சிறுகதை: ஓர் அரேபிய பாடலும் ஒரு விரோனிக்காவும்

 

 

காலம் அசைந்து நகர்வதாக யாரோ சொன்ன பொய் விரோனிக்காவின் வாழ்க்கையில் அன்று பொய்த்துப் போகும் என்று அவளும் எதிர்ப்பார்த்திருக்க மாட்டாள். செலாயாங் அடுக்குமாடி, 3-03 மாடியின் மேலேறிச் செல்லும் படிக்கட்டில் வலது கால் மேலேயும் இடது கால் கீழ்ப்படியிலும் இருக்க விரோனிக்காவின் காலம் சட்டென்று நின்றது.

அரை மணி நேரம்.

ஒரு மணி நேரம்.

விரோனிக்கா அங்கேயே அசையாமல் நின்றாள். இரவென்பதால் யாரும் அவ்விடத்தைக் கடந்து வரவில்லை. பெரும்பாலும் எல்லோரும் ‘லிப்டைத்தான்’ உபயோகிப்பார்கள் என்பதால் விரோனிக்காவை யாரும் பார்க்கவில்லை. அவளுடைய வலது தோளில் தொங்கிக் கொண்டிருக்கும் கைப்பையின் நிறம் சிவப்பு. காலில் அணிந்திருக்கும் தூக்கு சப்பாத்து எப்படியும் ரிங்கிட் மலேசியா நூறுக்கும் மேல் இருக்கும். தலைமுடியை வாறி இடப்பக்கம் வழித்திருப்பாள். அணிந்திருக்கும் மூக்குக் கண்ணாடி அவளுக்குச் சற்றும் பொருந்தாதைப் போல துறுத்திக் கொண்டிருக்கும். நெற்றியின் இட மூலையில் தெரியும் பெரிய மச்சம் ஏதோ காயத்தைப் போன்ற சாயலில் ஒத்திருக்கும்.

ஆமாம், அவள்தான் விரோனிக்கா. அவளேதான் அங்கு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அசையாமல் நின்று கொண்டிருக்கிறாள்.

 

ஓர் அரேபியப் பாடல்

மூன்றாவது மாடியின் படிக்கட்டைக் கடக்கும்போது நிச்சயமாக அப்பாடல் ஒலிக்கும். முதலில் விரோனிக்காவிற்கு அப்பாடல் வரிகள் பிடிப்படவில்லை. இப்பொழுதும் அவளுக்கு அவ்வரிகள் புரியவில்லைத்தான். ஆனால், மெல்ல அந்த இசையைப் பழகிக் கொண்டாள். எப்பொழுதுதாவது அப்பாடல் அங்கு ஒலிக்கவில்லை என்றால் சற்று நின்று நிதானித்துவிட்டு அவளே அவ்விசையை முணுமுணுத்துக் கொள்வாள். எங்குத் தொடங்கி எங்கு முடிகிறது என்று ஊகிக்க முடியாத நிலையில் அப்பாடல் தீராமல் இசைத்துக் கொண்டே இருக்கிறது.

‘ஹமௌடா’ என்கிற ஒரு சொல்லை மட்டுமே அப்பாடலிலிருந்து அவளால் கிரகித்துக் கொள்ள முடிந்தது. அதைக் கொண்டுத்தான் அதுவொரு அரேபிய பாடல் என்றும் விரோனிக்கா அறிந்து கொண்டாள். வழக்கமாக மணி எட்டாகி இரவு ஒழுகிக் கொண்டிருக்கும் ஒரு பொழுதில் அவளிருக்கும் ஐந்தாவது மாடிக்குப் படியில் ஏறுவாள். அவளுக்கு ‘லிப்டில்’ ஏற முடியாது. தலை சுற்றல் ஏற்பட்டு மயங்கி விழுந்துவிடுவாள் என்பதாலும் ஒவ்வொருநாளும் வேலைக்கே நேரம் முடிந்துவிடுவதாலும் இப்படிப் படிகள் ஏறியாவது தேவையான உடற்பயிற்சியைப் பெற்றுக் கொள்ளலாம் என்கிற சமாதானத்தாலும் தினமும் சலிக்காமல் படி ஏறினாள். முதல் சில வாரங்களுக்குக் கடினமாக இருந்தாலும் அரேபிய பாடலின் இரசிகை ஆனதிலிருந்து படி ஏறுவது உற்சாகத்தை உண்டாக்கியது.

அலுவலகத்தில் அயர்ந்துபோன கால்களில் ஒட்டிக் கொண்டிருக்கும் சோர்வு மூன்றாவது மாடியின் படிக்கட்டிற்கு வந்ததும் ஒரு நடனத்துடன் படிகளில் இலாவகமாக முன்னேறும். விரோனிக்காவே அதனைக் கட்டுப்படுத்த முடியாமல் விட்டுவிட்டாள். அவள் பாடல்களின் இரசிகை இல்லை. வீட்டில் தங்கைகள் பாடலைச் சத்தமாக வைத்தாலே சண்டைக்கு நிற்பாள். சதா பேசிக் கொண்டிருக்கும் அம்மாவின் வானொலிகளின் மீது அவள் செலுத்திய வன்முறைகளின் கதைகள் ஏராளம். அத்தனை வெறுப்புகளையும் தாண்டி இப்பாடல் அதுவும் மொழி புரியாத பாடலுக்கு எப்படி இரசிகையானால் என்பது அவளுக்கே விளங்கவில்லை.

அப்பாடல் அவளுக்குள் ஒலித்துக் கொண்டிருந்தது. காதுகளைக் கடந்து மனத்தை அசைக்கத் துவங்கியது. அழுகையுடன் கேட்கும் ஒரு பெண்ணின் குரலும் கோபத்தின் உச்சத்தில் கேட்கும் ஆணின் குரலும் என்பதை அவளால் கற்பனை செய்து கொள்ள முடிந்தது. அப்பாடல் அவளுக்காக ஒலிக்கப்படுகிறதா அல்லது அந்த வீட்டில் அப்பாடல் தினமும் ஒலித்துக் கொண்டே இருக்குமா என்பது அவளுக்குள் ஒரு சந்தேகமாகவும் வலுக்கத் துவங்கியது.

விரோனிக்கா மூன்றாவது மாடியின் படிக்கட்டை வந்தடைந்த அடுத்த கணமே திகைப்பில் ஆழ்ந்தாள். அப்பாடல் அப்பொழுது ஒலிக்கப்படவில்லை. ஒரு நாயின் குரைக்கும் சத்தத்தைத் தவிர அங்கு நிலவிய மௌனம் விரோனிக்காவை வதம் செய்தது. சட்டென ஒரு ‘கோமா’வில் மயங்கி விழுந்ததைப் போல உறைந்து நின்றாள். அரேபிய பாடலின் எந்த அறிகுறியும் கேட்கவில்லை. அப்படியே நின்றிருந்தாள். மனத்திலும் அப்பாடல் எழவில்லை. கவிந்துகொண்ட வெறுமை மூளைவரை கனத்தது. ஐந்து நிமிடம் தாண்டியும் அங்கேயே நின்றுவிட்டாள். அவளுடைய கடிகாரம் அத்துடன் செயல்படுவதிலிருந்து தன்னைத் துண்டித்துக் கொண்டதைப் போல அசையாமல் நின்றிருந்தாள்.

அரை மணி நேரம்.

வெறுமை.

ஒரு மணி நேரம்.

வெறுமையே.

இமைகள் சிமிட்டவில்லை. கண்களில் அசைவில்லை. சட்டகம் போடப்பட்ட ஒரு படத்திற்குள் மாட்டிக் கொண்டதைப் போல காலம் அவளுக்குள் பிரமை பிடித்து ஸ்தம்பித்துக் கொண்டிருந்தது.

 

விரோனிக்கா

விரோனிக்காவின் அம்மா மனநிலை பாதிக்கப்பட்டு எங்கேயோ தொலைந்தபோது அவளுடைய இரண்டு தங்கைகளையும் மாமா அழைத்துச் சென்று இரண்டு மாதங்கள் ஆகியிருந்தன. பின்னர், சில வாரங்களிலேயே அம்மா திரும்பவும் கிடைத்துவிட்டார். விரோனிக்கா இரண்டு மாதங்கள் அம்மாவைக் கவனித்துக் கொண்டாள். அதனாலேயே செய்து கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு, சொக்சோவில் இருந்த பணத்தைக் கொண்டு சமாளித்துக் கொண்டாள்.

கேரளாவிற்கு வைத்தியத்திற்குச் செல்ல பணமெல்லாம் செலுத்திவிட்டு வந்த இரவில்தான் வீட்டின் முன்கதவு திறந்து கிடந்தது. வீட்டில் ஒளித்து வைத்திருந்த இன்னொரு சாவியை அவளுடைய அம்மா கண்டுபிடித்திருக்க வாய்ப்பே இல்லை என்று அதிர்ச்சியில் உறைந்தாள். அதுதான் விரோனிக்காவின் காலம் ஸ்தம்பித்து நின்ற இரண்டாவது அனுபவம். வீட்டின் நாற்காலியில் அமர்ந்தவள் நாற்பத்தைந்து நிமிடங்கள் அசையவே இல்லை. திறந்து கிடந்த கதவையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவசரமாக கதவு திறக்கப்பட்டிருப்பது சாவி தாழ்ப்பாழிருந்து சரிந்து கதவின் இரும்பிடுக்கில் தொங்கிக் கொண்டிருப்பதன் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது.

இப்பொழுது அவள் எழுந்து அம்மாவைத் தேட வேண்டும்; அல்லது உறவினர்களிடம் அதனைத் தெரிவிக்க வேண்டும். பின்னர், காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டும். அடுத்து அக்கம் பக்கத்தினரிடம் விசாரிக்க வேண்டும். ஆனால், விரோனிக்கா அப்படியே உட்காந்திருந்தாள். அவள் கண்களில் அசைவில்லை.

ஒரு மணி நேரம்.

அமைதி.

ஒரு மணி நேரம் பதினைந்து நிமிடங்கள்.

மெல்ல நாற்காலியில் சாய்ந்தவள் சட்டென எழுந்து நின்றாள். கொஞ்சம் தேநீர் தயாரித்துவி்ட்டு வெறியுடன் உடலுக்குள் உலாவிக் கொண்டிருந்த பசி மிருகத்தைச் சமாதானப்படுத்த பருகினாள். சூடு ஓர் ஊற்றைப் போல உடலுக்குள் இறங்குவது நன்றாக உணர முடிந்தது. அம்மா இருந்திருந்தாள் இந்நேரம் வீட்டின் சுவரிகளில் தன் நகத்தால் கீறி எழுப்பும் ஓசை அவளுக்கு இம்சையாக இருந்திருக்கும். கோபத்தில் ஒரு பொருளைத் தூக்கி வீசி உடைத்திருப்பாள். அவளுடைய கோபம் அவளைத் தற்காத்துக் கொண்டிருந்தது. அவளுடைய கோபம் அவளை உணர்த்திக் கொண்டே இருந்தது.

இன்று கொஞ்சம் தேநீர்; நிறைய அமைதி. திறந்துகிடந்த கதவைப் பார்த்தாள். வீட்டின் யாருமே கண்டுபிடிக்க முடியாத ஓர் இரகசிய இடத்தில் வைத்திருந்த சாவி அம்மாவின் கைகளுக்கு எப்படிக் கிடைத்திருக்கும் என்கிற எந்தக் கேள்வியையும் எழுப்பிக் கொள்ளாமல் நிராதரவாகத் தொங்கிக் கொண்டிருந்த அச்சாவியை எடுத்துச் சுவரில் மாட்டினாள்.

 

 

ஒரு செலாயாங் அடுக்குமாடி

தங்கைகள் அவளுடன் வர மறுத்ததும் விரோனிக்கா தனிமையானாள். அம்மாவைத் தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று அவள் உணர்ந்ததைவிட உறவினர்கள் நொந்துகொண்ட சடங்கு பதில்கள் அவளுக்கு எரிச்சலையே கொடுத்தன. வீட்டிலிருந்து ஒரு மணி நேரத் தொலைவில் இருக்கும் ஓர் அலுவலகத்தில் வேலை தேடிக் கொண்டாள். முப்பத்தாறு வயதைக் கடந்தபோது திருமணம் வேண்டாம் என முடிவு செய்து கொண்டாள்.

செலாயாங் அடுக்குமாடியில் எத்தனை நூறு குடும்பங்கள் உள்ளன; அதில் எத்தனை பேருக்கு விரோனிக்காவைத் தெரியும் என்றெல்லாம் அவளுக்குக் கவலை இருந்ததாகத் தெரியவில்லை. வருவாள்; போவாள். மீண்டும் வருவாள்; போவாள். அவள் வருவதையும் போவதையும் செலாயாங் அடுக்குமாடி பொருட்படுத்தியதே இல்லை. படிக்கட்டில் சட்டென துரத்திப் பிடிக்கும் சிறுவர்கள்; அவளைக் கடந்துபோகும் ஆண்கள், படிக்கட்டின் ஓரத்தில் சிறுநீர் கழித்துவிட்டு ஓடும் நாய்கள் என்று அவள் எதையுமே கவனித்ததில்லை.

விரோனிக்கா 06-05 என்கிற எண்ணில் குடியிருக்கிறாள். வீட்டு வாசலில் ஒரேயொரு வாடிப்போன பூச்செடி இருக்கும். தூசு படிந்திருக்கும் கண்ணாடிகள். வெளியிலிருந்து பார்த்தால் ஆள் யாருமற்ற வீடு என்றே கணிக்கக்கூடும் அளவிற்கான வெறுமையும் பழமையும் படிந்த வீட்டின் முகப்பு. முன்வாசல் கதவில் திருப்பிடித்திருந்த தாழ்ப்பாழ் முனகிக் கொண்டே திறக்கும். வீட்டை விரோனிக்கா கடைசியாக சுத்தம் செய்தது அவள் அம்மா இருக்கும்போது மட்டும்தான். காலம் ஒரு கரும்பூனையைப் போல அவள் வீட்டில் உலாவிக் கொண்டிருந்தது.

அம்மா சாப்பிட்டு வைத்தத் தட்டை அவள் பல வருடங்களாகவே கழுவவேவில்லை. அதைச் சுத்தம் செய்ய வேண்டும் என்றும் அவளுக்குத் தோன்றியதில்லை. அதில் இருந்த மிச்ச உணவை எப்பொழுதோ எலியோ பூனையோ திருட்டுத்தனமாகக் கௌவி இழுத்துத் தின்று செரித்திருக்கும். ஆங்காங்கே ஒட்டிக் கொண்டிருந்த சோற்றுப் பருக்கைகளும் காய்ந்து திடமாகி அழுகியும் விட்டன. அந்தத் தட்டு அப்படியே அங்கேயே கொஞ்சமும் நகர்த்தப்படாமல் கிடந்தது.

அப்பா அன்று ஒருமுறை உணவுத் தட்டை அம்மாவின் மீது விட்டடிக்கும்போது விரோனிக்கா அப்பாவின் பின்னால் இருந்தாள். அப்பாவின் கைகள் நரம்புகள் புடைக்க முறுகேறி இருந்ததையும் கவனித்தாள். சமையலறையில் சிதறிக் கிடந்த சோற்றுப் பருக்கைகளை நள்ளிரவில் அம்மாவும் விரோனிக்காவும் அமைதியாக சுத்தம் செய்தார்கள். அப்பொழுது அழுகை; பின்னர் சிரிப்பு; அடுத்து புலம்பல்; மீண்டும் அழுகை என் விரியும் அம்மாவைப் பார்த்துக் கொண்டே இருந்தாள் விரோனிக்கா. மேலே பார்த்து ஏதோ முணுமுணுத்துவிட்டுக் கையால் தன் தலையைக் குத்திக் கொண்ட அம்மா அவளுக்குப் புதிதாகக் காட்சியளித்தாள்.

எல்லாம் சுத்தம் செய்து முடிந்தும் விரோனிக்கா அவ்விடத்தை விட்டு நகரவே இல்லை. அம்மா விட்டுப்போன அழுகையின் கடைசி விசும்பலில் மாட்டிக் கொண்டாள். வீடு இருண்டும் விரோனிக்கா அங்கேயே உட்கார்ந்திருந்தாள். அம்மா அவளைக் கவனிக்காமல் அவள் அறைக்குள் போய்விட்டாள். விரோனிக்காவின் காலம் ஸ்தம்பித்துப் போன முதல் அனுபவம் யாருமற்ற ஓர் இரவின் முணுமுணுப்பிற்குள் நடந்து கொண்டிருந்தது.

இருளை வெறித்தப்படியே அமர்ந்திருந்தாள்.

அரை மணி நேரம்.

ஒரு மணி நேரம்.

இரண்டு மணி நேரம்.

அசையாத ஒரு மின்மினி பூச்சியைப் போல அவளுடைய கண்கள் திறந்திருந்தன.

செலாயாங் அடுக்குமாடியின் ஐந்தாவது மாடியில் விரோனிக்காவின் வீடு. வீடு என்பதைவிட ஒரு வட்டமடித்தால் சில வினாடிகளில் ஆரம்பித்த இடத்திற்கே வந்துவிடும் அளவிலான அளவு கொண்ட ஓர் எளிய கூண்டு எனலாம். தான் ஓர் ஆளுக்கு இது போதும் என்று அவள் மாறி வந்துவிட்டாள். அவள் மனத்தில் அம்மா திறந்துவிட்டுப் போன கதவை இன்னும் அவள் அடைக்கவே இல்லை.

மேலேயுள்ள மாடியின் சுவர் ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு பூச்செடியிலிருந்து உதிர்ந்த காய்ந்த சிறிய இலை ஒன்று விரோனிக்கா நின்று கொண்டிருந்த மூன்றாவது மாடியின் படிக்கட்டில் வந்து விழுந்தது.

இரண்டு மணி நேரம். விரோனிக்கா அசையவே இல்லை. அரேபிய பாடல் மீண்டும் ஒலித்தால் மட்டுமே விரோனிக்கா அசையலாம்; வீட்டிற்குப் படியேறி செல்லலாம்; அவள் கால்கள் போடும் நடனத்தை அவளே இரசித்துக் கொண்டு அவ்வேரபிய பாடலை முணுமுணுத்துக் கொண்டே போகலாம். ஆனால்; விரோனிக்கா அன்று அசையவே இல்லை.

 

அரேபிய பாடல் சில குறிப்புகள்

மூன்றாவது மாடியிலுள்ள படிக்கட்டின் ஓரம் இருப்பது சில வங்காளதேசிகள் குடியிருக்கும் முதல் வீடு. கட்டுமானப்பணிக்காக அங்கு வந்து தங்கியிருக்கிறார்கள். கைப்பேசி உபயோகம் தவிர அவ்வீட்டில் பாடலை இசைப்பதற்கான வானொலியோ மற்ற ஒலிக்கருவிகளோ இல்லை. அவர்கள் இரவு வீடு திரும்புவது எப்படியும் நள்ளிரவைத் தாண்டிவிடும். அதற்கு அடுத்த வீட்டில் இருப்பது பல்கலைக்கழக மாணவர்கள். பெரும்பாலும் சீனர்கள் என்பதால் அரேபிய பாடலைக் கேட்க வாய்ப்பே இல்லை. அதற்கு அடுத்த வீடு காலியாகி பல வருடங்கள் ஆகிவிட்டன. அதற்கடுத்தப்படி இன்னொரு படிக்கட்டு. அதையும் அடுத்து சீனர்கள் வீடு வரிசையாக இருக்கும். அங்கிருந்து இத்தனை தெளிவாக பாடல் கேட்க வாய்ப்பும் இல்லை.

விரோனிக்காவின் அப்பாவின் அறையில் இருந்த வானொலியை யாருமே சீண்ட முடியாது. அவர் அறைக்குள் நுழைவதென்பதும் அத்தனை சாதூரியமான காரியம் அல்ல. அப்பா அவரை நெருங்க வீட்டில் யாரையும் அனுமதிப்பது கிடையாது. விரோனிக்கா மட்டுமே அவருடைய அறைக்குள் அத்துமீறுவாள். அப்பா இல்லாதபோது அவர் வானொலியில் அப்பா கேட்டு மிச்சமிருக்கும் பாடலைத் தட்டுவாள். அவளுக்கு ஒலிநாடாவை முன்னுக்கும் பின்னுக்கும் இயக்கத் தெரியாது. பயத்துடன் அப்பா கேட்டுப் பாதியிலேயே நிறுத்திய இடத்தில் தொடர்வாள்.

விரோனிக்காவிற்கு அப்பா என்றால் மிகுந்த பிரியம். அவர் மெல்ல ஒரு மிருகத்திற்குரிய அறிகுறிகளைக் காட்டத் துவங்கிய கணத்தில் மட்டுமே சற்றுத் தடுமாறினாள். அவளுக்குள் இருந்த அப்பாவின் ஆளுமை உடைந்து சிதறுவதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அழுதாள். அப்பா சிறுக காலி செய்து கொண்டிருந்த இடத்தைக் கண்டு மிரண்டாள். அப்பா இல்லாமல் போய்விடுவார் என்று அஞ்சினாள். அப்பா இல்லாத வீடு என்னவாகும் என்று பிறர் அவள் மீது ஏற்றிய பயங்களைக் கண்டு திமிறினாள். வீட்டிற்கு மூத்தப் பிள்ளை ஏன் ஓர் ஆணாக இருந்திருக்கக்கூடாது என்று எல்லோரும் அவளை நொந்து கொண்டனர்.

வீட்டிற்கு வந்து அம்மாவிடம் அப்பாவைப் பற்றி புலம்பிவிட்டுப் போகும் பெரியம்மா, மாமா என எல்லோரும் விரோனிக்கா ஏன் ஒரு பையனாகப் பிறக்கவில்லை என்கிற குற்றசாட்டுடன் வெளியேறுவதை விரோனிக்கா வெறியுடன் கவனித்துக் கொண்டிருந்தாள். அன்றைய இரவு அப்பா அம்மாவைத் தொடர்ந்து அடித்துக் காயப்படுத்திக் கொண்டு இருந்தார். சாப்பாட்டுத் தட்டை அம்மாவின் மீது ஓங்கியடித்துவிட்டு அறைக்குள் போகும்முன் அவர் குடித்தக் கருப்புப் பியரில் விரோனிக்கா எலி மருந்தைக் கலந்திருப்பது அவருக்குத் தெரியாது. அம்மா நெற்றியில் இரத்தம் சொட்ட அமர்ந்திருப்பதைப் பார்த்த விரோனிக்கா செய்தவறியாமல் அவள் அருகே சுருண்டு உட்கார்ந்து கொண்டாள். அசையாமல் அவள் காலம் அப்பொழுதுதான் முதன்முறையாக ஸ்தம்பித்துப் போகத் தயாராகிக் கொண்டிருந்தது.

இன்னும் எத்தனை மணி நேரம் அவள் அப்படியே நின்றிருப்பாள் என்று தெரியாமல் விரோனிக்காவின் காலம் அசைவில்லாமல் அப்படியே நீண்டு கொண்டிருந்தது. மறுநாள் காலை அவளுக்கு விழிப்பு வரலாம். எங்கிருந்தோ கேட்டுக் கொண்டிருந்து இப்பொழுது நின்றுவிட்ட அவ்வேரபிய பாடல், அவள் பதினொன்று வயதிருக்கும்போது அவளுடைய அப்பாவின் அறையில் அவர் கேட்டு மிச்சம் வைத்திருந்த அதே பாடல்தான் என்று அவள் உணரும்வரை அவள் அப்படியே நின்றிருக்கக்கூடும்.

  • கே.பாலமுருகன்