாமதம் ஆகிவிடும் என்கிற கவலை. இதில் இதுவரை பேருந்தை மெதுவாக ஓட்டிக் கொண்டிருந்தவன் இப்பொழுது நிறுத்திவிட்டு என்ன செய்கிறான்?

பின் இருக்கையில் அமர்ந்திருந்ததால் அவனைக் கவனிக்கவும் முடியவில்லை. ஐந்து நிமிடம் ஆகியது என்னால் தாங்கிக் கொள்ள இயலவில்லை. சொன்ன நேரத்திற்கு வண்டியைக் கொண்டு போய் சேர்ப்பதுதானே இவர்களின் கடமை? பொறுப்பற்ற அந்தப் பேருந்து ஓட்டுனர் அநேகமாக தூரத்தில் தெரியும் கடையில் சிகரேட் வாங்கிக் கொண்டிருக்கக்கூடும்.

பொறுமைக்கொள்ள இயலவில்லை. இம்முறை சத்தம் போட்டுவிடலாம் என்று எழுந்தேன். முன் இருக்கைவரை சென்று வெளியே எட்டிப் பார்த்தேன். பேருந்தைவிட்டுச் சற்று தள்ளி மோட்டாரில் வந்து நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் மூன்று பத்து வெள்ளி நோட்டுகளைக் கொடுத்துவிட்டு அவளுடன் பின் இருக்கையில் மோட்டாரில் அமர்ந்து கொண்டிருந்த ஒரு சிறுமியின் கன்னத்தைக் கிள்ளிவிட்டு அப்பேருந்து ஓட்டுனர் விரைவாக ஓடிவந்து பேருந்தில் ஏறினான். பேருந்து கிளம்பியது.

கே.பாலமுருகன்