ஈப்போ இலக்கிய நண்பர்களின் ஏற்பாட்டில் நவீனச் சிறுகதைகள் அறிமுகம்
ஈப்போ இலக்கியக் குழுவைச் சேர்ந்த நண்பர்களின் ஏற்பாட்டில் களம் இணைய இதழின் அறிமுகமும் நவீனச் சிறுகதைகள் அறிமுகமும் கடந்த 30 ஜூன் அன்று ஈப்போவில் நடைபெற்றது. ஏறக்குறைய இருபது இலக்கிய ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். திருமதி ராஜேஸ்வரி இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார் என்றே சொல்ல வேண்டும்.
நிகழ்ச்சியின் துவக்கத்தில் அக்குழுவைச் சேர்ந்த திருமதி வத்சலா அவர்கள் வரவேற்புரை ஆற்றி வந்திருந்தவர்களை வரவேற்றுப் பேசினார். கவிஞரும் இலக்கிய நண்பர்கள் குழுமத்தின் ஒருங்கிணைப்பாளருமான திரு.முல்லைச் செல்வன் அவர்கள் தலைமை உரை ஆற்றி, நவீன இலக்கியத்தின் மீது தனக்கிருக்கும் ஆவலைத் தெரியப்படுத்தினார். அந்த ஆவலுடனே இன்றைய நிகழ்ச்சியில் கலந்துகொள்வதாகக் கூறினார். பின்னர், எழுத்தாளர் ராஜி, இலக்கிய உரையாற்றவிருக்கும் என்னை (கே.பாலமுருகன்) அறிமுகப்படுத்திப் பேசினார்.
அதன் பின் நான் பேசத் துவங்கினேன். இலக்கியம் என்பதன் மீதான தமிழின் முக்கியமான படைப்பாளர்கள் கொண்டிருக்கும் புரிதலைப் பற்றிச் சொல்லித் துவங்கினேன். ஜி.நாகராஜன், அ.முத்துலிங்கம், சுந்தர ராமசாமி ஆகியோர் தங்களுக்கும் படைப்பிற்கும் வாசகனுக்கும் இடையே உள்ள உறவைப் பற்றி அவர்கள் கூறிய கருத்துகளை முன்வைத்துத் தொடங்கியபோது அனைவருக்கும் ஓர் அகத்தூண்டலை ஏற்படுத்த முடிந்தது. பின்னர், என் இலக்கியத் துவக்கம் எங்கு, எப்படித் தொடங்கியது என்றும் நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள் என்கிற என்னுடைய முதல் நாவல் எனக்குள் உருவாக்கிய இலக்கியத் தடங்களைப் பற்றியும் பகிர்ந்து கொண்டேன்.
இலக்கியம் எழுதும் முன் எனக்கு உலக சினிமாக்களின் மீதிருந்து ஆர்வத்தைப் பற்றி சில உலக சினிமாக்கள் பற்றிச் சொல்லிப் பகிர்ந்தபோது எல்லோரும் ஆர்வமாகிவிட்டார்கள் என்றே சொல்ல வேண்டும். ஒவ்வொரு நல்ல சினிமாவும் ஏதோ ஒருவகையில் இலக்கியத்தை உள்வாங்கிக் கொண்டதாக அமைந்துள்ளதையும் சுட்டிக் காட்டினேன். பிறகு, மாப்பாஸன், சு.வேணுகோபால், செகாவ் போன்றவர்களின் சிறுகதைகள் பற்றியும் பகிர வாய்ப்புக் கிட்டியது.
நிகழ்ச்சி என்பதைவிட அதுவொரு இலக்கியப் பகிர்தல் என்றுத்தான் சொல்ல வேண்டும். கலைசேகர், குழந்தை மேரி, சக்திதாசன் என இன்னும் அன்றுத்தான் அறிமுகம் கிடைத்த நிறைய ஆர்வலர்களைச் சந்திக்க முடிந்தது. வாசிப்பின் மீது அவர்களுக்கிருக்கும் ஆவலைக் கொண்டு அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டியுள்ளதையும் முன்வைத்தேன். மரபை மறுதலித்து உருவானவை கிடையாது நவீனம். மரபைக் கேள்விக்குட்படுத்தி, மறுவிசாரணை செய்து அதன் மூலம் நிலம் சார்ந்து பண்பாட்டு மோதல்கள் சார்ந்து பின்னர் ஓர் உருவகத்தை அடைந்ததுதான் இன்றைய நவீன இலக்கியம் என்பதை வந்திருந்தோர் அனைவரும் ஏற்றுக் கொண்டனர். நவீன இலக்கியவாதிகள் மரபிலக்கியவாதிகள் என்கிற வேறுபாடுகளை உடைத்துவிட்டு இலக்கிய நகர்ச்சிக்குத் தேவையான உழைப்பை முன்வைத்தலே அவசியம் என்பதாக அன்றைய உரையாடல் முடிந்தது.
எனது சிறுகதைகள் பற்றி சில பொதுவான கேள்விகள் முன்வைக்கப்பட்டன. அதற்கு வாசிப்புச் சார்ந்து நாம் நம்மை முன்னகர்த்திக் கொண்டால், நவீன வாசிப்பு உருவாக்கும் அதிர்வலைகளிலிருந்து நம்மை மீட்டுக் கொள்ளலாம் என்கிறபடி பேச்சு நகர்த்தப்பட்டது. வாசிப்பு என்பதைப் பெரும்பாலும் நாம் பொதுமைப்படுத்திக் கொள்கிறோம். நாளிதழ் வாசித்தலும் வாசித்தல்; நாவல் வாசித்தலும் வாசித்தலே. ஆனால், இரண்டிற்கும் இடையே இருக்கின்ற ஆழ இடைவெளி, அனுபவ விரிவாக்கம் ஒன்றானதல்ல என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. இதுபோன்ற இலக்கிய உரையாடலை மேலும் மேம்படுத்தலாம் என்கிற ஒத்திசைவுடன் அன்றைய சந்திப்பு நிறைவுற்றது.
-கே.பாலமுருகன்