முன்னுரை எழுதுதல் – ஒரு கனவும் சில உண்மைகளும்
நேற்றிரவு சட்டென்று கனவில் முன்னுரை எழுதுவதைப் பற்றி ஒரு கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தேன். இதுபோன்று கனவுகள் எப்பொழுதும் வராது. அபூர்வமாக அதுவும் ‘முன்னுரை’ பற்றி நான் ஏதும் சிந்திக்கவும் இல்லை. இரண்டு வாரங்களுக்கு முன் சீனி நைனா முகம்மது எழுதிய ‘தொல்காப்பியக் கடலின் ஒரு துளி’ நூலை வாசித்திருந்தேன். அதில் அவர் தொல்காப்பியத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் யாரெல்லாம் முன்னுரை எழுதலாம் என்கிற விளக்கத்தை எழுதியிருந்தார்.
நூலாசியரின் ஆசான், அதாவது நூலாசிரியருக்குக் கற்றுக் கொடுத்த ஆசிரியர். அது கல்வித் துறையாகவும் இருக்கலாம்; அல்லது இலக்கியத்தில் அவருக்கு முன்னோடியாக இருப்பவரும் ஆசான் என்றே பொருள் கொள்ளலாம். உதாரணத்திற்கு எழுத்துலகில் எனக்கு எப்பொழுதுமே ஒரு முன்னோடி ஊக்கியாக இருந்தவர் எழுத்தாளர் சீ.முத்துசாமி ஆவார். ஆக, அவர் எனக்கு இலக்கியத்தில் பாடம் ஏதும் நடத்தவில்லை என்றாலும் அவருடைய படைப்புகளினால் என்னை ஊக்கப்படுத்தியவர் என மனப்பூர்வமாக நான் ஏற்றுக்கொண்டிருக்கிறேன். சமீபத்தில் தோழி பதிப்பகத்தின் வெளியீடாக வந்த எனது ‘இறந்தகாலத்தில் ஓசைகள்’ எனும் சிறுகதை நூலிற்கு அவர்தான் முன்னுரை எழுதியிருந்தார். கூடுதலான புகழுரை ஏதும் இல்லாமல் என் சிறுகதைக்குள் நுழைந்து பிரவேசிக்க என் கதைப்பரப்புகளை விரிவாக்கிக் காட்டக்கூடிய ஓர் எழுத்து அது. கவிதை நடையில் எண்ண ஓட்டமாக எழுத்துகளால் நிரம்பி என் கதைகளை நோக்கி வழிந்த ஓர் எழுத்துமுறை.
ஆக, முன்னுரை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதே கனவில் நான் பேசிய கருத்தாக இருந்தது. ஒரு நூலை முன்வைத்து ஆயரங்கம் நடந்து கொண்டிருக்கிறது. அந்த நூலுக்கு முன்னுரை எழுதியவர் பிரபலமான ஒருவர் என்பதால் பலரும் நூலாசிரியரின் படைப்புகளை விட்டுவிட்டு முன்னுரையைப் புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அக்கூட்டத்தில் இருக்கும் எனக்கு ஆச்சர்ய முரண் தோன்றி சட்டென்று நான் முன்னே சென்று இந்நூலின் முன்னுரை அதன் தன்மைக்கேற்ப இல்லை; என்னைச் சற்றும் கவரவில்லை எனக் கூறுகிறேன். முன்னுரை என்றால் அந்நூல் குறித்து வாசகனுக்கு ஓர் ஆர்வத்தையும் தேடலையும் தூண்டிவிட வேண்டும் அல்லவா? என்று விவாதிக்கிறேன். உடனே கூட்டத்தில் இருந்த ஒரு பெண்மணி ‘நீங்கள் ஏன் எல்லாவற்றையும் குதர்க்கமாகவே பார்க்கிறீர்கள்? ஊருடன் ஒத்துப் போக முடியாதா?’ எனக் கேள்விக் கேட்கிறார்.
நான் உடனே முன்னுரை எவ்வாறு இருக்க வேண்டும் எனக் கனவில் சில வார்த்தைகள் மட்டுமே விவரிக்கிறேன். உண்மையில் இதுவரை முன்னுரை எழுதுதல் பற்றியோ அல்லது முன்னுரைகள் பற்றிய எந்த நூலையும் நான் வாசித்ததும் இல்லை. என்றாலும் முன்னுரையை எழுதுதலில் அவசியங்கள் குறித்து உரையாட வேண்டியுள்ளது.
நூலின் உள்ளடகத்தை முழுமையாக விவரித்தல் கூடாது.
முன்னுரை அது எழுதப்படும் நூலின் உள்ளடக்கத்திற்கேற்றவாறு ஆனால் உள்ளடக்கத்தை முழுவதுமாக விவரிப்பதாக இருத்தல் கூடாது. குறிப்பாக சிறுகதை, அல்லது நாவல் என்றால் கூடுதல் கவனத்துடன் கையாள வேண்டியுள்ளது. எடுத்துக்காட்டாக ஒரு சிறுகதை நூலிற்கு முன்னுரை எழுதுபவர்கள் அந்நூலாசிரியரின் இதற்கு முந்தைய சில சிறுகதைகள் பற்றியோ அல்லது சிறுகதை வாசித்தல் பற்றியோ, அல்லது அந்நூலை ஏன் வாசிக்க வேண்டும்; வாசித்தால் என்ன பயன் போன்ற அடிப்படையிலான சில கேள்விகளுக்கு விடையாக அனுபவ ரீதியிலான பகிர்வாகவும் முன்னுரை அமையலாம்.
ஆனால், அத்தொகுப்பிலுள்ள சிறுகதைகள் கொண்டிருக்கும் முடிச்சுகளையும் நூதமான கதை உரையாடல்கள் அத்தனையையும் சொல்லுதல் கூடாது. புனைவு நூலுக்கான முன்னுரையில் அங்கனம் சொல்லிவிடுவது வாசிப்பு ருசியைக் கெடுத்துவிடும். இனி அந்நூலை வாசிக்கக்கூடிய வாசகனுக்கான அக்கதைகள் வைத்திருக்கும் பல்லாயிர திறப்புகளை இதுபோன்ற முன்னுரை அடைத்துவிடும் அபாயம் உண்டு என நினைக்கிறேன். ஒரு தொலைக்காட்சி வாங்குகிறோம் அதனை எவ்வாறு எப்படியெல்லாம் பயன்படுத்த வேண்டும் என்று ஒரு வழிகாட்டி நூல் கொடுப்பார்கள். அது தொலைக்காட்சிக்குச் சாத்தியம். ஆனால், சிறுகதை நூலில் அச்சிறுகதைகளை எவ்வாறு வாசிக்க வேண்டும்; எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும்; என்றெல்லாம் வழிகாட்டப்பட்டால் ‘இலக்கியம் என்பது அனுபப்பூர்வமாக மனத்தில் எழும் கலை’ என்பதற்கான அர்த்தமே புரண்டு போய்விடும். அவரவர் தன் வாசிப்பிற்கேற்ப ஒவ்வொரு முறையும் கதையின் பல எல்லைகளை அடைய வாய்ப்புண்டு. அதுவொரு படைப்பும் வாசகனும் சந்தித்துக் கொள்ளும் நுட்பமான புள்ளி. அதனை ஒரு முன்னுரையில் வரையறுத்தல் கூடாது. சில முன்னுரைகள் அச்சிறுகதைகள் பற்றி முழுவதுமாக விவரித்துவிடப்படுகின்றன. பிறகு ஏன் அந்நூலை வாசிக்க வேண்டும்?
சுந்தர ராமசாமி ஜீ.நாகராஜன் சிறுகதை நூலிற்கு எழுதிய முன்னுரையில் ஜீ.நாகராஜனின் சிறுகதைகள் தனக்கு எவ்வாறான எண்ணங்களை ஏற்படுத்தியது என்று அச்சிறுகதையை முழுவதுமாக விவரிக்காமல் மிகவும் நுனித் தொடுதலில் அச்சிறுகதைகள் பற்றி சொல்லியிருப்பார். அது ஒரு கைத்தேர்ந்த முன்னுரை. சற்றும் வாசிப்பின் ருசி கெட்டுவிடாமல் அதே சமயம் சிறுகதைகளையொட்டிய தன் மன எழுச்சிகளையும் துல்லியமாகச் சொல்லியிருப்பார். சிலர் முன்னுரையில் தொகுப்பில் ஒட்டுமொத்த கதையையும் முதலில் இருந்து கடைசிவரை ஒப்புவிப்பதைக் காணலாம். ஏன் அச்சிறுகதையை முன்னுரையில் விவரிக்க வேண்டும்? அதுதான் நாம் படிக்கப் போகிறோமே?
நூலாசியரைப் பற்றிய அதீதமான புகழுரை தவிர்த்தல் நலம்
ஒரு வரி சொன்னால் கூட அது அந்நூலாசிரியரின் குருவாக அல்லது மாணவராக அல்லது உடன் படித்தவராக இருத்தல் நலம் என்பதே தொல்காப்பியத்தின் கூற்றாகும். ஏன் தொல்காப்பியர் அவ்வாறு வரையறுக்கிறார்? நூலாசியருடன் இம்மூன்று வகையில் தொடர்பில்லாதவர்களின் முன்னுரை நம்பகத்தன்மையுடன், உண்மையுடன் இருக்க வாய்ப்பில்லை; அது வெற்றுப் புகழ்ச்சியாகிவிடும் என்பதே தொல்காப்பியரின் கூற்றுக்குப் பின்னே உள்ள சான்றாகும். ஆக, முன்னுரையில் வெற்றுப் புகழுரை அவசியம் இல்லை என்பதே இதன் வழி நாம் புரிந்து கொள்ள முடிகிறது.
நமக்குக் கற்பித்த ஆசான் அல்லது நம் துறையின் முன்னோடி, நம்மிடம் படித்த மாணவர், நம்முடன் படித்தவர் ஆகியோர் எக்காரணத்தைக் கொண்டும் நம்மை வெறுமனே புகழமாட்டார்கள். நம் திறன் அறிந்து பேசக்கூடிய கச்சிதத்தையும் யதார்த்தத்தையும் கொண்டிருப்பார்கள் என்பதனாலே தொல்காப்பியர் இவர்கள் யாவரையும் முன்னுரை எழுதலாம் எனப் பரிந்துரைத்திருக்கிறார் என்று நினைக்கிறேன்.
முன்னுரை சமரசமின்றி இருத்தல் வேண்டும்
ஜெயகாந்தன் எழுதிய முன்னுரைகள் ஏராளம். அதனை அவர் ஒரு தொகுப்பாகவே வெளியிட்டுள்ளார். ‘ஜெயகாந்தன் முன்னுரைகள்’ என்ற நூலில் அவர் எழுதிய பற்பல முன்னுரைகளைக் காணலாம். அவற்றுள் பல முன்னுரைகள் சமரசமின்றி அவர் எழுதியிருப்பதையும் அறிய முடியும். முன்னுரை எழுதுவது ஒரு நூலுக்கும் அந்நூல் வெளிவரும் காலக்கட்டத்தின் அறிவு, கலைத் துறைக்கும் இடையே உருவாகப்போகும் வரலாற்று உரையாடல் என்பதைப் போல மிகுந்த கவனத்துடன் ஜெயகாந்தன் கையாண்டிருப்பதே நமக்கு மிகச் சிறந்த சான்றாகும். அதே போல, எழுத்தாளர் சுந்தர ராமசாமி அவர்களின் முன்னுரைகளும் படைப்பை நோக்கி விரியும் கச்சிதமான ஓர் உரையாடல் ஆகும். வரலாறு, தத்துவம், கலை என அவை அலசி ஆராய்ந்துவிட்டு அந்நூலின் மீது கவனத்தைக் குவிக்கக்கூடியவை.
நானும் இதுவரை ஐவருக்கு முன்னுரை எழுதியுள்ளேன். குறிப்பாக கவிதை நூல்கள் தான் அதிகம். எம்.கே. குமார், றியாஸ் குரானா அதில் முக்கியமானவர்கள். றியாஸ் குரானாவின் கவிதை நூலுக்கு நான் எழுதிய முன்னுரை கொஞ்சம் மாறுப்பட்டு இருந்ததைக் கவிஞர் லீனா மணிமேகலையும் அவருடைய முகநூலில் குறிப்பிட்டிருந்தார். விமர்சனப்பூர்வமாக அம்முன்னுரையில் கவிதையின் மீதான பலவகையான பதிப்பீடுகளையும் கேள்வி எழுப்பியிருப்பேன். றியாஸ் அவர்களை மட்டும் புகழ்ந்துவிட்டுப் போகாமல் அதனை ஒரு தளமாகப் பயன்படுத்திக் கொண்டு கவிதை என்கிற மிக நுட்பமான கலையின் மீதான பகுத்தறிவின் செயல்பாட்டினை விமர்சித்திருப்பேன். அக்கட்டுரையை இங்கே வாசிக்கலாம்:
https://balamurugan.org/2016/11/04/இலக்கியத்தைக்-கொல்பவனின
//விமர்சனம் என்கிற பெயரில் தட்டையான பகுத்தறிவு சார்ந்து நாம் உருவாக்கும் மதிப்பீடு இலக்கியத்தைக் கொல்கிறது என்பதுதான் றியாஸ் குரானாவின் வாக்குமூலம். சார்புடைய விமர்சனங்களின் மூலம் மிகவும் அழுத்தமாக உருவாக்கப்படுவது இலக்கியத்தை அழிக்கும் அதனுடைய நிச்சயமற்ற வெளியைச் சிதைக்கும் ஒரு மதிப்பீட்டு முறையைத்தான் எனப் புரிந்துகொள்ள முடிகிறது. அப்படியென்றால் இலக்கியத்திற்கான விமர்சனம் எது? மதிப்பீட்டின் நேர்மையை எப்படி அடையாளம் காண்பது?//
இதை நாம் கருத்தில் கொண்டு ‘முன்னுரை எழுதுதல்’ பற்றி மேலும் உரையாடலாம்.
-கே.பாலமுருகன்
நன்றி: தொல்காப்பியக் கடலின் ஒரு துளி- சீனி நைனா முகம்மது