NGK – நந்த கோபாலன் குமரன் திரைப்பார்வை: யதார்த்த அரசியலின் மிகக் கொடூரமான யதார்த்தம்
‘உனக்கு அரசியலில் ஈடுபாடு உண்டா?’ என்கிற கேள்வி மிகப் பிரபலமான ஒன்றாகும். எனக்கு அக்கேள்வி ‘உனக்கு சாப்பிடுவதில் ஈடுபாடு உண்டா?’ என்பது போலவே ஒலிக்கும். நாட்டின் மைய அரசியலோடு ஒவ்வொரு குடிமகனும் இணைக்கப்பட்டுள்ளான் என்றும் ஓட்டுப் போடுவதிலிருந்து அரசியலாட்சி அமைக்கப்படுவதில் ஒரு சாமான்யனுக்கு இருக்கும் உரிமை வரை எதையுமே அறிவில் வைத்து உரையாட இயலாமல் அறியாமைகளின் மீது அடுக்கப்பட்டுப் பெருகி வழியும் அறியாமைகளின் உச்சமே ‘உனக்கு அரசியலில் ஈடுபாடு உண்டா?’ என்கிற கேள்வியில் உள்ள அபத்தம்.
குறிப்பாக இளையோர்கள் அரசியல் பேசினால் உனக்கெதற்கு அரசியல் பேச்சு என்று அவன் வாயை அடைக்கும் இடத்தில் நாம் தடுப்பது அவனுடைய சுதந்திரத்தை மட்டுமல்ல; மக்களாட்சியின் மீது அடுத்த தலைமுறைக்கு உருவாகவிருந்த அபிப்ராயங்களையும்தான். பின்னர், அரசியல் தெளிவில்லாமல் தேசிய நீரோட்டத்தில் அவன் அடையும் புறக்கணிப்பும் தனிமையும் அறியாமையும் அவன் வாழ்க்கைக்கே பாதகமாகவும் மாறிவிடுகின்றன. அரசியல் வெட்டிப் பேச்சுகள்தான் கூடாது தவிர தேசிய அரசியலை விமர்சித்துப் பேசும் ஆற்றல் ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கப்பட வேண்டும். கற்றல் கற்பித்தலில் அரசியல் உரையாடப் பட வேண்டும்; யார் பிரதமர், யார் கல்வி அமைச்சர் இப்படிப் பெயர்களை மட்டும் சொல்லிக் கொடுப்பதையும் தாண்டி மக்களாட்சி குறித்தான ஒரு விமர்சன உரிமை கல்வியில் வழங்கப்பட்டால்தான் ‘அரசியல்’ என்பது தனக்கு உகந்ததல்ல என்கிற ஓர் அறியாமை முடிவுக்கு இளைய தலைமுறை வரமாட்டார்கள்.
இப்படியாக, இன்று வெளியீடு கண்ட ‘நந்த கோபாலன் குமரன்’ அரசியலின் அதிகாரப் பகுதியைக் கண்டு மிரண்டு; அதன் நேராதிக்கத் தன்மைகளை உள்வாங்கிக் கொள்ளாமல் தவித்து, போராடி இறுதியில் அதன் நெழிவு சுழிவுக்கு ஏற்ப தன் சுயத்தை மறுவடிவைப்பு செய்து கொண்டு அரசியலில் வெற்றிப் பெறுவதுதான் இப்படத்தின் ஒட்டுமொத்த கதையின் சாரமாகும். முதல் பாதியில் கதை பயணிக்கும் இலக்கைப் பிசகாமல் பின் தொடர முடிந்தது. குறிப்பாக விறைப்புடன் வந்து பின்னர் தன்னை அரசியலின் வரட்டு அதிகாரத்திற்கேற்ப வளைத்து நெகிழ்த்து மாற்றிக் கொண்டு அடிமட்ட வேரிலிருந்து அடிப்பணிந்து துளிர்க்க நினைக்கும் யதார்த்தத்தை செல்வராகவன் தன் பாணியில் காட்டியிருக்கிறார். கழிவறையைக் கழுவும் இடத்திலிருந்துதான் அரசியலைத் தொடங்க முடியும் என்கிற ஒரு நிலை இனி அரசியலில் ஈடுப்பட நினைக்கும் இளையோர்களுக்கு அச்சத்தை உருவாக்கும் அளவிற்கு யதார்த்தத்தையே செல்வராகவன்முதல் பாதியில் படமாக்கியுள்ளர்.
படத்தின் முதல் பாதியின் கடைசி காட்சி, ஓர் அரசியல் எதிர்ப்புக் கூட்டத்தில் கலவரம் ஏற்பட்டு வந்திருந்த தொண்டர்கள் எல்லாம் ஓடிவிட கதாநாயகனும் அவனுடைய நண்பனும் மிச்சமாகிறார்கள். அவ்விடத்தில் சூர்யாவின் நண்பன் எடுக்கும் முடிவு அரசியல் எதிர்ப்புகள் மீது சமூகம் கொண்டிருக்கும் மிக மொண்ணையான பிடிமானத்தை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. ஒரு பார்வையாளனாக அவ்விடத்தில் நம் சமூகத்தின் மீது வெறுப்பும் கோபமும் ஏற்படுகிறது. ஒரு கொலை நடக்க வேண்டும்; அல்லது ஒருவன் உயிர் இழக்க வேண்டும் பின்னர்தான் அவ்வெதிர்ப்புப் போராட்டத்தின் மீது மக்களின் கவனம் குவியுமென்றால் நாம் என்ன அத்தனை வரட்டு மனம் படைத்தவர்களா என்கிற கேள்வியும் எழாமல் இல்லை. கத்தி திரைப்படத்தில் காட்டப்படும் விவசாயிகளின் தற்கொலையையும் இப்படத்தின் அக்காட்சியையும் தொடர்புப்படுத்திக் கொள்ள முடிகிறது.
மேற்சொன்ன யாவும் படத்தின் பலம் என்றால் படத்தின் இரண்டாவது பாதியில் வரும் அரசியல் வெடிப்புகள், திடீர் உருமாற்றம் அனைத்தும் மனத்தில் ஒட்டாமல் சட்டென்று நகர்ந்து நகர்ந்து ஓர் அடுக்கில்லாமல் கரைந்துவிடுவது படத்தின் முதன்மையான பலவீனம் என்றே சொல்லலாம். படம் முதல் பாதியிலேயே முடிந்துவிட்டதைப் போலத்தான் தோன்றியது. அதற்குப் பிறகு உருவாகும் திரைக்கதை பூரணமின்மை பார்வையாளனைப் படத்திற்குள் ஒன்றவிடாமல் வெளியேற்றிவிடுகிறது. அடுத்து, பின்னணி இசை அளவிற்குப் பாடல்கள் நிலைக்கவில்லை. சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் பாடல்கள் உருவாக்கிய தாக்கத்தினாலேயே அப்படத்தில் இருந்த குறைகளை மறக்க முடிந்தது. ஆனால், இப்படத்தில் பாடல்களுக்காக முறையாக உழைக்கப்படவில்லை என்கிற விமர்சனம் எழுந்த வண்ணமே இருந்தது. ஆனால், யுவனின் பின்னணி இசை படத்தில் பல சாதாரணக் காட்சிகளைக்கூட தூக்கி நிறுத்தியுள்ளது என்றே சொல்ல வேண்டும்.
அடுத்து, படத்தில் செல்வராகவன் கையாண்டிருக்கும் குறைந்த வெளிச்சமும் மஞ்சளும், இளம் பச்சையும் இருளும் என வண்ணக்கலவைகள் அபாரமான உணர்வை உருவாக்குகிறது. மனித மனங்களின் தத்தளிப்புகள், பாய்ச்சல்கள் என்று சுருங்கி விரியும் பல உணர்வலைகளைப் பொருத்தமான வண்ணங்களின் மூலம் நெருக்கமாக்கியுள்ளார். அடுத்து பாத்திரத் தேர்வுக்காகவும் இயக்குனரைப் பாராட்டலாம். பொன்வண்ணன், நிழல்கள் ரவி, சாய் பல்லவி இன்னும் பலர் படத்தை விழாமல் தாங்கிப் பிடித்துள்ளார்கள். சூர்யா மெனக்கெட்டு நடிக்காமல் இருந்திருந்தால் படம் மேலும் பலவீனமாகியிருக்கலாம். கொஞ்சமும் சோர்வுறாமல் மொத்த நடிப்பையும் வெளிப்படுத்தியுள்ளார். இருப்பினும் முதல் பாதியில் வரும் சூர்யா பாத்திரம் இரண்டாம் பாதியில் அடையும் மாற்றம் முறையாக வடிவமைக்கப்படவில்லையோ என்கிற விமர்சனமும் எழுகிறது. நந்த கோபாலன் குமரனை முழுமையாகத் தொகுத்துக்கொள்ள முடியாமல் ஒரு பார்வையாளன் நிச்சயம் தடுமாற்றம் கொள்வான். அடுத்து மிகத் திறமையான சாய் பல்லவியைப் பொறாமைப்பட்டு மீளமுடியாமல் தவிக்கும் ஒரு மனைவியாகவே அனுமதித்திருப்பது வருத்தத்தை அளித்தது. அவருடைய பங்கை இன்னும் விரிவுப்படுத்துவதற்கான வாய்ப்பு திரைக்கதையில் இருந்தும் அக்கதாபாத்திரத்தைக் கோட்டைவிட்டதாகவே தோன்றுகிறது.
தவிர்க்க முடியாமல் இப்படம் இதற்கு முன் வந்த அரசியல் சார்ந்த பல படங்களை ஞாபகமூட்டுவதும் இப்படத்தின் இன்னொரு சிக்கல் எனலாம். முதல்வன், சகுனி, எல்.கே.ஜி, புதுபேட்டை என்று சொல்லிக் கொண்டே போகலாம். இருப்பினும் இப்படத்தின் முடிவின் மீது பலர் கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருந்தார்கள். படம் முடியவே இல்லை என்றும் சிலர் சமூக வலைத்தலங்களில் சாடியிருந்தார்கள். ஆனால், இப்படத்தின் இரண்டாம் பாதியில் கொஞ்சம் ஆறுதலாக இருந்ததே அம்முடிவுத்தான். யதார்த்த அரசியலின் தெறிப்பு. கடந்த 100 ஆண்டுகள் ஒரு நாட்டில் அரசியல் கட்சியாக நீடித்து மக்கள் மனத்தில் ஆழப்பதிந்து கிடக்கும் ஓர் அரசியல் பூர்வீகம் கொண்ட கட்சிக்குள் சூர்யா தாவிக் கொள்வதாக படம் முடியும்போது ஒரு கதாநாயகன் அப்படிப்பட்ட முடிவெடுக்கலாமா என்கிற கேள்வி எல்லோருக்கும் தோன்றும். கதாநாயகத்துவ சினிமா இரசனைக்குள் மாட்டிக் கொண்ட ஒரு சராசரியான இரசிகனுக்கு அக்கேள்வி எழுவதில் தவறில்லை. ஆனால், இயக்குனர் செல்வராகவன் தான் எடுத்துக் கொண்ட கதைநிலத்தில் வரக்கூடிய கதாநாயகன் யதார்த்த அரசியலை முழுவதுமாகப் புரிந்து கொண்டு அதன்படி சாமர்த்தியமாக மாறிக் கொள்ளும் நிதர்சனம் இக்கதைக்குப் பொருந்தியே நிறைவு பெறுகிறது.
இத்தகைய பொறுப்பெடுத்து விமர்சிக்கக்கூடிய படமாக இல்லையென்றாலும் இப்படம் யதார்த்த அரசியலின் கொடூரத்தைக் காட்டியுள்ளது என்றே சொல்ல வேண்டும். குறிப்பாக இளையோர் மத்தியில் அரசியல் தெளிவும் அரசியல் உரையாடலும் தொடங்கப்பட வேண்டும் என்கிற கருத்தை விவாதிக்கவாவது இப்படம் ஒரு களத்தை உருவாக்கியுள்ளது. இரண்டாம் பாதி திரைக்கதையில் விழுந்துள்ள மிகப்பெரிய பலவீனத்தைச் சரிசெய்திருந்தால் நல்ல அரசியல் படம் என்றே சொல்லியிருக்கலாம்.
-கே.பாலமுருகன்