சிறுகதை: ஜாக்கிரதை, அப்போய் வீட்டில்தான் இருக்கிறான் (டொட்)
பெந்தோங் வந்து இறங்கும்போது எப்படியும் அதிகாலை ஆறு மணி இருக்கலாம். கெடாவிலிருந்து பெந்தோங் நகரத்திற்கு நேரடி பேருந்து இல்லாததால் இடையில் நெடுஞ்சாலை சாவடியில் ஓட்டுனரிடம் கேட்டு இறங்கிவிட வேண்டும். அதுவும் சில சமயம் ஓட்டுனர்கள் பொருத்தே அனுமதி கேட்கவும் முடியும். சிலர் விடாப்பிடியாக நிறுத்த மறுத்து தெமெர்லோ வரை சென்று இறக்கிவிடுவார்கள். அங்குக் காத்திருந்து நகரப் பேருந்தைப் பிடித்து மீண்டும் பெந்தோங் வரவேண்டும் என்று நண்பர்கள் சொல்லிப் பயமுறுத்தியிருந்தார்கள். நல்லவேளை இன்று ஓட்டுனர் ஒரு மலாய் பாடலைக் கேட்டுத் தலையாட்டிக் கொண்டே நல்ல மனவோட்டத்தில் இருந்தார் என்று நினைக்கிறேன். அதிகாலை இருள் குளிர்ந்திருந்தது. இதே பெந்தோங் பத்தாண்டுகளுக்கு முன் காடு சூழ்ந்த நகரம். இன்று பலவகையில் மாறியிருந்தது. துணிப்பையைக் கீழே இறக்கி வைத்துவிட்டு வாகனங்கள் அவ்விடத்தை மின்னல் வேகத்தில் கடந்து சென்று கொண்டிருந்ததைக் கவனித்தேன். ஒரு சிலர் என்னைப் பார்த்துவிட்டுச் சட்டென தலையைத் திருப்பிக் கொண்டதும் என் பின்னால் விரிந்திருந்த பெருங்காட்டை நோட்டமிட்டேன். மாலா அக்கா இங்கு வந்து சில ஆண்டுகள் ஆகியிருக்கலாம். இப்பொழுதுதான் முதல்முறை அவர் வீட்டிற்குச் செல்லவிருக்கிறேன். அதிகாலை வந்திறங்கியதால் அவருக்குத் தொல்லை கொடுக்க வேண்டியதாகிவிட்டது. காட்டுப் பூச்சிகளின் சத்தம் மெல்ல கரைந்து அதிகமாகிக் கொண்டிருந்த வாகனங்களின் இரைச்சல் பெரிதாகிக் கொண்டிருந்தது.
“ஜோசுவா! வாடா!” என்று கண்ணாடியைத் திறந்து அக்கா அழைத்ததும் பார்வையை வண்ண விளக்குகளிலிருந்து நகர்த்தினேன். “இதுதான் நீ வர்ற நேரமாடா? சரியான இவன்டா நீ!” என்று மாலா அக்காவின் திட்டலுக்கு நடுவே மகிழுந்தில் ஏறி உட்கார்ந்தேன். “எங்க மாமா வர்றலயாக்கா?” என்றதும் மாலா அக்கா என்னைப் பார்த்து முறைத்தார். “நல்ல வேளை மாமா இல்ல… காலைலே தூக்கத்த கெடுத்துட்டீயேடா!” என்று அக்கா நொந்து கொண்டதும் கொஞ்சம் அசூசையாகத் தோன்றியது. “சரி உடனே கவலையாயிறாத… சும்மாத்தான்…” என்று மிக அழகாக புன்னகைத்தார். அந்தப் புன்னகையைப் பத்தாண்டுகளுக்கு முன் பார்த்தது.
“அப்றம் ஜப்பானுக்கு வேலைக்குப் போய்டணும்னு ஒத்தக் கால்ல நிக்கறனு அம்மா சொன்னாங்க?” என்று கேட்டுக் கொண்டே மகிழுந்தை முடக்கினாள். “ஜப்பானுக்கு வேலைக்குப் போற… உன்ன நிறைய மாத்தணும் போலயேடா…அந்தக் காலத்து ரஜினி மாதிரி சிலுவாரு போட்டுருக்க!” என்றாள் இலேசான கிண்டல் தொனியில். மாலா அக்கா எங்களின் தூரத்து சொந்தம். ஒரே கம்பத்தில் சிறுவயதிலிருந்தே ஒன்றாய் வளர்ந்தோம். கெடாவில் இருந்து பின்னர் அவளுடைய அப்பாவுடன் சிங்கப்பூருக்கு வேலைக்குப் போய்விட்டாள். இப்பொழுது கணவருடன் பெந்தோங்கில் அடைக்களம். கடைசியாக எனக்குப் பதினைந்து வயதிருக்கும்போது போனவள். எனக்கும் அவளுக்குமான இடைவெளி கொஞ்சமும் உறுத்தவில்லை. “ஏன்க்கா… நம்ம கம்பத்துலே அம்மா கைலியக் கட்டிக்கிட்டு ஊரு வம்புக்குப் போன மாலாவா இது?” என்று கூறிவிட்டு அவள் முகத்தைக் கவனித்தேன். அவள் சிரித்துவிட்டு மீண்டும் மகிழுந்தை ஓட்டுவதில் மும்முரமானாள். சிறிது நேரத்தில் ஒரு மிகப் பெரிய வீட்டின் வாசலில் இருந்தோம். சுற்றிலும் ஏறக்குறைய இரண்டு ஏக்கரில் வண்ண விளக்குகள் எரியும் பூங்காவும் வீட்டையொட்டி தெரிந்தது. கீழே இறங்கிவிட்டு உள்ளே சென்றோம்.
“ஜோசுவா… ஏதும் வெட்கப்படாமல் கேளு! மாமா சிங்கப்பூர்லேந்து காலைலே வந்துருவாரு… இங்க உனக்கு உதவி செய்ய ஆளு இருக்காங்க… நாளைக்கு எத்தனை மணிக்கு அந்தக் கம்பெனிக்குப் போகணும்னு சொல்லிரு… மாமாவே கூட்டிட்டுப் போய்டுவாரு…” என்று விளக்கிக் கொண்டே முன்கதவைத் தட்டினாள். திறக்கும் சத்தம் கொஞ்சமும் கேட்காமல் கதவு தானியங்கியாகத் திறந்து கொண்டது. வீடெங்கும் நீல நிறம் பரவியிருந்தது. துணிப்பையைச் சொகுசு நாற்காலியில் வைத்துவிட்டு அமர்ந்தேன். “இருடா… உனக்குப் பிடிச்சத் தே தாரேக் கொண்டு வறேன்…” என்று சமையலறையை நோக்கி நகர்ந்தாள்.
பயண அசதி உடலெல்லாம் நெளிந்தது. அதே சொகுசு நாற்காலியின் இன்னொரு முனையில் அவன் அமர்ந்திருந்தான். சுவரோடு பொருத்தப்பட்டிருந்த சிறிய திரையரங்கப் பாணியில் ஓடிக்கொண்டிருந்த ஆங்கிலக் கார்ட்டூனை மும்முரமாகப் பார்த்துக் கொண்டிருந்தான். “க்கா! உன் பையனா இவன்? ம்ம்ம்… நீ போனவ போனவத்தான்… உன் பையனையாவது கெடாவுக்கு அனுப்பி வச்சிருக்கலாம்…” என்று சொல்லிவிட்டு அவளுடைய பதிலுக்குக் காத்திருக்காமல் அவனிடம் சென்றேன்.
“தம்பி! உங்கப் பேரு என்ன?”
“என் பேரு ஸ்பைடர்மேன்…” என்று சொல்லிவிட்டுச் சிரித்தான்.
“அடடே! ஸ்பைடர்மேனா? எப்படி நம்பறது அங்கிள்?” எனப் புத்திசாலித்தனமாகக் கேள்விக் கேட்டப் பாவனையுடன் பதிலுக்குச் சிரித்தேன்.
“நம்பலைனா பாருங்க…” என்று கையில் வைத்திருந்த ஒரு இரப்பர் சிலந்தியை என் முகத்தில் தூக்கியடித்தான். திணறிக் கொண்டு நாற்காலியைவிட்டு எழுந்தேன்.
“அங்கிள் அது எட்டுக் கால் பூச்சி… ஆனா நாலு காலை நான் கடிச்சி எடுத்துட்டன்…” என்று கைத்தட்டிச் சிரித்ததும் எனக்கும் சிரிப்பு முட்டிக் கொண்டு வந்தது. அவனுடைய குரலில் மழலை மொழியைக் கேட்டதும் சட்டென மனம் பூரிப்படைந்தது. குழந்தைகளோடு பேசி எத்தனை மாதங்கள் ஆகியிருக்கலாம் என்கிற சந்தேகம் அப்பொழுதுதான் பூதாகரமாய் எழுந்து வந்தது.
“க்கா! உன் பையன் அழகா இருக்கான்… நல்லா பேசறான்…” என்று அமர்ந்திருந்தவனின் கன்னத்தைக் கிள்ளினேன்.
“உங்க பேரு என்ன அங்கிள்? மிஸ்டர் பயந்தாங்கொலியா?” என்றான் மீண்டும் செல்லக் குரலில்.
“ரொம்ப ஜோக்கு ஐயாவுக்கு… அங்கிள் பேரு ஜோசுவா… உங்க அம்மா என்னோட அக்கா…” என்று சொல்லிவிட்டு என் கையை நீட்டினேன். என் கைக்குள் அவனுடைய சிறிய கைகளை நுழைத்து வேகமாகக் குலுக்கினான்.
“அவனுக்கு நாலு வயசு. அப்போய்…” என்றவாறு மாலா அக்கா சமையலறையிலிருந்து பேசியது தெளிவு குறைவுடன் கேட்டது. “ஓ! அப்போயா? ஸ்பைடர்மேன் அப்போய்…” என்று அப்போயைப் பார்த்துக் கொண்டே கேட்டேன். அவன் கவனம் திரையிலிருந்து அகன்று மீண்டும் என் பக்கம் திரும்பியது. என்னைப் பார்த்து அவன் கண்கள் பிரமிப்பு அடங்காமல் ஒருவகையான மகிழ்ச்சியில் இருப்பதைக் கவனித்தேன். “ஐயாவுக்கு மாமாவ பார்த்து ரொம்ப ஹேப்பியா?” என்று அவன் தலைமுடியைத் தடவியப்படியே கேட்டேன்.
“இல்ல அங்கிள். எங்க வீட்டுல ஒரு கரடி இருக்கு தெரியுமா?” என்று சொல்லியப்படியே மேலேறிச் செல்லும் படியைக் காட்டினான். அப்படிக் காட்டும்போது அவனுடைய கண்கள் அகல விரிந்து மீண்டும் அடங்கின. நான் அவன் சொல்வது பொய் என்பதைக் காட்டிக் கொள்ளாமல் “ஓ அப்படியா?” என்று பதிலுக்குக் கண்களை விரித்தேன்.
“அது பேரு அஷிகோ தமாசிக்கா… ஜப்பான் கரடி அங்கிள்” என்று சொல்லிவிட்டுச் சத்தமாகச் சிரித்தான்.
“ரொம்ப சிரிக்கறான் உன்னைப் பாத்தோனே? அப்போய் நான் கூப்டற செல்ல பேருடா. அப்போய் என் செல்லம். அதான்!” என்று மீண்டும் சமையலறையிலிருந்து அக்கா கூறியது வீடு முழுவதும் எதிரொலித்தது.
“ஓ! அம்மா செல்லமா…? அப்போய் இங்க வாங்க?” என்றதும் இடமாறி என் மடியில் உட்கார்ந்து கொண்டான். அவனுடைய கன்னத்தில் மாலா அக்காவைப் போலவே குழி விழுவது அத்தனை அழகாகத் தெரிந்தது. “அப்படியே இந்த அப்போய் பையன் உன்னை உறிச்சி வச்சிருக்கான்கா…” என்று அவன் கன்னத்தை மீண்டும் கிள்ளினேன். “எங்க அம்மா உங்க அம்மாவோட வயித்துல பொறந்தவங்களா அங்கிள்?” என்று அப்போய் கேட்டதும் ஆச்சரியமாய் இருந்தது. “இல்லயா! உங்க அம்மா என்னோட சொந்தக்கார அக்கா. எங்க அப்பா வழியில சொந்தம். எங்க பக்கத்து வீட்டுல இருந்தாங்க. என் அக்கா மாதிரி,” என்றதும் அப்போய் ஒருமுறை கண்களைச் சிமிட்டிவிட்டுச் சிரித்தான். அவனுடைய கண்களும் அப்படியே மாலா அக்காவைப் போன்றே இருந்தன.
“என் அம்மாவ நீங்க அக்காவா கடன் வாங்கிட்டீங்களா அங்கிள்…?” என்று அப்போய் கிண்டலடித்துவிட்டு சிரித்தான். “அப்படியே மாலா அக்காவோட கிண்டல் உன்கிட்ட அப்படியே இருக்குடா…” என்று சொல்லிவிட்டுக் கையில் தேநீருடன் வந்த அக்காவைப் பார்த்தேன். “பார்த்தீயா? அவன்கிட்ட நீ பேசி ஜெயிக்க முடியாதுடா…” என்று சலித்துக் கொண்டே திரையில் ஓடிக் கொண்டிருந்த கார்ட்டூனை மாற்றினாள்.
“ம்மா, அல்ட்ரா பாவர் கார்ட்டூன் வைங்க, இல்லன்னா இந்த அங்கிள் முடிய பிச்சிருவேன்” என்று அப்போய் கெஞ்சியவாறு என் மேல் தாவ முனைந்தான்.
“ஐயோக்கா! தயவு செஞ்சி மாத்திரு…” என்று அவனைத் தடுக்கும் பாவனையில் கைகளை நீட்டினேன்.
“சரி சரி… நீயும் ஓய்வெடுத்துக்கோ. நானும் போய் படுக்கறன். உன் ரூம்பு அதோ அங்க இருக்கு. காலையில சரியா ஏஞ்சிரு!” என்று மாலா அக்கா கூறிவிட்டு மேலே சென்றாள். அப்போய் தொடர்ந்து கச்சிதமான ஒளியுடன் சுவரில் விரிந்து பரவியிருந்த திரையைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
“அப்போய்! உனக்கு எதுக்கு இந்தக் காலைல கார்ட்டூன்? போய் படு!” என்றவாறு தூர இயக்கியைக் கொண்டு திரையை முடக்கிவிட்டு அவ்விடத்தைவிட்டு வேகமாக நகர்ந்தேன்.
“டேய்! அவன விட்டுட்டு… கார்ட்டூன் பாக்கட்டும்! நோண்டிராதே…” என்று அக்காவின் குரல் வரவேற்பறையில் கேட்டது. மேலுள்ள அறையிலிருந்து அவள் இண்டர்கோமில் பேசிக் கொண்டிருந்தாள். “இது ஒன்னு… பேய் மாதிரி… நீ போய் படு அப்போய். நல்ல பையன் இல்ல…” என்று என் அறையை நோக்கி நகர்ந்தேன்.
மூன்று குளிரூட்டிகள் உள்ள அறை. எதைத் தொட்டாலும் சில்லென்று இருந்தது. உடனே குளிரூட்டிகளை அடைத்துவிட்டுக் கால்களைத் தரையில் வைக்கத் தடுமாறினேன். மெத்தை நீர் நிரம்பி நீல நிறத்தில் அசைந்து கொண்டிருந்தது. அதில் படுத்து உறங்கப்போகும் தருணத்தை எண்ணி உள்ளம் குதுகலமாகியது. துணிப்பையிலுள்ள உடையை எடுத்து மாற்றிக் கொண்டு, மெத்தையில் சாய்ந்தேன். அறைக்கதவு சாத்தாமல் இருப்பது தெரிந்தது. எழுந்து சாத்தலாம் என்று நெருங்கியதும் அப்போய் கதவோரம் நின்று கொண்டிருந்தான். “அப்போய்! உன்ன மேல அம்மாகிட்டப் போவச் சொன்னேன். இங்க என்னா செஞ்சிக்கிட்டு இருக்க?” என்று அவனுக்கு அருகில் மண்டியிட்டவாறே கேட்டேன்.
“உங்கக்கிட்ட ஒன்னு கேட்கலாமா?” என்று கேட்கும்போது வலது புருவத்தை உயர்த்தினான். அப்படியே மாலா அக்காவின் சாயல் அது. கம்பத்தில் இருந்தபோது என்னை நிற்க வைத்துக் கேள்விக் கேட்கும்போது அதே போல வலது புருவத்தை உயர்த்துவாள். சிறிய வயது மாலா அக்காவை மீண்டும் பார்ப்பதைப் போலவே தோன்றியது.
“கேளுப்பா! அப்போய்க்கு என்ன தெரியணும்?”
“நீங்க உங்க சப்பாத்தியை எங்கக் கழட்டி வைச்சிங்க?” என்றான்.
நானும் கொஞ்சம் பதற்றத்துடன் “வெளில கதவுக்கு ஓரமாத்தான்பா. ஏன்டா?” என்றேன்.
“போச்சி. எங்க வீட்டுல ஒரு பூனை இருக்கு. அது சப்பாத்திய தூக்கிட்டுப் போய்ரும்…” என்று அவன் சொன்னதும் எனக்குப் பயம் எடுத்துக் கொண்டது. “ஐயயோ! ஆமாவா. அப்படினா எடுத்து உள்ள வச்சிரலாம் வா!” என்று எழ முயன்ற என் சட்டையைப் பிடித்துத் தடுத்தான். “நான் எடுத்து உள்ள வச்சிட்டேன்…” என்று சொல்லும்போது கொஞ்சம் நிம்மதி சட்டென மனத்தில் பரவியது. “அப்போய்! நீ கெட்டிக்காரப் பையன் தெரியுமா?” என்றதும் அந்த நான்கு வயது பையன் என்னையே ஆச்சரியமாகப் பார்த்தான்.
“அங்கிள்! நான் காடி ஓட்டறென் நீங்க வந்து பாக்கறீங்கலா?” என்று கேட்டான். உறக்கம் கண்களைத் தட்டிக்கொண்டிருந்த நேரம் அவனுடைய கேள்வி என்னை மேலும் சோர்வாக்கியது. “இல்ல அப்போய்… நீங்க மேல போய் நல்ல பிள்ளையா தூங்குங்க. காலைல காடி லோரி எல்லாம் ஓட்டலாம். சரியா?” என்றேன். “எங்க அப்பா என்கூட வெளையாடவே மாட்டாரு. நீங்களாவது வாங்களேன் அங்கிள்…” என்று அடம்பிடிக்க முயன்றான். “அப்போய்! அங்கள் நாளைக்கு உங்கக்கூட வெளையாடறேன்… சரியா? இப்ப அங்களுக்கு மயக்கமா இருக்கு… நீங்கப் போய் படுங்க,” என்று சொல்லி அவனை அனுப்பிவிட்டுக் கதவைச் சாத்தினேன். தண்ணீரில் மிதந்து கொண்டிருந்த மெத்தை தாலாட்டுப் பாட என்னை வரவேற்றுக் கொண்டிருந்தது. எகிறி மெத்தையின் மீது பாயவும் மீண்டும் கதவு தட்டும் சத்தமும் ஒன்றாக நிகழ்ந்தது. மீண்டும் எழுவதற்குள் ஒரு பெரிய போராட்டமாகிவிட்டது. அறைக்கதவைத் திறந்தேன். யாரும் இல்லை. வெளியில் தலையை நீட்டிப் பார்த்த மாத்திரத்தில் அப்போய் சட்டென கால்களுக்கிடையில் நுழைந்து மீண்டும் வெளியில் வந்து நின்று சிரித்தான்.
“அப்போயி! நீங்க இன்னும் தூங்கலையா? மாமா போவத்தானே சொன்னேன்?” என்றேன் கொஞ்சம் அதட்டலுடன். “எங்க வீட்டுல ஒரு பூனை இருக்கு தெரியுமா அங்கிள்? என்றான்.
“டேய்!!! உங்க வீட்டுல பூனை, புலி, சிங்கம் எல்லாம் இருக்கட்டும். இப்போ மாமாவ விட்டிங்கனா நான் நல்லா தூங்குவேன். காலைல எழுந்து உங்கப் பூனைக்கூட விளையாடலாம்… சரியா? போய் படுத்துருங்க…” என்று கைகளைக் கூப்பி அவனை வணங்கி மீண்டும் கதவைச் சாத்தினேன். தூக்க வெறி கண்களில் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தது. கொஞ்சம் தடுமாறிக் கொண்டே கட்டிலின் விளிம்பில் அமர்ந்தேன். அப்படியே மெதுவாகப் படுத்ததும் எப்பொழுது உறங்கினேன் என்று ஞாகபமில்லை. ஐந்து நிமிடம்கூட ஆகியிருக்காது, மீண்டும் கதவைத் தட்டும் ஒலி. இம்முறை அவ்வொலி கொஞ்சம் வேகமாகக் கேட்டது. எழுந்ததும் தலை பாரமாக இருப்பதை உணர்ந்தேன். கதவின் அருகே நின்று கதவு தட்டும் சத்தம் கேட்கும் பகுதியை நன்றாக உற்றுக் கேட்டேன். முட்டிப் பகுதியில் கேட்டால் அது அப்போய் என்று சுலபமாகக் கணிக்க முடியும். ஆனால், அவ்வொலி என் தலைக்கு நேராகக் கேட்டதால் ஒருவேளை மாலா அக்காவோ என்கிற பதற்றத்தில் கதவைத் திறந்தேன். அப்போய் ஒரு நாற்காலியின் மீது ஏறி நின்று கதவைத் தட்டும் பாவனையில் வலது கையை ஓங்கியவாறு நின்றிருந்தான். மாலா அக்காவின் குறும்புத்தனம் சற்றும் மாறாமல் அவனிடம் கண்டேன்.
“அப்போய்… இப்ப உங்கப்பாகிட்ட போன் போட்டுச் சொல்லட்டா?” என்று கொஞ்சம் மிரட்டினேன். ஆனால், அவன் பயந்ததாகத் தெரியவில்லை. “அங்கள் நான் காடி ஓட்டறேன்… கொஞ்ச நேரம் வந்து பாத்துட்டுப் போய்டுங்க…” என்று கெஞ்சினான். வேறு வழியில்லாமல் அவனோடு சென்று வரவேற்பறையில் இருக்கும் சொகுசு நாற்காலியில் சாய்ந்தேன். அன்று எனக்கு அது கடுமையான தண்டனையாகத் தெரிந்தது. கம்பத்தில் திருவிழாவின்போது உறங்கிக் கொண்டிருந்த என்னை எழுப்பித் தூக்கிக் கொண்டு வாணவேடிக்கைப் பார்க்க அழைத்துச் சென்ற மாலா அக்காவின் கொடுமைகள் அவளுடைய மகன் ரூபத்தில் தொடர்ந்து கொண்டிருந்தன. ஒரு பெட்டியிலிருந்து நிறைய விளையாட்டு மகிழுந்துகளைத் தரையில் அடுக்கிவிட்டு என்னைப் பார்த்தான். இதே எங்கள் வீட்டுப் பையனாக இருந்திருந்தால் இந்நேரம் என்னிடம் உதை வாங்கியிருப்பான் என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே அப்போயின் மகிழுந்து ஒன்று பறந்து வந்து தலையைப் பதம் பார்த்துவிட்டுக் கீழே விழுந்தது.
“டேய் அப்போய் என்னடா இது?ஆங்ங்ங்!!!” என்று கத்தினேன்.
“அங்கள் நான் காடி ஓட்டறத பாக்க சொன்னா நீங்க என்ன செஞ்சிக்கிட்டு இருக்கீங்க?” என்று செல்லக் கோபத்துடன் மிரட்டினான். அடுத்த ஒரு மகிழுந்து அவன் கையில் இருப்பதைப் பார்த்ததும் மனம் கிலிக் கொண்டது. தலையைத் தேய்த்துக் கொண்டே, “சரிடா அப்போய் தெய்வமே ஓட்டு ஓட்டு… அங்கிள் பாக்கறேன்…” என்றேன்.
“ங்கேங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்…. பீங்ங்ங்ங்ங்ங்ங்….. ங்ங்கேங்ங்ங்ங்ங்ங்ங்ங்…” அப்படியே அவன் எழுப்பும் சத்தம் எனக்கு ஒரு தாலாட்டைப் போலவே கேட்டதில் நான் தூங்கியிருக்கக்கூடாதுதான். ஒரு விளையாட்டு மகிழுந்தை எடுத்து என் வாயிலும் மூக்கிலும் ஓட்டிவிட்டு சடாரென நெஞ்சில் ஏறிப் பாய்ந்து முகத்தில் குத்தினான். திணறிக் கொண்டு எழுந்து அவனைத் தேடினேன். நான் அடிப்பேன் என்று பயந்து தூரமாக நின்று பின்பக்கத்தை ஆட்டிக் காட்டினான். “அப்போய் இது ரொம்ப ஓவரு… உங்கம்மா கூப்டத்தான் போறேன்!!!” என்று அவனை நோக்கிக் கண்களை உருட்டி மிரட்டினேன். தூக்கக் கலக்கத்தில் இருந்ததால் கண்கள் அப்படி உருமாற மறுத்தன.
“அங்கிள்! நான் வீட்டைச் சுத்தி ஓடறேன் என்னைப் பிடிக்கிறீங்களா?” என்று கூறிவிட்டு ஓடி காட்டினான். எனக்கு எரிச்சலாக இருந்தும் நான்கு வயது பையனிடம் அதைக் காட்டுவது சரியென்று தோன்றவில்லை. “அப்போய்! போய் படுங்க… விடியப்போது… அங்கிளுக்கு நாளைக்கு வேலையா…” என்று இப்பொழுது நான் அவனிடம் கெஞ்சினேன்.
ஓடுவதை நிறுத்திய அவன் என்னைப் பார்த்தான். “சரி அங்கிள் நீங்க பாவம். நீங்க ஓடுங்க நான் உங்கள பிடிக்கறேன்…” என்று சொல்லிவிட்டு என்னை நோக்கி ஓடி வந்தான். “ஆளை விடறா சாமி!” என்று சட்டென அறைக்குள் புகுந்து கதவைச் சாத்தினேன். இரண்டு மூன்று முறை கதவைத் தட்டினான். நான் எழுந்து போகாமல் அப்படியே படுத்திருந்தேன். மீண்டும் தொடர்ந்து கதவைத் தட்டினான். சோர்ந்திருப்பான் என்று தோன்றியது. சட்டென கோபத்தில் கதவை ஓங்கி உதைத்திருப்பான் என்று நினைக்கிறேன். அதன் பின் சத்தமே இல்லை. மெல்ல உறங்கி மீண்டும் விழிக்கும்போது காலை மணி ஒன்பது ஆகியிருந்தது. குளித்துவிட்டு வெளியில் வந்தேன். நேர்காணலுக்கு நேரமாகிவிட்டதால் உடனே செல்ல வேண்டும் என்கிற அவசரம். மாலா அக்கா வரவேற்பறையில் உட்கார்ந்திருந்தார். அவர் பக்கத்தில் அப்போயும் அமர்ந்திருந்தான்.
“என்னப்பா… நல்லா தூங்கனயா?” என்று அக்கா கேட்டதும் முதலில் சிரித்தது அப்போய்தான்.
“ஆங்ங்ங் அப்படியே தூங்கிட்டேன் போ… உன் செல்லம் விட்டாதானே!”
“ஓ! அப்போயா? நல்ல விளையாண்டானா? அவன் அப்படித்தான்… வெளையாண்டா நேரம் போறதே தெரியாது…” என்று சொல்லிவிட்டுப் பக்கத்தில் அமர்ந்திருந்த அப்போயைப் பார்த்துக் கண்ணடித்தாள். அதற்குள் என்னை அழைத்துச் செல்லத் தயாராக மாமாவும் கீழே இறங்கி வந்தார். “சரிக்கா நான் முடிச்சிட்டு அப்படியே மத்தியானம் பஸ் எடுத்துப் போய்டுவேன். அடுத்த லீவுக்கு வறேன்… நீ உடம்பெ பாத்துக்கோ… ஓகே அப்போய்…” என்று அவனைப் பார்த்து என்னால் சிரிக்கவும் முடியாமல் விடைப்பெற்றேன்.
நேர்காணல் முடிந்து மாமா கெடாவிற்குப் போகும் பேருந்தில் ஏற்றிவிட்டுக் கிளம்பினார். பேருந்து பெந்தோங்கை விட்டு மெல்ல தூரமாகப் போய்க்கொண்டிருந்த தருணம் காற்சட்டையில் ஏதோ உறுத்திக் கொண்டிருப்பதை உணர்ந்தேன். அருகில் ஆள் இருந்ததால் உடலை நேர்ப்படுத்திக் கொண்டு அதனை வெளியில் எடுத்தேன். அப்போயின் விளையாட்டு மகிழுந்து ஒன்று என் கையில் இருந்தது. பக்கத்தில் இருந்த ஆள் என்னைப் பார்த்துப் புன்னகைத்தான்.
-கே.பாலமுருகன்