சிறுகதை விமர்சனம்- நெருப்பு (கணேஷ் பாபு- கருணாகரன்- பிரேமா மகாலிங்கம்)
இக்கதை எனக்கு வைக்கம் முகமது பஷீரின் கதைகளை நினைவுபடுத்தியது. அவரது கதைகளில் மேலோட்டமாகத் தெரியும் எளிமையும் நையாண்டியும் உண்மையில் அக்கதைகளின் ஆழத்தில் உள்ள நம்பமுடியாத துக்கத்தை நெருப்பை சாம்பலென சிறிது நேரம் மூடுவதற்கு மட்டுமே பயன்படுவன. ஒரு வரியை வாசித்ததும் இயல்பாக சிரித்துவிடுவோம். ஆனால் அடுத்த கணம் அப்படிச் சிரித்ததற்காக வெட்கமும் வருத்தமும் நமக்குள் ஏற்படும். பாத்துமாவின் ஆட்டிற்கு அவர் ரூபாய் நோட்டுகளை சாப்பிடத் தரும்போதும் நமக்கு மேற்சொன்ன அதே உணர்ச்சிதான் ஏற்படும்.
பாலமுருகனின் இக்கதை மேலோட்டமாக அங்கதத்தன்மை வாய்ந்ததாக தென்பட்டாலும், உண்மையில் அந்த அங்கதம், ஒரு சிதைந்த குடும்பத்தின் துக்கத்தையும், நம்பமுடியாத வீழ்ச்சியையும், உள்ளோடிய துயரையும், சரிசெய்ய முடியாத வாழ்வின் நெருக்கடியையும், மறைப்பதற்காக சமத்காரமாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. உண்மையில் இவ்வித எளிமையான நடையில், எளிமையான சொற்களில், வலிய துயரைச் சொல்வது சவாலான விஷயம். அதைச் சிறப்பாக கையாண்டிருக்கிறார் பாலமுருகன்.
முகத்தில் தீக்காயங்களுடன் இருக்கும் அம்மா, வலது கை முன்னர் ஒருமுறை ஒடிந்து போன சிறுவன், கல்வியையும் இழந்தவன், ஆண்துணையற்ற குடும்பம் என ஒரு துயர்மிக்க குடும்பத்தின் வீழ்ச்சியை நேரடியாகச் சொல்லாமல் அனைத்தையும் வாசகர்களை ஊகிக்க வைக்கச் செய்வதன் மூலமே சம்பவங்களை காட்டிச் செல்கிறார் பாலமுருகன். நாள் தொடங்கி கிட்டத்தட்ட நடு இரவு வரை ஓயாமல் வேலை செய்யும் தாயும் மகனும். இரக்கமற்ற கடை முதலாளிகள். அதில் பாலியல் வக்கிரப் பார்வைகளும் அடக்கம். மீளமுடியாத ஒரு துன்பியல் தளத்திற்கு வாழ்வு அவர்களை நகர்த்திக் கொண்டுவந்த பிறகும், அந்தச் சிறுவனால், சின்னச் சின்ன சேட்டைகளின் மூலம் அவற்றை எதிர்கொள்ள முடிகிறது.
மீன் முள்ளை சூப்பில் போடுவது துவங்கி, ஈரமான அழுக்குத் துணியை சூப்பில் பிழிவது, அம்மாவை வக்கிரப் பார்வையில் சிரமப்படுத்தும் முதலாளி மீது ஆரஞ்சுப் பழத் தோலைப் போடுவது என சிறு சிறு சேட்டைகளின் மூலம் வாழ்வின் குரூரத்தை சிறுவனால் எதிர்கொள்ள முடிகிறது. இதையெல்லாம் வாசிக்கையில் இந்தச் சிறுவயதில் வாழ்வை எதிர்கொள்ளக் கற்றுவைத்திருக்கும் சிறுவனின் முதிர்ச்சி வியப்பளிக்கிறது.
மேலோட்டமாக எளிமையாகத் தெரியும் இக்கதை உண்மையில் வாசகனுடன் கண்ணாமூச்சி விளையாட்டு ஆடுவதைப் போல அதன் மையத்தை எளிமையென்ற போர்வைக்குள் மூடிவைத்திருக்கிறது. இக்கதையில் கையாளப்பட்டிருக்கும் கவித்துவமும் (பாம்பைப் போல அசதி முதுகில் ஊர்வது..) படிமங்களும் (நெருப்பு, பல்பு, ரொட்டித் துண்டை அபகரிக்கும் பூனை, ஆரஞ்சுத் தோல்) உண்மையில் கதையை அதன் தீவிரத் தளத்திற்கு இட்டுச் செல்பவை.
பழத்தை இழந்து தோல் மட்டுமே எஞ்சும் ஆரஞ்சுத் தோல் எதைக் குறிக்கிறது என யோசித்தாலே போதும், எழுத்தாளர் எவ்வளவு எளிய படிமம் மூலம் கதையின் மையத்தைச் சென்றடைய உதவுகிறார் எனத் தெரிந்துகொள்ளலாம். ‘நெருப்பு’ என்ற படிமமும் அப்படித்தான். கதையின் படிமங்கள் உண்மையில் வாசகனை கதையின் சாரத்தை நோக்கி இழுத்துச் செல்லும் நீரோட்டம் போன்றவை. படிமங்களை கவனமாகப் பின் தொடர்ந்தாலே போதும். கதை நம்மை அதற்குள் மகிழ்ச்சியாக அனுமதிக்கும்.
கற்பனையின் மூலமும், வேடிக்கைச் சேட்டைகளின் மூலமும், தன்முன் பிரம்மாண்டமாக நின்றிருக்கும் துயரத்தைக் குள்ளமாக்கத் தெரிந்த இந்தச் சிறுவன் “Life is beautiful” படத்தின் கதாநாயகனை நினைவுபடுத்துகிறான். இச்சிறுவன் வளர்ந்தால் அவனைப் போன்றுதான் இருப்பான் எனவும் தோன்றுகிறது.
சுராயா என்ற இந்தோநேசியப் பெண்ணின் மகனுக்கு விநோத் என்ற இந்தியப் பெயர் எப்படி வந்தது என்ற ஒரு விஷயம்தான் நெருடலாக இருந்தது. மற்றபடி கதை அமர்க்களம்.
சிறந்த கதையை வாசிக்கத் தந்த பாலமுருகனுக்கு வாழ்த்துகள்.
கணேஷ் பாபு, சிங்கை
வணக்கம், இன்றைய என் இரயில் பயணத்தில் தங்களின் ‘நெருப்பு’ கதையோடு பயணித்தேன். விடியல் முதல் பொழுது சாயும்வரை நடந்த நிகழ்வுகளைக் கண் முன் காட்சிப்படுத்தியது சிறப்பு. சிறுவனுடன் நானும் அந்தக் கடை முழுதும் சுத்தி வந்தேன். ஆரஞ்சு பழச் சுளையை தூக்கி எறிந்தேன், அழுக்கு தூணியில் உள்ள ஈரத்தை சூப்பில் பிழிந்து விட்டேன்…அம்மாவின் உருவம் தெரியாமல் தேடினேன், மேசையைத் துடைத்தேன்…இப்படி கதாமாந்தரிகளோடு நானும் அந்தக் கடையைச் சுற்றி வந்தேன். நிச்சயமாக கதாபாத்திரங்களின் வலியை உணரவைத்து கதை வெற்றி பெறுகிறது.
அந்த முதல் பத்தி கதையில் ஒட்டாதது போல் தோன்றியது…அந்த பத்தியில் குறிப்பிட்ட செய்திகள் வழி வாசகருக்கு உணர்த்துவது என்ன? ஏதேனும் குறியீடு உள்ளதா? அந்த பத்தி இல்லாமலும் கதை வெற்றி பெறுமா? இயல்பாக கதையை நகர்த்தி வாசகனின் மையம் தொட்டுவந்த சாதுரியம் பாராட்டத்தக்கது..வாழ்த்துகள்.
கதை மிகவும் எளிமையாக இருப்பதுபோல் இருந்தாலும் மிக அடர்த்தியாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது….இரசித்து படித்தாலும் சிறுவனையும் அவனது தாயாரையும் நினைக்கும்போது மனம் கனக்கிறது.
பிரேமா மகாலிங்கம், சிங்கை
இந்தக் கதைக்குள் ஓர் இன வாழ்வு அடங்கியுள்ளது. சுராயாவுக்கு..எப்படி வினோத் மகனாக முடியும். எந்த முனியாண்டியோ, முனிஸ்வரனோ அப்பாவாக இருந்திருக்க முடியும். அக்கரைக்குப் பிழைப்பு தேடி வந்தவள் இங்கே வாழ்விழந்த இனத்தின் பிரதியாக தன்னை மாற்றி கொண்டிருக்கிறாள்.
சீன உணவகத்தில் அடிக்கடி காணும் இச்சம்பவங்கள், நமக்கான கதையாக இருக்கும் என்ற புரிதல் இன்றி கடந்து வந்திருக்கிறோம். தன்னுடன் படித்த நண்பன் கொடுத்த ஒரு வெள்ளி… என்னை ஏதேதோ செய்து கொண்டிருக்கிறது. இச்சிறுகதை காட்டும் நிகழ்கால சம்பவங்களில் என்னைத் தொலைக்காமல், எப்போது கண்டடைவேன் எனத் தெரியவில்லை.
எம்.கருணாகரன்
உணவகம் என்றதும் அங்கே இருக்கும் முதலாளிகள் முதல் தொழிலாளிகள் வரை அனைவரின் வாழ்வும் ஒரு நெருப்பைச் சுற்றியே அடங்கியிருக்கின்றது. அதனை ஒரு குறியீடாக பாலமுருகன் சிறப்பாகப் பாவித்துள்ளார். வெகுநாட்களுக்குப் பிறகு மனத்தை உறுத்தாமல் முதல் வாசிப்பிலேயே மனத்தில் புகுந்து கவர்ந்து ஒரு சிறுகதையாக இக்கதையைப் பார்க்கிறேன். வாழ்த்துகள் பாலமுருகன். நிறைய சிறுகதை எழுத்தில் கவனம் செலுத்த அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
மோகனா
Link of story: https://balamurugan.org/2018/02/16/சிறுகதை-நெருப்பு/