குறுங்கதைகள் – 1 (கடைசி ஒரு வெள்ளி)

டேவிட் கையில் வைத்திருந்த அந்த நூறு வெள்ளி நோட்டுகளையே அப்பெரியவர் ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார். நூறு வெள்ளி நோட்டுகளை முகர்ந்து பார்த்த டேவிட் அதனை சட்டைப் பைக்குள் திணித்துவிட்டு மிச்சமிருந்த சிகரெட்டைப் புகைக்கத் துவங்கினான்.

“டேவிட்டு… சொக்சோ காசை எடுத்துக் கொடுத்தது நீ வியாபாரத்துல நல்லா வரணும்னுத்தான்… இன்னும் ஒரு ஆயிரம் வெள்ளி பாக்கி இருக்கு…” வலிந்து வரவைத்த ஒரு கழிவிரக்கம் அவர் முகத்தில் ஒட்டாமல் நழுவிக் கொண்டிருந்தது.

“யோவ்… காசைப் பார்த்தோன எங்கேந்து மோப்பம் பிடிச்சி வர்றீங்க? இது என்னோட மொத மாச இலாப காசு. நல்லா எஞ்சாய் பண்ணப் போறன். அடுத்த மாசம் பாத்துக்கலாம். போயிரு…” என்றது டேவிட்டின் கர்வமான குரல்.

பெரியவர் கந்தசாமி டேவிட் வீட்டில் வாடகைக்கு இருந்தவர். மகன் துரத்திவிட்டப் பின் போக்கிடம் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தவர் பலகை தொழிற்சாலையில் வேலையைத் தேடிக் கொண்டு டேவிட்டின் அப்பாவின் மூலம் அவ்வீட்டின் ஓர் அறையை வாடகைக்கு எடுத்துக் கொண்டார். டேவிட் தேவைப்படும்போதெல்லாம் அவரிடம் பணத்தைக் கடன் பெற்று அது மூவாயிரம் வரை எட்டியது.

“டேவிட்டு… அந்த ரெண்டாயிரத்தையே நீ கொடுக்கல. உன் அப்பாத்தான் பாவம் கஷ்டப்பட்டு அடைச்சாரு. மீதியாச்சாம் கொஞ்சம் கொஞ்சமா கொடுத்துரலாமே… அதான் கையில காசு வச்சிருக்கயே. ஒரு நூறு வெள்ளித் தர முடியுமா? கையில காசு இல்ல…” என்கிற அவருடைய தழுதழுத்த குரலில் ஒரு சோர்வு மீந்திருந்தது.

“கெழவா… போய்ரு. ஒன்னும் தர முடியாது. நான் இன்னிக்கு இந்தக் காசை என் சந்தோசத்துக்காக நல்லா முடிக்கப் போறன். கடன்லாம் என் அப்பா கொடுப்பாரு. அந்தக் கெழவன போய் பாரு…” சிகரெட்டின் புகை அவன் முகத்தைச் சூழ்ந்து பரவிக் கொண்டிருந்தது.

“அப்படில்லாம் பேசாத… எனக்குச் சாப்டகூட காசு பத்தல. ரொம்ப கஷ்டத்துல இருக்கன். உனக்கு வேணும்னுப்ப எத்தன தடவ கொடுத்துருப்பன்…? ஒரு அம்பது வெள்ளியாச்சாம்…” என்றவரை பார்த்து முறைத்துவிட்டு மகிழுந்தில் ஏறச் சென்றான் டேவிட்.

“அலட்சியப்படுத்துறீயா டேவிட்? வயிறு எரியுது… வயசானவன் வாயில விழாத…” என்று கொஞ்சம் முன்னகர்ந்து மகிழுந்தின் அருகில் போய் நின்று கொண்டார்.

“கெழவா! காமெடி செஞ்சிகிட்டு இருக்காத. அடிச்சித் துரத்துரத்துக்குள்ள போய்டு…” என்றான் கொஞ்சம் அதட்டலாக.

அப்பெரியவரின் முகத்தில் வழிந்த வியர்வையில் மதிய வெய்யில் மினுமினுத்தது.

“தோ… பாரு டேவிட்… நீ இப்ப வச்சிருக்க அந்தக் காசு முடிஞ்சி கடைசியா மிச்சம் இருக்கற அந்த ஒரு வெள்ளில உனக்குச் சரியான பாடம் கிடைக்கும்… இது நடக்கலைன்னா நான் என் நாக்கை அறுத்துக்குறேன்…” என்று அப்பெரியவர் மார்பில் அடித்துவிட்டு நடக்கத் துவங்கினார்.

சிரித்துக் கொண்டே மகிழுந்தை முடுக்கிய டேவிட் முதலில் தித்திவங்சாவில் இருந்த ஒரு மதுபான கடைக்குச் சென்று மாலைவரை குடித்தான். நண்பர்கள் சிலரையும் அழைத்துக் கொண்டான். கையிலிருந்த 650 வெள்ளியில் அங்கேயே 300 வெள்ளி கரைந்தது. நண்பர்கள் இருவர் ஆளுக்கொரு 50 வெள்ளியை அவனிடம் கெஞ்சி பெற்றுக் கொண்டனர்.

பிறகு இரவு உணவுக்காக எல்லோரும் காஜாங் பெரிய சாலையின் ஓரம் இருக்கும் கடல்வாழ் உணவுகள் இருக்கும் கடைக்கு வந்து சேர்ந்தார்கள். மீன், பெரிய இரால், நண்டு என உணவுக்குப் பின் மொத்தமாக 182 வெள்ளியை அங்கேயே கட்டிவிட்டு டேவிட் மகிழுந்தில் ஏறினான். மூர்த்தியை வீட்டில் கொண்டு போய்விட வேண்டும். மூர்த்தி அளவுக்கு அதிகமான குடி போதையில் இருந்தான். மெதுவாக மகிழுந்தைச் செலுத்தியும் கவனக்குறைவால் முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு மோட்டாரை மோதிவிட்டான்.

மோட்டாரிலிருந்து விழுந்த சீன இளைஞன் ஒருவன் எழுந்து கத்தத் துவங்கினான். குடிபோதையில் வாகனத்தைச் செலுத்தியது பொதுமக்களுக்குத் தெரிந்தால் சிக்கலாகிவிடும் என்பதால் மகிழுந்தைவிட்டுக் கீழே இறங்கி அச்சீனனுடைய மோட்டாரைத் தூக்கி நிறுத்தி அவனுக்குக் கையில் இருந்த 50 வெள்ளியைக் கொடுத்து சமாளித்தான். முனங்கிக் கொண்டே மோட்டாரை முடுக்கிய அச்சீனனைச் சமாதானப்படுத்தி அனுப்பிவிட்டப் பிறகே டேவிட்டுக்குக் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. நெற்றியில் வழிந்த வியர்வை மூக்கினோரம் வடிந்தது. பதற்றத்துடன் மகிழுந்தில் ஏறியவன் மெதுவாக மூர்த்தியை வீட்டில் விட்டான்.

சிகரேட் முடிந்துவிட்டதால் மகிழுந்தைப் பெரிய சாலையின் ஓரம் நிறுத்திவிட்டு ‘செவன் இலவன்’ கடைக்குள் நுழைந்து 17 வெள்ளியைத் துழாவியெடுத்து சிகரெட்டை வாங்கிக் கொண்டு வெளியில் வந்தான். இருள் முணுமுணுத்துக் கொண்டிருந்தது. சாலையில் சில வாகனங்கள் மட்டும் விட்டுவிட்டுப் போய்க் கொண்டிருந்தன. சிறிது நேரம் அங்கேயே நின்று கொண்டு சிகரெட் ஒன்றை எடுத்துப் புகைக்கத் துவங்கினான்.

பக்கத்தில் ஒரு பள்ளத்தில் இறங்கியோடிக் கொண்டிருந்த இருண்ட பாதையிலிருந்து வெளிப்பட்டு சட்டென இரண்டு ஆடவர்கள் டேவிட்டைச் சுற்றி வளைத்தனர். ஒருவன் கையில் வைத்திருந்த சிறிய கூர்மையான கத்தியை டேவிட்டின் கழுத்தின் மீது வைக்க இன்னொருவன் டேவிட்டின் கைப்பேசியைப் பிடுங்கினான். கழுத்தில் கத்தியை வைத்திருந்தவன் டேவிட்டை மார்போடு பிடித்து அழுத்த இன்னொருவன் காற்சட்டை, சட்டைப் பைக்குள் பணத்தைத் துழாவினான். ஏமாற்ற மிகுதியுடன் டேவிட்டின் சட்டைப் பைக்குள் இருந்த ஒரு வெள்ளி நோட்டை மட்டும் வெளியில் எடுத்தான்.

கத்தியைக் கழுத்தில் அழுத்திக் கொண்டிருந்தவன் டேவிட்டின் முகத்தில் உமிழ்ந்துவிட்டு எட்டி உதைத்தான். சாலையில் இருந்த கற்கள் புறமுதுகையும் தலையின் பின்பகுதியையும் பதம் பார்க்க இன்னொருவன் அவன் மார்பில் உதைத்துவிட்டு அந்தக் கடைசி ஒரு வெள்ளி நோட்டை டேவிட்டின் மீது விட்டடித்துவிட்டுக்  கடைக்குள்ளிருந்து ஆட்கள் வெளிவரும் முன்னே டேவிட்டின் கைப்பேசியோடு பள்ளத்தில் இறங்கி ஓடினார்கள்.

டேவிட்டின் சில துளி இரத்தக் கறையுடன் காற்றில் படப்படத்து இன்னும் சிறிது நேரத்தில் அவனை விட்டுப் பறந்துவிடத் துடித்துக் கொண்டிருந்த அந்தக் கடைசி ஒரு வெள்ளி நோட்டைப் பார்த்தான்.

-கே.பாலமுருகன்