கவிதை: கதாநாயகனின் மரணம்

 

1

கழன்று விழுகின்றன

சில காட்சிகள்.

 

மீசை முறுக்கல்

வேட்டி வரிந்துகட்டல்

நரம்புப்புடைத்தல்

தொடை தட்டி ‘பன்ச்’ பேசுதல்

சூரையாடுதல்

சூத்திரம் காட்டுதல்

என இப்படியாக ஒன்றன்பின் ஒன்றாக

ஏற்கனவே எடுக்கப்பட்டத் திரைப்படங்களிலிருந்து

காட்சிகள் கசிந்தொழுகின.

 

மீளொளிப்பரப்பில் இல்லாமல்போன

காட்சிகளைக் கண்டு வியக்கிறார்கள்.

வீரத்தைக் காட்டித் திரிந்த

கதாநாயகர்கள் ஒவ்வொருவராக

திரைப்படங்களிலிருந்து சுயவதை

செய்து கொள்ளத் துவங்கினர்.

 

ஆண்கள் இல்லாத

திரைப்படங்கள்

குறைவான சத்தத்துடன்

அர்த்தமற்ற இரைச்சலின்றி

குரூரமான கதறல்களின்றி

ஓடிக்கொண்டிருந்தன.

 

2

அவர்

ஒரு காட்சியை உருவாக்குகிறார்.

சிறிய மரம்; அழகிய கயிற்றுக் கட்டில்

ஒரு புல்லாங்குழலின் இசை.

 

அவருடைய மகன்  வருகிறான்;

கயிற்றுக் கட்டிலில்

ஒரு பையனை வரைகிறான்.

புல்லாங்குழலை அழித்துவிட்டு

ஒரு பியானோவை வரைகிறான்;

மரத்தின் கிளைகளில்

கோட்டான்களை உட்கார வைக்கிறான்;

 

மகனுடைய மகன் வருகிறான்;

 

கயிற்றுக்கட்டிலில்

ஒரு கத்தியைச் செருகுகிறான்;

பின்னர், பியானோவை அகற்றிவிட்டு

ஒரு துப்பாக்கியை வரைகிறான்.

 

யாரும் அவளை

வரையவே இல்லை;

மரம் வளர்ந்து

ஒரு கொலைக்களமாக

மாறுகிறது.

-கே.பாலமுருகன்